வெண்முகில் நகரம் - 20

பகுதி 7 : மலைகளின் மடி – 1

மண்ணையும் பாறைகளையும் உமிழும் நூற்றுக்கணக்கான திறந்த வாய்கள் கொண்டு சூழ்ந்திருந்த மலையடுக்குகளுக்குக் கீழே செந்நிற ஓடை போல வளைந்து சென்ற மலைப்பாதையில் பால்ஹிக குலத்தின் மூன்று அரசர்களின் படைகள் இணைந்து சென்றுகொண்டிருந்தன. மத்ரநாட்டின் கலப்பைக்கொடி ஏந்திய குதிரைவீரன் முதலில் செல்ல முப்பது புரவிவீரர்களும் நாற்பது பொதிக்குதிரைகளும் சூழ சல்லியர் தன் வெண்குதிரைமேல் தோளில் கட்டுபோட்டு தொங்கிய கைகளுடன் சென்றார். அவருடன் அவருடைய மைந்தர்களான ருக்மாங்கதனும் ருக்மரதனும் சென்றனர்.

அவருக்குப்பின்னால் சௌவீர நாட்டின் ஓநாய்க்கொடி செல்ல இருபது வீரர்கள் இருபது பொதிக்குதிரைகளுடன் சூழ சௌவீர மன்னன் சுமித்ரர் சென்றார். தொடர்ந்து மறிமான் துள்ளிய பால்ஹிக நாட்டின் கொடி சென்றது. அதைத் தொடர்ந்து இருபது பால்ஹிக வீரர்கள் செல்ல நடுவே தன் கரியகுதிரையில் அரசர் சோமதத்தர் சென்றார். அவருக்குப்பின்னால் அவரது மைந்தர்கள் ஃபூரியும் சலனும் இரு செந்நிறக்குதிரைகளில் சென்றார்கள். இருபது பொதிக்குதிரைகளுக்கு பின்னால் இறுதியில் வந்த இரு வீரர்களுடன் பூரிசிரவஸ் தன் வெண்குதிரையில் வந்தான் மலைச்சரிவில்.

பாறைக்கூட்டம் உருண்டு சரிவது போல குதிரைகளின் குளம்பொலி எழுந்து மலைமடிப்புகளில் எதிரொலித்தது. முகில்சூடிய முடிகளுடன் தோளிலிலிருந்து மணலருவிகள் சால்வையென நழுவ கைகள் கோர்த்தவை போல் நின்றிருந்த மலையடுக்குகள் பேசிக்கொள்வதுபோல தோன்றியது அவனுக்கு. உரத்த குரலில் அருகிலிருந்த மலை கேட்ட வினாவுக்கு அப்பால் அப்பாலென்று பல மலைகள் விடையிறுத்தன. இறுதியில் எங்கோ ஒரு குரல் ஓம் என்றது. பாதை மலையின் இடையில் வளைந்து சென்றபோது அவ்வோசை அவர்களுக்குப் பின்னால் ஒலித்தது. மீண்டும் எழுந்தபோது நேர்முன்னாலிருந்து வந்து செவிகளை அலைத்தது.

பூரிசிரவஸ் அமர்ந்திருந்த வெண்புரவி அவனையும் மலைப்பாதையையும் நன்கறிந்தது. அவன் பிடித்திருந்த கடிவாளம் தளர்ந்து தொங்கியதை, விலாவை அணைத்த அவன் கால்கள் விலகியிருந்ததை அது உணர்ந்தது. உருளைக்கற்கள் புரண்டுகிடந்த புழுதிச்சாலையில் நோக்கி நோக்கி காலெடுத்துவைத்து அது சென்றது. உருண்டிருந்த பெருங்கற்களைக் கண்டு அதன் கழுத்துத்தோல் சிலிர்த்துக்கொண்டது. மண்ணில் விரிசல் தெரிந்தபோது அடிதயங்கி நின்று மூச்செறிந்து எண்ணி காலெடுத்துவைத்தது. அவன் ஆடும் படகில் என கால்பரப்பி அமர்ந்து மலைமடிப்புகளை நோக்கிக்கொண்டிருந்தான்.

முடிவற்ற செந்நிறச் சால்வை. மடிந்து மடிந்து சுழன்று சுழன்று சென்றுகொண்டிருந்தது அது. கூம்புக்கோபுரங்கள் என செறிந்த மரங்கள்கொண்ட சோலைகள் கீழே சென்றுவிட்டிருந்தன. அங்கெல்லாம் மலைச்சரிவுகள் மண்வீழ்ச்சிகளால் பாறைஎழுச்சிகளால் மட்டுமே தெரிந்தன. கற்களோடும் நதி. கற்கள் பொழியும் அருவி. பாதைகளை மறைத்தன பொழிந்தெழுந்த கற்களின் கூம்புகள். முன்னால் சென்ற வீரன் கொடியை ஆட்டியதும் அனைவரும் நின்று புரவிகள் விட்டிறங்கி அப்பாறைக்குவைகளை அள்ளி அகற்றி மேலும் சென்றனர்.

எவரும் எச்சொல்லும் பேசவில்லை. தோலால் ஆன நீர்ப்பைகள் குலுங்கின. அம்பறாத்தூணியில் உலோக முனைகள் தொட்டுக்கொண்டன. சேணங்கள் குதிரைவிலாக்களில் அடித்துக்கொண்டன. அவ்வப்போது ஒரு குதிரை பிறிதிடம் ஏதோ சொன்னது. தலைக்குமேல் குளிர்நிறைந்த காற்று ஓலமிட்டபடி கடந்துசென்றது. எலும்புவீழ்த்தி உண்ணும் செந்தழல் கழுகு வானில் வட்டமிட்டு தாழ்ந்து சென்றது. மலைச்சரிவை கடக்கையில் நீண்ட சரவாலை காலிடுக்கில் தாழ்த்தி உடல்குறுக்கி ஒரு செந்நாய் கடந்து சென்றது.

பாறைகள் வெடித்து நின்றன. பச்சைப்புல் எனத் தெரிந்தது பசுந்துகள் பாறைகள் என கண்டபின் அவன் விழிதூக்கி நோக்கினான். செம்பாறைகளுக்குள் பச்சைப்பாறைக்கதுப்புகள் அடுக்கடுக்காகத் தெரிந்தன. பொன்னிறப்பாறைகள். இளநீலப்பாறைகள். குருதித்தசைப்பாறைகள். பாறைகள் அங்கே விளைந்து கனிந்து உலர்ந்து உதிர்கின்றன. மிகத்தொலைவில் ஒரு செந்நாயின் ஊளையைக் கேட்டு குதிரைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு நின்று உடல்சிலிர்த்து பெருமூச்சுவிட்டன. வீரர்களில் ஒருவன் கற்களை உரசி நெருப்பெழச்செய்து பந்தமொன்றை கொளுத்திக்கொண்டான்.

முன்னால் செல்ல குதிரைகளை தட்டித்தட்டி ஊக்கவேண்டியிருந்தது. முதல்குதிரை ஐயத்துடன் காலெடுத்துவைக்க பிற குதிரைகள் விழிகளை உருட்டி நீள்மூச்செறிந்தன. முன்குதிரையை பிறகுதிரைகள் தொடர்ந்தன. நெருப்புடன் முதலில் சென்றவனை எங்கோ நின்று கண்ட ஓநாய் மீண்டும் குரலெழுப்பியது. அடுத்தகுரலில் அது ஓடிக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது. அவை கூட்டமாக வந்திருக்கவேண்டும். ஊன்மணம் அடைந்தவை. இந்த பெரும்பாறைவெளியில் அவை பசியையே முழுமுதல் தெய்வமாக அறிந்திருக்கும்.

கலங்கிய நீர்ப்பரப்புபோலிருந்தது வானம். வெண்முகில்கள் மலைமுடிகளில் மட்டும் ஒளியின்றி நனைந்த பஞ்சுக்குவைகள்போல் எடைகொண்டு அமர்ந்திருந்தன. திரும்பித்திரும்பிச் சென்ற பாதைக்கு அப்பால் ஆழத்தில் ஒளியுடன் வாள் ஒன்று கிடப்பதுபோல ஓடை தெரிந்தது. விண்ணிலிருந்து நோக்குவதுபோலிருந்தது. அங்கே அந்த ஓடையின் இருபக்கமும் பசுந்தீற்றல் என சோலைகள் தெரிந்தன. வானின் ஒளி அங்கே மட்டும் முகில் திறந்து இறங்கியிருந்தது. சிறு பசுமொட்டாகத் தெரிந்தது ஒற்றைப்பெருமரம் என்று எண்ணிக்கொண்டான்.

மூன்றாவது வளைவில் மாலையிருளத் தொடங்கியதை உணரமுடிந்தது. பாறைநிழல்கள் கரைந்துவிட்டிருந்தன. அப்பால் மலைமேலமர்ந்த பெரும்பாறைகள் துல்லியம் கொண்டன. சுவர்ணகனகன் என்று மலைமக்கள் அழைக்கும் கீரிகள் கொழுத்த அடிவயிற்றுடன் மெல்ல வளைவிட்டெழுந்து கூழாங்கல் கண்களால் நோக்கியபின் தத்தித்தத்தி ஓடி அமர்ந்து இரண்டு கால்களில் எழுந்து அமர்ந்து கைகளை விரித்தபடி நோக்கின.

அந்தித்தாவளம் வருவதை அத்தனைபேரும் எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரிந்தது. ஆனால் அதற்குரிய இடங்களெல்லாம் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டிருந்தன. முதிய வழிகாட்டி மலைமகனாகிய பீதன். அவன் சொல்லாத இடங்களில் தங்கமுடியாது. அவனுக்கு மலைகளை தெரியும். நெடுந்தொலைவை நோக்குவதற்கென சிறியவிழிகள் கொண்டவன். நோக்கி நோக்கிச் சுருங்கிய முகம் கொண்டவன்.

மலைமகன் கைவீசி தன்மொழியில் சுட்டிக்காட்டினான். படைகள் முழுக்கப் பரவிய உடலசைவு அனைவரும் எளிதாகிக்கொண்டதை காட்டியது. மலைப்பாதைக்கு அப்பால் உயரமற்ற புதர்மரங்களாலான சிறிய சோலை ஒன்று தெரிந்தது. அதற்கு அப்பால் எழுந்த மலையிடுக்கிலிருந்து சிறிய காட்டருவி ஒன்று சொட்டுவது போல் விழுந்துகொண்டிருந்தது.

சோலைக்குள் கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட மூன்று சுனைகள் இருந்தன. ஒன்றில் தேங்கிய அருவிநீர் எழுந்து வழிந்து பிறிதில் தேங்கி பின்பு இறங்கி வளைந்து மீண்டும் அருவி என கரிய பாறையின் இடுக்கு வழியாக சரிவில் பெய்தது. கீழே நின்றிருந்த புதர்மரங்களுக்குமேல் மழைத்துளிகளாக விழுந்தது. பறவையொலிகளற்ற ஊமைச்சோலை. புழுதிபடிந்த சிறிய இலைகளுடனும் அடர்ந்த முட்களுடனும் நின்ற மரங்களுக்குக் கீழே மறிமான்களின் புழுக்கைகள் ஓடைக்கற்கள் போல உருண்டு சிதறிக்கிடந்தன.

குதிரைகளை நிறுத்தி பொதிகளை அவிழ்க்கத் தொடங்கினர். பிறகுதிரைகள் சுனையில் சென்று பெருமூச்சு விட்டு பிடரி சிலிர்க்க குனிந்து நீரலைகளை நோக்கி விழியுருட்டின. பின் நீரை உறிஞ்சி வாய்வழிய குடிக்கத் தொடங்கின. பொதிகளை அவிழ்த்து கீழே அடுக்கினர். யானைத்தோலால் ஆன கூடாரப்பொதிகளை முதலில் எடுத்து பிரித்து விரித்து அவற்றின் சரடுகளை சுருள் நீட்டி போட்டனர். சிலர் உணவுப்பைகளை எடுக்க சிலர் கீழே கிடந்த மான்புழுக்கைகளை கூட்டிப்பெருக்கி குவித்தனர். சிலர் மேலே சென்று முட்செடிகளை வெட்டிக்கொண்டுவந்தனர்.

கூடாரங்கள் அடிக்கப்படும் இடங்களை தேர்ந்து அங்கே கற்களை அகற்றினர். தறிகளை சிலர் அறைந்தனர். பூரிசிரவஸ் எழுந்து சென்று மலைச்சரிவில் நீட்டி நின்ற பாறைமேல் ஏறி இடையில் கைவைத்து நின்று சுழன்று சுழன்றிறங்கிய பாதையை நோக்கிக்கொண்டிருந்தான். மாலையின் வெளிச்சம் நிறம்மாறிக்கொண்டே இருந்தது. முகில்கள் கருமைகொண்டன. கீழே பாறைகளின் மடிப்புகள் ஆழம் கொண்டன. எண்ணைக்குடுவையில் இருந்து எடுத்துவைக்கப்பட்டவை போல சில பாறைகள் மின்னிக்கொண்டிருந்தன.

அவன் திரும்பியபோது யானைக்கூட்டங்கள் போல இருபது கூடாரங்கள் எழுந்து நின்றிருந்தன. காற்று வீசாவிட்டாலும் கூட அவை மூச்சு விடுபவை போல மெல்ல புடைத்து அழுந்தின. மூன்று அரசகுடியினருக்கும் கொடிபறக்கும் பெரிய கூடாரங்களும் படைவீரர்களுக்கு தாழ்வான பரந்த கூடாரங்களும் கட்டப்பட்டிருந்தன. மத்ரநாட்டுக் கூடாரத்தின் முன் மரக்கால்கள் பொருத்தப்பட்டு அமைக்கப்பட்ட பீடத்தில் சல்லியர் அமர்ந்திருக்க மருத்துவர் ஒருவர் அவரது தோளை கட்டியிருந்த தோல்நாடாக்களை மெல்ல அவிழ்த்தார். அவர் பற்களைக் கடித்து பிறதிசை நோக்கி வலியை வென்றார்.

கூடாரங்களுக்கு அப்பால் மலைச்சரிவில் கற்களைக் கூட்டி எழுப்பப்பட்ட நெருப்புக்குழியின் அருகே விறகையும் மான்புழுக்கைகளையும் சேர்த்துக்கொண்டுவந்து குவித்துக்கொண்டிருந்தனர். தழைகள் கொண்ட பச்சை மரங்களையும் வெட்டிக்கொண்டுவந்து போட்டனர். முதல் சுனை அருகே அரசகுலத்தவர் நின்று கொப்பரைகளில் அள்ளிய நீரால் முகத்தை கழுவிக்கொண்டிருந்தனர். பூரிசிரவஸ் அங்கே சென்று தன் முகத்தையும் கைகளையும் கழுவிக்கொண்டு நீர் அருந்தினான். எவரும் பேசிக்கொள்ளவில்லை.

குளிரில் ஈரமுகம் விரைத்துக்கொள்ள உதடுகள் உளைந்தன. பூரிசிரவஸ் சல்லியரின் முன்னால் நின்று வணங்கினான். அவர் அமரும்படி கைகாட்ட அருகே கிடந்த உருளைப்பாறையில் அமர்ந்தான். மருத்துவர் சல்லியரின் கையிலும் தோளிலும் இருந்த பருத்த கட்டை மெல்ல சுற்றிச் சுற்றி அவிழ்த்தார். உள்ளே எண்ணை ஊறிய உள்கட்டு இருந்தது.

”பல எலும்புகள் முறிந்துள்ளன என்றார்கள்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், நெடுநாட்களாகும்” என்றார் சல்லியர். மேலே என்ன பேசுவதென்று அவனுக்கு தெரியவில்லை. அப்பால் நெருப்பு எழுந்தது. புகைவிட்டு சற்று தயங்கி சடசடவென்ற ஒலியுடன் பற்றி மேலேறியது. அதன்மேல் தாமிரக்கலத்தை ஏற்றிவைத்து நீரூற்றினார்கள். அவர்களின் பேச்சொலிகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. மலையிறங்கி வந்த குளிர்காற்று அதன் புகையை அள்ளி அவர்கள் மேல் மூடி கடந்துசென்றது. செந்தழல் எழுந்து நா பறக்க சீறி பின் தணிந்தது.

மருத்துவர் தன் குடிலில் இருந்து எடுத்துவந்த கொப்பரையின் அரக்கிட்டு மூடிய வாயைத் திறந்து பச்சிலைமணமெழுந்த எண்ணையை சிறு கரண்டியால் அள்ளி சல்லியரின் கட்டுகள் மேல் ஊற்றினார். உலர்ந்து பச்சைப்பாசி படிந்திருந்த துணி ஊறி நிறம்மாறத் தொடங்கியது. அதன் அடியில் எண்ணை விடுவதற்காக வைத்தியர் சல்லியரின் கைகளை மெல்லப் பற்றி அகற்றியபோது சல்லியர் தானறியாமல் “ஆ” என்றார். மருத்துவர் பதறி “இல்லை” என்றார். மேலே செய் என்று சல்லியர் கையசைத்தார்.

ஃபூரியும் சலனும் அருகே வந்து அமர்ந்தனர். சிறிய பீடத்தின் கால்களை பொருத்தியபடி சேவகன் வருவதைக் கண்டதும் மூவரும் எழுந்து நின்றனர். அவன் போட்ட பீடத்தில் சோமதத்தர் வந்து அமர்ந்து காலை நீட்டினார். “நெடும்பயணம்” என்றார். “ஆம், இமயம் தொலைவுகளை சுருட்டி வைத்திருக்கிறது என்பார்கள்.” சோமதத்தர் முனகியபடி “அதுவும் சின்னஞ்சிறு மாத்திரைகளாக” என்றார். சல்லியர் புன்னகை செய்தார்.

இளையோரான ருக்மாங்கதனும் ருக்மரதனும் சமையல் செய்பவர்களுடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொள்வதை பூரிசிரவஸ் நோக்கினான். அவன் பார்வையை அறிந்ததும் அவர்கள் புன்னகை செய்தனர். அவன் அவர்களை ஊக்குவதுபோல புன்னகைத்தான்.

சேவகன் பீடத்துடன் பின்னால் வர சுமித்ரர் நடந்து வந்தார். அமர்ந்து திரும்பி இளையோரை நோக்கி அமரும்படி கைகாட்டினார். ஃபூரியும் சலனும் அமர்ந்தார்கள். பூரிசிரவஸ் சற்று பின்னால் சென்று இன்னொரு பாறையில் அமர்ந்தான். அவர்கள் தலைகுனிந்து தங்கள் எண்ணங்களைத் தொடர்ந்தபடி அமர்ந்திருந்தனர். இமயத்தின் பேரமைதி பேசுவதை பிழையென உணரச்செய்கிறது. நாட்கணக்கில் பேசாமலிருந்து பழகியபின் சிந்தனைகள் உள்ளேயே சுழன்று அடங்கத் தொடங்கிவிடுகின்றன. நாவுக்கு வருவதில்லை.

பூரிசிரவஸ் “பாண்டவர்கள் அஸ்தினபுரிக்கு திரும்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்றான். அவன் சொற்கள் எதிர்பாராமல் வந்து விழுந்தவை என அனைவரும் திரும்பி நோக்கினர். அப்போது அவன் அறிந்தான், அவர்களனைவருமே அதைத்தான் எண்ணிக் கொண்டிருந்தார்கள் என்று. சுமித்ரர் “அத்தனை எளிதாக அது முடியாது…” என்றார். “விதுரர் பாண்டவர்களுக்கு அண்மையானவர். அவர் முடிந்தவரை முயல்வார். ஆயினும்…” என்றார்.

சோமதத்தர் “அவர் திருதராஷ்டிரருக்கும் அண்மையானவர். அவர் இருப்பதுவரை விழியிழந்த மன்னர் பாண்டவர்களுக்கு உகந்ததையே செய்வார்” என்றார். ”கௌரவர்கள் பாண்டவர்களை கொல்ல முயன்றிருக்கிறார்கள். அதை பாஞ்சாலத்தில் அத்தனை சூதர்களும் சொல்கிறார்கள். அச்செய்தியை திருதராஷ்டிரர் அறிந்தால் கௌரவர்களை வெறுத்து ஒதுக்குவார். கழுவேற்றவும் ஆணையிடலாம். இனி அச்செய்தியைப்போல பாண்டவர்களுக்கு பெரும்படைக்கலம் பிறிதில்லை. மக்கள் மன்றின் ஏற்பும் குலமூத்தோர் அருளும் அனைத்தும் அவர்களுக்கே இருக்கும். அப்படைக்கலத்தை கௌரவர் வெல்லவே முடியாது.”

தலையை ஆட்டியபடி சோமதத்தர் தொடர்ந்தார் “அவர்களின் யாதவக்குருதியை ஏற்க அங்கே ஷத்ரியர்களுக்கு தயக்கம் இருந்தது. பிறகுலங்களுக்கு யாதவர்மேல் அச்சமும் காழ்ப்பும் இருந்தது. அனைத்தும் இந்த ஒருசெய்தியை உரியமுறையில் பரவவிட்டால் அழிந்துவிடும். அஸ்தினபுரி சினந்தெழுந்து பாண்டவர்களுடன் நிற்கும். அதன் முதல்வராக திருதராஷ்டிர மாமன்னரே இருப்பார். கௌரவர்முதல்வன் செய்ய உகந்தது திரும்பி நகர்நுழையாமல் எங்காவது சென்றுவிடுவதே. தந்தையின் தீச்சொல் தொடரும். ஆனால் கழுவிலேறி சாவதை விட அது மேலானது.”

சுமித்ரர் “ஆம், அவ்வாறே நிகழுமென்று நினைக்கிறேன்” என்றார். “ஆயினும் எனக்கு ஐயமிருக்கிறது. காந்தாரர் சகுனி எல்லையற்ற ஆற்றல் கொண்டவர். அவர் காணும் வழியென்ன என்று இங்கிருந்து நாம் அறியமாட்டோம்.” சல்லியர் நிமிர்ந்து பூரிசிரவஸை நோக்கி “இளையோனே, நீ எண்ணுவதென்ன?” என்றார்.

பூரிசிரவஸ் தலைவணங்கி “நாம் எண்ணமறந்தது ஒன்றுண்டு. மூத்தபாண்டவரின் அகம். அவரை தருமன் என்று போற்றுகின்றனர் சூதர். யுதிஷ்டிரர் ஒருபோதும் தன் இளையோர் செய்த பிழையை தந்தையிடம் சொல்ல மாட்டார். அச்சொல் வழியாக அவர்கள் கழுவேறுவார்களென்றால் அது மூதாதையரின் தீச்சொல் எழ வழிவகுக்கும் என அறிந்திருப்பார். இன்று கௌரவர் செய்த பிழையை எண்ணி அவருடன் சேர்ந்து நிற்கும் அஸ்தினபுரியின் குடிகளும் குலங்களும் கௌரவர்கள் தெய்வமானார்கள் என்றால் அவர்களையே வழிபடுவர். தந்தையின் விழிநீர் விழுந்த மண் வாழாதென்று அறியாதவரல்ல யுதிஷ்டிரர்” என்றான்.

“ஆனால் அவர் பொய் சொல்லா நெறிகொண்டவர் என்று சொல்கிறார்கள்” என்றார் சுமித்ரர். “சௌவீரரே, தீங்கிலாத சொல்லே வாய்மை எனப்படும்” என்றான் பூரிசிரவஸ். சல்லியர் தலையை அசைத்து “ஆம், அது உண்மை” என்றார். “யுதிஷ்டிரர் அஸ்தினபுரிக்கு செல்லமாட்டார் என்றே நினைக்கிறேன்” என்று பூரிசிரவஸ் தொடர்ந்தான். ”கௌரவர் செய்த பிழை வெளிப்படாமல் அவர் அஸ்தினபுரிக்கு சென்றாலும் பெரும்பயன் ஏதுமில்லை. அவருக்கு முடிசூட்ட திருதராஷ்டிர மன்னர் முயல்வார். குடிகளில் பாதிப்பேர் அவரை ஏற்கமாட்டார்கள். பிளவுண்ட குடிகளுக்கு சகுனியும் துரியோதனரும் தலைமைகொள்வார்கள். அஸ்தினபுரியில் ஒருகணமும் அமைதி நிலவாது. அத்தகைய ஒரு நாட்டை ஆள யுதிஷ்டிரர் விரும்பமாட்டார்.”

“அவர் என்ன செய்வார் என்று நினைக்கிறாய்?” என்றார் சோமதத்தர். “அவர் நெறிநூல் கற்றவர். பொறுமையே மிகப்பெரும் படைக்கலன் என்று அறிந்தவர். பாஞ்சாலத்தில் இருப்பார். அல்லது தன் தம்பியருடன் யாதவ கிருஷ்ணனின் புதியநகருக்கு செல்வார். அங்கிருந்தபடி காத்திருப்பார். தன் தந்தை இருக்கும் வரை அஸ்தினபுரியை எவ்வகையிலும் எதிர்க்க மாட்டார்.” சற்று சிந்தித்தபின் “அவர் யாதவபுரிக்கே செல்வார். ஐயமில்லை. ஏனென்றால் இப்போது அவருக்குத்தேவை தன் இளையோருக்கான ஷத்ரிய மணமகள்கள். பாஞ்சாலத்தின் சமந்தர்களாக அமர்ந்துகொண்டு அந்த இலக்கை அடையமுடியாது” என்றான்.

அவர்களின் நெஞ்சில் எழுந்த எண்ணத்தை உடனே தொட்டுக்கொண்டு பூரிசிரவஸ் தொடர்ந்தான் “ஆம், யாதவர்கள் என்ற குறை அவர்கள் மேலிருக்கையில் யாதவபுரியில் இருப்பது பிழையே. ஆனால் மூத்தோரே, யாதவபுரி இன்று பெருவல்லமை கொண்ட நாடு. அதன் தூதன் வைரம் பதித்த பொற்தேரில் எந்த நாட்டுக்குள்ளும் நுழையமுடியும். பட்டில் சுற்றிய உடைவாளை கொண்டுசெல்லமுடியும்.”

சல்லியர் சற்று நேரம் தலைகுனிந்து சிந்தித்த பின் “ஆம், அதுவே நிகழுமென்று எண்ணுகிறேன். இன்றிருக்கும் நிலை இப்படியே தொடர்வதற்கே வாய்ப்பு” என்றார். “இது நமக்கு இறையருள் அளித்த வாய்ப்பு. நாம் பெருந்தேர்கள் ஓடும் சாலையில் சகடம் பட்டுச் சிதறும் கூழாங்கற்கள். ஆனால் நாமும் இங்கே வாழ்ந்தாகவேண்டும்…” பின் கண்களில் ஒளியுடன் நிமிர்ந்து “நாம் என்னசெய்யவிருக்கிறோம்?” என்றார்.

“நாம் என்றால்…?” என்றார் சோமதத்தர். “நீங்கள் பாண்டவர்களின் மாதுலர்… உங்கள் தங்கையின் மைந்தர்கள் அவர்களில் இருவர்.” சல்லியர் கையை சற்று அசைத்து அதைத் தடுத்து “அதுவல்ல இங்கே பேசவேண்டியது. அரசர்களாக நாம் நம் குடிகளுக்கு மட்டுமே கடன்பட்டவர்கள்” என்றார். வலியுடன் முகம் சுளித்து தன் கையை மெல்ல அசைத்து நிமிர்ந்து அமர்ந்து “பால்ஹிக குலத்தின் முதல் எதிரி இன்று யார்?”என்றார். அவர்கள் அவர் சொல்லப்போவதென்ன என்பது போல் நோக்கினர்.

சுமித்ரர் மெல்லியகுரலில் “காந்தாரர்” என்றார். பிறர் அவரை திரும்பி நோக்கியபின் தலையசைத்தனர். “ஆம், அவர் எதிரியே. ஆனால் முதல் எதிரி அல்ல” என்றார் சல்லியர். ”சௌவீரரே, பால்ஹிகரே, நமக்கு முதல் எதிரி கூர்ஜரத்தை உண்டு வளர்ந்துவரும் யாதவனே!”

அங்கிருந்த அனைவருமே அவரை கிளர்ந்த முகத்துடன் நோக்கினர். “நாடுகளை படைகளைக் கொண்டு மதிப்பிடலாம். ஆனால் அரசுகளை ஆள்பவனைக்கொண்டே மதிப்பிடவேண்டும். சகுனி பாரதவர்ஷத்தை வெல்லும் கனவுள்ளவன். ஆனால் அது பின்னர். அவனிடம் நாம் பேசமுடியும். ஆனால் இன்றே இப்போதே என எழுந்து வருபவன் யாதவகிருஷ்ணன். அவனுடைய கடல்முகநகரம் ஒவ்வொரு நாளும் வளர்கிறதென்கிறார்கள். பாரதவர்ஷத்தில் இன்று அதுவே பெருநகர் என்கிறார்கள்.”

அவர் சொன்னபோதே அனைவரும் அதை முன்னரே உணர்ந்திருந்தார்கள் என்பது முகங்களில் தெரிந்தது. சற்று ஒலிமாறிய குரலில் சல்லியர் சொன்னார் “சுமித்ரரே, பாண்டவர்கள் படைகொண்டு வந்து உங்கள் நாட்டை வென்று உங்கள் தமையன் விபுலரைக் கொன்று மீண்டு சில வருடங்களே ஆகின்றன. இன்னமும் அந்த வடுக்கள் உங்கள் கோட்டையில் இருக்கும்.” சுமித்ரர் தன்மேல் ஒரு கல்விழுந்தது போல உடலசைந்தார். இரு கைகளையும் கூப்பியது போல தன் வாய்மேல் வைத்துக்கொண்டார்.

”சௌவீர மணிமுடி இன்று உங்களிடம் இல்லை சுமித்ரரே. அது அங்கே அஸ்தினபுரியில் இருக்கிறது. யாதவப்பேரரசி அதை தன் தலையில் சூடி அரியணை அமர்ந்து பெருங்கொடையாடல் நடத்தியிருக்கிறாள். இன்று சௌவீரநாட்டுக்கு உண்மையான ஆட்சியாளர் குந்திதேவிதான். எந்த வைதிகரும் வேள்விக்கென உங்களிடம் கோல்தர மாட்டார். நீங்கள் நாடற்றவர்.” நீர்விழும் இலை போல அச்சொற்களைத் தவிர்க்க சுமித்ரரின் உடல் நெளிந்தது.

கசப்பு நிறைந்த முகத்துடன் சல்லியர் சொன்னார் “பாஞ்சாலத்தின் அரசப்பேரவையில் உங்களை அரசவரிசையில் அமர்த்தாமல் சிற்றரசர்கள் நடுவே அமரச்செய்தபோது என் நெஞ்சு அதிரத் தொடங்கியது. நான் காண்பதென்ன என்று சில கணங்கள் என் உள்ளம் அறியவில்லை. அறிந்தபோது எப்படி என்னை அடக்கிக்கொண்டேன் என்று எனக்கே தெரியவில்லை. என் நடுங்கும் கைகளை கோர்த்துக்கொண்டேன். அங்கே என்னால் அவையிலமரவே முடியவில்லை.”

உதடுகளைக் கடித்தபடி சுமித்ரர் தலைகுனிந்தார். அவரது இமைகளில் விழிநீர்த்துளிகள் தெரிகின்றன என்று பூரிசிரவஸுக்கு தோன்றியது. சல்லியர் தாழ்ந்த கரகரத்த குரலில் “அனைத்தும் என் பிழையே என்று எண்ணிக்கொண்டேன் சௌவீரரே. பாண்டவர்கள் உங்கள் மேல் படைகொண்டு வந்தபோது நான் என் படையுடன் வந்து உங்கள் தோள்சேர்ந்து நின்றிருக்கவேண்டும். உங்களுக்காக குருதி சிந்தியிருக்கவேண்டும். உங்களுக்காக எங்கள் படைகள் இறந்திருக்கவேண்டும். அதைப்போல பாரதவர்ஷத்திற்கு நாம் அளிக்கும் செய்தி பிறிதொன்றில்லை. உண்மையில் அது நல்வாய்ப்பு” என்றார்.

இடக்கையை விரித்து தலையை அசைத்தார் சல்லியர். “ஆனால் நான் தயங்கிவிட்டேன். நான் செய்தியறிந்து சினம் கொண்டு எழுந்தேன். என் அமைச்சர்கள் அது மத்ரநாட்டை இக்கட்டிலாழ்த்தும் என்றனர். பாண்டவர்களின் பெரும்படையுடன் நான் பொருத முடியாது என்றனர். பாண்டவர்கள் என் தங்கையின் மைந்தர், எனவே என் குருதி என்று வாதிட்டனர். அவர்களின் சொற்களை நான் ஏற்றுக்கொண்டேன். அரியணையில் அமர்ந்து தலையை பற்றிக்கொண்டேன். பின்னர் எழுந்துசென்று மகளிர்மாளிகையில் புகுந்து மதுவுண்டு மயங்கினேன்.”

“நான்குநாட்கள் மகளிர்மாளிகைவிட்டு எழவில்லை. மதுவின் போதைக்குள் இருந்தேன். பின்னர் செய்திவந்தது, விபுலர் களத்தில் பட்டார் என்று. நானும் அவரும் இளமையில் மலைமடிப்புகளில் நாட்கணக்காக புரவியேறிச்சென்று மறிமான்களை வேட்டையாடியிருக்கிறோம். மிக அண்மையெனத்தெரியும் மறிமான்கள் கண்தொட்டு காலெட்டா தொலைவிலிருப்பவை என்று எண்ணி எண்ணி வியந்த நாட்கள் பல. ஏங்கி முதிர்ந்தோம். கனவுகளை நெருப்பருகே அமர்ந்து பகிர்ந்துகொண்டோம். பின் இந்த மலைமடிப்புகளுக்குள் வாழ்ந்து மறையும் வாழ்வையே கனவும் காணமுடியும் என்று அமைந்தோம்.”

“அங்கே கீழே மக்கள் செறிந்த நாடுகளை புழுத்தஊன் என்பார் விபுலர். அவை அழுகி நாறுகின்றன. ஊன் முடிந்ததும் ஒன்றையொன்று தின்கின்றன புழுக்கள். நிறைய புழுக்களை உண்டு பெரும்புழுவானது அரசனாகிறது. இங்கே அரசன் என்பவன் ஓநாய்க்கூட்டத்தின் வேட்டைத்தலைவன் மட்டுமே என்பார். சௌவீர அரசு ஷத்ரிய அரசுகளைப்போல ஆனதே பெரும்பிழை என்பார். மீண்டும் குலச்சபை அரசை கொண்டுவரவேண்டும் என்பார்.”

இருள் சூழ்ந்துவிட்டிருந்தது. அப்பால் தீயில் கோதுமை அடைகளை கம்பிகளில் கோர்த்து நெருப்பில் சுட்டுக்கொண்டிருந்த மணம் புகையுடன் காற்றிலெழுந்து அவர்களை சூழ்ந்தது. அந்த நெருப்பின் ஒளியில் கூடாரங்களின் பக்கங்கள் புலரிபட்ட மலைமுடிகள் என செம்மைகொண்டு தெரிந்தன. மலைச்சரிவுக்கு கீழே எங்கோ காற்று ஓலமிடும் ஒலி எழுந்தது. மிக அப்பால் பாறைக்கூட்டம் ஒன்று இடிந்து சரிந்திறங்குவது மலை இருளில் நகைப்பதுபோல் ஒலித்தது.

சல்லியர் நிமிர்ந்து நோக்கி கைகளை விரித்து “சரி, அதைச் சொல்ல இனி என்ன தயக்கம்? இனி ஆடை எதற்கு? அணிகலன்கள்தான் எதற்கு?” என்றார். கடும் வலி தெரிந்த முகத்துடன் “சௌவீரரே, அமைச்சர்கள் சொன்னவற்றை ஏற்றுக்கொண்ட உள்ளம் என்னுடையதே. நான் சொல்லவிழைந்ததையே அவர்கள் சொன்னார்கள். அதை நான் விழையவில்லை என்பதெல்லாம் நானே என்னிடம் ஆடிய நாடகம். நான்கு நாட்கள் மதுவுண்டு களித்து நான் ஒருபோதும் இருந்ததில்லை. மனிதன் தெய்வங்களிடமே மிகவும் பொய்யுரைக்கிறான்” என்றார்.

“சௌவீரரே, நான் அவர்களின் மாதுலன் என்பதனால் அவர்களின் பெரும்படை என் நாட்டை வெல்ல வராது என்று எண்ணினேன். அது எனக்கு ஆறுதல் அளித்தது. நானும் அவர்களும் ஒரே குருதி என்ற நிகர்படுத்தலை நான் அடைந்ததே அதனால்தான். அது நான் ஒளிந்துகொண்ட புதர். வேறொன்றுமில்லை” என்று சல்லியர் தொடர்ந்தார். “கோழைத்தனம். அச்சொல் அன்றி வேறெதுவும் பொய்யே… வெறும் கோழைத்தனம்.”

சுமித்ரர் “அதிலொன்றுமில்லை சல்லியரே. நானாக இருந்தாலும் அதையே செய்திருப்பேன்…” என்றார். சோமதத்தர் மெல்ல அசைந்து “நான் செய்ததும் அதைத்தான். அவர்கள் என்மேல் படைகொண்டு வரக்கூடாதென்று என் மூதாதையரை வேண்டியபடி அரண்மனையில் அஞ்சி அமர்ந்திருந்தேன். இந்த சுவர்ணகனகர்களைப்போல ஆழ வளை எடுத்து அடிமண்ணில் சென்று சுருண்டுகொள்ள எண்ணினேன்” என்றார்.

சல்லியர் “பாஞ்சாலத்தின் மணத்தன்னேற்பு அவையில் எப்படியோ என் பிழைக்கு நிகர்செய்யவேண்டுமென்று எண்ணினேன். ஆகவேதான் பாண்டவர்களுடன் போரிட்டேன். இந்தப் புண் நன்று. இது எனக்கு ஒரு நிறைவை அளிக்கிறது. என்னளவிலேனும் நான் ஈடுசெய்துவிட்டேன். சுமித்ரரே, நீங்கள் அடைந்த உளவலியில் சிறிய பகுதியை உடல்வலியாக நானும் அடைந்திருக்கிறேன்” என்றார்.

“என்ன பேச்சு இது” என்றார் சுமித்ரர். மெல்ல கைநீட்டி சல்லியரின் கையை தொட்டு “நானும் சொல்லியாகவேண்டும். மாத்ரரே, இக்கணம் வரை நான் உங்களை ஆழ்நெஞ்சில் வெறுத்தேன். அஸ்தினபுரியின் சமந்தர் என்பதனால் உங்களை என் எதிரியென்றே எண்ணினேன். பாண்டவர்கள் உங்கள் உளவுப்படைகளின் உதவியுடன்தான் எங்கள் மேல் படைகொண்டுவந்தார்கள் என்று என் ஒற்றன் ஒருவன் சொன்னான். அதை நான் முழுமையாகவே நம்பினேன்” என்றார்.

சுமித்ரர் கைகளை எடுத்துக்கொண்டு முகம் திருப்பி “உங்களை என்னால் பகைக்க முடியாது. நீங்கள் என் அண்டைநாடு. ஆனால் என் நெஞ்சு முழுக்க வஞ்சம்தான் இருந்தது. என்றோ ஒருநாள் என் வழித்தோன்றல்கள் உங்கள் தலைகொள்ளவேண்டும் என்று விழைந்தேன். பீமன் உங்களை அடித்தபோது நீங்கள் சாகக்கூடாது என்று நான் எண்ணினேன், என் குலத்தவரால் கொல்லப்படுவதற்காக” என்றார்.

சல்லியர் புன்னகையுடன் “அந்த எண்ணங்கள் முற்றிலும் சரியானவையே” என்றார். “இப்போதுகூட உங்கள் குலத்து இளையோன் கையால் நான் கொல்லப்படுவேன் என்றால் அதுவே முறையாகும்.” சுமித்ரர் “என்ன பேச்சு இது” என அவர் கையை மீண்டும் தொட்டார். “நாம் ஒரே குருதி.” சல்லியர் தலைகுனிந்து உதடுகளை அழுத்திக்கொண்டார். பின் நெடுநேரம் தீயின் ஓசைதான் கேட்டுக்கொண்டிருந்தது.

அனைத்து வெண்முரசு விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்