திசைதேர் வெள்ளம் - 75

bowமேலும் மேலுமென பீஷ்மர் முன் உடல்கள் விழுந்து அவர் உருவாக்கிய வெறுங்களம் அகன்றது. அவர்கள் எவருமே அம்புகளால் தொட இயலாத தொலைவுக்கு அவர் விலகிச்சென்றிருந்தார். அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் ஒருகட்டத்தில் அம்பு செலுத்துவதன் பயனின்மையை உணர்ந்தனர். வில்லவர்கள் பலர் அம்புகள் தொடுப்பதை நிறுத்தி வில் தாழ்த்தி மலைத்த விழிகளுடன் அவரை பார்த்தனர். சீற்றத்துடன் வந்த அம்புகளால் அறைபட்டு அவர் முன் விழுந்துகொண்டிருந்தனர். பலி கோரி எழுந்த பெருந்தெய்வம் ஒன்றுக்கு முன்னால் தலைக்கொடை அளிப்பவர்கள்போல சென்று விழுந்து அக்களத்தை நிரப்பிக்கொண்டிருந்தனர்.

“அவர் மிக அகன்று சென்றுவிட்டார். இன்று அவர்மேல் தொடுக்கும் தொலைவுக்கு அம்பு செலுத்தும் மானுடர் எவருமில்லை” என்று சுருதகீர்த்தி சொன்னான். “அவர் தன் நெடிய உடலால் என்றும் அகன்றுதான் இருந்திருக்கிறார். மானுடரை தொலைவில், வானிலிருந்து என நோக்கிக்கொண்டிருந்தார்” என்றான் பிரதிவிந்தியன். “ஆகவேதான் அவர் எவரையும் புரிந்துகொள்ளவில்லை போலும்” என்றான் சுதசோமன். “அவரையும் எவரும் புரிந்துகொள்ளவில்லை” என்றான் யௌதேயன். “ஆனால் அவரால் நம்மை கொல்லமுடிகிறது. சொல்லொழிந்துவிட்டு அம்புகளை ஏவுக! அவருடைய அம்புகளையாவது தடுத்து நிறுத்துங்கள்” என்று அபிமன்யூ கூவினான். “ஒன்றே இயல்வது.  இக்களம் மேலும் மேலும் விரிந்து அவருடைய அம்புகளும் வந்தடையாதபடி ஆகும்போது தன் களத்தாலேயே அவர் தனிமைப்படுவார்” என்றான் சுருதகீர்த்தி.

சுருதகீர்த்தி அந்தப் போரை செயலற்ற உள்ளத்துடன் நோக்கிக்கொண்டிருந்தான். பாண்டவ வில்லவர் படையில் பெரும்பாலானவர்கள் பீஷ்மரின் அம்புகளை ஏற்று களம்பட்டனர். அவர்களின் விழிகள் சொல்லற்றிருந்தன. விழுந்து துடித்த உடல்களும் சொல்லற்றிருந்தன என்று தோன்றியது. தசையை உடலாக்கும் சொற்களை இழந்திருந்தன. ஐம்பெரும்பருக்களும் தங்களை இணைத்த நோக்கத்தை இழந்து விலகத் துடித்தன. பேரம்புகள் வந்து அறைந்து தேர்கள் சரிய, புரவிகள் கழுத்து குழைந்து முகம்பதித்து விழ, புண்பட்டு அவற்றின்மேல் விழுந்து துடித்து நெளியும் உடல்களும் உடைசல்களும் கொண்ட பெரிய வட்டக்களமொன்றுக்கு நடுவே பீஷ்மர் நின்று வில் தாழ்த்தினார். அவரைச் சூழ்ந்து வந்த துணைவில்லவர்களும் வில்லை தாழ்த்தினர்.

ஒருகணம் ஆழ்ந்த அமைதி ஒன்று களத்தில் எழுந்தது. முற்றிலும் புதிய தெய்வமொன்று தோன்றியதுபோல. கடுங்குளிர் என அந்த அமைதியை உடல்களால் உணர முடிந்தது. பீஷ்மர் சூழ்ந்திருந்தவர்களை பார்க்கவில்லை என்று தோன்றியது. பல்லாயிரம் விழிகளால் பார்க்கப்படுவதை உணர்ந்தது போலவும் தெரியவில்லை. எவ்வாறு அப்படி தனிமைப்பட்டோம் என்பதை திகைப்புடன் பார்ப்பவர்போல் தனக்குச் சுற்றும் விழுந்து கிடந்த உடல்களை விழியோட்டி பார்த்தார். சுருதகீர்த்திக்குப் பின்னால் நின்ற யௌதேயன் “ஏற்கெனவே இறந்துவிட்டவர் போலிருக்கிறார். மூச்சுவெளியில் நின்று நம்மை பார்க்கிறார். நமது சொற்களும் அங்கு சென்று சேராது” என்றான். ஆம், இனி அனலுக்கு உடலை அளிப்போம். நீருக்கு அன்னத்தை அளிப்போம். எங்கிருந்தோ அவர் அவற்றை பெற்றுக்கொள்வார் என்று சுருதகீர்த்தி எண்ணினான்.

பீஷ்மர் தன் தேரை பின்னுக்கிழுக்க ஆணையிட்டார். அவருடைய தேர் விழுந்துகிடந்த உடல்களினூடாக ஏறி, அங்கே கிடந்த உடைந்த தேர்களை நொறுக்கியபடி எழுந்து அலைபாய்ந்து மெல்ல பின்னடைந்துகொண்டிருந்தது. அவர் அகன்று செல்வதை வெற்றுவிழிகளுடன் நோக்கியபடி பாண்டவ வில்லவர்கள் நின்றிருந்தனர். மேலும் மேலும் அகன்று மீண்டும் தன் பின்னணிப் படையுடன் அவர் இணைந்துகொண்டார். அவர்கள் அந்தப் பெருவெற்றியை கொண்டாடும் பொருட்டு விற்களையும் வாள்களையும் தூக்கி போர்க்குரல் எழுப்புவார்கள் என்று சுருதகீர்த்தி எண்ணினான். ஆனால் அவர்களும் மலைத்துப் போயிருந்தார்கள். அங்கு வெற்றி தோல்வியே இல்லை. ஏனெனில் அங்கு எதிரி என்பதே இல்லை என்று எண்ணிக்கொண்டான்.

விரிந்து கூர் அழிந்து மேலும் அகன்று பீஷ்மரின் அணுக்கப்படை பின்னகர்ந்து கௌரவப் படை விளிம்பை சென்றடைந்தது. அதன் பின்னரே சுருதகீர்த்தி போர்க்களத்தின் முழுமையை பற்றிய உணர்வை அடைந்தான். பார்த்தரை கிருபரும் துரோணரும் சேர்ந்து இருபுறமும் அம்புகளால் அறைந்து பின்னடையச் செய்தனர். பார்த்தர் தன்னை பாதுகாத்தபடி தேரை பின்னிழுத்து மேலும் பின்னடைந்து தன் படையின் விளிம்பை வந்தடைந்தார். விரிந்து சுழன்ற வட்டம் சற்றே கலைந்து மீண்டும் வடிவுகொள்ளத் தொடங்கியது. பீஷ்மர் கௌரவப் படைகளின் வடக்குதிசை நோக்கி சென்றுகொண்டிருந்தார். கௌரவப் படைகளின் சுழற்சிக்கேற்ப தங்கள் அமைப்பை உருவாக்கிக்கொண்டே இருந்த பாண்டவப் படையின் நுனியில் அமைந்த பார்த்தரும் வடக்கு நோக்கி சென்றார். இரு அம்புகள் சரிந்து ஒன்றை ஒன்று சந்திக்கும்பொருட்டு முனைகொண்டு செல்வதுபோல. என்ன நிகழப்போகிறது என அவன் உணர்ந்தான். அவன் உள்ளம் அதிரத்தொடங்கியது.

வடக்கு எல்லை நோக்கி அவர்கள் செல்வதை தடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. அக்கணமே அது இயல்வதேயல்ல என்ற எண்ணமும் உருவானது. இரண்டு படைகளும் அவர்களிருவரையும் அந்த முனைநோக்கி செலுத்தும்பொருட்டே விசையும் அதற்கேற்ற வடிவும் கொண்டவை போலிருந்தன. அவர்கள் தங்களுக்கு எதிரே நின்ற படைகளுடன் முழு வீச்சுடன் போரிட்டபடியே அங்கே சென்றனர். குருக்ஷேத்ரத்தின் வடக்கு எல்லை, குறுங்காட்டின் விளிம்பு. அந்த இடம்தானா? அது முன்னரே தெரிவுசெய்யப்பட்டதா? அங்கே முன்னர் சென்றிருக்கிறார்களா? எவ்வகையிலேனும் அறிந்திருக்கிறார்களா? விழவுக்கூட்டத்தின் நெரிசலில் ஒருவரோடொருவர் உடல் முட்டிக்கொள்வதுபோல் பீஷ்மரும் பார்த்தரும் அருகருகே வந்தனர். இரு தேர்களும் இயல்பாக திரும்பி ஒன்றையொன்று எதிர்கொண்டன.

நோக்குக்கு அது முற்றிலும் எதிர்பாராத கணம். தெய்வ கணங்களனைத்துமே எதிர்பாராதவை. எதிர்பாராத கணங்கள் அனைத்துமே தெய்வங்களால் அமைக்கப்படுபவை. அந்தப் போரின் பல்லாயிரம் விசைகள், பல லட்சம் மானுடர், அவர்களிலெழுந்த எண்ணிலா நிகழ்வுகள் ஒன்றெனக் குவிந்து அதை அமைத்தன போலும். நீர்த்துளிகளை நதிப்பெருக்கென்றாக்கும் நெறி. புழுதிப்பருக்கைகளை மணற்புயலாக்கும் விசை. இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி ஒருகணம் திகைத்தவர்போல் நின்றனர். பீஷ்மர் தாடி மேலெழ வாயை இறுக்கி, நீள்கை சுழன்று அம்புத்தூளியைச் சென்றடைந்து மீள, தன் வில்லை இழுத்து நாண் விம்மச்செய்து நீளம்பொன்றால் பார்த்தரின் தேரை அறைந்தார். தேர்த்தூண் உடைந்து தெறித்தது. அடுத்த அம்பை ஒழிந்து தன் ஆவநாழியிலிருந்து அம்பு ஒன்றை எடுத்து நெற்றிமேல் வைத்து வணங்கி அதை தொடுத்தார் பாரதர். அந்த அம்பு பீஷ்மரின் காலடியில் வந்து தைத்து நின்றது. அவர் குனிந்து அந்த அம்பை பார்த்தார். மேலும் இரு அம்புகள் வந்து அங்கே தைத்து அதிர்ந்து நின்றன.

மூன்று அம்புகளால் பீஷ்மரின் காலடியை வணங்கியபின் பார்த்தர் தன் அம்புகளை விட்டார். இருவரும் உச்சநிலைப் போரை ஓரிரு கணங்களில் சென்றடைந்தனர். பீஷ்மரின் தோள்கவசம் உடைந்தது. அவருடைய தொடைக்கவசத்தின் இடுக்கில் ஒரு அம்பு சென்று தைத்தது. பார்த்தரின் தேர்மகுடம் உடைந்ததது. அவர் புரவிகளில் ஒன்று கழுத்தறுந்து விழுந்தது. அவர் நெஞ்சக்கவசம் உடைந்து தெறிக்க அம்புகளிலிருந்து தப்பும் பொருட்டு அவர் முழங்காலிட்டு தேர்த்தட்டில் புரண்டெழுந்து அடுத்த கவசத்தை அணிந்தபடி எழுந்து அவரை பார்த்தார். இருவரும் போர்புரிவதை சூழ்ந்தவர்கள் போர்நிறுத்தி கைகள் ஓய நின்று நோக்கினார்கள். அந்த அமைதியே செய்தியெனப் பரவ சூழ்ந்திருந்த படையினர் அனைவருமே போரை நிறுத்தி அவர்களை நோக்கி நின்றிருந்தனர்.

இருவரும் ஆற்றிய போர் கணம்தோறும் மேலும் மேலும் விசை கொண்டது. இரு தரப்பிலிருந்த அணுக்க வில்லவர்களும் வில் தாழ்த்தி அவர்கள் மட்டுமே போர்புரியும்படி விட்டனர். சுருதகீர்த்தி அடியிலாத ஆழமொன்றில் விழுந்துகொண்டே அதை பார்ப்பதுபோல் உணர்ந்தான். அங்கிருந்த ஓசைகள் அனைத்தும் முற்றடங்கி அவர்கள் இருவரும் விடும் அம்புகளின் உலோக ஓசை மட்டும் கேட்பது போலிருந்தது. ஓர் அறியா ஆலயத்தின் மணிஓசைபோல் அம்புகளின் கிலுக்கம் ஒழுங்குடனும் இசைமையுடனும் இருந்தது. பின்னர் அதிலொரு சிறு மாறுபாடு தோன்றலாயிற்று. வெறும் செவிகளாலேயே பீஷ்மரின் கை ஓங்குவதை உணரமுடிந்தது. கூர்ந்தபோதும் விழிகளால் அதை அறியமுடியவில்லை. பார்த்தர் பின்னடையவில்லை. அவர் கை தளரவில்லை. அம்புகளின் விசை மேலும் எழுந்தது போலவே தோன்றியது. ஆனால் செவி உணர்ந்துகொண்டிருந்தது, அவர் பின் தங்குகிறார் என்று.

ஒரு கணத்தில் இளைய யாதவர் தன் தேரை சற்றே வலப்பக்கமாக திருப்பி கைதூக்கினார். அர்ஜுனனுக்குப் பின்னாலிருந்து சிகண்டியின் தேர் முன்னால் வந்து பீஷ்மரை எதிர்கொண்டது. சிகண்டிக்கு இருபுறமும் ஷத்ரதேவனும் ஷத்ரதர்மனும் வந்தனர். சிகண்டி அம்பை இழுத்து முதல் அம்பை பீஷ்மரின் நெஞ்சை நோக்கி ஏவினார். பீஷ்மர் சற்றே வாய்திறந்து தாடை தொங்கியிருக்க உடல் நடுக்கு கொள்ள அவரை பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் தன் வில்லைத் தாழ்த்தி செயலற்று நின்றார். சிகண்டி வெறிகொண்டவர்போல் அம்புகளை இழுத்து அவர் நெஞ்சை நோக்கி அறைந்துகொண்டே இருந்தார். ஒவ்வொரு அம்பும் அவர் கவசங்களில் பட்டுத் தெறித்தது. கீழே விழுந்த அம்புகளை சுருதகீர்த்தி பார்த்தான். அவற்றில் உலோக முனைகள் அனைத்தும் மடங்கி கிளி அலகுகள் போலாகிவிட்டிருந்தன.

சிகண்டி தன் வெறியடங்கி தளர்ந்து மூச்சிரைத்தார். ஒரு வேள்வியை பார்ப்பவர்கள்போல பாண்டவ வீரர்கள் விழி மலைத்து நின்றிருக்க கௌரவர்கள் என்ன நிகழ்கிறதென்றே தெரியாமல் ஒருவரோடொருவர் முட்டிக்கொண்டு தேங்கி மெல்லிய அலையாகத் தெரிந்தனர். சிகண்டி தன் ஆவநாழியிலிருந்து தர்ப்பைப்புல்லின் மெல்லிய தண்டு ஒன்றை எடுத்தார். அதைத் தூக்கி உதடுகள் நடுங்க நுண்சொல் ஓதி பீஷ்மர் மேல் எய்தார். அது பீஷ்மரின் கவசத்தின் இடுக்கொன்றுக்குள் பாய்ந்து நின்றது. மேலும் மூன்று புல்லம்புகளை சிகண்டி பீஷ்மர் மேல் ஏவினார். பீஷ்மர் தள்ளாடி மெல்ல அசைய வில்லும் அம்பும் தேர்த்தட்டில் விழுந்தன.

பீஷ்மரின் பாகன் தேரைத் திருப்பி அவரை பின்னால் கொண்டுசெல்ல முயல சிகண்டியின் புல்லம்பு அவன் கழுத்தில் பாய்ந்து அவனை சரித்து நிலத்திலிட்டது. புல்லம்புகள் நரம்புமுடிச்சுகளைத் தாக்க ஏழு புரவிகளும் துடித்து அதிர்ந்து கால்தளர்ந்து தலைகள் தொய்வுற்று சரிந்தன. முகப்புக்குதிரை குருதி வழிந்த மூக்குடன் முகத்தை மண்ணில் ஊன்றியது. இரு பக்கங்களிலிருந்த புரவிகள் விலாவறைந்து நிலத்தில் விழுந்தன. தேர் அசைவிழக்க பீஷ்மர் விரித்த கைகளுடன் நின்றார்.

பார்த்தர் தன் தேர்த்தட்டில் காண்டீபம் ஒரு கையிலும் எடுத்த அம்பு மறுகையிலுமாக உடல் பதற நின்றிருந்தார். இளைய யாதவர் உதடுகளை மட்டுமே அசைத்து அவரிடம் பேசுவதை காண முடிந்தது. இளைய யாதவர் முகத்தில் உறுதியும், பின்னர் சீற்றமும், பின்னர் உச்சத்திலெரிந்த சினமும் தெரிந்தது. அவர் பிறிதொரு சொல் உரைத்து புரவியை அறைந்து தேரை முன்னெடுத்தார். அக்கணம் பார்த்தர் தன் வில்லை சற்றே தூக்கி பேரம்பொன்றை எடுத்து முழுவிசையுடன் இழுத்து பீஷ்மரின் நெஞ்சை நோக்கி அறைந்தார். பார்த்தரின் தோள்தசைகள் இறுகும் அசைவை, நரம்புகள் விம்மித் தளர்வதை, அவருடைய உளவிசை முழுக்க கைகளில் எழுந்த அம்புக்கு வருவதை கணத்துளிகளாக சுருதகீர்த்தியால் பார்க்க முடிந்தது.

நீளம்பு சென்று பீஷ்மரின் நெஞ்சக்கவசத்தை அறைந்து உடைத்து உள்ளே பதிந்து நின்றது. பீஷ்மர் தள்ளாடி பின்னடைந்தார். அடுத்த அம்பால் அதே இடைவெளியில் மீண்டும் அறைந்தார். கௌரவர்கள் தரப்பிலிருந்து பெருங்குரல் எழுந்தது. ஆனால் அவர்கள் அப்போதும் செயலிழந்து ததும்பிக்கொண்டிருந்தனர். பார்த்தர் மேலும் மேலும் அம்புகளால் பீஷ்மரை அறைந்தபடி அணுகி சென்று கொண்டிருந்தார். அணுகுந்தோறும் அம்புகள் விசை மிகுந்தன. பீஷ்மரின் நெஞ்சுக்கவசமும் தோள்கவசமும் உடைந்து விழுந்தன. அவருடைய கழுத்திலும் விலாவிலும் அம்புகள் தைத்துக்கொண்டே இருந்தன. பீஷ்மர் தேரின் பின்தூணில் சாய்ந்து நின்றிருந்தார். அம்புகள் அவருடைய கவசங்கள் அனைத்தையும் உடைத்து தெறிக்கவிட்டன. அவருடைய உடலில் அம்புகள் ஒன்று பிறிதொன்றை நாடிச்செல்வதுபோல் பாய்ந்து தைத்துக்கொண்டே இருந்தன.

பீஷ்மர் தூணில் சாய்ந்தபடியே குடை சாய்ந்த தேரில் நின்று அசைந்தார். அக்கணம் வரை செயலிழந்து நின்றிருந்த கௌரவர்களின் வில்லவர்கள் வெறிக்கூச்சலெழுப்பியபடி பாய்ந்து வந்தனர். அவர்களை சிகண்டியும் அபிமன்யூவும் எதிர்த்து வீழ்த்தினர். வில்லவர்கள் நிலையழிந்திருந்தமையால் வெற்றுநெஞ்சை காட்டுபவர்கள்போல் வந்து அம்பேற்று விழுந்துகொண்டிருந்தனர். சுருதகீர்த்தி தன் அம்புகளால் பதினெட்டு வில்லவர்களை வீழ்த்தினான். வீழ்ந்த தேர்களாலான வேலிவளைப்புக்கு அப்பால் கௌரவப் படை கூச்சலிட்டுக் கொந்தளித்தது. தொலைஅம்புகளை வானிலேற்றி வளைத்திறக்கி அவர்களை வீழ்த்தி அங்கேயே நிறுத்திக்கொண்டிருந்தான் அபிமன்யூ.

பார்த்தர் தன் அம்புகளை குறி பார்க்கவேண்டிய தேவை இல்லாத அளவுக்கு அணுகிவிட்டிருந்தார். அத்தனை அம்புகளும் பீஷ்மரின் உடலில் தைத்தன. உடலெங்கும் அம்புகளுடன் அவர் புரண்டு தேரிலிருந்து தொங்கினார். பார்த்தர் வெறியாட்டெழுந்தவர்போல அம்புகளை செலுத்திக்கொண்டே இருந்தார். விசைமிக்க அம்புகளால் பீஷ்மரின் உடல் தேரில் தொங்கிக்கிடந்து துள்ளியது. பின் சுழன்றபடி நிலத்தில் விழுந்து உருண்டது. அம்புகள் அவ்வுடலை அள்ளிப்புரட்ட அவர் முதுகெங்கும் அம்புகள் தைத்தன. முட்பன்றிபோல் அம்புகளால் மூடப்பட்டவராக அவர் களத்தில் கிடந்தார். குருதி ஊறி அம்புகளினூடாக வழிந்தது. அவருடைய வாய்மட்டும் அசைந்துகொண்டிருந்தது. பார்த்தர் காண்டீபத்தை ஓங்கி தேர்த்தட்டில் அறைந்த பின் தளர்ந்து பீடத்தில் அமர்ந்தார். இளைய யாதவர் தேரைத் திருப்பி அவரை கொண்டுசென்றார்.

பீஷ்மரை நோக்கி நின்றிருந்த கௌரவப் படையிலிருந்து சொல்லற்ற முழக்கம் எழுந்தது. எவரோ “பிதாமகர் விண்புகுக!” என்று கூவினார். அக்குரலை ஏற்று குரல்கள் எழவில்லை. “காங்கேயர் விண்புகுக! தேவவிரதர் விண்புகுக!” என்று அக்குரல் அழுகையும் ஆங்காரமுமாக மீண்டும் எழுந்தது. வெடித்தெழுந்ததுபோல கௌரவப் படை வாழ்த்தொலி எழுப்பத் தொடங்கியது. “பிதாமகர் விண்புகுக!” “காங்கேயர் விண்புகுக! தேவவிரதர் விண்புகுக!” பீஷ்மர் விழுந்த செய்தியை கௌரவர்களின் படைமுரசுகள் ஒலித்தன. இடித்தொடர்போல் அச்செய்தி அங்கிருந்து எழுந்து பரவி கௌரவப் படைகளெங்கும் சென்றது.

முதன்மை வீரர்கள் விழும்போது மட்டுமே ஒலிக்கும் அறுநடைத் தாளத்தைக் கேட்டு கௌரவப் படைவெளி விற்களையும் வாள்களையும் தூக்கி “பிதாமகர் விண்சேர்க! குடிமூத்தார் நிறைவுறுக! விண்வாழ்க காங்கேயர்! சாந்தனவர் விண்வெல்க! ஆபகேயர் வான்வெல்க! பரதர்ஷபர் நிறைவுறுக! தேவவிரதர் அழியா வாழ்வடைக! குருசார்த்தூலர் புகழ் எழுக! நதீஜர் பெயர் வாழ்க! தாலத்வஜர் அழிவின்மைகொள்க!” என்று வாழ்த்தொலி எழுப்பினர். கௌரவப் படையிலிருந்து எழுந்த அந்த வாழ்த்தொலி சற்று நேரத்திலேயே பாண்டவப் படையில் எதிரொலி என எழத் தொடங்கியது. சுருதகீர்த்தி திரும்பிப் பார்த்தபோது அவனைச் சூழ்ந்திருந்த வில்லவர் அனைவரும் விற்களைத் தூக்கி “வெல்க பிதாமகர்! வெல்க குருகுலோத்தமர்! குருமுதல்வர் விண்வெற்றிகொள்க! வெல்லப்படா வில்லவர் புகழ் எழுக!” என்று குரலெழுப்பத் தொடங்கினர்.

பாண்டவ கௌரவ தரப்பென்னும் வேறுபாடில்லாமல் வீரர்கள் வெறிகொண்டு தொண்டை நரம்புகள் புடைக்க கூச்சலிட்டு குதிப்பதை அவன் பார்த்தான். கண்ணீருடன் நெஞ்சிலறைந்து சிலர் அழுதனர். குனிந்து நிலத்தில் அமர்ந்து தரையை ஓங்கி அறைந்து கூச்சலிட்டனர். நோக்க நோக்க அனைத்து முகங்களிலும் இருந்த துயரவெறி அவனை பதறச் செய்தது. அவனுடைய பாகன் கடிவாளத்தை நுகக்கணுவில் கட்டி முகம் குனிந்து அழுதுகொண்டிருந்தான். தன் கண்ணீர் மார்பில் சொட்டும்போதுதான் தானும் அழுதுகொண்டிருப்பதை சுருதகீர்த்தி உணர்ந்தான். பார்த்தர் தலையை கைகளில் தாங்கி தேரில் அமர்ந்திருக்க இளைய யாதவர் தேரை பின்னுக்கிழுத்து மேலும் மேலுமென உள்ளே கொண்டு சென்றார். தன் இரு மைந்தராலும் காக்கப்பட்டு சிகண்டி படைகளுக்குள் சென்று மறைந்தார்.

bowசுருதகீர்த்தி தேரைச் செலுத்தி முன்னால் சென்று யுதிஷ்டிரரை அணுகினான். யுதிஷ்டிரர் தேர்த்தட்டில் மடியில் வில்லுடன் கைகட்டி அமர்ந்து கண்ணீர்விடுவதை பார்த்தான். நகுலன் தன் தேரில் அணுகிவந்து “போர் இனி எவ்வாறு முன்னெடுக்கப்படவேண்டும், மூத்தவரே?” என்றார். “இனி போரில்லை. இனி புவியில் நாம் கொல்வதற்கும் வெல்வதற்கும் எவருமில்லை. சென்று தலைகொடுப்போம். பெண்பழிகொண்ட அக்கீழ்மகனால் கொல்லப்படுவோம். இப்பழிக்கு நம் குலம் ஏழுமுறை முற்றழிக்கப்பட்டாலும் தகும்” என்று யுதிஷ்டிரர் கூவினார். எழுந்து வெறியுடன் அம்பொன்றை எடுத்து தன் கழுத்தை அறுக்க கைதூக்கினார். தன் தேரிலிருந்து பாய்ந்து அவர் தேரிலேறிக்கொண்ட நகுலன் அவர் கையைப்பற்றி நிறுத்தினார்.

அப்பால் புரவியில் தோன்றிய பீமசேனர் இகழ்ச்சியுடன் நகைத்து “சங்கறுத்து விழுவதென்றால் களத்தில் சென்று கௌரவர் கையால் சாகலாம். விண்ணுலகாவது எஞ்சும்” என்றார். யுதிஷ்டிரர் கைதளர உடைந்த குரலில் “மந்தா!” என்றார். “எண்ணியதை இயற்றிவிட்டோம். இனி சற்று குற்றவுணர்வும் கண்ணீரும் கொண்டு அதை கழுவுவோம்” என்றார் பீமசேனர். “பிறகென்ன செய்யவேண்டுமென்கிறாய்? இப்பழிக்கோள் நிகழ்வையே கொண்டாட வேண்டுமா?” என்றார் யுதிஷ்டிரர். “வேண்டாம். ஆனால் அழுதுகொண்டிருக்க நமக்கு நெடும்பொழுதில்லை. பிதாமகர் மறைவால் அவர்கள் வெறிகொண்டு எழுந்துவந்தால் நம் படை முற்றழியும்” என்றார் பீமசேனர்.

பாண்டவத் தரப்பிலிருந்து முதன்மைப் பெருவீரர் மண்மறைந்ததை அறிவிக்கும் முரசுகள் முழங்கத்தொடங்கின. பீமசேனர் அதை செவிகொண்டு கசப்புடன் துப்பியபடி “நம் தரப்பின் பெருவீரர் விழுந்துவிட்டாரா? யார், அபிமன்யூவா அன்றி அர்ஜுனனா?” என்றார். “மந்தா, அவர் நம் பிதாமகர். இக்களத்தில் அவர் நமக்கு எதிர்நின்றதனால் நமது பிதாமகர் அல்லாமல் ஆவதில்லை” என்றார் யுதிஷ்டிரர். பீமசேனர் “அதை நேற்று நானும் சொன்னேன். ஆனால் இன்று இக்களத்தில் அதை சொல்லமாட்டேன். இது வெற்றிக்கும் பழிநிகருக்கும் நாம் நின்றிருக்கும் குருதிவெளி” என்றபின் சுருதகீர்த்தியைப் பார்த்து “அவர்கள் எழவில்லை. உளம்சோர்ந்துவிட்டனர். ஆகவே இதுவே தருணம். இந்தச் சோர்வில் நாம் எழுந்து கௌரவரை அறைவோம். பிதாமகர் பீஷ்மர் கொன்றதற்கு இருமடங்கு வீரர்களை நாம் கொன்றாலொழிய இப்போர் நமக்கு நலம் தருவதாக திரும்பாது” என்றார்.

சுருதகீர்த்தி பேசாமல் நின்றான். தளர்ந்த குரலில் “மந்தா!” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “பிறகென்ன செய்வது? போரை நிறுத்துவதா? இன்னும் முற்பொழுதே ஆகவில்லை. இன்னும் நாம் கொன்றுகுவிக்க வேண்டியவர்கள் எஞ்சியிருக்கிறார்கள். கௌரவர்களில் எஞ்சியவர்களின் தலைகளை அறைந்துடைத்தால் நான் நிறுத்திவிடுகிறேன் போரை. என் வஞ்சம் அதுமட்டுமே” என்று பீமசேனர் சொன்னார். “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. என் புரிதல் திறனுக்கு அப்பால் சென்றுவிட்டன அனைத்தும்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். சுருதகீர்த்தியிடம் திரும்பி “எழுக, மைந்தா! இன்று நமது கொலையாட்டு நிகழட்டும்!” என்று பீமசேனர் சொன்னார். “இல்லை, தந்தையே. என்னால் இனி வில் தூக்க இயலுமென்று தோன்றவில்லை” என்று சொன்னான் சுருதகீர்த்தி.

“பார்த்தீர்களல்லவா படையினர் முழுவதுமே அழுதுகொண்டிருக்கிறார்கள். இவர்களை எந்த ஆணையால் போருக்குத் திருப்புவீர்கள்?” என்றார் நகுலன். “இவர்கள் எழ வேண்டியதில்லை. என் வீரர்கள் எழுவார்கள். அவர்கள் என் உணர்வுகளன்றி பிறிதொன்றை அடையமாட்டார்கள். என்னை பின்தொடர்க! இது என் ஆணை” என்றார் பீமசேனர். சுருதகீர்த்தி பேசாமல் நின்றான். “நாம் மட்டும் போதும். இன்றே கௌரவர்களின் தலைகொய்வோம்” என்று பீமசேனர் சொன்னார். அவருக்குப் பின்னால் புரவிகளில் வந்து நின்ற சதானீகனும் சுருதசேனனும் சொல்லின்றி தலைகுனிந்தனர். “எழுக!” என்று பீமசேனர் கைவீசிக் கூவ அவர்கள் மறுகுரல் எழுப்பவில்லை.

சினம் பொங்க “கீழ்மக்களே! எளிய உணர்வுகளுக்கு இடம் கொடுக்கிறீர்கள் என்றால் எதற்கு போருக்கெழுகிறீர்கள்? சொல்க, எவர் என்னுடன் வரப்போகிறீர்கள்?” என்றார் பீமசேனர். அப்பால் நின்ற யௌதேயன் “தந்தையே, இத்தருணத்தில் போருக்கெழுந்தால் பெரும்பழி சூடுவோம்” என்றான். “சூடிய பெரும்பழி வீணாகப் போகவேண்டாம், அது வெற்றி என்று ஆகட்டும் என்றுதான் வந்துள்ளேன். இக்களத்தில் நமக்கு அதுமட்டுமாவது எஞ்சட்டும்” என்றார் பீமசேனர். கசப்புடன் கைவீசி “ஆமாம், நீங்கள் வரமாட்டீர்கள். என்னுடன் இத்தருணத்தில் நிற்பதற்கு இருவரே உள்ளனர். கடோத்கஜனும் அபிமன்யூவும் போதும், இன்றைய பேரழிவை நான் நிகழ்த்துகிறேன்” என்றபின் பாய்ந்து புரவியிலேறிச் சென்றார்.

யௌதேயன் “ஆம், அவர்கள் இருவரும் செல்வார்கள். எத்தயக்கமும் இன்றி இத்தருணத்தில் கொலைவெறியாடி திளைப்பார்கள்” என்றான். யுதிஷ்டிரர் நீண்ட தேம்பலோசையுடன் அழத்தொடங்க அவர் மேல் பெருவெறுப்பை சுருதகீர்த்தி உணர்ந்தான். பீமசேனர் சொன்னதைவிட கடுஞ்சொற்களால் அவரை வசைபாடவேண்டுமென்று தோன்றியது. திரும்பி நோக்கியபோது சுருதசேனன் முகத்திலும் சதானீகன் முகத்திலும் அந்தக் கசப்பை கண்டான். தேரைத் திருப்பி படைமுகப்பிற்கு கொண்டுசெல்ல ஆணையிட்டான். அவன் தேர் முகப்பெல்லையை கடந்தபோது எங்கும் போர்வீரர்கள் அழுதுகொண்டும் சோர்ந்து குனிந்து அமர்ந்து உடல் விம்மிக்கொண்டும் இருப்பதை கண்டான்.

போர்முரசு முன்னணியில் ஒலிக்கத் தொடங்கியது. “பீமசேனர் எழுகிறார்! அபிமன்யூவும் கடோத்கஜனும் உடன் எழுகிறார்கள்! எழுக! போர் வெல்க! வெல்க குருகுலம்! வெல்க மின்கொடி! வெல்க அறம்!” என்று போர்முரசு கூவியது. படைவீரர்கள் திகைத்தவர்போல ஒருவரை ஒருவர் நோக்கினர். சிலர் எழுந்து முழவொலி கேட்ட திசை நோக்கி பொருளிலாது கைசுட்டினர். சில இடங்களில் வசைச்சொற்களும் கூச்சல்களும் எழுந்தன. பாகனிடம் “முகப்புக்குச் செல்க!” என சுருதகீர்த்தி ஆணையிட்டான். செல்வதற்குள் அங்கு பெரும்போர் மூண்டுவிட்டிருப்பதை ஓசைகளிலிருந்து உணர்ந்தான். “தேரை போர்முனைக்கு செலுத்துக!” என்றான். “தாங்களும் கலந்துகொள்ளப் போகிறீர்களா?” என்றான் தேர்ப்பாகன். “ஆம், வேறு வழியில்லை. இப்போரில் இனி பழியென்று எதுவும் கொள்வதற்கில்லை. தந்தை சொன்னதைப்போல் வெற்றியெனில் பழியை சற்று குறைத்துக்கொள்ளலாம்” என்றான்.

அவனுடைய தேர் படைமுகப்பிற்குச் சென்றபோது பீமசேனர் நடுவிலும் கடோத்கஜனும் அபிமன்யூவும் இருபக்கமும் நிற்க பாண்டவர்களின் படையொன்று அலைவடிவு கொண்டு எழுந்து பின்னர் நீண்டு வேல் வடிவம் கொண்டு கௌரவர்களின் படைகளுக்குள் ஊடுருவிச் சென்றுவிட்டதை கண்டான். கௌரவர்கள் முற்றிலும் எதிர்ப்பற்றவர்களாக இருந்தனர். அபிமன்யூ கௌரவப் படைவீரர்களை வெறும் மரப்பட்டை இலக்குகள் மட்டுமே என்பதுபோல் அறைந்தறைந்து வீழ்த்திக்கொண்டிருந்தான். அவனைச் சுற்றி விழுந்த கௌரவர்களாலான வெளி உருவாயிற்று. மறுபுறம் கடோத்கஜன் கழைகளிலும் கொக்கிக்கயிற்றிலுமாக காற்றில் பறந்து கதையால் கௌரவர் தலைகளை அறைந்து உடைத்தான். அவனைத் தொடர்ந்த இடும்பர்கள் எதிர்கொண்ட அனைவரையும் எதிர்த்து குருதிச்சேறென தெறிக்கவைத்தனர்.

கௌரவ மைந்தர்கள் கீர்த்திமானும் கீர்த்திமுகனும் நீரஜனும் நிரலனும் அபிமன்யூவால் கொல்லப்பட்டார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் முட்டித் ததும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கான ஆணைகள் ஏதும் எழவில்லை. காலபதனும் புசனும் தருணனும் தமனும் அதரியும் அபிமன்யூவின் அம்புகளால் வீழ்த்தப்பட்டனர். அவர்களின் இறப்பை அறிவிக்கும் பொருட்டு கௌரவர் முரசுகள் முழங்கவில்லை. பீமசேனர் தேரிலிருந்து ஊன்றுவேலில் முன்னெழுந்து சென்று கௌரவர்களின் தேர்களை அடைந்து கதையால் அறைந்து உக்ராயுதனையும் துர்விகாகனையும் பாசியையும் கொன்றார். அவர்கள் தலைசிதறி நிலத்தில் விழுந்தபோதும்கூட கௌரவர்கள் போருக்கெழவில்லை. கண்ணீர் நிறைந்த முகங்கள் நம்பமுடியாத வெறிப்புடன் பீமசேனரை நோக்கின. விட்டில்போல களமெங்கும் தாவி அவர்களின் தலைகளை அத்திகைப்பினூடாக சேர்த்து அறைந்துடைத்து தெறிக்க வைத்தார். உக்ரசிரவஸும் உக்ரசேனனும் செத்துவிழுந்தனர். விவித்சுவும் துர்விமோசனும் தேரிலேயே குருதி சிதறி விழுந்தனர்.

மேலும் மேலுமென கௌரவப் படைகளுக்குள் சென்றுகொண்டிருந்தது அவர்களின் படை. சகுனியின் முரசு விழித்துக்கொண்டு கூவத்தொடங்கியது. “அழிவு! பேரழிவு! தடுத்து நிறுத்துக! பீமனை தடுத்து நிறுத்துக!” அதைத் தொடர்ந்து திருஷ்டத்யும்னனின் ஆணை முரசொலியாக எழுந்தது. “பீமனுக்கு துணைசெல்க! கௌரவர்களை வெல்க!” சகுனியின் ஆணைகளுடன் கௌரவரும் மைந்தரும் களம்பட்டதை அறிவிக்கும் முரசொலிகள் எழுந்தன. அதைக் கேட்டதும் பாண்டவப் படையினர் எண்ணியிராக் கணம் ஒன்றில் போர்வெறி கொண்டனர். கூச்சலிட்டபடி பெருகிவந்து பீமசேனரின் படையுடன் இணைந்துகொண்டனர். அவர்களின் கூச்சல் முழக்கை கேட்டு சுருதகீர்த்தி திரும்பிப் பார்த்தான். வெறிகொண்ட முகங்களில் பற்கள் மின்னின. அவர்கள் நகைத்துக்கொண்டும் வசைகூவிக்கொண்டும் நடனமிட்டபடியும் வந்தனர்.

கௌரவ வில்லவர்களும் காலாட்களும் பாண்டவர்களால் நிரைநிரையாகக் கொல்லப்பட்டு சரிந்தனர். விழுந்த சடலங்களை ஓங்கி மிதித்தனர் பாண்டவப் படையினர். தலைகளை வெட்டித் தூக்கி வீசினர். உடல்கள் மேல் நின்று கூத்தாடினர். “உங்கள் பிதாமகரின் குருதி இது, இழிமக்களே!” என்று கூவியபடி ஒருவன் வெட்டுண்ட தலையின் குருதியூற்றை தன் தலைக்குமேல் தூக்கிப்பிடித்தான். அதை நாநீட்டி நக்கிக் குடித்தான். “உங்கள் பிதாமகர் விண்ணிலிருந்து நோக்கட்டும்! அவர் கையால் களம்பட்ட எங்கள் தோழர்கள் அங்கு நின்று ஆர்க்கட்டும்!” என்று ஒருவன் கூவினான். “கொல்க… எண்ணாது கொல்க! எஞ்சாது கொன்று கடந்துசெல்க!” அனைத்து வீரர்களும் நகைத்துக்கொண்டிருந்தனர்.