வெண்முகில் நகரம் - 39
பகுதி 9 : பெருவாயில்புரம் – 2
துவாரகையின் பெருவாயிலை நோக்கிச்சென்ற கற்சாலையை அடைந்ததும்தான் சாத்யகி இரவில் அவன் நெடுந்தூரம் பாதைவிலகிச்சென்றிருப்பதை அறிந்தான். கடலில் இருந்து இடையறாது வீசிய காற்றில் பாலைமண்ணில்போடப்பட்டிருந்த கற்பாளங்கள் மேல் மென்மணல் பரவி மூடியிருந்தமையால் சாலையை அந்திவெளிச்சத்தில் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை. காலையொளி எழுந்தபோது செந்நிறப்புரவியின் தோலில் விழுந்த சாட்டையடித்தடம் போல அது தெரிந்தது. அதன்மேல் புரவி குளம்புகள் புதையாமல் துடிதாளம் எழுப்பி ஓடியது.
பாலையில் காலை மிகமுன்னதாகவே எழுந்தது. வானிலிருந்து கசிந்துபரவிய மெல்லிய ஒளி செந்நிற மணல்வளைவுகளை பசுக்கூட்டங்களாகக் காட்டியது. தொலைவிலேயே வணிகர்குழுக்களின் பாடலோசையை கேட்டுவிட்டான். மணலில் விரைந்து சாலையை அடைந்தபோது நூற்றைம்பது அத்திரிகளுடன் கலிங்கவணிகர் குழு ஒன்று சென்றுகொண்டிருந்தது. அவர்களுக்குப்பின்னால் சிறகு போல செந்நிறமான தூசுப்படலம் நின்றது. அவன் தன் கையிலிருந்த வெண்ணிறத்துணியைத் தூக்கி வீசியபடி அருகே சென்றான். விற்களைத் தாழ்த்திய காவலர்கள் பின்னால் செல்ல முதுவணிகர் ஒருவர் அவனை நோக்கி கைகூப்பி வணங்கினார்.
திரயம்பகரின் மைந்தரின் தலைமையில் நூறு கழுதைகளின் குழு ஒன்று அவர்களுக்கு சற்று அப்பால் வந்திருந்தது. சாத்யகி தன்னை “விருஷ்ணிகுலத்து யாதவ வீரன் யுயுதானன். துவாரகைக்கு படைப்பணிக்காக செல்கிறேன்” என்று அறிமுகம் செய்துகொண்டான். திரயம்பகர் “இன்னீர் அருந்துங்கள் யாதவரே” என்று தோல்பையை நீட்டினார். அவன் நீர் அருந்தி முடித்தபின் அவர் அளித்த உலர்ந்த ஈச்சைப்பழங்களையும் வெல்லத்துடன் சேர்த்து உருட்டிய ஈசலையும் உண்டான். “இன்னும் இரண்டுநாழிகையில் துவாரகை வந்துவிடும். முதற்காவல்கோட்டத்திற்கு அப்பால் கற்சாலைக்கு இருபக்கமும் பெரிய மரங்களை நட்டு பேணிவருகிறார்கள். இந்தப் பாலைவனப்பயணத்திற்குப்பின் நாம் பசுமையை பார்ப்போம்” என்றார் திரயம்பகர்.
கலிங்கத்தின் கதையொன்றைப்பாடியபடி முன்னால் சூதர்கள் மூவர் சென்றனர். அந்தக்கதையின் பல்லவியை மட்டும் வணிகர்கள் அனைவரும் திரும்பப் பாடினர்.
“சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு – என்குலமே
சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு!”
தன் தாய்தந்தையை இறைவடிவாக வணங்கிவந்த சக்ரிகன் அவர்கள் இருவரும் இறக்கும் தறுவாயில் இனி எனக்கு எவர் துணை என்று கேட்டான். தாய்தந்தையர் என்பவர் மழைத்துளிகள். சான்றோர் ஓடைகள். நல்லாசிரியர்கள் நதிகள். இறைவனே கடல். ஆழிகைகொண்ட ஆழிவண்ணனை வணங்கு என்றனர் அவர்கள். நாங்களிருந்த இந்தப் பீடத்தில் ஒரு நதிக்கல்லை நிறுவி அவனை வணங்குக என்று வழிகாட்டினர். அன்றுமுதல் சக்ரிகன் விண்ணவனின் அடியவனானான்.
தன் முதிய தாய்தந்தையருக்கு ஒவ்வொரு நாளும் காட்டில் கனிதேர்ந்து கொண்டுசென்று கொடுப்பது அவன் வழக்கம். கனிகளை தான் முதலில் சுவைத்து அறிந்துவிட்டே அவர்களுக்கு அளித்துவந்தான். அவர்கள் பற்களை இழந்து முதியவர்களானபோது தன் வாயால் கனிகளை மென்று கூழாக்கி அவர்களுக்கு ஊட்டிவந்தான். முதிர்ந்து இறந்த பெற்றோரும் சென்றுசேரும் முதியவன் என்றால் விண்ணவன் விழியறியாத சொல்மறந்து பல்லுதிர்ந்த முதுமூதாதையாகவே இருக்கமுடியுமென எண்ணினான். ஒவ்வொருநாளும் தான் தேடிய கனிகளை மென்று அக்கல்மேல் துப்பி விண்ணவனுக்கு அமுதளித்தான்.
கோடைவந்து காடுவறண்டது. காடெங்கும் அலைந்து ஒரு கனியையும் அவன் காணவில்லை. மாலையிருண்டுகொண்டிருக்கும் வேளை சோர்ந்து திரும்புகையில் ஒரே ஒரு கள்ளிப்பழத்தை கண்டான். அதை வாயிலிட்டு மென்றபோது அதன் முள் அவன் தொண்டையில் சிக்கிக்கொண்டது. அந்தியடங்கி வந்தது. இருள்வதற்குள் இறைவனுக்கு கனிபடைக்க விரும்பிய சக்ரிகன் பலவிதமாக துப்பிப்பார்த்தான். இரவணைவதைக் கண்டதும் தன் வாளெடுத்து கழுத்தை அறுக்கப்போனான். அவன் முன் நின்றிருந்த காய்ந்தமரம் தளிர்கொண்டது. வானில் மழைமுகில்கள் நிறைந்து வண்ணவில்லெழுந்தது. ‘நீ என் அடியவன். உன்னை ஆட்கொண்டேன்’ என்றது இடியோசை.
“சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு – என்குலமே
சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு!”
துவாரகையில் ஒரு கல்லாக அவன் பிறந்தான் என்றார் சூதர். அந்தச்சதுரவடிவமான கல்லை துவாரகையின் அரண்மனையின் வாயிற்படியாக அமைத்தனர். விண்ணளந்தோனின் மண்நிகழ்ந்த வடிவமான நீலக்கண்ணன் அதில் ஒவ்வொருநாளும் காலெடுத்துவைத்தான். தன் நெஞ்சில் அச்செம்மலர்ப்பாதங்களை ஏந்தி சக்ரிகன் நிறைவடைந்தான். அவனுடைய ஒவ்வொருநாளும் ஒரு யுகமென ஆயிற்று. அவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் ஆழிமழைக்கண்ணன் பிறந்து மறைந்தான்.
“சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு – என்குலமே
சக்ரிகன்போல் வணங்கு அவனை சக்ரிகன்போல் வணங்கு!”
சாத்யகி முதற்சில வரிகளுக்குள்ளேயே அப்பாடல்களுக்குள் சென்றுவிட்டான். கதைமுடியும்போது அவன் புரவியில் குனிந்து அமர்ந்து அழுதுகொண்டிருந்தான். அவர்கள் அவனை திரும்பிப்பார்த்து புன்னகை செய்தனர். அவன் எதையும் அறியவில்லை.
“யாதவரே, பெருவாயில் தெரிகிறது” என்றார் திரயம்பகர். அவன் நிமிர்ந்து நோக்கியபோது விழிநீரால் ஒன்றும் தெரியவில்லை. தலைப்பாகையின் நுனியால் முகத்தை அழுத்தித் துடைத்துவிட்டு நோக்கினான். அப்பால் கண்கூசும் ஒளியுடன் வளைந்த தெற்குவானத்தில் எழுந்த கரியபாறைக்குமேல் சிறிய கல்வளைவென அந்த வாயில் தெரிந்தது. விரித்த உள்ளங்கையில் வைக்கப்பட்ட கணையாழி போல. அதன் வழியாக சிறிய நீள்சதுர வடிவ வானம் ஒளிவிட்டது.
தோரணவாயில் வருவது வரை சாத்யகி அதையே நோக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் அணுகிச்சென்றுகொண்டே இருந்தபோதிலும் அது பெரிதாகவில்லை என்று தோன்றியது. ஆனால் வண்டு முரல்வதுபோல நகரின் ஒலி கேட்கத் தொடங்கியது. மேலும் சென்றபோது பீதர்நாட்டுப் பெருநாவாய் ஒன்று களிறுபோல குரலெழுப்பியதை கேட்டான். மணலடுக்குக்கு அப்பால் இருந்து காவல்கோட்டத்தின் குவைமுகடும் தோரணவாயிலின் உச்சிமாடமும் மேலெழுந்தன.
இருபக்கமும் சங்கும் சக்கரமும் நடுவே செம்பளிங்குக் கண்கள் கொண்ட கருடமுகமும் பொறிக்கப்பட்டிருந்த வடக்குத் தோரணவாயில் முற்றிலும் செந்நிறக் கல்லால் கட்டப்பட்டிருந்தது. இருபக்கமும் ஏழு சிம்மங்கள் வாய்திறந்து நின்றிருக்க அவற்றின் மேல் ஆநிரைகள் செதுக்கப்பட்டிருந்தன. ஆநிரைகளுக்குமேல் சூரியன் ஒளிவிட்டான். சூரியனுக்குமேல் ஆதித்யர்களும் கந்தர்வர்களும் தேவர்களும் நிறைந்திருந்தனர். சாத்யகி அதற்கு நிகரான சிற்பவேலையை வேறெங்கும் கண்டதில்லை.
“அவை மிகப்பெரியவை. இங்குதான் அவற்றை நன்கு காணமுடியும். அணுகும்போது சிம்மங்களின் உகிர்களே நம் தலையை விடப்பெரியவையாக மாறிவிட்டிருக்கும்” என்றார் திரயம்பகர். சாத்யகி அந்த சிம்மங்களையே நோக்கி அமர்ந்திருந்தான். வளைவான ஒற்றைப்பீடம் மீது ஏழு சிம்மங்களும் ஒன்றுடன் ஒன்று ஒண்டிக்கொண்டு அமர்ந்திருந்தன. அவற்றின் பிடரிமயிரலைகள் சீரான வளைவுகளாக சூழ்ந்திருந்தன. ஒருநோக்கில் அவை தழல்களென்றும் தோன்றின. விழிகள் உருளைகள் போல செதுக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் சினந்த நோக்கும் இருந்தது. நரம்புகள் புடைத்த பெருங்கைகளில் கூருகிர்கள் நீண்டிருந்தன.
அவன் நோக்குவதைக் கண்ட திரயம்பகர் “அவை பீதர்குலத்துச் சிற்பிகளால் செய்யப்பட்டவை. சிம்மம் அவர்களுக்கு விருப்பமான விலங்கு” என்றார். சாத்யகி “அவை சிம்மங்கள் போலவும் தெரியவில்லை” என்றான். “ஆம், அவர்கள் சிம்மத்தலைகொண்ட பாம்பு ஒன்றை வணங்குகிறார்கள். அதன் சாயல் இவற்றுக்கு இருக்கிறது” என்றார். “ஆனால் மேலே உள்ள பசுக்களும் தேவர்களும் கலிங்கச்சிற்பிகளால் செய்யப்பட்டவை.”
அணுகிச்செல்லச்செல்ல சாத்யகி பெருவியப்புக்கு ஆளானான். “இத்தனை பெரிய கற்களை எப்படி தூக்கி அடுக்கமுடிந்தது?” என்றான். “யாதவகுடிகளில் இந்தப்பெருநகரே கடற்பூதங்களால் கட்டப்பட்டது என்ற கதைகள் உள்ளன.” திரயம்பகர் நகைத்து “ஒருவகையில் சரிதான். கடற்காற்றுகளை கடலை ஆளும் பூதங்கள் என்று சொல்லலாம்” என்றார். தோரணவாயிலுக்கு அப்பால் இருபக்கமும் மரங்கள் அடர்ந்த சோலைகளுக்குள் ஒளிவிடும் செம்பாலான கூரைகொண்ட பன்னிரு காவல்மாளிகைகள் இருந்தன. அவற்றில் எல்லாம் கருடக்கொடி பறந்துகொண்டிருந்தது.
“செம்புக்கூரை என்று நினைக்கிறீர்” என்றார் திரயம்பகர். “அவை பீதர் நாட்டு வெண்களிமண்ணால் செய்யப்பட்டு வண்ணமேற்றப்பட்ட ஓடுகள். தொட்டுப்பார்த்தால் பளிங்காலானவைபோலிருக்கும். ஒரு துளி நீர் கூட அவற்றில் ஒட்டுவதில்லை. துவாரகையின் அரசு மாளிகைகள் அனைத்தும் செந்நிறக்கூரை கொண்டவை. வணிகர் மாளிகைகள் இளநீலம். குடிகளின் இல்லங்கள் மஞ்சள். நகர்நடுவே இளையயாதவனின் அரண்மனைத் தொகையின் கூரைகள் மட்டும் தூயவெண்ணிறம்.” திரயம்பகர் முகம் மலர்ந்து “அல்லிமொட்டுக் குவைமுகடுகள் என்பார்கள் சூதர்கள்” என்றார்.
தோரணவாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தபோதுதான் விழிதொடும் தொலைவுவரை நெரித்து நின்ற வணிகர்கூட்டத்தை கண்டான். ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றிருந்த வண்டிகள் ஒருநிரையாகவும் அத்திரிகளும் கழுதைகளும் தனித்தனியான நிரைகளாகவும் சென்றுகொண்டிருந்தன. வலது ஓரம் அரசுவண்டிகளும் காவலர்புரவிகளும் செல்வதற்காக விடப்பட்டிருந்தது. “இரவே வந்து தோரணவாயிலுக்கு வெளியே காத்திருந்தால்தான் காலையிலேயே உள்ளே நுழைய முடியும். முதலில் செல்பவர்கள் கடைவீதிகளில் சிறந்த இடத்தை கண்டடைகிறார்கள்” என்றார் திரயம்பகர்.
நீண்ட வரிசையை எம்பி நோக்கிவிட்டு திரயம்பகர் தனக்குள் என சொல்லிக்கொண்டார் “பீதர்கள் சிறந்த வணிகர்கள். ஆனால் யவனரும் காப்பிரிகளும் பொறுமையற்றவர்கள். முதலில் கண்ணில்படும் வணிகர்களிடமே அனைத்து வணிகத்தையும் முடித்துவிட்டு பரத்தையர் இல்லம் நோக்கி விரைவார்கள். நான் இன்று மிகவும் பிந்திவிட்டேன். ஆனால் நான் வருவதாக என் தோழர்களுக்கு பறவைச்செய்தி அனுப்பியிருந்தேன். எனக்கான இடம் துறையங்காடியில் சித்தமாகவே இருக்கும்.”
காவல்வீரர்கள் ஒவ்வொரு குழுவின் தலைவர்களையும் அருகே அழைத்து அவர்களின் குலக்குறிகளையும் அடையாளக் கடிதங்களையும் கூர்நோக்கினர். பூர்ஜமரப்பட்டைகளிலும் மான்தோலிலும் செம்புச்சுருளிலும் வெவ்வேறு மன்னர்களால் எழுதி அளிக்கப்பட்டிருந்த ஆவணங்களை ஏற்கெனவே அவர்களிடமிருந்த குறிப்புகளுடன் ஒப்பிட்டுநோக்கியபின் வெண்ணிறமான பிசினை எடுத்து அதில் இரும்பாலான அச்சை அழுத்தி எரிந்துகொண்டிருந்த சூளையின் அடுக்குமேல் வைத்து சற்றுநேரத்திலேயே சுட்டு எடுத்து அளித்தார்கள். வணிகர்தலைவர் காவலர்தலைவரைப் பார்த்துவிட்டு இடைநாழியில் நடந்து மறுபக்கம் சென்று அவற்றை பெற்றுக்கொண்டு தன் குழுவைநோக்கி சென்றார்.
“அதுதான் பீதர்களின் வெண்களிமண். பீதர்நாட்டில் ஓர் ஆற்றின் கரையெங்கும் அந்தமண்தான் விளைகிறது என்கிறார்கள்” என்றார் திரயம்பகர். வெண்களிமண்ணில் பதிக்கப்பட்ட குறியச்சை காட்டினார். சாத்யகி அதை வாங்கி நோக்கினான். வெம்மை ஆறாத வெண்களிமண் வட்டம் பளிங்குத் துண்டு போலிருந்தது. அதிலும் சங்கும் சக்கரமும் நடுவே கருடனும் இருந்தன. திரயம்பகர் “நகர் நீங்குகையில் இதை திரும்ப அளித்துவிடவேண்டும்… இந்நகரில் இருக்கையில் இதுவே எங்களுக்கான உணவும் உறைவிடமும் காவலுமாகும்” என்றார்.
“யாதவர்களுக்கு சங்குக்குறி இருந்ததில்லை. வெண்ணிற ஆழியே எங்கள் அடையாளம்” என்றான் சாத்யகி. “ஆம், பால்வண்ண ஆழியுடன் வெண்சங்கையும் இணைத்தவன் இளையயாதவன். இது யாதவர்களின் கடல்வெற்றியை குறிக்கிறது” என்று திரயம்பகர் சொன்னார். சாத்யகி அதை வருடி நோக்கினான். நுண்ணிய எழுத்துக்களில் துவாரகையின் அரசனின் சொற்கள் பொறிக்கப்பட்டிருந்தன. “ஏழு மொழிகளில் இளைய யாதவனின் ஆணை இதில் உள்ளது. சதுரக்குறிகளாக உள்ளது யவனம். உகிர்கீறல்கள் போன்றது சோனகம். புள்ளிகளால் ஆனது காப்பிரிமொழி. ஒன்றன் மேல் ஒன்றென ஏறிய சித்திர எழுத்துக்கள் பீதம். சுழல்வடிவில் உள்ளது தென்னக எழுத்து. பாரதவர்ஷத்தின் செம்மொழியிலும் பைசாசிகமொழியிலும் எழுதப்பட்டுள்ளது.”
புன்னகையுடன் அதை திரும்பக்கொடுத்த சாத்யகி “என்னால் எந்த மொழியையும் வாசிக்கமுடியாது வணிகரே” என்றான். திரயம்பகர் புன்னகைத்து “அது நீங்கள் எழுத்துக்களை கைகளால் சுரண்டிப்பார்த்தபோதே எனக்குத்தெரிந்தது” என்றார். ”எங்கள் குலத்தில் கயிறிலிடப்படும் முடிச்சுகள் வழியாகவே அனைத்தையும் சொல்கிறோம். அவை ஒருவகை எழுத்துக்கள்தான்” என்றான் சாத்யகி.
“ஆம், கலிங்கத்தில் மீனவர்கள் வண்ணத்துணிகளை வீசி ஒருவரோடொருவர் செய்திசொல்கிறார்கள். காடுகளுக்குள் அரக்கர்களும் அசுரர்களும் முழவுகளின் ஓசையால் பேசிக்கொள்கிறார்கள். அனைத்தும் எழுத்துக்களே. விழிகளாலும் செவிகளாலும் வாசிக்கப்படுபவை” என்றார் திரயம்பகர். “எங்களுக்குள் விரல்தொட்டுப்பேசும் மொழி ஒன்று உள்ளது… எங்கள் கணக்குகளை அதனூடாக பேசிக்கொள்கிறோம். மண்ணுக்குள் மரங்கள் வேர்தொட்டுப் பேசும் மொழியும் அதுவே.”
உள்ளே நூலெழுத்தர்கள் வணிகர்களின் செய்திகளை பதிவுசெய்துகொண்டிருந்த ஏடு வெண்ணிறமான துணிபோலிருந்தது. “துணியா?” என்றான் சாத்யகி. “இல்லை. அது பீதர்களின் ஒருவகையான புல். இங்குள்ள புல்லைவிட நான்குமடங்கு அகலமானது. பட்டுத்துணிபோல மெல்லியது, வெண்மையானது. அதை பெரிய கல்லுருளைகளால் சீராக்கி நறுக்கி விளிம்புகளைச் சேர்த்து பசையிட்டு ஒட்டி நிழலில் உலர்த்தி எடுக்கிறார்கள். பீதப்புல் என்று அதை சொல்கிறோம்.”
அதில் சிறிய பளிங்குக்குடுவையில் இருந்த செந்நீலநிற மையை செங்கழுகின் இறகின் கூர்முனையால் தொட்டு சித்திரம்போல எழுத்துக்களை வரைந்துகொண்டிருந்தனர். “மரச்சாறுடன் மயில்துத்தம் கலந்த மை அது. நீரிலும் அழிவதில்லை” என்றார் திரயம்பகர். சாத்யகி வியப்புடன் விழிவிரித்து நின்றான். தன் மைந்தனின் குழுவுக்கும் குறியச்சு கிடைத்ததும் திரயம்பகர் தலைவணங்கினார். “அந்த மூன்றாவது மாளிகை வீரர்களுக்குரியது. அங்குசென்று பேசும் இளையோனே… இப்பெருநகரில் தங்களுக்கு நல்லூழ் துணைநிற்கட்டும்.”
அவர்கள் சென்றபின்னரும் சாத்யகி சற்றுநேரம் சிந்தை தெளியாதவனாக நின்றுகொண்டிருந்தான். வெவ்வேறு குழுக்களாக மக்கள் சென்றுகொண்டே இருந்தனர். அவன் மூன்றாவது மாளிகையை நோக்கி சென்றான். மாளிகைகளின் வளைந்த பெருமுற்றங்களில் செம்பட்டுத் திரைச்சீலைகள் ஆடிய பல்லக்குகளும் குதிரைகள் அவிழ்க்கப்பட்ட தேர்களும் நின்றிருந்தன. நிரைநிரையாகச் சென்ற படைவீரர்கள் தங்கள் ஆடைகளை விலக்கி உடலில் பொறிக்கப்பட்டிருந்த குலக்குறிகளை வீரர்களுக்கு காட்டினர். அவற்றை நோக்கி ஏடுகளில் பதிவுசெய்தபின்னர் மாளிகைகளுக்கு அப்பால் தெரிந்த அடுத்த நிரைக்கு அவர்கள் அனுப்பப் பட்டனர்.
நீண்ட வீரர் நிரையின் இறுதியில் சாத்யகி சென்று நின்றுகொண்டான். அவனுக்குமுன்னால் நின்றவர்கள் அப்பால் அமர்ந்திருந்த யாதவ நூற்றுவர்தலைவனையே விழிவாங்காமல் நோக்கிக்கொண்டிருந்தனர். தன் முன்னால் நின்று மெல்லிய குரலில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவன் சப்தசிந்துவைச்சேர்ந்த கிந்தமன் என்று சாத்யகி அறிந்தான். கண்டாகர்ணகுலத்தின் கைக்கோல் குடியை சேர்ந்தவன். பீலிக்கூட்டத்தவன். “நீர் யாதவரா?” என்றான். சாத்யகி “ஆம்” என்றபின் தன்னைப்பற்றி சொன்னான். “யாதவர்கள் எங்கிருந்தாலும் இங்கு வந்துவிடுகிறார்கள்…” என்றான் கிந்தமன்.
கிந்தமனை நிமித்தக்கோல் வைத்திருந்த வீரன் கைசுட்டி அழைத்தான். அவன் தலை வணங்கி முன்னால் சென்று பீடத்தில் அமர்ந்திருந்த நூற்றுவர்தலைவனுக்கு தன் குலக்குறிகளை காட்டினான். “இங்கு எதற்காக வந்தீர்?” என்று அவன் கேட்டான். “நூற்றுவரே, நான் கடலோடியாக ஆவதற்காக வந்தேன்” என்றான் கிந்தமன். கண்களில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் “கடலுக்குப்போக பல வழிகள் உள்ளன” என்றான் நூற்றுவன். “வீரரே, இங்குதான் கடலுக்கு ஆழம் மிகுதி” என்றான் கிந்தமன். நூற்றுவன் புன்னகைசெய்தான்.
“என் குலம் போர்புரிவது. சிறுவயதுமுதலே நான் கடலை கனவுகண்டேன். நாவாய்களில் பயணம்செய்யவும் கடல்கடந்த தொலைநிலங்களைக் காணவும் விழைகிறேன். நாவாய்களின் நகரம் என்று துவாரகையை சொன்னார்கள். ஆகவேதான் வந்தேன்” கிந்தமன் சொன்னான். நூற்றுவர்தலைவன் அவனை கூர்ந்து நோக்கி “கடலோடிகளில் நூற்றுக்கு பன்னிருவரே மீள்வர் என அறிவீரா?” என்றான். “நூற்றுவரே, எந்தப்படைவீரனும் இறப்பை அஞ்சுவதில்லை.”
தலையை அசைத்து “கடல் உம்மிடம் கனிவுடன் இருப்பதாக!” என்றபடி கிந்தமனின் உள்ளங்கையில் செந்நீலநிறத்து மையை இரும்பு அச்சில் தொட்டு ஒற்றி அடையாளமிட்டு “நீர் மறுநிரைக்கு செல்லலாம்” என்று நூற்றுவன் ஆணையிட்டான். கோல்காரன் தன்னை அழைப்பதை சாத்யகி சிலகணங்களுக்குப்பின்னரே கண்டான். பதறும் உடலுடன் ஓடிச்சென்று நின்றான். “விருஷ்ணிகுலத்தின் பிரஸ்னி குடியைச் சேர்ந்த என்பெயர் யுயுதானன். எந்தையின் பெயர் சத்யகன் என்பதனால் நான் சாத்யகி.”
நூற்றுவர்தலைவன் “உமது ஊர் எது?” என்றான். “யமுனைக்கரையில் ரிஷபவனம்” என்றான் சாத்யகி. பெருமூச்சுடன் “நீண்டபயணம்” என்ற நூற்றுவன் “இத்தனை தொலைவுக்கு ஏன் வந்தீர்?” என்றான். “யாதவர்களின் அரசு இது என்பதனால் வந்தேன்” என்றான் சாத்யகி. “இங்கு யாதவப்படைகளில் சேரவும் மூதாதையருக்காக உயிர்விடவும் விழைகிறேன்.”
நூற்றுவன் புன்னகையுடன் “இது யாதவர்களின் அரசல்ல. அறமெனும் தெய்வம் வாழும் அரசு” என்றான். “ஆகவே பாரதவர்ஷத்தின் அனைத்து நிலங்களிலிருந்தும் ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கான வீரர்கள் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் யாதவர்கள் தங்கள்நாடு இது என எண்ணுகிறார்கள்” என்றான். “ஆம், அது இயல்பே” என்றான் சாத்யகி.
“தண்டகாரண்யத்திலிருந்தும் தெற்கே வேசரநாட்டிலிருந்தும்கூட யாதவர்கள் வருகிறார்கள். நூறுநூறு ஆண்டுகளாக யாதவர்கள் பாரதவர்ஷமெங்கும் பரவிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இன்று அவர்களனைவரும் துவாரகையைப்பற்றியும் இளைய யாதவரைப்பற்றியும் அறிந்திருக்கிறார்கள்…” என்று அருகே நின்ற வீரன் சொன்னான்.
கோல்காரன் நகைத்து “அவர்கள் கிளம்பிச்சென்றபின் அறிந்த முதல்செய்தியே இதுவாக இருக்கலாம்” என்றான். நூற்றுவனும் புன்னகைத்து “ஆனால் எவருக்கும் படைக்கலப்பயிற்சி என ஏதும் இல்லை. நீர் படைபயின்றவரா?” என்றான். “போர்க்கலங்கள் பயின்றதில்லை. கவண்கல்லெறிவேன். வளைதடி நான் எண்ணியதை செய்யும்” என்று சாத்யகி சொன்னான்.
நூற்றுவன் நிறைவின்மை தெரிய தலையை அசைத்து “உமக்கு வயது இருபது கடந்திருக்கும் என எண்ணுகிறேன்… இனிமேல் உமது கைகளுக்கு வில்லும் வாளும் தங்களை ஒப்புக்கொடுக்காது. இங்கு வந்துசேரும் அத்தனை யாதவர்களும் உம்மைப் போன்றவர்களே. அவர்கள் எழுச்சிகொண்ட உள்ளங்களும் பணியாத பெருங்கைகளும் கொண்ட வெறும் மக்கள்திரளாகவே எஞ்சுகிறார்கள்” என்றான். அதற்கு என்ன சொல்வதென்று அவனுக்குத்தெரியவில்லை. “நான் இந்நகருக்காக உயிர்துறப்பேன் நூற்றுவரே, அதையன்றி எதையும் அறியேன்” என்றான்.
”பயிற்சியற்ற இளைஞர்களை மேலும் படைகளில் சேர்த்துக்கொள்ளவேண்டாம் என்பது அமைச்சரின் ஆணை” என்று நூற்றுவன் சொன்னான். சாத்யகி விழிகளில் படர்ந்த கண்ணீருடன் “நான் இளைய யாதவருக்காக வாழ எண்ணுகிறேன் நூற்றுவரே… கருணை காட்டுங்கள்” என்றான். ”நீர் வேறென்ன தொழில் செய்வீர்? செம்மொழி சற்றேனும் தெரியுமா? அரண்மனைப்பணிகள் ஏதேனும் அறிவீரா?” என்று அவன் கேட்டான். “நான் காட்டில் வாழ்ந்த யாதவன்… கன்றுமேய்ப்பதொன்றை மட்டுமே அறிந்தவன்” என்று சாத்யகி தாழ்ந்த குரலில் சொன்னான்.
“இங்கு கன்றுகளே இல்லை” என்றபின் நூற்றுவன் அருகே நின்றவனை நோக்க அவன் “நீர் இங்கே வணிகர்களிடமோ துறையிலோ வினைவலனாக பணியாற்றலாம். குறுகியகாலத்திலேயே செல்வமீட்டலாம். திறனிருந்தால் நீரே வணிகராகவும் ஆகமுடியும்” என்றான். சாத்யகி “நூற்றுவரே, நான் யாதவ மன்னரின் காலடியில் எளிய கூழாங்கல்லென அமையும் பணிக்காக மட்டுமே இங்கு வந்தேன். பிறிது எதையும் எண்ணமாட்டேன்” என்றான்.
நூற்றுவர்தலைவன் அவன் உறுதியைக் கண்டு சற்று குழம்பி “இளைஞராக இருக்கிறீர்…” என்றபின் முடிவெடுத்து முகவாயில் கைகளை சேர்த்துக்கொண்டு அவனை கூர்ந்து நோக்கி “அரண்மனையில் தொழும்பராக பணியாற்றுவீரா?” என்றான். சாத்யகி ஆவலுடன் “ஆம், அந்தப்பணியை செய்கிறேன். அதுவே எனக்குப்போதும்” என்றான்.
“அது என்ன பணி என அறிவீரா?” என்றான் நூற்றுவன். “எதுவாக இருந்தாலென்ன? இளையவரின் காலடிகள் தொடும் மண்ணில் நான் வாழவேண்டும்” என்று சாத்யகி சொன்னான். நூற்றுவன் “நீர் யாதவ மன்னருக்கு அடிமையாவீர். உமது சொல்லும் செயலும் எண்ணமும் கனவும் அவருக்கென அளிக்கப்பட்டாகவேண்டும்” என்றான். “ஆம், என் மூதாதையர் மேல் ஆணை” என்றான் சாத்யகி. அகக்கிளர்ச்சியுடன் நெஞ்சில் கைவைத்து “நான் எத்தகைய உறுதிமொழியை வேண்டுமென்றாலும் அளிக்கிறேன்…” என்றான்.
நூற்றுவர்தலைவன் “நீர் உமது தன்விருப்பத்தால் தொழும்பராகிறீர் என்று வாக்களித்தால் உமது உடலில் தொழும்பருக்கான ஒப்புக்குறி பொறிக்கப்படும். அதன்பின் உமக்கு இப்பிறவியில் பிறிதொரு அடையாளம் இல்லை” என்றான். கிளர்ச்சியால் நடுங்கிய குரலில் “ஆம், இக்கணமே… அதுவே என் மூதாதையரின் நல்லூழ் என்று கொள்வேன்” என்றான் சாத்யகி. நூற்றுவர்தலைவன் திரும்பி தலையசைத்தான்.
நூற்றுவன் சாத்யகியின் கையில் மை தீட்டிய இரும்பு அச்சால் குறியொற்றியதும் அவன் மும்முறை தலைவணங்கி முன்னால் சென்று நின்றான். அவ்வரிசை மெல்ல முன்னகர்ந்து மாளிகையின் வலப்பக்கம் இருந்த தாழ்வான கூரைகொண்ட கூடத்திற்குள் நுழைந்தது. அங்கே அவன் கையிலிருந்த ஒப்புக்குறியை நோக்கி அவனை விலகி நிற்கச்செய்தனர். அங்கே முன்னரே இருபதுபேருக்குமேல் நின்றிருந்தனர். பெரும்பாலானவர்கள் சர்மாவதிக்கரையிலும் தண்டகாரண்யத்திலும் இருந்து வந்த கரிய மலைமக்கள். பதைத்த விழிகளும் உயரமற்ற உடலும் வளைந்த மெலிந்த தோள்களும் கொண்டவர்கள்.
ஒரு வீரன் வந்து மலைமக்களின் மொழியில் “ஒவ்வொருவராக அங்கே செல்லுங்கள்… ஒப்புக்குறி பெற்றுக்கொள்ளுங்கள். நன்கு சிந்தியுங்கள், இந்த ஒப்புக்குறியில் நீங்கள் யாதவமன்னருக்கு அடிமை என்றிருக்கிறது. ஒப்புக்குறி பதிக்கப்பட்டபின்னர் உங்களுக்கு எவ்வகையிலும் விடுதலை இல்லை. இங்கிருந்து விலகிச்சென்றால் யாதவர்களின் வாள் உங்களைத் தொடர்ந்து வரும். எங்கு சென்றாலும் அங்குள்ள அரசர்களால் சிறையிடப்படுவீர்கள்…” என்றான். அதை அவன் அத்தனை மலைமொழிகளிலும் மீண்டும் மீண்டும் சொன்னான். அவன் சொன்னதை அவர்கள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. மின்னும் கண்களுடன் நோக்கியபடி உடல் ததும்பி நின்றனர்.
வீரர்களால் அழைக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவரும் மூன்று வீரர்கள் நின்றிருந்த ஒரு பீடம் நோக்கி சென்றனர். பீடத்தின்மேல் இரும்பாலான கலத்தில் செங்கனல் கீழிருந்து வந்த காற்றில் சீறிக்கொண்டிருந்தது. வெண்கலத்தால் செய்யப்பட்ட சிறிய அச்சு ஒன்றை அந்தக்கனலில் இட்டு பழுக்கக் காய்ச்சி சிவந்த மலர் போல மரப்பிடிகொண்ட கிடுக்கியால் எடுத்து அவர்களின் வலத்தோளில் அழுத்தினர்.
முதலில் சென்றவனின் தோளில் அச்சுபதிந்ததும் அவன் முதுகுச்சதைகள் அதிர்வதையும் கழுத்து இழுபட்டு தெறிப்பதையும் சாத்யகி கண்டான். கண்களில் நீர் வழிய பற்களைக் கிட்டித்தபடி உடல்குறுக்கி நின்ற அவன் நீண்டமூச்சுடன் விடுபட்டு முன்னால் சென்றான். அச்சு பதிந்த புண்மேல் இன்னொரு வீரன் மயிற்பீலியால் பச்சைநிறமான எண்ணை ஒன்றை அள்ளி மெல்லப்பூசினான். கண்களை மூடி அதை ஏற்றபின் முன்னால் சென்ற அவன் திரும்பி நீர் நிறைந்த விழிகளால் சாத்யகியை நோக்கினான்.
சாத்யகி கனல் முன் சென்று நின்றான். பழுக்கக் காய்ச்சப்பட்ட உலோக அச்சில் இருப்பது சங்குசக்கரக் குறி என தெரிந்தது. அது தன் தோளைத் தொடுவதற்காக அவன் விழிவிலக்கிக் காத்திருந்தான். அந்த எதிர்பார்ப்பினாலேயே அது பெரிய வலி என தெரியவில்லை. ஒருகணம் உடல்குறுக்கி அதை ஏற்றபின் அவன் முன்னகர்ந்து தைலதாரைக்குச் சென்று நின்றான். தோளில் தேள்கடி ஏற்றதுபோல வலி தெறிக்கத்தொடங்கியது. தொழும்பராக ஒப்புக்குறி பெற்றவர்கள் வலிக்காக உதட்டை அழுத்தியபடி ஒன்றும் பேசாமல் கூடி நின்றனர்.
கிந்தமன் மறுபக்கமிருந்து வந்து “உம்மைத் தேடினேன்…” என்றபின் அந்தக் குழுவை நோக்கி “என்ன செய்துவிட்டீர்? தொழும்பராகவா சேர்ந்தீர்?” என்றான். சாத்யகி “ஆம், நான் அரண்மனையில் பணியாற்றவேண்டும்” என்றான். கிந்தமன் சினத்துடன் குரலைத் தாழ்த்தி “தொழும்பன் ஒருபோதும் வாளெடுக்கமுடியாது. பொன்னோ மணியோ தனக்கென வைத்துக்கொள்ளக்கூடாது. மந்தணம் காக்கலாகாது. அணிகளோ மேலாடையோ அணியலாகாது. அவனுக்கென தனி இல்லமோ மனையாளோ மைந்தரோ அமையமாட்டார்கள். முன்னோர் வகுத்த நால்வகை அறங்களும் அவனுக்கில்லை. இறையோர் அன்றி அவனுக்கு தெய்வங்களும் இல்லை, அறிவீரா?” என்றான். “அவை எனக்குத்தேவையில்லை” என்றான் சாத்யகி.
“மூடத்தனம் செய்திருக்கிறீர்… சற்றேனும் சிந்திப்பவர்களுக்குரியதல்ல இது… மானுடன் தன்னை விலங்காக ஆக்கிக்கொள்ளுதல் மட்டும்தான். நீர் என்னைப்போல மாலுமியாக விழைவு சொல்வீர் என எண்ணினேன். உமக்காக அங்கே காத்து நின்றேன்…” என்ற கிந்தமன் “இனி பேசிப்பயனில்லை. உம்மை நீர் ஒப்புக்கொடுத்துவிட்டீர்” என்றான். “கிந்தமரே, நான் கிளம்புகையிலேயே என்னை ஒப்புக்கொடுத்து விட்டேன்” என்றான். “உமது ஊழ் அது… அதற்காக வருந்துவீர்” என்றான் கிந்தமன்.
“நீர் ஒப்புச்சாத்து பெற்றுவிட்டீரா?” என்றான் சாத்யகி. கிந்தமன் சால்வையால் மூடப்பட்ட தன் தோளை காட்டினான். சிறிய செந்நிறமான சுட்டவடு அதில் தைலம் வழிய தெரிந்தது. “வலி தாளமுடியவில்லை. ஆனால் இது இருக்கும் வரை இந்நகரில் நான் கட்டற்றவன். என் வாழ்க்கையின் தொடக்கத்தை இதுவே அமைக்கப்போகிறது…”
“வேறெந்த நகரிலும் இத்தகைய அமைப்பு இருப்பதாக அறிந்ததில்லை” என்றான் சாத்யகி. “ஆம், ஆனால் வேறெங்கும் இத்தனை புதியவர்கள் வந்து கூடுவதில்லை அல்லவா?” என்று கிந்தமன் சொன்னான். “ஒவ்வொரு நாளும் என யாதவர்களின் படை பெருகிவருகிறது என்கிறார்கள்.” சாத்யகி அதைக்கேட்டு நெஞ்சு விம்ம “இன்றுமுதல் அவன் அடிமைகளில் நானும் ஒருவன்… யாதவ கிருஷ்ணனுக்காக களப்பலியாகப்போகும் பல்லாயிரவரில் நானும் ஒருவன்” என்றான்.
கிந்தமன் புன்னகை செய்து “நான் இறக்கவிரும்பவில்லை. மாலுமியாகச் செல்கிறேன்” என்றான். “ஏன்?” என்றான் சாத்யகி. “என் சிற்றூரின் எறும்புப்புற்றுக்குள் வாழ்ந்து சலித்துவிட்டேன். மண்ணில் வாழும் மானுடரில் மாலுமிகளால் மட்டுமே சிறகுவிரிக்க முடியும். அங்கே பெருநாவாய்கள் பல்லாயிரம் சிறகுகளை விரித்தெழுவதை நான் கனவில் காண்கிறேன்” என்றான்.
பின்னர் குரலைத் தாழ்த்தி “இந்த எளிய பெண்களையும் நான் வெறுக்கிறேன். பளிங்குநிறம் கொண்ட யவனப்பெண்களுக்காக நான் எவரையும் கொல்லச்சித்தமாக இருக்கிறேன்” என்றான். சாத்யகி புன்னகைசெய்து “அவ்வண்ணமே ஆகுக!” என்றான்.
“வருகிறேன், நாம் இனிமேல் சந்திக்கமுடியாதென்று எண்ணுகிறேன்” என்றபின் கிந்தமன் அணிவகுத்துச் சென்ற மாலுமிகளுடன் சென்று சேர்ந்துகொண்டான். சங்குசக்கரம் பொறிக்கப்பட்ட கொடியுடன் ஒரு படைவீரன் அருகே வந்து “தொழும்பர்குறி பொறிக்கப்பட்டவர்கள் மட்டும் இங்கு நில்லுங்கள்” என்றான். அவர்கள் ஒருவரோடொருவர் உடல்சேர்ந்து நின்றனர். வெந்த தசையின் நாற்றமும் தைலமணமும் கலந்து எழுந்தன.
“கைகளைப்பற்றிக்கொண்டு என்னுடன் வாருங்கள்” என்று வீரன் ஆணையிட்டான். தொழும்பர்கள் ஒருவர் கையை இன்னொருவர் பற்றிக்கொண்டு ஒற்றைத்தொகையாக ஆயினர். “வருக!” என்றபின் கொடியுடன் வீரன் முன்னால் செல்ல அவர்கள் மந்தை போல கால்கள் பின்ன அவனைத் தொடர்ந்துசென்றார்கள்.