வண்ணக்கடல் - 34
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
[ 9 ]
இரவு பந்தங்களின் படபடப்புடன், காலடிகளுடன், மெல்லிய பேச்சொலிகளுடன், துயில்கலைந்த பறவைகளின் சிறகோசையுடன் சூழ்ந்து கனத்துக்கொண்டிருந்தது. பாஞ்சாலத்தின் படைவீரர்கள் ஒருவர் பலராக வந்து துரோணரைச்சுற்றி கூடிக்கொண்டிருந்தார்கள். ஒன்றிலிருந்து ஒன்றாகக் கொளுத்தப்பட்ட பந்தங்கள் தூண்கள் தோறும் பரவி அரண்மனை முற்றம் ஒளிகொண்டது. அடிக்குரல்பேச்சுகள் ஒன்றோடொன்று கலந்து கூரைக்குவைகளில் ஒலிக்கும் பொருளற்ற குரல்முழக்கமாக மாறின.
இரவேறியபோது பனி விழத்தொடங்கியது. நின்றுகளைத்த வீரர்கள் பலர் ஆங்காங்கே வேல்களையும் விற்களையும் மடியில் வைத்து அமர்ந்து கொண்டனர். நடுவே துரோணர் அதேபோன்று தர்ப்பையை அணைத்து கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தார். காவல்நாயகம் அவர் அருகே சென்று “உத்தமரே, அடியேன் அளிக்கும் நீரை அருந்தி அருள் புரியவேண்டும்” என்றார். அவர் மிகமெல்ல தலையை மட்டும் அசைத்து மறுத்தார். காவல்நாயகம் தலைவணங்கி பின்னகர்ந்தார்.
“இன்னொரு முறை அரசரிடம் சென்று சொன்னாலென்ன?” என்றார் ஒரு முதிய வீரர். “அதற்கான அதிகாரம் நமக்கில்லை” என்று காவல்நாயகம் விடையிறுத்தார். “பேரமைச்சருக்கே நான் சென்று செய்தி சொன்னேன். அரசர் ஆணையிட்டபின் மஞ்சத்துக்குச் சென்றுவிட்டார்.” ஒருவன் இருளில் இருந்து “மதுவருந்தியிருப்பார். கூடவே தாசியும் இருப்பாள். அவரை இங்கே சுமந்துதான் கொண்டுவரவேண்டும்” என்றான். காவல்நாயகம் உரக்க இருளை நோக்கி “அரசநிந்தை இங்கே தேவையில்லை. அதற்கு வாளால் விடைசொல்லப்படும்” என்றார். இருளுக்குள் இருந்த வீரர்களின் உடல்களின் அசைவு அதற்கு எதிர்வினையளித்தது.
விடியும்போது அரண்மனை முற்றமெங்கும் வீரர்களும் அரண்மனைச்சேவகரும் கூடியிருந்தனர். பிரம்மமுகூர்த்தத்தில் அரண்மனையின் உச்சியில் தர்மகண்டம் என்னும் மணி ஒலித்தது. நகரமெங்கும் பெருமுரசுகள் ஒலிக்கத் தொடங்கின. அரண்மனையின் முகப்பில் மங்கலபூசைக்காக வந்த தாசியர் கூட்டத்தைக் கண்டு திரும்பிச்சென்றனர். உள்ளிருந்து சேவகர்களும் அடைப்பக்காரனும் தொடர விரைந்து வந்த பேரமைச்சர் பத்மசன்மர் தன் சால்வையைப் போர்த்தியபடி “என்ன நிகழ்கிறது இங்கே?” என்றார்.
கூட்டத்தில் எவரோ “நேற்று சொல்லப்பட்டதை மறந்திருப்பார். யவன மது வல்லமை மிக்கது” என்று சொல்ல சிலர் சிரித்தனர். பத்மசன்மர் சினத்துடன் திரும்பிப்பார்த்துவிட்டு “இது மன்னர் துயிலெழும் நேரம். இச்செய்தியை அறிந்தால் அவர் கடும் சினம்கொள்வார். வீரர்களே, இந்த ஒற்றை ஷத்ரியனை விலக்க உங்களால் முடியவில்லையா?” என்றார். “ஆம், முடியவில்லை. அதுதான் உண்மை” என்றார் காவல்நாயகம். சூழ்ந்திருந்த பாஞ்சாலவீரர்கள் நகைத்த ஒலி அலைபோல எழுந்து பரவியது.
“அவனைப் பிடித்து சிறையிலடைக்க ஆணையிடுகிறேன்” என்று பத்மசன்மர் கூவினார். “அந்த ஆணையை கொள்கையளவில் முழுதேற்றுக்கொள்கிறது பாஞ்சாலத்தின் படை. அது வாழ்க!” என்று யாரோ ஒருவன் சொல்ல அனைத்துவீரர்களும் வெடித்துச்சிரித்தனர். பத்மசன்மர் சினத்துடன் சுற்றும் பார்த்துவிட்டு கையைத் தூக்கி துடிக்கும் உதடுகளுடன் ஏதோ சொல்லப்போனார். காவல்நாயகம் “அமைச்சரே, களநெறிப்படி தனியாக வந்து நிற்கும் ஒருவரை தன்னந்தனியாகவே எதிர்கொள்ளவேண்டும். படைகளைக்கொண்டு எதிர்கொள்வதை பாஞ்சாலத்தின் ஐந்துகுலங்களும் ஏற்காது. தன்னந்தனியாக இவரை எதிர்கொள்ளும் ஆற்றலுள்ளவர்கள் பரசுராமரும் பீஷ்மரும் சரத்வானும் மட்டுமே. அவர்களில் எவரையாவது கொண்டுவர முடிந்தால் நன்று” என்றார். சூழநின்றவர்கள் நகைக்க பத்மசன்மர் சினத்தால் ததும்பிய உடலுடன் நாற்புறமும் செல்லமுனைபவர் போல தவித்தபின் திரும்பி விரைந்தார்.
துரோணர் அங்கே இல்லை என்றே தோன்றியது. தர்மகண்டத்தின் ஒளியிலேயே அவரது பார்வை நிலைத்திருந்தது. அந்த மணியின் வளைவில் முதல்செவ்வொளி எழுந்தது. கீழ்வான் முழுக்க செங்கீற்றுகள் நீண்டு பரந்தன. அரண்மனை முகடுகளிலிருந்து வெண்புறாக்கள் துயிலெழுந்து குறுகியபடி குட்டைச்சிறகு படபடக்க காற்றில் எழுந்து முற்றத்தை அடைந்து சிற்றடி வைத்து கொத்திப்பொறுக்கத் தொடங்கின. காகங்களும் கொக்குகளும் அரண்மனைமுற்றத்தைக் கடந்து சென்றன. அரண்மனை முகப்பின் பெரிய வேப்பமரத்தின்மேல் வந்தமர்ந்த காகங்கள் குரலெழுப்பின. அரண்மனையின் வெண்மாடக்குவை பட்டுபோல ஒளியுடன் துலங்கி வந்தது. அதன் கொடி காலையின் காற்றில் துவண்டு அசைந்தது.
முற்றத்தின் செங்கல்பரப்பின் செம்மையும் சுதைச்சுவர்களின் வெண்மையும் கூடிநின்றவர்களின் ஆடைகளின் சிவப்பு, மஞ்சள், நீல, பச்சை வண்ணங்களும் காலையின் மணிவெளிச்சத்தில் கண்கூசாமல் துலங்கிவந்தன. காலையில் அரண்மனையைச்சுற்றியிருந்த தெருக்களெங்கும் செய்தி பரவ ஷத்ரியர்களும் வைசியர்களும் வேளாண்குடிமக்களும் வந்தனர். பின்னர் அங்காடிவீதிகளிலும் படித்துறைகளிலும் இருந்து எளியமக்கள் வந்து கூடினர். வியர்வை வாசமும் தாம்பூலவாசமும் கலந்து இளவெயிலில் எழுந்தன.
முதலில் சிருஞ்சயகுலத்தலைவர் கரவீரர் தன் இருமைந்தர்களுடன் எருது வண்டியில் வந்திறங்கினார். சிருஞ்சயர்கள் அவருக்கு வாழ்த்துரை கூவினர். அவர் பாஞ்சாலத்தின் கொடியை தலைதூக்கி கைகூப்பி வணங்கியபின் திரும்பி நெற்றிமேல் கையை வைத்து பழுத்தவிழிகளால் அங்கே கூடிநின்றவர்களைப் பார்த்துவிட்டு துரோணரின் அருகே வந்து அவரை வணங்கினார். “உத்தமரே, பாஞ்சாலம் தங்களை வணங்குகிறது. எதற்காகவென்றாலும் இந்தமண்ணில் பரத்வாஜரின் மைந்தர் கால்வைத்தது எங்கள் நல்லூழே. தங்கள் விருப்பப்படி இப்போதே அரசரை இங்கே வரச்சொல்கிறேன்” என்றார்.
துரோணர் கைகூப்பி தலைவணங்கினார். கரவீரர் மெல்லிய குரலில் தன் மைந்தன் கருஷனுக்கு ஆணையிட அவன் குதிரையில் ஏறி அரண்மனை நோக்கிச் சென்றான். ஒருவன் மரத்தாலான சிறிய பீடத்தைக் கொண்டுவந்து கரவீரர் அமர்வதற்காகப் போட்டான். அவர் அமர்ந்துகொண்டு தன் நரைத்த பெரிய மீசையை நீவியபடி தலைகுனிந்திருந்தார்.
கருஷன் வருகைக்காக கூட்டமே காத்து நின்றிருந்தது. அரண்மனை முற்றத்தைக் கடந்து அவன் வந்தபோது முண்டியடித்து நெருங்கியது. கருஷன் இறங்கி “தந்தையே, அரசர் என்னைப்பார்க்க மறுத்துவிட்டார். அவர் நீராடிக்கொண்டிருப்பதாகவும் அதன்பின் அமைச்சர்களுடன் அவர் புதிய தீர்வைமுறை பற்றி பேசவிருப்பதாகவும் செயல்நாயகம் சொன்னார்” என்றான். கூடிநின்றவர்கள் சேர்ந்து ஒலியெழுப்ப பின்னால் நின்ற ஒருவர் உரக்க “வர மறுக்கிறார்!” என்றார். பின்வரிசைக்கூட்டம் பெருவிலங்கு உறுமுவதுபோல ஒலியெழுப்பியது.
கரவீரர் “பாஞ்சாலர்களே, அரசநெறிகளில் முதன்மையானது ஒன்றுண்டு. தர்மத்தின் முன் ஒரு தனிமனிதனுக்கு அரசு நிகரானது என்பதே அது. அரசை எதிர்த்து நிற்கும் ஒருவன் எவனாக இருந்தாலும் அரசு அவன் முன் வந்து நின்று விடை சொல்லியாகவேண்டும். அந்தத் தொல்நெறியை அரசர் இங்கே மதிக்கவில்லை. ஆவன செய்வோம்” என்றார். கூட்டம் கைகள் தூக்கி “ஆம்… ஆம், அதைச்செய்யுங்கள்” என்றது.
கரவீரர் தன் மைந்தர்களிடம் ஆணையனுப்ப சற்றுநேரத்திலேயே கிருவிகுலத்தலைவர் சக்ரபானு தன் மைந்தர் குதிரையில் தொடர பல்லக்கில் வந்து இறங்கினார். சோமககுலத்தலைவர் புருஜனர் இருவர் தூக்கி வந்த துணி மஞ்சலில் வந்து மெல்ல அவர்களால் தூக்கி இறக்கப்பட்டார். துர்வாசகுலத்தலைவர் சத்ருஞ்சயரும் அவரது எட்டு மைந்தர்களும் குதிரையில் வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களின் குலத்தவர் வாழ்த்துரை எழுப்பினர். அவர்கள் கேசினி குலத்தலைவர் அஸ்வதத்தருக்காகக் காத்திருந்தனர். சற்றுநேரத்தில் அவரது எருதுவண்டி கூட்டத்தின் மேல் படகு போல அலைக்கழிந்தபடி வந்தது.
ஐந்து குலத்தலைவர்களும் அவர்களின் மைந்தர்களால் சுவர்போலச் சூழப்பட்டு தனித்து நின்று மெல்லிய குரலில் பேசிக்கொண்டனர். கூட்டம் மெல்ல அமைதியடைந்து மூச்சுகளும் தும்மல்களும் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. அவர்கள் பேசிமுடித்ததும் கரவீரர் ஒரு வெற்றிலையை எடுத்து ஐந்தாகக் கிழித்தார். அதன் நான்கு துண்டுகளை புருஜனருக்குக் கொடுக்க அவர் அதில் மூன்றை சக்ரபானுவிடம் அளித்தார். சக்ரபானு இரு துண்டுகளை சத்ருஞ்சயருக்குக் கொடுக்க அவர் ஒருதுண்டை அஸ்வதத்தருக்குக் கொடுத்தார்.
மிக அமைதியாக நிகழ்ந்த அந்தச்சடங்கு முடிந்ததும் புருஜனர் உரக்க “பாஞ்சாலர்களே, ஐங்குலத்தலைமையின் ஆணை இது. இக்கணமே பாஞ்சாலநாட்டு அரசர் துருபதன் இங்கே வந்தாகவேண்டும். தன் மணிமுடியுடனும் செங்கோலுடனும் உடைவாளுடனும் அரசியுடனும் வந்து எங்கள் முன் நிற்கவேண்டும். வரமறுப்பாரென்றால் அவரது தலையை வெட்டி ஒரு தாலத்தில் வைத்து அதை வெற்றிலையால் மூடி இங்கே கொண்டுவரும்படி ஐந்துகுலத்துப் பாஞ்சாலர்களுக்கும் இதனால் ஆணையிடப்படுகிறது” என்றார். கூட்டம் முழுக்க ஒரு மெல்லிய உறுமல் பரவிச்சென்றது.
கருஷன் தலைமையில் பாஞ்சாலவீரர்கள் ஏழுபேர் உடைவாட்களை உருவி காலையொளியில் அவை ஒளிவிட்டு கதிர் எழுப்ப தூக்கியபடி அரண்மனை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் செல்வதை நோக்கியபடி கூட்டம் அமைதியாக நின்றது. கால்மாற்றிக்கொண்டவர்களின் படைக்கலங்கள் உடலில் உரசி ஒலித்தன. சிலகுதிரைகள் செருக்கடித்தன. ஓர் எருது காலெடுத்து வைக்க வண்டி முனகியது. அதை வண்டியோட்டி தார்க்குச்சியால் மெல்லத் தட்டி அமைதிப்படுத்தினான். நடுவே கற்சிலை என துரோணர் நின்றார்.
கூட்டத்திலிருந்து ஒற்றை ஒலி எழுந்தது. அரண்மனை முகப்பில் துருபதன் செங்கோலும் மணிமுடியும் உடைவாளுமாகத் தோன்றினான். அவனுக்குப்பின்னால் அவனது பட்டமகிஷியும் அமைச்சர்களும் வர இருபக்கமும் உடைவாட்களை ஏந்தியபடி பாஞ்சாலத்து வீரர்கள் வந்தனர். “இதுவரை ஒளிந்திருந்தார்!” என யாரோ சொல்ல பிறர் அவரை அடக்கினர். சாய்ந்து விழுந்த காலைவெயிலில் துருபதனும் அவன் அரசியும் அணிந்திருந்த அணிகளும் ஆடைகளும் பொன்னிறச் சுடர்விட்டன.
ஓவியம்: ஷண்முகவேல்
அருகே வரும் துருபதனை துரோணர் திரும்பி நோக்கினார். அது வேறுயாரோ என்ற துணுக்குறலை ஒருகணம் அவர் அடைந்தார். கனத்த பண்டியும், சூம்பிய கைகளும், தசைவளையங்களால் ஆன இடுங்கிய கழுத்தும், தொங்கிய கன்னங்களும், கீழிமை தளர்ந்த பழுத்த விழிகளுமாக ஆடியாடி நடந்து வந்த துருபதனில் அவர் நன்கறிந்த ஏதோ ஒன்றுதான் எஞ்சியிருந்து அது அவன் எனக் காட்டியது.
அவன் அருகே வந்தபோது அது என்ன என்று அவர் அறிந்தார். அவனிடம் எப்போதுமே இருக்கும் சூழ்ச்சி தெரியும் உடலசைவு அது. முதன்மையான எதையோ சொல்லவந்து தயங்குபவன் போன்ற பாவனை. அது தன் கோழைத்தனத்தை மறைக்கவிரும்பும் கோழையின் அசைவு. முதல்முறையாக அவனைப்பார்த்த நாளில் அவன் ஓடிவந்து தன் காலில் விழுந்து எழுந்தபோதே தன் அகம் அதை கண்டுகொண்டிருந்தது என அப்போது அறிந்தார். ஒவ்வொருமுறையும் அதை தள்ளி அகற்றியபின்னர்தான் அவனுடன் அவர் நெருங்கினார். அப்போது அது மட்டுமாகவே அவன் தெரிந்தான்.
துருபதன் இரு கைகளையும் கூப்பியபடி, வாய் திறந்து தாம்பூலத்தால் சிவந்த பற்கள் தெரிய நகைத்தபடி, இருபக்கமும் உடலைச் சமன்செய்பவன்போல ஆடிக்கொண்டு நடந்து வந்தான். அவனது அமைச்சர்கள் திகைப்பும் அச்சமும் கலந்த காலடிகளுடன் இருபக்கமும் உருவிய வாளுடன் வரும் வீரர்களை திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டு வந்தனர். கருஷன் மெல்ல குனிந்து துருபதனிடம் துரோணரைக் காட்டி ஏதோ சொல்ல அவன் தலையசைத்தான்.
துரோணர் துருபதனையே பார்த்துக்கொண்டிருந்தார். அக்னிவேச குருகுலத்தில் கற்ற அனைத்தையும் முழுமையாகவே உதறிவிட்டு அவன் யாரோ அதற்குத் திரும்பிச்சென்றுவிட்டதை அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் காணமுடிந்தது. அவன் வில்லைத்தொட்டே பலவருடங்கள் கடந்திருக்கும். நாளெல்லாம் மதுவிலும் போகத்திலும் மூழ்கியிருக்கிறான் என்றும் சூழ்ச்சிகளில் மட்டுமே அவனுக்கு ஈடுபாடிருக்கிறது என்றும் தெரிந்தது. அவனைச்சூழ்ந்து வந்த அவன் அமைச்சர்கள் அனைவருமே உடலசைவுகளிலும் முகபாவனைகளிலும் அவனைப்போலவே இருந்தனர். அவனை அவன் மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை அவன் வந்தபோது எழுந்த வலுவற்ற உதிரி வாழ்த்தொலிகள் காட்டின.
அருகே வந்தபோது ஒருகணம் துருபதன் பார்வை துரோணரை வந்து தொட்டு அதிர்ந்து விலகிக்கொண்டது. மிகையான இயல்பு பாவனையுடன் அவன் ஐந்து குலத்தலைவர்களையும் கைகூப்பி தலைவணங்கி “ஐங்குலத்தலைவர்களும் ஆணையிடும்படி என்ன ஆயிற்று என்று அடியேன் அறியேன். தாங்கள் அரண்மனைக்கு வராமல் முற்றத்தில் நிற்பது என் உள்ளத்தை வருத்துகிறது” என்றான்.
அந்த செயற்கைத்தன்மையைக் கண்டு தன்னை அறியாமலேயே முகம் சுளித்த புருஜனர் சத்ருஞ்சயரை நோக்கி முகம் திருப்பியபடி “அரசே, பரத்வாஜரின் மைந்தரும் அக்னிவேசகுருகுலத்து மாணவருமான இவரை தாங்கள் அறிவீர்களா?” என்றார். துருபதன் அப்போதுதான் துரோணரை பார்ப்பதுபோல திரும்பி நோக்கி கண்களைச் சுருக்கி கூர்ந்தபின் செயற்கையான வியப்புடன் “இவரா?” என்றான். பின்னர் “ஆம், இவரை நான் அறிவேன். மிகவும் மாறியிருக்கிறார்” என்றான்.
“இவர் அக்னிவேச குருகுலத்தில் உங்கள் சாலைமாணாக்கர் என்கிறார். இவரை தாங்கள் அறியமாட்டீர்கள் என்று சொன்னதாக சேவகர்கள் சொல்கிறார்கள்” என்றார் சக்ரபானு. “குலத்தலைவர்களே, அக்னிவேச குருகுலம் பெரியது. பலநிலைகளில் பல பருவங்களில் அங்கே மாணாக்கர்கள் பயின்றார்கள். இவர் அங்கே என்னுடன் இருந்ததை இப்போது இவரது கண்களை நோக்கும்போது நினைவுகூர்கிறேன். ஆனால் பெயரையும் குலத்தையும் என்னால் நினைவுகூர இயலவில்லை. ஆகவேதான் சேவகர்களிடம் இவரை நான் அறியேன் என்றேன்” என்றான் துருபதன். புன்னகையுடன் “அரியணையிலமர்ந்தவனை அறிவோம் என்று சொல்லி ஒவ்வொருநாளும் பலர் வந்துகொண்டிருப்பது இயல்பு. அத்தனைபேரையும் நான் சந்திப்பதும் நடவாதது. சேவகர்களிடம் அதை நீங்களே கேட்டறியலாம்” என்றான்.
“தங்கள் விருப்பப்படி இதோ பாஞ்சாலமன்னரை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம் உத்தமரே” என்றார் புருஜனர். “தாங்கள் தங்கள் வினாக்களை எழுப்பலாம்” என்று சத்ருஞ்சயர் சொன்னார். துரோணர் தன் முன் நின்றிருந்த துருபதனை நோக்கியபோது அவரை அறியாமலேயே முகம் அருவருப்பால் சுளித்தது. “உங்கள் மன்னரிடம் நான் கேட்பது ஒன்றே” என்றபடி தன் கையிலிருந்த தர்ப்பையை எடுத்து நீட்டினார். “இது புல். இம்மண்ணிலேயே மிகமிக எளியது. ஆனால் இதுவே இம்மண்ணின் உயிர். என்றும் அழியாத இதன் வேரை எண்ணி, இதனுள் ஓடும் அனலை எண்ணி இதைத்தொட்டு உங்கள் மன்னர் ஆணையிடவேண்டும். அவர் எனக்கு அவரது நாட்டின் பாதியை அளிப்பதாக வாக்களித்தாரா இல்லையா என்று.”
அச்சொற்களைக் கேட்டு ஐந்துகுலத்தலைவர்களும் திகைத்து சொல்லிழந்து நின்றனர். கூட்டமெங்கும் மூச்சலை ஒன்று எழுந்தது. சத்ருஞ்சயர் கைகளை நீட்டி ஏதோ சொல்ல முயல புருஜனர் அவரைத் தொட்டுத் தடுத்து “அரசரே விடைசொல்லட்டும்” என்றார். துருபதன் “ஆம், நான் வாக்களித்தது உண்மை” என்றார். துரோணர் “யக்ஞசேனா, நான் இங்கே வந்தது என் மைந்தனுக்குப் பாலூட்ட ஒரே ஒரு நற்பசுவை மட்டும் உன்னிடம் கொடையாகக் கேட்பதற்காகத்தான். ஆனால் இனி என் கோரிக்கை அதுவல்ல. நீ வாக்களித்த நாட்டை எனக்கு அளித்தாகவேண்டும். இங்கேயே இந்த தர்ப்பையைத் தொட்டு நீரூற்றி எனக்குரிய மண்ணைக் கொடுத்துவிடு” என்றார்.
துருபதன் தத்தளிக்கும் உடலும் அலைபாயும் விழிகளுமாக கூட்டத்தினரை நோக்கினான். அமைச்சர் பத்மசன்மர் கையை வீசி முன்னால் வந்து, “வீரரே, என்றோ எப்போதோ இளமையில் கொடுத்த சொல்லுக்காக இப்போது பாதிநாட்டைக் கேட்கிறீரே. நிலையறிந்துதான் பேசுகிறீரா? ஒரு நாடென்றால் என்னவென்று அறிவீரா?” என்றார். துரோணர் “அன்று எனக்கு அளிக்கப்பட்டது ஒரு மன்னனின் சொல் என நான் எண்ணினேன். இல்லை அது அறிவுமுதிரா இளையோனின் சொல்லே என்று உங்கள் மன்னர் இச்சபை நடுவே சொல்வாரென்றால் நான் இந்த தர்ப்பையை இங்கேயே விட்டுவிட்டு விலகிச்செல்கிறேன்” என்றார்.
சத்ருஞ்சயர் “ஒருவன் மன்னன் என்றால் அவன் தன் அன்னையின் கருவிலிருக்கும்போதே சொல்லுக்கும் முறைமைக்கும் கட்டுப்பட்டவன்தான். தன் ஒரு சொல்லை மன்னன் மீறுவானென்றால் அவனுடைய அனைத்துச் சொற்களும் அக்கணமே பொருளிழக்கின்றன. இதோ இங்குள்ள ஒவ்வொருவர் கையிலும் உள்ள செம்புநாணயங்கள் பொருள்கொள்வது அவற்றை பாஞ்சாலமன்னனின் சொல் பொன்னாக ஆக்குகிறது என்பதனால்தான். சொல்வீழ்ந்தால் அக்கணமே கோல்வீழும்” என்றார்.
துருபதன் பெருமூச்சுடன் நிமிர்ந்து “என் சொல்லை நான் காக்கிறேன் குலத்தலைவர்களே. இவருக்கு நான் பாதிநாட்டை கொடையாக அளிப்பதாகச் சொன்னது உண்மை. சத்ராவதியைத் தலைநகராகக் கொண்டு என் பாதிநாட்டை இவருக்கு அளிக்கிறேன்” என்றான். உரத்த குரலில் “ஆனால் அதற்கு முன் இவர் யாரென நான்…” என்றான். துரோணரின் முன்னால் வந்து கைநீட்டி “கொடைபெறுவது பிராமணனின் அறம். நீர் பிராமணரா? பிராமணர் என்றால் எந்த குலம்? எந்த கோத்திரம்? எந்த வேதம்?” என்றான்.
துரோணர் உடலில் சிறுநடுக்கம் பரவியது. அவரது கன்னத்தசைகளும் தாடியும் அதிர்ந்தன. ஏதோ சொல்லவருவதுபோல அவர் முகம் கூர்ந்து உதடுகள் குவிந்தன. சற்றே தலையை முன்னால் நீட்டி துருபதன் அவரை கூர்ந்து நோக்கினான். அந்த நடுக்கத்தால் அவன் ஊக்கம் பெற்று இளக்காரநகையுடன் “சொல்லுங்கள் உத்தமரே, கொடைபெற வந்து நிற்கும் நீங்கள் யார்? பிராமணரா?” என்றான்.
துரோணரின் நடுக்கத்தை மேலும் கீழும் நோக்கியபின் மேலும் ஒரு எட்டு முன்னகர்ந்து “இல்லை, ஷத்ரியரா? ஷத்ரியர் என்றால் எந்த அரச வம்சம்? எந்த கொடி? எந்த முத்திரை? சொல்லுங்கள்!” என்றான். துரோணரின் உடல் அனிச்சையாக அசைய அவர் தலையைத் திருப்பி தன்னைச்சுற்றிக் கூடியிருந்தவர்களின் விழிகளை நோக்கினார். அவரை அறியாமலேயே அவர் தோள்கள் ஒடுங்க உடல் குறுகியது. அங்கிருந்து விலகிவிட விழைபவர் போல அவரது கால்கள் சற்று நிலத்திலிருந்து எழமுற்பட்டன.
“உத்தமரே, அரசகுலத்தான் அல்லாத ஷத்ரியனுக்கு நாட்டைப்பெறும் உரிமை இல்லை. அறிந்திருக்கிறீரா?” என்றான் துருபதன். திரும்பி பத்மசன்மரிடம் “சொல்லும் அமைச்சரே. வெறும் ஷத்ரியன் எப்படி நாட்டை அடையமுடியும்?” என்றான். பத்மசன்மர் “அவன் படைகொண்டு மன்னர்களை களத்தில் வென்று நாட்டை அடையலாம். ராஜசூயம் செய்து தன்னை அரசகுலத்தவனாக ஆக்கிக்கொள்ளலாம்” என்றார். துருபதன் உரத்த குரலில் “ஆம், அதுவே வழி. நீர் குலமில்லாத ஷத்ரியர் என்றால் சென்று படைதிரட்டி வாரும். என்னை களத்தில் வெல்லும். பாதிநாட்டை என்ன, மொத்த பாஞ்சாலத்தையும் அடையும். தடையில்லை” என்றான்.
துரோணர் இரு கைகளையும் தன்னையறியாமலேயே நெஞ்சின்மேல் சேர்த்துக்கொண்டார். அவரது தலை குனிந்து முகம் அந்தக்கைகளின் மேல் படிந்தது. அவரது தோளிலிருந்து கழுத்துநோக்கிச்சென்ற தசை ஒன்று இழுபட்டு அதிர்ந்துகொண்டிருக்க இடதுகால் தன்னிச்சையாக துடித்தது. துருபதன் “இல்லை நீங்கள் வைசியரோ சூத்திரரோ என்றால் என் முன் நின்று நாட்டைக்கேட்ட குற்றத்துக்காக நான் உங்களை கழுவிலேற்றவேண்டும்…” என்றபின் ஒருமுறை ஐங்குலத்தலைவர்களையும் ஆணவத்துடன் முகவாய் தூக்கி உதட்டைச்சுழித்து நோக்கினான். “முதலில் இவரை தன் வர்ணமென்ன, குலமென்ன என்று முடிவுசெய்தபின் என் அரண்மனைக்கு வரச்சொல்லுங்கள் மூத்தாரே” என்றபின் அருகே நின்ற சேவகனிடம் செங்கோலைக் கொடுத்துவிட்டு சால்வையைச் சுழற்றிப்போட்டுக்கொண்டு திரும்பி நடந்தான். அவனுடைய அமைச்சர்கள் அவனைத் தொடர்ந்தனர்.
பத்மசன்மர் “இவ்வழக்கை முடிக்கலாமல்லவா?” என்று குலத்தலைவர்களிடம் கேட்க அவர்கள் தலைகுனிந்து நின்றனர். துரோணரை நோக்கி வாய்சுழித்து இளநகை செய்துவிட்டு பத்மசன்மர் திரும்பிச் சென்றார். அவரைச்சூழ்ந்திருந்த கூட்டத்தில் கலைசலான பேச்சொலிகள் எழுந்து வலுக்கத் தொடங்கின. துரோணர் தன் கையிலிருந்த தர்ப்பையைத் தூக்கி முகத்தின் முன் கொண்டுவந்து கூர்ந்து நோக்கினார். அவரது உதடுகளும் ஒரு கண்ணும் துடித்தன. ’ஹும்’ என்ற ஒலியுடன் அவர் திரும்பியபோது கூட்டம் பதறி வழிவிட்டது. துரத்தப்பட்டவர் போல அவர் அந்த விழிகள் நடுவே நடைவிரைந்து விலகிச்சென்றார்.