வண்ணக்கடல் - 12

பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி

[ 2 ]

காஞ்சி நகர்ப்புறத்தின் கூத்தர் குடில்களுக்கு முன்னால் தரையில் விரிக்கப்பட்ட புல்பாயில் மல்லாந்து கிடந்து வானிலூர்ந்த நிலவை நோக்கிக்கொண்டிருந்த இளநாகனின் அருகே மென்மண்ணில் உடல்பதித்து படுத்து கூத்தன் கௌசிக குலத்துக் காரகன் சொன்னான் “கடலில் மீன்கள் போன்றவை இவ்வுலகத்து உண்மைகள் இளம்பாணரே. முடிவற்றவை என்பதனாலேயே அறிதலுக்கப்பாற்பட்டவை. தர்க்கமென்பது நாம் வீசும் வலை. அதில் சிக்கி நம் கைக்கு வரும் மீன்களை நாம் வகைப்படுத்தி அறியமுடியும். உண்டுமகிழமுடியும். அறிந்துவிட்டோமென்னும் அகநிறைவு வேண்டுமென்றால் அந்த வலைமீன்களே கடலென்று எண்ணிக்கொள்ளலுமாகும்.”

“வேதாந்திகள் கையில் கிடைத்த கிளிஞ்சலும் கடலும் ஒன்றெனக்கூவுகிறார்கள். அக்கிளிஞ்சலை கோயில்சிலையாக்கி மீன்களைப் படைத்து மேலும் மீன்கள் தரவேண்டுமென வேண்டுகிறார்கள் வைதிகர்கள். மீன்களை அறியவேண்டியதில்லை, மீன்சுவையை அறிக என்கின்றனர் சார்வாகர்கள். கரையில் நின்று முப்பருவக் கடற்கோலம் கண்டு எல்லையின்மையை அறியமுயல்கிறார்கள் சாங்கியர்கள். என் நல்லாசிரியர் எனக்குச் சொன்னது ஒன்றே. நான் முற்றறியக்கூடியது ஒன்றே. என் கையை. என் கையை விரித்து நான் செய்த வலையை. அவ்வலை எனக்களிக்கும் மீன் மட்டுமே நான் அறியக்கூடும் உண்மை.”

“தர்க்கம் அன்றி இவ்வுலகில் மாறாதது ஏதுமில்லை” என்றான் கௌசிக காரகன். “இங்கு நாம் காணும் வானும் நீரும் நிலமும் மாறிக்கொண்டிருக்கின்றன. மலைகள் கூட மாறுகின்றன. அவற்றை அறியும் மானுட அகமோ காலம்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அறிதலை நிகழ்த்தும் தர்க்கம் அன்றுமின்றும் ஒன்றே. உனக்கும் எனக்கும் அது உரு மாறுவதில்லை. ஒன்று இன்னொன்றுடன் இணைந்தால் இரண்டே. கோடைமுடிந்தால் மழையே. சவுக்கடி பட்டால் வலியே.” உரக்க நகைத்து “வேதாந்தியும் வைதிகனும் சாங்கியனும் சார்வாகனும் மறுக்கமுடியாத தர்க்கம் ஒன்றுண்டு. பசியைத் தணிப்பது உணவே” என்றான்.

“தார்க்கிக மதத்தைக் கற்ற பாணர்கள் சிலரை நானுமறிவேன்” என்றான் இளநாகன். கௌசிக காரகன் “இருமுனை கொண்ட வாள்போன்றது தர்க்கம். அனைத்தையும் தொட்டு தர்க்கமாக ஆக்கவேண்டும் அது. பின்னர் தன்னை அழித்து வெறுமை கொள்ளவேண்டும். தர்க்கம் நமக்களிக்கும் இவ்வுலகம் தர்க்கம் உருவாக்கும் மாயை மட்டுமே என்றறிபவன் தர்க்கத்தில் இருந்தும் விடுதலைபெறுகிறான். காதல் மாயை என்றறிந்தவனே காதலில் திளைக்கமுடியும் இளம்பாணரே. மாயையை அறிந்தவன் மாயையை அடிநுனி சுவைப்பவனாகிறான்” என்றான்.

நிலவின் கீற்று மேகத்தில் மறைந்தபோது கண்கள் இருண்டன. அருகே இருந்த கௌசிக காரகனின் முகமிருண்டு கண்களின் மின்வெளிச்சம் மட்டும் தெரிந்தது. “தர்க்கபூர்வமாக வகுக்கமுடியாதது ஒன்றுண்டு. அதை மானுட ஆணவம் என்றுரைத்தனர் மூதாதையர். அது கணந்தோறும் உருமாறும். தன் விதிகளை தானே உருவாக்கும். சென்றபின் வழி வகுக்கும். நிகழ்ந்தபின் நெறியமைக்கும். ஒருபோதும் நிறையாது. எவ்விளக்கத்தையும் ஏற்காது.”

“அஸ்தினபுரியின் மண்மறைந்த பேரமைச்சர் யக்ஞசர்மரின் மைந்தரும் அரண்மனை அலுவல் அமைச்சருமான சௌனகருக்கு எந்தையே தர்க்கமதத்தைக் கற்றுத்தந்தார். நானும் அவரும் ஒருசாலை மாணாக்கரென்பேன். பாண்டுவின் மைந்தர் நகர்புகுந்த பின் ஒருநாள் அஸ்தினபுரி நகரில் எட்டு இடங்களில் ஆடல் முடிந்து அரண்மனைக்குச் சென்று சௌனகரைப் பார்த்தேன். என் பெயரை சேவகன் சொன்னதும் அமைச்சறையில் இருந்து இருகைகளையும் விரித்தபடி வெளியே ஓடிவந்து இடைநாழியைக் காத்து நின்ற சேவகர் திகைத்து நோக்க என்னை ஆரத்தழுவி மார்போடணைத்துக்கொண்டார்” கௌசிக காரகன் சொன்னான்.

“காரகரே, என்ன இது? உடலெங்கும் மண்? குடுமியில் சருகு? எங்கிருந்து வருகிறீர்?” என்றார் சௌனகர். நான் “மண்ணிலிருந்து” என்றேன். “எந்தை என்னை மண்ணிலிறக்கி விட்டார். மண்ணிலேயே வாழ்க மைந்தா என்றார். உங்கள் தந்தையோ சொல்லில் இறக்கி விட்டிருக்கிறார். மண் நிலையானது. சொல்லோ ஒவ்வொரு மறுசொல்லாலும் மாற்றப்படுவது” என்றேன். சிரித்தபடி “அப்படியே இருக்கிறீர் காரகரே. கௌசிக குலத்துக் கூத்தருக்கு நுனிநாக்கில் நஞ்சு என்று சொல்வார் என் தந்தை” என நகைத்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார்.

ஆசனம் அளித்து அமரச்சொன்னார் அமைச்சர். “இல்லை. வாழ்நாள் முழுக்க எந்த இருக்கையிலும் இருப்பதில்லை, எவ்வூரிலும் நிலைப்பதில்லை என்பது கூத்த நெறி” என்று நிலத்தில் அமர்ந்துகொண்டேன். “ஆம், அதை நானும் அறிவேன்” என்றார் சௌனகர். “கூத்தரே, என் தந்தை வேதநூல்களை எனக்குப் பயிற்றுவித்தார். வேதாந்தமும் தரிசனங்களும் சொல்லிவைத்தார். மொழிநூலும் நெறிநூலும் கற்பித்தார். ஆனால் இறுதியில் உங்கள் தந்தையிடம் நான் கற்ற தர்க்கநூல் மட்டுமே இன்று என்னை இங்கே வாழச்செய்கிறது.”

நான் புன்னகை செய்து “தர்க்கம் நல்ல வேலி. அதைக் கடந்து வரும் மிருகங்களை மட்டும் நாம் வேட்டையாடினால் போதும்” என்றேன். ஒருகணம் சிந்தித்தபின் சௌனகர் உரக்க நகைத்தார். “என்ன நிகழ்கிறது அஸ்தினபுரியில்?” என்றேன். “இன்று அஸ்தினபுரி மூவர் ஆடும் சதுரங்கக் களம் போன்றிருக்கிறது கூத்தரே. காந்தாரத்து இளவரசர் சகுனி ஒருதிசையில் காய்களை நகர்த்துகிறார். யாதவநாட்டு அரசி மறுமுனையில் களமாடுகிறாள். இருவர் காய்களையும் நோக்கி சமன் செய்து ஆடிக்கொண்டிருக்கிறார் விதுரர்.”

“இதில் நீங்கள் எங்கே ஆடுகிறீர்கள்?” என்றேன். “நான் ஆடவில்லை. ஆடும் கலையை அவர்களிடமிருந்து கற்கிறேன்” என்றார் சௌனகர். “கௌரவர்கள் அவர்களின் மாமனிடம்தான் படைக்கலப்பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள். பாண்டவர்கள் நகர்புகுந்ததும் விதுரர் அவர்களும் சகுனியிடமே படைக்கலம் பயிலட்டும் என்று ஆணையிட்டார். காந்தாரத்து இளவரசருக்கும் பாண்டவர்களுக்கும் நட்பு உருவாகவேண்டுமென்றும் உடன்பிறந்தார் ஓரிடத்தில் கற்று ஒருகுழுவாக இருக்கவேண்டுமென்றும் அவர் விழைகிறார் என்றறிந்தேன்.”

“ஆனால் குந்தி தேவி அஸ்தினபுரியின் தெற்குச்சோலையில் குருகுலம் அமைத்து பேராசான் கிருபரை அங்கே தங்கவைத்து பாண்டவர்களை அங்கே கல்விக்கு அனுப்பச்செய்தார். பீமனைப் பிரியாத துரியோதனனும் அங்கேயே கல்விக்குச் சென்றார். அண்ணனைப்பிரியாத தம்பியரும் அங்கேயே சென்றார்கள்” என்ற சௌனகர் நகைத்தபடி “சௌபாலராகிய சகுனியை அறிவது எளிதல்ல கூத்தரே. மறுநாளே அவரும் சென்று கிருபரிடமே மாணவராகச் சேர்ந்துகொண்டார்” என்றார். நான் நகைத்து “ஆம், நண்டுக்கால் நகரும் திசையை அதனாலேயே சொல்லிவிடமுடியாதென்பார்கள்” என்றேன்.

“தார்க்கிகன் மனம் திகைக்கும் ஒரு தருணம் உண்டு கூத்தரே” என்றார் சௌனகர். “ஒவ்வொன்றும் பிசிறின்றி பிறிதுடன் இணைந்து ஒன்றாகி முழுமைகொள்வதைக் காணும்போது அவன் அஞ்சுகிறான். ஏனென்றால் முழுமை இப்புடவியின் இயல்பல்ல. அது முழுமைக்கு சற்று முன்னரே தன்னை குலைத்துக்கொள்ளும். அது நிகழும் புள்ளியைத் தேடி அவன் அகம் பதைக்கிறது. அவனை தர்க்கத்தின் கருவிகள் துழாவுகின்றன. ஆனால் ஒவ்வொருமுறையும் அவன் தோற்கடிக்கப்படுகிறான். முழுமையாக. மீதமின்றி. அப்போது அவன் தர்க்கத்தின் எல்லையை அறிகிறான். நம்பிய தெய்வத்தால் கைவிடப்பட்டவனின் வெறுமையை சென்றுசேர்கிறான்.”

“கைவிடும் தெய்வங்கள் கைவிடப்படுவதும் குரூரமானது” என்று நகைத்தேன். “கூத்தரே, இங்கு ஒவ்வொன்றும் சிறப்பாக நிகழ்ந்துகொண்டிருந்தது. அண்ணனின் அகமன்றி தனக்கென அகமில்லாத கௌரவர்களுக்கு பீமனே துரியோதனனாக இருந்தான். கௌரவர்களும் பாண்டவர்களும் ஒருவயிற்றோர் போல உடலும் உள்ளமும் இணைந்து இவ்வரண்மனை முற்றத்தில் கூவிச்சிரித்து ஓடிப்பிடித்து விழுந்தும் எழுந்தும் ஏறியும் குதித்தும் விளையாடினர். அவர்களின் கூச்சலை அரண்மனை உப்பரிகையில் அமர்ந்து வெண்பற்கள் ஒளிவிட தலையாட்டியபடி கேட்டு மகிழ்ந்திருந்தார் திருதராஷ்டிர மாமன்னர்” என்றார் சௌனகர்.

பெருந்தடியிலேயே பூத்துக் காய்த்து கனி நிறையும் அத்திமரம் போலிருந்தார் அவர் என்று எண்ணிக்கொண்டேன். அமைச்சுமாளிகை முற்றத்தில் நின்று அவரைப் பார்த்தபோது என் நெஞ்சு ஏனோ துயர்கொண்டு கனத்தது. இம்மனிதரின் வாழ்வில் அவர் அடையும் இறுதிப்பேரின்பம் இதுதானா என்று எண்ணிக்கொண்டேன். இக்கணத்தில் இவர் தொடும் உச்சத்தை இனித் தொடப்போவதில்லை என்றறிவாரா? மாயையான வாழ்க்கையை மறைக்கும் பெருவிளையாட்டே உனக்கு வணக்கம் என்று கூறிக்கொண்டேன்.

மறுகணம் ஏன் இந்தக் கசப்பு என்று என்னையே கடிந்துகொண்டேன். தெருவிலாடும் கூத்தரிடம் நான் கற்ற தர்க்கமல்லவா என்னை தரையில் வீழ்த்துகிறது. மானுட மகத்துவங்கள் எதையும் நம்பாதவனாக என்னை ஆக்குகிறது. இன்பங்கள் கண்முன் வருகையில் அவை கனிந்த மரத்தின் வேர்களை நோக்கி சிந்தையைத் திருப்புகிறது. என்னையே கடிந்துகொண்டேன். மீண்டும் மீண்டும் எழுந்தாடிய அந்த அரவுப்பத்திமேல் அடித்தடித்து அமரச்செய்தேன். இது குருகுலத்தின் முழுமலர்வின் தருணமாக ஏனிருக்கலாகாது? நூற்றைந்து மைந்தர் பொலிந்த இவ்வரண்மனைப் பெருமுற்றத்திலிருந்து பாரதவர்ஷத்தை ஆளும் மாமன்னன் ஏன் இருநூற்றுப்பத்து தடக்கைகளுடன் எழுந்து வரலாகாது? என் மூதாதையருக்கெல்லாம் உணவிட்டுப்புரந்த இவ்வரசகுலத்தின் முழுமையைக் காணும் கண்களைப் பெற்ற நல்லூழ் என்னைத்தேடிவந்திருக்கலாகாதா என்ன?

ஆனால் கூத்தரே, நீர் அறிவீர். தர்க்கமென்பது கனல்துளி. அதன்மேல் அள்ளிப்போடப்படுவதனைத்தையும் உணவாக்கி எரித்து எழுந்து நின்றாடிக்கொண்டே இருக்கும். தர்க்கம் கற்றவன் தன்னுள் அறிந்துகொண்டே இருக்கும் அந்த இளநகையை ஒருபோதும் வெல்லமுடியாது. அக்கணத்தில் உங்கள் தந்தை எனக்களித்த தார்க்கிகமதத்தை வெறுத்தேன். அதைக் கற்றமைக்காக என் தலையில் நானே அறைந்துகொண்டேன். மூடா பார். இதோ இந்த இளங்கால்களையும் குருத்துக்கைகளையும் பிள்ளைச்சிரிப்புகளையும் மழலைக்கூச்சல்களையும் பார். தெய்வங்கள் விண்ணில் வந்து நின்று அவ்விளையாடலை புன்னகையுடன் நோக்கி மகிழும் தருணம் இது.

அங்கே நிற்கமுடியாமல் சென்று உள்ளே அமர்ந்து கொண்டேன். கூத்தரே, அஸ்தினபுரியிலேயே நானொருவன் மட்டுமே துயருற்றுக்கொண்டிருந்தேன் என்று தோன்றியது. நூற்றுவருடன் பாண்டவரை அமரச்செய்து குந்தி அன்னமிடுவதைக் கண்டேன். நகுல சகதேவர்களை இருமுலைகளில் அணைத்து காந்தாரி அமுதூட்டுவதைக் கண்டேன். அம்பெடுத்து வில்லில் அமைப்பதெப்படி என்று தருமனுக்குக் கற்பிக்கும் சகுனியைக் கண்டேன். பத்துகாந்தாரிகளும் கரியபேரழகனாகிய அர்ஜுனனைக் கொஞ்ச தங்களுக்குள் பூசலிட்டு அரண்மனை இடைநாழியில் சிரித்தோடுவதைக் கண்டேன்.

பீமனே குருகுலத்தோன்றல்களுக்கெல்லாம் அன்புக்குரியவனாக இருந்தான். இளங்களிறென ஒருகணமும் கிளைதாவும் குரங்கென மறுகணமும் அவன் மாறும் விந்தையை கண்டுகண்டு நகைத்தனர் மைந்தர். மலைப்பாம்பின் பிடியை அறியும் மற்போர்கள். முதலையின் ஆற்றலை அறியும் நீர்விளையாட்டுக்கள். நூற்றுவரும் அவனை நினைத்து சிரித்துக்கொண்டு துயின்றனர். அவனை நினைத்து காலையில் துள்ளி எழுந்தனர். அவன் தொடுகையில் உவகைகொண்டனர். அவன் குரலை எப்போதும் கேட்டனர்.

அளவிறந்தது அவன் ஆடல் என்றனர் சேவகர். இரு கௌரவ மைந்தர்களை தூக்கிக் கொண்டுசென்று அரண்மனை மாடக்குவையின் உச்சியில் அமர்த்திவிட்டு அவன் மறைந்த அன்று அஸ்தினபுரியே அங்கே கூடிக் கூச்சலிட்டது. எட்டு மைந்தருடன் புராணகங்கையின் காட்டில் அவன் மறைந்து பன்னிருநாட்களுக்குப்பின் திரும்பியபோது அரண்மனையே அழுதுகொண்டிருந்தது. அரசநாகச்சுருளை கழுத்திலணிந்து அவன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தபோது அரசியர் அலறிக்கொண்டு ஓடினர். பீமனும் துரியோதனனும் ஒரே ரதத்தில் செல்லக்கண்டு முதுசூதர் ஒருவர் கூவிச்சொன்னார். “அரசன் காட்டுமனிதனை நடிக்கிறான். காட்டுமனிதனோ அரசனாக இருக்கிறான். ஒரு கிளி பழம் தின்கிறது. இன்னொன்று பார்த்திருக்கிறது. மரமோ அனைத்துமறிந்தது!”

பூமட்டுமேயான காடு போன்றிருந்தது அஸ்தினபுரி. நகரிலெங்கும் களிவெறியின் உச்சகணம் தணியாது தளராது நாட்கள் மாதங்களென நீடித்தது. ரதமேறி நகரில் செல்லும்போது ஒவ்வொருவரும் கனவிலென நடப்பதைக் கண்டேன். காதல்கொண்டவர்கள் போலிருந்தனர் இளையோர். இளமை மீண்டதைப்போலிருந்தனர் முதியோர். களவாகைக்குப்பின் உண்டாட்டில் இருப்பது போலிருந்தனர் வீரர். நாளை அரங்கேறவிருப்பவர் போலிருந்தனர் கூத்தர். கந்தர்வர்களாக மாறியிருந்தனர் சூதர். கூத்தரே, இந்நகரம் விண்ணிலிருப்பதுபோலிருந்தது.

நிலையற்றழிந்த துலாமுள்ளென ஆடிய அகத்துடன் ஒவ்வொருநாளும் கண்விழித்தேன். துழாவிச்சலிக்கும் விழிகளுடன் நகரில் அலைந்தேன். நடந்தவற்றை ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டு இரவில் துயிலாழ்ந்தேன். ஒவ்வொரு முகத்தசையையும் ஒவ்வொரு விழிமின்னலையும் ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு ஒலியையும் நினைவிலோட்டினேன். எங்கிருக்கிறது அந்த முதல் விதை? இருக்கிறது எங்கோ. நிகழ்ந்துவிட்டது அது. நான் அதை எக்கணம் தவறவிட்டேன்?

கட்டற்ற சொற்களால் பேசிக்கொண்டிருந்த சௌனகர் உடல்கொள்ளா அகவிரைவுடன் எழுந்து கைநீட்டிச் சொன்னார். “அதை நான் கண்டடைந்த அக்கணத்தில் நீங்கள் வந்து நின்றிருக்கும் சொல் வந்தது. நல்தருணம் என கூவியபடி எழுந்தோடி வந்தேன்.” மூச்சிரைக்க கைகள் சுழல சௌனகர் சொன்னார் “ஆம், இப்போது உறுதியாக உணர்கிறேன். அந்தத் தருணம்தான். அதுதான்.” பின்பு மெல்ல தணிந்து “என்ன பார்க்கிறீர் கூத்தரே?” என்றார்.

நான் புன்னகைத்து “அதைக் கண்டடைந்தபோது உங்கள் அகம் அறியும் இந்த உவகையை எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றேன். குளிர்நீர் கொட்டப்பட்டவராக சிலைத்து பின் சிலிர்த்து அவர் அமர்ந்துகொண்டார். “ஆம், ஆம்” என்றார். “உண்மை கூத்தரே. மானுட மனம் எனும் விந்தையை எத்தனை எண்ணினாலும் வகுத்துவிடமுடிவதில்லை. நான் கண்டடைந்தது பேரழிவின் விதையை. துயரத்தின் விஷத்துளியை. ஆனால் என் அகம் உவகை கொள்கிறது. கண்டேன் கண்டேன் என்று துள்ளுகிறது.”

நான் “அமைச்சரே, ஒவ்வொரு ஞானமும் அதற்கான மாயத்தைக் கொண்டுள்ளது. தர்க்கஞானத்தின் மாயை என்பது அறிதலின் கணத்தில் அது அடையும் உவகையே. தன்னைக் கொல்லும் விதியின் வழியை தான் கண்டுகொள்ளும்போதும் அது துள்ளிக்குதித்து கொண்டாடும். ஏனெனில் அறிவது நீங்களல்ல, உங்கள் அகங்காரம்” என்றேன். “ஆம், உண்மை” என்று சௌனகர் பெருமூச்செறிந்தார். “அறிதலை நிகழ்த்துவது ஞானம். அவ்வறிவை வாங்கி தன் களஞ்சியத்தில் சேர்த்துக்கொள்கிறது ஆணவம்” என்றேன். “அறிவை என் அறிவென்பவன் அறிதலுக்குமேல் ஆணவத்தை ஏற்றியவனாவான் என்பதே தார்க்கிக மதத்தின் முதல்பெருவிதியாகும். ஆணவமழிக்கும் அறிவே மெய்யறிவென்பார்கள் தார்க்கிகஞானிகள்.”

“அதை நானும் கற்றிருக்கிறேன். பல்லாயிரம் முறை எனக்குள் சொல்லியிருக்கிறேன். ஆனால் அதைக் கடந்துசெல்ல என்னால் முடியவில்லை கூத்தரே” என்றார் சௌனகர். “அறிதலென்பது அறிதலின் விளைவுகளுக்காகவே என்றறிதலே தர்க்கமாயையைக் கடக்கும் வழி” என்றேன். அவர் தலையசைத்து மீண்டும் நெடுமூச்செறிந்தார். “சொல்லும்… அத்தருணத்தை எப்படி நீர் அறிந்தீர்?” என்றுகேட்டேன். அகவிரைவு குறைந்து அமைதிகொண்ட சொற்களில் அவர் சொன்னார்.

பாண்டவர் வந்துசேர்ந்த செய்தியறிந்து காட்டிலிருந்து பீஷ்மபிதாமகர் வருவதை நான் எதிர்நோக்கியிருந்தேன். இந்நகரின் சதுரங்கத்தில் நான்காவது முனையில் அவர் அமர்வாரென எதிர்பார்த்தேன். கிழக்குவாயிலில் அவரது வருகையை எதிர்கொள்ள விதுரருடன் நானும் சென்றிருந்தேன். நான் பீஷ்மபிதாமகரை அணுகியறிந்ததில்லை. என் தந்தையுடன் சென்று அவரைக் கண்டு அவர் மடியிலமர்ந்திருக்கிறேன். என் தலையில் அவர் தாடியின் நுனி தொடும் குறுகுறுப்பை நினைவுகூர்கிறேன். நான் வளர்ந்தபோது அவர் கானகம் சென்றுவிட்டிருந்தார்.”

வாழும்போதே புராணமானவர் அவர் என்றனர் சூதர். அவர் எங்கிருக்கிறார் என ஒவ்வொருநாளும் ஒரு சூதன் கதை சொன்னான். அவர் நிஷாதநாட்டில் காட்டுக்குதிரைகளை பழக்குகிறார் என்றனர். திருவிடத்தில் ஒரு யானைக்கூட்டத்தின் தலைவன் அவரே என்றனர். பீதர் நாடு சென்று அவர்களின் வாட்கலையைக் கற்றுக்கொண்டிருக்கிறார் என்றனர். யவனர்கலமேறிச் சென்றதைக் கண்டதாகச் சொன்னார்கள். கதைகளினூடாக அவர் நூறுமனிதராக ஆனார். நூற்றுவரையும் ஒன்றாகத் தொகுத்து என்னுடையவராக நான் ஆக்கிக் கொண்டேன்.

ரதத்தில் வந்து இறங்கிய பிதாமகர் வேறேதோ ஆகியிருப்பார் என எண்ணினேன். அவர் நான் குழந்தைவிழிகளால் கண்டறிந்த அதே மனிதராக அப்படியே இருந்தார். கண்களைச்சுற்றிலும் சற்று சுருக்கங்கள் கூடியிருந்தன அவ்வளவுதான். உயரமான மனிதர் அவர் என்று அறிந்திருந்தேன் என்றாலும் ஓங்கிய அவரது உடலைக் கண்டு என்னை மிகச்சிறுவனாக உணர்ந்து சொல்லிழந்தேன். விதுரர் அவரை எதிர்கொண்டு வணங்கி வாழ்த்தியதும் நான் சென்று வணங்கினேன். என்னை முதல்நோக்கிலேயே அவர் கண்டுகொண்டார். தந்தையர் மைந்தர் முகங்களை ஒருபோதும் மறப்பதில்லை.

அமைதியான குரலில் பிதாமகர் “சௌனகனே, உன் தந்தை மண்மறைந்த செய்தியை அறிந்தேன். என் தோள்தழுவும் தோழராக இருந்தார். கலிங்கத்து மகாநதியில் அவருக்கு ஒருகைப்பிடி நீரள்ளி விடுத்தேன்” என்றார். “எந்தை நிறைவடைவார்” என்று நான் சொன்னேன். விதுரரிடம் திரும்பி “விதுரா, பாண்டுவின் அஸ்திபூரணச் சடங்குகள் சிறப்புற நிகழ்ந்தன அல்லவா?” என்றார். “ஆம் பிதாமகரே. வைதிகரும் கணிகரும் சூதரும் நிறைவுற நூல்நெறிகளுக்கிணங்க நிகழ்ந்தன” என்று விதுரர் சொன்னார்.

அன்று முழுக்க அவருடன் நானுமிருந்தேன். முதிர்ந்த மாமரம் மிகச்சில கனிகளையே காய்ப்பதுபோன்று அவர் பேசினார். அடிமரத்தின் மணமும் இனிமையும் தேனாக நிறைந்த சொற்கள். நீராடுவதற்குள்ளேயே அவர் நேராக தன் ஆயுதசாலைக்குத்தான் சென்றார். அவர் விட்டுச்சென்றதுபோலவே இருந்தது அது. ஆயுதக்களரியின் அதிபரான பீஷ்மபிதாமகரின் முதல்மாணவர் ஹரிசேனர் அவரை வணங்கி எதிர்கொண்டார். நிலம்பணிந்த அவர் தலையைத் தொட்டுவிட்டு நேராக உள்ளே சென்று தன் படைக்கலங்களை நோக்கிக்கொண்டு மெல்ல நடந்தார். குனிந்து ஏதேனுமொரு ஆயுதத்தை எடுப்பாரென நான் எண்ணினேன். ஆனால் அவர் விழிகளால்தான் தொட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அரண்மனையிலிருந்து விதுரருடன் மைந்தர்கள் அவரைக் காணவந்தனர். ரதங்கள் நின்ற ஒலிகேட்டு நான் சாளரம் வழியாக நோக்கியபோது பாண்டவரும் கௌரவ முதல்வர்களும் வந்து இறங்குவதைக் கண்டேன். ஒலிகேட்டு பிதாமகரும் தலைதிருப்பி விழிஎட்டி நோக்கினார். ஹரிசேனர் “மைந்தர்கள் குருநாதரே” என்றார். அவர் முகத்தில் ஒன்றும் நிகழவில்லை என்பதைக் கண்டு என் அகம் அதிர்ந்தது. கூத்தரே, புகைச்சுருளென நாம் எண்ணியது கரும்பாறையென்றறியும் கணம் போன்றது அது. அவரது கண்களையே நான் உற்று நோக்கினேன். அவற்றிலும் ஏதும் நிகழவில்லை.

ஆம், தந்தையரும் மைந்தர்களால் சலிப்படைந்துவிடக்கூடும். மைந்தராக நின்று அவ்வுண்மையை எதிர்கொள்வதென்பது கடினமானது. ஆனால் அதை அக்கணமே நம் உலகியல் உள்ளம் புரிந்துகொள்ளவும் செய்கிறது. எத்தனை பிறப்புகள். எத்தனை இறப்புகள். மானுடநாடகமென்பது சலிப்பூட்டும் ஓரிரு நிகழ்வுகளாலானது மட்டும்தானே? அதை உணர்ந்தபின்னும் என் அகம் ஏமாற்றத்தால் எரிந்துகொண்டிருந்தது. என் முன் நீண்ட தாடியும் தோளில்தவழ்ந்த சிகையும் முழங்கால்தொடும் கைகளுமாக நின்றிருந்த முதியவரை அக்கணம் வெறுத்தேன்.

மைந்தர்களை ஒவ்வொருவராக உள்ளே அனுப்பினார் விதுரர். முதலில் தருமன் முறைப்படி காலெடுத்து வைத்து உள்ளே வந்து பிதாமகரை அணுகி மிகையோசையோ குறையோசையோ இல்லா குரலில் உணர்வெழுச்சியேதும் இல்லா முறைச்சொற்களில் முகமன் சொல்லி முகமும் மார்பும் நிலம் தொட விழுந்து வணங்கினான். “குருகுலத்து மூத்தாரை இளையோன் அடிபணிகிறேன்” என்று அவன் சொன்னபோது “நீளாயுள் கொள்க!” என்று சொல்லி வலக்கை தூக்கி அவர் வாழ்த்தினார். குனிந்து அவன் தோள்களைத் தொடவில்லை. அள்ளி மார்புடன் சேர்க்கவில்லை.

தருமன் இரண்டடி பின்னால் எடுத்து வைத்து உணர்ச்சியற்ற குலமுறைச் சொற்களால் மீண்டும் வாழ்த்தி “தங்கள் அருட்சொற்களால் வாழ்த்தப்பட்டவனானேன் பிதாமகரே” என்றான். அப்போது அவரது விழிகளின் ஓரத்தில் மிகமெல்லிய சுருக்கமொன்று நிகழ்ந்தது என்று பன்னிருநாட்கள் கழித்து இப்போது அறிகிறேன். அவருக்குள் வாழ்ந்த மலைமகன் கங்கன் அப்போது அச்சிறுவனை வெறுத்தான். அவ்வெறுப்பை மறுகணமே கவ்வி தன்னுள் மிகமிக ஆழத்தில் புதைத்துக்கொண்டான். கூத்தரே அது எப்போதும் அங்கேயே இருந்துகொண்டிருக்கும் என இன்று நான் அறிகிறேன்.

அதன்பின்னர் இரட்டையர் போல துரியோதனனும் பீமனும் உள்ளே வந்தனர். அவர்களுக்குப்பின்னால் துச்சாதனன் அண்ணனின் நிழலென வந்தான். அவரது கருவிழிகளுக்குள் ஆடிய துளிநிழலாகவே நான் அவர்களின் வருகையைக் கண்டேன். பீமனும் துரியோதனனும் நிலம் படிந்து வணங்கி “பிதாமகரே வணங்குகிறேன்” என்றபோது பீமனின் இடைக்கச்சை மடியவிழ்ந்து ஒரு சிறிய நாகப்பாம்பின் குட்டி நிலத்தில் விழுந்து நெளிந்தோடியது. துச்சாதனன் அஞ்சி பின்னால் பாய ஹரிசேனன் அது தன்னைக் கடந்துசெல்லும்பொருட்டு கால்தூக்கி துள்ளி விலகி “நஞ்சுள்ளது” என்றார். ஹரிசேனரின் மாணவர்கள் இருவர் அதை மாறிமாறி வேல்நுனிகளால் குத்த அவற்றினூடாக உடல்நெளித்தோடி ஆயுதக்குவியலுக்குள் அது மறைந்தது.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

கண்கள் சற்றே விரிய “அது என்ன?” என்றார் பிதாமகர். நான் அஞ்சி அவனுக்காக சொல்தேர்ந்து வாயெடுக்க, விதுரரும் அதே போல கையெடுக்க, பீமன் அந்த அவமதிப்பை சற்றுமுணராமல் “நாகம். புராணகங்கையில் ஒரு மரப்பொந்திலிருந்து பிடித்தேன். தம்பியரை அச்சுறுத்த வைத்திருந்தேன்” என்றான். துரியோதனன் இளநகையை வாய்க்குள் அடக்கி நின்றிருந்தான். அது சென்ற திசையைக் குனிந்து நோக்கி “அஞ்சவேண்டாம். அதன் மணத்தைக்கொண்டே அதை மீண்டும் பிடித்துவிடலாம்” என்றான்.

பிதாமகரின் உதடுகளில் மெல்லிய நகை ஒன்று எழுந்ததைக் கண்டேன். அது மைந்தரில் மகிழ்ந்த பிதாமகரின் புன்னகை என்று விதுரரும் ஹரிசேனரும் எண்ணினர். அவருள் அழியாது வாழும் மலைக்கங்கனின் உவகை அது என நான் உள்ளூர அறிந்தேன். ஒவ்வொன்றாகக் கழற்றி வீசி அவர் மலைக்கங்கையின் காட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும் பருவம் அது எனத் தோன்றியது. அவர் கேட்ட மறுவினாவிலேயே அதை உறுதியும் செய்தேன். “அது எப்படி உன் மடியில் சுருண்டு அமர்ந்திருந்தது?” என்றார் பிதாமகர். “மிக எளிது. என் கச்சையை எப்போதும் நனைத்துவைத்திருப்பேன். உள்ளே ஒரு தாழம்பூமடலையும் வைத்துக்கொள்வேன்” என்றான்.

பிதாமகர் தலையசைத்து “பேருருவுடன் இருக்கிறாய். பெருவீரனாக ஆவாய்” என்றான். “இல்லை தாதையே. நான் சிறந்த சமையற்காரனாகவே எண்ணியிருக்கிறேன். மடைப்பள்ளி மூத்தார் கனக கச்சரிடம் அதைப்பற்றி சொல்லிவிட்டேன். அவரும் என்னை மாணவனாக ஏற்கவிருப்பதாக ஒப்புக்கொண்டுவிட்டார்” என்றான். பிதாமகர் முகம் மலரச் சிரித்து “ஆம், நீ சமைத்து உணவூட்ட ஒரு உடன்பிறந்தார் படையே உள்ளது” என்றார். “இவர் என் தமையன். இவருக்காக மட்டுமே நான் நிறைய சமைக்கப்போகிறேன்” என்று பீமன் சொன்னான். அரைக்கணம் பிதாமகரின் நோக்கு வந்து துரியோதனனை தொட்டு மீண்டது.

கூத்தரே, ஏன் விதுரர் அரசியல்ஞானி என்று அக்கணம் அறிந்தேன். அங்கே நிகழ்ந்ததன் அடியாழத்தை அக்கணமே உணர்ந்த அவர் துரியோதனனைக் காட்டி “பிதாமகரே, உங்கள் மடியிலிட்டு பெயர்சூட்டப்பட்ட அஸ்தினபுரியின் அரசனை வாழ்த்துங்கள்” என்றார். ஆனால் பீஷ்ம பிதாமகரின் முதிய உள்ளம் அவர் சொன்னதன் குறிப்பை உள்வாங்கிக்கொள்ளவில்லை. “நலம் திகழ்க!” என்று பொதுவாகச் சொல்லி உடனே திரும்பி “மற்ற மைந்தரும் வருக” என்றார்.

அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் வந்தனர். கௌரவ மைந்தர்கள் நிரைநிரையென வந்தனர். மைந்தர் பெருக்கம் கண்டு பீஷ்மரின் அகம் சலிப்பையே அடைந்துகொண்டிருந்ததென நான் அறிந்தேன். அனைவரும் வந்ததும் “அனைவரும் நீளாயுள் கொண்டு வாழட்டும். குருகுலம் பொலியட்டும்!” என உணர்ச்சியின்றிச் சொல்லி திரும்பி ஹரிசேனரிடம் “நான் நீராடி ஓய்வெடுக்கவேண்டும்” என்றார் பிதாமகர்.

கூத்தரே அக்கணத்தைச் சுற்றியே இத்தனை நாளும் என் எண்ணம் சுழன்றுகொண்டிருந்தது என இன்று அறிந்தேன். அதை எப்படி நாம் உணர்கிறோம் என்பதை எண்ணினால் நம் மனம் என்னும் புலனின் எல்லையற்ற ஆற்றலை எண்ணி நாமே அஞ்சிவிடுவோம். நான் அதை அறிந்தது என் முதுகுத்தோலால். நான் துரியோதனன் முகத்தைப்பார்க்கவில்லை. அவன் மூச்சொலியைக்கூடக் கேட்கவுமில்லை. ஆனால் அவனுள் எழுந்த ஒன்றை அறிந்துகொண்டேன். அவ்வாறு என் அகம் அறிந்ததை என் தர்க்கம் இப்போது அறிந்தது.

பெருமூச்சுடன் தலையை ஆட்டியபடி சௌனகர் சொன்னார். “இதுதான் தொடக்கம்.” உடனே அச்சொற்களை அகத்தே வியந்து “எத்தனை எளியது!” என்றார். நான் “ஆம்” என்றேன். “மிகச்சிறிதாக இருக்கையிலேயே அது பேராற்றல் கொள்கிறது. ஏனென்றால் வானளாவ வளர அதற்கு இடமிருக்கிறது.” இருவரும் அந்தத் தருணத்தின் எடையை அறிந்தவர்களாக சற்றுநேரம் பேசாமலிருந்தோம். பின்பு சௌனகர் இன்னொரு நீள்மூச்சுடன் கலைந்து “திருதராஷ்டிரரும் பீமனும் சந்தித்த தருணத்தை சேவகர் சொல்லக்கேட்டேன். அன்று இளவரசர் துரியோதனன் எப்படி இருந்திருப்பார் என என்னால் உணரமுடியவில்லை” என்றார்.

“அமைச்சரே ஆணவம் மிக்கவர்களே பெருந்தன்மையானவர்கள், பெருங்கொடையாளர்கள். அவர்களால் உலகையே கொடுக்க முடியும். ஆனால் கொடுக்குமிடத்தில் மட்டுமே அவர்களால் இருக்க முடியும்” என்றேன். பின்னர் உரக்கச்சிரித்துக்கொண்டு எழுந்தேன். “அரண்மனையில் தங்குங்கள் கூத்தரே” என்றார் அமைச்சர். “அரண்மனைக்குள் மண்ணை விரிக்கமுடியாதே” என்றேன். உரக்க நகைத்து “என் பரிசிலையாவது பெறுவீரா?” என்றார். “ஆம், இங்கே ஓர் ஆடலை நிகழ்த்துவேனென்றால்” என்றேன். சிரித்துக்கொண்டு கைகளைத் தூக்கினார்.

விடைபெற்றுக்கிளம்புகையில் என்னை வாசல் வந்து வழியனுப்பிய அமைச்சர் சொன்னார் “அக்கணத்தை ஒரு ஆடலாக ஆக்கமுடியுமா உம்மால்?” நான் சிரித்துக்கொண்டு “இல்லை. ஆனால் அச்சிறுநாகத்தின் நெளிவை நடிக்கமுடியும்” என்றேன். அவரது திகைத்த கண்களை நோக்கியபடி படியிறங்கினேன். காஞ்சியின் புறக்கோட்டத்து குடில்முற்றத்தில் சிரித்துக்கொண்டு மண்ணில் புரண்டு கௌசிக காரகன் சொன்னார். “நான் அதை ஒருநாள் காண்பேன். அப்போது சொல்வதற்கு சில சொற்கள் என்னிடமுள்ளன.”

“என்ன?” என்றான் இளநாகன் மெல்லிய குரலில் மேகமிழைந்த வானை நோக்கியபடி. “தார்க்கிகர்களின் தர்க்க முட்களுக்கு நடுவே நெளிந்து வளைந்தோடும் அச்சின்னஞ்சிறு பாம்பின் பெயரென்ன என்று”‘ என மீண்டும் நகைத்தார் கூத்தர்.