வெண்முகில் நகரம் - 57
பகுதி 12 : நச்சுமலர்கள் – 2
காலையில் எழுந்ததுமே முதல்நினைவாக கிருஷ்ணன் தன் நெஞ்சுள் வருவது ஏன் என்று சாத்யகி பலமுறை வியந்ததுண்டு. அந்த எண்ணம் நிலம்போல எப்போதுமென இருக்க அதன்மேல் அவன் வாழ்ந்துகொண்டிருப்பதாக தோன்றும். தன்னுணர்வெழும்போது அதில் இருந்துகொண்டிருப்பான். நாளெல்லாம் எங்கிருந்தாலும் எதைச்செய்தாலும் அடியில் அது இருந்துகொண்டிருக்கும். செயல் சற்று ஓயும்போது அது மட்டும் எஞ்சியிருக்கும்.
அல்லது இரவில் துயிலச்செல்கையில் எப்போதும் அவனைப்பற்றிய எண்ணத்துடன்தான் செல்கிறான் என்பதனால் அது நிகழலாம். துயில்வந்து சிந்தையைமூடும்போது எஞ்சும் இறுதி எண்ணம் அவன். விழிக்கையில் அதுவே நீடிக்கிறது. துயிலென்பது ஒரு கணநேர மயக்கம்தான் என்பதுபோல. கணம்கூட அல்ல. அது இன்மையேதான். அப்படியென்றால் அவன் கிருஷ்ணனிலிருந்து விலகுவதேயில்லை. கிருஷ்ணன் எனும் எண்ணத்தின் நீட்சியே அவனது உள்ளம் என்பது. அதை ஒற்றைப்பெருஞ்சொல்லாக திரட்டிக்கொள்ளமுடியும்போலும்.
ஆனால் பின்னர் அவன் நோக்கியபோது ஒன்று தெரிந்தது. முந்தையநாளின் எண்ணம் அறுபட்ட புள்ளியிலிருந்துதான் எப்போதும் மறுநாளின் எண்ணம் தொடங்குகிறது, ஆனால் மிகநுட்பமான ஒரு மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. திசை சற்று மாறியிருக்கும். உணர்வெழுச்சி மெல்லிய திரிபு கொண்டிருக்கும். பெரும்பாலும் கலங்கிக்குழம்பியவை தெளிவுகொண்டிருக்கும். ஒவ்வொருமுறையும் அறிந்து வியப்பதொன்றுண்டு, மையம் திரண்டிருக்கும். அப்படியென்றால் இரவு முழுக்க உள்ளே ஆன்மா தவித்துத் துழாவுகிறது. குடல் உணவை என உட்செல்வதை எல்லாம் அது செரித்துக்கொள்கிறது. கருதிரட்டி கனிவுகொள்கிறது. துயிலில் அவன் கிருஷ்ணனின் செயல்களைத் தொகுத்து கிருஷ்ணனை மட்டும் எடுத்துக்கொண்டு காலையில் எழுகிறான்.
நீராட்டறையில் அமர்ந்திருக்கையில் அவன் முந்தையநாளைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். ஒருநாளில் நிகழ்ந்தவை முழுவாழ்க்கையைப்போல நீண்டு கிடந்தன. மலையடிவாரத்து யாதவக்குடிகளில் அத்தனை நிகழ்வுகள் நினைவில் தேங்க பற்பல ஆண்டுகள் ஆகும். நகர்நுழைந்தது முதல் காந்தாரரை அவர் அரண்மனையில் சந்தித்து அவைக்களம் பேசி அரசரை இரவில் சந்தித்து மீண்டது வரை தொட்டுத்தொட்டு மீட்டெடுத்தபோது காலையில் படகில் விழித்தெழுந்து நின்றது நெடுநாள் முன்னர் எப்போதோ என்றே உள்ளம் திகைப்புகொண்டது.
இரவில் தேரில் திரும்பும்போது கிருஷ்ணன் திருதராஷ்டிரரைப்பற்றி சொல்வான் என்று சாத்யகி எண்ணினான். ஆனால் கிருஷ்ணன் தேர்வலனிடம் களிச்சொல் உரைத்து அவன் குடுமியைப்பிடித்து இழுத்தான். தேரிலேறிக்கொண்டதும் இருமருங்கும் எழுந்து ஓடத்தொடங்கிய சாலைக்காட்சிகளில் மூழ்கினான். அவன் முகம் ஆடி என அக்காட்சிகளுக்கு எதிர்வினையளித்தபடியே வந்தது. கடைகளை மூடிக்கொண்டிருந்தனர். மூடியகடைகளுக்கு முன்னால் இரவுக்களிமகன்கள் கூடி குப்பைகளுக்குத் தீயிட்டு மதுக்குவளைகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வணிகச் சாலைகளில் இரவு அவிழ்த்துவிடப்பட்ட அத்திரிகளும் கழுதைகளும் மேய்ந்துகொண்டிருந்தன. மரங்களுக்குமேல் இருந்து கூரைகளை நோக்கி விசிறியொலியுடன் வௌவால்கள் பறந்தன.
சாத்யகி பேச்சைத்தொடங்க விழைந்தான். “திருதராஷ்டிரர் வாரணவத நிகழ்ச்சியை அறிந்திருக்கிறார்” என்றான். “முன்பு அறிந்திருந்தார், ஆனால் நம்பவில்லை. இப்போது நம்புகிறார், ஆகவே அஞ்சுகிறார்” என்றான் கிருஷ்ணன். “ஒவ்வொருவரிலும் உறையும் தெய்வம் வெளிவரும் கணமொன்றுண்டு. சித்தம் அறிந்த சொல்வெளியை திரைவிலக்கி தெய்வம் பேசத்தொடங்குவதைக் கேட்கையில் அச்சம் எழுகிறது.” அதே குரலில் “இந்த வணிகனைப்பார். தன் கடைக்கு முன் களிமகன்கள் அமரலாகாதென்பதற்காக முற்றமெங்கும் உப்பைக் கொட்டிவிட்டுச் சென்றிருக்கிறான்” என்றான்.
“உப்பு என்ன பெருந்தடையா? அதை சற்று விலக்கிவிட்டு அமரலாமே” என்றான் சாத்யகி. “களிமகன்கள் அதைச்செய்யுமளவும் பொறுமைகொண்டவர்கள் அல்ல. இடம்தேடி வருகையில் உப்பு காலில் குத்தக்கண்டு இயல்பாகவே விலகிச்சென்றுவிடுவார்கள்” என்றான். சாத்யகி திரும்பி அந்தக்கடையை நோக்கினான். “அந்தக்கடையில் மட்டும்தான் அதை செய்திருக்கிறார்கள்… அல்லது அது இயல்பாக விழுந்திருக்கலாம்” என்றான். “இல்லை. அது கூலக்கடை. அங்கே உப்பிருக்க வழியில்லை” என்றான் கிருஷ்ணன். “களிமகன்கள் அனல்மூட்டுவது கூலக்குவையை எரிமூட்டிவிடுமென அஞ்சி அதை செய்திருக்கிறான்.” சாத்யகி சிலகணங்கள் சிந்தித்துவிட்டு “அரிய எண்ணம்” என்றான்.
“மிக அரியது” என்றான் கிருஷ்ணன். “இளையோனே, அந்த வணிகனின் பெயரையும் குடியையும் கேட்டுச்சொல்ல ஆணையிடும். அவன் துவாரகைக்கு வரட்டும். அங்கே அவன் பொன்கொய்து களஞ்சியம் நிறைக்க முடியும்.” சாத்யகி “செய்கிறேன்” என்றான். “அவன் எண்ணிச்செய்பவன் இளையோனே. களிமகன்கள் அமரலாகாது. அதற்கு என்னதேவையோ அதை எவ்வளவு போதுமோ அவ்வளவே செய்கிறான். எச்சரிக்கையாலோ அளவுக்குமீறி மதிப்பிடுவதாலோ உப்பில்கூட ஊதாரித்தனம் காட்டவில்லை. தன் எதிரி எவரென்று நோக்கி துல்லியமாக மதிப்பிட்டிருக்கிறான்.”
“அவன் சற்று அளவுமீறினால்கூட களிமகன்கள் அவன் உத்தியை கண்டுகொண்டிருப்பார்கள். அதை அவர்கள் ஓர் அறைகூவலென எடுத்துக்கொண்டுவிட்டால் அதன்பின் அவர்களை எதைக்கொண்டும் தடுக்கமுடியாது. ஏனென்றால் களிமகன்கள் தங்களை ஒட்டுமொத்த நகருக்கும் எதிரிகளாக எண்ணுபவர்கள். நகரின் முகமென தெளிந்துவரும் ஒருவனை அவர்கள் தேடிக்கொண்டே இருப்பார்கள்” என்றான் கிருஷ்ணன். “விழைவில் கையடக்கம் கொண்டவன் அறிஞன். வெறுப்பில் கையடக்கம் கொண்டவன் பேரறிஞன். இளையோனே, அச்சத்திலும் கையடக்கம் கொண்டவன் ஞானி. இவ்வணிகன் அவன் கை அறிந்த கூலத்திலும் பொன்னிலும் புடவியின் நெறியை கண்டுகொண்டவன்.”
அரண்மனைக்கு வந்ததுமே கிருஷ்ணன் “நான் துயிலவேண்டும்… மூத்தவர் விடியலில் வந்து என்னை மற்போருக்கோ கதைப்போருக்கோ அழைக்கப்போகிறார். ஒவ்வொருநாள் இரவும் அவரை எண்ணிக் கலங்கியபடி துயிலச் செல்கிறேன். இளமைமுதல் இதுவே வழக்கம்” என்றபின் விலகிச்சென்றான். சாத்யகி ஒற்றர்களை அழைத்து மூன்று ஆணைகளை இட்டான். அந்த உப்பிட்ட வணிகரை மறுநாள் கிருஷ்ணனை சந்திக்க வரச்சொன்னான். அந்தக்கடைமுன் கிடக்கும் உப்பு வெறும் உப்புதானா என ஒரு துளி கொண்டுவந்து உய்த்தறிந்துசொல்ல அணுக்கமருத்துவரிடம் கொடுக்க ஆணையிட்டான். நகரெங்கும் வேறெவரேனும் உப்பு தூவியிருக்கிறார்களா என்று பார்த்துவரப் பணித்தான்.
தன் அறைக்குச் செல்லும்போது அவன் கிருஷ்ணனையே எண்ணிக்கொண்டிருந்தான். அத்தனை நிகழ்வுப்பெருக்கின் நடுவே உப்பை எப்படி நோக்கினான்? அதற்கும் அன்றைய செயல்களுக்கும் நடுவே ஏதேனும் பொருத்தம் உள்ளதா? சுழன்று சுழன்று அவன் சிந்தை கிருஷ்ணன் மேலேயே வந்து நின்றது. இறுதியாக எண்ணம் கரையும்போது பொற்படிகளில் பதிந்து மேலேறிச் சென்ற செம்மலர் அடிவிளிம்பும் மான்விழியென மின்னும் நகங்களும் கொண்ட வாழைப்பூநிறப் பாதங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
கிருஷ்ணனின் அறைக்குமுன் பெருவணிகர் நின்றுகொண்டிருந்தார். சாத்யகியைக் கண்டதும் அவர் பெரிய பாகை இறங்க தலைவணங்கி வாழ்த்துரைத்து “சந்திக்கும்படி ஆணைவந்தது” என்றார். சாத்யகி முகமன் சொன்னபின் உள்ளே சென்றான். கிருஷ்ணன் உள்ளே சாளரம் வழியாக வெளியே நோக்கியபடி நின்றிருந்தான். பூவரசுப்பூ போல புதிய இளமஞ்சளாடை விரிந்திருந்தது. சாத்யகி அருகே சென்று நின்றான். கிருஷ்ணன் திரும்பி “காகங்கள்…” என்றான். “இந்தமரத்தில் பன்னிரு காகங்கள் வாழ்கின்றன. காலையில் ஒரு புதியகாகம் வழிதவறி வந்தது. அதைத் துரத்திச்சென்று எல்லைகடக்கச்செய்தபின் வந்து அமர்ந்திருக்கின்றன. அன்னைப்பெருங்காகம் ஒன்று அதோ இருக்கிறது. அதற்கு நான் காளிகை என்று பெயரிட்டிருக்கிறேன். முதுமை வந்து தூவல்கள் பொழியத்தொடங்கிவிட்டன. ஆயினும் இன்னமும் தன் குலத்தை தன் சிறகுகளுக்குள்ளேயே வைத்திருக்கிறாள்.”
சாத்யகி புன்னகைசெய்தான். “வணிகரை வரச்சொல்லும்” என்றபடி கிருஷ்ணன் வந்து பீடத்தில் அமர்ந்துகொண்டான். சாத்யகி கதவைத்திறந்து பெருவணிகரை உள்ளே அழைத்தான். கிருஷ்ணன் எழுந்து அவரை வரவேற்று முகமன் சொல்லி பீடத்தில் அமரச்செய்தான். அவர் திகைத்து அஞ்சி சாத்யகியை நோக்கினார். அத்தகைய வழக்கமே அஸ்தினபுரியில் இல்லை என சாத்யகி உய்த்தறிந்தான். கிருஷ்ணன் தன்னை கேலிசெய்கிறார் என்றும் அதைத்தொடர்ந்து கடுமையான சில வரப்போகின்றன என்றும் எண்ணிய பெருவணிகர் கூப்பிய கைகளும் நடுங்கும் சொற்களுமாக முகமன் சொல்லி மெல்ல இருக்கைவிளிம்பில் அமர்ந்தார். அவரது கால்களின் நடுக்கம் ஆடைக்குக் கீழே தெரிந்தது.
மிக இயல்பாக கிருஷ்ணன் அவரது கூலவணிகம் பற்றி கேட்டறிந்தான். அவருக்கு நூறு படகுகள் கங்கையில் ஓடின. கூலத்தை கங்கைத்துறைகளில் கொள்முதல் செய்து தாம்ரலிப்திக்கு படகில் கொண்டுசென்று பீதர்களுக்கும் சோனகர்களுக்கும் விற்றார். ”துவாரகைக்கு கொண்டுவாருங்கள்… மேலும் விலைகிடைக்கும்” என்றான் கிருஷ்ணன். “ஆனால் துவாரகைக்கான நீர்வழிக்கு நான் சப்தசிந்துவை கடக்கவேண்டுமே” என்றார் பெருவணிகர். “ஆம், ஆனால் சோனகரும் யவனரும் பாரதவர்ஷத்தையே சுற்றி வஞ்சியையும் மதுரையையும் கடந்து மறுபக்கம் வரவேண்டுமே. கலங்களை அவிழ்த்து மீண்டும் பூட்டவேண்டும் என்பதே பெருஞ்செலவு. அச்செலவில் பாதியை நீர் மிகைப்பொருளெனப் பெற்றாலே அது பெரும்செல்வம்.”
பெருவணிகர் மிகச்சிலகணங்களிலேயே அக்கணக்கை போட்டுவிட்டார். “அத்துடன் பீதர்கள் கோதுமை, அரிசி அன்றி பிற கூலங்களை விரும்புவதில்லை. சோனகர் அனைத்தையும் வாங்குவர். அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடும் அவர்களுக்குத்தெரியாது. புஞ்சைமணிகளைக்கூட மேலும் விலைகொண்டவை என்று சொல்லி அவர்களிடம் விற்கமுடியும்…” பெருவணிகர் “ஆனால் உண்ணத்தொடங்கும்போது தெரியுமே” என்றார். “தெரியாது. பீதர் தங்கள் உணவை சூடாக உண்பவர்கள். சோனகர் உணவை சமைத்து நெடுநாள் வைத்திருந்து உண்ணும் வழக்கம் கொண்டவர்கள். சுவைவேறுபாடுகள் மறைந்துவிடும்.”
விரைவிலேயே பெருவணிகர் தன் அனைத்துத் தயக்கங்களையும் இழந்து இன்னொரு வணிகரிடம் என பேசத் தொடங்கினார். சுதுத்ரியில் ஓடுவதற்குரியிய சிறுகலங்கள், வணிகப்பாதையின் காவல்தேவைகள், துவாரகையின் அரசமுறைமைகள், சுங்கநெறிகள் என அனைத்தையும் பேசி தெளிவுகொண்டபின் வணங்கி கிளம்பினார். அவர் முகத்தில் உவகையோ கிளர்ச்சியோ தெரியவில்லை. சற்று ஐயம் கொண்டவராகவே தெரிந்தார். கிருஷ்ணன் திரும்பி “பெரிய வணிகர் இவர். நானே அழைத்தபின்னரும் என் நாவால் உறுதிமொழிகளைப் பெறாமல் முடிவெடுக்க மறுக்கிறார். உள்ளம் நிறைய நம்பிக்கையும் உவகையும் வந்தபின்னரும் முகத்தில் ஐயத்தையே எனக்குக் காட்டுகிறார்” என்றான்.
“இங்கு வணிகர்களை இப்படி நடத்துவதில்லை போலும்” என்றான் சாத்யகி. “ஆம், அது பழைய நெறிகளின் கூற்று. ஷத்ரியர் வணிகர்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருக்கவேண்டும். வணிகர்கள் அரசுடன் நிகர்நின்று வணிகம் பேசும்நிலை ஒருபோதும் வரக்கூடாது. அவ்வாறு விடப்பட்டால் வணிகர்கள் இழப்பின் கதையை மட்டுமே சொல்வார்கள். அவர்களிடமிருந்து அரசுக்கு துளிகூட செல்வம் வந்துசேராது” என்றான் கிருஷ்ணன். “இதோ இந்த வணிகர் எனக்கு எதுவுமே தரத்தேவையிருக்காது என எண்ணிக்கொண்டு செல்கிறார். ஏனென்றால் என்னை வணிகப்பேச்சால் வென்றுவிடலாமென திட்டமிடுகிறார். ஷத்ரியர்களை வைசியர்கள் வெல்வது மிக எளிதும்கூட.”
“அத்தனைபேரிடமும் நீங்களே வணிகம்பேசமுடியுமா என்ன?” என்றான் சாத்யகி. “முடியாது. ஆகவேதான் நான் வணிகர்களுக்கு நண்பனாக இருக்கிறேன். என் அரசு ஒருகையில் வாளும் மறுகையில் தராசுமாக நின்று அவர்களிடம் பேசுகிறது. அஸ்தினபுரியில் ஷத்ரியர் வைசியர்களை அச்சுறுத்துகிறார்கள். அரசமைப்பு அவர்களை விளையாடவிடுகிறது. துவாரகை நேர்மாறானது” என்றபின் “நாம் இன்று காந்தாரியை காணச்செல்கிறோம்” என்றான். சாத்யகி விழிகளால் வியப்பைக் காட்ட “காந்தாரியும் என்னிடம் வாக்குறுதிகளைப் பெற விழைகிறார்கள் என நினைக்கிறேன். நான் வாக்குறுதிகளை அளிக்கும் கனிமரம் என எண்ணிவிட்டார்கள்” என்றான்.
“நேற்று திருதராஷ்டிரர் பேசியதென்ன என அறியவிழைகிறார்களா?” என்றான் சாத்யகி. “இல்லை. உளவறியும் அரசியலறிவு அவருக்கில்லை. அவர் நேரடியாகவே என்னிடம் பேசுவார். உடன் அவரது தங்கையரும் இருப்பார்கள்.” சாத்யகி ”அவர்கள் கல்வியோ முறைமையோ இல்லாத பாலைநிலப்பெண்கள் என்றே சொல்லப்பட்டது” என்றான். ”ஆம், ஆனால் அன்னையரிடமிருக்கும் உயிர்விசை அளப்பரியது. அதை எதிர்கொள்ள எட்டுகைகளிலும் படைக்கலங்களும் கேடயங்களும் தேவை” என்ற கிருஷ்ணன் “ஆனால் பார்ப்பது நமக்கு நலமே பயக்கும். ஏனென்றால் பேசுவதை எல்லாம் பேசிமுடித்துக் கிளம்பினால் அத்தையிடம் தெளிவுரைக்க முடியும்” என்றான்.
காவலர்தலைவனுக்கும் ஏவலர்தலைவனுக்கும் ஆணைகளை அளித்துவிட்டு கிளம்பி தேரில் சாலைகளில் செல்லும்போது கிருஷ்ணன் மீண்டும் சாலையில் ஒன்றிவிட்டதை சாத்யகி கண்டான். காந்தாரி அவன் சித்தத்தில் சற்றும் இல்லை என்பதையும் காந்தாரியை நேரில்காணும் கணம் மட்டுமே அவள் அவனுள் தோன்றப்போகிறாள் என்பதையும் அவன் உணரமுடிந்தது. அப்படி எதைத்தான் பார்க்கிறான் என்று அவன் விழிகளையும் சாலையையும் நோக்கினான். பீதநாட்டுப் பட்டு வந்து இறங்கியிருந்தது. செந்நீலம், குருதிச்செம்மை, வெண்மை என மூன்றே நிறங்கள். பெண்கள் கூடிநின்று சிரித்து உரையாடி கூவி அவற்றை நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் ஒவ்வொரு பெண்ணையாக நோக்கிக்கொண்டு வந்தான்.
அவன் கண்கள் எந்த அழகியால் பற்றிக்கொள்ளும் என அவன் கூர்ந்தான். அவை மாறவேயில்லை. அவன் எந்தப்பெண்ணாலும் கவரப்படவில்லை. இல்லை, அத்தனைபெண்களாலும் கவரப்பட்டிருக்கிறான் என்று உடனே தோன்றியது. பெண்மை என்பதே பேருவகை என எண்ணும் முதிராஇளமையை அவன் கடக்கவேயில்லை போலும். ஆனால் அதே பேருவகையுடன் பறவைகளையும் சாலைகளில் நின்ற விலங்குகளையும் கூடத்தான் நோக்குகிறான் என்றும் அவனுக்கு தெரிந்தது. அவன் விழிகள் பறந்தெழும் காகத்தை, அதைநோக்கிச் சென்று ஏமாந்து நாசுழற்றி அமர்ந்து வாலை மடித்துக்கொண்ட பூனையை, கடந்துசெல்லும் காலுக்கு சற்றே இடம் விட்டு பறந்தமைந்த இன்னொரு காகத்தை என தொட்டுத்தொட்டுச் சென்றன. எதைத்தான் அவன் நோக்குகிறான்?
அதை உணர்ந்தவன் போல அவன் திரும்பி “வேடிக்கைபார்க்கத் தெரிந்தவனுக்கு இவ்வுலகம் இன்பப்பெருவெளி, இல்லையா?” என்றான். என்ன சொல்வதென்று தெரியாமல் தலையசைத்தான் சாத்யகி. “ஆனால் பொருள் தேடலாகாது. அழகு அழகின்மை நன்று தீதெனும் இருமை காணக்கூடாது. அனைத்தையும் விட முதன்மையாக நேற்று நாளையால் இக்கணத்தை கறைபடச்செய்யக்கூடாது” என்றான் கிருஷ்ணன். அவன் விழிகள் மாறுபட்டன. “ஒவ்வொரு கணமும் முழுமைகொண்டு நம் முன் நிற்கையில் பெரும் திகைப்பு நெஞ்சில் எழுகிறது இளையோனே. அள்ள அள்ளக்குறையாத பெருஞ்செல்வத்தின் நடுவே விடப்பட்டவர்கள் நாம்.” சாத்யகி முழுமையாகவே விலகிவிட்டிருந்தான். ஆம் என்றோ இல்லை என்றோ அன்றி மையமாக தலையசைத்தான்.
அவர்கள் அந்தப்புரத்தின் வாயிலை அடைந்ததும் தேர்க்காவலர் வந்து புரவிகளை பற்றிக்கொண்டனர். “ஊஷரரே, உமது மைந்தன் அல்லவா இங்கே வடபுலக்கோட்டைக்காவலன் கலதன்?” என்றபடி கிருஷ்ணன் இறங்கினான். “அரசே, என்னை எப்படி அறிவீர்?” என்றார் ஊஷரர் வியப்புடன். சிரித்தபடி. “நான் அனைவரையும் அறிவேன்” என்றான் கிருஷ்ணன். “சதுஷ்கரே, நீர் என்ன சொல்கிறீர்? அனைவரையும் அறிந்திருத்தல் எளியது அல்லவா?” சதுஷ்கன் திகைப்புடன் “ஆம்… ஆனால்…” என்றான். ”மனிதர்கள் இங்கே மிகச்சிலரே இருக்கிறார்கள் சதுஷ்கரே. அவர்களின் முகங்கள் குறைவு. அகங்கள் அதைவிடக்குறைவு” என்ற கிருஷ்ணன் “அரசியைச் சந்திக்கவந்தேன், வருகிறேன்” என்று ஊஷரரின் தோளைத் தொட்டுவிட்டுச் சென்றான்.
“இங்கு வருவதற்குள் ஒற்றர்களை அனுப்பி பெயரை தெரிந்துகொண்டுவிட்டீர்கள் அல்லவா?” என்றான் சாத்யகி. “ஆம், அதிலென்ன பிழை? இந்த அரண்மனையை, நாம் சந்திக்கவிருக்கும் அரசியரை தெரிந்துகொண்டுதானே வருகிறோம்?” என்றான் கிருஷ்ணன். “ஆனால்…” என்றான் சாத்யகி. “இளையோனே, நான் பயன்கருதி இவர்களை அறிந்துகொள்ளவில்லை. இவர்களை அறிவதிலிருக்கும் பெருமகிழ்ச்சிக்காகவே செய்கிறேன்” என்றான் கிருஷ்ணன். “முடிவிலா வண்ணங்களை ஒவ்வொரு கணமும் காணாதவன் விழியளித்த தெய்வங்களை புறக்கணிக்கிறான்.”
காந்தாரியின் முதன்மைச்சேடி தீர்த்தை வந்து வணங்கி முகமன் சொன்னாள். “தங்களை சந்திக்க அரசியர் துணைமண்டபத்தில் சித்தமாக இருக்கிறார்கள் அரசே” என்றாள். இடைநாழியில் நடந்தபடி “பத்து ஆடிப்பிம்பங்கள் இல்லையா?” என்றான் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு. “பதினொன்று” என்றாள் அவளும் சிரித்தபடி. அவள் கண்கள் மின்னின. கன்னங்களில் குழிகள் தெளிந்தன. “துச்சளை ஆடிநோக்கி அணிசெய்ய விழைபவளா என்ன?” என்று அவன் கேட்டான். “ஆடி நோக்காத பெண்கள் உண்டா?” என்றாள் அவள். “காலையில் நெடுநேரம் நீ ஆடியை நோக்கியிருக்கிறாய்…” என்ற கிருஷ்ணன் “அதன் விளைவும் அழகுடனிருக்கிறது” என்றான்.
அவள் முகம் சிவந்து மேலுதடை இழுத்துக்கடித்தபடி “நீங்கள் ஒருவரையும் நோக்காமல் விடுவதில்லை என்றனர். ஆகவேதான்…” என்றாள். “ஆம், நோக்காமல் விடும்விழிகளை எனக்களிக்கவில்லை ஆழிவண்ணன்” என்ற கிருஷ்ணன் “உன் அன்னை இங்கே அணுக்கத்தியாகப் பணிபுரிந்தாள் அல்லவா? நலமாக இருக்கிறாளா?” என்றான். “ஆம், அவள் இப்போது இல்லத்தில் பேரக்குழந்தைகளுடன் இருக்கிறாள்… நான் அவளிடத்திற்கு வந்தேன்…” கிருஷ்ணன் “எத்தனை மைந்தர் உனக்கு?” என்றான். “மூவர்… என் கணவர் குதிரைக்காவலர்.” ”தெரியும் அவன் பெயர் கம்றன்” என்றான். அவள் விழிவிரித்து “எப்படி தெரியும்?” என்றாள். “அவன் நானே அல்லவா தீர்த்தை?” அவள் உடல் நெளித்து “அய்யோ” என்றபின் திரும்பி சாத்யகியை நோக்கினாள்.
அங்கிருந்து ஓடி முன்னால்சென்றுவிடவேண்டும் என சாத்யகி விழைந்தான். உள்ளம் கூசி பற்களைக் கடித்து கைகளை இறுக்கிக்கொண்டிருந்தான். தீர்த்தை மெல்லியகுரலில் ஏதோ சொல்ல கிருஷ்ணன் அதற்கு ஏதோ மறுமொழி சொல்ல அவள் மெல்ல அவன் கையை அடித்தாள். துணைமண்டபத்தை அணுகியதும் கதவைத் திறந்து “உள்ளே செல்லுங்கள் அரசே” என்றபோது அவள் விழிகளில் செவ்வரி ஓடியிருப்பதை, முகம் சிவந்து இதழ்கள் கனிந்திருப்பதை சாத்யகி கண்டான். “ஆடிகளில் என்னை நோக்க முடிந்தால் வென்றேன் தீர்த்தை” என்றபின் கிருஷ்ணன் உள்ளே சென்றான்.
துணைமண்டபத்திற்குள் அவர்கள் நுழைந்ததும் அங்கே அமர்ந்திருந்த துச்சளை எழுந்து வந்து முகம் மலர வணங்கி “வருக யாதவரே. தங்களைப்பற்றி பேசாமல் இவ்வரண்மனையில் ஒருநாளும் அடங்கியதில்லை” என்றாள். “அது என் நல்லூழ்” என முறைச்சொல் சொன்ன கிருஷ்ணன் “இங்கு தங்கள் அன்னையை சந்திக்கப்போவதாக சொல்லப்பட்டது” என்றான். ”ஆம், அன்னை தங்களைச் சந்திக்கவிழைந்தார்… அதைவிட நான் சந்திக்கவிழைந்தேன்” என்றாள். அவள் இளநீலப்பட்டாடையும் நீலநிற மணிகள் மின்னும் முலையாரமும், நீலமணிக் காதுமலர்களும் செந்நீல மணிகள் மின்னிய குழைகளும் அணிந்திருந்தாள்.
“நெஞ்சுக்கு உகந்த சான்றோர் எப்போதுமே விழிக்கும் அழகுகொள்கிறார்கள் இளவரசி. அவர்களை பெண்ணழகுடன் காண்பதென்பது பெரும்பேறு. அஸ்தினபுரியின் மதவேழத்தை பேரழகியாகக் காணும் இக்கணம் என் வாழ்க்கைச்சரத்தின் மணி” என்றான் கிருஷ்ணன். அவள் கரிய முகம் நாணத்தில் கன்ற “நான் எந்தையின் பெண்வடிவுதான். பலர் அதை சொல்லியிருக்கிறார்கள். இத்தனை அழகாகச் சொன்னதில்லை… வருக அரசே” என்றாள்.
“எங்கு?” என்றான் கிருஷ்ணன். “அன்னையின் மஞ்சத்தறைக்கு. அவருக்கு காலைமுதல் உடல்நலமில்லை. அதன்பொருட்டு தங்கள் சந்திப்பை தவிர்க்கவேண்டாமே என எண்ணினேன். மேலும் அவருடைய நலக்குறைவுக்கும் தங்களை சந்திப்பது நன்று.” கிருஷ்ணன் “அகத்தறையில் என்றால் முறைமை அல்ல” என்றான். “அன்னை அழைத்துவரச்சொன்னபின் முறைமை என்பது என்ன?” என்ற துச்சளை திரும்பி சாத்யகியிடம் “தங்களைப்பற்றியும் அறிந்துள்ளேன் யாதவரே. வருக” என்றாள். சாத்யகி “பெருமைபடுத்தப்பட்டேன் இளவரசி” என்றான். அவன் குரல் உடைந்து தாழ்ந்து ஒலித்ததைக்கேட்டு அவனே நாணினான்.
“அன்னையர் திரௌபதியை அஞ்சுகிறார்கள்” என்று துச்சளை விரைந்த குரலில் சொன்னாள். “அன்னை நேற்று இதயத்தைத் துளைத்து குருதி சொட்டும் நுனி கொண்ட கூர்வேல் அவள் என்றார். அத்தனை அழகாக அவர் எதையும் சொல்வதில்லை. அது அவர்கள் குலத்தின் பாலைவரியில் இருந்து எடுக்கப்பட்ட சொற்கள். அன்னை எண்ணி எண்ணிச் சலித்த கணத்தில் அச்சொற்களைச் சென்றடைந்ததுமே அதுவே உண்மை என உறுதிகொண்டுவிட்டார். இனி அதிலிருந்து விலக அவரால் இயலாது.”
தாழ்ந்த குரலில் தொடர்ச்சியாக “அன்னை என்ன கோரப்போகிறாரென நானறியேன். ஆனால் நான் உணர்வதை முன்னரே சொல்லிவிடவேண்டும் என்பதற்காகவே இங்கு முன்னரே வந்து நின்றிருந்தேன். நான் திரௌபதியை அஞ்சவில்லை, வெறுக்கவுமில்லை. அவளை கொல்வேல்கொண்ட கொற்றவை என்கிறார்கள். நான் கொற்றவையை வழிபடுபவள். இந்நகரின் அரியணை அமர்ந்து அவள் கோல்கொள்வாள் என்றால் அது ஒரு பொற்கணம் என்றே எண்ணுகிறேன். அவள் அருகே ஆடைதாங்கி நிற்பேனென்றால் அது என் வாழ்க்கையின் பெரும்பேறு என்றே கொள்வேன்” என்றாள்.
துணைமண்டபத்தின் மறுவாயில் அண்மையில் இருந்தமையால் அவர்கள் மிகமெல்ல நடந்தனர். நடையில் துச்சளையின் அணிகள் மெல்ல குலுங்கின. பறக்கமுனைந்த மேலாடைநுனியை இடக்கையால் இயல்பாகப் பற்றி உடலுடன் அணைத்துக்கொண்டாள். அவளிடம் சொற்களிலோ உடலிலோ குழைவோ தயக்கமோ இருக்கவில்லை. ஆனால் கரியபெரிய உடலின் அனைத்து அசைவுகளிலும் பெண்மையும் மென்மையும் இருந்தது. அவள் குரல் குடம் நிறைந்த பெருத்த பேரியாழின் கார்வையுடன் இருந்தது. அதற்கிணையான இசைகொண்ட பெண்குரலை கேட்டதேயில்லை என சாத்யகி எண்ணினான்.
அதையே கிருஷ்ணன் சொன்னான் “திருதராஷ்டிரர் கேட்ட இசையெல்லாம் உங்கள் குரலாக திரண்டுவிட்டது இளவரசி.” அவள் வெண்பல்நிரை மின்னச் சிரித்து “புகழ்வதற்கு நீங்கள் தயங்குவதேயில்லை. ஏன் சந்தித்தபெண்களெல்லாம் உங்களை மறக்காமலிருக்கிறார்கள் என இப்போது தெரிகிறது” என்றாள். “உண்மையைச் சொல்ல அஞ்சாதவனைத்தானே வீரன் என்கிறார்கள்” என்றான் கிருஷ்ணன். “போதும்” என்று சொல்லி அவள் கைவீசி நகைத்தாள்.
மிக இயல்பாக ஒருமைக்குச்சென்று “உன் தமையரின் எண்ணமென்ன என்று அறிவாயா?” என்றான் கிருஷ்ணன். “அறிவேன். அவருடைய ஆணவம் புண்பட்டிருக்கிறது. அதைவிட அங்கரின் பெருங்காதல் புண்பட்டிருக்கிறது. அவர்களுக்குள் எரியும் வஞ்சம் அதனாலேயே. ஆனால் ஆணைச்சாராமல் தன்னுள் முழுமை கொண்ட எந்தப்பெண்ணும் ஆண்களை புண்படுத்தியபடியே முன் செல்லமுடியும். இன்றுவரை தேவயானியை அன்றி எந்த அரசியையும் பற்றி அஸ்தினபுரி பேசவில்லை. ஏனென்றால் அவள் மட்டுமே தன்முழுமை கொண்டவள்” என்றாள் துச்சளை. “இது ஒரு களம் அரசே. இதில் புண்படவும் தோற்கவும் ஒரு தரப்பு இருந்தாக வேண்டும் அல்லவா?”
அவள் விழிகள் நிமிர்ந்தன. “மேலும், பெண் வெற்றிகொள்ளும்போது மட்டும் ஏன் அனைவரும் அமைதியிழக்கவேண்டும்? பெண்களே அதைக்கண்டு ஏன் அஞ்சவேண்டும்? திரௌபதியைப்போன்ற ஆண் ஒருவன் இருந்தால் பாரதவர்ஷமே அவனை வழிபடுமே” என்றாள். ”நான் அவளை வழிபடுகிறேன், அவள் அழகை, நிமிர்வை, விழைவை, ஆணவத்தை அனைத்தையும் வாழ்த்துகிறேன்.”
கிருஷ்ணன் புன்னகைத்து “இது சூதர்சொற்களால் அடையப்பட்ட சித்திரம் அல்லவா? நீ இன்னமும் அவளை நோக்கவில்லை” என்றான். துச்சளை “அவளை இங்குள்ள ஆண்விழிகள் வழியாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். தசசக்கரம் சென்றதுமே என் தமையன் விழிகளிலும் அங்கநாட்டரசர் விழிகளிலும் அவளைக் கண்டேன். அது உண்மையான தோற்றம்தானா என்றறிவதற்காகவே பால்ஹிகநாட்டு இளவரசரை சென்று கண்டேன். அவள் பெயரை சொன்னதுமே அவர் விழிகள் எரிவதைக் கண்டதும் உறுதிகொண்டேன். ஐயமே இல்லை, சூதர் சொன்னதெல்லாம் செம்பட்டு, அவள் அனல்.”
கிருஷ்ணன் புன்னகையுடன் “கௌரவகுலத்தில் ஒருவரிடம் கவிதை இருப்பது நிறைவளிக்கிறது இளவரசி” என்றான். “இதுவும் காந்தாரத்து பாலைவரியின் சொற்கள்தான் இளவரசே. எங்களுக்கு சொல்லில் கூர் வைக்கவில்லை குலமூத்தார்” என்றாள் துச்சளை. “ஆனால் சிரிப்பில் வைத்திருக்கிறார்கள்.” துச்சளை மேலும் சிரித்து “அய்யோ… நானே உங்களை பாடத் தொடங்கிவிடுவேன் போலிருக்கிறதே” என்றபின் மெல்ல வாயிலைத் திறந்து “வருக” என்று உள்ளே அழைத்துச்சென்றாள்.
வாயிலைக் கடந்து உள்ளே எடுத்துவைக்கப்பட்ட கிருஷ்ணனின் வலக்காலடியை சாத்யகி நோக்கினான். அதன் அடிச்செம்மை. மெல்ல மலரால் ஒற்றி எடுக்கப்பட்டது போல முத்தம்பெற்று மீண்ட கருந்தரை. வைத்த அடிக்கு இணையாக எடுத்து வைக்கப்பட்ட இடக்காலடி. முதல் முறையாக அவன் ஒன்றை அறிந்தான். கிருஷ்ணனின் இரு காலடிகளும் நிற்கையிலும் நடக்கையிலும் முற்றிலும் இணையானவையாக, ஒன்றின் ஆடிப்பாவை இன்னொன்று என தெரியும். மானுடர் எவரிலும் அதை அவன் கண்டதில்லை.