வண்ணக்கடல் - 60
பகுதி ஒன்பது : பொன்னகரம்
[ 2 ]
ஹிரண்யவாகா நதியின் கரையில் இருந்த ஹிரண்மயம் என்ற ஊருக்கு இளநாகன் பூரணருடன் சென்று கொண்டிருந்தான். ரௌம்யர் வழியிலேயே பிரிந்து சென்றுவிட அவனுடன் பூரணர் மட்டுமே இருந்தார். ஆசுர வனதேசத்தின் தலைநகரமான ஹிரண்மயம் பற்றி வராகதந்தர் குடித்தலைவரான பூதர்தான் முதலில் சொன்னார். “நீலமலைக்கு தெற்கே நிஷதமலைக்கு வடக்கே இன்றிருக்கும் ஹிரண்மயம் ஒருகாலத்தில் மேகங்களால் சூழப்பட்டு விண்ணில் மிதந்துகொண்டிருந்தது. நெடுங்காலம் முன்பு அசுரகுலத்து மூதாதையரான ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும் இணைந்து நாடாண்டபோது அவர்களுக்காக மயன் உருவாக்கிய பெருநகர் அது.”
ஆயிரம் அரச மாளிகைகளும் ஆயிரம் அரசபாதைகளும் ஐந்தாயிரம் குடித்தெருக்களும் ஆயிரம் காவல் மாடங்களும் கொண்டது. அதன் மையத்தில் அசுரர்களின் அன்னைதெய்வமான திதியின் ஆலயம் இருந்தது. அதைச்சுற்றி அசுரகுல மூதாதையான விருத்திராசுரன், பஸ்மாசுரன், மகிஷாசுரன், நரகாசுரன் ஆகியோருக்கான ஆலயங்கள் அமைந்திருந்தன.
நூறு அஸ்வமேத வேள்விகளாலும், அந்நூறு வேள்விகளின் செல்வத்தைக்கொண்டு செய்யப்பட்ட விஸ்வஜித் வேள்வியாலும் அந்நகரை மண்ணிலிருந்து மேலெழச்செய்தார்கள் ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும். ஒவ்வொரு அஸ்வமேதவேள்வி முடியும்போதும் நகரம் மண்ணிலிருந்து அடித்தளங்களுடன் பத்தடி மேலெழுந்தது. முதலில் அதிலிருந்து மண்ணுக்கு இறங்க படிக்கட்டுகளைக் கட்டினார்கள். பின்னர் மர ஏணிகளை அமைத்தனர். பின்னர் அவை நூலேணிகளாயின. பின்னர் அசுரர்கள் தங்களால் அதிலிருந்து இறகுபோல பறந்திறங்கமுடிவதை கண்டுகொண்டனர். அவர்கள் கைகளை விரித்து விண்ணில் பறக்கத்தொடங்கினர். மானுடநகரங்களுக்கு மேலாக அசுரர்கள் பறந்தலைந்தனர். இரவில் அவர்கள் பறவைகள் கூடணைவதுபோல ஹிரண்மயத்தில் இருந்த தங்கள் இல்லம்சேர்ந்தனர் என்றார் பூதர்.
ஹிரண்யவாகா நதிக்கரையில் அந்நகரம் இன்றுமிருப்பதாக பூதர் சொன்னார். தன் இளமையில் அந்நகருக்குச் சென்றிருப்பதாகவும் அங்கே பொன்மயமான பெருமாளிகைகளைக் கண்டதாகவும் சொன்னார். “அப்படியென்றால் அதைக் காண்பதே அடுத்த இலக்கு” என்றார் பூரணர். ரௌம்யர் “சென்றகாலத்து நகரங்களைக் காண்பதில் எனக்கு ஆர்வமில்லை. மதுவிளையும் வாழும் நகரங்களையே நான் விழைகிறேன்” என்றார்.
பூதர் குறித்தளித்த குறிகளை மலைப்பாறைகளிலும் ஓடைகளிலும் மரங்களிலும் தேர்ந்து அவர்கள் யானைகள் சென்று உருவான காட்டுப்பாதையில் நடந்தனர். இரவில் மரங்களில் துயின்றும் பகலில் காட்டுணவும் ஓடைநீரும் உண்டும் சென்று ஹிரண்யவாகா நதியைக் கண்டனர். பாறைகளில் அறைந்து நுரையெழுப்பிச் சென்றுகொண்டிருந்த ஆற்றின் கரையில் நாணல்கள் அடர்ந்த சதுப்பை ஒட்டி வடக்கு நோக்கிச் சென்றனர். செல்லும் வழியில் பூரணர் ஹிரண்மயத்தின் தொல்கதையை சொல்லிக்கொண்டு வந்தார்.
பேரன்னை திதிக்கு காசியரில் பிறந்த இரட்டையர் ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும். மயானருத்ரர்கள் விண்ணில் உலவும் மூவந்திநேரத்தில் அன்னை திதி அவர்களைக் கருவுற்றாள். ஆகவே எல்லையற்ற ஆற்றலும் ஆறாப்பெருஞ்சினமும் கொண்டவர்களாக அவர்கள் பிறந்துவந்தனர். காசியப பிரஜாபதி விண்ணில் ஆயிரம் பொன்னிறக் குதிரைகளை திசையெங்கும் செலுத்தி ஆற்றிய அஸ்வமேதவேள்வியில் பொன்னிருக்கையில் அமர்ந்திருக்கும்போது அவ்விரு மைந்தர்களும் பிறந்தமையால் அவர்களுக்கு காசியபர் ஹிரண்யாக்ஷன் ஹிரண்யகசிபு என்று பெயரிட்டார்.
அவர்களின் பிறப்பைக் கண்டு அசுரகுலத்து மூதாதையர் மண்ணில் பெருமரங்களாக எழுந்து காற்றில் கிளைகளை அசைத்து மலர்தூவினர். அவர்களுக்கு வஜ்ராங்கன் என்னும் தம்பியும் சிம்ஹிகை என்னும் தங்கையும் பிறந்தனர். சிம்ஹிகை விப்ரசித்தியை மணந்தாள். மைந்தர்கள் அன்னையின் முலையுண்டு ஆற்றல் கொண்டு வளர்ந்தனர். மழைக்கால மேகம் பெருகுவதுபோல அவர்களின் உடல் பெருகிப்பரவியது.
அக்காலத்தில் அசுரர்கள் மண்ணில் மரங்களைப்போல வேரூன்றி ஆழத்தில் ஓடும் நீரையும் நெருப்பையும் உறிஞ்சி உடலாக்கும் வல்லமை கொண்டிருந்தனர். கோடானுகோடிப் புழுக்களாக மண்ணுக்குள் நெளிந்துகொண்டிருக்கும் அசுரகுலத்து மூதாதையர் அவர்கள் வேர்களைத் தழுவிப்பின்னி அவர்களை வாழ்த்தினர். நீரையும் நெருப்பையும் கலந்து அவர்கள் மலர்களையும் தளிர்களையும் படைத்துக்கொண்டனர். மண்ணில் இரு பேராலமரங்களாக விரிந்து கிளைபரப்பி ஆயிரமாண்டுகாலம் தவம்செய்த ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும் நிகரற்ற தோள்வலிமை கொண்டனர். அவர்களின் கரங்கள் கிளைகளாக விரிந்தன. விரல்கள் விழுதுகளாகப் பரவின. அவர்கள் குலத்தில் அவர்களைப்போலவே ஆற்றல்கொண்ட பல்லாயிரம் அசுரவீரர்கள் தோன்றினர்.
தங்கள் பெரும்படையுடன் ஹிரண்யாக்ஷன் ஹிரண்யகசிபு இருவரும் மண்ணுலகை முழுதும் வென்றனர். ஐம்பத்தாறு மன்னர்களின் மணிமுடிகளை அவ்வரசர்களின் தலைகளுடன் கொய்துவந்து அடுக்கி அதன்மேல் தங்கள் அரியணையை அமைத்தனர். ஹிரண்யாக்ஷன் வருணனின் தலைநகரமான சிரத்தாவதியை அடைந்து அவனை போருக்கு அறைகூவினான். அஞ்சிநடுங்கிய வருணனை காட்டுக்கொடிகளால் தன் தேர்க்காலில் கட்டி இழுத்துவந்து தன் நகருக்குள் ஒரு குளிர்நதியாக ஓடும்படி ஆணையிட்டான். சூரியனை வென்று அவனை தன் நகர்மேல் ஒளியாக நிறையவேண்டுமென்று ஆணையிட்டான். இந்திரனும் யமனும் அவன் நகரில் காவலர்களாக நின்றனர்.
விண்ணையும் மண்ணையும் வென்று நிகரற்றவனாக அலைந்த ஹிரண்யாக்ஷன் ஒருமுறை விண்கடல்மேல் ஒளித்தேரில் செல்லும்போது எதிரில் இருண்ட பெருஞ்சுழி ஒன்றைக் கண்டான். அவன் விழிகளுக்கு அது ஒரு பெரும்பன்றி என்று தோன்றியது. அதன் சுழிமையம் பன்றியின் கண்கள் போல மதம்பரவிய இருளொளியாக மின்னியது.
அமைச்சன் சுவாகன் அது முன்பு சுவாயம்புவமனுவின் காலகட்டத்தில் பூமி நிலையழிந்து விண்வெள்ளத்தில் மூழ்கி மறைந்துபோனபோது பிரம்மனின் கோரிக்கையை ஏற்று கரியபேருருவாக எழுந்து வந்த பெருமாளே என்று சொன்னான். ‘பன்றிவடிவெடுத்த முதற்பொருள் பூமியை தன் ஆற்றல்மிக்க மூக்கால் தோண்டி எடுத்து ஒளிநோக்கிக் காட்டியது. அதில் அழிந்துபட்ட உயிர்க்குலங்கள் மீண்டும் முளைத்தெழ பூமிக்கோளம் சிலிர்த்துக்கொண்டது. இப்பன்றியின் ஆற்றல் எல்லையற்றது. ஒளியனைத்தையும் பெறும் அன்னையின் கருவறை வாயிலே இருளின் சுழி’ என்றான் சுவாகன்.
‘நான் வேட்டைக்கு வந்தவன். மிருகத்தைக் கண்டு அஞ்சி விலகுவது ஆண்மையல்ல. இக்கணமே இதை வெல்வேன். அன்றி வீழ்வேன்’ என்று சொல்லி தன் கதையைச் சுழற்றியபடி அப்பன்றியை எதிர்கொண்டான் ஹிரண்யாக்ஷன். அதை நெருங்கியபோது ஆயிரம் கோடி இடியோசைகள் என பன்றி தன் வயிற்றுக்குள் உறுமியது. அதன் கரிய முடிமுட்கள் சிலிர்த்தெழுந்தன. மதவிழிகளின் சுழிக்குள் ஓர் ஒளி மின்னி அணைந்தது. கூவியபடி அதன்மேல் பாய்ந்த ஹிரண்யாக்ஷன் அவ்விழிகளே பெருவெளியாக எழுவதைக் கண்டான். அவ்விழிச்சுழியின் முடிவிலா ஆழத்துக்குள் சென்று மறைந்தான். ‘ஓம்!’ என்ற ஒலியுடன் பன்றி மீண்டும் தன் பெருந்தவத்துக்குள் அமிழ்ந்தது.
ஹிரண்யாக்ஷன் மறைந்த செய்தியை ஹிரண்யகசிபு அறிந்து உடன்பிறந்தானைக் கொன்றது யாரென்று நிமித்திகம் நோக்கி அறிந்தான். விண்ணும் மண்ணுமான பெருமாளே வென்றவன் என்றறிந்து ‘எவ்வண்ணம் அவனைத் தடுப்பது?’ என்று அசுரகுரு சுக்ராசாரியாரிடம் கேட்டான். ‘அழைப்பவருக்கு அருள எழுவது அவன் தொழில். அவன் அறிதுயில் கலைக்கும் அழைப்பெதுவும் உன் நாட்டில் எழாவிட்டால் அவன் வரமுடியாது’ என்றார் சுக்ரர். தன் தேசத்தில் எவரும் நாராயண நாமத்தைச் சொல்லலாகாது என்று ஹிரண்யகசிபு ஆணையிட்டான். அசுரகுலத்து மெய்ஞான நூல்களையே அனைவரும் கற்கவேண்டும் என்றான். ஒருவருக்கும் ஒருகுறையும் இன்றி மண்ணையும் விண்ணையும் அவன் ஆண்டான்.
பன்றிவடிவெடுத்து தன் தமையனைக் கொன்ற லீலையை ஹிரண்யகசிபு அறிந்தான். அழியா வரம் கோரி இருள்நிறைந்த வனத்துக்குள் ஆயிரம் விழுதுகள் ஆடும் ஒரு பேராலமரமாக மாறி அவன் ஊழ்கத்திலமர்ந்தான். அவன் உடலெங்கும் பூக்கள் நிறைந்தன. கனிகள் எழுந்து கிளைதொய்ந்தன. அவற்றில் பறவைக்குலங்கள் கூடணைந்து பல்லாயிரம் மொழிகள் பேசின. இலைநாநுனிகளால் ஒற்றை மந்திரத்தைச் சொல்லி அவன் தன்னுள் ஆழ்ந்திருந்தான்.
அத்தவத்தால் கனிந்த பிரம்மன் அவனுக்கு வரமளித்தான். அழியா வரம் பெறும் வல்லமை மானுடர்க்கும் அசுரருக்கும் இல்லை என்றான் பிரம்மன். அவ்வண்ணமென்றால் மானுடனோ மிருகமோ என்னைக் கொல்லலாகாது என்று வரம் கேட்டான் ஹிரண்யகசிபு. வீட்டிலோ வீதியிலோ தன் இறப்பு நிகழலாகாது. பகலிலோ இரவிலோ தன் உயிர் பிரியலாகாது என்றான். அவ்வாறே ஆகுக என்று வரம் அளித்தான் பிரம்மன்.
ஹிரண்யகசிபு ஹிரண்மயத்தில் இல்லை என்றறிந்த தேவர்கள் இந்திரன் தலைமையில் கூடி படைகொண்டுவந்தனர். மண் தொடாது காற்றில் மிதந்து நின்ற நகரைச்சூழ்ந்து தங்கள் அம்புகளால் தாக்கினர். ஹிரண்மயத்தின் கோட்டைகள் இடிந்தன. சோலைகள் கருகின. மாடக்கூடங்களின் முகடுகள் எரிந்தன. ‘ஓம் ஹிரண்யாய நம:’ என்று கூவியபடி அசுரர்கள் விண்ணில் பறந்து தேவர்களை தாக்கினர். ஏழுநாட்கள் நடந்த பெரும்போரில் அசுரர்கள் தேவர்களை வென்று துரத்தினர். தோற்றோடிய இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் தாக்கி ஹிரண்யகசிபுவின் அரசி கயாதுவை மயக்கி அவளைத் தன் தேரில் ஏற்றிக்கொண்டு விண்ணுலகம் சென்றான்.
விண்ணுலகில் சென்ற ரதத்தில் நின்று கதறிய கயாதுவின் குரல் கேட்டு அங்கே வந்த நாரதர் இந்திரனைத் தடுத்தார். ‘இவள் இன்று கருவுற்றிருக்கிறாள். கருவுற்றமிருகத்தை வேட்டையாடுதலே அறமல்ல என நூல்கள் விலக்குகின்றன. இவளை நீ சிறைப்பிடித்தது பெரும்பிழை’ என்றார். முனிவருக்கு இணங்கி இந்திரன் கயாதுவை அவரிடம் கையளித்தான். நாரதர் ‘மகளே, நீ உன் கணவனிடம் செல்’ என்றார். ‘என் நகரத்திலிருந்து நான் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டேன். என்னை என் தலைவன் வந்து மீட்டழைத்துச் செல்லலே முறை’ என்று கயாது சொன்னாள். ‘உன் கணவன் தவம் விட்டு மீளும் வரை நீ என் குடிலில் தங்குக’ என்று சொல்லி நாரதர் வைகுண்ட வனத்தில் இருந்த தன் தவச்சாலைக்கு அவளை அழைத்துச்சென்றார்.
நாரதரின் குடிலில் கயாதுவின் வயிற்றில் பிரஹலாதன் பிறந்தான். இளமையின் ஒளிகொண்ட மைந்தனை கையிலேந்திய நாரதர் அவனுக்கு விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைக் கற்பித்தார். மைந்தனுக்கு ஏழுவயதிருக்கையில் தவம் விட்டெழுந்த ஹிரண்யகசிபு தன் நகரத்தை அடைந்து செய்தியை அறிந்து சினம்கொண்டு விண்ணகம் புகுந்தான். அவன் வருவதைக்கண்டு இந்திரனும் தேவர்களும் ஓடிமறைந்தனர். ஹிரண்யகசிபு இந்திரனின் அமராவதியை தன் கதையாலேயே அடித்து நொறுக்கி கற்குவியல்களாக ஆக்கினான். சுதர்மை எனும் சபையை உடைத்தழித்தான். நந்தவனம் என்னும் தோட்டத்தை தீவைத்துக் கருக்கினான்.
ஹிரண்யகசிபு பட்டத்தரசி கயாதுவையும் மைந்தன் பிரஹலாதனையும் மீட்டு ஹிரண்மயத்துக்கு அழைத்துவந்தார். கயாது மீண்டும் கருவுற்று சம்ஹ்லாதனையும் அனுஹ்லாதனையும், சிபியையும், பாஷ்கலனையும் பெற்றாள். மைந்தரால் பொலிந்த ஹிரண்யகசிபு தானே நிகரற்றவன் என்று எண்ணி அரியணை அமர்ந்தார். மேலும் நூறு அஸ்வமேதங்களையும் விஸ்வஜித் வேள்விகளையும் செய்து தன் நகரத்தை விண்ணில் எழுப்பி மேகங்கள் நடுவே நிறுத்தினார்.
கல்விமுடித்து பிரம்மசரியநெறியை முழுமைசெய்து அரண்மனை மீண்ட பிரஹலாதன் தன் தந்தையின் காலடி தொட்டு வணங்கியபோது ’நீ கற்றவற்றை எல்லாம் ஒற்றைச் சொல்லில் சொல்’ என்றார் ஹிரண்யகசிபு. ‘நால்வேதங்களும் ஆறுமதங்களும் ஆறுமுழுநோக்குகளும் மூன்று தத்துவங்களும் ஓம் நமோ நாராயணாய என்ற சொற்களில் அடங்கும்’ என்றான் பிரஹலாதன். திகைத்தெழுந்த ஹிரண்யகசிபு ‘என் நகரில் என் பெயரன்றி இன்னொரு பெயர்வாழ்த்து ஒலிக்கலாகாது என்று சொல்லியிருக்கிறேன். என் ஆணையை எப்படி நீ மீறலாம்?’ என்று கூவினார். ‘மெய்யறிவை எவரும் ஆணையிட்டு தடுக்கமுடியாது தந்தையே’ என்றான் பிரஹலாதன்.
அசுரகுருநாதர்கள் அனைவரையும் அழைத்து அசுரஞானம் அனைத்தையும் மைந்தனுக்குக் கற்பிக்க ஹிரண்யகசிபு ஆணையிட்டார். நீரிலும் நெருப்பிலும் நின்று தவம்செய்தும் முள்ளில் அமர்ந்து தவம்செய்தும் பிரஹலாதன் அனைத்து நூல்களையும் கற்றுத்தேர்ந்தான். ஏழாண்டுகால கல்விக்குப்பின் மைந்தனை சபைக்கு வரவழைத்து ‘நீ கற்றதென்ன?’ என்று ஹிரண்யகசிபு கேட்டார். ‘ஓம் நமோ நாராயணாய என்ற சொல்லில் அனைத்தையும் அடக்குவதே எளிது’ என்று மைந்தன் விடை சொன்னான். ‘என்னுடன் சபைகூடி நீ அறிந்தவற்றைச் சொல்லி நிறுவு’ என்று தந்தை மைந்தனுக்கு ஆணையிட்டார்.
“அசுரகுலத்துப் பேரறிஞர்கள் ஆயிரம்பேர் கூடிய ஞானசபையில் மைந்தனும் தந்தையும் எதிரெதிர் பீடங்களில் அமர்ந்தனர். அசுரமெய்ஞானத்தின் முதல்ஞானி நான்குவேதங்களுக்கும் அதிபதியாகிய பிரஹஸ்பதி. பிரம்மனின் அனல்வடிவமாக எழுந்த மைந்தர் அங்கிரசுக்கும் வசுதைக்கும் பிறந்த எட்டு மைந்தர்களில் அசுர மெய்ஞானத்தை அறிந்து புகழ் கொண்டவர் பிரஹஸ்பதி. அதை அவர் தன் மாணவர்களாகிய சுக்ரருக்கும் கணாதருக்கும் கற்பித்தார். அவர்கள் தங்கள் மாணவர்களாகிய பரமேஷ்டிக்கும் பிருகுவுக்கும் அதைக் கற்பித்தனர். அவர்கள் தங்கள் மாணவர்களான ஜாபாலிக்கும் பஞ்சசிகனுக்கும் கற்பித்தனர். அசுரஞானம் அழியாத குருமரபு வழியாக இன்றும் வாழ்கிறது” பூரணர் சொன்னார்.
அசுரஞானத்தை பிரஹஸ்பத்யம் என்றும் ஜடவாதம் அல்லது பூதவாதம் என்றும் சொல்வார்கள். இப்புடவி ஐந்து அடிப்படைப் பருப்பொருட்களால் ஆனது என்பதே ஜடவாதம். மண், நீர், காற்று, தீ, வானம் என்னும் ஐந்தும் ஐந்து பெருநிகழ்வுகள்” என்றார் பூரணர். இவ்வைந்தின் முடிவற்ற முயங்குநிலைகளே இப்புடவியை இயற்றியுள்ளன என்பதும் இவ்வைந்துக்கும் அப்பால் ஆறாவதாக ஒன்றில்லை என்பதும் ஜடவாதத்தின் அறிதல்கள். இவ்வியக்கத்தின் அனைத்து வினாக்களுக்கும் ஐம்பொருளிணைவிலேயே விடைதேடவேண்டும் என்றும் ஆறாவதாக ஒன்றை உருவகிப்பது அறியமுடியாமையை முன்வைப்பதே என்றும் பிரஹஸ்பதி கூறினார்.
பொருண்மையின் ஐந்துநிலைகளையே ஐம்பூதங்கள் என்கிறோம். பருவுடலால் தொடப்படுவதும், பலநூறாயிரம் இணைவுகளின் சமநிலையால் ஆனதும், அடைந்த தன்னிலையில் மாற்றமற்றிருக்கும் விழைவுகொண்டதும் ஆன பொருள்நிலையே மண். விண்ணிலும் வெளியிலும் உள்ள கோடானுகோடி பொருள்நிலைகளில் இப்புவி மட்டுமே நாமறிவதாக உள்ளது. ஆகவே இதை இம்மொழியில் மண் என்கிறோம்.
ஒழுகுவதும், நிறைவதும், வழிவதுமான அனைத்தையும் நீர் என்கிறோம். விண்ணிலுள்ள முடிவிலாப் பெருவெள்ளங்களைப்பற்றி வேதங்கள் சொல்கின்றன. மண்ணிலுள்ள ரசங்களனைத்தும் நீரே. விண்ணிலுள்ள வழிதல்களனைத்தும் நீரே. இன்மையை நிறைக்கும் விரைவே நீர். சூழ்ந்துகொள்ளும் விசையே நீர். கரைத்தழிக்கும் விழைவே நீர். அது ஒளியை தன்னுள் நிறைத்துக்கொள்கிறது. மண்ணை நிறைக்கவும் கரைக்கவும் முயல்கிறது.
வீசுவதெல்லாம் காற்றே. பெருகுவதும் சுருங்குவதும் வழிவதும் சீறுவதும் அதன் இயல்புகள். மண்ணிலுள்ள அனைத்து வாயுக்களும் காற்றே. விண்ணிலுள்ள அனைத்து வீசுதல்களும் காற்றே. காற்று வானை நிறைக்கும் விழைவு கொண்டது. இன்மையை பொறுக்காதது. அது ஒளியை அறியாதது. மண்ணையும் நீரையும் நெருப்பையும் அள்ளி விளையாடுவது. வாசனையாக அவற்றை தன் மேல் சூடிக்கொண்டு செல்வது.
எரிவதெல்லாம் தீயே. அனைத்திலும் உறையும் வெம்மையே தீ. மண்ணிலுள்ள அனைத்திலும் அனல் உறைகிறது. கற்பாறைகளிலும் மலர்க்குருத்துகளிலும் தசைத்துளிகளிலும் உள்நின்றெரிகிறது. வானில் செம்பெருக்காக அது நிறைந்து வழிகிறது. வானகத்தை நிறைத்துள்ள ஒளிகள் அனைத்தும் அனலே. அவ்வனலின் பொறிகள் சிதறிப்பரந்துருவாகின்றன அனைத்துலகங்களும். அனைத்துக்குள்ளும் கொதிக்கும் வெம்மையென அது வாழ்கிறது.
நான்கு பருப்பொருட்களும் நான்காகப் பகுக்கப்பட்டிருப்பது அவற்றுக்கிடையே இடைவெளி விழமுடியும் என்பதனாலேயே. அவ்விடைவெளியை நிறைக்கும் வெளியே வானம். வானம் பருப்பொருட்களுக்கு விளிம்புவகுத்து வடிவம் கொடுக்கிறது. நாற்பெரும் பருக்களும் அமர மேல்கீழற்ற பீடமாகிறது. அனைத்தும் அமர்ந்த பின் எஞ்சியிருக்கும் இடத்தில் தான் அமர்ந்துகொண்டு தன்னை நிறைத்துக்கொள்கிறது. எனவே முடிவிலி என தன்னை அறிகிறது.
இங்குள்ளவை அனைத்தும் பருப்பொருட்களின் இணைவு, பிரிவு, நிலைநிற்றல் என்னும் மூன்று செயல்களின் விளைவாக உருவாகின்றன. ஜடவாத மெய்ஞானத்தில் அமர்ந்த முனிவராகிய பிருகு அதை இவ்வாறு கூறுகிறார். ‘பருப்பொருள் அழிவற்றது. உயிர்க்குலங்கள் அவற்றிலிருந்து பிறக்கின்றன. பருப்பொருட்களின் விதிகளால் அவை வாழ்கின்றன. இறந்து பருப்பொருட்களில் மறைகின்றன’ என்றார் ஹிரண்யகசிபு. அவர் சபை அதை ஆம் ஆம் ஆம் என ஒப்புக்கொண்டு வாழ்த்தியது.
ஐந்து பருப்பொருட்களையும் ஐந்து புலன்கள் அறிகின்றன. தீ கண்ணால் அறியப்படுகிறது. வானம் காதால் அறியப்படுகிறது. காற்று நாசியால் அறியப்படுகிறது. நீர் உடலால் அறியப்படுகிறது. மண் சுவையால் அறியப்படுகிறது. அப்பருப்பொருட்களில் புலன்களறியும் தனித்தன்மைகளே அவை. அதைப்போல உயிர் உயிரையும் ஆன்மா ஆன்மாவையும் அறிகிறது. அவையனைத்தும் பருப்பொருட்களின் சில தனியியல்புகள் மட்டுமே.
அசுரமெய்ஞானம் இரண்டு பெருங்கிளைகள் கொண்டது. ஸ்வபாவ வாதம், யாதஸ்ச்சிகவாதம். தன்னியல்புவாதம் ஐந்துபருப்பொருட்களும் அவற்றின் தன்னியல்பை சாரமாகக் கொண்டு திகழ்பவை என்கிறது. பருப்பொருளின் அனைத்து இயக்கங்களும் அவற்றில் உள்ளுறைந்துள்ள இயல்புகளின் விளைவாகவே நிகழ்கின்றன என விளக்குகிறது. தற்செயல்வாதமோ இவையனைத்தும் என்றோ எங்கோ நிகழ்ந்த ஒரு தற்செயல் நிகழ்வின் தொடரியக்கமாக சென்றுகொண்டிருக்கும் தற்செயல்களே என்கிறது.
‘இவ்விரு ஞானமுறைமைகளையும் ஆக்கிய ரிஷிகள் கேட்ட வினாவையே இங்கே முன்வைக்கிறேன். ஐந்து பூதங்களும் ஊடும்பாவுமாக ஓடிப் பின்னி விரிக்கும் இப்பிரபஞ்சப் பெருவெளியில் எங்குள்ளது நீ சொல்லும் பிரம்மம்? அப்பிரம்மத்தை நீ அறியும் வடிவான நாராயணன் எங்கே?’ என்று ஞானசபையில் ஹிரண்யகசிபு வினவினார். ‘உண்டெனில் எங்கே உள்ளான்? இப்பின்னலில் அவன் ஆற்றும் பணி என்ன? அவனன்றி இது நிகழாதென்றால் அதன் நெறி என்ன?’ சூழ்ந்திருந்த அசுரகுருநாதர்கள் ‘ஆம் ஆம் ஆம்’ என்று அதை ஒப்புக்கொண்டு குரலெழுப்பினர்.
கைகூப்பி சபையை வணங்கிய பிரஹலாதன் சொன்னான் ‘நான் தற்செயல்வாதத்தை நிராகரிக்கிறேன் தந்தையே. அதை ஏற்போமென்றால் எதற்கும் பொருளில்லாமலாகும். ஞானமென்று ஒன்றில்லாமலாகும். நாம் இங்கு பேசுவதே வீண் என்றாகும். அது அறிஞர்களின் பாதை அல்ல. தன்னியல்புவாதமே என் அறிதலின் முதல்படி. இங்கு ஒவ்வொன்றிலும் அதன் தன்னியல்பு உள்ளுறைகிறது. நீருக்குள் நீரியல்பும் நெருப்புக்குள் நெருப்பியல்பும் உண்டென நாம் அறிவோம். ஆம், பருப்பொருளின் சாரமென்பது அதிலுறையும் தன்னியல்பே.’
‘ஆனால் நாம் அதை தன்னியல்பு என்று வகுப்பது எதைக்கொண்டு? நாமறியும் அவற்றின் இயல்புகள் மாற்றமில்லாதவை என்பதைக் கொண்டு அல்லவா? ஆனால் ஒவ்வொரு பருப்பொருளும் தன் தன்னியல்பைக்கொண்டு ஏதோ ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. நீர் நீர்மையை நிகழ்த்த எரி எரிதலை நிகழ்த்துகிறது. தன்னியல்புகளின் இணைவும் பிரிவுமாக நிகழ்ந்தோடும் இச்செயல்பாட்டின் நோக்கமென்ன? திசை என்ன?’ பிரஹலாதன் கேட்டான்.
‘சபையோரே, ஒவ்வொன்றிலும் உறையும் அந்த நோக்கத்தை நான் நியதி என்கிறேன். நியதி ஒருபோதும் தானே உருவாவதில்லை. அதை உருவாக்கும் சித்தம் ஒன்று அதற்குப்பின்னால் உண்டு. இந்த ஞானசபை விவாதத்தின் நியதிகளால் ஆனது. அதை உருவாக்கியவர் அசுரஞானத்தின் முதல்குருவான பிரஹஸ்பதி. நீர் குளிரும் நெருப்பு சுடும். நெருப்பை நீர் அணைக்கும். நீரை நெருப்பு ஆவியாக்கும். அத்தகைய கோடானுகோடி நியதிகளாக ஒவ்வொரு பொருளுக்குள்ளும் பிரம்மத்தின் விருப்பு உறைந்துள்ளது.’
’மூத்தோரே, பிரம்மம் என்பது என்ன? எண்வகை அறியமுடியாமைகளால் மட்டுமே சொல்லப்பட சாத்தியமானது அது. மானுடஞானம் ஒருபோதும் அதை அறியமுடியாது. ஹிரண்மயத்தில் வாழும் ஈயும் எறும்பும் ஹிரண்யகசிபுவின் ஆணையால் வாழ்பவை. ஆனால் அவற்றால் அவரது கோலையும் முடியையும் அரியணையையும் ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது’ பிரஹலாதன் சொன்னான். ‘நாமறிவது பொருட்களின் உள்ளே வாழும் பிரம்மத்தின் ஆணையை மட்டுமே.’
தன் இடையில் இருந்து ஒரு சிற்றோலையை எடுத்து அருகே இருந்த சேவகனை அழைத்து அளித்தான் பிரஹலாதன். சிலகணங்களிலேயே அமைச்சர் பத்ரபாகு அவைக்கு ஓடிவந்தார். ‘சபையினரே, இவ்வோலை சிறு நறுக்கு. இதில் பொறிக்கப்பட்டிருக்கும் அரசாணையே சேவகனை விரையச் செய்தது. அமைச்சரை அவைபுகச்செய்தது. அது இவ்வோலையின் தன்னியல்பு அல்ல. ஓலையின் உள்ளடக்கம் என்பது அதில் எழுதப்பட்டிருக்கும் வாசகமும் அதன் கீழே இடப்பட்ட முத்திரையுமே. இங்குள்ள ஒவ்வொரு பொருளும் பிரம்மத்தின் ஆணையும் முத்திரையும் கொண்டவையே.’
‘சான்றோரே, இப்பிரபஞ்சமே பிரம்மத்தின் ஆணைபொறிக்கப்பட்ட சிற்றோலை மட்டுமே. பிரபஞ்ச சாரமென்றிருக்கும் பிரம்மம் என்பது தன்னைத் தான் நிகழ்த்தும் ஓர் ஆணை மட்டுமே என்றால் இவையனைத்திலும் உறையும் அவ்வாணையும் பிரம்மமே. கடலும் ஒரு நீர்த்துளியே. அது இது உது என சிந்தையால் நாம் தொட்டறியும் அனைத்தும் பிரம்மமே. அவ்வறிதலும் பிரம்மமே. அவ்வறிவும் அதுகுடிகொண்ட நம் சித்தமும் பிரம்மமேயாகும்.’ கைகூப்பி ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்றான் பிரஹலாதன்.
தந்தையும் மைந்தனும் அறுபத்துமூன்று நியாயமுறைகளில் தங்கள் அறிதலை முன்வைத்து விவாதித்தனர். ஹிரண்யகசிபு சொன்ன ஒவ்வொன்றையும் பிரஹலாதன் வென்று முன் சென்றான். பகல் முழுக்க நீண்ட அவ்விவாதம் மாலையை நெருங்கியும் முடியவில்லை. அறுபத்துமூன்றாவது நியாயமான தூம-ஹிம நியாயத்தையும் பிரஹலாதன் வென்றபோது சபையினர் சொல்லிழந்து அமர்ந்திருந்தனர். ’புகையா பனியா என்பது அண்மையாலும் உடலாலும் அறியப்படுவது. தோலாடைபோர்த்தி தொலைவிலிருப்பவருக்கு அவை ஒன்றே. ஆனால் பனி துளித்த நீரை உண்ணும் சிற்றுயிர்களுக்கு அந்த ஐயமே எழுவதில்லை. அவை தங்கள் விடாயாலேயே புகையைக் கடந்து பனியை அறியும்’ என்றான் பிரஹலாதன்.
சினத்துடன் தலையை அசைத்த ஹிரண்யகசிபு ‘இது வெறும் மனமயக்கு. அறியாமை வாதத்தை முன்வைப்பதற்கு மாற்றாக அறிவிறத்தல்வாதத்தை முன்வைத்தல் மட்டுமே’ என்றார். ‘இதுவே வேதத்தின் இறுதிமெய்மை. இதை வேதாந்தம் என்றனர் அறிவோர்’ என்றான் பிரஹலாதன். ’அப்படியென்றால் இங்குள்ளவை அனைத்தும் பிரம்மம் உறைபவையா?’ என்றார் ஹிரண்யகசிபு. ‘ஆம், ஈஶோவாஸ்யம் இதம் சர்வம்’ என்றான் பிரஹலாதன். தன் அரியணையிலிருந்து எழுந்து அருகே வந்த ஹிரண்யகசிபு ‘இதோ இங்குள்ள இந்தத் தூணுக்குள் உள்ளதா உனது பிரம்மம்?’ என்றார்.
‘ஆம், தந்தையே. அந்தத் தூணிலும் தங்கள் மலர்மாலையிலிருந்து உதிர்ந்து காலடியில் கிடக்கும் அத்துரும்பிலும் உள்ளது அளவிறந்த அகால பரப்பிரம்மம்’ என்றான் பிரஹலாதன். ‘சொல், இதிலுறையும் பிரம்மத்தின் சேதி என்ன?’ என்று மீசையை நீவியபடி ஏளனமாக நகைத்துக்கொண்டே நடந்து அதை அணுகினான் ஹிரண்யகசிபு. பிரஹலாதன் ‘அதை பிரம்மமே அறியும். முக்காலப்பிரிவினையை முழுமையறிவால் வென்று சென்ற முனிவர்களும் அறிவார்கள்’ என்றான்.
உரக்க நகைத்து ஹிரண்யகசிபு கேட்டார் ’ஞானிகளுக்குரிய மொழிகளைச் சொன்னாய். நீ ஞானியல்லவா? நீ வழிபட்டறிந்த நாராயணநாமம் உன்னை ஞானியாக்கியுள்ளதல்லவா? உன் ஞானத்தை அகழ்ந்து சொல், இந்தத் தூணில் பொறிக்கப்பட்டுள்ள பிரம்மத்தின் ஆணை என்ன?’ அக்கணம் தன் அகம்திறந்து காலத்தின் மூன்றுபட்டையையும் ஒரே நோக்கில் கண்ட பிரஹலாதன் கூவினான் ‘தந்தையே, அதிலிருப்பது தங்கள் இறப்பு. விலகுங்கள்.’ ஹிரண்யகசிபு வெடித்து நகைத்து ‘இறப்பா? எனக்கா?’ என்றபடி அந்தத் தூணை தன் கதாயுதத்தால் அறைந்தார்.
பூரணர் சொன்னார் “அந்தத் தூணிலிருந்து சிம்மமுகமும் மானுட உடலும் கொண்டு பேருருவம் ஒன்று எழுந்ததாகச் சொல்கிறது புராண மாலிகை. அனல் வண்ணம் கொண்டது. தழலென தாடிபறப்பது. இடியோசையென முழங்கி கூர்உகிர்கள் காட்டி அவரை சிறுமகவென அள்ளி எடுத்துக்கொண்டது. அது இரவும் பகலுமல்லாத அந்தி நேரம். தெருவும் சபையும் சந்திக்கும் வாசல்நடையில் அமர்ந்து வெறுங்கரங்களால் அவர் உதரத்தைக் கிழித்து குடல்மாலையை அணிந்து முழங்கியது. அதன் அனல்வெம்மையில் சபையின் அனைத்துத் தூண்களும் உருகி வழிந்தன.”
ஓவியம்: ஷண்முகவேல்
“அப்பேருருவம் விண்ணுடைய பெருமானே என்று அவையோர் அறிந்தனர் என்கின்றன புராணங்கள். ஹிரண்யகசிபு மண்மறைந்ததும் ஹிரண்மயத்தை விண்ணில் நிறுத்தியிருந்த ஹிரண்யகசிபுவின் தவவல்லமையும் அசுரகுலத்தின் மெய்ஞானமும் சிதைந்தன. ஹிரண்மயம் மண்ணில் விழுந்து சிதறியழிந்தது ஹிரண்யவாகாவின் கரையில். அச்சிதறல்களை அசுரகுலத்தில் வந்த நூற்றெட்டுகுடிகளும் சென்று வணங்குகின்றனர்” பூரணர் சொன்னார்.
“ஹிரண்யகசிபுவுக்குப்பின் அவன் மைந்தன் பிரஹலாதன் மகோதயபுரம் என்னும் நகரை அமைத்து அசுரர்களுக்கு அரசனானான். ஆனால் மெய்ஞானத்தை மட்டுமே உகந்த அவன் நெஞ்சம் அசுரர்களை ஆளத்தலைப்படவில்லை. தன் பெரியதந்தை ஹிரண்யாக்ஷனின் மைந்தன் அந்தகனை அரசனாக்கியபின் பதரிஆஸ்ரமத்துக்குச் சென்று அவன் தவம்செய்து முழுமை பெற்றான். பிரஹலாதனின் மைந்தர்கள் விரோசனன், கும்பன், நிகும்பன் என மூவர். அந்தகனுக்குப்பின் விரோசனன் அசுரர்களின் மன்னரானான். விரோசனனின் மைந்தனே பெரும்புகழ்கொண்ட மகாபலி.”
“ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, பிரஹலாதன், சம்லாதன், அனுஹ்லாதன், சாகி, பாஷ்கலன், விரோசனன், கும்பன், நிகும்பன், பலி, பாணன், மகாகாளன், விப்ரசித்தி, சம்பரன், நமுசி, புலோமா, விஸ்ருதன், அசிலோமன், கேசி, துர்ஜயன், அயசிரஸ், அஸ்வசிரஸ், அஸ்வன், சங்கு, மகாபலன், கர்கன், மூர்த்தா, வேகவான், கேதுமான், ஸ்வர்பானு, அஸ்வபதி, விருஷபர்வன், அசகன், அஸ்வக்ரீவன், சூக்ஷமன், துகுண்டன், ஏகபாத், ஏகசக்ரன், விரூபாக்ஷன், ஹராகரன், சந்திரன், குபடன், கபடன், பரன், சரபன், சலபன், சூரியன், சந்திரமஸ் என்னும் அசுரமன்னர்களை வாழ்த்துவோம். அழியாத அசுரமெய்ஞானத்தை வாழ்த்துவோம். அவர்கள் புகழ் என்றுமிருப்பதாக. ஓம்! ஓம்! ஓம்!” பூரணர் தலைமேல் கைகூப்பி வணங்கினார்.