வண்ணக்கடல் - 37
பகுதி ஏழு : கலிங்கபுரி
[ 1 ]
சித்திரை மாதம் முழுநிலவுக்கு ஏழுநாட்களுக்கு முன்னர் அஸ்தினபுரியின் கிழக்கு வாயிலுக்கு வலப்புறம் இருந்த இந்திரனின் ஆலயத்துக்கு முன் விரிந்த இந்திரவிலாசம் என்னும் பெருங்களமுற்றத்தின் நடுவில் கணுவெழுந்த பொன்மூங்கில்தண்டு நடப்பட்டு இந்திரவிழவுக்கான கால்கோள் நிகழ்த்தப்படும். ஏழுநாட்களுக்கு வைதிகர் வேதமோதி நன்னீரூற்றி அதை பேணுவார்கள். அதில் எழும் முதல் செந்நிறத் தளிரிலை இந்திரத்துவஜம் எனப்படும். இந்திரன் எழுந்தநாள் முதல் மூன்றுநாட்கள் இந்திரவிழா நடைபெறும். அது இளையோரும் வளையோரும் கூடும் காமன்விழா என்று தொன்றுதொட்டு வகுக்கப்பட்டிருந்தது.
ஆயிரமாண்டுகளுக்கு முன்பு சந்திரகுலத்து மன்னர் உபரிசிரவசு சேதிநாட்டை ஆண்டபோது அவர் அரசில் மழலைப் பிறப்பு குறையத் தொடங்கியது. படைக்கலமேந்தும் மைந்தர் இல்லாமலாயினர். பயிர்செழிக்கும் கைகளும் பானைநிறைக்கும் கைகளும் அருகின. வயல்கள் வெளிறி சத்திழந்தன. பறவைகளும் மிருகங்களும் காதல் மறந்தன. செடிகளும் மரங்களும் பூப்பதை விடுத்தன. வான்பொய்யாத வசுவின் நாட்டில் வளம்பொய்த்தது.
அமைச்சர்கள் அரசனிடம் சென்று முறையிட்டனர். நிமித்திகர் நூல்தேர்ந்து, வானின் குறிதேர்ந்து, வருநெறியுரைத்தனர். கார்வந்து வான் நிறைந்தபோதும் மின்னல்கள் எழவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். வசுவின் வானத்தில் ஊர்ந்த மேகங்களெல்லாம் நீர்கொண்டவையாக இருந்தனவே ஒழிய சூல் கொண்டவையாக இருக்கவில்லை. இந்திரன் நுகராத மேகங்களில் நீர் நிறைந்திருக்கும், அனல் உறைந்திருக்காது என்றனர். இந்திரனை எழச்செய்யும்படி அவர்கள் வசுவுக்கு வழிசொன்னார்கள்.
உபரிசிரவசு இந்திரனை எண்ணிச் செய்த கடுந்தவம் கனிந்தபோது அவருடைய தவச்சாலை முகப்பில் ஒரு பொன்னிற மூங்கில்செடியாக இந்திரன் தோன்றினான். வானில் அவன் ஏழ்நிறத்து வில்லெழுந்தது. அவன் வஜ்ராயுதம் மின்னி மின்னி மேகங்களில் அனல் நிறைத்தது. இந்திரவீரியம் பொழிந்த இடங்களில் கல்லும் கருவுற்றது. மீண்டும் சேதிநாடு மகரந்தம் செழித்த மலராயிற்று என்றனர் சூதர்.
உபரிசிரவசு அந்தப் பொன்வேணுவை நட்டு அதில் இந்திரனின் தளிர்மின்னல் கொடியை எழுப்பி முதல் இந்திரவிழாவை தொடங்கினார். அந்தப்பொன் மூங்கிலில் இருந்து முளையெடுத்து நட்ட மூங்கில்காடுகள் பாரதவர்ஷத்தின் அனைத்து நகரங்களிலும் கிழக்குக்கோட்டை வாயிலருகே இருந்தன. அவையனைத்துமே நந்தவனம் என்றழைக்கப்பட்டன. அங்கெல்லாம் இளவேனிற்காலத்தில் இந்திரவிழா எழுந்தது.
அஸ்தினபுரியின் நந்தவனத்தில் இந்திரன் சிறிய கருங்கல் கோயிலுக்குள் செந்நிறக்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பமாக வெண்பளிங்காலான ஐராவதத்தின் மீது வலக்கையில் வஜ்ராயுதமும், இடக்கையில் பாரிஜாதமும், மார்பில் ஹரிசந்தனமாலையுமாக அமர்ந்திருந்தான். அவனுக்கு இடப்பக்கம் இந்திராணியின் சிறிய செந்நிறச்சிலையும் வலப்பக்கம் உச்சைசிரவஸின் வெண்சிலையும் அமைந்திருந்தன. யானையின் காலடிப்பீடத்தில் தன்வந்திரியும் அஸ்வினிதேவர்களும் வீற்றிருந்தனர்.
விரும்பிய துணைக்காக வேண்டி மலர்வைத்தலும், மணநிகழ்வுக்குப்பின் காமநிறைவுக்கு காப்புகட்டுதலும், மைந்தர் பிறக்கும்பொருட்டு நோன்பிருத்தலும், மைந்தர்களின் வில்லுக்கும் வாளுக்கும் நாள்குறித்தலும் அங்குதான் நிகழவேண்டுமென நிமித்திகர் குறித்தனர். இந்திரனுக்கு புதுக்கரும்பும், மஞ்சளும், கோலமிடப்பட்ட புதுப்பானையின் பசும்பாலிட்ட பொங்கலும் படைத்து வணங்கினர். உழுதுபுரட்டிய புதுமண்சேற்றிலும், விதை வீசும் நாற்றடியிலும், முதல்கதிரெழுந்த வயலிலும், முதலூற்று எழும் கிணற்றிலும் இந்திரனை நிறுவி வழிபட்டனர் வேளாண்குடியினர்.
இந்திரவிழவை காளையர் நெடுநாட்களுக்கு முன்னரே நோக்கியிருந்தனர். நீராடுமிடங்களிலும் வாளாடுமிடங்களிலும் அதைப்பற்றியே கிளர்ச்சியுடன் பேசிக்கொண்டனர். இந்திரவிழா நெருங்கும்தோறும் அவர்களின் விழிகளில் ஒளியும் இதழ்களில் நகையும் ஏறின. கால்களுக்குக் கீழே மென்மேகப்பரப்பு பரந்ததுபோல் நடந்தனர். கன்னியரோ அவ்வாறு ஒரு விழவு இருப்பதையே அறியாதவர்போல நடந்துகொண்டனர். மறந்தும் ஒரு சொல்லை சொல்லிக்கொள்ளவில்லை. உயிர்த்தோழியரிடம்கூட சொல்பகிரவில்லை. ஆனால் அவர்களின் கன்னங்கள் எண்ணிஎண்ணிச் சிவந்துகொண்டிருந்தன. இதழ்கள் தடித்து வெண்விழிகள் செவ்வரியோடின. இளம்தோள்களில் மழைக்கால இலைகள் போல மெருகேறியது.
சித்திரை ஏழாம் வளர்நிலவுநாளின் அதிகாலையில் கதிர் எழுவதற்கு முந்தைய இந்திரவேளையில் அஸ்தினபுரியின் பேரமைச்சர் சௌனகர் முன்னிலையில் பன்னிரு வைதிகர் வேணுவனத்துக்குச் சென்று கணுதேர்ந்து மூங்கிலை வெட்டி பனந்தாலத்தில் வைத்து கொம்பும் குழலும் முழவும் முரசும் முழங்க ஊர்வலமாக கொண்டுவந்து இந்திரனின் ஆலயத்துக்குமுன் வைத்தனர். இந்திரன் ஆலயத்துப் பூசகர் அதன்மேல் பொற்குடத்தில் கரைத்து முந்தையநாளே ஆலயத்தில் வைக்கப்பட்டு இந்திரவீரியமாக ஆக்கப்பட்டிருந்த மஞ்சள்நீரைத் தெளித்து மலரிட்டு வாழ்த்தினர்.
கூடிநின்ற பெண்கள் குரவையிட ஆண்கள் வாட்களை உருவி மேலேதூக்கி அசைத்து வாழ்த்தொலி எழுப்ப அம்மூங்கில் இந்திரவிலாசத்தின் மையத்தில் நடப்பட்டது. ஒவ்வொருநாளும் ஏழுமுறைவீதம் இந்திரனை முழுக்காட்டி மலர்சூட்டி தூபமும் தீபமும் காட்டி பூசனைசெய்தபின் வைதிகர் அந்த மூங்கிலுக்கு வேதமோதி நீரூற்றினர். ஆறாம்நாள் மாலை அதன் கணுவில் மெல்லிய பசுந்துளி எழுந்ததைக் கண்டதும் வைதிகர் கைகாட்ட சூழ்ந்து நின்ற நகர்மக்களனைவரும் இந்திரனை வாழ்த்திக் குரலெழுப்பினர். மங்கல வாத்தியங்கள் முழங்க வைதிகர் நகரத்துத்தெருவழியாக இந்திரனுக்குரிய பொன்னிறக்கொடியை ஏந்தி நடந்து அரண்மனைக்குச் சென்று அரசனைப் பணிந்து இந்திரன் எழுந்துவிட்டதை அறிவித்தனர்.
இந்திரன் எழுந்தான் என்ற செய்தியை காஞ்சனமும் அரண்மனைப் பெருமுரசமும் இணைந்து முழங்கி அறிவித்தன. நகரமெங்கும் காவல்மாடங்களில் அமைந்த பெருமுரசுகள் தொட்டுத்தொட்டு ஒலியெழுப்பி நகரையே ஒரு பெருமுரசாக மாற்றின. அக்கணம் வரை சிறைகட்டப்பட்டிருந்த களிவெறி கடற்பறவைக்குலம் கலைந்தெழுந்தது போல பேரொலியுடன் நகரை நிறைத்தது. பொங்கி விளிம்புகவியும் பாற்கலம் போலிருக்கிறது நகரம் என்றான் சதுக்கத்தில் பாடிய சூதன். “காமதேவனுக்கு பல்லாயிரம் கைகள் முளைக்கும் நேரம். கரும்புவிற்களின் காட்டில் ரதி வழிதவறி அலையும் பொழுது. வியர்வைகள் மதமணம் கொள்ளும் புனித வேளை” என்று அவன் பாடியபோது கூடிநின்றவர்கள் நகைத்து வெள்ளி நாணயங்களை அவனுக்களித்தனர்.
அந்தி நெருங்கியபோது நகரின் ஒலி வலுத்துவலுத்து வந்தது. மீன்நெய்ப் பந்தங்கள் காட்டுத்தீ போல எரிந்த நகரத்தெருக்களில் நறுஞ்சுண்ணமும் செம்பஞ்சுக்குழம்பும் சந்தனமும் குங்கிலியமும் குங்குமமும் செந்தூரமும் களபமும் விற்கும் சிறுவணிகர் சிறுசக்கரங்களில் உருண்ட வண்டிகளில் பொருட்களைப்பரப்பி கூவியபடி முட்டி மோதினர். இற்செறிப்பை மீறிய நகரப்பெண்கள் இரவெல்லாம் வளைகுலுங்க நகைகள் ஒளிர ஆடைகள் அலைய தெருக்களில் நிறைந்து நகைத்தும் கூவியும் கைவீசி ஓடியும் துரத்தியும் அவற்றை வாங்கிக்கொண்டிருந்தனர்.
நகரத்தின் அனைத்து இல்லங்களும் விளக்கொளியில் சுடர்விட்டுக்கொண்டிருந்தன. இந்திரன் எழுந்த முரசொலி கேட்டதும் நெஞ்சு அதிரத்தொடங்கிய இளம்பெண்கள் ஒருவர் விழிகளை ஒருவர் தவிர்த்து நிலைகொள்ளாமல் சாளரங்களுக்கும் உள்ளறைகளுக்குமாக ஊசலாடினர். கைநகங்களையும் கழுத்துநகைகளையும் கடித்துக்கொண்டும் ஆடைநுனியை கசக்கிக்கொண்டும் இல்லத்துக்குள் கூண்டுக்கிளிகள் என சுற்றிவந்தனர். அவர்களின் அன்னையர் வந்து குளிக்கும்படியும் ஆடையணியும்படியும் சொன்னபோது பொய்ச்சினம் காட்டி சீறினர். அன்னையர் மீண்டும் சொன்னபோது ஏனென்றறியாமல் கண்ணீர் மல்கினர்.
சூழ்ந்துவந்த இருள் அவர்களை அமைதிகொள்ளச்செய்தது. அதன் கரிய திரைக்குள் ஒவ்வொருவரும் தனித்திருப்பதாக உணர்ந்தனர். செவ்வொளியும் காரிருளுமாக நகரம் அவர்கள் அதுவரை அறியாத பிறிதொன்றாக மாறியபோது மெல்லமெல்ல அச்சமும் தயக்கமும் மறைந்து களிகொண்டனர். அவர்களின் குரல்களும் சிரிப்பும் ஒலி பெற்றன. ஆடைகளும் அணிகளும் சூடி நகரத்தில் இறங்கியபோது அவர்கள் தாங்கள் மட்டுமே உலவும் தனியுலகொன்றை அறிந்தனர். நகரத்தெருக்கள் வழியாக அவர்கள் சென்றபோது அவர்களைத் தொட்ட ஒவ்வொரு பார்வையும் அவர்களை சிலிர்க்கச்செய்தது. ஒவ்வொரு பெண்ணும் பலநூறு பார்வைகளால் ஏந்தப்பட்டு தென்றல் சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சி போல பறந்துகொண்டிருந்தாள்.
அஸ்தினபுரியின் அரண்மனை இரவெனும் யானைமேல் அசைந்த பொன்னம்பாரி போன்றிருந்தது. அதன் சுவர்களெல்லாம் முரசுத்தோற்பரப்புகள் என அதிர்ந்தன. உள்ளறைகளில் ஓசையின்றி நடந்து கொண்டிருக்கும் சூதப்பெண்களும் சேடிகளும் பேசும் சிரிக்கும் சிணுங்கும் ஒலிகள் வலுத்துவலுத்து வந்தன. அவற்றை அவர்கள் கேட்கும்தோறும் தங்கள் பொறைகளை இழந்து விடுதலைகொண்டனர். பின்னர் அரண்மனையே பொங்கிச்சிரித்துக் குலுங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. மழைக்கால ஈசல்கள் போல ஒளிரும் சிறகுகளுடன் அரண்மனையின் இருளறைகளில் இருந்து பெண்கள் கிளம்பிக்கொண்டே இருந்தனர். அத்தனை பெண்கள் அங்கிருப்பதை ஒவ்வொருவரும் அப்போதுதான் அறிந்தனர்.
திகைப்பும் விலக்கமும் இளநகையும் நாணமுமாக இளையோரைப்பார்த்த முதியவர்கள் முதலில் கூரிய சொற்களைக்கொண்டு அவர்களை அடக்க முயன்றனர். அடக்க அடக்க எழும் களிவெறியைக் கண்டு அவர்களின் குரல்கள் தளர்ந்தன. பின் அவர்களின் குரலே களியாட்டத்தை கொண்டுவந்தது. அவர்களை நகையாடிச் சூழ்ந்தனர் இளையோர். அந்நகையாடலில் கலந்துகொள்ளாமல் அதைக் கடந்துசெல்லமுடியாதென்றான போது அவர்களும் நாணமிழந்து புன்னகை செய்தனர். பின் சிரித்தாடத்தொடங்கினர்.
அந்தப்புரத்தில் சேடிகளான சித்ரிகையும் பத்மினியும் பார்த்தனை நீராட்டி இரவுடை அணிவித்து மஞ்சத்துக்குக் கொண்டுசென்று படுக்கவைத்தனர். பட்டுப்போர்வையை அவன் இடைவரை போர்த்திய சித்ரிகை “விழிவளருங்கள் இளவரசே. நாளை நாம் இந்திரவிழவுக்குச் செல்கிறோம்” என்றாள். அர்ஜுனன் “நீங்கள் இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று ஐயத்துடன் கேட்டான். “இப்போதா? நாங்களும் துயிலப்போகிறோம்” என்றாள் சித்ரிகை. “இல்லை… நீங்கள் துயிலமாட்டீர்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “யார் சொன்னது? இதோ நான் என் கொண்டையை அவிழ்த்து கூந்தலை பரப்பிவிட்டேன். இவளும் கொண்டையை அவிழ்த்துவிட்டாள். நீராடிவிட்டு நாங்கள் துயில்வோம்” என்றாள் சித்ரிகை. “இல்லை. நீங்கள் துயிலப்போவதில்லை” என்றான் அர்ஜுனன்.
“இல்லை இளவரசே, நாங்கள் துயிலவில்லை என்றால் நாளை காலை எப்படி எழுவோம்?” என்றாள் பத்மினி. அர்ஜுனன் “எனக்குத்தெரியும் நீங்கள் இருவரும் துயிலமாட்டீர்கள்” என்றான். “ஏன்?” என்றாள் பத்மினி. “இந்த அரண்மனையில் எந்தப் பெண்ணும் இன்று துயிலமாட்டாள். எல்லாரும் சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன்னபடி பார்த்தன் கை நீட்டினான். “நீங்கள் இருவரும் வெட்கப்படுகிறீர்கள்.” பத்மினி நகைத்து “வெட்கமா? நாங்களா? எதற்கு?” என்றாள். “ஆம், இப்போதுகூட வெட்கப்படுகிறீர்கள். எனக்குத்தெரியும்” என்றான் அர்ஜுனன்.
சித்ரிகை “இனிமேலும் பேசக்கூடாது இளவரசே. இரவாகிவிட்டது. நாகங்கள் எழத்தொடங்கிவிட்டன. கண்வளருங்கள்” என்று சொல்லி அவன் விலக்கிய போர்வையை மீண்டும் போர்த்திவிட்டு “வாடி” என மெல்ல பத்மினியின் கையைத் தட்டி சொல்லிவிட்டு எழுந்தாள். அவர்கள் இருவரும் கதவை மெல்லச் சாத்தும்போது சித்ரிகை “எப்படியடி கண்டுபிடிக்கிறார்?” என்றாள். “அவர் இந்திரனின் மைந்தன் அல்லவா? இன்னும் ஒருவருடம் போனால் நாம் நினைப்பதையும் சொல்லிவிடுவார்” என்று சொன்ன சித்ரிகை மெல்லியகுரலில் ஏதோ சொல்ல பத்மினி “சீ!” என்று சொல்லி கிளுகிளுத்துச் சிரித்தாள்.
அர்ஜுனன் தன் பட்டுமஞ்சத்தில் அறைமுகடை நோக்கியபடி படுத்துக்கிடந்தான். வெளியே பெண்களின் சிரிப்புகள் வெடித்துக்கொண்டே இருந்தன. சிலம்புகள் ஒலிக்க சிலர் சிரித்துக்கொண்டே அறையைக் கடந்து ஓடினார்கள். அர்ஜுனன் மெல்ல எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்தான். இடைநாழி முழுக்க நெய்விளக்குகளின் ஒளி ததும்பிக்கிடந்தது. அவன் மரத்தரையில் சிறு காலடிகள் ஒலிக்க ஓடினான். எதிரே விளக்குடன் இரு சேடிகள் சிரித்தபடியே வந்தனர். அவர்கள் புத்தாடையும் பொன்னணிகளும் மலரும் அணிந்து இளவரசிகள் போலிருந்தனர். அவன் கதவருகே ஒளிந்து கொள்ள அவர்கள் கடந்துசென்றனர். அவர்களின் நீள்விழிகள் உதிரம் படிந்த குறுவாள்கள் போலிருந்தன.
அர்ஜுனன் படிகளில் தயங்கி நின்றபின் இறங்கி கீழ்க்கட்டின் இடைநாழியை அடைந்து திரைச்சீலைகள் அசைந்த பெரிய மரத்தூண்களில் ஒளிந்து ஒளிந்து மறுபக்கம் சென்றான். எங்கும் சிரித்துக்கொண்டே சேடிகள் சென்றுகொண்டிருந்தனர். புத்தாடைகளின் பசைமணம், தாழம்பூமணம், செம்பஞ்சுக்குழம்பின், நறுஞ்சுண்ணத்தின், கஸ்தூரியின், புனுகின், கோரோசனையின் மணம். பெண்மணம்.
குந்தியின் அறைக்கதவருகே சென்றதும் அவன் நான்குபக்கமும் பார்த்து திரைச்சீலைக்குப்பின்னால் ஒளிந்தான். கடந்துசென்ற முதியசேடி இளம்சேடிகள் இருவரிடம் “இப்போது தெரியாது. இரையை விழுங்கும்போது மலைப்பாம்புக்கு மகிழ்ச்சிதான். இரை நுழைந்து உடல் வீங்கி சுருண்டு கிடக்கும்போது தெரியும்” என்று சொல்லிக்கொண்டே சென்றாள். ஓர் இளஞ்சேடி அவளைப் பார்த்து உதட்டைச்சுழித்து “நாங்கள் சிறிய பாம்புகளைத்தான் பார்த்திருக்கிறோம். மலைப்பாம்பைப்பற்றி உங்களுக்குத்தானே தெரியும்?” என்றாள். அவளுடன் இருந்த பெண்கள் வெடித்துச்சிரித்து கைகளைத் தட்டியபடி விலகிச்சென்றனர்.
அர்ஜுனன் கதவை மெல்லத்திறந்து உள்ளே பார்த்தான். குந்தி வெண்ணிற ஆடையணிந்தவளாக மரவுரி விரிக்கப்பட்ட பீடத்தில் அமர்ந்து ஓலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். எழுதுபலகைமேல் ஏடும் எழுத்தாணியும் காத்திருந்தன. ஏழகல்விளக்கின் ஒளியில் அவள் முகம் செம்பட்டாலானதுபோலத் தெரிந்தது. அணிகளோ திலகமோ இல்லாத வெண்ணிறமான வட்டமுகம். கூரியமூக்கு. குருவிச்சிறகுகள் போலச் சரிந்து பாதிவிழிமூடிய பெரிய இமைகள். குங்குமச்செப்பு போன்ற சிறிய உதடுகள் அவள் சித்தம்போல குவிந்து இறுகியிருந்தன. கன்னங்களில் கருங்குழல்சுரிகள் ஆடிச்சரிந்திருந்தன. அவளுடைய வெண்மேலாடை காற்றிலாடியது.
அப்பால் அவளுடைய மஞ்சத்திலேயே நகுலனும் சகதேவனும் குந்தியின் புடவை ஒன்றின் இருமுனைகளைத் தழுவி உடலில் சுற்றிக்கொண்டு துயின்றுகொண்டிருந்தனர். நகுலன் புடவையின் நுனியை விரலில் சுற்றி தன் வாய்க்குள் வைத்திருந்தான். சகதேவன் எங்கோ ஓடிச்செல்லும் நிலையில் உறைந்தவன் போலிருந்தான். அவர்கள் விளையாடிக்கொண்டிருந்த இரு மரப்பாவைகள் குந்தியின் பீடத்தருகே இருந்தன. இருவரும் எப்போதுமே குதிரைகளைத்தான் விரும்பினார்கள். அவர்கள் இருவரும் ஆடிப்பாவைகள் போலிருந்தனர். நகுலன் கரிய படிமம். சகதேவன் வெண்படிமம். யார் ஆடிப்படிமம்?
அவன் கைபட்டு கதவு அசைந்தபோது குந்தி உடல் கலைந்து கூந்தலை ஒதுக்கியபடி திரும்பி அர்ஜுனனைப் பார்த்தாள். அவள் விழிகளில் ஒருகணம் வியப்பு எழுந்து மறுகணம் முகம் இயல்பாகியது. “பார்த்தா, நீ துயிலவேண்டிய நேரம் இது” என்றாள். “அன்னையே நீங்கள் அணிசெய்துகொள்ளவில்லையா?” என்றான் அர்ஜுனன். குந்தி கண்களில் சினம் எழ “என்ன கேட்கிறாய்? நான் அணிசெய்துகொள்வதில்லை என்று தெரியாதா உனக்கு?” என்றாள். “எல்லா பெண்களும் அணிசெய்துகொள்கிறார்கள்… நாளை இந்திரவிழா என்று” என்று அர்ஜுனன் சொல்லத் தொடங்கினான். என்ன சொல்வதென்று அவனுக்குத்தெரியவில்லை.
குந்தி வெளியே சென்ற சேடியை கைநீட்டி அழைத்து “மாலினி… சித்ரிகையும் பத்மினியும் எங்கே? இளவரசனை துயிலறைக்குக் கொண்டுசெல்லாமல் என்னசெய்கிறார்கள்?” என்று சினத்துடன் கேட்டாள். “அன்னையே, அவர்கள் என்னை துயிலவைத்தார்கள். நானே எழுந்துவந்தேன்” என்றான் அர்ஜுனன். “குழந்தைகள் இரவில் விழித்திருக்கலாகாது. சென்று படுத்துக்கொள்” என்று சொல்லி குந்தி மாலினியிடம் “இளவரசன் துயில்வது வரை நீ அருகிலேயே இரு” என்றாள். அவள் “ஆணை அரசி” என்று சொல்லி அர்ஜுனனை தூக்கிக் கொண்டாள்.
“இரவில் எழுந்து இங்கே வரக்கூடாது இளவரசே. அன்னை சினந்துகொள்வார்கள்” என்று மாலினி அவனிடம் சொன்னாள். “நான் பகலில் வந்தாலும் அன்னை சினம்தான் கொள்கிறார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். “என்னை அவர்கள் எப்போதுமே கண்களைச் சுருக்கித்தான் பார்க்கிறார்கள். ஏட்டில் எழுதியதை பார்ப்பதுபோல.”
மாலினி அவனுடைய அவ்வரியின் நுட்பத்தை வியந்து ஒருகணம் விழிவிரித்துப்பார்த்தாள். “ஏன் இங்கே வந்தீர்கள்? துயிலவேண்டியதுதானே?” என்றாள். “நான் தனியாகத் துயிலமாட்டேன். எல்லாரும் சிரிக்கும்போது நான் மட்டும் ஏன் துயிலவேண்டும்?” மாலினி “நாளை நீங்களும் சிரிக்கலாம்” என்றாள். “பீமன்அண்ணா எங்கே?” என்றான் அர்ஜுனன். “அவர் இந்திரனுக்கு கால்கோள் நடந்த அன்றைக்கு அரண்மனைவிட்டு கிளம்பியிருக்கிறார். மீண்டுவரவேயில்லை. யானைக்கொட்டடியிலோ சமையற்கட்டிலோ புராணகங்கையிலோ இருப்பார்” என்று மாலினி சொன்னாள்.
“நானும் யானைக்கொட்டகைக்குச் செல்கிறேன்.” மாலினி “நாளைக்குச் செல்லலாம். இன்று நீங்கள் துயிலவேண்டும்” என்றபடி அறைக்குள் சென்றாள். அர்ஜுனன் “நானும் அன்னையுடன் அந்த மஞ்சத்தில் துயில்கிறேனே?” என்று கேட்டான். “இளவரசர் ஆண்மகன் அல்லவா? அன்னையுடன் துயிலலாமா?” என்றாள் மாலினி. “அவர்களிருவரும் துயில்கிறார்களே?” என்றான் அர்ஜுனன். “அவர்கள் இன்னமும் சிறுகுழந்தைகள்தானே?”
“இல்லை” என்று அர்ஜுனன் அவள் முகத்தில் தன் சிறியகைகளால் மெல்ல அடித்தான். “இல்லை, நான் அறிவேன். அவர்கள் பெரிய குழந்தைகள். பெரியகுழந்தைகளாக ஆனபிறகும் அன்னையுடன் துயில்கிறார்கள் என்று சேடிகள் கேலிசெய்து பேசிக்கொண்டதை நான் கேட்டேன்.” மாலினி புன்னகைத்து “பெண்கள் அப்படி பேசிக்கொள்வார்கள் இளவரசே. அவர்கள் இருவரும் சிறியவர்கள். கனவு கண்டு எழுகையில் அருகே அன்னை இல்லையேல் அழுகிறார்கள். ஆகவேதான் அவர்களை அங்கே படுக்கவைத்திருக்கிறார்கள் அரசி” என்றாள்.
அர்ஜுனன் தன் மார்பின்மேல் கைவைத்து “நானும்கூடத்தான் இரவில் கனவு கண்டு எழுந்து அழுகிறேன். என்னை இதுவரை படுக்கவைத்ததே இல்லையே?” என்றான். கையைக் குவித்து சிறிய அளவு காட்டி “நான் இவ்வளவு சிறியவனாக இருக்கையிலும் கூட என்னை படுக்கவைத்ததே இல்லை” என்றான்.
அவனுக்குள் சொற்கள் நெருக்கியடித்தன. “அவர்களை அன்னை முத்தமிடுகிறார்கள். அவர்களிடம் அன்னை சிரித்துப்பேசிக்கொண்டே இருக்கிறார்கள். என்னிடம் ஒருபோதும் சிரித்துப்பேசுவதில்லை. என்னை முத்தமிட்டதே இல்லை. அவர்களுக்கு அன்னை சோறூட்டுவதைக்கூட நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் சோறூட்டவேண்டுமென்று கேட்டேன். சேடியைக் கூப்பிட்டு எனக்கு உணவு அளிக்கும்படி சொன்னார்கள்.”
அர்ஜுனன் அகவிரைவால் சற்று திக்கும் நாவுடன் சொன்னான் “நான் மூத்தவரிடம் கேட்டேன். அவர்களிருவரும் இளைய அன்னை மாத்ரியின் மைந்தர்கள். அவர்களை அன்னையிடம் ஒப்படைத்துவிட்டுப்போனதனால் அன்னை அவர்களை மடியிலேயே வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார். நானும் மாத்ரியன்னையின் மைந்தனாக ஆகிறேனே என்று நான் கேட்டபோது ‘மூடா’ என்று சொல்லி என் தலையைத் தட்டி சிரித்தார்.”
மாலினி பேச்சை மாற்றும்பொருட்டு “நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்” என்றாள். அர்ஜுனன் கண்களை விழித்து நோக்கியபின் கைகளை அசைத்து “என்ன கதை?” என்றான். “வில்வித்தையின் கதை” என்றாள் மாலினி. “சரத்வானின் கதையா?” என்றான் அர்ஜுனன். “இல்லை பரசுராமரின் விஷ்ணுதனுஸை ராமன் நாணேற்றிய கதை” மாலினி சொன்னாள்.
அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை அவள் கண்டு உதட்டுக்குள் புன்னகைத்துக்கொண்டாள். அவனை படுக்கையில் படுக்கச்செய்து தலையை நீவியபடி கதைசொல்லத்தொடங்கினாள். “முற்காலத்தில் விஸ்வகர்மாவான மயன் பராசக்தியின் புருவத்தைப் பார்த்து அதே அழகுள்ள இரண்டு மாபெரும் விற்களைச் செய்தான். ஒன்றை சிவனுக்கும் இன்னொன்றை விஷ்ணுவுக்கும் அளித்தான். சிவதனுஸ் இறுதியாக மிதிலையை ஆண்ட ஜனகரிடம் வந்துசேர்ந்தது. விஷ்ணுதனுஸ் பரசுராமரின் கையில் இருந்தது. சிவதனுஸ் ஷத்ரிய ஆற்றலாகவும் விஷ்ணுதனுஸ் நூற்றெட்டு ஷத்ரியகுலங்களை அழித்த பிராமண ஆற்றலாகவும் இருந்தது.”
விழிகளில் கனவுடன் அர்ஜுனன் “உம்” என்றான். “தன் மகளை ஷத்ரியர்களில் முதன்மையானவன் எவனோ அவனே அடையவேண்டும் என்று எண்ணிய ஜனகர் சிவதனுஸை வளைப்பவனுக்கே தன் மகள் ஜானகியை அளிப்பதாக அறிவித்தார். அந்த சுயம்வர அறிவிப்பைக் கேட்ட விஸ்வாமித்திர முனிவர் ராமனையும் தம்பி லட்சுமணனையும் அழைத்துக்கொண்டு மிதிலைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய பீடத்தில் சிவதனுஸ் வைக்கப்பட்டிருந்தது. முன்பு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி என்ற பாதாள நாகத்தைத்தானே மந்தரமலையைச்சுற்றி வடமாகக் கட்டினார்கள்? அந்த வாசுகியைப்போல கன்னங்கரியதாக மிகப்பெரிதாக இருந்தது அந்த வில்.”
அர்ஜுனன் தன் பெரிய இமைகளை மூடித்திறந்தான். “அந்த வில்லைக் கண்டதுமே அத்தனை ஷத்ரியர்களும் திகைத்து அஞ்சி இருக்கைகளிலேயே அமர்ந்துவிட்டனர். அதைக்கண்டு ஜனகர் வருந்தினார். தன் மகளுக்கு மணமகனே அமையமாட்டானோ என எண்ணினார். அப்போது ராமன் கரிய மழைமேகம் மின்னலுடன் வருவதுபோல புன்னகைசெய்தபடி வில்மேடைக்கு வந்தான். அவன் அந்த வில்லை நோக்கிக் குனிந்ததைத்தான் அங்கிருந்தவர்கள் கண்டார்கள். அதை எடுத்து நாணேற்ற முயன்றபோது அவன் ஆற்றல் தாளாமல் அது இடியோசை போல ஒடிந்தது. அங்கிருந்த ஷத்ரியர்களெல்லாம் பதறி எழுந்தபின்னர் நடந்தது என்ன என்று அறிந்து வாழ்த்தொலி எழுப்பினர்.”
உளஎழுச்சியால் உடலைக்குறுக்கிக் கொண்டு மூச்சடக்கி “பிறகு?” என்றான் அர்ஜுனன். “பிறகு ஜானகியை ராமனுக்கு பரிசாக அளித்தார்கள்” என்றாள் மாலினி. சிந்தனையுடன் தலையைச் சரித்து ஒருவிரலை நீட்டிக்காட்டி “ஒரே ஜானகியையா?” என்றான் அர்ஜுனன். “ஏன் ஜானகி ஒருத்திதானே?” என்றாள் மாலினி. “அத்தனை பெரிய வில்லை உடைத்தாலும் ஒரே மனைவியைத்தானா கொடுப்பார்கள்?” என்று அர்ஜுனன் கேட்டான்.
வெடித்தெழுந்த சிரிப்புடன் குனிந்து அவனை முத்தமிட்டு “இந்தக்கேள்வியிலேயே தெரிகிறதே இளவரசே, நீங்கள் இந்திரனின் மைந்தர் என்று” என்றாள். “ஆனால் ராமன் விஷ்ணு அம்சம். அவன் இந்திரன் மைந்தன் என்றால் மிதிலையிலுள்ள அத்தனை பெண்களையும் மணம்செய்து பெரிய தேர்களில் ஏற்றி கொண்டுவந்திருப்பான்.” அவளுடைய முத்தத்தில் அவன் உடல்கூச தோள்களைக் குறுக்கிக்கொண்டு சிரித்தான். “எங்கள் கருமுத்தே… எத்தனை பெண்களை பித்திகளாக்கப்போகிறீர்களோ?” என்றாள் மாலினி. “போ” என்றான் அர்ஜுனன்.
ஓவியம்: ஷண்முகவேல்
அர்ஜுனன் அவள் முகத்தைப் பிடித்து திருப்பி “பரசுராமர் என்ன செய்தார்?” என்று கேட்டான். “தசரத ராமன் என்ற ஷத்ரியன் சிவதனுஸை ஒடித்த செய்தியைக் கேட்டதும் பரசுராமர் கடும் கோபம் கொண்டார். பிராமண வீரியத்தை நிலைநாட்டுவதற்கு உறுதிகொண்டார். தன் விஷ்ணுதனுஸை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்து ராமனைப் பார்க்கவந்தார். அவர் நடந்து வந்த ஓசையில் மலைப்பாறைகள் எல்லாம் அதிர்ந்து உருண்டன. காட்டுமரங்களில் இருந்த குரங்குகளும் கரடிகளும் பிடிவிட்டு உதிர்ந்தன” என்றாள் மாலினி. “பிறகு?” என்று கேட்டபடி அர்ஜுனன் எழுந்து அமர்ந்துவிட்டான். அவன் முகமும் உடலும் அக்கேள்வியில் கூர்மைகொண்டிருந்தன.
மாலினி சொன்னாள். “காட்டில் ராமன் தன் தந்தை தசரதனுடனும் தம்பியுடனும் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது பரசுராமர் ‘நில்! நில்!’ என்று பெருங்குரல் கொடுத்தபடி வந்து அவனை நிறுத்தினார். ‘நீ சிவதனுஸை ஒடித்தாய் என்று அறிந்தேன். என்னுடன் இக்கணமே போருக்கு வா’ என்றார். ‘நான் எதிரிகளுடனேயே போரிடுவேன். தாங்கள் என் குருநாதர். பிராமணர். தங்களுக்கெதிராக என் வில் நாணேறாது’ என்றான் ராமன்.”
“பரசுராமர் சினத்துடன் ‘ஆற்றலிருந்தால் இதோ என் விஷ்ணுதனுஸ். இதை வளைத்து நாணேற்று. இதில் நீ தோற்றால் உன்னைக்கொல்ல இதுவே எனக்குப் போதுமான காரணமாகும்’ என்றார். தசரதன் ‘பிராமணோத்தமரே, என் மைந்தன் சிறுவன். அவன் தெரியாமல் செய்தபிழையை பெரியவராகிய நீங்கள் பொறுத்தருளவேண்டும்’ என்று கூறி பரசுராமனை வணங்க ‘இது வீரர்களின் போர், விலகு மூடா’ என்று பரசுராமர் முழங்கினார். ராமன் வணங்கி குருநாதர்களுக்கு நிகராகிய அவருடன் போட்டியிடுவதை விரும்பவில்லை என்றான். ‘அப்படியென்றால் நீ கோழை என்று ஒப்புக்கொள்’ என்றார் பரசுராமர்.”
“ராமர் என்ன செய்தார்?” என்றான் அர்ஜுனன். “ராமன் ‘பிராமணோத்தமரே, என்குலம் தோற்றதென்றாவதை விட நான் மரணத்தையே விழைவேன். வில்லைக்கொடுங்கள்’ என்று அந்த வில்லை கையில் வாங்கினான். அந்தவில் ஆதிசேடனைப்போல் பெருந்தோற்றம் கொண்டிருந்தது. ராமன் அதை கையில் வாங்கியதும் அது பச்சைப்பாம்பு போல ஆகியது. அவன் கையில் அது வெண்ணைபோல உருகி வளைந்தது” என்றாள் மாலினி.
அர்ஜுனன் கைகளை ஆட்டியபடி மெத்தைமேல் எம்பிக்குதித்தான். “பரசுராமர் தோற்றார்… பரசுராமர் தோற்றார்” என்று கூவினான். மெத்தையை கைகளால் அடித்தும் காலால் உதைத்தும் “ராமர் வென்றார். ஷத்ரியர் வென்றார்!” என்று எக்களித்தான்.
மாலினி சிரித்தபடி சொன்னாள் “அன்றோடு பூமியில் பிராமணவீரம் முடிந்தது. ஷத்ரிய யுகம் மீண்டும் தொடங்கியது. ராமன் வில்லை பரசுராமரிடம் திருப்பிக்கொடுத்து ‘பிராமண ராமனே, உங்கள் பிறவிநோக்கம் முடிந்தது, தென்னிலத்தில் மகேந்திரமலைக்குச் சென்று தவம்செய்து விண்ணுக்குச்செல்லும் வழிதேருங்கள்’ என்றான்.”
“பரசுராமர் ‘ஷத்ரியராமனே, இவ்வில்லை இத்தனை பெரிதாக என் கையில் வைத்திருந்தது என் ஆணவமே. என் ஆணவத்தை அழித்தாய். நீ விஷ்ணுஅம்சம் என இன்றறிந்தேன். என் யுகம் முடிந்து உன் யுகம் பிறந்துவிட்டிருக்கிறது. அது வளர்க!’ என்றார். அந்தவில்லை அவர் திரும்பி வாங்கியபோது அது சிறிய பாம்புக்குஞ்சாக ஆகியது. அதை தன் கையில் பவித்ரமாக கட்டிக்கொண்டு அவர் திரும்பிநடந்தார்.”
மாலினி சொல்லிமுடித்ததும் “ராமர் அதன்பின் என்ன சொன்னார்?” என்று அர்ஜுனன் கேட்டான். “அதை நாளைக்குச் சொல்கிறேன். இன்று நீங்கள் இதையே எண்ணிக்கொண்டு துயில்க” என்று மாலினி சொல்லி அவனை படுக்கவைத்து போர்வையால் மீண்டும் போர்த்திவிட்டாள்.
மாலினி கதவை நோக்கிச் சென்றபோது பார்த்தன் “நான் மீண்டும் பிறந்தால் அன்னையிடம் சென்று படுக்க முடியுமா?” என்றான். அவள் திரும்பிப்பார்த்து “துயிலுங்கள் இளவரசே” என்றபின் கதவை மூடினாள்.