வெண்முகில் நகரம் - 53
பகுதி 11 : முதற்தூது – 5
கிருஷ்ணன் அவைநுழைவதற்கு இரண்டுநாழிகைக்கு முன்னரே அவைகூடி முறைமைகளும் அமைச்சுப்பணிகளும் நடந்து முடிந்திருந்தன. அவனும் பலராமரும் சாத்யகியும் வந்தபோது கனகர் அவர்களை வரவேற்று சிற்றவையை ஒட்டிய விருந்துக்கூடத்தில் அமரச்செய்தார். “பேரமைச்சர் சௌனகர் அரசருடன் அவையமர்ந்திருக்கிறார் யாதவரே. தங்களை அவர் வந்து சந்திப்பார்” என்று சொல்லி கனகர் தலைவணங்கினார்.
“அவையில் என்ன பேசப்படுகிறது?” என்று பலராமர் உரத்த குரலில் கேட்க சாத்யகி திடுக்கிட்டான். கனகர் குழப்பம் கொண்டு கிருஷ்ணனை நோக்கியபின் மெல்ல “அரசவை பேச்சுக்கள்தான் மூத்த யாதவரே” என்றார். “சரி, நடக்கட்டும்” என்று சொன்ன பலராமர் பீடத்தில் கால்மேல் கால்போட்டு கைகட்டி அமர்ந்து உட்குழைவான கூரையை அண்ணாந்து நோக்கி “பெரிய கூடம்… இப்போதுதான் இதைபார்க்கிறேன். பழங்காலத்திலேயே இதை கட்டிவிட்டார்கள் என்பது வியப்பளிக்கிறது” என்றார். “மாமன்னர் ஹஸ்தியின் காலத்திலேயே இதை கட்டிவிட்டனர் மூத்த யாதவரே” என்றார் கனகர். அவர் குரலில் சற்று சிரிப்பு இருப்பதை சாத்யகி உணர்ந்தான்.
“நன்று. அவர் மாமல்லர் என்கிறார்கள். இன்றிருந்திருந்தால் கதைமுட்டியிருக்கலாம் அவருடன்” என்று சொன்ன பலராமர் “நாங்கள் நெடுநேரம் காத்திருக்கவேண்டுமோ?” என்றார். “இதோ அமைச்சர் வந்துவிடுவார்” என்றார் கனகர். “வருவதற்குள் எனக்கு குடிப்பதற்கு இன்கடுநீர் கொண்டுவருக… நெய்யூற்றிய அப்பம் ஏதேனும் இருந்தாலும் கொண்டுவரச்சொல்லும்.” கனகர் தலைவணங்கி உள்ளே சென்றார். சாத்யகி பலராமருக்காக சற்று நாணினான். ஆனால் கிருஷ்ணன் அதை விரும்புவதுபோல தோன்றியது.
பலராமர் இன்கடுநீர் அருந்தி ஏப்பம் விட்டு “நன்று, இவர்கள் சிறப்பாக இன்கடுநீர் அமைக்கிறார்கள். இங்குள்ள அடுமடையனை நாம் துவாரகைக்கு அழைக்கலாம் இளையவனே” என்றார். கிருஷ்ணன் புன்னகையுடன் “அழைப்போம்” என்றான். உள்ளே வந்து வணங்கிய சௌனகர் “அமைச்சர்களின் உரைகளை அரசர் கேட்டுக்கொண்டிருக்கிறார். அரசுமுறைத்தூதர்களை இங்கே இறுதியாக சந்திப்பதே வழக்கம்” என்றார். கிருஷ்ணன் “ஆகுக!” என்றான். பலராமர் “நாங்கள் நெடுநேரமாக காத்திருக்கிறோம். அரசுமுறைச்செய்திகள் அவ்வளவு கூடுதலா என்ன? நான் மதுராவில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறைகூட அமைச்சர்களை சந்திப்பதில்லை” என்றார்.
சௌனகர் மீண்டும் தலைவணங்கி “இது தொன்மையான நகரம், மூத்த யாதவரே” என்றார். “ஆம், அதை அறிவேன்” என்ற பலராமர் “நான் வந்திருப்பதை துரியோதனனிடம் சொல்லும். அவனுடைய தந்தையிடமும் அவனைப்பற்றி சில சொற்கள் பேசவிழைகிறேன்” என்றார். “முன்னரே சொல்லிவிட்டேன்” என்று சொல்லி சௌனகர் உள்ளே சென்றார். பலராமர் “அவன் நாடாள விழைகிறான். கன்னிப்பெண்கள் காதலனை எண்ணி உருகுவதுபோல அவன் உடல் அழிந்துகொண்டிருக்கிறது” என்று சொல்லி உரக்க சிரித்தார்.
மாளவத்திலிருந்து அதன் பேரமைச்சரின் இளையோன் தேவசர்மன் தூதனாக வந்திருந்தான். அவனுடன் வந்திருந்த எழுவரையும் கனகர் உள்ளே அழைத்து கூடத்தில் அமரச்செய்தார். அவன் கிருஷ்ணனையும் பலராமரையும் நோக்கி தலைவணங்கி முகமன் சொன்னபின் மேற்கொண்டு ஒரு சொல்லும் பேசாமல் அமர்ந்துகொண்டான். அவனுடன் வந்தவர்கள் அதன்பின் யாதவர்களை நோக்கவில்லை.
சிற்றமைச்சர் பிரமோதர் வந்து வணங்கி மாளவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். பலராமர் “இளையோனே, இந்த மாளவர்களுக்கு முன்பு அஸ்தினபுரியிலிருந்து ஒரு யானை அளிக்கப்பட்டது. அன்புப்பரிசு. அற்புதமான பரிசு அது. இதற்குள் அது பதினெட்டுபேரை கொன்றுவிட்டது. அதற்கு கண் தெரியவில்லை என ஒரு சாரார். காது கேட்பதில்லை என இன்னொரு சாரார். அதன் மத்தகத்திற்குள் சனி தேவன் குடிகொள்கிறான் என நிமித்திகர்கள். நான் நேரில் சென்று அதன் மத்தகத்தை அறைந்து அமரச்செய்ய விழைகிறேன்” என்றார். “அதன் பெயர் என்ன தெரியுமா? அஸ்வத்தாமன்… என்ன சொல்கிறாய்” என உரக்க நகைத்தார்.
சாத்யகி தயக்கத்துடன் “இங்கே நகைக்கலாமா மூத்தவரே?” என்றான். “நான் எங்கும் நகைப்பேன். அரசவையே நகைப்புக்குரிய இடம்தானே?” என்றார் பலராமர். ”ஐயமிருந்தால் கேட்டுப்பார் உன் தலைவனிடம்.” கிருஷ்ணன் திரும்பி “இளையோனே, என் சிரிப்பைத்தான் அவர் ஒலிக்கிறார்” என்றான். பலராமர் அதற்கும் வெடித்துச்சிரித்து “ஆம், ஆம்” என்றார். “என் காதலை அவன் ஆடுகிறான்…” சாத்யகியே புன்னகைசெய்துவிட்டான்.
மாளவர்கள் போனபின்னர் சௌனகர் வந்து “தங்களுக்கு அழைப்பு” என்றார். அவர்கள் மூவரும் உள்ளே சென்றனர். பலராமர் முன்னால் சென்று “ஹஸ்தினபுரியின் பேரரசரை வணங்குகிறேன். யாதவர்களும் மதுராவின் மக்களும் இந்நாளை நினைத்து பெருமைகொள்ளட்டும்” என்றார். திருதராஷ்டிரர் தலையை ஓசைக்காக திருப்பியபடி “யாதவர்களின் வருகை அஸ்தினபுரிக்கு நலம் நிறைக்கட்டும். அமர்க!” என்றார்.
கிருஷ்ணன் மிக விரிவாக பல சொற்களில் முகமன் சொன்னான். “மாமன்னர் யயாதியின் குருதி நீடூழி வாழும் அஸ்தினபுரியை வாழ்த்துகிறேன். அவரது மைந்தர் யதுவின் குலத்தில் வந்த மக்களின் வாழ்த்துக்கள் அதை மேலும் வலிமையுறச்செய்யட்டும். நிகரற்ற புயம் கொண்ட ஹஸ்தியை வெல்லப்படாத குருவை பேரழகனாகிய பிரதீபரை வணங்குகிறேன். அரியணை அமர்ந்த மதவேழத்தின் காலடிகளை என் சென்னி சூடுக!” சாத்யகி அப்போதுதான் கிருஷ்ணன் சொன்னதில் உள்ள யது பற்றிய குறிப்பை உணர்ந்தான்.
விழியிழந்த மன்னர் அந்த உட்குறிப்பை உடனே உணர்ந்துகொண்டதை சாத்யகி அறிந்தான். “ஆம், நெடுநாட்களுக்கு முன்னரே விலக்கப்பட்ட யாதவகுலம் இன்று மையப்பெருக்கில் வந்து சேர்ந்திருப்பதை எண்ணி நிறைவுகொள்கிறேன். நம் உறவு என்றும் வாழ மூதாதையர் வாழ்த்தட்டும்” என்றார். ”அவர்களின் வாழ்த்துக்களே இங்கே இனிய மூச்சுக் காற்றென நிறைந்துள்ளன. நம் முகங்களின் புன்னகைகளாக ஒளிவிடுகின்றன” என்றான் கிருஷ்ணன்.
மேலும் மேலுமென முகமன்களினாலான ஆடல் சென்றுகொண்டிருக்க சாத்யகி சலிப்படைந்தான். இன்னீரும் இனிப்பும் வந்தன. அவற்றை அவர்கள் உண்டனர். தூதுக்கு வந்த பாவனையே கிருஷ்ணனிடம் இருக்கவில்லை. அதை அறிந்த தோரணை அவர்கள் எவரிடமும் இருக்கவில்லை. அந்த இனிப்புகளை உண்ணவந்தவர்கள் போல அவர்கள் நடந்தனர், நடத்தப்பட்டனர். இனிப்பைப்பற்றி கிருஷ்ணன் ஏதோ சொல்ல அதை பேருவகையுடன் பலராமர் எடுத்துக்கொண்டு மேலே சென்றார்.
திருதராஷ்டிரர் “இந்நாளில் கதைச்சூதர்களின் சிறு குழு ஒன்று இங்கே வந்துள்ளது நல்லூழே” என்றார். “அவர்களை கதைசொல்ல ஆணையிடுகிறேன்.” கிருஷ்ணன் சிரித்து “ஆம், சூதர்கதை இந்த அவையை நிறைக்கட்டும். நாம் அனைவருமே கதைகளின் வழியாக வாழ்பவர்கள் அல்லவா?” என்றான். “கதைகளில் நம் மூதாதையர் நிறைந்திருக்கிறார்கள். அது புகழுலகு. அவர்களின் மூச்சுக்கள் வாழும் ஃபுவருலகு” என்றார் திருதராஷ்டிரர்.
சாத்யகி கதைகேட்பதை வெறுத்தான். ஆனால் இசைச்சூதர் எழுவர் வந்து அவையில் அமர்ந்தனர். சிறிய நந்துனியுடன் முன்னால் அமர்ந்த சூதர் பெரிய செந்நிறத்தலைப்பாகையும் மணிக்குண்டலங்களும் ஆரமும் அணிந்து பட்டுச்சால்வை போர்த்தியிருந்தார். பின்னால் அமர்ந்திருந்த முழவரும் யாழரும் பச்சைநிறத்தலைப்பாகை அணிந்திருந்தனர். யாழ் முனகியது. வண்டு போல சுழன்று சுற்றிவந்தது. ஒரு சொல் வந்து அதனுடன் இணைந்துகொண்டது.
தெய்வங்களை வாழ்த்தி அஸ்தினபுரியின் குலமுறை கிளத்தி நகராளும் மாமன்னரை வணங்கி சூதன் கதையை சொல்லத்தொடங்கினான். “அனைத்துச் செல்வங்களுக்கும் காப்பாளனாகிய குபேரனை வாழ்த்துவோம். வடதிசைக்குத் தலைவனின் அருளால் பொலிக இவ்வுலகு!” என்று அவன் தொடர்ந்தான். அவன் குரலுடன் இணைந்து யாழும் முழவும் தங்கள் மொழியில் அக்கதையை பாடின.
பிரம்மனின் பொன்னொளி ஒரு முகில்வெளியாகியது. அதை பிரஜாபதியாகிய புலஸ்தியர் என்றனர் வேதமறிந்த விண்மைந்தர். விண்ணின் கழுத்திலணிந்த பொற்சரமாகிய புலஸ்தியர் கனிந்து மழையாகிப்பொழிந்தபோது மண்ணின் ஆழத்தில் உறங்கிய புல்விதைகள் முளைத்தெழுந்தன. பசும்புல்லின் பெருவெளியாக எழுந்தவர் ஆழத்தின் மைந்தராகிய திருணபிந்து என்னும் பிரஜாபதியே என புலஸ்தியர் உணர்ந்தார்.
திருணபிந்துவின் புல்லரிப்பென எழுந்த பல்லாயிரம்வகையான புற்களில் நெருப்பை தன்னுள் கொண்ட தர்ப்பை மட்டும் வேள்விக்கு உரியதாகியது. ஹவிர்ஃபூ என அதை வாழ்த்தினர் முனிவர். ஹவிர்ஃபூ விடிகாலைப்பனியில் நெஞ்சு துளித்து விண்முகிலின் பொன்னொளியில் ஒளிபூத்து நின்றாள். தன் அழகை தான் எண்ணி நாணிய அவளின் பெண்மைபாவனையே பெண்ணாகியது. அவளைக் கண்டு மகிழ்ந்த புலஸ்தியரின் ஒளிக்கரம் வந்து அவளை தொட்டெடுத்தது. மானினி என பெயரிட்டு அவளை தன் மனைவியாக ஆக்கிக்கொண்டார்.
புலஸ்தியர் மானினி மேல் கொண்ட பேரன்பு விஸ்ரவஸ் என்னும் மதலையாகியது. விஸ்ரவஸ் தன் தாயின் பொன்னிறம் கொண்ட பெண்ணைத்தேடி புவியிலும் புவியைச் சூடிய வெளியிலும் அலைந்தார். முதல்கதிர் எழுந்த காலையில் காட்டுச்சுனை ஒன்றில் நீராடி நின்றிருந்த அழகி ஒருத்தியை கண்டார். அவள் பெயர் இளிபி. அவளை தேவவர்ணினி என பெயரிட்டு அவர் தன் மனைவியாகக் கொண்டார்.
விஸ்ரவஸ் ஒவ்வொரு நாளும் தன் தந்தையின் பொன்னொளிப்பெருக்கை கனவுகண்டார். அக்கனவை தவமாக்கினார். அத்தவம் தேவவர்ணினியில் கருவாகிப்பிறந்த குழந்தை பொன்னுக்குத் தலைவனாகியது. அவனை குபேரன் என்றழைத்தார் தந்தை. எண்ணமும் சொல்லும் பொன்னொளிகொண்டவனை வாழ்த்துவோம். இம்மண்ணிலுள்ள அத்தனை பொன்னிலும் புன்னகைப்பவனை வணங்குவோம். பொன்னாகி வந்து நம் கைகளில் அவன் தவழ்க! ஓம் அவ்வாறே ஆகுக!
சூதர் வணங்கியபோது அவை “ஓம் ஓம் ஓம்” என ஒலியெழுப்பியது. “பொன்னெனப் பூத்தது பேராசை அல்ல. பொன்னென மண்ணுள் புதைந்திருப்பது ஆணவமும் அல்ல. பொன்னில் எழுந்தது புவிசமைத்தவனின் இனிய கனவென்று உணர்க! அக்கனவு கட்டற்றவனில் பேராசையாகிறது. கருமைகொண்டவனில் ஆணவமாகிறது. காட்டுவழியில் துணையாகும். காவலனில் வல்லமையாகும். கனிந்தவனில் கொடையாகும். காமம் துறந்துவிட்டால் விடுதலைக்கு படியாகும். பொன்னை வாழ்த்துவோம். பொன்னனை வாழ்த்துவோம்” என்று சூதர் தொடர்ந்தார்.
“பாதாளத்தை ஆளும் பெருநாகமாகிய வாசுகியே நிகரற்ற வல்லமை கொண்டவன் என்பது தெய்வங்கள் வகுத்தது. ஆனால் வீங்கி எழும் விசையால் வாயுவும் அவனை வெல்லக்கூடுமென்பதும் தெய்வங்களின் விளையாட்டே. பெரும்புயலென கடந்துசென்ற வாயுவும் தன் வழிமறித்துக்கிடந்த பாதாளனின் வாலைத்தூக்கி அகற்றி கடந்துசென்றான். ஆணவம் புண்பட்ட கரியோன் சினந்தெழுந்தான். வாயு செல்லும் வழியை அடைத்து ஒரு பெருஞ்சுருளானான். சுருள்பாதையில் சுழற்றிவிடப்பட்ட வாயு குவிந்தெழுந்து மேலே சென்று விண்ணில் பரவி வழியிழந்தான்.
சினம்கொண்ட வாயு வாசுகியை துரத்தினான். வாசுகி பாதாளத்தில் இருள்வடிவாக நிறைந்திருந்த மாமேருவின் அடியில் பலகோடிமுறை சுற்றி இறுகிக்கிடந்தான். வாயுவின் கண்ணறியா கோடிக்கரங்கள் அவனைப்பற்றி இழுக்க இழுக்க அவன் மேலும் மேலும் இறுகிக்கொண்டான். மேரு இறுகி முனகியது. அதன் உச்சியில் வெடிப்புகள் விழுந்தன. விண்ணவர் வந்து கூடி திகைத்தனர். மேருவின் முனையில் அமர்ந்திருந்த பிரம்மன் தன் இடக்காலால் வாசுகியின் நெற்றியை அழுத்த அவன் ஒரு சுருள் இளகினான். அவ்விடைவெளியில் புகுந்த வாயு மேருவை உடைத்தான். மேருவின் துளியொன்று தென்கடலில் விழுந்தது.
உருவற்றவனுடன் போராட உருவம் கொண்டவனால் முடியாதென்று உணர்ந்த வாசுகி வழிந்தோடி இருளுக்குள் மறைந்து பாதாளத்தில் ஒடுங்கினான். தன் உருசுருக்கி காற்று தென்றலாகி மலர்ப்பொடிகளை அள்ளி விளையாடத்தொடங்கியது. கடலில் விழுந்த மேருவின் துளியே ஒரு தீவாகியது. அதன் உச்சியென அமைந்தது மூன்று முகப்புள்ள பெருமலை. அதை திரிகூடம் என்றனர் முன்னோர்.
‘நிகரற்ற நகரொன்றை ஆக்குக!’ என்று இந்திரனால் ஆணையிடப்பட்ட விஸ்வகர்மன் அங்கே மும்மலை உச்சியில் பெருநகர் ஒன்றை படைத்தான். அதை இலங்கை என்று பெயரிட்டழைத்தான். பொன்னில் வடித்தெடுத்த புதுநகரம் மண்ணில் இணையற்றதென்றனர் தேவர். தானறிந்த சிற்பக்கலையை முழுக்க அந்நகரை அமைப்பதில் காட்டிய விஸ்வகர்மனின் ஆணவம் அங்கே மெல்லிய நாற்றமொன்றை பரவச்செய்தது. ஆகவே அதை இந்திரன் புறக்கணித்தான்.
கைவிடப்பட்ட பெருநகரம் காலமெனும் கன்னியின் காலில் இருந்து உதிர்ந்து கண்டெடுக்கப்படாது கிடக்கும் பொற்சிலம்பென அங்கே இருந்தது. காலையெழும் கதிரவனின் முதற்தொடுகையில் அது அருணனின் ஒளியை வெல்லும் பொன்னொளியை விண்ணோக்கி ஏவியது. அந்த ஒருசில கணங்கள் மட்டுமே அது விண்ணில் நினைக்கப்பட்டது. பல்லாயிரம் கோடி வருடம் அது அங்கே கிடந்தது.
உணவில் பிறந்து உண்பதே வாழ்வாகி உணவில் மறைகின்றன புழுக்கள். பொன்னெனும் கனவில் பிறந்தவன் குபேரன். பொன்னே நினைவாக ஆயிரமாண்டுகாலம் அவன் பிரம்மனை எண்ணி தவம் செய்தான். ஐம்பிழம்பின் நடுவே அவன் ஆற்றிய அருந்தவம் கண்டு கனிந்து வந்த பிரம்மன் விழைவதென்ன என்று கேட்டபோது பொன் என்ற ஒற்றைச் சொல்லை மும்முறை சொன்னான் குபேரன்.
மகிழ்ந்த பிரம்மன் அவனுக்கு சங்கநிதி பதுமநிதி என இருபக்கமும் நிறைந்த பெருஞ்செல்வத்தை அளித்தான். வெண்பொன் சங்கு. செம்பொன் தாமரை. அவனுக்கு எட்டுத்திசைகளில் வடக்கை அளித்தான். கட்கத்தை படைக்கலமாகவும் பொற்தாமரையை மாலையாகவும் பொன்மலர் விமானத்தை கலமாகவும் அளித்து வாழ்த்தி அமைந்தான்.
தன் பெருஞ்செல்வத்துடன் வாழ ஓர் இடம்தேடினான் குபேரன். தந்தையிடம் சென்று தனக்கொரு நகர் தேடித்தரும்படி சொன்னான். விஸ்வகர்மனிடம் கோரும்படி விஸ்ரவஸ் சொன்னார். விஸ்வகர்மனிடம் சென்று தனக்கொரு பெருநகர் உடனே தேவை என்றான் குபேரன். அங்கே நிலமென ஏதுமிருக்கலாகாது. தரையும் தங்கமாகத் திகழவேண்டும் என்று கோரினான்.
விஸ்வகர்மன் தான் அமைத்த பெருநகரைப்பற்றி சொன்னான். அங்கே தனக்கு நிகழ்ந்த பிழையென்ன என்பதை அவன் அப்போது கண்டுகொண்டிருந்தான். அவன் கட்டக்கட்ட அந்தப்பெருநகர் சிற்பக்கலையின் முழுமை நோக்கி சென்றுகொண்டிருந்தபோதுதான் அம்முழுமையை அழிப்பதென்ன என அவன் கண்டான். அங்குள்ள மண் சிற்பக்கலைக்கு அப்பாலிருந்தது. அதில் கணந்தோறும் புது உயிர் முளைத்தது. புதுமுளை எழுந்தது. சிற்பமென்பது இலக்கணத்தின் பருவடிவம். மண்ணோ இலக்கணத்தை மீறும் உயிர்ப்பெருவிசை.
ஆகவே மண்ணை முழுமையாகவே அகற்றினான் விஸ்வகர்மன். பொன்னன்றி பிறிதேதும் அங்கில்லாதபடி செய்தான். மண்விலகி சிற்பக்கலை முழுமையடைந்தபோது நகரம் இறந்துவிட்டதை உணர்ந்தான். அதிலிருந்து மெல்லிய நாற்றமெழத்தொடங்கியது. அது எதன் நாற்றமென தேடினான். சிலசமயம் குருதி. பிறிதொருசமயம் அது சீழ். அவ்வப்போது உப்பு. அந்த இழிமணமென்ன என்று கண்டறிய முடியவில்லை. ஆயிரமாண்டுகாலம் ஊழ்கத்திலாழ்ந்து அறிந்தான் அது தேங்குவதன் நாற்றம் என. தேங்கும் நீரும் தேங்கும் தழலும் இழிமணமாகும். தேங்கும் பொன்னும் அவ்வண்ணமே.
பொன்னன்றி பிறிதற்ற நகரங்களில் இருந்து அந்த இழிமணத்தை விலக்கமுடியாது இளையோனே என்றான் விஸ்வகர்மன். பொன்மணமென்றால் அது எனக்கு உவப்பானதே. நான் அதையே விழைகிறேன் என்றான் குபேரன். அவ்வண்ணமே ஆகுக என்று விஸ்வகர்மன் அருளினான். குபேரன் இலங்கைநகருள் நுழைந்தான். பொன்மணம் அவன் நெஞ்சை நிறைத்தது. இதை இழிமணம் என்றவன் எவன் என வியந்தான். பொன்னொளியா விழியொளியா என மயங்கும் நகர்த்தெருக்களில் கைவீசி ஓடிக்களித்தான்.
பொன்னில் ஓடும் புதுவரியை பெண்ணாக்கி மணந்தான் குபேரன். புதுவெள்ளம் நெளியும் கங்கையின் உடலழகு கொண்ட சித்ரரேகையுடன் அந்நகரியில் குடியேறினான். அவள் இனிது பெற்ற மைந்தன் நளகூபரனுடன் அங்கே இனிது வாழ்ந்தான். மண் தொடாத கால்கள் குறுகின. பொன்னமர்ந்த உடல் பெருத்தது. ஆனால் தன்னுள்ளும் வெளியும் பொன்னேயாக அங்கே அவன் நிறைந்து இருந்தான்.
அவையோரே, அவைநிறைந்த அரசே, கேளுங்கள். அன்றொருநாள் படைப்புக்குத் தேவையான அகவிழி ஒளி பெறும்பொருட்டு வேள்விச்செயலில் ஈடுபட்டிருந்தான் பிரம்மன். நான்முகத்தில் ஒன்றில் ரிக்கும் இன்னொன்றில் யஜுரும் மூன்றாவதில் சாமமும் நான்காவதில் அதர்வமும் ஒலிக்க அனலெழுப்பினான். வேள்வித்தீ எழுந்து விண் நிறைந்து கிடந்த வெண்முகில் வெளியை செம்பிழம்புகளால் நிறைத்தது. நான்குவேதமும் இணைந்த ஒற்றைப்பெருநாதத்தில் ஒரு தந்தி தொய்ந்தது. பிறழிசை எழுந்தது.
திகைத்து ஏனென்று நோக்கினான் ஆக்கும் கடவுள். தன் வயிற்றிலெழுந்த பசியால் வேதஒலி பிழைத்ததை அறிந்து சினம்கொண்டெழுந்தான். வேதம் மறந்த தன் நான்காம் முகம் சிவக்க முகிலாடியை நோக்கியபோது அம்முகத்திலிருந்து ஹேதி என்னும் செந்நிற பேரரக்கன் தோன்றினான். தன் முகத்தை தான்கண்டதும் பிரம்மன் தணிந்தான். தன் பசியைத் தொட்டு அதை பிரஹேதி என்னும் யட்சனாக ஆக்கினான். சினமும் பசியும் அவன் முன் பணிந்து நின்றனர். உடன்பிறந்தவர்களே எப்போதும் பிரியாதிருங்கள் என வாழ்த்தினான் படைப்போன்.
பிரஹேதி தன்னுடன் தனித்திருந்தான். தனித்த பசியே தவமென்றறிக. அவன் தவம் கனிந்து முனிவனானான். ஹேதியோ தழலாடும் சினம். தன் உடல் விழைவு அறிவு உணர்வு உள்ளொளி ஐந்தையும் அவியாக்கி அவன் நின்றெரிந்தான். அவன் பயாவை மணந்தான். அவர்களுக்கு மின்னல்புரிகளென பெருங்கூந்தல் கொண்ட அனல்நிற அரக்கமைந்தன் பிறந்தான். வித்யுகேசன் வளர்ந்ததும் சாலகடங்கையை துணைகொண்டான். அவர்களுக்கு அழகிய பொற்கூந்தலுடன் பிறந்தான் சுகேசன். அக்குழந்தையை அடர்கானகத்தில் விட்டுவிட்டு காமக் களியாடச்சென்றனர் பெற்றோர்.
விண்ணகத்தில் பெண்ணில்நல்லாளோடு சென்ற பெருமான் குனிந்து நோக்கியபோது அழகிய பொற்குழல் கொண்ட மைந்தனை நோக்கினார். உளம் கனிந்த முதற்றாதை முனிவனாக வந்து அவனை தன் அழல்வாழும் கைகளால் ஏந்தினார். அன்னை அருகே நின்று அவன் பாதங்களில் முத்தமிட்டு இன்று பிறந்த மலர் இவன் என்று நகைத்தாள். நம்முடன் இவனும் கயிலைக்கு வரட்டும் என்றார் அப்பன். அழகன் ஆயினும் இவன் அரக்கன் என்றாள் அன்னை.
சற்றே சிந்தனைசெய்து செம்பொன்மேனியன் சொன்னான். ஏழுவிண்ணிலும் ஏழு ஆழங்களிலும் துளித்துளியென எடுத்துக்கலந்து இம்மண்ணின் உயிர்களை ஆக்கியிருக்கிறோம். தெய்வத்தில் பிறந்து அரக்கரும் யட்சரும் கலந்து உருவான இப்புதிய மானுடன் இங்கு வாழட்டும். இவன் கந்தர்வப்பெண்ணை மணந்து மைந்தரைப்பெறட்டும்.அரக்கனின் ஆற்றலும் யட்சனின் மாயமும் கந்தர்வனின் இசையும் கலந்த இவன் மைந்தர் நிகரற்றவர்கள் ஆகக்கூடும்.
தெய்வங்களால் புரக்கப்பட்ட சுகேசன் சொல்முதிர்ந்து தோள்தழைத்து இளைஞனானான். சுகேசன் மணிமயன் என்ற கந்தர்வனின் இனிய மகள் தேவவதியை மணம்கொண்டான். அரக்க உடலும் யட்சர்களின் விழிகளும் கந்தர்வர்களின் உள்ளமும் கொண்ட மூன்று மைந்தரை அவர்கள் பெற்றெடுத்தனர். மால்யவான், சுமாலி, மாலி என்னும் மூவரும் மூன்று தெய்வங்களாலும் குனிந்து பார்க்கப்பட்டனர். தேவர்களின் புன்னகை இளவொளியென அவர்கள் மேல் எப்போதுமிருந்தது. அவர்களின் ஒவ்வொரு நாளும் விண்ணகத்தில் பேசப்பட்டது.
அவர்கள் தவம்செய்கையில் உடல் அரக்கர்களைப்போல பசியும் விடாயும் காலமும் மறந்து அமைந்தது. சித்தம் கந்தர்வர்களைப்போல விண்ணை அறிந்தது. யட்சர்களைப்போல உள்ளம் நுண்சொல்லில் மூழ்கியிருந்தது. ஆயிரமாண்டுகாலம் தவத்தில் அமைந்து அவர்கள் கண்முன் பிரம்மனை வரச்செய்தனர். தாங்கள் வாழ நிகரற்ற பொன்னுலகு ஒன்றை அளிக்கும்படி கோரினர். விஸ்வகர்மனை சென்று பார்க்கும்படி பிரம்மன் ஆணையிட்டார்.
விஸ்வகர்மன் அவர்களிடம் இலங்கைநகர் பற்றி சொன்னான். மண்ணற்ற விண்ணகரம் அது. அங்கே ஆளும் குபேரனை வென்று அதை வென்றெடுக்கும்படி அவன் ஆற்றுப்படுத்தினான். அரக்கர் மூவரும் தங்கள் முடிவிலா மாயத்தால் ஒன்றுபத்துநூறுஆயிரம்லட்சம்கோடி என பெருகிப்பெருகிச் சென்று இலங்கையை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் பெருவல்லமையை எதிர்க்கமுடியாமல் குபேரன் இலங்கையைக் கைவிட்டு தன் பிறிதொரு நகரான அளகாபுரிக்கு ஓடி அங்கே அமைந்தான்.
பொன்நாறும் பெருநகரில் மூவரும் நறுமணத்தை மட்டுமே அறிந்தனர். அங்கே அவர்கள் உண்ட உணவில் அருந்திய அமுதில் முகர்ந்த மலரில் ஆடிய நீரில் எங்கும் பொன்நாற்றமே நிறைந்திருந்தது. நர்மதை என்னும் தேவகுலப்பெண்ணின் மூன்று மகள்களான சுந்தரி, கேதுமதி, வசுதை ஆகியோரை வென்று கொண்டுவந்து அங்கே மனைவியராகக் குடியிருத்தினர். மணம் கொண்டு வந்த முதல் நாள் பொன் அழுகும் புன்மணம் கொண்டு குமட்டிய அப்பெண்கள் அன்றிரவே அவை தங்கள் கணவர்களின் நாற்றமென உணர்ந்தனர். நாள் விடிந்து கதிர் கண்டபோது அது அவர்களுக்கு நறுமணமாக ஆகிவிட்டிருந்தது.
மால்யவான் சுந்தரியில் நிறைந்து வஜ்ரமுஷ்டி, விரூபாக்ஷன், துர்முகன், சுப்தக்ஞன், யக்ஞகோசன், மத்தன், உன்மத்தன் என்ற ஏழு மைந்தரையும், நளா என்னும் மகளையும் பெற்றான். சுமாலி கேதுமதியில் பிரஹஸ்தன், அகம்பனன், விகடன், காலகாமுகன் தூம்ராக்ஷன், தண்டன், சுபார்ஸ்வன், சம்ஹ்ராதன், பிரக்வாதன், பாசகர்ணன் என்னும் பத்து மைந்தரையும் வேகை, புஷ்போல்கடை, கைகசீ, கும்பீனசீ என்னும் நாங்கு மகள்களையும் அடைந்தான். மாலி வசுதையில் அனலன், அனிலன், அஹன், சம்பாதி என்னும் நான்கு என்னும் மைந்தருக்கு தந்தையானான். பொன்னில் திளைத்து புதல்வரோடாடி அவர்கள் அங்கிருந்தனர்.
நூறாண்டுகாலம் அங்கே மைந்தருடன் வாழ்ந்தபோது ஒருநாள் மால்யவான் விண்ணிலொரு இழிமணத்தை அறிந்தான். இளையோன் சுமாலியிடம் அது என்ன என்று கேட்டான். அது விண்ணில் எவரோ செல்லும் நாற்றம் என்றான் அவன். அவர்களின் பெண்டிரும் மைந்தரும் அந்த இழிமணம் பொறாது குமட்டி ஓங்கரித்தனர். ‘இளையோனே, அந்தக் கீழ்மணத்தின் ஊற்றென்ன என்று கண்டுவா’ என்று ஆணையிட்டான் மால்யவான். மாலி தன் கதையுடன் விண்ணில் எழுந்து அது என்னவென்று நோக்கி சென்றான்.
சித்ரவனத்தில் வாழ்ந்த காருண்யர் என்னும் முனிவரின் இறுதிக் கணத்தில் அவரது விழிகள் காண்பதற்காக பாரிஜாத மலருடன் சென்றுவிட்டு வைகுண்டத்துக்கு சென்றுகொண்டிருந்த கருடனின் மணம் அது. அவர் காலில் இருந்த மலரிலிருந்து எழுந்த மணம் என அறிந்த மாலி பறவைக்கரசனை மறித்து ‘இக்கீழ்மணத்துடன் எங்கள் நகர்மீது எப்படிப் பறந்தாய் இழிபறவையே’ என்று கூவி தன் கதையால் தாக்கினான்.
‘மூடா, உன் குருதியில் ஓடும் கந்தர்வனின் இசையையும் யட்சனின் மாயத்தையும் வென்றிருக்கிறது அரக்கனின் ஆணவம். இது தன் கையிலிருந்த இறுதித்துளி நீரை பெரும்பாலையில் விடாய்கொண்டு சாகக்கிடந்த மான்குட்டிக்கு அளித்த பெருங்கருணை கொண்ட முனிவர் தன் இறுதிக்கணத்தில் பார்த்த மலர். ஏழு விண்ணுலகங்களிலும் நறுமணம் கொண்டது இதுவே’ என்றார். ‘இதுவா? இந்த கீழ்மணத்தையா சொல்கிறாய்?’ என நகைத்தபடி கருடனை கதையால் அடித்தான் மாலி. அவனை தன் இடக்கால் உகிர்களால் அறைந்து தெறிக்கச்செய்தபின் கருடன் வைகுண்டம் சென்றார்.
நான்கு உகிர்களால் கிழிக்கப்பட்டு குருதி கொட்ட மீண்டு வந்த இளையோனைக் கண்டு கொதித்தனர் மால்யவானும் சுமாலியும். படைகிளம்பும்படி ஆணையிட்டனர். தங்கள் உடல்பெருக்கி விண்ணிலேறிச்சென்று வைகுண்டத்தை சூழ்ந்தனர். இடியோசை என போர்க்குரலெழுப்பி வைகுண்டவாயிலை முட்டினர். அங்கே காவல்நின்றிருந்த ஜயவிஜயர்களை வென்றனர். அவர்கள் அஞ்சி ஓடி உள்ளே சென்று விண்வடிவோன் கால்களில் விழுந்தனர்.
செஞ்சிறகு பறவை மேல் ஏறி ஆழிவண்ணன் அவர்களை எதிர்த்துவந்தான். ஆயிரமாண்டுகாலம் ஒருகணமென்றாக அங்கு ஒரு போர் நிகழ்ந்தது. ஆழிக்கூர்மை அவர்கள் மூவரையும் துண்டுகளாக வெட்டி பாதாள இருளுக்குள் தள்ளியது. அவர்கள் இறந்த அக்கணத்தில் இலங்கையின் அத்தனை சுடர்விளக்குகளும் அணைந்தன. அரக்கர்குலத்துப் பெண்கள் எரிசிதை மூட்டி அதில் பாய்ந்து உயிர்துறந்தனர். அவர் மைந்தர் அஞ்சி ஓடி பாதாள இருளுக்குள் மறைந்துகொண்டனர்.
மீண்டும் பொன்னகரம் தனிமை கொண்டது. ஒவ்வொருநாளும் கதிரவன் கிழக்கே எழும்போது அதன் மாளிகைமுகடுகள் ஒளிவிடும் ஒரு கணம் மட்டும் விண்ணவரும் தெய்வங்களும் அந்நகரைப்பற்றி எண்ணினர். பல்லாயிரமாண்டுகளுக்குப்பின் அங்கே அரக்கர்கோமான் ராவணன் வந்து குடியேறுவான் என்று அந்நகரின் அரண்மனைகளின் பொன்னொளி படர்ந்த ஆழம் அறிந்திருந்தது.”
சூதன் மும்முறை கைகூப்பி தலைவணங்கினான். அவையில் எழுந்த மெல்லிய உடலசைவை சாத்யகி கண்டான். திரும்பி புன்னகை தளும்பாமல் நின்றிருந்த கிருஷ்ணனின் முகத்தை நோக்கினான்.