வெண்முகில் நகரம் - 35
பகுதி 8 : நச்சு முள் – 4
பூரிசிரவஸ் காவல்மாடத்தைவிட்டு கீழே வந்தபோது தன் உடலை கால்கள் தாங்காத அளவுக்கு களைத்திருந்தான். படிகளின் முன்னால் நின்று சேவகனிடம் குதிரையை கொண்டுவரும்படி அவனால் கையசைக்கவே முடிந்தது. ஏறிக்கொண்டு குதிகாலால் மெல்லத்தொட்டபோதே அவன் எண்ணத்தை உணர்ந்துகொண்டதுபோல அது மெல்ல எதிர்த்திசை நோக்கி செல்லத் தொடங்கியது. படையணிவரிசைகளைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது அவன் சூழலை சற்றும் உணரவில்லை. அவனைச் சுற்றி ஓசைகள் அடங்கிக்கொண்டிருந்தன. படைகள் குழம்பித்தேங்கின. ஆணைகள் பல திசைகளிலும் ஒலித்துக்கொண்டிருந்தன.
சுருதசன்மர் அவனுக்கு எதிரே வந்து அழைத்தபோதுதான் அவரைக்கண்டான். “பால்ஹிகரே, தாங்கள் அங்கநாட்டரசரிடம் மேலே சென்று சொன்ன செய்தி என்ன?” என்றார். “என்ன?” என்று பூரிசிரவஸ் கேட்டான். அவர் மீண்டும் சொன்னபோதே அவன் அகம் விழித்துக்கொண்டது. “ஏன், என்ன ஆயிற்று?” என்றான். “படைப்புறப்பாட்டை நிறுத்தும்படி அங்கர் ஆணையிட்டுச் சென்றிருக்கிறார். படகிலேற்றிய படைகள் இறங்கிவிட்டன. ஆவசக்கரங்கள் முன்னரே ஏறிவிட்டன. அவற்றை இறக்குவது எளிதல்ல. படைத்தலைவர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள்.”
மெல்லிய நிறைவு ஒன்று பூரிசிரவஸ் உள்ளத்திலெழுந்தது. மறுகணமே அதை தன்கசப்பு வென்றது. “நானறியேன். என்னிடம் அவர் ஏதும் சொல்லவில்லை. நானறியாத செய்தியேதும் அவருக்கு வந்திருக்கக்கூடும்” என்றபின் குதிரையை காலணைத்தான். அது முன்காலைத்தூக்கி மெல்ல கனைத்தபின் வால்சுழற்றிக்கொண்டு சுருள்பாதையில் ஏறி மேலே சென்றது. அவன் முதுகுக்குப்பின் படைகளின் ஓசை அடங்கி பின்னகர்ந்தது. மேலே செல்லச்செல்ல அவன் உடல் வியர்த்து தளர்ந்து குதிரைமேல் நனைந்த துணிச்சுருளென ஒட்டிக்கொண்டது.
மாளிகை முன் இறங்கி உள்ளே செல்லும்போது இடைநாழி நெடும்பாதையென நீண்டு கிடப்பதாக உணர்ந்தான். படுக்கையில் படுத்துக்கொண்டு மரத்தாலான கூரையின் சட்டங்களை நோக்கிக்கொண்டிருந்தான். பின் கண்களை மூடிக்கொண்டு பனிப்புகை பரவிய பிரேமையின் மலைச்சரிவை நினைவுகூர முயன்றான். ஆனால் சிபிநாட்டு செம்பாலைநிலம்தான் விழிக்குள் விரிந்தது. புரண்டுபடுத்து சில கணங்கள் விழிவிரித்து நோக்கியபின் மீண்டும் நினைவை அழுத்தி அங்கே கொண்டுசென்றான். இம்முறை விஜயையின் சிரிக்கும் சிறியவிழிகள். செவ்விதழ்களின் சுழிப்பு.
எழுந்து அமர்ந்து தலையை அடித்துக்கொண்டான். அந்தத் தவிப்பு ஒருபக்கம் ஓட மறுபக்கம் கர்ணன் என்ன சொல்லியிருப்பான் என்ற எண்ணம் ஓடியது. மீண்டும் படுத்துக்கொண்டான். கண்களுக்குள் சிபிநாட்டு செம்மஞ்சள் மலைகள். மலைகளின் நடுவே பாதத்தடம். மிகப்பெரிய பாதம் அது. எடையுடன் மணலில் பதிந்தது. அவன் ஆவலுடன் மலைகளின் வளைவுகளை கடந்து கடந்துசென்று விஜயையின் சிரிப்பை கேட்டான். விஜயையா? அவளுடைய பாதங்கள் மிகச்சிறியவை அல்லவா? மீண்டும் விழித்துக்கொண்டான். எழுந்து நீர் அருந்திவிட்டு படுத்தான்.
தொலைவில் முரசு ஒன்று முழங்கியது. போர்முரசா? அது ஏன் இப்போது ஒலிக்கிறது? இது குளிர்காலம். மலைகளெல்லாம் பனிப்போர்வைக்குள் ஆழ்ந்துவிட்டன. பனிவிரிசலிடும் ஒலியன்றி வேறேதுமில்லை. நான் இதோ சின்னஞ்சிறிய மரவீட்டின் அறைக்குள் பிரேமையின் பெரிய கைகளுக்குள் இருக்கிறேன். பெரிய தோள்கள். பெரிய முலைகள். சிறிய முலைக்குமிழ்கள். ஆனால் அவை கரியவை. அவன் திடுக்கிட்டு எழுந்துகொண்டான். அவன் உடலை வியர்வை மூடியிருந்தது.
நெடுநேரமாகிவிட்டதென்று ஒருகணம் தோன்றினாலும் சித்தம் தெளிந்தபோது அரைநாழிகைக்குள்தான் ஆகியிருக்குமென அறிந்தான். கதவருகே மெல்லிய உடலசைவு. சேவகனை அவன் ஏறிட்டதும் அவன் தலைவணங்கி “இளவரசி தங்களை பார்க்க விழைகிறார்கள்” என்றான். எழுந்துகொண்டு “இதோ சித்தமாகிறேன்” என்றான். முகத்தில் நீரை அள்ளிவிட்டுக்கொண்டிருந்தபோது மெல்லிய நிறைவொன்றை உணர்ந்தான். இப்போது அவள்முன் வெற்றிபெற்றவனாக சென்று நிற்கமுடியும்.
அதே சிற்றறைக்குள் சாளரத்தருகே அவள் நின்றிருந்தாள். கீழே எதையோ நோக்கிக்கொண்டிருந்தவள் திரும்பி “வருக இளவரசே!” என்றாள். அமரும்படி கைகாட்டி அவன் அமர்ந்தபின் தானும் அமர்ந்தாள். “சற்று ஓய்வெடுத்தேன்” என்றான் பூரிசிரவஸ். “அங்கநாட்டரசரை இப்போர் அவரது வீண்வஞ்சத்திற்காக மட்டுமே நடத்தப்படுவது என உணரும்படி செய்தேன்.”
துச்சளை “அதற்காக நான் தங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்…” என்றாள். “அங்கர் போரை நிறுத்திவிட்டார் என அறிந்ததும் உங்களிடம் பேசவிழைந்தேன். துயில்கொள்வதாக சொன்னார்கள். தமையனை பார்க்கச்சென்றேன். அதற்குள் அனைத்தும் மாறிவிட்டன.” பூரிசிரவஸ் புருவம் சுருக்கினான். “தமையன் படைநகர்வுக்கு ஆணையிட்டுவிட்டார். ராதேயர் வரவில்லை என்றால் தானே படைகொண்டு செல்வதாக சொல்லிவிட்டார். இப்போது படைகள் படகுகளில் ஏறிக்கொண்டிருக்கின்றன.”
அதை தன் அகம் எதிர்பார்த்திருந்தது என்பதை பூரிசிரவஸ் அப்போது உணர்ந்தான். கணிகரின் சொற்கள் நினைவுக்கு வந்ததும் அவனால் அமரமுடியவில்லை. நிலைகொள்ளாமல் எழுந்து சாளரம் நோக்கிச் சென்று கீழே பார்த்தான். படைகள் சீராக சென்றுகொண்டிருந்தன. துச்சளை எழுந்து “இனிமேல் போரை தவிர்க்கமுடியாது பால்ஹிகரே. மூன்றுபடைகளும் கிளம்பிவிட்டன. என் உடன்பிறந்தார் களத்தில் படைக்கலம் கோர்ப்பது உறுதி” என்றாள். அவன் எழுந்ததுமே அவளும் எழுந்தது அவனுக்குள் இனிய நிறைவொன்றை அளித்தது. அஸ்தினபுரியின் அவையில் அவள் காலடியில் பணிந்துநிற்கும் சிறுநாட்டரசர்களில் ஒருவனல்ல அவன் என்றது அச்செய்கை.
பூரிசிரவஸ் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். துச்சளை “இப்போரில் எவர்கொல்லப்பட்டாலும் இழப்பவள் நானே” என்றாள். அவள் கழுத்து அசைந்தது. கீழுதட்டை கடித்தபடி விழிகளை திருப்பிக்கொண்டாள். நெற்றியில் சுருண்டு ஆடிய புரிகுழலை அவன் நோக்கினான். அழுகையை வெல்ல அவள் பலமுறை வாய்நீரை விழுங்கினாள். பெருமூச்சில் உருள்முலைகள் எழுந்தமைந்தன. “அதைப்பற்றி அஞ்சவேண்டாமென எண்ணுகிறேன் இளவரசி” என்றான் பூரிசிரவஸ். “ஏன்?” என்றாள். “கௌரவர் எவரும் கொல்லப்படமாட்டார்கள். ஏனென்றால் மறுபக்கமிருப்பவர் தருமர்” என்றான்.
“ஆம், அதை அறிவேன்” என்றாள். “ஆனால் அவர்கள் கொல்லப்பட்டாலும் என் துயர் நிகரானதே.” பூரிசிரவஸ் அவளை நோக்கி சிலகணங்கள் தயங்கியபின் “பாண்டவர்களிலும் எவரும் இறக்கப்போவதில்லை” என்றான். “ஏன்?” என்றாள் அவள். “தருமர் இறந்துவிட்டதாகவே என் தமையன் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்…” பூரிசிரவஸ் மேலும் தயங்கி “ஆனால்” என்றபின் முடிவுசெய்து “இப்பக்கம் இருப்பது பார்த்தனின் ஆடிப்பாவை” என்றான். அவள் நிமிர்ந்து அவன் விழிகளை சந்தித்தாள். அவள் தோள்களில் படர்ந்த புல்லரிப்பின் புள்ளிகளை கண்டான்.
மெல்ல அவள் இதழ்கள் பிரிந்து வெண்பல் நுனிகள் தெரிந்தன. தலை அசைந்து ஒரு சொல் ஊறி வருவது தெரிந்தது. அரக்குநிற இதழ்களுக்கு அப்பால் அச்சொல் மடிந்தது. அவள் தன் மேலாடையை எடுத்து முன்பக்கம் விட்டுக்கொண்டு பெருமூச்சுவிட்டாள். “அவ்வண்ணமே ஆகட்டும்… இந்த நாடகம் எதை நோக்கி செல்கிறதென யாரறிவார்!” என்றாள். பூரிசிரவஸ் “நல்லது நிகழும் என நினைப்போம்” என்றான். “எனக்காக போர்க்களத்திலிருங்கள் பால்ஹிகரே. போரின் முடிவில் என் தமையன்கள் அனைவரும் உயிருடனிருக்கவேண்டும்… அதையன்றி எதையும் எண்ணமுடியவில்லை என்னால்” என்றாள்.
“என் கடமை” என்றான் பூரிசிரவஸ். அவள் இதழ்களும் விழிகளும் புன்னகையில் ஒளிகொண்டன. “நான் தங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்” என்றாள். “நான் அஸ்தினபுரியின் சிற்றரசர்களில் ஒருவன். நீங்கள் என் தலைக்குமேல் கழல் வைக்கும் பேரரசி” என்றான். அவள் முகம் தழலொளிபட்ட கற்சிலையென சிவந்தது. “காலம் வரட்டும்…” என்றாள். என்ன பொருளில் சொன்னாள் என அவன் அகம் வியந்தது. விழிகளில் நகைப்பின் ஒளி வெள்ளிநாணயம் திரும்புவது போல மாறுபட்டது. “தேவிகை விஜயை என்றெல்லாம் சொல்கிறார்கள் ஒற்றர்கள்” என்றாள்.
அவன் திடுக்கிட்டு “இல்லை” என்றபின் “நான்…” என்றான். அவள் வெள்ளியொலியுடன் சிரித்து “பேரரசருக்குரிய திட்டங்களுடன் இருக்கிறீர்கள்… வாழ்க!” என்றபின் “பால்ஹிகநாட்டிலிருந்து எவர் வந்தாலும் உடனே அரண்மனைக்கு அழைத்துவரச்சொல்வார் எந்தை. அவர்களுடன் தோள்தொடுப்பார். பெருந்தோளும் வெண்ணிறமும் கொண்டவர்களையே நான் பால்ஹிகர்களாக எண்ணியிருந்தேன்” என்றாள். பூரிசிரவஸ் “அப்படி அல்லாதவர்களும் அங்குண்டு… என்னைப்போல” என்றான். “அதை சூதர்கள் சொல்லவில்லை” என்றாள்.
பூரிசிரவஸ் “என்னைப்பற்றி சூதர்கள் சொன்னார்களா? தங்களிடமா?” என்றான். அவள் புன்னகைத்து திரும்பி வெளியே சென்றாள். அவன் அவள் சுருண்டகுழலின் அலையசைவை நோக்கியபடி நின்றான். பின்னர் நீள்மூச்சுடன் மீண்டு சாளரத்தை நோக்கிச் சென்று வெளியே நோக்கினான். படைகளில் பெரும்பகுதி படகுகளுக்குச் சென்றுவிட்டதென்று தெரிந்தது. மிகமெலிதாக துறையகன்று நீரேகும் படகொன்றின் சங்குப் பிளிறலோசை கேட்டது.
என்னசெய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. எப்போதும் போல அத்தருணத்தில் முதலில் தோன்றிய எண்ணம் புரவியில் ஏறிக்கொண்டு விரைந்து விலகிச்சென்று தன் மலைநகரை அடைவது மட்டுமே. மலைநகரல்ல, அதற்கும் மேல் வெண்பனிச்சரிவு. சிறுமரக்குடில் உடல்வெம்மை ஏற்று மென்தசைக்கதுப்பாகவே ஆகிவிட்டிருக்கும் கம்பளிகள். அமைதி. பிறிதொன்றிலாத அமைதி. அமைதி அமைதி என ஓசையிடும் காற்று. அமைதி என்று உச்சரிக்கும் மரங்கள். அமைதியென காட்சிதரும் மலைப்பாறைகள். அமைதியாலான மலைமுடியடுக்குகள். அமைதிப்பெருவெளியான வானம். ஏன் இங்கு வந்தேன்? என்ன செய்துகொண்டிருக்கிறேன்?
பெருமூச்சுடன் அவன் உடைவாளை தொட்டுப்பார்த்தான். சேவகன் எட்டிப்பார்த்து “இளவரசே, தங்களுக்காக புரவி காத்திருக்கிறது” என்றான். “புரவியா?” என்றான் பூரிசிரவஸ். “ஆம், மூத்த இளவரசர் கிளம்பிவிட்டார். தங்களை உடனே படகுக்கு வரச்சொன்னார். தங்கள் கவசங்கள் சித்தமாக உள்ளன.” பூரிசிரவஸ் புன்னகைசெய்தான். பெருக்கில் விழுந்தவன் நீந்துவதென்பது மூழ்காமலிருக்கும்பொருட்டே.
பூரிசிரவஸ் படையறைக்குச் சென்றபோது அங்கே நான்குசேவகர்கள் அவனுக்கான கவசங்களுடன் காத்திருந்தனர். அவன் உடலளவை அவர்கள் முன்னரே விழிகளால் மதிப்பிட்டிருந்தமையால் அவை அவனுக்கு மிகப்பொருத்தமாக இருந்தது பார்வைக்கே தெரிந்தது. ஆமையோடால் ஆன மார்புக்கவசம். தோள்களில் இருந்து கைவரை இரும்புச்சங்கிலிகளால் நெய்யப்பட்ட வலைக்கவசம். தலைக்கு இரும்புக்கவசம். களப்போருக்கான நீண்ட உடைவாள். தோளுக்குமேல் வளைந்து எழுந்து நின்ற இரும்பு வில். ஆவநாழி. அதில் கூர்நுனிகளைக் கவிழ்த்து இறகுவால் கட்டிச் செறிந்திருந்த அம்புகள். ஆம், போர்!
அவன் அமர்ந்துகொண்டதும் அவர்கள் கவசங்களை அணிவித்தனர். வாளுடன் எழுந்துகொண்டு அவன் தன்னை ஆடியில் நோக்கினான். அங்கே நின்றிருந்த உருவம் இரும்பாலானதாக இருந்தது. இரும்பு அவனை உண்டுவிட்டது. தன் பணிக்கு அவன் ஆன்மாவை எடுத்துக்கொண்டுவிட்டது. ”இளவரசே, தங்கள் வில்” என்றான் சேவகன். அதை வாங்கிக்கொண்டு அவன் இடைநாழியில் நடந்தான்.
இரும்புக்குறடுகள் மரத்தரையை மோதி ஒலியெழுப்பின. மானுட ஓசை அல்ல அது. குளம்புகனத்த காட்டெருமை போல. அவன் நடையே அல்ல. அவன் கால்களல்ல. அவன் தோள்களல்ல. அவன் நடக்கையில் நடப்பது அவனல்ல. படிகளில் இறங்கி முற்றத்திற்கு வந்தபோது அவன் அந்த இரும்புடலாக மாறிவிட்டிருந்தான். அந்த நடையின் சீர்மை அவன் சிந்தையை ஆண்டது. மண்ணில் வாழும் எவ்வுயிருக்கும் அப்பால் வாழும் பேருயிரென உணரச்செய்தது. வாழ்நாளில் ஒருபோதும் அதற்கிணையான ஆணவத்தை அவன் தன் உடலால் உணர்ந்ததில்லை.
அவன் எடைமிகுந்திருந்தான். அத்தனை எடையுடனும் மண்மேல் அழுந்தினான். இருக்கிறேன், இங்கிருக்கிறேன் என்றது சித்தம். நான் நான் என்றது உள்ளம். வாழ்நாளில் ஒருபோதும் அவன் அத்தனை வலுவாக மண்மீது இருந்ததில்லை. ஒவ்வொரு நடையிலும் குறடுகள் நான் நான் என்றன. கவசங்கள் நான் நானென்று அசைந்தன. இப்போது இப்புவியில் நானன்றி பிறிதில்லை. பிறிதொன்றை நான் ஒப்பமாட்டேன். பிறிதைக் கொன்று குதறி அழிப்பதனூடாகவே நான் வளரமுடியும். நான்குபக்கமும் பெருகி வழிந்தோடி இப்புவியை நிறைக்கமுடியும். இப்போது நான் தேடுவது குருதியை. வெங்குருதியை. மானுடனை ஆளும் திரவப்பேரனலை.
குருதி குருதி என தன் அகம் ஒலிப்பதை உணர்ந்தான். வெளியே இருள் கவியத்தொடங்கியிருந்தது. பறவைகள் அடர்ந்த குறுமரங்கள் கூச்சலிட்டன. அரண்மனைச் சுவர்களின் இருண்ட முகடுகள் இருள்படர்ந்த வானின் பின்னணியில் இருள்குவைகளாக மாறின. அரண்மனையின் காவல்மாடங்களில் ஒன்றில் மீன்நெய் உருகும் மணமெழ செம்பந்தம் விழிதிறந்தது. பின் ஒவ்வொரு காவல்மாடமாக செந்தழல்கள் எழுந்தன. அரண்மனைமாடங்களில் மலைத்தீ என ஒளி பரவியது. குன்றின் சரிவில் பந்தங்கள் எரியத்தொடங்கின. செந்நிற ஒளியாலான படிக்கட்டு ஒன்று வளைந்து கீழே சென்றது. ஒலிகளை இருள் சூழ்ந்துகொண்டு அழுத்தம் மிக்கதாக ஆக்கியது.
பூரிசிரவஸ் குதிரையில் கீழிறங்கிச்சென்றான். பந்த ஒளியில் கவசங்களணிந்து படைக்கலமேந்தி சென்றுகொண்டிருக்கும் அனைவர் விழிகளும் ஒன்றுபோலிருந்தன. எங்கோ அவற்றை நோக்கியிருக்கிறான். எங்கே? ஆம், அவை மதுவுண்டு மதம்நிறைந்து களம்நிற்கும் எருதின் விழிகள். தன் விழிகளும் அதைப்போலிருக்கின்றனவா? இல்லை, நான் என்னையே பதைப்புடன் நோக்கிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கவசமும் படைக்கலமும் ஏந்திச்செல்பவன் பிறிதொருவன். நான் பிரேமையின் மரக்குடில்வாயிலில் திகைத்து வாய்திறந்து நின்றிருக்கிறேன். என் வாயிலினூடாக சென்றுகொண்டிருக்கின்றது இந்தப் பெரும்படை. இந்த வரலாறு. இந்தக்காலப்பேரொழுக்கு.
கோட்டைக்கு வெளியே தசசக்கரத்தின் படித்துறையில் இரண்டு பெரும்படகுகள் நின்றன. முதற்படகின் பாய் பந்த ஒளியில் இருளின் பகைப்புலத்தில் தழல் பற்றி மேலெழுவதுபோல கொடிமரம் மேல் ஏறியது. இருபது பாய்கள் ஒன்றன்மேல் ஒன்றாக ஏறி புடைத்தன. வானேறிய பெருந்தழல் காற்றில் அசைந்தது. கயிறுகள் முனக படகு ஒரு யாழென முறுகியது. பெருமுரசம் கோட்டையில் உறுமியமைய எரியம்பு ஒன்று இருளில் சீறி அணைந்தது. படகு நீரில் எழுந்து இருளுக்குள் செல்லத்தொடங்கியது.
பின்னால் நின்ற படகின் பாய்களின் கயிறுகளை அவிழ்த்துக்கொண்டிருந்தனர். கட்டுண்ட பெரும்பறவை போல பாய்கள் காற்றேற்று திமிறின. சுருதசன்மர் அவனை நோக்கி ஓடிவந்து “நெடுநேரமாக கேட்டுக்கொண்டிருக்கிறார் இளவரசர்” என்றார். பூரிசிரவஸ் தலையசைத்தான். கர்ணனை சந்திப்பதைப்பற்றித்தான் அஞ்சிக்கொண்டிருந்தான். ஆனால் கவசங்களணிந்த பூரிசிரவஸ் அச்சந்திப்பை விழைந்தான். மதம் கொண்டெழும் எதிரியை விழைந்தன அவன் தோள்கள்.
நடைப்பாலத்தில் ஏறி உள்ளே சென்றான். அவன் ஏறிக்கொண்டதுமே ஒற்றைவடத்தால் இழுக்கப்பட்டு வெம்மைமிக்க கலத்தில் நீர்விழுந்து ஆவிஎழுவதுபோல சீறுமொலியுடன் பாய்கள் மேலேறிச்சென்றன. படகின் மேல்தளத்தில் அமரமுனையருகே துரியோதனனின் பீடம் கிடந்தது. அவன் அப்பால் கயிற்றைப்பற்றிக்கொண்டு கங்கையின் இருண்ட அலைகளை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். பூரிசிரவஸ் சென்று அருகே நின்ற அசைவை அவன் அறிந்தும் திரும்பிப்பார்க்கவில்லை.
அப்போதுதான் அவனுக்கு கர்ணனிடம் தான் பேசியது துரியோதனனுக்குத் தெரியுமா என்ற ஐயம் வந்தது. கர்ணன் சொல்லப்போவதில்லை. ஆனால் அதற்குமப்பால் அவர்கள் நடுவே ஏதோ ஓர் உரையாடல் உண்டு. துரியோதனனின் உள்ளத்தின் ஒரு பகுதி கர்ணனின் உள்ளத்துடன் கலந்துவிட்டதுபோல.
துரியோதனன் திரும்பி மீசையை நீவியபடி புன்னகைத்து “உமது முதல்போர் அல்லவா? எப்படி உணர்கிறீர்?” என்றபோது அந்த எளிமையாலேயே அவனுக்குப் புரிந்துவிட்டது அவனுக்குத்தெரியும் என்று. அவன் ஒருகணம் தயங்கினான். அதன் பின் துணிந்து அச்சொற்கோவையை உருவாக்கினான். “இளவரசியிடம் பேசிக்கொண்டிருந்தேன். இப்போரில் எனக்கு ஒரு முதன்மைப்பங்கு உள்ளது என்று சொன்னார்கள். அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவ்வெண்ணமே என்னுள் இருக்கிறது.”
துரியோதனன் விழிகள் சற்றே சுருங்கின. அத்தனை நுண்ணிய குறிப்புகளை அவன் உணர்பவனல்ல என்று பூரிசிரவஸ் புரிந்துகொண்டான். மேலும் சொற்களைக் கோர்த்து “இப்போரை இளவரசி விரும்பவில்லை. இது தன் உடன்பிறந்தவர்களை எதிரெதிரே நிகழ்த்துமென அஞ்சுகிறார்” என்றான். துரியோதனன் “ஆம் என்னிடமும் சொன்னாள்” என்றான். அச்சொற்களும் பொருளாக விரியவில்லை என்று உணர்ந்ததும் பூரிசிரவஸ் சிறு சலிப்பை அடைந்தான். அரசனாகப்போகிறவன் எப்படி அத்தனை சொல்லுணர்வற்றவனாக இருக்கமுடியும்!
“இளவரசியின் ஆணைப்படி நான் அங்கரிடம் இப்போர் தேவையில்லை என்றேன். இது அவரது ஆணவத்தின்பொருட்டு அவர் முன்னெடுப்பதென்றே பொருளாகும் என்றும் பாண்டவர்களிலோ கௌரவர்களிலோ எவர் இறக்கநேரிட்டாலும் அப்பழியை அவரே சுமக்கநேரும் என்றும் சொன்னேன்.” துரியோதனன் மீசையை மீண்டும் நீவியபடி புன்னகைத்து “நீர் சொன்னதனால்தான் கர்ணன் போரைத்தவிர்த்தான் என நான் அறிவேன். ஆனால் இப்போரை நான் அகத்தே நிகழ்த்திவிட்டேன். அது புறத்தில் நிகழ்ந்தாகவேண்டும். அன்றி என்னால் அமைய முடியாது” என்றான்.
பூரிசிரவஸ் தன்னுள் மிக மெல்ல புலியென காலெடுத்துவைத்து முகர்ந்து முன்னகர்ந்து “எவர்முன் இப்போர் நிகழவிருக்கிறது என்று நான் அங்கரிடம் கேட்டேன்” என்றான். துரியோதனன் விழிகளை திருப்பிக்கொண்டு “எல்லாப்போர்களும் ஆணவமெனும் தெய்வத்திற்கான பலிகளே” என்றான். பூரிசிரவஸ் சலிப்புடன் தோள்கள் தொய்ந்தான். துரியோதனனிடம் அதைப்பற்றி பேசமுடியாது என்று தோன்றியது. அவன் தன்னைத்தானே நோக்குபவனல்ல. தன்னுள் முற்றிலும் நிறைந்திருக்கிறான். ஒருதுளியேனும் தன்னிலிருந்து சிந்தாதவனால் தன்னை பார்க்கமுடியாது. அவனுடைய உடலின் முழுமையான நிகர்நிலை எதனால் என்று அவனுக்குப் புரிந்தது.
அதை உணர்ந்தவன் போல துரியோதனன் “ஓடும்படகின் அமரம் காட்டில் பாயும் யானையின் மத்தகம்போல. தேர்ந்த குகர்கள்கூட அதன்மேல் நிற்க அஞ்சுவார்கள். அதன் அசைவுகளுக்கென ஒரு ஒழுங்கு உருவாவதே இல்லை. அலைகளுக்கும் படகின் எடைக்கும் பாய்மேல் பொழியும் காற்றுக்கும் இடையேயான முடிவற்ற உரையாடல் அது. அதன் மேல் நிற்பவன் சற்று அடிசறுக்கினாலும் கீழே படகின் கூர்மூக்கின் முன் விழுந்து கிழிபடுவான். ஆனால் நான் அதன்மேல் நிற்பதையே விரும்புவேன். கைகளால் எதையும் பற்றிக்கொள்ளவேண்டியதில்லை” என்றான்.
பூரிசிரவஸ் “ஆம், தங்கள் உடல் முற்றிலும் நிகர்நிலைகொண்டிருக்கிறது இளவரசே” என்றான். துரியோதனன் விழிகள் மாறுபட்டன. அவன் அதைப்பற்றி பேசவிரும்பவில்லை என்று தோன்றியது. ஆனால் உடனே அவன் “இளமையில் ஸ்தூனகர்ணன் என்னும் தேவனின் ஆலயத்திற்கு வழிதவறிச்சென்று அங்குள்ள குளத்தருகே மயங்கி விழுந்தேன். மீண்டுவந்தபோது என் உடல் முற்றிலும் நிகர்நிலை கொண்டுவிட்டது என்றார்கள்” என்றான். பூரிசிரவஸ் புன்னகைத்தான். சொல்லவிரும்பவில்லை என்றாலும் சொல்லாமலிருக்க முடியாத பேரரரசன் மண்ணில் நிகழவிருக்கிறான்.
துரியோதனன் “நீர் கர்ணனிடம் பேசும்” என்றான். பூரிசிரவஸ் “அவர் நான் சொன்ன சொற்களை கடந்திருப்பார்” என்றான். “ஏன்?” என்றான் துரியோதனன். “இக்கவசங்களை அணிந்தபின் எவரும் போர்பற்றி மட்டுமே எண்ணமுடியும்.” துரியோதனன் உரக்க நகைத்து “ஆம், அது உண்மை…” என்றான். “இன்னும் மூன்றுநாழிகையில் நாம் காம்பில்யத்தை அடைவோம். அஸ்வத்தாமனின் படைகளும் ஜயத்ரதனின் படைகளும் வந்துவிட்டன.”
குறடுகளின் எடைமிக்க ஒலியுடன் துச்சாதனன் வந்து நின்றான். துரியோதனன் திரும்பி “நான் உணவுண்ணவில்லை. படகிலேயே உண்ணலாமென எண்ணினேன்” என்றான். பூரிசிரவஸ் “நான் உண்டுவிட்டேன். இப்போது உண்ணும் நிலையில் இல்லை” என்றான். “சிறந்த போருக்கு முன் உண்டு உறங்குவது நன்று என்பார்கள்” என்றான் துரியோதனன். பூரிசிரவஸ் “என்னால் உறங்கமுடியுமென்று தோன்றவில்லை” என்றான். “முதல்போருக்கு முன் எவரும் உறங்குவதில்லை….” என்றபின் துரியோதனன் உள்ளே சென்றான்.
பூரிசிரவஸ் அமரமுனையருகே சென்று வடத்தைப்பற்றியபடி நின்றுகொண்டான். வாள்முனை என நீரை கிழித்துச்சென்றுகொண்டிருந்தது படகுமுகப்பு. மலர்போல சுழன்று நின்ற பாய்கள் எதிர்க்காற்றை வாங்கி படகை காற்றடித்த திசைக்கே சுழற்றிக்கொண்டுசென்றன. இருளுக்குள் செல்லும் படகுகளை காணமுடியவில்லை. அலைகளில் எழுந்தமைந்தபோது ஒரே ஒருமுறை அருகே சென்றபடகின் பாய்க்கொத்தை மட்டும் பார்த்தான். காற்று பாய்களில் மோதி கீழே பொழிந்து சுழன்றது. அவன் சால்வை எழுந்து முன்பக்கமாக பறந்தது. அவன் பிடிப்பதற்குள் பின்னோக்கி எழுந்தது.
கால்கள் தளர்ந்தபோது கிடைமட்டமாகச் சென்ற பெரிய வடம் மேல் அமர்ந்துகொண்டான். சிலகணங்கள் துயில் வந்து தலை சற்று சரிந்தது. அவன் தலை துண்டாகி கீழே கிடப்பதைக் கண்டான். போர்க்கூச்சல்கள் சூழ ஒலித்தன. “அவன் மலைமகனாகிய பூரிசிரவஸ். தலையைக்கொய்து களத்திலிட்டிருக்கிறார்கள்” என எவரோ சொன்னார்கள். “கைகளை துண்டித்தவன் எவன்?” என்று இன்னொரு குரல். “முன்னரே பிறையம்பால் அவன் கைகள் வெட்டுபட்டிருந்தன” என்றது பிறிதொரு குரல். புலி ஒன்று மெல்ல அவனை நோக்கி வந்து முகம் தாழ்த்தி அவன் கழுத்தின் வெட்டிலிருந்து ஒழுகிய குருதியை நக்கியது. மெல்ல உறுமியது.
விழித்துக்கொண்டான். பாய் திரும்ப வடம் உறுமிக்கொண்டிருந்தது. பெருமூச்சுடன் எழுந்து கைகளை விரித்து உடலை நிமிர்த்திக்கொண்டு வானை நோக்கினான். விண்மீன்களின் பெருக்கு ஒழுகிக்கொண்டிருந்தது. அத்தனை விண்மீன்களும் சென்று எங்கோ அருவியாக கொட்டப்போகின்றன. அவன் இருளில் புன்னகைசெய்துகொண்டான். தொடர்பில்லாமல் துச்சளையின் முகம் நினைவுக்கு வந்தது. இருளே பெண்ணாகி வந்ததுபோல. கரியநிறம் போல தோலை அழகாக்குவது பிறிதில்லை. இந்த இருளில் அவள் நின்றிருந்தால் விழிகளின் ஒளியை மட்டுமே காணமுடியும். அதைச் சொன்னால் அவள் பற்களும் ஒளிரக்கூடும்.
அந்த எண்ணத்தை எவரோ பார்த்துவிடுவார்களென்று அஞ்சியவன் போல அவன் திரும்பி நோக்கினான். திசையுருளையில் அமர்ந்திருந்த நான்கு குகர்கள் கைகளை தளரவிட்டு நீர்வெளியை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தனர். எங்கோ கட்டப்பட்டிருந்த உலோகப்பொருள் ஒன்று குலுங்கிக்கொண்டிருந்தது. ஒரு சொல். அல்லது ஒரு சிரிப்பு. அகஎழுச்சி கொண்ட கன்னியின் கிளுகிளுப்பு.
அவன் அமரம் வரை நடந்தான். மீண்டும் வந்து அந்த பாய்க்கயிற்றில் அமர்ந்துகொண்டான். நெடுநேரமாகியிருக்கிறது என்று தோன்றியது. ஆனால் விண்மீன்கள் ஒருநாழிகைகூட கடக்கவில்லை என்றே காட்டின. போரில் காலமில்லை என்று கேள்விப்பட்டிருந்தான். போருக்கு முன் அது விரிந்து விரிந்து கிடக்கும்போலும்.
காலடியோசையிலேயே அது கர்ணன் என அவன் அறிந்துவிட்டான். அவன் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. அமர்ந்திருக்க முடியாமல் எழுந்து நின்றான். அறியாமலேயே கை நீண்டு வடத்தைப்பற்றிக்கொண்டது. படகின் அடிக்குவையில் இருந்து சிறிய படிகள் வழியாக ஏறி மேலே வந்த கர்ணன் அவன் அங்கிருப்பதை முன்னரே அறிந்திருந்தான். அவன் அருகே வந்தபோது தனக்காகவே அவன் வருவதையும் பூரிசிரவஸ் அறிந்துகொண்டான். அவன் நா உலர்ந்தது.
துரியோதனனின் பீடத்தை இயல்பாக இழுத்துப்போட்டு அதில் கர்ணன் அமர்ந்துகொண்டபோது பூரிசிரவஸ் திகைத்தான். எந்த அரசிலும் அது அரசனுக்கு செய்யப்பட்ட அவமதிப்பாகவே கருதப்படும். ஆனால் கர்ணன் அதைப்பற்றி எண்ணியதாகவே தெரியவில்லை. அவனை நிமிர்ந்து நோக்கியபோது அவன் திகைப்பும் அவனுக்குப்புரியவில்லை. அதை தன் கோணத்தில் புரிந்துகொண்டு “நான் உமது மூத்த உடன்பிறந்தான் என எடுத்துக்கொள்ளும். ஆகவே உம்மை அறைந்ததற்காக நான் பிழைகோரப்போவதில்லை” என்றான்.
பூரிசிரவஸ் “அது என் நல்லூழ் மூத்தவரே” என்று குனிந்து கர்ணனின் கால்களை தொட்டான். அவன் தலையைத் தொட்டு “வெற்றியும் சிறப்பும் திகழ்க!” என கர்ணன் வாழ்த்தினான். ”நானே பிழைகோரவேண்டியவன் மூத்தவரே. என் துடிப்பில் எல்லைமீறிவிட்டேன்” என்றான் பூரிசிரவஸ். “இல்லை. நீ செய்தது சரிதான். நீ சொன்ன சொற்களால்தான் நான் பின்னடைந்தேன். இது இப்போது குருகுலத்து இளவரசின் போர். நான் அவன் தோழன்” என்றான் கர்ணன். “இப்போரை நானே முன்னெடுத்திருக்கக் கூடாது. அது பிழை. அதன்பொருட்டு உனக்கு நான் நன்றிகூறவேண்டும்.”
பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லாமல் நின்றான். “நான் என்றும் விழைவது தருமனின் அறநிலையையும் பார்த்தனின் பற்றின்மையையும்தான் இளையோனே. அது எனக்கு வாய்ப்பதேயில்லை” என்று கர்ணன் பெருமூச்சுவிட்டான். “துதிக்கையில் புண்பட்ட யானை என்று என்னை ஒரு சூதன் பாடுவதை நகருலாவில் கேட்டேன். எத்தனை பொருத்தமான சொல்லாட்சி!”
பூரிசிரவஸ் மெல்ல அசைந்தபோது வடம் அவனை மேலும் தள்ளியது. “ஆறாத புண் என ஒன்றுண்டா மூத்தவரே? இப்புவியில் நீரும் நிலமும் வானும் இனியதாக இருக்கையில் துயரைச் சுமந்தலையும் உரிமை மானுடனுக்கு உண்டா?” என்றான். கர்ணன் “அந்த வினாவை நூறாயிரம் முறை நானே எனக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறேன் இளையோனே. ஆனால் அதற்கும் நூல்கள் விடை சொல்கின்றன. ஆதிபௌதிகம் என்று நூல்கள் வகுக்கும் இவ்வுலகத் துயர்களனைத்தையும் மானுடன் வெல்லலாம். ஆதிதெய்வீகத் துயர் அவனை ஆட்டிவைக்கும் தெய்வங்களின் சித்தம். அதை ஒன்றும் செய்யமுடியாது” என்றான்.
“என் மலைநகருக்கு வாருங்கள்… அல்லது என்னுடன் இமயத்தின் மலையடுக்குகள் ஒன்றுக்கு வாருங்கள். வானம் போல மண்ணும் விரிந்திருப்பதை காண்பீர்கள். இப்புவியில் நாமடையும் வெற்றியையும் தோல்வியையும் உவகையையும் துயரையும் பொருளில்லாதவையாக ஆக்கும் அமைதிப்பேருருக்களான மலையடுக்குகளை காண்பீர்கள்.” கர்ணன் ஏறிட்டு நோக்கி புன்னகைசெய்தான். இருளில் அந்தப்புன்னகை ஒரு அரிய வெண்மலர் என விரிந்தது. “ஆம், ஒருநாள் வருகிறேன். வருவேன், இளையோனே” என்றான்.
பின்னர் இருவரும் சற்றுநேரம் இருளென அலையடித்த நீரை நோக்கியிருந்தனர். கர்ணன் தலையை திருப்பாமல் நீரை நோக்கியபடி “நீ கேட்டதை எனக்குள் எழுப்பிக்கொண்டேன். எவர்முன் ஆடவிழைகிறேன்?” என்றான். பூரிசிரவஸ் காத்திருந்தான். “அவள் முன்…” என்றான் கர்ணன். “அதை அறியாத ஒரு படைவீரன் கூட இங்கிருப்பான் என்று தோன்றவில்லை.” பூரிசிரவஸ் ஏதோ பேச முனைந்தான். ஆனால் தொண்டை கட்டியிருந்தது.
“இளையோனே, அவள் எனக்கு யார்? அதை நூறுநூறாயிரம் கோணங்களில் வினவிக்கொண்டேன். ஒவ்வொரு விடையையும் உதிர்த்துவிட்டு மேலே செல்லவே தோன்றியது. நீ சொன்ன சொற்களை எண்ணிக்கொண்டேன். நீ எனக்கு சொல்லமுடியும் அதற்கான விடையை என்று தோன்றியது.” பூரிசிரவஸ் “நான் எளியவன்… இனி என் தமையனின் அகத்தே நுழையும் உரிமையும் எனக்கில்லை” என்றான். “நீ என் நெஞ்சில் மிதிக்கலாம்” என்றான் கர்ணன். படகு மெல்ல வளைந்தது. நேர் எதிரே தெரிந்த நிழல்மரக்கூட்டங்களான காடு வளைந்தோடி ஒதுங்கியது. வடங்கள் நூற்றுக்கணக்கான புலிகள் என உறுமிக்கொண்டன.
அனைத்து வெண்முரசு விவாதங்களும்