வண்ணக்கடல் - 64

பகுதி ஒன்பது : பொன்னகரம்

[ 6 ]

அஸ்தினபுரியின் படை ஒன்று ஆசுரநாட்டுக்குக் கிளம்பியிருக்கும் செய்தியை ஹிரண்யதனுஸின் ஒற்றர்கள் வந்து தெரிவித்தபோது அவர் நம்பமுடியாமல் “படையா?” என்றார். திரும்பி தன் குலமூத்தார் ஹரிதரை நோக்கிவிட்டு “படையா வருகிறது?” என்று மீண்டும் கேட்டார். “ஆம் அரசே, படைகள் என்றுதான் நேரில்கண்ட ஒற்றன் பருந்துச் செய்தி அனுப்பியிருக்கிறான்” என்றார் துறைக்காப்பாளர். “அவ்வளவு தொலைவுக்கு ஒரு படைச்செலவை எப்படி அவர்கள் உடனடியாக நிகழ்த்த முடியும்? நடுவே பாஞ்சாலம் இருக்கிறது. எட்டு சிறியநாடுகள் இருக்கின்றன” என்றார் ஹிரண்யதனுஸ்.

அரசி சுவர்ணை மெல்லியகுரலில் “படைகளை போருக்குக் கொண்டுவந்தால்தானே அந்தத் தடைகள்? அவர்கள் வேட்டைக்கென வரலாமே?” என்றாள். அச்சொல்லைக் கேட்டதுமே அனைத்தையும் புரிந்துகொண்ட ஹிரண்யதனுஸ் உளஎழுச்சியால் இருக்கையில் இருந்து எழுந்து நின்றுவிட்டார். “ஆம், அதுவே அவர்களின் வழிமுறை” என்றார். அரசகுடிகளின் பயணத்துக்கும் வேட்டைச்செலவுகளுக்கும் தூதுக்குழுக்களுக்கும் நாடுகளின் எல்லைகள் திறந்து வழிகொடுக்கவேண்டும் என்ற நெறி கங்காவர்த்தத்தின் ஷத்ரியர்கள் நடுவே இருந்தது. “அவர்கள் கங்கை வழியாகவே வந்துவிட முடியும்… சிலநாட்களிலேயே ஹிரண்யவாகாவை அடைவார்கள்” என்று ஹரிதர் சொன்னார்.

“ஆனால் வேட்டையாட வருபவர்கள் நம்முடன் போரிடமுடியாது” என்று துறைக்காவலரான சித்ரகர் சொன்னார். “அவர்கள் போரிட வரவில்லை” என்று சுவர்ணை சொன்னாள். “அவர்கள் இங்குள்ள காட்டில் வேட்டையாடிவிட்டுத் திரும்பிச்செல்வார்கள். நம்முடன் அரசியல் எதையும் பேசமாட்டார்கள். நம்மை அவர்கள் சந்திப்பதுகூட நிகழாதுபோகலாம். அவர்களின் தூதர் ஒருவர் மட்டுமே நம்மைச் சந்திப்பார்.” அனைவரும் அவளையே நோக்கினர். ஹிரண்யதனுஸ் “அப்படியென்றால் ஏன் இத்தனைதொலைவுக்கு அவர்கள் வரவேண்டும்?” என்றார்.

“அவர்கள் இங்கு வேட்டையாடுவதே அவர்களின் வலிமையை நமக்குக் காட்டிவிடும். நூறுபேர்கொண்ட சிறிய குழு வந்து சென்றதுமே நம்முடைய வீரர்கள் அனைத்து ஊக்கத்தையும் இழந்துவிடுவார்கள். நாம் மலைக்குடிமக்கள். வில் நமக்கு பசியைப்போல. நம் கையையும் வாயையும் அது இணைக்கிறது. அவர்களின் வில் அவர்களின் பேராசை போல. அது அவர்களை ஒருகணமும் அமரவிடாமல் இட்டுச்செல்கிறது. நாம் அவர்களுடன் பொருதமுடியாது என நம்மிடம் சொல்கிறார்கள். ஆசுரநாட்டை முற்றிலும் வெல்ல வெறும் நூறு வில்வீரர்களே போதும் என்கிறார்கள். தேர்ச்சி கொண்ட நூற்றுவரே இங்கு வருவார்கள். அதில் அரசிளங்குமரர்களோ முதன்மைத் தளபதிகளோ இருக்கமாட்டார்கள்” என்றாள் சுவர்ணை.

அவள் சொல்லச்சொல்ல அனைத்தையும் தெளிவாக கண்முன் கண்டு ஹிரண்யதனுஸ் சிந்தையழிந்து தளர்ந்து பீடத்தில் அமர்ந்துவிட்டார். ஹரிதர் “நாம் என்னசெய்வது அரசி?” என்றார். “நாம் செய்வதற்கொன்றே உள்ளது. அதே நாளில் இப்பகுதிக்காட்டில் எங்காவது ஓரிடத்தில் மகதத்தின் ஒரு படைப்பிரிவும் வேட்டையாடட்டும்” என்றாள். ஹிரண்யதனுஸ் முகம் மலர்ந்து எழுந்து “ஆம், அதுவே சிறந்த வழி… உடனே ஓலை அனுப்புவோம்” என்றார். “நாம் அவர்களை அழைக்கவேண்டாம். அது அவர்களை நாம் உதவிக்கழைப்பதாகப் பொருள்படும். இங்கே அஸ்தினபுரியின் படைகள் வேட்டையாட வரும் செய்தியை மட்டும் அனுப்புவோம். அவர்கள் இங்கு வரவிரும்புகிறார்களா என்று கேட்போம். வருவார்கள்” என்றாள் அரசி.

அன்றே ஹிரண்யபதத்தில் இருந்து எட்டுபேர்கொண்ட தூதர் குழு கங்கைவழியாக மகதத்துக்குச் சென்றது. அங்கிருந்து பறவைத் தூது வருவதற்காக ஹிரண்யதனுஸ் ஒவ்வொருகணமும் அகம் பதறக் காத்திருந்தார். மறுநாள் காலையில் அஸ்தினபுரியின் வேட்டைக்குழுவினரின் நான்குபடகுகள் கங்கைவழியாக ஹிரண்யவாகாவுக்குள் நுழைந்துவிட்டன என்று செய்திவந்தது. அன்றுமதியம் மகதத்தில் இருந்து வந்த செய்தி மன்னர் பிருஹத்ரதர் இறக்கும்நிலையில் இருக்கிறார் என்றும் தலைநகரில் தெருக்களெங்கும் படைகளும் மக்களும் பதற்றமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொன்னது.

மாலையில் அஸ்தினபுரியின் படைகள் நகரை நெருங்குகின்றன என்ற செய்தி வந்தது. இரவு மகதத்தில் இருந்து வந்த செய்தி மதுராவின் அரசர் கம்சர் தன் முழுப்படையுடன் மகதபுரிக்குள் நுழைந்துவிட்டார். அவர் இளவரசர் ஜராசந்தருக்கு உதவியாக வந்திருக்கிறார். அங்கமும் வங்கமும் விலகி நிற்கின்றன. அஸ்தினபுரியும் கலிங்கமும் நிகராற்றலுடன் இருபக்கமும் நின்றிருப்பதனால் மகதத்தின் மணிமுடியை ஜராசந்தர் கைப்பற்றுவது உறுதி என்றது. ஹிரண்யதனுஸ் தலையில் கைவைத்துக்கொண்டு மஞ்சத்தில் சாய்ந்துவிட்டார்.

அரசி “அஸ்தினபுரியின் படைகள் வரட்டும். நாம் எதையும் அறியாததுபோலிருப்போம். அவர்கள் சென்றதும் மகதத்தின் பெரும்படை ஒன்று இங்கே வந்து வேட்டையாடிச்செல்லட்டும்” என்றாள். “அவர்கள் நம்முடன் இருப்பதை உணர்ந்தால் நம் வீரர்கள் ஊக்கமடையக்கூடும்” என்றாள். “ஆம், இப்போது வேறுவழியேதுமில்லை” என்றபடி ஹிரண்யதனுஸ் பெருமூச்சுவிட்டபின் “நாம் ஏன் இத்தனை விரைவில் ஊக்கமழிகிறோம்?” என்றார். அரசி அவரை ஒருகணம் நோக்கியபின் “நம் மூதாதையரின் நகரம் மண்ணில் விழுந்து உடைந்து சிதறிவிட்டது. நாம் பொருளற்ற சிறு துண்டுகள் மட்டுமே” என்றாள். திடுக்கிட்டு அவளை நோக்கியபின் ஹிரண்யதனுஸ் பார்வையை விலக்கிக்கொண்டார்.

பெரிய பாய்களை விரித்து நாரைக்கூட்டம் போல வந்த அஸ்தினபுரியின் படகுகள் ஹிரண்யவாகா வழியாக வந்து முன்னதாகவே காட்டுக்கரையோரமாக நின்றுவிட்டன. அவற்றில் ஒரு சிறியபடகு மட்டும் இளந்தளபதி விஸ்ருதனின் தலைமையிலான ஏழுபேர்கொண்ட தூதுக்குழுவுடன் ஹிரண்யபதத்தின் துறையை அணுகியது. அவர்கள் திருதராஷ்டிர மாமன்னர் அளித்த பரிசில் அடங்கிய பேழையுடன் வந்திறங்க ஹிரண்யபதத்தின் பெருமுரசு முழங்கியது. அவர்களின் வருகையை முன்னரே அறிந்திருந்த நகரம் அஞ்சி உடல் சிலிர்க்கும் வனமிருகம் போலிருந்தது. சந்தைவெளியில் கூடியிருந்தவர்கள் ஓசையடங்கி வந்தவர்களை நோக்கினர்.

அசுரத் தொல்குலத்தின் மூன்று குலப்பெரியவர்கள் ஹரிதர் தலைமையில் முழவுகளும் கொம்புகளும் முழங்க அவர்களை எதிர்கொண்டழைத்துச் சென்று ஹிரண்யதனுஸின் மாளிகையை அணுகினர். வந்திருந்த தளபதிகளில் தன்னைக் காண வந்திருப்பவனே இளையவன் என்பதை ஹிரண்யதனுஸ் முன்னரே அறிந்திருந்தார். இருப்பினும் அவரே மாளிகைமுகப்புக்கு தன் முதற்கோலுடன் வந்து அஸ்தினபுரியின் தூதரை தலைவணங்கி கோல்தாழ்த்தி வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார்.

தூதனுக்காக ஹிரண்யபதத்தின் குலச்சபை மாளிகை நடுவே இருந்த திறந்த அங்கணத்தில் கூடியிருந்தது. மரத்தாலான மணைகளில் குடித்தலைவர்களும் வனக்காவலர் தலைவர்களும் துறைக்காவலர்தலைவர்களும் பதினெட்டு பூசகர்களும் அமர்ந்திருக்க எதிரே உயரமான மரப்பீடத்தில் ஹிரண்யதனுஸ் அமர்ந்தார். அவருக்கு நிகரான பீடம் தூதனுக்கு அளிக்கப்பட்டது. முகமன் சொல்லி வாழ்த்துரைத்து தூதனை அமரச்சொன்னார் ஹிரண்யதனுஸ். அவை அவனையும் அஸ்தினபுரியையும் வாழ்த்தி ஒலித்தது. ஆசுரநாட்டு முறைப்படி செந்நிறமான மலர்மாலையையும் புலித்தோலால் ஆன தலையணியையும் அவனுக்கு அணிவித்து முதுபூசகர் வாழ்த்தினார். அவன் ஹிரண்யதனுஸை வணங்காமல் அமர்ந்துகொண்டான்.

பெரிய மரக்குடுவையில் கொண்டுவரப்பட்ட ஈச்சங்கள்ளை மூங்கில் குடுவைகளில் ஊற்றி முதலில் அரசனுக்கு அளித்தபின் தூதனுக்கு அளித்தனர். விஸ்ருதன் அதை ஒரு மிடறு அருந்திவிட்டு வைத்தான். “ஹிரண்யபதத்தின் அரசரும் நிஷாதகுலத்தலைவருமாகிய ஹிரண்யதனுஸை அஸ்தினபுரியின் மாமன்னர் திருதராஷ்டிரர் வாழ்த்துகிறார். அமைச்சர் விதுரரும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். அஸ்தினபுரியின் நட்புநாடாக என்றும் ஹிரண்யபதம் நீடிக்குமென விழைவதாக விதுரர் தெரிவிக்கிறார். அந்த அன்பின் அடையாளமாக இப்பரிசை அவர் கொடுத்தனுப்பியிருக்கிறார்” என்றான் விஸ்ருதன்.

அஸ்தினபுரியின் அமுதகலச இலச்சினைகொண்ட ஒரு கங்கணத்தை திருதராஷ்டிர மன்னர் அனுப்பியிருந்தார். அதில் பன்னிரு செவ்வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. விஸ்ருதன் முறைமைச்சொற்களைப் பயின்று நினைவிலிருந்து சொல்வதைப்போல சொன்னான். ஹிரண்யதனுஸ் சொன்ன முறைமைச்சொற்களுக்கு கூத்துக்கலைஞன் போல உடல்மொழி காட்டி எதிர்வினைசெய்தான். அவன் மெல்ல பதறிக்கொண்டிருப்பதைக் கண்ட அவையினர் அனைவரும் அவனுக்கு அதுவே முதற்தூது என்று உணர்ந்துகொண்டனர்.

அவன் அவையில் பேசிக்கொண்டிருக்கையிலேயே அஸ்தினபுரியின் படை ஹிரண்யபதத்தின் காட்டுக்குள் வேட்டையை தொடங்கிவிட்ட செய்தியை காவலன் வந்து ஹிரண்யதனுஸ் காதில் சொன்னான்.  அவர் அதைக்கேட்டு முகம் சினத்தால் சிவக்க தன் இரு கைகளையும் இறுகப்பற்றிக்கொண்டு அதைக் கடந்தார். அவரது ஒப்புதலைப் பெற்று அதை அவன் சென்று சொல்வதுவரைக்கும்கூட அவர்கள் காத்திருக்கவில்லை என்பதை அவையினர் அனைவருமே அறிந்ததை அங்கே உருவான உடலசைவு காட்டியது. அதை விஸ்ருதனும் உணர்ந்துகொண்டான் என்று அவன் பார்வையைக்கொண்டே ஹிரண்யதனுஸ் அறிந்தார்.

அந்த இறுக்கத்தை தன் புன்னகைநிறைந்த சொற்களால் கலைத்த சுவர்ணை “தூதர் மிக இளையோராக இருக்கிறார். பெருந்திறன் கொண்டவராகவும் இருந்தாலொழிய இப்பெரும்பொறுப்பை அளித்திருக்கமாட்டார்கள். இப்போதே அவர் நம்மிடம் வந்தது மகிழ்வளிக்கிறது. அவர் இன்னும் நெடுங்காலம் அஸ்தினபுரியில் பெரிய பதவிகளில் இருப்பார். அப்பொறுப்புகள் அனைத்தையும் நமக்கு உகந்தமுறையில் அவர் கையாள்வார் என நினைக்கிறேன்” என்றாள். அந்த நேரடிப் புகழ்மொழியால் தடுமாறிய விஸ்ருதன் “ஆம், அது என் கடமை” என்று சொல்லி உடனே அது சரியான சொல்லாட்சியா அல்லவா என்ற ஐயத்தில் ஆழ்ந்தான்.

அஸ்தினபுரியின் தூதருக்காக வெளியே ஊண்முற்றத்தில் பெருவிருந்து ஒருங்குசெய்யப்பட்டிருந்தது. ஊண்நிறைவை சேவகன் வந்து சொன்னதும் சித்ரகர் எழுந்து வணங்கி “அஸ்தினபுரியின் தூதர்கள் எங்களுடன் விருந்துண்டு எங்களை மகிழ்விக்கவேண்டும்” என்றார். விஸ்ருதன் “ஆம்… அவ்வாறே” என புன்னகையுடன் சொன்னபடி சால்வையை இழுத்துப் போட்டுக்கொண்டு எழுந்தான்.

அக்கணம் அந்த அசைவைக்கண்டு ஹிரண்யதனுஸ் கடும் கசப்பை தன்னுள் உணர்ந்தார். இந்த இளையமூடன் தான் எந்த ஆட்டத்தில் காய் என்று அறியாமல் அத்தருணத்தில் தன்னை ஓர் அரசனாக எண்ணிக்கொள்கிறான். இன்று இந்த தூதுக்கு அனுப்பப்பட்டமையை பின்னெப்போதாவது உணரநேர்ந்தால் தன் தோலெல்லாம் உரிந்துபோகும் அளவுக்கு நாணிக்கூசுவான் என்று எண்ணினார். மூடர்களை வைத்து விளையாடும் அறிவாணவம் அதைவிட கூசச்செய்தது அப்போது.

ஆனால் விஸ்ருதன் நிமிர்ந்த தலையுடன் புன்னகைச்சொற்களுடன் ஒவ்வொருவரையாக வணங்கி முறைமை காட்டி நடந்தான். சுவர்ணையின் விழிகள் ஹிரண்யதனுஸ் விழிகளை ஒருகணம் வந்து தொட்டுச்சென்றன. ஊண்முற்றத்தில் ஏழுவகை ஊனுணவுகளும் மூன்றுவகை கள்ளும் விளம்பப்பட்டிருந்தன. பழச்சாற்றில் வேகவைக்கப்பட்ட காட்டுக்கோழியையும் அனலில் சுடப்பட்ட மானிறைச்சியையும் விஸ்ருதனுக்குப் பரிமாறியபோது அவன் முகத்தில் இளையோருக்கே உரிய மகிழ்ச்சி வந்து நிறைவதை அவனால் தடுக்கமுடியவில்லை. சித்ரகரின் கண் வந்து ஹிரண்யதனுஸ் கண்ணைத் தொட்டு மீண்டது.

விஸ்ருதன் மெல்லமெல்ல அவனுடைய கட்டுப்பாடுகளை எல்லாம் இழந்துகொண்டே இருந்தான். பெரிய அரசுகளில் சிறிய பொறுப்பில் இருக்கும் எவரையும்போல அங்கே நிகழ்வன அனைத்துக்குமுள்ள அறியப்படாத பக்கங்களை தான் அறிந்திருப்பதாக அவன் நடிக்கத் தொடங்கினான். எளிய வினாக்களுக்குக் கூட மிகப்பெரிய மந்தணச்செய்தியை மறைத்துவைத்திருப்பவன் போல புன்னகைசெய்து “அதைப்பற்றி நான் ஏதும் முறைசார்ந்து சொல்லமுடியாது” என்றான். வாய்த்தவறுதலாகச் சொல்வதுபோல அரண்மனைவம்பு ஒன்றைச் சொல்லி அதைச் சொல்லிவிட்டமைக்காக திகைத்து அது எவர்செவிக்கும் செல்லவேண்டியதில்லை என்று கோரினான்.

அவனுடைய பாவனைகளை அங்கிருந்த எளிய குடித்தலைவர்களும் பூசகர்களும் நம்பி உடல்பதறும் திகைப்புடனும் அடக்கமுடியா உவகையுடனும் கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவர் அகத்திலும் அச்செய்தியை எப்படி தங்கள் உயர்மட்டத் தொடர்புகள் காரணமாக தாங்கள் மட்டுமே அறிந்திருப்பதாக பிறரிடம் சொல்வது என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருப்பதை ஹிரண்யதனுஸ் உணர்ந்தார். எளியமக்கள், அவர்களுக்குத் தேவை எளியமுறையில் புரிந்துகொள்ளத்தக்க உயர்மட்ட அரசியல். அதை இத்தகைய அடித்தளத்தவர் சமைத்து அளித்தபடியே இருக்கிறார்கள்.

விஸ்ருதன் குரலைத்தாழ்த்தி “அங்கே நிகழ்வனவற்றை சிலரே புரிந்துகொள்ளமுடியும். காந்தாரத்து அரசியின் மைந்தர் இப்போது கதாயுத்தம் கற்க யாதவநாட்டுக்குச் சென்றிருக்கிறார் என்கிறார்கள். யாதவ அரசி ஒவ்வொரு கணமும் காய்களை நகர்த்துகிறார். ஆனால் காந்தாரத்து அரசி அனைத்துச் செய்திகளையும் திரட்டிவிட்டார். நாளை யாதவ அரசி தன் மைந்தனுக்கு முடியுரிமை கோரினாரென்றால் அவருடைய மைந்தர்களின் குருதித் தந்தை யார் என்று அவர் கேட்பார்” என்றான்.

“யார்?” என்று ஒரு கிழவர் கண்களைச் சுருக்கியபடி கேட்டார். “மகிஷவர்த்தனத்தைச் சேர்ந்த ஓர் இடையன் என்கிறார்கள். அவன் ஆயிரம் எருமைக்கு உரியவனாகையால் அவனை தருமன் என்றார்கள். அப்பெயரையே இந்த இளவரசருக்கு வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் அரண்மனையில் சிலரே அறிந்த செய்திகள். ஆனால் நாளை இவை சபை ஏறும். அப்போது பாரதவர்ஷமே நடுங்கும்” என்றான் விஸ்ருதன். கூடியிருந்தவர்கள் அகக்கிளர்ச்சியுடன் முகம் கன்ற சிரித்துக்கொண்டனர்.

விருந்து நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே வேட்டைபற்றிய செய்திகள் வந்துகொண்டிருந்தன. அஸ்தினபுரியின் படைகள் காட்டுக்குள் சென்று யானைகளைக் கலைத்து மலைக்குடிகளின் ஊர்களுக்குள் செலுத்துவதாக முதற்செய்தி வந்தது. மான்களையும் காட்டுப்பன்றிகளையும் வெறுமனே கொன்று தூக்கி ஹிரண்யவாகாவில் போடுகிறார்கள் என்றும் வானில் பறக்கும் பறவைகளை அம்பெய்து ஊர்களுக்குள் வீழ்த்துகிறார்கள் என்றும் அடுத்த செய்தி வந்தது. அஞ்சிய மலைக்குடிகள் ஹிரண்யபதம் நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள் என்று மீண்டும் செய்தி வந்தது.

உணவும் தாம்பூலமும் முடிந்தபின்னர் விஸ்ருதனும் அவன் வீரர்களும் படகிலேறி ஹிரண்யவாகாவின் ஒழுக்கில் சென்றனர். “மூடன்!” என்று ஹிரண்யதனுஸ் கசப்புடன் சொன்னார். “ஆம், அவன் மூடனாக இருந்தால் மட்டும் போதாது, மூடனாகத் தெரியவும் வேண்டும் என விதுரர் எண்ணியிருக்கிறார்” என்றாள் சுவர்ணை. சித்ரகர் “ஆனால் அவர் கொடுத்தனுப்பிய பரிசில் மதிப்பு மிக்கது” என்றார். “ஆம், அதையே நானும் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார் ஹிரண்யதனுஸ். அரசி “அது வெறும்பரிசல்ல. அது வைரக்கங்கணம். அதை நீங்கள் அணியாமலிருக்கமுடியாது. அதில் அஸ்தினபுரியின் இலச்சினை உள்ளது. நீங்கள் அணியவில்லை என்றால் அதை அவர்கள் அவமதிப்பாகக் கொள்ளலாம்” என்றாள்.

அன்றுமாலையே அவர் திகைக்கும்படியான செய்தியுடன் ஒரு வீரன் ஓடிவந்தான். “அஸ்தினபுரியின் படை திகைத்து நிற்கின்றது அரசே” என்று அவன் சிரிப்பும் பதற்றமுமாகச் சொன்னான். ஹிரண்யதனுஸ் அவன் சொற்கள் விளங்காமல் ஏறிட்டு நோக்கினார். “அஸ்தினபுரிப்படை வேட்டைநாய்களைக்கொண்டு காட்டைக் கலைத்தபடி புதர்கள் வழியாகச் சென்றார்கள். அவர்களின் நாய்கள் இங்குள்ளவை அல்ல. காந்தாரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஓநாய்களை இங்குள்ள நாய்களுடன் கலந்து உருவாக்கப்பட்டவை. மாந்தளிர்நிறமும் மயிரடர்ந்த வாலும் பெரிய செவிகளும் கூர்நாசியும் கொண்ட அவற்றின் குரல் செம்புக்கலத்தை அடித்ததுபோல ஒலிப்பது. அவ்வொலி கேட்டு யானைக்கூட்டங்களே வெருண்டு ஓடின” என்றான் அவன்.

“வேட்டைநாய்கள் செம்படவன் வலை போல விரிந்து காட்டைத் தழுவி அரித்துச்செல்பவை. அவற்றில் ஒன்று காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தபோது அங்கே ஒரு மரத்தடியில் வில்பயின்றுகொண்டிருந்த நம் இளவரசரை நோக்கி குரைத்தபடி கடிக்கச்சென்றிருக்கிறது. அவர் ஒரே நாணில் ஏழு சிற்றம்புகளை அதன் வாய்க்குள் செலுத்தி அதை வாய்மூடமுடியாமல் செய்துவிட்டார். ஓசையிழந்த நாய் திரும்பி ஓடி தன் படைகளிடம் சேர்ந்திருக்கிறது.”

“முதலில் அதற்கு என்ன நிகழ்ந்தது என அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் அவர்களில் இருந்த வில்லவன் ஒருவன் அதன் வாயில் நாணலால் ஆன சிற்றம்புகள் நிறைந்திருப்பதைக் கண்டான். நாய் ஒற்றை அம்பிலேயே தன் வாயை மூடிவிடும், எனவே ஒரே நாணில்தான் அத்தனை அம்புகளையும் விட்டிருக்க முடியும் என்று அவன் சொன்னபோது அவர்கள் மெய்சிலிர்த்துவிட்டனர். அது எப்படி கூடும், அத்தகைய விற்கலையை அறிந்ததே இல்லையே என்று அவர்கள் வியந்தனர். அச்சத்தை வென்று அந்த வில்லவனை பார்த்தேயாகவேண்டுமென முடிவெடுத்தனர்.”

“மீண்டும் நாயை அதன் வழியே அனுப்பி அந்த அம்புகள் எழுந்த இடத்துக்கு வந்துசேர்ந்தனர். அங்கே உடலெங்கும் புழுதியும் கிழிந்து மட்கிய தோலாடையும் சடைமுடிக்கற்றைகளுமாக நின்றிருந்த நம் இளவரசரைக் கண்டு அவர்களின் தலைவன் குழம்பினான். அவரை யாரோ முனிவரென அவன் எண்ணினான். அவரை நோக்கி அவன் தன் வில்லை எடுத்தகணமே இளவரசர் ஒற்றை நாணில் மூன்று அம்புகளைச் செலுத்தி அவன் இருகுண்டலங்களையும் குடுமியையும் வெட்டி வீழ்த்தினார். அத்தனைபேரும் அஞ்சி குரலெழுப்பியபடி தங்கள் விற்களையும் அம்புகளையும் வீசிவிட்டு மண்ணில் முழந்தாளிட்டு நெற்றி மண்பட வணங்கினர்.”

“இளவரசரிடம் அவர்களின் தலைவன் ‘இளையோரே, தாங்கள் யார்?’ என்று கேட்டான். ’ஆசுரநாட்டைச்சேர்ந்த ஹிரண்யபதத்தின் அரசரும் கருடகுலத்தின் தலைவருமான ஹிரண்யதனுசின் மைந்தன் நான். என்பெயர் ஏகலவ்யன்’ என்று அவர் விடையிறுத்தார். ’நிஷாத இளவரசே, தங்கள் வில்வேத ஆசிரியர் யார்?’ என்று அவன் கேட்க இளவரசர் ‘என் ஆசிரியர் வில்ஞானியாகிய துரோணர்’ என்றார்” என்று வீரன் சொல்ல “உண்மையாகவா? அப்படியா சொன்னான்? அதை கேட்டவர் யார்?” என்று ஹிரண்யதனுஸ் கூவினார்.

“நம் வீரர்கள் காட்டின் மரங்களுக்குமேல் இலைத்தழைப்புக்குள் அமர்ந்து அனைத்தையும் அறிந்துகொண்டிருந்தனர் அரசே” என்றான் வீரன். “துரோணரின் மாணவர் என்றே நம் இளவரசர் சொன்னார்.” ஹிரண்யதனுஸ் அரசியை நோக்கிவிட்டு “அவன் சிலமாதங்கள்கூட அங்கிருக்கவில்லையே” என்றார். சுவர்ணை “அதைத்தான் அவன் சொன்னான், குருநாதரை தன்னுடன் கொண்டு வந்திருப்பதாக… அவரது ஞானவடிவத்தை அவர் அவனுடன் அனுப்பியிருக்கக்கூடும்” என்றாள். “அதெப்படி?” என்று ஹிரண்யதனுஸ் கேட்க “அது நிகழ்ந்திருக்கிறது, அவ்வளவுதான்” என்றாள் அரசி.

“துரோணர் பெயரைக்கேட்டதும் அஸ்தினபுரியின் வீரர்கள் கைகளைக் கூப்பி சொல்லிழந்து நின்றுவிட்டனர்” என்றான் வீரன். “அத்துடன் அவர்கள் இளவரசை வணங்கி காட்டிலிருந்து திரும்பிச்சென்றனர். கங்கைக்கரை நோக்கி அவர்கள் செல்வதை நம் வீரர்கள் கண்டனர்.” சற்று நேரத்தில் அடுத்த வீரன் வந்து “அரசே, அஸ்தினபுரியின் படை திரும்பிச்செல்கிறது. படகுகள் ஹிரண்யவாகாவில் பாய்விரித்துவிட்டன” என்றான்.

“இளவரசன் எங்கே? அவனை அழைத்துவாருங்கள்” என்று ஹிரண்யதனுஸ் இருகைகளையும் தூக்கி கூவினார். “நகரம் விழவுகொள்ளட்டும். முழவும் முரசும் ஒலிக்கட்டும். கள்வெறியும் களிவெறியும் எழட்டும்!” வீரர்கள் காட்டுக்குள் ஏகலவ்யனை தேடிச்சென்றனர். பந்தங்களின் செவ்வொளி பரந்த சந்தைமுற்றத்தில் கள்பீப்பாய்கள் உருண்டு வந்து எழுந்து வாய்திறந்து நுரை எழுப்பின. ஊன் தீயில் வேகும் இன்மணம் எழுந்தது. நகைப்பொலியும் களிப்பொலியும் சேர்ந்த இரைச்சல் கரியதோல்பரப்பாக தலைக்குமேல் பரந்திருந்த வானை அதிரச்செய்தது.

முன்னிரவில் திரும்பிவந்த வீரர்கள் “அரசே, இளவரசர் அங்கே காட்டுக்குள் ஒரு மரப்பொந்தில் அமர்ந்திருக்கிறார். திரும்பி வர அவர் விரும்பவில்லை” என்றார்கள். அரசி “அவன் அங்கேயே இருக்கட்டும். அவன் எக்குலம் யாருடைய மைந்தன் என்று சொன்னானே, அதுவே போதும்” என்றாள். இரவெழுந்தோறும் களியாட்டம் கூடிக்கூடி வந்தது. முழவொலி ஹிரண்யவாகாவின் காற்றுவழியாகச் சென்று தொலைதூரத்து ஊர்களிலெல்லாம் கேட்டது.

பின்னிரவில் மகதத்தில் பிரஹத்ரதர் மறைந்தார் என்றும் ஜராசந்தர் முடிசூட்டிக்கொண்டார் என்றும் பறவைச்செய்தி வந்தது. “எரிபனை! எரிபனை எழுப்புங்கள்” என்று ஹிரண்யதனுஸ் ஆணையிட்டார். காய்ந்து இலைதொய்ந்து நின்றிருந்த முதிய குடைப்பனை ஒன்று வெட்டிக்கொண்டுவரப்பட்டு ஹிரண்யவாகாவின் கரையில் நடப்பட்டது. அதன் மேல் மீன்நெய்யும் ஊன் நெய்யும் பூசப்பட்ட மரவுரிகள் சுற்றப்பட்டன. எண்ணை நிறைந்த விதைகளைக் கோத்து அதன்மேல் கட்டினார்கள். அதைச்சுற்றி முழவுகளும் கொம்புகளும் துடிகளுமாக நகரமே வந்து கூடி கூச்சலிட்டது.

குலமூத்த முதியவர் ரம்பர் வந்து வணங்கி நடுங்கும் குரலில் “காசியபனின் குலத்து உதித்தவனே, சூரபதுமனின் மைந்தனே, அக்னிமுகனே உன் குடிகள் வணங்குகிறோம். உன் குருதி உன் முன் பணிகிறது. மைந்தர் நடுவே எழுக! எங்களை உன் தழல்கரங்களால் வாழ்த்துக!” என்று சொல்லி எரிபனைக்குத் தீயிட்டபோது மெல்ல தயங்கி எழுந்த தழல் வெறிகொண்டு நெய்யை உண்டு மேலெழுந்தது. “வான் திரையில் பற்றிக்கொள்கிறது தீ” என்று ஒருவன் கூவினான். செந்நிறத் தழல்கோபுரம் என எரிபனை எழுந்தது. அதன் நிழல் நீருக்குள் நெளிந்தது. தன் காலடியில் எம்பிக் கைவிரித்து கூச்சலிட்ட சிறுமைந்தர்கள் நடுவே அசுரசக்ரவர்த்தியும் வானளாவ நின்றாடினான்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

அனைவரும் ஆடிக்கொண்டிருக்கையில் சுவர்ணை மட்டும் தனியாக இருளில் நடந்து காட்டுக்குள் சென்றாள். அவளுடைய கால்கள் நன்கறிந்திருந்த பாதையில் பாம்புகளும் கீரிகளும் ஓடிக்கொண்டிருந்த இருளுக்குள் சென்று ஏகலவ்யன் இருந்த மரப்பொந்தை அடைந்தாள். அவன் அதன் சிறிய முகப்பில் கால்களை மடித்து அமர்ந்து ஆழத்தில் தெரியும் நெருப்பை நோக்கிக்கொண்டிருந்தான். அவள் வந்து அவனை நோக்கியபடி நின்றாள். அவள் வந்ததை வில்லாளனாகிய அவன் நெடுந்தூரம் முன்னரே அறிந்திருந்தாலும் தலையைத் தூக்காமல் விழி திருப்பாமல் அமர்ந்திருந்தான்.

ஏதோ ஒரு கணத்தில் இருவரும் ஒரே பெருமூச்சின் இருமுனைகளில் நின்றபடி தங்களை உணர்ந்தகணம் விழிகள் சந்தித்துக்கொண்டன. ஏகலவ்யனின் உடல் சற்று அசைந்தது. அவன் எழுந்து விலகிச்செல்லப்போவதுபோலத் திரும்பினான். சுவர்ணை “அதோ தெரியும் நெருப்பில் உன் குலமூதாதை அக்னிமுகன் எழுந்தருளியிருக்கிறான் என்கிறார்கள்” என மெல்லிய குரலில் சொன்னாள். ஏகலவ்யன் தலைகுனிந்தே நின்றான்.

“மைந்தா, தன் முகத்தில் இருந்தும் பெயரில் இருந்தும் ஞானத்தில் இருந்தும் விடுதலைபெறக்கூடும். எவரும் தன் குருதியில் இருந்து விடுதலைபெறமுடியாதென்று அறி” என்றாள் சுவர்ணை. “மானுடர் தன்னை தனித்தறிவதையே மாயை என்கிறது சுக்ரநீதி. ஒரு சிதலோ காகமோ மானோ யானையோ அப்படி ஒருபோதும் உணர்வதில்லை. நீ மட்டும் சென்றடையும் முழுமை என்று ஒன்றில்லை என்றறியாமல் நீ முழுமை அடைவதுமில்லை” என்றாள்.

ஏதோ சொல்வதற்காக ஏகலவ்யன் முகத்தைத் தூக்க “ஆம், உன்னுள் எழும் ஞானத்துக்கான தவிப்பு உனக்குள் மட்டும் எழுவதே. நீ மட்டும் அறிவதே உன் ஞானம். ஆனால், காட்டில் ஒரே ஒரு மரத்தையே வானம் மின்விரலால் தீண்டுகிறது. காடே வெந்து வீடுபேறடைகிறது” என்றாள். ஏகலவ்யன் ஒளிரும் விழிகளுடன் திரும்பி அவளை நோக்கினான்.

வெண்முரசு விவாதங்கள்