வண்ணக்கடல் - 5
பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார்
[ 2 ]
பாறைகள் நிறைந்ததாக இருந்தது துரியோதனனின் உலகம். தன் உடலை அசைவாக அறிந்த அவன் அகம் அக்கணமே அறிந்தது அசைவிலிகள் செறிந்த பெருவெளியைத்தான். அவற்றின் முழுமுதல் அமைதி. அவற்றின் அகாலப்பேரிருப்பு. இங்கே, இதோ, இவ்வாறு, இனியெப்போதும், எந்நிலையிலும் என்ற பற்றுநிலை கனத்துக் கனத்துச் செறிந்த எடைகள். சித்தம் திகைக்கவைக்கும் பேருறுதிகள் எடுத்துக்கொண்ட பிறிதொன்றிலாத பல்லாயிரம்கோடி வடிவங்கள். கருவறை நீங்கி மண்ணில் விழுந்ததுமே அதன் கடுமையை அறிந்து அவன் தன் கனத்த கைகளை அதன்மேல் அறைந்துகொண்டு பெருங்குரலில் கூவியழுதான்.
கைகளால் நிலத்தை அறைந்துகொண்டே இருந்தான் துரியோதனன். எழுந்தமர்ந்ததுமே கைகளை நீட்டி சுவரை அறைந்தான். தவழ்ந்ததும் சென்று கற்படிகளை கடித்து உடைக்க முயன்றான். அவற்றின் கனியாத உறுதியைக் கண்டு சினமெழுந்து தன் உடலை ஓங்கி அறைந்து அலறி அழுதான். “என்ன? என்னவேண்டும்? என் இளவரசருக்கு இப்புவியில் என்னவேண்டும்?” என்று சத்யசேனை ஓடிவந்து அவனை அணைத்துக்கொண்டாள்.
கண்கள் கட்டப்பட்டமையால் தெய்வத்தன்மை படிந்த புன்னகையுடன் காந்தாரி “பாரதவர்ஷத்தை சுருட்டி அவன் கையில் கொடு. அவன் அழுவது அதற்காகவே” என்றாள். அவன் சத்யசேனையை பிடித்துப்பின்னால் தள்ளி விட்டு அந்தக் கல்லை மீண்டும் கடித்து கைகளால் அறைந்தான். மல்லாந்து விழுந்த சத்யசேனை “மைந்தனுக்குப் பசிக்கிறது போலும். கல்லைத்தின்ன முயல்கிறான்” என்றாள். காந்தாரி “அவனுக்கு இப்புவிமகளே பசிதீர்க்கும் உணவாக இருக்கமுடியும்” என்றாள்.
வடக்குமலைச்சரிவில் ஒருகாலத்தில் இருண்டு திரண்டுநின்ற பெரும்பாறை ஒன்றிலிருந்து சிற்றலகுக் குருவிகள் என ஒலியெழுப்பும் பலநூறு உளிக்கூர்களால் கொத்திக் கொத்தி தறித்து எடுத்து விலக்கப்பட்ட கல் தன் கல்லுடலில் மின்னிய பல்லாயிரம் விழிகளால் திரும்பி துரியோதனனை நோக்கிக்கொண்டிருந்தது. ‘இவன் மட்டுமே’ என அது சொல்லிக்கொண்டது. ‘ஆம், இவன்… இவன் மட்டுமே.’
தன் மூன்றாவது வயதில் துரியோதனன் அந்தப்பாறையை வெறும்கைகளால் ஓங்கி அறைந்தான். சிறிய மணியோசை போன்ற வெடிப்பொலியுடன் அது பிளந்துகொண்டது. அவன் எழுந்து நின்று கைகளை ஓசையுடன் தட்டிக்கொண்டு உறும அவனருகே நின்ற அவன் தம்பி துச்சாதனன் குனிந்து அந்தக் கல்லை நோக்கினான். கைகளால் அந்த வெடிப்பின் கூரை தடவிப்பார்த்தபின் எழுந்து கால்களால் அந்த வெடிப்பை மாறி மாறி மிதித்தான். துரியோதனன் இரு என அவனிடம் கை காட்டியபின் கல்லின் மறுமுனையை உதைத்து விரிசலை எழச்செய்து வெறும் கைகளால் பெயர்த்தெடுத்து அப்பால் வீசினான்.
சுவர்க்கல்லில் மோதி விழுந்த உடைந்த கருங்கல்துண்டு தன் மறுபாதியை நோக்கி நெடுமூச்செறிந்து ‘ஆம், மீண்டும் பிரிந்திருக்கிறோம். இனி ஊழிமுடிவு வரை நாம் இணையமுடியாது. பிரிந்து பிரிந்து நாம் இப்புவியை ஆக்கிக்கொண்டிருக்கிறோம். அனலோனின் ஆடலில் உருகி ஒன்றாகி இப்புவனமெல்லாம் ஒற்றைப்பெருங்கனலாகும்போது மீண்டும் வந்து தழுவிக்கொள்கிறேன். ஓம்!’ என்றது.
அந்த உலோக ஓசைகேட்டு எட்டிப்பார்த்த சத்யவிரதை “அய்யோ!” என வீரிட்டு மார்பைப்பற்றிக்கொண்டாள். துரியோதனன் புன்னகையுடன் அறையைவிட்டு வெளியே செல்ல துச்சாதனன் இருகைகளையும் தட்டியபடி எம்பிக்குதித்து “மூத்தவர்! மூத்தவர்!” என்றான். மீண்டும் சிரித்தபடி அண்ணனைத் தொடர்ந்து ஓடினான்.
மாமனின் பயிற்சிசாலையில் துரியோதனன் பாறைகளை எடுத்து மேலேவீசிப் பிடிப்பதையே உடல்பயிற்சியாகக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் மேலும் எடைகொண்ட பாறைகளை அவன் அசைத்துப் பெயர்த்தெடுத்தான். அவற்றை தன் கனத்த புயங்கள் மேல் வைத்து தசைகளால் அவன் எற்றியபோது நீரலைகளில் மிதக்கும் நெற்றுக்கள் போல அவை ததும்பி அசைந்தன. பாறைகளை ஒன்றுடன் ஒன்று மோதி உடைத்துச் சிதறடித்தான். ஒவ்வொரு உடையும்பாறையும் ‘நீ!’ என அவனிடம் சொல்லியபடி சில்லுகளாகத் தெறித்தது. ‘ஆம், நீ மட்டுமே!’ என்னும் விழிகளுடன் அவனைச்சூழ்ந்து எக்களித்தனர் அவன் தம்பியர்.
அவனால் அசைக்கமுடியாத பாறைகளெல்லாம் அவனுக்கு எதிரிகளாக இருந்தன. அவற்றின் மேல் அவன் குரோதம் கூடிக்கூடி வந்தது. ஒவ்வொருநாளும் அவற்றையே அவன் கனவுகண்டான். கனவில் அவை இருண்டு குளிர்ந்த ஆணவத்துடன் அவன் முன் எழுந்து நின்றன. அவன் கனத்த காலடிகள் ஒலிக்க அவற்றின் முன் நின்றபோது அவை கற்கரங்களை கோர்த்துக்கொண்டு ஒற்றை உடலாக மாறின. அவன் காலடிகள் ஒவ்வொன்றும் அவற்றை விதிர்க்கச் செய்தது. அவனுடைய பார்வை பட்ட அவற்றின் உடல் சிலிர்த்து அசைந்தது. அவன் அருகே சென்று நின்றபோது அவற்றின் மூச்சை தன் உடலில் உணர்ந்தான். அவற்றின் உள்ளே ஓடும் எண்ணங்களின் அதிர்வை அறிந்தான். தன் இடது தொடைமேல் ஓங்கியறைந்து உரக்க கர்ஜனை செய்தபடி அவன் அவற்றை நோக்கிப்பாய்ந்தான்.
இரவில் அவன் எழுப்பும் ஒலி தம்பியருக்கு நன்கு பழக்கமானது. மேகங்களுக்குள் இடியோசை என அவனுக்குள் எப்போதும் அந்த கர்ஜனை நிறைந்திருக்கிறது என்றனர் சூதர். பயிற்சிக்களங்களில் அவன் கர்ஜனை ஒலித்ததுமே தம்பியரும் பிறரும் விலகிவிடுவது வழக்கமாக இருந்தது. கரும்பாறைகளன்றி அவன் முன் நிற்கும் ஆற்றல்கொண்டவை எவையுமில்லை எனறு அவர்கள் அறிந்திருந்தார்கள். வலக்கையால் தன் இடத்தொடையில் ஓங்கி அறைந்தபடி முன்னகர்ந்து இரு கைகளையும் தலைமேல் தூக்கியபடி அவன் ஆர்ப்பரிப்பான். எதிரே நின்றிருக்கும் பாறையை வெறும்கைகளால் அறைந்து பிளக்கச்செய்து தூக்கி பின்னால் வீசுவான். பின்னால் வந்து விழுந்த பாறைகள் வழியாகவே அவன் முன்னால் சென்றுகொண்டிருந்தான்.
“நம் முன் அமர்ந்திருக்கும் இப்பாறைகள் அசைவற்றவை அல்ல. விசையற்றவையும் அல்ல. அவை அவையிருக்கும் இடத்தில் முடிவிலி வரை அமர்ந்திருக்கும் விருப்பு கொண்டவை. அவற்றின் மேல் வந்து மோதும் காலப்பெருக்கையும் பெருவெளிக்கொந்தளிப்பையும் அவை தங்கள் முழு ஆற்றலாலும் எதிர்கொள்கின்றன. அந்த மோதலின் உச்சகட்ட நிகரமைவுப் புள்ளியில் அவை இறுகி அசைவிழந்திருக்கின்றன. நிகர் எடை கொண்ட இரு யானைகளின் மோதி உறைந்த மத்தகங்கள் நடுவே இருக்கும் அசைவின்மையையே ஒவ்வொரு பாறையிலும் காண்கிறோம்” சகுனி தன் முன் அமர்ந்திருந்த மருகனின் பெரிய விழிகளை நோக்கிச் சொன்னான்.
மலையுச்சியில் திரண்டிருக்கும் இரு கரும்பாறைகள்போலிருந்தன மருகனின் விழிகள். “ஆற்றல் கொண்ட ஒருவன் கற்பாறையைத் தீண்டும்போது தன் ஆற்றலை நோக்கி அறைகூவலிடும் மறு ஆற்றலொன்றை அதற்குள் கண்டுகொள்கிறான்” என்றான் சகுனி. “தலைக்குமேல் ஓங்கி நிற்கும் கரும்பாறை மனிதனின் அகத்தில் சொற்களை அணைத்து பணிவை நிறைப்பதும் அதனால்தான்.”
வென்று செல்லச்செல்ல மேலும் பெருகிவரும் பாறைகளையே துரியோதனன் கண்டான். “நீரின் கடலை மட்டுமே சாமானியர் அறிவர். இளவரசே, இப்புடவி பலநூறு கடல்களால் ஆனது. காற்றின் கடல். ஒளியின் கடல். மேகக்கடல். அதேபோன்றதே பாறைக்கடல். நாம் பார்க்கும் இவை ஒவ்வொன்றும் ஒளிர்துமிகள், வெண்ணுரைகள், சிறுதுளிகள், கருஞ்சிதர்கள், அலைஎழுச்சிகள், அலைவீழ்ச்சிகள் மட்டுமே. இவற்றாலான ஒற்றைக்கடலாக பாறை பூமியை உள்ளும் புறமும் நிறைத்திருக்கிறது என்கின்றன சிற்பவியல் நூல்கள்” என்றான் சகுனி. “பாறையெனும் யானையின் முதுகில் பசும்புல் முளைத்துப் பரவியிருக்கும் சிறிய மண்பரப்புதான் இப்பூமி என்கின்றன அவை.”
“வல்லமை கொண்டவை எப்போதும் மண்ணுடன் பொருதுகின்றன” என்று சகுனி தொடர்ந்தான். “யானை மலைப்பாறைகளில் மத்தகத்தை முட்டுகிறது. எருது மண்ணை கொம்புகளால் கிண்டிப் புரட்டுகிறது. தேற்றை எழுந்த காட்டுப்பன்றி மண்ணை உழுது நீந்துகிறது. இறுதிவெற்றி மண்மீதான வெற்றியே.”
துரியோதனன் பெருமூச்சுடன் தன் இரு கைகளையும் இணைத்து புயத்தசைகளை இறுக்கி அசைத்தான். அவனுடைய உடலசைவு அவனைச்சூழ்ந்து அமர்ந்திருந்த தம்பியர் உடல்களில் நீரலை போல பரவிச்சென்றது. அவன் பாறையை பார்த்துக்கொண்டிருந்தான். செம்பூ பரவிய மத்தகங்கள். மீன்செதில் மின்னல்கள். அரக்குவழிதல்கள். தேன் சுருள்கள். ஊன்அடுக்குகள்…
அதிகாலை சகுனியின் ஆயுதசாலையில் பயிற்சி செய்து திரும்பும்போது துரியோதனன் திரும்பி துச்சாதனனிடம் சொன்னான் “தம்பி, நான் வெல்லவேண்டிய முடிவிலா பாறைகளாலானது இப்புவி என்ற எண்ணம் போல என்னை எழுச்சியுறச்செய்வது பிறிதில்லை. வடக்கே உயர்ந்திருக்கும் ஒவ்வொரு மலைச்சிகரங்களையும் என் கைகளால் அறைந்து உடைத்துச்சரிப்பதைப்பற்றி கனவு காண்கிறேன்” என்றான்.
துச்சாதனன் “ஆம், மூத்தவரே… உலகமெங்கும் நிறைய பாறைகள் உள்ளன” என்றான். துரியோதனன் அமைதியிழந்த கண்கள் அலைபாய நிமிர்ந்து நோக்கி “பாறைகளின் ஆணவம்போல என்னை அமைதியிழக்கச்செய்வதும் வேறில்லை” என்றான். “ஒவ்வொன்றும் எனக்கான அறைகூவலுடன் நின்றிருக்கின்றன.”
“பாறைகளுக்குக் கண்கள் இல்லை” என்றான் துரியோதனன். “அதனால்தான் அவை அத்தனை ஆற்றலுடன் இருக்கின்றன. கண்ணற்றவை எதிரிகளைப் பார்ப்பதில்லை. ஆகவே அச்சம் கொள்வதில்லை. அச்சமில்லாதபோது நம் ஆற்றல் குறைவதில்லை” என்றான். தன்னுள் எழும் சொற்களை அவனே விளங்கிக்கொள்ளவில்லை.
துச்சாதனன் பெரும்பாலும் தமையன் சொற்களைப் புரிந்துகொள்வதில்லை. ஆயினும் “ஆம், மூத்தவரே” என்றான். இரு கைகளையும் கோத்தபடி “பெரும்பாறைகளை அறையும்போது நான் என் கண்களை மூடிக்கொள்கிறேன். அங்கே இருக்கும் பாறையை முழுமையாகவே மறந்துவிடுவேன்” துரியோதனன் சொன்னான். துச்சாதனன் விளங்கிக்கொள்ளாமல் தலையசைத்தான்.
தனக்குள் ஆழ்ந்து தலை நிமிர்ந்து நடந்துகொண்டிருக்கும்போது காலில் கல் இடறி நிலைகுலைவதுபோல ஒரு கணத்தில் துரியோதனன் சித்தம் கலைந்தது. பொருளற்ற அகஎழுச்சி அவன் நெஞ்சை எழுந்து நிறைத்தது. துயரம் என, தனிமை என, ஏக்கம் என ஒன்று. உடல் அதில் அலைபாய நின்று கைகளை விரித்து தூக்கி வானைப்பார்த்ததும் அவனிடமிருந்து மெல்லிய முனகல் ஒலி எழுந்தது.
“மூத்தவரே!” என்று துச்சாதனன் அழைத்ததும் “சீ, விலகிச்செல் மூடா!” என்று கூவினான். துச்சாதனன் தலைவணங்கி மெல்ல விலகிக்கொண்டான். துரியோதனனின் அந்த உணர்ச்சிமாறுபாடுகளை அவன் நன்கறிந்திருந்தான். ஏனென்றறியாத ஒரு தவிப்பில் கைகளும் கால்களும் குழைய துச்சாதனன் மெல்ல விம்மினான். அங்கிருந்து விலகி ஓடி வடக்குவாயில் வழியாக காட்டுக்குள் புகுந்துவிடவேண்டும் என்று தோன்றியது.
தன் இரு கைகளையும் சேர்த்து ஓங்கி அறைந்துகொண்டு துரியோதனன் திரும்பியபோது கற்சுவர்போலச் சூழ்ந்து நின்றிருந்த தம்பியரைக் கண்டான். வெடித்தெழுந்த சினத்துடன் பற்களைக் கடித்தபடி “வீணர்கள்… கோழைகள்!” என்று கூவியபடி அவன் தம்பியரை ஓங்கி அறைந்தான். வெடிப்பொலியுடன் விழுந்த அடிகளை வாங்கி அவர்கள் அலறியபடி சிதறி விழுந்தனர்.
துச்சாதனன் “மூத்தவரே வேண்டாம்… அவர்கள் குழந்தைகள்” என்று குறுக்கே வந்து விழுந்தான். துரியோதனன் தம்பியின் தோள்களிலும் தலையிலும் அடித்தான். பாறைபோல அடிகளை பெற்றுக்கொண்டு உடல் இறுக்கி துச்சாதனன் நின்றிருந்தான். உதைபட்டு கீழே விழுந்த துச்சாதனனை தூக்கிச் சுழற்றி மண்ணில் அறைந்தபின் துரியோதனன் பற்களை இறுகக் கடித்து கைமுட்டிகளை இறுக்கியபடி அரண்மனை நோக்கிச் சென்றான்.
அன்று பகல் முழுக்க அவன் புண்பட்ட யானைபோல உறுமியபடியும் சுவர்களையும் கதவுகளையும் அறைந்தபடியும் தன் அறைக்குள் சுற்றிவந்தான். அவன் தம்பியர் அவனை நெருங்கவில்லை. அவன் விழிபடும் தொலைவில் துச்சாதனன் மட்டும் எப்போதுமிருந்தான். நிலைகுலையும்போது மும்மடங்கு உணவுண்பது துரியோதனன் வழக்கம். அவனுக்கு உணவு அளித்த சேடியர் கலங்களின் ஓசை எழாமல் மெல்ல பணியாற்றினர். உண்டு முடித்தபின் தன் மஞ்சத்துக்குச் சென்று படுத்துக்கொண்டான். நெடுநேரம் அவன் மூச்செறிந்து புரண்டுகொண்டிருப்பதை அருகே நின்று துச்சாதனன் கேட்டுக்கொண்டிருந்தான்.
ஓசையின்றி தன்னைச்சூழ்ந்து அலையடித்து நுரைத்த பாறையில் சிக்கி மூச்சு செறிந்த கனவில் இருந்து துரியோதனன் உறுமியபடி விழித்துக்கொண்டு தன் மஞ்சத்தில் எழுந்தமர்ந்தபோது இரவுக்குள் அவனைச்சுற்றி தம்பியர் துயின்றுகொண்டிருப்பதைக் கண்டான். மஞ்சத்துக்கு மிக அருகே தரையில் துச்சாதனன் கனத்த கைகளை தலைக்குமேல் சுருட்டிவைத்து தொடைகளை விரித்துப் படுத்திருந்தான். அப்பால் இரண்டு வயது முதல் ஐந்துவயது வரையிலான முப்பத்தாறு தம்பியர் அந்த பெரிய கூடத்தில் தரையிலிட்ட மரவுரிப்படுக்கைகளில் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டும் கைகால்களை விரித்துக்கொண்டும் துயின்றனர். மூச்சொலிகள் அறைக்கூடமெங்கும் சீறிக்கொண்டிருந்தன.
துரியோதனன் எழுந்து இருளில் மெல்ல காலடி எடுத்துவைத்து குனிந்து துச்சாதனனின் உடலைப்பார்த்தான். அவன் உடலெங்கும் தடிப்புகளும் சிராய்ப்புகளும் நிறைந்திருந்தன. தோளிலும் முழங்கால்களிலும் வீக்கம் கனத்திருந்தது. பெருமூச்சுடன் அவன் கால்களை உடல்கள் நடுவே தூக்கிவைத்து ஒவ்வொரு தம்பியாகப் பார்த்தான். அனைவர் உடலிலும் தடிப்புகளும் காயங்களும் இருந்தன. அவன் தன் இரு கைகளையும் தூக்கி முகத்தருகே கொண்டு வந்து பார்த்தான். பற்களை இறுகக் கடித்தபடி தலையை அசைத்துக்கொண்டான்.
சிலகணங்கள் அங்கேயே நின்றபின் துரியோதனன் திரும்பி கூடத்தை விட்டு வெளியே சென்று படிகளில் இறங்கி இருண்ட அரண்மனை இடைநாழி வழியாக நடந்தான். காவல்வீரர்கள் அவனைக்கண்டு ஓசையில்லாமல் வேல்தாழ்த்தி வணங்கினார்கள். முற்றத்தில் இறங்கி நின்று இடையில் கைவைத்து தலை தூக்கி வானில் விரிந்திருந்த விண்மீன் செறிவை நோக்கி அசையாமல் நின்றான். அவன் ஆடையை அசைத்தபடி குளிர்காற்று ஒழுகிக்கொண்டிருந்தது. சிலகணங்களுக்குப்பின்னர்தான் ‘இல்லை இல்லை’ என தான் தலையை அசைப்பதை அறிந்து அவன் திடுக்கிட்டான். எவராவது பார்க்கிறார்களா என்பதுபோல அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். பெருமூச்சுடன் அரண்மனைக்கோட்டையை நோக்கிச் சென்றான்.
பந்தஒளி காஞ்சனத்தின் வெண்கலவளைவில் செம்புள்ளிபோலத் தெரிந்தது. கிழிந்துபறந்த பந்தச்சுடர்களின் அலையடிப்புக்கு அப்பால் வீரர்களின் வேல்நுனிகள் மின்னிக்கொண்டிருந்தன. செம்மண் பறந்துகொண்டிருந்த சாலைக்கு வந்து சிலகணங்கள் நின்றபின் அவன் திரும்பி மேற்கு நோக்கிச் சென்றான். தன் உடலின் எடை பலமடங்கு கூடிவிட்டிருப்பதைப்போலவும் கால்களால் அதை அசைத்து அசைத்து நகர்த்திச்செல்வதைப்போலவும் உணர்ந்தான். மேற்கு ரதசாலையில் இருந்து கிளைச்சாலை பிரிந்து ஏரியை நோக்கிச்சென்றது. மேற்குவாயில் மீது எரிந்த பந்தத்தின் செவ்வொளி அங்கே ஏரிநீரில் விழுந்து நெளிவதைக் கண்டான்.
துரியோதனன் ஏரிக்கரையை அடைந்து கல்லடுக்கிக் கட்டப்பட்டிருந்த மதகின் மேல் அமர்ந்துகொண்டான். வானில் பிறைநிலவு மேகத்தைக் கீறிவெளிவந்தபோது ஏரிநீரின் கரிய அலைகள் ஒளிகொண்டன. ஒளியை அவை கரைநோக்கி தள்ளித்தள்ளிச் செலுத்துவது போலத் தோன்றியது. அவன் காலடியில் ஒளியலைகள் வந்து மெல்லிய ஓசையுடன் கரையை முட்டிச் சிதறின. ஏரிக்கு அப்பாலிருந்து காற்று வந்து கரையில் ஏறி வழிந்து நகரை நோக்கிச் சென்றது.
ஓவியம்: ஷண்முகவேல்
நினைத்திருக்காத கணத்தில் ஏரி நீரைப்பிளந்து எழுந்த கரிய மனிதனைக் கண்டு துரியோதனனின் கண்கள் மட்டும் சற்று விரிந்தன. அவனுடைய இறுகிய தசைகளின் வழியாக ஒரு மெல்லிய அலை கடந்து சென்றது. “யார் நீ?” என்று அவன் கேட்டான். “நீராடுபவன்… ஒரு யோகி” என்றபடி அவன் நீந்தி அருகே வந்தான். அவன்முன் நீருக்குள் வந்து நின்று “அஸ்தினபுரியின் அரசனை வணங்குகிறேன்” என்றபடி மேலெழுந்தான். அவன் மேலெழுவதிலிருந்த விந்தையை சிலகணங்களுக்குப்பின்னரே துரியோதனன் உணர்ந்தான். நீருக்குள் அவன் உடல் சுழன்று நெளியும் பாம்புடலாக இருந்தது.
“நீ நாகன் என எண்ணுகிறேன்” என்றான் துரியோதனன். “ஆம், என் பெயர் கார்க்கோடகன். பிரஜாபதியான கஸ்யபருக்கு முதல்நாகம் கத்ருவில் பிறந்த அரவரசன். அழிவற்ற இருள்வடிவம் கொண்டவன்” என்றான் அவன். “என்னை அச்சமின்றி நோக்கிய முதல் மானுடன் நீ. உன்னை வணங்குகிறேன்…” துரியோதனன் சிலகணங்கள் அவன் விழித்தமணிக்கண்களை நோக்கிவிட்டு “உனக்கு என்ன வேண்டும்?” என்றான். “நாகம் அளவுக்குத் தனிமையை அறிபவர்கள் எவருமில்லை. தனிமையையே வளையாக்கி தனிமையையே சுருளாக்கி தனிமையையே நெளிதலாக்கி வாழ்பவர்கள் நாங்கள். உன் பெருந்தனிமையை அங்கிருந்து நோக்கினேன்” என்று கார்க்கோடகன் சொன்னான்.
“நான் தனியாக இருப்பதேயில்லை. அது என் அன்னையின் ஆணை” என்று துரியோதனன் சொன்னான். “என்னுடன் எப்போதும் என் தம்பியர் இருக்கிறார்கள்.” கார்க்கோடகன் நகைத்து “அவர்கள் பிறர் அல்ல. உன் நிழலுருக்கள். ஆகவேதான் இன்று நீ அவர்களை அடித்தாய்” என்றான். துரியோதனன் தன் உடலுக்குள்ளேயே மெல்ல அசைந்தான். “நீ அடித்தது உன் உடலைத்தான்” என்றான் கார்க்கோடகன். “நான் தத்துவங்களைக் கேட்க விரும்புபவனல்ல. நீ போகலாம்” என்றபடி துரியோதனன் எழுந்துகொண்டான்.
“நில்… நில்” என்று நீரை அளைந்து உடல் நெளிய கார்க்கோடகன் முன்னால் வந்தான். “நான் சொல்வது வீண்பேச்சென்றால் உன் அகம் ஏன் அமைதியிழக்கிறது? நீ ஏன் என்னை அஞ்சி ஓடுகிறாய்?” துரியோதனன் புன்னகைத்து “அச்சமா? உன் மீதா?” என்றான். “சரி, உன் மீதுள்ள அச்சம் அது. தன்னை அஞ்சுபவனும் கோழையே” என்றான் கார்க்கோடகன். “நான் அஞ்சுவதற்கேதும் இப்புவியில் இல்லை” என்றான் துரியோதனன். “அப்படியென்றால் நில். என் சொற்களைக் கேள்” என்று கார்க்கோடகன் சொன்னான். “சொல்” என்றபடி துரியோதனன் அமர்ந்துகொண்டான்.
“நீ உன்னுள் ஆழ்ந்த நிறைவின்மை ஒன்றை உணர்கிறாய்…” என்று கார்க்கோடகன் சொன்னான். “வீரமென்பது நிறைவின்மையின் இன்னொரு பெயர். அது தேடிச்சென்றுகொண்டே இருக்கிறது. நிறையாமல் நிரப்பிக்கொண்டே இருக்கிறது.” பெரிய கரிய வளையங்களாக உடல் குவிய அவன் தலை மேலெழுந்து துரியோதனன் தலைக்குமேல் ஒரு கருவேங்கை என படமெடுத்து நின்றது. சீறலாக அவன் குரல் ஒலித்தது. “…ஆனால் ஒரு வீரன் தேடுவதென்ன? வீரனின் படைக்கலங்களும் பயின்ற தசைகளும் கூரிய கண்களும் குவிந்த அகமும் எதை வேட்கின்றன?”
பொருளில்லா விழிகளுடன் பார்த்தவாறு துரியோதனன் அமர்ந்திருந்தான். “…இன்னொரு வீரனை அல்லவா? நீ அறிவாய், உன் புயவல்லமைக்கு முன் உன் தம்பியரெல்லாம் சிறுவர்கள். உன் மாமன் கூட ஆற்றலற்றவன்தான்.” மெல்ல அசைந்து துரியோதனன் “ஆம்” என்றான். “வீரர்கள் அனைவருமே தங்கள் எதிரியைத்தான் இரவும் பகலும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். சேயை எண்ணும் தாய் போல. காதலியை எண்ணும் காதலர் போல. இறைவனை எண்ணும் அடியவனைப்போல. அப்படியொரு முழுமுதல் எதிரி அமைந்தவன் வாழ்வில் தனிமை என்பதே இல்லை. அவன் அகம் ஒருகணம்கூட வெறுமையை உணர்வதில்லை. அவன் தசைகளும் படைக்கலங்களும் இலக்கின்மையில் தவிப்பதுமில்லை.”
துரியோதனனின் இருகைகளும் தவிப்புடன் வந்து ஒன்றையொன்று கண்டுகொண்டன. அவற்றைப் பின்னி இறுக்கியபடி அவன் “உம்” என்றான். “எதிர்ப்படும் ஒவ்வொருவரிலும் தன் முழுமுதல் எதிரியைத் தேடிக்கொண்டிருக்கிறான் வீரன். வீரர்களை தெய்வங்கள் மிகச்சிறந்த எதிரியை அளித்துத்தான் வாழ்த்துகின்றன” என்றான் கார்க்கோடகன். அவன் தலை குனிந்து துரியோதனனை அணுகியது. அவன் கண்களுக்குள் ஒளிப்புள்ளிகள் சுழன்றன. “…அஸ்தினபுரியின் அரசே, மிகச்சிறந்த எதிரி என்பவன் யார்? எவன் உன்னைக் கொல்லக்கூடுமோ அவன் அல்லவா?”
துரியோதனன் குளிர்ந்த இரும்புத் தொடுகையுடன் வாள் ஒன்று தன் உடலைப்போழ்ந்து கடந்துசென்றதாக உணர்ந்தான். அவன் இரு துண்டுகளும் ஒன்றை ஒன்று திகைத்து நோக்கியபடி முழுமையிழந்து தவித்தன. “…எவன் உன்னைக் கொன்றபின் எஞ்சுவானோ அவன். எவன் உன் விரைத்த சடலம் மீது ஓங்கி எழுந்து நின்று மார்பிலறைந்து எக்களித்துச் சிரிப்பானோ அவன். எவன் உன்னுடைய காதகன் என்பதனாலேயே காலமெல்லாம் பாடல்பெறுவானோ அவன்….”
“யார்?” என்று துரியோதனன் கேட்டான். அக்குரல் வெளிவரவில்லை என்றும் அது ஓர் எண்ணம் மட்டுமே என்றும் அவன் உணர்ந்த கணமே அதை கார்க்கோடகன் கேட்டதையும் அறிந்தான். “…அவனை உனக்குக் காட்டவே நான் வந்தேன். உன் மாபெரும்தனிமையை அவன் மட்டுமே நிரப்பமுடியும் என்பதனால்…” துரியோதனன் “யாரவன்? எங்கிருக்கிறான்?” என்றான். அச்சொற்களும் குரலைச் சந்திக்கவில்லை. “அவன் இந்நகர் நோக்கி வந்துகொண்டிருக்கிறான். இன்று காலை நீ நிலையழிந்த அக்கணத்தில் அவன் அஸ்தினபுரியை நோக்கியபாதையில் தன் முதல்காலடியை எடுத்துவைத்தான்.”
துரியோதனன் பெருமூச்செறிந்தான். “நீ அவனை அறிவாய். நேற்று காலையில் விதுரர் வந்து சகுனியிடம் பேசுவதை பயிற்சி செய்துகொண்டிருந்த உன் காதுகள் கேட்டன.” தன்னையறியாமலேயே துரியோதனன் இல்லை என தலையை அசைத்தான். புன்னகையுடன் கார்க்கோடகன் “ஆம், இப்போது செய்வதைப்போலவே அப்போதும் அச்செய்தியை நீ கேட்க மறுத்துக்கொண்டாய். எண்ணுவதை தவிர்த்துக்கொண்டாய்…” என்றான். சினத்துடன் எழுந்து தன் கைகளை நீட்டி துரியோதனன் கூவினான் “ஏன்? ஏன் நான் தவிர்க்கவேண்டும்?”
“அதை நீதான் கண்டுபிடிக்கவேண்டும். ஆனால் ஒரு கணத்துக்குமேல் அச்செய்திக்கு உன் சிந்தையில் நீ இடமளிக்கவில்லை” என்றான் கார்க்கோடகன். “நான் எதையாவது அஞ்சுபவன் என நினைக்கிறாயா?” என்றான் துரியோதனன் உரக்க. “ஆம்… நீ அஞ்சுவது உன் பெருந்தன்மையை. உன்னுள் நிறைந்துள்ள பேரன்பை. உன் வலிமையையெல்லாம அழிப்பது அதுவே.” புறக்கணிப்பதுபோல கைகளை வீசிவிட்டு துரியோதனன் திரும்பினான். “நான் ஏன் உன் பசப்புகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்றே தெரியவில்லை.”
“குருகுலத்தோன்றலே, சொல். ஒவ்வொரு முறை சினம்கொள்ளும்போதும் ஏன் இடது தொடையை ஓங்கியறைந்து கொள்கிறாய்?” துரியோதனன் “தெரியவில்லை. அது என் பிறவிப்பழக்கம்” என்றான். “ஏனென்றால் உன் தாயின் பேரன்பெல்லாம் திரண்டு நிறைந்திருக்கும் இடம் உன் இடது தொடை. உன் ஆற்றலெல்லாம் ஒழுகிப்போகும் மடையும் அதுவே.” துரியோதனன் கண்களைச் சுருக்கி “ஏன்?” என்றான். “உன் அன்னை சென்ற ஏழாண்டுகாலமாக ஒவ்வொரு கணமும் உன் இடதுதொடையை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கிறாள். இனி நீயிருக்கும் நாள் முழுக்க அதையே அவள் எண்ணுவாள். அந்த பேரன்பின் விளைவான அச்சமே அங்கே திரண்டு கனத்து உன் ஆற்றலை அழிக்கிறது.”
“எனக்குப்புரியவில்லை… என் தலை சுழல்கிறது” என்றான் துரியோதனன். “அரசே, நீ அறிய விரும்பினால் அவனை உனக்குக் காட்டுகிறேன்” என்றான் கார்க்கோடகன். “நான் அறியுமளவுக்கு பெரியவன் என எவனும் இப்புடவியில் இல்லை” என்றான் துரியோதனன். “வீண் சொற்கள்… வீண்சொற்கள் வெற்று ஆணவத்திலிருந்து வருபவை. வெற்று ஆணவத்துக்கு அடியில் ஐயமும் அச்சமும் கலங்கிக்கொண்டிருக்கும்” என்றான் கார்க்கோடகன். கடும் சினத்துடன் இரு கைகளையும் விரித்து கர்ஜித்தபடி முன்னால் சென்றான் துரியோதனன். சிறிய நீர்ப்பாம்பாக மாறி முக்குளியிட்டு இன்னொரு பக்கம் எழுந்த கார்க்கோடகன் “தார்த்தராஷ்டிரனே, உன் சினத்தை சேமித்துக்கொள். அதற்கான வேளை வருகிறது” என்றான்.
“அவனைக் காட்டு” என்றான் துரியோதனன் தணிந்த குரலில். கார்க்கோடகன் புன்னகையுடன் “ஆணை!” என்றபின் தன் நீண்ட வாலை நீருக்குமேல் எழுப்பி நீட்டி நிலவொளி படர்ந்த ஏரிநீரில் மெல்ல நீவினான். அலைகளை வழித்து நிரப்பி நீர்ப்படலத்தை ஆடிப்பரப்பாக்கியது அந்த வால். ஆடிக்கு அப்பால் மெல்ல அசைந்த பசுங்காட்டை துரியோதனன் கண்டான். அதன் இலைத்தழைப்புக்கு அப்பால் கூட்டமாக சிலர் வரும் அசைவுகள் தெரிந்தன. நுனிகள் ஒளிவிடும் வேல்களும் உறைகள் ஓசையிடும் வாள்களும் கொண்ட படைவீரர்கள் முன்னால் வந்தார்கள். தொடர்ந்து விரிந்த பெரிய கைகளும் திடமான கனத்த கால்களுமாக மயிரற்ற செம்மஞ்சள்நிற பேருடலுடன் தலை நிமிர்ந்து வந்த சிறுவனை துரியோதனன் கண்டான்.
அவனுக்கு அப்பால் சற்று வளைந்த மெல்லிய உடலும் பெரியவிழிகளுமாக இன்னொருவன். அதற்கு அப்பால் கரிய உடலும் ஒளிவிடும் வைரக்கண்களுமாக இன்னொரு சிறு மைந்தன். சேடியர் இடைகளில் அமர்ந்து வாய்க்குள் கையை திருப்பிச் செலுத்தி அமர்ந்திருக்கும் இரட்டைக்குழந்தைகள். அவர்களுக்கு அப்பால் நிமிர்ந்த தலையுடன் வந்த அவர்களின் அன்னை. துரியோதனன் அந்த மஞ்சள்நிற உடல்கொண்டவனை மட்டுமே நோக்கினான். அவன் மண்படிந்த கால்விரல்களை. இறுகிய வேர்போன்ற தொடைகளை. இறுகிய சிறு வயிற்றை. நீலநரம்போடிய பெரிய கைகளை. பரந்த மூக்கை. சிறிய கண்களை. தோளில் புரண்ட காக்கைச்சிறகுக் குழலை.
“பீமன்” என்றான் துரியோதனன் தனக்குள் ஓடிய மூச்சாக. “விருகோதரன். வல்லபன், ஜயன், மாருதி என்றெல்லாம் அவனை அழைக்கிறார்கள். காடுகளை பிடுங்கிவிளையாடும் பெரும்புயல்களின் மைந்தன் அவன்” என்றான் கார்க்கோடகன். “ஆம், அவனைப்பற்றி சூதர்கள் சொல்லிக்கேட்டிருக்கிறேன்.” கார்க்கோடகன் வெள்ளம் வரும் ஓடை போல ஓசையின்றி பெருகி அவன் காதருகே வந்து குனிந்து “அவனருகே செல்ல விழைகிறாயா?” என்றான். “இல்லை” என்றான் துரியோதனன். “ஆம். விரும்புகிறாய்… புதர்களை விலக்கிச் செல்” என்றான் கார்க்கோடகன்.
துதிக்கையை மெல்லத் தூக்கி வாசமேற்று செவிகளை மடித்து ஒலிகூர்ந்து சிலகணங்கள் துரியோதனன் அசையாமல் நின்றான். பின்னர் மூச்சு சீறியபடி இலைத்தழைப்புகளில் இருந்து பெருந்தந்தங்கள் மிதந்தெழ மத்தகம் தூக்கி சாலைக்கு வந்தான். அவன் முன் சிறிய மனித உருவங்கள் விற்களை நாணேற்றின. வேல்களைத் தூக்கி பயந்த குரலில் கூவின. அவன் தன் கனத்த காலடிகளைத் தூக்கி வைத்து பீமனை நோக்கிச் சென்றான்.