திசைதேர் வெள்ளம் - 7

bow‘போர் என்பது போர் மட்டுமே’ எனும் சொல் எத்தொடர்பும் இன்றி சித்ராங்கதரின் உள்ளத்தில் எழுந்து ஊழ்கநுண்சொல்லென மீண்டும் மீண்டும் ஒலித்தது. போர் என்பது போர் மட்டுமே. இழப்பு அல்ல, இறப்பு அல்ல, வெற்றியோ தோல்வியோ அல்ல, துயரமும் களிப்பும்கூட அல்ல, போர் மட்டுமே. போருக்கெனவே அது நிகழ்கிறது. போரென்று மட்டும் நிகழ்கிறது. போரென்று மட்டுமே எஞ்சுகிறது. பிறிதொன்றல்ல. போர்க்கலை பயின்ற நாட்களில் ஆசிரியர் உத்தபாகு கூறிய வரி அது. பின் எத்தனையோ முறை அவர் அதை சொன்னதுண்டு. பிறர் ஆற்றிய போர்களைப்பற்றி பேசுகையில், காவியங்களின் போர்களைப்பற்றி சொல்லாடுகையில். அது மானுடன் தனக்கென சொல்லிக்கொள்ளும் வெறும் சொல். போர் என்பது எப்போதும் பிறிதொன்றுதான். கணம்தோறும் ஒவ்வொன்று.

அத்தருணத்தில் அது இழப்பு மட்டும்தான். என் இரு மைந்தர்! என் கண்முன் இறந்ததன்றி பிறிதொன்றுமல்ல போர். அவர்களின் புன்னகைக்கும் இளமுகங்களன்றி பிறிதொன்றும் இத்தருணத்தில் என்னுள் இல்லை. ஒருகணம் உள்ளிருந்து எரிகுமிழி ஒன்று வெடித்து உடலெங்கும் பற்றிக்கொண்டதுபோல் தோன்றியது. சினமோ வஞ்சமோ வெறியோ அதற்கப்பால் ஒன்றோ அவரில் நிறைந்தது. வில்லை ஊன்றி குருதி வழுக்கிய இடக்கால் விரல்களால் பற்றி வலக்கையால் நாணிழுத்து செவிக்கு மேல் நீட்டி அம்பு தொடுத்து எதிரில் தோன்றிய முதல் வீரன் நெஞ்சக் கவசத்தை உடைத்து உள்ளே நாட்டினார். துடித்து அவன் விழுந்தபோது எரிபட்ட தோள்மேல் குளிர்தைலத் துளி விழுந்ததுபோல் ஓர் ஆறுதலை உணர்ந்தார். மீண்டும் மீண்டும் அம்புகளை எடுத்து எதிர்ப்பட்ட ஒவ்வொரு வீரனையும் வீழ்த்தியபடி முன் சென்றார். “செல்க! முன் செல்க!” என்று பாகனை நோக்கி கூவியபடியே தேர்த்தட்டில் நின்று தவித்தார்.

இது என் மைந்தருக்கான போர். என் உடன்பிறந்தாருக்கான குருதிப்பழி. இன்னும் எத்தனை பொழுது நான் உயிரோடிருப்பேன் என்று அறியேன். சித்தம் எஞ்சுமட்டும் என் மைந்தருக்கென பழிநிகர் செய்தேன் என்றிருக்கட்டும். எழுந்து சென்று என் தெய்வங்களிடம் “ஆம், என் மைந்தரின் பொருட்டு களத்தில் நின்றேன்” என்று கூறும் ஒரு சொல் மட்டும் எனக்கு எஞ்சட்டும். செல்க! செல்க! செல்க! எதை சொல்லிக்கொண்டிருக்கிறேன்? எவரிடம் சொல்கிறேன்? போரில் சற்றும் பயனற்ற உறுப்பாகிவிடுகிறது சொல்லோடும் உளம். அது செய்வதறியாது நின்று தவிக்கிறது. இரண்டாக, மூன்றாக, நூறாகப் பிரிந்துநின்று முட்டிக்கொள்கிறது. செய்வனவற்றை சொல்லாக்கிக் கொள்கிறது. கேளாச் செவிகளுக்கு அவற்றை அள்ளி வீசுகிறது. அறியாத் தெய்வங்களிடம் முறையிடுகிறது.

ஒவ்வொரு அம்பிலும் தன் உடல் அளித்த விசைக்கப்பால் மும்மடங்கு விசையை உள்ளம் அளிப்பதை உணர்ந்தார். இரும்புக் கவசங்களைக்கூட பிளந்தது அவரது நீள்வாளி. நெஞ்சில் பாய்ந்து மறுபுறம் சென்று தேர்க்காலில் குத்தி நின்று அவ்வீரன் அலறியபடி உருவி விழ குருதி சொட்டி நின்றாடியது. வலப்பக்கம் பீமன் துஷாரர்களின் படைகளை தொடர்ந்து அறைந்து பின்னால் கொண்டுசென்று கொண்டிருந்தான். “சூழ்ந்து கொள்க! பீமசேனனை சூழ்ந்து கொள்க!” என்று முரசுகள் ஒலிக்க சகுனியும் சலனும் இருபுறத்திலும் நீண்டு வலை போலாகி பீமனை நோக்கி சென்றனர். ஏழு கௌரவர்கள் அவ்வளைவின் மையத்தில் அவனை நேருக்கு நேர் எதிர்கொண்டனர். பீமன் கொல்வதன்றி பிறிதறியா வெறிகொண்டிருந்தான். அன்றே களத்தில் உயிர்துறக்கவேண்டுமென முடிவெடுத்தவன் போலிருந்தான்.

பின்னிருந்து சாத்யகியின் படை பீமனைத் தொடர்ந்து வந்து மையப்படையுடன் அவன் கொண்ட இணைப்பை விடாமல் தக்கவைத்தது. பீமன் வில் இழுபடுகையிலேயே துஷார வீரர்களின் உடலுக்குள் உயிர் நின்று அதிர்ந்தது. எண்ணியிராக் கணத்தில் நீள்வேல் ஊன்றி காற்றில் பறந்தெழுந்து புரவிகள் மேல் பாய்ந்து எதிரில் வந்தவர்களை குத்தி தலைக்குமேல் அவர்கள் உடல்களை சுற்றித் தூக்கி அப்பாலிட்டான். சிறகு கொண்டவனைப்போல் தேர்க்கூடுகளின் மேல் தாவி அலைந்தான். மீண்டும் தன் தேரில் வந்திறங்கி அவ்விசையிலேயே அம்பெடுத்து தொலைவில் தெரிந்தவர்களை வீழ்த்தினான்.

சித்ராங்கதர் திரும்பி அவனுக்கு எதிராக படைகொண்டு செல்ல விழைந்தார். ஆனால் எதிரே படைஎழுந்து வந்த சாத்யகியை தென்கலிங்கத்துச் சூரியதேவரும் மையக்கலிங்கத்துச் ஸ்ருதாயுஷும் சூழ்ந்துகொண்டிருந்தனர். சாத்யகி அணுக்கவில்லவர் சூழ அலையென எழுந்துவந்து அவர்களிருவரையும் எதிர்கொண்டான். “கலிங்கர்களுக்கு துணை செல்க! யாதவன் விழுந்தாகவேண்டும்… யாதவனை கொல்க!” என்று அவருக்குப் பின்னிருந்து சகுனியின் ஆணை வந்தது. அக்கணம் ஸ்ருதாயுஷ் அம்புபட்டு தேரில் விழுந்தார். பாகன் அவர் தேரைத் திருப்பி பின்னால் கொண்டுசெல்ல கேடயப் படையினர் எழுந்து அவரை மூடிக்கொண்டனர்.

சித்ராங்கதர் தன் தேரை கிளப்பி சாத்யகியை நோக்கி சென்றார். அவன் முகம் எவ்வுணர்வும் இன்றி கனவிலென நிலைத்திருந்தது. கிளையில் தொங்கி காதலாடும் அரவுகள் என அவன் கைகள் குழைந்தும் வளைந்தும் தேரில் நிறைந்திருந்தன. அசையும் ஆடியிலிருந்து ஒளிச்சரடுகள் என அம்புகள் தெறித்தெழுந்தபடியே இருந்தன. ஒருகணம் அவனை தன்னால் அணுகவே இயலாதென்ற திகைப்பை சித்ராங்கதர் அடைந்தார். மறுகணம் தன் இரு மைந்தரின் முகங்களும் நினைவிலெழ வெறிக்கூச்சலுடன் “செல்க! அவன் முன் செல்க!” என்று பாகனுக்கு ஆணையிட்டார். சாத்யகி அவர் வருவதை பார்த்தான். மறுகணம் அவனுடைய அம்பு வந்து அவருடைய தேர்த்தட்டை அறைந்து அதிரச் செய்தது.

சித்ராங்கதர் தன் வில்லை முழு விசையுடன் இழுத்து அவன் மேல் எய்தார். அம்பு எய்த விசையில் அவன் திரும்ப அவன் தொடைக்கவசம் உடைந்து தெறித்தது. அடுத்த அம்பை அவன் தொடைமேல் தறைக்கச் செய்தார். வலியுடன் அவன் முழங்காலிட அடுத்த அம்பு அவன் தலைக்கவசத்தை உடைத்து தெறிக்கச் செய்தது. அவனுடைய அணுக்க வில்லவர்கள் இருபுறத்திலிருந்தும் சூழ்ந்து கொண்டு அவருடைய அம்புகளை தடுத்தனர். கவச வீரர்கள் நால்வர் அத்தேருக்கு முன் இரும்பாலான சுவரொன்றை உருவாக்க சித்ராங்கதரின் அம்புகள் அச்சுவரின் மேல் பட்டு உலோக ஓசையுடன் உதிர்ந்தன. துணைவில்லவர்கள் எழுவரை அவர் கொன்று வீழ்த்தினார். மேலும் மேலுமென துணைவில்லவர்கள் வந்து சாத்யகியை பின்னால் கொண்டு சென்றனர்.

ஸ்ருதாயுஷ் புண்ணில் கட்டுடன் மீண்டும் தேர்மேல் தோன்றி “தொடர்க! யாதவனை தொடர்க!” என்று கூவியபடி சாத்யகியைத் தொடர்ந்து அம்புகளால் அறைந்துகொண்டு சென்றார். சாத்யகியின் துணைவில்லவர்கள் மேலும் பன்னிருவர் களம்பட்டனர். அவர்கள் ஏறிவந்த புரவிகள் அம்பு பட்டு நிலத்தில் விழுந்து துடிக்க துணைத்தேர்கள் பின்னிழிந்து சென்றன. எழுந்த முரசொலிகளிலிருந்து பீமனை கௌரவப் படைகள் அணுகிவிட்டன என்று தெரிந்தது. “பீமசேனரை வளைக்கிறார்கள்!” என்று அருகிலிருந்த தேர்வில்லவன் கூவினான். “அவர் களத்தில் விழுந்தால் இன்றும் வென்றோம்!” அவர் “ஆம்! செல்க… இந்த யாதவனையும் வீழ்த்துவோம்!” என்றார். ஆனால் கௌரவப் படை பீமனை சந்திக்கும் தருணத்தில் பின்னிருந்து திருஷ்டத்யும்னன் அனுப்பிய யானைகளின் நிரையொன்று கவசங்கள் மின்ன இரண்டு ஆள் உயரமான எடைமிக்க இரும்புக் கேடயங்களை சுமந்தபடி இடையே புகுந்தது. ஒளிவிடும் இரும்புச்சுவரொன்றை உருவாக்கியபடி யானைகள் பீமனிலிருந்து கௌரவர்களை முற்றாக வெட்டின.

சினமும் வெறியும் கொண்டு துர்மதன் நெஞ்சில் அறைந்து கூச்சலிட்டான். சகுனி “உடையுங்கள்! அச்சுவரை சிதறடியுங்கள்! அவனை கொன்றாகவேண்டும். கொல்லுங்கள்! முன்னகருங்கள்!” என்று அறைகூவினார். கௌரவப் படைகளின் வேல்கள் யானைகள் ஏந்திய பெருங்கேடயங்களில் பட்டு உதிர்ந்தன. யானைகளின் கவசங்களின் இடைவெளிகளில் பாய்ந்து அவற்றின் உடலில் தைத்த அம்புகளால் அவை பிளிறியபடி தயங்க பின்னிருந்து வந்த யானைகள் அவற்றை அழுத்தி முன்னால் செலுத்தின.

யானைகள் மேலும் மேலும் முன்னகர்ந்து சூழ்ந்துகொண்ட பருந்தின் சிறகிலிருந்து, உடலிலிருந்து பீமனை காத்தன. பீமன் தன் படைகளின் முன்னால் வந்த யானையின் மத்தகத்தின்மேல் கதாயுதத்தால் ஓங்கி அறைந்தான். அலறியபடி அந்த யானை தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, துதிக்கை தூக்கி பிளிறி கேடயத்தை வீசிவிட்டு, படைமேல் பாய்ந்தது. பீமன் கதாயுதத்தை எடுத்து அதன் பின்புறம் ஓங்கி அறைந்தான். பிளிறியபடி புரவிகளையும் தேர்களையும் சிதைத்து நீண்ட வழி ஒன்றை உருவாக்கியபடி அது கலிங்கப் படைகளுக்குள் புகுந்தது.

என்ன செய்கிறான் என்பதை ஒருகணம் திகைப்புடன் எண்ணி, மறுகணம் புரிந்துகொண்டு சித்ராங்கதர் “நம்மை நோக்கி வருகிறார்! இளைய பாண்டவர் கலிங்கப் படைகளுக்குள் புகுந்துவிட்டார். திரும்புங்கள்! திரும்புங்கள்!” என்று கூவினார். அவருடைய செய்தியறிவிப்பாளன் கொடிகளை எடுத்து ஆட்ட தொலைவில் கொம்பூதியும் முரசறைபவனும் அச்செய்தியை செவியொலியாக மாற்றி படைகளில் பரவவிட்டனர். கலிங்கப் படைகள் அனைவரும் திரும்பி நோக்க புண்பட்ட யானை வெறிகொண்டு பிளிறியபடி வந்து சேற்றில் விழுந்த இரும்புருளைபோல அவர்கள் படைகளுக்குள் புதைந்தது. அது உருவாக்கிய இடைவெளியினூடாக பீமனின் தேர் கொடி பறக்க குருதியாடிய கொலைத்தெய்வம்போல வந்தது. அதற்கே விடாய்கொண்ட வாய்களும் சின விழிகளும் இருப்பதுபோலத் தோன்றியது. அவனைச் சூழ்ந்து அணுக்க வில்லவர்களின் தேர்களும் பரிவில்லவரும் கூர்கொண்ட வேல்வடிவில் வந்தனர்.

ஸ்ருதாயுஷ் “சூழ்ந்து கொள்க! பீமசேனரை சூழ்ந்து கொள்க!” என்று கூவினார். கலிங்கப் படைவீரர்கள் போர்க்குரலுடன் பீமனை சூழ்ந்துகொண்டனர். ஸ்ருதாயுஷ் கவசம் குருதியால் நனைந்து சொட்ட தேர்த்தட்டில் நின்றிருந்த பீமனை மிக அருகிலென கண்டார். நாணிழுத்து அவர் விட்ட அம்பு அவனை இயல்பாகக் கடந்து அப்பால் சென்றது. அவர் வெறிகொண்டு அம்புகளை ஏவியபடி அவனை மேலும் மேலுமென அணுகிச் சென்றார். வேண்டாம் வேண்டாம் என ஓசையின்றி சித்ராங்கதர் அலறினார். தந்தையே, உடன்பிறந்தாரே வேண்டாம். ஆனால் அவரும் போரிட்டுக்கொண்டுதான் இருந்தார்.

ஸ்ருதாயுஷின் அம்புகள் பீமனை தொடவில்லை. அவருடைய நான்கு அணுக்கர்களை கொன்றுவீழ்த்தியபின் அவன் விட்ட அம்பு அவருடைய தேர்ப்பாகன் தலையை அரிந்து தெறிக்கச் செய்தது. ஸ்ருதாயுஷ் தன் தேரிலிருந்து பாய்ந்திறங்கி பிறிதொன்றில் ஏறிக்கொண்டார். “வலப்பக்கம் சூழ்ந்து கொள்ளுங்கள்! தனித்து வந்திருக்கிறார்! சூழ்ந்து கொள்ளுங்கள்” என்று கூவியபடி பீமனை நோக்கி சென்றார். இறப்புக்கு பெருங்கவர்ச்சி உண்டா? அது மானுடரை கைபற்றி அருகே இழுக்குமா? சித்ராங்கதர் அத்தருணத்தை விழிதிகைக்க நோக்கி நின்றார்.

எக்கணமும் தேரிலிருந்து பாய்ந்திறங்கி தோள்கோப்பவர்கள்போல ஸ்ருதாயுஷும் பீமனும் அணுகினர். விசைகொண்ட அம்புகளால் காற்றில் மோதிக்கொண்டனர். ஸ்ருதாயுஷின் அம்புகளை உடல் திருப்பி தவிர்த்து ஒருகணத்திற்குள் அவர் தேர்ப்பாகனை தலை மீது அம்பெய்து வீழ்த்தினான். ஸ்ருதாயுஷ் திகைத்து நிற்க கேடயப்படை வந்து அவரை மீட்டது. ஸ்ருதாயுஷின் இளமைந்தர்கள் சக்ரதேவனும் உக்ரதேஜஸும் “கொல்லுங்கள்! அவரை சூழ்ந்து கொள்ளுங்கள்” என்று அலறியபடி பீமனை இருபுறமும் நெருங்கினர். “தந்தையை பின்னால் கொண்டுசெல்க…” என்று சக்ரதேவன் ஆணையிட்டான். சித்ராங்கதர் தன் அணுக்கப் படையுடன் பீமனின் பின்பக்கம் சென்று வளைத்துக்கொண்டார். சக்ரதேவன் பீமனை நேர்நின்று எதிர்த்தான். அம்புகள் வானில் எறும்புகள் என முகம்தொட்டு ஒருசொல் பேசி திரும்பி விழுந்தன. உரசி பொறிபறக்கச் செய்தன. சக்ரதேவனின் துணிவு கலிங்கப் படைகளை விசைகொள்ளச் செய்தது. “அனைவரும் சூழ்ந்து கொள்ளுங்கள்… பிறர் பாண்டவரின் அணுக்கவில்லவரை வீழ்த்துங்கள்” என்று சக்ரதேவன் ஆணையிட்டான்.

பீமனின் அணுக்கர்கள் ஒவ்வொருவராக அலறி வீழ்ந்தனர். சக்ரதேவன் எழுவரை கொன்றான். சித்ராங்கதர் மூவரை சிதறிவிழச் செய்தார். சூரியதேவர் பொருளிலா ஒலியை கூவியபடி பீமனின் நான்கு அணுக்கர்களை கொன்று வீழ்த்தினார். சித்ராங்கதர் தேர்களின் அச்சுகளை நோக்கி அம்புதொடுத்து சகடங்கள் உடைந்து அவை சரியச் செய்தார். உடைந்த தேர்களால் பீமன் சூழப்பட்டான். அவன் தேர் முன்னகர முடியாமல் விசையிழந்தது. பீமன் வில்லை தேரிலிட்டு நீண்ட வேலை மண்ணில் ஊன்றி தேரிலிருந்து தாவி புரவியொன்றின் மேல் கால்வைத்து மீண்டுமொருமுறை எழுந்து இறங்கி கைசுழற்றி அவ்வேலை நீட்டி ஓங்கி சக்ரதேவனை கவசத்துடன் குத்தி தேர்த்தூணில் அறைந்து நிறுத்தினான். கலிங்கப் படைகள் திகைத்து நின்றன. பின்னர் அலறியபடி நாற்புறமும் சிதறின. சித்ராங்கதர் “தாக்குக! தாக்குக!” என்று கூவியபடி பீமனை நோக்கி அம்புகளை தொடுத்தபடி அணுக பீமன் சக்ரதேவனின் உடலிலிருந்து பெருவேலை உருவியெடுத்து அதே விசையில் ஓங்கி வீசி உக்ரதேஜஸை கொன்று தேர்த்தட்டில் வீழ்த்தினான். மூன்றாமவனாகிய பிரபவதேஜஸ் தயங்கி பின்னடைவதற்குள் உக்ரதேஜஸின் தேரிலிருந்த வேலொன்றைப் பிடுங்கி எறிந்து அவனை கொன்றான் பீமன்.

சூரியதேவரும் அவர் மைந்தர்களும் அஞ்சி பின்னடையத் தொடங்கினர். “நில்லுங்கள்! பின்னடையாதீர்கள்! இதோ வந்துகொண்டிருக்கிறோம்!” என்று பின்னால் சகுனியின் அறிவிப்புக்குரல் கேட்டது. யானைச் சுவரால் தடுக்கப்பட்ட கௌரவப்படை மறுபக்கம் முழுவிசையுடன் ஒருங்கு கூடிக்கொண்டிருந்தது. யானைகளை உடைக்கும்பொருட்டு புரவிகள் இழுத்த வண்டிகளில் பொருத்தப்பட்ட பெருவில்கள் கொண்டுவரப்பட்டன. யானைச்சுவருக்கு அப்பால் அவை குரங்குவால்கள்போல் எழுந்து வளைந்து தெரிந்தன. யானைகளால் இழுக்கப்பட்டு நாணேற்றப்பட்ட அவ்விற்களில் இரண்டு ஆள் நீளமுள்ள நீளம்புகள் பொருத்தப்பட்டு ஏவப்பட்டன. அவை கவசங்களிலும் கேடயங்களிலும் பட்டு பொறிபறக்க ஓசையெழுப்பின. கவசங்கள் உடைய பிளிறியபடி யானைகள் முன்காலும் பின்காலும் எடுத்துவைத்து நிலையழிந்தன. ஓர் யானை கேடயத்தை வீசியது. அவ்விடைவெளியை மேலும் மேலும் அம்பெய்து பிளவாக்கி அதனூடாக பருந்தின் உடலில் இருந்து படை ஒன்று மதகுநீரென பீறிட்டு இப்பால் வந்தது. நிஷாத மன்னன் கீர்த்திமானை அதன் முகப்பில் சித்ராங்கதர் கண்டார்.

“கொல்லுங்கள்… சூழ்ந்துகொள்ளுங்கள்!” என்று கூச்சலிட்டபடி கீர்த்திமான் தன் மைந்தன் பானுமான் தொடர நிஷாதப் படைகளுடன் வந்து சூரியதேவரின் படை பின்னகர்ந்த இடைவெளியை நிறைத்து பீமனை எதிர்கொண்டான். பீமன் அவன் வருவதை திரும்பிக்கூட பார்க்காமல் கலிங்கப் படைகளை சிதறடித்தபடி மேலும் மேலுமென முன்சென்றான். எந்த விசையாலும் தடுக்கப்படாதவனாக தோன்றினான். பின்னடைந்த சூரியதேவரும் அவர் மைந்தர்கள் சத்யனும் சத்யதேவனும் மீண்டும் படைகளை திரட்டிக்கொண்டு முழவுகளும் கொம்புகளும் ஒலிக்க பீமனை நோக்கி வந்தனர். சில கணங்களிலேயே பீமன் முற்றிலும் சூழப்பட்டான். அவனுடைய அணுக்கப்படையின் பெரும்பகுதி அழிந்துவிட்டிருந்த்து. முற்றுகையிட்ட படையிலிருந்து நாற்புறமும் என வந்த அம்புகளை எதிர்கொள்ள முடியாமல் பீமனின் அணுக்கர்கள் வீழ்ந்தபடியே இருந்தனர். நோக்கிநிற்கவே அவர்கள் பன்னிருவராக குறைந்தனர். பரிவில்லவர் அனைவரும் விழுந்த பின் நிஷாதர்களாலும் கலிங்கர்களாலும் சூழப்பட்டு ஏழு தேர்வில்லவர்களுடன் பீமன் நின்றான்.

“தாக்குங்கள்… தாக்குங்கள்” என்று வெறிகொண்டவராக சூரியதேவர் கூவிக்கொண்டே இருந்தார். சாத்யகியின் படைகள் அப்பால் துண்டுபட்டு அகன்றுவிட்டிருந்தன. அவன் வந்து பீமனை காக்கலாம். மறுபக்கம் யானைச்சுவர் பல இடங்களில் உடைந்துகொண்டிருந்தது. சகுனியும் சலனும் கௌரவர்களும் வந்துசூழ பருந்து பீமனை கவ்விக்கொண்டு செல்லலாம். சித்ராங்கதர் கைகால் செயலிழக்க தேரில் சில கணங்கள் நின்றார். அந்த கணத்திற்காக காத்திருந்ததுபோல அம்புகள் அவரை அறைந்தன. கவச இடைவெளியில் புகுந்த இரு அம்புகளால் அவர் தேரிலிருந்து வீழ்த்தப்பட்டார். அவருடைய பாகன் நெஞ்சைப் பற்றியபடி அமரபீடத்தில் சரிய தேர் நிலையழிந்து சகடம் தூக்கி ஒருக்களித்தது. அவர் பாய்ந்து மண்ணில் இறங்கி நிலையழிந்த புரவி ஒன்றைப்பற்றி அதன்மேல் ஏறிக்கொண்டார். அவருடைய கால் இறந்ததுபோல் குளிர்ந்து எடைகொண்டது. கவசத்திற்குள் குருதி பெருகி விளிம்புகள் வழியாக ஊறி வழிந்தது.

சித்ராங்கதர் புரவியில் உடலை நன்கு தாழ்த்தி அதன் கழுத்துடன் தலைவைத்தபடி நிகழ்வதை நோக்கிக்கொண்டிருந்தார். சூழ்ந்துகொள்ளப்பட்டதை பீமன் பொருட்படுத்தவேயில்லை. சேற்றிலிறங்கிய யானைபோல உடலெங்கும் குருதிக்குழம்பு வடிய வில்சூடி தேரில் நின்று வெறியாடினான். சூரியதேவர் அவன் அம்பு பட்டு தேர்த்தட்டிலிருந்து உருண்டு கீழே விழுந்தார். தேரில் அவரை கடந்துசென்ற பீமன் அவ்விசையிலேயே வேலால் ஓங்கி அவர் கழுத்தைக் குத்தி அவர் இறப்பை உறுதி செய்தான். சத்யனும் சத்யதேவனும் அந்தத் தயக்கமின்மை கண்டு உளம் உறைந்து நின்றனர். அதே வேலால் அவர்களைக் குத்தி அப்பாலிட்டான். ஊடே புகுந்த படைத்தலைவன் ஒருவனை குத்தித் தூக்கி வேலுடன் தலைமேல் எடுத்தபடி போர்க்குரலெழுப்பி சுற்றிநோக்கினான். அவனை வேலுடன் எதிர்கொண்ட கீர்த்திமான் மீது அந்தச் சடலத்தை தூக்கி வீசி அவன் நிலையழிந்த தருணத்தில் வாளால் அவன் தலையை அறுத்தெறிந்தான்.

வில்தொடுக்க இயலாதபடி நெருங்கி படைகள் ஊடுகலந்துவிட்டிருந்தன. “விலகுங்கள்… வில்தொடுக்கும் அகலம் எழுக!” என்று ஆணையிட்டபடி கீர்த்திமானின் மைந்தன் பானுமான் தன் படைகளுடன் பின்னால் சென்றுகொண்டே இருக்க பீமன் அவனை துரத்திச் சென்றான். உடைந்த தேரொன்றில் சகடம் சிக்க பானுமானின் தேர் தடுமாறியது. பீமன் தன் கதையை தூக்கி வீசி அவன் தலையை கவசத்துடன் அறைந்து உடைத்தான். அந்த அடியில் தேர்த்தூண் நொறுங்க தேர்முகடு உடைந்து அவன் மேல் விழுந்தது. சங்கிலியை இழுத்து கதையைத் தூக்கி அதைச் சுழற்றி கலிங்கர்களின் தலைகளை உடைத்து சுழன்றுவந்தான்.

மறுபக்கம் யானைச்சுவர் இரண்டாகப் பிளந்தது. புண்பட்டு அலறிய யானைகள் இருபுறமாக சிதறி ஓட வெள்ளம் இடிக்கும் ஏரிக்கரை என மேலும் மேலுமென அது சிதைந்தது. முன்யானையை பின்னால் வந்த யானை சினத்துடன் தந்தங்களால் குத்தித் தூக்கியது. குத்துபட்ட யானை கதறியபடி சரிந்து விழ அப்பாலிருந்து சகுனியும் சலனும் பாய்ந்து வந்தனர். பீமனின் அணுக்கத்தேர்வீரர்களில் மூவரே எஞ்சியிருந்தனர். ஆயினும் அவன் தயங்காமல் கலிங்கர்களைக் கொன்று முன்சென்றபடியே இருந்தான். தலைவர்களை இழந்த கலிங்கப்படை சிறு சிறு குழுக்களாக சிதறி பின்னடைய அவர்களினூடே புகுந்து வளைத்து கொன்று வீழ்த்தினான். ஸ்ருதாயுஷ் கலிங்கப் படைகளின் நடுவிலிருந்து எழுந்து “ஒன்றுதிரள்க… நமக்கு துணைப்படை வந்துவிட்டது… கொடிகளின் கீழ் திரள்க!” என்று ஆணையிட்டார். பீமன் சிரித்தபடி நீள் அம்பு ஒன்றை எடுத்து அவர் நெஞ்சுக்காக குறிவைத்தான். அதைக் கண்ட கணம் பூனையைக் கண்ட எலி என அவர் அசைவிழந்தார். அம்பு அவரை அறைந்து தெறிக்கச் செய்தது. அவர் உடல் அப்பால் படைத்திரளுக்குள் எங்கோ விழுந்து மறைந்தது. கைகள் செயலற்று விழ சித்ராங்கதர் சொல் உறைநத நெஞ்சுடன் நின்றார்.

முன்புறம் கலிங்கப்படை உடைந்த இடைவெளியின் வழியாக சாத்யகி தன் படையுடன் உள்ளே நுழைந்தான். சிறு குழுக்களாக முட்டி மோதிய கலிங்கர்களை கொன்று பரப்பியபடி அவன் படை வந்து பீமனை அணுகி சூழ்ந்துகொண்டது. சாத்யகி “வெட்டிவிட்டோம், பாண்டவரே! பருந்தின் தலை துண்டாகிவிட்டது!” என்று கூவினான். அப்போதுதான் பீமனின் அன்றைய திட்டமென்ன என்று சித்ராங்கதருக்கு புரிந்தது.  அவர் உறைவு உடைந்து பல்லாயிரம் படிகச்சில்லுகளாக தெறிக்க உடல் பதற்றம் கொண்டு துள்ளியது. பீஷ்மரை மையப்படையிலிருந்து முற்றிலும் பிரித்து அர்ஜுனன் முன் நிறுத்துவது அவர்களின் எண்ணம். இன்று அர்ஜுனனாலும் அவர் இளம் மைந்தர்களாலும் சூழப்பட்டு பீஷ்மர் தனித்து களம் நிற்பார். ஒருவேளை இன்று அவர் களம்படவும் கூடும். ஆனால் அத்தருணத்தில் அச்செய்தி அனைத்தும் எங்கோ எவரோ சொல்லிக்கொண்டிருப்பதுபோல் பொருளற்று அவருக்கு கேட்டது. கண் முன் வில்லுடன் பெருந்தோள்களில் குருதி சொட்டும் கவசங்களுடன் நின்று கொலையாடிய பேருருவனன்றி வேறெதுவுமே மெய்யில்லை என்பதுபோல் தோன்றியது. அவர் போரிடுவதை முற்றிலும் நிறுத்திவிட்டிருந்தார். ஆனால் களத்திலிருந்து விலகி ஓட விரும்பவில்லை.

சலனின் மைந்தன் பீஷ்மனின் உடல் அம்புகளால் தலையறுந்து நின்று தேர்த்தட்டில் உலைந்து துடித்தபடி கீழே விழுந்து தன் தேரின் சகடங்களாலேயே அறைபடுவதை சித்ராங்கதர் கண்டார். மைந்தன் கொல்லப்பட்டதைக் கண்டு வெறியுடன் கூச்சலிட்டபடி சலன் முன்னால் வந்தான். படைகள் சினம்கொண்ட யானைகளின் மத்தகங்கள் என மோதிக்கொண்டன. சித்ராங்கதர் தலைதூக்கி தொலைவில் பாண்டவப் படைகள் சென்று மறுபக்கம் திருஷ்டத்யும்னன் நடத்திய படையுடன் இணைந்துகொள்ள மேலும் மேலுமென அப்படையிணைவு பருத்து வலுக்கொண்டு விரிய பருந்தின் தலை பாண்டவப் படைகளால் தனியாக விலக்கிக்கொண்டு செல்லப்படுவதை பார்த்தார். பீஷ்மரின் கொடி பறக்கும் தேர் மிக அப்பால் பாண்டவப் படைகளால் சூழப்பட்டு தெரிந்தது. திரும்பி அவர் பீமனை பார்க்கையில் அப்பாலிருந்து பறந்து வந்த வேல் ஒன்று அவர் நெஞ்சில் பாய்ந்தது. அதன் மரத்தண்டை பிடித்தபடி உடல் துடிக்க அவர் புரவியில் மல்லாந்து விழுந்தார்.

அவரை சித்ரரதன் பற்றிக்கொண்டான். “மைந்தா!” என்று அவர் கூவினார். அவன் உடலில் குருதியே இல்லை. கைகள் உறுதிகொண்டிருந்தன. விழிகள் அவர் அறியா வெறிப்புடன் இருந்தன. அப்பால் சித்ரபாகு “எழுக தந்தையே, இனி வலி இல்லை” என்று கூவினான். அவர் எழுந்து நின்றபோது உடலில் வலியோ நிகரழிவோ இல்லை என்று உணர்ந்தார். “செல்க… செல்க!” என்று சித்ரரதன் அறைகூவியபடி தேர்கள் மேலும் புரவிகள் மேலும் தாவியபடி முன்னால் சென்றான். அவர் ஸ்ருதாயுஷையும் அவர் மைந்தர்களையும் கண்டார். கேதுமானும் பானுமானும் அப்பால் போரிட்டுக்கொண்டிருந்தனர். சூழநோக்கியபோது அவர் அதுவரை கண்டதைவிட மேலும் பலமடங்கினர் அங்கே பொருதிக்கொண்டிருந்ததை அறிந்தார். மண்ணளவுக்கே விண்ணும் போரால் அலைக்கொந்தளிப்பு கொண்டிருந்தது.

வெண்முரசு விவாதங்கள் தளம்