வண்ணக்கடல் - 51
பகுதி எட்டு : கதிரெழுநகர்
[ 3 ]
சம்பாபுரியின் சூரியனார் கோயிலின் முன்னால் வண்ணங்கள் அலையடிக்கும் கடல் என மக்கள் கூடியிருந்தனர். பெருங்கூட்டத்தின் ஓசை அனைத்து இல்லங்களின் அறைகளுக்குள்ளும் சொல்லற்ற பெருமுழக்கமாக நிறைந்திருந்தது. சம்பாபுரியின் அனைத்துத்தெருக்களும் மாலினியிலிருந்தும் கங்கையிலிருந்தும் தொடங்கி நகர் நடுவே இருந்த சூரியனார் ஆலயத்தையே சென்றடைந்தன.
மாபெரும் சிலந்திவலை ஒன்றின் நடுவே அமைந்ததுபோன்ற சூரியனார்கோயில் மரத்தாலான ரதம்போல ஏழடுக்கு கோபுரத்துடன் கூட்டத்தின் நடுவே எழுந்து நின்றது. அதன் சக்கரங்களின் அச்சுக்கும் கீழேதான் யானைகள் தெரிந்தன. மரத்தால்செய்யப்பட்ட சூரியனின் ஏழு குதிரைகளும் கால்களைத் தூக்கி கூட்டத்தின்மேல் பாய்ந்துசெல்பவை போலத் தோன்றின. கோயிலின் படிக்கட்டுகள் முழுக்க வேலேந்திய வீரர்கள் கவசங்கள் காலையொளியில் மின்ன நின்றிருந்தனர். விழாமுற்றத்தில் தோளோடுதோள் செறிந்து நின்றிருந்த மக்கள்திரள் அசைவிழந்து அங்கேயே ததும்பிக்கொண்டிருக்க ஆற்றுத்துறைகளில் வந்துநின்ற படகுகளில் இருந்து மக்கள் மேலும் மேலும் இறங்கிவந்துகொண்டே இருந்தனர்.
ஓவியம்: ஷண்முகவேல்
குதிரைகளுடன் கூட்டத்தை ஊடுருவுவதற்குரிய வழி குதிரைகளை முன்னால் விடுவதுதான் என்று கர்ணன் சொன்னான். உஷ்ணி மனிதர்களிடம் எப்போதுமே அன்பானவள். தன் நீளமுகத்தை கூட்டத்தில் ஒட்டி நின்றிருக்கும் இரு புயங்கள் நடுவே செலுத்தி மெல்ல மூச்சுவிடும்போது மரவுரியாடையில் ஊசி நுழைவதுபோல எளிதாக அவளுக்கு வழிகிடைக்கும். அவ்வழியாக பிறகுதிரைகளை அனுப்பிவிட்டு பின்னால் கர்ணன் அதிரதன் இருவரும் சென்றனர். காவல்மேடையில் நின்ற ஒரு வீரன் உரக்க “அடேய் மூடச்சூதா, குதிரையின் கடிவாளத்தைப்பிடி நாயே. அது கட்டின்றி ஓடினால் உன்னை தூணில் கட்டிவைத்து தோலை உரிப்பேன்” என்று அதிரதனை நோக்கிக் கூவினான். அதிரதன் “பிடித்திருக்கிறேன் வீரரே… இதோ பிடித்திருக்கிறேன்” என்றார்.
சூரியனார் கோயில்முன் படிவரைக்கும் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டிருக்க இடதுபக்கம் குதிரைக்கொட்டகைகள் இருந்தன. அவர்கள் அத்தனை விரைவுபடுத்தியிருந்தபோதிலும் அங்கே அப்போதுதான் குதிரைகள் வந்துகொண்டிருந்தன. குதிரைகளை வீரர்கள் கடிவாளத்தைப்பற்றி கொண்டுசென்று தறிகளில் கட்டிக்கொண்டிருந்தனர். குதிரைச்சூதர்கள் அவற்றின் அருகிலேயே சம்மட்டிகளுடன் நின்றிருந்தனர். அதிரதன் குதிரைகளைக் கொண்டுசென்றதும் அங்கிருந்த நூற்றுக்குடையோன் சினத்துடன் நோக்கி “நான்குமுறை ஆளனுப்பினால்தான் நீ வருவாய் இல்லையா?” என்று சவுக்கை ஓங்கினான். அதிரதன் கைகளை முன்னால்கொண்டுவந்து உடலைக்குறுக்கி “பொறுங்கள் வீரரே, பொறுங்கள்” என்றார். “குதிரைகளைக் கொண்டு கட்டு. காலையில் அவற்றை நீராட்டி உருவிவிட்டாயா இல்லை கள்மயக்கில் உறங்கிவிட்டாயா?” என்றான் நூற்றுவர்தலைவன். “குளிப்பாட்டிவிட்டேன் வீரரே” என்று அதிரதன் சொல்லி குதிரைகளைக் கொண்டுசென்று கட்டினார்.
பெருமுரசுகள் ஒலிக்கத் தொடங்கின. சூரியனார்கோயிலின் வலப்பக்கத்தில் இருந்து இருபது யானைகள் நிரையாக வர மக்கள்திரள் கூச்சலிட்டபடி அழுந்தி ததும்பி விலகியது. யானைகள் கரிய கரங்கள் தானியப்பரப்பை அள்ளி ஒதுக்குவதுபோல கூட்டத்தை விலக்கி விரிந்த முற்றத்தை மீட்டெடுத்தன. அவை வளைந்த கோட்டைமதில்போல நின்று மீண்டும் மக்கள் அங்கே வராமல் காத்தன. ஒதுங்கிய மக்களின் மறுஎல்லை முற்றத்தின் அனைத்து விளிம்புகளிலும் அலையடித்து ஏறியது. குதிரைக்கொட்டகைக்குள் ஏறிய மக்களை வீரர்கள் வேல்களால் உந்தி வெளியே தள்ளினார்கள்.
முரசுகளும் கொம்புகளும் பெருமுழக்கமாக ஒலிக்கத் தொடங்கின. மக்கள்த்திரளின் வாழ்த்தொலி எழுந்து அதைமூடியது. முழுதணிக்கோலத்தில் வந்த பட்டத்துயானையின் மீது அங்கநாட்டரசன் சத்யகர்மன் மணிமுடியும் செங்கோலுமாக அமர்ந்திருந்தான். அவனுக்குமேல் வெண்கொற்றக்குடை நிழல் கவிக்க அதன் பொன்மணிகள் குலுங்கின. தொடர்ந்து வந்த யானைகளின் மீது அம்பாரிகளில் அரசியர் மூவர் அணிசூடி அமர்ந்திருந்தனர். யானைகள் வந்து முற்றத்தில் மண்டியிட்டதும் அரசனும் அரசியரும் இறங்கினர். வாழ்த்தொலி எழுப்பிக்கொண்டிருந்த மக்களை வணங்கிவிட்டு சூரியனார்கோயிலுக்குள் சென்றனர்.
“இன்னும் சற்றுநேரத்தில் மன்னர் அவைமேடைக்கு வருவார். பரத்தையர் அணிநிகழ்வு தொடங்கும்” என்று ஒரு நூற்றுக்குடையோர் சொன்னார். “நான் மச்சநாட்டிலிருந்து வருகிறேன்… ஷத்ரியனாகிய என்பெயர் விகர்த்தனன். இங்கே பரத்தையரை ரதமேற்றும் நிகழ்ச்சி நடக்கிறதென்றார்கள்” என்றார் ஒரு கிழவர். “பாரதவர்ஷத்தில் வேறெங்கும் பரத்தையர் விழாவில் ரதமேறும் வழக்கம் இல்லை” என்றார். குதிரைக்கொட்டில் காவலர் “ஆம். இங்கு மட்டுமே உள்ளது. மாமன்னர் லோமபாதர் உருவாக்கிய விழாச்சடங்கு அது. பரத்தையருக்கு இந்நகரம் அளிக்கும் நன்றிக்கடன் அது.”
அதிரதன் “வீரரே, அந்த வரலாற்றை நான் அறிவேன்… தாங்கள் விரும்பினால் சொல்கிறேன்” என்றார். “நீர் சூதரா?” என்றார் விகர்த்தனர். “ஆம், ஆனால் குதிரைக்காரச் சூதன்” என்றார் அதிரதன் “குதிரைக்காரர்களும் கதைசொல்லத் தொடங்கிவிட்டீர்களா? சரி சொல்லும்” என்றார் விகர்த்தனர். அதிரதன் பெருமிதத்துடன் அங்கிருப்பவர்களை கண்சுழற்றி நோக்கிவிட்டு “அங்கநாடு பலியின் மைந்தரான அங்கனின் காலம் முதலே அன்னம் குறையாதது என்று புகழ்பெற்றிருந்தது. பசித்தவர்கள் தேடிவரும் நாடென்று இதை சூதர்கள் பாடினார்கள்” என்று தொடங்கினார்.
“முன்பு அங்கநாட்டை மன்னர் லோமபாதர் ஆண்டுவந்தபோது அங்கநாட்டில் அன்னசாலைகளில் பயணிகளுக்கு அன்னதானம் செய்யப்பட்டு வந்தது. ஒருநாள் நள்ளிரவில் பலநாள் பசியுடன் பிராமணன் ஒருவன் வந்து அன்னசாலைமுன் நின்றான். “பயணியாகிய பிராமணனுக்கு அன்னமிடுங்கள்” என்றான். அன்னசாலைக் காவலன் அன்று மதுவருந்தியிருந்தமையால் அன்னமில்லை என்று சொல்லி கதவை மூடிவிட்டான். மழைபெய்துகொண்டிருந்த நேரம். ஆகவே அத்தனை வீடுகளும் மூடப்பட்டிருந்தன. பசிக்களைப்புடன் நடந்த பிராமணன் அரண்மனை வாயிலுக்கும் சென்றான். அங்கே காவலர் அவனை வெளியே தள்ளிவிட்டனர்.”
அதிரதன் தொடர்ந்தார் “பசி தாளமுடியாத பிராமணன் அங்கே ஒரு நாய் உண்டுகொண்டிருந்த ஊன்மிச்சிலை பிடுங்கி உண்டான். பசி நீங்கியதும் தன் நெறியை தானே மீறியதை உணர்ந்து “இனி இந்த நாட்டில் வாழ்பவர்கள் அந்தணர் அல்ல” என்று தீச்சொல்லிட்டுவிட்டு கங்கையில் குதித்து உயிர்துறந்தான். மறுநாள் காலையில் அக்னிகாரியம் செய்ய எரிகுளம் எழுப்பிய மறையவர்கள் மூன்று நெருப்பும் எழவில்லை என்பதைக் கண்டனர். அவர்கள் அனைவரும் அங்கநாட்டில் அவர்கள் ஈட்டிய அனைத்தையும் விட்டுவிட்டு கங்கையில் நீராடி உடையையும் களைந்து இலைகளை அணிந்துகொண்டு அங்கநாட்டை விட்டு விலகிச் சென்றனர்.”
“அதன்பின் அங்கநாட்டில் மேகங்கள் பொய்த்தன. மழை நின்று மண் வறண்டது. லோமபாதர் நாடெங்கும் சென்று அந்தணரை அழைத்துவந்தார். அவர்கள் அங்கநாட்டுக்குள் நுழைந்தபின் எரியை எழுப்பமுடியவில்லை. அமைச்சர் உத்தானகர் நிமித்திகர்களை வரவழைத்து நோக்கியபோது மண்ணின் பாவங்களால் தீண்டப்படாத தூய பிராமணன் ஒருவனின் பாதங்கள் படுமென்றால் மட்டுமே அங்கநாட்டில் மழைவிழும் என்று சொன்னார்கள். நிமித்திகர் கணித்துச் சொன்ன அந்த பிராமண இளைஞனின் பெயர் ரிஷ்யசிருங்கன். விபாண்டகரின் தவச்சாலையில் அவன் வாழ்ந்துவந்தான்.” என்றார் அதிரதன்.
“காசியப குலத்தைச் சேர்ந்தவரும் காமவிலக்கு நெறிகொண்டு தவம்செய்துவந்தவருமான விபாண்டக முனிவர் தன் தவம் கலைக்கவந்த ஊர்வசியைக் கண்டு காமம் கொண்டமையால் பிறந்தவன் அவன். விபாண்டகர் தான் அடைந்த காமத்தை அவன் ஒருபோதும் அறியலாகாது என்று எண்ணி வளர்த்தார். மானின் விழிகொண்டிருந்த அவனை நான்குபக்கமும் மலைகளையும் புயல்களையும் சிம்மங்களையும் விஷநாகங்களையும் காவல் நிறுத்தி மானுடர் எவரும் காணாமல் தவச்சாலையில் மான்களுடன் இன்னொரு மானாக வளர்த்தார் . அவனுக்கு மான்களே பாலூட்டின. வேதங்களை மட்டுமே மொழியென அறிந்திருந்தான். தந்தையை மட்டுமே அவன் மானுடராகக் கண்டிருந்தான்.”
“ரிஷ்யசிருங்கரை அழைத்துவருவதற்காக வைசாலி என்னும் தாசியை தன் படைகளுடன் லோமபாதர் காட்டுக்கு அனுப்பினார். அவர்கள் கங்கை வழியாக நாற்பத்தொரு நாள் படகில் சென்று காட்டுக்குள் பன்னிருநாட்கள் பயணம்செய்து விபாண்டகரின் குருகுலம் இருந்த காட்டைச் சென்றடைந்தனர். விபாண்டகரின் எல்லைகளை அவர்களால் கடக்க முடியாதென்பதனால் அவள் பெண்மானின் கோரோசனையை உடலில் பூசிக்கொண்டு காட்டின் விளிம்பில் நின்றாள். அந்த வாசனையை அறிந்த ஆண்மான்கள் அங்கே வந்தன. அவற்றைத் துரத்திக்கொண்டு ரிஷ்யசிருங்கனும் அங்கே வந்தான்.”
“வைசாலி புலஸ்திய ரிஷி எழுதிய காமநூலான தேஹிதானுபவத்தை கற்றுத்தேர்ந்தவள். அவள் தன் மனங்கவர் கலையால் ரிஷ்யசிருங்கரை தன்னிடம் வரவழைத்தாள். மானுடரையே காணாதிருந்த அவருக்கு அவள் காமத்தின் சுவையை அளித்தாள். வெளியே விரிந்திருக்கும் பேருலகம் காமத்தாலானது என்று அவரை நம்பவைத்தாள். அவர் புல்கற்றையைக் கண்டு பின்னால் வரும் இளமான் போல அவளுடன் வந்தார்.”
“இவரே நல்ல கதைசொல்லிதான் போலிருக்கிறது” என்றார் விகர்த்தனர். “எல்லாம் கேள்விஞானமே” என்று அதிரதன் மகிழ்ந்த புன்னகையுடன் அடக்கமாகச் சொன்னார். “ரிஷ்யசிருங்கர் அங்கநாட்டில் காலெடுத்துவைத்தபோது மன்னரின் வேள்விச்சாலையில் எரிகுளத்தில் தென்னெரி தானாகவே பற்றிக்கொண்டது. அந்தப்புகை சென்று மேகங்களைத் தொட்டதும் வானம் உடைந்து மழை பெருகிவிழத்தொடங்கியது. குளங்கள் நிறைந்தன. கழனிகள் செழித்தன. ரிஷ்யசிருங்க மாமுனிவர் மன்னரின் மகளான சாந்தையை மணந்தார். அவருக்கு சதுரங்கர் பிறந்தார். அங்கநாட்டுக் களஞ்சியங்களும் தொட்டில்களும் நிறைந்தன.”
“தன் வருகைநோக்கம் முடிந்ததும் ரிஷ்யசிருங்கர் விபாண்டகரின் தவச்சாலைக்கே திரும்பிச்சென்றார்” என்றார் அதிரதன். “அந்த தாசியின் பணிக்காக அவர்கள் குலத்துக்கு லோமபாதர் அரச மரியாதைகளை வழங்கினார். அவர்கள் பல்லக்கில் ஏறவும் ஆலயங்களில் முதல்முகப்பில் நின்று வழிபடவும் சூரியனார்விழாவில் ரதமேறி நகர்வலம் வரவும் உரிமை அளிக்கப்பட்டது.” விகர்த்தனர் “அந்த தாசி என்ன ஆனாள்?” என்றார். “அவள் எல்லா தாசிகளையும் போல மூப்படைந்து நோயுற்று இறந்திருப்பாள். இதென்ன வினா?” என்று நூற்றுவர்தலைவர் நகைத்தார்.
“உன் மைந்தன் வந்தானே, அவன் எங்கே?” என்றான் நூற்றுவர்தலைவன். “இதோ நிற்கிறான் வீரரே” என்று அதிரதன் கர்ணனை அழைத்து அருகே நிற்கச்செய்தார். “இவன் பெயர் என்ன?” அதிரதன் பணிந்து “வசுஷேணன்… நாங்கள் கர்ணன் என்று அழைக்கிறோம்” என்றார். “உன்னைவிட உயரமாக இருக்கிறான்… இவனுக்கு என்ன வயதாகிறது?” என்றான் நூற்றுவர்தலைவன். “இப்போது பன்னிரண்டு ஆகிறது…” என்றார் அதிரதன். “பன்னிரண்டா? இருபது வயதானவன் போலிருக்கிறானே. அடேய், நீ சம்மட்டியை ஏந்துவாயா?” கர்ணன் ஆம் என தலையசைத்தான். “இம்முறை ரதத்தை நீயே ஓட்டு” என்றான் நூற்றுவர்தலைவன்.
திகைத்து “வழக்கமாக நான் ஓட்டுவேன்” என்றார் அதிரதன் பணிவுடன். “நீ இங்கே நில்… உன் மைந்தன் இளைஞனாக இருக்கிறானே” என்று நூற்றுவர்தலைவன் சொல்லி “டேய், உன் சம்மட்டியுடன் வந்து குதிரையருகே நில்” என்றான். அதிரதன் “அவனால் நன்றாக ரதமோட்ட முடியாது. இன்னமும் சிறுவன்…” என்றார். “அவன் உடல் இளைஞனைப்போலிருக்கிறதே… ஓட்டட்டும்” என்று சொன்ன நூற்றுவர்தலைவன் “டேய், ரதமோட்டும்போது மெதுவாகச் செல். விழாவில் ரதம்சரிவது பெரிய தீக்குறி. உன் முதுகுத்தோல் உரிந்துவிடும்… புரிந்ததா?” என்றான். கர்ணன் தலையை அசைத்தான். “சம்மட்டியை ஏதோ போர்வில்லை பிடித்திருப்பதுபோல அல்லவா பிடித்திருக்கிறான்? சூதனுக்கு இத்தனை உயரம் எதற்கு?” என்றார் விகர்த்தனர்.
மன்னரும் பட்டத்தரசியும் ஆலயத்தை விட்டு வெளியே வர மீண்டும் வாழ்த்தொலிகள் உரக்க எழுந்தன. அவர்கள் நடந்துசென்று அவைமேடையில் போடப்பட்டிருந்த சிம்மாசனங்களில் அமர்ந்தனர். மேடையில் நின்றிருந்த ஸ்தானிகர் கைகளைக் காட்டியதும் மறுபக்கம் மூங்கில்மேல் அமைக்கப்பட்டிருந்த உயரமான திறந்த மேடையில் சூதர்கள் எழுவர் கையில் வாத்தியங்களுடன் தோன்றினார்கள். முழவுகளை மீட்டியபடி சீரான அசைவுகளுடன் ஆடி அரங்குசூழ்ந்தனர். அவ்வொலியில் மெல்லமெல்ல அங்கிருந்த மொத்தக்கூட்டமும் விழிவெளியாக மாறியது.
முத்திரைகள் மட்டுமேயான நடனமாக இருந்தது அந்த நாடகம். முதலில் ஏழு நடிகர்கள் மான்செவி முத்திரைகாட்டி முகம் சுளித்து நோக்கி துள்ளித்துள்ளி அரங்குக்கு வந்தனர். ஓசைகேட்ட திசைநோக்கி வெருண்டு நோக்கி கழுத்துவளைத்தனர். பின்னர் துள்ளி ஓடி செவிகூர்ந்தனர். அவர்களைத் துரத்தியபடி கையில் தர்ப்பையுடன் மான்தோலாடையும் தலையில் புரிமான்கொம்பும் மார்பில் மலர்மாலையும் அணிந்த ரிஷ்யசிருங்கன் வந்தான். அம்மான்களை நோக்கி அவர்கள் ஓடுவதென்ன என்று கேட்டான். அப்போது வைசாலி இடையொசிய நடைதளர நீண்ட கூந்தல் காற்றிலாட ஆடைநெகிழ்ந்து உடலொளி எழ வந்து அவன் முன் நின்றாள். தன் காலின் சலங்கைகளைக் குலுக்கி அவனை நோக்கிச் சிரித்தாள்.
அவன் வெருண்டு விலகியோடினான். பின்னர் நின்று இவ்வொலியை நான் அறிவேன், இதை நான் கேட்டிருக்கிறேன் என்றான். ஓடையின் நீரொலியா? புள்ளொலியா? வாகைநெற்றொலியா? இல்லை, இது என் கனவில் நான் கேட்ட ஒலி. அவன் திரும்பிவந்து அவள் பாதங்களை நோக்கிக் குனிந்தான். தாமரை மொட்டுகள் தரைக்கு வந்ததென்ன? முயல்களுக்கு எங்ஙனம் வந்தது செந்நிறம்? அவன் அவள் கால்களை நோக்கி விழிகளை ஏறிட்டான். சிவந்தும் சிரித்தும் விழிமயங்கியும் சொல்குழைந்தும் வியர்த்தும் வெருண்டும் அவள் அவனை எதிர்கொண்டாள்.
மலைவாழைத்தண்டுகள் வெம்மைகொண்டதெப்படி? இளம்பிடியின் துதிக்கை வெண்ணிறமானதெப்படி? மலைப்பாம்புகள் இரண்டு ஒட்டி நெளியும் நடனம். கங்கைப்பளிங்குப்பாறைகள் இணைந்திருக்கும் அமைதி. நதியோடிய பாறைவளைவின் குழைவு. அவன் அவளை வியந்து நோக்கி ஒவ்வொன்றுக்கும் தன்னுள் சொற்களைக் கண்டடைந்தான். மென்மணல் குழைவு. மழைமணல்கீற்று. வெண்பனிக்குமிழி. அல்லிவட்டச்சிறுகுழி. செந்தாமரை மொட்டுக்கள். ஒளிரும் கருவண்டுகள். பொன்மூங்கில் தண்டுகள். மாணைக்கொடியின் மங்கலச்செம்மை. துள்ளும் பொன்னிற மீன்கள். ஊமத்தைமலர்கள். இளமான்விழிகள் பத்து. பொற்குடக் கழுத்து. நீள்வட்டச்செந்நிலா. குங்குமச்சிமிழில் வெண்மணி வரிசை. நீலக்குவளையில் ஆடும் நீர்த்துளிகள். குருத்துப்பாளையின் இளவரிகள். தாழைமலரின் பொற்கீற்று. கருமைகொண்ட தழல்நெளிவு!
“நீ யார்?” என்று அவன் கேட்டான். “உங்களைப்போல ஒரு இளமுனிவன்” என்றாள் அவள். “உன் முகத்தின் ஒளி எப்படி வந்தது? உன் கூந்தலின் நறுமணம் எது? உன் உடலின் மென்மையை எப்படி அடைந்தாய்? உன் உடலில் தாமரைகள் எப்படி பூத்தன? உன்னைக்கண்டு ஏன் தென்றல் சுற்றிவருகிறது? மானுட உடலை மலராக்கிக்கொண்ட தவம்தான் என்ன?” என்று அவன் கேட்டான்.
“இளமுனிவரே, உண்டும் உயிர்த்தும் கண்டும் கேட்டும் தொட்டும் அறிவதற்கே ஐம்புலன்கள் அளிக்கப்பட்டுள்ளன. அறியாததை அறிய அதுவே இயற்கை அளித்த வழி” என்று சொல்லி அவள் நகைத்தாள். ஆம் என்று தலையசைத்து அவன் அவளை அறியத்தொடங்கினான். இரு தாமரைகள் காற்றிலாடுவதுபோல இரு பறவைகள் காற்றிலாடுவதுபோல இரு மான்கள் கழுத்துபிணைப்பதுபோல இரு யானைகள் துதிக்கைசுற்றுவதுபோல இரு பாம்புகள் ஒன்றாவதுபோல அவர்கள் மேடையில் இணைந்து அசைந்தனர்.
கூட்டம் ஒற்றைவிழியாக ஒரே சித்தமாக மாறி நின்றிருக்க ஸ்தானிகரின் கொடி அசைந்தது. ரதமோட்டிகள் தங்கள் குதிரைகளுடன் சென்று வடக்குமூலையில் நிரைவகுத்தனர். அணித்தேர்கள் ஒவ்வொன்றாகக் கொண்டுவந்து நிறுத்தப்பட அவற்றில் குதிரைகளைப்பூட்டினர். உஷ்ணியையும் அர்க்கனையும் ஒருபக்கத்திலும் ரஸ்மியையும் மிகிரனையும் மறுபக்கத்திலும் கர்ணன் கட்டினான். அமரத்தில் ஏறியமர்ந்துகொண்டு சவுக்கால் மெல்ல குதிரைகளை தட்டினான். நுகம் ஏறியதுமே குதிரைகள் பொறுமையிழந்து கால்களால் மண்ணைத்தட்டி குனிந்து மூச்சு சீறின.
“நீங்கள் செய்தது எளிய மானுடத்தவம் முனிகுமாரரே. நான் செய்தது புல்லும் புழுவும் மீனும் பறவையும் மிருகமும் மனிதரும் தேவரும் தெய்வங்களும் செய்யும் தவம். இதை காமம் என்றனர் முன்னோர். காமமே மண்ணை அழகாக்குகிறது. விண்ணை ஒளியாக்குகிறது. எண்ணங்களை இனிதாக்குகிறது. ஆன்மாவை எளிதாக்குகிறது. அந்தத் தவத்தைச் செய்யுங்கள். அது நம்மை வீடுபேறுகொள்ளச்செய்யும்” என்றாள் அவள். அவன் அவளை வணங்க அவள் அவன் செவியில் காமனின் மந்திரத்தைச் சொன்னாள். அவன் கைகூப்பி அதைத் தவம்செய்ய வலப்பக்கம் வெண்குதிரை மீதேறியவனாக கையில் கரும்புவில்லுடன் மன்மதன் தோன்றினான். மறுபக்கம் அன்னம் மீதேறி ரதி வந்தாள்.
மதனனின் அம்புகள் அவன் உடலில் மலர்களாக விரிய அவன் வசந்தம் வந்த காடானான். அதில் தென்றலாக அவள் பரவினாள். அவர்கள் தழுவி இணைந்து நடமிட்டு சென்று மறைந்தனர். இருபக்கத்திலிருந்தும் மான்கூட்டங்கள் எழுந்து துள்ளிவந்தன. மயில்கள் வந்து தோகைவிரித்தன. நாகங்கள் நெளிந்து பிணைந்தாடின. காமத்தின் பெருங்களியாடல் அரங்கில் நிறைந்தது. நிமித்திகன் தோன்றி “அனங்கனின் அங்கம் விழுந்த அங்கமண் வாழ்க. சூரியனின் பெருந்தேரோடும் நகரம் வாழ்க. சூரியமுடி சூடும் அங்கமன்னர் வாழ்க” என்றான்.
‘வாழ்க வாழ்க வாழ்க’ என்று முற்றம் வாழ்த்தொலிகளால் நிறைந்தது. ஸ்தானிகர் மேடையேறி தன் வெள்ளிக்கோலைத் தூக்கி மும்முறை அசைக்க மகாமுற்றம் ஒரு பெருமுரசாக ஒலித்து எழுந்தது. பட்டும் பொன்னும் மணியும் மலரும் அணிந்த பரத்தையர் நகைத்துக்கொண்டும் கூவிக்கொண்டும் ஓடிவந்து ரதங்களில் ஏறிக்கொண்டனர். ‘விரைக! விரைக!’ என்று அவர்கள் கூச்சலிட்டனர். ரதங்கள் கிளம்பி மக்கள் விலகி உருவான பாதையில் சகடங்கள் ஒலிக்க விரைந்தோடின.
கர்ணனின் ரதத்தில் ஏறிக்கொண்ட பரத்தையர் அவன் தோளைத் தழுவி அவன் குடுமியை அவிழ்த்து அவன் காதுகளைப்பிடித்து இழுத்து கூவிச்சிரித்தனர். ‘செல்! செல்!’ என்றனர். “அவன் சிறுவனடி… மீசையே முளைக்கவில்லை” என்றாள் ஒருத்தி. “மீசை எதற்கு?” என்றாள் இன்னொருத்தி. அவர்கள் சிரித்து கைகொட்டினர். ஒரு இளம்பரத்தை கர்ணனின் தோள்களில் கால்தூக்கி வைத்து அமர்ந்துகொண்டாள். அவன் சம்மட்டியை அசைத்ததும் புரவிகள் குளம்புகளை வீசி ஓடிச்சென்றன. பரத்தையர் தங்கள் கைகளை வீசியும் மேலாடைகளை பறக்கவிட்டும் கூவினர். இருபக்கமும் நின்ற இளையோர் கைகளை வீசி எதிர்க்குரலெழுப்பினர். அவர்கள் மேல் மலர்களை அள்ளி வீசினர். மலர்களை பிடித்து திருப்பி வீசினர் பரத்தையர்.
ரதங்கள் வந்து நின்றதும் பரத்தையர் குதித்து கைகளைக் கொட்டி சிரித்துக்கூவியபடி ஓடிச்செல்ல வேறுபரத்தையர் வந்து ரதத்தில் ஏறிக்கொண்டார்கள். ‘சூதரே, விரைக விரைக’ என்று கூச்சலிட்டு அவன் குடுமியைப்பிடித்து ஆட்டினர். புரவிகள் கனைத்து தலைதூக்கி விரைந்து சென்றபோது பக்கவாட்டில் கூட்டம் பிதுங்கி அலையடிக்க முன்னால் நின்றிருந்த ஒருவன் தடுமாறி ரதத்தின் முன் விழுந்தான். கர்ணன் கடிவாளங்களைப்பிடித்து இழுத்து அதேவிரைவில் தன் கால்களால் பின்கட்டையை மிதித்து ரதத்தை நிறுத்தினான். சகடமும் கட்டையும் ஒலிக்க ரதம் நின்றது. புரவிகள் தலைதூக்கி கால்களைத் தூக்கி மிதித்து பக்கவாட்டில் திரும்பி கனைத்தன. பின்னால் வந்த ரதங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றன.
மீண்டும் கர்ணன் ரதத்தை எடுத்தபோது கூட்டம் கைகளை விரித்துக் கூவி ஆர்ப்பரித்தது. அவன் ரதத்தைக் கொண்டுவந்து நிறுத்தியபோது பரத்தையர் அவனைத் தழுவி முத்தமிட்டு விலகிச்சென்றனர். பன்னிருமுறை அவன் முற்றத்தைச் சுற்றிவந்தான். ஒவ்வொருமுறையும் மக்கள் அவனைக்கண்டு கூவி ஆர்ப்பரித்து வாழ்த்தினர். வெயில் சரிந்து சிவக்கத்தொடங்கியது. கள்வெறியும் களிவெறியும் கொண்ட இளையோர் களைப்படைந்து ஆங்காங்கே விழுந்துவிட்டனர். இறுதிச்சுற்றில் தேரில் முதுபரத்தையர் சிலரே இருந்தனர்.
ரதங்கள் நிலையடைந்ததும் ஸ்தானிகர் தன் கொடியை அசைத்தார். நூற்றுவர்க்குடையோர் ஒருவர் வந்து “சூதர்கள் சென்று பரிசில்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார். அதிரதன் ஓடிவந்து கர்ணனின் ரதத்தைப்பிடித்துக்கொண்டு “உனக்கு அரசர் சிறப்புப் பரிசில் அளிப்பார். ஐயமே இல்லை. இன்று உன்னை அங்கநாடே வாழ்த்தியது” என்றார். கர்ணன் சம்மட்டியை சுருட்டி கையில் வைத்துக்கொண்டு நடந்தான். “செல்… நீ யார் என்று அவர் கேட்டால் அதிரதன் மைந்தன் என்று சொல். எனக்கு எட்டு வருடம் முன்பு அரசரின் பரிசாக ஒரு மோதிரம் கிடைத்திருக்கிறது. ரதமோட்டியதற்காக அளிக்கப்பட்டது. அதையும் சொல்… போ” என்று தோளைப்பிடித்துத் தள்ளினார் அதிரதன்.
அவைமேடையில் அரசனும் தேவியரும் எழுந்து நின்றனர். முதலில் காவியச்சூதரும் இசைச்சூதரும் நடிகர்களும் நடிகப்பரத்தையரும் சென்று அரசரிடமிருந்து பரிசில் பெற்றுச்சென்றனர். அதன் பின் அணிப்பரத்தையரும் அரண்மனை வாத்தியக்காரர்களும் பரிசில்பெற்றனர். தலைக்கோலிகளுக்கும் முதுபரத்தையருக்கும் பரிசில் அளித்ததும் அரசன் கைகூப்பி வணங்கி அவைமேடையிலிருந்து இறங்கிச் சென்றான். அவனுடைய சந்தன மிதியடியை ஒரு தாலத்தில் வைத்து மேடையில் வைத்தனர். குதிரைச்சூதர்கள் மேடையேறியபோது அந்தத் தாலத்தில் இருந்த மிதியடியால் பரிசில்களைத் தொட்டு அவர்களுக்கு அளித்தனர். அவர்கள் அதை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு இறங்கினர்.
கர்ணன் மேடையேறியபோது ஸ்தானிகர் “உன் புரவித்திறன் நன்று. உனக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க ஆணையிடுகிறேன்” என்றபின் பொன்மோதிரமொன்றை எடுத்து பாதுகையால் தொட்டபின் அவனுக்கு அளித்தார். அவன் அதை வாங்கிக்கொண்டு ஒரு சொல் பேசாமல் தலைகுனிந்து திரும்பி நடந்தான். அவன் வந்ததும் அதிரதன் பாய்ந்து மோதிரத்தைப் பிடுங்கிக்கொண்டு “சொன்னேனே? மோதிரம்தான். பொன் மோதிரம்… கேட்டீரா விகர்த்தனரே, இத்துடன் என் வீட்டில் மூன்று பொன் மோதிரங்கள் உள்ளன” என்றார்.
விகர்த்தனர் “நல்ல பெண்ணாகப் பாருங்கள் சூதரே” என்றார். அதிரதன் “பெண்ணா, இவனுக்கு பன்னிரண்டு வயதே ஆகிறது. இளமையிலேயே மிக உயரமானவன். பாரதவர்ஷத்திலேயே உயரமானவன் இவன் என்று ஒரு நிமித்திகர் சொன்னார். அஸ்தினபுரியின் பிதாமகரான பீஷ்மர்கூட இவனைவிட உயரம் சற்றுக்குறைவாம்.” “அத்தனை உயரம் சூதனுக்கு எதற்கு? அது அவனுக்கு ஷத்ரியர்களின் பகையை மட்டுமே கொண்டுவரும்” என்றார் விகர்த்தனர்.
கூட்டம் கலைந்த விரைவு கர்ணனை வியக்கச்செய்தது. புரவிகளை அவிழ்த்து தொட்டிக்குக் கொண்டுசென்று நீர் காட்டிக்கொண்டிருந்தபோதே பெருங்களமுற்றம் ஒழியத் தொடங்கியது. “கள்வெறியில் அனைவரும் விழுந்துவிட்டார்கள்” என்றார் அதிரதன். “வா… அங்கே ராதை இதற்குள் உன்னை தேடத்தொடங்கியிருப்பாள்.” கர்ணன் “நான் கங்கைக்குச் சென்று நீராடிவிட்டு வருகிறேன் தந்தையே” என்றான். “மாலினியில் நீராடுவோமே…” “இல்லை. இன்று கங்கையில் நீராடவிழைகிறேன்” என்றான் கர்ணன். “சரி நான் புரவிகளுடன் செல்கிறேன். நீ உடனே வந்துவிடு” என்றார் அதிரதன். “இல்லை தந்தையே. நான் புரவிகளை நீராட்டி அழைத்துவருகிறேன்” என்றான் கர்ணன். அதிரதன் அவனை சற்று குழப்பமாக நோக்கியபின் தலையசைத்து “அந்த மோதிரத்தை எங்காவது விட்டுவிடாதே” என்றார்.
அதிரதன் சென்றபின் அவன் புரவிகளுடன் கங்கைகரைக்குச் சென்றான். களைத்துப்போன புரவிகள் மெல்ல காலடி எடுத்துவைத்து நடந்தன. நீர்க்கரை முழுக்க ஆயிரக்கணக்கான சிறுகுடில்கள் முளைத்து அவற்றில் எல்லாம் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. சமைப்பதற்காக அடுப்புகளை கூட்டத்தொடங்கியிருந்தனர். கங்கைநீரில் தலைகள் நிறைந்திருந்தன. சம்பாபுரியின் பெரும்படித்துறையில் நிலையழிந்து ஆடிய படகுகளை நோக்கியபடி கர்ணன் அமர்ந்திருந்தான். இருள் நன்றாக மூடியபின் எழுந்து திரும்பி நடந்தான். களைப்பில் உடலின் எடை பலமடங்கு கூடிவிட்டதுபோலத் தோன்றியது. புரவிகள் இருளில் மெல்ல காலடி எடுத்துவைத்து நடந்தன.
எதிரே தன் மைந்தனை இடையில் அமரச்செய்து வந்த வேளாண் பெண் ஒருத்தி அவனைக்கண்டு புன்னகை செய்தாள். “மைந்தனின் பெயரென்ன?” என்றான் கர்ணன். “அஸ்வன்” என்று அவள் சொன்னாள். “நீளாயுளுடன் இருப்பான்” என்று வாழ்த்திய கர்ணன் அந்த மோதிரத்தை அதன் கையில் வைத்து தலையைத் தொட்டு புன்னகை புரிந்தபின் நடந்துசென்றான். அவள் திகைப்புடன் பின்பக்கம் பார்த்து நிற்பதை அவன் உணர்ந்தான்.