வண்ணக்கடல் - 13
பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி
[ 3 ]
சஞ்சயன் கைபற்றி திருதராஷ்டிரர் புஷ்பகோஷ்டத்து வாயிலில் தோன்றியதும் வீரர்கள் வாழ்த்தொலி எழுப்பி வேல்தாழ்த்தி விலகினர். சௌனகர் அருகே சென்று “வணங்குகிறேன் அரசே” என்றார். திருதராஷ்டிரர் அவரை நோக்கி வலக்காதை அனிச்சையாகத் திருப்பி “ரதங்கள் ஒருங்கிவிட்டனவா?” என்றார். “ஆம் அரசே” என்றார் சௌனகர். “விதுரனும் என்னுடன் வருகிறானல்லவா?” சௌனகர் “இல்லை, அவர் முன்னரே சென்று பிதாமகருடன் அங்கே வருவார்” என்றார். “செல்வோம்” என்றார் திருதராஷ்டிரர்.
அரண்மனை முற்றத்தில் ரதம் ஒருங்கி நின்றது. திருதராஷ்டிரர் “புரவிகள் சிஸ்னிகையும் சதானிகையும்தானே? அவற்றின் வாசனையை அறிவேன்” என்று மலர்ந்த முகத்துடன் சொல்லி “சஞ்சயா, மூடா, அவற்றை தொடவிழைகிறேன்” என்றார். சஞ்சயன் “அவையும் உங்களைத் தொட விழைகின்றன அரசே. சதானிகை வண்டியையே திருப்பிவிட்டது” என்றான். வெண்புரவி செருக்கடித்து தலையைக் குனித்து பிடரி சிலிர்த்தது. விழிகளை உருட்டியபடி சிஸ்னிகை பெருமூச்செறிந்தது.
திருதராஷ்டிரர் அருகே சென்று அவற்றின் பிடரியையும் கழுத்தையும் வருடினார். சிஸ்னிகையின் விரிந்த மூக்குத்துளையைக் கையால் பற்றி மூட அது தலையைத் திருப்பி மூச்சொலிக்க அவர் கையை தன் கனத்த நாக்கை நீட்டி நக்கியது. “குட்டிகளாக இவை என் அரண்மனை முற்றத்துக்கு வந்ததை நினைவுறுகிறேன். நேற்று போலிருக்கிறது. இன்று படைக்குதிரைகளாகிவிட்டன” என்றார். “நேரமாகிறது அரசே” என்றார் சௌனகர்.
ரதத்தில் திருதராஷ்டிரர் ஏறிக்கொண்டதும் அவர் அருகே சஞ்சயன் நின்றுகொண்டான். ஒவ்வொரு காட்சியையும் அக்கணமே சொற்களாக ஆக்கிக்கொண்டிருக்கும் சஞ்சயனின் திறனை சௌனகர் எப்போதும் வியந்துகொள்வதுண்டு. நாவால் பார்ப்பவன் என்று அவனை அழைத்தனர் சூதர். சௌனகர் கையசைத்ததும் அரசரதம் அசைந்து வாழ்த்தொலிகள் எழ முன்னால் சென்றது. அரசர் எழுந்தருள்வதை அறிவிக்க காஞ்சனத்தின் நா ஒலித்தது.. கோட்டைமேலிருந்த வீரர்கள் கொம்புகளைத் தூக்கி பிளிறலோசை எழுப்பினர். அதைத்தொடர்ந்து சௌனகர் தன் ஒற்றைக்குதிரை ரதத்தில் சென்றார்.
ரிஷபசாயா என்றழைக்கப்பட்ட சோலைக்குள் இருந்தது கிருபரின் குருகுடீரம். ஆலும் அரசும் கோங்கும் வேங்கையும் கொன்றையும் மகிழமும் மண்டிய காட்டுக்குள் பலகைகளாலும் ஈச்சைத்தட்டிகளாலும் கட்டப்பட்ட பன்னிரு குடில்கள் இருந்தன. அப்பால் ஆயுதப்பயிற்சிக்கான பதினாறு களங்கள். கிருபர் தன் இருபத்தொரு மாணவர்களுடன் அங்கேதான் தங்கியிருந்தார். அரசரதத்தை வரவேற்க கிருபரின் முதல்மாணவர் தசகர்ணரும் ஏழு மாணவர்களும் வாயிலில் மங்கலத்தாலங்களுடன் நின்றிருந்தனர். சோலையின் முகப்புவாயிலில் கொடிகளும் தோரணங்களுமாக அணிசெய்யப்பட்டிருந்தது. நிலத்தில் வண்ணக்கோலமிடப்பட்டு நிறைகுடமும் கதிர்குலையும் பசுந்தழையும் மலர்க்குவையுமாக மங்கலம் ஒருக்கியிருந்தனர்.
வணங்கி வரவேற்ற தசகர்ணரை வாழ்த்தி மங்கலத்தைப் பெற்றுக்கொண்டு திருதராஷ்டிரர் உள்ளே செல்ல சௌனகர் பின்தொடர்ந்தார். குருகுடீர முகப்பில் மலர்த்தோரணங்கள் தொங்கியாடின. அப்பால் மையக் களமுற்றத்தில் அரசமைந்தர்கள் வலப்புறம் நிரைவகுத்து நிற்க இடப்பக்கம் கிருபரின் மாணவர்கள் நின்றனர். சேவகர்கள் ஓசையெழுப்பாமல் பேசியபடி விரைந்தனர். திருதராஷ்டிரர் சோலைக்குள் நுழைந்ததும் முரசும் கொம்புகளும் முழங்கின. மாணவர்களும் சேவகர்களும் வாழ்த்தொலி எழுப்பினர். தசகர்ணர் அவரை அழைத்துக்கொண்டுசென்று ஈச்சைத்தட்டியால் கூரையிடப்பட்ட பந்தலில் இருந்த ஆசனத்தில் அமரச்செய்தார்.
“குருகுலத்து மைந்தர்கள் அனைவரும் இங்கே அணிவகுத்துள்ளனர் அரசே. முதன்மையாக நிற்பவர் பட்டத்து இளவரசர் துரியோதனர். அவர் அருகே இணைத்தோள்களுடன் இளைய பாண்டவராகிய பீமர். இருவருக்கும் அருகே குருகுலமூத்தவராகிய தருமர். அவருக்கு வலப்பக்கம் பார்த்தர். நகுல சகதேவர்கள் கைகளைப் பற்றிக்கொண்டு நின்றிருக்கிறார்கள். அண்ணனின் நிழலென துச்சாதனர் நிற்க அவருக்குப்பின்னால் ஆலமரத்தின் நிழலென கௌரவர் நிறைந்துள்ளார்கள்” என்றான் சஞ்சயன். “ஆம், அவர்கள் ஒவ்வொருவரின் வாசனையையும் சுமந்து வருகிறது இளங்காற்று” என்றார் திருதராஷ்டிரர்.
“அவர்களனைவரும் புத்தாடை அணிந்து, கூந்தலை கொண்டையாக்கி மலர்சூடி நின்றிருக்கிறார்கள். தருமர் எதையும் பாராதவர் போல நின்றிருக்க அனைத்தையும் பார்ப்பவர் போல நின்றிருக்கிறார் பார்த்தர். துரியோதனரின் தோளைத்தொட்டு ஏதோ சொல்லி பீமசேனர் நகைக்கிறார். துரியோதனரும் நகைக்கிறார். காற்றிலாடும் தன் மேலாடையை மீண்டும் மீண்டும் சீர்செய்துகொண்டே இருக்கிறது துரியோதனரின் கரம். அவருக்கும் காற்றுக்குமிடையே ஏதோ ஆடல் நிகழ்வதுபோல. காற்று அவரிடம் சொல்லிக்கொண்டிருப்பது எதையோ அவர் மறுத்து வாதிடுவது போல…” சஞ்சயன் சொன்னான்.
களத்தின் தென்மேற்கு மூலையில் பச்சையான ஈச்சையோலைகளாலும் தளிர்களாலும் மூன்று ஆலயக்குடில்கள் எழுப்பப்பட்டிருந்தன. நடுவிலிருந்த குடிலின் உள்ளே களிமண்ணால் கட்டப்பட்டு கன்னிப்பசுஞ்சாணி பூசிய பீடத்தின் மேல் செம்பட்டு விரிக்கப்பட்டு அதன் நடுவில் செவ்வரளி மாலையிட்ட நிறைபொற்குடமாக கொற்றவை பதிட்டை செய்யப்பட்டிருந்தாள். வலப்பக்கக் குடிலில் நீள்வட்ட வால்கண்ணாடியாக திருமகள் வீற்றிருந்தாள். இடப்பக்கக் குடிலில் செம்பட்டுச்சரடு சுற்றிய ஏடும் எழுத்தாணியுமாக கலைமகள். ஆலயக்குடிலுக்குள் அன்னையருக்கு இருபக்கமும் தென்னம்பாளையில் பசுநெய்விட்டு கூம்புநுனியில் திரியிட்டு சுடரேற்றப்பட்டிருந்தது ஆலயக் குடிலுக்குள் எழுந்த குங்கிலியப்புகை பந்தலின் கூரைக்குமேல் தயங்கிப்பிரிந்து காற்றில்கலந்து மணத்தது.
வெளியே வாழ்த்தொலிகள் எழுந்தன. “பிதாமகர்” என்றபடி கைகளைக் கூப்பிக்கொண்டு திருதராஷ்டிரர் எழுந்து நின்றார். பீஷ்மபிதாமகர் தசகர்ணரால் வரவேற்கப்பட்டு மங்கலத்தை ஏற்றுக்கொண்டு விதுரர் பின் தொடர நடந்து வந்தார். சஞ்சயன் “பிதாமகர் வருகிறார் அரசே. இச்சோலையின் கிளைகளில் முட்டும் தலையை உடைய முதல் மனிதர் அவரென்று கண்டு கிளைகளில் பறவைகள் எழுந்து ஒலியெழுப்புகின்றன. மெல்லிய காற்றில் அவர் அணிந்திருக்கும் எளிய மரவுரியாடையின் பிசிறுகள் அசைகின்றன. நீண்ட வெண்கூந்தலில் ஈரமுலராத சடைக்கற்றைகளும் கலந்துள்ளன. தாடியிலும் கயிறு எரிந்த சாம்பல்திரிகள் போல நரைகலந்த சடைகள் உள்ளன. தாடியின் நுனியை சேர்த்து முடிச்சிட்டு மார்பிலிட்டிருக்கிறார். அரசே, அவர் முனிவரல்ல அரசகுலத்தவரென்பதைக் காட்டுபவை ஒளிசிந்தும் மணிக்குண்டலங்கள் மட்டுமே” என்றான்.
திருதராஷ்டிரர் கைகூப்பியபடி நான்கடி வைத்து முன்னால் சென்று பீஷ்மரை எதிர்கொண்டார். பீஷ்மர் அவர் தலைமேல் கைவைத்து வாழ்த்துக்களை முணுமுணுத்தபின் வந்து அவருக்காக போடப்படிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டார். வலக்காலை இடக்கால்மேல் போட்டு அவர் அமர்ந்துகொண்டமுறை முன்பு எப்போதும் அவரில் காணாத ஒன்றாகையால் அங்கிருந்த அனைவரும் திரும்பி வியப்புடன் அவரை நோக்கினர். அவரது உடல் நன்றாக மெலிந்து கால்களின் தசைகள் வற்றியிருப்பதனால்தான் அவ்வாறு அமரத்தோன்றுகிறது என சௌனகர் எண்ணிக்கொண்டார். அது அவருடைய உடலை பெரிய இருக்கையின் ஒரு மூலையில் ஒதுங்கச்செய்து அவரை ஒரு முனிவர் என்று என்ணவைத்தது.
விதுரர் வந்து பீஷ்மரிடம் குனிந்து சிலசொற்கள் சொல்ல அவர் தாடியை நீவியபடி தலையை அசைத்தார். குருகுடீரத்தின் முன்னால் மங்கலவாத்தியம் முழங்கியது. சீடர்கள் வாழ்த்தொலி எழுப்ப மலர்மாலையணிந்து கைகூப்பியபடி கிருபர் நடந்துவந்தார். அவர் களத்தில் நுழைந்தபோது பீஷ்மருடன் அவையினர் அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி மஞ்சள் அரிசியும் மலரும் சொரிந்து வாழ்த்தினர். கிருபர் குனிந்து களமண்ணைத் தொட்டு வணங்கி உள்ளே நுழைந்தார். அவருக்காக களத்தின் வடகிழக்கு மூலையில் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அவர் சென்று அமர்வது வரை வாழ்த்தொலிகள் நீடித்தன.
தசகர்ணர் எழுந்து அரங்கை வணங்கினார். “அஸ்தினபுரியாளும் குருகுலத்து அரசரையும் மைந்தரையும் அழியாத களரிகுருநாதர்கள் வாழ்த்துக! படைக்கலங்களில் வாழும் போர்த்தெய்வங்கள் வாழ்த்துக! விண்ணுலகாளும் தேவர்களும் மண்ணுலகாளும் மூதாதையரும் கீழுலகாளும் பெருநாகங்களும் வாழ்த்துக! மும்மூர்த்திகளும் அவர்களை ஆளும் மூவன்னையரும் வாழ்த்துக! ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார். அனைவரும் ‘ஓம் ஓம் ஓம்’ என வாழ்த்தினர்.
“அவையோரே, இன்று சிராவண மாதம் முழுநிலவு. விண்ணேகிய பெருங்குருநாதர்கள் மண்ணை நோக்கி இளையோரை வாழ்த்தும் நாள் இது. இன்று குருகுலத்து இளையோரனைவருக்கும் கச்சையும் குண்டலமும் அணிவித்து படைக்கலம் தொட்டுக்கொடுக்கும் சடங்கு இங்கே நிகழவிருக்கிறது. இன்று படைக்கலம் தொடும் அத்தனை மைந்தர்களுக்கும் வெற்றியும் புகழும் மண்ணுலகும் விண்ணுலகும் அமைவதாகுக!” ‘ஓம் ஓம் ஓம்’ என கூட்டம் அதை ஏற்று ஒலித்தது.
முழவும் கொம்பும் சங்கும் மணியும் ஒலிக்க செம்பட்டு அணிந்த வைராகர் கொற்றவை ஆலயத்துக்குள் நுழைந்து பாளைவிளக்கில் மூன்றுமுறை நெய்விட்டு வணங்கினார். பச்சைப்பட்டணிந்த உபாசகர் திருமகளின் குடிலுக்குள் நுழைந்து விளக்கேற்றினார். வெண்பட்டணிந்த சூதர் கலைமகளின் குடில்நுழைந்தார். செங்களபக் குழம்பும் செந்தூரமும் அணிவித்து கொற்றவையை வைராகர் எழில் செய்ய மஞ்சள் பசையும் சந்தனமையும் கொண்டு உபாசகர் திருமகளையும் நறுநீறால் சூதர் கலைமகளையும் அணி செய்தனர். மலரும் நீரும் தூபமும் தீபமும் காட்டி மந்திரமும் மங்கல இசையும் ஒலிக்க பூசையிட்டனர்.
பூசை முடிந்து தூபத்தட்டுகளை ஏந்திய வைராகரும் உபாசகரும் சூதரும் வடகிழக்கு மூலையில் வித்யாபீடத்தில் அமர்ந்திருந்த கிருபரை அணுகி அவரிடம் தட்டுகளை நீட்டினர். அவர் தூபத்தைத் தொட்டு வணங்கியதும் அவற்றை அவருக்கு வலப்பக்கம் போடப்பட்டிருந்த நீளமான மரமேடையில் விரிக்கப்பட்ட செம்பட்டுமீது பரப்பப்பட்டிருந்த படைக்கலங்களின் அருகே கொண்டுசென்றனர். களபசெந்தூரத்தையும், மஞ்சளையும், நீறையும் தொட்டு அங்கிருந்த வாள்களின் பிடிகளிலும் கதைகளின் குமிழ்களிலும் விற்களின் கால்களிலும் வைத்தனர்.
கிருபர் கையசைத்ததும் பெருமுரசம் முழங்க கொம்புகள் ஆர்த்தன. இளவரசர்களை தசகர்ணர் வழிநடத்த களமேற்புச் சடங்குகள் ஒவ்வொன்றாகத் தொடங்கின. முதலில் மைந்தர்கள் அனைவரும் அவர்களின் ஐம்படைத்தாலிகளையும் பிற அணிகள் அனைத்தையும் கழற்றி சீடர்கள் கொண்டுவந்த தாலங்களில் வைத்தனர். மூவன்னையர் பாதங்களில் வைத்து பூசனைசெய்யப்பட்ட பொற்குண்டலங்கள் நிறைந்த தாலத்தை கிருபரின் காலடியில் கொண்டுசென்று வைத்தார் தசகர்ணர். கிருபர் அவற்றை எடுத்து தருமனுக்கும் துரியோதனனுக்கும் பீமனுக்கும் துச்சாதனனுக்கும் பிறருக்கும் முறைப்படி அளிக்க அவர்கள் சீடர்கள் உதவியுடன் அவற்றை காதுகளில் அணிந்துகொண்டனர்.
அதன்பின் கொற்றவைமுன் வைத்து பூசனைசெய்யப்பட்ட கச்சைகளை கிருபர் தொட்டளிக்க வாங்கி அவர்கள் களமுறைப்படி முறுகக் கட்டிக்கொண்டனர். கச்சைகளைச் சுற்றிக்கட்ட சேவகர்கள் உதவினர். கச்சையும் குண்டலமும் அணிந்து நின்றபோது அவர்களின் முகங்கள் குழந்தைமையை இழந்து விட்டதாகத் தோன்றியது. கிருபர் அவர்களை கைதூக்கி ஆசியளித்தார். அவர்கள் தங்கள் நெற்றிகளில் அணிந்திருந்த நீளமான செந்தூரத் திலகங்களை நீர்தொட்டு அழித்துவிட்டு கச்சையும் குண்டலமும் அணிந்தவர்களாக வரிசையாகச் சென்று கொற்றவையையும் திருமகளையும் கலைமகளையும் வணங்கி செந்தூரத்தால் பிறைவடிவ திலகமிட்டுக்கொண்டனர்.
தசகர்ணர் மைந்தரை அணுகி சடங்குகளைச் செய்யும் விதத்தை அவர்களுக்கு மெதுவாகச் சொன்னார். தருமன் மெல்லத் தலையசைத்தான். முரசின் ஒலி அவிந்ததும் முறைச்சங்கு மும்முறை ஒலித்து அடங்கியது. தருமன் தசகர்ணரால் வழிகாட்டப்பட்டு வந்து களத்தை அடைந்து மூவன்னையரையும் மும்முறை வணங்கி கிருபரின் முன்னால் வந்து நின்றான். அவனுடன் வந்த அரண்மனைச்சேவகன் கொடுத்த பொன்நாணயத்தை வாங்கி கிருபரின் பாதங்களின் அருகே வைக்கப்பட்டிருந்த மரத்தாலத்தில் பரப்பப்பட்டிருந்த அரிசிமலர்ப்பரப்பில் வைத்தான்.
தசகர்ணர் சொன்ன சொற்களை மெல்லிய குரலில் திருப்பிச் சொன்னான். “எனக்கும் என் மூதாதையருக்கும் எங்கள் குலதெய்வங்களுக்கும் அருள்புரியுங்கள் ஆசிரியரே. எங்கள் செல்வங்களையும் கண்ணீரையும் குருதியையும் காணிக்கையாகப் பெற்றுக்கொள்ளுங்கள். கல்வியை பிச்சையிடுங்கள். கல்வியை பிச்சையிடுங்கள். கல்வியைப் பிச்சையிடுங்கள்.” கிருபர் அவனை வாழ்த்தி கைகாட்டி “அவ்வாறே ஆகுக!” என்றதும் அவரது பாதங்களை வணங்கி படைக்கலமேடை முன்னால் சென்று நின்றான்.
கிருபர் “அவனுக்குரியது உபதனுஸ்” என்றதும் தசகர்ணர் உயரமற்ற வில்லை எடுத்து அவனிடம் நீட்டி அதன் மையத்தைப்பற்றிக்கொள்ளும்படி சொன்னார். அவன் அதைப்பிடிக்கையிலேயே அது மறுபக்கம் சரிந்தது. சீடர்கள் சிலர் சிரிப்பதை சௌனகர் கண்டார். தசகர்ணர் வில்நுனியைப்பற்றி அதை நிலைநிறுத்தி சிறிய அம்பு ஒன்றை எடுத்து தருமனிடம் நீட்டினார். அவன் அதை வாங்கி அவர் சொன்னதை கண்கள் சுருக்கிக் கேட்டு அதன்படி நாணில் பொருத்தினான். ஆனால் நாணிழுத்து சரமேற்ற அவனால் முடியவில்லை. கிருபர் “உன் படைக்கலம் உனது மூன்றாவது கரமும் இரண்டாவது மனமும் முதல்தெய்வமும் ஆகட்டும். நீளாயுள் கொண்டிரு” என்று வாழ்த்தினார்.
அதன்பின் துரியோதனன் வந்து நின்று “கல்வியைப் பிச்சையிடுங்கள் குருநாதரே” என இறைஞ்சியபோது கிருபர் புன்னகையுடன் “உனக்குரியது கதாயுதமே” என்றார். துரியோதனன் பணிந்து படைக்கலமேடையில் இருந்து தசகர்ணர் எடுத்துக்கொடுத்த கனத்த பெரிய கதாயுதத்தைத் தூக்கி இருகைகளாலும் மும்முறை சுழற்றி விட்டு வணங்கி தருமனின் அருகே சென்று நின்றான். பீமன் வந்தபோது கிருபர் “உன் பெரியதந்தையின் கதாயுதம் உனக்கானது” என்றார். திருதராஷ்டிரரின் கதாயுதத்தை முன்னரே பழகியிருந்த பீமன் அதை கையிலெடுத்தான். மும்முறை சுழற்றியபின் துரியோதனன் அருகே சென்று நின்றுகொண்டான். கதாயுதத்துடன் துச்சாதனன் சென்று தன் தமையனின் பின்னால் நின்றான்.
அர்ஜுனன் சிறிய கால்களை எடுத்துவைத்து வந்து அன்னையர் முன் நின்று கைகூப்பி வணங்கி கிருபரை நோக்கிச் சென்றபோது அங்கிருந்த அனைவர் உடலிலும் பரவிச்சென்ற மெல்லிய அசைவொன்றை சௌனகர் கண்டார். அவ்வசைவு தன் அகத்திலும் அக்கணம் நிகழ்ந்தது என்பதை உணர்ந்தார். கிருபரின் தலைக்குமேல் எழுந்து நின்றிருந்த அரசமரத்தின் தொங்கும் இலைகள் காற்றில் அதிர்ந்தன. அர்ஜுனன் அவர் முன் சென்று நின்று வணங்கியபோது கிருபர் வாழ்த்துச் சொல்லுடன் திரும்பிய கணத்தில் மரத்திலிருந்து அம்புபோல துடித்திறங்கிய சிறிய செந்நிறமான குருவி ஆயுதபீடத்திலிருந்த வில்மேல் சென்றமர்ந்து வெண்ணிறக் குறுவால் அதிர சிக்கிமுக்கிக் கல் உரசுவதுபோல ஒலியெழுப்பியது.
அங்கிருந்த மாணவர்களில் யாரோ ஒருவன் “ஜயவிஜயீபவ!” என்று உரக்கக் குரலெழுப்பினான். உடனே பிற அனைவரும் சேர்ந்து “ஜய விஜய! ஜய விஜய!’ என்று கைகளைத் தூக்கி கூவத்தொடங்கினர். கொற்றவை ஆலயத்துமுன்னால் நின்றிருந்த வைராகர் முன்னால் வந்து தன் தட்டிலிருந்த செவ்வரளி மலர்களை அள்ளி அவன் மேல் தூவ பிற பூசகரும் அவன் மேல் மலர்சொரிந்தனர். சஞ்சயன் சொல் வழியாக அதைக்கண்ட திருதராஷ்டிரர் கைகூப்பி கண்ணீர் வழிய எழுந்து நின்றுவிட்டார்.
கிருபர் “உன் ஆயுதம் வில் என்பதை தெய்வங்களே சொல்லிவிட்டன மைந்தா” என்றார். பார்த்தனை தசகர்ணர் கைப்பிடித்து கொண்டுசென்று ஆயுதபீடத்திலிருந்த சிறிய களிவில்லைக் காட்டி “இதை எடுத்துக்கொள்க இளவரசே” என்றார். அர்ஜுனன் குனிந்து கைநீட்டி அங்கிருந்த கனத்த பெரிய நிலைவில்லை கையிலெடுத்தான். “இல்லை, அவ்வில்…” என ஏதோ சொல்லி தசகர்ணர் கை நீட்டுவதற்குள் அவன் அதை எடுத்துவிட்டான். அதைத் தூக்க அவனால் முடியவில்லை. இருகைகளாலும் அதன் தண்டைப்பிடித்து அசைத்தான். தசகர்ணர் அவனுக்கு உதவ கைநீட்டியபோது வேண்டாம் என்று கிருபர் கை காட்டினார்.
அர்ஜுனனால் தூக்கமுடியாதபடி பெரிதாக இருந்தது வில். அதன் தண்டின் மையத்தைப்பற்றி மும்முறை தூக்க முயன்ற அவன் நின்று அதை ஒரு கணம் பார்த்தபின் தண்டின் நாண் கோர்க்கப்பட்ட கீழ் நிலைநுனியில் காலை வைத்து ஓங்கி மிதித்தான். துலாவின் கோல் என வில்லின் மறுநுனி மேலெழுந்து அவன் கைப்பிடியில் நின்றது.. அதன் கீழ் நிலைநுனியை காலால் மிதித்து தரையில் அழுத்தமாக நிலைநாட்டி அவன் திரும்பிக்கொண்டான். அவனைவிட ஐந்து மடங்கு உயரத்துடன் கனத்த இரும்புவில் அவன் பிடியில் உயர்ந்து நின்று கடிவாளமில்லா குட்டிக்குதிரை போல எம்பித் துடித்தது. அவன் அதன் நிலைநுனியிலிருந்து காலை எடுக்காமலேயே தண்டின் பிடியை மேலும் மேலும் ஏற்றி தன் தலைக்குமேல் அமைத்தபோது மெல்ல வில் அமைதிகொண்டது.
அவனைச்சுற்றி “ஜய! ஜய விஜய!” என்று பெருகிக்கொண்டிருந்த வாழ்த்தொலிகளை அவன் சற்றும் கேட்கவில்லை என்றும் அவனுலகில் அவனும் அவ்வில்லும் மட்டும் இருப்பதாகவும் தோன்றியது. “போதும்” என சொன்ன தசகர்ணரின் சொற்களையும் அவன் கேட்கவில்லை. அவன் தலைக்குமேல் வளைந்து தொங்கிய நாணை இடக்கையால் பற்றிக்கொண்டு அந்தத் தண்டை வலக்காலால் மிதித்து தன் உடலின் எடையை அதன்மேலேற்றி சற்று வளைத்து அதன் ஏழு வளையங்களில் முதலில் இருந்ததில் நாணின் கொக்கியை மாட்டிவிட்டான்.
சௌனகர் தன் வியப்பு திகைப்பாக மாறுவதை உணர்ந்தார். மைந்தன் ஆயுதசாலையிலேயே விளையாடுபவன் என்பதனால் வில்லை அவன் முன்னரே எடுத்துப்பார்த்திருக்கக் கூடுமென்று அவர் எண்ணியிருந்தார். ஆனால் பயிற்சியற்ற கைகளால் ஒரு சிறுவன் பெரும்நிலைவில்லை நாணேற்றிவிடமுடியுமென எண்ணியிருக்கவில்லை. சூதர்களின் ஒரு பெரும் புராணக்கதைக்குள் தானுமிருப்பதை அவர் உணர்ந்தார். அவ்வெண்ணம் அவருக்கு ஏமாற்றத்தையே அளித்தது. புராணங்கள் நிகழக்கூடுவன என்றால் நிகழும் உலகிலிருந்து விடுதலைபெற்று வாழும் மாற்றுலகமென ஏதுமில்லை என்றா பொருள்?
தசகர்ணர் அளித்த அம்பை தண்டில் பொருத்தி நாணிழுத்து ஏற்றிய பார்த்தன் அவர் சுட்டிக்காட்டிய நாகமரத்தடி இலக்கை கூர்ந்து நோக்கினான். சிலை என அசைவிழந்து அவன் நின்றபோது அந்த வில் அவனாக மாறியதுபோலத் தோன்றியது. நாண் விம்மும் ஒலி கேட்ட கணம் அம்பு நாகமரத்தின் அடியைத் தைத்து நின்றாடியது. மாணவர்களும் சேவகர்களும் எம்பிக்குதித்து கைவீசி பெருங்கூச்சலெழுப்பினர். தருமன் புன்னகையுடன் நோக்கி நிற்க பீமன் கைகளைத் தூக்கி ஆர்ப்பரித்தான். சிரித்தபடி கைவிரித்து அதைப்பார்த்து நின்றான் துரியோதனன். வில்லின் மேல் நுனியை ஆயுதபீடத்தின்மேல் சரித்து வைத்த பார்த்தன் கீழ்நுனியை இடக்கையால் தூக்கி கிடைமட்டமாக்கிய அதேவிசையால் அதை மீண்டும் பீடத்திலேற்றிவிட்டான்.
கிருபர் “வாழ்க!” என்றார். அதற்குமேல் அவரால் ஏதும் சொல்லமுடியவில்லை. தன்னுள் மின்னிய எண்ணத்தால் திடுக்கிட்டுத் திரும்பி பீஷ்மரை நோக்கிய சௌனகர் அவரிடம் எந்த எழுச்சியும் தென்படவில்லை என்பதைக் கண்டார். பழுத்த முதியவிழிகளால் அங்கு நிகழவனவற்றை ஈடுபாடில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது கைகள் தாடியை நீவிய விதத்தில் இருந்து அவர் உள்ளம் அங்கில்லை என்றும் அவ்வப்போது வேறெங்கோ சென்று ஒலிகளைக் கேட்டு மீண்டு வருகிறதென்றும் அவர் உணர்ந்தார். திருதராஷ்டிரர் கைகளைக்கூப்பியபடி மார்பில் கண்ணீர்த்துளிகள் சொட்ட அழுதுகொண்டிருந்தார்.
அர்ஜுனன் தமையர் நிரையை நோக்கிச்சென்றான். அவன் அருகே வந்ததும் துரியோதனன் பாய்ந்து சென்று அவனை அப்படியே அள்ளி எடுத்து தூக்கிச் சுழற்றி தன் தோள்மேல் வைத்துக்கொண்டான். அவன் சிரித்துக்கொண்டு கீழிறங்க முயல துரியோதனன் அவனைச் சுமந்தபடி கொற்றவை ஆலயத்திற்குச் சென்று வைராகரிடம் அவனைச் சுழற்றி இறக்கி அவனுக்கு கண்ணேறு கழித்து செந்தூரமிடும்படிச் சொன்னான். அவர் கொற்றறவையின் பாதம்சூடிய மலர்களில் மூன்றை எடுத்து அவன் மேல் அடித்து நீர்தெளித்து செந்தூரப் பொட்டிட்டார். துரியோதனன் அவனை மீண்டும் மார்புடன் அணைத்து மேலே தூக்கினான்.
திருதராஷ்டிரர் சஞ்சயனிடம் “நான் செய்யவேண்டியதை அவன் செய்கிறான்… என் மகன். அவன் மார்பு அணியும் புளகமெல்லாம் என் உடலில் பரவுகிறது” என்றார். ‘சஞ்சயா, மூடா, இன்றிரவு என் கருமுத்தை என் கூடத்துக்குக் கொண்டுவா. அவன் அன்னையர் எவரும் அவனை இன்று தொடக்கூடாது. இன்றிரவெல்லாம் அவனை நான் மட்டுமே தழுவுவேன். வேறு யார் தொட்டாலும் அவர்கள் தலையை அறைந்து உடைத்துவிடுவேன். இது என் ஆணை” என்றார்.
நகுலனும் சகதேவனும் வாள்பெற்றுச்செல்ல இளங்கௌரவர்கள் நிரைநிரையாக வந்து படைக்கலம் பெற்றுச் சென்று அணிவகுத்து நின்றனர். இறுதி கௌரவனும் படைக்கலம் பெற்றதும் மீண்டும் பெருமுரசம் முழங்கத் தொடங்கியது. கொம்புகளும் மணிகளும் சேர்ந்துகொண்டன. அவை அமைந்ததும் கிருபரின் மாணவர் களச்சங்கத்தை மும்முறை ஊதினார்.
ஓவியம்: ஷண்முகவேல்
கிருபர் வித்யாபீடத்தில் இருந்து எழுந்து கைதூக்க்க ஓசைகள் அடங்கின. “குருகுலத்து இளமைந்தர்களே! இன்று முதல் நீங்கள் நால்வருணத்துள் நுழைகிறீர்கள். இனி ஷத்ரியனுக்கு நூல்நெறிகள் விதித்த கடமைகளும் உரிமைகளும் உங்களுக்குரியவை. ஷத்ரியனை ஏழு தெய்வங்கள் விழிப்பிலும் துயிலிலும் சூழ்ந்துள்ளன. படைக்கலத் தேர்ச்சியின் தெய்வமான சுஹஸ்தை, வீரத்தின் தெய்வமான ஸௌர்யை, கட்டுப்பாட்டின் தெய்வமான வினயை, ஒழுங்கின் தெய்வமான நியுக்தை ஆகிய நால்வரும் அவனுக்கு முன்னால் சென்று அவனை இட்டுச்செல்கிறார்கள். நெறியின் தெய்வமான சுநீதி, கருணையின் தெய்வமான தயை, மன்னிப்பின் தெய்வமான க்ஷமை ஆகியோர் அவனுக்குப் பின்னால் வந்து அவனை கண்காணிக்கிறார்கள். அந்த ஏழு தெய்வங்களும் உங்களால் நிறைவுசெய்யப்படுவார்களாக. அவர்கள் உங்களால் மகிழ்ந்து உங்களை காத்தருள்வார்களாக!”
அரங்கிலிருந்த அனைவரும் ‘ஓம்! ஓம்!ஓம்!’ எனக் கூவி அவர்களை வாழ்த்தினர். கிருபர் தசகர்ணரிடம் கைகாட்டியதும் அவர் சிரித்துக்கொண்டு பீமனை நெருங்கி அவனிடம் கதையை எடுக்கும்படி சொன்னார். திரும்பி துச்சாதனனிடம் கைகாட்ட அவனும் தன் கதையை எடுத்துக்கொண்டான். இருவரும் களநடுவே வந்து நின்றனர். தசகர்ணர் ஆணையிட்டதும் இருவரும் கதாயுதங்களுடன் விழி சூழ்ந்து நின்றபின் மெல்ல சுற்றிவரத்தொடங்கினர். இருவர் கண்களும் பின்னியிருந்தன. இரு கதைகளும் ஒன்றை ஒன்று நோக்கி எம்பின.
பின் இரு கதைகளும் வெடிப்பொலியுடன் மோதிக்கொண்டன. கதாயுதங்கள் முட்டும் உலோக ஒலியும் மூச்சொலியும் கால்கள் மண்ணை மிதிக்கும் ஒலியும் மட்டும் கேட்டன. துச்சாதனனின் கதை ஒருமுறை பீமனின் தோளில் பட அவன் பின்னால் சரிந்து சற்று விலகி ஓடி காலை ஊன்றி நிலையை மீட்டெடுத்தான். துச்சாதனன் நகைத்தபடி மீண்டும் மீண்டும் தாக்க பீமன் திருப்பி அடித்த மூன்றாவது அடியில் துச்சாதனன் கையிலிருந்த கதை சிதறி மண்ணில் விழுந்தது. தசகர்ணர் கைதூக்க இருவரும் தலை தாழ்த்தி அவரை வணங்கியபின் கிருபரை வணங்கி பின்னகர்ந்தனர்.
“துச்சாதனா, நீ உன் கைவிரைவையே நம்புகிறாய். ஆகவே என்றும் உன் போர்முறை அதுவே. எனவே உன் உளவிரைவு கைவிரைவுக்கு எதிர்திசையில் செல்லவேண்டும். அதுவே நீ பெறவேண்டிய பயிற்சி. எப்போது உன் அகம் முழுமையாக அசைவற்று நீ போர்செய்கிறாயோ அன்றே உன் கரம் முழுவல்லமையைப் பெறும்” என்றார் கிருபர். துச்சாதனன் வணங்கினான்.
“பீமா, உன் உள்ளம் அலையற்றிருக்கிறது. போரின் இன்பத்தை அறிந்து மகிழ்வுறுகிறது. ஆனால் உனக்கு பின்வாங்கத்தெரியவில்லை. பின்வாங்கக் கற்றுக்கொள்ளாதவன் முழுவெற்றியை அடையமுடியாது. முன்கால் வைக்கும் அதே முழுமையுடன் பின்கால் வைக்க நீ கற்றாகவேண்டும்” என்றார் கிருபர். பீமன் புன்னகையுடன் தலைதாழ்த்தினான்.
தசகர்ணர் துரியோதனனிடம் ஆணையிட அவன் தன் கதாயுதத்துடன் களம்புகுந்தான். கிருபர் பீமனிடம் அவனுடன் போரிடும்படி கைகாட்டினார். புன்னகையுடன் ஏதோ சொன்னபடி பீமன் களத்தில் வந்து நிற்க துரியோதனன் அவன் சொன்னதற்கு புன்னகையுடன் ஏதோ பதில் சொன்னான். கிருபர் கைகாட்ட இருவரும் இடக்கை நீட்டி வலக்கையில் கதையை சுழற்றி மெல்லச் சுற்றிவந்தனர். துரியோதனன் தன் இடத்தொடையை ஓங்கியறைந்து வெடிப்பொலி எழுப்பி பாய்ந்து அடிக்க பீமனின் கதை அதை காற்றிலேயே எதிர்கொண்டது.
வானில் பறந்து மத்தகம் முட்டிப்போரிடும் இரு யானைக்குட்டிகளைப்போல கதைகள் சுழன்று வந்து அறைந்து தெறித்தன. தெறித்தவேகத்தையே விசையாக்கி மீண்டும் வந்து மோதின. ஆறாப்பகைகொண்டவை போலவும் தீராக்காதல் கொண்டவைபோலவும் அவை ஒரேசமயம் தோன்றின. ஒருகணத்தில் நான்கு கனத்த நாகங்கள் சீறி நெளிந்து காற்றில் பறந்து அக்கதைகளை கவ்விச்சுழற்றிச் சண்டையிடுவதை சௌனகர் கண்டார். திகைப்புடன் திரும்பி அங்கிருப்பவர்களை நோக்கினார். அனைத்துவிழிகளுக்குள்ளும் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது.
எதற்காகப் போரிடுகிறார்கள் என்று அவர் வியந்துகொண்டார். இந்த தசைத்திமிரை குருதிவிரைவைக் காண்பதில் உள்ள இன்பம்தான் என்ன? அவர்கள் சுவைப்பது இறப்பையா என்ன? கொடுநாக விஷம் ஒன்றை ஊசிநுனியால் தொட்டு ஒரு துளி எடுத்து நீரில் கலக்கி அருந்தினால் ஆயிரம் மடங்கு மதுவின் போதையுண்டு என்று அவர் ஒரு நூலில் கற்றிருக்கிறார். இறப்பெனும் விஷத்தை அருந்தும் போதை. அல்ல. அது இருப்பின் பேரின்பம். இருப்பை அறிய இறப்பைக் கொண்டுவந்து அருகே நிறுத்தவேண்டியிருக்கிறது.
அத்தனைபேரின் தொண்டைகளில் இருந்தும் ஒரேசமயம் எழுந்த ஒலியைக் கேட்டு அவர் போரைப் பார்த்தார். பீமனின் கதைபட்டு துரியோதனனின் வலக்கை விரல் நசுங்கியதென்றும் ஆனால் அதேகணத்தில் கதை நழுவாமல் அவன் அதை இடக்கைக்கு மாற்றிக்கொண்டுவிட்டான் என்றும் அறிந்துகொண்டார். வலக்கையை துரியோதனன் சுழற்றியபோது ஒருதுளி குருதி சிறுசெம்மணி என தெறிப்பதை அவர் கண்டார். துரியோதனன் சிரித்து பீமனைப் பாராட்டியபடி திருப்பி அடித்தான். பின்வாங்கிச்சென்ற பீமன் தடுமாறி கீழே விழப்போய் கதையை ஊன்றி சுழன்று எழுந்தான். கதையை ஊன்றுதல் போரில் பெரும்பிழை என சௌனகர் அறிந்திருந்தார். துரியோதனன் சிரித்துக்கொண்டே அதைச் சொல்லி தன் கதையை வீச பீமன் அதை தடுத்தான்.
முன்னிலும் விரைவுடன் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. சலிப்புடன் திரும்பியபோது சௌனகர் விதுரரின் விழிகளைப் பார்த்தார். அதிலிருந்த பதைப்பைக் கண்டு வியந்து திரும்பியபின் மீண்டும் நோக்கினார். ஏன் அது என எண்ணிக்கொண்டு போரைப்பார்த்தபோது ஒருகணத்தில் அது புரிந்தது. அவை பீமனிடம் மன்றாடிக்கொண்டிருந்தன. விட்டுவிடும்படி, சற்றேனும் தணிந்துவிடும்படி. உண்மையிலேயா என்று திகைத்து மீண்டும் விதுரரின் விழிகளை நோக்கினார் சௌனகர். அதை உறுதிசெய்தபின் போரை நோக்கினார்.
சிரித்த முகமும் கூர்ந்த விழிகளுமாக கதைசுழற்றிய துரியோதனனுக்குள் ஓடுவதை அவரால் பார்க்கமுடியுமென்று தோன்றியது. அங்கே நிகழவேண்டியது அது ஒன்றே என்று அவரறிந்தார். நிகர்நிலையில் சென்றுகொண்டிருந்தது போர். கணம் தோறும் இருவர் விரைவும் கூடிவந்தது. ஒருகணம் பீமன் பின்னடைந்தான் என்றால், ஒரு அடியை மட்டும் பெற்றுக்கொண்டான் என்றால்… ஆனால் அந்த மன்றாட்டை நிகழ்த்தவேண்டியது எவரிடம்? களமிறங்கும் மல்லனின் உடலில் கூடும் ஏழுதெய்வங்களிடமா? அத்தெய்வங்களை மண்ணிலிறக்கி ஆடும் முழுமுதல் தெய்வத்திடமா?
சொற்கள் பெருகிவழிந்து வெறுமைகொண்ட உள்ளத்துடன் நின்றுகொண்டிருந்தபோது சௌனகர் உணர்ந்தார், களத்தில் இறங்கிய வீரனிடம் எதற்காகவும் அரசியல் மதிசூழ்கையை எதிர்பார்க்கமுடியாதென்று. களத்தில் அவன் தான் ஏந்தியிருக்கும் படைக்கலத்தின் மறுநுனி மட்டுமே. அங்கே போரிடுவது அப்படைக்கலம்தான். அதன் வடிவமாக அதில் உறையும் வரலாறு. அதில் வாழும் தொல்தெய்வம். அது மானுட மொழியை அறியாது. அது அறிந்த மானுடமென்பது குருதி மட்டுமே. மானுடக் கைகளின் வழியாக அது காலத்தில் ஏறிச்சென்றுகொண்டிருக்கிறது.
கிருபர் கை தூக்கியதும் இருவரும் கதைகளை மண்ணுக்குத்தாழ்த்தி மூச்சிரைக்க, வியர்வை சொட்ட தோள் தொய்ந்து நின்றனர். சதகர்ணர் இருவரையும் தோள்களை தொட்டு தழுவிக்கொள்ளும்படிச் சொன்னார். துரியோதனன் இருகைகளையும் விரித்து பீமனைத் தழுவிக்கொண்டான். இருவரும் கனத்த தோள்களைப் பிணைத்துக்கொண்டு தம்பியர் நிரை நோக்கிச் சென்றனர். சேவகர் இருவர் வந்து துரியோதனனின் விரலைப் பற்றி அந்தப் புண்ணைப்பார்த்தனர். பீமனை நோக்கி ஏதோ சொல்லி துரியோதனன் நகைக்க பீமன் பதில் சொல்லி துரியோதனனின் தோளில் தட்டினான். சேவகர் மென்பஞ்சால் புண்ணைத் துடைத்து ஆதுரம் செய்யத் தொடங்கினர்.
விழாமங்கலம் முடிந்தது என அறிவிக்கும் சங்கு மும்முறை முழங்கியது. பீஷ்மர் கனவிலிருந்து எழுந்தவர் போல மீண்டு தன் இருக்கையை விட்டு எழுந்த கணம் துரியோதனனின் விழிகள் வந்து அவரைத் தொட்டு மீள்வதை சௌனகர் கண்டார். அத்தனைநேரம் அவன் அகவிழிகள் நோக்கிக்கொண்டிருந்தது அவரைத்தானா என்று எண்ணிக்கொண்டார். பீஷ்மர் கிருபரை வணங்கி மைந்தரை வாழ்த்திவிட்டு வெளியே சென்றார். திருதராஷ்டிரர் சஞ்சயன் கைபற்றி மைந்தர் நிரையை அணுகி பீமனையும் துரியோதனனையும் இரு பெரிய கைகளாலும் ஒரே சமயம் வளைத்து மார்புடன் தழுவிக்கொண்டார். பார்த்தனைத் தூக்கி தன் தோள்கள் மேல் வைத்துக்கொண்டு கைகளை விரித்து சிரித்தார்.
ஒவ்வொருவரும் மகிழ்ந்த முகத்துடன் சிரித்த சொற்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அந்தக்களமுற்றத்தில் விழுந்த ஒற்றைத்துளிக் குருதியை தேடமுடியுமா என்றுதான் சௌனகர் எண்ணினார். அது உலரவேயில்லை, காலகாலமாக அங்கே ஈரமும் மணமுமாக அப்படியே கிடந்தது என்றுதான் சூதர்கள் கதைபுனைவார்கள் என்று எண்ணிக்கொண்டார்.