வெண்முகில் நகரம் - 19

பகுதி 6 : ஆடியின் அனல் – 3

எழுதல்

தேவி, நீ விழிதிறக்காத இவ்வாலயத்தின் முகப்பில் வெண்ணீறால் உடல்மூடி வெள்ளெருக்கு மாலைசூடி மண்டைக்கலம் இரண்டேந்தி திசையாடை அணிந்து தனித்தமர்ந்திருக்கிறேன். என்தலைக்குமேல் ஒளிர்ந்து வற்றி மெல்ல முகில்மூழ்கி மறைகிறது நிறைவற்ற மதி. இங்கு நிகழ்ந்து நிகழ்ந்து மறையும் நனவுக்கனவிலெழுந்த குகைமுனை வெளிச்சமென நீ அகன்றகன்று செல்லும் என் காலம் சுருள் விரித்து நீண்டு நீண்டு எல்லைகளில்லாது விரியும் இத்தனிக்கணத்தில் என்னையாளும் ஒற்றைப்பெருஞ்சொல் நீ.

புலரி

ஓம்! சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்! இவையனைத்தும் நீ. நீயன்றி ஏதுமில்லை. நீ உன்னை அறியும் இப்பெருங்களியாடல் கோடிகோடி கைகளின் கொந்தளிப்பு. கோடிநாவுகளின் ஓங்காரம். கோடிவிழிகளின் ஒளி. எழுக எழுக எழுக!.உன்னில் எழுபவை உன்னில் அடங்குக!. தேவி நீயன்றி பிறிதில்லை. தேவி நீ நிகழ்க இங்கு! நீயே எஞ்சுக இங்கு! இங்கு. இங்கு. இங்கு. இக்கணம். இக்கணம். இக்கணம். இதில். இதில். இதில். இங்கிக்கணமிதில். ஆம்!

சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம் !நீ நீ நீ. நீயொரு தனிச்சொல். சொல்லெனும் தனிமை. தனிமையெனும் சொல். சொல்லிச்சொல்லி எஞ்சும் தனிமை. இலைகள் துழாவும் தனிமை. வேர்கள் தேடியமையும் தனிமை. சிறகுகள் மிதக்கும் தனிமை. உகிர்கள் அள்ளியள்ளி நெரிக்கும் தனிமை. சிறைகள் அலைபாயும் தனிமை. செவுள்கள் உண்டுமிழும் தனிமை. தனிமையில் எஞ்சும் சொல். தேவி! நீ நீ நீ! த்வம்! த்வம்! த்வம்! ஸ்வம்! ஸ்வம்!.ஸ்வம்!

எழுக தேவி! ஐந்துமுடி கொண்ட காலம் முதல் அகத்திலமர்ந்தவளே. ஐங்குழலாளே. ஐந்தவித்து ஐந்தில் உறைந்து ஐந்தொழிலாக்கி அழிவின்றி எஞ்சும் ஆழ்நிலையே.கருவுண்டு குகைதிறந்து குருதியுடன் உமிழ்ந்து கொன்றுண்டு சிரிக்கும் குமரி நீ. ஐந்துமுகம் கொண்டவள். ஐந்து சொல்கொண்டவள். ஐவரொன்றானவள். எழுக தேவி! கொலைவேல் கொற்றவை. குவைப்பொருள் இலட்சுமி. குன்றா சரஸ்வதி. குன்றொளி சாவித்ரி. கொஞ்சும் ராதை. அன்னையே எழுக!

எழுக தேவி! இது புலர்காலை. ஐங்குருதி ஆடிய கருநெடுங்குழலி. ஐந்தென விரிந்த ஆழிருள் அரசி. எழுக என் தேவி! என் தேவி. என் குருதிமுனைகொண்டு எழுக! குருதி உண்டு கண்விழிக்கட்டும் என் சிறு குழவி. ஒற்றைவிழிக் குழவி. குழவிகண் சுட்டும் இத்திசை எழுக! இருள்கவிந்த என் விழிமுனை நோக்கும் இத்திசை எழுக! என் நெற்றி பீடத்தில் எழுந்து பேரொளி செய்க! எழுக, இங்கென்றெழுக! இக்கணம் தொடங்குக அனைத்தும்!

தேவி! ஓம், ஹ்ரீம், த்வம். ஓம் ஹ்ரீம் ஸ்வம்! ஓம் ஸ்ரீம் ஹம்! இதோ நீ எழுகிறாய். முதல்முகிலின் முறுவல். முதல் வானின் முதல்முகிலின் முறுவல். முதல் முறுவல். முதல் கதிர். முதல் வலி முனகல். இருளின் விலாவதிரும் முதல் அசைவு. இருளின் எழும் கருக்குருதி மணம். ஆம் என்கிறது கரிச்சான். ஆம் ஆம் ஆம் என்கின்றது இருள். ஓம்! ஸ்ரீம்! ஹம்!.

விரிகின்றன கருதொடைகள். புன்னகைத்து நெகிழ்ந்து குருதியுமிழ்கின்றது நிலைநேர்விழி. பிறந்து எழும் கரிய குழவியின் புன்தலை. துடித்துத்துடித்து பதறியமைகின்றது அதன் செவ்விதழ்ச் சொட்டு. தேவி, இங்கெழுந்தாய். இதுநான் இதுநான் என்றெழுகின்றன நீயென்றானவை. எழுகின்றதொரு சித்தம். எழுகின்றதொரு பித்தம். எழுந்து விரிந்தாடுகின்றது அகாலப்பெருங்காலாகாலம்! இவ்விடம் இக்காலம் இது இனி என்றானது. கரியுரித்தெடுத்த இருள்வெளி! மதகரி உரித்த கடுவெளி!

இருநிலவு எழுந்த இரவு. மானும் மழுவும் புலித்தோலும் சூலமும் ஓடும் செவ்விழி நுதலும் விரிசடை வெண்ணிலாக்கீற்றும் விரிவரிப்பல்லும் வெங்கனல் விழியும் இன்றென எழுக! இவ்விதமாகுக. நின்றெழுந்தாடி நிலையழிந்தாடி சென்றவை வந்தவை வானில் நின்றவை எல்லாம் நில்லாதொழிய கொன்றவை எல்லாம் மீன்கணமாகுக! கொற்றவை அணியும் மணிச்சிலம்பாகுக! கொன்றவை எழுக! கொற்றவை எழுக! இக்கணம் எழுக! இங்கொரு காலமும் வெளியும் கடுவிசை திசைகளும் துளித்து சொட்டுக! சொட்டி உடைந்து சூரியர் எழுக!

எழுகின்றன சூரியகோடிகள். விண்மீன் முடிவிலிகள். எழுகின்றன சொற்கள். எழுந்தமைகின்றன தேவி புடவிப்பெருவெளிப்பெருக்கலைகளெழும் இன்மை. இன்றிருக்கும் உன்னில் இனியிருக்கும் உன்னில் உண்டுமுடித்தெழும் வேங்கையின் செந்நாவென சுழன்றெழுகின்றது காலை. கன்னிக்கருவறை ஊறிய புதுக்குருதியெனக் கசியும் இளங்காலை.

தோலுரிந்த பசுந்தசை அதிரும் யானை . துடிதுடிக்கின்றது செந்நிணப் புதுத்தசை. வலியில் பெருவலியில் உயிர் அமர்ந்து துள்ளும் அணுப்பெருவலியில் இழுத்திழுத்தடங்கும் செவ்விளஞ்சதை. யானை. செந்நிற யானை. உருகி வழிந்தோடும் பெருகுருதி ஊறும் சிறுமலை. யானை. தோலுரித்த யானை. கால்சுற்றி கழலாகும் கொழுங்குருதிப் பெருக்கில் தேவி, காலையென்றானவளே.பொன்னொளிர் கதிரே, எழுக எழுக எழுக!

உன் விரல்தொட்டு எழுகின்றன ஐந்து இசைகள். வீணையும் குழலும் முழவும் சங்கும் முரசும் சொல்வது ஒற்றைப் பெருஞ்சொல். ஓம் ஸ்ரீம் ஹம்! நீலம் வைரம் பத்மராகம் முத்து பவளம் என்று ஐந்து மணிகளாக மின்னுவது ஒரு பெயர். காமினி, காமரூபிணி, கரியவளே. கொள்க இச்சிறுசெம்மலர்! ஓம் ஸ்ரீம் ஹம்!

காலை

சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்! ஓம். புற்றெழுந்து பெருகின ஈசல்கள். புழைவிட்டெழுந்தன விண்மீன் வெளிகள். கோள்கள். கோள்வெளிகொண்ட சூல்கள். சூல்கொண்டவளே. சூலி. சூலப்பெருங்காளி. காலப்பெருக்கே. கன்னங்கரியவளே. வருக! செயல்களாகி வருக! கோடி வேர்களாகி வருக! கோடானுகோடி இலைத்தளிர்களாகி எழுக! மலர்களாகி விரிக! மண்ணில் விண்ணென நிறைக! ஓம் ஹ்ரீம் த்வம். ஓம் ஹ்ரீம் ஸ்வம்! ஓம் ஸ்ரீம் ஹம்!

பொன்னொளிர் காலையில் உன்னை மணந்து மாலைசூடி வந்தன குறையாச் செல்வங்கள் ஐந்து. செல்வங்கள் எழுந்து உன்னைச்சூழ்ந்தன. செல்வத்திலுறையும் உன்மேல் காமம் கொண்டன. முத்தெய்வம் கொண்ட காமம். முனிவர் கொண்ட காமம். மாமயிடன் கொண்ட காமம். மானுடரெல்லாம் கொள்ளும் காமம். தேவி, உன் ஒளிமுலைக் கண்களின் நோக்கு. உன் இருகை நகவிழி நோக்கு. உன் இளம்பாத நகமுனை நோக்கு. உன் கருபுகை எழுந்த செஞ்சுடர் விழி கொண்ட நோக்கு.

தேவி, இதோ மித்ரன் உன் வலக்காலில் அமர்ந்திருக்கிறான். பண்டிதன் உன் இடக்காலுக்கு பணிசெய்கிறான். ஸௌர்யன் உனக்கு கவரி வீச அனாலஸ்யன் குடைநிழல் சூட முதல்வனாகிய சுசீலன் உன்னை புணர்கிறான். பொந்தில்நுழைந்தது மணியுமிழ் நாகம். பொந்தில் சுருண்டது கருவறை நாகம். புழையிலமைந்தது அருஞ்சுருள் காலம். காலச்சுருளில் அமைந்தது நஞ்சு. கடுந்துடிகொட்டும் கருமுகில் விசும்பு.

சுசீலன். நன்னெறியன் தேவி, அவன் உன் சொல்கண்டு காமம் கொண்டவன். உன் விழிகாணாது காமம் கொண்டவன். கனைத்து சிலிர்த்து கால்தூக்கி எழுந்தது செந்நிறக்குதிரை. வால்சுழற்றி பிடரி வீசி திமிறியெழுந்தது செந்நிறப்பெருங்கனல். திசைவெளிகளில் திகைத்துச் சுழன்றன. கரிய நாகங்கள் சுருளவிழ்ந்து சீறி விழி மின்னும் இருண்ட பாதைகளில் செல்பவன் யாரவன்? மாமலையடுக்குகளில் இடி ஒலிக்கிறது. முகில்குவைகளில் மின்னல் சீறுகிறது. தன்னந்தனிமையில் அவன் இருண்ட பிலமொன்றில் மறைகிறான்.

பிலம். பிளந்த பெரும்பிலம். செங்கனல் உறையும் கரும்பிலம். தேவி,அதன் வாயிலின் மேல் படம்கொண்டு எழுந்த நஞ்சுமிழ்நாகத்திற்கு வணக்கம். அதன் நூறு செஞ்சதை கதவிதழ்களுக்கு வணக்கம். மதமெனும் தேன்கொண்ட பெருமலர். ஞாலப்பெருவெளியை ஈன்ற கருமலர். தலைகீழ் சிவக்குறி. சூழ்ந்த இருள்சோலை. தேவி. ஊனில் நிகழ்ந்த ஊழிப்பெருஞ்சுழி.

உன் விழிகண்டு சொல்காணாதவன் ஸௌர்யன். உன் கைகளையே கண்டவன் அனாலஸ்யன். உன் கால்கள் கண்டு காமம் எழுந்தவர்கள் பண்டிதனும் மித்ரனும். ஐவரும் நுழைந்து மறைந்த அகழிக்கு வணக்கம். அங்குறையும் காரிருள் வெளிக்கு வணக்கம். அதற்கப்பால் எழுந்து வெடித்து சிதறி மறையும் பேரிடிப்பெருநகைப்புக்கு வணக்கம். பித்தமெழுந்த பெருநிலை நடனம். சித்தமழிந்த சிவநிலை நடனம்! தத்தமி தகதிமி தாதத் தகதிமி. பெற்றதும் உற்றதும் கற்றதும் கரந்ததும் செற்றதும் சினந்ததும் சீறித்தணிந்ததும் மற்றதும் மடிந்ததும் மாணச்சிறந்ததும் எற்றி எகிறிட எழுந்தருளாடி நின்றிருள் வாழும் நிலையழி காலம். துடிதுடிதுடிதுடி துடியொலி திமிறும் காரிருள் காலம்.

தனித்தவளே. தன்னந்தனித்தவளே. உண்டுண்டு நிறையா ஊழிப்பெருந்தீயே. அன்னையே. ஆயிரம்கோடி அல்குல்கள் வாய் திறந்த இருள்வெளியே. சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்! சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்! தேவி! ஓம் ஹ்ரீம் த்வம்! ஓம் ஹ்ரீம் ஸ்வம்! ஓம் ஸ்ரீம் ஹம்! உண்ணுக உண்ணுக உண்ணுக, இப்புவி உன் பலி. இப்புடவி உன் பலி. இவ்விசும்பு உன் பலி. இக்கடுவெளி உன் பெரும்பலி. நிலம் நீர் தீ காற்று வானம் என எழுந்த ஐம்பெரும் பருவும் உன் பலி. ஐந்து பலிகொண்டவளே. ஐங்குழல்கன்னியே. ஐந்திருள் முடியே. ஐந்துவெளியின் ஆழமே. ஆழ்க! ஆழ்க! ஆழ்க!

இளங்காலைகளின் அரசி. காதலின் கனவுகளின் தென்றலின் தோழி. மலர்ப்பொடியின் சிலந்திவலையின் பட்டுக்கூட்டின் இளம்புழுதியின் இறகுப்பிசிறின் மென்மழையின் பனிப்பொருக்கின் இறைவி. மெல்லியவளே. நறுமணங்களை முகரச்செய்யும் உள்மணமே. வண்ணங்களை காணவைக்கும் விழிவண்ணமே. சுவைகளை தொட்டுணர்த்தும் நெஞ்சினிமையே. இசையை எதிர்கொள்ளும் கனவிசையே இக்கணம் உன்னுடையது. நீ திகழ்க!

மெல்லிய காற்றால் தழுவப்படுகிறேன். தேவி, மலர்மணங்களால் சூழப்படுகிறேன். தேவி, இனிய பறவைக்குரல்களால் வாழ்த்தப்படுகிறேன். தேவி, அழியாத ஒற்றைச் சொல்லால் வழிநடத்தப்படுகிறேன். ஆடைகளைக் களைந்து அன்னையை நோக்கி கைவிரித்தோடுகிறேன். காமினி, காமரூபிணி, கரியவளே, கொள்க என் நெஞ்சுருகும் இம்மாமந்திரம். ஓம் ஸ்ரீம் ஹம்!

மதியம்

சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்! ஓம். சுட்டெரிக்கும் அனல்வெளியே. சுடருள் பாய்ந்த விட்டில்களை அறிக! கோடிக்கோடி புழுக்கள் நெளிந்து நெளிந்துமறையும் வெயில். உருகி வழிகின்றன மாமலைகள். கொதித்துக் குமிழியிடுகின்றது கடல். நீயென்றான பகல். நீயேயென்றான வெம்மை. நீமட்டுமேயென்றான சாவு. நீயில்லையென்றான வெறுமை. இங்குள்ளேன் என்னும் முகிழ். இங்குளதென்ன என்னும் இதழ். இங்குளதாதலென்னும் மணம். இங்குள்ளவற்றிலெல்லாம் எஞ்சும் தேன். காமக்கருமை கொண்ட காரிருள் நீ. அடி, என் நெஞ்சத்திரை கிழித்து நேர்நின்று இதயம் தின்னும் செவ்விதழி. என் சிதைநின்றாடும் கருந்தழல். என் சொல்நின்றாடும் முதல்முற்றுப் பொருளிலி.

ஐந்தொழிலோளே. படைத்தல், காத்தல், அழித்தல், மறைதல், அருள்தல் என்னும் ஐந்து ஆடல்கொண்டவளே. உன்னை அள்ளியுண்ணும் ஐந்து பெருங்காமங்கள் அவை. சிருஷ்டன் உன் செவ்விதழை சுவைக்கின்றான். இதோ உன் மென்முலைபற்றுகின்றான் ஸ்திதன். உன் உந்தியில் நாப்புதைக்கின்றான் சம்ஹாரன். பணிந்து உன் செம்பாதங்களில் நாத்தழுவுகிறான் திரோஃபாவன். உன் அல்குலில் ஆழ்கின்றான் அனுக்ரகன். ஐந்து முனைகளில் பற்றி எரிகிறாய். ஐந்தழலுக்கும் அப்பால் நின்று அறிவிழி சினந்து நோக்கும் அறியவொண்ணாதவளே நீ கற்காத காமம்தான் என்ன?

ஐந்து பெருந்துயர்களால் ஆரத்தழுவப்படும் காதலி நீ. பெருந்துயர்கள் தேவி. கொன்று கொன்று தின்று குருதிச்சுவையறிந்த தேவர்கள். இருளிலூறி எண்ணங்களிலேறி வருபவர்கள். கிழிபடுமோசையில் குடிகொள்ளும் கீழோர். வெடிபடு ஒலியொடு கிழிபடுக மண்! இடியெழு ஓதையோடு துணிபடுக விண்! ஓசையின்றி குறைபடுக உள் நெஞ்சு! காறி உமிழப்பட்டவனின் தானிலை. கைவிடப்பட்டவனின் தனிமை. வஞ்சிக்கப்பட்டவனின் நினைவு. முற்றுமிழந்தவனின் முதுமை. எஞ்சியிருப்பவனின் இயலாமை. தேவி, கோடிமுகம் கொண்டு மானுடனில் எழுக! கோடி கைகளால் அவனை கிழித்துண்டு எழுக! திசைமூடி எழுந்த ஆறு பெரும்பாறைகளால் நசுக்குண்டவனின் வெங்குருதியடி நீ!

கொள்க காமம்! தேவி, கலம் நிறைய அள்ளி நிறைக காமம்! மொள்க காமம்! முறைதிகழ மூழ்கி எழுக காமம்! அவித்யன் உன் கால்விரல்களில் முத்தமிடுகிறான். அஸ்மிதன் உன் கைவிரல்களில் முத்தமிடுகிறான். ராகன் உன் இதழ்களை பருகுகிறான். அபினிவேசன் உன் முலைகளில் புதைகிறான். த்வேஷன் உன் தொடைகள் திறந்த கருமலர் இதழ்களில் முத்தமிடுகிறான். தேவி அவன் நெற்றிசூடும் செம்மணி நீ. எழுந்தமரும் கரியபேரலைகளில் எழுந்தமரும் சூரியமொட்டு நீ. சொல்லுக்கு மேல் சுட்டிய பொருள் நீ. பொருளிலியாகிய சொல்லிலி நீ. அறிந்தவரறியாத ஆழம். ஓம் ஸ்ரீம் ஹம்!

இருகருஞ்செவிகளாடும் செம்மலர்சூடிய மத்தகம். இருமரங்கள் ஏந்திய ஒருதேன்கூடு. இரு தூண்கள் தழுவிப் பறக்கும கொடி. செஞ்சிற்றலகு கூர்ந்த சிறுகுருவி அமர்ந்த கூடு. புவிதிறந்தெழுந்த அனல். பூத்த மடல் திறந்தெழுந்த புனல். செம்மை சூடிய கருமுகில். தேவி, முத்தேவர் முழுகியெழும் சுனை.

தேவி, காமமென்றாகி வருக! இவ்வுலகை காமமென்றாகி அணைக! காமமென்றாகி புணர்க! இப்புடவியை காமமென்றாகி உண்க! காமமென்றாகி கொள்க! காலத்தை காமமென்றாகி சூடுக! காமினி, காமரூபிணி, கரியவளே, கொள்க என் நெஞ்சக் குருதி பிசைந்த வெம்மாவு. ஓம் ஸ்ரீம் ஹம்!.

மாலை

சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்! ஓம். சூழுமிருள் உன் சொல்லா? சொல்லுருகி வழியும் குருதி உன் கருவா? உன்னில் கருவுண்டு கால்சுவைத்து ஆலிலைமேல் கைகூப்பி ஒடுங்கிய ஊன்துளி உருகி வழிந்தோடி செங்கதுப்பு சரிவுகளாகி சூழ்ந்திருக்கும் இவ்வந்தி. இருள் எழுந்து எங்கும் பரவ எங்கிருந்தென்றிலாமல் எழுந்துவருகின்றன நாகங்கள். சித்தப்பெருக்குகள். சித்தக்குழைவுகள். சித்தநெளிவுகள். சித்தநுனி விழுங்கும் சித்தத்தலைகள். சித்தச்சுழியின் நடுப்பெரும் பள்ளம். சித்தமெழுந்த பித்தின் இமையாப்பெருவிழிகள். சித்தமெரியும் செங்கனல் இருநா.

ஐந்து பெருநாகங்கள். நாநீட்டி எழுந்துவரும் ஐந்து கரிய படங்கள். நஞ்சுமிழ் வாய்கள். ஐந்து. இமையிலி நோக்குகள் ஐந்து. க்‌ஷிப்தன் உன் வலக்கால் கழல். மூடன் உன் இடக்கால் கழல். சிக்‌ஷிப்தன் உன் இடக்கை வளை. நிருத்தன் உன் வலக்கை வளை. ஏகாக்ரன் தேவி உன் முலைதவழ் மணியாரம். ஐந்து நாகங்கள் தவழும் புற்று. ஐந்து நதிகள் இழையும் மலை. ஐந்து நஞ்சுகள் கொஞ்சும் அமுது. ஐந்து பித்தங்களின் புத்தி. ஐந்து தனிமைகள் அடைந்த சித்தி.

தோலுரிந்த நாகங்கள் நெளியும் வழுக்கு. பீளையும் சலமும் குழம்பும் சழக்கு. ஐந்து பேரிடர்களின் அரசி. பிறப்பு, நோய், மூப்பு, துயர், இறப்பென்னும் ஐந்து அரக்கர்கள் புதைகுழி பிளந்து வேர்ப்பிடிப்பறுத்து எழுந்து வருகின்றார்கள். சீழ்சொட்டும் கைகளுடன் உன்னை தழுவுகிறார்கள். உன் ஐந்து வாயில்களிலும் புணர்கிறார்கள். மலநீரிழியும் மலையில் ஏறும் புழுக்கள். கழிவுப்பெருக்கே, இழிமணச்சுழியே, கீழ்மைப் பெருங்கடலே உனக்கு கோடிவணக்கம்.

ஐந்து மூச்சுகள் எழும் பெண்ணுடல். ஐந்து காற்றுகள் ஆளும் படகு. ஐந்து கொடிமரங்களில் கட்டிய பாய். பிராணன் உன்முலைகளை தாலாட்டுகிறான். அபானன் உன் பின்குவைகளை அணைக்கிறான். சமானன் உன் தோள்களை வளைக்கின்றான். உதானன் உன் உந்திக்கதுப்பில் திளைக்கிறான். வியானன் உன் அல்குல் அகல்சுடரை ஊதி அசைக்கின்றான்.

தேவி, அலைகடலரசி. ஆழ்நீரரசி. அடிக்கூழரசி. அனலரசி. அனலசேர் வெளியரசி. செயலரசி. அசைவிலி. அனைத்துமானவளே. திசையென்றான இருளென்றாகி திகைப்பென்றாகி திணிவென்றாகி தானென்றாகி இங்கெழுந்தவளே. மும்மலமாகி எழுக! நான்கறமாகி எழுக! ஐம்புலன்களாகி எழுக! தேவி, இத்தனியுடலில் நின்றுகனன்றெரியும் இருளே. தேவி, வந்து மலர்ந்த வடிவே. இருளில் இதழிட்ட மலரே.காமினி, காமரூபிணி, கரியவளே, கொள்க சங்கறுத்து சமைத்து வைத்த இம்மாமிசம்! ஓம் ஸ்ரீம் ஹம்!.

இரவு

சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்! ஓம். எழுநிலவென எழுந்தவள் நீயா? இச்சிறுவட்டம் நீயா? விண்ணெழு வெண்தாழி. விரிகதிர் ஆழி. தொட்டுத் தொட்டு மலர்கின்றன ஐம்பெரும் மலர்கள். அரவிந்தம், அசோகம், சூதம், நவமாலிகம், நீலம். ஐந்து மலர்கள் தேவி. அதிலிரண்டு கருமை. இன்கருமை. கரும்பினிமை. நீலம் உன் நிறம். நீலம் உன் விழி. நீலம் உன் குரலின் இடி. நீலம் உன் சொல்லூறிய நஞ்சு. நீலம் உன் அல்குலின் அணையா அனல். நீலம் உன் மதமொழுகும் மலர். கவர்ந்துண்டு களிக்கும் கள்ளி, எழுந்தென் நெஞ்சுபறித்துண்டு நகையடி கூளி!.

தொட்டுத்தொட்டெழுகின்றன பாற்கடல் அலைகள். இலைவிழி இமைப்புகள். அலைக்குமிழ் சுழிப்புகள். ஒளியெழுகின்றது. ஒளியாய் எழுக! கன்னங்கரியவளே எழுக ஒளியாக! மந்தாரம் பாரிஜாதம் சந்தனம் கல்பமரம் ஹரிசந்தனம். ஐந்து மலர்மரங்கள். பூத்த ஐந்து வேர்க்குவைகள். ஐந்து சாமரங்கள். அடி உன் அனலெழுந்த கடலுடல் மேல் ஐந்து தும்பிச்சிறகுகள்.

நிலவெழும் இரவு. கீழ்த்திசை முகில்கள் காண்பதென்ன கனவு? கீழே நிழலிருள் திட்டுகள் கொண்டதென்ன கரவு? திரிபுரப் பெருநகர் நெய்கொண்டிருக்கிறது. கனிந்து வழிகின்றன கோபுரமுகடுகள். ஈரம் ஒளிரும் ஏழ்நிலை மாடங்கள். எரியேறி வருக! தேவி, உன் இடமுலை எறிந்து எரியூட்டுக! எழுக வெங்கனல்! எழுக செவ்வெரி! எழுக விரிகதிர்! எழுந்தாடுக! உருகி வழியும் அவுணர் வெந்நிணம் அவியாக வேள்விக்குளம் நிறைந்தெழுக தீ!

நீல இரவு. இளநீல இரவு. நிலவெழுந்த தனித்த இரவு. முழுநிலவெழுந்த இரவு. யோகப்பெருநிலவெழும் இரவு. தேவி இதோ நான். ஐவரும் ஒன்றாய் அடிபணிந்தமர்ந்தேன். ஐம்முகத்தன்னை விழியொளி தேர்ந்தேன். விண்மீன்களின் விழி பெருகும் இரவு. உருகி வழியும் முகில்களின் இரவு. தேவி, முள்முனை நிழல்கள் கூர்கொண்டு நீளும் கொடுவேளை. நிழல்முட்கள் வேங்கைநகங்களென கிழிக்கக்கிழிக்க தொலைவெளியோடி வந்தேன். தோல்கிழித்து ஊன்கிழித்து உள்ளுறுப்புகள் கிழித்து வெள்ளெலும்புக் கூடென வந்து சிரித்தமைந்தேன். குருதி சொட்டிச்சொட்டிச்சொட்டி காலமென்றாயின கருமுட்கள். குருதியின் காலம். சொட்டும் கொடுநினைவின் காலம். இது நீர்க்கதுப்புகள் வளைந்தமிழும் இரவு. நீளிரவு.

முகில்நிழல் வழிந்த மலைவெளித் தனிமை. முகில்முடி சூடிய மலைமுடித் தனிமை. நிலவை உண்ட கருமுகில் நீயா? இருள்வெளி திறந்த இருவிழி நீயா? விழியொளி காட்டிய கருந்தழல் நீயா? தழல்பிளந்தெழுந்த செம்பிலம் நீயா? எழுந்தெழுந்து தாவியது கைக்குழவி. விழியற்ற குழவி. பசித்த வாய்கொண்ட சிறுகுழவி. வாய்க்குள் வாய்க்குள் வாயெனத் திறந்து குழவியை உண்ட செவ்விருள் நீயா? இருளில் இவ்விருளில் இருளிருளிருளில் ஒருபெருந்தனிமை இருந்தெழுந்தாளும் கருந்தழல்வெளியில் நீயென்றான ஈரத்தழலில். உண்டுநிறைக ஊன்வாய் அனலே! உண்டெழுந்தாடுக ஊனிதழ் மலரே! மலரிதழ் விதையே. உண்டுநிறைக ஊழிப்பெருங்கருவே!

ஐந்து யோகங்கள் தேவி. ருசகம், பத்ரம், ஹம்சம், மாளவம், சசம். ஐந்து பிறப்புகள். ஐந்து இறப்புகள். ஐந்து கொப்பளிப்புகள். ஐந்து இறுதியெல்லைகள். ஐந்து பேரிணைவுகள். தேவி, இவை ஐந்து பலிகள். ஐந்து அருங்கொலைகள். எழுந்தாடியது ஐந்து நாகொண்ட நெருப்பு. பொன்னிறமான தட்சிணம். செம்மலர் நிறம்கொண்ட ஆகவனீயம். நீலமெழுந்த கார்ஹபத்யம். வெண்சுடரான சஃப்யம். கரும்புகை எழும் ஆவஸ்த்யம். அணைந்து நீறி அமைவதென்ன அனல்? ஆறாவது தழல்? அன்னையே. இங்கு ஆகுமிக் காலப்பெருக்கெழுந்த சுழியொரு விழியாகி அமைந்தமைந்தமைந்து ஓடிமறையும் கரியபெருநதியில் என்றேனும் ஏதேனும் நிகழ்ந்ததுண்டா என்ன?

தேவி, ஒளியிருள் வாழும் களிகொள் காளி. திரையென்றாகி திரைமறைவாகி திகழும் விறலி. காமினி, காமரூபிணி, கரியவளே, கொள்க என் பன்னிரு குறிமுனைகள் துடித்துத்துடித்தளிக்கும் இம்மைதுனம்! ஓம் ஸ்ரீம் ஹம்!.

அமைதல்

தேவி உன் கருவறை வாயிலில் கண்விழி மணிகள் ஒளிரக்கிடக்கின்றான் ஒருவன். அவன் நெஞ்சில் மிதித்தெழுந்து உன்னை சூழ்கின்றேன். முப்பத்துமுக்கோடி தேவர்கள் மும்மூர்த்திகள் தலைகளில் மிதித்தேறி உன்னருகே வருகிறேன். மேலே முகிலற்ற பெருவெளியில் எழுந்த பனிச்செந்நிலவு அதிர்கிறது. அதற்கு அப்பால் எழுந்தது வான்நிறைக்கும் பெருநிலவு. கோடிகோடி அண்டங்கள் குவிந்து குவிந்து எழுந்த நிலவு. கொள்ளாக் கோடி இதழ் விரித்த குளிர்நிலவு. குன்றாத் தளிர்நிலவு. ஓம்! தேவி நீ அறிவாயா? சர்வகல்விதமேவாஹம் நான்யதஸ்தி சனாதனம்! இவையனைத்தும் நானே. நானன்றி ஏதுமில்லை. தேவி, நானன்றி நீயுமில்லை. ஓம் ஓம் ஓம்!

அனைத்து வெண்முரசு விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்