வண்ணக்கடல் - 50
பகுதி எட்டு : கதிரெழுநகர்
[ 2 ]
கங்கை வழியாகவும் மாலினி வழியாகவும் அங்கநாட்டின் சிற்றூர்களில் இருந்தெல்லாம் மக்கள் படகுகளில் சம்பாபுரிக்கு வந்து இறங்கிக்கொண்டே இருந்தனர். சைத்ரமாதத்துக் கொடும்வெயில் காரணமாக எல்லா படகுகளிலும் ஈச்சைமரத்தட்டிகளாலும் மூங்கில்தட்டிகளாலும் கூரையிட்டிருந்தனர். அவற்றில் செறிந்திருந்த மக்கள் கைகளைத் தட்டிக்கொண்டு சூரியதேவனை துதித்துப்பாடிக்கொண்டிருந்தனர். அவற்றில் பறந்த கொடிகளில் அங்கநாட்டுக்குரிய யானைச்சின்னமும் மறுபக்கம் இளஞ்சூரியனின் சின்னமும் பொறிக்கப்பட்டிருந்தது. பாடிக்கொண்டு சென்ற படகுகள் ரீங்காரமிட்டுச்செல்லும் வண்டுகள் போலத் தோன்றின.
தேரோட்டியான அதிரதன் மாலினியில் பெண்குதிரைகளான உஷ்ணியையும் ரஸ்மியையும் இறக்கி குளிப்பாட்டிக்கொண்டிருந்தார். கால்கள் மூழ்க நீரில் நின்றிருந்த குதிரைகள் நீரில் மிதந்துவந்த சருகுகளையும் மலர்களையும் கண்டு விழிகளை உருட்டி வெருண்டு மூச்சுவிட்டு காதுகளைக் குவித்து நோக்கி பின் கழுத்தை வளைத்தன. அதிரதன் அவற்றின் நீண்ட கழுத்தைத் தட்டி ஆறுதல்படுத்தினார். உஷ்ணி திரும்பி தன் நீலமோடிய கனத்த நாக்கால் அவர் கைகளை நக்கியது. நீரை அள்ளி அதன் பிடரியில் விட்டபோது சிலிர்த்துக்கொண்டு பின்னால் நகர்ந்தபின் வாலைத்தூக்கி மஞ்சள்பச்சை நிறமாக சிறுநீர் கழித்தது. நீரில் அதிரதனுக்குப்பிடித்தமான வாசனை பரவியது.
ஆற்றுமேட்டில் நின்ற அத்திமரத்தடியில் கர்ணன் அர்க்கனையும் மிகிரனையும் பிடித்தபடி தோன்றினான். இரண்டு புரவிகளும் வரும் வழியில் கவ்விக்கொண்ட புல்லை தலையாட்டி மென்றபடி கனத்த குளம்புகளை எருமைகளும் பசுக்களும் குதிரைகளும் மிதித்து படிகளாக ஆக்கிய மண்சரிவில் எடுத்து வைத்து இறங்கிவந்தன. உஷ்ணியின் சிறுநீர் வாசத்தை அறிந்த அர்க்கன் மூக்கைச் சுளித்தபடி மெல்ல கனைத்து நீரிலிறங்கி அதைநோக்கிச் சென்றது. உஷ்ணி நீருக்குள்ளேயே காலைத்தூக்கி அதை உதைப்பதுபோல வீசிவிட்டு விலகிச்சென்றது. மிகிரன் இறங்கி வந்து நீரில் வாய்வைத்து இழுத்துக்குடிக்கத் தொடங்கியது. “நீ ஏன் வருகிறாய்? நானே வந்திருப்பேனே?” என்றார் அதிரதன்.
கர்ணன் “விழா தொடங்கவிருக்கிறது, குதிரைகளை உடனே கொண்டுவரும்படி ஸ்தானிகர் வீட்டுக்கே வந்து சொன்னார்” என்றான். “அன்னை உடனே இவற்றையும் கொண்டுவரச்சொன்னார்கள்.” அதிரதன் அர்க்கனையும் மிகிரனையும் கடிவாளத்தைப்பற்றி நீரில் இறக்கினார். “நீ சென்று உன் களமாடல்களைச் செய். நான் இவற்றை கொண்டுவருகிறேன்” என்றார். “இல்லை தந்தையே, நானும் குளிப்பாட்டுகிறேன்” என்றபடி கர்ணன் நீரில் இறங்கினான். “குதிரைகளை நீராட்டுவதுபோல் இனிய பணி பிறிதில்லை.” அதிரதன் நகைத்து “உண்டு, குழந்தைகளை நீராட்டுவது” என்றார். கர்ணனின் முதுகை உஷ்ணி தன் நாக்கால் நக்க அவன் ‘ஆ’ என அலறியபடி துள்ளிவிட்டான். “அவள் நாக்கில் அரம் இருக்கிறது. ஆகவேதான் நக்குவதற்காக அலைகிறாள்” என்று அதிரதன் சிரித்தார்.
குதிரைகள் பிடரியில் நீர் விழுவதை மட்டும் விரும்பவில்லை. நீர் விழ விழ குடைந்து உதறிக்கொண்டே இருந்தன. அதிரதன் படகுகளை நோக்கிக்கொண்டு “வந்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் கூட்டம் கூடியபடியேதான் செல்கிறது” என்றார். “கூட்டம் கூடக்கூட வணிகர்கள் வருகிறார்கள். வணிகர்கள் வருவதனால் மேலும் கூட்டம் வருகிறது.” கர்ணன் படகுகளை ஏறிட்டுநோக்கி “அங்கநாடே சம்பாபுரிக்கு வந்துவிடும்போலிருக்கிறது” என்றான். “ஆம். இங்கே சித்திரையில் மட்டும்தான் வேளாண்மைப்பணிகள் இல்லை. மழை இல்லாமலிருப்பதனால் படகுப்பயணமும் எளிது. திறந்தவெளிகளில் இரவு துயில்வதும் ஆகும்” என்றார் அதிரதன்.
கர்ணன் நீர்விட்டு நனைத்தபின் குதிரைகளை வைக்கோலால் உரசித்தேய்த்து கழுவினான். குதிரைகளின் முடி சரிந்திருக்கும் திசைநோக்கியே தேய்ப்பதென்பது சற்றுப்பழகவேண்டிய கலை. எத்தனை பழகினாலும் அதில் பிழைவரும். ஒவ்வொரு குதிரைக்கும் சுழி ஒவ்வொரு வகையானது. அதிரதனிடமிருந்த நான்கு குதிரைகளையும் கர்ணன் குட்டிகளாக இருந்த நாள்முதல் அறிந்திருந்தான். அவை அவனுடன் சேர்ந்தே வளர்ந்தவை.
குதிரைகள் அடிவயிற்றில் நீர் வழிய தலைகளை உலுக்கியபடி மேலேறின. அவற்றை புதர்களில் கட்டிவிட்டு அதிரதன் நீரில் இறங்கி நீராடினார். கர்ணன் நீரில் பாய்ந்து சற்றுதூரம் நீந்திவிட்டுத் திரும்பிவந்தான். “மாலினியின் நீரில் ஒரு சேற்றுவாசனை இருக்கிறது. கங்கையில் அது இல்லை” என்றான். “கங்கையில் வருவது கைலாயத்தின் நீர் என்கிறார்கள். மாலினி மழைநீரைத்தான் கொண்டுவருகிறது” என்று அதிரதன் சொன்னார். “நான் இளவயதில் கங்கையை நீந்திக்கடந்திருக்கிறேன்.” கர்ணன் சிரித்து “அதை என்னிடம் பலநூறு முறை சொல்லியிருக்கிறீர்கள்” என்றான். “ஆமாம். குகர்கள் அன்றி பிறர் கங்கையை நீந்திக்கடக்க முடியாது. நான் யமுனையில் படகுகளை ஓட்டிப்பழகியிருந்தமையால் எனக்கு நீச்சலில் நல்ல பழக்கம் இருந்தது.”
“நீங்கள் யமுனைக்கரையில் உத்தரமதுராபுரியில் இருந்தீர்கள் அல்லவா?” என்றான் கர்ணன். “ஆம்… அங்குதான் நீ பிறந்தாய். மதுராபுரியில் கம்சர் பட்டத்துக்கு வந்தபோது குடிகள் பலர் ஊரைவிட்டே புறப்பட்டுச்சென்றனர். நானும் வந்துவிட்டேன். குதிரைத்தொழில் தெரிந்த சூதனுக்கு எங்கும் சோறு உண்டு” என்றார் அதிரதன். “நான் யமுனையை நினைத்துக்கொள்வதுண்டு… மாலினி அளவு பெரிய நதியா?” என்றான் கர்ணன். “இதைவிட ஐந்துமடங்கு பெரியது. நீர் கருமையாக இருப்பதனால் காளிந்தி என்று பெயர்.” கர்ணன் அருகே நீந்தி வந்து “நாம் அங்கே செல்லமுடியுமா தந்தையே?” என்றான். “உன் நாடு அங்கம். நீ வளர்ந்தபின் எங்குவேண்டுமானாலும் செல்லலாம்” என்றார் அதிரதன்.
நீராடி தலைதுவட்டிக்கொண்டிருக்கையில் “நான் இளைஞனாக இருக்கையில் மூன்றுமுறை இங்கே சூரியவிழாவின் ரதப்போட்டிகளில் வென்றிருக்கிறேன்” என்றார் அதிரதன். கர்ணன் “அன்னை சொன்னார்கள். அந்தப்போட்டிகளில் எப்போதும் எட்டு ரதங்கள் மட்டும்தான் பங்கெடுத்தன என்று…” என்று புன்னகையுடன் சொன்னான். “ஏன் எட்டு ரதங்கள் பங்கெடுத்தால் அது போட்டி இல்லையா? அவளா சொல்வது எதுபோட்டி எது போட்டி அல்ல என்று? அந்தப்போட்டிகளில் வென்று நான் அடைந்த பொன் மோதிரங்கள்தான் அவளிடமிருக்கும் ஒரே பொன்நகைகள்… அவற்றைத்தான் இதோ இன்றுகூட அவள் விழாவுக்கு போட்டுக்கொண்டு போகப்போகிறாள்…”
கர்ணன் சிரித்துக்கொண்டு “நான் வேடிக்கைக்காகச் சொன்னேன் தந்தையே” என்றான். “என்ன வேடிக்கை? அவள் சொல்வதைத்தான் நீயும் கேட்கிறாய்… இங்கே ஷத்ரியர்கள்தான் ரதப்போட்டி நடத்துகிறார்கள். நாங்கள் சூதர்கள் எங்களுக்காக சிறிய அளவில் நடத்திக்கொள்கிறோம். அதிலென்ன பிழை? அதில் நகைக்க என்ன இருக்கிறது?” என்றார். கோபத்துடன் உஷ்ணியின் தொடையில் ஓங்கி அறைந்து “போ, மூடக்குதிரையே. இந்நேரத்தில்தான் உனக்கு புல்தின்னவேண்டியிருக்கிறதா?” என்றார்.
அவர் இருபெண்குதிரைகளுடன் முன்னால்செல்ல கர்ணன் பிற குதிரைகளுடன் பின்னால் சென்று “நான் நகையாடலுக்காகச் சொன்னேன் தந்தையே” என்றான். “இது நகையாடல் அல்ல. இது அவமதிப்பு. எனக்கு மட்டுமல்ல, சூதர்குலத்துக்கே அவமதிப்பு” அதிரதன் மூச்சு சீற கண்கள் கலங்க கூவினார். “சூரியவிழாவின் சூதர்களின் ரதப்போட்டியை மன்னரே அழைத்துப் பாராட்டினாரே அது பொய்யா? எனக்கு அவர் அளித்த பொன்னூல்சால்வை அப்படியே பெட்டிக்குள் இருக்கிறது. எடுத்துக் காட்டட்டுமா உனக்கு?”
கர்ணன் அவர் தோளைச்சுற்றி கைபோட்டு தன்னுடன் அணைத்துக்கொண்டான். “என்ன சினம் தந்தையே? என்னிடமா சினம்?” என்று சொல்லி அவர் காதில் தன் மூக்கால் உரசினான். அவர் அவன் தலையை தன் கையால் சுற்றி “நீ புரிந்துகொள்ளக்கூடியவன். நாமெல்லாம் ஆண்கள். அந்த சமையலறைக்கிழவிக்கு என்ன தெரியும்? ஆண்களைப்பற்றி எப்படிப்பேசுவதென்று தெரியவேண்டாமா?” என்றார். “நான் வேடிக்கைக்காகத்தான் சொன்னேன்” என்றான் கர்ணன். “ஆம், அது தெரிகிறது எனக்கு. நீ என்னை கேலிசெய்யமாட்டாய். ஆனால் அவள் சொன்னது அத்தனையும் நஞ்சு… நான் இப்போது சென்றதுமே அவளை இழுத்து நிறுத்தி கேட்கத்தான் போகிறேன்.”
“கேட்போம்… கிழவிகளை நாம் வெறுமனே விடக்கூடாது” என்றான் கர்ணன். அதிரதன் ஓரக்கண்ணால் ஐயத்துடன் பார்த்தார். “ஆம் தந்தையே, கூப்பிட்டுக் கேட்போம்” என்றான் கர்ணன். அதிரதன் “அவள் அப்படியெல்லாம் ஒப்புக்கொள்ள மாட்டாள். பெரிய காளி…” என்றார். கர்ணன் மெல்ல “நமக்குள் என்ன? சொல்லுங்கள் தந்தையே, அந்தப்போட்டி எப்படி நடந்தது?” என்றான். “எப்படி என்றால்?” என்றார் அதிரதன். “போட்டியில் அனைவருமே உங்கள் நண்பர்கள் அல்லவா?” என்று கர்ணன் கேட்டான். “ஆம், நண்பர்கள்தான்.” “அவர்கள் எப்படி நீங்கள் வெல்வதை ஒப்புக்கொண்டார்கள்?” அதிரதன் சற்று தயங்கி “அவர்கள் வெல்வதை நான் அடுத்தவருடம் ஒப்புக்கொள்ளவேண்டும் என்பதுதானே பேச்சு?” என்றார். இருவர் விழிகளும் சந்தித்தன. கர்ணன் சிரிப்பை அடக்கமுயன்றான். அதிரதன் பீரிட்டு நகைக்கத் தொடங்க அவனும் சேர்ந்தே நகைத்தான்.
இருவரும் நகைத்தபடியே வருவதை வீட்டின் முன் நின்ற ராதை பார்த்தாள். “கர்ணா, உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். எங்கு சென்றாய்?” என்று கூவினாள். “நீ எப்போது தேடாமலிருந்தாய்?” என்றார் அதிரதன் மெல்ல. கர்ணன் நகைத்தான். “என்ன நகைப்பு? தந்தையும் மைந்தனும் தோள்தழுவி வந்தால் என்ன சொல்வார்கள்?” என்று கடுகடுத்தாள். “என்ன சொல்வார்கள்? இந்த நாட்டிலேயே உயரமான மைந்தனைப்பெற்றிருக்கிறான் என்பார்கள். பன்னிரண்டு வயதுச்சிறுவன் தந்தையைவிட உயரமாக இருப்பது எப்படி என்று நிமித்திகரிடம் கேட்பார்கள்… அதாவது…” என்று தொடங்கிய அதிரதனை ராதை “போதும்… ஸ்தானிகரின் ஆள் வந்து கூவிவிட்டுச் சென்றான். குதிரைகள் இன்னும் அரைநாழிகைக்குள் கோயில்முன் சென்றுசேரவில்லை என்றால் குதிரைக்காரரை கொண்டுசென்று அங்கே தண்டில் கட்டுவோம் என்றான்.”
“குதிரைக்காரர்கள் மேல் இளம்தாசிகள் பயணம்செய்வார்கள் என்றால் நல்லதுதானே?” என்றார் அதிரதன். “வயதானபிறகு என்ன பேச்சு இது? அவன் சிறுவன் அல்ல. உங்கள் தலைக்குமேல் உயர்ந்துவிட்டான்” என்றபின் “வேலையை முடித்துவிட்டு விரைந்து வாருங்கள். நான் இனிப்புக்கூழ் செய்திருக்கிறேன்” என்றவாறு ராதை உள்ளே சென்றாள். “என்ன பெண் இவள்? உன்னைப்போன்ற பேரழகனை மைந்தனாகப் பெற்று என்ன பயன்? இன்றுவரை ஒருநாள்கூட உன்னிடம் அவள் அன்பாக ஒரு சொல் சொல்லி நான் கேட்டதில்லை. ஊனுணவு கிடைத்த நாய் போலத்தான் எப்போதுமிருக்கிறாள். எவரோ எக்கணமும் வந்து பிடுங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள் என்று ஐயுறுபவள்போல.”
“உண்மையிலேயே அந்த ஐயம் அன்னைக்கு இருக்கிறது தந்தையே” என்றான் கர்ணன். “சினமெழுந்தால் அவர்கள் என்னிடம் சொல்வதே அவர்களை நான் விட்டுவிட்டுச் சென்றுவிடுவேன் என்றுதான்…” என்றான். அதிரதன் ஓரக்கண்ணால் அவனைப்பார்த்தார். அவனுக்கு அவனுடைய பிறப்பு பற்றி என்ன தெரியும் என்று எண்ணிக்கொண்டார். ராதை எதையாவது உளறிவைத்துவிட்டாளா என்ன? “ஆம், அவள் முதியவயதில் அல்லவா உன்னைப்பெற்றாள்?” என்றார். கர்ணன் கண்கள் கனிந்தன. “ஆம், அறிவேன். அன்னைக்கு என்னை காலனோ கள்வனோ கொண்டுசென்றுவிடுவார்கள் என்றே எப்போதும் ஐயம். அவர்கள் விழியும் அகமும் என்மீதிருந்து விலகவே விலகாது.”
குதிரைகள் நன்றாகக் காய்ந்திருந்தன. அவற்றை தறிகளில் கட்டி இருவரும் இரு பக்கங்களிலாக அமர்ந்து நாய்த்தோலால் உடலை உருவித்தேய்க்கத் தொடங்கினர். குதிரை தோலை சிலிர்த்துக்கொண்டு அசையாமல் நின்றது. உஷ்ணி நாக்கால் கொட்டிலின் மரச்சட்டத்தை நக்கத் தொடங்கியது. “எத்தனை குதிரைகள் தேவை இவர்களுக்கு?” என்றான் கர்ணன். “இந்தநாள் பரத்தையருக்குரியது. அவர்கள் இப்போது கலிங்கத்திலிருந்தும் மச்சநாட்டிலிருந்தும்கூட வந்துகொண்டிருக்கிறார்கள்… குதிரையில் ஏறி அரசகுலத்தவருக்கு நிகராகச் செல்வதென்றால் அது எளியநிகழ்வா என்ன?”
“நெடுங்காலம் முன்பு இந்த நாடு வெறும் தர்ப்பைமண்டிய சதுப்பாக இருந்தது. பலியின் மைந்தனான அங்கன் என்னும் இளவரசர் தான் ஆள்வதற்கான நாட்டைத் தேடி கங்கை வழியாக வரும்போது இந்த சதுப்பில் ஒரு மான்கூட்டம் குட்டிகளுடன் நிற்பதைக் கண்டார். குட்டிகளுடன் நிற்கும் மான்கூட்டம் சிறிய ஓசை கேட்டாலே அஞ்சி ஓடும். ஆனால் மன்னரின் படைவரும் ஒலி கேட்டும் மான்கூட்டம் ஓடாமல் தலைதூக்கி நோக்கியபடி நின்றது. இந்தமண் வளம் மிக்கது, ஆகவே இங்கே உயிர்கள் எந்த அச்சமும் இன்றி வாழ்கின்றன என்று நினைத்த அரசர் படகுகளை கரையடுக்கச் செய்து இறங்கினார். அங்கேயே தர்ப்பைகளால் குடில்கள் கட்டி குடியேறினார். மாலினியின் அன்றைய பெயர் சம்பா. சம்பாநதிக்கரையில் இருந்தமையால் இது சம்பாபுரி என்று சொல்லப்பட்டது.”
கர்ணன் இளமைமுதல் நூற்றுக்கணக்கான முறை கேட்ட கதை. அதிரதன் மிகச்சில கதைகளையே மீண்டும் மீண்டும் சொல்வார். ஒரேவகையான சொற்களில் ஒரேவகையான உணர்ச்சிகளுடன். ஆனால் அவருக்கு அவனிடம் பேசிக்கொண்டிருப்பது விருப்பமானது. அந்தப் பேச்சு அறிவுசார்ந்ததாக இருக்கவேண்டுமென்றும் அவர் எண்ணினார். “பெண்களுக்கு என்ன தெரியும்? எந்நேரமும் சமையலறைப்பேச்சு… நாம் பேசிக்கொண்டிருப்போம்” என்பார். “அங்கனால் அமைக்கப்பட்டமையால் இது அங்கநாடு என்றழைக்கப்பட்டது. அங்கனுக்கு மைந்தர் இல்லாமையால் புத்ரகாமேஷ்டியாகம் செய்தார். அந்தவேள்வியில் படைக்கப்பட்ட இனிப்புணவை அவரும் பட்டத்தரசி சுனீதையும் உண்டனர். அவர்களுக்கு வேனன் என்னும் மைந்தர் பிறந்தார்.”
“வேனன் தீய நடத்தை கொண்டவராக இருந்தார். ஆகவே அங்கன் அகம் நொந்து காட்டுக்குச் சென்றுவிட்டார். எட்டு மாதம் அவர் திரும்பி வராமலானபோது மக்கள் வேனனை அரசராக்கினர். வேனன் தன் தீயநடத்தையால் மக்களை கொடுமைப்படுத்தினார். மக்கள் சூரியதேவனை வணங்கி வேண்டிக்கொண்டனர். சூரியதேவனின் சினத்தால் ஒருநாள் வேனனின் அரண்மனை தீப்பற்றி எரிந்தழிந்தது. அதில் துயின்ற வேனன் தன் எட்டு மனைவியருடன் சாம்பலானார். அங்கனின் குலவரிசையைச் சேர்ந்த நூற்றெட்டு மன்னர்கள் அங்கநாட்டை ஆண்டனர். அவர்களில் அங்கஃபூ, திரவிரதர், தர்மரதர், ரோமபாதர், லோமபாதர், சதுரங்கர், பிருலாக்ஷர், பிருஹத்ரதர், பிருஹன்மனஸ், ஜயத்ரதர், விஜயர், திடவிரதர், ஆகிய மன்னர்கள் அதிராத்ர வேள்வியும் ராஜசூயவேள்வியும் செய்தவர்கள்.”
அதிரதர் புன்னகையுடன் “நான் இந்நாட்டுக்கு வந்து பத்தாண்டுகளே ஆகின்றன. ஆனால் அத்தனை மன்னர்களின் பெயரையும் என்னால் ஒரேமூச்சில் சொல்லமுடியும். வேறெந்த ரதமோட்டியும் சொல்லமுடியாது. ஏனென்றால் வரலாறு இன்றியமையாதது என்று எனக்குத்தெரியும். மனிதர்கள் இருவகை. வரலாற்றை அறிந்தவர்கள் அறியாதவர்கள்” என்றார். “இந்தப்பெயர்களை உன்னாலும் முழுமையாக சொல்லமுடியும் என்று நினைக்கிறேன்” கர்ணன் “ஆம் தந்தையே” என்றான். “ஞானம் எப்போதும் நம்முடன் இருக்கவேண்டும். இன்று என்னை இந்நகரின் சிறந்த தேரோட்டி என்று சொல்கிறார்கள் என்றால் அதற்கு வழிவகுத்தது என் ஞானமே” அதிரதர் சொன்னார்.
உருவிவிடப்பட்ட குதிரை கால்களை உதைத்துக்கொண்டும் தும்மிக்கொண்டும் விலகிச்சென்றது. அதன் கபிலநிற உடல் மாந்தளிர் போல மின்னிக்கொண்டிருந்தது. கர்ணன் உஷ்ணியை அழைத்தான். உஷ்ணி ஆவலுடன் தாடையை அசைத்துக்கொண்டு அருகே வந்து நின்றது. அவர்கள் அதை உருவிவிடத்தொடங்கினர். ராதை அப்பால் வந்து நின்று “கிளம்புகிறீர்களா இல்லையா? என் மைந்தனை பேசிப்பேசியே உணவருந்தவிடாமல் செய்கிறீர்கள்” என்று கூவினாள். கர்ணன் திரும்பி புன்னகைசெய்து “அங்கநாட்டு வரலாற்றைச் சொல்கிறார்” என்றான். “என்ன வரலாறு? குடுக்கைக்குள் போய்விட்ட காசு போல சில மன்னர்களின் பெயர்கள்… அதைத்தான் காலம்முழுக்க சொல்லிக்கொண்டிருக்கிறாரே… நீ வந்து உணவருந்து. அவர் அந்தப்பெயர்களை குதிரைக்கே சொல்லிக்கொடுக்கட்டும்” என்றாள் ராதை.
அதிரதன் மிகமெல்ல “அறிவின் மதிப்பு தெரியாதவள்… அவள் தந்தை சமையற்காரர் தெரியுமா? சமையல்செய்பவனுக்கு என்ன ஞானம் இருந்திருக்கும்?” என்றார். “அங்கே என்ன சொல்வீர்கள் என்று எனக்குத்தெரியும். நான் சமையற்காரன் மகள். குதிரைமேய்ப்பவனை விட அது ஒன்றும் குறைந்தது அல்ல… கர்ணா, நீ வருகிறாயா இல்லையா?” கர்ணன் “இதோ” என்று எழுந்து “இதற்குமேல் தாளாது தந்தையே” என்று மெல்லியகுரலில் சொன்னபின்பு சென்றான்.
அவன் கையைக் கழுவிவிட்டு உள்ளே செல்ல அவள் “கையைக் கழுவினாயா, இல்லை குதிரைமுடியுடன் உள்ளே வந்துவிட்டாயா?” என்று கடுகடுத்தாள். கைகளை விரித்துக்காட்டியபின் கர்ணன் தரையில் அமர்ந்துகொண்டான். “தரையிலா அமர்கிறாய்? இதோ மணைப்பலகை… எழுந்திரு” என்றாள் ராதை. “எதற்கு மணை? நான் தரையிலேயே வசதியாக அமர்ந்துகொள்கிறேனே” என்றான் கர்ணன். “எழுந்திரு… நீ தரையில் அமர்ந்து உண்ணலாகாது…” என்று மணைப்பலகையை கொண்டுவந்து போட்டு அதட்டினாள். “நீங்கள் நாயைப் பழக்குவதுபோல என்னிடம் பேசுகிறீர்கள்” என்றபடி மணையில் அமர்ந்துகொண்டான்.
அவள் இனிப்புக்கூழை அவனுக்கு இலைத்தொன்னையில் கொண்டுவந்து வைத்தாள். “ஏன் இலைத்தொன்னை செய்கிறீர்கள்? கலத்திலேயே உண்ணுகிறேனே?” என்றான் கர்ணன். “கலம் எச்சிலாகக்கூடியது. நீ அதில் உண்ணலாகாது…” கர்ணன் கூழை கையிலெடுக்க “அன்னத்தை வாழ்த்தாமலா உண்கிறாய்? என்ன பழக்கம் இது?” என்றாள். “நான் என்ன ஷத்ரியனா பிராமணனா? மந்திரம் சொல்லி உண்பதற்கெல்லாம் நேரமில்லை” என்றான் கர்ணன். “சொல்வதைக்கேள். மந்திரம் சொன்னபின் உண்டால்போதும் நீ” என்று ராதை சினத்துடன் சொன்னாள். கர்ணன் “இங்கே உண்பது குதிரைக்கலை கற்பதற்கு நிகர்” என்று சொல்லி விரைந்து மந்திரத்தைச் சொல்லி கூழை குடிக்கத்தொடங்கினான்.
ராதை அவன் முன் அமர்ந்து அவனை நோக்கினாள். “சூரியவிழாவில் ஏராளமான பெண்கள் வருவார்கள்” என்று அவள் சொன்னபோது கர்ணன் அவள் கண்களை நோக்க அவள் பார்வையை விலக்கிக் கொண்டாள். “இந்த ஊரில் பெண்கள் கடிவாளமிழந்து அலைகிறார்கள். நீ சிறியவன் என்றாலும் இங்குள்ள இளைஞர்களை விட உயரமானவன்… அந்தப்பெண்கள்…” என்று எதையோ சொல்லவந்த அவள் நிறுத்திக்கொண்டாள். “நான் அந்தப்பெண்களுடன் பேசக்கூடாது, அவ்வளவுதானே?” என்றான் கர்ணன். “சரி சரி, உணவுண்ணும் நேரத்தில் என்ன பேச்சு? உண்டுமுடித்து கிளம்பு” என்றாள் ராதை.
வெளியே குரல்கள் கேட்டன. “வந்துவிட்டார்கள்… இந்த மூடரிடம் எத்தனைமுறை சொல்வேன்” என்று ராதை பதறி வெளியே ஓடினாள். கர்ணன் பின்னால் சென்றான். நான்கு வீரர்கள் இடையில் வாட்களும் கைகளில் வேல்களுமாக வந்திருந்தனர். நடுவே நின்ற குதிரையில் அமர்ந்திருந்தவன் “குதிரைகள் ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்டார் ஸ்தானிகர். நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று சினத்துடன் கூவினான். “உன்னிடம் சாட்டையால்தான் உரையாடவேண்டும்… மூடா” என்று சவுக்கை தூக்கினான். தாக்கப்படுகையில் அனைத்துச்சூதர்களும் செய்வதுபோல அறியாமலேயே மார்பின்மேல் கைகளைக் கட்டிக்கொண்டு தலையை குனிந்துகொண்டார் அதிரதன்.
“நூற்றுடையோரே” என்று கர்ணன் உரக்கக் கூவினான். சாட்டையைத் தழைத்து குதிரைவீரன் திரும்பிப்பார்த்தான். கர்ணன் அவன் விழிகளை நோக்கியபடி அசையாமல் நின்றான். அவன் தலை குடிலின் கூரைவிளிம்புக்குமேல் இருந்தமையால் சற்று குனிந்திருந்தான். குதிரைவீரன் தன் வீரர்களின் கண்களை நோக்கியபின் “இவன் உன் மைந்தனா?” என்றான். “ஆம் வீரரே… வசுஷேணன் என்று பெயர். நாங்கள் அன்பாக கர்ணன் என்று அழைக்கிறோம்.” அவன் இன்னொருமுறை நோக்கியபின் “குதிரைகள் உடனே ஆலயவளாகத்துக்கு வந்தாகவேண்டும்” என்றுகூறி தன் குதிரையைத் தட்டி முன்னால் செல்ல அவன் வீரர்கள் பெருநடையாக அவனுக்குப்பின் சென்றனர்.
ஓவியம்: ஷண்முகவேல்
“மைந்தா, என்ன செய்துவிட்டாய்? நீ சூதன். சூதர்களுக்குரிய முறையில் நடந்துகொள்ளாவிட்டால் நீ இங்கே வாழமுடியாது” என்று சொன்னபடி அதிரதன் அவனை நோக்கி ஓடிவந்தார். “நூற்றுக்குடையோரிடம் பூசலிடுமளவுக்கு நாம் வல்லவர்கள் அல்ல… அவரது வஞ்சம் நம்மை என்ன செய்யுமென்றே தெரியவில்லை.” ராதை உரக்க “என்ன செய்யும்? நம் மைந்தனை அவனால் ஒன்றும் செய்யமுடியாது. அவன் சூரியனின் மைந்தன்…” என்றாள். கர்ணன் திரும்பி நோக்கி “அப்படியா? நான் அதிரதரின் மைந்தன் என்றல்லவா எண்ணினேன்? உங்கள் கற்பு குறைவுபட்டதா?” என்று சிரித்தான்.
அதிரதன் “ஏதோ நிமித்திகன் சொல்லியிருக்கிறான். கூடை தானியத்தை அப்படியே தூக்கிக் கொடுத்துவிட்டாள்… இன்னொரு கூடை தானியம் கொடுத்திருந்தால் நீ விஷ்ணுவின் அவதாரம் என்றே சொல்லியிருப்பான்” என்றார். “சீ, மூடா. உமக்கென்ன தெரியும்? சுவடிகளை நோக்கி குறிசொன்னபோது அந்த நிமித்திகர் பரவசத்தால் புல்லரித்ததை நான் இப்போதும் நினைவுகூர்கிறேன். மைந்தனின் பாதங்களை சென்னியில் சூடி அவர் அழுதார்.”
“அது நல்ல தானியமாக இருக்காது. அதை எண்ணி அழுதிருப்பார்” என்றார் அதிரதன். ராதை சினத்துடன் கீழே கிடந்த மூங்கில்குடுவையை எடுத்து “மூடா, நீதான் என் பெருஞ்சுமை… செத்து ஒழி” என்று கூவி அதிரதன் மேல் எறிந்தாள். “ஊர்வழியாகச் செல்லும் அத்தனை நிமித்திகர்களும் நேராக இங்கே வந்துவிடுவார்கள். முதல் நிமித்திகர் அடுத்தவரிடம் சொல்லியனுப்புவார் போலும். அனைவருமே அய்யய்யோ இவன் சூரியபுத்திரன் அல்லவா என்று கூவுவார்கள். இவள் உடனே ஓடிப்போய் தானியத்தை அள்ளத்தொடங்கிவிடுவாள்” என்றார்.
“ஆம் சூரியபுத்திரனேதான்… எல்லா இலக்கணங்களும் உள்ளன” என்றாள் ராதை. அதிரதன் “சூரியமைந்தன் சூதர்குலத்திலா பிறக்கவேண்டும்?” “முத்து சிப்பியில்தான் பிறக்கும்” என்றாள் ராதை. “நீ முத்துச்சிப்பியா? நத்தை மாதிரி இருக்கிறாய்” ராதை மீண்டும் குனிந்து எதை எறியலாம் என்று பார்க்க அதிரதன் வெளியே சென்று முற்றத்தில் நின்று “என் மீது பட்டால் அக்கணமே குதிரைச்சவுக்கை உருவிவிடுவேன்” என்றார். கர்ணன் “போதும், சூதர்கலகம் கள்ளில் முடியும் என்பார்கள். கள்ளை வரும்போது வாங்கிவருகிறோம்” என்றான்.