வண்ணக்கடல் - 55

பகுதி எட்டு : கதிரெழுநகர்

[ 7 ]

குதிரைச்சூதர் தெரு தெற்கே சூதர்களின் பயிற்சி முற்றத்துக்கு மேற்காக இருந்தது. மரப்பட்டைக்கூரை கொண்ட சிறுவீடுகள் தோள்தொட்டு நிரை வகுத்திருந்தன. ஒவ்வொரு குடிலைச்சுற்றியும் கொட்டில்களில் குதிரைகள் நின்றிருக்க அவற்றுக்கு உடல் உருவிவிட்டபடி முதியசூதர்கள் அமர்ந்திருந்தனர். இளைய சூதர்கள் தங்கள் குதிரைகளை பயிற்சிகொடுப்பதற்கு அழைத்துச்சென்றுகொண்டிருந்தனர்.

சிவந்தமண் குதிரைக்குளம்புகளால் புழுதிக்குளமாக ஆக்கப்பட்டிருந்த பெருங்களமுற்றத்தில் நூற்றுக்கணக்கான குதிரைகள் சுற்றிவந்துகொண்டிருந்தன. செம்புழுதி தொடர வெண்மேகக்குவை போல வந்த ஒரு குதிரைக்கூட்டம் குளம்படிகள் அதிர கடந்துசென்றபோது அவற்றின் வியர்வைத்துளிகள் சிதறி அவர்கள் மேல் பட்டன. தொடர்ந்து செம்மேகக்கூட்டம் போல ஒரு கபிலநிறக் குதிரைத்திரள். ஓசைகளைக்கேட்டு அதிரதன் வெளியே பார்த்து பரவசத்துடன் கைகூப்பினார். “இறை எழுந்ததுபோல் இருக்கிறதே! அற்புதமான குதிரைகள்!” என்றபடி இறங்கினார். “மாமரக்காடு பூத்தது போன்றிருக்கிறதே…” என்று மலர்ந்த முகத்துடன் சொன்னார்.

அவர்கள் குதிரைவெளியை தாண்டிச்சென்றபோதும் குதிரைகள் வந்தபடியே இருந்தன. கடிவாளத்தை மென்றபடி வந்த குதிரைகள் அவர்களின் அயல்வாசனையை உணர்ந்து திரும்பி நோக்கி மூக்கைச்சுளித்து சீறின. மைந்தர்களுடன் பேசியபடி குதிரைகளுடன் சென்ற சூதர்களில் ஒருவர் “யார்?” என்றார். “நாங்கள் அங்கநாட்டவர். குலமூத்தாரை காணச்செல்கிறோம்” என்றார் அதிரதன். அவர் கைநீட்டி குலமூத்தாரின் இல்லத்தைச் சுட்டிக்காட்டினார். கடந்துசென்ற சிறுவன் ஒருவன் தன் தந்தையிடம் “அந்த அண்ணா மிக உயரம் இல்லையா தந்தையே?” என்று கேட்க அவர் தாழ்ந்த குரலில் ஏதோ சொன்னார்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

குலமூத்தாரான பிரீதர் அவரது வீட்டு முன்முற்றத்தில் குட்டிக்குதிரை ஒன்றை சூதர்கள் இருவர் சோதனையிடுவதை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். கபிலநிறமான குட்டி கடிவாளத்தையோ சேணத்தையோ அறியாதது. அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பட்டையையே அது விரும்பாமல் துள்ளிக்குதித்து சுற்றிவந்து நான்கு கால்களில் இழுத்து மூக்கைவிடைத்து கழுத்து இறுகி நின்றது. “நன்று… குதிரையின் தரமென்பது முதற்கடிவாளத்தை அது எதிர்க்கும் விதத்தைக்கொண்டே முடிவாகிறது” என்றார் பிரீதர். அவரது பேச்சைக்கேட்க சூதர்களின் அகம் திரும்பியபோது அவர்களின் பிடி தளர குதிரைக்குட்டி துள்ளிப்பாய்ந்தது. பட்டையைப்பற்றியிருந்த சூதர் தடுமாறி குப்புற விழ இன்னொருவர் முழுபலத்தாலும் இழுத்துக்கொண்டே ஓடினார். சற்று நேரத்தில் அவரது பிடியும் விலக குதிரைக்குட்டி துள்ளிக்குதித்து பின்னங்கால்களை காற்றில் உதறியபின் குளம்புகள் மண்ணில் மழைத்துளி விழுவதுபோல் ஒலிக்க புதர்க்குவைகளைத் தாவிக்கடந்து வால்சுழற்றி மறைந்தது.

பிரீதர் நகைத்தபடி “முதல் வடுவை அளித்துவிட்டது. நன்று! நன்று!” என்றபின் திரும்பி அவர்களை பார்த்ததுமே திகைத்து எழுந்து வணங்கி “வணங்குகிறேன் இளவரசே” என்றார். கர்ணன் தயங்கி “என்னை பிழையாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் குலமூத்தாரே. நான் சூதன். அங்கநாட்டு குதிரைச்சூதரான அதிரதனின் மைந்தன்” என்றான். பிரீதர் அதற்குள்ளாகவே தெளிந்து “முதற்கணம் தாங்கள் இளையபாண்டவர் என்றே எண்ணிவிட்டேன். அவர் தங்கள் அளவு உயரமும் இல்லை. தோள்களும் தங்களை விடச் சற்று சிறியது” என்றார். “உங்கள் மைந்தனா?” என்று அதிரதனிடம் கேட்டார். “ஆம், எனக்கும் என் மனைவி ராதைக்கும் பிறந்தவன். இவன் பெயர் வசுஷேணன். இளமைமுதலே நாங்கள் இவனை கர்ணன் என அழைக்கிறோம்” என்றார் அதிரதன்.

ராதை மெல்லியகுரலில் “இந்த முத்திரைமோதிரத்தை தங்களிடம் காட்ட விழைகிறோம் குலமூத்தாரே” என்று சொல்லி மோதிரத்தை எடுத்து நீட்டியதும் பிரீதரின் முகம் மாறியது. மீண்டும் கர்ணனைப் பார்த்துவிட்டு மோதிரத்தை வாங்கி அதை இருமுறை உற்று நோக்கினார். அதிரதன் “அதிரதன் என்று சொன்னால் அங்கநட்டில் அறிவார்கள். நீங்களும் ஒருவேளை கேட்டிருக்கலாம். நான் மும்முறை ரதப்போட்டியில் வென்றிருக்கிறேன். அங்கநாட்டரசரே எனக்கு மோதிரம் பரிசாக அளித்திருக்கிறார். அப்பரிசிலை நாங்கள் வைத்திருக்கிறோம். காட்டுகிறேன்” என்று ராதையிடம் “எடு அதை” என்றார். ராதை அவரை சீறி நோக்க அவர் பார்வையை திருப்பிக்கொண்டார்.

பிரீதர் “நீங்கள் என் இல்லத்திலேயே தங்கி இளைப்பாறலாம். நான் உங்களை இன்றே அரண்மனைக்கு அழைத்துச்செல்கிறேன். அரண்மனையில் இருந்து உங்களுக்கு வீடு அளிப்பார்கள் என நினைக்கிறேன்” என்றார். “ஆம், என்னுடைய ரதத்திறனை ஒற்றர்கள் வழியாக அரண்மனை அறிந்திருக்கும்” என்றார் அதிரதன். பிரீதர் புன்னகைத்தபின் கர்ணனை நோக்கி “நீராடி வந்தால் நான் உணவுக்குச் சொல்கிறேன்” என்றார்.

குலத்தலைவரின் பெரிய இல்லத்துக்குள் சென்று அவரது சேவகன் காட்டிய அறையில் தங்கள் மூட்டைகளை வைக்கும்போது அதிரதன் “என்னைப்பற்றி அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவரது மொழியும் பார்வையும் மாறிவிட்டிருக்கிறது” என்றார். ராதை உற்று நோக்கிவிட்டு “நான் சமையலறைக்குச் சென்று அங்கேயே நீராடிக்கொள்கிறேன்…” என்று திரும்பிச்சென்றாள். “என்னை இவர்கள் மதிப்பது கிழவிக்குப்பிடிக்கவில்லை. நானே பலமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன். ரதப்போட்டியில் வென்று பெறும் மோதிரங்கள் மதிப்பு மிக்கவை. நீ அந்த மோதிரத்தை கொடையளித்திருக்கக் கூடாது” என்றார் அதிரதன் “ஆம் தந்தையே, திறனுடையவருக்கு சென்றவிடமெல்லாம் சோறு என்பதை இப்போதுதான் அறிந்தேன்” என்றான் கர்ணன். அதிரதன் அஹ் அஹ் அஹ் என்று உடல் குலுங்கச்சிரித்தார். நரைத்து தொங்கிய மீசையை நீவியபடி “எங்கே குதிரையுண்டோ அங்கே சூதனுக்கு இடமுண்டு” என்றார்.

அவர்கள் நீராடி வரும் போது குதிரைக்குட்டி உடல் முழுக்க மண்ணும் வியர்வை வாசனையுமாக இல்லத்தின் முன் வீட்டுக்குள் நோக்கியபடி நின்றிருந்தது. அதை நோக்கி புன்னகை செய்து “ஏன் திரும்பிவந்தது?” என்று கேட்டான். பிரீதர் நகைத்தபடி “இவ்வயதில் ஒரு முடிவை ஏன் எடுக்கிறோம் என தெரியுமா என்ன?” என்றார். அது வாலைச்சுழற்றி காலால் தரையைத் தட்டி குனிந்து தரையில் கிடந்த ஒரு மாவிலையை வாயில் கவ்வி இருமுறை மென்றுவிட்டு துவர்ப்பை உணர்ந்து கீழே போட்டு நாக்கை நீட்டி தலையை ஆட்டியது. பிரீதர் நகைத்து “தான் ஒரு சின்னக்குழந்தை, தனக்கு மாவிலை கசக்குமென்றுகூட தெரியாது என்று நடிக்க விரும்புகிறது…” என்று அதனருகே சென்று அதன் கழுத்தை தடவினார். உடனே அது பூனைபோல தன் மொத்த உடலையும் அவர்மேல் உரசியபடி பக்கவாட்டில் நகர்ந்தது. “குட்டிகள் சிலசமயம் வளரவிரும்புகின்றன. சிலசமயம் குட்டியாகவே நீடிக்க விரும்புகின்றன” என்றார் பிரீதர்.

அதிரதன் தலைப்பாகையை நன்றாகச் சுற்றிக்கட்டிவிட்டு உலோக ஆடியில் தன் படிமத்தை திரும்பத்திரும்ப நோக்கினார். நெற்றியில் தன் குலக்குறியை வரைந்து அதை பலமுறை சீரமைத்தார். “செல்வோம் அதிரதரே” என்றார் பிரீதர். “ஆம், செல்வோம்” என்றபடி அதிரதன் தன் சால்வையை எடுத்துப்போட்டுக்கொண்டார். “நான் இளவயதில் தோலால் ஆன மிதியடிகளை அணிவதுண்டு. இங்கு வரும் வழியில் எடுக்கமறந்துவிட்டேன்” என்றார். பிரீதர் “இங்கே வேறு மிதியடிகள் கிடைக்கும்” என்றார். “ஆம், வாங்கிக்கொள்ளலாம். கொம்புப்பிடிபோட்ட சவுக்குகளை இங்குள்ள குதிரைச்சூதர் சிலர் வைத்திருப்பதைக் கண்டேன். எனக்கும் ஒன்று வேண்டும்.”

அரண்மனைக்குச்செல்லும் வழி முழுக்க அதிரதன் கர்ணனின் கைகளைப் பற்றி தாழ்ந்த குரலில் அறிவுரைகள் சொல்லிக்கொண்டே வந்தார். “அரசர்களிடம் எவ்வளவு பணிகிறாயோ அவ்வளவுக்கு நீ அவர்களால் விரும்பப்படுவாய். சூதர்களும் சூத்திரர்களும் அவர்கள் நடக்கும் மண். குழிந்து வளையும் மண் அவர்களின் காலுக்கு இதமானது. அவர்கள் உன்னை நகையாடும்போது மட்டுமே நீ நகைக்கவேண்டும். அவர்கள் ஒருவரோடொருவர் பேசும்போது நீ அங்கில்லை என்றே அவர்கள் எண்ண வேண்டும்.”

“ஷத்ரியர்களின் விழிகளை ஒருபோதும் சந்திக்காதே. நீ அவர்களிடம் பேசுகையிலும் அவர்கள் உன்னிடம் பேசுகையிலும் உன் விழிகள் குனிந்தே இருக்கட்டும். ஒருபோதும் மறந்தும் மறுப்பாக ஏதும் சொல்லிவிடாதே. அவர்கள் சொல்வது எதுவாக இருப்பினும் முதலில் அதை ஒத்துக்கொள். மிகப்பிழையாக அவர்கள் ஏதேனும் சொல்லிவிட்டால் அவர்களுக்கு கீழே இருப்பவர் எவரோ அவரிடம் தனியாக அப்பிழையைச் சுட்டிக்காட்டு” என்றார் அதிரதன்.

மைந்தனின் தோளைத் தொட்டு அதிரதன் தொடர்ந்தார் “மறுக்கப்படுவது ஷத்ரியர்களை சினம் கொள்ளச்செய்கிறது. பிழையாக நீ மறுத்தாயென்றால் கூட அது தவறாகாது. உன்னை எள்ளிநகையாடி சிறுமைப்படுத்தி மகிழவே அத்தருணத்தை பயன்படுத்திக்கொள்வார்கள். சரியாக மறுத்தாயென்றால் அது நீ அவர்களை வென்றதாகவே அவர்களுக்குப் பொருள் படும். உன்னை உடனே வென்று செல்ல அவர்களின் ஆணவம் படம் விரித்தெழும். உன்னை அவர்கள் எதுவும் செய்யமுடியும். உன் தலையை வெட்டி காலுக்குப் பந்தாக்கிக்கொள்ள முடியும் என்பதை மறக்காதே. அவர்களிடம் பேசும்போது ஒருபோதும் அவர்களை எதிர்த்து எதையும் நினைக்காதே. அவர்களை இழிவாக எண்ணிக்கொள்ளாதே. அவர்களைக் கடந்து எதையுமே சிந்திக்காதே.”

அதிரதன் தொடர்ந்தார் “மனித உடலில் அவர்களின் சிந்தனைகள் புதரசைவில் காற்றுபோல இயல்பாக வெளிப்படுகின்றன என்பார்கள் முன்னோர். உடல் நம்மை காட்டிவிடும். உள்ளத்தை எந்த அளவுக்கு மறைக்க முயல்கிறோமோ அந்த அளவுக்கு உடல் இன்னும் தெளிவாக அதைக் காட்டும். அத்துடன் ஷத்ரியர் எப்போதும் சூத்திரர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். பணிவின் மொழி என்ன என அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மிக எளிதில் அவர்கள் அகம் ஒப்பிட்டு அறிந்துவிடும். அவர்கள் முன் நாம் ஆடையின்றி நின்றுகொண்டிருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறவாதே. நம் உடலை ஊடுருவி ஆன்மாவைக் காண அவர்களால் இயலும்.”

“அவ்வண்ணம் நினைக்காமலிருக்க ஒரே வழி நாம் உண்மையிலேயே நம் தலைவர்களை விரும்புவதுதான். அவர்களை அகம்நிறைந்து மதிப்பதுதான். நம் ஆன்மாவிடம் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளவேண்டும். நான் இவரை மதிக்கிறேன், இவரை விரும்புகிறேன், இவரை வழிபடுகிறேன் என்று. இவரது பாதங்கள் என் மேல் படுவதை என் வீடுபேறென நினைக்கிறேன், இவரது தண்டங்களை அருளென்று கொள்கிறேன், இவரால் இழிவுபடுத்தப்பட்டால் அதை என் புகழென்றே எண்ணுவேன் என்று நினை. அதுவே சூதன் புகழ்பெறுவதற்கான வழி” அதிரதன் சொன்னார்.

“ஆன்மா ஒரு குதிரை என்பதை மறவாதே. குதிரையிடம் சில சொற்களை திரும்பத்திரும்ப சொல்லி அதன் ஆன்மாவுக்கு அச்சொற்களை பழக்குகிறோம். எச்சொல்லுக்கும் அப்பாற்பட்ட காட்டின் துளி ஒரு குதிரைக்குட்டி. ஆனால் மீளவே முடியாத கட்டளைச்சொற்களை அது தன் ஆன்மாவில் கடிவாளமாக அணிந்துகொண்டு நம்மை அதன் மேல் ஏற ஒப்புக்கொடுக்கிறது. அதைப்போல நான் சூதன், என் பணி தலைவனுக்கு சேவை செய்தல், என் வீடுபேறு அவனுடைய நிறைவிலேயே உள்ளது என்று உன் ஆன்மாவை ஒப்புக்கொள்ள வைத்தால் நீ வெற்றிபெற்றாய்.”

அரண்மனையின் கோட்டைவாயிலில் நின்று தலைதூக்கி நோக்கி அதிரதன் சொன்னார் “இது அஸ்தினபுரி. பாரதவர்ஷத்தின் தலைநகர். அங்கநாடு குதிரைக்கு நீர் வைக்கும் தொட்டி என்றால் இது பெருங்கடல். இங்கே உனக்கொரு இடம் அமையும் என்றால் அதை விட உன் எளிய தந்தைக்கு நீ அளிக்கும் பெருங்கொடை பிறிதில்லை என்றுணர்.” நடுங்கும் கைகளைக் கூப்பி “ஹஸ்தியின் பெருநகரம். அதிகாரம் கருவறையில் அமர்ந்திருக்கும் ஆலயம். நாம் அதன் எளிய பக்தர்கள்” என்றார். ஒரு படைவீரனிடம் பிரீதர் பணிந்து தங்களைப்பற்றிச் சொன்னார். அவன் தலையாட்டிவிட்டுச் சென்றான்.

புஷ்பகோஷ்டத்தில் அவர்கள் குதிரைமுற்றத்தின் மூலையில் காத்து நின்றனர். பிரீதர் கைகளை மார்புடன் கட்டி உடல் வளைத்து நின்றார். அதிரதன் கையசைவால் கர்ணனிடம் ’இன்னும் சற்று உடலை வளை, இன்னும் சற்று குனி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். கர்ணன் உடலை முடிந்தவரை குனித்துக்கொண்டான். இடைநாழிவழியாக சென்ற அலுவலர்கள் அவர்களை அரைக்கணத்தில் நோக்கிச் சென்றனர். காவலர் அவர்களை கூர்ந்து நோக்கிச் சென்றனர். ஆனால் அனைத்து நோக்கிலும் சூதர்களுக்கு அவர்களின் கண்களுக்கு அப்பால் இடமில்லை என்பது தெரிந்தது. முதலில் அவர்கள் பேசிய அதே படைவீரன் முற்றிலும் அடையாளமறியா விழிகளுடன் வந்து மீண்டும் “யார்?” என்றபோது அதை கர்ணன் மீண்டும் உறுதியாக அறிந்தான்.

வீரன் சென்று செய்தியறிவித்தபின்னரும் நெடுநேரம் அவர்கள் காத்து நின்றனர். உள்ளிருந்து மாமன்னரின் அணுக்கச்சேவகனாகிய விப்ரர் வருவதைக் கண்டதும் பிரீதர் “விப்ரர், அணுக்கச்சேவகர். நமக்கு அவர்தான் தலைவர்” என்று மெல்லியகுரலில் சொன்னார். ஆனால் விப்ரர் அவர்களைக் கடந்து சிந்தனையிலாழ்ந்தபடி சென்றார். அவர் சென்று மறைவதுவரை பிரீதர் கைகளைக்கூப்பியபடியே நின்றார். அவர் மறைந்ததும் கர்ணன் கைகளைத் தாழ்த்தினான். “மூடா, கைகளைத் தாழ்த்தாதே. எப்போதும் அவ்வெல்லையில் ஆடிபோன்ற உலோகப்பரப்பு ஒன்று இருக்கும். அதில் நம்மை அவர்கள் பார்ப்பார்கள். முதுகுக்குப்பின் நாம் என்ன செய்கிறோம் என்பதைக்கொண்டே நம்மை அளவிடுவார்கள்” என்று அதிரதன் சொன்னார்.

விப்ரர் மெல்ல நடந்து வந்து அவர்களைக் கண்டதும் ஒருகணம் திகைத்து “யார் இந்த இளைஞன்?” என்றார். பிரீதர் “அடியவன் இவரை அழைத்துவந்தேன். இவர்கள் நம் ஒற்றர்தலைவர் சித்ரகரின் முத்திரை மோதிரத்தை வைத்திருக்கிறார்கள். இவர் பெயர் அதிரதன். இவரது மைந்தனாகிய இவனை வசுஷேணன் என்று அழைக்கிறார்கள்” என்றபின் முத்திரைமோதிரத்தை நீட்டினார். விப்ரர் சில கணங்கள் நோக்கி சொல்லின்றி நின்றபின் “இவனுடைய அன்னை?” என்றார். “என் மனைவி ராதை. இப்போது குலத்தலைவர் குடிலில் இருக்கிறாள்” என்றார் அதிரதன். “அவள் பெற்ற மைந்தனா?” என்று விப்ரர் மீண்டும் கேட்டார். “ஆம் உடையவரே” என்றார் அதிரதன்.

“இந்த முத்திரை மோதிரம் இருந்தால் மன்னரை நேரில் பார்க்கவேண்டுமென்றே பொருள்” என்றார் விப்ரர். “மாமன்னரிடம் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று தெளிவிருக்கிறதா?” அதிரதன் “அடியவர்கள் என்ன கேட்கப்போகிறோம் உடையவரே? மூன்றுவேளை உணவும் ஒடுங்க ஒரு குடிலும் தேவை என்று கேட்போம். குதிரைவேலைசெய்பவர்கள் நாங்கள். குதிரைகளை கொடுத்தால் குழந்தைகள் போலக் காப்போம்” என்றார். விப்ரர் குழப்பத்துடன் மோதிரத்தையும் கர்ணனையும் நோக்கி “உம்” என்றார்.

அப்பாலிருந்து ஓர் நடுவயதுச்சேடி வருவதை கர்ணன் கண்டான். “யாதவப் பேரரசியின் சேடி மாலினி… உங்களை நோக்கியே வருகிறார்கள்” என்றார் விப்ரர். மாலினி கர்ணனை விழிகொட்டாமல் நோக்கியபடி அருகே வந்து பின் விப்ரரை நோக்கி “இவர்கள்தான் அங்கநாட்டிலிருந்து வந்தவர்களா?” என்றாள். “ஆம், முத்திரைமோதிரம் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றார் விப்ரர்.

“இவர்கள் மாமன்னரைச் சந்திக்கட்டும். இவர் மாமன்னரின் ரதமோட்டிகளில் ஒருவராக பணிபுரியவேண்டுமென பேரரசி ஆணையிட்டிருக்கிறார். இவ்விளைஞர் நாளை முதல் கிருபரின் படைக்கலச்சாலையில் பயிலவேண்டும் என்றும் ஆணை” என்று மாலினி சொல்வதற்குள் விப்ரர் திகைப்புடன் “கிருபரின் படைக்கலச்சாலையிலா?” என்றார். “ஆம். நாளும் அரண்மனைக்கு வந்து அவரே இளையபாண்டவர்களை அழைத்துக்கொண்டு கிருபரின் படைக்கலச்சாலைக்குச் செல்லவேண்டும். அங்கே அவருக்கு ஷத்ரியர்களுக்குரிய பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்.” மாலினி ஒருகணம் குரலைத்தாழ்த்தி “அனைத்துப்பயிற்சிகளும்” என்றாள். விப்ரர் “ஆணை” என்று தலைவணங்கினார்.

அவள் மீண்டும் ஒருமுறை கர்ணனை நோக்கிவிட்டு திரும்பிச்சென்றாள். விப்ரரின் உடல்மொழி மாறிவிட்டிருப்பதை கர்ணன் கண்டான். “வருக இளைஞரே” என்று அழைத்து அதிரதனிடமும் பிரீதரிடமும் “நீங்களும் வருக” என்றார். அவர்கள் நீண்ட இடைநாழியில் நடந்து சென்று திருதராஷ்டிரரின் இசைக்கூட வாயிலை அடைந்ததும் விப்ரர் “இங்கே நில்லுங்கள். நான் சென்று அறிவித்ததும் நீங்கள் உள்ளே செல்லலாம்” என்றார். அவர் சென்று சொல்லிவிட்டு வந்து “உள்ளே வருக” என்று சொல்லி ஆற்றுப்படுத்தி அழைத்துச்சென்றார்.

உள்ளே இசைக்கூடத்தில் யாழிசைத்துக்கொண்டிருந்த இரண்டு சூதர்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த திருதராஷ்டிரரின் உயரத்தையும் தோள்களின் விரிவையும் கண்டு கர்ணன் திகைத்து நின்றான். இசைக்கு ஏற்ப அவரது கைகள் அசைந்துகொண்டிருந்தன. எங்கிருந்து ஒலிப்பதென்றறியாமல் அந்தக்கூடம் முழுக்க இசை நிறைந்திருந்தது. இசை ஓய்வதுவரை அவர்கள் காத்து நின்றனர். அந்த இசை ஏதோ இறைஞ்சுவதுபோல ஒலித்தது. திரும்பத்திரும்ப ஒற்றை வரியில் அது எதையோ கேட்டது, மன்றாடியது, பிடிவாதம் பிடித்தது.

இசை ஓய்ந்ததும் சூதர்கள் வணங்கி யாழை நீக்கி வைத்தனர். திருதராஷ்டிரர் மெல்லிய குரலில் பாராட்டினார். சூதர்கள் எழுந்து அவரை வணங்க அருகே நின்றிருந்த சேவகன் அளித்த பரிசுகளை திருதராஷ்டிரர் அவர்களுக்கு அளிக்க சூதர்கள் தொழுதுபெற்று விலகினர். விப்ரர் அவர்களிடம் மெல்லியகுரலில் “அருகே சென்று முறைப்படி வணங்குங்கள்” என்றார்.

“குதிரைச்சூதர் பிரீதர்” என விப்ரர் அறிவிக்க பிரீதர் திருதராஷ்டிரரின் அருகே சென்று சூதர்களுக்குரிய முறையில் ஒருமுழம் இடைவெளிவிட்டு “அடியவன் சென்னி அடிபணிகிறது பேரரசே” என்றார். திருதராஷ்டிரர் கைகளை நீட்டி “உமது மைந்தனா முத்திரை மோதிரத்துடன் வந்தவன்?” என்றார். அதிரதன் முன்னகர்ந்து அடிபணிந்து “அடியேன் ரதமோட்டியான அதிரதன் அங்கநாட்டிலிருந்து வந்தவன். ரதமோட்டுதலில் பரிசுகள் பெற்றவன். இவன் என் மைந்தன் வசுஷேணன். மாமன்னரின் பாதப்பொடி அவன் தலையில் படவேண்டும்” என்றார்.

திருதராஷ்டிரர் கைகளை நீட்டி “எங்கே? எங்கே அவன்?” என்றார். கர்ணன் சென்று ஒரு முழம் தூரம் விட்டு அவர் கால்களுக்கருகே நிலம் தொடக் குனிந்ததும் அவர் திகைத்தவரைப்போல “நீ குண்டலங்கள் அணிந்திருக்கிறாயா?” என்றார். “இல்லை அரசே” என்றார் விப்ரர். “குனிந்தபோது குண்டலங்கள் அசையும் ஒலியைக் கேட்டேன். ஆம்…” என்றபடி அவர் கைகளை நீட்டி அவனைத் தொட்டார். தொடுகையில் அவன் உடல் சற்று குன்றியது, பின்பு அவன் தன்னையறியாமலேயே கண்ணீர் விடத்தொடங்கினான். அதைக் கட்டுப்படுத்த முயன்றபோது அவன் தொண்டையில் இருந்து ஓர் ஒலி எழுந்தது.

அவன் விசும்பல் ஒலியைக் கேட்ட திருதராஷ்டிரர் ஒரு கணம் அசைவற்றபின் அப்படியே அவனைப்பற்றி தூக்கி நெஞ்சோடணைத்துக்கொண்டார். அவன் அவரது தோளளவு இருந்தான். அவனை இறுக்கி தலையின் குழலை முகர்ந்தபடி “இளையோன்… இளமையின் வாசனை” என்றார். “விப்ரரே, இவன்…” என்று ஒருகணம் தயங்கி “இவன் இந்நாட்டின் அரசமைந்தர்களுக்கு நிகரானவன். இது என் ஆணை” என்றார். விப்ரர் கைகளைக் குவித்து “ஆணை” என்றார்.

பரவசத்துடன் அவன் உடலை நீவிக்கொண்டே இருந்தார் திருதராஷ்டிரர். அவனுடைய கைகளை நீவி “யாரிடம் வில்வித்தை பழகுகிறாய்?” என்றார். அதிரதன் “அவன் எளிய சூதமைந்தன் பேரரசே. அவை சம்மட்டி பிடிக்கும் கைகள்” என்றார். திருதராஷ்டிரர் உரக்க நகைத்து “சம்மட்டியா?” என்றார். “மூடா, உன் மைந்தன் கண்ணைமூடி வானில் பறக்கும் பறவையை வீழ்த்துபவன். இவை சவ்யசாஜியின் கைகள். இவன் கையின் பெருவிரலை என்றாவது தொட்டு நோக்கியிருக்கிறாயா நீ?” என்றார். அதிரதன் திகைத்து “அடியேன் எப்போதும் பற்றும் விரல்கள் அவை அரசே” என்றார்.

திருதராஷ்டிரர் அவன் தோள்களைத் தழுவி கைகளை மீண்டும் பிடித்தார். “உன் குருநாதர் யார்?” என்றார். கர்ணன் உதடுகளை இறுக்கி தன்னை மீட்டு எடுத்து தொண்டை அடைத்த மெல்லியகுரலில் “குரு என நினைத்து கங்கைக்கரை மரம் ஒன்றை முன்வைத்து நானே பயின்றேன்” என்றான். திருதராஷ்டிரர் மீண்டும் அவனைத் தழுவி “ஆம், வில்லாளிகள் வித்தையுடன் மண்ணுக்கு வருகிறார்கள்” என்றார். “மைந்தா, உனக்கு வில் அடிபணியும். ஆனால் நீ கதையும் பயிலவேண்டும். என்றாவது ஒருநாள் கதைப்போரில் நாம் கைகோர்க்கவேண்டும். பாரதவர்ஷத்தின் மாவீரன் ஒருவனிடம் நானும் கைகோர்த்தேன் என்று சூதர்கள் பாடவேண்டுமல்லவா?” என்றார். “ஆகா!” என்று கைகளைத் தூக்கி “அதை என்னால் இப்போதே உணரமுடிகிறது… விப்ரரே, இவன் என்னைவிடவும் உயரமானவன். பீஷ்மபிதாமகருக்கு நிகரானவன்” என்றார்.

வாயிற்சேவகன் வந்து தலைவணங்கி “விதுரர்” என்றான். திருதராஷ்டிரர் தலையசைக்க அவன் வெளியே சென்றதும் விதுரர் உள்ளே வந்தார். அவர் வரும்போதே அனைத்தையும அறிந்திருப்பதை கால்களின் தயக்கமும் உடலின் சரிவுமே காட்டின. அவர் விழிகள் தன் மீதே நிலைத்திருப்பதை கர்ணன் கண்டான். அவன் விழிகளைச் சந்தித்ததும் விதுரரின் விழிகள் தடாகத்துச் சிறுமீன்கள் போல திடுக்கிட்டு விலகிக்கொண்டன.

திருதராஷ்டிரர் நகைத்தபடி “வா வா, உன்னைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். வில்லுக்கு விஜயன் மட்டுமல்ல விதுரா. இதோ இன்னொருவன். கங்கைக்கரை மரத்திலிருந்தே வில்வேதம் பயிலும் மாவீரன்” என்றார். விதுரர் மெல்ல உதட்டை மட்டும் வளைத்து “வீரம் அனைத்து விவேகங்களுடனும் இணையட்டும்” என்றார். திருதராஷ்டிரர் “இவன் நீ மார்புறத்தழுவிக்கொள்ளும் இன்னொரு மைந்தன். அஸ்தினபுரியை மூதாதையர் வாழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். நம் தோள்கள் நிறைந்தபடியே உள்ளன” என்றார். விதுரர் சங்கடம் தெரியும் உடலசைவுடன் “ஆம்” என்றார்.

“மைந்தா, உன் மூத்தாரான பேரமைச்சரை வணங்கு” என்றார் திருதராஷ்டிரர். “அவரை என்றும் உன் தந்தையின் இடத்தில் வைத்திரு” என்றார். கர்ணன் திகைத்து திருதராஷ்டிரரை நோக்கினான். அவரது கரிய பெருமுகம் சற்று கோணலாகத் திரும்பியிருக்க பார்வையற்ற விழிகள் உருள அச்சிரிப்பு குழந்தையின் சிரிப்பு போலிருந்தது. கர்ணன் விதுரரை ஏறிட்டு நோக்கிவிட்டு சென்று விதுரரை அணுக அவரது உடல் மிகமெல்லிய அசைவாகப் பின்னடைந்தது. கர்ணன் அவர் காலைத்தொட்டு வணங்க அவர் ஒரு சொல்லும் சொல்லாமல் கையைத் தூக்கி வாழ்த்தினார். பின்னர் விப்ரரிடம் “நான் அரசரிடம் பேசவேண்டும் விப்ரரே” என்றார்.

விப்ரர் செல்லலாம் என தலையசைக்க பிரீதரும் அதிரதனும் தலைவணங்கி வெளியேறினர். “விடைகொள்கிறேன் அரசே” என்று குனிந்த கர்ணனை திருதராஷ்டிரர் “நலமும் வெற்றியும் புகழும் திகழ்க!” என வாழ்த்தி “இவன் குனியும்போதெல்லாம் குண்டலங்கள் அசையும் மெல்லியஒலியைக் கேட்கிறேன். வியப்புதான்” என்றார். விதுரர் “இன்று நிகழ்ந்த விசித்திரமான வான்நிகழ்வு இந்த யுகத்தில் இதுவரை நிகழ்ந்ததில்லை என்கிறார்கள் நிமித்திகர்கள். பிரம்மமுகூர்த்ததில் சூரியன் எழுவதென்பது ஒரே ஒருமுறைதான் நிகழ்ந்துள்ளது என்று பிரஹதாங்கப்பிரதீபம் சொல்கிறது…” என்று பேசத்தொடங்க அவர்கள் ஓசையின்றி வெளியேறினார்கள்.

இடைநாழியில் செல்கையில் விப்ரர் “நீங்கள் செல்வதற்குள் அரண்மனை ஆணைகள் வரும். அதிரதரே, நீங்கள் மாமன்னரின் பன்னிரு ரதமோட்டிகளில் ஒருவராக அமர்த்தப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கான இல்லமும் பிறவும் இன்றே ஒருங்கமைக்கப்படும். நாளை முதல் இளையோன் அரண்மனைக்கு வந்து இளவரசர்கள் நகுல சகதேவர்களை அழைத்துக்கொண்டு கிருபரிடம் செல்லட்டும்” என்றார். பிரீதர் தலைவணங்கி “ஆணை” என்றார்.

மீண்டும் முற்றத்துக்கு வந்தபோது ரதமோட்டி ஒருவன் வந்து வணங்கி “தங்களை இல்லத்துக்குக் கொண்டு விடும்படி விப்ரரின் ஆணை” என்றான். பணிவுடன் விலகி “ஏறிக்கொள்ளுங்கள் குலமூத்தாரே” என்றான் கர்ணன். “தாங்கள் ஏறுக இளையோரே” என்று பணிந்த குரலில் பிரீதர் சொல்லி விலகி கைகளைக் காட்டினார்.

வெண்முரசு விவாதங்கள்