வண்ணக்கடல் - 44

பகுதி ஏழு : கலிங்கபுரி

[ 8 ]

குடிலுக்கு முன் எரிந்த நெருப்பைச்சுற்றி மாணவர்கள் தரையில் அமர்ந்திருக்க நடுவே துரோணர் பீடத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவரது காலடியில் அஸ்வத்தாமன் அமர்ந்திருக்க அவர் பிரமதத்தை விட்டு தான் வந்ததைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். இரவு சென்றுவிட்டபின்னரும் காற்றில் நீராவி நிறைந்திருப்பதுபோல புழுங்கியது. மரங்கள் அனைத்தும் ஓசையும் அசைவும் இன்றி இருளுக்குள் நின்றிருந்தன.

“பீஷ்மபிதாமகரிடம் நான் பிரமதத்தில் எளிய ஆசிரியனாக இருந்ததையும், அங்கிருந்து வெளியேற நேர்ந்ததையும் பற்றிச் சொன்னேன். என் மைந்தனையும் மனைவியையும் இந்நகருக்கு அழைத்துவரும்படி கோரினேன். அவர் ஒருபடகில் வீரர்களை அனுப்பியிருக்கலாம். ஆனால் என் ஆன்மா கோருவதென்ன என்று அவர் அறிந்துகொண்டார். இளைஞர்களே, தன் குடிகளில் எளியவனின் உள்ளத்தைக்கூட அறிந்துகொள்பவனையே சத்ரபதி என்கின்றனர் சான்றோர்” என்றார் துரோணர்.

“சில நாட்களுக்கு முன் பிரமதத்தின் சின்னஞ்சிறு துறையில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி பறக்கும் பொன்முகப்புள்ள அரசப்பெரும்படகு பன்னிரு துணைப்படகுகளுடன் சென்று நின்றது. அதிலிருந்து இறங்கிய பேரமைச்சர் சௌனகர் அங்கிருந்த அனைவருக்கும் அஸ்தினபுரியின் பொற்பரிசுகளை அளித்து அஸ்தினபுரியின் அரசகுருவை அங்கே பதினெட்டாண்டுகள் பேணியமைக்கு நன்றி சொன்னார். இளைஞர்களே, எங்களுக்கு பதினெட்டாண்டுகள் அவர்கள் அளித்த ஊதியம் ஆயிரம் மடங்காக திருப்பியளிக்கப்பட்டது. ஊர்த்தலைவர்களும் வணிகர்களும் முதலில் அஞ்சினர். பின்னர் திகைத்து கண்ணீர்மல்கினர். அவர்களில் ஒரு முதியவர் பதினெட்டாண்டுகாலம் வைரக்கல்லை அருமையறியாது சிக்கிக்கல்லாகப் பயன்படுத்திய பேதைமைக்காக அவர்கள் ஊரை மன்னிக்கும்படி என்னிடம் சொல்லவேண்டும் என்று சொல்லி கைகூப்பி அழுதார்.”

“என் மைந்தனையும் மகனையும் பொற்படகில் ஏற்றி கொண்டுவந்தார். என் துணைவி நகர்வந்து இறங்கியபோது அவளை எதிர்கொண்டு அழைத்துச்செல்ல அஸ்தினபுரியின் மங்கலைகளான மூன்று அரசியர் அரண்மனை வாயிலுக்கே வந்தனர். சத்ரமும் சாமரமுமாக அவளை வரவேற்று முகமன் சொல்லி பேரரசியின் சபைக்கு ஆற்றுப்படுத்தினர். பேரரசி எழுந்து வந்து மார்போடணைத்து இத்தேசம் அவளுடையதாகவேண்டும் என்றார்.” துரோணரின் குரல் இடறியது. “இளைஞர்களே, இன்று அவளுக்கு பணிவிடைசெய்ய பன்னிரண்டு சேடியர் இருக்கிறார்கள். அரசகுலத்துப் பெண்களுக்கே உரிய மங்கலத்தட்டு ஏந்தும் அகம்படி உரிமை அவளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.”

“நான் போகங்களை விழைபவன் அல்ல. இந்த கைப்பிடி தர்ப்பையுடன் எங்கும் எவ்வகையிலும் என்னால் வாழமுடியும். ஆனால் நான் துறவியும் அல்ல. இம்மண்ணில் நான் விழைவது எனக்கான மதிப்பை மட்டுமே. இளைஞர்களே, என் வாழ்நாளில் நான் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறேன் என உணர்ந்தது இங்கே அஸ்தினபுரியில் மட்டும்தான்.” பெருமூச்சுடன் அவர் தன்னை சமநிலைப்படுத்திக்கொண்டார். “அஸ்தினபுரியின் படகுகள் சென்று பிரமதத்தில் இறங்கிய செய்தியைக் கேட்டபோது என்னையறியாமலேயே என் கண்கள் நீர்வடிப்பதை உணர்ந்தேன். பிராமணனாகிய நான் என் தர்மத்துக்கன்றி வேறெதற்கும் கடன்பட்டவன் அல்ல. எந்த மண்ணுக்கும் அரசுக்கும் என் மேல் உரிமையும் இல்லை. ஆனால் இன்று இச்செயலுக்காக நான் பீஷ்மருக்கு வாழ்நாள் கடன்பட்டிருக்கிறேன். அவரது நாடே எனது நாடு. அவரது அரசின் கடைக்குடிமகன் நான். அவரது நட்பும் பகையும் என்னுடையவை. அவருடன் இருந்து அவருக்காகவும் அவரது வழித்தோன்றல்களுக்காகவும் உயிர்கொடுத்தலே என் அறம். அதற்கப்பால் என்றும் எச்சிந்தனையும் எனக்கில்லை. இதோ என் மைந்தனுக்கும் அக்கடமையை விதிக்கிறேன்.”

மெல்லிய குரலில் சொன்னபடி துரோணர் கைநீட்டி அஸ்வத்தாமனின் தலையைத் தொட்டார். அக்கணம் தன்னுள் எரிந்தெழுந்த சினத்தை அறிந்ததும் அர்ஜுனன் அஸ்வத்தாமனைக்கண்ட முதல்கணம் தன் உடல் ஏன் எரிந்தது என்றறிந்தான். என் மைந்தன் என்று சொல்லும்போதெல்லாம் இயல்பாக துரோணரின் கரம் சென்று அஸ்வத்தாமனின் தலையையோ தோளையோ தொட்டது. பின் அதை வருடிக்குழைந்தது. ஏதோ ஒருகணத்தில் அவர் தன்னை உணர்ந்து கைகளை விலக்கிக்கொள்வது வரை அங்கேயே இருந்தது. அர்ஜுனன் அஸ்வத்தாமனின் தலையிலிருந்து தோளில் இறங்கி அமர்ந்த துரோணரின் நீண்ட விரல்கள் கொண்ட மெல்லிய கைகளையே பார்த்துக்கொண்டிருந்தான். கணுவற்ற பிரம்பு போன்ற வில்லாளியின் விரல்கள். ஒன்றுடனொன்று இடைவெளியே இல்லாமல் முற்றிலும் செறிந்தவை. நீள்நகங்கள் கொண்டவை. எப்போதாவது அம்பு பிழைத்தால் மட்டும் அவன் தோளை வந்து மெல்லத் தொட்டுச்செல்பவை.

“இன்று குதிரையை எதிர்கொண்ட அர்ஜுனன் செய்த பிழை என்ன?” என்றார் துரோணர். அனைவரும் அர்ஜுனனை நோக்கியபின் குருநாதரை நோக்கினர். “அர்ஜுனா, நீ சொல்” என்றார் துரோணர். “நான் அதன் கண்களைச் சந்தித்தேன், அப்போது கணநேரம் அஞ்சிவிட்டேன். அதன் பிடரிமீதிருக்கையில் அவ்வச்சத்தை வெல்வதைப்பற்றி மட்டுமே எண்ணினேன்” என்றான் அர்ஜுனன். “அதுவல்ல. மேலும் குறிப்பாகச் சொல்… அஸ்வத்தாமா, நீ சொல்” என்றார் துரோணர். “இன்று இளையபாண்டவர் அக்குதிரையை எதிர்கொள்கையில் தன்னைப்பற்றி எண்ணிக்கொண்டார். ஆகவேதான் அதன் விழிகளைக் கண்டதும் அஞ்சினார். அவர் எண்ணியிருக்கவேண்டியது அக்குதிரையைப்பற்றி மட்டும்தான்” என்றான் அஸ்வத்தாமன்.

“ஆம், அதுவே உண்மை. பார்த்தா, வில்லெடுத்து களம்நிற்கையில் உன்னை நினைக்காதே. கலை எதுவானாலும் அது ஊழ்கமே. தன்னை இழத்தலையே நாம் ஊழ்கம் என்கிறோம்” துரோணர் எழுந்து வணங்கினார். மாணவர்கள் “குருவே பிரம்மன், குருவே விஷ்ணு, குருவே மகேஸ்வரன். குருவே உண்மையான பரம்பொருள். அத்தகைய குருவை வணங்குகிறோம்” என்று சேர்ந்து முழங்கி அந்தச் சபையை முடித்தனர். ஆசிவழங்கியபின் துரோணர் விரைந்து நடந்து தன் குடிலைநோக்கிச் செல்ல அஸ்வத்தாமன் அவர் கூடவே ஓட்டமும் நடையுமாகச் சென்றான்.

அர்ஜுனன் விரைந்து தன் குடிலுக்குச் சென்று குருநாதரை விசிறவேண்டிய மயிற்பீலி விசிறியும் அவரது அறைக்குள் போடவேண்டிய குங்கிலியப்பொடிகொண்ட சம்புடமுமாக திரும்பி வந்து குடில் வாயிலிலேயே தயங்கி நின்றுவிட்டான். உள்ளே தரையில் போடப்பட்ட மஞ்சப்பலகையில் மரவுரி விரித்து அதன்மேல் துரோணர் படுத்திருக்க அஸ்வத்தாமன் காலடியில் அமர்ந்து அவர் கால்களை பிடித்துக்கொண்டிருந்தான். அவர் அவனிடம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருக்க அவன் சிரித்தான். அர்ஜுனன் வந்திருப்பதை அவன் திரும்பிச்செல்ல முயன்ற அசைவுவழியாக துரோணர் அறிந்தார். “வருக பார்த்தா, அமர்க” என்றார். அர்ஜுனன் தளர்ந்த பாதங்களுடன் வந்து சுவர் அருகே நின்றான்.

“இவன் மரவுரி விசிறியால் எனக்கு விசிறினான். நான் உன் மயிற்பீலி விசிறியைப்பற்றிச் சொன்னேன்” என்றார் துரோணர். “அதை அஸ்வத்தாமனிடம் கொடு!” அர்ஜுனன் விசிறியை அவனிடம் அளித்தான். “சிறுவயதில் இவன் துயில்வதற்கு நெடுநேரமாகும். நான் இவன் காதைப் பற்றி மெல்ல வருடிக்கொண்டிருப்பேன். எச்சில் என் மடியை நனைக்கையில்தான் இவன் துயின்றிருக்கிறான் என்பதை அறிவேன்” என்றார் துரோணர் சிரித்துக்கொண்டே. “குதிரையின் எச்சில் போலவே அது கனமானது. அஸ்வத்தாமன் என்று சரியாகத்தான் பெயரிட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.” அர்ஜுனன் “ஆம், குதிரைகளுடன் அவர் பேசுகிறார்” என்றான்.

“எந்தக்கலையும் அனைத்துக்கலைகளுடனும் தொடர்புடையதே. தனித்த கலை என ஒன்றில்லை. இசையறியாத நல்ல ஓவியன் இருக்கமுடியாது. ஓவியத்தை அறியாத சூதனும் இல்லை. வில்லியல் ஒரு கலை. எனவே வாழ்வின் அனைத்துக்கலைகளும் வில்லவனுக்கு உதவியானவையே. அறுபத்துநான்கு கலைகள் உண்டு என்கின்றன நூல்கள். எண், எழுத்தில் தொடங்கி பெண்ணைவெல்வது வரை செல்லும் அந்த அறுபத்துநான்கு கலைகளும் வில்வித்தையுடன் தொடர்புடையனவே. வில்லறிவன் என்பவன் அவையனைத்தையும் உப்பக்கம் கண்டவன். பார்த்தா, நடனமாடாதவன் நல்ல வில்லவன் அல்ல. பெண்ணாக தன்னை ஆக்கிக்கொள்ளமுடியாதவன் நல்ல நடனக்காரனும் அல்ல. குதிரையை வெல்லாதவன் வில்லை அறிவதில்லை. குதிரையை வெல்பவன் பெண்ணையும் வெல்வான்.”

“அனைத்துக் கலைகளையும் நீ வெல்லவேண்டும். இங்கே நீ என்னிடம் விற்கலையைக் கற்றுக்கொள். அரண்மனையில் அத்தனை கலைகளையும் நீ கற்றுக்கொள்ள ஆசிரியர்களை அமைக்கச் சொல்லியிருக்கிறேன். பொன்னையும் மண்ணையும் மணியையும் முத்தையும் மதிப்பிடக் கற்றாகவேண்டும். யானையையும் செம்பருந்தையும் அறியாதவனால் ஒருநாளும் அம்பையும் வில்லையும் முற்றறிய முடியாதென்றறிக. அஸ்வத்தாமா, சொல்! பொன்னையும் மண்ணையும் வில்லாளி மதிப்பிடுவது எப்படி? மணியையும் முத்தையும் அவன் எப்படி அறியவேண்டும்?”

அஸ்வத்தாமன் அரைக்கணம் ஏறிட்டு அர்ஜுனனை நோக்கியபின்பு “பொன்னையும் மண்ணையும் வண்ணத்தால். மணியையும் முத்தையும் ஒளியால்” என்றான். துரோணர் விழிகளைத் தூக்கி “சொல்” என்று அர்ஜுனனிடம் சொன்னார். “பொன்னும் மண்ணும் நிறம் மாறாமையின் விதிகளால் மதிப்பிடப்படவேண்டும். மணியும் முத்தும் மாறும் வண்ணங்களின் முறையால் மதிப்பிடப்படவேண்டும்.” துரோணர் புன்னகையுடன் “கேட்டாயா, மூடா. அவன் வில்விஜயன். அவன் அருகிலிருக்கும் நல்லூழை உனக்களித்திருக்கின்றனர் என் மூதாதையர்” என அஸ்வத்தாமனை காலால் மெல்ல மிதித்தார். அவன் சிரித்துக்கொண்டே அர்ஜுனனைப் பார்த்தான்.

“சொல் அஸ்வத்தாமா, அவ்வண்ணமென்றால் யானையிலும் செம்பருந்திலும் வில்லாளி அறியவேண்டுவதென்ன?” அஸ்வத்தாமன் மெல்லியகுரலில் “யானையின் துதிக்கை மண்ணிலேயே வல்லமை கொண்ட வில்நாண். கீழிறங்கும் பருந்தே தெய்வங்கள் சமைத்த மாபெரும் அம்பு” என்றான். “நன்றாகச் சொன்னாய். ஆனால் இதைச்சொல்ல எதற்கு வில்லாளி? சூதனே தன் யாழைமீட்டி இதைப்பாடுவானல்லவா? பார்த்தா…” என்றார் துரோணர். “குருநாதரே, மூங்கிலின் குருத்து இலையை கிள்ளியெடுக்கும் யானையின் துதிநுனியின் கூர்மையைக் கொள்ளவேண்டும் எந்தப் பேரம்பும். மண்ணில் பாய்ந்து இரைகவ்வி, கவ்வியபின் சிறகடித்தெழும் பருந்தைப்போலாகவேண்டும் எந்த வில்லின் விசையும்” என்றான் அர்ஜுனன். “ஆம், நீ வில்லவன். நீ சொல்லாமலிருந்தால்தான் வியப்பு” என்றார் துரோணர்.

“அஸ்வத்தாமா, இதோ என் ஆணை. இவனே என் மாணவர்களில் தலையாயவன். இவனிடத்தில் எத்தருணத்திலும் எந்த மானுடனையும் நான் வைக்கப்போவதில்லை. குரு தன் முதல்மாணவனை தன் குருபரம்பரையாக எண்ணி வணங்கவேண்டும் என்கின்றன நூல்கள். அவ்வண்ணம் நான் வணங்கப்போவது இந்த இளையபாண்டவன் பெயரையும் இவனுடைய வில்லேந்திய கரங்களையுமேயாகும்” என்றார் துரோணர். அர்ஜுனன் கைகளைக் கூப்பி அப்படியே அமர்ந்துவிட்டான். கூப்பியகரங்களில் அவன் முகம்சேர்த்தபோது கண்ணீர் வழிந்து விரல்கள் நனைந்தன. “மூடா, வில்லவன் ஒருபோதும் விழிநீர் சிந்தலாகாது” என்றார் துரோணர் கடுமையாக. “நீ என்னை வணங்குவதாக இருந்தால் ஓர் அம்புநுனியை என் பாதங்களை நோக்கிச் செலுத்து. வில்லவன் அளிக்கவேண்டிய வணக்கம் அதுவே.”

அர்ஜுனன் சுவரில் தொங்கிய வில்லை நடுங்கும் கைகளில் எடுத்துக்கொண்டான். படுத்தபடியே துரோணர் “உம்” என்றார். அவன் அம்பறாத்தூணியில் இருந்து மூன்று அம்புகளை எடுத்துக்கொண்டான். அஸ்வத்தாமன் எழுந்து அவனையே நோக்கி நின்றிருந்தான். அர்ஜுனன் முதல் அம்பை உருவி தன் சென்னியில் வைத்து வணங்கி துரோணரின் பாதங்களை நோக்கி செலுத்தினான். அம்பு அவர் காலடியில் மண்ணில் தைத்து நின்று ஆடியது. அக்கணம் வானிலெழுந்த மின்னலில் அந்த அம்பின் புல்லால் ஆன பீலி ஒளிவிட்டது. “மழைவரப்போகிறது” என்றார் துரோணர். இரண்டாவது அம்பை தன் கண்களில் வைத்து அவர் காலடியில் நிறுத்தினான். மூன்றாவது அம்பை தன் நெஞ்சில் வைத்து தொடுத்தான். இரண்டாவது மின்னலில் அறையே வெண்மையாகி அணைந்தது.

வெளியே இடியின் ஒலி எழுந்து அமைந்தது. “வானம் ஒலிக்கும் அச்சொல் தத்வமசி” என்றார் துரோணர். “அது நீயே. நிகரற்ற புகழுடன் இருப்பாய். இப்புவியில் உனக்கு நிகரான வில்லவன் எவனும் பிறக்கவில்லை, இனி பிறக்கப்போவதுமில்லை. இந்த மலைகளெல்லாம் இடிந்து பொடியாகும் காலத்திலும் வில் எனில் உன் பெயரே மானுடர் நாவில் திகழும். என் குருநாதர்களின் வாழ்த்து உனக்குண்டு. என் வாழ்த்துக்களும் உனக்கே!”

கூரைமேல் மணல்பொழிவதுபோல் ஒலியெழுந்தது. குளிர்ந்தகாற்று உள்ளே வந்தபோது அதில் நீர்த்துளிகள் இருந்தன. “நீ சென்று துயிலலாம் பார்த்தா. இவன் இன்றுதான் வந்திருக்கிறான். நான் இவனிடம் சற்று பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று துரோணர் சொல்லி அஸ்வத்தாமனிடம் ‘அமர்ந்துகொள்’ என்று கைகாட்டினார். அவன் அவரது தலைமாட்டில் அமர்ந்துகொள்ள அவன் கைகளைப் பற்றிக்கொண்டு “பிரமதத்தில் உன் தோழர்களிடம் விடைபெற்றுக்கொள்கையில் என்ன சொன்னாய்?” என்றார். அஸ்வத்தாமன் நகைத்தபடி “யாருக்கெல்லாம் பசுக்கள் தேவை, எத்தனை பசுக்கள் தேவை என்று சொல்லுங்கள் என்றேன்” என்றான். துரோணர் உரக்க நகைத்தார்.

அர்ஜுனன் குங்கிலியச் சம்புடத்தை அனல்சட்டிக்கு அருகே வைத்துவிட்டு மெல்ல வெளியேசென்று குடிலின் படலைச் சாத்தினான். இருளில் வானில் வேரோடிப்பரவி அணைந்த மின்னலில் மரக்கூட்டங்களின் இலைப்பரப்புகள் ஈரத்துடன் பளபளப்பதைப் பார்த்தான். குடிலின் படியில் படலில் முதுகைச்சாய்த்துக்கொண்டு அமர்ந்துகொண்டான். உள்ளே துரோணர் சிரித்துப்பேசிக்கொண்டிருப்பதும் அஸ்வத்தாமன் பதில் சொல்வதும் மெல்லிய ஒலிகளாகக் கேட்டுக்கொண்டிருந்தன. பின்னர் மழை பெருகிவந்து அவனை அறைந்தது. அவன் உடல்வழியாக நீர்த்தாரைகள் வழியத்தொடங்கின. அவன் அசையாமல் மின்னலில் ஒளிவிடும் மழைத்தாரைகளையும் மேகங்களையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

மழை சற்றுத்தணிந்து இலைகள் சொட்டும் ஒலியாக மாறியது. உள்ளே இருமூச்சுகளாக அவர்கள் துயில்வது கேட்டது. அவன் எழுந்து உள்ளே பார்த்தான். துரோணரின் மார்பின் மீது தலைவைத்து அஸ்வத்தாமன் துயின்றுகொண்டிருந்தான். அவன் தலைமேல் வைத்த துரோணரது கரங்கள் நழுவி முதுகில் சரிந்திருந்தன. மீண்டும் மழை எழுந்து அவன் முதுகை அறைந்தது. மழைக்குள் நின்றுகொண்டு அவன் ஒவ்வொரு மின்னல் வெளிச்சத்திலும் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

கரிச்சான் குரலெழுப்பியபோது துரோணர் மெல்லியகுரலில் “அன்னையே!” என்றார். அர்ஜுனன் ஓடி தன் குடிலுக்குச் சென்று ஆடையை மாற்றிவிட்டு விரைவுடன் துரோணர் குளிப்பதற்கான எண்ணையையும் ஈஞ்சை மரப்பட்டையையும் எடுத்துக்கொண்டான். திரும்ப அவன் குடிலுக்கு வந்தபோது துரோணர் அஸ்வத்தாமனுடன் கங்கைக்கரைப்பாதையில் சென்றுகொண்டிருந்தார். சிலகணங்கள் கால்களை அசைக்கமுடியாதவனாக நின்றபின் அர்ஜுனன் அவர் பின்னால் ஓடி அருகே சென்றான். அவன் காலடிகளைக் கேட்டு திரும்பிய துரோணர் புன்னகையுடன் “உன் துயிலைக் கலைக்கவேண்டாமென எண்ணினேன்” என்றார். “இவனுக்கு ஆறுமாதமிருக்கையிலேயே என் தோளிலேற்றி கங்கைக்குக் கொண்டுசெல்வேன். அப்போதே இவன் தனுர்வேதத்தைக் கேட்டுக்கொண்டிருந்தான். அஸ்வத்தாமா, சொல்!”

அஸ்வத்தாமன் தனுர்வேதத்தைச் சொல்லிக்கொண்டே சென்றான்.

காற்றை அறிவதனால்
காற்று அறிவதனால்
அலகுகொண்டிருப்பதனால்
கூட்டில் அணைவதனால்
கிளையால் தொடுக்கப்படுவதனால்
அம்பும் பறவையே என்றனர் கவிஞர்
அவர்கள் வாழ்க!

சின்னஞ்சிறியது சிட்டு
தாவிச்சென்று இலக்கை முத்தமிட்டு
கொஞ்சி விலகுவது
சுனாரம் எளியது
ஆகையால் வல்லமை மிக்கது

கூர்ந்திறங்கும் மீன்கொத்தி
சூரியக்கதிர் போல
நீரில் பாய்கிறது
உயிரைக் கவ்வி எழுகிறது
விரைவையே வல்லமையாகக் கொண்ட
குத்தகத்தை வாழ்த்துக!

உயிருள்ள வெண்தாமரையை
வாத்து என்றனர் முன்னோர்
அது நீரை ஆள்கிறது
ஏனென்றால் நீரிலிருந்தாலும்
அதில் நீர் ஒட்டுவதில்லை
வாருணம் மழையை அறியும் அம்பு
அது வானின் அம்புகளால்
இலக்கை இழப்பதில்லை

வட்டமிடும் பருந்து
செம்மின்னலென பாய்கிறது
ஆயிரம் இறகுகள் காற்றை அள்ளி
அதன் அலகை கூர்மையாக்குகின்றன
கருடன் கொலைவல்லவன்
மீட்டு அழைக்க முடியாத தூதன்.

கங்கையில் இறங்கியதும் துரோணர் அஸ்வத்தாமனின் தோள்களைப்பற்றித் தூக்கிச் சுழற்றி நீரில் எறிந்தார். அவன் கூச்சலிட்டு நகைத்தபடி குளிர்ந்த நீரில் விழுந்து நீந்தி அவர் அருகே வந்தான். அவனை அள்ளி எடுத்து கரையில் நிறுத்தி அவன் தோள்களைத் தொட்டு “இனி உன் தோள்கள் மெலிந்திருக்கலாகாது. அவற்றில் ஆற்றல் நிறையவேண்டும். இதோ பார்த்தனைப்பார். அவன் தோள்கள் ராஜநாகத்தின் படம்போலிருக்கின்றன” என்றார். “பார்த்தா, அந்த குளியல்பொடியை எடு!”

அர்ஜுனன் குளியல்பொடி அடங்கிய சம்புடத்தை அவரிடம் கொடுத்தான். மஞ்சளும் வேம்பின்காயும் சந்தனமும் பயறும் கலந்து அரைக்கப்பட்ட குளியல்பொடியை விரல்களால் அள்ளி அஸ்வத்தாமனின் தோள்களில் வைத்து தேய்த்து கைகள் வழியாக உருவியபடி “நீ வாரத்தில் ஐந்து நாட்கள் இரு. இரண்டுநாட்கள் அரண்மனையில் உன் அன்னையுடன் இரு. உன்னை முற்றிலும் பிரிவது அவளுக்கு துயர் அளிப்பதாக இருக்கும்” என்றார். “ஆம் தந்தையே, எப்போது திரும்பி வருவேன் என்றுதான் அன்னை கேட்டுக்கொண்டே இருந்தார்கள்” என்றான் அஸ்வத்தாமன்.

அர்ஜுனன் சற்று விலகிச்சென்று நீராடினான். துரோணர் அஸ்வத்தாமனிடம் பேசிக்கொண்டே இருந்தார். “அரண்மனையில் இருக்கையில் உன் அன்னையுடன் இருக்கவேண்டும். அவளை மகிழ்விக்கவேண்டியது உன் வேலை. அன்னையால் மகிழப்படும் மைந்தனை விண்ணிலிருக்கும் மூதன்னையர்கள் வாழ்த்துகிறார்கள்” என்றார். “மேலும் நீ அனைத்து அரசக்கல்வியையும் பெறவேண்டும். நாடாளும் மன்னன் அறிந்த அனைத்தும் நீயும் அறிந்தாகவேண்டும்” என்றார் துரோணர். “தந்தையே, நான் வேதம் கற்கப்போவதில்லையா?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். “இல்லை, நீ ஷத்ரியன். உனக்குரியது அதர்வமும் அரசநீதியும் அம்புத்தொழிலுமே” என்றார் துரோணர். இருளுக்குள் அவரது கண்களை நோக்க அர்ஜுனன் முயன்றான். துரோணர் தாடியை வருடியபடி திரும்பி நீரில் மூழ்கினார்.

உரத்த பேச்சொலிகளுடன் கௌரவர்கள் கங்கைக்கு வந்தனர். “வணங்குகிறேன் குருநாதரே” என்று கூவியபடி அவர்கள் எருமைக்கூட்டங்கள் போல கங்கைக்குள் இறங்கினர். துரோணர் நீராடி முடித்து எழுந்ததும் அர்ஜுனன் அவருக்கான மரவுரியை நீட்டினான். அவர் அதைக்கொண்டு அஸ்வத்தாமனின் தலையையும் உடலையும் துவட்டினார். பின்னர் திரும்பி “நான் சொன்னபடி குடங்களைக் கொண்டுவந்தீர்களா?” என்றார்.  “ஆம், குருநாதரே” என்று அவர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த குடங்களைக் காட்டினர்.

துரோணர் “பார்த்தா, நீயும் அஸ்வத்தாமனும் இவர்களுடன் இருங்கள். அந்தக் குடங்களில் வெறும் கையால் கங்கைநீரை அள்ளிவிட்டு நூற்றெட்டுமுறை நிறைத்து மேலே சென்று தர்ப்பைக்கு ஊற்றிவிட்டு வந்து என்னிடம் சொல்லுங்கள்” என்றபின் கரையேறி நடந்துசென்றார். “வெறும் கைகளுடனா? எதற்கு” என்று துர்மதன் கேட்டான். “விரல்கள் முற்றிலும் இணைவதற்கான பயிற்சி அது. நீராடி எழுங்கள்” என்றான் அஸ்வத்தாமன்.

கௌரவர் நீராடி எழுந்ததும் ஈர உடையுடன் குடங்களை எடுத்துக்கொண்டார்கள். அஸ்வத்தாமன் “விரைந்து அள்ளுங்கள்” என்று சொல்லிக்கொண்டே நீரை வெறுங்கையால் அள்ளி மண்குடத்தில் விட்டு நிறைத்துக்கொண்டு அதை எடுத்து மேலே சென்றான். “குடத்துக்குள் ஒரு சொட்டு நீர் கூடச் செல்லவில்லையே” என்றான் மகாதரன். அர்ஜுனன் தன் கைகளைக் குவித்து நீரை அள்ளிவிட்டாலும் கூட குடம் நிறைவதற்குள் அஸ்வத்தாமன் இரண்டுமுறை சென்று மீண்டுவிட்டான்.

சற்றுநேரத்திலேயே அஸ்வத்தாமன் குடத்தை வைத்துவிட்டு “விரைவில் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டு மேடேறிச்சென்று மறைந்தான். முப்பதாவது குடத்தை கொண்டுசென்று ஊற்றிவிட்டு நிமிர்ந்து அப்பால் செல்லும் அஸ்வத்தாமனைக் கண்டதும் அவன் தன் தந்தையுடன் இருக்கும் தருணங்களை அர்ஜுனன் என்ணிக்கொண்டான். அக்கணமே அவனுக்கு என்ன செய்வதென்று தெரிந்தது. சுற்றிலும் நோக்கியபின் கல்லை எடுத்து மரக்கிளையில் தொங்கிய தேன்கூட்டை அடித்தான். அது அறுந்து விழுந்ததும் ஓடிச்சென்று எடுத்து அதை தன் கைகளில் வைத்துக் கசக்கி பூசிக்கொண்டு குடத்துடன் இறங்கி கங்கையை நோக்கி ஓடினான்.

ஈர உடையுடன் கங்கைப்பாதையில் ஓடி புதர்கள் வழியாக குறுக்காக ஏறி அவன் குருகுலத்தை அடைந்தபோது அங்கே அஸ்வத்தாமன் கையில் வில்லுடன் அப்பால் தெரிந்த மரத்தைக் குறிநோக்கி நின்றிருப்பதைக் கண்டான். அவன் முதுகைக் கைகளால் அணைத்துக்கொண்டு குனிந்து செவியில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார் துரோணர். அவன் மிகமெல்ல அருகே சென்றான். அவர்கள் என்னசெய்கிறார்கள் என்று தெரியவில்லை. அஸ்வத்தாமன் விட்ட அம்பு திசைதவறியது. அவன் ஏதோ சொல்ல துரோணர் அவன் தோளைத்தட்டி ஆறுதல்சொன்னார்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

அந்த வில்லை தன் கையில் வாங்கிய துரோணர் வில்லில் இரு அம்புகளைத் தொடுத்து மரத்தை நோக்கி ஓர் அம்பை விட்டார். அந்த அம்பு எழுந்ததுமே இன்னொரு சின்னஞ்சிறு அம்பால் அதன் வாலை மிக மெல்லத் தட்டினார். சிட்டுக்குருவி பருந்தின் வாலை முத்தமிடுவதுபோல. அம்பு திடுக்கிட்டதுபோலத் திரும்பி பக்கவாட்டில் பாய்ந்து அருகே நின்ற இன்னொரு மரத்தை தாக்கி குத்தி நின்றது.

புன்னகையுடன் வில்லைத் தந்தபடி திரும்பிய துரோணர் அர்ஜுனனைக் கண்டார். ஒருகணம் அவரது இருபுருவங்களும் சந்தித்துக்கொண்டன. பின்னர் “நூற்றெட்டுகுடத்தையும் கைகளால் நிறைத்தாயா?” என்றார். “ஆம், குருநாதரே” என்றான் அர்ஜுனன். “எப்படி?” என்றார் துரோணர், பார்வையைத் திருப்பிக்கொண்டு. “நாம் செல்லும்போது தனுர்வேதத்தைப் பாடிக்கொண்டே சென்றோம். வாருணாஸ்திரத்தைப்பற்றிய வரிகளை அப்போது நினைவுகூர்ந்தேன். வாருணமாகிய வாத்து தன் உடலில் ஊறும் மெழுகு ஒன்றை தன் இறகுகளில் பூசிக்கொள்கிறது. ஆகவேதான் அதன் உடலில் நீர் ஒட்டுவதில்லை. மெழுகுபூசப்பட்ட பீலி கொண்ட வாருணாஸ்திரம் மழையின் தாரைகளால் வழிதவறுவதில்லை என்பது அப்பாடலின் பொருள். அதேபோல தேன்மெழுகால் என் கைகளை நீர் ஒட்டாமல் ஆக்கிக்கொண்டேன்.”

துரோணர் தலையை அசைத்து “ஒரு சொல்லும் வீணாகாத உள்ளம் உன்னுடையது” என்றபின் “இந்த அம்புமுறையை நீ அறிந்திருப்பாய். இனி நீயும் இவனுடன் வந்து கற்றுக்கொள்” என்றார். அர்ஜுனன் “தங்கள் அருள் குருநாதரே” என்று தலைவணங்கினான். துரோணர் மறுசொல் சொல்லாது வில்லை கீழே போட்டுவிட்டு தலைகுனிந்து நடந்து விலகிச்சென்றார். அர்ஜுனன் குனிந்து கீழே கிடந்த வில்லையும் அம்பையும் கையில் எடுத்தான்.

அஸ்வத்தாமா அசையாத உடலுடன் அவனை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். அவன் பார்வையை உணர்ந்தபோது தன் உடலெங்கும் எழும் வஞ்சத்தின் உவகையை அர்ஜுனன் அறிந்தான். தோள்களில் புயங்களில் எல்லாம் தசைகள் கொப்பளித்து இறுகின. இரு அம்புகளைப் பொருத்தி பெரிய அம்பைச் செலுத்தியதுமே சிறிய அம்பால் அதன் வாலைத்தட்டி துரோணரின் அம்பு நின்றிருந்த அதே மரத்தில் தன் அம்பையும் தைக்கச்செய்தான். வில்லைத் தாழ்த்தி திரும்பி அஸ்வத்தாமனின் முகத்தை நோக்கி புன்னகை செய்தான்.

கண்கள் வெறுப்பில் சுருங்க வெண்பற்களைக் கடித்தபடி “நீ எண்ணுவதென்ன?” என்றான் அஸ்வத்தாமன். அந்த சினம் அர்ஜுனனை மேலும் உவகை கொள்ளச்செய்தது. விரிந்த புன்னகையுடன் “எஞ்சுவது ஏதுமின்றி கற்றல். வேறென்ன?” என்றான். “என்றோ ஒருநாள் உன்னெதிரே நான் களத்தில் வில்லுடன் நிற்பேன். ஆம், இது உறுதி” என்றான் அஸ்வத்தாமன் . புன்னகை குறையாமல் அர்ஜுனன் நோக்கி நிற்க திரும்பி கால்களை ஓங்கி ஊன்றி அஸ்வத்தாமன் நடந்துசென்றான்.

வெண்முரசு விவாதங்கள்