திசைதேர் வெள்ளம் - 69

bowசிகண்டியின் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை ஷத்ரதேவன் பார்த்தான். அது குளிரினாலா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. சிதைகளின் நெருப்பிலிருந்து விலகி வரும்தோறும் தெற்கிலிருந்து வீசிய மழையீரம் கலந்த காற்று ஆடைகளை பறக்கவைத்து குளிரை அள்ளிப் பொழிந்தது. சிகண்டியின் உடல் மிக மெலிந்தது. அடுக்கி வைக்கப்பட்ட சுள்ளிகள்போல விலாஎலும்பும், புறாக்கூண்டுபோல உந்தி எழுந்த நெஞ்சும், ஒட்டி மடிந்த வயிறும், கைப்பிடிக்குள் அடங்குவது போன்ற இடையும் கொண்டது. ஆகவே நீண்ட கைகளை வீசி அவர் நடப்பது வெட்டுக்கிளி தாவிச் செல்வதுபோல் இருந்தது. தசையின்மை அவரை மேலும் அதிக குளிரை உணரச் செய்யக்கூடும்.

ஆனால் புரவியில் அவர் ஏறிக்கொண்ட விசையை, புரவி முழுவிசையில் பாய்ந்து சென்றபோதும்கூட சற்றும் மூச்சிளைக்காமல் இருந்த உறுதியை பார்த்தபின் அது குளிரினால் அல்ல என்று அவன் அறிந்தான். அவர் உள்ளூர பதறிக்கொண்டிருக்கிறார். இன்று அவர் அதுகாறும் மேற்கொண்ட தவம் நிறைவுறப் போகிறது. ஆம், இன்று. இப்போது நள்ளிரவு கடந்துவிட்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் விடிவெள்ளி எழுந்துவிடும். இரவு எப்போது காலையாகிறது? ஏதோ ஒரு கணத்தில் இரவிலிருந்து உள்ளம் விடுபட்டு காலை என உணரத்தொடங்குகிறது. அக்கணத்தில் குளிர் மாறுபடுகிறது. வானின் விண்மீன்களின் அமைப்பு மெல்ல தன்னை மாற்றிக்கொள்கிறது. காற்றில் எழும் மணங்கள் வேறு வகையில் கலவை கொள்கின்றன.

எங்கோ கீழ்வானுக்கு அடியில் புலரி எழுந்துவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் புலரியின் அறிவிப்பாளராக விண்ணிலிருந்து விழியை முற்றாக மூடும் கருக்கிருள் வந்து நிறையும். கையால் அள்ளி எடுத்துவிடக்கூடிய பிசின் போன்ற இருள். அதற்குள் விண்மீன்கள் அரக்கில் ஒட்டியிருக்கும் மின்மினிகள்போல அதிர்ந்துகொண்டிருக்கும். விடிவெள்ளி முதலில் எழுந்து வரும். நாணுவதுபோல தயங்கி. வான்வெள்ளமொன்றின் விளிம்பில் மிதந்து மிதந்து மேலெழுவதுபோல. விடிவெள்ளியை பறவைகள் உணர்கின்றன. காட்டுக்குள்ளிருந்து முதற்குரல் எழுப்பும் கரிச்சான் “புலரி! ஆம், புலரி!” என அறிவிக்கிறது.

தந்தை எப்படி உணர்வார் என்று அவனால் அறிந்துகொள்ள இயன்றது. பிறந்த நாள் முதல் ஒவ்வொரு கணமுமென காத்திருக்கும் ஒரு தருணம் அணைகையில் வாழ்க்கை ஒட்டுமொத்தமாகவே பொருளோ பொருளின்மையோ கொள்கிறது. சிகண்டி அவர்களை நோக்கி “நாம் இளைய யாதவரின் குடிலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். இன்று சிதையொருக்கப் பணிகள் முடிந்தபின் என்னை அங்கு வரச்சொல்லியிருக்கிறார்” என்றார். ஷத்ரதேவன் “நாங்களும் உடன் வரலாமா?” என்று கேட்டான். “நீங்கள் உடனிருக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வரச்சொன்னேன்” என்று சிகண்டி சொன்னார். ஷத்ரதேவன் மீண்டும் ஏதோ கேட்க எண்ணியபின் சொற்களை அடக்கிக்கொண்டான்.

அவர்கள் ஆழ்ந்து துயின்றுகொண்டிருந்த படைகளினூடாக புரவிக்குளம்படிகள் ஒலிக்க இளைய யாதவரின் குடில் நோக்கி சென்றனர். பகலுயிர்கள் அனைத்தும் துயிலும் இப்பொழுதில் அவர் விழித்திருப்பாரா என்று ஷத்ரதேவன் எண்ணினான். ஆனால் அவரும் துயிலற்றவராகவே இருக்கவேண்டும் என்று மறு எண்ணம் எழுந்தது. பார்த்தர் துயில்வதே இல்லை என்று அவன் அறிந்திருந்தான். இளைய யாதவர் எப்போதும் துயின்றுகொண்டிருப்பவர் என்று இளிவரல் சூதனொருவன் பாடி கேட்டிருந்தான். அவரை நோக்காதவர்களுக்குக்கூட அவருடைய முகம் அகவிழியில் உள்ளது. வரைந்தெடுத்து அரங்குக்குக் கொண்டுவந்த பலநூறு கூத்தர்களின் முகங்களினூடாக. அது எப்போதும் காதல் நிறைந்தது. எதையும் நோக்காதது என்றும் அனைத்தையும் அறிந்தது என்றும் ஒரேபோலத் தோன்றும் தன்மைகொண்டது.

தொலைவில் காட்டின் உள்ளடுக்குகள் வரை ஊடுருவிப் பரந்திருந்த மருத்துவநிலைகளில் பந்தங்களின் செவ்வெளிச்சம் வானில் எழுந்து இளம்பனியில் செந்நிறத் திரைச்சீலைபோல தெரிந்தது. அங்கிருந்து ஓலங்களும் அலறல்களும் அழுகை ஓசைகளும் கேட்டுக்கொண்டிருந்தன. இருபுறமும் வந்துகொண்டிருந்த படைநிரைகள் ஆழ்துயிலில் அங்கு இல்லாதவைபோல தோன்றின. மீன்நெய்ப் பந்தங்கள் மட்டும் புலரிக்காற்றில் மெல்லிய எரியதிர்வுடன் புகை அலைத்துக்கொண்டிருந்தன. அவர்களுடைய குளம்படியோசை படைகளின் அமைப்புக்கேற்ப எதிரொலி மாறுபட்டு எழுந்துகொண்டிருந்தது.

இளைய யாதவரின் குடில்முற்றத்தில் புரவியை நிறுத்தி இறங்கிய சிகண்டி ஷத்ரதேவனை நோக்கி திரும்பி “இன்றைய சொற்கள் ஒவ்வொன்றும் உங்கள் நினைவில் நிற்கவேண்டும்” என்றார். ஷத்ரதேவன் “ஆம்” என்றான். சிகண்டி “அவரை கூர்ந்து நோக்கவேண்டாம், நோக்கி அறியத்தக்கவரல்ல” என்றபின் நடந்து குடில் வாயிலை நோக்கி சென்றார். அங்கே நின்றிருந்த நேமிதரன் தலைவணங்கி “தங்களுக்காக காத்திருக்கிறார்” என்றான். “என் மைந்தர் உடன்வர விரும்புகிறேன் என்று அவரிடம் உரையுங்கள்” என்றார் சிகண்டி. “மைந்தருடன் நீங்கள் வருவீர்கள் என்றும் மூவரையும் உள்ளே அனுப்பும்படியும்தான் எனக்கு ஆணை” என்றான் நேமிதரன்.

சிகண்டி தலைவணங்கிவிட்டு குடில் வாயிலை அடைந்து மூடியிருந்த படல் கதவை மெல்ல திறந்து உள்ளே சென்றார். ஷத்ரதேவன் நேமிதரனிடம் புன்னகையுடன் தலைவணங்கிவிட்டு தந்தையைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தான். அவனைத் தொடர்ந்த ஷத்ரதர்மன் நிழல்போல் ஓசையற்றவனாக இருந்தான். அறைக்குள் கூரையிலிருந்து தொங்கிய பீதர் நாட்டு பளிங்கு விளக்கின் ஒளி நிறைந்திருந்தது. தரையில் விரிக்கப்பட்டிருந்த மரவுரியில் இளைய யாதவர் அமர்ந்திருந்தார். அவருக்கு வலப்பக்கமாக இளைய பாண்டவன் அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவர்களுக்கு முன் மான்தோல் விரிக்கப்பட்ட மணையில் இன்நீர் புகையெழும் பீதர் நாட்டு வெண்களிமண் கலங்கள் வைக்கப்பட்டிருந்தன. இளைய யாதவருக்கு வலப்பக்கம் பேழையில் ஓலையும் எழுத்தாணியும் இருந்தன.

சிகண்டி உள்ளே புகுந்து இருவரையும் தலைகுனிந்து வணங்கிவிட்டு திரும்பி தன் மைந்தரிடம் அவர்களை வணங்கும்படி கைகாட்டினார். ஷத்ரதேவன் முன்னால் சென்று உடல் நிலம்பட விழுந்து இளைய யாதவரை வணங்கினான். எழுந்து அர்ஜுனனையும் வணங்கிவிட்டு தந்தைக்குப் பின்னால் சென்று நின்றான். இளையவன் வணங்கும்போதும் இளைய யாதவர் கைதூக்கி செய்கையாலேயே வாழ்த்து உரைத்தார். அவர்கள் அமரும்படி அர்ஜுனன் கைகாட்டினான். அவர்கள் அமர்ந்ததும் இளைய யாதவர் எந்த முகமனும் இல்லாது “நாங்கள் நாளைய போரை முடிவெடுத்துவிட்டோம்” என்றார். சிகண்டி தலையசைத்தார்.

“பாஞ்சாலரே, தங்களை அவர் போரில் எதிர்த்து நிற்கமாட்டார் என்பது தெளிவாகிவிட்டது. அப்பொருள் வரும் ஒரு சொற்குறிப்பை அவர் முன்னர் நமக்கு அளித்துமிருக்கிறார்” என்றார் இளைய யாதவர். “சிம்மம் உண்ணாத இரை நீங்களே.” சிகண்டி புன்னகைத்தார். “ஆகவே நாளை நீங்கள் அர்ஜுனனின் தேரில் அவனுக்கு முன்னால் வில்லுடன் நின்றிருங்கள்” என்றார் இளைய யாதவர். சிகண்டி தலையசைத்தார். அர்ஜுனன் “உங்கள் அம்புகளும் அவர் நெஞ்சை துளைக்கட்டும். உங்கள் அம்பால் அவர் வீழ்ந்தார் என்றே இருக்கட்டும்” என்றான். சிகண்டி “இல்லை, நான் என் அம்புகளால் அவரை வீழ்த்தினாலும் அவர் உங்களால் வீழ்த்தப்பட்டதாகவே சூதர்களால் பாடப்படும். உங்கள் தேரிலிருந்து நான் இயற்றும் இப்போர் எந்நிலையிலும் உங்கள் போரே” என்றார்.

“உங்கள் வஞ்சினம் நிறைவேற வேண்டுமல்லவா?” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம், அதை என் அன்னைமட்டும் அறிந்தால் போதும்” என்றார் சிகண்டி. “அவரை எதிர்த்து கொல்வேன் என்று என் அன்னைக்கு சொல்லளித்தேன். அது நாளை நிறைவேறும். என்னுடைய அம்புகளும் அவருடலில் இருக்கும். தன் உயிர் குடிப்பது எந்த அம்பென்பதை அவரே முடிவு செய்வார். அது என் அம்பாகவே இருக்கும்” என்றார் சிகண்டி. இளைய யாதவர் புன்னகையுடன் “நாம் முன்னரே இறந்துவிட்டவரை மீண்டும் கொல்லப்போகிறோம் என்பதை நினைவுகூர்க! நாம் செய்யப்போவது அவருக்கு செய்யும் நலன் மட்டுமே. நேற்றே அவர் இப்போரின் இறுதியை கண்டுவிட்டார். இன்று களத்தில் நமக்காக காத்திருப்பார்” என்றார்.

அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். சிகண்டி புன்னகைத்து “இளைய பாண்டவர் ஒவ்வாமை கொண்டிருக்கிறார்” என்றார். அர்ஜுனன் “ஆம், இரவு முழுக்க இளைய யாதவரின் சொற்களை கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போர் எவ்வகையிலேனும் முடிவடைய வேண்டுமெனில் பிதாமகர் பீஷ்மர் களத்தில் வீழ்த்தப்பட வேண்டும் என்றார். அதற்கு இந்த வழியின்றி வேறேதுமில்லை என்றும் இவ்வழியையே அவரே நமக்கு சுட்டிக்காட்டியுமிருக்கிறார் என்றும் மீளமீள சொன்னார். ஆகவே இது நம் கடன் என்றார். அவர் சொல்வது அனைத்தையும் என் உள்ளம் ஏற்றுக்கொள்கிறது. அதற்கு அடியில் ஒன்று நிலையற்று தவிக்கிறது. நான் சிற்றகவையிலிருந்து எண்ணியிருந்த போர் இதுவல்ல” என்றான்.

சிகண்டி “எவரும் இத்தகையதோர் போரை எண்ணியிருக்க மாட்டார்கள்” என்றார். அர்ஜுனன் “இது ஒரு தொடக்கம். இத்தகைய தொடக்கங்களை எப்போதும் நம்முள் இருக்கும் நுண்தெய்வங்கள் எச்சரிக்கின்றன. தன் வாழ்வை முற்றாகவே மாற்றிவிடும் பிறழ்வுகளை அந்த தெய்வத்தின் எதிர்ப்பை மீறியே மானுடர் செய்கிறார்கள். பிறகு எப்போதும் அந்த தெய்வத்தின் குரலை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நீர்த்துளிவிழும் ஒலியென முதலில் கேட்கும் அது பெருகிப்பெருகி இடியோசைபோல ஆகிறது” என்றான். சிகண்டி திரும்பி இளைய யாதவரை பார்க்க அவர் மாறா புன்னகையுடன் இருந்தார். “உங்களுள் பிறிதொரு தெய்வமிருப்பது விந்தையாக இருக்கிறது, இளைய பாண்டவரே” என்றார் சிகண்டி.

“ஆம், என்னுள்ளிருப்பது பாண்டுவாக இருக்கலாம். பிரதீபராகவோ விசித்திரவீரியராகவோ குருவாகவோ ஹஸ்தியாகவோ யயாதியாகவோ இருக்கலாம். அறியேன்” என்றான் அர்ஜுனன். “ஆனால் உறுதியாக அது இந்திரனல்ல” என்று சிகண்டி சொன்னார். “இந்திரன் தன் வெற்றிகள் அனைத்தையுமே பிறர் கொண்டுள்ள பிறழ்வுகளை பயன்படுத்திக்கொண்டோ அல்லது தான் பிறழ்ந்தோதான் ஈட்டியிருக்கிறார். வெற்றியால்தான் அவர் இந்திரனாக நிலைகொள்கிறாரே ஒழிய நெறியால் அல்ல.” அர்ஜுனன் “நான் பேசவிரும்பவில்லை. பேசும்தோறும் இது மேலும் பிழையென்று தோன்றுகிறது” என்றான்.

ஆனால் அவனால் பேசாமலும் இருக்க முடியவில்லை. “இன்று சற்று முன் நானும் இளைய யாதவரும் வெளியே நின்று விண்மீன்களை நோக்கி பேசிக்கொண்டிருந்தோம். இது ஊழென்றும், இதுவன்றி வேறு வழியில்லையென்றும், இதனூடாக என்னை இழக்கிறேன் எனினும் என் குடிக்கும் பாரதவர்ஷத்திற்கும் பெரும் கொடையை அளிக்கிறேன் என்றும், மண்ணில் புதுவேதம் நிலைகொள்ள இச்சிறு பிழையினூடாக என் ஆத்மாவை பலிகொடுப்பேனெனினும்கூட அது பெருஞ்செயலே என்றும் அவர் சொன்னார். ஆம், நான் ஏற்கிறேன், என்னை முழுதளிக்கிறேன், நாளை களத்தில் அவரை கொல்கிறேன் என்று சொல்லளித்துவிட்டு திரும்புகையில் என்னுள்ளிருந்து ஓர் எண்ணம் எழுந்து அலைத்தது. இங்கிருந்து இப்படியே ஓடிவிடு, திரும்பி உன் சிற்றில்களுக்கு செல், நீ அலைந்து திரிந்த தொலைதூர நிலங்களுக்கு சென்றுவிடு, இன்மையென்றாகி மறைந்து விடு என்று அது ஆணையிட்டது. ஒருகணம் அங்கிருந்து கிளம்பியிருப்பேன். மறுகணத்தில் என்னைத் தடுத்து இங்கு கொண்டு வந்தது எதுவோ அதுவே நாளை அப்போரை நிகழ்த்தவிருக்கிறது.”

சிகண்டி “எப்போதும் இந்த இருநிலையின் வாள்முனையிலேயே இருந்துகொண்டிருக்கிறீர்” என்று புன்னகைத்தார். “அலைவில்லாத அமைவு என்பது அறியாமையிலோ தீமையிலோ ஆனாலும் ஒரு நல்லூழ்” என்று அர்ஜுனன் சொன்னான். சிகண்டி மீண்டும் இளைய யாதவரை பார்த்தார். அங்கு நிகழ்ந்த சொல்லாடல்களுக்கு தொடர்பே அற்றவர்போல் அவர் புன்னகைத்துக்கொண்டிருந்தார். சிகண்டி இளைய யாதவரிடம் “என் மைந்தர் இங்கு அமர்ந்து இச்சொற்களை கேட்கவேண்டுமென்று விரும்பினேன். பிறிதொரு நாள் அவர்கள் எண்ணிக்கொள்ளும்போது இங்கு நிகழ்ந்தது என்ன என்று அவர்கள் அறிந்திருக்கவேண்டும். ஏனெனில் பெருவீரர்களின் வீழ்ச்சியை ஊழின் சூழ்ச்சியென்றும் சிறுமானுடரின் வஞ்சமென்றும் சொல்லில் விரித்துரைக்கும் வழக்கம் சூதர்களுக்குண்டு. இது எவர் சொல்லில் இருந்து எழுந்தது என்று அவர்கள் அறிந்திருக்கவேண்டும்” என்றார்.

இளைய யாதவர் ஷத்ரதேவனை நோக்கி “என் சொல்லில் இருந்து என அறிக! இங்கிருக்கும் அனைத்து நெறிகளும் என்னுடையவையே. அனைத்து சூழ்ச்சிகளும் நானே” என்றார். ஷத்ரதேவன் ஏனென்று அறியாமல் மெய்ப்பு கொண்டான். பெருமூச்சுவிடுபவன்போல ஓர் மெய்ப்பாட்டை காட்டிய அர்ஜுனன் பின்னர் மெல்ல தளர்ந்து “நாம் சற்று நேரம் ஓய்வெடுக்கலாம் என்று தோன்றுகிறது” என்றான். “யுதிஷ்டிரரையும் பீமசேனரையும் இளையோரையும் இங்கு வரச்சொல்லியிருக்கிறேன்” என்றார் இளைய யாதவர். “இங்கா?” என்று அர்ஜுனன் கேட்டான். “ஆம், இங்கு நாம் மட்டுமே இதை முடிவெடுப்போம். படைசூழ் அவையில் நாம் எதையுமே பேசவேண்டியதில்லை” என்றார் இளைய யாதவர்.

“இங்கு நாமே முடிவெடுத்தால் போதும். மூத்தவர் எதற்கு இதில்?” என்று அர்ஜுனன் சொன்னான். “அவர் அறிந்திருக்கவேண்டும்” என்றார் இளைய யாதவர். “அவர் ஒருபோதும் நெறிமீறலை ஒப்புக்கொள்ளமாட்டார்” என்று அர்ஜுனன் சொன்னான். “அவர் வாழ்நாளெல்லாம் நெறி ஆய்ந்தவர். ஆகவே நெறிமீறல்களின் வாய்ப்புகள் அனைத்தையும் அறிந்திருப்பார்” என்று இளைய யாதவர் சொன்னார். அவர் சொல்வது புரியாததுபோல அர்ஜுனன் பார்த்தான். “அவர் ஏற்கவில்லையென்றாலும் அவர் அறிந்தாகவேண்டும்.” “பீமசேனர் ஏற்பார் என தோன்றுகிறது. அவர் கடந்துசென்றுவிட்டார்” என்று அர்ஜுனன் சொன்னான். “அவர் ஏற்றுக்கொண்டதனால் ஒருவேளை மூத்தவரும் ஏற்கக்கூடும். ஆனால் அவர்கள் இருவரிடமும் இச்செய்தியை இப்போது சொல்லவேண்டுமா என்று எனக்கு ஐயமாக இருக்கிறது” என்றான். “பார்ப்போம்” என்று இளைய யாதவர் சொன்னார்.

அதன்பின் அவர்கள் சொல்லவிந்து காத்திருந்தனர். இளைய யாதவரின் நிழல் சுவரில் எழுந்திருப்பதை நோக்கியபடி ஷத்ரதேவன் அமர்ந்திருந்தான். நேமிதரன் உள்ளே வந்து “அரசரும் இளையவர்களும்” என்றான். “வரச்சொல்க!” என்று இளைய யாதவர் கைகாட்டினார். வெளியே இருந்து யுதிஷ்டிரரும் பீமசேனனும் கைகூப்பியபடி உள்ளே வந்தனர். அவர்கள் வணங்கி அமர்ந்த பின்னர் நகுலனும் சகதேவனும் உள்ளே வந்து இளைய யாதவரை வணங்கிவிட்டு அவர்களிருவருக்கும் பின்னால் நின்றனர். யுதிஷ்டிரர் நீர் அருந்தும் புரவி என பெருமூச்சுவிட்டார்.

இளைய யாதவர் “இங்கு நாங்கள் பேசி முடிவெடுத்த ஒன்றை உங்களிடம் சொல்லலாம் என்று அழைத்தோம்” என்றார். “இந்த பின்னிரவுப்பொழுதில் நீ அழைப்பாய் என்றால் அதற்கு பெரும் பொருளுள்ளது என்றே எண்ணுகிறேன்” என்றார் யுதிஷ்டிரர். “அரசே, இந்தப் போர் இவ்வண்ணமே நீளுமெனில் இன்னும் சில நாட்களில் இருபுறமும் படைகள் முற்றழியும். பாரதவர்ஷத்தில் ஷத்ரிய குலமென்று எதுவும் இருக்காது. இருவரில் ஒருவர் வெல்லாமல் இப்போர் முடிவடையாது. வெல்பவர் நாம் என்று இருப்பது நமக்கும் பாரதவர்ஷத்திற்கும் நலம் பயக்கும். இங்கு புதிய வேதச்சொல் முளைத்தெழவேண்டும். புதிய தலைமுறைகள் நலமுறும் வாழ்வை நோக்கி செல்ல வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலுமே பேரறத்தின் நெறி. அதற்கு பீஷ்மர் களப்பலியாக வேண்டும். அவர் இருக்கும் வரை நம்மால் கௌரவர்களை வெல்ல முடியாது. இந்த ஒன்பது நாள் போரும் ஐயமின்றி அதை நிறுவிவிட்டது” என்றார்.

“ஆம்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். பீமசேனன் ஏதோ சொல்ல வருபவன்போல தலையசைத்தபின் நோக்கை திருப்பிக்கொண்டான். அவனை திரும்பிப் பார்த்தபின் யுதிஷ்டிரர் “நாம் அனைவரும் உணர்ந்தது அது. அதற்கெதிராக ஆணவத்தால் வெற்றுச்சொல் எடுக்க வேண்டியதில்லை. பிதாமகர் பீஷ்மரால் நாம் முற்றழிக்கப்படுவோம்” என்றார். “நாம் அவரை வென்று கௌரவர்களை முற்றழிக்க முடியும். நேற்று அதற்கான தடயம் ஒன்று எங்களுக்கு கிடைத்தது. எதிர்பாராமல் பீஷ்மருக்கு முன் சிகண்டி சென்றார். இந்த எட்டு நாள் போரில் ஒருமுறைகூட அவ்வாறு நிகழவில்லை. ஏனெனில் நான் சொல்லும்வரை பிதாமகர் பீஷ்மரை சிகண்டி எதிர்க்கவேண்டியதில்லை என்று அவரிடம் நான் ஆணையிட்டிருந்தேன். தன் எதிரில் சிகண்டியை பார்த்ததும் பீஷ்மர் வில் தாழ்த்தி திரும்பிச்சென்றார்” என்றார் இளைய யாதவர்.

“ஆம், அதை அறிந்தேன்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “எனவே நாளை அர்ஜுனன் போருக்கெழுகையில் அவனுடைய தேர் முகப்பில் சிகண்டி இருப்பார். அவர் முன் நின்று போரிடாமல் பீஷ்மர் வில் தாழ்த்துவார். அர்ஜுனனின் அம்புகளால் களத்தில் விழுவார்” என்றார் இளைய யாதவர். பீமசேனன் உரத்த குரலில் “ஒளிந்திருந்து தாக்குவதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இதையா இங்கு நின்று போர்சூழ்ச்சி என்று திட்டமிடுகிறோம்? இதை ஒருபோதும் பாண்டுவின் மைந்தர் ஏற்கமாட்டார்கள். களத்தில் முற்றழிவதே மேலும் பெருமையானது” என்றான். இளைய யாதவர் சொல்லெடுப்பதற்குள் கைவீசி “இல்லை, இதற்கு என் சொல்லில்லை” என்றான்.

“நாங்கள் இதை அனைத்துக் கோணங்களிலும் பேசிவிட்டோம்” என்றார் இளைய யாதவர். “பாரதவர்ஷமே அழியட்டும். இங்கிருக்கும் ஷத்ரியகுலம் முற்றழியட்டும். புதுவேதம் எழாமலேயே போகட்டும். இத்தகைய கீழ்மை இங்கு முளைக்கலாகாது. இளைய யாதவரே, தாங்கள் சொல்லும் அந்த வேதம் இக்கீழ்மையிலிருந்து முளைக்குமென்றால் அதற்கு என்ன பொருள்? ஒருதுளி நஞ்சு கலந்த பாலையா நாம் பிற்காலத்திற்காக வைத்துச்செல்லவிருக்கிறோம்? இது நரம்பு முடிச்சில் செலுத்தப்படும் நச்சுப்பல். முற்றழிவையன்றி வேறெதையும் உருவாக்காது. ஒளிந்திருந்து பிதாமகரைக் கொன்றபின் ஈட்டும் வெற்றி தேவையில்லை” என்று சொல்லிவிட்டு “போதும், நாம் இதை பேசவேண்டியதில்லை. கிளம்புவோம்” என்றான்.

“அமர்க! பேசும்பொருட்டே இங்கு வந்திருக்கிறீர்” என்று கடுமையான குரலில் இளைய யாதவர் சொன்னார். “இல்லை. இதில் இனி பேச்சிற்கே இடமில்லை. இது என் ஆணை! இளையோன் இந்த வஞ்சத்திற்கு ஒருபோதும் ஒப்பக்கூடாது. அதை கூறுபவர் அவன் இறைவடிவுக்கு நிகராக எண்ணும் இளைய யாதவராக இருந்தாலும் சரி. ஏன், தெய்வஉரு கொண்ட மூதாதையராக இருந்தாலும் சரி. மூன்று தெய்வங்களே எழுந்து வந்து ஆணையிட்டாலும் சரி. இது கீழ்மை. படைக்கலம் தொட்டு எடுத்த ஷத்ரியர் எவருக்கும் இது ஏற்கத்தக்கதல்ல” என்று பீமசேனன் சொன்னான்.

“உமது மூத்தவர் இன்னும் ஒருசொல்லும் உரைக்கவில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். பீமசேனன் திகைத்து தலைகுனிந்து அமர்ந்திருந்த யுதிஷ்டிரரை பார்த்தான். யுதிஷ்டிரர் மெல்லிய உடல் நடுக்கத்துடன் கைகளை மடியில் கோத்து அமர்ந்திருந்தார். உதடுகளால் ஏதோ நுண்சொல்லை உச்சரிப்பவர்போல தோன்றியது. பீமசேனன் உரத்த குரலில் “மூத்தவரே, தாங்களும் இதை உளம்கொள்கிறீர்களா என்ன? ஆணிலியை முன்னிறுத்தி பிதாமகரை தோற்கடிக்கப் போகிறோமா?” என்றான். திரும்பி சிகண்டியிடம் “இதையும் நீங்கள் விரும்புகிறீர்களா?” என்றான். “ஆம், நான் இன்று அவரை கொல்ல எண்ணுகிறேன்” என்றார் சிகண்டி.

“உங்கள் முன் பிதாமகர் பீஷ்மர் வில் தாழ்த்துவாரெனில் நீங்கள் சென்று அவரை எதிர்கொள்ளுங்கள். எதற்கு உங்களுடன் பார்த்தன் நிற்கவேண்டும்?” என்றான் பீமசேனன். “எனது அம்புகளால் அவர் நெஞ்சுக்கவசங்களை பிளக்க இயலாது” என்றார் சிகண்டி. “ஏன்?” என்று பீமசேனன் கேட்டான். “ஏனெனில் அவர் என் தந்தை. அவரை வெல்லும் படைக்கலம் தேடி அலைந்தேன். அந்த எண்ணத்தை கடப்பதற்கு படைக்கலமேதும் இல்லை என்று அறிந்தேன். நேற்று களத்திலும் அதை உணர்ந்தேன். என்னால் இயலுமென்றால் நேற்றே அவரை கொன்றிருப்பேன். இன்று இச்சூழ்ச்சிக்கு நான் ஒப்புக்கொள்வதே அதனால்தான்.”

பீமசேனன் திகைத்து நின்று இரு கைகளையும் விரித்தபின் “என்னால் இதை புரிந்துகொள்ள இயலவில்லை” என்றான். “நான் இதை புரிந்துகொள்ள நெடுந்தவம் தேவைப்பட்டது. அவர்முன் களத்தில் தோன்றுவதை ஒவ்வொரு கணமும் என் அகவிசை தடுத்தது. அறியா ஊழால் நேற்று அவர் முன் களத்தில் சென்றேன். என் வில் இரும்புக்குண்டு என எடை மிகுந்து நிலம் தாழ்ந்தது. அவர் வில் தாழ்த்தியதை நீங்கள் கண்டீர்கள். அதற்கு முன் என் வில் தாழ்ந்ததை நான் அறிவேன். அவர் கொல்லப்படவேண்டுமென்றால் நானும் இளைய பாண்டவரும் இணைந்தால் மட்டுமே நிகழும். அவருக்கெதிராக எழும் கை கொண்ட ஒருவர் இன்று அவர் மட்டுமே” என்றார் சிகண்டி.

“பார்த்தா, இது உனக்கு ஏற்புடையதா? இத்தனை நாள் வில் பயின்று நீ அடைந்தது இதுவா? உன் காண்டீபம் இதை ஏற்குமா?” என்றான் பீமசேனன். அர்ஜுனன் எழுந்து “ஆம், இது எனக்கு ஏற்புடையதல்ல” என்றான். திரும்பி இளைய யாதவரிடம் “இது எனக்கு ஏற்புடையதல்ல. நான் ஒப்பமாட்டேன்” என்று சொன்னான். “நான் முடிவு செய்துவிட்டேன். இன்று நிகழும் போரில் பீஷ்மர் களம்படுவார். தேரில் நீ இருக்காவிடில் அபிமன்யூ இருப்பான். எந்தத் தயக்கமும் இன்றி அவர் நெஞ்சை பிளக்க அவனால் இயலும்” என்றார் இளைய யாதவர். “இல்லை! அதை நான் ஒப்பமாட்டேன். அது அவனுக்கு பெரும்பழி சேர்க்கும். விண்ணில் மூதாதையர் முன்னில் அவன் சிறுமையுற்று நின்றிருப்பான்!” என்று அர்ஜுனன் கூவினான்.

புன்னகையுடன் “எனில் இப்பொறுப்பை நீ ஏற்கவேண்டும்” என்றார் இளைய யாதவர். “என்னை துயருறச் செய்கிறீர்கள். என்னை இறப்புக்கு நிகரான தருணங்களில் நிறுத்துகிறீர்கள்” என்று அர்ஜுனன் தளர்ந்த குரலில் சொன்னான். “என் வழி இதுவே. நான் முடிவுகளை நோக்கி மட்டுமே செல்பவன்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் சிகண்டியை நோக்கி “நீங்கள் இதை ஏற்கிறீர்களா, பாஞ்சாலரே?” என்றான். “ஆம், எனக்குத் தேவை பீஷ்மருக்கெதிராக எழும் இரு கைகள். அது உங்களுடைய கைகள் அல்லவென்றால் உங்கள் மைந்தனுடைய கைகளாக அமையட்டும். இன்று பத்தாவது நாள் பீஷ்மர் களம் விழுந்தாக வேண்டும். அதை முடிவெடுத்தே என் மைந்தரை இங்கு வரச்சொன்னேன்” என்றார் சிகண்டி.

ஷத்ரதேவனை நோக்கியபின் “நான் அறிந்திருந்தேன் ஒன்பது நாட்கள் மட்டுமே இளைய யாதவர் பொறுப்பார் என்று. என் ஊழ்கத்தில் பத்தாம் நாள் போரில் அவர் நெஞ்சு பிளந்து விழுவதை முன்னரே கண்டிருந்தேன்” என்றார் சிகண்டி. “அதுவே ஊழ். நமது அனைத்து எதிர்ப்புகளுடனும் நாம் அங்கு சென்று சேர்ந்தாகவேண்டும்.” பீமசேனன் “இல்லை, இதற்கு ஒப்புதலில்லை. பாண்டவர்கள் இதற்கு ஒருபோதும் ஒப்பமாட்டார்கள்” என்று கூவினான். திரும்பி யுதிஷ்டிரரிடம் “தங்கள் சொல்லின்மை துயரளிக்கிறது, மூத்தவரே. சொல்லுங்கள்! தங்கள் எண்ணமென்ன? தாங்கள் இப்போது சொல்லியாகவேண்டும்” என்றான்.

யுதிஷ்டிரர் சிவந்த விழிகளைத் தூக்கி அவனை பார்த்தார். அதில் நீர் நிறைந்திருந்தது. “என்னால் சொல்ல முடியவில்லை. மைந்தர்களின் இறப்பை பார்த்துக்கொண்டிருக்கிறேன். முற்றழிவுக்கு முன் எதுவுமே பிழையல்லவோ என்ற எண்ணத்தை அடைகிறேன்” என்றார். திரும்பி சகதேவனிடம் “இளையோனே, எப்போதும் உன் சொல்லுக்கு அப்பால் நான் எண்ணியதில்லை. சொல்க, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். சகதேவன் தணிந்த குரலில் “ஒப்புதல் அளியுங்கள், மூத்தவரே” என்றான். “என்ன சொல்கிறாய்? அறிவிலி!” என்று கையை ஓங்கியபடி பீமசேனன் அவனை நோக்கி சென்றான். “அது ஒன்றே வழி. அவர் களம்பட்டாக வேண்டும்” என்றான் சகதேவன். “இப்போருக்கு நாம் எழுந்திருக்கலாகாது. எழுந்தபின் வென்றே தீரவேண்டும்.”

“தாதையை மறைந்திருந்து கொல்லவா களம் வந்தோம்?” என்று பீமசேனன் கேட்டான். “அத்தந்தை இவ்வாறு மறைந்திருந்து கொல்லத்தக்க பிழையொன்றை ஆற்றியிருந்தார்” என்று சகதேவன் கூரிய குரலில் சொன்னான். “அங்கு அஸ்தினபுரியின் அவையில் அவர் இந்த இறப்பின் தொடக்கத்தை இயற்றினார். தன் குலமகள் ஆடை களைந்து இழிவுசெய்யப்பட்டபோது தலைகுனிந்து அங்கு அமர்ந்திருந்தார். அந்தப் பிழைக்கு இந்தப் பழியே ஈடு.” பீமசேனன் தளர்ந்து “இவ்வாறு சொல்லப்போனால் அனைத்துமே சரியென்றாகிவிடும். எச்செயலையும் சரியென்றாக்கிவிடலாமென்றால் இங்கு முன்னோர் சொல் எதற்கு? தெய்வங்கள்தான் எதற்கு?” என்றான்.

“எச்செயலையும் சரியென்றாக்குபவை தெய்வங்கள்தான். அவையில் தன் குலமகள் இழிவு செய்யப்பட்டபோது சொல்லடங்கி அவர் அமர்ந்திருந்தார். அப்போது அவருடைய ஊழ் முடிவுக்கு வந்துவிட்டது. இதுவே என் சொல்” என்று சொன்னான் சகதேவன். யுதிஷ்டிரர் தெளிவுகொண்டவராக “இளையோன் சொல்லே என்னுடையது. பீஷ்மர் களம்படட்டும்” என்றார். “மூத்தவரே, என்ன சொல்கிறீர்? நீங்கள் தீராப் பெரும்பழி பெறுவீர்கள். யயாதியின் குலத்திற்கு இழுக்கு சேர்ப்பீர்கள்” என்றான் பீமசேனன். “இளையோனே, இது என் ஆணை. நீ விரும்பினால் என் ஆணையை கையுதறி இங்கிருந்து கிளம்பிச் செல்லலாம். நீ இல்லாமலே இதை நிகழ்த்தட்டும் பாண்டவப் படை” என்றார் யுதிஷ்டிரர்.

பீமசேனன் இரு கைகளும் தளர்ந்து விழ வாய் சற்றே திறந்திருக்க கலங்கிய கண்களுடன் யுதிஷ்டிரரை நோக்கிக்கொண்டிருந்தான். “என் சொல்லை மீறிச் செல்வதாக இருந்தால் நீ செல்லலாம். ஆனால் சென்றால் என்னுடனான இறுதி குருதிஉறவை முறித்துவிட்டுச் செல்லவேண்டும். நான் இறந்தபின் உன் கையிலிருந்து ஒரு பிடி அன்னமோ நீரோ விரும்பமாட்டேன். எந்த இடத்திலும் என் பெயரை நீ சொல்லவும் ஒப்பமாட்டேன்” என்றார் யுதிஷ்டிரர். பீமசேனன் தன் தலையில் ஓங்கி அறைந்தான். பற்களை இறுகக் கடித்து இரு கைகளையும் முறுக்கி தோள் தசைகளும் மார்பும் நெளிந்து விரிய உடலுக்குள்ளிருந்து பெருவிசையொன்று வெடித்து தசைகளை சிதறடித்துவிடுமென்பதுபோல் விம்மி பின் அனைத்து விசைகளையும் இழந்து தளர்ந்து “என்றும் உங்கள் சொல்லுக்கு அடிமை. இப்பிறப்பில் மறுசொல் இல்லை. எப்பழி சூடினும்” என்றான். பிறகு ஒருசொல்கூட உரைக்காமல் கதவைத் திறந்து வெளியே சென்றான்.

யுதிஷ்டிரர் “அவ்வண்ணமே ஆகுக, இளைய யாதவனே!” என்று கைகூப்பினார். அவரும் எழுந்து சகதேவனை நோக்கி கை காட்டிவிட்டு வெளியே நடந்தார். சகதேவனும் நகுலனும் எழுந்து தலைவணங்கிவிட்டு அவரை தொடர்ந்தனர். “இனி உனக்கு மாற்றுச்சொல்லெதுவும் இருக்காது என்று எண்ணுகிறேன், பார்த்தா” என்றார் இளைய யாதவர். “என் ஊழ்” என்றான் அர்ஜுனன்.