வெண்முகில் நகரம் - 36
பகுதி 8 : நச்சு முள் – 5
அறைக்குள் பூரிசிரவஸ் வந்து “மூத்தவரே” என அழைத்த ஒலியில் கவசங்களுடன் படுத்துத் துயின்றுகொண்டிருந்த கர்ணன் எழுந்துவிட்டான். அதேவிரைவில் தன் ஆவநாழியை அணிந்து வில்லை எடுத்தபடி வெளியே ஓடினான். அவன் செல்வதற்குள் தன் அறையிலிருந்து துரியோதனனும் துச்சாதனனும் துச்சலனும் வெளியே ஓடிவந்தனர். போருடையிலேயே அவர்களும் துயின்றிருந்தனர். முதற்படகிலிருந்து எரியம்பு எழுந்தது. முதற்படகிலிருந்து அறிவிப்பாளன் கூவியசெய்தியை பிறகு சென்ற படகுகள் ஒவ்வொன்றாக ஏற்றுக்கூவின. “காம்பில்யத்தின் மூன்று உளவுப்படகுகள் ஆவசக்கரங்களால் அழிக்கப்பட்டன. அவை செய்தி அனுப்ப முடியவில்லை.”
துரியோதனன் புன்னகையுடன் “நன்று” என்றான். பூரிசிரவஸ்ஸிடம் திரும்பி “அஸ்வத்தாமனின் படைகள் எங்குள்ளன என்று பார்க்கச்சொல்லும். நீரும் கர்ணனும் முதற்படகில் ஏறிக்கொள்ளுங்கள்…” என்றான். கர்ணன் கீழ்த்திசையை நோக்கிக்கொண்டிருந்தான். “இன்னமும் தூதுப்புறாக்கள் வரவில்லை. வந்ததும் சொல்லச்சொல்லியிருந்தேன்.” துரியோதனன் “ அவர்களிடம் எரியம்புகள் செலுத்தச் சொல்லியிருக்கலாமே” என்றான். “அவை காம்பில்யத்தை எச்சரித்துவிடும்…” என்றான் கர்ணன். “காம்பில்யம் செய்தி அறியாதது போலிருக்கிறது. அது ஐயமூட்டுகிறது. எப்படியானாலும் உளவுப்படகுகளின் சுற்றுச் செய்தி சென்று சேராததை அவர்கள் அறிய இன்னும் அரைநாழிகை நேரமே உள்ளது.”
துரியோதனன் “அரைநாழிகைக்குள் ஜயத்ரதனும் வந்துவிடுவான்” என்றான். கர்ணன் “போரில் எப்போதுமே ஒன்று பிழையாகும். அது என்னவென்று முன்னரே எவராலும் சொல்லமுடியாது” என்றான். துரியோதனன் பதற்றத்துடன் துச்சாதனனை நோக்கி “மூடா, அங்கே என்ன செய்கிறாய்? நம் ஆவசக்கரங்கள் அனைத்தும் சித்தமாக இருக்கவேண்டும். நான் சொன்னேன் என்று சொல். ஒரு ஆவசக்கரம் சிக்கிக்கொண்டால்கூட அத்தனை பேரையும் கழுவிலேற்ற ஆணையிடுவேன்” என்று கூவினான். துச்சாதனன் “ஆணை, மூத்தவரே” என்றபின் திரும்பி படகுக்குப் பின்னால் ஓடினான்.
கர்ணன் “வா” என்று பூரிசிரவஸ்ஸை நோக்கி சொல்லிவிட்டு படகின் அமரமுனையை நோக்கி சென்றான். முன்னால் சென்ற படகிலிருந்து வீசப்பட்ட வடம் வந்து விழுந்தது. அதை வீரர்கள் எடுத்து பாய்மரத்தில் கட்டிக்கொண்டிருக்கையிலேயே இன்னொரு வடமும் வந்து விழுந்தது. இரு வடங்களும் ஒன்றன் மேல் ஒன்றாகக் கட்டப்பட்டு படகுகளின் ஆட்டத்துக்கு ஏற்ப தளர்ந்தும் இறுகியும் அசைந்தன. கர்ணன் ஒருவடத்தைப் பற்றியபடி இன்னொன்றில் கால்வைத்து எளிதாக நடந்து முந்தைய படகுக்குச் சென்றான். பூரிசிரவஸ் ஒருகணம் தயங்கிவிட்டு அவனைத் தொடர்ந்தான். அலையாடிய படகின் நடுவே நீருக்குமேல் ஊசலாடிய வடப்பாதையில் அவன் ஒருகணம் தத்தளித்து விழப்போனான். ஆனால் கர்ணன் திரும்பிப்பார்க்கவில்லை.
அத்தனை படகுகளும் ஒன்றுடன் ஒன்று கயிற்றுப்பாதையால் இணைக்கப்பட்டிருந்தன. சாலையில் செல்வதுபோல கர்ணன் அவற்றினூடாக சென்றான். செல்லும் வழியிலேயே ஒவ்வொரு படகிற்கும் ஆணைகளை விடுத்தபடி சென்றான். ஆவசக்கரங்களும் சதக்னிகளும் படகுகளின் முகதளங்களுக்கு இழுத்துக் கொண்டுவந்து வைக்கப்பட்டன. சிறிய தோணிகளில் மீன் எண்ணை நிறைக்கப்பட்டு அவற்றில் சதக்னிகளுக்குள் போடவேண்டிய எரியுருளைகள் ஊறிக்கொண்டிருந்தன. எரியம்புகளுக்குரிய பந்தமுனைகள் ஊன்கொழுப்பும் அரக்கும் தேன்மெழுகும் கலந்த குழம்பில் முக்கப்பட்டன. வில்லவர்கள் தங்கள் விற்களை கையிலேந்தி நின்றிருக்க அமரமுனையில் செய்தியாளன் நின்றிருந்தான்.
முதற்படகை அடைந்தபின் கர்ணன் கயிற்றைப்பற்றியபடி நின்று தொலைவில் தெரிந்த காம்பில்யத்தின் கோட்டைவிளக்குகளை நோக்கினான். “கோட்டைக்குள் இருந்து எந்த ஓசையுமில்லை. அவர்கள் உண்மையிலேயே அறியாதிருக்கிறார்களா?” என்றான் பூரிசிரவஸ். “யாதவ அரசியின் ஒற்றர்களை நான் நம்புகிறேன்” என்றான் கர்ணன். “நமக்காக காம்பில்யம் ஏதோ கேணி ஒருக்கியிருக்கிறது. அதை அறியவேண்டும்… ஆனால் நேரமில்லை.” அவன் கைகாட்ட அலைகளிலாடியபடி அலையறையும் ஓசையுடன் படகுகள் நின்றன காம்பில்யத்தை நோக்கிக்கொண்டு கர்ணன் அமரத்தில் நிழலுருவாக நின்றான்.
சற்றுநேரம் கழித்து “அவர்கள் காத்திருக்கிறார்கள்” என்றான். “எப்படி தெரியும்?” என்றான் பூரிசிரவஸ். “உளவுப்படகுகளின் செய்தி செல்லவேண்டிய நேரம் கடந்துவிட்டது. இன்னமும் அங்கே எந்த அசைவும் இல்லை.” திரும்பி வந்து வடத்தில் அமர்ந்தபடி “காத்திருக்கவேண்டியதுதான்… வேறுவழியே இல்லை” என்றான். “நாம் கருக்கலில் தாக்குவதாகத்தானே திட்டம்?” என்றான் பூரிசிரவஸ். கர்ணன் “ஆம், ஆனால் இந்த இருளில் அவர்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்றறியாமல் சென்று சிக்கிக்கொள்வதில் பொருளில்லை” என்றான். “ஜயத்ரதனின் படைகளாவது செய்தியனுப்பவேண்டும். அதற்கு முன்னர் தாக்கத் தொடங்கினால் நாம் தனித்துவிடப்படுவோம்.”
பூரிசிரவஸ் நின்றுகொண்டிருந்தான். கர்ணன் துரியோதனனுக்கு செய்தியனுப்பிவிட்டு கோட்டைவிளக்குகளை நோக்கி விழியூன்றி அமர்ந்திருந்தான். பூரிசிரவஸ் திரும்பி கிழக்கே விடிவெள்ளி எழுந்திருப்பதைக் கண்டான். எத்தனையோ முறை எங்கெங்கோ பார்த்திருப்பினும் எப்போதும் போல அக்கணமும் அது முற்றிலும் புதியதாக இருந்தது. மெல்லிய நடுக்கத்துடன். அந்த நடுக்கம்தான் விண்மீன்களை பொருள்கொண்டதாக ஆக்குகிறது. உயிருள்ளவையாக, அனைத்தையும் அறிந்தவையாக, பேச விழைபவையாக. வெள்ளியையும் துருவனையும் பார்க்கும்தோறும் ஒளிகொண்டதாகி வருவதை அவன் முன்னரும் கண்டிருக்கிறான். கனிந்து கனிந்து திரண்டு வருவன போல. உதிர்ந்துவிடுவன போல.
குரல்செய்தி வந்தது. “அஸ்வத்தாமனின் படைகள் காம்பில்யத்தின் வடக்குவாயிலுக்கு அப்பாலுள்ள குறுங்காட்டை அடைந்துவிட்டன. தாக்குவதற்கு சித்தமாக உள்ளன.” துரியோதனனின் செய்தி தொடர்ந்து வந்தது “இனிமேலும் காத்திருக்கவேண்டியதில்லை. போரைத் தொடங்குவோம்.” கர்ணன் காத்திருப்போம் என செய்தி அனுப்பினான்.
வெள்ளியின் ஒவ்வொரு நடுக்கமும் ஒருகணம் என காலம் கடந்துசென்றது. துரியோதனன் சீற்றத்துடன் “எதற்காக காத்திருக்கிறோம்? விடியப்போகிறது. அவர்கள் நம்மை பார்த்துவிடுவார்கள்” என்று செய்தியனுப்பினான். ”காத்திருப்போம்” என்று கர்ணன் சொன்னான். பூரிசிரவஸ் “மூத்தவரே, ஜயத்ரதன் வந்து சேர்ந்துகொள்ளட்டும்” என்றான். கர்ணன் “இல்லை, அவன் வந்துசேர்வது ஓர் உறுதியை அளிக்கிறது. அவன் அவர்களுடன் சேர்ந்துகொண்டிருக்கவும் கூடும். இன்னும் சற்றுநேரம் பார்ப்போம்” என்றான்.
மீண்டும் துரியோதனனின் செய்தி வந்தது “எதன்பொருட்டு காத்திருக்கிறோம்?” கர்ணன் “இன்னும் சற்றுநேரம்… விடிவதனால் நமக்கு இழப்பு இல்லை. இருளில் செல்லவேண்டியதில்லை” என்றான். பூரிசிரவஸ் “காத்திருப்பது மலையை அழுத்தி அணுவாக்குவதுபோல காலத்தை ஆக்கிவிடுகிறது” என்றான். “மலைநாட்டில் நீங்கள் காத்திருப்பதில்லையா?” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் அங்கே காலம் முகிலாக மாறி மறைந்துவிடும்.” கர்ணன் மீசையை நீவியபடி மீண்டும் காம்பில்யத்தை நோக்கினான்.
மீண்டும் இருமுறை துரியோதனனின் செய்தி வந்தது. ஒரு விடியல்பறவை தலைக்குமேல் இருளில் ரீக் என ஒலியெழுப்பிச் சென்றது. படைவீரர்கள் அசைந்து அமர்ந்தனர். துரியோதனன் “நான் படைநீக்கத்திற்கு ஆணையிடுகிறேன். காம்பில்யத்தை தாக்குவோம்” என்றான். “இல்லை, பொறுப்போம்” என்று கர்ணன் அனுப்பிய செய்தி ஒலித்துக்கொண்டிருக்கையிலேயே துரியோதனன் படகிலிருந்து எரியம்பு எழுந்து வெடித்தது. அத்தனை படகுகளில் இருந்தும் எரியம்புகள் எழுந்தன. தொலைவில் காம்பில்யத்தின் வடக்கிலிருந்து மூன்று எரியம்புகள் எழுந்தன.
கர்ணன் சினத்துடன் எழுந்து கையை தூக்குவதற்குள் முதற்படகின் பெருமுரசம் ஒலிக்கத் தொடங்கியது. படகுகள் அனைத்தும் முரசொலி எழுப்பியபடி பாய்களை விரித்துக்கொண்டு காம்பில்யத்தின் துறைமுகப்பு நோக்கி சென்றன. “என்ன செய்கிறான்? மூடன்! மூடன்!” என்று கர்ணன் கூவினான். “பால்ஹிகனே, சென்று அவனை நிறுத்தச்சொல்… படகுகள் துறைமுகப்புக்கு செல்லலாகாது. பக்கத்தில் காட்டருகே நிறுத்தி படைகளை கரையிறங்கச் செய்வோம்…”
பூரிசிரவஸ் செய்தியுடன் ஓடி வடம் வழியாக மூன்றாவது படகுக்கு தாவும்போதே காம்பில்யத்தை நோக்கி முதல் எரியம்பை துரியோதனனின் படகு விடுத்துவிட்டது. எரியம்பு சென்றுதொடும் அண்மை வரவில்லை என பூரிசிரவஸ் உணர்ந்து திரும்பி நோக்கினான். அந்த எரியம்பு நீரில் விழுந்து அணைந்தபோது நீர்வெளியெங்கும் சிறிய பீப்பாய்கள் மிதப்பதைக் கண்டான். மேலுமொரு கணம் கழித்தே அவையெல்லாம் ஆழத்தில் கயிறுகளால் ஒன்றோடொன்று வலையெனப் பிணைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான். அவை என்ன என்று அகம் உணர்ந்தும் சித்தம் உணராமல் இருபடகுகள் நடுவே கயிற்றில் திகைத்து நின்றான்.
சரசரவென்று அத்தனை படகுகளிலிருந்தும் எரியம்புகள் எழுந்து சீறி செந்நிறக்கோடுகளாக இருண்ட வானில் வளைந்து நீரில் விழுந்தன. முதல் பீப்பாய் செந்தழலாகப் பற்றிக்கொண்டதும் தொடர்ந்து நீரில் மிதந்தாடிய பீப்பாய்களனைத்தும் பற்றிக்கொண்டன. கர்ணன் அமரத்தில் நின்றபடி படகுகளை திருப்பும்படி கைகாட்டி கூச்சலிட்டான். குகர்கள் ஓடிச்சென்று பாய்களை அவிழ்த்தனர். அதற்குள் முதற்படகு விசையிழக்காமல் சென்று இரண்டு எரியும் பீப்பாய்களில் முட்டியது. அவற்றிலிருந்து உடைந்து பீறிட்ட எரிநெய் செந்தழலாகப் பரவி படகின் அமரமுனையை தீண்டியது.
அதேகணம் காம்பில்யத்தின் கோட்டைமேல் நூற்றுக்கணக்கான பந்தங்கள் எரிந்தெழ அது தீப்பற்றிக்கொண்டதுபோல தெரிந்தது. அங்கிருந்து எரியம்புகள் வந்து நீரிலும் முதல்படகின் மேலும் விழுந்தன. நீர்வெளியில் பீப்பாய்கள் எரிந்து வெடிக்க, பாய்கள் எரியம்பால் பற்றிக்கொள்ள தீத்தழல்களும் அவற்றின் நீர்ப்பாவைகளும் இணைந்து அத்திசையே அனலாக ஆனதுபோலிருந்தது. குகர்கள் பாய்களை அவிழ்த்துவிட்டாலும் படகு விரைவழியவில்லை. கர்ணன் சுக்கானைத் திருப்பி படகை பக்கவாட்டில் திருப்பச்சொல்லி ஆணையிட்டான். படகு பக்கவாட்டில் திரும்பியதும் விரைவிழந்தது. ஆனால் அதற்குள் பின்னால் வந்த படகு அதை முட்டி தீக்குள் தள்ளியது.
பூரிசிரவஸ் தொங்கி நின்ற வடம் தளர்ந்தது. மறுமுனைப்படகின் அமரம் தன்னை நோக்கி வருவதைக்கண்டு அவன் ஓடிச்சென்று தாவிக்கொண்டான். அந்த அமரமுனை பேரெடையுடன் முன்னால் சென்ற படகை முட்டியது. ஒவ்வொரு படகும் ஒன்றை ஒன்று முட்டி முன்னால் செலுத்த முதல்படகுகள் நான்கும் நெருப்புக்குள் நுழைந்துவிட்டன. முதல்படகின் பாய்களும் உடலும் சேர்ந்து எரிந்தன. அந்தப்பெரும்படகு எரியும் அனல்வெம்மையே அடுத்த படகுகளை எரிக்க வல்லது என பூரிசிரவஸ் புரிந்துகொண்டான்.
நான்குபக்கமும் எண்ணைப்புகையுடன் வெடித்து எரிந்த தழல்களின் நடுவே ஆடி நின்ற படகில் நின்றபடி பூரிசிரவஸ் நோக்கினான். தழல்கள் நடுவே கர்ணன் கரிய கவசத்துடன் ஓடிவந்து கொண்டிருப்பதை கண்டான். வடத்தில் தொற்றி ஏறி அவன் பூரிசிரவஸ் படகில் வந்து நின்று திரும்பி நோக்கினான். “முன்வரிசைப் படகுகளை இனிமேல்காக்க முடியாது.. பின்னால் வந்த படகுகளுக்குச் செல்லுங்கள்…” என ஆணையிட்டபடி அவன் ஓட அவனுக்குப்பின்னால் அந்தப்படகை கைவிட்டுவிட்டு பிறரும் ஓடினர்.
பூரிசிரவஸ் திரும்பிப்பார்த்தான். முதல்படகின் உள்ளிருந்த எண்ணைப்பீப்பாய்கள் பற்றிக்கொள்ள பேரொலியுடன் வெடித்து வானளாவிய செந்தழலாக எழுந்தது. அதிலிருந்த வீரர்கள் நான்குபக்கமும் நீரில் குதித்தனர். புரவிகள் நீரில் குதித்து தலையை மேலே தூக்கியபடி கனைத்துக்கொண்டு கரைநோக்கி சென்றன. வீரர்கள் எடைமிக்க கவசங்களுடன் இருந்தமையால் நீந்தமுடியாமல் மூழ்கி எழுந்து கூவினர். பலர் ஒழுக்கிலேயே சென்று பின்னர் மூழ்கி மறைந்தனர்.
நீர்வெளியும் நெருப்பாக இருந்தமையால் பலர் தயங்க அவர்கள்மேல் எரிந்தபடி பாய்மரமும் பாய்களும் விழுந்தன. முதல்படகு எரிந்தபடி நின்று மெல்லச் சுழன்றது. மேலே செலுத்திச்சென்ற பாய்கள் அழிந்தமையால் அதை காற்றும் ஒழுக்கும் தள்ளிக்கொண்டு வந்து பின்னால் நின்ற படகுடன் இணையச்செய்தன. மேலும் மேலும் படகுகள் இணைந்துகொள்ள தழல்கள் ஒன்றை ஒன்று உண்டு எழுந்து படபடத்தன.
கர்ணன் துரியோதனனின் படகை அடைந்தான். துரியோதனன் பதறியபடி ஓடிவந்து “நாம் வருவதை அறிந்திருக்கிறார்கள்… கர்ணா நான் இதை எதிர்பார்க்கவில்லை” என்றான். “அதை பிறகு பேசுவோம்” என்று கர்ணன் சொன்னான். “முதலில் நமது எரியாத படகுகளை பின்னால் திருப்புவோம். படகுகள் எரியும் தழல் ஆற்றல் மிக்கது.” அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தழல்தொடாத ஒரு படகின் பாய் தன்விழைவாலேயே பற்றிக்கொண்டதுபோல எரியத் தொடங்கியது.
“பாய்களை தாழ்த்துங்கள்… அவை எளிய இலக்குகள்” என்று கர்ணன் ஆணையிட்டான். “நங்கூரமிட்ட ஒரு படகு நின்றிருக்கட்டும். அது ஒழுக்கில் வரும் படகுகளை நிறுத்தும். பிறபடகுகள் நீரின் விரைவிலேயே விலகிச்செல்லட்டும்…” படகுகள் பாய்களைச் சுருக்கியபடி கங்கையின் ஒழுக்கில் ஓடத் தொடங்கின. நங்கூரமிடப்பட்ட ஏழாவது படகு பாய்தாழ்த்தி நின்றிருக்க அதை நோக்கி மெல்ல ஒழுகிவந்த எரியும்படகுகளின் தொகை மோதி மெல்ல நகரச்செய்தபின் சேர்ந்து எரிந்தபடி தேங்கியது. கர்ணன் “நீ என்னுடன் வா” என்று பூரிசிரவஸ்ஸிடம் சொல்லிக்கொண்டே சென்றான்.
“மையத்திற்கு செல்வோம்” என்று துரியோதனன் சொன்னான். “இவர்கள் நம்மை எதிர்நோக்கி இக்காடுகளில் படைகளை நிறுத்தியிருப்பார்கள்.” கர்ணன் “இல்லை இளவரசே, நாம் திரும்பமுடியாது. அஸ்வத்தாமனின் படைகள் காம்பில்யத்தை தாக்கியிருக்கும். நாம் அவருக்கு துணைநிற்கவேண்டும்” என்றான். மூன்று எரியம்புகள் ஒன்றன்மேல் ஒன்றாக எழுந்து வானில் வெடித்தன. துச்சாதனன் “ஜயத்ரதன்… அவரும் தாக்கிவிட்டார்” என்றான். அதற்குள் அஸ்வத்தாமன் தாக்கியதை எரியம்புகள் அறிவித்தன.
“அனைத்து ஆவசக்கரங்களும் சதக்னிகளும் கரைநோக்கி திரும்பட்டும்” என்று ஆணையிட்டபடி அடுத்த படகுக்கு சென்றான் கர்ணன். வீரர்கள் கூச்சலிட்டபடி ஆவசக்கரங்களை திருப்பி கரைநோக்கி வைத்தனர். “கரைநோக்கி செல்வோம்…” என்று கர்ணன் ஆணையிட்டதும் குகர்கள் சுக்கான்களைத் திருப்பி துடுப்பிட்டு படகுகளை கரையோரக் காடுகளை நோக்கி செலுத்தினர். படகுகள் நீரோட்டத்தை பயன்படுத்திக்கொண்டு முகம் திருப்பின. குகர்கள் கூச்சலிட்டபடி ஒரேவிசையாக மாறி துடுப்புகளால் துழாவ படகுகள் யானைகள் என எடையுடன் மெல்ல ஊசலாடி கரைநோக்கி சென்றன.
கரையின் காடுகளுக்குள் மரங்களுக்குள் தழைமறைத்துக் கட்டப்பட்டிருந்த படைப்பரண்களில் காம்பில்யத்தின் வீரர்கள் எழுந்தனர். போர்க்கூச்சலுடன் அவர்கள் எய்த எரியம்புகள் எழுந்து வளைந்து நீரிலும் படகுகளின் முகப்பிலுமாக விழுந்தன. அஸ்தினபுரியின் படகுகளுக்குள் அமர்ந்துகொண்டு வீரர்கள் ஆவசக்கரங்களை இயக்கினர். பதினெட்டு தொகைகளாக எரியம்புகள் எழுந்து காடுகள் மேல் விழுந்தன. சதக்னிகள் ஓசையுடன் வெடித்து எரியுருளைகளை காடுகள் மேல் பொழிந்தன.
கொடித்தூணின் மறைவில் நின்றபடி கர்ணன் அந்தப்போரை நோக்கிக்கொண்டிருந்தான். பூரிசிரவஸ் அருகே வந்து “நாம் வில்லெடுக்கலாமா?” என்றான். “எறும்புகள் கலையட்டும்…” என்றான் கர்ணன். “இப்போது அம்புகள்தான் வீணாகும்.” சதக்னிகளின் தழலுருளைகள் விழுந்த இடங்களில் காட்டுக்குள் சருகுகள் பற்றிக்கொண்டன. புகையுடன் எழுந்த நெருப்பு பின்னர் செந்நிறச்சுவாலைகளாகியது. பின்பு பசுந்தழைகளுக்குமேல் அதன் நாக்குகள் எழத்தொடங்கின.
காடுகளுக்குள் தழைமறைப்புக்குள் இருந்த வீரர்கள் இறங்கி தரையில் ஓடத்தொடங்கியதும் கர்ணன் தன் வில்லை எடுத்தான். அவன் கைகளும் விழிகளும் வில்லும் அம்பும் ஒற்றைப்படைக்கலமாக ஆயின. நாண் விம்மி விம்மி தழைந்தது. முரசில் கைவைத்து இழுத்த ஒலியுடன் அம்புகள் பறந்து காட்டுக்குள் சென்றன. அவனுடைய ஒரு அம்புகூட வீணாகவில்லை. காடுகளுக்குள் அலறல் ஒலியுடன் காம்பில்யத்தின் வீரர்கள் சரிந்துகொண்டே இருந்தனர்.
கர்ணனிடம் களிவெறியோ கொந்தளிப்போ உருவாகவில்லை என்பதை பூரிசிரவஸ் கண்டான். அனல்கூர்ந்து நகைசெய்யும் பொற்கொல்லனை போலிருந்தன அவன் முகமும் கைகளும். அவன் வில் அவனுடன் இணைந்து நடமிட்டது. அவன் கைபட்டதும் துள்ளி நகைத்தது. அவனிடமிருந்து அம்புகள் சூரியனிடமிருந்து கதிர்களென கிளம்பின. அவை அம்புகளல்ல அவன் விழிப்பார்வைகள் என பூரிசிரவஸ் நினைத்தான்.
அம்புகளையும் அனலையும் பொழிந்தபடி படகுகள் கங்கைக்கரையை அடைந்தன. கரையோரக்காடு தீப்பற்றி புகைவிட்டு எரிந்துகொண்டிருந்தது. பசுந்தழை பொசுங்கும் நாற்றமும் எண்ணையின் எரிநாற்றமும் கலந்து வீசின. காட்டுக்குள் சேக்கேறியிருந்த பறவைகள் எழுந்து காற்றில் சிறகடித்து கூச்சலிட்டுச் சுழன்றன. “கரையில் இறங்கவேண்டியதில்லை. ஆவசக்கரங்களை கைவிடாமல் காடுவழியாக செல்லமுடியாது” என்றான் கர்ணன். “கங்கையோரமாகவே படகுகள் செல்லட்டும்… அங்கே எண்ணைப்பீப்பாய்கள் எரிந்தணைந்திருக்கும்.”
படகுகள் காட்டை எரியம்புகளால் தாக்கியபடி கரையோரமாகவே சென்றன. ஆழமற்றபகுதி என்பதனால் கழிகளால் உந்தியே படகுகளை செலுத்த முடிந்தது. காம்பில்யத்தின் இரு முனைகளிலும் போர் நிகழ்வதற்கான ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. இடைவிடாமல் கரைநோக்கி அம்புகளை செலுத்தியபடியே வந்தான் கர்ணன். பூரிசிரவஸ் விட்ட அம்புகளுக்குத் தப்பி விலக முயன்றவர்களை அவன் அம்புகள் எளிதாக குத்தி வீழ்த்தின.
ஏழு படகுகளும் சேர்ந்து எரிந்துகொண்டே விலகிச்சென்றிருந்தன. எரிந்தணைந்த பீப்பாய்களில் சில சிறு தழலுடன் புகைவிட்டுக்கொண்டிருந்தன. நீரில் எரிந்த தழல் இரு செஞ்சிறகுகள் கொண்ட பறவைபோல தோன்றியது. “படகுகளை கரையணையச்செய்து வீரர்களை இறக்குங்கள். ஆவசக்கரங்களுடனும் சதக்னிகளுடனும் படகுகளில் சிலர் மட்டும் இருந்தால் போதும். காம்பில்யத்தைத் தாக்கியபடியே படகுகள் அணையட்டும்” என்று கர்ணன் ஆணையிட்டான்.
முதல் குகன் நீரில் பாய்ந்து நீந்திச்சென்று கரையேறினான். அவன் தன்னுடன் கொண்டுசென்ற வடத்தை அங்குள்ள மரத்தில் சுற்றி பிணைத்தான். அதை படகிலிருந்த சக்கரத்தில் சுற்றினார்கள். தக்கைமரங்களாலான தெப்பங்கள் அந்தக் கயிற்றில் பிணைக்கப்பட்டு நீரில் போடப்பட்டன. படகுகளிலிருந்து நூலேணிகள் வழியாக நீரில் விழுந்த வீரர்கள் அவற்றைப்பற்றிக்கொள்ள தெப்பங்களுடன் படகுக்கும் கரைக்குமாகச் சுழன்ற கயிறு அவர்களை கரைநோக்கி கொண்டுசென்றது. வீரர்கள் கூச்சலிட்டபடி சக்கரத்தைச் சுழற்ற நிரைநிரையாக வீரர்கள் மிகவிரைவாக கரையை அடைந்தனர்.
புரவிகள் சேணத்துடனேயே நீரில் குதித்து இயல்பாக நீந்தி கரையேறி உடலை உதறிக்கொண்டு ஒன்றை ஒன்று நோக்கி கனைத்து அழைத்தன. பூரிசிரவஸ் நீரில்பாய்ந்து கரையேறி தன் இடையிலிருந்த கொம்பை ஊதி அவர்களை ஒருங்கிணைத்து கங்கையின் அழுத்தமான மென்மணல் பரப்பு வழியாகவே அணிவகுத்து கொண்டுசென்றான். முன்பக்கம் துச்சாதனனும் துச்சலனும் இறங்கிவந்து படைகளை ஒருங்கிணைத்தனர். மேலே மணல்சரிவு முடியும் இடத்திலிருந்து அடர்காடு தொடங்கியது. அங்கே காம்பில்யத்தினர் எவரும் ஒளிந்திருக்காதபடி அஸ்தினபுரியின் படகுகள் அம்புகளை பொழிந்துகொண்டிருந்தன.
அனைத்துப்படகுகளிலிருந்தும் வீரர்கள் இறங்கியதும் கர்ணனும் துரியோதனனும் நீரில் கயிறு வழியாக இறங்கி நீந்தி வந்தனர். ஈரம் சொட்டும் கவசங்களுடன் வந்த கர்ணன் தன் குதிரையை அணுகி அதன் சேணத்தைப்பற்றி கழுத்தைத் தட்டி ஆறுதல்படுத்தினான். அது தலைதிருப்பி அவனை நக்கியது. தன் வில்லுடனும் வாளுடனும் அவன் புரவியில் ஏறிக்கொண்டு ”வில்லவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டு முன்னால் வாருங்கள்… பிறபடைகள் காம்பில்யத்தை அணுகியதும் காடுகளுக்குள் புகுந்துகொண்டு புதர்களுக்குள் என் ஆணைக்காக காத்திருங்கள்” என்று கூவிவிட்டு அதை தட்டினான்.
வால் சுழற்றி கனைத்தபடி அவன் குதிரை குளம்புகள் மணலை அள்ளி பின்னால் வீச ஓடிச்சென்றது. எரியும் படகுகளின் மெல்லிய செவ்வொளியில் அவன் செல்லும் காட்சியை பூரிசிரவஸ் கண்டான். களத்தில் அவன் பிறிதொருவனாக இருந்தான். அங்கு வாழ்வதற்காகவே படைக்கப்பட்டவனாக. பிறவாழ்க்கையை முழுக்க அதன்பொருட்டு செலுத்திக்கொண்டிருப்பவனாக. அங்கே அவனறியாத ஏதுமிருக்கவில்லை என்று தோன்றியது.
நீந்திக்கரைசேர்ந்த அஸ்தினபுரியின் வீரர்கள் கரைகளில் தயங்கி நின்ற குதிரைகளைப் பிடித்து சேணங்களை சரிசெய்து ஏறிக்கொண்டனர். தெப்பங்களில் கரை வந்து சேர்ந்த படைக்கலங்களை வீரர்கள் ஓடிச்சென்று எடுத்துக்கொண்டார்கள். தீக்காயங்களுடன் நீந்திக்கரைசேர்ந்த வீரர்கள் காட்டுக்குள் சென்று ஒளிந்தனர். சற்றுநேரத்தில் குதிரைப்படை ஒன்று விற்களுடன் உருவாகி அணிவகுத்து கர்ணனின் பின்னால் சென்றது. அதில் பூரிசிரவஸ் இருந்தான். அவனுக்குப்பின்னால் கௌரவர்களால் நடத்தப்பட்ட காலாள்படை படைக்கலங்களுடன் அணிதிரண்டு கொண்டிருந்தது.
நீருக்குள் ஒருபடகு இறுதியாகவெடித்து மெல்ல அமிழத்தொடங்கியது. அஸ்தினபுரியின் படகுகள் எரியம்புகளை செலுத்தியபடி காம்பில்யத்தின் துறைமுகப்பு நோக்கி சென்றன. நூற்றுக்கணக்கான சிறிய செந்நிற மீன்கொத்திகள் போல எரியம்புகள் எழுந்து இருண்டவானில் கோடுகளைக் கீறியபடி சென்று காம்பில்யத்தின் துறைமேடையில் விழுந்தன. சதக்னிகள் எட்டும் தொலைவு வந்ததும் எரியுருளைகள் எழுந்து சென்று துறைமேடையில் விழுந்து அனல்பொறிகள் சிதற வெடித்தன. துறைமேடையின் ஒரு மூலையில் கட்டடம் ஒன்று பற்றிக்கொண்டது.
துறையிலிருந்த வீரர்கள் அதை அணைக்கச்செல்ல அவர்கள்மேல் மேலும் மேலும் எரியுருளைகள் விழுந்தன. துறைமேடையின் பெரிய எடைதூக்கிச் சக்கரமும் மூங்கில்களும் எரியத்தொடங்கின. சற்றுநேரத்தில் துறைமேடையின் ஓரம் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அங்கே நின்றிருந்த சிறிய பாஞ்சாலப்படை கூச்சலிட்டபடியும் எரியம்புகளால் ஆணைகளை இட்டபடியும் கோட்டைக்குள் சென்று மறைந்ததும் கோட்டைக்கதவுகள் ஓசையுடன் மூடப்பட்டன. கோட்டைக்குமேல் பெருமுரசுகள் ஓசையிட்டன.
கர்ணனால் வழிநடத்தப்பட்ட வில்லவர்படை கங்கையின் மென்மணல் கதுப்புவழியாக குறுங்காட்டை ஒட்டி கோட்டை முகப்பு நோக்கி சென்றது. அஸ்தினபுரியின் படகுகளில் இருந்து எழுந்த சதக்னிகளின் எரியுருளைகள் அவர்களுக்கு முன்னால் சென்று விழுந்து கொண்டே இருந்தன. சற்றுநேரத்தில் துறைமுகப்பின் மாபெரும் மரத்தடிகள் நின்றெரியத்தொடங்கின. அந்தப்புகையால் கோட்டை முழுமையாகவே மூடப்பட்டது. காற்று புகையை அள்ளி கோட்டையை நோக்கி கொண்டு சென்றது.
புகைத்திரைக்குள் கர்ணனின் வில்லவர்படை குதிரைகளில் ஊடுருவிச்சென்றது. கோட்டைக்குமேல் எழுந்த காவல்மாடங்களை நோக்கி அம்புகளை ஏவியபடி படகுகள் அணுகி வந்து எரியும் துறைமேடைக்கு முன்னால் நின்றன. கோட்டைக்குமேலிருந்து வில்லேந்திய காவலர்கள் அலறியபடி உதிர்ந்து விழுந்துகொண்டிருந்தனர். புகைக்குள் செல்ல குதிரைகள் தயங்க வீரர்கள் அவற்றை சம்மட்டியால் அடித்துச்செலுத்தினார்கள். பின்னர் கர்ணன் இறங்கிக்கொண்டு குதிரையை பிடித்தபடி காத்து நின்றான். வில்லவர்களும் விற்களுடன் இறங்கிக்கொண்டனர்.
கோட்டைமேலிருந்த சதக்னிகளால் அஸ்தினபுரியின் இரண்டு படகுகள் எரியத்தொடங்கின. அவற்றை பாய்களை விரித்து துறைமேடை நோக்கிச்செலுத்தும்படி கர்ணன் எரியம்புகளால் ஆணையிட்டான். அதன் மேலிருந்த குகர்கள் நீரில் பாய்ந்தனர். தழல்விட்டு எரிந்தபடியே முதல்படகு பேரெடையுடன் சென்று துறைமேடையில் எரிந்துகொண்டிருந்த மரச்சட்டங்களை முட்டியது. எரியும் தழலுடன் முனகியபடி மேலெழுந்து புரண்ட மரத்தடிகள் உருண்டு கோட்டை வாயில் நோக்கி சென்றன. இரண்டாவது படகும் மேலும் விசையுடன் முதல்படகில் முட்டி அதை தழலுடன் துறைமேடையுடன் சேர்த்து அழுத்தியது.
காம்பில்யத்தின் கோட்டைமுன் உலர்ந்த பெரிய தடிகள் கனலாகி வெடித்து நின்றெரிந்தன. கங்கைக்காற்று மொத்த அனலையும் அள்ளி கோட்டைமேலேயே பொழிந்தது. ஐந்து ஆள் உயரமான தழல்கற்றைகள் சுழன்று பறந்து கோட்டையின் கரியசுவரை நக்கி மேலெழுந்தன. நீரலை போலவேதான் நெருப்பலையும் என்பதை பூரிசிரவஸ் கண்டான். நெருப்பு அறைந்து வளைந்து விழுந்து மீண்டும் எழுந்து வழிந்தோடி பக்கவாட்டில் பரவி அங்கிருந்த கட்டடங்களை சுருட்டி எடுத்துக்கொண்டது. பச்சை மரங்கள் சடசடவென இலைசுருண்டு பொசுங்கி பின் அனல்கொண்டு எரிந்தன.
கோட்டைக்கதவு முழுமையாகவே செந்தழலாக மாறி எரிந்தது. பின் அதன் ஒரு பாளம் உடைந்து எரிந்தபடியே பின்னால் விழுந்தது. கோட்டைமேல் காவலிருந்தவர்கள் கூச்சலிட்டனர். கோட்டைக்கு அப்பால் படைகள் அணிவகுப்பதற்கான பெருமுரசங்கள் முழங்கின. கோட்டைக்கதவின் இரண்டாவது பாளமும் எரிந்து நடுவே உடைந்து மடிந்து விழுந்தது. கோட்டைக்குமேல் கட்டப்பட்டிருந்த மரத்தாலான காவல்மாடங்களும் எரியத்தொடங்கின.
கோட்டைக்கு அப்பால் வானத்தில் தெரிந்தது நெருப்பின் செந்நிறமா என்று பூரிசிரவஸ் முதற்கணம் எண்ணினான். முகில்களிலும் அனல் பற்றி ஏறிக்கொண்டதுபோல தோன்றியது. வானிலும் மண்ணிலும் நீரிலும் செந்தழல் சூழ கோட்டையே பற்றி எரிந்துகொண்டிருந்தது என விழிமயக்கு கொண்டான்.
கர்ணன் குதிரைமேல் ஏறிக்கொண்டு தன் கையை நீட்டினான். அவனுக்குப்பின்னால் நின்ற வீரன் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து ஊத காட்டுக்குள் இருந்து போர்க்கூச்சலுடன் கௌரவப்படைகள் படைக்கலங்களுடன் சீரான வரிசைகளாக இறங்கி அனலெரியும் கோட்டைமுற்றம் நோக்கி வந்தன. துறைமேடையில் எரிந்த பெருந்தடிகள் நீரில் அடர்ந்து ஓசையுடன் விழுந்து எரிந்தபடியே மிதந்து சென்றன. எரியாத தடிகளில் மிதித்து குதிரைகள் தழல்நடுவே பாய்ந்து சென்றன.
கர்ணனின் வெண்ணிறமான குதிரை தழலின் செந்நிறத்தில் தானும் தழலாக தெரிந்தது. தழல் நுனி போல அதன் சரவால் சுழன்று பறந்தது. பறவை போல பாய்ந்து நெருப்பலைகளைக் கடந்து சென்ற அதன்மேல் குதிரைவிலாவில் நுனி ஊன்றி இடக்கையால் பற்றி நிறுத்தப்பட்ட வில்லும் வலக்கையில் அம்புமாக குழல் பறக்க அவன் அமர்ந்திருந்தான். அவன் ஒளியில் திரும்பியபோது காதுமடல்களில் இரு செந்நிற மணிக்குண்டலங்களை பூரிசிரவஸ் கண்டான்.
அனைத்து வெண்முரசு விவாதங்களும்