வண்ணக்கடல் - 28

பகுதி ஆறு : அரசப்பெருநகர்

[ 3 ]

துரோணனுடன் அக்னிவேசரின் குருகுலத்தை நோக்கி மீண்டும் நடக்கும்போது யக்ஞசேனனின் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. நிமிர்ந்த தலையுடன் அக்னிவேசரின் குடிலுக்குள் நுழைந்த துரோணன் தன்னைத் தொடரும்படி யக்ஞசேனனுக்கு கைகாட்டிவிட்டு உள்ளே சென்றான். படுக்கைப்பலகையில் படுத்து மீண்டும் நூல் கேட்டுக்கொண்டிருந்த அக்னிவேசர் முன் பணிந்து “குருநாதர் என்னை பொறுத்தருள வேண்டும். இவனை இக்குருகுலத்தில் மாணவனாகச் சேர்ப்பதென்று நான் எண்ணியிருக்கிறேன்” என்றான். வெளிக்கதவருகே யக்ஞசேனன் பாதி உடல் மறைத்து நின்றான்.

அக்னிவேசரின் கண்கள் மட்டும் சற்று சுருங்கின. ஆனால் குரலில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் “துரோணா, எதன் பொருட்டும் என் சொற்களை நான் மீறமுடியாது” என்றார். “ஆம், தங்கள் சொற்கள் அவ்வண்ணமே திகழட்டும். ஆனால் அவனை நான் என் மாணவனாக இங்கே சேர்த்துக்கொள்கிறேன்” என்றான் துரோணன். “அவனுடைய கைவிரல்கள் கணுக்கொண்டுவிட்டன. அவற்றை நம் வில்வித்தைமுறைகளுக்கு பழக்கமுடியாது” என்றார் அக்னிவேசர். “அதற்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்” என்றான் துரோணன்.

அவனை சிலகணங்கள் கூர்ந்து நோக்கிய அக்னிவேசர் “துரோணா, இந்த முடிவை நீ எடுப்பதற்கான காரணமென்ன?” என்றார். “அகந்தையாலோ ஆசையாலோ அச்சத்தாலோ எடுக்கும் முடிவுகள் தீங்கையே கொண்டுவரும் என்பதை உணர்ந்துகொள்.” துரோணன் அவர் விழிகளை சந்திக்காமல் தலைகுனிந்து மெல்லிய குரலில் “நான் அவனை என் மாணவனாக எண்ணுகிறேன் குருநாதரே” என்றான். அக்னிவேசர் சிலகணங்கள் அவன் முகத்தை நோக்கிவிட்டு “அவ்வாறே ஆகுக!” என்றார்.

குருகுலத்தில் யக்ஞசேனனின் வயதுடைய அனைத்து ஷத்ரிய இளைஞர்களும் அங்கே ஐந்துவயதுமுதல் இருப்பவர்கள் என்பதனால் அவர்களுக்குள் இயல்பான உறவுகள் இருந்தன. இளவரசர்களில் நிகரானவர்கள் தங்களுக்குள் நட்புடன் இருந்தனர். பிற ஷத்ரியர் நாடுகளின் அடிப்படையிலும் குலங்களின் அடிப்படையிலும் சிறிய குழுக்களாக நட்புகொண்டிருந்தனர். எவரும் யக்ஞசேனனை தங்களில் ஒருவனாக ஏற்கவில்லை. தன்னைவிட ஒருவயது குறைந்தவனும் கரிய குறுகிய உடல்கொண்டவனும் வேதஅதிகாரமில்லாத பிராமணனுமாகிய துரோணனின் காலில் அனைவரும் பார்த்திருக்க விழுந்து இரந்த யக்ஞசேனனின் செயலை மன்னிக்க அவர்கள் எவராலும் இயலவில்லை.

யக்ஞசேனனைப் பார்த்ததுமே அவர்களின் முகங்களில் சுளிப்பு வந்தது. கண்களை விலக்கி இறுகிய உதடுகளுடன் ஒருசொல்லும் பேசாமல் கடந்துசென்றனர். புல்லில் முகம் தொட விழுந்து துரோணனை வணங்கியவன் என்பதனால் அவனுக்கு திருணசேனன் என்று ஒருவன் கேலிப்பெயர் சூட்டினான். பின்னர் அதுவே அனைவர் நாவிலும் நீடித்தது. திருணன் என்பது அவர்கள் நடுவே ஒரு வசையாகவே மாறியது.

அதை யக்ஞசேனன் அறிந்திருந்தான். முதல்நாளிலேயே அறியும் வாய்ப்பு அவனுக்கு அமைந்தது. அவனை அக்னிவேசர் ஏற்றுக்கொண்டதும் இளைய மாணவன் ஒருவன் அவனருகே வந்து முறைப்படி வணங்கி முகமன் சொல்லி தன்னை குசாவதியை ஆளும் ரிஷபரின் மைந்தன் குசாவர்த்தன் என்று அறிமுகம்செய்துகொண்டு “தங்களை என் குடிலில் தங்க வைக்கும்படி வியாஹ்ரசேனரின் ஆணை இளவரசே” என்றான். அவனுடன் செல்லும்போது யக்ஞசேனன் கேட்ட வினாக்களுக்கெல்லாம் ஒற்றைச் சொல்லில் அவன் விடையிறுத்தான்.

ஈச்சையோலைக் கூரையிடப்பட்டு மரப்பட்டைச் சுவர் கொண்ட சிறியகுடிலில் இருவர் தங்குவதற்கான மஞ்சங்கள் இருந்தன. “இந்தக் குடிலில் தாங்கள் தங்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது” என்று சொல்லி வணங்கிய குசாவர்த்தன் யக்ஞசேனன் தன் தோல்மூட்டையை பீடத்தில் வைத்தபடி அமர்ந்ததும் தன்னுடைய பொருட்களை எடுக்கத் தொடங்கினான். “நாமிருவரும் இங்கே தங்குவதாகத்தானே ஆணை?” என்றான் யக்ஞசேனன்.

“ஆம். குடிலுக்கு இருவர் என்பதே நெறி” என்ற குசாவர்த்தன் “ஆனால் நான் விதேக இளவரசர் ஹயக்ரீவருடன் தங்கிக்கொள்கிறேன்” என்றான். “ஏன்?” என இயல்பாகக் கேட்டதுமே யக்ஞசேனன் அனைத்தையும் உய்த்துணர்ந்துகொண்டான். அடுத்த வினாவை கேட்காமல் நாவுக்குள் நிறுத்திக்கொள்ள தன்னால் முடிந்ததைப்பற்றி யக்ஞசேனன் ஆறுதல்கொண்டான். குசாவர்த்தன் பதில் சொல்லாமல், விடையும் பெறாமல் தன் தோல்மூட்டையுடன் கிளம்பிச்சென்றான்.

முதலில் சிலநாள் அவர்களுடன் இணைய யக்ஞசேனன் முயன்றான். அவர்கள் கோருவதென்ன என்பதை அறிந்து தன்னை அதற்கு அளிக்க அவன் சித்தமாகவே இருந்தான். ஆனால் நீரென நினைத்தது கரும்பாறை என்றறியும் கனவைப்போல அவர்கள் அவனை மூர்க்கமாக நிராகரித்தனர். ஒருமுறை கங்கையில் நீந்தும்போது அவனுடைய கை கலிங்க இளவரசன் ருதாயுவின் தோளைத் தொட்டபோது அவன் சீறித் திரும்பி “சீ, பாஞ்சாலநாயே, விலகிச்செல்” என்றான். நீராடிக்கொண்டிருந்த அனைவரும் திகைத்து அசைவிழந்து திரும்பி நோக்கினர். யக்ஞசேனன் மெல்லியகுரலில் “மன்னிக்கவேண்டும் கலிங்கரே” என்றான்.

“நீ என்னை இளவரசே என்று அழைக்கவேண்டும்” என்றான் ருதாயு. “நீ ஷத்ரியனோ இளவரசனோ அல்ல. ஷத்ரியன் தன் குலத்தையும் மூதாதையரையும் ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை.” ஏளனமும் சினமும் தெரிய நகைத்து “உன் அன்னையின் கருவில்புகுந்தது ஏதோ சமையற்காரப்பிராமணனின் விந்து. உன் உடலில் ஓடுவது அவனுடைய இழிந்த குருதி” என்றான்.

காதுமடல்களை வெங்குருதி நிறைக்க யக்ஞசேனன் தன்னைச் சூழ்ந்திருந்த விழிகளை நோக்கி திகைத்து நின்றான். “கலிங்கரே” என்று அவன் சொல்லத் தொடங்குவதற்குள் இடைக்கச்சைக்குள் இருந்த பூநாகம் போன்ற குறுவாளை எடுத்து நீட்டி கலிங்கன் சொன்னான் “மறுசொல் எழுந்தால் உன் கழுத்து நரம்பைக் கிழிப்பேன்.” யக்ஞசேனன் கண்களில் எழுந்த நீருடன் உதடுகளை இறுக்கியபடி அசையாமல் நின்றான்.

அவர்கள் கங்கையை விட்டு கரையேறி தங்கள் ஆடைகளை அணிந்துகொண்டார்கள். அத்தனை ஷத்ரிய முகங்களிலும் இளநகை எழுந்திருப்பதை யக்ஞசேனன் கண்டான். நீருக்குள் அவன் கால்கள் பொருளின்றி நடுநடுங்கிக்கொண்டிருந்தன. தோள்சதையும் கழுத்துச்சதையும் ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கொண்டு இறுக வாய் இழுபட்டு இடதுகை அதிர்ந்தது.

மேலே நின்ற கலிங்கன் உரக்க “நீ ஷத்ரியன் அல்ல என்பதற்கான சான்று இதைவிட வேறென்ன? உன் தந்தை பிருஷதனின் குருதி உன்னில் இருந்ததென்றால் இக்கணமே என்னை எதிர்த்து வந்திருப்பாய். என் குறுவாளால் கொல்லப்பட்டு நீ விழுந்திருந்தால் உன்னருகே மண்டியிட்டு உன்னிடம் நீ ஷத்ரியன் என்று சொல்லி நான் மன்னிப்பு கோரியிருப்பேன்” என்றான்.

வெறுப்பால் விரிந்த உதடுகளுக்குள் வெண்பற்கள் தெரிய கலிங்கன் சொன்னான் “நீ இழிபிறவி. அஞ்சி உடல்நடுங்கி கண்ணீருடன் நின்றிருக்கிறாய். உனக்கெதற்கு கச்சையும் கங்கணமும்? நீ உன் கைகளில் வில்லை ஏந்தி அடையப்போவது என்ன? ஆண்மையற்றவன் எடுக்கும் ஆயுதம் அவன் தலையையே வெட்டும். போ, போய் சமையல்கரண்டியை கையிலெடுத்துக்கொள். அல்லது குதிரைச்சவுக்கை ஏந்து.” ஷத்ரியர்கள் சிரித்துக்கொண்டே அவனை திரும்பித்திரும்பி நோக்கியபடி சென்றனர். இறந்து குளிர்ந்தவை போலிருந்த தன் கால்களை இழுத்து வைத்து நீரை கையால் துழாவி படிகளை அடைந்து ஏறி அமர்ந்துகொண்டான் யக்ஞசேனன்.

நெடுநேரம் அவனுள் சொற்களே நிகழவில்லை. என்ன நடந்தது என்றே விளங்காதவன் போல குமிழிகளும் இலைகளும் மலர்களுமாக சுழித்துச்சென்ற கங்கையையே நோக்கிக்கொண்டிருந்தான். நெடுமூச்சுடன் எழுந்து தன் மரவுரியாடையை எடுத்துக்கொண்டபோதுதான் அவன் அகம் உடைந்தது. தளர்ந்து ஆடிய கையை ஊன்றி படிமீது விழுவதுபோல அமர்ந்துகொண்டான். நீரில் விரிந்து கண்கூச வைத்த காலையொளியை நோக்கி இருக்கையில் தன்னுள் உருகிய இரும்பு உறைவதுபோல இறுகிவரும் வன்மத்தை உணர்ந்தான்.

அவர்களின் கசப்புக்கான முதற் காரணம் தானல்ல என்பதை பின்னர் யக்ஞசேனன் அறிந்துகொண்டான். குருகுலத்தின் அத்தனை ஷத்ரிய இளைஞர்களும் துரோணனை வெறுத்தனர். அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அங்கே துரோணன் சென்றால் அவர்களனைவர் விழிகளிலும் ஒருகணம் மின்னிச்செல்லும் வெறுப்பை தொலைவிலிருந்தே யக்ஞசேனன் கண்டான். ஆனால் அனைவருமே துரோணனை அஞ்சினர், அவனிடம் ஆசிரியனுக்குரிய மரியாதையைக் காட்டினர். அவன் முன் கைகட்டி வாய்பொத்தி நின்று மட்டுமே உரையாடினர். அவனைவிட மூத்தவர்கள் கூட அவனை ‘உத்தமரே’ என்றுமட்டும்தான் அழைத்தனர். அவனுடைய ஆணைகளை உடனடியாக நிறைவேற்றினர். அவன் அளிக்கும் தண்டனைகளை பணிவுடன் பெற்றுக்கொண்டனர்.

அந்த வெறுப்பை துரோணன் நன்கறிந்திருந்தான் என்று யக்ஞசேனன் புரிந்துகொண்டான். அதனால்தான் எப்போதும் துரோணன் செருக்கி நிமிர்ந்த தலையும், பாதிமூடிய விழிகளும், செவிகூர்ந்தாலொழிய கேட்காத பேச்சும், எள்ளல் கலந்த இளநகையும் கொண்டிருந்தான். வில்லோ சொல்லோ விழியோ சரமோ பிழைத்து திகைத்து தன்னை நோக்கும் மாணவனை ஏறிட்டு நோக்காமல் இதழ்களில் இளநகையுடன் அடுத்தவனை வரச்சொல்லி கையசைப்பான் துரோணன். அவன் வில்லேந்தியதும் முந்தையவனின் பிழை என்ன என்று சொல்லி அதைச்செய்யலாகாது என்று அறிவுறுத்துவான்.

“வில் என்பது நா. அம்புகள் சொற்கள். இலக்குகளோ பொருள். ஆகவேதான் வில்வித்தை வேதமோதுதல் எனப்படுகிறது” என்று துரோணன் ஸ்வாத்யாயத்தில் பாடம் சொல்லும்போது விழிகளில் எச்சொல்லுமில்லாமல் ஷத்ரியர் கேட்டு அமர்ந்திருப்பார்கள். “வேதங்களில் முதல் மூன்றும் விடுதலை அளிக்கும் ஞானத்தை முன்வைப்பவை. ஆகவே அவை தூயவை, முற்றிலும் பிராமணர்களுக்குரியவை. உலகியலுக்கான அதர்வத்தை அதமவேதம் என்கின்றனர் சான்றோர். பிராமணன் கையின் வில் மூன்று முதல்வேதங்கள் போன்றது. ஷத்ரியர்களின் வில்வித்தையோ அதர்வமாகும். மணிமுடியும் வெற்றியும் புகழும் மட்டுமே அதன் இலக்கு. அவர்கள் எந்நிலையிலும் தனுர்வேதத்தில் எழுந்தருளும் பிரம்மத்தை அறியமுடியாது.”

தன்னை முற்றிலும் வைதிகப்பிராமணனாக துரோணன் மாற்றிக்கொண்டிருந்தான் என்று யக்ஞசேனன் கண்டான். ஒவ்வொருநாளும் புதியநெறிகளை துரோணன் தனக்கென விதித்துக்கொண்டான். குருகுலத்தில் எவரும் தீண்டிய உணவையும் நீரையும் அவன் அருந்துவதில்லை. தன் ஒருவேளை உணவை அவனே சமைத்துக்கொண்டான். ஓடும் கங்கையில் இருந்து மட்டுமே நீரருந்தினான். மூன்றுவேளையும் கங்கையில் சந்தியா வந்தனம் செய்து காயத்ரியை உச்சரித்தான். தன் உடலை பிராமணரன்றி பிறர் தொடுவதை விலக்கினான். “உத்தம பிராமணர்கள் புன்னகைப்பதில்லை. வாய்வழியாக ஏழு தேவதைகள் வெளியேறிவிடுவார்கள்” என்று ஒருமுறை குசாவர்த்தன் சொன்னபோது மாணவர்களனைவரும் நகைப்பதை யக்ஞசேனன் கேட்டான்.

யக்ஞசேனன் துரோணனின் தனிமையைக் கண்டான். அக்னிவேசரிடமிருந்து முழுக்கக் கற்கும் தகுதிகொண்டவன் அவனே என்றும் தான் கற்றவற்றை அவன் எந்த ஷத்ரிய இளைஞனுக்கும் கற்பிக்கவில்லை என்றும் உணர்ந்துகொண்டான். துரோணனிடம் நெருங்கும் வழியை அவன் உண்மையில் மிகத்தற்செயலாகத்தான் உணர்ந்துகொண்டான். கங்கைக்கான பாதையில் அவன் திரும்பிச்செல்கையில் எதிரே வந்த துரோணனைக் கண்டதுமே பிறரிலிருந்து வேறுபட்டவன் என்பதை அவன் அகம் உணர்ந்தது. அது ஏன் என மீண்டும் மீண்டும் யக்ஞசேனன் தனக்குள் வினவிக்கொண்டான். கரிய குறுகிய உடலும் ஒளிவிடும் சிறுகண்களும் கொண்ட அவன் கையில் தர்ப்பையை மட்டுமே வைத்திருந்தான். பிராமணர்களுக்குரியமுறையில் முப்புரியாக உபவீதமணிந்திருந்தான். அவனுடைய உதடுகள் குளிரில் என நடுங்கிக்கொண்டிருந்தன.

ஆனால் அதுவல்ல காரணம். அக்கணத்தில் அவனுடைய விழி தொட்டு எடுத்த ஏதோ ஒன்றை சித்தமறியாமலேயே ஆன்மா அறிந்துகொண்டது. அது என்ன? தன் அகத்தின் அறைகளை துழாவிக்கொண்டிருந்த யக்ஞசேனன் ஒருநாள் கனவில் அதை மீண்டும் கண்டு எழுந்தமர்ந்தான். அன்று கங்கைக்கரைப்பாதையில் வந்துகொண்டிருந்த துரோணன் தன் சுரிகுழலில் இருந்து சொட்டிய நீர்த்துளி ஒன்றை அனிச்சையாக தன் வலதுகையின் சுட்டுவிரலால் சுண்டி உடைத்து அதன் நுண்சிதறல்களில் ஒன்றை மறுகணமே மீண்டும் சுண்டி தெறிக்கச்செய்தான். அதையுணர்ந்த கணத்திலேயே யக்ஞசேனனின் ஆழம் துரோணனின் உதடுகளில் அதிர்ந்துகொண்டிருந்தது காயத்ரி என்றும் அறிந்தது.

யக்ஞசேனன் எப்போதும் மகாவைதிகனிடம் பேசுவதுபோல துரோணனிடம் பேசினான். ‘பிராமணோத்தமரே’ என்றே அவனை அழைத்தான். எந்நேரமும் அவன் துரோணனுடன் இருந்தான். துரோணன் அவனை தன் மாணவனாக ஏற்றுக்கொண்டு வில்வித்தையின் ஆழத்திற்கும் சுழலுக்கும் இட்டுச்சென்றான். யக்ஞசேனனின் வெற்றியை தனக்கிடப்பட்ட அறைகூவலாகவே அவன் எடுத்துக்கொண்டான். “உன்னுடைய பயிற்சியை இங்கு அனைவரும் கணித்துக்கொண்டிருக்கிறார்கள். அக்னிவேசரும்கூட” என்றான் துரோணன். “நீ களத்தில் தோற்கும்போது எவர் உள்ளங்களிலெல்லாம் புன்னகை மலருமென இப்போதே என்னால் காணமுடிகிறது. அது நிகழப்போவதில்லை.”

யக்ஞசேனனின் விரல்களை மரவுரிச்சுருளால் கட்டி இழுத்தும் வளைத்தும் பயிற்சிகொடுத்தான். மாலையில் விரல்கள் நடுவே மூங்கில்துண்டுகளை வைத்து மரவுரியால் இறுகக் கட்டி வைத்தான். இரவெல்லாம் விரல்கள் உடைந்துதெறித்துவிடுபவை போல வலிக்க யக்ஞசேனன் அழுகையை அடக்கியபடி இருளுக்குள் துயிலாது புரண்டுகொண்டிருந்தான். அக்கணமே அனைத்தையும் உதறி எழுந்தோடிவிட வேண்டும் என எழுந்த உள்ளத்தை அவனறிந்த அனைத்துச் சொற்களாலும் அடக்கிக்கொண்டிருந்தான். வலி சீராக அதிர்ந்து துடிக்கும் மந்திரம் போலிருந்தது. கூடவே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது. துயிலவிடாமல் தொட்டு உலுக்கியது. வலியை வெல்ல அவன் தன்னுள் உயிர்ப்பித்துக்கொண்ட இனியநினைவுகளில் கூட வலியே அதிர்ந்தது.

காலையில் கட்டை அவிழ்க்கையில் விரல்கள் வீங்கி வெளுத்து நீரில் மட்கிய சடலத்தின் கை போலிருக்கும். ஏழுவகை மூலிகைகளை நவச்சாரத்துடன் கலந்து மயிலிறகிட்டு காய்ச்சி எடுத்த எண்ணையை அவ்விரல்களுக்குப் பூசி இழுத்து நீவும்போது நிமிரும் மூட்டுகளில் இருந்து உடலெங்கும் கதிர்களைப்போல வலிபரவி நரம்புகளெல்லாம் தீப்பட்ட மண்புழுக்கள் போல துடித்துச்சுருளும். கங்கையின் வெம்மணலில் விரல்களை குத்திக்குத்தி ஆயிரத்தெட்டுமுறை அள்ளவேண்டும். பின்னர் நீருக்குள் ஆயிரத்தெட்டுமுறை அளாவுதல். மாட்டுக்குளம்பைக் காய்ச்சி எடுத்த பசையை கைவிரல்களில் பூசி உலரவிட்டு பகலெல்லாம் வைத்திருப்பான். மாலையில் உறைந்து கொம்பு போல ஆகிவிட்ட அப்பூச்சுக்குள் இருந்து கைவிரல்களை உடைத்து எடுத்து மீண்டும் நாண்பயிற்சி.

எட்டுமாதங்களில் யக்ஞசேனனின் கைவிரல்கள் நெகிழ்ந்தன. நாணுக்கு நிகராக வளைந்து எங்கும் செல்பவையாக மாறின. தன் கைவிரல்கள் நாகபடம்போல கணநேரத்தில் சொடுக்கித்திரும்பி அம்பைக் கவ்வி எடுத்து அக்கணத்திலேயே நாணேற்றுவதைக் கண்டு அவனே வியந்தான். மேலுமிரு மாதங்களுக்குப்பின் அவனையும் பிற இளவரசர்களுடன் களம் நிற்கச்செய்தான் துரோணன். தன் அம்புகள் மீன்கொத்திகள் போல எழுந்து பாய்ந்து இலக்கில் பதிந்து சிறகசைத்து நின்றாடுவதைக் கண்டபோது யக்ஞசேனன் கண்ணீர் மல்கி வில்லை தாழ்த்திவிட்டான். பயிற்சியளித்துக்கொண்டிருந்த துரோணன் “ஏன்?” என்றான். வில்லுடன் துரோணன் அருகே சென்று அதை அவன் கால்களில் வைத்து கண்ணீர் வழிய இடறிய குரலில் “என்னை என்னிடமிருந்து மீட்டுவிட்டீர்கள் உத்தமரே” என்றான் யக்ஞசேனன். புன்னகையுடன் “நலம் திகழ்க!” என்று துரோணன் அவனை வாழ்த்தினான்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

பயிற்சிக்களத்தில் இலக்குகளை மிக எளிதில் வெல்லத்தொடங்கினான் யக்ஞசேனன். மாதமொருமுறை முழுநிலவு நாள் காலையில் நிகழும் பூர்ணாப்யாச நிகழ்ச்சியில் வங்க இளவரசன் சுதனுஸ் விட்ட அம்புகளை தன் அம்புகளால் தடுத்து முறித்து வீசினான். குசுமவதியின் ஜயசேனனின் குடுமியை வெட்டி காற்றில் பறக்கவிட்டான். விதேகமன்னன் ஹயக்ரீவன் தன் வில்லை எடுப்பதற்குள்ளாகவே அதை வெட்டி வீழ்த்தினான். பின்னர் வில்லைத் தாழ்த்தியபடி நடுக்களத்தில் அசையாமல் நின்றான். அவன் நிற்பது எதற்காக என்று உணர்ந்த துரோணன் புன்னகையுடன் எவரையும் நோக்காமல் அமர்ந்திருந்தான். அனைத்து ஷத்ரிய இளைஞர்களும் கலிங்கனை நோக்கினர்.

அவர்கள் தன்னை நோக்குவதை கலிங்கன் சிலகணங்கள் கழித்துதான் கண்டான். அவன் உடல் நீர்த்துளி போல ததும்பத் தொடங்கியதை யக்ஞசேனன் கண்டான். அத்தருணத்தின் எடை பெருகிப்பெருகி வந்து ஒரு கணத்தில் கலிங்கனின் கை தோளிலிருந்து வில்லை அவனறியாமல் எடுத்துக்கொண்டது. ஷத்ரிய மாணவர்களிடமிருந்து அவர்களை அறியாமல் எழுந்த ஒலி விராடரூபம் கொண்ட மிருகமொன்றின் முனகல் போல கேட்டது. என்ன செய்கிறேன் என திகைத்தவன் போல அவன் அவர்களை நோக்கினான். ஆனால் அவனையறியாமலேயே கால்களால் செலுத்தப்பட்டு களமுற்றத்துக்கு வில்லுடன் வந்து நின்றான்.

அவன் எதிரே நின்ற யக்ஞசேனன் தன் தாழ்த்திய வில்லை தூக்காமல் அசையாமல் நின்றான். யக்ஞசேனன் போரிடவிரும்பவில்லை என்று ஒருகணம் எண்ணிய கலிங்கன் மறுகணம்தான் அது ஓர் அவமதிப்பு என அறிந்து குருதிமுழுக்க தலையிலேற தலையை தூக்கினான். வெறியுடன் கூச்சலிட்டபடி அம்புகளைத் தொடுத்து தன் முன் நிற்பவனை சிதைத்து மண்ணில் உருட்டி காலால் அவன் தலையை ஓங்கி உதைக்கவேண்டுமென பொங்கிய அகத்தை வென்று மெல்ல காலெடுத்து வைத்து வில்லைத் தூக்கியபடி முன்னகர்ந்தான்.

முதல் அம்பை தான் விடுவதுவரை யக்ஞசேனன் தன் வில்லை மேலேற்றப்போவதில்லை என்று உணர்ந்ததும் கலிங்கனின் அகமெங்கும் கொதித்தெழுந்த சினம் அக்கணம் வரை அவன் கொண்டிருந்த அனைத்து எச்சரிக்கைகளையும் சிதறடித்தது. தன்னையறியாமலேயே எழுந்த உறுமலுடன் அம்பறாத்தூணியிலிருந்து அம்பை உருவி நாணில்தொடுத்து யக்ஞசேனன் மீது தொடுப்பதற்குள் அவன் வில்தண்டு அதிர்ந்து தோளை பின்னுக்குத்தள்ளியது. அவன் எடுத்த அம்பு கையிலிருந்து களமுற்றத்தில் உதிர்ந்து கிடக்க ஒடிந்த வில்லின் இரு துண்டுகளும் நாணில் கட்டப்பட்டவை போல அவன் கையில் தொங்கின.

பல்தெரிய உதடுகளைக் கோணி ஆங்காரமாக கூவி துப்பியபடி ருதாயு களத்தை விட்டு விலகுவதற்காகத் திரும்பியபோது அவனுடைய தலைப்பாகையை சிறியகரம் ஒன்று பிடுங்கிச்செல்வதுபோல உணர்ந்து கைதூக்கினான். அதை எடுத்துச்சென்ற அம்பு தரையில் அதை வீழ்த்தி அதன் மேல் தைத்து நின்றாடியது. “உத்தமரே!” என்று அவன் கூவியபடி திரும்புவதற்குள் இன்னொரு அம்பு அவனுடைய மேலாடையை தோளில் கட்டியிருந்த முடிச்சைத் தாக்கி அறுத்தது. அவன் பின்னால் நகர்வதற்குள் இன்னொரு அம்பு அதை அவனுடலில் இருந்து கிழித்து அம்பறாத்தூணியுடன் சேர்த்து கொண்டுசென்றது.

என்னசெய்கிறோமென்றறியாமல் அவன் கீழே கிடந்த உடைந்த வில்லை எடுத்துக்கொண்டு உரக்க கூச்சலிட்டபடி யக்ஞசேனனை நோக்கி ஓடினான். அவனுடைய இடைக்கச்சையை தாக்கிய அம்பு அதை அறுக்க அவன் அதைப்பிடிப்பதற்குள் இன்னொரு அம்பு இடையிலணிந்திருந்த புலித்தோலாடையைக் கிழித்து தூக்கிக்கொண்டு சென்றது. உள்ளே அணிந்திருந்த தோல் கோவணத்துடன் அவன் திகைத்து நின்றான். பின்பு அப்படியே புழுதியில் அமர்ந்து சுருண்டுகொண்டான். ஷத்ரியர்கள் விழித்த கண்களும் திறந்த வாய்களுமாக ஓசையழிந்து நின்றனர்.

துரோணன் எழுந்து “நில் யக்ஞசேனா!” என்றான். யக்ஞசேனன் தன் வில்லைத் தாழ்த்தி சென்று அவன் கால்களைத் தொட்டு வணங்கினான். துரோணன் “ருதாயு, நீ அவனிடம் என்ன சொன்னாய் என்று எனக்குத்தெரியும். அவன் ஷத்ரியன் என்பதில் நீ இப்போது ஐயம் கொள்ளமாட்டாயென எண்ணுகிறேன்” என்றான். குனிந்து ஒடுங்கியிருந்த ருதாயுவின் உடல் மெல்லிய அசைவாக மேலும் குறுகியது. “தன்னை விட எளியவனை அறைகூவுபவன் அதம ஷத்ரியன். எந்த அறைகூவலானாலும் அதை ஏற்பவன் மத்திம ஷத்ரியன். தன்னை தகுதிப்படுத்திக்கொண்டு தருணமறிந்து அவ்வறைகூவலுக்கு எதிர்செய்பவனே உத்தம ஷத்ரியன்.” களம் கலையலாம் என்று கைகாட்டியபின் துரோணன் எழுந்து செல்ல வில்லுடன் அவனுக்குப்பின்னால் யக்ஞசேனன் நடந்தான்.

அன்றுமாலையே கலிங்கன் தன் மூட்டையை எடுத்துக்கொண்டு எவரிடமும் சொல்லாமல் குருகுலத்தில் இருந்து மறைந்தான். அதன்பின் யக்ஞசேனன் பேச்சும் பாவனையும் முற்றாக மாறின. எந்த ஷத்ரிய மாணவனையும் சுட்டுவிரலை அசைத்து அருகழைத்து ஆணையிட அவனால் முடிந்தது. அவனுடைய ஆணைகள் மீறமுடியாதவை என்றாயின. அவனுடைய விழிகளை எதிர்கொள்ள அவர்களால் இயலவில்லை. கங்கையின் படித்துறையில் அவன் இறங்கி வரும்போது குளித்துக்கொண்டிருந்த ஷத்ரியர்கள் பேச்சை அடக்கி விலகி நின்றனர். மாளவனின் ஆடை விலகியபோது அவன் அதை அள்ளிப்பற்றினான். அவ்வசைவில் யக்ஞசேனன் மேல் நீர் தெறிக்க அவன் தன்னையறியாமலேயே எழுந்த சினத்துடன் கையை ஓங்கியபடி திரும்பி அவனை நோக்கினான். நடுங்கி கைகளைக் கூப்பி நின்ற அந்த இளவரசனின் கண்களைக் கண்டதும் யக்ஞசேனன் உள்ளூர புன்னகை செய்தான்.

அன்று மாலை தர்ப்பைக்காட்டில் துரோணனுடன் அமர்ந்திருக்கையில் யக்ஞசேனன் இரு கைகளையும் கூப்பி “பிராமணோத்தமரே, வைதிகனின் அருள் பெற்ற ஷத்ரியன் நிகரற்றவன் என இன்று உணர்ந்தேன். தங்களை வணங்கி அடைக்கலம் கோரும்படி என்னைப் பணித்த என் மூதாதையரை வணங்குகிறேன்” என்றான். துரோணன் “என் அருள் உனக்கு உள்ளது யக்ஞசேனா” என்றான். “அவ்வருள் என்னுடன் என்றுமிருக்கவேண்டும் உத்தமரே” என்று கையை நீட்டி துரோணனின் பாதங்களைத் தொட்டான் யக்ஞசேனன். “அவ்வாறே ஆகுக!” என அவன் தலையில் தன் இடதுகையை வைத்தான் துரோணன்.

“உத்தமரே, தாங்களறியாதது அல்ல. எங்கள் பாஞ்சாலநாடு தொன்மையானது. வேதங்களை வகுத்தமைத்த சௌனக குருகுலமும் தைத்திரிய குருகுலமும் அமைந்திருந்த புனிதமான மண் அது. கங்கையின் வளமான மண்ணை கிருவிகுலம், துர்வாசகுலம், கேசினிகுலம், சிருஞ்சயகுலம், சோமககுலம் என்னும் ஐம்பெரும் குலங்கள் ஆண்டன. என் மூதாதை பாஞ்சால முல்கலரின் காலத்தில் ஐங்குலங்களும் இணைந்து பாஞ்சாலமெனும் ஒற்றைநாடாயிற்று. எதிரிகள் அஞ்சும் ஆற்றல்கொண்ட படை உருவாயிற்று. காம்பில்யம் அதன் வெல்லமுடியாத தலைநகரமாக எழுந்து வந்தது. எங்கள் நாட்டின் வெற்றியும் சிறப்பும் அன்று உச்சத்திலிருந்தன.”

“உத்தமரே, பின்னர் என் மூதாதை சகதேவரின் காலத்தில் சோமககுலமும் சிருஞ்சயகுலமும் முரண்பட்டுப் பிரிந்தன. போரைத் தடுக்கும்பொருட்டு குலமூதாதையர் கூடி நாட்டை இரண்டாகப்பிரித்தனர். உத்தரபாஞ்சாலத்தின் தலைநகரமாக சத்ராவதி அமைக்கப்பட்டது. காம்பில்யத்தை தலைநகராகக்கொண்டு தட்சிணபாஞ்சாலம் அமைந்தது. எந்தை பிருஷதர் இன்று தட்சிணபாஞ்சாலத்தின் மாமன்னராக விளங்கிவருகிறார். உத்தரபாஞ்சாலம் நோயுற்றிருக்கும் சோமகசேனரால் ஆளப்படுகிறது” யக்ஞசேனன் சொன்னான்.

“இன்றைய பாஞ்சாலம் மூன்றுபக்கமும் குருநாட்டு வேளாண்குடிகளாலும் சூரசேனத்தின் ஆயர்குடிகளாலும் மச்சர்நாட்டு மீனவர்களாலும் நெருக்கப்படுகிறது. எங்கள் எல்லைகள் ஒவ்வொரு நாளும் சுருங்கிவருகின்றன. எங்கள் வளங்கள் கண்ணெதிரே கொள்ளைசெல்கின்றன. என் தந்தை தன் வாழ்நாளெல்லாம் பாஞ்சாலநாடு ஒருங்கிணையவேண்டுமென்றும் வலிமையான படைகளும் காவல்மிக்க எல்லைகளும் அமையவேண்டும் என்றும் விரும்பியிருந்தார். ஆனால் சோமகசேனரின் படைகளை எதிர்கொள்ள அவருக்கு ஆற்றலிருக்கவில்லை” என்றான் யக்ஞசேனன்.

யக்ஞசேனன் “உத்தமரே, நோயுற்றிருக்கும் சோமகசேனர் எக்கணமும் இறக்கக் கூடும். அவர் இறந்ததுமே அஸ்தினபுரி எங்கள்மேல் படைகொண்டு எழும் என்று எந்தை அஞ்சுகிறார். ஏனென்றால் எங்களுக்கும் அஸ்தினபுரியின் குருவம்சத்துக்கும் பன்னிரு தலைமுறைக்கால பகை நிலவுகிறது. எந்தை என்னை இங்கே படைக்கலப் பயிற்சிக்கென அனுப்பியது அவ்வச்சத்தால்தான். நான் இங்கு வந்ததுமே எந்தை நம்பிக்கை கொண்டார். நான் தங்கள் அருள் என் மேல் விழுந்ததுமே அந்நம்பிக்கையை உறுதிசெய்துகொண்டேன்” என்றான். “தங்கள் பாதங்களைப் பற்றி கோருகிறேன் பிராமணோத்தமரே. நான் என் நாட்டை முழுதடைய உங்கள் தனுர்வேதம் எனக்குத் துணைவரவேண்டும்.” துரோணன் “அவ்வாறே ஆகுக!” என்றான்.

மறுநாள் இரவில் தன் குடிலில் தரையில் விரிக்கப்பட்ட தர்ப்பைமேல் துயின்றுகொண்டிருந்த யக்ஞசேனனை காலால் தீண்டி எழுப்பினான் துரோணன். யக்ஞசேனன் எழுந்து “உத்தமரே” என்று சொன்னபோது “என்னுடன் வா” என்றழைத்தபின் துரோணன் வெளியே இறங்கி நடந்தான். உடலை ஒடுக்கியபடி அவனைப் பின்தொடர்ந்தான் யக்ஞசேனன். இருளுக்குள் பாம்புபோல ஊடுருவிச்சென்றுகொண்டிருந்த துரோணனை புற்களிலும் வேர்களிலும் கால்கள் தடுக்கியும் புதர்க்கிளைகளில் முட்டிக்கொண்டும் யக்ஞசேனன் தொடர்ந்துசென்றான்.

இருளில் ஒரு மரத்தடியில் சென்று நின்ற துரோணன் “யக்ஞசேனா, அருகே வா. நீ என்னிடம் கோரியதை உனக்களிக்கிறேன்” என்றான். யக்ஞசேனன் அருகே சென்று வணங்கி நின்றான். “வில்வித்தையின் கடைசி படி என்பது காற்றையும் நெருப்பையும் அம்புகளால் கையாள்வது. காற்றைக் கையாளும் மந்திரத்தை உனக்கு இப்போது கூறுகிறேன். அதை மனனம்செய்து நெஞ்சிலேற்றிக்கொள். அந்த சூத்திரத்தின்படி அம்புகளை செய்துகொள். உன் எதிரிகளை களத்தில் தன்னினைவழிந்து மயக்கமுறச்செய்யும் ஆற்றல் அந்த அம்புகளில் அமையும். நீ உன் குலத்தை முழுதும் வெல்ல அதுவே போதுமானது.”

“தங்கள் அருள்!” என்ற யக்ஞசேனன் துரோணனின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தான். குனிந்து அவன் காதில் அந்த மந்திரத்தை மும்முறை சொன்ன துரோணன் “நான் நின்றிருக்கும் இந்த மரமே அந்த மருந்தை அளிக்கும் வேர்களைக் கொண்டது” என்றான். யக்ஞசேனன் கைகூப்பினான். துரோணன் “உனக்கு வெற்றி கிடைக்கட்டும்!” என்று வாழ்த்தினான்.

அக்கணத்தில் யக்ஞசேனன் தான் வெற்றிபெற்றுவிட்டதை, ஒருங்கிணைந்த பாஞ்சாலம் என்ற நான்குதலைமுறைக் கனவு நனவாகப்போவதை உணர்ந்தான். அப்போதெழுந்த மனஎழுச்சியால் நடுங்கிய கரத்துடன் துரோணனை வணங்கி “உத்தமரே, என் மூதாதையர் அறிக. என் குலதெய்வங்கள் அறிக. இங்கே சூழ்ந்திருக்கும் ஐம்பெரும்பூதங்களும் அறிக. தாங்கள் எனக்களித்த ஞானத்திற்கான குருகாணிக்கையாக என் நாட்டில் பாதியை தங்களுக்கு அளிக்கிறேன்” என்றான்.

துரோணன் சிரித்து “மூடா, நான் பிராமணன். நாடாள்வது எனக்கு இழிவானது” என்றபின் “வருக” என்று சொல்லி முன்னால் நடந்தான். கூப்பிய கைகளைப்பிரிக்காமலேயே யக்ஞசேனன் பின்னால் சென்றான்.