வெண்முகில் நகரம் - 21
பகுதி 7 : மலைகளின் மடி – 2
நீளச்சரடுகளாக கிழிக்கப்பட்டு வெயிலில் உலர்த்தி சுக்காக்கி உப்புடன் அழுந்தச் சுருட்டி உலர்ந்த இலைகளால் கட்டப்பட்டு மேலே தேன்மெழுகு பூசி காற்றுபுகாத பெரிய உருளைகளாக ஆக்கப்பட்ட கன்றின் இறைச்சி நார்க்கூடைகளில் அடுக்கப்பட்டிருந்தது. அவற்றை எடுத்துச்சென்று உடைத்து இலைப்பொதிகளை விரித்தபோது உப்புடன் மடித்துப்போன ஊன்நாற்றம் எழுந்தது. அவற்றை எடுத்து நீட்டியபோது சடைமுடிக்கற்றைகளைப்போல் இருந்தன.
மரவுரியால் அவற்றின்மேல் படிந்திருந்த உப்பை அழுத்தித்துடைத்து எடுத்தனர். நீண்ட கம்பிகளில் அவற்றைக் கோர்த்து எரிந்துகொண்டிருந்த நெருப்புக்குமேல் வைத்தபோது உப்பு வெடித்து பின் கொழுப்புடன் சேர்ந்து உருகி இறைச்சியில் ஊறியது. இறைச்சியிலிருந்து உருகிவிழுந்த கொழுப்பில் அனல் நீலமாகி எழுந்து துப்புவதுபோல ஒலியெழுப்பியது. இரு சமையற்காரர்கள் புரட்டிப்புரட்டி ஊனுலர்வை சுட்டனர். ஊன் மணம் காற்றில் எழுந்து பரவ நெடுந்தொலைவில் பசித்த ஓநாய் ஒன்று நீளமாக ஊளையிட்டது.
பூரிசிரவஸ் அந்த கொடும்பசியை எண்ணிக்கொண்டான். அவர்களுடன் வந்த எவரேனும் ஒருவர் அங்கே செத்துவிழுந்தால் அந்த ஓநாய்கள் மேலும் சிலகாலம் வாழக்கூடும் என்று தோன்றியதும் புன்னகைத்து ஏன் அது தானாக இருக்கக் கூடாது என்று நினைத்தான். அரசகுலத்தவர் எப்போதும் பிறரது இறப்பையே எண்ணுகிறார்கள். அவன் அந்நினைப்பை அழித்து ஒரு புரவி இறப்பதைப்பற்றி நினைத்தான். பின்னர் மீண்டும் புன்னகைத்தான். ஒரு புரவியைக் கொன்று ஓநாய்களை காப்பதில் என்ன இருக்கிறது! அந்த மலைப்பாதை எங்கும் அவர்களுக்காக சுமைதூக்கிய புரவி அது.
அங்கே ஒரு போர் நிகழவேண்டும் என்று மீண்டும் எண்ணிக்கொண்டான். உடல்கள் சரியவேண்டும். ஓநாய்கள் அவற்றை உண்டு கொண்டாடலாம். அதில் அநீதி என ஏதுமில்லை. போர் தெய்வங்களுக்கு பிடித்தமானது. போர்வீரர்கள் போரில் இறப்பதற்கென்றே பிறக்கிறார்கள். அந்நினைவு அறுந்தது. எத்தனை மூடத்தனமான எண்ணம். இறப்பதற்கென்றே பிறப்பு. ஆனால் அந்த எண்ணத்தைத்தான் அரசுசூழ்தலின் முதல் நெறியாக கற்கிறார்கள். அவன் பெருமூச்சு விட்டுக்கொண்டான்.
சுடப்பட்ட ஊனை சிறிய துண்டுகளாக வெட்டி தட்டுகளில் அடுக்கினார்கள். அதுவரை அடிவயிற்றில் எங்கோ இருந்த பசி பற்றி எரிந்து நெஞ்சைக்கவ்வுவது போலிருந்தது. வாயில் ஊறி நிறைந்த எச்சிலை கூட்டி விழுங்கியபின் அதை எவரேனும் பார்த்துவிட்டார்களா என்று நோக்கினான். அவர்கள் அனைவரும் தங்கள் எண்ணங்களில் ஆழ்ந்து வெறும் விழிகளுடன் அமர்ந்திருந்தனர்.
பெரிய கலத்தில் நீர் விட்டு அதில் உலர்ந்த காய்கறிகளைப்போட்டு பருப்புத்தூளும் உப்பும் போட்டு கொதிக்கச்செய்துகொண்டிருந்தனர். காய்கறிகள் வேகத்தொடங்கியபின்னர்தான் அவற்றின் வாசனை எழுந்து எவையென்று காட்டின. கத்தரிக்காயின் இளம்பாசிமணமும் பாகற்காயின் கசப்புமணமும் கலந்து எழுந்தன. சேனைக்கிழங்கு வேகும் மாவு மணம். வாழைக்காய் துண்டுகளும் தாமரைத்தண்டு வளையங்களும் நேரடியாகவே தீயில் சுட்டு எடுக்கப்பட்டன.
எழுந்து சென்று உணவருகே நிற்கவேண்டும் என்ற அகஎழுச்சியை பூரிசிரவஸ் வென்றான். சல்லியர் நிமிர்ந்து நோக்கி “இளையோன் பசித்திருக்கிறான்” என்றார். “ஆம் மாத்ரரே, பசிக்கத் தொடங்கி நெடுநேரமாகிறது” என்றான் பூரிசிரவஸ். ”கொண்டுவரச்சொல்லலாமே… இருட்டிவருகிறது. குளிர் ஏறுவதற்குள் துயில்வது நல்லது” என்றார் சல்லியர். சலன் எழுந்து சமையற்காரர்களை நோக்கி சென்றான். ருக்மாங்கதனும் ருக்மரதனும் உணவுகளை எடுத்து தாலங்களில் வைக்கத்தொடங்கினர்.
பெரிய மரத்தாலங்களில் அவர்களுக்கு உணவு கொண்டு வரப்பட்டது. சுட்டகோதுமை அப்பங்களை காய்கறிக்குழம்பில் தொட்டு உண்டனர். உலர்இறைச்சியை ஊன்கொழுப்புடன் மென்றபோது உள்ளிருந்து அனல் எழுந்து இன்னும் இன்னும் என்று நடமிட்டது. மலைப்பயணத்தில் உணவுக்கிருக்கும் சுவை வேறெங்கும் கிடைப்பதில்லை என்று எண்ணிக்கொண்டான். அரண்மனையில் மாட்டிறைச்சி உண்பதில்லை. ஆட்டிறைச்சிதான். ஆனால் பயணங்களில் மாட்டிறைச்சிதான் எப்போதும். நீள்நாடாக்களாக உலரவைக்க ஏற்றது. நெடுநேரம் வயிற்றில் நின்று பசியை வெல்வது. கொழுப்பு நிறைந்தது.
தீயில் பெரிய இரும்புப் பாத்திரத்தை வைத்து அதில் துண்டுகளாக வெட்டிய பன்றித்தோலை போட்டு வறுத்தனர். கொழுப்பு உருகும் மணம் எழுந்தது. அப்பங்களையும் ஊனையும் தின்றுமுடித்தபோது எருதுக்கொம்புகளில் செய்த குவளைகளில் சூடான இன்னீருடன் பன்றித்தோல் வறுவலை கொண்டு வைத்தனர். உலர்ந்த அத்திப்பழங்களும் இருந்தன. அப்பால் வீரர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. அவர்கள் பேசிக்கொள்ளும் ஒலிகள் கலந்து ஒலித்தன.
உணவு அனைவரையும் எளிதாக்கியது என்று பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டான். துயரமும் கசப்பும் கலந்திருந்த முகங்கள் இளகின. பன்றித்தோல் வறுவலை மென்றபடி சுமித்ரர் “சல்லியரே, இனி பால்ஹிக குலத்தின் மூத்தவர் நீங்கள். நீங்கள் முடிவெடுங்கள். நாம் ஆவதை செய்வோம்” என்றார். “சௌவீர குடிகளிடம் நான் பேசிக்கொள்கிறேன். இனி நாம் ஒன்றாகவேண்டும்.”
சல்லியர் “ஒன்றாகியே தீரவேண்டும்… இல்லையேல் அழிவுதான்” என்றார். “இத்தனைநாட்களாக நம்மை எவரும் மனிதர்களாக எண்ணியதில்லை. இந்த மூளிமலைத்தொடர்களைக் கடந்து வந்து நம்மை வென்று அவர்கள் கொள்வதற்கு ஏதுமில்லை. சப்தசிந்துவையும் பஞ்சகங்கையையும் ஒட்டியிருக்கும் நாடுகளிடமே செல்வம் இருந்தது. அவற்றையே பெரியநாடுகள் வென்று கப்பம் கொண்டன. ஏனென்றால் நதிகளே வணிகப்பாதைகளாக இருந்தன.”
சல்லியர் “ஆனால் இப்போது அப்படி அல்ல” என்றார். “நாம் உத்தரபதத்திற்கு மிக அண்மையில் இருக்கிறோம். பீதர்களின் பட்டுவணிகர்களும் யவனர்களின் பொன்வணிகர்களும் செல்லும் பாதைகளை காக்கிறோம். நமது கருவூலங்களில் பொன் வந்து விழத்தொடங்கியிருக்கிறது. இனி நாம் முன்னைப்போல நமது மலைமடிப்புகளுக்குள் ஒளிந்து வாழமுடியாது. எங்குசென்றாலும் நம்மைத்தேடி வருவார்கள். ஏனென்றால் நாம் எறும்புக்கூடுகளைப்போல கூலமணிகளைச் சேர்த்து வைத்திருக்கிறோம். எத்தனை ஆழத்தில் புதைத்தாலும் நம்மை தோண்டி எடுப்பார்கள். புகையிட்டு வெளியே கொண்டுவருவார்கள். நசுக்கி அழித்து கொள்ளையிட்டுச் செல்வார்கள்” என்றார்.
“சௌவீரரே, அஸ்தினபுரி உங்கள் மேல் படைகொண்டுவந்தது தற்செயல் அல்ல. அவர்கள் நம்மை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். நமது செல்வம் அவர்களுக்கு தெரியவந்துள்ளது. அந்தப்போர் எதன்பொருட்டு செய்யப்பட்டது? பாண்டவர்களின் வீரத்தை அஸ்தினபுரி மக்களுக்குக் காட்ட. அவர்கள் கொண்டுவரும் செல்வத்தை குலச்சபையினருக்கும் வைதிகர்களுக்கும் சூதர்களுக்கும் பகிர்ந்தளித்து அவர்களை வென்றெடுக்க. ஆகவே குறைவான போரில் கூடுதல் செல்வத்தைத் திரட்ட எண்ணினர். உங்களை தேர்ந்தெடுத்தனர்” சல்லியர் தொடர்ந்தார்.
“அது ஒரு தொடக்கம் சௌவீரரே. நமக்கு இருந்த பெரும் கோட்டை என்பது நம்மைச்சூழ்ந்திருக்கும் இந்த வீண்நிலத்தின் விரிவே. இந்த மலைப்பாதைகளில் இத்தனை தொலைவுக்கு வர ஷத்ரியர்களால் இயலாது. வந்தாலும் அதற்குரிய பயனில்லை. ஆனால் அஸ்தினபுரியின் படைகள் வந்து வென்றன. நூறு வண்டிகள் நிறைய செல்வத்தை கொண்டுசென்றன. உண்மையில் கொண்டுசென்ற செல்வத்தைவிட பலமடங்கு செல்வம் கொள்ளையடிக்கப்பட்டதாகவே சூதர்கள் வழியாக பரப்பப்படும். அது பாண்டவர்களின் புகழ்பரப்புவது அல்லவா?”
“பாரதவர்ஷத்தின் அத்தனை அரசர்களும் அச்செய்தியை கேட்பார்கள். கூர்ஜரனும் சிந்துமன்னனும் அறிவார்கள். இன்னும் இன்னும் என கவந்தப்பசி கொண்ட யாதவனின் வளரும் பேரரசு அதை அறியும். ஆகவே இனி வந்தபடியேதான் இருப்பார்கள்” என்றார் சல்லியர். “நாம் ஒன்றாகவேண்டும். ஒருகளத்திலேனும் அவர்களுக்கு பேரிழப்பை அளிக்கவேண்டும். இது எறும்புப்புற்று அல்ல மலைத்தேனீக்கூடு என்று தெரிவிக்கவேண்டும். இல்லையேல் நாம் வாழமுடியாது.”
“சல்லியரே, நாம் இன்றுவரை பயின்ற போர்க்கலை ஒளிந்துகொள்வது அல்லவா? வரலாற்றில் என்றேனும் நாம் போரிட்டிருக்கிறோமா?” என்றார் சோமதத்தர். சல்லியர் பெருமூச்சுடன் “உண்மை, நாம் போரிட்டதே இல்லை. நமது படைகள் படைகளே அல்ல. அவை ஒன்றாகச்சேர்ந்த மலைவேடர் குழுக்கள். நமக்கு ஒன்றாகத் தெரியவில்லை. நம் உடல்கள் ஒன்றாகி படையாகும்போதும் நாம் ஒவ்வொருவரும் தனித்திருக்கிறோம். தனியாகப்போரிட்டு தனியாக இறக்கிறோம். நாம் ஒரு நாடே அல்ல. நாம் ஒரு படையாகவும் ஆகவில்லை” என்றார்.
”சோமதத்தரே, நாம் மலைமக்களின் குருதி. வெறுமை சூடிய இந்த மலைச்சரிவுகளில் உயிர்கள் மிகக்குறைவு. சிற்றுயிர்களை உண்டுவாழும் ஊர்வன. அவற்றை உண்டு வாழும் ஓநாய்கள். பசிவெறிகொண்டு நாத்தொங்க அலைந்து தனித்தமர்ந்து ஊளையிடும் ஓநாயின் நிலம் இது. இங்கு நம் மூதாதையர் தோன்றியிருக்க முடியாது. அவர்கள் இங்கே வந்து குடியேறியிருக்கவேண்டும். ஏன் வந்தார்கள்?” சல்லியர் கேட்டார்.
“எளிய விடைதான். அவர்கள் அஞ்சி வந்து ஒளிந்துகொண்டவர்கள். கீழே விரிந்து கிடக்கும் விரிநிலத்தையும் அங்கே செறிந்து நெரியும் மக்களையும் விட்டு வெளியே ஓடிவந்தவர்கள். சுமித்ரரே, அவர்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள். துரத்தப்பட்டவர்கள். அஞ்சியவர்கள். அந்த அச்சம் அவர்களின் குருதியில் கலந்துவிட்டிருக்கவேண்டும். இந்த மாபெரும் மலையடுக்குகளில் அவர்கள் முழுமுற்றான தனிமையிலேயே வாழ்ந்திருக்கவேண்டும். தனிமையையே அவர்கள் பெருந்துணையாக கண்டார்கள்.”
சல்லியர் தொடர்ந்தார் “இன்றும் அதை நான் காண்கிறேன். நம்குலத்தவர் மலைவெளியில் தங்கள் ஆடுகளுடன் மாதக்கணக்கில் பிறிதொரு மானுடனை பாராமல் மகிழ்ந்து வாழ்கிறார்கள். ஆயினும் நெடுந்தொலைவுகளை அவர்களின் விழிகள் கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கின்றன. சிற்றொலிகளுக்காக அவர்களின் செவிகள் காத்திருக்கின்றன. விழிதொடும் தொலைவிளிம்பில் சிற்றுயிரின் அசைவென ஒரு மானுடனைக் கண்டால் அக்கணமே பாறைகளுக்குள் மறைந்து அசைவற்றுவிடுகிறார்கள். அசைவற்று கண்மூடி அமர்வதுதான் அவர்கள் அறிந்த மிகப்பெரிய தற்காப்பு.”
”இங்குள்ள அத்தனை உயிர்களும் செய்வது அதைத்தான். ஓநாய்கள் மலைஓணான்கள் கீரிகள் அனைத்தும். அவற்றிடமிருந்து நம்மவர் கற்றுக்கொண்ட போர்முறை அது. நாமறிந்ததெல்லாம் கோடைகாலம் முழுக்க உணவுதேடுவது. அதை முடிந்தவரை உண்ணாமல் சேர்த்துவைப்பது. வெண்பனி இறங்கும்போது அவற்றை குறைவாக உண்பது. பால்ஹிகநாட்டு குடிகளில் சென்று பாருங்கள். இங்கே குளிர்காலம் முடியும்போது சேர்த்துவைத்த உணவிலும் விறகிலும் பாதிக்குமேல் எஞ்சியிருக்கும். ஆனால் வருடம் முழுக்க குழந்தைகளை அரைப்பட்டினி போடுவார்கள்.”
“உத்தரபதத்தின் வணிகர்கள் நமக்களிப்பது மிகச்சிறிய தொகைதான். இந்த விரிநிலத்தை நாம் அவர்களுக்காக காக்கிறோம். அவர்களுக்கு இல்லங்களும் உணவும் அளிக்கிறோம். அவர்கள் செல்லும்போது ஒரு நாணயத்தை நம்மை நோக்கி வீசிவிட்டுச் செல்கிறார்கள். அதை நாம் அப்படியே புதைத்துவைத்திருக்கிறோம். சௌவீரரே, இங்கே நம் குடிகளிடம் நம்மிடமிருப்பதைவிட நான்குமடங்கு பொன் இருக்கிறது. அதை நாம் வரியாகக் கொள்ளமுடிந்தால் வலுவான அரசுகளை இங்கே எழுப்பமுடியும்.”
“அதை அஸ்தினபுரியில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்து அவர்கள் வலுவடைவதற்குள் நாம் செய்து முடிக்கவேண்டும்” என்றார் சல்லியர். “நம் நகரங்கள் எவையும் இன்று கோட்டைகள் அற்றவை. நாம் வலுவான கோட்டைகளை கட்டிக்கொள்ளவேண்டும். உத்தரபதத்தின் வணிகச்சாலைகள் முழுக்க காவல்மாடங்களை அமைக்கவேண்டும். மலையுச்சிகளில் காவல்கோட்டைகளைக் கட்டி அங்கே சிறியபடைகளை நிறுத்தவேண்டும். நாம் புதைத்துவைத்திருக்கும் நிதியை செலவிட்டால் பலமடங்கு ஈட்டமுடியும்.”
சௌவீர மன்னரின் கண்களை நோக்கி சல்லியர் சிரித்தார். “இப்போது உங்கள் நெஞ்சில் ஓடிய எண்ணமென்ன என்று அறிவேன்… நான் நீங்கள் புதைத்துவைத்திருக்கும் பொன்னைப்பற்றி உளவறிவதன் பொருட்டு பேசுகிறேனா என்ற ஐயம்…” என்றார். “இல்லையில்லை” என்று சுமித்ரர் கைநீட்டி மறுக்க “அதில் பிழையில்லை சுமித்ரரே. நாம் அப்படிப்பட்டவர்கள். நாம் அனைவருமே தன்னந்தனியர்கள். பிறன் என்பதை எதிரி என்றே எண்ணும் மலைக்குடிகள்” என்று நகைத்தார்.
“நாம் பாரதவர்ஷத்தின் மக்கள் அல்ல. அந்தப் பெருமரத்தில் இருந்து எப்போதோ உதிர்ந்தவர்கள்” என்றார் சல்லியர். பூரிசிரவஸ் மெல்ல “ஆனால் பாரதவர்ஷத்தின் நூல்களிலெல்லாம் நூற்றெட்டு ஷத்ரியநாடுகளின் நெடுநிரையில் நாமும் இருந்துகொண்டிருக்கிறோம். நம்மைத்தேடியும் சூதர்கள் வருகிறார்கள். இணையாக அல்ல என்றாலும் நமக்கும் அவையில் பீடம் இருக்கிறது” என்றான்.
“ஆம், அதற்கு ஒரு நீள்வரலாறு உண்டு. நெடுநாட்களுக்கு முன் குருகுலத்து மாமன்னர் பிரதீபரின் மைந்தர் பால்ஹிகர் இங்கே வந்தார். அவரது குருதி முளைத்த குலம் நாம். ஆகவேதான் நாம் இன்னும் நம்மை குருகுலத்தோன்றல்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.” சல்லியர் இதழ்களில் கசப்பு நிறைந்த புன்னகை விரிந்தது. நிமிர்ந்து பூரிசிரவஸ்ஸையும் ஃபூரியையும் சலனையும் நோக்கி “பால்ஹிகர்களாகிய நாம் குருகுலம் அல்லவா?” என்றார். ஃபூரி “ஆம்” என்றான். “சிபிநாட்டு சுனந்தைக்கு பிரதீபரில் பிறந்தவர் பால்ஹிகர்.”
“அவர் ஏன் இந்த மலைநாட்டுக்கு வந்தார்?” என்றார் சல்லியர். திரும்பி பூரிசிரவஸிடம் “நீ சொல்” என்றார். பூரிசிரவஸ் தணிந்த குரலில் “அஸ்தினபுரியின் அரசர் பிரதீபருக்கு மூன்று மைந்தர்கள். முதல்மைந்தரான தேவாபி சூரியக்கதிர் தொடமுடியாத தோல்நோய் கொண்டிருந்தார். இளையவரான பால்ஹிகர் பெருந்தோள் கொண்டவர். தமையன் மேல் பேரன்பு கொண்டிருந்த பால்ஹிகர் அவரை தன் தோள்களிலேயே சுமந்து அலைந்தார். தமையனின் கைகளும் கால்களுமாக அவரே இருந்தார். மூன்றாமவர்தான் அஸ்தினபுரியின் அரசராக முடிசூட்டிக்கொண்ட மாமன்னர் சந்தனு” என்றான்.
“குலமுறைப்படி தேவாபியே அரசராகவேண்டும்” என்றான் பூரிசிரவஸ். “ஆனால் அவரால் ஒளியை நோக்கமுடியவில்லை என்று குலமூத்தார் குறைசொன்னார்கள். சூரியனுக்குப் பகையானவர் முடிசூடினால் கதிர்மணிகள் தாழாது என்றனர். மூத்தவர் இருக்க தான் முடிசூட பால்ஹிகர் விழையவில்லை. அவர் மணிமுடியை சந்தனுவுக்கு அளித்தபின் தன் தாயின் நாடான சிபிநாட்டுக்கே சென்றார். அங்கே அவரது மாதுலர் சைலபாகு ஆட்சிசெய்துகொண்டிருந்தார். மாதுலரின் படைத்தலைவராக சிபிநாட்டில் வாழ்கிறார்.”
“ஆம், கதைகள் நன்று” என்றார் சல்லியர் இதழ்கள் கோணலாக புன்னகைத்தபடி. “இளையோனே, முடிதுறந்த பால்ஹிகர் ஏன் நாட்டையும் துறந்தார்? பெருந்தோள்வீரரான அவர் அஸ்தினபுரியின் படைத்தலைவராக இருந்திருக்கலாமே?” என்றார். பூரிசிரவஸ் அவர் சொல்லப்போவதென்ன என்று நோக்கினான். “பால்ஹிகர் பின்னர் ஒரே ஒருமுறைதான் திரும்பி அஸ்தினபுரிக்கு சென்றிருக்கிறார். தன் இளையோன் மைந்தனாகிய பீஷ்மரிடம் கதைப்போர் புரிய…”
“முடிசூட்டுவிழாக்களுக்கும் பெயர்சூட்டுவிழாக்களுக்கும் கூட அவர் சென்றதில்லை. தன் இளையோன் அரசாண்டபோது ஒருமுறைகூட அந்நாட்டில் கால்வைத்ததில்லை. எதற்கு செல்லவில்லை என்றாலும் குருதித்தொடர்புடையோரின் எரியூட்டுக்குச் செல்வது பாரதவர்ஷத்தின் மரபு. பால்ஹிகர் தன் இளையோன் சந்தனு இறந்த செய்தி கேட்டபோது வேட்டையாடிக்கொண்டிருந்தார். வில் தாழ்த்தி சிலகணங்கள் சிந்தித்தபின் அம்பு ஒன்றை எடுத்து நாணேற்றினார். ஒரு சொல்லும் சொல்லவில்லை. அஸ்தினபுரிக்கு செல்லவுமில்லை.”
“சந்தனுவின் மைந்தர்களை அவர் பார்த்ததே இல்லை” என்றார் சல்லியர். “ஏன்?” சோமதத்தர் மட்டும் சற்று அசைந்தார். “அவர் புண்பட்டு மலைக்கு ஓடிவந்த விலங்கு” என்றார் சல்லியர். “சைப்யபுரியின் நிலவறையில் இன்றும் அவர் வாழ்கிறார். முதுமையில் தசைகளெல்லாம் தளர்ந்தபின்னரும் பேராற்றல் கொண்டவராகவே இருக்கிறார். அவரை சென்று பார். அவரிடம் கேட்டு அறியமுடியாது. ஆனால் அவர் அருகே நின்று அறியலாம். அவருள் எரியும் அழல் வெம்மையை அவ்வறையிலேயே உணரலாம்…”
பெருமூச்சுடன் சல்லியர் தொடர்ந்தார். “நெடுநாட்கள் ஸென்யாத்ரியும், போம்போனமும், துங்கானமும்தான் அவரது எல்லைகளாக இருந்தன. அவரது மாதுலர் சைலபாகு மறைந்தபின்னர் அவரது மைந்தர் கஜபாகு அரசரானபோது சிபிநாட்டிலிருந்து பால்ஹிகர் கிளம்பி வடக்கு நோக்கி வந்தார் என்று கதைகள் சொல்கின்றன. அவர் இங்கே மலைமடிப்புகளில் வாழ்ந்த தொன்மையான குடிகளை வந்தடைந்தார். இருபத்தாறாண்டுகாலம் அவர் இங்கே வாழ்ந்தார். ஏழு மனைவியரை மணந்து பத்து மைந்தர்களுக்கு தந்தையானார். அவர் கொடிவழியினரே நாம்.”
சல்லியர் நிமிர்ந்து பூரிசிரவஸை நோக்கி “இளையோனே, இதெல்லாம் நீங்கள் இளமையிலேயே அறிந்தகதைகள். நமது குலப்பாடகர் பாடிப்பாடி வளர்த்தவை. ஆனால் நீ இச்செய்திகளை மேலும் தொடர்ந்து செல்வாய் என்று எண்ணுகிறேன். பால்ஹிகரின் குருதியில் எழுந்த மைந்தர்கள் அமைத்த அரசுகள் பத்து. மத்ரநாடு, சௌவீர நாடு, பூர்வபால்ஹிகநாடு, சகநாடு, யவனநாடு, துஷாரநாடு ஆகிய ஆறும் முதன்மை அரசுகள். கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம் என்னும் நான்கும் மலைக்குடிகளின் அவையரசுகள்” என்றார்.
“ஆனால் இக்கதையில் ஒரு இடர் உள்ளது. பால்ஹிகர் இங்கு வந்த காலத்திற்கு முன்னரே எழுந்த தொல்நூல்களில் கூட இந்த நிலத்திற்கு பால்ஹிகம் என்ற பெயர் உள்ளது. பால்ஹிகம் என்பது ஒரு மலைநிலப்பரப்பென்று ஆரண்யகங்களில் ஏழுமுறை சொல்லப்பட்டிருக்கிறது. வேதங்களிலேயே அச்சொல் இரண்டுமுறை உள்ளது என்று நான் ஆராய்ந்து அறிந்தேன்” என்றார் சல்லியர். சுமித்ரர் “அப்படியென்றால்…” என்று புரியாமல் இழுத்து நிமிர்ந்து பூரிசிரவஸ்ஸை பார்த்தார்.
“இளையோனே, பிரதீபரின் மைந்தனுக்கு ஏன் பால்ஹிகர் என்ற பெயர் அளிக்கப்பட்டது என்பதே நாம் எண்ணவேண்டிய வினா. முதியமன்னர் பிரதீபர் தன் துணைவிக்கு நெடுநாள் மைந்தரில்லாதிருக்க காடேகி கடும்தவம் புரிந்து மைந்தரைப் பெற்றார் என்கிறார்கள். அக்குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தோற்றம் கொண்டவை. தோல்வெளுத்த தேவாபி. வெண்ணிறப் பேருருக்கொண்ட பால்ஹிகர். அதன்பின் கரிய அழகனாகிய சந்தனு.”
சில கணங்களுக்கு பின் “சுனந்தை நியோகமுறையில் கருவுற்றிருக்கவேண்டும்” என்றார் சோமதத்தர். “ஆம், அது ஒன்றே விடையாக இருக்கமுடியும். அவரது குருதித்தந்தை பால்ஹிக நிலத்தைச் சேர்ந்த ரிஷியாக இருக்கலாம். பால்ஹிகரின் தோற்றம் மலைமக்களாகிய பால்ஹிகர்களுடையது. ஆகவே அவருக்கு அப்பெயர் சூட்டப்பட்டது” என்றார் சல்லியர் “ஆனாலும் அவர் அங்கே மலைமகனாகவே கருதப்பட்டார். அஸ்தினபுரியின் தொல்குடிகள் அவரை ஒருபோதும் அரசனாக ஏற்காதென்று உணர்ந்தார். அங்கு தனக்கு இடமில்லை என்று உணர்ந்தபின்னர்தான் அவர் சிபிநாட்டுக்கு வந்தார்.”
“அங்கும் அவர் அயலவராகவே கருதப்பட்டார். எனென்றால் அவர் பிரதீபரின் மைந்தர். சிபிநாட்டுப்படைகளை அவர் ஒருமுறைகூட நடத்தவில்லை. ஒருமுறைகூட அரசவையில் அமரவுமில்லை. நாளெல்லாம் மலைகளில் வேட்டையாடுவதையே வாழ்க்கையாக கொண்டிருந்தார்” சல்லியர் சொன்னார்.
“இளையோனே, அவரது தோற்றமே அவரை பாரதவர்ஷத்தில் எங்கும் அயலவனாக்கிவிடும். இன்று பாண்டவர்களில் இரண்டாமவன் தொன்மையான பால்ஹிககுலத்து பேருடல் கொண்டிருக்கிறான். நியோகத்தில் அவன் எவருடைய மைந்தன் என்று தெரியவில்லை. அவர் பால்ஹிகராக இருக்கவேண்டும். அவனை பெருங்காற்றுகளின் மைந்தன் என்கிறார்கள். பால்ஹிகநாட்டை பெருங்காற்றுகளின் மடித்தொட்டில் என்று கவிஞர்கள் சொல்கிறார்கள்.”
சல்லியர் தொடர்ந்தார் “சைலபாகுவின் மறைவுக்குப்பின் அவர் அங்கிருந்து கிளம்பி தன் குருதிவழியைத் தேடி இந்த மலைமடிப்புகளுக்கு வந்திருக்கவேண்டும். அவரை இம்மக்கள் ஏன் ஏற்றுக்கொண்டார்கள் என்பதும் தெளிவு. இங்கே அவர் மகிழ்ந்திருந்தார். இங்குள்ள மலையடுக்குகளின் பேரமைதியிலேயே அவர் தான் யாரென்பதை உண்மையில் உணர்ந்திருக்கவேண்டும். இன்றும் அவர் தங்கியிருந்த பன்னிரு மலைவீடுகளை நாம் பேணிவருகிறோம். மலைச்சரிவுகளில் பெரிய கற்களை தூக்கிவைத்து கட்டப்பட்ட தன்னந்தனியான இல்லங்கள் அவை.”
“இங்கே அவர் தன் குருதியை விளையவைத்தார். நம் குலங்கள் உருவாகி வந்தன” என்றார் சல்லியர். “இளையோரே, நம்மில் குருகுலத்து பால்ஹிகரின் குருதி இருப்பதனால்தான் நம்மை அரசர்களாக ஏற்றுக்கொண்டது பாரதவர்ஷம். நம்மிலிருந்து அரசுகள் உருவாகி வந்தன. நமக்கு அவைகளில் இடமும் சொற்களில் சிலவும் கிடைத்தது. நாம் என நாமுணரும் இன்றைய எண்ணங்களெல்லாம் அவருக்கு பிரதீபர் அளித்த அடையாளத்தில் இருந்து எழுந்தவைதான்.”
“ஆயினும் நாம் இன்னமும் ஒதுக்கப்பட்டவர்களே. பாஞ்சால அவையில் அதை கண்கூடாகவே கண்டேன். பால்ஹிககுலத்திலிருந்து மணத்தன்னேற்புக்கென அழைக்கப்பட்டவர்களே நாம் மூவர்தான். சகர்களும் யவனர்களும் துஷாரர்களும் அழைக்கப்படவே இல்லை. பிறகுடிகள் கருத்தில்கொள்ளப்படவே இல்லை” என்றார் சல்லியர். “ஆம், அதுவே முறைமையாக உள்ளது” என்றார் சுமித்ரர்.
“என் குடியில் அஸ்தினபுரி பெண்ணெடுத்தது ஏன் என்றும் எனக்குத் தெரியும். சந்தனுவின் சிறுமைந்தர் பாண்டு ஆண்மையற்றவர். அவருக்கு எந்த தூய ஷத்ரியர்களும் மகள்கொடை அளிக்கமாட்டார்கள். நெடுங்காலம் முன்பு யாதவரவையில் என்னைத் துறந்து பாண்டுவுக்கு ஏன் குந்தி மாலையிட்டாள் என்று இன்று அறிகிறேன். சற்றேனும் அரசுசூழ்தல் அறிந்தவர்கள் அந்த முடிவையே எடுப்பார்கள். அவளுக்குத்தெரியும், இளையோரே, நாம் ஷத்ரியர்களே அல்ல. நாம் ஷத்ரியர்களென நடிக்க விடப்பட்டிருக்கிறோம்.”
”நான் இன்றும் நினைவுகூர்கிறேன். பெண்கொள்ள விழைந்து பீஷ்மர் என் குடிக்கு வந்தபோது நான் அடைந்த பெருமிதம். பாரதவர்ஷத்தின் மையத்தை நோக்கிச் செல்கிறேன் என்று நான் கொண்ட பேருவகை. குந்தி யாதவகுலத்தைச் சேர்ந்தவளாகையால் பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் அவளை ஏற்கமாட்டார்கள் என்பதனால் என்னிடம் பெண்கொள்ள வந்ததாகச் சொன்னார் பிதாமகர். நான் விம்மிதமடைந்து அவர் கைகளைப் பற்றிக்கொண்டு அது எனக்களிக்கப்படும் பெரும் மதிப்பு என்று நாதழுதழுத்தேன்.”
சோமதத்தர் “குந்தி உங்களை மறுதலித்ததனால் நீங்கள் சினம்கொண்டு கூர்ஜரர்களையோ மகதத்தையோ சார்ந்துவிடக்கூடாது என்று பிதாமகர் அஞ்சியிருக்கலாம்” என்றார். சல்லியர் சினம் கொள்வார் என்று எண்ணி பூரிசிரவஸ் நோக்கினான். அவர் புன்னகைசெய்து “ஆம், அதுவும் அவர் எண்ணமாக இருந்திருக்கலாம்” என்றார்.
“இளையோரே, நாம் வெளிவரவேண்டியது அந்த மாயையில் இருந்துதான்” என்றார் சல்லியர். “நாம் இனி நம்மை ஷத்ரியர்களாக எண்ணவேண்டியதில்லை. நம்மை பால்ஹிகர்களாக எண்ணுவோம். இங்கே ஒரு வல்லமை வாய்ந்த பால்ஹிக கூட்டமைப்பை உருவாக்குவோம். அது ஒன்றே நாம் வாழும் வழி. இல்லையேல் யாதவகிருஷ்ணனின் சக்கரத்தால் துண்டுகளாக்கப்படுவோம். அல்லது அவன் கால்களைக் கழுவி நம் மணிமுடிமேல் விட்டுக்கொள்வோம்.”
குரலை உயர்த்தி “நாம் செய்யவேண்டியது ஒன்றே. இன்று நம் பால்ஹிகக் குடிகளனைவரும் பிரிந்திருக்கிறோம். ஒவ்வொருவரிடமும் தூதனுப்பி இதைப்பற்றி பேசுவோம். அதுவரை அஸ்தினபுரியின் இரு தரப்பினரிடமும் நல்லுறவை நடிப்போம்” என்றார் சல்லியர். “நம்மால் மலைக்குடியரசுகள் என இழித்து ஒதுக்கப்பட்ட நான்கு குலங்களையும் நம்முடன் சேர்த்துக்கொள்வோம்.”
சுமித்ரர் “அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டுமே?” என்றார். “அவர்கள் பார்வையில் நாம் அயலவர். ஷத்ரியர்.” சல்லியர் “அதற்கு ஒரு வழி உள்ளது. சிபிநாட்டு நிலவறையில் இருந்து பால்ஹிகரை கொண்டுவருவோம். அவரே நமக்கெல்லாம் தந்தை வடிவம். அவரைக் கண்டபின் எவரும் விலகி நிற்க முடியாது. நம்குடிகளை எல்லாம் இணைக்கும் கொடிமரம் அவரே” என்றார் சல்லியர். “ஆம்” என்றார் சுமித்ரர். சோமதத்தர் “ஆம், நான் இன்றுவரை பிதாமகரை பார்த்ததில்லை. அவர் பாதம் தொட்டு தலையில் வைக்க முடிந்தால் நான் வாழ்ந்தவனாவேன்” என்றார். சுமித்ரர் அச்சொல்லைக் கேட்டு நெகிழ்ந்து சோமதத்தரின் தொடையை தொட்டார்.
குளிர்காற்று வீசத்தொடங்கியது. கூடாரங்கள் படகுகளின் பாய்கள் போல உப்பி அமைந்தன. “துயில்வோம். நாளை முதலொளியிலேயே கிளம்பிவிடவேண்டும். எண்ணியதைவிட இரண்டுநாட்கள் பிந்தி சென்றுகொண்டிருக்கிறோம்” என்று சல்லியர் எழுந்தார். அனைவரும் எழுந்தனர். மலைக்குடிகளுக்குரிய முறையில் ஒருவரை ஒருவர் தோள்களைத் தொட்டு வணங்கியபின் கூடாரங்களுக்கு பிரிந்துசென்றனர். ருக்மாங்கதன் வந்து தந்தையருகே நிற்க ருக்மரதன் அப்பால் சென்று கம்பளிப்போர்வைகளை சல்லியரின் கூடாரத்திற்குள் கொண்டுசென்றான்.
சலன் பூரிசிரவஸ்ஸை நோக்கி வா என்று விழியசைத்துவிட்டு சென்றான். பூரிசிரவஸ் தயங்கி நின்றான். உதவியாளன் வந்து சல்லியரை மெல்ல தூக்கினான். அவர் வலியில் உதடுகளை இறுக்கிக்கொண்டு எழுந்தார். திரும்பி அவனிடம் “இரவில் கைக்குழந்தையை தொட்டிலில் இட்டுக்கொண்டு அருகே துயிலும் அன்னையைப்போல் படுக்கிறேன்” என்றார். “அகிபீனா இல்லாமல் கண்ணயர முடிவதில்லை.”
பூரிசிரவஸ் மெல்ல ”மாத்ரரே, தன் குருதிக்கு மீண்டு ஏழு மனைவியரில் பத்து மைந்தரைப்பெற்ற பின் ஏன் பால்ஹிகர் மீண்டும் சிபிநாட்டுக்குச் சென்றார்?” என்றான். சல்லியர் நிமிர்ந்து நோக்கி விழியசையாமல் சிலகணங்கள் இருந்தபின் “அதை நானறியேன். நீ சென்று அவரை பார். அதைக் கேட்டு அறிந்துகொள். அது நாமனைவருக்கும் உரிய ஓர் அறிதலாக இருக்கக்கூடும்” என்றார்.
அனைத்து வெண்முரசு விவாதங்களும்