வண்ணக்கடல் - 19
பகுதி நான்கு : வெற்றித்திருநகர்
[ 4 ]
மண்ணுலகிலுள்ள அனைத்தும் ஒளியால் உருவம் கொண்டிருக்கின்றன. ஒளியால் அவை பார்க்கப்படுகின்றன. மண்ணுக்குக் கீழே அடியிலா உலகாக விரிந்திருக்கும் ஏழுலகங்களும் இருள் உருவம் கொண்டவற்றால் ஆனவை. அங்கே இருளே பார்வையை அளிக்கிறது. மண்ணுக்கடியிலிருக்கும் முதல் உலகம் அதலம். அங்கே வானமென மண்ணும் காலடியில் விண்ணும் உள்ளன. இருண்ட சிறகுகளுடன் பறந்தலையும் பாதாளமூர்த்திகளின் உலகம் அது. கோடானுகோடி நோய்களாக அவையே உயிர்க்குலங்கள் மேல் படர்ந்தேறுகின்றன.
இருளேயாகி விரிந்த வானுக்கு அப்பால் இருப்பது விதலம். மண்ணுலகில் வாழும் உயிர்களின் உள்ளங்களில் கணம்தோறும் உருவாகி உருவிலாது வாழும் எண்ணங்கள் தங்கள் கட்டுகளை எல்லாம் உதறிவிட்டு வாழும் இருளுலகம் அது. அங்கே அவை பேரருவிகளாக கொட்டிக்கொண்டிருக்கின்றன. நதிகளாக கிளைவிரித்துப்பரந்து கடல்களாகி அலையடிக்கின்றன. மேருமுகடுகளாக அமைதிகொண்டு நின்றிருக்கின்றன. புயல்காற்றுகளாக அவற்றைத் தழுவி ஓலமிடுகின்றன. அதற்கு அப்பால் நிறைவடையா மூதாதையர்கள் நினைவுகளாக வாழும் சுதலம். அவர்கள் இடியோசையை விட வலுத்த ஒலியின்மைகளால் இடைவிடாது பேசிக்கொண்டிருக்கின்றனர்.
மண்ணிலறியப்படும் ஞானங்கள் அனைத்தும் ஒளியாலானவை. அவற்றின் நிழல்கள் சென்றுசேரும் இடமே தலாதலம். அங்கே அவை தங்களுக்குள் புணர்ந்து முடிவிலாது பெருகுகின்றன. எல்லைகளை நிறைத்தபின் இடமில்லாமலாகி, தங்களைத்தாங்களே உண்ணத்தொடங்கி, உண்ண ஏதுமின்றி தாமுமழிந்து வெறுமைகொள்கின்றன. மீண்டும் மெய்மையின் முதல்நிழல் விழுந்து உயிர்கொள்கின்றன. முடிவிலாது சுருங்கிவிரிவதே தலாதலத்தின் இயல்பாகும்.
மண்ணில் உயிர்க்குலங்களில் வடிவங்களாகவும் அவ்வடிவங்களுக்குள் நிறைந்த காமகுரோதமோகங்களாகவும் வெளிப்பாடு கொள்ளும் அனைத்தும் தங்கள் சாரம் மட்டுமேயாகி சுருங்கி அணுவடிவமாக வாழும் ரசாதலம் அதற்கும் அடியில் உள்ளது. அங்கே கோடானுகோடி நுண்கோள்கள் இருளில் தங்களைத் தாங்கள் மட்டுமே அறிந்தபடி சுழன்றுவருகின்றன. அவை ஒவ்வொன்றும் தங்கள் வழியிலும் வடிவிலும் முழுமைகொண்டிருக்கின்றன.
ரசாதலத்தில் அணுவடிவம் கொண்டவை அனைத்தும் ஆகாயவடிவம் கொள்ளும் மகாதலம் அதற்கு அப்பால் விரிந்துள்ளது. எல்லையின்மையே அதன் வடிவம். இருண்ட ஆகாயங்களை அடுக்கிச் செய்யப்பட்ட ஆகாயம் அது. அந்த ஒவ்வொரு ஆகாயத்தின் மையச்சுழியிலும் இருள் வடிவான பிரம்மன்கள் அமர்ந்து அவற்றை முடிவிலாது படைத்துக்கொண்டிருக்கின்றனர். அந்தப்பிரம்மன்கள் அமரும் முடிவிலாது விரியும் கரியதாமரை அதனடியில் உள்ளது. அந்தத் தாமரையை ஏந்துவது கரியபாற்கடலில் துயிலும் கருக்குழந்தை ஒன்றின் உந்தி.
மகாதலத்துக்கு அடியில் உள்ளது நாகர்கள் வாழும் பாதாளம். அங்கே பெருநதிகள் போல முடிவிலாது ஓடும் உடல்கள் கொண்ட கோடானுகோடி நாகங்கள் இருளுக்குள் படைப்புக்காலம் முதல் இன்றுவரை தங்கள் மறுநுனியை தாங்களே தேடிக்கொண்டிருக்கின்றன. தங்கள் நுனியை கண்டுகொண்டவை அதைக்கவ்வி தம்மைத்தாம் விழுங்கி இருள்சுழியாக ஆகி, இருள்மணியாக இறுகி, ஒற்றை அணுவாக மாறி, இருளுக்குள் மறைகின்றன. அவற்றின் இன்மையிலிருந்து மீண்டும் மகத் என்னும் வெண்முட்டை உருவாகிறது. அது உடைந்து வெளிவந்த சிறுநாகம் படமெடுத்து அகங்காரமாகிறது. தன் உடலை அது திரும்பிப்பார்க்கையில் அதன் விழிநீளும் தொலைவுவரை உடல்நீண்டு தத்துவமாகிறது. தத்துவம் தன்னை பதினாறாக பிரித்துக்கொண்டு ஒன்றையொன்று கொத்தி வளர்க்கிறது.
நாகஉலகமான பாதாளத்தின் அதிபனாகிய வாசுகி இருளெனும் நீரில் நீந்தித்திளைத்துக் கொண்டிருக்கையில் இருளசைவாக அவனை அணுகிய நாகங்கள் சூழ்ந்துகொண்டு வால்கள் முடிவிலியில் திளைக்க செந்நிறநாநீட்டி முறையிட்டன. “அரசே, பிரமாணகோடியில் பயஸ்வினி, மிதவாஹினி, யாமினி என்னும் மூன்று காட்டாறுகளும் மழைக்காலத்தில் மிரண்ட குதிரைக்குட்டிகள் போல வந்து விழும் பள்ளம் மகாபிலம். பாதாள நாகங்கள் மண்ணுக்கெழும் வழி அது. நாங்கள் அவ்வழியை காவல்காக்கும் சிறுநாகங்கள்.”
“அதனூடாக இன்று உள்ளே வந்து விழுந்த ஒருவனை நாங்கள் கோரைப்புற்களைப்போல கொத்தாக சூழ்ந்துகொண்டோம். அவனுடைய ஆயிரம் நாடிநரம்புகளிலும் முத்தமிட்டோம். அவன் உடலில் இருந்த நாகநஞ்சு எங்கள் நாகநஞ்சுகளால் முறிக்கப்பட்டது. விழித்தெழுந்த அவன் நீருக்குள் தன் ஆற்றல்மிக்க கரங்களை வீசி எங்களில் நூற்றுவரை பிடித்திருக்கிறான். அவன் அவர்களுடன் கரைக்குச் செல்வானென்றால் விதிக்கப்படாத பொழுதில் மண்ணுக்கெழுந்தமைக்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மானுடரில் இப்படியொரு மாவீரனைக் கண்டதில்லை. வல்லமையில் உங்களுக்கே வியப்பளிக்கக்கூடியவன்” என்றன.
ஓவியம்: ஷண்முகவேல்
வாசுகி தன் அறிவிழிகளைத் திருப்பி நீருக்குள் பாம்புகளுடன் போரிடும் பீமனைக் கண்டான். “பேருடல் கொண்டிருப்பினும் இவன் இன்னமும் சிறுவன்” என்றான். “அவனை நான் சந்திக்க விழைகிறேன்.” கணமென இமைப்பென பிரிவுபடாத பெருங்காலத்தைப் பார்க்கும் தன் விழிகளால் அவன் நூறு மலைச்சிகரங்கள் சூழ்ந்த வனத்தில் ஏரிக்கரையில் அமர்ந்திருக்கும் ஒரு மன்னனையும் அவன் மடியிலும் தோளிலுமாக அமர்ந்திருக்கும் இரு மைந்தர்களையும் கண்டான். அம்மன்னன் மைந்தருக்கு சொல்லிக்கொண்டிருந்த நாகலோகத்துக் கதையைக்கேட்டு புன்னகை புரிந்தான்.
பீமன் தன் விழிகள் முன் எழுந்த நீலமணிமாளிகையையும் அதன் திறந்த பெருவாயிலுக்கு இட்டுச்சென்ற செம்பட்டுப் பாதையையும் கண்டான். அவன் விழிதொடும் தொலைவுக்குள் அவை உருவாகி வந்துகொண்டே இருந்தன. சுவர்களாக அடுக்கிக் கட்டப்பட்டிருந்த நீலமணிகளின் உள்ளொளியாலேயே அவ்வரண்மனையின் இடைநாழிகளும் கூடங்களும் செம்பட்டுத்தரையும் செந்நிறத்திரைச்சீலைகளும் மின்னிக்கொண்டிருந்தன. அங்கே நாகர்கள் நீலநிற மணிமுடிகள் அணிந்து செவ்விழிகளும் சிவந்த வாயும் தழல்போல சுடர காவல் நின்றனர். பீமன் குளிர்ந்த நீலமணித்தரையை நீரெனக் கண்டு தயங்கி பின் மெல்ல காலெடுத்து வைத்து நடந்தான்.
அவனை வரவேற்ற காமன் என்னும் பெருநாகம் திரண்ட பெரும்புயங்களைத் தாழ்த்தி வணங்கி “மண்ணுக்கடியில் திகழும் நாக உலகத்துக்கு வந்துள்ளீர் இளையபாண்டவரே. தங்களை எங்கள் பேரரசர் வாசுகி பார்க்க எண்ணுகிறார்” என்றான். பீமன் “நான் இங்கே வர விரும்பவில்லை. என்னை மண்ணுலகுக்கே அனுப்பிவிடுங்கள்'”என்றான். “அதை பேரரசரே முடிவு செய்வார்” என்றான் காமன். பீமன் அந்த நீலநிற மாளிகையை அண்ணாந்து நோக்கியபடி நடந்தான்.
அரண்மனையின் அரசகூடத்தில் நீலமணியாலான அரியாசனத்தில் வாசுகி அமர்ந்திருந்தான். பீமனை அழைத்துவந்த நாகவீரர்கள் வணங்கி வழிவிட அவன் அரசனின் முன் சென்று நின்றான். “நாகர்களின் அரசனை வணங்குகிறேன்” என்று பீமன் தலைவணங்கியபோது வாசுகி முகம் மலர்ந்து எழுந்து வந்து அவன் தோளைத் தொட்டான். “அச்சமின்றி இங்கு வந்து என்னை நோக்கும் முதல் மானுடன் நீ. உன்னை என் மைந்தனைப்போல எண்ணி மார்புடன் தழுவிக்கொள்ள என் உள்ளம் எழுகிறது” என்றான். பீமன் வாசுகியின் கால்களைத் தொட்டு வணங்கி “தங்கள் வாழ்த்துக்களை நாடுகிறேன் பேரரசே” என்றான். அவன் தலையைத் தொட்டு வாழ்த்துக்கூறி அப்படியே அள்ளி தன் விரிந்த மார்புடன் அணைத்துக் கொண்டான் நாகப்பேரரசன்.
அப்போது அரியணைக்கு அருகே நின்றிருந்த முதியநாகம் பீமனை நோக்கி “உன் முகத்தை நானறிவேன்… எங்கோ ஏதோ காலத்தில் உன்னை நான் பார்த்திருக்கிறேன்” என்றான். விழிகளின்மேல் நடுங்கும் கரங்களை வைத்து நோக்கியபடி அருகே வந்தான். “என் பெயர் ஆரியகன். மண்ணுலாவும் வரம் பெற்ற முதுநாகம்” என்றான். பீமனின் முகத்தை அண்மையில் நோக்கியபின் நினைவுகள் எழுந்த கண்களுடன் “நான் மண்ணுலாவும் நாளில் யமுனைக்கரையில் சிலகாலம் இருந்திருக்கிறேன். யாதவகுலத்தைச்சேர்ந்த அஸ்திகை என்னும் கன்னியை மானுடவடிவெடுத்து அடைந்திருக்கிறேன். அவளை யாதவகுலத்தின் தேவமீடன் சித்ரரதன் என்னும் இரு அரசர்கள் மணந்தனர். உன்னிடம் அவளுடைய தோற்றத்தைக் காண்கிறேன். நீ யாதவனா?” என்றான்.
பீமன் “ஆம். நான் தாய்வழியில் யாதவன். என் தாயின் தந்தை சூரசேனர். அவரது தந்தை ஹ்ருதீகரின் தந்தையர் தேவமீடன் சித்ரரதன் என்னும் இருவர்” என்றான் பீமன். ஒருகணம் திகைத்தபின் ஆரியகன் பீமனை அள்ளி தன் மார்புடன் அணைத்துக்கொண்டான். மகிழ்வினால் உரக்க நகைத்தபடி மீண்டும் மீண்டும் பீமனை அணைத்தான். “என்ன வியப்பு. என் வழிமைந்தன் ஒருவனைப் பார்க்கும் பேறு பெற்றேன்… அரிதிலும் அரிது” என்றான். மீண்டும் அணைத்துக்கொண்டு “வல்லமை மிக்கவனாக இருக்கிறாய்… நாகங்களின் குருதி உன் உடலில் ஓடுகிறது” என்றான்.
வாசுகி “நீ அந்த மகாபிலத்தில் எவ்வாறு விழுந்தாய்?” என்றான். “நான் சொல்கிறேன்” என்று ஆரியகன் சொன்னான். அவன் முகம் வெறுப்பால் சுருங்கியது. “அவர்கள் உன் உடன்பிறந்தவர்கள். உனக்கு நிலநாகங்களின் கடும்நஞ்சை அளித்து உன்னை இந்த நீர்ச்சுழியில் தூக்கி வீசியிருக்கிறார்கள்” என்றான். பீமன் “ஆம்” என்றான். “அவர்கள் இன்னும் மிக இளையவர்கள். செய்வதென்ன என்றறியாதவர்கள். தங்கள் தமையன்மேல் கட்டற்ற பெரும் பற்றுகொண்டவர்கள். தமையனை மகிழ்விக்குமென எண்ணி இதைச்செய்திருக்கிறார்கள்” என்றான்.
“மைந்தனே, உன்னைத் தழுவியதில் என் தோள்கள் நிறைவுற்றன. நீ விரும்புவது எதை? இங்கிருந்து உன்னை நீ விரும்பும் விண்ணகங்களுக்கு என்னால் அனுப்பமுடியும்” என்றான் வாசுகி. “அரசே, மண்ணில் என் கடன் முடியவில்லை. என் தமையனுக்குக் காவலாகவே என் அன்னை என்னைப்பெற்றாள். நான் அப்பணியை முழுமைசெய்யவில்லை” என்றான் பீமன். வாசுகி “ஆம், அப்படியென்றால் நீ திரும்பிச்செல்… இது நாகங்களின் அளவற்ற செல்வம் தேங்கியிருக்கும் கருவூலம். உனக்கு விருப்பமான எதையும் இங்கே சுட்டு. அவையனைத்தும் உனக்கு அங்கே கிடைக்கும்” என்றான். “வீரத்தால் ஈட்டாது கொடையால் ஈட்டும் செல்வம் ஷத்ரியனுக்கு மாசு என்று நூல்கள் சொல்கின்றன அரசே” என்றான் பீமன்.
ஆரியகன் முகம் மலர்ந்து சிரித்தபடி “ஆம், சந்திரகுலத்துக்குரிய சொற்களைச் சொல்கிறாய். நீ திரும்பிச்செல். அங்கே நீ தீர்க்கவேண்டிய வஞ்சங்கள் நிறைந்துள்ளன. உன்னை கொல்லமுயன்ற கௌரவர்களைக் கொன்றழிக்கும் வல்லமைகொண்ட நாகபாசத்தை உனக்களிக்கிறேன். அது உன்னிடமிருக்கும்வரை உன்னை வெல்ல கௌரவர்களால் முடியாது” என்றான். பீமன் “பிதாமகரே, அவர்கள் என் குருதி. என் தம்பியர். அவர்கள் மேல் வஞ்சம் கொண்டால் நான் என் தந்தைக்கு விண்ணுலகில் விளக்கம் சொல்லவேண்டியிருக்கும்… மண்ணுலகேறிச் சென்று என் தம்பியரைக் கண்டால் மார்போடணைக்கவே என் கைகள் விரியும்” என்றான்.
“வஞ்சம் ஷத்ரியனின் நெறி என்கின்றன நூல்கள்” என்று ஆரியகன் கூச்சலிட்டான். “நீ கோழைகளுக்குரிய வெற்றுச்சொற்களைப் பேசுகிறாய்” என்றான். பீமன் சிரித்து “பிதாமகரே, நான் கடமையால் மட்டுமே ஷத்ரியனாக இருக்கவிரும்புகிறேன். ஷத்ரியனுக்குரிய உரிமைகளை புறக்கணிக்கிறேன். ஷத்ரியனுக்குரிய மனநிலைகளை துறக்கிறேன்” என்றான். “கானுலாவியான அரைக்குரங்காக இருக்கையில் மட்டுமே என் நிறைவையும் மகிழ்வையும் நான் அடைகிறேன்.”
வாசுகி “நன்றாக சிந்தித்துச் சொல். வரும்காலத்தையும் பார்ப்பவர்கள் நாங்கள். இவர்களை நீ போரில் எதிர்கொள்ள நேரலாம். உன் உடன்பிறந்தார் இவர்களால் அழிக்கப்படலாம்” என்றான். “அவ்வண்ணம் நிகழாமலிருக்க செய்யவேண்டியவற்றை எல்லாம் செய்வதே என்கடனாக இருக்கும் அரசே. அதற்கு படைக்கலமில்லாத விரித்த கரங்களுடன் நான் அவர்கள் முன் நிற்பதே உகந்தது. ஆயுதம் குரோதத்தை உண்டு வளரும் விஷநாகம் போன்றது” என்றான் பீமன்.
வாசுகி பீமனின் தோளைத் தொட்டு “மைந்தா, ஒருவன் பிறர்க்களிக்கும் கொடைகளில் முதன்மையானது அன்னம். முழுமுதலானது ஞானம். ஏனென்றால் அவற்றை ஏற்பதனால் எவரும் இகழ்ச்சியடைவதில்லை, இட்டதனால் பெருமையடைவதுமில்லை. இங்கே என்னுடன் தங்கி எங்கள் இனிய உணவை உண்டு செல்!” என்றான். பீமன் மீண்டும் “என் தாயும் உடன்பிறந்தாரும் அங்கே எனக்காக தேடிக்கொண்டிருப்பார்கள்” என்றான். “கவலைவேண்டாம். இங்குள்ள காலத்தை விரிக்கவும் சுருக்கவும் எங்களால் முடியும். நீ இங்கிருக்கும் காலத்தை அணுவளவாகச் சுருக்கி அளிக்கிறேன். நீ அங்கே ஒருகணத்தைக்கூட கடந்திருக்கமாட்டாய்” என்ற வாசுகி “வருக” என அழைத்துச்சென்றான்.
“இங்கே நாங்கள் உண்பதும் எங்கள் விஷத்தையே” என்றான் வாசுகி. “நாகங்கள் இருளையே வாய்திறந்து அருந்துகின்றன. பலகாலம் அவ்வாறு இருளை உண்டு குளிரச்செய்து விஷமாக்கி தங்களுக்குள் தேக்கிக்கொள்கின்றன. அன்னையர் உருவாக்கும் விஷத்தை மைந்தர்கள் உண்கிறார்கள்” என்றபடி வாசுகி அவனை நீல இருள் நிறைந்த அறைகளினூடாக அழைத்துசென்றான்.
ஓர் அறையில் கன்னங்கரிய பெருங்குடம் ஒன்று இருந்தது. “மைந்தா, மண் உள்ளிட்ட மூவுலகங்களை ஆளும் பெருநாகமான தட்சகனின் திதி, அதிதி, தனு, காளிகை, தாம்ரை, குரோதவஸை, மனு, அனகை என்னும் எட்டு மகள்களையும் முதல்பிரஜாபதியாகிய காசியபர் மணம்புரிந்தார். குரோதவஸை கடும்சினத்தால் எரியும் உடலும் அனல்விழிகளும் கொண்ட கருநிறப்பெருநாகம். அவளுடைய விஷம் இந்தக் கலத்தில் உள்ளது” என்று வாசுகி சுட்டிக்காட்டினான்.
“மண்ணுலகில் உன்னைச்சூழ்ந்து குரோதங்கள் ஊறித்தேங்கிக்கொண்டிருக்கின்றன. வாழ்க்கை முழுக்க குரோதத்தையே நீ எதிர்கொள்ளவேண்டியிருக்கும். குரோதத்தை எதிர்கொள்ளும் வழி வல்லமை கொள்வது மட்டுமே. இந்த விஷம் உன்னை ஆயிரம் யானைகளுக்கு நிகரான புயவல்லமை கொண்டவனாக ஆக்கும். எதிரிகளின் குரோதங்களெல்லாம் வந்து தாக்கி மத்தகம் சிதைந்து மடியச்செய்யும் இரும்புக்கோட்டையாக உன்னை ஆக்கும்” என்றான் வாசுகி. பீமன் அந்த விஷத்தையே நோக்கி நின்றான். பின்பு “அரசே, பெரும்சினம்கொண்டவள் எப்படி சினத்தை வெல்லும் அமுதை உருவாக்கினாள்?” என்றான்.
வாசுகி புன்னகைசெய்து “ஆற்றலை ஒருமுனைப்படுத்துவதற்காக அளிக்கப்பட்டுள்ள வல்லமையே சினம். குரோதவஸையின் அகமெங்கும் கொதித்துக்கொண்டிருந்த சினத்தை ஒருபோதும் அவள் வெளிக்காட்டவில்லை. அவள் எவரையும் தீண்டவுமில்லை. அவளுடைய சினம் திரண்டு விஷமாகி தேங்கிக்கொண்டிருந்தது” என்றான். பீமன் தன் நெஞ்சில் கையை வைத்து “இதை நான் உண்ணலாமா என்று தெரியவில்லை. என்னால் எம்முடிவையும் எடுக்கமுடியவில்லை” என்றான். வாசுகி “இதோ, உன் அன்னையிடம் கேள்” என்றதும் எதிரே நீலமணிச்சுவரில் குந்தியின் முகம் தெரிந்தது. “அவள் கனவில் நீ சென்று கேட்க முடியும்” என்றான் வாசுகி.
பீமன் குந்தியின் விழிகளை நோக்கினான். “அன்னையே” என்றான். குந்தி மகிழ்ந்த புன்னகையுடன் “மந்தா, நீயா?” என்றாள். “ஆம் அன்னையே. என் தோள்கள் பெருவலிமை கொள்ளும் இந்த விஷத்தை நான் அருந்தலாமா?” குந்தியின் கண்கள் விரிந்தன. அவளுடைய அகம் பொங்குவதைக் கண்டு அவன் சற்று அஞ்சினான். “நீ அதை அருந்து… இப்போதே. நிகரற்ற வல்லமையுடன் நீ வரவேண்டுமென்றுதான் நான் விழைகிறேன்… தயங்காதே” என்றாள். “அன்னையே…” என்று பீமன் ஏதோ சொல்லவந்தான். “இது என் ஆணை!” என்றாள் குந்தி.
பீமன் முன்னால் சென்று ஒரே மூச்சில் அக்குடத்தை எடுத்து குடித்தான். அதன் கடும்கசப்பு அவன் நாவிலிருந்து அனைத்து நரம்புகளுக்கும் சென்றது. அவன் உடலே ஒரு நாவாக மாறி கசப்பில் துடித்தது. உலோகஒலியுடன் குடத்தை வீசிவிட்டு அப்படியே குப்புற விழுந்து உடலைச்சுருட்டிக்கொண்டான். நாகவிஷமேறி அவனுடைய உடற்தசைகள் அனைத்துமே துடித்து துடித்து இறுகிக்கொண்டன. சிலகணங்களுக்குப்பின் அவன் மெல்ல தளர்ந்து உடல்நீட்டியபோது அவனுடைய தோல் முற்றிலும் நீலநிறமாகிவிட்டிருந்தது.
பன்னிருநாட்கள் பீமன் நாகர்களின் உலகிலிருந்தான். அங்கே அவனுடைய தோல் முற்றிலுமாக உரிந்து புதியதோல் முளைத்தது. ரோமங்களும் பற்களும் நகங்களும் உதிர்ந்து புதியதாக முளைத்துவந்தன. புதியபிறப்பெடுத்து வந்த அவனுக்கு வாசுகி நாகபடமெழுதிய சிறு மோதிரம் ஒன்றைப்பரிசளித்தான். “இது நீ நாகருலகை வென்றதற்கான பரிசு. உன்னுடன் என்றுமிருக்கட்டும்” என்றான். காலகன் என்னும் கரியபெருநாகத்திடம் “இவனை கரைசேர்த்துவா!” என்று வாசுகி ஆணையிட்டான்.
காலகன் மாலைநிழலென பேருருக்கொண்டு பீமனை தன்னுடைய மூக்குநுனியில் ஏந்தி தள்ளி மேலேற்றி நீருக்குள் கொண்டுவந்து கங்கைப்படலத்தைக் கிழித்து மேலெழுந்தான். பீமன் தன்னுணர்வுகொண்டபோது கங்கையின் சேற்றுக்கரையில் ஆடையின்றி கிடந்தான். அஞ்சி அவன் எழுந்தபோது மென்மையான சேற்றுப்படுகையில் நெளிந்து சென்ற சின்னஞ்சிறு நாகத்தைக் கண்டான்.
விஜயபுரிக்கான பாதையில் கீகடரின் சொற்களில் பீமன் விஷமுண்டகாதையைக் கேட்டுக்கொண்டு நடந்தான் இளநாகன். “கைகழுவச்சென்ற பீமன் உணவுண்ண வரவில்லை என்பதைக் கண்டதுமே தருமன் ஐயம் கொண்டுவிட்டான். உணவுக்கு ஒருபோதும் பிந்துபவனல்ல அவன் என்று அறிந்திருந்தான் அண்ணன். காடெங்கும் பீமனைத் தேடியலைந்த தருமன் அவன் கௌரவர்களுடன் சேர்ந்து உணவுண்டதை சேவகர்கள் சொல்லி அறிந்தான். “ஆம், உணவுண்டபின்னர் கங்கைநீராடச் சென்றார். நாங்கள் குடில்களுக்குத் திரும்பிவிட்டோம்” என்றான் துச்சாதனன். அவர்கள் சொன்னதை தருமன் நம்பினான். ஏனென்றால் அவனுடைய அறநெஞ்சு அதற்கப்பால் சிந்திக்கத் துணியவில்லை.”
பீமன் அஸ்தினபுரிக்கு வந்திருப்பான் என்று எண்ணி தருமன் நகர்நுழைந்தான். மைந்தனைக் காணவில்லை என்றறிந்த குந்தி சினம் கொண்டெழுந்த அன்னைப்புலியானாள். அஸ்தினபுரியின் அத்தனை படைகளையும் மைந்தனைத் தேட அனுப்பினாள். அமைச்சுமாளிகையில் ஆணைகளிட்டுக்கொண்டிருந்த விதுரருக்கு முன்னால் அவிழ்ந்த கூந்தலும் வெறிகொண்ட கண்களுமாக வந்து நின்று “விதுரரே, மைந்தனுடன் படைகள் மீளுமென்றால் இந்நகர் வாழும். என் மைந்தன் மீளவில்லை என்றால் நானும் என் மைந்தர்களும் இவ்வரண்மனை முற்றத்தில் கழுத்தை அறுத்து குருதியுடன் செத்து வீழ்வோம். இது என் குலதெய்வங்கள்மேல் ஆணை” என்றாள்.
விதுரர் திகைத்தெழுந்து “அரசி, இது என்ன பேச்சு? தாங்கள் சொல்லவேண்டிய சொற்களா இவை? பீமன் பெரும்புயல்களின் மைந்தன். அவனைக்கொல்லும் ஆற்றல் நீருக்கும் நெருப்புக்கும் இல்லை. அவன் மீள்வது உறுதி. நான் நிமித்திகரை அழைத்து கேட்டுவிட்டேன். அவன் உயிருடன் இருக்கிறான். இன்றே அவனை நம் படைகள் கண்டுவிடும்” என்றார். குந்தி அவரை நோக்கி “அவன் இறந்த மன்னனின் கனவு முளைத்த மைந்தன். அவன் அழிந்தால் அதன்பின் குருகுலம் வாழாது. மூதாதையர் தீச்சொல்லால் அது அழியும்” என்றபின் திரும்பிச்சென்றாள்.
அன்று மாலையிலேயே பீமனை காட்டுக்குள் அஸ்தினபுரியின் படைகள் கண்டடைந்தன. புறாவின் வழியாக செய்தி வந்துசேர்ந்தபோது விதுரர் புன்னகையுடன் ஓடி குந்தியிடம் சென்று அனைத்து முறைமைகளையும் இழந்தவராக கூவினார். “அரசி, நமது மைந்தர் உயிருடன் மீண்டுவிட்டார். அஸ்தினபுரியின் படைகளுடன் வந்துகொண்டிருக்கிறார்.” குந்தி எழுந்து அவரை நோக்கி வந்து ஏதோ சொல்ல எண்ணி பின் தயங்கி நின்றாள். அக்கணமே இருவர் விழிகளிலும் விழிநீர் எழுந்தது. குந்தி திரும்பி அந்தப்புரத்துக்குள் செல்ல இடைநாழி வழியாக தன் சால்வையை இழுத்துச் சுற்றியபடி விதுரர் விரைந்தோடினார்.
பீமன் நகர் நுழைந்தது அஸ்தினபுரியில் மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்தது. அவனுடைய ரதத்தின்மேல் நகர்மக்கள் மலரும் அரிசியும் தூவி வாழ்த்தொலி எழுப்பினர். களிவெறிகொண்ட இளைஞர்கள் தெருக்களில் துள்ளிக்குதித்து கூச்சலிட்டனர். இற்செறிப்பை மறந்த பெண்கள் தெருக்களில் இறங்கி நடனமிட்டனர். படைவீரர்களின் நெறியும் ஒழுங்கும் குலைந்தது. முரசறைவோனும் முறைமறந்தான். சூதர்கூட்டம் வாழ்த்தொலியுடன் அவன் ரதத்துக்குப்பின்னால் ஓடியது.
தன் காலடிகளை வணங்கிய தம்பியை தருமன் அள்ளி மார்போடணைத்து கண்ணீர் சிந்தினான். அந்தப்புரத்திற்கு தம்பியை அழைத்துச்சென்ற தருமன் “இதோ முன்னிலும் பேரழகனாகிவிட்டிருக்கிறான் என் தம்பி” என்றான். குந்தி மைந்தனை உற்றுநோக்கினாள். அவள் விழிகளில் எழுந்த ஐயத்தை பீமன் கண்டான். “நீ எப்படி கங்கையில் விழுந்தாய்? உன்னை யார் அங்கே போட்டது?” என்றாள். “அன்னையே நான் கைகழுவச்சென்றபோது ஒருநாகத்தால் கடிக்கப்பட்டேன். நிலைதடுமாறி நீரில் விழுந்தேன். அரையுணர்வுடன் ஆழத்தில் மூழ்கினேன் என்றாலும் என் ஆற்றலால் நீந்தி கரைசேர்ந்தேன். கங்கையின் நீரோட்டமும் எனக்கு உதவியது” என்றான் பீமன்.
குந்தி “உன்னை நான் என் கனவில் கண்டேன். நீ நாகருலகில் இருந்தாய். அவர்கள் அளித்த விஷத்தை அருந்தினாய்” என்றாள். பீமன் நகைத்து “அது தங்கள் அச்சத்தால் எழுந்த அகமயக்குதான் அன்னையே” என்றான். குந்தி பெருமூச்செறிந்து “உன் வல்லமையை நம்பித்தான் நாங்களிருக்கிறோம். அதை எப்போதும் மறவாதே” என்றாள். அவன் அவள் கால்களைப் பணிந்தபோது “முழுஆயுளுடன் இரு!” என வாழ்த்தினாள். பீமன் தன் தம்பியரை அணைத்துக்கொண்டான். குந்தி “மைந்தர்களே நீங்கள் பகையால் சூழப்பட்டிருக்கிறீர்கள். ஒவ்வொருகணமும் விழிப்புடனிருங்கள்” என்றாள்.
அன்றிரவு தன் மஞ்சத்தில் படுத்து விழிதுயின்ற பீமனின் கனவில் துயர்மிக்க கண்களுடன் பாண்டு வந்தான். “மைந்தா நீ என்னிடமல்லவா கேட்டிருக்கவேண்டும்?” என்றான். பீமன் திகைத்து “தந்தையே” என்றான். “குரோதத்தை வல்லமை எதிர்கொள்ளும் மைந்தா. ஆனால் மேலும் குரோதத்தையே அது எழுப்பும்” என்றான் பாண்டு. “உருவாக்கப்பட்ட படைக்கலமேதும் பலிகொள்ளாது அமைவதில்லை.” பீமன் திடுக்கிட்டு விழித்து இருளை நோக்கியபின் எழுந்து சாளரத்திரைச்சீலையை ஆடவைத்த காற்றில் கூந்தல்பறக்க இருள் சூழ்ந்த தனிமையில் நின்றான்.