வண்ணக்கடல் - 17
பகுதி நான்கு : வெற்றித்திருநகர்
[ 2 ]
துச்சாதனன் நன்கறிந்தவை அண்ணனின் பாதங்கள். அவனுக்கு மொழி அறியவந்த இளமையில் அவன் அன்னை அவற்றைச்சுட்டிக்காட்டிச் சொன்னாள் “தமையன்”. அவன் தான் என்ற சொல்லுக்கு முன்னரே அதைக் கற்றுக்கொண்டான். தந்தையை அடையாளம் காண்பதற்கு முன்னரே தமையனை அறிந்துகொண்டான். தமையனின் பாதங்களைப் பின்தொடர்ந்து சென்று அவன் நடைபழகினான். துரியோதனனின் பேச்சும் பாவனைகளும் அவனில் நிழலுரு என பிரதிபலித்தன.
துரியோதனனின் இரண்டு கனத்த புயங்களையும் துச்சாதனன் விரும்பினான். மலைப்பாம்புகள் என பேராற்றலுக்கே உரிய இறுகிய அமைதியுடன் நெளியும் தசைகள் கொண்டவை. துரியோதனன் அவனைத் தொடுவது மிகவும் குறைவு. எப்போதாவது மிக இயல்பாக அவன் இடக்கை வந்து துச்சாதனன் தோளில்படிந்து சிலகணங்களிலேயே விலகிவிடும். மென்மையான வெம்மை கொண்ட கனத்த கை தொட்டதுமே துச்சாதனனின் தோள்கள் குறுகி அவன் உடல்மொழி சிறுவனைப்போல மாறிவிடும். அத்தொடுகை அங்கிருக்கும் வரை அவன் சித்தமும் அங்குதான் இருக்கும். தமையன் சொல்வது எதையும் அவன் கேட்கவோ பதிலிறுக்கவோ முடியாது. அது விலகியதும் கைவிடு பசுங்கழை போல எழும் உள்ளம் மேலும் கீழும் ஆடி நிலைகொள்ள நெடுநேரமாகும். அதன்பின் அவன் உள்ளில் எழும் நெடுமூச்சை துண்டுகளாக சிதறடித்து வெளிவிட்டு தன் நிலைகுலைவை எவருமறியாமலிருக்க முயல்வான்.
துரியோதனன் தொட்ட ஒவ்வொரு தொடுகையையும் துச்சாதனன் தன் நினைவில் அடுக்கிச் சேமித்திருந்தான். அந்த ஒவ்வொருநாளையும் அவனால் தன் எண்ணங்களிலிருந்து மீட்டு எடுக்கமுடியும், சற்று விழிமூடினான் என்றால் அத்தருணங்களில் முழுமையாகவே வாழவும் முடியும். ஆயினும் அவனுள்ளத்தில் ஆழப்பதிந்திருந்தது தமையனின் வலக்கரம்தான். அடிக்கும்போது மட்டுமே அவனுடலில் அது பட்டது. இரும்பின் எடைகொண்டிருந்தாலும் அவன் அதில் அறிந்தது உயிர்வெம்மையை மட்டுமே. அடிபட்ட தசைகள் வீங்கி வலியில் தெறிக்கையில் ஒருநாள் அவன் எண்ணிக்கொண்டான், அந்தத் தொடுகையே இன்னும் இனியது என. அந்த வீக்கமும் வலியும் நீடிக்கும்வரை தமையனின் கை தன்மேலிருப்பதாகவே அவன் உணர்ந்தான்.
திரும்பிவந்த பின்னர் அவன் அகம் ஒவ்வொரு கணமும் தமையனை கண்காணித்துக்கொண்டே இருந்தது. எப்போதும் யானைபோல நிலையற்ற உடலுடன் அலையும் கைகால்களுடன் இருப்பவன் கற்சிலைபோல அசைவிழந்து நெடுநேரம் அமர்ந்திருக்கக்கூடியவனாக ஆகியிருந்தான். அவனிடம் பேசும்போது அவன் விழிகள் திரும்பப்பார்க்கவில்லை என்ற உணர்வை துச்சாதனன் அடைந்தான். ஆலயக்கருவறையின் தெய்வத்திடம் பேசுவதுபோலிருக்கிறது என்று அவன் துச்சலனிடம் சொன்னான். மற்றவர்களும் அதைத்தான் உணர்ந்துகொண்டிருந்தனர்.
அவர்கள் திரும்பிவந்த அன்றே சகுனி அவர்களை வரச்சொல்லி சந்தித்தான். தான் கண்டதென்ன என்பதை துச்சாதனன் சொல்ல சகுனி தாடியை நீவியபடி கேட்டிருந்தான். “அவர் முன்பிருந்தவர் அல்ல. ஏதோ கானகத்தெய்வம் அவர்மேல் கூடியிருக்கிறது” என்றான் துச்சாதனன். “அவரது அகம் மட்டும் மாறவில்லை மாதுலரே. அவரது உடலும் மாறிவிட்டது. அவர் நடந்துசெல்லும்போது பிறிதொருவரின் அசைவுகளைக் காண்கிறேன். ஒருமுறை அவரது நிழலைக் கண்டபோது அது பிறிதொருவர் என்றே ஒருகணம் எண்ணினேன்” என்றான் துச்சலன்.
“அவரது நடையில் வந்த மாற்றமென்ன என்று நேற்றுதான் அறிந்தேன்” என்றான் துச்சாதனன். “படகில் கங்கைக்கரையில் இறங்கி சேற்றில்நடந்து தேர்வரை சென்றோம். தமையனின் பாதங்கள் படிந்துசென்ற தடத்தைக் கண்டேன். முன்பு அவரது நடைத்தடத்தில் இடதுபாதம் சற்று வெளியே திரும்பியிருக்கும். வலப்பாதம் ஆழமாக பதிந்திருக்கையில் இடப்பாதம் சற்று மென்மையாகவே பதிந்திருக்கும். இப்போது அவரது இரு பாதங்களும் ஒன்றைப்போல ஒன்று பதிந்திருந்தன. ஒரே திசை கொண்டவையாகவும் முற்றிலும் நிகரான அழுத்தம் கொண்டவையாகவும் இருந்தன.”
சகுனி தன்னை அறியாமல் எழுந்துகொண்டான், ஆனால் ஏதும் கேட்கவில்லை. துச்சாதனன் “மாதுலரே, அதன் பின் இன்று முழுக்க அவரை நான் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவரில் வந்துள்ள மாற்றமென்ன என்று நான் அறிந்துகொண்டேன். அவரது இடக்கரம் வலக்கரத்தை விட சற்றே சிறியது. சற்று மென்மையானது அது. அவருடலின் இடப்பாதியே வலப்பாதியைவிட மென்மையானது. இப்போது அவர் துலாத்தட்டில் வைத்துப்பகுத்து செய்ததுபோன்ற இருபுறங்களுடன் இருக்கிறார். அவரது இருபக்கங்களும் முற்றிலும் ஒன்றே என்று தோன்றுகின்றன. வெங்கதிரோன் ஆலயத்தில் இருக்கும் கருவறைச் சிலை போல முற்றிலும் சமன் கொண்ட உருவமாக இருக்கிறது அவருடல்” என்று சொல்லிக்கொண்டே சென்றான்.
அவனால் தன் சொற்களை நிறுத்த முடியவில்லை. “ஆம், நான் நூறுமுறை இதை சரிபார்த்துவிட்டேன். எப்போதும் நான் தமையனின் வலப்பக்கம்தான் நிற்பேன். என் துணையும் தந்தையும் இறையும் ஆன முகம் அங்கே தெரியும். அவர் களமிறங்கும்போது மட்டும் இடப்பக்கம் செல்வேன். அவரது இடப்பக்கத்தை பேணும்படி அன்னை எனக்கு ஆணையிட்டிருக்கிறாள். இடப்பக்கத்தில் அவரிடம் தெரிவது என் அன்னையின் முகம். ஆனால் இப்போது இருபக்கமும் வலதுமுகமே தெரிகிறது…” சகுனியை நோக்கி கைகள் நீட்டி துச்சாதனன் சொன்னான் “நான் அஞ்சுகிறேன் மாதுலரே. என் தமையன் மேல் ஏறியிருக்கும் அந்தத் தெய்வம் எது? அது அவரை எங்கு கொண்டுசெல்கிறது?”
சகுனி அதற்கு பதிலிறுக்கவில்லை. துச்சாதனன் சொன்னான் “இதெல்லாம் என் எண்ணமயக்கு மட்டுமல்ல மாதுலரே. நாங்களெல்லோருமே அவர் மாறிவிட்டதை உணர்கிறோம். எங்களில் இளையவனாகிய விரஜஸ் கூட அதைச் சொன்னான். இன்றுகாலை அரண்மனைக்கு வந்ததும் தமையனைப்பார்க்க ஓடிவந்த துச்சளையும் அதையே உணர்ந்தாள்.” சகுனியின் கண்களில் ஒரு மெல்லிய சுருக்கம் நிகழ்ந்தது. “அவள் என்ன சொன்னாள்?” என்றான்.
“எப்போதும் தமையனுக்கு மிக அண்மையானவள் அவள். எங்களில் அவளே தமையனை தானாகத் தொட்டுப்பேசுபவள். உடன்பிறந்தாரில் அவளால் மட்டுமே தமையனைக் கண்டிக்கவும் மறுக்கவும் முடியும். அவளிடம் மட்டுமே தமையன் விழிகளில் நகையுடன் நெடுநேரம் உரையாடுவார்” என்றான் துச்சலன். “ஆனால் இன்றுகாலை தமையனைக் கண்டதுமே அவள் திகைத்து நின்றுவிட்டாள். அயலவனைக் கண்டதுபோல ஆடைதிருத்தி…” என்றதும் சகுனி இடைமறித்து “ஓடிவந்ததனால் ஆடைகலைந்திருக்கலாமே?” என்றான். “அவள் தன் கூந்தலை மூடிக்கொண்டாள். அவள் கண்களை நான் அப்போது கண்டேன்” துச்சலன் விழிகளை விலக்கிக்கொண்டு சொன்னான். “உம்” என்றான் சகுனி.
“அவள் அருகிலேயே செல்லவில்லை மாதுலரே” என்றான் துச்சாதனன். “மிகமிக முறைமைசார்ந்த சொற்களில் அவரை நலம் உசாவினாள். அவரும் அத்தகைய சொற்களையே பேசினார். திரும்பிச்செல்கையில் நான் அவளுடன் சென்றேன். தமையனிடம் அவர் எங்கே சென்றிருந்தார் என்று கேட்கும்படி சொன்னேன். அவள் தமையன் தனக்கு அயலவனைப்போலத் தோன்றுகிறார் என்றாள். அவரது விழிகளில் நகை இல்லை என்றாள். அத்துடன் அவர் மிக அழகானவராக மாறிவிட்டிருப்பதாகச் சொன்னாள்.” சகுனி தலையசைத்தான். “என் விழிகளிலிருந்து பார்வையை விலக்கி இப்போது அவரைக் கண்டால் பெண்களெல்லாம் காமுறுவார்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.”
சகுனி பெருமூச்சுடன் உடலை இருக்கையில் சாய்த்துக்கொண்டான். துச்சாதனன் “அவரது அழகு மறைந்துவிட்டதென்றே நானும் தம்பியர் அனைவரும் எண்ணுகிறோம். ஆனால் அந்தப்புரத்தில் அனைவருமே அவர் பேரழகராக ஆகிவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அன்னையர் மாறி மாறி அவரைப் பார்த்து மகிழ்கிறார்கள். அரண்மனைச் செவிலியரும் சேடியரும் அவரை மறைந்திருந்து நோக்கிச் செல்கிறார்கள். அவரது அழகைப்பற்றித்தான் வடக்குமுகத்துக் கொட்டிலிலும் மடைநிலையிலும் சூதர்மனைகளிலும் அனைவரும் பேசிக்கொள்கிறார்கள் என்று சித்ரகன் சொன்னான்” என்றான்.
சகுனி ஒரு சொல்லும் பேசாமல் அவர்களை திருப்பியனுப்பினான். ரதத்தில் திரும்பும்போது துச்சகன் சொன்னான் “நீங்கள் தேவையின்றி அஞ்சுகிறீர்கள் அண்ணா. மூத்தவர் மேலும் ஆற்றலும் உறுதியும் கொண்டிருப்பதாகவே எண்ணுகிறேன். முன்பு அவரைப்பார்க்கையில் பாரதவர்ஷம் மீது உருண்டிறங்கப்போகும் பெரும் மலைப்பாறை என எண்ணுவேன். இன்று அவர் பாரதவர்ஷத்தின் அச்சாணியாகத் திகழும் மாமலைபோலத் தெரிகிறார். ஊழி எழுந்தாலும் நிலைபெயராத மேரு போல.” துச்சாதனன் “உன் சொற்கள் பலிக்கட்டும் தம்பி. அது ஒன்றையே நான் விழைகிறேன்” என்றான்.
அன்றுமாலை தன் படைக்கலநிலையத்துக்கு வந்த துரியோதனனை சகுனியின் விழிகள் அளவெடுத்துக்கொண்டிருந்தன. முறைப்படி வணங்கி முகமன் சொல்லி அவன் கதாயுதம் பயில கூடத்துக்கு நடந்துசென்ற அசைவுகளிலேயே துச்சாதனன் சொன்ன அந்தவேறுபாட்டை சகுனி அறிந்துகொண்டான். மேலாடையை அவிழ்த்து சேவகனிடம் அளித்துவிட்டு குறைக்கச்சையை இறுக்கிக் கட்டி கதாயுதத்துடன் அவன் திரும்பியபோது சகுனி அந்த வேறுபாடு என்ன என்பதை தெளிவாகக் கண்டுகொண்டான்.
கச்சைமுடிக்கும் இடமருகே வைக்கப்பட்டிருந்த தீட்டப்பட்ட வெள்ளியாலான பெரிய நிலையாடியில் துரியோதனன் ஒவ்வொரு முறையும் தன் தசைகளைப் பார்த்துக்கொள்வதுண்டு. கைகளை இறுக்கி மார்பை விரித்தும் புயங்களை மடித்தும் தன்னில் நெளியும் கனத்த தசைகளை நோக்கி நிற்கையில் அவன் இடம்காலமற்றவனாக ஆகிவிடுவான். எதிர்முனையில் சகுனி கதையுடன் காத்து நின்றிருப்பான். கதையை தலைக்குமேல் சுழற்றி பயிற்சி எடுக்கும்போது ஆடிமுன் நின்று அதைச் செய்வதை துரியோதனன் விரும்பினான். ஆனால் அன்று ஒருகணம் ஆடிநோக்கி திரும்பி தன்னை நோக்கியவன் மிக இயல்பாகத் திரும்பி கதையை கையிலெடுத்தபடி திடமான கால்களுடன் வந்து நின்றான்.
ஓவியம்: ஷண்முகவேல்
சகுனி தன் கதையுடன் சுழன்று வந்தபடி மருகனை நோக்கினான். அவனுடைய அசைவுகளெல்லாம் குற்றமற்றவையாக இருந்தன. கதைப்போர் என்பது எதிரியின் உடலின் வலுக்குறைவுகளையும் சமன்குலைவுகளையும் கண்டறிவதன் மூலமே ஆடப்படும் ஒரு நுண்விளையாட்டு. தன் கதையுடன் மோதும் எதிரியின் கதையின் அடிகளின் வழியாக அதை உணர்ந்துகொள்வதே அதிலடையக்கூடும் தேர்ச்சி. எதிரியின் கதைச் சுழல்வின் தர்க்கத்தை அறிந்துகொண்டதுமே அவனுடைய கோட்டைகள் கரைந்துவிடுகின்றன. அவனுடைய எந்த அடி வலுவானது எது வலுவற்றது எத்திசையில் ஒருபோதும் வரமுடியாது என்று அறிந்ததும் ஒருவகையில் போர் முடிவுக்கு வந்துவிடுகிறது.
துரியோதனனின் வலிமையும் வலுக்குறைவும் சகுனி நன்கறிந்தவை. அவனுடைய வலதுதோளும் கையும் பெருவலிமை கொண்டவை. வலதுகால் உறுதியாக மண்ணில் ஊன்றுவது. வலப்பக்கமாக அவன் இடை வளைவதுமில்லை. அவனுடைய வலப்பக்கமே அவனுடலில் பெரும்பகுதி என சகுனி மதிப்பிட்டிருந்தான். அவனுடைய இடப்பக்கம் மென்மையானது எப்போதும் இடதுகால் மண்ணில் மிக மேலோட்டமாகவே ஊன்றியிருக்கும். வலக்காலின் குதிநுனியை ஊன்றித்தான் அவன் உடல் சுழன்று திரும்பும். இடதுதொடை பெரும்பாலும் தளர்ந்து, இடது இடை வளைந்து, இடத்தோள் சற்றே சரிந்துதான் துரியோதனன் நிற்பதும் போரிடுவதும்.
இடதுகையில் அவன் கதையை பெரும்பாலும் வைத்துக்கொள்வதில்லை. எப்போதாவது இடது கையால் அவன் கதையை வீசினால் அந்த அடி சரியாக இலக்கில் விழுவதில்லை. அவனுடைய வலக்கண்ணை விட இடதுகண் மிகக்கூரியது என சகுனி கணித்திருந்தான். எனவே சமரின்போது அவன் முகத்தை வலப்பக்கமாக சற்று திருப்பியிருப்பான். ஆகவே களத்தில் அவனுடைய இடப்பக்கமாக நிற்பது பிழை. அவனுடைய கதை திரும்பமுடியாத வலத்தோளின் பின்புறமாகச் செல்லும்போது அவனால் உடல்திருப்பாமல் தாக்கமுடியாதாகும். அந்தத் திரும்பலில் அவனுடைய குதிநிலை சற்று பிறழும்போது மட்டுமே அவனை நோக்கி கதையைச் செலுத்தமுடியும்.
தன்கதையைத் தாக்கிய துரியோதனனின் கதையின் அதிர்விலேயே சகுனி வேறுபாட்டைக் கண்டுகொண்டான். இருமுறை துரியோதனன் தாக்கியதும் அவன் உடலில் இடதுபக்கம் வலப்பக்கத்துக்கு முற்றிலும் இணையானதாக இருப்பதை அறிந்தான். அவன் துரியோதனனின் வலப்பக்கத்துக்குச் சென்று தோளுக்குப்பின் மறைவதற்குள் இடதுகுதிகாலால் சற்றேதிரும்பி கதையால் ஓங்கி அறைந்து அவன் கதையை தெறிக்கச் செய்தான் துரியோதனன். பின் தன் கதையைத் தாழ்த்தி “ஏழு அடிகள் மட்டுமே மாதுலரே” என்றான். புன்னகையுடன் சகுனி “ஆம்” என்றான்.
அப்பால் நின்றிருந்த துச்சாதனனும் துச்சகனும் துச்சலனும் சிரித்தபடி ஓடிவந்தனர். துச்சாதனன் கீழே கிடந்த சகுனியின் கதையை எடுத்துக்கொண்டான். துரியோதனன் கச்சையை அவிழ்த்துக்கொண்டு இறுக்கமான கால்களுடன் நடந்து பீடத்தில் அமர்ந்துகொண்டான். சேவகன் கொண்டுவந்த பன்றியூன் துண்டுகள் போட்டு கொதிக்கச்செய்த சூடான பாலைக் குடித்தான். சகுனி அவனை கூர்ந்து நோக்கியபடி “இங்கே என்னிடம் இனி தாங்கள் கற்க ஏதுமில்லை மருகரே” என்றான். துரியோதனன் உதடுகளை சேவகன் மென்பட்டால் துடைத்தான். அதைக் கையால் விலக்கிவிட்டு “ஆம்” என்றான் துரியோதனன். “கிருபரிடமும் மேலும் இருப்பதாகத் தோன்றவில்லை.”
சகுனி பார்வையை விலக்கி இளவெயில் சாய்ந்துகிடந்த வெளிமுற்றத்தை நோக்கியபடி “தாங்கள் இப்போது சென்று இளையபாண்டவனை போருக்கழைத்தால் அவன் தலையைச் சிதறடிக்கமுடியும்” என்றான். துரியோதனன் இல்லை என்பதைப்போல தலையை அசைத்தான். “நான் அவனை பயிற்சிக் களத்தில் எதிர்கொள்ள நினைக்கவில்லை மாதுலரே. அவனை அஸ்தினபுரியின் மக்கள் அனைவரும் நோக்க மண்ணில் வீழ்த்தி தலையை பிளக்கப்போகிறேன்.” சகுனி பேசாமல் உற்றுநோக்கினான். “இன்று நகரமெங்கும் சூதர்கள் பாடியலையும் பாடல்களுக்கான பதிலாக அது அமையும்.”
“ஆம், பயிற்சிக்களத்தில் ஒருவன் கொல்லப்பட்டால் அதை கைப்பிழை என்றே மக்கள் எண்ணுவார்கள். வீரமென்றல்ல. பயிற்சியின்போது ஏதேனும் சதி நடந்தது என்று சூதர்கள் பாடுவதுமாகும். மக்கள்முன் நிகழும் போர்அரங்கின் விதிகளே வேறு. அங்கே அவனை நீங்கள் ஒரே ஒருமுறை விதிமீறி உங்கள் தலைநோக்கி கதையை தூக்கவைத்தீர்கள் என்றால் அதன்பின் நீங்கள் அவனைக்கொல்வது முற்றிலும் நெறிநூல்கள் ஒப்புவதேயாகும்.” பதிலேதும் சொல்லாமல் துரியோதனன் எழுந்துகொண்டான். துச்சலனை நோக்கி “உன் கதையை எடு” என்றான். துச்சலன் கதையுடன் களத்தின் நடுவே இறங்க அவர்கள் இருவரும் பயிற்சிப்போரில் ஈடுபடத்தொடங்கினர்.
துச்சாதனன் “அவரது உயிரை பீமன் காப்பாற்றியதில் ஏதும் சதி இருக்குமோ மாதுலரே?” என்றான். சகுனி “இல்லை. ஆனால் அதை யாதவ அரசி மிகச்சிறப்பாக பயன்படுத்திக்கொள்வாள். இன்றுமுதல் நகரமெங்கும் நூறு கௌரவருக்கும் பீமனே உயிர்க்காவலன் என்ற கதைகள் பரவத்தொடங்கும்” என்றான். துச்சாதனன் சீற்றத்துடன் “அது ஒரு தருணம்… அந்தக்கரடி…” எனத் தொடங்கினான். சகுனி “சூதர்களின் வல்லமையை நாம் அறிந்ததுபோல பிறர் அறிந்ததில்லை மருகரே. நாம் சூதர்களால் பழிக்கப்பட்டவர்கள்” என்றான். துச்சாதனன் அவன் சொல்வதை முழுக்க உள்வாங்காமல் விழித்து நோக்கினான்.
“இங்கே உலவும் கதைகளென்ன என்றறிவீரா? இதோ என் முன் கௌமோதகியை ஏந்திய விண்ணளந்தோனைப்போல நின்று களமாடும் பேரழகனை கலியின் பிறப்பு என இந்நகர்மக்களில் பலர் நினைக்கின்றனர். பாரதவர்ஷமெங்கும் சூதர்கள் அதைப்பாடிப்பரப்புகின்றனர். ஏன்? அவன் பேருருவாகப் பிறந்தான் என்பதனால். அதே பேருருவைக் கொண்டிருக்கும் பாண்டுவின் மைந்தனையும் அவர்கள் அழிவின் அடையாளமாக எண்ணலாமல்லவா? ஆகவேதான் மிகநுட்பமாக அவனை இவனிடமிருந்து காப்பதற்காக தெய்வங்களால் உருவாக்கப்பட்ட நிகராற்றல் என்று சித்தரிக்கிறாள் அவள்…” என்றான் சகுனி.
சகுனியின் முகம் சிவந்தது. “அவளை முதல்பார்வையிலேயே நான் மதிப்பிட்டேன். என் வாழ்நாளெல்லாம் அவளுடன்தான் மதிப்போர் செய்யப்போகிறேன் என அறிந்தேன். ஆனால் அவளுடைய படைக்கலன்களை என்னால் இதுவரை எதிர்கொள்ளமுடியவில்லை. ராணித்தேனீ போல எங்கோ கூட்டின் ஆழத்துக்குள் அவள் இருக்கிறாள். அவள் பிறப்பிக்கும் விஷக்கொடுக்குகள்தான் என்னைச் சூழ்ந்திருக்கின்றன.” அப்பால் துச்சலனின் கதை தெறித்ததும் சகுனி எழுந்து ஜலகந்தன் சமன் துர்முகன் துர்கர்ணன் நால்வரிடமும் நான்கு கதைகளுடன் துரியோதனனை எதிர்கொள்ளும்படி ஆணையிட்டான்
துச்சாதனன் எழுந்து சகுனியிடம் “என் தமையனைப்போன்ற நிகரற்ற வீரன் எதற்காக அந்த இளையபாண்டவனை அஞ்சவேண்டும்?” என்றான். “இன்று திரும்பிவந்திருப்பவன் பாற்கடல்மேவியவனுக்கு நிகரானவன் என்று நீங்களே சொன்னீர்கள் மாதுலரே.” சகுனி சினத்துடன் திரும்பி “மூடனைப்போல் பேசாதே. என்றாவது உன் தமையனை எவரேனும் கொல்லமுடியும் என்றால் அது அவன்தான்” என்றான். துச்சாதனன் திகைத்தவனாக இரு கரங்களையும் மேலே தூக்கி ஏதோ சொல்லப்போனான். அவனால் சொற்களை எடுக்க முடியவில்லை. ஒருதருணத்திலும் அவன் தான் சொல்லவேண்டிய சொற்களை கண்டடைந்ததில்லை. திணறலுடன் அவன் கைகளைத் தாழ்த்தி “மாதுலரே” என்றான். “அது நிகழலாகாது என்பதே என் விருப்பம். என்று இளையபாண்டவன் கொல்லப்படுகிறானோ அன்றுதான் உன் தமையன் நீளாயுள் எனும் வரத்தைப் பெறுவான்” என்றபடி சகுனி படைக்கலமேடை நோக்கிச் சென்றான்.
நிலையழிந்த உடலுடன் துச்சாதனன் நின்றிருப்பதைக் கண்ட துச்சகன் அருகே வந்து “அண்ணா, என்ன ஆயிற்று?” என்றான். துச்சாதனன் “இல்லை” என்று தலையசைத்தான். “உன் கைகள் பதைத்துக்கொண்டிருக்கின்றன. எதையாவது அஞ்சுகிறாயா?” என்றான் துச்சகன். “இல்லை…” என்றான் துச்சாதனன் அவன் விழிகளைத் தவிர்த்தபடி. களமாடல் முடிந்து துரியோதனன் சென்று ரதத்தில் ஏறிக்கொண்டதும் அவனும் ஏறிக்கொண்டான். தன் உடலசைவுகளை கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டுமென அவன் எண்ணினாலும் மிகச்சில கணங்களுக்கே அந்தத் தன்னுணர்வை அவனால் நீட்டித்துக்கொள்ளமுடிந்தது.
இரவெல்லாம் துயிலாமல் தமையனையே நோக்கி அமர்ந்திருந்தான் துச்சாதனன். சுவடிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் துரியோதனன் முகம் ஒவ்வொரு சொல்லிலும் முற்றிலும் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். முன்பெல்லாம் அவன் மூச்சுத்திணறி நீருக்குமேலெழுபவனைப்போல அடிக்கடி வெளியே வருவான். உடலை அசைத்தும் விழிகளை ஓட்டியும் ஏதேனும் வரிகளை முனகியும் தன்னை எளிதாக்கிக்கொண்டபின் மீண்டும் நினைவுகூர்ந்து சுவடிக்குள் நுழைவான். அவ்வப்போது ஏதேனும் சிலவற்றை அவன் துச்சாதனனிடம் சொல்வதும் உண்டு.
துரியோதனன் சுவடிகளை வைத்துவிட்டு படுக்கையில் படுத்துக்கொண்டான். வழக்கமாக வலப்பக்கமாக சரிந்துபடுப்பவன் மல்லாந்து கைகால்களை சற்றே விரித்து படுத்தான். கனத்த கற்சிலை நீரில் மூழ்குவதுபோல அசைவில்லாமல் அப்படியே துயிலில் மூழ்கினான். சீரான மூச்சொலி எழத்தொடங்கியது. துச்சாதனன் அவனைநோக்கியபடி சுவர்சாய்ந்து அசையாமல் நின்றுகொண்டிருந்தான். துச்சலன் அவனருகே வந்து “அண்ணா நாளை கிருபர் நம்மை கங்கைக்கரைக் காட்டுக்குள் வனப்பயிற்சிக்குக் கொண்டுசெல்கிறார். பிரம்மமுகூர்த்தத்திலேயே ரதங்கள் ஒருங்கியிருக்கவேண்டும் என்று தசகர்ணரின் செய்தி வந்துள்ளது” என்றான். துச்சாதனன் தலையசைத்தான்.
துச்சலன் மேலும் சிலகணங்கள் தயங்கி “உன் நெஞ்சில் ஓடுவதென்ன அண்ணா?” என்றான். துச்சாதனன் இல்லை என தலையசைத்தான். “நான் அறியலாகாதா?” என்று சொன்ன துச்சலனை ஏறிட்டு நோக்கி “ஒன்றும் இல்லை தம்பி” என்று அடைத்த குரலில் துச்சாதனன் சொன்னான். துச்சலன் படுத்துக்கொண்டான். விரிந்த கூடத்தில் தோல்படுக்கைகளில் துயின்றுகொண்டிருந்த கௌரவர்களின் மூச்சொலிகள் எழுந்து அரையிருளை நிறைத்தன. சற்றுநேரத்தில் அந்தக் கூடமே சுவர்கள் சுருங்கிவிரிய மூச்சுவிடுவதுபோலத் தோன்றியது.
துச்சாதனன் திரும்பி தன் தம்பியரை நோக்கினான். பத்து அன்னையரின் நூறுமைந்தர்கள். நூறுடலும் ஓரகமும் ஆனவர்கள். அந்த அகம் இருப்பது அங்கே கட்டிலில் படுத்திருக்கும் மூத்தவரிடம். அவன் இல்லையேல்… அச்சிந்தை எழுந்ததுமே அவன் உடல் அதிர அதை அழுத்தி வெளியே தள்ளினான். பின்னர் நெடுமூச்சுடன் மீண்டும் தம்பியரை நோக்கினான். அங்கே கிடக்கும் எவருமே மூத்தவரின் இறப்பைப்பற்றி எண்ணியிருக்கமாட்டார்கள். சொன்னாலும் சிரிக்கத்தான் செய்வார்கள். அவரைப்போன்ற ஒருவர் எப்படி சாகமுடியும் என்றே எண்ணுவார்கள். அவனுடைய உள்ளமும் அதைத்தான் எண்ணுகிறது. அசையாத சிந்தனையாக அதுதான் இருக்கிறது. அதன்மேல்தான் அலைபோல ஐயங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஒருகணத்தில் காரணமின்றி துச்சாதனன் திடுக்கிட்டான். அதன்பின் எதற்காக திடுக்கிட்டோம் என எண்ணி பரபரத்துத் தேடி தன் அகத்தில் அவ்வெண்ணத்தைக் கண்டுகொண்டான். அக்கணமே அஞ்சி பின்வாங்கியபின் மீண்டும் மிகுந்த கவனத்துடன் மெல்ல மெல்ல திரும்பிச்சென்று அதை நோக்கினான். அப்போது அறிந்தான் அவ்வெண்ணத்தை துச்சலன் கங்கைக்கரை காட்டுக்குச் செல்வதைப்பற்றி சொன்னதுமே அடைந்துவிட்டான். அதை உடனே பிற எண்ணங்களால் தாண்டிச்சென்றான். அதன்பின் நிகழ்ந்தவை எல்லாம் அவன் அவ்வெண்ணத்தை தன்னுள்ளேயே புதைத்துக்கொள்ள முயன்ற அகநாடகங்கள் மட்டுமே.
துணிந்து அதை எடுத்து தன் முன் நிறுத்தி நேருக்குநேர் நோக்கினான். அந்த எழுச்சியை தாளமுடியாமல் கூடத்தில் நிலைகொள்ளா உடலுடன் அலையும் கைகளுடன் நடந்தான். மீண்டும் அதை நோக்கினான். அக்கிளர்ச்சி அளிக்கும் உவகையினாலேயே இனி அவனால் அதைச்செய்யாமலிருக்க இயலாது என்று உணர்ந்தான். துச்சாதனன் சென்று படுத்துக்கொண்டிருந்த துச்சகனை காலால் தட்டி எழுப்பினான். அவன் எழுந்து வாயைத் துடைத்துக்கொண்டு “என்ன அண்ணா?” என்றான்.
“ஓசையிடாதே… வா என்னுடன்” என்று துச்சாதனன் கிசுகிசுத்தான். அவனை வெளியே அழைத்துச் சென்று தாழ்ந்த குரலில் “இப்போதே உன் அணுக்கசேவகனுடன் கிளம்பி கோட்டைக்கு வெளியே தெற்கு மண்டலத்துக்குச் செல். அங்கே சூதர்களின் இடுகாட்டுக்கு அப்பால் நந்தகன் என்னும் நாகசூதன் வசிக்கிறான். அவனிடம் நான் சொன்னேன் என்று சொல்லி மிகச்சிறந்த நாகநச்சு வாங்கிவா…” என்றான். அவன் மேற்கொண்டு சொல்வதற்குள்ளாகவே அனைத்தையும் புரிந்துகொண்ட துச்சகன் “இப்போதே செல்கிறேன். நாம் வனப்பயிற்சிக்குக் கிளம்புவதற்குள் வந்துவிடுவேன்” என்றான்.
அவன் அப்படி எளிதாக ஏற்றுக்கொண்டதைக் கண்டதுமே துச்சாதனன் தன் அகக்கிளர்ச்சியை இழந்தான். அக்கணமே அது அவன் ஆற்றியாகவேண்டிய விருப்பில்லா கடமையாக ஆகியது. சொற்களாக மாறிவிட்டமையால், பிறிதொருவன் கேட்டுவிட்டமையால் மட்டுமே இனி அவன் அதிலிருந்து பின்வாங்க முடியாது. “நீ அவனுக்கு என்ன கொடுப்பாய்?” என்றான். “தற்போது ஏதுமில்லை. அவன் தனக்குத் தேவையானது எதுவோ அதை அரண்மனைக்கு வந்து தங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாமென்று சொல்வேன்” என்ற தலைவணங்கிய துச்சகன் திரும்பிச்சென்று தன் தலையணை அருகே சுருட்டி வைக்கப்பட்டிருந்த தலைப்பாகையை எடுத்துக்கொண்டு மெல்ல வெளியே சென்றான்.