வெண்முகில் நகரம் - 62

பகுதி 13 : பகடையின் எண்கள் – 3

தூமபதத்தை மீண்டும் வந்தடைவதுவரை பூரிசிரவஸ் பெரும்பாலும் சிந்தையற்ற நிலையில்தான் இருந்தான். சிபிநாட்டுப்பாலைவனத்தில் புரவி களைத்து நுரைதள்ள ஒரு செம்மண்சரிவின் அடியில் நின்றுவிட்டபோது அவனும் மூச்சு நெஞ்சை அடைக்க அதன் கழுத்தின் மேல் முகம் பதிய விழுந்துவிட்டிருந்தான். அவன் உடலெங்கும் நூற்றுக்கணக்கான இடங்களில் நரம்புகள் அதிர்ந்தன. பல்லாயிரம் ஓடைகளும் அருவிகளும் ஒலிக்கும் மழைக்கால மலைபோல தன் உடலை உணர்ந்தான். மெல்லமெல்ல உடல் வெம்மையாறி அடங்கியபோது கூடவே உள்ளமும் அடங்குவதை உணர்ந்தான். புரவியை நடக்கவைத்து ஒரு பாறையின் நிழலை அடைந்து இறங்கி அப்படியே மண்ணில் விழுந்து மல்லாந்து படுத்துக்கொண்டான்.

அவனுடைய வீரர்கள் அணுகிவந்தனர். அவர்களுடன் ஒருசொல்பேசாமல் மீண்டும் இணைந்துகொண்டான். மூலத்தானநகரிக்கு வந்து சிந்துவில் படகுகளில் ஏறிக்கொள்ளும்போது அவன் முழுமையாகவே சொல்லின்மைக்குள் ஆழ்ந்துவிட்டிருந்தான். சொல்லின்மை என்பது ஒரு புகைமூட்டம். அது சூழத்தொடங்கும்போது மூச்சுத்திணறுகிறது. விடுபடுவதற்காக அகம் தவிக்கிறது. அப்புகைமூட்டம் மெல்லமெல்ல திரவமாக ஆகி குளிருடன் அனைத்து அணுக்களையும் பற்றிக்கொள்கிறது. உறைந்து பளிங்குப்பாறையாகிறது. பளிங்குப்பாறையாக மாற்றுகிறது. பின்னர் மீளவேமுடிவதில்லை. படகில்செல்லும்போது பூரிசிரவஸ் ஏவலரிடம் பேச முயன்றபோதுகூட சொல் நெஞ்சிலிருந்து எழவில்லை. சித்தம் சென்றுமுட்டிய சொற்களஞ்சியத்தில் அத்தனை சொற்களும் துருவேறி ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டிருந்தன.

தூமபதத்தின்மேல் ஏறிநின்று கீழே விரிந்த பால்ஹிகபுரியை நோக்கியபோது நெஞ்சுள் ஒரு விம்மல் எழுந்தது. மலைச்சரிவில் ஒன்றால் ஒன்று தடுக்கப்பட்டு எடைகொண்டு நின்றிருந்த பெரும்பாறைகள் அனைத்தும் அச்சிறிய ஒலியால் அசைந்தன. பின் பேரொலியுடன் பொழியத்தொடங்கின. அவன் கண்கள் உள்ளிருந்து நிறைந்து குதிரைசெல்லும் விரைவில் காற்றில்தெறித்துச் சிதறி பின்னுக்குச் சென்றன. மூச்சிரைப்பில் விம்மல்கள் உடைந்து பறந்தன. ஏழன்னையர் ஆலயமுகப்பில் நின்றபோது அவன் சுமந்துவந்தவை அனைத்தும் பின்னால் பறந்து செல்ல அவன் மட்டும் எஞ்சியிருந்தான். அங்கிருந்து அரண்மனை நோக்கி செல்லும்போது இறகுபோலிருந்தான்.

சலன் அவனை எதிர்கொண்டான். அவன் தோளில் கையிட்டு “வா” என்றான். பூரிசிரவஸ் பெருமூச்சுவிட்டான். ஒரு மெல்லிய தொடுகை என்னென்ன சொல்லமுடியுமென்று தெரிந்தது. சலன் அவன் முகத்தை நோக்காமல் “இளையோனே, அரசகுலத்தவனின் வாழ்க்கை அரசியல்வலையால் எட்டுதிசையிலும் பிணைக்கப்பட்டிருக்கிறது” என்றான். ”நீ கிளம்பிய அன்றே நான் செய்தியை அறிந்துவிட்டேன். ஆனால் உனக்கு செய்தியனுப்ப முடியவில்லை. நீயே மீளட்டும் என காத்திருந்தேன்.” “நான் சென்றது ஒரு நல்ல பயிற்சி மூத்தவரே” என்றான் பூரிசிரவஸ். சலன் புன்னகையுடன் “நீ அரசனாக ஆக இன்னும் நிறைய பயிற்சிகள் தேவை” என்றான்.

“இளையோனே, இன்று நிகழ்ந்துகொண்டிருப்பது ஒரு பெரிய அரசியல் நாற்கள விளையாட்டு. அஸ்தினபுரி இரண்டாகப்பகுக்கப்படவிருக்கிறது. மாறிமாறி தூதர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தூதும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் கொண்டுசெல்கிறது. அவற்றை பலமடங்கு பெருக்கி மீள்கிறது. தட்சிணகுருநாட்டுக்கான எல்லைகள் வரையறைசெய்யப்படுகின்றன. ஆளில்லாத ஒரு மலைக்காக, நீர் நிறைந்த ஒரு சதுப்புக்காக இறுதிக்கணம் வரை பூசலிடுகிறார்கள்.” சலன் சிரித்து “மறுதரப்பினர் செய்பவற்றுக்கு எவரும் எதிர்வினையாற்றவில்லை. செய்யக்கூடுமென இவர்கள் நினைப்பவற்றுக்கு எதிர்வினையாற்றுகிறார்கள். ஆகவே ஒன்று நூறாகி நூறு பத்தாயிரமென பெருகிக்கொண்டிருக்கிறது” என்றான்.

அவர்கள் சலனின் அலுவல்கூடத்தை அடைந்து அமர்ந்துகொண்டனர். சலன் பூரிசிரவஸ்ஸுக்கு இன்னீரும் மெல்லுணவும் கொண்டுவர ஆணையிட்டான். “இருதரப்பினரும் தங்கள் நட்புகளை பெருக்கிக்கொள்கிறார்கள். பகைகளை வகுத்துக்கொள்கிறார்கள். போர்க்களத்தில் நிற்பவர்கள் போலிருக்கிறார்கள். ஆனால் அப்படித்தான் நிகர்நிலை உருவாகமுடியும் என்றும் முழுமையான நிகர்நிலையே சிறந்த நட்பை நிலைநாட்டமுடியும் என்றும் யாதவன் எண்ணுகிறான் என்று சொன்னார்கள். என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது அதை. அரசியல் ஆற்றலின் விசைகள் நிகர்நிலைக்காகக் கொள்ளும் தொடர்ந்த இயக்கத்தால் ஆனது” சலன் சொன்னான்.

“பாண்டவர்தரப்பு பாஞ்சாலத்தாலும் துவாரகையாலும்தான் வல்லமையுடன் நிறுத்தப்படுகிறது. ஆகவே பாஞ்சாலத்தையும் துவாரகையையும் தன் நட்புநாடுகளால் சூழ்ந்துகொள்ள துரியோதனன் எண்ணுகிறான். அஸ்வத்தாமன் உத்தரபாஞ்சாலத்தை ஆள்வது துரியோதனனுக்கு மிக உகந்தது. பாஞ்சாலத்தின் மறுபக்கம் உசிநாரர்களையும் கோசலத்தையும் நட்புக்குள் வென்றெடுக்க சகுனியே நேரில் சென்றிருக்கிறார். அவர்கள் ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்றே தெரிகிறது. மேற்கே துவாரகைக்கு எப்போதுமே கூர்ஜரம் எதிரிநாடு. கூர்ஜரம் என்றும் காந்தாரத்தை அஞ்சி வந்தது. ஆனால் துவாரகைமீதான அச்சம் அதை காந்தாரத்தை அணுகச்செய்கிறது.”

“சிந்துநாட்டு மன்னன் ஜயத்ரதன் நெடுங்காலமாக கூர்ஜரத்தை வெல்ல கனவுகண்டிருப்பவன். அவனும் துவாரகைமீதான அச்சத்தால் துரியோதனனுடன் இணைந்துகொண்டிருக்கிறான். அப்படியென்றால் திருஷ்டாவதியின் கரை முதல் மேற்கே சோனகப்பாலைவனம் வரை ஒரே பெரும்பரப்பாக நிலம் கௌரவர்தரப்புக்கு வந்துவிடுகிறது. அதில் உள்ள சிறிய இடைவெளி சிபிநாடு. அதை வெல்ல ஜயத்ரதன் எண்ணியது இயல்புதான்” என்றான் சலன். ”அரசியலில் எப்போதும் நடுவே இருக்கும் நாடு மிகமுதன்மையானது இளையோனே. அது முதலையின் இரு தாடைகள் நடுவே நட்டுவைக்கப்பட்ட குறுவாள் போன்றது.”

“பெண்கேட்டு சிபிநாட்டரசர் கோவாசனருக்கு ஜயத்ரதன் தூதனுப்பினான்” என சலன் தொடர்தான். “ஆனால் துவாரகையின் பகையை அஞ்சியக கோவாசனர் அதை ஒரு மணத்தன்னேற்பு நிகழ்வாக ஒருங்குசெய்தார். போட்டி அமைத்தால் துவாரகை மன்னன் வெல்வான் என்பதனால் இளவரசியின் தெரிவு மட்டுமே முறைமை என வகுக்கப்பட்டது. துவாரகைக்கும் செய்தியனுப்பப்பட்டது. இளையோனே, சிபிநாட்டை அஸ்தினபுரி வெல்வதென்பது கூர்ஜரத்திற்கும் காந்தாரத்திற்கும் நடுவே ஒரு நட்புநாட்டை துவாரகை வென்றெடுப்பதுமட்டும்தான். கிருஷ்ணன் உடனே பீமனை அனுப்பிவிட்டான். அதிலும் பீமனை மட்டும் துவாரகைக்கு வரச்சொல்லி துவாரகையின் புதுவகை வண்டிகளுடனும் புரவிகளுடனும் ஒரே வீச்சில் வந்து சிபியை வென்றதென்பது ஜயத்ரதன் கணக்கிட்டே இருக்கமுடியாத செயல். அனைத்தும் முடிந்துவிட்டன.”

பெருமூச்சுடன் பூரிசிரவஸ் எழுந்துகொண்டான். “இனி பேச ஏதுமில்லை மூத்தவரே” என்றான். “ஆம், பொதுவாக இத்தகைய ஆட்டங்களில் பெண்களுக்கு குரலென ஏதுமில்லை. ஆடவர் களத்தில் படுதுபோல பெண்கள் அகத்தறையில் மடியவேண்டுமென்பதே ஷத்ரிய குலநெறி” என்ற சலன் “நீ சென்றபின் இந்த ஓலையை கண்டெடுத்தேன். உடன்பிறந்தானாக இதை உன்னிடம் காட்டலாகாதென்றே எண்ணினேன். ஆனால் காட்டாமலிருப்பது பிழை என இளவரசனாக எனக்குத் தோன்றியது…” என்றான்.

பூரிசிரவஸ் அவன் விழிகளை நோக்கியபின் அதை வாங்கி சுருள்நீட்டி வாசித்தான். பெருமூச்சுடன் சுருட்டி மீண்டும் சலனிடமே அளித்தான். “நான் இதை எரித்துவிடுகிறேன் இளையோனே. இத்தகைய உணர்ச்சிகளுக்கு தூமப்புகையின் வாழ்நாள்தான். விழிக்கு சற்றுநேரம், மூக்குக்கு மேலும் சற்றுநேரம், நெஞ்சில் மேலும் சற்றுநேரம்… காற்று எட்டுத்திசைகளிலிருந்தும் சுழன்று வீசிக்கொண்டே இருக்கிறது.” பூரிசிரவஸ் தலையசைத்தபின் விடைகொண்டு திரும்பி நடந்தான். எடைகொண்டு குளிர்ந்த கால்களுடன் படுக்கையை விழையும் உடலுடன் தன் அறையை அடைவது வரை அவனிடம் அந்த நீண்டபயணத்தின் நினைவுகளே உதிரிக்காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தன.

படுக்கையில் படுத்ததும் தேவிகையின் முகம் மிக அண்மையிலென தெரிந்தது. எழுந்து ஏவலனை அழைத்து மது கொண்டுவரச்சொன்னான். கடுமையான மலைமது. மூன்றுமுறை குடித்தபின் மெல்லிய குமட்டலில் உடல் உலுக்கிக்கொண்டிருக்க மீண்டும் படுத்துக்கொண்டான். இம்முறை மலைபோல அவள் முகம். அவன் அதை நோக்கி அடிவாரத்தில் நின்றுகொண்டிருந்தான். அவள் அவனை கடந்து தொலைவில் நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் எழுதிய கடிதத்தை அவனுக்குப்பின்னால் நின்று எவரோ வாசித்துக்கொண்டிருந்தார்கள்.

அவனை உடனே கிளம்பி திருமணத்தன்னேற்புக்கு வரும்படி அவள் அழைத்திருந்தாள். மணமேடையில் ஜயத்ரதனுக்கு மாலையிடுவதாக தந்தையிடம் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் ஆனால் அவன் வந்து நின்றால் அவனுக்கே மாலையிடுவதாகவும் அவள் சொன்னாள். “இச்சொற்களை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்றே எனக்குத்தெரியவில்லை. என்னை நினைவுறுகிறீர்களா என்றே ஐயம்கொள்கிறேன். ஆனால் நான் ஒருகணம்கூட மறக்கவில்லை. ஒவ்வொரு பார்வையையும் விரித்து விரித்து மிகநீண்ட நினைவுப்பெருக்காக மாற்றிக்கொண்டிருக்கிறேன். இங்கே இந்த இருண்ட கல்மாளிகைக்குள் நான் காணும் வானம் அதுவே. உங்களுக்காக காத்திருக்கிறேன்.”

அவன் துயின்று விழித்தபோதும் அந்தமலை அப்படியே இருந்தது. ஆனால் அதைச்சூழ்ந்து மெல்லிய ஒலியுடன் மழை பொழிந்துகொண்டிருந்தது. அவன் எழுந்தமர்ந்தபோது அறைக்கு அப்பால் ஒலித்த காற்றை கேட்டான். மலைக்காற்று இலைகளை துடிக்கவைத்தபடி மாளிகையின் சுவர்களில் முட்டி சாளரங்களை அடிக்கச்செய்து கடந்துசென்றது. நள்ளிரவு ஆகியிருந்ததை ஒலிகள் காட்டின. கடும் விடாயை உணர்ந்ததும் எழுந்து சென்று நீர்க்குடுவையை எடுத்து நேரடியாகவே குடித்தான். நீர்வழிய அமர்ந்திருந்தபோது உடல் முழுக்க ஓர் இனிய களைப்பை உணர்ந்தான். எண்ணங்கள் ஏதுமில்லாத நிலை. கடுமையான உடல்வலி விலகி நிற்பதன் உவகை.

எழுந்து இடைநாழி வழியாக சென்றான். இரவுக்குரிய ஓரிரு பிறைவிளக்குகள் மட்டும் எரிந்துகொண்டிருந்தன. இடைநாழியின் மறுபக்கத்தில் இருந்த விளக்கொளியில் அமர்ந்தபடி துயிலும் படைவீரனின் இழுபட்ட நிழல் தெரிந்தது. அவன் பக்கவாட்டில் திரும்பி வெளியே திறக்கும் வாயில் வழியாக மண்டபத்துத் தோட்டத்திற்குள் சென்றான். அத்தனை செடிகளும் குளிருக்காக உள்ளே இழுக்கப்பட்டிருந்தன. பல செடிகளுக்குமேல் மரவுரியாலான கம்பளம் போர்த்தப்பட்டிருந்தது. அவை குளிரில் ஒடுங்கி விரைத்திருப்பதாக தோன்றியது. அவன் அவற்றின் நடுவே மெல்ல நடந்தான். அவற்றின் மூச்சுக்காற்றின் நீராவி மேலே சென்று மண்டபத்தின் கூரையில் குளிர்ந்து சொட்டிக்கொண்டிருக்கும் ஒலி அவற்றின் இதயத்துடிப்பென கேட்டது.

செடிகளனைத்தும் குளிரில் சுருங்கி தங்களை முழுமையாக உள்ளிழுத்துக்கொண்டிருந்தன என்று நினைத்தான். அப்போது அவற்றின் கிளைகளும் இலைகளும் தளிர்களும் எவையும் வெளிநோக்கி வளரவில்லை. மலர்கள் இதழ்களை சுருக்கிக்கொண்டு தேனையும் மணத்தையும் உள்ளேயே தேக்கிக்கொண்டிருந்தன. மண்ணுக்கு அடியில் வேர்களுக்குள் அவற்றின் தேனும் மணமும் நிறைந்திருக்கலாம். அங்கே அவை மெல்ல வளர்ந்து நீண்டுகொண்டிருக்கலாம். மெல்லிய முணுமுணுப்பாக அவை அங்கே ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருக்கலாம். விரல்நுனிகளால் தொட்டு பிணைத்துக்கொண்டிருக்கலாம்.

விடியும் வரை அவன் அங்குதான் இருந்தான். நீர்சொட்டும் ஒலியின் ஒழுங்கின்மையை மெல்லமெல்ல ஒழுங்காக அவன் அகம் ஆக்கிக்கொண்டபோது அனைத்தும் சீரடைந்துவிட்டிருந்தன. அறைக்குச் சென்று குளிராடையை எடுத்து அணிந்துகொண்டு வெளியே சென்றான். இரவுப்பனியில் நனைந்து கிடந்த செம்மண்பாதையில் காலடிகள் புதைய தெருக்களில் நடந்தான். கன்றுகள் மனிதர்கள் நாய்கள் பெருச்சாளிகள் எவையும் தென்படவில்லை. புறாக்களின் குறுகல் ஒலி மட்டும் கடைகளின் மரக்கூரைகளுக்குள் கேட்டது. காற்றில் அம்மரக்கட்டடங்கள் முனகியபடி அசைவதுபோல அது உளமயக்களித்தது.

ஏழன்னையர் ஆலயம் வரை சென்றான். பூசகர் முந்தையநாள் ஏற்றிவைத்த நெய்விளக்குகள் அணைந்துவிட்டிருந்தன. அப்பால் பால்ஹிகப்பிதாமகரின் ஆலயத்தின் சிலைக்கு எவரோ செம்பட்டு ஆடை ஒன்றைச் சார்த்தி மாலையிட்டு வழிபட்டிருந்தனர். அவருக்கு பலியிடப்பட்ட மலையாட்டின் கொம்புகள் மட்டும் பீடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்தன. அவன் புன்னகைசெய்தான். அவர் மலையாட்டை தோளில் சுமந்துகொண்டிருப்பதனாலேயே அவருக்குரிய பலியாக அது மாறிவிட்டது. அவன் பால்ஹிகர் தோளில் ஆடுடன் நடந்துவந்த காட்சியை நினைவுகூர்ந்தான்.

ஒளி ஏறிஏறி வந்தது. மலையடிவாரத்தில் காலையொளி தேன் போல தித்திப்பானது. மென்மையாக கைகளால் அதை அள்ளமுடியும். உடம்பெங்கும் அதை பூசிக்கொள்ள முடியும். தோலைக்கடந்து குருதியைத் தொட்டு ஒளிபெறச்செய்யும். அனலாக ஆன குருதி உடம்பெங்கும் இளவெம்மையுடன் சுழித்தோடும். எண்ணங்களிலும் இளவெயில் பரவுவதை அறிய மலைநாட்டுக்குத்தான் வரவேண்டுமென எண்ணிக்கொண்டான். வியர்வை உடலுக்குள் கனியத்தொடங்கியதும் தடித்த தோலாடையை கழற்றி தோளிலிட்டு திரும்பி நடந்தான்.

சாலைகளில் மக்கள் நடமாடத்தொடங்கினர். மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்றவர்கள் கம்பளியாடை அணிந்து தலையணியால் பாதிமுகத்தையும் மூடியிருந்தனர். பால்பசுக்களின் முலைக்காம்புகளை மூடி கம்பளியாடை அணிவித்திருந்தனர். காலைநடை பசுக்களின் குளிரில் உறைந்த உடலை இளகச்செய்ய அவை தலையை ஆட்டியபடி விரைந்து நடந்தன. புறாக்கள் எழுந்து சாலையில் அமர்ந்து ஆர்வமில்லாமல் சிந்திய மணிகளை பொறுக்கிக்கொண்டு கூழாங்கற்களை உரசிக்கொண்டது போல ஒலியெழுப்பின. ஒரேஒரு கடையை உரிமையாளன் திறந்துகொண்டிருந்தான். அது மலைமது விற்கும் கடை என்று கண்டதும் பூரிசிரவஸ் புன்னகைசெய்தான்.

ஓர் எண்ணம் எழ அவன் திரும்பி நகரின் வடக்கெல்லை நோக்கி நடந்தான். சாலையில் வெயில்பட்டதும் ஈரமான குதிரைச்சாணியும் பசுஞ்சாணியும் கலந்த மணம் எழத்தொடங்கியது. வீடுகள் திறக்கப்பட்டு குழந்தைகள் எச்சில் உலர்ந்த வாய்களும் வீங்கிய கண்களுமாக வந்து வெயிலில் நின்றன. அவற்றின் செந்நிறமான கன்னமயிர்கள் ஒளிவிட்டன. சிலர் சருகுகளை குவித்துப்போட்டு தீமூட்டி கைகளை சூடாக்கிக்கொண்டிருந்தனர். இரண்டு எருமைகள் மிக மெதுவாக நடந்துவந்தன. வானிலிருந்து ஒரு செம்பருந்து மெல்லசுழன்று மண்ணை நெருங்கி மேலெழுந்தது. அதன் நிழல் சாய்ந்த மரக்கூரைகள் மேல் வளைந்தேறிச்சென்றது.

சிபிரரின் இல்லம் முன்பு வந்தபோதுதான் அங்கு வந்திருப்பதை உணர்ந்தான். வீட்டின் முகப்பு மூடியிருந்தது. அவன் இளவெயிலில் மின்னிய அதன் மரக்கூரையை நோக்கியபடி நின்றிருந்தான். வேட்டைவிலங்குகளின் தோல்கள் மூங்கில்சட்டங்களில் இழுத்துக்கட்டப்பட்டு காயவைக்கப்பட்டிருந்தன. பெரிய உருளைக்கற்களால் ஆன சுவர்களும் தேவதாருத்தடிகளால் ஆன கூரையுமாக ஓடுதடித்த ஆமைபோல அந்த இல்லம் நின்றிருந்தது. காலமற்றது. வரலாற்றை ஒரு இமைப்பாக உணர்வது. இல்லத்தின் பின்னாலிருந்து கிழவி எட்டிப்பார்த்து “யார்?” என்றபின் “இளவரசே” என்றாள். “சிபிரர் இருக்கிறாரா?” என்றான்.

“நேற்றுதான் மீண்டும் மலைக்குச் சென்றார். என் மைந்தன் சேயன் இருக்கிறான். மதுமயக்கில் இன்னும் விழிக்கவில்லை” என்றாள் கிழவி. “அழைக்கிறேன்.” பூரிசிரவஸ் “வேண்டாம்” என்றான். “சிபிரர் மலைமேலா இருக்கிறார்?” கிழவி “ஆம் இளவரசே. பிதாமகருக்கு அணுக்கமாக அங்கே இருக்கிறார். என் மைந்தன் சேயனை பிதாமகரின் அதே முகம் கொண்டவன் என்பதனால் இங்கே விட்டிருக்கிறார்கள்” என்றாள். பூரிசிரவஸ் புன்னகையுடன் ”சிபிரர் வந்தால் நான் பிதாமகரை கேட்டதாகச் சொல்லுங்கள்” என்றபின் திரும்பி நடந்தான்.

திரும்பும்போது நகரம் விழித்துக்கொண்டுவிட்டது. கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஊன்கடைகளில் பெண்கள் கூடைகளுடன் வந்து நின்றிருந்தனர். மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய காளான்கள் விற்பதற்காக குவிக்கப்பட்டிருந்தன. சித்தமயக்கு அளிக்கும் நீலநிறக் காளான்களும் மருந்துக்குரிய பல்வேறுவகையான நச்சுக்காளான்களும் தனித்தனியாக பகுக்கப்பட்டிருந்தன. மண்ணைத் தோண்டி பிடிக்கப்பட்ட பல்வேறு பெரிய பூச்சிகளும் மரப்பட்டைகளைப் பெயர்த்து பிடிக்கப்பட்ட வெண்புழுக்களும் மூங்கில்கூடைகளில் விற்பனைக்கிருந்தன. அவை கோடைமுழுக்க உணவுண்டு குளிருக்காக உடல்வளர்த்து குழிகளுக்குள் சுருண்டு கனவுக்குள் சென்று வாழத்தொடங்கிவிட்டிருந்தன. குழிகள் திறக்கப்பட்டு பட்டைகள் உரிக்கப்பட்டு பிடிக்கப்பட்டதைக்கூட அவை கனவென்றே அறிந்திருக்கும். சூடான நீரில் விழும்போதுகூட அவை கனவிலிருந்து விழிக்கப்போவதில்லை.

மத்யகீடம் என்னும் சிறுவிரலளவான பெரிய வெண் புழுக்களை இளம்சூடான மதுவில் போடுவார்கள். அவை வெம்மையை அறிந்ததும் உயிர்கொண்டு எழும். விழித்த கணம் முதல் மதுவில் திளைத்து குடிக்கத்தொடங்கும். துழாவித் துடித்து உள்ளறைகளெங்கும் மது நிறைந்து தடித்து உயிரிழந்து ஊறி மிதக்கத்தொடங்கும்போது எடுத்து ஆவியில் வேகவைத்து அரிசி அப்பங்களின் நடுவே வைத்து உண்பார்கள். இனிய இசை எங்கோ ஒலித்துக்கொண்டிருப்பதுபோல களிமயக்கை நாளெல்லாம் நிலைநிறுத்தச்செய்யும் உணவு அது.

அவன் அரண்மனைக்கு வந்து நீராடி உடைமாற்றி சலனை சந்திப்பதற்காக சென்றான். சலன் அலுவற்கூடம் சென்றுவிட்டதாக தெரிந்தது. அலுவற்கூடத்தில் கர்த்தமர் மட்டும் வந்திருந்தார். அமைச்சுப்பணியாளர் எவரும் அப்போதும் வந்திருக்கவில்லை. அவர்கள் அமர்ந்திருந்த பீடங்களின் குழிவைக்கொண்டே அங்கே அவர்கள் வருவதை உய்த்தறியமுடிந்தது. கர்த்தமரிடம் பேசிக்கொண்டிருந்த சலன் “உன்னை அழைக்க ஆளனுப்ப எண்ணினேன்…” என்றான். பூரிசிரவஸ் “நகரை சுற்றிப்பார்த்துவிட்டு வந்தேன்” என்றான். “இவ்வருடம் குளிர் கூடுதலாக இருக்குமென சொல்கிறார்கள். வடக்குமுடிகளின் மேல் வெண்ணிறமான முகில்வளையங்களை பகலில் பார்க்கமுடிகிறது.”

கர்த்தமர் “பனிவிழுந்து ஷீரபதம் முழுமையாகவே மூடிவிடுமென சொல்கிறார்கள். ஆகவே மலைக்குடிகள் பொருட்களை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். போதிய உணவும் பிறவும் வந்துசேரவில்லை.” பூரிசிரவஸ் “ஏன்?” என்றான். “துவாரகையின் படகுகள் இப்போது அசிக்னியின் எல்லைவரை வருகின்றன. கடலுப்பு நிறையவே கிடைப்பதனால் மலையுப்பின் விலை குறைந்துகொண்டே செல்கிறது. நமக்கு மலையுப்புதான் முதன்மையான வணிகப்பொருள்.” பூரிசிரவஸ் பீடத்தில் அமர்ந்துகொண்டு “மலையுப்பைத்தானே தெய்வங்களுக்கு படைக்கவேண்டும்? கடலுப்பு சமைக்கப்பட்டதல்லவா?” என்றான். “ஆம், ஆனால் உணவுக்கு கடலுப்பு மேலும் நல்லது என்கிறார்கள்” என்றார் கர்த்தமர்.

பிண்டகர் விரைந்து உள்ளே வந்தார். அவரது உடலின் வியர்வை மணத்திலேயே மது கலந்திருந்தது. “நான் எழுந்தபோது ஒரு சிறு சிக்கல். வடபுலத்து ஒற்றன்…” என அவர் தொடங்க சலன் “நான் ஏதும் கேட்கவில்லை” என்றான். அவர் தலைவணங்கி பூரிசிரவஸ்ஸை பார்த்தார். “காலையிலேயே அலுவலர்களை வரச்சொல்லி ஆணையிட்டாலென்ன?” என்றான் பூரிசிரவஸ். “சொல்லலாம். எழுந்து மதுமயக்கில் வந்தமர்ந்து துயில்வார்கள். அவர்கள் முறையாகத் துயின்று மீண்டால்தான் இங்கே ஏதேனும் பணிகள் நடக்கும்” என்றார் கர்த்தமர். “மலைமக்கள் கொள்வதற்காக பொருட்களை வாங்குவதற்கு அரசு கடனுதவிசெய்தாலென்ன என்ற எண்ணம் நேற்று எழுந்தது. அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.”

“கருவூலம் என்ன நிலையில் உள்ளது?” என்றான் பூரிசிரவஸ். “ஒருவருடம் அதை செய்யலாம்” என்றார் பிண்டகர். “ஒருவருடம் செய்யும் ஒரு செயலை பிறகெப்போதும் நிறுத்தமுடியாது இளையோனே. அதுதான் முதன்மை இடர். அதைப்பற்றித்தான் ஐயம்கொண்டிருக்கிறோம்” என்று சலன் சொன்னான். பூரிசிரவஸ் எழுந்துகொண்டு “மூத்தவரே, நாம் அவர்களிடமிருந்து உப்பை வாங்குவோம்” என்றான். “வாங்கி என்னசெய்வது? இங்கே நகரில் உப்பை சேர்த்துவைக்க நமக்கு என்னசெலவாகுமென நினைக்கிறாய்? குளிர்காலமழைகளில் அதைக் காப்பதும் பெரும்பாடு” என்றான் சலன்.

“சேர்த்துவைக்கவேண்டியதில்லை. அவற்றுக்கு ஒரு பணி உள்ளது” என்று பூரிசிரவஸ் சொன்னான். “நான் சத்திராவதி அருகே ஒரு நெடுஞ்சாலை விடுதியில் வங்கம் செல்லும் பீதநாட்டு வணிகர்களிடம் அவர்களின் கதையை கேட்டுக்கொண்டிருந்தேன். ஒருவன் ஒரு நிகழ்ச்சியை சொன்னான். அவர்கள் நாட்டு வணிகர்களில் ஒருசாரார் வடபுலத்தில் எங்கோ செல்லும்போது கடல் கடுங்குளிரால் உறைந்துவிட்டது. கலம் அதில் சிக்கிக்கொண்டது. அங்கு கடல் கடுங்குளிரால் உறைந்தாலும் வெயில் விழிமூட விரிந்திருக்குமாம். அவர்கள் தங்கள் கலத்திலிருந்த கருங்கந்தகப்பொடியை கடல்மேல் விரித்திருக்கிறார்கள். வெண்மையைவிட கருமை வெயில் வெப்பத்தை உண்ணக்கூடியது. அது பனியை உருக்கி கலத்தை விடுவித்தது.”

“வெறும் கதை” என்றான் சலன். “கடல் ஒருபோதும் உறையாது. ஏனென்றால் அது அலையால் ஆனது.” பூரிசிரவஸ் ”நானும் அதையே எண்ணினேன். ஆனால் அந்தக் கதையில் ஒரு நடைமுறை உண்மை இல்லையேல் அதை இத்தனைபேர் நினைவில் கொண்டிருக்கமாட்டார்கள்” என்றான். “அதற்கு என்ன பொருள் இப்போது?” என்றான் சலன். “மலையில் பல இடங்களில் கன்னங்கரிய மண் உள்ளது. நம் மலைமக்களிடம் அதை வெட்டிக்கொண்டுவந்து ஷீரபதத்தின் மீது விரிக்க இப்போதே ஆணையிடுவோம். நம் நாட்டில் குளிர்காற்றால்தான் பனி உருவாகிறது. வானிலிருந்து பனி விழுவதில்லை. குளிரில் வானம் வெளுத்திருப்பதனால் வெயில் சுடும்படி பொழியும் என நாமறிவோம்.” சலன் “ஆம், தோல் வெந்துவிடும் வெம்மை கொண்டது” என்றான்.

“அக்கரிய மண்ணை கரியுடன் கலந்து ஷீரபதத்தில் விரித்தால் பகலில் வெயிலே பனியை உருக்கி அகற்றி பாதையை அமைத்துவிடும்.” அவன் ஏன் அதை சொல்கிறான் என்று புரியாமல் கர்த்தமர் சலனை நோக்கிவிட்டு “ஆனால் நாம் உப்பை வாங்கவேண்டும் என்கிறீர்கள்” என்றான். “கர்த்தமரே, நமது மலைச்சரிவில் அமைவது மேலே இமையமுடிகளில் உள்ளது போன்ற பனிப்பாறை அல்ல.மெல்லிய கூழ்ப்பனி அது. கீழே ஷீரபதத்தில் பனியுருகியதென்றால் மேலிருந்து பனி வழிந்து வந்து அதை உடனே மூடிவிடும். அதைவெல்லும் வழி என்பது மலைச்சரிவுகளில் உப்பைத்தூவுவதுதான். உப்புடன் இணைந்த பனி உறுதியாகிவிடும். பாதைநோக்கி கீழிறங்காமல் அதை நிறுத்திவிடமுடியும்.”

மூவர் விழிகளிலும் நம்பிக்கை வரவில்லை. .”இதை வெற்றிகரமாக செய்யமுடியும் மூத்தவரே. குளிர்காலத்தில் மலைப்பாதை மூடியிருப்பதனால் இந்நகரத்தின் வணிககாலம் பாதியாகிவிடுகிறது. மலைப்பாதைகள் திறக்கப்படுமென்றால் குளிர்காலத்துக்குரிய பல பொருட்களை கொண்டுவர முடியும். இன்றுகாலை குளிர்காலத்தில் மட்டுமே கிடைக்கும் பொருட்களையும் உணவுகளையும் கண்டேன். மேலும் பல பொருட்கள் அவ்வாறு கிடைக்கலாம். பனியை பெட்டிகளில் அடைத்து அவற்றில் உயிர்ப்பொருட்களை வைத்து நெடுந்தூரம் அழுகாமல் கொண்டுசெல்லமுடியும். அசிக்னி வரை கொண்டுசெல்ல முடிந்தாலே அவை பெருமதிப்புள்ளவையாகும். அவற்றை நாம் இரண்டாவது வணிகமாக ஆக்கினால் நம் கருவூலமும் நிறையும்.”

சலன் ”நான் இதை நம்பவில்லை. இவையனைத்தையும் வெறும் கனவென்றே எண்ணுகிறேன். செய்துபார்த்தால் மட்டுமே இதன் நிறைகுறைகள் தெரியும். ஆனால் மலைமக்களுக்கு கடனாகக் கொடுப்பது என்பது செல்வத்தை தூக்கி வீசுவது மட்டுமே. அச்செல்வத்தை உப்பின் பேரால் கொடுத்தால் அவர்களை பணியாற்றச்செய்யமுடியும். மேலும் அது கடனாக கருதப்படாது. அடுத்தவருடம் கருவூலச்செல்வம் போதவில்லை என்றால் உப்பு தேவையில்லை என்று சொல்லிவிடலாம். பணியாற்றாமல் இருப்பதை விரும்பும் மலைமக்கள் அதை வற்புறுத்தவும் மாட்டார்கள்…” என்றான். கர்த்தமர் புன்னகைசெய்தார். “ஆகவே, இதை செய்துபார்க்கலாமென எண்ணுகிறேன்” என்றான் சலன்.

”குளிர்காலப் பாதை திறந்தால் மட்டும் போதாது மூத்தவரே. துணிச்சலான வணிகர்களை அழைத்து அவர்களிடம் மலைவணிகத்தை குளிர்காலத்திலும் செய்யும்படி ஆணையிடவேண்டும். குளிர்கால வணிகத்திற்கு வரி இல்லை என அறிவிக்கலாம்.” சொன்னதுமே அவனுள் அடுத்த எண்ணம் வந்தது “குளிர்கால வணிகர்களுக்கு நமது அத்திரிகளையும் குதிரைகளையும் அளிக்கலாம். ஏனென்றால் குளிர்காலத்தில் வணிகம்செய்யமுற்பட்டு விலங்குகளுக்கு நோயோ இடரோ நிகழ்ந்துவிட்டதென்றால் கோடைவணிகம் அழிந்துவிடும் என அவர்கள் அஞ்சுவார்கள்” என்றான் பூரிசிரவஸ். சலன் “ஆம், அது நன்று” என்றபின் சிரித்து “பெருநகர்களுக்கு நீ சென்றது வீணாகவில்லை” என்றான்.

“மூத்தவரே, இன்று நகரங்களனைத்துமே வணிகர்களையே நம்பியிருக்கின்றன. போரை நம்பி நாடுகள் அமைந்த காலம் முடிந்துவிட்டது. வணிகத்தை நம்பியே இனிமேல் முடிகளும் கொடிகளும் அமையும்” என்றான். சலன் பெருமூச்சுடன் “ஆம், அதற்கு நீரும் நிலமும் தேவை. வேளாண்மையும் தொழிலும் தேவை” என்றான். “இல்லை மூத்தவரே. பொருட்கள் பெருமளவுகிடைப்பது என்பது கங்கைநிலத்தின் வல்லமை. நம் வல்லமை என்பது நமது பொருட்கள் அரிதாகவே கிடைப்பது. அவை அனைத்துமே குளிர்காலத்தில் கிடைப்பவை. அவற்றை நாம் கோடைவரை வைத்திருந்து விற்றாகவேண்டும் என்பதனால்தான் நம் வணிகம் குறுகியிருக்கிறது. குளிர்காலப்பாதைகள் உருவாகுமென்றால் நம் வணிகமும் வலுப்பெறமுடியும்.” சலன் “பார்ப்போம்” என்றான். கர்த்தமர் அசைந்தமுறையில் நம்பிக்கையின்மை தெரிந்தது.

சலன் “நீ விட்டுச்சென்ற பணி எஞ்சியிருக்கிறது” என்றான். “மதரநாட்டுக்கு சென்றாகவேண்டும். அங்கே சல்லியரின் உள்ளத்தை அறியவேண்டும். விரைவிலேயே நாம் உபமத்ரருக்கு நம் சொல்லை அளித்துவிடவேண்டும்.” பூரிசிரவஸ் தயங்கி “உடனே…” என்று தொடங்க “அரசியலில் உணர்வுகளுக்கு இடமில்லை இளையோனே. நீ இன்றே கிளம்பிச்செல். மத்ரரை சந்திப்பதற்குள் விஜயையை சந்திக்கவேண்டும் நீ. அவள் உனக்காக அவையில் சொல்வைக்கவேண்டும்” என்றான் சலன். “பால்ஹிகக்கூட்டமைப்பு ஒவ்வொரு கணமும் உடைந்துகொண்டிருக்கிறது என்ற அச்சம் இரவுகளில் என்னை துயில்மறக்கச்செய்கிறது. இது அமையுமென்றால் ஓர் உறுதிப்பாட்டை அடைந்தவனாவேன். அது உன் கையிலேயே உள்ளது.”

“தந்தையிடம் சொல்லிவிட்டு…” என்று பூரிசிரவஸ் மேலும் தயங்க “அவர் விழிப்பிலும் மயக்கிலிருக்குமளவுக்கு குடித்துவிட்டார்” என்றான் சலன். “சென்ற மாதம் ஒரு கூர்ஜரத்துச் சூதன் இங்கு வந்தான். மத்யகீடம் ஒன்றின் கதையை சொன்னான். அதை இன்னொரு மத்யகீடம் வாயிலேயே கடித்துவிட்டது. ஆகவே அதன் ஒலி மாறுபட்டு ரீரா என்பதற்கு மாறாக சிவா என்று ஒலிக்கத்தொடங்கியது. வாழ்நாளெல்லாம் சிவன் பெயரைச் சொன்னமையால் அது மறுபிறயில் ஓர் அரசனாகப் பிறந்தது. அவ்வரசனுக்கு மத்யகீடன் என்று பெயர். மத்யகீட குலம் நூறு தலைமுறை ஆட்சிசெய்தது. அதன் இறுதி அரசன் மதுவில் கால்வழுக்கி மதுக்குடத்திற்குள் தலைகீழாக விழுந்து உயிர்துறந்தான். அதனால் அவன் மீண்டும் தன் இறுதிவிருப்பின்படி மீண்டு மத்யகீடமாக மலைப்பட்டை ஒன்றுக்குள் பிறந்தான்.”

கர்த்தமர் சிரிக்க பிண்டகர் புரியாமல் அவரை நோக்கினார். பூரிசிரவஸ் சிரித்துக்கொண்டு “அரியகதை. அவர்கள் புதியகதைகளை அவையிலேயே உருவாக்க வல்லவர்கள்” என்றான். சலன் “நமது புகழ் கீழே தாழ்நிலங்களில் பரவட்டும். அங்கே நமது மதுவை விரும்பத்தொடங்குவார்கள்” என்றான். பூரிசிரவஸ் “நான் நாளை காலையிலேயே கிளம்புகிறேன் மூத்தவரே” என்றான்.