வண்ணக்கடல் - 31

பகுதி ஆறு : அரசப்பெருநகர்

[ 6 ]

நூறு குடும்பங்கள் மட்டும் வாழ்ந்த பிரமதம் என்னும் சிற்றூருக்கு துரோணன் கிருபியுடன் கங்கை வழியாக ஓர் உமணர்படகில் வந்து இறங்கினான். மலையில் வெட்டி எடுக்கப்படும் கல்லுப்பை ஏற்றிக்கொண்டுவந்து கிராமங்கள் தோறும் விற்கும் கலிகன், அவன் கிருபியுடன் மலைச்சரிவில் தனித்து நடந்திறங்குவதைக் கண்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டான். தேன்மெழுகு பூசிய ஈச்சம்பாய்களால் பொதியப்பட்ட உப்புக்குவை மீது அமர்ந்து கங்கையின் பெருக்கை நோக்கியபடி ஒழுகி வந்தபோது கரையோரமாக விலகிச்சென்ற ஒவ்வொரு ஊரிலும் அவன் சற்றுநேரம் வாழ்ந்து வாழ்ந்து மீண்டான்.

“என்ன சிந்தனை?” என்றாள் கிருபி. துரோணன் “மானுடனுக்கு ஒருவாழ்க்கை மட்டும்தானே அளிக்கப்பட்டுள்ளது?” என்றான். கிருபி நகைத்துக்கொண்டு அவன் கைகளைப்பற்றி “ஒரு வாழ்க்கையை நிறைப்பதற்கே முடியாமலாகிறது. கையை விட்டு அளாவி நுரையை எழுப்பி நிறைக்கவேண்டியிருக்கிறது” என்றாள். “அதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?” என்றான் துரோணன். “வாழ்க்கையைப்பற்றி எதைச் சொன்னாலும் சிரிக்கலாமே” என்று சொல்லி அவள் மீண்டும் சிரித்தாள்.

மலையிறங்கி வந்த பன்னிரண்டு நாட்களும் அவள் பெரும்பாலும் சிரித்துக்கொண்டேதான் இருந்தாள். எதையும் சிரிப்புக்குரியதாக ஆக்கும் வல்லமை அவளுக்கிருந்தது. “நாம் ஏன் ஊர்களுக்குச் செல்லவேண்டும்? இந்தக் காட்டில் உணவும் நீரும் இருக்கிறது. இங்கேயே தங்கிவிடுவோமே” என்று அவன் ஒருமுறை சொன்னபோது “காட்டில் வாழ்வதற்கு ஞானமோ வாலோ இருந்தாகவேண்டுமே” என்றாள். அவளுடைய சிரிப்பின் ஒளி அவனையும் சிரிக்கச்செய்தது என்றாலும் அதன் பொருளென்ன என்று அவனுக்கு உடனே புரியவில்லை. பின்னர் அச்சொற்கள் நினைவிலெழும்போது அவள் அதை முன்னரே சிந்தித்து சொற்கோத்து வைத்திருந்தாளா என்ற வியப்பை அடைந்தான்.

தேன்கூடுகள் கனிந்து தொங்கிய பெரிய குகை ஒன்றுக்குள் அவன் அவளுடன் இரவில் தங்கினான். “தேனின் இசை” என்று அவள் மேலே தொங்கிய கூடுகளை நோக்கியபடி சொன்னாள். “தேன் வேண்டுமா?” என்று கேட்ட துரோணன் ஒரு தர்ப்பையை எடுத்து மேலே தொங்கிய பெரிய கூட்டை நோக்கி வீசினான். தேன் துளிகள் கனிந்து சொட்டத் தொடங்கின. “இரு” என அவன் வெளியே சென்று பெரிய இலை ஒன்றைப்பறித்து கோட்டி கொண்டுவரும்போது துளிகள் நின்றுவிட்டன. தேனீக்கள் தர்ப்பையை முற்றிலும் பொதிந்து அசைந்துகொண்டிருந்தன.

கிருபி புன்னகையுடன் வெளியே சென்று ஒரு நாணல்குழாயைப் பறித்துக்கொண்டு வந்தாள். துரோணன் “ஆம், அது நல்ல வழி. கொடு” என்று கையை நீட்டினான். அவள் “பொறுங்கள் என்று சொல்லி தன் மரவுரியில் இருந்து மெல்லிய நூலை பிரித்தெடுத்து அதை ஒன்றுடனொன்று சேர்த்து முடிந்து நீளமாக்கி நாணலின் நுனியில் கட்டி அவனிடம் நீட்டினாள். “இது எதற்கு?” என அவன் கேட்டதுமே புரிந்துகொண்டான். சொட்டத்தொடங்கிய தேன் இலைக்குழியை நிறைத்ததும் நூலைப்பற்றி இழுத்து அந்த நாணலைப் பிடுங்கி எடுத்தான். தேனீக்கள் சற்று நேரத்திலேயே துளையை மூடிவிட்டன.

தேனும் காமமும் அளித்த மயக்கத்தில் அவளுடனிருக்கையில் அவள் செவிகளில் அவன் சொன்னான். “முற்றிலும் நான் அறியாதவற்றால் ஆனவளாக இருக்கிறாய்.” அவள் சிரித்துக்கொண்டு “ஆமாம், ஆகவேதான் நான் பெண்” என்றாள். “நான் யார் உனக்கு? நீ அறியாதவற்றால் ஆனவனா?” என்றான். அவள் “இல்லை” என்றபோது அவன் சிறிய ஏமாற்றத்துடன் விலகிக்கொண்டான். அவள் அவன் தோளைத் தழுவியபடி “நான் ஆகமுடியாதவற்றால் ஆனவர்” என்றாள்.

சிற்றூர்கள் தோறும் இறங்கி நீராடி உணவுண்டு மீண்டும் படகிலேறி பயணம் செய்தார்கள். தொலைவில் தெரிந்த பிரமதத்தின் சிறிய துறை நோக்கி படகு சென்றபோது கிருபி கரையில் அடர்ந்திருந்த புதர்க்காட்டின் உள்ளிருந்து ஒரு வெண்புரவி பிடரிகுலைய இறங்கி கங்கையின் நீர் விளிம்பை அடைவதைக் கண்டாள். “புரவி! புரவி!” என்று அவள் கைசுட்டி கூவினாள். துரோணன் “ஊரில் ஷத்ரியர்கள் இருக்கிறார்கள்” என்றான். “இல்லை, அது காட்டுப்புரவி. சேணமிடப்படாத உடல்கொண்டது… அதன் பிடரியைப்பாருங்கள்” என்றாள் கிருபி. “இமயமலைச்சாரலில் நான் அவற்றைப் பார்த்திருக்கிறேன்.”

கால்களைப் பரப்பி வைத்து நீண்ட கழுத்தை குனித்து புரவி நீர் அருந்தியது. படகு நெருங்கி வருவதைக் கண்டு தலைதூக்கி நோக்கி நின்றபின் சீராக காலெடுத்து வைத்து மேலேறி புதர்களுக்குள் மறைந்தது. கிருபி “வெண்புரவியை இந்திரனின் மைந்தன் என்கின்றன நூல்கள்” என்றாள். துரோணன் “ஆம், அழகிய மிருகம்” என்றான்.

படகு கரையணைந்தபோது இந்திரனின் ஆலயத்தின் சுதையாலான முகடை நோக்கிய கிருபி “நாம் இறங்கி இந்திரனை வழிபட்டு வரலாம். இன்று இந்திரனின் இளையமைந்தனைப் பார்த்துவிட்டோம்” என்றாள். படகை நோக்கி கரையில் இருந்த சிறுவணிகர்கள் இருவர் ஓடிவந்தனர். படிக்கட்டில் இறங்கி கை கால்களை கழுவிக்கொண்டு இந்திரனின் ஆலயத்தை நோக்கிச் சென்றபோது ஆலய முகப்பில் சிறிய களமுற்றத்தில் முதிய ஷத்ரியர் ஒருவர் சிறுவர்களுக்கு வேல்சுழற்றக் கற்றுக் கொடுப்பதை துரோணன் கண்டான். கிருபி ஆலயத்துக்குள் செல்ல அவன் அருகே சென்று முதியவரின் வேல்வரிசையை நோக்கி நின்றான்.

முதியவருக்கு வேல்சுழற்றும் கலை நெடுங்காலம் முந்தைய நினைவு என்று தெரிந்தது. எதிரே நின்றிருந்த சிறுவன் வேலைச்சுழற்றி அவரை அணுகியபோது கால்வரிசை வைத்து பின்னகர்ந்தவர் பாதக்கணக்கு பிழைத்து தடுமாறிச்சரிய வேலின் கூர்நுனி அவர் கழுத்தைநோக்கி வந்தது. அவருக்குப்பின்னால் நின்றிருந்த துரோணன் விழிதொடமுடியாத கணத்தில் ஒருகையால் வேலையும் மறுகையால் அவரையும் பிடித்துக்கொண்டான். சிறுவர்களும் அப்பால் உப்புச்சுமை இறக்கிய வணிகர்களும் வியப்பொலி எழுப்பினர்.

முதியவர் “வணங்குகிறேன் இளைஞரே. தாங்கள் ஷத்ரியரா?” என்று கேட்டபோது துரோணன் “ஆம்” என்றான். “உத்தரகங்காபதத்தைச் சேர்ந்த பிரமதமென்னும் இவ்வூரின் தலைவன் நான், ஷத்ரிய குலத்தவன். என்பெயர் ஊர்ணநாபன்” என்றார் முதியவர். “தாங்கள் போர்க்கலை பயின்றவர் என உய்த்தறிகிறேன். தாங்கள் யாரென நான் அறியலாமா?”

“பாஞ்சால நாட்டைச்சேர்ந்த என்பெயர் துரோணன். கூர்ம குலத்து விடூகரின் மைந்தனாகப் பிறந்த ஷத்ரியன். அக்னிவேச முனிவரின் குருகுலத்தில் போர்க்கலை பயின்றவன். இமயப்பயணம் சென்றபின் என் துணைவியுடன் இமயத்திலிருந்து கங்கைவழியாக சென்றுகொண்டிருக்கிறேன்” துரோணன் சொன்னான். அக்னிவேசரின் பெயரை ஊர்ணநாபர் கேள்விப்பட்டிருக்கவில்லை. பாஞ்சாலம் என்பதே அவருக்கு வெறும் ஒலியாகத்தான் இருந்தது.

ஊர்ணநாபர் “இந்தச் சிற்றூரில் ஆயுதக்கலை பயிற்றுவிக்க எவருமில்லை. கங்கையின் வடக்குக்கரையைச்சேர்ந்த இந்த மலைநாட்டில் ஜனபதங்களே இப்போதுதான் உருவாகிவருகின்றன. வணிகம் தழைக்கும்தோறும் கள்வர்கூட்டங்களும் மலைவேடர்குலங்களும் ஊர்களைக் கொள்ளையிடுகின்றன. ஆகவே நானே எனக்குத்தெரிந்த படைக்கலப்பயிற்சியை எங்கள் மைந்தர்களுக்கு அளிக்கிறேன்” என்றார்.

அவர் சொல்லவருவதை உணர்ந்த துரோணன் “தாங்கள் விழைந்தால் நான் இவ்வூரில் ஒரு படைக்கல குருகுலத்தை அமைக்கிறேன்” என்றான். “நன்று. இவ்வூரில் தாங்களும் துணைவியும் தங்கலாம். தங்களுக்கு உகந்த அனைத்தையும் செய்கிறோம்” என்றார் ஊர்ணநாபர். “இவ்வூரை அணுகியதுமே ஒரு நற்குறியைக் கண்டேன். காட்டுக்குள் இருந்து ஒரு வெண்குதிரை இறங்கி வந்து கங்கையில் நீர் அருந்தியது” என்று துரோணன் சொன்னான். “அவை காட்டில் வாழ்பவை. மானுடர் அணுகமுடியாதவை. பன்னிரு தலைமுறைகளுக்கு முன்னால் ஹேகயகுலத்து கார்த்தவீரியன் இத்திசைக்கு படைகொண்டுவந்தபோது கால்கள் உடைந்த புரவிகளை காட்டிலேயே விட்டுவிட்டுச்சென்றான். அவற்றின் வழித்தோன்றல்கள் அவை என்கிறார்கள்” என்றார் ஊர்ணநாபர்.

பிரமதம் சிலந்திவலை வடிவமான ஊர். நடுவே இருந்த இந்திரனின் ஆலயத்தின் இடப்பக்கம் இருபது ஷத்ரியர் வீடுகளும் வலப்பக்கம் மூன்று வைதிகர் வீடுகளும் இருந்தன. அந்த மையத்தெருவிலிருந்து பிரிந்துசென்ற எட்டு வைசியர் தெருக்களில் தானியங்களை வாங்கி விற்கும் வணிகர்களும் பெருவேளாளர்களும் குடியிருந்தனர். ஊரைச்சூழ்ந்திருந்த விரிந்த வயல்வெளிக்கு அப்பால் வராஹியும், ஜேஷ்டையும், கலியும் குடிகொண்ட ஆலயவளாகத்தைச் சுற்றி சூத்திரர்களின் சேரி. அதற்கும் அப்பால் கங்கையின் கரையோரச்சதுப்பில் சாமுண்டி கோயில்கொண்ட இடுகாடும் அவர்ணர்கள் வாழும் சேரியும் இருந்தன.

கொற்றவை ஆலயத்துக்கு முன்னாலிருந்த விரிந்த புல்வெளி பயிற்சிக்கு உகந்தது என்று துரோணன் முடிவுசெய்தான். அங்கேயே குருகுலத்தின் குடிலை அமைத்தான். புல்வெளிக்கு மறுபக்கம் குறுங்காட்டின் அருகே தனக்கான குடிலை அமைத்துக்கொண்டான். பிரமதத்தின் ஷத்ரியர்களும் வைசியர்களும் முறைவைத்து அவனுக்கான ஊதியத்தை அளிக்கவேண்டுமென்றும் அவ்விரு வகுப்பினருக்கும் அவன் படைக்கலப்பயிற்சி அளிக்கவேண்டுமென்றும் முடிவாயிற்று. “சிறகுகளை உதிர்த்து முட்டைக்குள் திரும்பிச்செல்வதைப்போல உணர்கிறேன்” என்று கிருபியிடம் துரோணன் சொன்னான். “அல்லது மண்ணுக்குள் ஆழத்தில் புதைந்துவிட்டதைப்போல. இனி எவரும் என் பெயரை கேட்கப்போவதில்லை. எந்த சூதர்பாடலிலும் நான் எஞ்சப்போவதில்லை. எந்த வஞ்சத்தையும் நான் சுமக்க வேண்டியதுமில்லை.”

உண்மையில் அந்த வாழ்க்கையில் மெல்லமெல்ல மூழ்கி தன் அடையாளங்களனைத்தையும் இழக்கத் தொடங்கினான். மாறாத ஒரே தடத்தில் செல்லும் எளிய வாழ்க்கை. அவனது குருகுலத்தில் ஒருபோதும் பதினைந்துக்குமேல் மாணவர்கள் வந்ததில்லை. அவர்களில் எவரும் அரசகுலத்தவருக்குரிய வீரமோ வேகமோ கொண்டவர்களாகவும் இருக்கவில்லை. அந்த மலையடிவாரத்துச் சிற்றூரில் பிராமணர்களும் ஷத்ரியர்களும் வணிக வைசியர்களுமெல்லாம் உழவர்களாகவே இருந்தனர். அனைவருக்கும் வயல்களும் தோட்டங்களும் இருந்தன. அவற்றைத்தவிர வேறு ஆர்வங்களும் இலக்குகளும் இருக்கவில்லை. திருடர்களை எதிர்கொள்ளும் தைரியத்துக்காகவே அவர்கள் வில்லும் வேலும் கற்கவந்தனர். திருடர்களைப்பற்றிய தொலைதூரத்துச் செய்திகள் அளித்த அச்சமே அவர்களை அங்கே கொண்டுவந்தது. துரோணன் அவ்வூருக்கு வந்தபின் ஒருமுறைகூட திருடர்கள் வரவில்லை.

மாணவர்களுக்கு அதிகாலையில் சற்று ஆயுதப்பயிற்சி அளித்துவிட்டு வெயிலேறத்தொடங்கும்போது திரும்பிவருவான். அருகே காட்டுக்குள் சென்று விறகும் கிழங்குகளும் சேர்த்துக்கொண்டுவந்த பின் மதிய உணவு. மாலையில் துயிலெழுந்து கொற்றவை ஆலயத்துக்குச் சென்று மாணவர்களுக்கு அந்திவரை ஸ்வாத்யாயம் செய்விப்பான். மாறாத வாழ்க்கை மெல்லமெல்ல உள்ளத்தை அமைதியுறச்செய்கிறது என்பதை அறிந்தான். அங்குவந்த தொடக்கநாட்களில் எண்ணங்கள் அலையடித்துக்கொண்டுதான் இருந்தன. எப்போதாவது ஒருமுறை இரவின் தனிமையில் கொதிக்கும் நீர் மூடியைத் தூக்கி ஆவியுமிழ்வதுபோல அகம் பொங்கி எழும். இரவெல்லாம் முற்றத்திலும் புல்வெளியிலும் உலவுவான். மறுநாள் ஒளிவிடியும்போது அகமும் அடங்கியிருக்கும். பின்னர் அதெல்லாமே பழைய நினைவுகளாக மாறின. என்றாவது பழைய துரோணனை நினைத்துக்கொண்டால் அத்தனை தொலைவுக்கு விலகிவந்திருப்பதை எண்ணி வியந்து புன்னகைபுரிந்துகொள்வான்.

அவர்கள் அங்கு வந்து பத்தாண்டுகள் கழித்துத்தான் கிருபி கருவுற்றாள். தொடக்க வருடங்களில் ஒவ்வொரு மாதமும் உள்ளம் துள்ள எதிர்பார்த்து பின்பு கலைந்து கண்ணீருடன் அமர்ந்துகொள்வாள். “என் அகவிழைவை மூதாதையர் அறிந்திருக்கின்றனர். பிராமணனும் அல்லாத ஷத்ரியனும் அல்லாத ஒரு குலம் தோன்றுவதை அவர்கள் விரும்பவில்லை” என்று துரோணன் சொன்னான். கசப்புடன் நகைத்து “கோவேறு கழுதைகளுக்கு குட்டிகள் பிறப்பதில்லை” என்றான். கிருபி தன் முழங்காலில் தலைபுதைத்து உடல்குலுங்கி அழுதாள். “புத் எனும் நரகத்தில் விழாமலிருப்பது மிக எளிது. நம் முதியவயதில் இளையசீடன் ஒருவனை மைந்தனாக தத்தெடுப்போம். ஒருகைப்பிடி நீரை இறைக்க அவன் போதும் நமக்கு” என்றான்.

காத்திருந்த காலங்கள் மெல்ல பின்வாங்கியபோது கிருபி அந்தத் துயரிலிருந்து விடுபட்டாள். எப்போதாவது முறைதவறி வரும் சூதகத்தை அவளே வியப்புடன் நோக்கத் தொடங்கினாள். மைந்தனைப்பற்றிய பேச்சை அவள் முற்றிலும் விட்டுவிட்டதை துரோணன் நெடுநாட்கள் கழித்தே கண்டுகொண்டான். ஆனால் அதன் பின் அவள் மாறத்தொடங்கினாள். அவள் முகத்தின் புன்னகை முழுமையாகவே மறைந்தது. அவள் உடல் கொன்றைநெற்று போல வற்றி உலர்ந்தது. அவள் கன்னங்கள் ஒட்டி குழிவிழுந்து கண்கள் ஒளியிழந்தன. சொற்கள் அடங்கி அவள் ஒவ்வொரு கதவையாக மூடி தனக்குள்ளேயே சென்று ஒடுங்கிக்கொண்டாள்.

அவள் தனித்திருக்கையில் தொலைவில் நின்று நோக்கிய துரோணன் கந்தகம் பூசப்பட்ட அம்புதைத்த வலியை நெஞ்சில் அறிந்தான். எப்போதாவது கனவில் இளஞ்சிவப்பு ஈறுகள் தெரிய, கண்கள் ஒளிர, அவள் நகைப்பதைக் கண்டால் எழுந்தமர்ந்து விடியும்வரை இருளை நோக்கிக்கொண்டிருந்தான். அவளுக்கு மாபெரும் அநீதியொன்றை அவன் இழைத்துவிட்டதாக உணர்ந்தான். அவளை அவன் கடிந்துகொண்டதில்லை. அவளுடைய விருப்பங்களை மீறியதில்லை. அவளுக்கு முன் தன் அன்பை முழுமையாகவே திறந்து வைத்திருந்தான். ஆனால் மணம்புரிந்துகொண்டதனாலேயே கணவர்கள் மனைவியருக்கு ஏதோ ஒரு அநீதியை இழைத்துவிடுகிறார்களா என்ன?

அவனால் அவள் விழிகளைப் பார்த்து பேசமுடியாமலாயிற்று. எப்போதோ ஒருமுறை அவள் விழிகளை அவன் விழிகள் சந்தித்தபோது ஏற்பட்ட திடுக்கிடலுக்குப்பின்புதான் அவள் விழிகளைச் சந்திப்பது நெடுங்காலம் முன்னரே நின்றுவிட்டதை உணர்ந்தான். மாறாத வாழ்வொழுங்குதான் அனைத்தையும் சீரமைத்து கங்கைபோல இழுத்துச்சென்றுகொண்டிருந்தது. அதே கங்கைப்பாதை, அதே கொற்றவை ஆலயம், அதே புல்வெளி, அதே பயிற்சிக்களம். ஒவ்வொன்றும் மாறாமலிருந்தது. மறுநாள் காலையில் எழுந்துகொள்ளும்போது அவை அங்கே அப்படியே இருக்குமென்பதே வாழ்க்கையின் ஒரே பிடிமானம் என்று தோன்றியது.

சித்திரை பன்னிரண்டாம் நிலவுநாளில் நூல்கல்வி முடித்து மாணவர்கள் சென்றபின்னர் அவன் கொற்றவை ஆலயத்தின் முன்னாலிருந்த கல்பீடத்தில் அமர்ந்து சற்றே தேய்ந்திருந்த நிலவு ஒளிவிட்ட மேகமற்ற வானை நோக்கிக்கொண்டிருந்தான். வலப்பக்கம் செவ்வரளி மாலை அணிவிக்கப்பட்ட கொற்றவை சிலை சிறிய கோயிலுக்குள் அகல்சுடர் ஒளியில் விழித்த வெள்ளிக்கண்களுடன் அமர்ந்திருந்தது. அருகே எவருமில்லாதபோது சிலைகளுக்கு இருப்பை உணர்த்தும் ஆற்றல் வந்துவிடுகின்றது. காற்று வீசவீச உள்ளம் எடையிழந்தபடியே வருவதாகத் தோன்றியது. தன்னுள் இனிமையான இருப்புணர்வு ஒன்று எழுந்து பரவுவதை உணர்ந்தான். அதற்குக் காரணம் காற்றில் பரவிவந்த கொன்றை மலர்களின் மணமா என்று எண்ணிக்கொண்டான்.

பரத்வாஜ குருகுலத்துக்குப் பின்னால் கங்கைக்கரை மேட்டில் மாபெரும் கொன்றை ஒன்று கிளை தழைத்துப் படர்ந்து நின்றிருந்தது. அணில் ஒன்றைத் தொடர்ந்து நாணல்காட்டுக்குள் நுழைந்து ஓடிய துரோணன் அப்பால் பொன்னாலான கூரையிட்ட வீடு போல நின்றிருந்த முழுக்கப்பூத்த கொன்றையைக் கண்டு விழிமலர்ந்து அகமிழந்தான். அவனை அறியாமலேயே கொன்றையை நோக்கிச் சென்றான். பொன்னிறமான கம்பளம்போல கீழே மலர்கள் உதிர்ந்து பரவிக்கிடந்தன. மலர்போல, அரக்குபோல, ஊன் போன்ற வாசனை எழுந்து மூக்கை நிறைத்து தலையை கனக்கச்செய்தது. அப்போது தொலைவில் எங்கோ அவன் பெயரைச் சொல்லி விடூகர் அழைப்பதைக் கேட்டான். “துரோணரே, இளையவரே!”

அக்குரல் அவனைச்சூழ்ந்து சென்றபோதும்கூட அது தன்னை அழைக்கிறது என அவன் அறியவில்லை. பொற்கம்பளத்திலிருந்து அவன் காலடியதிர்வில் ரீங்கரிக்கும் மலர்கள் எழுந்து பறந்தன. காற்றிலாடிய கிளைகளில் இருந்து பொன்னிற மலர்கள் மெல்ல உதிர்ந்து ஓசையின்றி மண்ணைத் தொட்டன. நாணல்கள் அவனை மறைத்திருந்தமையால் விடூகர் அவனைக் காணவில்லை. திடீரென்று எழுந்த நினைப்பில் அவர் “துரோணா, மைந்தா!” என வீரிட்டு மார்பில் அறைந்தபடி கங்கையை நோக்கி ஓடினார்.

கங்கைக்கரைச் சதுப்பை நோக்கியபடி கதறிக்கொண்டே ஓடி திரும்பியபோதுதான் அவனைக் கண்டார். இரு கைகளையும் நீட்டியபடி ஓடிவந்து அவனை அள்ளி எடுத்து தன்னுடன் இறுக அணைத்துக்கொண்டார். வியர்த்த தேமலில் இருந்து எழும் பாசிமணம் அவனைச்சூழ்ந்தது. கலங்கி வரும் கங்கையின் நீர்போல. அவன் முகம் தூக்கி நோக்கியபோது கண்ட நீர் நிறைந்த அவரது விழிகளை மீண்டும் மீண்டும் வாழ்நாளெல்லாம் கண்டான்.

எழுந்து நடந்தபோது விடூகரின் நினைவு துரோணனுக்குள் நிறைந்திருந்தது. பரத்வாஜ தவச்சாலையில் அதிகாலையில் அவர் உயிர்துறந்த செய்தி அக்னிவேசரின் குருகுலத்தில் இருந்த துரோணனை வந்தடைந்த அன்று கங்கையில் இறங்கி அவருக்காக நீர் இறைத்து தர்ப்பணம் செய்தான். அன்றிரவு அவரை நினைத்துக்கொண்டு தன் குடிலில் படுத்திருக்கையில் சூழ்ந்திருந்த இருளுக்குள் மனம் விம்மி ஒரு துளி கண்ணீர் சிந்தினான். அன்று முதல் ஒவ்வொருநாளும் காலையில் விடூகரை நினைத்துக்கொண்டு ஒரு கைப்பிடி நீர் இறைப்பது அவன் வழக்கம்.

புல்வெளிக்கு அப்பால் ஒரு வெண்ணிற அசைவைக் கண்டு துரோணன் நின்றான். வெண்ணிறக்குதிரை ஒன்று குறுங்காட்டின் புதர்க்கூட்டத்தின் உள்ளிருந்து மெல்ல கால்களை எடுத்து வைத்து புல்வெளி நோக்கி வந்தது. பலமுறை குதிரைகளை காட்டில் கண்டிருந்தாலும் வெண்ணிறமான குதிரையை மீண்டும் பார்க்கவே முடிந்ததில்லை. தன்னைக் கண்டு அது அஞ்சிவிடக்கூடாதென்பதற்காக அசையாமல் நின்றான். மறு எல்லையில் நின்ற குதிரையும் தலைதூக்கி அவனை நோக்கியது. பின்னர் குனிந்து புல்வெளியை முகர்ந்தது. காலடி எடுத்துவைத்து புல்வெளியின் மேல் நடந்து வந்தது.

துரோணன் புல்வெளியில் நடந்து சென்றபோது குதிரை தாமிரத்தகடு அதிர்வதுபோல கனைத்தது. அவனை நோக்கித்தான் அது கனைக்கிறது என்று இரண்டாம்முறை அது கனைத்தபோது உணர்ந்தான். திரும்பிநோக்கியபோது அது சாட்டைபோலச் சுழலும் வாலுடன், முரசுக்கோலின் முழைகள் போல புற்பரப்பை அறையும் குளம்புகளுடன், வெண் கொக்குபோல கழுத்தை நீட்டி அவனை நோக்கி வந்தது. காற்றில் மிதந்து வரும் வெண்ணிற இறகுபோல அத்தனை எடையில்லாமல். நிலவொளியின் ஒரு கொப்புளம்போல. பிரமித்த விழிகளுடன் அவன் நோக்கி நின்றான். அது சுழல்காற்று போல அவன் அருகே வந்து வளைந்து திரும்பிச் சென்றது.

ஆண்குதிரைக்குட்டி. ஒருவயதுகூட ஆகியிருக்காது. அதன் பிடரிமயிர் கனக்கத் தொடங்கவில்லை. அங்கே வந்த முதல்நாளில் கண்ட வெண்குதிரையின் மைந்தனாக இருக்கலாம். அல்லது அதுவேதானோ? வெவ்வேறு உடல்கள் வழியாகக் கடந்துசெல்லும் அஸ்வதேவன். தொலைவில் நீரில் எழுந்தமிழும் வெள்ளிமீன் என அது துள்ளிக்குதித்துக்கொண்டிருப்பதை பார்த்தபின் தன் இல்லத்துக்குச் சென்றான். கையில் அகல் விளக்குடன் கதவுப்படலைத் திறந்த கிருபி அவன் உள்ளே வருவதற்காக விலகி வழிவிட்டு நின்றாள். தொட்டிநீரில் கைகால்களைக் கழுவி உள்ளே நுழையும்போது சுடர் பிரதிபலித்த அவளுடைய விழிகளை அவன் சந்தித்தான். “நான் இன்று அந்த வெண்குதிரையைக் கண்டேன்” என்றான்.

அஸ்வத்தாமனை கருவுற்றிருக்கும் செய்தியை கிருபி அவனிடம் சொன்ன அன்றுதான் வாழ்க்கையில் முதல்முறையாக உவகை என்னும் சொல்லின் பொருளை அறிந்தான். இதுதான் மகிழ்ச்சியா, இதைத்தேடியா மானுடர் இத்தனைநாள் ஓடுகிறார்கள் என்று வியந்துகொண்டான். ஆம், இதற்காக எதையும் செய்யலாம். இதற்காக பொறாமை கொள்ளலாம். வஞ்சகமும் செய்யலாம். மானுடனாக வாழ்வதில் இத்தனை இனிமை இருக்கையில் ஏன் நினைவறிந்த நாள்முதல் மனம் சுளித்தபடியே வாழ்ந்தேன்? காற்றுக்கு எதிர்த்து நின்று முறுக்கிக்கொண்ட மரம்போன்றவன் நான். என்னை தொலைவில் காண்பவர்கள் கூட என்னிலிருக்கும் அந்த முறுக்கத்தைக் கண்டுகொள்வார்கள். இதோ என் அகம் புரியவிழ்கிறது. இதோ கூட்டின் விளிம்புக்கு வந்த பூங்குஞ்சு தயங்கி சிறகடித்து காற்றிலெழுகிறது.

மீண்டும் வாழ்க்கை தொடங்கியது. புதிய கிருபி பழைய உடலின் மட்கிய சுள்ளிகளில் இருந்து பசுந்தளிரென முளைத்தெழுந்தாள். குலத்தாலும் தன்னறிவாலும் கல்வியாலும் பெற்றவை அனைத்தையும் உதறிவிட்டு அச்சமும் பேதைமையும் கொண்டவளாக ஆனாள். பேதைச் சிறுமியாக ஒருகணமும் நூறுபெற்ற மூதன்னையாக மறுகணமும் தோன்றினாள். அவளுடைய நாக்கு நூறுமடங்கு சுவைத்தேட்டம் கொண்டது. அனைத்தையும் உண்டுவிட விரும்புபவள் போல நாக்கைச் சுழற்றிக்கொண்டாள். முலைகுடிக்கும் குழந்தையின் முகம் பெற்றாள். அவளுடைய சின்னஞ்சிறு அச்சங்கள், நீர்ப்பாசிப்படலமென படர்ந்து அலையடிக்கும் ஐயங்கள் அவனை ஆண்மகனாக்கின. தன் புயங்களால் அவளை அணைத்துக்கொள்கையில் அவை இரும்பாலான வேலிச்சுற்றுகளாக ஆவதைக் கண்டான்.

கிருபி குதிரைகளையே கனவுகண்டாள். “இங்கே என் மைந்தன் பிறப்பான் என்பதை என் அகம் அறிந்திருந்தது. ஆகவேதான் இவ்வூரில் இறங்கச் சொன்னேன்” என்று அவன் தோளில் சாய்ந்தபடி சொன்னாள். “நான் பிறந்ததும் உங்களைக் கைப்பிடித்ததும் எல்லாம் அவன் வருகைக்காகத்தான் என்று உணர்கிறேன்.” ஆனால் அவ்வெண்ணங்களின் எழுச்சியிலிருந்து விரைவிலேயே சரிந்திறங்குவாள். “அப்படியென்றால் என்னை ஏன் இத்தனை நாள் காக்கவைத்தான்? ஏன் என்னை இவ்வெல்லை வரை கொண்டுவந்தான்? அத்தனை குரூரமானவனா அவன்? அவனையா நான் சுமந்துகொண்டிருக்கிறேன்?” என தன் வயிற்றை ஓங்கி அறையத் தொடங்குவாள். அவள் கைகளைப்பிடித்து முறுக்கி சுவரோடு சேர்த்து அழுத்திப்பற்றியபடி “நில்… நில்… என்ன செய்கிறாய்?” என்று அவன் கூவுவான். அவள் உடைந்து அவன் மேல் சரிந்து கதறி அழத்தொடங்குவாள்.

அஸ்வத்தாமன் பிறந்தபோது குடிலுக்கு அப்பால் குறுங்காட்டுக்குள் குதிரை ஒன்று கனைத்தபடி கனத்தகுளம்புகள் அறைய ஓடிய ஒலி எழுந்தது. குடிலுக்குள் இருந்து எழுந்த குழந்தையின் அழுகையும் குதிரைக்கனைப்பு போலிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. தூணருகே நின்றிருந்தவன் கால்கள் தளர திண்ணையில் அமர்ந்துகொண்டான். குழந்தை வீரிட்டுக்கொண்டே இருந்தது. தொலைவில் விலகிச்செல்லும் குதிரையின் கனைப்பு ஒலித்தது. அந்த வெண்குதிரைதான் அது என அவன் நினைத்துக்கொண்டான். ஒவ்வொரு நாளும் அதை விழிகள் தேடிக்கொண்டே இருந்தபோதிலும் கூட பிறகு அதை அவன் காணவேயில்லை. அதனாலேயே அந்த இரவில் அவன் கண்ட காட்சி ஒரு கனவென அவனுள் நிலைத்துவிட்டது.

வயற்றாட்டிகளில் முதியவள் துடைத்த குழந்தையை மரவுரியில் சுற்றி எடுத்துவந்து அவனிடம் காட்டினாள். அகழ்ந்தெடுத்த இன்கிழங்கு போல சிவந்த சிற்றுடல். “அவன் தன் அன்னையின் சாயல்கொண்டிருக்கிறான்” என்றாள் வயற்றாட்டி. குனிந்து மைந்தனைப்பார்த்தபோது அவன் தன் அகத்தை அறிந்த கணம் முதல் தன்னுள் ஓடிய சொற்பெருக்கு முற்றிலும் நின்றுவிட்ட பேரனுபவத்தை அடைந்தான். “தொடலாமா?” என்று அடைத்த குரலில் கேட்டான். “தங்கள் மைந்தன் வீரரே. இவன் நீங்களேதான். கள்ளிச்செடியில் கிளை எழுவதுபோல உங்களில் எழுந்தவன்” என்றாள் வயற்றாட்டி நகைத்தபடி.

அச்சொற்கள் அவனை மெய்சிலிர்க்கச் செய்தன. இது நான். சின்னஞ்சிறியவனாக. புத்தம்புதியவனாக. அனைத்தையும் மீண்டும் தொடங்கமுடியும். விட்டுச்சென்றவற்றை எல்லாம் அள்ளிவிடமுடியும். “பெற்றுக்கொள்ளுங்கள் வீரரே” என்று அவள் மீண்டும் நீட்டினாள். கைகளால் அவனைத் தொடமுடியுமென்றே அவனால் எண்ண முடியவில்லை. கைகள் நடுநடுங்கின. “பெற்றுக்கொள்ளுங்கள்” என்றாள் வயற்றாட்டி. “வேண்டாம், கீழே போட்டுவிடுவேன்” என்றான். “போடமாட்டீர்கள். அத்தனை தந்தையரும் கைநடுங்குகிறார்கள். எந்தத் தந்தையும் கீழே போட்டதில்லை” என்று அவள் சிரித்தாள்.

மைந்தனை கையில் வாங்கிக்கொண்டு “நடுங்குகிறான்” என்றான். “கருவறையின் வெம்மையை விட்டு வந்த குழந்தை நடுங்கும்” என்றாள். குழந்தை விரிந்த இரு சிறு கைகளும் வளைந்த கால்களும் அதிர திடுக்கிட்டபடியே இருந்தது. மென்மையாக சுருட்டப்பட்ட கைமுட்டிகள். சிவந்த இதழ்கள் போன்ற அடிப்பாதங்கள். அல்லிகள் போன்ற விரல்கள். ஒரு மென்குருத்து. மைந்தனின் உடல்மேல் தன் கண்ணீர்த்துளிகள் சொட்டுவதைக் கண்டான். உதடுகளை மடித்து அழுத்தி விம்மலை அடக்கியபடி கழுத்து அதிர குழந்தையை தன் முகத்துடன் சேர்த்துக்கொண்டு “அஸ்வத்தாமா… அஸ்வத்தாமா” என்றான்.

வயற்றாட்டி நகைத்தபடி “அஸ்வத்தாமனா மைந்தனின் பெயர்? என்ன பொருள் அதற்கு?” என்றாள். “குதிரைக்குரல்கொண்டவன்… குதிரைகளை ஆள்பவன்” என்றான் துரோணன். அவள் அவனிடமிருந்து குழந்தையை வாங்கி உள்ளே கொண்டுசென்றாள். அவன் தன் கைகளை முகர்ந்தான். அவற்றில் மைந்தனின் வாசம் எஞ்சியிருந்தது. கருமணம், விதைகளின் மணம். அஸ்வத்தாமன் அஸ்வத்தாமன் என்று தன் அகம் ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்து புன்னகைத்துக்கொண்டான். இனி தன் வாழ்க்கையில் பிறிதொரு ஆப்தமந்திரம் இல்லை என்று அப்போது அறிந்தான்.

மைந்தன் பிறந்த செய்தியைச் சொல்ல துரோணன் ஊருக்குள் சென்றபோது இந்திரனின் ஆலயமுகப்பில் நரைத்த சிறுகுடுமியும் பொற்குண்டலங்களும் பொன்னூல் பின்னிய பட்டுச்சால்வையுமாக அமர்ந்திருந்த முதிய கணிகரைக் கண்டான். அவர் வந்த உப்புப்படகிலிருந்து மூட்டைகள் இறங்கிக்கொண்டிருந்தன. அவர் தன் கையிலிருந்த சுவடிகளை நோக்கி இந்திரன் ஆலயத்து முகமண்டபத் தரையில் பன்னிரு திகிரிக்களம் வரைந்து கூழாங்கற்களைப் பரப்பி ஏதோ கணித்துக்கொண்டிருந்தார்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

துரோணன் அவர் அருகே சென்று வணங்கி “கணிகரே, விடூகரின் மைந்தனும் ஷத்ரியனுமாகிய எனக்கு மைந்தன் பிறந்திருக்கிறான். தாங்கள் அவன் பிறவிநூலை கணித்தருளவேண்டும். என் மைந்தனின் பிறவியைக் கணிப்பதற்காகவே தாங்கள் வந்தீர்கள் என்றே நினைக்கிறேன்” என்றான். அவர் மெல்லிய திகைப்புடன் “இன்றா?” என்றார். “ஆம், இன்று காலை முதற்சாமத்தில்” என்றான் துரோணன். கணிகர் எழுந்து “ஆம், இத்தருணம் அதையே சொல்கிறது” என்றார்.

அஸ்வத்தாமனின் பிறவிநேரத்தையும் அத்தருணத்தின் குறிகளையும் விரிவாக ஏட்டில் பொறித்தபின் ஒவ்வொன்றுக்கும் ஒரு முத்திரையிட்டு அவற்றை பன்னிரு களத் திகிரியில் அமைத்து கூழாங்கற்களை மாற்றி மாற்றி உருட்டி தருணமும் நெறியும் நோக்கிய கணிகர் நிமிர்ந்து “வீரரே, நீர் எவரென அறியேன். ஆனால் பெரும்புகழ்பெறப்போகும் மாவீரனை மைந்தனாகப் பெற்றிருக்கிறீர்” என்றார். துரோணன் கைகூப்பி “தங்கள் சொற்களுக்கு விண்ணகம் சான்றுரைக்கட்டும்” என்றான்.

மீண்டும் களங்களில் கூழாங்கற்களை உருட்டியபின் கணிகர் தலையை அசைத்தார். துரோணன் அவர் சொற்களுக்காக காத்துநின்றான். “நாடாள்பவன். பெரும்போர்க்களத்தில் செருக்கெழுந்த யானை என குருதியணிந்து உலவுபவன். மாகாவியங்களில் பாடல்பெறுபவன். ஆனால்…” என்றார். “சொல்லுங்கள் கணிகரே” என்று நெஞ்சின் ஓசையைக் கேட்டபடி துரோணன் சொன்னான். “அதற்கப்பால் எனக்குத் தெரிபவை எல்லாம் காட்டுக்கொடிகள் என ஒன்றுடன் ஒன்று மயங்கிக் கிடக்கின்றன. எட்டுமுறை களமாடிவிட்டேன். மைந்தனின் களத்தில் பிறவிமுழுமையின் கட்டத்தில் கல்நிற்கவே இல்லை. அவன் அழிவற்றவன் என்கின்றன கற்கள்.”

துரோணன் தன் பிடரியில் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தான். “அழிவற்றவன் என்றால்?” என்று கேட்டான். “அழிவை கோள்கள் அறிவுறுத்தவில்லை. அதற்கப்பால் தெய்வங்களே அறியும்” என்றார் கணிகர். “…அத்துடன் அனைத்து களங்களிலும் அனல் திகழ்கிறது. வாழும்நாளெல்லாம் எரிந்துகொண்டிருப்பான். பெருஞ்சினத்தால். வஞ்சத்தால். ஏன்? எவரிடம்? எதையும் களங்கள் சொல்வதில்லை.” அவர் கூழாங்கற்களைச் சேர்த்து தன் மான்தோல் பைக்குள் போட்டுக்கொண்டார்.

“வீரரே, உண்மையில் நான் திகிரிக்களம் நோக்குவதை விட்டு இரண்டு வருடங்களாகின்றன. அவை விடைகளை அல்ல வினாக்களையே அளிக்கின்றன. வாழ்க்கையைக்கொண்டு அவ்வினாக்களின் விடைகளை அறிந்துகொண்டிருக்கிறோம். அறிந்து முடிக்கையில் வாழ்வும் முடிந்துவிடுகிறது. ஆகவே இத்திகிரிக்களத்தை நோக்குவதனால் பயனொன்றுமில்லை. இது மானுட ஆணவத்தை நிறைவுசெய்யும் எளிய விளையாட்டு மட்டும்தான்… இன்று என்னை நீர் வந்து சந்தித்த தற்செயலில் இருந்த ஒருமைதான் என்னை இங்கே கொண்டுவந்தது. வந்திருக்கலாகாதென்றே இப்போது உணர்கிறேன்.”

சுவடிகளை அடுக்கி மஞ்சள்நூலால் கட்டி அவனிடம் நீட்டியபடி கணிகர் எழுந்தார். “அஸ்தினபுரியைச் சேர்ந்த கணிகனாகிய என் பெயர் அஸ்வபாகன். எந்தை அஜபாலர் பெரும்புகழ்பெற்ற கணிகர். கணிகஞானம் அவரை பித்தரும் ஞானியுமாக ஆக்கியது. இன்று கணிகர்வீதியின் முச்சந்தியில் விதியை நோக்கித் திகைத்து விரிந்த கண்களுடன் தெய்வமாக அமர்ந்திருக்கிறார். பித்தனோ ஞானியோ தெய்வமோ ஆகிவிடாமலிருக்கும்பொருட்டு அனைத்தையும் உதறிவிட்டு நான் இமயம் நோக்கிச் செல்கிறேன்.”

“அஸ்தினபுரியில் மைந்தர்கள் பிறந்திருக்கிறார்கள் என்று அறிந்தேன்” என்றான் துரோணன். “ஆம், அவர்களின் பிறவிநூல்களையே நான் இறுதியாக நோக்கினேன். எந்தையின் விழிகளில் தெரியும் பெருந்திகைப்பு எதற்காக என்று அறிந்தேன்” என்ற கணிகர் “நலம் திகழ்க!” என்று வாழ்த்தினார். துரோணன் அவருக்கு கனிகள் நிறைந்த தாலத்தை காணிக்கையாக அளித்து வணங்கினான். அவர் அதைப்பெற்றுக்கொண்டு தன் தோல்மூட்டைக்குள் நிறைத்து தோளில் ஏற்றிக்கொண்டார். துரோணன் அவரை மீண்டும் படித்துறைக்குக் கொண்டுசென்றான்.

படகில் ஏறிக்கொண்டபின் கணிகர் சொன்னார் “நீர் என்னைத் தேடிவரும்போது நான் அஸ்தினபுரியின் நிகழ்வுகளை கணித்துக்கொண்டிருந்தேன். அரசஇலக்கணங்கள் கொண்ட ஆண்யானை ஒன்று பிறந்திருக்கிறது அங்கே. இன்றுகாலை உங்கள் மைந்தன் பிறந்த அதேகணத்தில், அதே விண்குறிகளுடன். இருவரும் ஒருவரோடொருவர் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். எவ்வகையிலோ…” புன்னகையுடன் கணிகர் சொன்னார் “நாம் இதைப்பேசும்போது மேலே தேவர்கள் சிரித்துக்கொள்கிறார்கள்.” படகு மெல்ல நீரில் விலகிச்செல்ல படகோட்டி பாய்மரக்கட்டை அவிழ்த்தான். மாபெரும் நீர்க்குமிழிகள் போல பாய்கள் விரிந்து புடைத்தெழுந்தன.