வண்ணக்கடல் - 20
பகுதி நான்கு : வெற்றித்திருநகர்
[ 5 ]
தானிட்ட முட்டைகளை அணைத்துச்சுருண்டிருக்கும் நீலநாகம் போல கிருஷ்ணை நான்கு குன்றுகளைச் சுற்றிக்கொண்டு சென்றதை மலைமேலிருந்து பார்க்க முடிந்தது. அந்தக் குன்றுகளுக்கு மேல் காவல்மாடங்களில் கொடிகள் பறந்தன. “இந்த நான்கு மலைகளால்தான் இந்நிலம் நால்கொண்டா என்று அழைக்கப்படுகிறது” என்றார் கீகடர். மலைச்சரிவில் இறங்குவதற்கு முன்பு அங்கே பாறையிடுக்கிலிருந்து ஊறிவழிந்த குளிர்ந்த நீரை அருந்தியபின் பாறைமேல் அமர்ந்து மலைகளில் பறித்துவந்த காய்களை உண்டுகொண்டிருந்தார்கள். “இந்நிலம் மிகமிகத் தொன்மையானது. முற்காலத்தில் இங்கே மனிதக்குரங்குகள் வாழ்ந்தமையால் இதை கிஷ்கிந்தை என்பவரும் உண்டு. கோட்டைகட்ட அகழ்வுசெய்யும்போதெல்லாம் குரங்குமனிதர்களின் எலும்புக்கூடுகள் இங்கே கிடைக்கின்றன.”
இளநாகன் கீழே தெரிந்த நகரத்தை நோக்கினான். அவன் அதுவரை கண்ட நகரங்களிலேயே அதுதான் அளவில் மிகப்பெரியது. நான்கு குன்றுகளுக்கு நடுவே உள்ள இடைவெளிகளை உயரமற்ற மண்கோட்டையாலும் கோட்டைக்கு வெளியே வெட்டப்பட்டிருந்த ஆழமான அகழிகளாலும் அகழிக்கு வெளியே உருவாக்கப்பட்டிருந்த செயற்கை காட்டினாலும் இணைத்து நகரத்தை பாதுகாத்திருந்தனர். அங்கிருந்து பார்க்கையில் சிறியதாகத் தெரிந்த விஜயபுரியின் அடுக்குமாளிகைகள் மீது பலவண்ணக்கொடிகள் பறந்துகொண்டிருப்பது தெரிந்தது. குந்தல மன்னர்களின் தலைநகரமான விஜயபுரி பெரும்பாலும் கிருஷ்ணை வழியாகவே தென்புலத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பெரிய அரசபாதை வடக்குவாயில் வழியாகக் கிளம்பி மேலே சென்றது.
காளஹஸ்தியிலிருந்து வந்த வண்டிப்பாதை எத்திப்பொத்தலா என்னும் சிற்றூரில் நின்றுவிட்டது. அங்கிருந்து கழுதைகளில் பொதிகளை ஏற்றி கிருஷ்ணையின் மேட்டின் மேலே கொண்டுசென்று அதற்குமேல் படகுகளில் பயணம்செய்துதான் விஜயபுரியை அடையமுடியும். எடுத்து ஊற்றியது என்னும் பொருள் கொண்ட எத்திப்பொத்தலா பேரருவியின் ஓசையும் வானிலெழுந்த நீர்ப்புகையும் நெடுந்தொலைவுக்கு அப்பால் தெரிந்தன. “கடுமையான பாதை” என்றான் இளநாகன். “ஆம், அதனால்தான் விஜயபுரியை ஆயிரமாண்டுகளாக எதிரிகள் எவரும் அணுகியதே இல்லை. வணிகர்கள் எப்படியானாலும் வந்துசேர்வார்கள்” என்றார் கீகடர்.
வெண்ணிற நுரைக்கொந்தளிப்பாக கீழே பொழிந்துகொண்டிருந்த கிருஷ்ணையின் சீற்றத்தை நோக்கியபடி மறுமுனையில் நின்றிருந்தபோது கீகடர் “இவ்வழியாகச் செல்வது செலவேறியது. சூதரும் பாணரும் துறவியரும் செல்லும் மலைப்பாதை ஒன்றுண்டு” என்று சொல்லி காட்டுக்குள் கொண்டுசென்றார். அவரும் அவரது தோழர்களான அஸ்வரும் அஜரும் முழவும் கிணையும் யாழுமாக தொடர்ந்து சென்றனர். ஒரு கணம் தயங்கியபின் இளநாகன் ஓடிச்சென்று சேர்ந்துகொண்டான். “அடர்ந்த காடு போலிருக்கிறதே” என்றான். “ஆம்…” என்றார் அஸ்வர். “காட்டுவிலங்குகள் உள்ளனவா?” என்றான் இளநாகன். “ஆம், அவை பொதுவாக சூதர்களை உண்பதில்லை” என்றார் அஜர். “வயதான சிம்மங்கள் ஆண்மை விருத்திக்காக மட்டுமே சூதர்களை உண்கின்றன. அவை மிகக்குறைவே.” இளநாகன் சிரித்தான்.
அங்கிருந்த மலைகளை வியப்புடன் இளநாகன் முகம் தூக்கி நோக்கினான். காளஹஸ்தி முதல் பாறைகள் மாறிக்கொண்டிருந்த விதத்தைத்தான் அவன் பார்த்துக்கொண்டிருந்தான். கருமேகங்கள் கல்லானதுபோலத்தெரிந்தன தமிழ்நிலத்துப் பாறைகள். திருவிடத்துப் பாறைகள் பேருருவக் கூழாங்கற்களின் சிதறல்களாகவும் குவைகளாகவும் தோன்றின. ஏட்டுச்சுவடிக்கட்டுகளை அடுக்குகளாகக் குவித்ததுபோலத் தெரிந்தன நால்கொண்டாவின் பாறைக்கட்டுகள். ஒன்றை அடியிலிருந்து உருவிஎடுத்தால் அவை சரசரவென தலைமேல் சரிந்துவிடுமென்பதுபோல. சற்று முயன்றால் அவற்றில் ஒன்றை உருவி எடுக்கவும் முடியும் என்பதைப்போல. மலைச்சரிவுகளில் உடைந்து சரிந்த பாறைகள் கற்பலகை உடைசல்கள் போல குவிந்துகிடந்தன. ஏதோ கட்டடம் இடிந்ததுபோல.
மலைமேல் ஏறத்தொடங்கி அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து பின் உயரமற்ற முள்மரங்கள் பரவிய மலைச்சரிவை அடைந்ததும் அப்பால் கிருஷ்ணையின் தோற்றம் தெரிந்தது. “இந்த மலைகளில் ஆயிரம் வருடம் முன்பு குந்தலர்கள் வேடர்களாக வாழ்ந்திருந்தனர். அவர்களின் குலத்தலைவனாகிய கொண்டையன் என்பவரது கனவில் பன்னிருகைகளுடன் எழுந்து வந்த கன்னங்கரிய தெய்வமான நல்லம்மை இங்கே ஆற்றின்கரையில் ஒரு நகரை அமைக்கும்படி சொன்னாள். அவன் தன்னுடைய நூறு குடிகளுடன் மலையிறங்கி வந்து கிருஷ்ணையின் நீரை வெட்டி மலைகளைச் சூழ வலம் வரச்செய்து நடுவே எழுந்த நிலத்தில் ஒரு சிற்றூரை அமைத்தான். நல்லம்மைகொண்டா என்ற அந்த ஊர்தான் பின்னர் நலகொண்டா என்றழைக்கப்படுகிறது என்று சொல்பவர்கள் உண்டு. நகர்நடுவே நல்லம்மையின் ஆலயம் இன்றுள்ளது. அதை கொற்றவை என்றும் சாக்தர் வழிபடுகின்றனர்” என்றார் கீகடர்.
அவர்கள் மாலையில் கீழிறங்கிவந்தனர். அங்கே விரிந்துகிடந்த புதர்க்காடு முழுக்க பல்லாயிரம் பந்தங்களும் விளக்குகளும் தெரிந்தன. “படைகளா?” என்றான் இளநாகன். “இல்லை, அனைவருமே மலைவணிகர்கள்” என்றார் கீகடர். “விஜயபுரியின் வாயில் மாலையில் மூடப்பட்டுவிடும்”. காலையில் எழுந்து இருளிலேயே அங்கே ஓடிய சிற்றாற்றின் கைவழியில் நீராடி எழுந்தபோது பல்லாயிரம் பேர் சுமைகளுடன் கோட்டையின் தெற்குவாயிலில் கூடி நிற்பதை காணமுடிந்தது. மூங்கில்குழாய்களில் மூடப்பட்ட மலைத்தேன், பாளங்களாக்கப்பட்ட அரக்கும் தேன்மெழுகும், உலரவைக்கப்பட்ட மலையிறைச்சி, அகில் போன்ற நறுமணப்பொருட்கள்… “மலைப்பொருட்களுக்கான வணிகமே இங்கு முக்கியம் என நினைக்கிறேன்” என்றான் இளநாகன்.
“ஆம். ஆனால் விஜயபுரியின் பெருவணிகம் என்பது சந்தனம்தான். கிருஷ்ணையின் கைகள் வழியாக உருட்டிக்கொண்டுவரப்படும் சந்தனத்தடிகள் அங்கே கரையேற்றப்பட்டு சிறு துண்டுகளாக்கப்பட்டு கடலுக்குச் செல்கின்றன” என்றார் கீகடர். “தெற்கே விரிந்துள்ள காடுகளில் வாழும் வேடர்களுக்கும் வடக்கே நீண்டுசெல்லும் வறண்டநிலத்து ஆயர்களுக்கும் இந்நகரே சந்தை மையம். நூற்றாண்டுகளாகவே ஒருவராலும் வெல்லப்படாமையால் இந்நகரை விஜயபுரி என்றழைக்கின்றனர் புலவர்.” கூடிநின்றவர்களுடன் சுமைகளேற்றிய எருதுகளும் கழுதைகளும் செருக்கடித்து கால்மாற்றி காதுகளை அடித்துக்கொண்டு நின்றன. “மீன்பிடிக்கும் வலைகளைச் செய்யும் நல்லீஞ்சை என்னும் முட்செடியின் பட்டைதான் இங்கிருந்து மிகுந்த விலைகொடுத்து வாங்கப்படுகிறது. உப்புநீரில் மட்காத அந்த நார் பத்துவருடம் வரை அழியாதிருக்கும் என்கிறார்கள்.”
கோட்டைக்குமேல் பெருமுரசு ஒலியெழுப்பியதும் கூடிநின்றவர்களிடம் கூட்டுஓசை எழுந்தது. பல்லாயிரம் கால்கள் அனிச்சையாக சற்று அசைந்தபோது எழுந்த அசைவு அலையாகக் கடந்துசென்றது. சங்கு ஒலித்ததும் தெற்குவாயில் கோட்டைக்கதவு கனத்த சங்கிலியில் மெல்லச்சரிந்துவந்து அகழிமேல் பாலமாக அமைந்தது. அதனுள் நுழைந்தவர்கள் பலர் தங்கள் புயங்களைக் காட்டிவிட்டுச் சென்றதை இளநாகன் கண்டான். “விஜயபுரியின் சுங்கமுறை மிக விரிவானது” என்றார் கீகடர். “புதியவர்கள் பொருட்களுக்கேற்ப சுங்கம் அளிக்கவேண்டும். மலைமக்களின் குலங்களிடம் வருடத்துக்கொருமுறை கூட்டாக சுங்கம் கொள்ளப்படும். அவர்கள் தங்கள் குலமுத்திரை பச்சைகுத்தப்பட்ட தோள்களை காட்டிவிட்டுச் செல்லலாம். சில வேடர்கள் வாழ்நாளுக்கொரு தொகையாக கப்பம் கட்டியிருப்பார்கள். சுங்கமுத்திரை அவர்கள் தோளில் தீயால் சுட்டுபதிக்கப்பட்டிருக்கும். அரசருக்கு நேரடியாக சுங்கமளிப்பவர்கள் பொன்னாலான முத்திரை மோதிரத்தை வைத்திருப்பார்கள்.”
உரக்கச்சிரித்து கீகடர் சொன்னார் “எங்கும் சுங்கமின்றிச் செல்லும் செல்வம் கவிதை மட்டுமே. சொல்லை மறுக்கும் குலமெதையும் நான் பாரதத்தில் கண்டதில்லை.” இளநாகன் “ஆம், சொற்களை வாங்கி அவர்கள் தங்கள் முற்றத்தில் நட்டு முளைக்கவைக்கிறார்கள்” என்றான். “உண்மைதான் இளைஞனே. இங்குள்ள வேடர்குடிகள் வரை அனைவரிடமும் குமரிமுதல் இமயம் ஈறாக விரிந்திருக்கும் இப்பெருநிலம் பற்றிய ஒரு அகச்சித்திரம் உள்ளது. அவ்வரியை அறியாத எந்த மானுடனையும் இங்கே நான் கண்டதில்லை. அவர்களனைவருமே இந்நிலத்தை அறியும் பேராவலுடன் உள்ளனர். இங்கே தென்னகத்திலுள்ள ஒவ்வொருவரும் வடபுலத்தை அறியத்துடிக்கின்றனர். இமயமும் கங்கையும் அவர்களுக்குள் வாழ்கின்றன. வடக்கே உள்ளவர்கள் தென்குமரியையும் மதுரையையும் கனவுகாண்கிறார்கள். அந்தக்கனவே பாணர்களுக்கு உணவும் உறைவிடமும் ஆகிறது.”
அவர்கள் நகருக்குள் நுழைந்தனர். “முதல் வினாவையே பார்” என கீகடர் மெல்ல சொன்னார். அவர்களை வரவேற்ற முதல் வீரன் “விஜயபுரிக்கு வருக வடபுலச்சூதர்களே. அஸ்தினபுரியில் இளையோர் எவரிடம் கற்கின்றனர் இப்போது?” என்றான். கீகடர் சிரித்து “அவர்கள் போரிடக்கற்றுக்கொள்கின்றனர் வீரரே. போரிடக்கற்றுக்கொள்வதன் முதல் பாடமே சிறந்தமுறையில் எதிரிகளை உருவாக்கிக்கொள்வது அல்லவா?” என்றார். இன்னொரு வீரன் “பீமன் யானையையே தோளில் தூக்குபவன் என்றார்களே உண்மையா?” என்றான். “ஆம், மீண்டும் அந்தப்பாணன் அஸ்தினபுரி செல்லும்போது யானை பீமனை தூக்கத் தொடங்கிவிடும்” என்றார் கீகடர். அவர்கள் நகைத்தபடி “காலையிலேயே கள்ளருந்த விழைவீர் அல்லவா பாணரே?” என்றபின் ஒரு செம்புநாணயத்தை அளித்து “கம்ம குலத்து சீராயன் மைந்தன் நல்லமன் பெயரைச்சொல்லி அருந்துக கள்ளே” என்றான். அவனை வாழ்த்தி அதை பெற்றுக் கொண்டார் கீகடர்.
“சீராயன் என்னும் சிறப்புள்ள மாவீரன் பேராலே அருந்துக பெருங்கள் மாகதரே! ஊரான ஊரெல்லாம் உண்டிங்கு வீரர்கள் சீராயனைப் போலவே சிந்திப்போன் எவருண்டு?” என மேலும் இரு வரிகளைப்பாடி இன்னொரு செம்புக்காசைப்பெற்றுக்கொண்டு அஸ்வர் அவர்களுக்குப்பின்னால் ஓடிவந்தார். சிரித்தபடி “சொல்லறியாதவர்களிடம் சொல்லுக்கிருக்கும் மதிப்பு வியப்பூட்டுவது” என்றார். “நாமறியாதவற்றை அல்லவா அவர்களும் விற்கிறார்கள்?” என்றார் அஜர். “அறியாதவற்றுக்குத்தான் இவ்வுலகில் மதிப்பு அதிகம். அறியவே முடியாததை அல்லவா மிக அதிகமாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள் வைதிகர்கள்?” என்றபின் எதிரே சென்றுகொண்டிருந்த வைதிகரை நோக்கி “ஓம் அதுவும் தட்சிணை இதுவும் தட்சிணை .தட்சிணையிலிருந்து தட்சிணை போனபின்பும் தட்சிணையே எஞ்சியிருக்கிறது” என்றார். “மூடா, உன்னை சபிப்பேன்” என்றார் முதியவைதிகர் கிண்டியிலிருந்து நீரை எடுத்து தர்ப்பையை பிடித்தபடி. “சூதர்களை எவரும் சபிக்கமுடியாது வைதிகரே. அவர்கள் தங்களைத்தாங்களே சபித்துக்கொள்ளக்கூடியவர்கள்” என்றார் கீகடர். வைதிகர் திகைக்க பிற இருவரும் கூகூகூ என ஓசையிட்டபடி ஓடினார்கள்.
அவர்கள் நேராக மலிவான கள்விற்கும் ஊனங்காடிக்குத்தான் சென்றனர். “இங்கே உயர்ந்த பனங்கள் விற்கப்படுகிறது” என்றார் கீகடர் மீசையில் சிக்கியிருந்த சிறு பூச்சிகளை கைகளால் நீவியபடி. “இங்கிருந்து தண்டகாரண்யம் வரை வறண்டநிலமெங்கும் ஓங்கி நின்றிருக்கும் மரம் பனைதான். வறண்டபனை தனிமையில் நிற்கிறது. அதன் காதலி நெடுந்தொலைவில் எங்கோ நிற்கும். அதைச் சென்றடையவேண்டுமென்று தன் வேர்முதல் கருந்தடியெங்கும் அது காதலை நிறைத்துக்கொள்கிறது. அந்தக்காதலே அதன் பாளைகளில் கனிந்து திரண்டு கள்ளாகி நிற்கிறது” உரக்க நகைத்தபடி கீகடர் சொன்னார். “சிலபனைகள் அப்படித் தேடி தம்மை இழப்பதில்லை. பெண்ணும் ஆணுமாக தாமே மாறிக்கொள்கின்றன. உமையொருபாகனாக பொட்டலில் எழுந்தருளியிருக்கின்றன. அவற்றின் கள் நம்மை ஆழ்ந்த சொல்லின்மையை நோக்கி கொண்டுசெல்கிறது. நம்முள் உள்ள ஆண் பெண்ணைக்கண்டும் பெண் ஆணைக்கண்டும் திகைப்புறும்போது நம்முள் ஆழ்ந்து நம்மைக் கண்டடைகிறோம். அப்படி கண்டடைவதற்கு நம்முள் பெரிதாக ஒன்றுமில்லை என்று அறியும்போது மெய்ஞானம் கிடைக்கிறது.”
ஓவியம்: ஷண்முகவேல்
கள்ளருந்திவிட்டு அவர்கள் நகர்காணக்கிளம்பினர். தென்னாட்டில் இளநாகன் பார்க்காத வெயில் இல்லை. ஆனால் விஜயபுரி வெண்ணிறநெருப்புக்குள் வைக்கப்பட்டதுபோலிருந்தது. ஓடும் ரதங்களின் சக்கரங்கள் உரசுவதிலேயே அது தீப்பற்றி சாம்பலாகிவிடுமென எண்ணினான். அதன்பின்னர்தான் அங்கிருந்த வீடுகளனைத்துமே கல்லடுக்கிக் கட்டப்பட்டவை என்பதைக் கண்டான். களிமண்நிறத்திலும் கருஞ்சாம்பல் நிறத்திலும் செம்புநிறத்திலும் இருந்த பாறைப்பலகைகளை நெருக்கமாக அடுக்கி சுவர்களை எழுப்பியிருந்தனர். சுவர்கள் அனைத்துமே ஏட்டுச்சுவடிக் கட்டுகளால் ஆனவை போலிருந்தன. கூரையாகக் கூட பாறைகளைப் பெயர்த்து எடுத்த கனத்த பலகைகளைப் போட்டிருந்தனர். கோட்டைகள் கடைகள் அனைத்துமே அடுக்குக்கற்களால் ஆனவை. இளநாகன் சிரித்துக்கொண்டு “ஏட்டுச்சுவடி அறைக்குள் புகுந்த ராமபாணப்புழு போலிருக்கிறேன் சூதரே” என்றான்.
கீகடர் நகைத்து “ஆம், இந்த வேசரநாட்டு நகரங்களனைத்துமே எழுதப்படாத ஓலையடுக்குகள்தான்” என்றார். “ஆனால் இந்தக்கட்டடங்கள் உள்ளே வெயிலை விடுவதில்லை. குகைக்குள் இருப்பதுபோல அறைகள் குளிர்ந்திருக்கும்.” இளநாகன் “இப்போது நாம் மட்டுமே இந்த வெயிலில் நடந்துகொண்டிருக்கிறோம்” என்றான். “ஆம், மலைவேடர்களுக்கு வெயில் பழக்கமில்லை. நாம் கொதிக்கும் சொற்குவைகளைக் கள்ளூற்றி குளிர்விக்கக் கற்ற சூதர்கள்” என்றபடி அவர்கள் நடந்தனர். எதிரே வந்த படைவீரன் “நீங்கள் சூதர்கள் அல்லவா? அரண்மனைக்குச் செல்லலாமே” என்றான். கீகடர் “மூடா, நான் யாரென்று இன்னுமா உனக்குத் தெரியவில்லை?” என்றார். அவன் திகைத்து “தாங்கள்…?” என்றான். “‘தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்கி நிற்கும்போது நான் வருவேன் என்று தெரியாதா உனக்கு?” என்றார் கீகடர் சினத்துடன். “தெரியவில்லை, நான் சாதாரண காவல்வீரன். என் நூற்றுவர்தலைவன் அந்த கல்மேடையில் இருக்கிறார்” என்றபின் அவன் திரும்பிப்பார்க்காமல் விரைந்தான்.
கட்டடங்களுக்குமேல் கூரைப்பரப்பில் மண்ணைக்கொட்டி புல் வளர்க்கப்பட்டிருப்பதை இளநாகன் அங்குதான் கண்டான். கட்டடங்களின் குடுமித்தலைபோலவே அவை தெரிந்தன. வழியில் ஒரு கட்டடத்தை கட்டிக்கொண்டிருந்தனர். எருதுவண்டியில் கொண்டுவரப்பட்ட இரண்டு பெரிய கற்பலகைகளை கயிறுகட்டி தூக்கி வைத்துக்கொண்டிருந்தனர். “மலைப்பாறையின் அடுக்குக்குள் மரத்தாலான உலர்ந்த ஆப்புகளை இறுக்கிவைத்தபின் நீரூற்றி ஊறவைப்பார்கள். ஊறி உப்பிய ஆப்புகள் பாறையை மென்மையாகப் பிரித்துவிடும். சிரித்துக்கொண்டே தாயையும் மைந்தனையும் பிரிக்கும் கற்றறிந்த மருமகள்களைப்போல” என்றார் அஸ்வர். அஜர் “நாம் உணவுண்ணும் நேரமாகிவிட்டதென எண்ணுகிறேன்” என்றார். “ஆனால் நம்மிடம் பணம் ஏதும் இல்லை'”என்றார் அஸ்வர். “சொல்லைவாங்கி சோறை அளிக்கும் எவராவது இருப்பார்களா என்று பார்ப்போம்” என்றார் கீகடர்.
அவர்கள் நகருக்குள்ளேயே சுற்றிவந்தனர். அந்நகரம் ஒரு பெரிய அடுக்குவிளக்குபோலிருப்பதாக இளநாகன் எண்ணினான். அது ஒரு குன்றை உள்ளே வைத்து வட்டமாக வளைத்துக் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு தெருவும் ஒன்றுக்குள் ஒன்றாகவும் ஒன்றை விட ஒன்று உயரமாகவும் இருந்தன. சுற்றிச்சுற்றி ஏறிச்செல்லச்செல்ல கிருஷ்ணை கீழே தெரியத் தொடங்கியது. நகருக்குள் உள்ள மாளிகைகள் அனைத்துமே உட்பக்கம் இருட்டாக இருந்தன. “இங்கே சாளரங்கள் வைக்கும் வழக்கம் இல்லை. ஏழு மாதம் வெயிலடிக்கையில் கதவைத்திறந்தால் அனல் உள்ளே வரும். இரண்டுமாதம் மழைக்காலம். சாரல் உள்ளே வரும். ஒருமாதம் வசந்தகாலம், வீட்டிலிருக்கும் இளம்பெண்கள் வெளியே போய்விடுவார்கள்” என்றார் அஸ்வர்.
கற்பலகைகளை அடுக்கி வைத்துக் கட்டப்பட்ட சிறிய வீடொன்றைக் கண்டதும் கீகடர் நின்றார். “அழகிய சிறு வீடு. தூய்மையாகவும் உள்ளது. உள்ளே இருக்கும் நரைசூடிய கூனிக்கிழவியின் முகத்தில் இனிய தாய்மையும் தெரிகிறது. அவள் மைந்தர்களைப்புகழ்ந்து நான்கு வரிகளைப்பாடினால் அடிவயிறுகுளிர அன்னமிடாமலிருக்கமாட்டாள்” என்றார். இளநாகன் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் “வாழ்க வாழ்க வாழ்க! நலம் சூழ்க!” என்று கூவியபடி சென்று கல்திண்ணையில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டார் கீகடர். பிற சூதர்களும் சென்று அமர்ந்துகொள்ள இளநாகன் திகைத்தபடி நின்றான். கிழவி வெளியே வந்து வணங்கி “சூதர்களை வணங்குகிறேன். என் இல்லம் பெருமைகொண்டது” என்றாள். “வாழ்க!” என்றார் கீகடர். “இந்நேரம் தன் பிள்ளைகள் நினைவால் அகம் நிறைந்திருக்கும் ஒரு அன்னையின் கைகளால் உணவுண்ணவேண்டுமென எங்கள் குலதெய்வம் சொல்லன்னையின் சொல்வந்தது. ஆகவே வந்தோம்.”‘
கிழவி கைகளை மீண்டும் கூப்பி “நான் எளியவள். தெருக்களைத் தூய்மைசெய்து வாழ்பவள். என் இல்லத்தில் தாங்கள் மனமுவந்து உண்ணும் உணவேதும் இல்லை சூதர்களே” என்றாள். “உங்கள் கலத்திலுள்ள எதுவும் அமுதே” என்றார் கீகடர். “பழைய சோறும் மோரும் மட்டுமே உள்ளது” என அவள் குரலைத் தாழ்த்தி சொன்னாள். “இந்த வெப்பத்துக்கு அதுவே இன்னமுது… எடுங்கள்” என்றார் கீகடர். கிழவி உள்ளே சென்றதும் இளநாகனை அமரும்படி கீகடர் கைகாட்டினார். அவன் அமர்ந்துகொண்டான் கல்திண்ணை குளிர்ச்சியாக இருந்தது. அந்தக் கட்டடங்களின் அமைப்பு அப்போது புரிந்தது. குன்றின் மேல் மோதும் காற்று அனைத்துவீடுகளின் பின்வாயில்கள் வழியாக நுழைந்து முகவாயில் வழியாக வெளியே சென்றுகொண்டிருந்தது. கட்டடங்களின் உட்பக்கம் சுனைநீர் போல இருண்ட குளிர் சூழ்ந்திருந்தது.
பெரிய கலத்தைத் தூக்கியபடி கிழவி வந்தாள். அதைக்கொண்டுவந்து அவர்கள் நடுவே வைத்தாள்’. “சற்றுப்பொறுங்கள் சூதர்களே. நான் சென்று தையல் இலைகளையாவது வாங்கிவருகிறேன்” என்றாள். “கையில் அள்ளிக்கொடுங்கள் அன்னையே. தங்கள் கைச்சுவைக்காக அல்லவா வந்தோம்?” என்றார் கீகடர். கிழவி புன்னகையுடன் இருங்கள் என உள்ளே சென்று சுண்டக்காய்ச்சிய குழம்பையும் ஊறுகாய் சம்புடத்தையும் கொண்டுவந்து வைத்தபின் அமர்ந்துகொண்டாள். பழையசோற்றுப்பானையை திறந்ததுமே இனிய புளிப்புவாசனை எழுந்தது. மோர்ச்சட்டியைத் திறந்ததும் அப்புளிப்புவாசனையின் இன்னொரு வகை எழுந்தது. கோடையில் புளித்த மோர் இருக்கும் சட்டியின் விளிம்பில் படிந்த வெண்ணை உருகி நெய்வாசனையும் சற்று கலந்திருந்தது.
கிழவி சோற்றில் மோரைவிட்டு கையாலேயே கலக்கி கையால் அளவிட்டு உப்பள்ளிப் போட்டாள். பழையசோறு செவ்வரியோடிய வெண்மையுடன் மல்லிகைப்பூக்குவியல் என இருந்தது. அதை அள்ளி அழுத்தாமல் உருட்டி அதன்மேல் சுண்டிய குழம்பை விட்டு நீர் சொட்டச்சொட்ட அவள் கீகடரின் நீட்டிய கைகளில் வைத்தாள். அவர் அதை வாயால் அள்ளி மார்மேல் சாறு வழிய உண்டு “சொற்சுவைக்கு நிகரானது சோற்றின்சுவை ஒன்றே” என்றார். சுருங்கிய கண்களை இடுக்கியபடி கிழவி நகைத்தாள். “கோடைக்குரிய சுவை புளிப்பு. பனிக்குரிய சுவை காரம். மழைக்குரியது இனிப்பு” என்றார் அஸ்வர். சுண்டியகுழம்பு கரிவாசனையுடன் கருமையாக இருந்தது.
இளநாகன் அந்த பழையசோற்றுணவுக்கு நிகரான ஒன்றை உண்டதேயில்லை என்று உணர்ந்தான். ஒவ்வொரு நிலப்பகுதியிலும் அங்குள்ள பருவநிலைக்கும் நீர்ச்சுவைக்கும் மண்சுவைக்கும் ஏற்ப பல்லாயிரமாண்டுகள் முயன்றுதேர்ந்து தகுந்த உணவுகளை கண்டுகொண்டிருக்கிறார்கள். அதையே அவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடம் உண்கிறார்கள். அதுவே மிகச்சிறந்த உணவு. செல்வந்தர்கள் ஏழைகளின் உணவை உண்ணலாகாது என்பதற்காக அயலான உணவை உண்பார்கள். அரசர்கள் ஆடம்பரத்துக்காக உண்பார்கள். அவன் நெஞ்சை அறிந்ததுபோல “நல்ல சூதன் விருந்துணவை வேட்க மாட்டான்” என்று கீகடர் சொன்னார். “விருந்துணவில் மண்ணும்நீரும் இல்லை. ஆணவமும் அறிவின்மையுமே உள்ளது.” அஸ்வர் பழையசோற்றை மென்றபடி “மேலும் அன்றாடம் உணவுண்ணும் சூதன் ஆறுகாதம்கூட நடக்கமுடியாதே” என்றார்.
அவர்கள் உண்ட விதம் கிழவியை மகிழ்வித்தது. “நான் நேற்றுவரை கருவாடு வைத்திருந்தேன். இன்றுகாலைதான் பக்கத்துவீட்டுக்காரி கேட்டாள் என்று அதைக்கொடுத்தேன்” என்றாள். “நல்லது, அதை நான் உண்டேன் என்றிருக்கட்டும்” என்றார் கீகடர். “மீண்டும் வாருங்கள் சூதர்களே, கருவாடும் குளிர்ந்த அன்னமும் அளிக்கிறேன்” என்றாள் கிழவி. “மீண்டும் வருதல் சூதர்களின் இயல்பல்ல அன்னையே. என் மைந்தன் ஒருநாள் இங்கு வரட்டும். உங்கள் மைந்தர்களில் எவரோ அவனுக்கு அன்னமிடட்டும். அதை கலைமகள் காலடியில் அமர்ந்து நான் சுவைக்கிறேன். ஆம் அவ்வாறே ஆகுக” என்றார் கீகடர்.
“கைகழுவ நீர்கொண்டுவருகிறேன் சூதரே” என்று கிழவி எழுந்தாள். “கைகளை கழுவுவதா? என் நாவிலிருக்கும் சொல்மணம்போல கையில் திகழட்டும் அன்னத்தின் மணம்” என்றபின் கீகடர் அப்படியே திண்ணையில் படுத்துவிட்டார். “இத்தகைய உணவுக்குப்பின் ஒருகணம் விழித்திருப்பதையும் நித்திரையன்னை விரும்பமாட்டாள். தேவியின் தீச்சொல்லுக்கு இரையாகக்கூடாதல்லவா?” அப்படியே அவர் குரட்டைவிடத்தொடங்க அதைப்பார்த்துக் கொண்டிருந்தபோது இளநாகனின் கண்களும் சொக்கிவந்தன. சற்று நேரத்தில் அவனும் படுத்துத் தூங்கிவிட்டான்.
மாலையில் விழித்தெழுந்து குருதிபடிந்த கண்களுடன் எங்கிருக்கிறோம் என்று தெரியாமல் நால்வரும் அமர்ந்திருந்தனர். அஸ்வர் மீண்டும் தூங்கிவிட்டார். கீகடர் அடைத்தகுரலில் “இந்த யாழ் வழியாக என்னென்ன பண்கள் ஓடிச்சென்றன தெரியுமா? பகல்தூக்கத்தின் கனவுகளுக்கு இணையில்லை” என்றார். கிழவி வெளியே வந்து வணங்கி “சற்று மோர் அருந்திவிட்டுச்செல்லுங்கள் சூதர்களே” என்றாள். அஸ்வர் தூக்கத்துக்குள் “படைபலம் இருப்பவன் வஞ்சம் கொள்ளலாகாது” என்று ஏதோ சொன்னார்.
கிளம்பும்போது தன் யாழைத்தொட்டு கிழவியை வாழ்த்தினார் கீகடர். “அன்னையே தங்கள் பெயரென்ன?” என்றார். கிழவி சுருங்கிய கண்களுடன் “சென்னம்மை” என்றாள். “மைந்தரும் குலமும் பெருகி நலம்பெறட்டும். விண்ணவர் வந்து வாழ்த்தி ரதமொருக்கட்டும். முழுமைநிலையில் நிறைந்திருக்கும் நிலை வரட்டும்” என கீகடர் வாழ்த்தியபோது கிழவி கண்ணீர் மல்கி முகத்தை மறைத்துக்கொண்டாள்.
அந்தி எழுந்துவிட்டிருந்த நகர் வழியாக நடந்தார்கள். நகரத்தெருக்களெல்லாம் மக்களால் நிறைந்திருந்தன. வண்ணத்தலைப்பாகை அணிந்த வணிகர்களும் பலவகையான பறவைச்சிறகுகளைச் சூடிய வேடர்களும் தெருக்களை பூக்கச்செய்தனர். “எங்கும் அந்தி இனியது!” என்றார் கீகடர். அப்பால் குன்றுகளின் உச்சிகளில் காவல்மாடப் பந்தங்கள் எழுந்து விண்மீன்கள் எனத் தெரிந்தன. அரண்மனைக்குச் செல்லும் பாதை கனத்தகற்கள் பரப்பப்பட்டு படிகளாக ஏறிச் சென்றது. மேலே கற்பாளங்களால் ஆன கட்டடங்களின் தொகையாக அரண்மனை எழுந்து நிற்க சுற்றி சுவடிக்கட்டுபோன்ற சிறுகோட்டை. கோட்டைமுகப்பில் பந்தத்தை வீரர்கள் பற்றவைத்துக்கொண்டிருந்தனர்.
கோட்டைக்கு அப்பால் முரசொலி எழுந்தது. பந்தம் எரிய பற்றவைத்த படைவீரர்கள் ஓடிச்சென்று தங்கள் முரசுகளையும் கொம்புகளையும் எடுத்துக்கொண்டு ஓசையெழுப்பத் தொடங்கினர். உள்ளிருந்து மாந்தளிர்நிறக் குதிரைகள் கற்களில் குளம்புகள் ஒலிக்க பாய்ந்து வந்தன. கொம்புகளை ஊதியபடி மேலும் சில குதிரை வீரர்கள் வந்தனர். “அரசர் வருகை என எண்ணுகிறேன்” என்றார் கீகடர். “ஆம், கீழே ஆற்றின்கரையிலிருக்கும் நல்லம்மையின் ஆலயத்துக்கு ஒவ்வொரு அந்தியிலும் மன்னர் வந்து வணங்குவதுண்டு என்று சொல்லிக் கேட்டேன்” என்றார் அஸ்வர்.
மேலும் குதிரைவீரர்கள் மின்னும் வேல்களுடன் வந்தனர். தொடர்ந்து உருவியவாட்களுடன் செந்நிறத் தலைப்பாகை அணிந்த படைவீரர்கள் வந்தனர். பட்டுப்பாவட்டாக்களை ஏந்திய அணிச்சேவகர்கள் தொடர்ந்தனர். மங்கலவாத்திய வரிசை இசையெழுப்பிச் செல்ல உடலெங்கும் பொன்னகைகளும் மணிநகைகளும் மின்ன அணிப்பரத்தையரின் நிரை சென்றது. அதற்குப்பின்னால் யானைமேல் அம்பாரியில் அமர்ந்தவனாக குந்தலகுலத்து அரசன் ஆந்திரேசன் கிருஷ்ணய்ய வீரகுந்தலன் வானில் தவழ்வது போல அசைந்து வந்தான். அந்தியில் மஞ்சள் ஒளியில் அவனுடைய மணிமுடியின் கற்கள் ஒவ்வொரு அசைவிலும் சுடர்விட்டன, அவன் மார்பின் மணியாரங்களும் பொற்கச்சையும் புயவளைகளும் கங்கணங்களும் எல்லாம் மின்னும் கற்கள் கொண்டிருக்க அவன் ஒரு பெரிய பொன்வண்டுபோல தெரிந்தான்.
யானையின் உடலில் அணிவிக்கப்பட்டிருந்த செம்பட்டின் பொன்னூல் பின்னல்களும் அதன் பொன்முகபடாமும் மின்ன அது தீப்பற்றிய குன்றுபோலத் தெரிந்தது. பொற்பூணிட்ட நீள் வெண்தந்தங்களைப்பற்றியபடி மஞ்சள்பட்டுத் தலைப்பாகை அணிந்த பாகர்கள் நடந்துவர இருபக்கமும் வாளேந்திய வேளக்காரப்படையினர் சூழ்ந்து வந்தனர். யானைக்குப்பின்னால் அரசனின் அகம்படிப்படை வந்தது. அரசனைக்கண்டதும் வீடுகளின் உப்பரிகைகளில் எல்லாம் மக்கள் எழுந்து மலர்தூவி வாழ்த்தொலி எழுப்பினர். விளக்குகள் ஏற்றப்பட்ட முற்றங்களில் நின்றவர்கள் தலைகுனிந்து வணங்கினர்.
“விஜயபுரியின் அரசனை ஆந்திரமண்ணின் அதிபன் என்கின்றன நூல்கள்” என்றார் கீகடர். “தெற்கே கோதாவரி முதல் வடக்கே நர்மதை வரை அவனுடைய ஆட்சியில்தான் உள்ளது.” இளநாகன் அரசன் அவர்களைச் சுட்டிக்காட்டி ஏதோ சொல்வதைக் கண்டான். “நம்மையா?” என்றார் அஸ்வர். “ஆம், நம்மைத்தான்” என்றார் அஜர். அதற்குள் ஒரு சிற்றமைச்சரும் நாலைந்து வீரர்களும் அவர்களை நோக்கி ஓடிவந்தனர். சிற்றமைச்சர் கனத்த உடலுக்குள் சிக்கிய மூச்சு வெடித்து வெடித்து வெளியேற வியர்வை வழிய “வடபுலத்துச் சூதர்களை விஜயபுரியின் அரசர் ஆந்திரேசர் கிருஷ்ணய்ய வீரகுந்தலர் சார்பில் வணங்குகிறேன். இன்று அரசரின் பிறந்தநட்சத்திரம். விழிதுயின்று எழுந்து அன்னையின் ஆலயத்துக்குச் செல்லும் வழியில் தங்களைக் கண்டிருக்கிறார். நல்தருணம் என அதை எண்ணுகிறார்… தாங்கள் வந்து அரசரை வாழ்த்தி பரிசில் பெற்றுச் செல்லவேண்டும்” என்றார்.
கீகடர் “அது சூதர் தொழில் அல்லவா?” என்றார். யாழுடனும் முழவுடனும் அவர்கள் அமைச்சரைத் தொடர்ந்து சென்றார்கள். பட்டத்துயானை நின்றிருந்தது. அதன்மேல் சாய்க்கப்பட்ட ஏணி வழியாக வீரகுந்தலன் இறங்கி வந்து மண்ணில் விரிக்கப்பட்டிருந்த செம்பட்டு நடைபாவாடை மேல் நின்றிருந்தான். அவர்களைக் கண்டதும் முகம் மலர்ந்து வணங்கி “வருக வருக சூதர்களே. இன்று என் நாட்டில் கலைமகள் வந்துள்ளாள் என்று உணர்கிறேன். தங்கள் சொல்லில் அவள் வந்து அமர்ந்து என் மேல் கருணை கூரவேண்டும்” என்றான். கீகடர் “திருமாலைக்கண்டதுபோல செல்வமும் அழகும் வீரமும் ஓருருக்கொண்டு தாங்கள் வருவதைக் காணும் பேறு எங்களுக்கும் வாய்த்தது” என்றார்.
“பாடுக!” என்றான் வீரகுந்தலன். “அதன்பின் என் பரிசில்கொண்டு என் கருவூலத்தையும் நிறைவடையச்செய்யுங்கள்.” “ஆணை அரசே” என்றபடி கீகடர் யாழுக்காக கைநீட்டினார். அதைவாங்கி ஆணியையும் புரியையும் இறுக்கி நரம்புகளில் விரலோட்டியதும் அவருக்கு கனத்த ஏப்பம் ஒன்று வந்தது. அவர் அடக்குவதற்குள் ஏப்பம் ஓசையுடன் வெளியேற வீரர்களும் அமைச்சரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அதை உணராத கீகடர் யாழில் சுதியெழுந்ததும் தன்னையறியாமல் உரத்தகுரலில் பாடத் தொடங்கினார்.
திருமலைக் காடுகளில் ஊறிய குளிர்நீர்
தேங்கிய சுனைபோன்றது இனியமண்கலம்
அதில் நிறைந்துள்ள வெண்ணிற பழைய சோற்றை
விண்ணளந்தோன் கண்டால் தன் அரவுப்படுக்கையுடன்
இடம் மாறி வந்து படுத்துக்கொள்வான்
அவன் பாற்கடல் துளியைப்போன்ற இனியமோரை
அதிலிட்டுக் கடைந்த முதிய கரங்கள்
முதலில் அகழ்ந்தெடுத்தன செல்வத்திருமகளை
பின்னர் வந்தது கருணையின் காமதேனு
அதைத்தொடர்ந்தது செழித்தெழும் கல்பதரு
இறுதியில் எழுந்தது அமுதம்
ஒருதுளியும் விஷமில்லாதது என்பதனால்
விண்ணவரும் விரும்புவது
அமுதத்தை உண்டவர்களுக்கு
அரசர்கள் வெறும் குழந்தைகள்
தேவர்கள் விளையாட்டுப்பாவைகள்
தெய்வங்கள் வெறும் சொற்கள்
இங்கிருக்கிறோம் நாங்கள்,
அழிவற்ற சூதர்கள்!
விஜயபுரியை ஆளும்
மூதரசி சென்னம்மையின்
எளியமைந்தன் வீரகுந்தலனின் முன்னால்.
அவன் வாழ்க!
அவன் அணிந்திருக்கும் மணிமுடியும் வாழ்க!
ஆம், அவ்வாறே ஆகுக!
சிலகணங்கள் திகைத்த விழிகளுடன் வீரகுந்தலன் நோக்கி நின்றான். தான் பாடியதென்ன என்பதுபோல கீகடரும் திகைத்து நோக்கினார். தன் இரு கைகளையும் எடுத்துக்கூப்பியபடி மணிமுடிசூடிய தலையை வணங்கி வீரகுந்தலன் கண்ணீருடன் சொன்னான் “விஜயபுரியை ஆளும் பேரன்னை நல்லம்மையை கண்டுவிட்டீர்கள் சூதர்களே. பேரருள் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் பாதங்களில் என் மணிமுடியை வைக்கிறேன். அருள்செய்க!”