வண்ணக்கடல் - 2
பகுதி ஒன்று : மாமதுரை
[ 2 ]
மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் “மேலும்” என்று கேட்டபோது எதிரே இருந்த கற்சிலை புன்னகைத்தது. ஈதென்ன கற்சிலைக்கு வண்ண உடை என கலுழ்ந்து மூக்கைச் சிந்தியபின் அதை தொட்டுப்பார்க்க முன்னகர்ந்தபோது தரை பின்னோக்கிச்சென்றது. ஆகவே இன்னொரு தூணைப்பற்றிக்கொண்டு கால்தளர்ந்து அமர்ந்துகொண்டான். அந்தக் கற்தூணிலிருந்த சிலையின் கை நீண்டு அவனைப்பற்றி மெல்ல அமரச்செய்தது. அது வியர்வையும் ஈரமுமாக இருந்த முதிய கை. சிலையின் கையைப்பற்றியபடி இளநாகன் “மேலும் ஒரு குவளை” என்று விண்ணப்பித்தான். யாரோ பீரிட்டுச் சிரித்தார்கள்.
“பாணரே, தென்னவன் ஆளும் தொல்நிலமாம் மதுரையைப் பாடுக!” என்று வேறு யாரோ சொன்னார்கள். “தென்வலசை வந்த பாணர்கள் எவரும் மதுரையைப் பார்த்ததில்லை. மதுக்குடுவையை மட்டுமே பார்த்திருக்கிறார்கள்” என்று ஒருவன் சொன்னான். இளநாகன் தலையைத் தூக்கி “நான் மது அருந்துவதில்லை… யவனர் நன்கலம் தந்த இன்கடுந்தேறல் மட்டுமே சற்று அருந்தினேன்…” என்றான். “எனக்கு ஒரு கிணைப்பறை கொடுங்கள். அதன் நலத்தை நவில்வேன்…”
ஏன் அத்தனைபேரும் நகைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று இளநாகனுக்கு விளங்கவில்லை. தென்மதுரையில் அனைவரும் பேசுவதற்குப்பதில் நகைக்கும் வழக்கம் உண்டுபோலும் என எண்ணிக்கொண்டான். “இதோ என் சொல்! மேலும் ஒரு குவளை யவன மது கொடுப்பவர்களுக்கு மருதூர் சாத்தன் பெரும்பாணன் குலம் அடிமை” என்று சொல்லி தரையை கையால் இருமுறை அறைந்தான்.
அப்பால் ஒரு கதவு திறந்து அதன் வழியாக பொற்சிலம்பணிந்த இரு கரும்புநிறக் கால்கள் வெளித்தெரிந்தன. அவை இரு அழகிய மணிப்புறாக்கள் போல தத்தித் தத்தி அருகணைந்தன. இளநாகன் கைகளை நீட்டி அவற்றை தொட முயல அவை பின்னகர்ந்து இனிய சிரிப்பொலி எழுந்தது. “பாணரே, எழுக! மருதூர் பெரும்பாணர் இப்படி இரண்டு குவளை யவனமதுவுக்காக மண்ணில் நீந்தலாமா?” என்று பெண்குரல் எழுந்தது. வாயைத் துடைத்து கண்களை இருமுறை கொட்டியபடி இளநாகன் தலைதூக்கினான்.
அவளைக் கண்டதும் அனைத்து மயக்குகளும் விடுபட்டு விலக கையூன்றி எழுந்து தூணில் சாய்ந்தமர்ந்து “சற்று பயணக்களைப்பு. பிறிதொன்றில்லை” என்றான். மதுரை செழியன் அவைப்பரத்தை நறுங்கோதை தன் சிறுவெண்பற்கள் தெரிய நகைத்து “சற்று புளித்த மோர் அருந்துங்கள் பாணரே, சொல்மகள் தங்கள் நாவில் நிற்கமுடியாது வழுக்குகிறாள்” என்றாள்.
இளநாகன் நகைத்து “ஆம், அது உன் கைகளில் இருந்து என்னிடம் சேர வரும் பொன்மகளைக் கண்டு அவள் கொள்ளும் பிணக்கு” என்றான். கோதை முகம் தூக்கி உரக்க நகைத்துக்கொண்டு “எழுந்து பீடத்தில் அமருங்கள் இளம்பாணரே. இங்கே எவரும் குடுமியால் நடப்பதில்லை” என்றாள்.
இளநாகன் எழுந்து தன் தலையை நான்குமுறை கைகளால் தட்டினான். நறுங்கோதையின் சேடிப்பெண் கொண்டுவந்து தந்த புளித்த மோரை சற்று உண்டபின் பின்னால் அசைந்துசென்று பீடத்தில் அமர்ந்துகொண்டான். “பாணரே, தங்கள் சொல்நலம் இப்போது தேவையாகிறது. வடபுலத்துப் பாணர் குழு ஒன்று சற்று நேரத்தில் இங்கு வரவிருக்கிறது. அவர்களிடம் வடமொழி கேட்டு தென்தமிழ் உரைக்கவே நான் நாத்திறன் மிக்க ஒருவரை தேடியிருந்தேன்…” என்றாள்.
“வடபுலத்துப்பாணர் ஏன் பரத்தையர் இல்லம் தேடிவரவேண்டும்? அரசவைக்குச் செல்ல வழியறியாரோ?” என்றான் இளநாகன். “அரசவைக்கு அவர்களை நானே இன்று மாலை அழைத்துச்செல்வேன். அதுவரை இங்கே அவர்கள் நீராடி உணவுண்டு ஓய்வெடுப்பார்கள்” என்றாள் நறுங்கோதை.
திண்ணையில் இருந்த முதுபாங்கன் “கூடவே மதுரை தென்வீதி தலைக்கோலி மருதி மகள் நறுங்கோதையின் கூந்தல்மணத்தையும் அவர்கள் தங்கள் சொற்களில் கொண்டு சென்று பரப்புவார்கள்” என்றான். பிற இருவரும் பற்களைக் காட்டி நகைத்தனர். இளநாகன் எழுந்து “எனக்கும் நல்லாடையும் நல்லுணவும் தேவை. என் சொற்களுக்கும் கூந்தல் நறுமணம் கோதும் வல்லமை உண்டு” என்றான். நறுங்கோதை சிரித்து “பதினாறு அகவை நிறையவில்லை எனினும் நீந்தலறிந்த மீன்குஞ்சாக இருக்கிறீர்” என்றபின் “வருக” என்றாள்.
இளநாகன் எழுந்து தன் கச்சையை நன்கு உடுத்து கைகளை விரித்துச் சுழற்றி இயல்பமைத்துக்கொண்டு சுற்றும் நோக்கினான். மதுரைமூதூர் தெற்குவீதியின் முதல்பெருமாளிகை முகப்பு அது. வெண்சுண்ணம் அரைத்துக்கட்டிய சுவர்களும் மலைவேங்கை மரம் செதுக்கிச் செய்த சிற்பத்தூண்களும் கொண்ட மாளிகைக்கு முன் அணியெழினிகளும் வண்ணமாலைகளும் தொங்கி அசைந்துகொண்டிருந்தன. பிறைவடிவ முற்றத்தில் செம்பட்டுத் திரையசைய நான்கு பல்லக்குகள் நின்றன. இல்லங்களுக்குப் பின்னால் எழுந்த தென்மதிலுக்கு அப்பால் குமரிப்பெருங்கடல் அலையடித்து ஓசையிட்டுக்கொண்டிருந்தது.
பன்னிருநாள் பயணத்தில் முந்தையநாள் இரவுதான் இளநாகன் ஏழுதெங்குநாட்டு சேந்தூர் அரசு விட்டு முதுமதுரையின் பஃறுளி ஆற்றுக்கரையில் அமைந்த உமணர்குடியிருப்புக்கு அவர்களின் வண்டியுடன் வந்தடைந்தான். அங்கே ஆற்றின் எழில் கண்டு நீராடி உணவுண்டு ஒருநாள் கழித்தபின் கீரன் அளித்த மூன்று செப்புக்காசுகளை தன்னிடமிருந்த மூன்று செப்புக்காசுகளுடன் சேர்த்து மடியில் முடிந்துகொண்டு நகர் புகுந்தான்.
எட்டு சரடுகளாக இடையளவு நீர் சுழித்துச் சென்ற பஃறுளியின் மீது பெரிய வேங்கைத்தடிகளை ஆழ ஊன்றி அதன்மேல் பாலம் கட்டியிருந்தனர். அதில் எறும்புநிரை போல வண்டிகள் ஏறி மறுபக்கம் சென்றன. அவை வடக்கே நெல்வேலியிலிருந்து நெல்லும் வடகிழக்கே கொற்கையிலிருந்து ஆடைகளும் கொண்டுவந்தவை. தென்மதுரை மூதூரில் சுங்கமில்லை என்பதனால் காவலுமில்லை. சிறுகொடிகள் பறக்க வண்டிகள் அசைந்து அசைந்து உள்ளே சென்றன.
வடக்கே குவிந்தோங்கி நின்ற குமரிக்கோட்டின் உச்சிப்பாறையில் குமரியன்னையின் ஆலயம் எழுந்து வானில் நின்றது. மலையின் காலடியில் கிடந்தது மதுரைப் பெருநகர். சிப்பிகள் கலந்த கடற்பாறைகளை வைத்துக்கட்டப்பட்ட கோட்டைமதில் வளைந்து நகரைத் தழுவி தெற்கே இழிந்து கடலை அணுகி வேலியிட்டிருந்தது. தெற்கே விழியெட்டும் வரை அலையடித்துக்கிடந்த கடலின் அலைகள் பெருமதில்மேல் அறைந்து துமி தெறிக்க அதில் வெயிலொளி மின்னியது. அங்கிருந்த மாளிகைமுகடுகளிலெல்லாம் கடற்காற்று பனித்த ஈரம் கசிந்து ஒளியுடன் வழிந்துகொண்டிருந்தது.
தென்மதில் சென்று இணைந்த பஃறுளி கடல் அணைந்த பொழிப் பெருந்துறையில் நெடுந்தொலைவில் நூறுநாவாய்கள் பாய் தாழ்த்தி கடலலைகளில் எழுந்தாடி நின்றுகொண்டிருந்தன. அந்நாவாய்கள் கரும்பாறைகள் சூழ்ந்த மதுரைத்துறையை அணைய முடியாது. எனவே நாவாய்களிலிருந்து சுமையிறக்கிக் கொண்ட படகுகள் பாய் விரித்து அலைகளில் எழுந்தமைந்து கரைசேர்ந்தன. கரையில் அவற்றை அணைத்து பொதியிறக்கும் வினைவலரின் குரல்கள் மெலிதாகக் கேட்டன.
மேற்கு வாயில்தான் நகருக்குள் நுழையும் முகப்பு. கோட்டை முகப்பில் நின்ற காவல்மறவர் எவரையும் எதுவும் கேட்காமல் வேல்களைக் குவித்து ஓரமாகச் சாற்றிவைத்து கல்தரையில் களம்வரைந்து குடுமிதாழக் குந்தியமர்ந்து சூதாடிக்கொண்டிருந்தனர். கோட்டைக்குள் வலப்பக்கத்து ஒழிந்த இடத்தில் எட்டுபேர் கீழாடையை முறுக்கியணிந்து வேறு பத்துபேருடன் கடும் போரில் ஈடுபட்டிருந்தனர். அருகே ஒரு கல்லில் அமர்ந்திருந்த நரை மீசைக்கிழவர் கடற்காக்கை இறகால் காதைக்குடைந்துகொண்டிருந்தார்.
இளநாகன் நின்று அதைப்பார்த்தான். அது ஆடல்போர் எனத் தோன்றவில்லை. எந்த நெறிகளுமில்லாமல் கட்டற்று நிகழ்ந்தது. மாறிமாறி அறைந்தும், உதைத்தும், மண்ணை அள்ளி கண்களில் வீசியும், கற்களையும் கம்புகளையும் எடுத்து அடித்தும் அவர்கள் போரிட்டனர். “இது போர்விளையாடலா?” என்று அவன் கிழவரிடம் கேட்டான். “இல்லை, அவர்கள் சினந்து பூசலிடுகிறார்கள்” என்றார் கிழவர். “அவர்கள் பாண்டியப்படை மறவர் அல்லவா?” என்றான் இளநாகன். “ஆம்” என்றார் கிழவர். “அப்படியென்றால் இது பிழையல்லவா?” என்று இளநாகன் கேட்டான். “ஆம், இது முறைமீறலே” என்றார் கிழவர்.
போரிடுபவர்களில் நால்வர் பிறநால்வருடன் மண்ணை அறைந்து ஒலியுடன் விழ கிழவர் கால்களை சற்றே அகற்றி வைத்தார். “எதற்காகப் போரிடுகிறார்கள்?” என்று இளநாகன் கேட்க “அவர்களில் எட்டுபேர் கொண்டையங்கோட்டையார். பத்துபேர் செம்புநாட்டார். அவர்கள் வழக்கம்போல முன்மதியம் போரிடுவார்கள். பின்மதியம் இன்கள் அருந்துவார்கள்” என்றார் கிழவர். “இங்கே இவர்களின் காவலர்தலைவர் என எவருமில்லையா?” என்றான் இளநாகன். “நான்தான் காவலர் தலைவன்” என்றார் கிழவர். “நீங்கள் ஆணையிடலாமே!” என்று இளநாகன் கேட்டான். “அதெப்படி? நான் ஆப்பநாட்டான் அல்லவா?” என்று கிழவர் ஐயத்துடன் கேட்டார்.
இளநாகன் மதுரை கூலவாணிக வீதியில் ஒரு செப்புக்காசுக்கு புட்டும் தெங்குப்பாலும் கலந்து உண்டான். இன்னொரு செப்புக்காசுக்கு இன்கடுங்கள் சற்று அருந்தி சிற்றேப்பத்துடன் கொடிகளசைந்த கடைகள் நடுவே அங்கே விற்கப்படும் பொருட்களைப் பார்த்துக்கொண்டு அலைந்தான். நறுஞ்சுண்ணம், சந்தனம், அகில், துகில், உலர்மீன், ஆமையிறைச்சி, மீனெண்ணை, புன்னைக்காய் எண்ணை, ஆமணக்கெண்ணை, எள்ளெண்ணை, நெய், எருமைத்தோல், மரப்பொருட்கள், தந்தச்செதுக்குகள், கொம்புப்பிடியிட்ட குத்துவாட்கள், யவனத்தேறல், பொற்கலங்கள், அணிகள், சீனப்பட்டுகள், கலிங்கங்கள்…
இளைப்பாறும் பொருட்டு மீண்டும் சற்று இன்கடுங்கள் அருந்தி ஓரிரு பேரியேப்பங்கள் விட்டு மீண்டும் சுற்றிக் கொண்டிருந்தபோதுதான் அவ்வழி சென்ற முத்துப்பல்லக்கைக் கண்டான். அதன் செம்பட்டுத்திரைக்கு வெளியே பொற்சிலம்பணிந்த ஒற்றைப்பாதம் மட்டும் வைக்கப்பட்டிருந்தது. இளவெயிலில் அது மின்னிக்கொண்டிருந்தது. வணிகர்களும் கொள்பவர்களும் எழுந்து சொல்லிழந்த வாயுடன் நோக்கினர்.
பல்லக்கின் முன்னால்சென்ற முதுபாங்கன் கையிலிருந்த மணியை ஒலித்தபடி “தென்வீதியை எழிலாக்கும் அணிமகள் நறுங்கோதைக்கு விழிநீக்கி வழிவிடுங்கள்!” என்று கூவிக்கொண்டு சென்றான். பல்லக்கு சென்றபின் வணிகர்கள் நெடுமூச்செறிந்து உடல் தளர்ந்தனர். “ஏன் பாதங்களை மட்டும் காட்டுகிறாள்?” என்று கூலம் கொள்ள நின்ற ஒருவர் கேட்க கடையமர்ந்த முதுவணிகர் “அது ஒரு சோற்றுப்பதம் என்னும் கொள்கை சார்ந்தது” என்றார்.
“ஏன் கைகளைக் காட்டலாமே?” என கொள்பவர் கேட்க முதுவணிகர் சினந்து “நீர் மூதூர்மதுரைக்கு புதிதோ?” என்றார். “ஆம், வணிகரே. நான் நெல்வேலி கொற்றம் சார்ந்தவன்” என்றார். “அங்கே நீங்களெல்லாம் முறைமீறிச்செல்பவர்கள். நாங்கள் நூல்நெறி வழுவாதோர்” என்றார் முதுவணிகர். “யாது நூல்நெறி?” என்றார் நெல்வேலிக் கூலம்கொள்வோர். “…கால்கோள் என்றுதானே நூல்கள் சொல்கின்றன?” என்று முதுவணிகர் கேட்க திகைத்தபின் அவர் தலையசைத்தார்.
இளநாகன் பல்லக்கைத் தொடர்ந்து சென்றான். தென்வீதியில் அணிமாடம் முன்பு அது நின்றதும் உள்ளிருந்து பட்டாடையால் உடல் மறைத்த நறுங்கோதை இறங்கி சிலம்பொலிக்க உள்ளே சென்றதும் முதுபாணனிடம் சென்று வணங்கி தன்னை அறிமுகம் செய்துகொண்டான். “என்ன சொன்னீர்? மருதூர் சாத்தன் பெரும்பாணன் மைந்தரா நீர்? நான் அவரை நன்கறிவேன். நாங்களிருவரும் இணைந்தல்லவா சோழநாட்டுக்குச் சென்றோம்!” என்றவர் ஏங்கி நெடுமூச்செறிந்து “பொழிகடல் புகாரின் பெரும்பரத்தை பரவை இந்நேரம் முதுமைகொண்டிருப்பாள்!” என்றார்.
பாங்கன் அழிசி “வருக, இன்கடுந்தேறல் மாந்துக. எஞ்சியவற்றை பின்னர் சொல்வோம்” என்றான். மதுவை முகர்ந்த இளநாகன் முகம் மலர்ந்து “நாட்பட்ட இறைச்சியென நாறுகிறது!” என்றான். ஒரே மிடறில் அதை அருந்திவிட்டு மேலும் முகம் மலர்ந்து “என் உடலே ஒரு எருக்குழியென ஆகிவிட்டது பாங்கரே” என்றபின் இருமுறை உடலை உலுக்கி நடுநடுங்கி “மேலும்” என்றான். அதன்பின் அவனில் தமிழ் அந்த ஒரு சொல்லாகவே நிகழ்ந்தது.
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
நீராடி நல்லாடை அணிந்து, கொண்டையில் வெண்முல்லைச் சரம் சூடி இளநாகன் முகப்புக்கூடத்துக்கு வந்தபோது வடபுலத்துப் பாணர்கள் சிறுபாணரும் விறலியரும் சேடியரும் முதுபரத்தையரும் இளங்கணிகையரும் சூழ அமர்ந்திருந்தனர். அவர்கள் எண்மர் இருந்தனர். மூவர் முதியவர்கள். ஒருவர் இளநாகன் அகவையே ஆன இளையவர். அனைவரும் பெரிய பூசணிக்காய் போல தலைப்பாகையை சுற்றிச்சுற்றிக் கட்டியிருந்தனர். காதுகளில் ஒளிவிடும் குண்டலங்கள் அணிந்து நீண்டு தொங்கும் மீசை கொண்டிருந்தனர். முதுபாணர்களின் கண்களைச்சுற்றி தோல் கருகிச்சுருங்கியிருந்தது.
“மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் வணங்குகிறேன்” என்று இளநாகன் வடமொழியில் சொன்னான். அவர்களில் மூத்தவர் “அஸ்தினபுரத்து பாரஸவ குலத்து முதுசூதர் பில்வகர் வணங்குகிறேன். நீள்வாழ்வும் நற்சொல்லும் அமைவதாக!” என்று வாழ்த்தினார். “அமருங்கள் இளநாகரே. நாங்கள் எங்கள் மொழியறிந்த ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தோம். இங்கே வடமொழியறிந்தவர்கள் வணிகர்கள் மட்டுமே. அவர்கள் கவிதையை காசாகவே மொழிபெயர்க்கிறார்கள்” என இளையவர் சொன்னார். “என் பெயர் கலிகர். நான் லோமச குலத்துதித்த பாணன். அஸ்தினபுரியிலிருந்து வருபவன்.”
“மதுரை தங்கள் வரவால் மகிழ்கிறது” என்றான் இளநாகன். “இந்நகர் பற்றி தங்கள் சொற்களை கேட்க விழைகிறேன்.” லோமச கலிகர் தன் யாழை எடுத்து சுட்டுவிரலால் சுண்டி “சிம்மமில்லா காட்டின் பெருங்களிறுபோலிருக்கிறது மதுரை. தலைமுறை தலைமுறையாக எதிரிகளைக் காணாமையால் அதன் தந்தங்களின் கூர் மழுங்கியிருக்கிறது. வீரர்கள் வேல்களை எறிந்து மாங்கனிகளை வீழ்த்துகிறார்கள். கொலைவாளால் அவற்றைப் போழ்ந்து உப்பு கலந்து கேடயங்களில் பரப்பி வைத்து உண்கிறார்கள்” என்றார்.
“வணிகவீதிகளில் விற்கப்படாதது என அன்னையரின் அன்பின்றி வேறேதுமில்லை. செல்வம் வந்தால் மனிதர்கள் தேவையற்றதையே விரும்புவர் என்பதற்குச் சான்று இங்குள்ள வணிகவீதிகளேயாகும். மீன்முடையை அகிற்புகை கொண்டு நிகர்த்தும் கலையை அங்கே காணலாம்” என்றார் லோமச கலிகர். “திருமகள் தன் ஆடைக்குள் ஒளித்துவைத்திருக்கும் பொற்குடுவை போலிருக்கிறது இந்நகரம்” என்றார் லோமச சைத்ரர்.
“வீதிகளெங்கும் இசையும் களியாட்டமும் நிறைந்திருக்கிறது. வேளாண் தெருக்களில் அக்கார அடிசில் மணக்கிறது. பரத்தையர் வீதிகளில் செங்குழம்பு மணக்கிறது. எங்கும் கண்ணீர் மணக்கவில்லை. குருதி மணக்கவில்லை” என்றார் இன்னொரு சூதரான அக்னிசர குலத்து கிரீஷ்மர். “செழியன் கோலேந்தி ஆட்சி செய்யவில்லை. மக்கள் எதற்காகவும் மன்னனை நோக்கி நிற்கவுமில்லை. மூதூர் மதுரை துயரறியாக் குழந்தைமுகத்தை நிகர்த்துள்ளது.”
அவர்கள் மதுரையை விவரித்துக்கொண்டே சென்றனர். வெண்ணிறமான சுதைக்கூரைகள் கொண்ட மாடங்களாலான மாமதுரை ஒரு வெண்தாமரைக்குளம். அதன் நான்மாட வீதிகளில் தரைகளில் எங்கும் கற்பலகைகள் பதிக்கப்பட்டு முதலை முதுகுபோலிருக்கின்றன. அவற்றில் ஓடும் ரதச்சகடங்களும் குதிரைக்குளம்புகளும் தாளமாக ஒலிக்க மக்கள் மகிழ்ந்துபேசும் ஒலி இசையாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
கரிய கோட்டைக்குள் வெண்ணிற மாளிகைகள் செறிந்த நகரின் வடபுலத்தில் மூங்கில் கூரையிட்ட மாளிகைமுகடுகள் கொண்ட மறவர் தெருக்கள் கொற்றவை அமர்ந்த ஆலயம் எழுந்த பெருவீதியிலிருந்து பிரிந்து செல்கின்றன. மேற்குப்புலத்தில் இந்திரனுக்குரிய வேளாண்வீதிகளில் புல்கூரையிட்ட வீடுகளில் இருந்து நறுஞ்சோற்று மணம் எழுகிறது. தென்புலத்தில் ஆமையோட்டுக் கூரையிட்ட மாளிகைகள் நிறைந்த நகரத்தார் வீதிகள் மையமாக அமைந்துள்ள செந்தழலோன் கோட்டத்திலிருந்து பிரிந்துசெல்கின்றன. அங்கே மாளிகை முற்றங்களில் பல்லக்குகள் நிற்கின்றன. வெண்பல்லக்குகள் அவர்களை அங்காடிக்கும் செம்பல்லக்குகள் பரத்தையர் விடுதிக்கும் கொண்டுசெல்கின்றன.
தென்கோட்டத்து முகப்பிலுள்ள அணிப்பரத்தையர் வீதியோ மதுரையெனும் மங்கை அணிந்துள்ள மணிச்சரம். வெண்கடற்சிப்பியாலான ஓடுகள் வேய்ந்த கூரைக்குவைகளுக்குமேல் அப்பரத்தையர் குலத்து முத்திரை கொண்ட கொடிகள் கையசைத்து கையசைத்து விண்ணவரை அழைக்கின்றன. அவ்விண்ணவர் முன்பு வந்து சென்றமைக்குச் சான்றுகளென திகழும் மங்கையர் அம்மாளிகை முகப்புகளில் அமர்ந்திருக்கின்றார்கள். முன்னழகை பின்னழகால் சமன்செய்திருக்கும் அவர்கள் துலாக்கோல் என அசைந்தாட கண்களோ அதன் ஊசிகள் என துள்ளுகின்றன.
கிழக்கு எல்லையில் ஏழடுக்கு மாளிகையாக எழுந்துள்ள செழியனின் அரண்மனை அவள் அணிமகுடம். இந்திரனின் வெள்ளையானை தன் குட்டிகளுடன் நின்றதுபோல சிறுவெண்குடை முகட்டு மாளிகைகள் சூழ அது ஓங்கியிருக்கின்றது. அங்கே பறக்கும் மீன்கொடிகள் வெற்றி வெற்றி என்று மட்டுமே சொல்லிப்பழகிய நாக்குகள் போன்றவை. “ஆம்! மதுரைமூதூர் பாரதவர்ஷமெனும் பெருங்காவியத்தின் நிறைமங்கலச் செய்யுள். அவள் வாழ்க! இமயப்பனிமுடி தாழ்த்தி பாரதவர்ஷமெனும் அன்னை குனிந்துநோக்கும் ஒண்டொடிப் பாதம். அவள் வாழ்க!” என்றார் பாரஸவ பில்வகர்.
அவர்கள் பாடியதை இளநாகன் தென்மொழியில் தன் செய்யுளில் மீண்டும் பாடினான். அவன் சொற்களைக்கேட்டு அங்கிருந்தவர்கள் நகைத்தும் உவந்தும் வாழ்த்தொலி எழுப்பினர். சேடியர் இன்னுணவும் வெய்யநீரும் கொண்டுவந்து வைக்க சூதர்கள் பயணிகளுக்குரிய முறையில் அடுத்தவேளை இல்லையெனும் பாவனையில் அவற்றை அருந்தினர். நறுங்கோதை “சூதர்களே அந்தி இறங்கவிருக்கிறது. நாம் அரண்மனைக்குச் செல்லும் நேரம் நெருங்குகிறது. நீங்கள் உங்கள் மாலைவழிபாடுகளை முடிக்கவேண்டுமென்றால் அவ்வண்ணமே ஆகுக!” என்றாள்.
லோமச கலிகர் “எங்களுக்கு கவிதையும் இசையும் அன்றி நெறிகளென ஏதுமில்லை” என்றார். தன் சிறிய யாழை எடுத்து ஆணியை முறுக்கி கட்டைகள்சேர்த்து சுதி ஒருக்கி விரலால் மீட்டியபின் “எம்பெருமான் விண்ணளந்த பெருமாளின் புகழை அந்தியில் பாடுவது எங்கள் மரபு” என்றார். “‘பாடுக!” என்றாள் தலைக்கோலி மருதி. அங்கிருந்த அனைவரும் விண்ணவன் புகழ்கேட்க செவிகளைக் குவித்தனர்.
எண்மரும் தங்கள் கருவிகளை எடுத்துக்கொண்டனர். கிணையும் யாழும் துணைசேர்க்க விண்ணளந்த பெருமானின் புகழ்பாடத்தொடங்கினர். தன் கிணையை எடுத்து விரல் சேர்த்து துடிப்பறிந்தபின்னர் இளநாகன் எதிரே அமர்ந்து அவர்களின் ஒரு பாடலை அதே சந்தத்தில் தென்மொழியில் பாடினான்.
முதல்முடிவில்லாத பிரம்மம் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை தன் உமிழ்நீர் தன் உடலில் வழிந்து திடுக்கிட்டெழுவதுபோல விழித்து தன்னை அறிந்தபோது காலம் உருவாகியது. முடிவில்லாத காலம் கருமையாக இருந்தது. அதைக்கண்டு அஞ்சிய பிரம்மம் அதைத்தூக்கிப் புரட்டிப்போட்டு வெண்மையாக்கியது. அதுவே பாற்கடலென்றாயிற்று. அலையில்லாத வெண்கடலில் பிரம்மம் கருவில் நீந்தும் குழந்தையாக திளைத்து விளையாடியது.
தன் பாற்கடலை யாரேனும் குடித்துவிடுவார்களோ என்று அஞ்சிய குழந்தை அதற்குள் ஒரு பாம்பை பிடித்துப்போட்டது. ஆயிரம் நாக்கிருந்தாலும் பேசமுடியாமையால் அது நல்லபாம்பு என அழைக்கப்பட்டது. அதன்மேல் அவன் பள்ளிகொண்டான். என்ன சொன்னாலும் ஒப்புக்கொண்டு தலையாட்டும் பாம்பு அலுத்துப்போய் மறுத்துரைக்கும் பேச்சுத்துணைக்காக தன் நெஞ்சின் ஒளியைக் கொண்டு ஒரு பெண்ணைப்படைத்தான். அப்பெண்ணை அறிவதற்காக தன்னை ஆணாக்கிக்கொண்டான். பாம்பணையில் பள்ளிகொண்ட பெருமானை வாழ்த்துவோம். பாவம், மனைவி அருகிருப்பதனால் அவன் அறிதுயிலே கொள்ளமுடியும்.
பிள்ளையில்லா மனைவிக்கு நகையாட்டு காட்டும்பொருட்டு அவன் தன் தொப்புளில் இருந்து ஒரு தாமரையை முளைக்கவைத்தான். தாமரைக்குள் நான்குதலை எட்டுகரத்து வண்டு ஒன்று ரீங்கரித்து ஏதோ செய்வது கண்டு ‘யாரது?’ என்றான். அவ்வடிவம் எழுந்து வணங்கி தன்னை பிரம்மன் என்று சொன்னது. அவன் திடுக்கிட்டு ‘அங்கே என்ன செய்கிறாய்?’ என்றான் ‘இந்தத் தாமரைக்குள் இருந்து மேலும் தாமரைகளை முளைக்கவைக்கிறேன். அவற்றுக்குள் உலகங்களை உருவாக்குகிறேன்’ என்றான். ‘எதற்கு?’ என்று அவன் பதறினான். ‘அதெல்லாம் நானறியேன். இது என் தொழில்’ என்றான் பிரம்மன்.
‘உருவாக்கி என்னசெய்வாய்?’ என்றான் அவன் அச்சத்துடன். ‘திரும்பிப்பார்க்காமல் போவேன். அவ்வுலகங்களைக் காக்கும் பொறுப்பு உன்னுடையது’ என்றான் பிரம்மன். ‘நானா? நான் எதற்குக் காக்கவேண்டும்?’ என்று அவன் சீறினான். ‘நீதானே இவையெல்லாம்?’ என்றான் பிரம்மன். ‘ஆனால் நான் அவையாக இல்லையே’ என்றான் அவன். ‘ஆம், அதனால்தானே அவற்றை நீ அறிகிறாய்’ என்றான் பிரம்மன். அவன் தன் கதாயுதத்தால் தன் தலையை அறைந்துகொண்டு ‘என்னசெய்வேன்? இதற்கு ஓர் எல்லையே இல்லையா?’ என்றான். ‘எல்லையற்றவனல்லவா நீ?’ என்றான் பிரம்மன். ‘வாயைமூடு’ என்று அவன் கூவ ‘எந்த வாயை? நான்கு உள்ளனவே?’ என்றான் பிரம்மன்.
அவன் சினமெழுந்து ‘அங்கே என்ன சத்தம்?’ என்றான். ‘அது முனிவர்கள் உங்களை ஏத்தி துதிக்கும் இசை.’ ‘என்னையா? ஏன் துதிக்கிறார்கள்?’ ‘அசுரர்களிடமிருந்தும் அரக்கர்களிடமிருந்தும் அவர்களை நீங்கள் காப்பதற்காக’ பிரம்மன் சொன்னான். ‘அவர்கள் எப்போது உதித்தார்கள்?’ என்று அவன் திகைத்தான். ‘இதோ சற்று முன்பு… அவர்கள் உருவாகி நூறு மகாயுகங்களாகின்றன’ அவன் சொல்லிழந்து பின் அழுகை வர ‘எனக்குத்தெரியாமல் எப்படி நிகழ்ந்தது அது?’ என்றான். ‘உங்கள் ஒரு இமைப்பு இந்த முதல்தாமரையில் ஒரு யுகம். இரண்டாம்தாமரையில் ஒரு மகாயுகம். அதற்கடுத்த தாமரையில் ஒரு கல்பம். அதற்கடுத்த தாமரையில்…’
‘போதும் நிறுத்து’ என்று பெருமான் கூவி எழுந்தமர்ந்தான். ‘என்ன இது? நீ செய்பவற்றுக்கெல்லாம் நானா பொறுப்பு?’ பிரம்மன் கைவணங்கி ‘அய்யனே அனைத்தையும் செய்பவன் நீயல்லவா?’ என்றான். ஆம் ஆம் ஆம் என பேரொலி எழுந்தது. ‘அதென்ன ஒலி?’ என்றான் அவன். ‘இறைவா அவர்களெல்லாம் பிரம்மன்கள். என்னிடமிருந்து உருவானவர்கள். முப்பத்துமுக்கோடிப்பேர் இப்போது இருக்கிறார்கள்…’ பிரம்மன் சொன்னான்.
‘எவ்வளவு?’ என்றான் அவன் நடுங்கிப்போய். ‘முந்நூற்று முப்பத்து மூன்றுகோடி!’ என்றான் பிரம்மன். அவன் குழம்பி ‘சற்றுமுன் வேறு தொகை சொன்னாயே’ என்றான். ‘அது சற்றுமுன்பு அல்லவா? அவர்கள் கணம்தோறும் பெருகுகிறார்கள் பெருமானே…’ என்றான் பிரம்மன். ‘உண்மையில் இந்த மூவாயிரத்து முந்நூற்று முப்பத்து மூன்றுகோடி பிரம்மன்களும்…’ அவன் ‘போதும் இனி எண்ணிக்கையை மட்டும் சொல்லாதே’ என்றான். ‘யார் போய் எண்ணுவது? எல்லாம் ஒரு கைக்கணக்குதான்’ என்றான் பிரம்மன்.
பெருமான் பீதாம்பரத்தைச் சுருட்டி இடுக்கிக்கொண்டு நடுங்கி அடைத்த குரலில் ‘அவர்களெல்லாம் அங்கே என்ன செய்கிறார்கள்?’ என்றான். ‘வேறென்ன செய்வார்கள்? வேறு பிரம்மன்களைப் படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.’ விண்ணவன் விம்மியழுத கண்ணீர் துளி பாற்கடலில் விழுந்தது. ‘இதற்கு நான் வெறுமனே நிர்குண பிரம்மமாகவே இருந்திருப்பேனே! தெரியாமல் சகுண பிரம்மமாக ஆகிவிட்டேன்” என்றான். ஆதிசேடன் ஆயிரம் தலையை ஆட்டினான்.
‘இப்போது எதற்காகத் தலையாட்டுகிறாய்? பகடிசெய்கிறாயா?’ என்று அவன் சீறினான். ‘நாகம் அப்படித்தான் தலையை ஆட்டும். இதுகூடத் தெரியாதா? பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் நான் திரும்பவும் இருட்டுக்கே சென்றுவிடுகிறேன். எனக்கென்ன தலையெழுத்தா முடிவில்லாகாலம் முழுக்க மூன்றாக மடிந்து பாலில் விழுந்து கிடக்க?’ என்றான் சேடன். ‘சரி சரி, நமக்குள் என்ன? அதை நாம் பிறகு பார்ப்போம்’ என்றான் அவன். திரும்பி பிரம்மனிடம் ‘உடனே உன் படைப்புச்செயலை நிறுத்து’ என்றான். பிரம்மன் ‘நிறுத்தினால் நான் இல்லாமலாவேனே!’ என்றான்.
பெருமான் சக்ராயுதத்தை எடுத்து ‘உன்னை இதோ அழிக்கிறேன்’ என்றான். ‘நான் இல்லாமலானால் இல்லாத பிரம்மன் இல்லாத கோடி உலகங்களை உருவாக்குவான். இல்லாத உலகங்கள் முடிவில்லாமல் பெருகும். அவற்றை இருக்கும் நீ எப்படி புரக்கமுடியும்?’ என்றான் பிரம்மன். தலையிலறைந்துகொண்டு அவன் தேவியிடம் ‘என்னசெய்வது தேவி? இப்படி வந்து உலகியல் பெருஞ்சக்கரத்தில் சிக்கிக்கொண்டேனே?’ என்றான். ஆலோசனை கேட்கப்படுகையில் மனைவியர் அடையும் பூரிப்புடன் அம்மை ‘இவனைப்போல இவற்றை அழிக்கும் ஒருவனை உருவாக்குக’ என்றாள். அவ்வாறு அவன் தன் கடும் சினத்தைக்கொண்டு செவ்வண்ணமேனியனாகிய சிவனைப்படைத்தான்.
சடைமுடிக்கற்றையும் நெருப்பெழும் புலித்தோலாடையும் ஊழித்தீ வாழும் நுதல்விழியுமாக சிவன் பிறந்து அடிபணிந்து ‘ஆணையிடுக’ என்றான். ‘இவன் படைப்பவற்றையெல்லாம் அதே விரைவில் அழித்து என்னை விடுதலைசெய்க’ என்றான். ‘ஆம், சிரமேற்கொள்கிறேன். ஆனால் எங்களுக்கு நடுவே இப்போதிருக்கும் தொலைவே முடிவிலிப்பெருவெளியாக எஞ்சுமே’ என்றான் சிவன். ‘சற்று விரைவாகவே அழித்துச்செல்… இதெல்லாம் சொல்லியா தெரியவேண்டும்?’ என்றான் பெருமான் எரிச்சலுடன். ‘அய்யனே, பிரம்மனின் அதே விரைவில்தான் நான் செயல்பட முடியும் என்று வேதங்கள் சொல்கின்றனவே. நான் அவற்றுக்குக் கட்டுப்பட்டவன் அல்லவா?’ என்று சிவன் சொன்னான்.
‘எந்த வேதங்கள்?’ என்றான் அவன். ‘தங்கள் சொற்களெல்லாம் உடனடியாக வேதங்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன என்று அறியமாட்டீரா என்ன? சற்றுமுன் நீங்கள் சொன்ன வேதம்தான் அவ்வாறு உரைக்கிறது.’ அவன் திகைத்து ‘அது நான் நாத்தடுமாறிச் சொன்னது. இதோ மாற்றிச்சொல்கிறேன்’ என்றான். சிவன் ‘பெருமானே, அது இன்னொரு வேதமாகவே அமையும். ஏனெனில் வேதம் அழியாது. வேதங்களுக்கிடையே முரண்பாடு எழுமென்றால் அதற்கடுத்த வேதத்தைக்கொண்டு அதை விளக்கவேண்டும் என்பதே நெறியாகும்’ என்றான்.
கொதிப்புடன் ‘அப்படியென்றால் இந்த முப்பத்துமூவாயிரத்து முப்பத்து மூன்றுகோடி பிரம்மன்களையும் நான்தான் புரக்கவேண்டுமா?’ என்ற பெருமான் மனமுடைந்து கண்ணீர் விட்டான். ‘இனி எனக்கு ஓய்வே இல்லையா?’ முதல்பிரம்மன் வணங்கி ‘பழைய கணக்கைச் சொல்கிறீர்கள் இறைவா…. இப்போது முப்பத்துமூன்றுலட்சத்து முப்பத்துமூவாயிரத்து முப்பத்து மூன்றுகோடி…’ என்றான்.
பெருமான் சினவெறியுடன் எழுந்து சிவனை நோக்கி ‘அங்கே அவர்கள் பெற்றுப் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே நின்று வேதவிவாதமா செய்கிறாய்? ஓடு, உடனே ஓடிப்போய் தொழிலைத் தொடங்கு’ என்று கூவினான். சிவன் ‘வெறும் முப்பத்துமூன்றுலட்சத்து முப்பத்துமூவாயிரத்து முப்பத்து மூன்றுகோடிதானே இதோ’ என இடக்கையின் ஊழித்தீயைக் காட்டினான். ‘அது பழைய கணக்கு. இப்போது மொத்தம் முப்பத்து மூன்றுகோடியே முப்பத்துமூன்றுலட்சத்து முப்பத்துமூவாயிரத்து முப்பத்து மூன்றுகோடி பிரம்மன்கள் உலகங்களை படைத்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்றான் பிரம்மன். ‘ஆனால் இது முந்தைய கணத்துக்கணக்கு…’
கௌஸ்துபத்தின் மீது ஓங்கி அறைந்து கண்ணீருடன் ‘எப்படியோ போங்கள் எல்லாம் நானே எழுதிக்கொண்ட என் தலையெழுத்து’ என்று அழுதபடி சொல்லி மூக்கைப்பிழிந்துகொண்டு திரும்பி ‘தேவி அது என்ன வாசனை?’ என்றான் உலகாக்கியவன். அறிநகை கொண்டு ‘அய்யனே தங்கள் விழிநீர் சொட்டி பாற்கடல் சற்று திரிந்துவிட்டது…’ என்றாள் அன்னை. அதன்பின் அனைத்து இல்லாள்களும் சொல்லும் ‘நான்தான் அப்போதே சொன்னேனே?’ என்ற மந்திரத்தையும் முறைப்படிச் சொல்லலானாள்.
அழகிய தாமரை மூக்கைப்பொத்தியபடி அய்யனும், வாசனை அறியும் நாக்கை உள்ளிழுத்தபடி சேடனும், முந்தானையால் முகம் பொத்தி திருமகளும் திகைத்தமர்ந்திருந்தனர். ‘என்னசெய்யலாம் தேவி?’ என்றான் அவன். ‘இங்கிருந்து நாற்றமேற்பதற்குப்பதில் இந்த முடிவிலா உலகங்களில் ஒவ்வொன்றாகப் பிறப்பெடுத்து லீலை செய்யலாம்’ என்றாள் அவள்.
“அவ்வாறாக மண்நிகழ்ந்த ஐந்து அவதாரங்களை வாழ்த்துவோம். மீனாமைபன்றிசிம்மக்குறியோனாக வந்தவனை வணங்குவோம். உலகாகி உலகுபுரந்து உலகழித்து உலகுகடந்து நிற்பவனை ஏத்துவோம். நாராயணா நமோ நாராயணா!” என்று லோமச கலிகர் வணங்கியதும் மற்ற சூதர்கள் ‘ஓம் ஓம் ஓம்’ என்று துதித்தனர். சிரித்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் அக்குரலை எதிரொலித்து வணங்கினர்.