வெண்முகில் நகரம் - 4
பகுதி 2 : ஆழ்கடல் பாவை – 1
நீலவண்ண உலோகத்தாலான மாபெரும் வில் என வளைந்து சென்ற கங்கையின் கரையில் நீர்வெளியை நோக்கித்திறக்கும் நூறு பெருஞ்சாளரங்களுடன் மலர்மரங்கள் செறிந்த சோலை சூழ அமைந்திருந்த காம்பில்யத்தின் இளவேனிற்கால அரண்மனையின் தென்றல்சாலையில் தருமன் தனித்து அமர்ந்திருந்தான். சாளரத்தின் பொன்னூல் பின்னலிட்ட வெண்திரைச்சீலைகள் கங்கைக்காற்றில் நெளிந்தாடிக்கொண்டிருக்க அறைக்குள் நீர்வெளியின் ஒளி மெல்லிய அலையதிர்வுடன் நிறைந்திருந்தது. வெண்சுண்ணம் பூசப்பட்டு சித்திரமெழுதப்பட்ட மரச்சுவர்களும் ஏந்திய கைகள் என கூரையைத் தாங்கும் சட்டங்களுடன் நிரைவகுத்து நின்ற அணித்தூண்களும் அவ்வொளியில் நெளிந்தன.
நீர்வெளிக்கு அடியில் நீரரமகளிர் வாழும் அலையுலகில் அந்த மாளிகை அமைந்திருப்பதாக நினைவு வந்ததுமே அதை எங்கே படித்தோம் என்று எண்ணம் திரும்பியது. தேடியலைந்த சித்தம் கண்டுகொண்டதும் புன்னகையுடன் அவன் அசைந்தமர்ந்தான். வித்யாதரரின் புராணமாலிகையில் வரும் கதை அது. மிக இளமையில் அவனை அதிரச்செய்து கனவுகளில் மீளமீள நிகழ்ந்தது.
தோழருடனும் படைகளுடனும் கடலாட்டுக்குச் சென்ற மாளவ இளவசரன் அஸ்வகன் விடியற்காலையில் கடலோரமாக நடக்கும்போது மணலில் பதிந்து கிடந்த ஒரு செம்பவளத்தைக் கண்டான். அதை கையில் எடுத்துப் பார்த்தபோது அது உயிருடன் அசைவதை அறிந்தான். அது அழகிய கன்னியிதழ்கள் என்று அவனுக்குத் தோன்றியது. தன் இதழோடு சேர்த்து முத்தமிட்டான்.
முந்தைய முழுநிலவிரவில் அலையாடி கரையணைந்து மணல்விளையாடிச் சென்ற நீரரமகளான ஜலஜையின் இடையணிந்த மேகலையில் இருந்து உதிர்ந்த செம்பவளம் அது. நீராழத்தில் நீந்திக்கொண்டிருந்த அவள் அந்த முத்தத்தை மேகலையிருந்த இடத்தில் அடைந்து மேனி சிலிர்த்தாள். பொன்மின்னலென நீரைப்பிளந்து மேலெழுந்து நீர்த்துளிகள் சிதற சிறகடித்து வந்து கரையணைந்தாள். பொன் மின்னும் அவள் தோள்களையும் ஒளிர்ந்து சொட்டிவிடுமெனத் ததும்பிய முலைத்துளிகளையும் சொல்லனைத்தும் கரந்த நீலவைரக் கண்களையும் கண்டு அஸ்வகன் அக்கணமே காமம் கொண்டான். அவன் இளமையழகும் அறியாமையின் பேரழகும் கண்டு அவள் பெருங்காமம் கொண்டாள்.
அவள் அவனை நீர்விளையாட அழைத்தாள். நீரரமகளிரைப்பற்றி இளமையிலேயே அவன் கேட்ட எச்சரிக்கைகளை எல்லாம் அவள் செவ்விதழ் நகையிலும் யாழிசைக் குரலிலும் அவன் மறந்தான். அவளுடைய தாமரைத்தண்டு என குளிர்ந்த கையைப் பற்றியபடி அலைகளில் புகுந்தான். அவள் தன் கைகளாலும் கால்களாலும் அணைத்தாள். மீன்மூக்குகளென முலைக்கண்களால் தீண்டி அவனை மயக்குறச் செய்தாள். செவ்விதழ் முத்தங்களால் சிந்தையழியச்செய்தாள். செயலோய்ந்து தன்னை அவளிடம் அளித்த அவனை நீர்ப்பளிங்கு வாயில்களை திறந்து திறந்து உள்ளே இழுத்துச்சென்றாள். காலால் தனக்குப்பின் நீர்த்திரைச்சீலைகளை மூடிக்கொண்டே போனாள். சூரியன் கலங்கி ஒளியிழந்து மறைந்தது. அலை வளைவுகளில் எழுந்த தேனிறமான ஒளியே அங்கே நிறைந்திருந்தது.
மூச்சுத்திணறி அவன் துடித்து மேலெழ முயன்றான். அவள் கைகள் அவனை செந்நிற வேர்கள் என பற்றி இறுக்கி ஆழத்துக்கு அழுத்திக் கொண்டு சென்றன. நீர் எடை கொண்டு இரும்புப் பாகு என அவனைச் சூழ்ந்தது. அவன் நெஞ்சுக்குள் புகுந்து விலாவெலும்புகளை உள்ளிருந்து உடைத்தது. அலறியபோது அவ்வோசை குமிழிகளாகி கண்முன் ஒளிவிட்டுச் சுழன்று மேலெழுந்து செல்வதைக் கண்டான். நீர்ப்பரப்புக்கு மேல் வந்து வெடித்த குமிழிகளில் இருந்து அஸ்வகனின் ‘அன்னையே!’ என்ற ஓலம் எழுந்ததை மீன்பிடித்த செம்படவர்கள் கேட்டனர். அகமிரங்கி அவர்கள் கண்ணீர் வடித்தனர்.
தன் அகம் தனித்தனிச்சொற்களாகப் பிரிந்து கிடப்பதை அவன் கண்டான். ஒவ்வொரு சொல்லும் அவனிடமிருந்து நழுவி உதிர்ந்து பல்லாயிரம் குமிழிகளாகி சுழன்று ஒன்றுடன் ஒன்று மோதி இணைந்தும் வெடித்தும் சிரித்தபடி விலகிச்சென்றன. பின்னர் ஒரு பெரும் குமிழியாக அவன் உயிர் மேலெழுந்தது. தன் உயிரை தன்னெதிரே கண்டு அவன் புன்னகைத்தான். நுண்ணிய வண்ணங்களுடன் அது சுழன்று மேலெழுந்தபோது அவன் விழிகள் மீன்விழிகளாகி இமைப்பழிந்தன. அக்குமிழி தலைக்குமேல் அலையடித்த வானத்தில் சென்று சூரியனாக வெடிப்பதை காலமில்லாது நோக்கிக் கொண்டிருந்தான். நீர்ச்சூரியனின் அலைவளையங்கள் மறைந்தபோது அவன் தன்னுடல் எடையற்றிருப்பதை உணர்ந்தான்.
கீழே கடலாழத்தில் தரைதொடாமல் அலைகளில் ஆடித்ததும்பியபடி நின்றிருந்த பெருமாளிகைக்கு மேல் அவன் கடல்பாசிச் சரடு போல மிதந்திறங்கினான். அந்த மாளிகை வெள்ளிச்சுவர்களும் ஒற்றைப் பொற்கதவமும் கொண்டு பெருமீன் ஒன்றின் வடிவில் இருந்தது. அதன் விழிகள் இரு குவியாடிகள் போல அணுகி வரும் அவனை மட்டும் காட்டின. அவன் உள்ளே நுழைந்ததும் புன்னகையுடன் பெருங்கபாடம் மூடிக்கொண்டது.
ஒளிவிடும் சிறிய மீன்களே சுடர்விளக்குகளாக எரிய செவ்வொளியும் நீலஒளியும் நிறைந்த அறைகள் வழியாக அவன் அவளுடன் மிதந்து சென்றான். அம்மாளிகைக்கு கூரையென்றும் தரையென்றும் ஏதுமிருக்கவில்லை. அதன் அறைகளெங்கும் நீரலைகளே சுவர்களாக, பீடங்களாக, மஞ்சங்களாக, திரைச்சீலைகளாக உருக்கொண்டிருந்தன. தேவருலக அக்கசாலை சிதறியதென பொன்னும் வெள்ளியும் செம்பும் மின்னும் கோடிப் பரல்கள் அவனைச்சூழ்ந்து சுழன்றன.
முன் சென்ற நீர்மகளின் அகங்கால்கள் இரு விளக்குகளென அவனுக்கு வழிகாட்டின. தன் அகங்கைகள் செந்நிற ஒளிகொண்டிருப்பதைக் கண்டான். அவள் மெல்லிய குரலில் பாடியதை அலையலையாக அவன் கண்டான். அக்குரல் கேட்டு நீர்மாளிகையின் இருண்ட அறைகளில் இருந்து நீலச்சிறகு உலைத்து எழுந்துவந்த பல்லாயிரம் நீரர மகளிர் இனிய யாழ்மீட்டலுடன் அவனை சூழ்ந்துகொண்டனர். இமையாவிழிகளின் விண்மீன் பெருக்கு. திறந்த வாய்களின் பவழமலர் வசந்தம்.
அவர்கள் மென்மையான விரல்களால் அவனைப்பற்றி ஆழத்திலிருந்து ஆழத்துக்கு கொண்டு சென்றனர். அவனுக்கான அழகிய அலைமஞ்சத்தில் அவனை அமர்த்தினர். அவனைச் சூழ்ந்து சிரித்தும் துள்ளிக்குதித்து அலையிளக்கியும் நெளிந்தும் வளைந்தும் அவர்கள் சுழன்றாடினர். நீரிலிருந்து அவர்களின் உடல்கள் கற்றுக்கொண்ட குழைதல்கள். அஃகியும் விரிந்தும் அணைத்தும் துழன்றும் அவை கொள்ளும் நடனங்கள். .ஒளியே அசைவாகும் விந்தை. அசைவே பொருளாகும் மாயம்.
அவனிடம் நீராலான ஆடி ஒன்றை காட்டினாள். அவன் அதை வாங்கி தன் முகத்தை நோக்கி திகைத்தான். அவன் மீனுருவம் கொண்டிருந்தான். செவிகள் செவுள் அடுக்குகளாக மாறிவிட்டிருந்தன. இமையற்ற விழிகள் மணிகளென உறைந்திருந்தன. ஆடியைத் திருப்பி அவன் மறுபக்கத்தை நோக்கியபோது நெடுந்தொலைவில் என தன் அன்னையையும் தந்தையையும் கண்டு ஏங்கி கண்ணீர் விட்டான்.
அவள் அவன் தோளை தன் கொடிக்கைகளால் வளைத்து ‘வருந்தவேண்டாம். அவர்கள் உன் கொடிவழிப்பேரர்கள். அங்கே கரையில் நூற்றாண்டுகள் கடந்து விட்டன. தலைமுறைகள் பிறந்திறந்து முளைத்துவிட்டன. இங்கே ஆழத்தின் பேரழுத்தம் காலத்தை சுருக்கி செறிவாக்கியிருக்கிறது. எண்ணங்களை மாத்திரைகளாக ஆக்கிவிட்டிருக்கிறது. இங்கே மலைகள் கூழாங்கற்கள் என்று அறிக. இங்கிருப்பதுதான் அமரத்துவம்’ என்றாள். அவன் ஆடியை தன் நெஞ்சோடு சேர்த்து விம்மினான். அப்போது அறிந்தான் அந்தத்துயரும் பல்லாயிரம் மடங்கு செறிவுகொண்டிருப்பதை.
அறைச்சுவர்களில் கொடிகளும் இலைகளும் மலர்களுமாக பின்னி விரிந்திருந்த சித்திரக்கோலம் அலையொளியில் நெளிந்து நீர்ப்பாசிப்படலமென விழிமயக்கு காட்டியது. தருமன் தன் அகங்கைகளைத் தூக்கி பார்த்துக்கொண்டான். விரல்கள் அசைந்து நீர்ப்பாசி முனைகள் என நெளிவதுபோல் தோன்றியதும் எழுந்து நின்றான். சாளரம் வழியாக கங்கையின் பெருக்கை நோக்கியபோது தன் உடல் பதறிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். என்ன என்ன என்று தவித்த சித்தம் எங்கோ முட்டிக்கொண்டதும் உடல் தவித்து அறைக்கதவைத் திறந்து அங்கே நின்றிருந்த பாஞ்சாலத்தின் சேவகனாகிய சிசிரனிடம் “எனக்கு ஒரு படகை சித்தப்படுத்து… உடனே” என்றான்.
சிசிரனின் விழிகள் சற்றே மாறுபடுவதைக் கண்டு “ஒரு சிறு பயணம். துர்வாசரை கண்டு மீள்கிறேன்” என்றான். சிசிரன் “மாலையாகிவிட்டது இளவரசே. அங்கே செல்வதற்குள் இருட்டிவிடும். இன்று முழுக்கருநிலவு நாள். இருளில் மீள்வதும் கடினம். இன்றிரவு…” என்றான். தருமன் சினத்துடன் “இது என் ஆணை…” என்றான். சிசிரன் தலைவணங்கி வெளியே சென்றான். தருமன் மீண்டும் அறைக்குள் வந்தான். அதுவரை இருந்த சோர்வு விலகி உடலெங்கும் பரபரப்பு குடியேறியிருப்பதை அறிந்தான். அப்போதுதான் ஒன்று தோன்றியது, நினைவறிந்த நாள்முதலாக அவன் தனித்து எங்கும் சென்றதில்லை.
மறுகணமே அச்சம் எழுந்து நெஞ்சை நிறைத்தது. படகிலேறி கங்கையின் மறுபக்கம் செல்லலாம். அங்கே சதுப்புக் காடுகளை வகுந்துசெல்லும் பாதை இருக்கிறது. அதற்கப்பால் வயல்வெளிகள் சூழ்ந்த சிற்றூர்கள். அதற்கப்பால் மீண்டும் காடுகள். மீண்டும் ஏகசக்ரபுரிக்கே சென்றுவிட்டாலென்ன என்று எண்ணிக்கொண்டதுமே அந்த முடிவை முன்னரே அகம் வந்தடைந்திருந்தது போல் தோன்றியது. பல ஊர்களில் இருந்து அதை அகம் தெரிவுசெய்யவில்லை. அவ்வூர் மட்டும் எடுத்து வைக்கப்பட்டிருந்தது போல. ஏகசக்ரபுரியில் அவனை வைதிகனாக எண்ணுவார்கள். அவனுக்கு உணவும் உறைவிடமும் அளிப்பார்கள். அங்கு எவரும் வரப்போவதில்லை.
கணநேரத்தில் அவன் ஏகசக்ரபுரியில் வாழ்ந்து முடித்துவிட்டான். மணந்து தந்தையாகி முதியவனாகி நூல்கற்று கற்றதையெல்லாம் முற்றிலும் மறந்து அமர்ந்திருந்தான். அச்சலிப்பை ஒரு கணத்திற்குள் அடையமுடிந்த விந்தையை எண்ணி மறுகணம் புன்னகைத்துக்கொண்டான். அங்கு வாழ்வதைவிட அங்கு செல்வதற்கான பயணம் கிளர்ச்சியளித்தது. பறக்கும் மேலாடையுடன் தனித்த காட்டில் அவன் நடந்துசெல்வதை அவன் கண்டான்.
மேலாடையை எடுத்து சுற்றிக்கொண்டு அருகே இருந்த அறைக்குச் சென்று சிறிய பேழையைத் திறந்தான். கையளவுக்கு பொன், வெள்ளி நாணயங்களை அள்ளி கிழியாகக் கட்டி இடைக்கச்சையில் வைத்துக்கொண்டான். இலச்சினை மோதிரத்தையும் சிறிய குத்துக்கத்தியையும் எடுத்து செருகிக்கொண்டு படிகளில் இறங்கி அறைக்கு வெளியே வந்தான். இடைநாழியிலேயே பாதை தொடங்கிவிட்டதைப்போல் உணர்ந்தான். பதற்றத்தில் மூச்சிரைக்கத் தொடங்கியது.
படிகளில் இறங்கியபோது சிசிரன் மேலே ஏறிவந்தான். தலைவணங்கி “படகு சித்தமாக இருக்கிறது இளவரசே” என்றான். தருமன் தலையசைத்துவிட்டு அவனைக் கடந்து சென்றான். அரண்மனையின் பெருமுற்றம் நீண்டு படிகளாக மடிந்திறங்கி கங்கை நீரோட்டத்தை அடைந்தது. படித்துறையின் வலது ஓரத்தில் மரங்களை கால்களாக ஊன்றி நீண்டு வெட்டுண்ட சாலை என படகுத்துறை நின்றது. அங்கே பாஞ்சாலத்தின் கொடிபறக்கும் அணிப்படகு ஒன்று ஆடி நின்றது. படகோட்டிகள் இருவர் குதித்து அதன் கயிற்றை அவிழ்த்துக்கொண்டிருந்தனர்.
இளஞ்சிவப்பு நிறமான ஏழு அணிப்பாய்களுடன் படகு இதழ்விரியாத செந்தாமரை போலிருந்தது. மேலே விற்கொடி கங்கைக்காற்றில் சிறகடித்தது. அதை நோக்கியபடி சிலகணங்கள் நின்ற தருமனின் உடல் தளர்ந்தது. கொடிபறக்கும் அணிப்படகில் ஒளிந்தோடும் ஒருவனைப் பற்றி எண்ணியதும் அவன் உதடுகளை கோடச்செய்தபடி புன்னகை எழுந்தது. திரும்பி மீண்டும் அரண்மனையின் படிகளில் ஏறியபோது உடலின் எடை முழுக்க காலை அழுத்தியது.
சிசிரன் வாயிலில் நின்றான். “படகு தேவையில்லை” என்று சொன்னபடி தருமன் அரண்மனையின் முகக்கூடத்திற்குள் நுழைந்து மேலே சென்றான். படிகளில் ஏறி மீண்டும் தென்றல்சாலையை அடைந்து உள்ளே நுழையாமல் நோக்கி நின்றான். கை மடியில் இருந்த நாணயப் பொதியை தொட்டது. மீண்டும் புன்னகை செய்துகொண்டான். பொதியில் நாணயங்களுடன் இல்லம் விட்டுச் செல்பவன் எத்தனை தொலைவு சென்றுவிடமுடியும்?
பொதியை எடுத்து பீடம் மீது வைத்தான். பின் இலச்சினை மோதிரத்தை. பின்னர் குறுவாளை எடுத்தபோது அவனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ஷத்ரியனும் பிராமணனும் வைசியனுமான ஒருவன். அடையாளங்கள் கூரைகளைப்போல. அவற்றைத் துறந்துசெல்ல உள்ளம் விடுபட்டிருக்கவேண்டும். பின் அவன் நெடுமூச்சுடன் சாளரம் வழியாக கங்கை நோக்கி நின்றான். ஒளிபெருகிச் சென்ற கங்கை. அதன் அலைகளில் இனிய, மகத்தான, எப்போதும் மானுடனைத் தோற்கடிக்கக்கூடிய ஒன்று இருந்தது.
திரும்பி இடைநாழியில் நடந்தான். சூரியதேவரின் பிரஹதாங்கப்பிரதீபத்தின் ஏழாவது அங்கத்தின் சுவடிகளை கொண்டுவந்திருந்தான். அதை எடுத்து வாசிக்கலாம். தேஜோமயரின் சிற்பரத்னாவளி இருந்தது. ஆனால் அப்போது நூல்களை எண்ணியபோதே அகம் சலித்து விலகிக் கொண்டது. ஊழிப்பசி கொண்டவன் என அள்ளி உண்ட நூல்களெல்லாம் கருங்கல் துண்டுகளென பொருளற்றுப்போவது ஏன்? நூல்களை நோக்கி மூடிக்கொள்ளும் அகவாயில் என்ன?
மாளிகையைச் சுற்றிவந்த இடைநாழி கங்கையை நோக்கித்திறந்த உப்பரிகையை வந்தடைந்தது. அங்கே கங்கை நேர்கோடாகத் தெரிந்தது. கங்கையை நோக்கி நின்றபோது அது மெல்ல மெல்ல அணைந்து வருவதாக அறிந்தான். விண்ணில் முகில்களும் ஒளியணைந்து உருத்திரண்டுகொண்டிருந்தன. நீலநிறமான ஒரு பெரும் சால்வை. இல்லை, நீளமான ஓலை. இன்னமும் எழுதப்படாதது. அல்லது எத்தனை எழுதினாலும் அழிந்தழிந்து செல்வது. பல்லாயிரமாண்டுகளாக முனிவர்கள் தவத்தாலும் வீரர்கள் குருதியாலும் எளிய மானுடர் கண்ணீராலும் அதில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வீண் எண்ணங்களால் அகத்தை நிறைத்துக்கொண்டு இத்தனைநாள் வாழ்ந்திருக்கிறேன். இப்படியே எஞ்சிய வாழ்க்கையையும் முடித்து முன்செல்வேன். இதுவன்றி புறத்து ஒரு மெய்வாழ்க்கை எனக்கு நிகழப்போவதில்லை. எண்ண எண்ண அத்தன்னிரக்கம் பெருகியது. அது வீண் உணர்வு என்றறிந்தபோதும் அதன் இனிமையால் அவன் அதில் திளைத்தபடி அங்கிருந்தான். பின் சிந்தையில் ஓர் எண்ணம் எழுந்தது. மாலைநேரம்தான் தன்னிரக்கத்தை உருவாக்குகிறதா? இல்லை தன்னிரக்கத்தால் மட்டுமே மாலையை முழுமையாக சுவைக்கமுடியும் என அகம் அறிந்து அந்நாடகத்தைப் போடுகிறதா?
சிசிரன் வந்து பின்னால் நின்றான். தருமன் திரும்பாமலேயே “ம்?” என்றான். “ஒப்பனையாளர்கள் வந்துள்ளனர்” என்றான். ஒருகணம் அனைத்துத் தளைகளையும் உடைத்துக்கொண்டு எழுந்த சினத்தை அடக்க அவன் விரல்களை இறுக்கிக் கொண்டான். பின் பற்களைக் கிட்டித்தபடி “அவர்களிடம் சென்றுவிடும்படி ஆணையிட்டேன் என்று சொல்” என்றான். சிசிரன் அங்கேயே நின்றான். “சொல்” என்றான் தருமன். “அது முறைமை அல்ல…” என்றான் சிசிரன்.
சற்று நேரம் கழித்து தோள்களை தளர்த்திக்கொண்டு “வரச்சொல்” என்றான். எழுந்து சால்வையை சுற்றி அணிந்தபடி நடந்தான். அணியறையில் அவன் நுழைந்தபோது அங்கே மூன்று இருபாலினர் அவனுக்காக ஒப்பனைப்பொருட்களை பரப்பி சீர்செய்துகொண்டிருந்தனர். இரு அனலடுப்புகளில் நறுமண எண்ணையும் செங்குழம்பும் கொதித்துக்கொண்டிருந்தன. அவன் காலடியோசை கேட்டு விழிதூக்கி நோக்கினர். கண்களுக்கு மையிட்டு உதடுகளில் செம்மை தீட்டி முகத்திற்கு நறுஞ்சுண்ணம் பூசி அணிசெய்திருந்தனர்.
கால்வரை நீண்ட செம்பட்டு அந்தரீயமும் உடலை வளைத்துச்சென்ற உத்தரீயமும் சுற்றி, காதுகளில் பெரிய பொற்குழைகளும் கைமுட்டு வரை பொன்வளையங்களும் அணிந்த மூத்தவர் அவனை நோக்கித் திரும்பி நடனம்போல வணங்கி “அஸ்தினபுரியின் இளவரசை வணங்குகிறேன். ஒப்பனைக்கலை அறிவையாகிய என்பெயர் மிருஷை. இவர்கள் என் மாணவிகள். காருஷை, கலுஷை” என்றார். தருமன் “வணங்குகிறேன். இத்தருணத்தில் தங்களால் மங்கலம் நிறைவதாக!” என்றான்.
மிருஷை புன்னகையுடன் “அமருங்கள் இளவரசே. பேரறச்செல்வன் என்று தங்களை அறிந்திருக்கிறேன். தொடவும் அணிசெய்யவும் வாய்ப்பளித்தமைக்கு தெய்வங்களுக்கு நன்றி சொல்வேன்” என்றார். தருமன் அவர் சுட்டிய பீடத்தில் அமர்ந்துகொண்டு “இது முறைமை என்பதனால் வந்தேன் சமையரே. உடலை அணிசெய்து கொள்வதென்றாலே கூசுகிறது” என்றான்.
மிருஷை சிரித்து “அணிசெய்துகொள்வதா, இல்லை உடலை அணிசெய்துகொள்வதா? கூசச்செய்வது எது?” என்றார். தருமன் நிமிர்ந்து நோக்கி “உடலை அணிசெய்வதுதான்…” என்றான். “இளவரசே, எதைக்கொண்டு உள்ளத்தை அணிசெய்கிறீர்கள்?” என்றார். அவரது மெல்லிய வெண்கரங்கள் அவன் மேலாடையைக் களைந்து அகற்றியது ஒரு நடனம்போலிருந்தது. “சொற்களால்” என்றான் தருமன். “கற்கும்தோறும் சொற்கள் கூர்மையும் ஒளியும் கொள்கின்றன. குறைவாகக் கற்றவர்கள் வெள்ளியணிகள் போல் தங்கள்மொழியில் சொல்லணி பூணுகிறார்கள். கற்றுக் கனிந்தவர்கள் வைரங்களை அணிகிறார்கள்.”
மிருஷை அவன் கீழாடையை கழற்றி விலக்கினார். அவன் குண்டலங்களையும் கங்கணத்தையும் கழலையும் ஆணியைத் திருகி விரித்து எடுத்து அகற்றினார். அவன் உடலில் அவரது மென்மையான விரல்கள் இசைமீட்டுபவை போல வருடிச்சென்றன. கலுஷை அவன் இடக்கையை பற்றி தன் மடியில் வைத்து நகங்களை நீள்வட்டங்களாக வெட்டினாள். சிறிய அரைவட்டக் கீற்றுகளாக உதிர்ந்த நகங்களை நோக்கி அவன் விழி விலக்கினான்.
மிருஷை இனிய புன்னகையுடன் “அவ்வணி ஏன் உடலுக்குத் தேவையில்லை என எண்ணுகிறீர்கள்?” என்றார். தருமன் “என் உடல் நான். அதை நான் இன்னொன்றாக மாற்றிக்கொள்வதை வெறுக்கிறேன்” என்றான். மிருஷை “இளவரசே, உங்கள் உள்ளமும் அப்படித்தானே? கல்லாதோன் ஒருவன் நெஞ்சிலிருந்து சொல்லும் சொல்லுக்கு நிகராகாது உங்கள் சொல்லணி என்றால் அதை ஏற்பீர்களா?”
தருமன் சிந்தித்துவிட்டு “ஆம், அதை எளிய சொல்லாடல்களில் பலரும் மீளமீள சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிச் சொல்பவர் எதையும் மறைக்காமல் இருக்கும் எளிய சிந்தை கொண்டவர் என்றோ அவ்வெளிமையை விரும்புபவர் என்றோ பொருள் வருகிறது” என்றான். “ஆனால், அப்படி தன் உள்ளத்தை உள்ளபடி சொல்லில் வெளிப்படுத்த பிறமானுடருடன் கூடிவாழும் எவராலும் இயலாது. ஒவ்வொரு மானுடக்குழந்தையும் குடியிலும் குலத்திலும் கூடிவாழும் கல்வியைப் பெற்றதுதான்… புறவுலகை அறியாத பழங்குடியினர் சிலர் பிற மானுடரிடம் மட்டும் ஓரளவு அப்படி திறந்து உரையாட முடியும். தனித்து குகைவாழும் சித்தர்கள் சற்று பேசமுடியும்.”
காருஷை அவன் கால்நகங்களை மிகச்சிறிய வெள்ளிக்கத்தியால் பிறைவடிவில் வெட்டினாள். நகத்தின் இடுக்குகளைச் சுரண்டியபின் பளிங்குக்கல் உருண்டையால் நகங்களை உரசி ஒளிரச்செய்தாள். மிருஷை குனிந்து “மான்கண் என நகம் ஒளிரவேண்டுமென்பது நூல் நெறி” என்றார். தருமன் குனிந்து நோக்கி புன்னகை செய்தான். “சொல்லுங்கள் இளவரசே” என்றார் மிருஷை.
“அப்படிப்பேசினாலும் அவ்வெளிய பேச்சு இனியதாக இருக்காது. பயன்தருவதாக இருக்காது. அறிவார்ந்ததாகவும் இருக்காது” என்று தருமன் தொடர்ந்தான். “ஏனென்றால் காட்டிலுள்ள அத்தனை கனிகளையும் உண்ணும் விலங்கு ஏதுமில்லை.” மிருஷை கை காட்ட அவரது மாணவிகள் நறுமண நன்னீரில் நனைத்த மென்பஞ்சுப் பொதியை அளித்தனர். அவர் அதை அவன்மேல் மெல்ல ஒற்றி உழிந்து சென்றார். தருமன் புன்னகையுடன் “சமையரே, மானுட உடல் ஆடையின்றி நிற்க முடியும். உள்ளம் ஒருபோதும் ஆடையின்றி நிற்கமுடியாது” என்றான்.
“சொல்லின் அணிகளினூடாக நீங்கள் செய்வதென்ன இளவரசே?” என்றார் மிருஷை. “உள்ளமென்பது உள்ளே கரந்த அறியப்படாமை சமையரே. அதில் இருந்து நான் அத்தருணத்திற்குரியதை அள்ளுகிறேன். அதைப் பெறுபவருக்காக சமைக்கிறேன். அங்கு அக்கணம் திகழும் என்னை முற்றிலும் முன் நிறுத்துவதாக அதை வைக்கிறேன்.” காருஷை அவன் முதுகையும் கலுஷை அவன் கால்களையும் வெந்நீர்ப்பஞ்சால் துடைத்தார்கள். மிருஷை அவன் மார்பையும் தோள்களையும் துடைத்தார்.
அவர் நெற்றிக்கூந்தல் அவன் மார்பின் மேல் பட்டபோது அவன் அதை எடுத்து அவர் காதுகளில் செருகினான். மிருஷை நிமிர்ந்து நோக்கி புன்னகைசெய்தார். அவரது புன்னகையின் அழகை அப்போதுதான் தருமன் உணர்ந்தான். மானுடரனைவரையும் விரும்புபவர்களுக்குரிய புன்னகை அது.
மிருஷை “நான் சொல்லவிழைவதை சொல்லிவிட்டீர்கள் இளவரசே” என்றார். “உள்ளத்துக்கு நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் நான் உடலுக்கு சொல்கிறேன். உடல் பருப்பொருளாக தன்னை வெளிப்படுத்தியிருக்கும் அறியப்படாமை. இங்கே இப்படி இவ்வாடலை நிகழ்த்த எண்ணிய தெய்வங்களால் உருவாக்கப்பட்ட வடிவம். ஒவ்வொரு உடலும் விண்மொழி ஒன்றின் ஓர் எழுத்து என்றறிக!”
தருமன் அவர்களின் கைகள் தன் உடலை மெழுகு என குழைப்பதாக உணர்ந்தான். அவன் உடலை தேய்த்துத்தேய்த்து மெருகேற்றினார்கள். அங்கே புத்தம்புதியவனாக அவனை வனைந்து எடுத்தார்கள். மிருஷை அவன் மீசையின் நரைமுடிகள் சிலவற்றை களைந்தார். அவரது உடலின் ஒவ்வொரு அசைவிலும் நடனமிருந்தது. அது இயல்பாகவே அவரில் கூடியது.
“ஆகவே உடலில் இருந்து அக்கணத்திற்குரிய உடலை உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. அதை அடைபவருக்காக அதை சமைக்கவேண்டியிருக்கிறது. அக்கணம் திகழும் உங்களை முழுமையாக அது காட்டியாகவேண்டியிருக்கிறது. அணிசெய்வது அதற்காகவே” என்றார் மிருஷை. “இளவரசே, அணியென்பது என்ன? ஒரு தருணத்திற்காக உடலை மாற்றியமைத்துக் கொள்வது மட்டும்தானே? மரங்கள் மலரணிவது போல. காட்டெருதின் கன்னம் சிவப்பதுபோல. மலைகள் மேல் பசும்புல் படர்வதுபோல.”
தருமன் சிரித்து “இம்மறுமொழியை முன்னரே அடைந்திருப்பீர் என நினைக்கிறேன் மிருஷை” என்றான். “என் சொற்கள் வழியாக அங்கே சென்றுசேர்ந்து விட்டீர்.” மிருஷை குரல்வளை தெரிய உரக்கச் சிரித்து “இல்லை, இளவரசே, ஒவ்வொருமுறையும் புதிய சொற்கள் வழியாக அதை கண்டடைகிறேன். இம்முறை உங்கள் சொற்கள்” என்றார்.
தருமன் ”இன்று உமது அழகிய சிரிப்பால் என் நாள் அழகுண்டது. காலையில் இவ்வாழ்க்கைமேல் நான் இழந்திருந்த ஈர்ப்பை மீட்டளித்தீர்” என்றான். மிருஷை “உங்கள் விழிகளில் விலக்கம் இல்லை இளவரசே. நீங்கள் மானுடரை நிகரெனக் காண்பவர் என்று சொன்ன சூதர்களை வணங்குகிறேன்” என்றார். “சொல்லும், அத்தனை அசைவுகளிலும் கூடும் இந்த நடனத்தை எங்கு கற்றீர்?” என்றான் தருமன்.
“உள்ளத்தில் எப்போதும் நாதமிருக்கிறது இளவரசே” என்றார் மிருஷை. “இளவயதிலேயே அதை நான் உணர்ந்துகொண்டேன். அதை நான் இசை என்றேன். என் குடியினரும் ஊரினரும் பெண்மை என்றனர். இரண்டையும் நான் ஏற்றுக்கொண்டேன். இப்புவியெங்கும் நிறைந்துள்ள அழகென்பது மென்குழைவே. அதையே என் உடலாகவும் அசைவுகளாகவும் கொண்டேன்.”
கலுஷை எடுத்துத் தந்த தந்தச்செப்பைத் திறந்து உள்ளிருந்து கஸ்தூரிமணம் எழுந்த நறுமணத் தைலத்தை மென்பஞ்சால் தொட்டு தருமனின் உடலெங்கும் ஒற்றத்தொடங்கினார். காருஷை அவன் குழல்கற்றைகளைப் பற்றி அருகே அனலடுப்பில் கொதித்த நறுமண எண்ணையை சிறிய தூரிகையால் தொட்டு அதில் பூசி மெல்லிய மூங்கில்களில் தனித்தனியாகச் சுற்றி முறுக்கியபின் அவற்றைச் சேர்த்துக்கட்டினாள்.
“உங்கள் அணிக்கோலத்தை ஆடியில் பாருங்கள் இளவரசே. உங்கள் உடல் சொல்லும் ஒரு செய்தியை உள்ளமும் உணரக் காண்பீர்கள். ஒரு மலரைக் கொய்து குழலில் சூடிக்கொண்டால் வசந்தத்தில் நுழையலாம். ஒரு பனித்துளியை எடுத்து விழியிமைகள் மேல் விட்டுக்கொண்டால் சிசிரத்தை தழுவிக்கொள்ளலாம். உடல் வழியாக உலகை அறிவதைப்போல எளியது பிறிதில்லை” என்றார் மிருஷை.
அவன் காதுகளில் புதிய குண்டலங்களையும் கைகளில் புதிய கங்கணத்தையும் மிருஷை அணிவித்தார். ”காமத்தை அறிய உடலொன்றே வழி என்று உணருங்கள். உடலிடம் உள்ளத்தை ஒப்படையுங்கள். தெய்வங்களுக்கு விருப்பமானது காமம். ஏனென்றால், அங்கேதான் தெய்வங்களிடமிருந்து கற்றவற்றை மட்டும் மானுடர் நிகழ்த்துகிறார்கள்.” தருமன் தலைகுனிந்தான்.
அவன் தோள்களிலும் முகத்திலும் நறுஞ்சுண்ணத்தை மென்மையாகப் பூசியபடி மிருஷை கேட்டார் “உங்கள் துயர் என்ன இளவரசே?” தருமன் நிமிர்ந்து அவரை நோக்கி “சமையரே, கனிந்தவர் நீர். நீரே சொல்லும். ஒரு பெண்ணை உடலென அள்ளி நுகர்பவன் அவளை அவமதிக்கிறான் அல்லவா? தெய்வத்தை கல்லென பயன்படுத்துவது போன்றதல்லவா அது?” என்றான்.
மிருஷை சிரித்து “இச்சொற்கள் முதிரா இளமையில் ஆண்கள் கேட்பது இளவரசே. முதிரிளமையில் நீங்கள் கேட்கிறீர்கள். இதற்கு மொழியிலெழும் விடையென ஏதுமில்லை. உடலே இதை உங்களுக்கு விளக்கும். இரவு வரை காத்திருங்கள்” என்றார். தருமன் “சொல்லும்” என்றான். “ஆணுக்கு காமத்தை பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் கற்பிக்கவேண்டுமென்பதே நெறி” என்று அவர் மீண்டும் சிரித்தார்.
தருமன் அவரது நகைக்கும் விழிகளை நோக்கி “விழுங்கப்படுவேனா நான்?” என்றான். “இளவரசே, அதையும் நீங்களே ஆழ்ந்து சென்று அறியவேண்டியதுதான்” என்றார் மிருஷை. உருகிய தேன்மெழுகின் மெல்லிய விழுதை கழுதை வால்முடித் தூரிகையால் தொட்டு அவன் மீசையில் பூசி தூரிகையாலேயே நீவி பின்பு வெண்கலக் கம்பிகளால் முறுக்கி கூர்மையாக்கினார். சிறிய எலிவால் தூரிகையால் பலமுறை நீவி ஒளியூட்டினார்.
சிலகணங்களுக்குப்பின் தருமன் சிரித்தான். “ஆம், இவ்வினாக்கள் எதற்கும் பொருளில்லை.” மிருஷை அவன் கால்களில் சூடான நறுமணச் சாந்தைப்பூசி பஞ்சுச்சுருளால் நீவித்துடைத்தார். இறுதியாக அவன் நெற்றியில் புனுகு கலந்த சந்தனமஞ்சளால் பிறைக்குறி தொட்டார். மூங்கில் குழல்களை ஒவ்வொன்றாக காருஷை உருவி எழுத்தபோது அவன் குழல் புரிசுருள்களாக தோளில் விரிந்து கிடந்தது. அவர் திரும்பி நோக்க காருஷை ஆடியைக் கொண்டுவந்து அவன் முன் காட்டினாள்.
தருமன் தன் முகத்தை நோக்கியதும் புன்னகைசெய்தான். “சொல்லுங்கள் இளவரசே” என்றார் மிருஷை. “ஆடியில் தெரிவது என் இளையோன் பார்த்தன்” என்றான் தருமன் சிரித்துக்கொண்டே. மிருஷை வெடித்துச்சிரித்து “உங்கள் உள்ளிருந்து அவரை வெளியே எடுத்து விட்டேன்” என்றார். தருமன் “என் முகத்திற்கு அவன் முகம் இத்தனை அணுக்கமென்று இப்போதுதான் அறிந்தேன்” என்றான். “எப்போதும் எதிர்பாராத முகங்கள்தான் வெளிவருகின்றன இளவரசே. தாங்கள் எதிர்பார்த்த முகமென்ன என்று சொல்லவா?”
புன்னகை எஞ்சிய முகத்துடன் தருமன் நோக்கினான். “தங்கள் தந்தை பாண்டுவின் முகம் அல்லவா?” என்றார் மிருஷை. கலுஷையும் காருஷையும் புன்னகைசெய்தனர். “ஆம்” என்றான் தருமன். மிருஷை அவர்களின் குழுமுறைப்படி மும்முறை கைகளைத் தட்டி மங்கலம் காட்டினார். சிரித்தபடி “இனி நீங்கள் எழலாம் இளவரசே. இத்தருணத்தை ஆளும் கந்தர்வர்கள் இருவர் உங்களுக்கு இருபக்கமும் வந்து நின்றுவிட்டனர். ஒருவர் யாழையும் இன்னொருவர் மலரையும் வைத்திருக்கிறார்” என்றார். தருமன் புன்னகையுடன் எழுந்துகொண்டான்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்