திசைதேர் வெள்ளம் - 73

bowசுருதகீர்த்தி பிரதிவிந்தியனின் பாடிவீட்டை அடைந்தபோது அங்கு சதானீகனும் சுதசோமனும் இருந்தனர். கவச உடையணிந்திருந்த அவன் புரவியிலிருந்து இறங்கி ஏவலனிடம் கடிவாளத்தை அளித்துவிட்டு சிறிய பெட்டி மேல் அமர்ந்து ஏவலன் கவசங்கள் அணிவிக்க முழங்கையை கால்மடித்த முட்டுகளில் ஊன்றி நிலம் நோக்கி அமர்ந்திருந்த பிரதிவிந்தியனை அணுகி “வணங்குகிறேன், மூத்தவரே” என்றபின் அப்பால் கைகட்டி நின்றிருந்த சுதசோமனை நோக்கி “சுருதசேனன் வரவில்லையா?” என்றான். “இல்லை” என்று சுதசோமன் தலையசைத்தான்.

சுருதகீர்த்தி திரும்பிப்பார்க்க அப்பால் நின்ற ஏவலன் வந்து மென்மரத்தாலான பெட்டியை அவன் அமரும்பொருட்டு வைத்தான். அவன் அமர்ந்துகொண்டு “வரும் வழியெங்கும் கெடுநாற்றம் வீசுவதுபோல் உணர்ந்தேன்” என்றான். “ஏன்?” என்று பிரதிவிந்தியன் விழிகளைத்தூக்கி கேட்டான். “வீரர்கள் நேற்று இரவு முழுக்க களியாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். துயின்று எழுந்த பின்னரும் அதே உளநிலை நீடிக்கிறது” என்றான். “அதனால் என்ன?” என்றான் பிரதிவிந்தியன். சுருதகீர்த்தி “கீழ்மை!” என்றான். “அது எப்போதுமுள்ளதுதானே?” என்றான் பிரதிவிந்தியன்.

“மூத்தவரே, நேற்று அவர்கள் அந்த உளநிலையில் இருந்ததை அகிபீனாவின் வெறியென்றோ போருக்குப் பிந்தைய உளச்சோர்விலிருந்து வெளிவரும் முயற்சியென்றோ சொல்லலாம். அது அவர்களிடமில்லை. அத்தருணத்தில் அவர்கள் மேல் கூடும் தெய்வங்கள் மண்ணின் ஆழத்திருலிருந்தும் இருளுக்கு அப்பாலிருந்தும் வருபவை. ஆனால் துயின்றெழுந்து படைக்கலம் அணிந்துகொண்டிருக்கும் அவர்கள் இன்று கொண்டிருக்கும் உணர்ச்சி அவர்களுடையதேதான்” என்றான் சுருதகீர்த்தி.

சுதசோமன் “அவர்கள் உள்ளிலிருந்தும் பேய்த்தெய்வங்கள் எழுந்து வரலாம்” என்றான். அவனை வெறுமனே நோக்கியபின் எரிச்சலுடன் “சென்று சற்று சுற்றி பாருங்கள். அவர்களின் சொற்களை செவிகொள்ளுங்கள். இந்த மூன்று யுகங்களின் மானுடம் இங்கு படைத்துள்ள அனைத்து நெறிகளும், அனைத்து அறங்களும், அத்தனை அழகுகளும், மேன்மைகளும் இடிந்து சரிந்து கிடப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். ஒன்றும் மிச்சமில்லை. தாய் என்றும் மனைவியென்றும் மகளென்றும் பாராத நிலை என்று பேச்சுகளில் கேட்டிருக்கிறேன், இங்குதான் செவிகளால் அறிந்தேன்” என்றான்.

தலையை மீண்டும் உலுக்கி “எண்ணிச் சென்றடையாத கீழ்மை. எத்தனை ஆழங்களுக்கு மனித உள்ளத்தால் சென்றடைய முடிகிறது! மூத்தவரே, அத்தனை ஆழங்களுக்குச் சென்றாலும் மனிதனுக்கு சொல்லுக்கு பஞ்சம் ஏற்படுவதில்லை. அவையனைத்தையும் அவன் எங்கோ ஏற்கெனவே சொல்லாக்கி சேர்த்திருக்கிறான் என்று பொருள். அடுக்கடுக்காக செல்லும் பாதாளக் கரவறைகளில் நிறைந்துள்ளன அவன் ஒருபோதும் வெளியே எடுத்து நோக்கியிராதவை. அழுக்குகள், அழுகல்கள், நஞ்சுகள்” என்றவன் கண்களை மூடிக்கொண்டு “புழுக்களும் மலமும் சீழும் மலைமலையாக கொட்டிக்கிடப்பதுபோல்… அவை பேராறுகளாக ஓடுவதுபோல்” என்றான்.

சுதசோமன் “மேன்மைகளில் அவ்வளவு உச்சத்திற்கு உள்ளம் சென்று சொல்லை அடையமுடியுமெனில் அதே விசை ஊசலின் மறுமுனைக்கும் இருக்குமல்லவா?” என்றான். “உங்கள் கசப்பை பங்கிட நான் இங்கு வரவில்லை, மூத்தவரே” என்றான் சுருதகீர்த்தி. “பின் எதற்காக வந்தாய்? அவருடைய நூலறிவை பங்கிடவா? எந்த நூலறிவனும் சில ஆயிரம் பக்கங்களை புரட்டிவிட்டால் எஞ்சுவது இதே கசப்புதான்” என்று சுதசோமன் சொன்னான். “மந்தா, அவனை பேசவிடு” என்றான் பிரதிவிந்தியன். சுதசோமன் “நான் தேர்கள் ஒருங்கியுள்ளனவா என்று பார்க்கிறேன்” என்று கவசங்கள் உரசியும் குலுங்கியும் ஒலிக்க கிளம்பிச் சென்றான்.

சுருதகீர்த்தி “இவர்கள் யார், மூத்தவரே? இவர்கள் அல்லவா எழவிருக்கும் புதிய வேதத்தின் பொருட்டு போர்புரிபவர்கள்? புத்துலகை ஆக்கும் நெறிகளை இங்கு நிறுவப்போகிறவர்கள்? இத்தனை கீழ்மைகளிலிருந்தா அது முளைக்கும்?” என்றான். பிரதிவிந்தியன் “இரு ஒப்புமைகளை நூல்களிலிருந்து எடுத்து நான் சொல்ல முடியும். இளையோனே, சீழும் குருதியும் கலந்த கருப்பையிலிருந்தே குழவி எழுகிறது. மட்கி அழுகும் சேற்றிலிருந்தே தாமரை முளைத்து மேலெழுகிறது” என்றான். “எந்த ஒப்புமைகளும் இதற்கு பொருந்தாது” என்று சுருதகீர்த்தி சொன்னான். “ஒப்புமைகளைக்கொண்டு விளையாடத் தொடங்கினால் முடிவே இல்லை.”

“ஒப்புமைகளைப் பற்றி கல்லாதவர்களிடம் ஒரு ஒவ்வாமை இருக்கிறது. அது வெறுமனே கற்றோரின் வெற்று உளப்பயிற்சி என்றும், கற்பனையின் விளையாட்டென்றும் எண்ணுகிறார்கள். இளையோனே, இப்புவியில் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடத்தக்கவை என்பதிலேயே உண்மை ஒன்று ஒளிந்துள்ளது. ஓர் உளநிகழ்வையோ புவிநிகழ்வையோ பொருட்களால் ஒப்புமைப்படுத்திவிட முடியுமென்பதுதான் மானுட அறிதலுக்கு இறை அளித்துள்ள ஒரே வாய்ப்பு. இப்புவியையும் மானுட உள்ளத்தையும் விண்நிறைந்த பிரம்மத்தையும் அறிந்துகொள்வதற்கு ஒப்பிடுவதன்றி வேறுவழியில்லை. பிரம்மம் என்பதே ஒரு மாபெரும் ஒப்புமை மட்டுமே” என்றான் பிரதிவிந்தியன். “அடிப்படையில் அறிவு என்பது ஒப்புமைகளை உருவாக்கும் திறன் மட்டுமே. மெய்மை என்பது ஓர் அழகிய ஒப்புமையே.”

அப்பால் கைகட்டி நின்ற சதானீகன் “நீங்களேகூட ஓர் ஒப்புமை வழியாகவே அங்கு நிகழ்ந்ததென்ன என்று சொன்னீர்கள், மூத்தவரே” என்றான். “சீழும் மலமும் குருதியும் போன்ற சொற்கள்.” களைப்புடன் “ஆம்” என்று சுருதகீர்த்தி சொன்னான். பிரதிவிந்தியன் அவன் தோள்மேல் கைவைத்து “எண்ணிப் பார், உடல் கிழித்து வெளிவரும் குருதி எத்தனை தூய்மையானது. தெய்வங்களுக்கு அமுதென அதை படைக்கிறோம். நாமும் சமைத்து உண்கிறோம். அழகியது, அன்று பூத்த செம்மலரின் ஒளிகொண்டது. அனலுக்கு நிகரானது. நீரில் எழுந்த அனல் என்று அதை தொல்நூல்கள் சொல்கின்றன. ஆனால் இரு நாழிகைப்பொழுது கடந்தால் அது சீழ். மேலும் இரு நாழிகை கடந்தால் மலம். முத்தமிட்டு உடல்சேர்த்து நாமறியும் குழவிகூட தன் உடலுக்குள் கொண்டிருப்பது குருதியும் மலமும்தான்” என்றான்.

“இதைப்பற்றி பேசிப் பேசி குறைத்துக்கொள்ளலாம், மூத்தவரே. ஆனால் அங்கு வெளியே எழுந்திருக்கும் இருட்டை எவ்வகையிலும் அகற்றிவிட இயலாது” என்றான் சுருதகீர்த்தி. சதானீகன் “அவர்கள் மெய்யாகவே அதனூடாக ஒரு விடுதலையை உணர்கிறார்கள். இந்தப் பத்தாவது நாள் போர் எந்த நம்பிக்கையும் எஞ்சாத இருண்ட சுவரில் முட்டி நின்றுவிட்டிருக்கிறது. இனி பொருளற்ற சாவன்றி எதுவும் எஞ்சியிருக்கவில்லை. அந்தப் பெருஞ்சலிப்பிலிருந்து இவ்வாறு எளிய விடுதலையை அடைகிறார்களா?” என்றான். “ஆம், இருக்கலாம்” என்று பிரதிவிந்தியன் சொன்னான். “சோர்விலிருந்தும் துயரிலிருந்தும் மீள்வதற்கு மானுடர் காமத்தையே கருவியாக்குகிறார்கள். மெய்யாகவே அது அவர்களை விடுதலை செய்கிறது” என்றான்.

“இது காமம் அல்ல” என்று கைநீட்டி சுருதகீர்த்தி சொன்னான். பற்களைக் கடித்து தாடை இறுகியசைய “இங்கிருப்பது மாபெரும் மறுப்பு. ஆம், மறுப்பு. மூத்தவரே, காமம் என்பது மாபெரும் ஏற்பு. பெண்ணை, அழகை, களிப்பை முற்றேற்கும் நிலை. அதை சூழ்ந்திருக்கும் இப்புவியின் ஆயிரம் ஆயிரம் இனியவற்றை ஏற்பது அது. அவர்கள் அங்கே செய்து கொண்டிருப்பது காமக்கொண்டாட்டமல்ல, காம மறுப்பு. முடிவிலாத இழிசொற்களால் காமத்தை கீழ்மையினும் கீழ்மை என்றாக்குகிறார்கள். அரசை, அறத்தை, தெய்வங்களை, மூதாதையரை, குடிமாண்பை, அனைத்தையும் இழிவுசெய்கிறார்கள்” என்றான்.

“அது ஒரு உளநடிப்பாக இருக்கலாம்” என்றான் சதானீகன். “இந்த உச்சத்தில் அவை எதுவும் தங்களை காக்கவில்லை என்ற சினமாக இருக்கலாம்.” பிரதிவிந்தியன் “அத்துடன் அவற்றில் ஏதேனும் ஒரு துளி தங்களிடம் எஞ்சியிருந்தால் இத்தருணத்தை எதிர்கொள்ள முடியாது என்பதனால் அவர்கள் அதை உதறிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. மலை ஏறுபவர்கள் எடை குறைப்பதுபோல் அவற்றைக் கழற்றி கீழிட்டு செல்கிறார்கள் போலும்” என்றான்.

சுருதகீர்த்தி எழுந்துகொண்டு “எனக்குத் தோன்றுவது பிறிதொன்று. இதுநாள் வரை அவர்கள் இறப்பை அஞ்சி அணிந்து வந்த கவசங்களை ஒவ்வொன்றாக கழற்றி வீசுகிறார்கள். ஆடையும் கவசமே. வாய்ப்பிருக்கும் தருணங்களிலெல்லாம் ஆடைகளை கழற்றி வீசுவதே மானுட இயல்பு. மானுடரின் விடுதலையும் இன்பமும் ஆடையற்ற நிலையிலேயே அமைகின்றன. இது ஒருவகை நிர்வாணம்” என்றான். பிரதிவிந்தியன் “இதைப்பற்றியும் நூல்கள் சொல்கின்றன. இது வைதரணி. அனைத்துக் கீழ்மைகளும் ஓடும் பெருநதி. யோகிகள் பல்லாயிரம் படிகளை ஏறி சென்றடையும் எல்லை. இந்த வீரர்கள் பின்னிருந்து துரத்தும் இறப்பால் அதன் கரைவரை வந்தடைந்துவிட்டார்கள்” என்றான்.

சுருதகீர்த்தி அதை கேட்காதவன்போல் அமர்ந்திருக்க பிரதிவிந்தியன் “இப்பல்லாயிரங்களில் ஒருவர் அதை கடந்தால் நன்று” என்றான். “அதில் மூழ்கி அழியும் பிறர் பொருட்டு ஒருவரேனும் அமுதை அறியவேண்டும்” என்றான் சுருதகீர்த்தி. பிரதிவிந்தியன் எழுந்துகொண்டு சிரித்து “யோகிகளிலும் பல்லாயிரத்தில் ஒருவரே சென்றடைகிறார்கள் எனப்படுகிறது” என்றான். சுருதகீர்த்தி “காலையிலிருந்தே விந்தையான ஓர் உளக்கலக்கம். கிளம்பி இங்கு வருவதற்குள் இக்காட்சி அக்கலக்கத்தை பெருமடங்கு பெருக்கியது” என்றான்.

பிரதிவிந்தியன் வினாவுடன் நோக்க “நேற்றிரவு ஒரு கனவு கண்டேன். நான் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் பீஷ்ம பிதாமகரின்மேல் அம்புகளைச் செலுத்தி அவரை வீழ்த்துகிறேன். அவர் ஒரு கரிய மலைப்பாறை மேல் அமர்ந்திருப்பதாகவே அம்பு செலுத்தும்போது நான் கண்டேன். ஆனால் அவர் உடல்மடங்கி குருதி சிந்தி விழுந்தபோது அந்தப் பாறை ஓர் அன்னையின் மடி என்று உணர்ந்தேன். அவ்வன்னை கல்லாலான தன் பெருங்கைகளால் அவரை எடுத்து தன் நெஞ்சோடணைத்து குனிந்து அவர் முகத்தை நோக்கி விழிநீர் சிந்துவதை பார்த்தேன்” என்றான் சுருதகீர்த்தி.

“விழித்துக்கொண்டு எழுந்து வெளிவந்தபோது விடிவெள்ளி முளைத்திருந்தது. என் அணுக்க ஒற்றன் வந்து ஒரு செய்தி சொன்னான். நேற்றிரவு தந்தையர் ஐவரும் சிகண்டியும் இளைய யாதவரும் மட்டும் இளைய யாதவரின் குடிலில் சந்தித்திருக்கிறார்கள்” என்றான். “ஆம், நானும் அறிந்தேன்” என்று பிரதிவிந்தியன் சொன்னான். “நாமறியாத ஏதேனும் படைசூழ்கைகள் வகுத்திருக்கலாம். அது எதுவாயினும் உயர்ந்ததல்ல” என்றான் சுருதகீர்த்தி. “எவ்வாறு சொல்கிறாய்?” என்று பிரதிவிந்தியன் கேட்டான். “எதுவும் கீழ்மை கொள்ளும்தோறும் மந்தணமாகிறது” என்றான் சுருதகீர்த்தி.

பிரதிவிந்தியன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. சுருதகீர்த்தி “இன்றுடன் இந்தப் போரின் தேக்கம் முடிவடையுமென்றும், எங்கோ ஓர் உடைப்பு நிகழுமென்றும் ஓர் உள்ளுணர்வு எனக்கிருக்கிறது” என்றான். பிரதிவிந்தியன் “ஆம், இன்றோ நாளையோ. எந்தத் தேக்கமும் அவ்வாறே முடிவிலாது நீடிக்க இயலாது. ஒழுக்கே புடவியின் இயல்பு. தேக்கம் என்பது ஒழுக்குக்காக ஒவ்வொரு அணுவும் தன் எல்லைகளை முட்டிக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே. எங்கேனும் ஏதேனும் ஒரு வாயில் உடைந்து திறந்தே ஆகவேண்டும்” என்றான்.

“இன்று பீஷ்மர் களம்படுவார்” என்று சுருதகீர்த்தி சொன்னான். “என்ன சொல்கிறாய்?” என்று பிரதிவிந்தியன் திகைப்புடன் கேட்டான். “மூத்தவரே, எண்ணி நோக்கினால் தெள்ளத்தெளிவாக தெரிவது அது. பீஷ்மர் களம்படாமல் இந்த தேக்க நிலையில் மயிரிழை அளவுகூட மாற்றம் ஏற்படப் போவதில்லை. இளைய யாதவர் இன்று முதன்மையாக விழைவது அதையே. சிகண்டி பீஷ்மரைக் கொல்லும் நோன்பு கொண்டவர். அவருடனும் அவர் மைந்தருடனும் அமர்ந்து தந்தையர் சொல்லாடுகிறார்கள் என்றால் பீஷ்மரை வீழ்த்தும் வழியொன்றை கண்டுவிட்டார்கள் என்றே பொருள்.”

“இந்த ஒன்பது நாளும் பீஷ்மரை வீழ்த்தவே முயன்றுகொண்டிருக்கிறோம்” என்றான் பிரதிவிந்தியன். “ஆம், இதுவரை பீஷ்மரை வீழ்த்த முயன்றவர்கள் பிறர். இன்று முதல்முறையாக அதற்கு இளைய யாதவர் எழுகிறார்” என்றான் சுருதகீர்த்தி. பிரதிவிந்தியன் அவனை வெறுமனே நோக்கினான். “மூத்தவரே, தாங்கள் அதை உணரவில்லையா, இளைய யாதவர் வெல்லற்கரியவர் என்று? அவர் முயற்சிகள் எதுவும் பிழைபடப்போவதில்லை என்று? இங்கு நிகழ்வன அனைத்தையும் முன்னரே கடந்து அங்கு சென்று நின்று நாம் அங்கு செல்வதற்காக காத்திருக்கிறார்” என்றான்.

“ஆம், சில தருணங்களில் இவை அனைத்தையும் அவரே இயற்றுகிறார் என்று தோன்றும். சில தருணங்களில் அவர் பார்வையாளராக அமர்ந்திருக்கும் மாபெரும் கூத்துமேடையில் நாம் அனைவரும் நடித்துக் கொண்டிருப்பதாக தோன்றும். இளமையிலிருந்தே அவரைப்பற்றி சொல்லிச் சொல்லி அவரை நாம் அணுகவோ அறியவோ முடியாதபடி மாற்றி வைத்திருக்கிறார்கள்” என்றான். “அணுகவோ அறியவோ முடியாதவர் என்னும் உண்மையை நமக்கு கற்பித்திருக்கிறார்கள்” என்றான் சுருதகீர்த்தி. “எவ்வாறாயினும் அது நிகழட்டும். அறமிலி என்று அவருக்கு ஒரு பெயர் இருக்கிறது” என்றான் பிரதிவிந்தியன். “சூதர்கள் அவரை சொல்லும் ஆயிரம் சொற்களில் அதுவும் ஒன்று. அறவடிவன், அறமிலி, அறம்கடந்தோன்.”

“இன்று அவ்விரண்டாம் பெயர் சூடி நின்றிருக்கப் போகிறாரா?” என்று சுருதகீர்த்தி கேட்டான். “அறியமுடியாதவர் என்று முன்னரே சொல்லிவிட்டோம். அதன்பின் நாம் ஏன் இத்தனை சொல்லெடுக்க வேண்டும்?” என்றான் பிரதிவிந்தியன். சுதசோமன் நடந்து வந்து “மூத்தவரே, தேர்கள் ஒருங்கிவிட்டன. நாம் இப்போது கிளம்பினால்தான் களமுனைக்கு செல்ல முடியும். பொழுதில்லை” என்றான். பின்னர் சுருதகீர்த்தியிடம் “நானும் கேட்டேன் படைவீரர்களின் பாடலை. மிக அரிய சொல்லாட்சிகள். ஆனால் என்ன விந்தை என்றால் எவையுமே எனக்கு புதியவை அல்ல. அவற்றை அவ்வாறு சொல்லக்கூடும் என்பதில்தான் புதுமை உள்ளது” என்றான்.

“அத்தனை சொற்களையும் மொழியறிந்த ஐந்தாறு ஆண்டுகளுக்குள்ளேயே நானும் அறிந்திருக்கிறேன்” என்றான் சதானீகன். “மொழியை அறியும்போது அவ்வனைத்தும் கூடவே வந்துவிட்டிருக்கின்றன.” பிரதிவிந்தியன் “செல்வோம்” என்று சொல்லி சுருதகீர்த்தியின் தோளில் தட்டிவிட்டு தேர் நோக்கி சென்றான். சுருதகீர்த்தி தொடர்ந்தான். அவனுடன் நடந்தபடி சதானீகன் “மூத்தவரே, தாங்கள் உணரவில்லையா?” என்றான். “என்ன?” என்றான் சுருதகீர்த்தி. “இந்தக் கீழ்மை ஏன் என்று?” என்றான் சதானீகன். “ஏன்?” என்றான் சுருதகீர்த்தி. “பிதாமகர் வீழ்வார். அறமிலா வழியால். அக்கீழ்மையை எதிர்கொள்ள படையினர் உளம் ஒருங்குகின்றனர்.” சுருதகீர்த்தி நின்று கூர்ந்து நோக்கினான். “அவர்களை ஆளும் தெய்வங்கள் அங்கே அவர்களை கொண்டுசென்று நிறுத்துகின்றன” என்று சதானீகன் சொன்னான். சுருதகீர்த்தி ஒன்றும் சொல்லாமல் நடந்தான்.

bowகளமுனை நோக்கி அவர்கள் தேரில் சென்றுகொண்டிருக்கையில் பக்கவாட்டில் இருந்த ஏழாம் படைப்பிரிவின் முகப்பில் ஷத்ரதர்மனும் ஷத்ரதேவனும் நின்றிருப்பதை சுருதகீர்த்தி பார்த்தான். “மூத்தவரே, பாஞ்சாலர் சிகண்டியின் மைந்தர்” என்றான். சுதசோமன் திரும்பிப்பார்த்து “நேற்றே அவர்களை பார்த்தேன். தந்தையைப்போன்றே இருக்கிறார்கள்” என்றான். பிரதிவிந்தியன் திரும்பிப்பார்த்து “எந்த உடல் ஒப்புமையும் இல்லையே?” என்றான். “ஆம், முற்றிலும் பிறிதொரு உடலில் அவர் எழுந்ததுபோல் இருக்கிறார்கள். கல்லில் சுடரை செதுக்கி வைத்ததுபோல்” என்றான் சுதசோமன்.

பிரதிவிந்தியன் தேரை நிறுத்த அவர்களிருவரும் அருகே வந்து தலைவணங்கினர். பிரதிவிந்தியன் அவர்களின் தலைதொட்டு வாழ்த்தினான். ஷத்ரதேவன் “தங்களை பாடிவீட்டுக்கு வந்து கண்டு வணங்கி நற்சொல் பெறவேண்டுமெனும் விழைவு இருந்தது. ஆனால் நேற்றுதான் இங்கு வந்தோம். இன்று புலரியிலேயே தந்தையுடன் போருக்குச் செல்லவேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்றான். “இங்கே பாஞ்சாலர்களின் முகப்புத்தேர்ப் படையில் எங்களுக்கு படைப்பணி ஒதுக்கப்பட்டுள்ளது.”

சுருதகீர்த்தி “நீங்கள் வில்பயின்றவர்களா?” என்றான். “ஆம், இருவருமே தந்தையால் வில்லெடுத்து அளிக்கப்பட்டு பயின்றிருக்கிறோம். எங்கள் நாட்டின் விற்தொழில் சற்று மாறுபட்டது. நாங்கள் அம்புகளை கீழ்நோக்கி செலுத்துவோம். அவை நீரில் பட்டு மேலெழுவதுபோல் காற்றிலேயே வளைந்தெழுந்து இலக்குகளை தாக்கும். முதன்மை வில்லவர் அன்றி பிறர் எங்கள் அம்புகளை தடுக்க இயலாது” என்று ஷத்ரதேவன் சொன்னான். சுருதகீர்த்தி “உங்கள் தந்தை எங்கிருக்கிறார்?” என்றான். “படைமுகப்பில்” என்று ஷத்ரதேவன் மறுமொழி சொன்னான்.

பிரதிவிந்தியன் ஒருகணம் எண்ணியபின் சுருதகீர்த்தியிடம் “இளையோனே, உனது படைப்பணி எங்கு ஒதுக்கப்பட்டுள்ளது? என்றான். “பாஞ்சாலப் படைகளில்தான்” என்று சுருதகீர்த்தி சொன்னான். “தந்தைக்குப் பின்னால் காவல் அணியாக செல்லும்பொருட்டு இன்றும் பணிக்கப்பட்டுள்ளோம்.” பிரதிவிந்தியன் “நன்று, இம்மைந்தரை நீயே உடன் அழைத்துச் செல்க!” என்றபின் “இவர்கள் உன் பொறுப்பில் களம் காணட்டும்” என்றான். அவன் சொல்வதை புரிந்துகொண்டு சுருதகீர்த்தி தலைவணங்கினான்.

ஷத்ரதேவனும் ஷத்ரதர்மனும் உடன்வர சுருதகீர்த்தி பாஞ்சாலப் படைகளினூடாக சென்றான். அவர்கள் சொல்லின்றி புரவியில் உடன்வந்தனர். சுருதகீர்த்தி ஷத்ரதர்மனைப் பார்த்துவிட்டு “இவர் பேசுவதில்லையா?” என்றான். “இல்லை, இளமையிலேயே அவனுக்கும் சேர்த்து நான் பேசுவது வழக்கமாகிவிட்டது” என்று ஷத்ரதேவன் சொன்னான். “தந்தையை பார்த்தீர்கள் என்று அறிந்தேன்” என்றான் சுருதகீர்த்தி. “ஆம். ஆனால் எப்போதும் அவரை பார்த்துக்கொண்டே இருப்பதுபோல்தான் உணர்ந்தோம். ஆகவே நேற்றைய சந்திப்பு எவ்வகையிலும் புதிய நிகழ்வாக அமையவில்லை. என்றுமென நேற்றும் கண்டோம் என்று மட்டுமே தோன்றுகிறது.”

சுருதகீர்த்தி தன்னுள்ளிருந்து எழுந்த அறியாச் சீற்றமொன்றை அறிந்து வியந்து அதை அடக்கிக்கொள்ள முயல்வதற்குள்ளாகவே அவன் நா அதை கூறியது. “அது நன்று. இன்றுடன் அவர் களம்பட்டாலும் உங்களுடன் அவர் இருந்துகொண்டிருப்பார்.” ஆனால் ஷத்ரதேவனின் விழிகளில் எந்த மாறுதலும் தென்படவில்லை. “ஆம், அவர் எப்போதும் எங்களுடன் இருப்பார். எங்கள் குடிகளில் வாழ்வார்.” சுருதகீர்த்தி அவனை திரும்பிப் பார்த்துவிட்டு “மைந்தர்கள் உள்ளனரா?” என்று கேட்டான். “இருவருக்கும் சேர்த்து ஏழு மைந்தர்கள்” என்று ஷத்ரதேவன் சொன்னான். “அது எங்கள் தந்தையின் ஆணை.”

அவர்கள் படைமுகப்பிற்குச் சென்று சேர்ந்தனர். அங்கே தேரில் நின்றிருந்த சிகண்டியை தொலைவிலிருந்தே சுருதகீர்த்தி பார்த்தான். ஒவ்வொரு முறை அவரை பார்க்கும்போதும் ஏற்படும் புரிந்துகொள்ளமுடியாத துணுக்குறல் அப்போதும் ஏற்பட்டது. பல்லாயிரம் பேரின் நடுவே நின்றிருக்கையிலும் அவர் அவர்களில் ஒருவரல்ல என்றும், உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் முற்றிலும் பிறிதொருவர் என்றும் தோன்றும். மானுட உடலில் தெய்வங்கள் குடியேறுகையில் அத்தெய்வத்திற்குரிய தனித்தன்மை ஒன்று உடலில் தோன்றுவதுபோல. சினம் மிக்க காவல்தெய்வங்கள் எழுகையில் உடலெங்கும் ஒவ்வொரு தசையிலும் சினம் எழும். துயர் மிகுந்த அன்னை தெய்வங்கள் நனைந்த துணிப்பாவைபோல் அவ்வுடலை துயரத்தால் நிறைத்துவிடும். தெய்வங்களின் கோணல் தெய்வங்களின் கூர் உடலென்றே விழிக்கு தென்படும்.

சிகண்டியின் உடலுக்குள் விளங்கும் தெய்வமென்ன என்று அவன் வியப்பதுண்டு. அது வில்லிழுத்துக் கட்டிய நாணில் திகழும் தெய்வம் என்று ஒருமுறை எண்ணினான். அவர் உடலில் அனைத்துத் தசைகளும் இறுகி நின்றிருக்கும். நூற்றுக்கணக்கான நாண்கள் இழுத்துக் கட்டப்பட்ட விற்களின் தொகை. அல்லது நாண்முறுகி ஆணி நிலைத்த எழுபத்துநான்கு நரம்புகொண்ட பேரியாழ். மானுட உடலில் எப்போதும் ஒரு தசை இறுகினால் பிறிதொரு தசை தளரும். ஒன்று உறைந்தால் பிறிதொன்று நெகிழும். ஒவ்வொன்றும் இறுகி நின்றிருக்கும் ஓர் உடலென்று அவன் அவரை நினைத்துக்கொள்வதுண்டு.

அணுகிச் செல்லுந்தோறும் சிகண்டி மேலும் தெளிந்து வந்தார். முதலில் அவர் உடலை அப்போதுதான் அத்தனை தூய்மையாக பார்ப்பதாக அவனுக்கு தோன்றியது. குழலை சீவி கட்டியிருந்தார். தாடியையும் சீவி நுனியில் முடிச்சிட்டு நெஞ்சில் இட்டிருந்தார். இடையிலும் மார்பிலும் புதிய தோலாடைகள் அணிந்திருந்தார். கச்சை புதிதாக இருந்தது. அதில் பளபளக்கும் பிடி கொண்ட குத்துவாள். கவசங்கள் நன்கு தீட்டப்பட்டவைபோல நீரொளி கொண்டிருந்தன. கால்குறடுகள்கூட வெள்ளியென மின்னின. வில்லும் அம்பறாத்தூணியும் மட்டும் குருதிபடிந்து பழையவையாக இருந்தன.

அந்தக் களத்தில் எவரும் புத்தாடை அணிந்திருக்கவில்லை. மாமன்னர் யுதிஷ்டிரர்கூட மீண்டும் மீண்டும் போருக்கணிந்த, குருதி நனைந்து இறுகி மரக்கட்டை போலாகிவிட்ட மரவுரியையே அணிந்திருந்தார். ஒவ்வொரு உடலிலும் மரவுரியால் துடைத்து நீவி எடுத்த பின்னும் எஞ்சும் குருதி உலர்ந்த கரும்பசையாலான வரிகள் நிறைந்திருந்தன. காதுகளுக்குப் பின்னாலும், கழுத்திலும், தோள் மடிப்புகளிலும், கைவிரல்களின் இடுக்குகளிலும் குருதிப்பிசின் எப்போதுமிருந்தது. ஆனால் சிகண்டி நீராடி எழுந்தது போலிருந்தார்.

ஷத்ரதேவனும் ஷத்ரதர்மனும் அருகே சென்று சிகண்டியை வணங்கினர். சிகண்டி வெற்றுவிழிகளுடன் அவர்களை பார்த்தார். சுருதகீர்த்தி “இப்படைப்பிரிவின் வில்லவர்களில் ஒருவனாக நிற்கும்பொருட்டு எனக்கு ஆணை வந்துள்ளது, பாஞ்சாலரே” என்றான். விழிகளை அசைத்து அதை ஏற்ற சிகண்டி திரும்பிக்கொண்டார். அவர் நெடும்பொழுதுக்கு முன்னரே முற்றிலும் பேச்சை நிறுத்திவிட்டிருந்தார் என்பது முகத்திலிருந்து தெரிந்தது. அத்தருணத்தில் அவரால் பேச இயலாதென்பது இயல்பாகவே இருந்தது. தன்னுள் பேருணர்வுகள் நிறையும் ஒருவர் முற்றிலும் சொல்லிழப்பது இயல்பே. நேற்று இரவு என்ன நிகழ்ந்தது என்று மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டிருந்தாரோ?

அப்போதுதான் சிகண்டி ஒருமுறைகூட பீஷ்மரை படைக்களத்தில் எதிர்கொள்ளவில்லை என்னும் எண்ணம் எழுந்தது. இன்று எதிர்கொள்ளப்போகிறார். அவ்வண்ணமெனில் இன்று பீஷ்மர் கொல்லப்படுவார். ஆனால் அது எவ்வாறு என்று அவன் உள்ளம் வியந்தது. வெல்ல முடியாதவர். தெய்வங்களால் கையிலேந்தி களத்திற்கு கொண்டுவரப்படுபவர். அவரை இக்கடுநோன்பினன் எவ்வாறு வெல்ல இயலும்? தவத்தால் ஒருவர் வடக்கு மலையை இல்லையென்றாக்கிவிட இயலுமா என்ன?

தன் தேரிலேறி பாகனிடம் ஓரிரு சொல் உரைத்த பின் தேர்த்தட்டில் நின்று வில்லையும் அம்புகளையும் நோக்கினான். கையுறைகளை இழுத்துவிட்டு தலைச்சரடை இறுக்கிவிட்டு எதிரே நோக்கியபோது படைமுகப்பில் பீஷ்மர் நின்றிருப்பதை கண்டான். தொலைவிலேயே அவரும் புத்தாடை அணிந்து தன்னை சீர்படுத்திக்கொண்டிருப்பதை அறிய முடிந்தது.