வண்ணக்கடல் - 48

பகுதி ஏழு : கலிங்கபுரி

[ 12 ]

“கலிங்கர்களுக்கு முன் இந்நகருக்கு கூர்மபுரி என்று பெயர்” என்றார் சூதரான அருணர். “கூர்மகுலத்து மன்னர்கள் நூற்றுவர் இந்நகரை ஆண்டிருப்பதாக இங்குள்ள காச்சபாமர்கள் என்னும் பழங்குடியினர் சொல்கிறார்கள். அவர்களின் மொழியில் இது காச்சபாமனூரு எனப்படுகிறது. வம்சதாராவின் பெருக்கு வந்துசேரும் கடல்முனையில் இருக்கும் இந்த நகரம்தான் கலிங்கக்கடற்கரையிலேயே தொன்மையானது. ஒருகாலத்தில் மிகஉயர்ந்த கயிறுகளுக்காக பீதர்கலங்கள் இங்கே வந்துகொண்டிருந்தன.”

அவர்களின் படகில் இரண்டு பாய்கள்தான் இருந்தன. அதைச் செலுத்துபவர்களில் இருவர் பெரிய கயிற்றுமூட்டைகளின்மேல் படுத்து துயின்றுகொண்டிருக்க ஒருவர் கழி ஏந்தி தொடுவானை நோக்கி அமர்ந்திருந்தார். அவர்களைச்சுற்றி ஏராளமான சிறியபடகுகள் வாத்துக்கூட்டங்கள் போல கயிற்றுப்பொதிகளுடன் அலைகளில் எழுந்தாடி வந்துகொண்டிருந்தன. எழுந்தமர்ந்த கழிகளுடன் அவை உணர்கொம்புகளை ஆட்டியபடி வரும் நத்தைகள் போலத்தெரிந்தன. இரவெல்லாம் பாடிக்கொண்டிருந்த படகோட்டிகள் காலையில் துயிலத் தொடங்கி இன்னும் விழித்திருக்கவில்லை.

ராஜமகேந்திரபுரியில் இருந்து வணிகர்களுடன் கிளம்பிய இளநாகன் மலைப்பாதைகள் பொட்டல்நிலச்சாலைகள் வழியாக ஒன்பது மாதம் பயணம் செய்தான். பாறைகள் உடைந்து சிதறிப்பரந்த ஆந்திரநிலத்தின் வறண்ட பொட்டல்களில் எங்கும் மானுடவாழ்க்கை இருப்பதாகவே தெரியவில்லை. விரிந்துகிடக்கும் வெந்து சிவந்த வெறும் மண்வெளியில் பாறைகளின் வடிவங்களை பாடல்களாக நினைவிலிருந்து எடுத்து உரக்கச் சொல்லி அடையாளம் கண்டு செல்லும் வண்டிநிரை மிகத்தொலைவில் பெரிய அரசமரம் ஒன்றின்மேல் மஞ்சள்நிறமான கொடி பறந்துகொண்டிருப்பதைக் கண்டதும் ஆர்ப்பரிக்கும். கூச்சலுடன் அதைநோக்கி வணிகர் வண்டிகள் செல்லும்.

அங்கே பனையோலைவேயப்பட்ட கொட்டகைக்குள் மண்ணுருவங்களாக ஐந்து அருகர்கள் ஊழ்கத்தில் அமர்ந்த அறச்சாலை ஒன்றிருக்கும். அருகே ஆழத்தில் நீர் நலுங்கும் கிணறு. மரத்தாலான பெரிய சகடத்துடன் இணைக்கப்பட்ட தோலுறையால் நீரை இறைப்பதற்காக கயிற்றுக்கு மறுநுனியில் காத்து நின்றிருக்கும் கொம்பில்லாத ஒற்றைக்காளை. கல்தொட்டியில் அள்ளி ஊற்றப்பட்டிருக்கும் குளிர்ந்த நீர். கருங்கல்மேல் வைக்கப்பட்ட மரச்சட்டங்கள் மேல் ஏறியமர்ந்திருக்கும் சிறிய வைக்கோல்போர்கள். காளைகளைக் கட்டுவதற்காக அரசமரத்தடியில் அறையப்பட்ட கட்டுத்தறிகள். கொட்டகைக்கு முன்னால் பெரிய பந்தலில் அமர்வதற்காக கல்பீடங்கள் போடப்பட்டிருக்கும்.

அறச்சாலையை எப்போதும் ஒரு சிறிய குடும்பம்தான் நடத்திக்கொண்டிருக்கும். அவர்களுக்கு வணிகர்கள் வருவதென்பது ஒரு களியாட்டம். கொட்டகைக்குள் இருந்து சிறுவர்களும் அறச்சாலையை நம்பிவாழும் நாடோடிகளும் கூச்சலிட்டபடி ஓடிவந்து வண்டியைப்பற்றிக்கொண்டு ‘எந்த ஊர்? எந்தகுலம்?’ என்று கேட்பார்கள். வரும்போதே பெரிய குடங்களில் குளிர்ந்த நீர்மோருடன் வருபவர்களும் உண்டு. வண்டிகளை அவிழ்த்து காளைகளை நீர்காட்டி கட்டியதும் வணிகர்கள் கொட்டகைகளில் கல்பீடங்களில் கால்சலித்து அமர்ந்துகொள்வார்கள். அவர்களுக்கு குளிர்மோரும் பழையசோறும் கொண்டுவருவார்கள் அறச்சாலையினர்.

அறச்சாலை நாடோடிகளில் சிலர் உடனே நூலேணிவழியாக அரச மரத்தின் உச்சிக்கிளையில் இருக்கும் சிறிய ஏறுமாடத்திற்குச் சென்று எண்ணைப்பந்தத்தைக் கொளுத்தி வானை நோக்கி எரியம்புவிட்டு அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கும் பெருமுரசை அறையத்தொடங்குவார்கள். சற்று நேரத்தில் உடைந்துசிதறிய கற்குவியல்களாகத் தெரியும் மலையின் மடிப்புகளுக்குள் மறுமொழியாக முரசுகள் ஒலிக்கத்தொடங்கும். வணிகர்கள் நீராடி உணவருந்தி ஓய்வெடுத்து எழும்போது தொலைவில் முழவுகளை ஒலித்தபடி மலையிறங்கி வருபவர்களைக் காணமுடியும். கழுதைகளிலும் அத்திரிகளிலும் ஒற்றைக்காளைகளிலும் தலைச்சுமையாகவும் மலைப்பொருட்கள் வந்துகொண்டிருக்கும். சற்றுநேரத்திலேயே அங்கே பெரிய சந்தை கூடிவிடும்.

மலைத்தானியங்கள், பருப்புகள், தேன், கஸ்தூரி, கோரோசனை, மூலிகைகள், தோல்கள், உலர்ந்த ஊன் என பலவகையான மலைப்பொருட்களை வாங்கிக்கொண்டு உப்பையும் இரும்புக்கருவிகளையும் துணிகளையும் விற்பார்கள். சிறிய வணிகப்பொருட்களுக்காக முட்டிமோதும் மக்களை இளநாகன் வியப்புடன் நோக்கி நிற்பான். பீதர்களின் வெண்களிமண் சம்புடங்களை நாலைந்து புலித்தோல்களைக் கொடுத்து பெற்றுக்கொண்டார்கள். எலும்புப்பிடிகொண்ட குத்துவாட்களுக்காகவும் இரும்பாலான ஈட்டிமுனைகளுக்காகவும் ஆண்கள் விலைபேசாது பொருட்களைக் கொடுத்தனர். நிகர்மதிப்பு என்பதே அச்சந்தைகளில் இல்லை என்பதை இளநாகன் அறிந்தான். மக்கள் தாங்கள் விரும்புவதைப்பெற எதையும் கொடுத்தனர். எனவே குறைவாகப் பொருட்களைக் கொண்டுவருவதே அதிக பொருளீட்டும் வழியாக இருந்தது.

வண்ணஆடைகளைச் சூழ்ந்து நின்று கண்களும் பெரிய பற்களும் பளபளக்க நோக்கிய மக்களைப் பார்த்தாவாறு சந்தைகளில் சுற்றிவந்தான் இளநாகன். கழுத்திலும் கைகளிலும் சங்குபோழ்ந்த வெண்வளையங்களை நெருக்கமாக அடுக்கிய கரியமக்கள். பெரிய உதடுகளும் ஈரக்கருங்கல் போல ஒளிவிடும் கண்களும் கொண்டவர்கள். மரப்பட்டைத் துண்டுகளைக் கோத்து ஆடைகளாக அணிந்தவர்கள். சிறியவிதைகளை மணிகளாகக் கோத்த மாலைகளை மட்டுமே ஆடையாக அணிந்த கரியமலைக்குடிகளை அங்கே கண்டு இளநாகன் திகைத்து விழிகளை விலக்கிக்கொண்டான். இடையில் அமர்ந்த குழந்தைகளுடன் உரக்கப் பேசிநகைத்தபடி ஆடையற்ற பெண்கள் சந்தைகளில் சுற்றிவந்துகொண்டிருந்தனர்.

சந்தை ஒவ்வொருநாளும் விரிந்துகொண்டே சென்றது. இரவுகளில் சந்தைமுற்றத்திலேயே திறந்த வானின் கீழ் படுத்துக்கொண்டு முழவுகளை இசைத்து பாடிக்கொண்டிருந்தனர். முதல்கதிர் அங்கெல்லாம் முன்னதாகவே எழுந்தது. பறவையொலிகள் கூடும்போதே சந்தையும் எழுந்துகொண்டது. மலைகளில் இருந்து தலைச்சுமையாக பெரிய குடங்களில் மஹுவாமலரிட்டு காய்ச்சப்பட்ட மலைக்கள் இறங்கி வந்தது. சுவையற்ற வெறும் நீர்போன்று இருந்த அதை பெரிய கலங்களில் நிரையாக வைத்து சந்தைகளில் விற்றனர். சுரைக்காய் அகப்பைகளில் அதை அள்ளி மூங்கில் கோப்பைகளிலும் இலைத்தொன்னைகளிலும் மண்குடுவைகளிலும் ஊற்றி விற்றார்கள்.

“அது கள்ளே அல்ல. மஹுவா என இவர்கள் சொல்லும் மதூக மலர் ஒரு விஷச்செடி. அதை அருந்தும்போது மலைத்தெய்வங்கள் நம்முள் குடியேறுகின்றன” என்றார் வணிகரான பிருஹதர். மஹுவாவைக் குடித்த மலைக்குடிகளில் சிலர் கண்களில் நீர்வழிய சிரித்துக்கொண்டு எங்கே செல்வதென்றறியாமல் சுற்றிவந்தனர். சிலர் கைகளை ஆட்டி சொன்னதையே சொன்னபடி சந்தை நடுவே நின்றிருந்தனர். கதறி அழுதபடி சிலர் மண்ணில் முகம்புதைத்து படுத்தனர். ஓர் இளைஞன் கருங்கல்தூண் ஒன்றை கெட்டியாகப்பற்றிக்கொண்டு தலையை முடியாது முடியாது என்று ஆட்டிக்கொண்டிருக்க இரு பெண்கள் அவனைப் பிடித்து இழுத்தபடி அழுதனர். இளைஞன் திடீரென்று பிடியை விட்டுவிட்டு வலிப்புவந்து வாயில் நுரைதள்ள துடிக்கத் தொடங்கினான்.

மஹுவா சுவையற்றிருந்தது. குடித்துமுடித்ததும் ஊமத்தை வேரின் வாசனை வாயில் எதிர்த்து வந்தபடியே இருந்தது. இளநாகன் சந்தையில் நடந்துகொண்டிருந்தபோது மொத்தச்சந்தையும் கவிழும் மரக்கலம்போல சரிந்து தெரியத்தொடங்கியது. விழுந்துவிடுவோம் என்று அவன் தன்னை சமன்படுத்திக்கொள்ள மறுபக்கம் சாய்ந்தான். ஏன் இப்படி சந்தையே சரிகிறது என்று வியந்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது. அனைவரும் சாய்ந்தே நடந்தார்கள். காகங்கள் உலர்ந்த ஊன் விற்கும் கடைகளுக்குள் சாய்ந்தே பறந்தன. அவனை நோக்கியவர்கள் சிரித்தபடி சாய்ந்து நடந்துசென்றனர்.

இளநாகன் உரக்க தமிழில் பாடத்தொடங்கினான். பல்வேறுபாடல்களைக் கலந்து பாடிக்கொண்டிருக்கிறோம் என உணர்ந்தாலும் அவனால் நிறுத்தமுடியவில்லை. திடீரென்று மொத்தச்சந்தையும் தலைகீழாகியது. அவன் கால்களுக்குக் கீழே வானம் தெரிந்தது. விழுந்துவிடாமலிருக்க அவன் அருகில் இருந்த ஒரு கூடையைப்பிடித்துக்கொண்டான். அது மண்ணில் வலுவாக ஒட்டியிருந்தது. அவன் தலைக்குமேல் பறக்கும் கால்களுடன் மனிதர்கள் நடந்துசென்றார்கள்.

மூன்றாம்நாள் வணிகர்கள் கிளம்பிச்சென்றபோதுதான் அவன் விழித்துக்கொண்டான். வணிகர்கள் அவனை நகையாடிக்கொண்டே இருந்தனர். “களவும் கற்று மறத்தல் நன்று” என்றான் இளநாகன். வறண்டநிலத்து வணிகர்கள் மலையடிவாரம் வரை வந்து திரும்பிக்கொள்ள அங்கிருந்து அவன் மலைவணிகர்குழு ஒன்றுடன் காடுகளுக்குள் நுழைந்தான். காட்டை வகுந்து சென்ற பாதைகளில் நடந்து மரங்களுக்குள் புதைந்து பதுங்கியிருந்த சின்னஞ்சிறு வேடர்குடிகளை அடைந்தான். அவர்களிடம் ஃபாங்கமும், மஹுவாவும், மூலிகைகளும், புலிப்பல்லும், தோல்களும் வாங்கிக்கொண்டார்கள்.

நீள்தாடியும் பயணத்தால் மெலிந்து கருகிய உடலுமாக அவன் வம்சதாராவின் கரையில் அருணரைச் சந்தித்தான். அவர் படகில் அமர்ந்து யாழை தன் மடியில் வைத்திருந்தார். அவன் அருகே சென்று “வடபுலச் சூதரே, அஸ்தினபுரியின் கதையைப் பாடுங்கள்” என்றான். “யாழ் வீணே பாடாது இளைஞரே” என்றார் அவர். “நீர் தமிழ்நிலத்தார் என உய்த்தறிகிறேன்.” இளநாகன் தன் ஊரையும் குலத்தையும் சொல்லி “நான் உங்கள் குலத்தைப்பற்றி தமிழில் ஒரு பாடலைப் பாடுகிறேன். அதைப்பயின்றுகொள்ளும், நீர் திருவிடத்தைக் கடந்தால் அப்பாடலே உம்மை ஆற்றுப்படுத்தும்” என்றான். மகிழ்ந்து போன அருணர் “பாடுக பாணரே” என்றார்.

இளநாகன் பாடியபாடலுக்கு நிகராக அவர் அஸ்தினபுரியின் கதையைச் சொன்னார். “அகத்தில் பேராற்றல்கொண்டவர்கள் பெரிய இலக்குகள் கொண்டிருக்கவேண்டும் பாணரே. இல்லையேல் அந்த வெற்றிடத்தை முழுக்க பெரும் பகைமை வந்து நிரப்பிக்கொள்ளும். மானுடனின் ஆன்மாவின் இறுதித்துளியையும் நெய்யாக்கி நின்றெரிவது பகைமை. பகைமையையும் வஞ்சத்தையும் கொண்டே ஊழ் தன் அனைத்து ஆடல்களையும் நிகழ்த்துகிறது.” இளநாகன் தன் தலையை கைகளில் ஏந்தி நெடுநேரம் அமர்ந்திருந்தபின் எழுந்து பெருமூச்சுவிட்டான்.

எட்டுநாட்கள் வம்சதாரா வழியாகவே அவர்கள் வந்தனர். வம்சதாராவின் கரைகளில் இருந்த எல்லா துறைகளில் இருந்தும் கயிறுதான் படகுகளில் ஏறிக்கொண்டிருந்தது. தேங்காய்நார் கயிறு அல்ல அது என்று இளநாகன் கண்டான். கயிறு பளிங்குவெண்மையுடன் இருந்தது. “கற்றாழைநாரை கைகளால் சீவி எடுத்து நீரில் கழுவி உலரச்செய்து இந்தக் கயிற்றைச் செய்கிறார்கள். உப்புநீரிலும் மட்காதிருக்கும் வல்லமைகொண்டது இது. பீதர்கள் இந்த நாரை வாங்க கலிங்கபுரிக்கே வந்துகொண்டிருந்தனர். இப்போது பீதர்கள் வருவதில்லை” என்றார் அருணர்.

“ஏன்?” என்று இளநாகன் கேட்டான். “கலிங்கபுரியின் துறைமுகப்பில் மணல் சேர்ந்துகொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ப பீதர்கலங்கள் பெரியதாகிக்கொண்டே செல்கின்றன” என்றார் அருணர். “இங்கிருந்து சிறிய கப்பல்களில் வாங்கிச்சென்று ராஜமகேந்திரபுரிலும் தாம்ரலிப்தியிலும் கொண்டுசென்று விற்கிறார்கள். கலிங்கபுரி சென்ற காலங்களின் துயரம்மிக்க நினைவாக எஞ்சியிருக்கிறது.”

கடலை நெருங்குவதனாலா அந்த வெம்மை என்று இளநாகன் சிந்தித்தான். அவன் தலைக்குள் இருந்து வியர்வை பெருகி கழுத்திலும் முதுகிலும் வழிந்தது. புருவத்தில் சொட்டி நின்றாடியது. தலைப்பாகையை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக்கொண்டான். படகோட்டி திரும்பி சிரித்துக்கொண்டு வானைச்சுட்டிக்காட்டி “மழை!” என்றான். இளநாகன் தலைதூக்கி நோக்கியபோது வெளிறி வெயில் நிறைந்துக்கிடந்த கண்கூசும் வானையே கண்டான். “மழை வந்துகொண்டிருக்கிறது. இப்போது அங்கே கிழக்குக் கடலில் இருக்கிறது” என்றான் படகோட்டி.

“கடலோரங்களில் மழை மிக எளிதில் வந்து சூழும். அதிலும் கலிங்கம் மழைப்புயல்களின் நாடு” என்றார் அருணர். “இங்குள்ளவர்கள் மழைப்புயலை காளி என்றுதான் சொல்கிறார்கள். வானம் கருமைகொள்ளும்போது முற்றத்தில் இலை விரித்து சிறிய ஊன்பலிகொடுத்து காளியை வணங்குகிறார்கள். வளத்தையும் அழிவையும் ஒருங்கே அளிக்கும் அன்னையிடம் கருணையுடன் வரும்படி கோரும் சடங்கு அது.”

பறவைகள் கூட்டம்கூட்டமாக கடலில் இருந்து கரைநோக்கிவந்துகொண்டிருப்பதை இளநாகன் கண்டான். படகோட்டிகள் தேன்மெழுகிட்ட பாய்களை விரித்து கயிற்றுப்பொதிகளை மூடி இறுக்கிக் கட்டினார்கள். பாய்களை எல்லாம் கீழிறக்கிவிட்டார்கள். நதியின் நீரில் வானில் சென்றுகொண்டிருக்கும் பறவைகளின் படிமம் வெண்ணிறமான மீன்கூட்டம் செல்வதுபோலத் தெரிந்தது. “அவை கடற்பறவைகள்… பெருமழை வரும் என்றால் மட்டுமே அவை கரைதேரும்” என்றான் படகோட்டி. “நாம் அதற்குள் கலிங்கபுரியை அடைந்துவிடுவோமா?” என்று இளநாகன் கேட்டான். வானைநோக்கியபின் “முடியாது” என்று படகோட்டி புன்னகைசெய்தான்.

நதிநீரில் தெரிந்த உருளைக்கல் பரப்பில் அசைவு தெரிவதைக் கண்டு அதிர்ந்த இளநாகனின் சித்தம் அவையனைத்தும் ஆமைகள் என்று கண்டுகொண்டது. நீரின் தரைப்பரப்பு போல முழுமையாகவே நிறைந்து அவை கரைநோக்கிச் சென்றுகொண்டிருந்தன. கரையில் தெரிந்த கூழாங்கல்சரிவு ஆமைகளாலானது என்று அதன்பின்னரே அவன் கண்டறிந்தான். “இத்தனை ஆமைகள் எங்கிருந்து வருகின்றன?” என்றான். “அவை எங்கள் தெய்வங்களால் அனுப்பப்படுபவை. கடலில் இருந்து வந்தபின் கடலுக்கே திரும்பிச்சென்றுவிடுகின்றன. அவை இங்கு வருவதனால்தான் இந்த நகரம் கூர்மபுரி என்று அழைக்கப்படுகிறது” என்றான் படகோட்டி.

ஆமைகளின் ஓட்டுமுதுகுகளின் விதவிதமான வடிவங்களை நோக்கிக்கொண்டு மலைத்து அமர்ந்திருந்தான் இளநாகன். “அவை ஒவ்வொன்றின் முதுகிலும் ஒவ்வொரு சொல் எழுதப்பட்டிருக்கிறது என்பது பீதர்களின் நம்பிக்கை. அவர்களில் உள்ள பூசகர்கள் அச்சொற்களை வாசிக்கமுடியும் என்கிறார்கள். அச்சொற்கள் இணைந்து சொற்றொடர்களாகவும் பெருநூலாகவும் ஆகும் என்று ஒரு பீதவணிகன் சொன்னான்.” அருணர் ஆமைகளை நோக்கி புன்னகைத்தார். “கடலுக்குள் நிறைந்திருக்கும் மாகாவியமொன்றின் சொற்களில் சில சிதறி கரைக்கு வருகின்றன. முட்டையிட்டு தங்களை பெருக்கிக்கொள்கின்றன. தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் அழியாப்பெருநூல். அதில் எழுதப்பட்டிருப்பது என்ன?”

“முடிவற்ற சொற்களால் சொல்லப்படவேண்டிய ஒன்றுதான் உள்ளது” என்று இளநாகன் சொன்னான். “பிரம்மம்.” அருணர் “ஆம்” என்று நகைத்தார். படகோட்டி மேலே சுட்டிக்காட்டினான். வானில் மேகக்குவியல் ஒன்றின் விளிம்பு தெரிந்தது. இளநாகன் அத்தனை கன்னங்கரிய மழைமேகத்தை பார்த்ததே இல்லை. மின்னல்கள் இல்லாத இடியோசை இல்லாத கரிய குழம்பு போல அது வழிந்து வானை மூடிக்கொண்டிருந்தது. சற்றுநேரத்தில் ஒலிகளெல்லாம் மாறுபடுவதை இளநாகன் கேட்டான். நீரின் வண்ணம் ஆழ்ந்தது. காற்றின் நிறம் மங்கலடைந்து பாயின் வெண்மையில் நீலம் ஏறியது. குளிர் ஏறிக்கொண்டே சென்றது. ஆனால் காற்று வீசவில்லை. காதுமடல்களிலும் மூக்கு நுனியிலும் உணரமுடிந்த குளிர் பின்னர் மூச்சுக்குள் நுழைந்து உடல்சிலிர்க்கச் செய்தது.

மழை மிகப்பெரிய துளிகளாக நீரில் விழுந்தது. மழைத்துளி விழுந்து நீர்ப்பரப்பில் பள்ளம் விழுவதை இளநாகன் முதன்முதலாகக் கண்டான். தெறித்த துளிகளே படகை வந்தடைந்தன. சிலகணங்களில் மழை படகை முழுமையாக சூழ்ந்துமூடிக்கொண்டது. அருவி ஒன்றின் நேர்க்கீழே நிற்பதுபோலிருந்தது. திசைகளற்ற, மேல்கீழற்ற நீர். இளநாகன் முழுமையான தனிமையை உணர்ந்தான். நீருக்குள் மூழ்கி அடியாழத்திற்குச் சென்றுவிட்டவனைப்போல. அவனறிந்த உலகம் மேலே எங்கோ மறைந்துவிட்டதைப்போல.

மழைக்குள் கலங்கரை விளக்கின் ஒளிச்சட்டம் நீண்ட வாள் போல வானில் சுழன்று சென்றது. நீர்த்தாரைகள் செம்பளிங்குவேர்களாக ஒளிவிட்டு அணைந்து சற்று நேரம் கழித்து மீண்டும் பற்றிக்கொண்டன. படித்துறையை அடைந்தபோது படகுகளில் இருந்த விளக்குகளைக்கொண்டே அவற்றைக் காணமுடிந்தது. விரைவிழந்து சென்று துறைமேடையை அணுகியதும் நீருக்குள் எழும் மீன்களைப்போல கரிய உடல்கொண்ட வினைவலர் வந்து அதைப்பற்றி இழுத்துக்கட்டினர். “இறங்குவோம்” என்றார் அருணர். “மழையிலா?” என்று ஒரு கணம் இளநாகன் தயங்கினான். “இங்கே மழை வெயில் போல ஓர் அன்றாடப்பொழிவு” என்றார் அருணர்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

மழைக்குள் இறங்கியதும் குளிர்ந்த நீரில் உடல் வெம்மையை இழந்து நடுங்கத் தொடங்கியது. மழைநீர் கொப்பளித்து வழிந்த படிக்கட்டுகள் நீரால் ஆனவை போலிருந்தன. மேலே நகரத்தின் உயரமற்ற கோட்டைமேல் மீன்நெய்விளக்குகளின் ஒளிகள் செந்நிறமாக மழையில் கலங்கிவழிந்துகொண்டிருந்தன. மழைக்குள்ளேயே மனிதர்கள் உடலைக்குறுக்கியபடி இயல்பாக நடமாடிக்கொண்டிருக்க மழையில் நனைந்த எருமைகள் அசைபோட்டுக்கொண்டு அசையாமல் நின்றன. “கடலடி நகரம் ஒன்றில் மீனாக மாறி உலவுவதுபோலிருக்கிறது” என்றான் இளநாகன்.

வணிகவீதியில் நடக்கும்போது இளநாகன் “இந்நகரம் முழுக்க இடிந்து கிடப்பதுபோலிருக்கிறது” என்றான். மிகப்பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்த சுவர்கள் மீது மரத்தாலும் மண்ணாலும் வேறு சுவர்களை எழுப்பி கட்டப்பட்டிருந்தன. பனையோலைக்கூரைகளில் இருந்து அருவிபோல மழை கொட்ட உள்ளே பெருந்திரி விளக்குகளின் ஒளியில் பெரும்பாலும் உலர்ந்த மீன்களும் சிப்பிஊனும் எளிய மரவுரிகளும் பனையோலைக்கூடைகளும் மரப்பொருட்களும்தான் விற்பனைக்காக பரப்பப்பட்டிருந்தன. நனைந்து வழிந்த வெண்புரவி ஒன்றில் உடல்குறுக்கி அமர்ந்த காவல் வீரன் விளக்கொளி சுடர்ந்த நுனி கொண்ட வேலுடன் கடந்துசென்றான். நகரின் ஓசைகள் அனைத்தையும் மழை முற்றிலுமாக மூடியிருந்தது.

நகரச்சாலை பேராறுபோல முழங்கால்வரை செந்நீர் வழிய நெளிந்துகொண்டிருந்தது. பனந்தடிகளை ஊன்றி மேலே கூரையிட்டு மரப்பட்டைகளால் சுவர்கள் அமைக்கப்பட்ட வீடுகள். “இங்கே வீட்டுச்சுவர்களில் மழைநீர் நிற்காது ஒழுகவேண்டுமென்று மீன்மெழுகையும் தேன்மெழுகையும் பூசுவதுண்டு. வெயில்காலத்தில் வீடுகளெல்லாம் உருகிவழியும் மணம் எழும்” என்றார் அருணர். இருபக்கமும் இருந்த மாளிகைகள் அனைத்துமே உயரமற்றவை. அவற்றின் முகப்பில் பந்தவெளிச்சத்தில் வேலுடன் காவல்நின்றிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் ஒலி கேட்காமல் அவர்கள் மீன்கள்போல வாய்திறந்து மூடுவதாகத் தோன்றியது.

“இப்போது கடல்பொங்கி நகருள் நுழைந்தால்கூட அதை மழையென்றே எண்ணுவார்கள்” என்றான் இளநாகன். “சொல்லாதீர் பாணரே. அடிக்கடி இங்கே கடல்நுழைவதுண்டு. உமது சொல் கவிஞனின் சொல்” என்று அருணர் நகைத்தார். “இருநூறாண்டுகளுக்கு முன் இந்நகர்மேல் பேரலை ஒன்று எழுந்து வந்து மூடியதாம். பெரும்பாலான மாளிகைகள் அன்றே இடிந்துவிட்டன. இங்கிருந்தவர்களும் மறைந்தனர். மீண்டும் நூறாண்டுகள் கழித்துத்தான் இந்நகர் உயிர்கொண்டெழுந்தது. சரிந்த மரத்தில் முளைத்த காளான். கிழக்கின் முதற்கதிரை ஏந்துவதற்காக வைக்கப்பட்ட பொற்கலம் என்று கவிஞர் பாடிய கலிங்கபுரி அன்றே மறைந்துவிட்டது” என்றார் அருணர்.

மழை அலையலையாக வந்து அறைவதைத்தான் இளநாகன் தென்னகத்தில் கண்டிருக்கிறான். வானின் உறுமலும் மின்னலுமின்றி அவன் மழையைக் கண்டதுமில்லை. ஆனால் கலிங்கபுரியின் மழை ஆழ்ந்த ஊழ்கமந்திரம் போல குன்றாமல் குறையாமல் நின்றொலித்து நீடித்தது. “இப்போது பொழுதென்ன?” என்று அவன் அருணரிடம் கேட்டான். “நாம் வந்த நேரத்தை வைத்துநோக்கினால் பின்மதியம்… ஆனால் வானமில்லாதபோது பகலென்ன இரவென்ன?” என்றார் அருணர். விளக்கொளி செந்நிறமாகப் பரவிய சாளரங்களுடன் ஒரு பல்லக்கு சென்றது. “மெல்லியதோலால் ஆன அச்சாளரங்களுக்குள் நீர்புகுவதில்லை” என்றார் அருணர்.

அவர்கள் நீர்த்திரையை விலக்கி விலக்கி நடந்து சத்திரத்தை அடைந்தனர். பனைத்தூண்களின்மீது எழுந்த பெரிய ஓலைக்கூரை கொண்ட கட்டடத்தின் முன்னால் அத்திரிவண்டிகள் அவிழ்த்துப் போடப்பட்டிருந்தன. வலப்பக்கம் கொட்டகைக்குள் நின்ற அத்திரி ஒன்று குரல்எழுப்பியது. அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே மிகச்சில வணிகர்களைத்தான் கண்டனர். பாணர்கள் எவருமிருக்கவில்லை. அனைவரும் வரிசையாகப் போடப்பட்ட கயிற்றுக்கட்டில்களில் மரவுரிப்போர்வை போர்த்தி படுத்திருந்தனர்.

வாசலில் நின்றபடி “பயணிகள்… சூதர்கள்” என்றார் அருணர். உள்ளிருந்து கைவிளக்கை அணையாமல் பொத்தியபடி வந்த தடித்த நடுவயதுப்பெண்மணி “வருக சூதர்களே… தங்களிடம் உலர்ந்த ஆடைகள் இல்லை என்று எண்ணுகிறேன்” என்றாள். “ஆம், இல்லை” என்றார் அருணர். “வருக, எங்களிடம் சில மரவுரியாடைகள் உள்ளன” என்று அவள் அழைத்துச்சென்றாள். உள்ளறைகளில் விளக்குகள் எரிந்தன. தூண்நிழல்கள் கூரைமேல் வளைந்தாடின. “இது தென்கிழக்குமழை. நாலைந்துநாள் நீடிக்கும்” என்றாள் அவள். “என்பெயர் காஞ்சனை. நானும் என் மைந்தர்களும் இச்சத்திரத்தை நடத்துகிறோம்.”

உலர்ந்த மரவுரியாடை அணிந்து தலைதுவட்டிவிட்டு உணவுக்கூடத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டபோது குளிரத் தொடங்கியது. சற்றுநேரத்தில் உடல் நடுங்கி அதிர்ந்தது. காஞ்சனையின் மைந்தன் பெரிய மண்கலம் நிறைய பனைவெல்லமிட்ட கொதிக்கும் தினைக்கஞ்சியை கொண்டுவந்து கொடுத்தான். அதன் வாசனையில் அறிந்த பசியை இளநாகன் எப்போதுமே அறிந்ததில்லை. அதில் முற்றாத பனங்கொட்டைத்துருவலைப்போட்டிருந்தனர். மென்று குடித்தபோது பனைவெல்லம் நெஞ்சுக்குள் உருகி மூக்கில் நிறைந்தது. குடித்துமுடித்தபின்னர் ஏப்பத்தில் அந்த வாசனை கிளர்ந்தபடியே இருந்தது.

மீண்டும் முதற்கூடத்துக்கு வந்தபோது அவர்களுக்கான கயிற்றுக்கட்டிலில் மரவுரியும் நார்த்தலையணையும் வைக்கப்பட்டிருந்தது. வணிகர்கள் உரக்கப் பேசிக்கொண்டிருந்தனர். அருகமரபுக்குரியவகையில் தலைமுடியை மழுங்க மழித்து நீள்காது வடித்திருந்த ஒருவர் “அழியாதது, என்றுமிருப்பது என்று இவற்றை அறிபவன் முதலில் உணர்வது தன்னுடைய அழிவையே. அருகமரபு அதையே முதல்ஞானமாக முன்வைக்கிறது. இத்தனை சொற்களுக்கு அப்பாலும் நீங்கள் அறிந்துகொள்ளாதது அது வைசேடிகரே. புடவியின் அகாலஇருப்பை தன் காலத்தைக்கொண்டே மானுட அகம் உணர்ந்துகொள்ளமுடியும்” என்றார்.

அப்பால் நீண்டகுழலை தோளில் அவிழ்த்துப்போட்டு கரியதாடியுடன் இருந்தவர்தான் வைசேடிகர் என்று இளநாகன் எண்ணிக்கொண்டான். “எது அழியக்கூடியது சாரங்கரே? எதுவும் அழிவதில்லை, அனைத்தும் உருமாறுகின்றன என்று உணர்வதே வைசேடிக மெய்யியலின் முதல்படி. இவ்வுடலை எரித்தால் சாம்பலாகும். காற்றில் பறக்கும். நீரில் கரையும். மண்ணில் கலக்கும். வேர்களில் உரமாகும். காயாகக் காய்த்து கனியாகக் கனிந்து உணவாக ஊறி இன்னொரு உடலாகும். எங்கு செல்கிறது அது? இங்குள அனைத்திலிருந்தும் அது எழுகிறது. இங்குள அனைத்திலும் மீண்டு செல்கிறது. பருப்பொருளுக்கு அழிவில்லை.”

“ஆனால் உயிர்?” என்று இருளுக்குள் எவரோ கேட்டனர். “உயிரென்பது ஒரு அறிதலே. வெற்றிலையும் சுண்ணமும் பாக்கும் கலந்து செந்நிறம் பிறப்பதுபோல இப்பருப்பொருட்களின் கூட்டால் உயிர் பிறக்கிறது. வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்து அது வெயிலில் காய்ந்தால் அச்செந்நிறம் எங்கே செல்கிறது? அது பிறிதொன்றாக மாறிவிடுகிறது. உயிரென்பது உடலின் ஒரு நிலை. இன்னொரு உடலின் அறிதல். உயிர் என்றால் என்ன என்று நான் கேட்டேனென்றால் நீங்கள் சொல்லும் அனைத்து விடைகளும் உயிரை இன்னொரு உயிரான நாம் அறியும் முறைகளைப்பற்றியதாகவே இருக்கும்.”

“முன்பொருநாள் கடலோடி ஒருவன் ஆழ்கடலில் கலம் உடைந்து நீந்தி மணிபல்லவம் என்னும் தீவுக்குச் சென்றான். அந்த மாயத்தீவுக்குச் செல்லும் முதல்மானுடன் அவன். அங்கே அவன் தாவரங்களுக்காக, பூச்சிகளுக்காக, பறவைகளுக்காக, மிருகங்களுக்காகத் தேடினான். பாறைகள் மட்டுமே இருந்த அந்தத் தீவில் உயிர்கள் இல்லை என்று எண்ணி ஏங்கி அவன் மடிந்தான். அவனை அழைத்துச்செல்ல வந்த தேவர்களிடம் ‘உயிர்களில்லா வெளிக்கு என்னை கொண்டுவருமளவுக்கு நான் செய்த வினை என்ன?’ என்றான். ‘இங்கே உயிர்களில்லை என நீ எப்படி எண்ணினாய்? இங்குள்ள பாறைகள் அனைத்தும் நீ அறியாத இயல்புகொண்ட உயிர்களே. உயிர் என நீ கொண்ட அறிதலின் எல்லையால் நீ இறந்தாய். வினை என்பது அறியாமையே’ என்றனர் தேவர். ஆம் வணிகர்களே, உயிரென்பது பருப்பொருளில் நாமறியும் ஒரு நிலை மட்டுமே.”

“அவ்வண்ணமே நாமறியும் இப்பருப்பொருள்வெளி என்பதும் ஓர் அறிதல்மட்டுமே என உணரும்போதே அறிதலின் பயணம் தொடங்குகிறது. இங்குள்ள ஒவ்வொன்றும் சொற்கள். அச்சொற்களால் சுட்டப்படுவதாக நிற்பதே பரு. அதையே பதார்த்தம் என்கின்றது வைசேடிக மெய்யியல். தென்மொழியாகிய தமிழிலேயே அதற்கு மிகச்சரியான சொல்லாட்சி உள்ளது. பொருள் என்னும் சொல்லுக்கு அவர்கள் அர்த்தம் என்றும் வஸ்து என்றும் பொருள்கொள்கிறார்கள்” வைசேடிகர் சொன்னார்.  “பருப்பொருள் வெளி கோடானுகோடி பதார்த்தங்களால் ஆனது.”

“அம்முடிவின்மையை ஒன்றொன்றாய்த் தொட்டு அறிய முடிவில்லா காலமும் அகமும் தேவை. ஆகவே அவற்றை நாம் அறிவதில் உள்ள நெறிகளை மட்டுமே வகுத்துக்கொள்கிறது வைசேடிகமெய்யியல். பொருண்மை, குணம், செயல், பொதுத்தன்மை, தனித்தன்மை, இணைவுத்தன்மை என்னும் ஆறு வெளிப்பாடுகளால் இப்பருவெளி நம்மை வந்தடைகிறது. இங்குள்ள ஒவ்வொரு பொருளும் இவ்வெளிப்பாடுகளில் காட்டும் சிறப்புத்தன்மையாலேயே தன்னை தனித்துக்காட்டுகிறது. ஆகவேதான் எங்கள் மெய்யியலை வைசேடிகம் என்கிறோம்.”

“பருப்பொருள் முதலியற்கையால் ஆனது என்று சொல்லும் சாங்கியர்களும் உங்களவர்களா?” என்று ஒரு குரல் கேட்டது. “இல்லை. அவர்கள் முதற்பொருளை உணர்ந்தவர்கள். ஆனால் தெளிந்தவர்கள் அல்ல. மூவாமுதலா பேருலகின் பொருண்மையை அவற்றில் எது அறியற்பாலதோ அதைக்கொண்டல்லவா அறியவேண்டும்? கரும்பாறையை உடைத்தால் தூளாகிறது. நீரை உடைத்தால்?” வைசேடிகர் சொன்னார். “நீர் நம் கண்ணுக்குத்தெரியாத அணுக்களாக ஆகிறது. அவ்வணுக்களின் படர்தலைத்தான் நாம் ஈரம் என்கிறோம்.”

“ஒன்றின் மிகச்சிறிய அலகே அணு. அதற்குமேல் பகுக்கமுடியாதது எதுவோ அதுவே அணு. இங்குள்ள ஒவ்வொரு பருப்பொருளும் அதன் நுண்ணணுக்களால் ஆனது. நீர் நீரின் அணுக்களால். நெருப்பு நெருப்பின் அணுக்களால். அவற்றின் தனித்தன்மைகள் அனைத்தும் அந்த அணுக்களின் இயல்புகளாக உள்ளவைதான். அணுக்கள் ஆறு நெறிகளால் ஆடும் ஆடலே இப்புடவி.”

இருளுக்குள் எவரோ அசைந்து அமர்ந்தனர். அவருக்குள் ஓடும் வினா அந்த அசைவில் தெரிந்தது. பலர் குறட்டைவிட்டுக்கொண்டிருந்தனர். “வணிகர்களே, அணு அண்டமாவதெப்படி என உங்கள் அகம் திகைக்கிறது. பாருங்கள், இதோ இந்தக் கூடத்தில் விளக்கொளியில் புகைபோலப் பறக்கும் நுண்ணிதின் நுண்ணிய நீர்த்துமிகளே அதோ வெளியே விண்ணையும் மண்ணையும் மூடிப்பொழிந்துகொண்டிருக்கின்றன. அதற்கப்பால் முடிவிலாது கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன” என்றார் வைசேடிகர். இருளில் அக்கணத்தில் அனைத்தையும் முழுமையாகக் கண்டுவிட்டதுபோல இளநாகன் உடல் சிலிர்த்துக்கொண்டது.

வெண்முரசு விவாதங்கள்