வெண்முகில் நகரம் - 13
பகுதி 4 : தழல்நடனம் – 3
கதவு பறக்கும் நாரையின் ஒலியென கூவக்கேட்டு அர்ஜுனன் திரும்ப வாயிலில் மூச்சிரைக்க நின்றிருந்த திரௌபதியை கண்டான். இதழ்களில் புன்னகையுடன் அவளை ஏறிட்டு நோக்கியபடி அமர்ந்திருந்தான். அஞ்சி நெடுந்தொலைவு ஓடிவந்து நின்றவள் போல அவள் உடல் வியர்வையில் நனைந்து மூச்சில் விம்மிக்கொண்டிருந்தது. ஈரமான கழுத்தில் நரம்புகள் அதிர்ந்தன. தோள்குழிகள் அசைந்தன. நீர்மணிகள் ஒட்டிய இமைகளுடன் உதடுகள் ஏதோ சொல்லுக்கென விரிந்து அதிர்ந்திருக்க அவள் நின்றிருந்தாள்.
அவர்கள் விழிகள் கோர்த்துக்கொண்டன. ஒருகணம் அவள் தன் விழிகளை விலக்கினாள். அப்படி விலக்கியமைக்காக சினம்கொண்டு மீண்டும் அவனை நோக்கி “சீ” என்றாள். நஞ்சு உமிழ்ந்த பின் நாகம் என அவள் உடல் நெளிந்தது. அவன் அதே புன்னகையுடன் நோக்கிக்கொண்டிருந்தான். தன் உடலெங்கும் நிறைந்திருப்பது உவகை என உணர்ந்தான்.
அவள் கைகளை நீட்டியபடி உள்ளே வந்து உடைந்த குரலில் “நீ ஆண்மகனா?” என்றாள். அவள் குரல் மேலெழுந்தது. “குலமகள் வயிற்றில் உதித்தவனா? கீழோன், இழிந்தோன்… சிறுமையே இயல்பெனக்கொண்ட களிமகன்” என்று கூவினாள். அர்ஜுனன் அவளை நோக்கி புன்னகைத்து “எதையும் நான் மறுக்கப்போவதில்லை. நான் எவரென்று அனைவருக்குமே தெரியும்” என்றான்.
“பெருநோயாளி நீ… அழுகிச்சொட்டுகிறது உன் உடல். கங்கையில் கைவிடப்பட்ட பிணம் போன்றவன் நீ” என்று அவள் மேலும் ஓர் அடி எடுத்துவைத்து கூவினாள். “எந்தச் சொல்லையும் நான் மறுக்கப்போவதில்லை” என்று அர்ஜுனன் தன் கைகளைக் கோர்த்து அதன்மேல் முகத்தை வைத்துக்கொண்டான். “நீ… நீ…” என்று மேலும் கைசுட்டி கொந்தளித்தபின் திரௌபதி ஒரு கணத்தில் அத்தனை சொற்களாலும் கைவிடப்பட்டு உடல் தளர்ந்து இருக்கையின்மேல் விழுந்து கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழத்தொடங்கினாள்.
அவன் அவள் அழுவதை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். இரைவிழுங்கும் நாகம் போல அவள் கரிய மென்கழுத்து சுருங்கி விரிந்து அதிர்ந்தது. மூடிய கைகளின் விரலிடுக்குகள் வழியாக கண்ணீர் கசிந்தது. அர்ஜுனன் எழுந்து கங்கையை நோக்கி கைகளைக் கட்டியபடி நின்றான். கொதிகலன்ஆவி சீறுவதுபோல அவளிடமிருந்து எழுந்த ஒலிகளை கேட்டுக்கொண்டிருந்தான். பின் அவள் உடைகள் நலுங்கும் ஒலி எழுந்தது. அணிகள் மெல்ல குலுங்கின. அவன் சித்தம் செவியிலிருந்தது. வளையல்களை பதக்கமாலையின் உலைவை கேட்டான். காதிலாடிய குழையிலிருந்த சிறிய மணிகளின் கிலுங்கலைக்கூட பிரித்தறிந்தான்.
அவள் நீள்மூச்செறிந்தபோதுதான் அவன் திரும்பவேண்டுமென எதிர்பார்க்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. அவ்வெண்ணமே புன்னகையை அளிக்க அவன் கங்கையை நோக்கி நின்றான். அவன் புன்னகை தோள்களிலேயே வெளிப்பட்டிருக்கக் கூடும். அவள் சீற்றத்துடன் அணிகள் சிலம்ப எழுந்து அருகே வந்து “இதன் மூலம் என்னை அவமதிக்கிறாயா என்ன?” என்றாள். அர்ஜுனன் திரும்பி அவள் விழிகளை நோக்கி “எதன்மூலம்?” என்றான்.
”நான் வரும்போது மாயை அவளுடைய அணிப்படகில் செல்வதை கண்டேன். அவளை மிகத்தொலைவில் கண்டதுமே என் அகம் உணர்ந்தது அவள் ஏன் வந்தாள், எதற்குப்பின் திரும்புகிறாள் என்று. என் நெஞ்சு முரசறைந்தது. அவளை விட்டு விழிகளை விலக்க என்னால் முடியவில்லை. அவளுடைய படகு என்னை அணுகியதும் அவள் எழுந்து நின்றாள். என்னிடம் ஏதோ சொல்லப்போகிறாள் என எண்ணினேன். எச்சொல் பேசினாலும் நான் என் பொறையுடைந்து கூச்சலிட்டிருப்பேன். ஆனால் அவள் தன் கைகளைத் தூக்கி கொண்டையிலிருந்து தொங்கிய வாடிய மலர்ச்சரத்தை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு புன்னகைசெய்தாள்.”
“அவளுடைய அவ்வசைவு இக்கணம் வரை என்னை எரியச்செய்கிறது. அவள் அதை தெரிந்து செய்யவில்லை என்று அறிவேன். ஆனால் அவள் அகம் அதை சொன்னது. இல்லை, சொன்னது உடல். அது என்னிடம் சொன்னது.” திரௌபதி மூச்சிரைத்தாள். “ஒவ்வாத எதையோ உண்டுவிட்டவள் என என் வயிறு குழம்பி எழுந்தது. என்னால் அணிப்படகில் அதற்குமேல் நிற்க முடியவில்லை. என்னைக்கடந்து சென்ற அவளை திரும்பிப்பார்க்க என் தலை துணிவுகொள்ளவில்லை. கால்தளர்ந்து அமர்ந்துகொண்டபோது ஒருகணம் நெஞ்சுடைந்து விம்மினேன்.”
“பின்னர் அவ்வாறு விம்மியமைக்காக பெருஞ்சினம் கொண்டேன். சிறுத்து மண்துகளாக ஆனதுபோல் உணர்ந்தேன். என்னை அப்படி ஆக்கியது நீ என்றபோது நான் உணர்ந்தது உன் கழுத்தைக்கவ்வி குருதியை குடிக்கவேண்டுமென்ற வெறியை மட்டுமே.” அர்ஜுனன் அவள் விழிகளை நோக்கி “அதைச் செய்ய முயன்றிருக்கலாமே” என்றான். திரௌபதி சீறி தலைதூக்கி “அதைச்செய்ய என்னால் முடியும். ஆனால்…” என்றபின் தலைதிருப்பி விழிகளில் மீண்டும் நீர்த்துளிகள் கோர்க்க “உன்னிடம் நான் கேட்க விழைவது இதுதான். இதை செய்வதனூடாக என்னை அவமதிக்கிறாயா?” என்றாள்.
“இல்லை” என்றான் அர்ஜுனன். “ஏனென்றால் நான் என்னைப்பற்றிய எதையும் மறைக்கவில்லை. நூற்றுக்கணக்கான பெண்களை அறிந்தவன் நான். என் நாட்களெல்லாம் பெண்கள். அவர்களின் முகங்கள் கூட என் நினைவில் இல்லை. என்னை பெண்வெறியன் என்றே சூதர்கள் பாடுகிறார்கள். அச்சொற்களை ஆரமாக அணிந்தபடிதான் எந்த மேடையிலும் எழுந்து நிற்கிறேன். உன்னை மணக்க கிந்தூரத்தை ஏந்தும்போதும் என் கழுத்தில் அந்த ஆரம் கிடந்தது. அதை அறிந்தபின்னரே எனக்கு நீ மாலையிட்டாய்…”
”ஆம், ஆனால் மாயை அந்த முகமறியாத பெண்களில் ஒருத்தி அல்ல” என்று அவள் பற்களைக் கிட்டித்தபடி சொன்னாள். “அவள் உன் நிழல்” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் என்னை அவள் நிழலாக நீ ஆக்கிவிட்டாய்.” அர்ஜுனன் அகமுலைந்து அவளை நோக்கினான். “அவள் உன்னுடன் இங்கிருக்கையில் நிழலென நான் இவ்வறைக்குள் இருந்ததுபோல் உணர்கிறேன். என்னை அவள் வென்றுசென்றுவிட்டாள்.” அர்ஜுனன் “அது உங்களுக்குள் உள்ள ஆடல். அதை நான் ஏன் கருத்தில் கொள்ளவேண்டும்? என் முன் வந்தவள் காதல்கொண்ட ஒரு பெண். காமத்தில் உருகும் ஓர் உடல்” என்றான்.
“அவளை காமத்தின்பொருட்டு நீ அடையவில்லை” என்று திரௌபதி கூவினாள். “ஆம், அதை அறிவேன். அது வேறொன்றுக்காக. அது என்ன என்று நானறியவில்லை. ஆனால் அது காமம் அல்ல. வேறு ஒன்று” என்றான் அர்ஜுனன். “காமம் எப்போதுமே பிறிதொன்றுக்காகத்தான். நன் மைந்தருக்காக என்கிறது வேதம். ஆனால் அத்தனை மானுடக்காமமும் பிறிதொன்றுக்காகத்தான். வெற்றிக்காக, கடந்துசெல்லலுக்காக, நினைவுகூர்தலுக்காக, மறப்பதற்காக.” திரௌபதி “இது அவ்வகையில் அல்ல. இதை செய்வதனூடாக இன்று நீ எதிலிருந்தோ விடுபட்டாய்” என்றாள்.
“இருக்கட்டும், அதனாலென்ன?” என்றான். அவள் என்னசெய்வேன் என இரு கைகளையும் தூக்கினாள். ஒருகணம் நின்று ததும்பியபின் சென்று அமர்ந்துகொண்டு “தெய்வங்களே, இப்படி ஒரு தருணமா?” என்றாள். தலைதூக்கி “இக்கணம் நான் உன்னை வெறுப்பதுபோல இப்புவியில் எவரையும் வெறுத்ததில்லை” என்றாள். அர்ஜுனன் “ஏன்?” என்றான். ”ஏன் என்று நோக்கு. நான் உன் உள்ளம் கவர்ந்தவன். எவரோ ஆன ஒருவர் மேல் நாம் வெறுப்புகொள்வதில்லை.”
“பேசாதே” என்று அவள் கூவினாள். நிலைகுலைந்து திரும்பி நோக்கி அருகே இருந்த நீர்க்குடுவையைத் தூக்கி அவன் மேல் வீச அது அப்பால் சென்று விழுந்து உடைந்தது. “உன் சொற்கள் என்னை எரியச்செய்கின்றன. கீழ்மகன் என ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும் ஒருவனை இதற்கு முன் நான் பார்த்ததில்லை” என்றாள். அதைத் தொடர்ந்து அவளே எதிர்பாராதபடி ஒரு விம்மல் எழுந்தது.
அர்ஜுனன் அருகே சென்று “ஏன் இந்த கொந்தளிப்பு? நான் உன்னை வென்றடைந்தவன். ஆகவே உன் கொழுநன். அதற்கென்ன? இங்கு நீ என்னுடன் இருக்கவேண்டுமென எந்நெறியும் இல்லை. இப்போதே கிளம்பிச்செல்லலாம். என்னை முழுதாக உன்னுள்ளத்திலிருந்து அகற்றலாம். இனி ஒருபோதும் நாம் தனியாக சந்திக்காமலும் இருக்கலாம்…” என்றான். “என் வில் உன் வெற்றிக்கும் சிறப்புக்கும் கருவியாக என்றும் உடனிருக்கும். ஏனென்றால் என் தமையனுக்குரியது அது.”
அவள் அவனை நீர் நிறைந்த விழிகளால் நோக்கி அமர்ந்திருந்தாள். எதையோ சொல்லப்போவதுபோல இதழ்கள் விரிந்து பின் அமைந்தன. “என் காமம் தனித்த காட்டுவிலங்கு. அது ஒருபோதும் ஒருவருக்கு கட்டுப்படாது. நேற்றைப்பற்றி மட்டும் அல்ல நாளையைப்பற்றியும் எச்சொல்லையும் நான் உனக்கு அளிக்கவியலாது” என்றான் அர்ஜுனன். “நீ என்னுடன் இருக்கவில்லை என உன் சேவகர் அறியட்டும். கிளம்பிச்செல்!”
திரௌபதியின் தோள்கள் தழைந்தன. பெருமூச்சுடன் அவள் மேலாடையை சரிசெய்தபின் “அது நாளை காம்பில்யத்தின் சூதர்களின் பாடலாக ஆகும்” என்றாள். சிரித்தபடி அர்ஜுனன் “ஒன்று செய்யலாம். அர்ஜுனன் ஆண்மையற்றவன் என்று சொல். அவன் தந்தை பாண்டுவைப்போல அனலெழாத உடலுள்ளவன் என்று சொல்… நம்புவார்கள்” என்றான்.
முதல்முறையாக திரௌபதி விழிகளில் ஒரு சிறிய புன்னகை எழுந்தது. “அதுவும் ஆரத்தில் ஒரு மணியாகும் அல்லவா?” என்றாள். “இல்லை, அதை நம்ப எளிய மக்கள் விரும்புவார்கள். நான் அடையும் அழகிகளின் கணக்கு பாரதவர்ஷத்தின் எளிய ஆண்மகனிடம்தான் இருக்கும். அவனுள் உள்ள சீண்டப்பட்ட விலங்கு நிறைவடையும். உன்மேல் பழியும் இராது” என்றான் அர்ஜுனன். “அத்துடன் ஆயிரம் பெண்களைப் புணர ஆணிலியால்தான் முடியும் என்ற பழமொழியும் உருவாகிவரும்… நல்லதல்லவா?”
“அதில் உனக்கு என்ன நலன்?” என்றாள் திரௌபதி. “ஏதுமில்லை. என்னைப்பற்றிய சொற்கள் எவையும் என்னை ஆள்வதில்லை. நான் அச்சொற்களுக்கு மிகமிக முன்னால் எங்கோ தனித்து சென்றுகொண்டிருக்கிறேன்.” திரௌபதி அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள். பின்பு தன் அணிகளை சீரமைத்து ஆடையின் மடிப்புகளை சரிசெய்து எழுந்தாள். கூந்தலை கையால் நீவி ஒழுங்காக்கி “ஆம், நான் செல்வதே முறை” என்றாள்.
”நலம் திகழ்க!” என்றான் அர்ஜுனன். “என் ஒரு சொல்லை மட்டும் கொண்டுசெல்லுங்கள் தேவி. நான் ஒருபோதும் ஒருவரையும் அவமதிக்க விழைந்ததில்லை. உங்கள் தந்தையைக்கூட நான் அவமதிக்கவில்லை.” திரௌபதி பெருமூச்சுடன் “நான் அதை அறிவேன்” என்றாள். “எப்படி?” என்றான் அர்ஜுனன். “பாரதவர்ஷமே உங்கள் தந்தையை சிறுமைசெய்தவன் என்றல்லவா என்னைப்பற்றி எண்ணுகிறது?”
திரௌபதி விழிதூக்கி “தொலைவிலிருந்தாலும் நாம் சிலரை மிக அண்மையில் தொடர்ந்துசென்றுகொண்டிருப்போம் அல்லவா?” என்றாள். “என்னை நீ அவமதிக்கவில்லை என்றே என் அகம் உணர்கிறது. அது நிறைவளிக்கிறது. ஆனால் என்னை நானே அவமதிக்கலாகாது. ஆகவே நான் செல்கிறேன். இனி நாம் ஒருபோதும் சந்திக்கவும்போவதில்லை.”
“நன்று” என்றான் அர்ஜுனன் கைகளை விரித்து அவள் செல்லலாம் என்று காட்டியபடி. அவள் தன் வலக்கையின் கடகத்தை இடக்கையால் உருட்டியபடி ஒரு சிலகணங்கள் தயங்கி பின்பு வருகிறேன் என தலையசைத்து படிகளில் இறங்கினாள். இரண்டு முறை காலெடுத்துவைத்துவிட்டு திரும்பி அவனிடம் “நான் செல்வதில் சற்றும் வருத்தமில்லையா உனக்கு?” என்றாள்.
அர்ஜுனன் புன்னகைத்து “வருத்தம் உள்ளது என்றால் நீ நம்புவாயா?” என்றான். “இல்லை, உன் விழிகளையே நோக்கிக்கொண்டிருந்தேன். அவற்றில் சற்றும் வருத்தம் தெரியவில்லை.” அர்ஜுனன் அவள் விழிகளை நோக்கியபடி “வருத்தம் என்று எதை சொல்கிறாய் என்று தெரியவில்லை. நீ அகன்றுசெல்லும்போது நான் அரியது ஒன்றை இழக்கிறேன் என உணர்ந்தேன். நான் என் வாழ்நாளில் கண்ட முதன்மையான அழகியை அடையமுடியவில்லை என்று அறிந்தேன். ஆனால் நீ செல்வதே உகந்தது என்றும் தோன்றியது” என்றான்.
“ஏன்?” என்றாள் திரௌபதி. “உன் துயரத்தை நோக்கிக்கொண்டிருந்தேன். மிக அழுத்தமானது அது. எனது காமத்தை உன் புலன்களால் தாளமுடியாது” என்றான் அர்ஜுனன். “அந்த எண்ணம் துயரை முற்றாக அழித்துவிடுமா என்ன?” என அவள் தலைசரித்தாள். “இல்லை, அந்த எண்ணத்துடன் சேர்ந்த ஓர் அறிதல் எனக்குண்டு. இதுவென்றல்ல எதுவும் வந்துசெல்வதே. வருவதற்காக பெரிதும் மகிழ்வதில்லை. செல்வதற்காக துயர்கொள்வதுமில்லை. நீ என் வாழ்க்கையின் ஒரே பெண் அல்ல. ஒரே சக்ரவர்த்தினிகூட அல்ல.”
அவள் நின்று திரும்பி படிகளின் கைப்பிடியை பற்றிக்கொண்டபோது உடல் தளர்ந்து குழைந்தது. “என்னால் செல்லமுடியவில்லை” என்றாள். “ஏன்?” என்றான். “தெரியவில்லை. சிந்தித்துப்பார்க்கையில் நான் ஏன் அத்தனை பெருந்துயருற்றேன் என்றே புரியவில்லை. உன்னை நான் அறிவேன். உன்னை விரும்பியதே நீ காமக்களிமகன் என்பதற்காகத்தான். ஆனால் சற்று முன் அதன்பொருட்டே உன்னை வெறுத்தேன்…” என்றபின் தலையை அசைத்து ”தெரியவில்லை” என்றாள்.
“நீ ஒரு உளச்சித்திரம் கொண்டிருக்கலாம். நான் இங்கே உன்னை எண்ணி ஏங்கி காத்திருப்பேன் என்று. காமத்தால் கொதிக்கும் என் மேல் ஒரு குளிர்மழைத்துளியாக விழலாம் என்று” புன்னகையுடன் அர்ஜுனன் சொன்னான். “எந்தப்பெண்ணும் அவ்வாறுதான் எண்ணுவாள்!” திரௌபதி சிரித்துவிட்டாள். ”ஆம், உண்மை” என்றாள். “நான் உன்னை எண்ணிக்கொண்டிருந்தேன். ஏங்கவில்லை. இப்பிறவியில் இனி எந்தப்பெண்ணுக்காகவும் ஏங்கப்போவதில்லை. யார் பிரிவுக்காகவும் வருந்தப்போவதும் இல்லை” என்றான் அர்ஜுனன். பின் மேலும் விரிந்த புன்னகையுடன் “ஆகவேதான் நான் பெண்களிமகன் எனப்படுகிறேன்” என்றான்.
அவள் மெல்ல அவனை நோக்கி படியேறி வந்து அருகே நின்று இடையில் கைவைத்து தலைதூக்கி கேட்டாள் “நான் ஒன்று கேட்கிறேன். இங்கிருந்து சென்று நான் கங்கையில் இறந்தால் வருந்துவீர்களா?” அர்ஜுனன் அவள் விழிகளை கூர்ந்து நோக்கி “இல்லை” என்றான். “கொலைவில் எடுத்தவன் இறப்புகளுக்காக வருந்தமாட்டான்.” அவள் விழிகள் மெல்ல அசைந்தன. ஓர் எண்ணத்தை நிகழ்வாகக் காணமுடிவதை எண்ணி அவன் வியந்தான். “உங்கள் தமையன் இறந்தால்?” என்றாள். “நான் அதன்பின் உயிர்வாழமாட்டேன். ஏனென்றால் என் வாழ்க்கையின் பொருள் இல்லாமலாகிறது” என்றான் அர்ஜுனன்.
அவள் இமைகள் சரிந்தன. உதடுகள் மெல்ல குவிந்து ஒரு சொல்லாக ஆகி பின் அதை ஒலியின்மையில் உதிர்த்துவிட்டு விரிந்தன. விழிகளைத் தூக்கி “என்னால் இங்கிருந்து செல்லமுடியாது” என்றாள். “ஏன்?” என மெல்லிய குரலில் கேட்டான். ”அறியேன். நானறியாத ஓரு பெருநதியின் சுழலைக் காண்பதுபோல தோன்றுகிறது…” தலையை இல்லை என அசைத்து “இப்படியே உதறிவிட்டு விலகிச்சென்றால் நான் தப்புவேன். ஆனால் என்னால் முடியுமென தோன்றவில்லை” என்றாள்.
“ஏன்?” என்று அவன் மேலும் தாழ்ந்த குரலில் கேட்டான். குரலை உயர்த்தி “ஏனென்றால் தீமை பெரும் கவர்ச்சி கொண்டது” என்றாள். அவன் சிரித்தபடி விலகி “அவ்வண்ணமென்றால் உள்ளே வருக! நஞ்சு அருந்த நாகத்தின் அழைப்பு இது” என்றான். அவள் பற்களைக் கடித்து விழியில் சினத்துடன் “ஏளனம் செய்கிறாயா?” என்றாள். “ஏளனமும் சற்று உண்டு” என்றான் அர்ஜுனன்.
அவள் அவனைக்கடந்து உள்ளே சென்று பீடத்தில் அமர்ந்து கால்மேல் கால் போட்டு நிமிர்ந்தாள். அவன் விழிகளை நோக்கி சிவந்த முகத்துடன் “அஞ்சி ஓடுவது என் இயல்பல்ல” என்றாள். அவள் செப்புமுலைகள் எழுந்தமைந்தன. “நீ அஞ்சுவது உன்னுள் உறையும் தீமையை அல்லவா?” என்றான் அர்ஜுனன். “ஆம், நீயும் என் முகமே” என்றாள் திரௌபதி. இதழ்களைக் கடித்து வெறுப்பு பொங்கும் கண்களுடன் “என் நெஞ்சில் நானே வேலைக் குத்தி இறக்குவதுபோன்றது இத்தருணம்” என்றாள்.
அர்ஜுனன் வந்து அவளருகே நின்றான். “சில தருணங்கள் அத்தகையவை” என்றான். ”நம் அகம் உடைபடும் தருணங்கள் அவை.” கையை விலகு என்பதுபோல வீசி “நான் இங்கே இருக்க விழையவில்லை. இங்கிருக்கும் ஒவ்வொரு கணமும் எனக்கு எரியெழும் பாதாளத்தில் இருப்பதுபோல. ஆனால் நான் செல்லவும் விழையவில்லை” என்றாள்.
அவன் அவள் செவிகள் மட்டுமே கேட்கும் குரலில் “என் மேல் காமம் இல்லை என்கிறாயா?” என்றான். அவள் செவிதுளைக்கும் கூர்குரலில் வீரிட்டாள் “இல்லை… முற்றிலும் இல்லை.” அர்ஜுனன் அவள் விழிகளை நோக்கி குனிந்து “இல்லையா?” என்றான். “இல்லை… காமம் இருந்தது. ஆனால் இக்கணம் என்னில் ஊறும் கடும் வெறுப்பு அதை அழித்துவிட்டது. என் ஆணவம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. புறக்கணிக்கப்படுபவளாக இருக்க நான் விரும்பவில்லை…” சீறி வெளித்தெரிந்த பற்களுடன் “எவர் முன்னும் எளியவளாக நான் இருக்க முடியாது” என்றாள்.
அர்ஜுனன் அவளையே நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் “உன் நெஞ்சை நோக்கி சொல், காமம் இல்லை என்று” என்றான். “இல்லை இல்லை” என்று சொல்லி “விலகு…” என்றாள். “ஏன்?” என்றான். “உன் வியர்வை நெடி குமட்டுகிறது.” அர்ஜுனன் அவள் கைகள் மேல் கையை வைத்தான். அவள் “சீ” என அதிர்ந்து அந்தக்கையை தட்டிவிட முனைந்தபோது மறுகையையும் பற்றிக்கொண்டான். அவள் திமிறி விலக முயல மேலாடை சரிந்து இளமுலைகள் அசைந்தன. அவ்வசைவை அவள் விழிகள் நோக்க அவள் கை தளர்ந்தது. அப்படி தளர்ந்ததை உணர்ந்த மறுகணம் “சீ, விடு…” என்று அவள் திமிறி காலைத்தூக்கி அவன் இடைக்குக் கீழே உதைக்க முயன்றாள். அவன் எளிதாக விலகி அதைத்தவிர்த்து அவளைச் சுழற்றிப் பிடித்து இடைவளைத்து தன் இடையுடன் அவள் பின்பக்கத்தை இறுக்கிக்கொண்டு அவள் பின்கழுத்தின் மெல்லிய மயிர்ச்சுருள்களில் முகம் புதைத்தான்.
”என்னை அவமதிக்காதே… விடு என்னை!” என்று அவள் இறுகிய பற்களுடன் சொல்லி கால்களை மண்ணில் உதைத்து எம்பினாள். அவன் அவளை மூன்றுமுறை சுழற்றி தூணுடன் முகம் சேர்த்து அழுத்திக்கொண்டான். “கொன்றுவிடுவேன்… இது என் நாடு” என்று அவள் முனகினாள். அவள் முழுமையாக அசைவிழக்கும் வரை அழுத்தியபின் சற்றே விலகி அக்கணத்திலேயே அவள் கச்சின் பின்முடிச்சை அவிழ்த்து அப்படியே திருப்பி அவள் வெறும் முலைகளை தன் நெஞ்சுடன் சேர்த்துக்கொண்டான். “இழிமகனே” என அவள் கூவ அவள் முகத்தை இறுகப்பற்றி அசைவிலாது நிறுத்தி அவள் இதழ்களை தன் இதழ்களால் கவ்விக்கொண்டான்.
உயிரிழக்கும் விலங்கு என அவள் உடலின் திமிறல் மெல்ல மெல்ல தளர்ந்தது. அவன் தோள்களை நகம் அழுந்தப் பற்றியிருந்த கைகள் தளர்ந்து வளையல்கள் ஒலிக்க கீழே விழுந்தன. அவன் அவளை முத்தமிட்டுக்கொண்டிருக்க மெல்ல அவை மேலெழுந்து வந்து அவன் குழலை கவ்விக்கொண்டன. அந்தக் கணம் நீண்டு நீண்டு செல்ல ஒரு கணத்தில் அவள் உடல் மீண்டும் இறுகி அவனை விட்டுத் திமிறியது. அவன் இறுக்கி அவளைப் பற்ற அவள் அவன் நெஞ்சில் கைவைத்துத் தள்ளி வில்லென உடலை வளைத்தாள், அவன் அவளை விட்டதும் அதேவிசையில் பின்னகர்ந்தாள். அவன் அவள் கன்னத்தை ஓங்கி அறைந்தான்.
அடிபட்ட கன்னத்தை கையால் பொத்தியபடி அவள் திகைத்து நிற்க அவன் முன்னகர்ந்து அவளை அள்ளித்தூக்கிக் கொண்டான். அவள் பொருளின்றி ஏதோ முனக அவன் கதவை காலால் தள்ளித்திறந்து அவளை மஞ்சத்தை நோக்கி கொண்டுசென்றான். பட்டுச்சேக்கைமேல் அவளைப் போட்டு அவள்மேல் பாய்ந்து தன் கைகளாலும் கால்களாலும் அவளை கவ்விக்கொண்டான். அவள் விழிகளில் இருந்து நீர் வழிந்து கன்னத்தில் சொட்டியது. கடும்வலி கொண்டவள் போல தலையை அசைத்தபடி முனகிக்கொண்டிருந்தாள்.
அவன் அவளை ஒரு துணிப்பாவை என கையாண்டான். உடல் தன் கரவுகளை எல்லாம் இழந்து வெறுமைகொண்டு கிடந்தது. பிறிதொன்றுமில்லை என்று ஆனது. அதன்பின் அதிலுறங்கிய விதைகள் முளைத்தெழத் தொடங்கின. ஏதோ ஒருகணத்தில் புலிக்குருளை போல மெல்ல உறுமியபடி தன் கைநகங்கள் அவன் தோளை கவ்வி இறுக்க அவனை தழுவி இறுக்கினாள். ஒன்றை ஒன்று உண்ணும் நாகங்கள் அறிந்தது. நெருப்பு மட்டுமே அறிந்தது. உடல் ஒன்றாகி ஆன்மா தன்னந்தனிமையில் தவிப்பது.
அவன் ஆடையணிந்து திரும்பியபோது அவள் உடலை நன்கு சுருட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். அவளருகிலும் மஞ்சத்தைச் சுற்றியும் அவள் ஆடைகளும் அணிகலன்களும் சிதறிக்கிடந்தன. அவன் அவற்றை சிலகணங்கள் நோக்கிய பின்பு வெளியே சென்று ஒழுகும் கங்கையை நோக்கி சற்று நேரம் நின்றிருந்தான். விண்மீன்குவைகள் போல தொலைதூர வணிகப்படகுகள் சென்றன. கங்கைமேல் இருளில் பறக்கும் பறவைகளில் சில கரைவந்து அவனைக் கடந்து மாளிகை முகடில் சென்று அமர்ந்தன. காற்று சீரான பெருக்காக இருந்தது. பின்பு அது நின்றதும் பறக்கும் சாளரத்திரை அசைவிழப்பதுபோல உள்ளம் அமைந்தது. நீரின் மணத்துடன் மறுகாற்று ஒன்று எழுந்து காதுமடல்களை தொட்டது.
அவன் மீண்டும் மஞ்சத்தறைக்கு வந்தபோது அவள் ஆடைகளை அணிந்துகொண்டு அதேபோல வளைந்து படுத்திருந்தாள். அவன் அவளருகே படுத்தபோது மூக்கை உறிஞ்சும் ஒலி கேட்டது. கால்களை நீட்டிக்கொண்டு மார்பின்மேல் கைகளை வைத்து கூரைமுகடின் தடித்த உத்தரத்தை நோக்கினான். அக்கணமே துயிலில் மூழ்கிமறைந்தான்.
மெல்லிய அசைவை அறிந்து அவன் விழித்து எழுந்தான். அவன் கழுத்துக்குமேல் சாளரத்தின் மெல்லிய ஒளியை வாங்கியபடி வாளின் நாக்கு நின்றிருந்தது. அவன் உடலிலோ விழியிலோ சற்றும் அசைவு எழவில்லை. இதழ்களில் மட்டும் மெல்லிய புன்னகை பரவியது. இருகைகளாலும் வாளைப் பற்றியிருந்த திரௌபதி அதை தூக்கிவிட்டு பெருமூச்சுவிட்டாள். உடல் தளர்ந்து விழுபவள்போல மஞ்சத்தில் அமர்ந்தாள்.
அவன் அதே புன்னகையுடன் படுத்திருந்தான். அவள் சீற்றத்துடன் திரும்பி அவனை நோக்கி “கொல்லமாட்டேன் என்று எண்ணினாயா?” என்றாள். “இல்லை என்னால் முடியாதென்று நினைக்கிறாயா?” அவள் முகத்தில் கூந்தலிழைகள் வியர்வையில் ஒட்டியிருந்தன. நெடுநேரம் தலையணையில் பதிந்திருந்த முகத்தில் துணியின் பதிவிருந்தது. அர்ஜுனன் “இல்லை” என்றான். “எவராலும் கொல்ல முடியும். கொல்வதைப்போல எளியது பிறிதில்லை. வாளேந்திய கை எண்ணாவிட்டாலும்கூட வாள் அதை செய்யக்கூடும்.”
அவள் விழிகள் அசைந்தன. “ஆனால் எனக்கு முற்றிலும் இல்லாத ஓர் உணர்வு என்றால் உயிரச்சம்தான்” என்றான் அர்ஜுனன். “என் கைகளால் இதற்குள் பலநூறுபேரை கொன்றிருப்பேன். ஆகவே நான் உயிரச்சம் கொள்ளலாகாது என்பதே அறம்.” திரௌபதி வாளைத் தூக்கி அதை நோக்கினாள். “வெட்டுவதற்கு ஒரு கணம் முன்னர்கூட வெட்டிவிடுவேன் என்றுதான் எண்ணியிருந்தேன்” என்றாள்.
“துயில்கையில் வெட்டுவது அறமல்ல என்று தோன்றியதா?” என்றான் அர்ஜுனன். “இல்லை, துயிலும்போதன்றி உன்னை என்னால் கொல்லமுடியாது. என் வாள் உயர்ந்ததுமே உன் இமைகள் அசைந்தன. அதனால்கூட என் கை தளர்ந்திருக்கலாம்.” அர்ஜுனன் “ஆம், என்னை துயிலற்றவன் என்கிறார்கள்” என்றான். அவன் திரும்பி கையை தலைக்கு வைத்து ஒருக்களித்துப்படுத்துக்கொண்டு “நீ மீண்டும் முயலலாம்” என்றான். அவள் தன் கரிய விழிகளால் அவனை கூர்ந்து நோக்கினாள். பின் விழிகளை விலக்கி தலையை அசைத்து “என்னால் முடியாது” என்றாள்.
“ஏன்?” என்றான் அர்ஜுனன். “ஏனென்றால் என்னுள் உறையும் ஒரு கீழ்மகளின் துணைவன் நீ. அவளை வெல்ல என்னால் முடியாது” என்றபடி அவள் எழுந்தாள். கைதூக்கி தன் குழலைச் சுருட்டிக் கட்டியபின் திரும்பி “மீளமீள உன்னை வெறுத்துக்கொண்டும் தோற்றுக்கொண்டும்தான் இருப்பேன். இது என் ஊழின் சுழி” என வெளியே சென்றாள். அவன் எழுந்து அமர்ந்தபோது “என்னை தனிமையில் விடு” என்றாள்.
அவன் சிலகணங்கள் சேக்கைவிரிப்பை விரலால் சுண்டியபின் “அழகிய தனிமை நிறையட்டும்” என்று சொல்லி படுத்து கண்களை மூடிக்கொண்டான். மறுகணமே அவனுடைய சீரான துயில்மூச்சு எழத்தொடங்கியது.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்