திசைதேர் வெள்ளம் - 55

bowதிருதராஷ்டிரரின் குடிலுக்கு திரும்பும்போது சஞ்சயன் களைத்திருந்தான். அன்றைய நாள் நிகழ்ந்து ஓய இன்னும் நெடும்பொழுதிருக்கிறது என்ற எண்ணமே அப்போது அவன் மேல் பொதிந்து சூழ்ந்து அமைந்திருந்தது. அவரிடம் அவன் சொன்ன போர்க்களக் காட்சிகள் எவையும் அவனிடமிருந்து கடந்து சென்றிருக்கவில்லை. ஒவ்வொன்றும் அவ்வண்ணமே அவனில் எஞ்சி கரும்பாறையிலேயே கால்கள் புதைந்துவிடும் என்பதுபோல் உடல் எடைகொண்டிருப்பதாக அவன் உணர்ந்தான்.

அப்படியே திரும்பச் சென்றுவிட்டாலென்ன என்னும் எண்ணம் எழுந்தது. அஸ்தினபுரிக்கா என்ற மறு எண்ணம் எழுந்ததுமே அங்கிருந்து தன் சிற்றூருக்குச் செல்வதைப்பற்றி எண்ணினான். ஆனால் குருக்ஷேத்ரத்திலிருந்து தப்பவியலாது என்று உடனே தெளிவுறத் தெரிந்தது. நிகழ்ந்தவை காலஇடப்பொருத்தமற்று மீளமீள நிகழும் உள்ளத்துடன் எங்கிருக்கிறோமென்று அறியாமல் இந்த கொதிக்கும் அலைவெளியில் ஒழுகுவதொன்றே செய்வதற்குரியது. காலம் மெல்ல அனைத்தையும் படியச் செய்யக்கூடும். அத்தனை உடல்களும் மண்ணில் மட்கி அத்தனை உயிர்களும் மாற்றுலகுகளில் பொருந்திய பின். அத்தனை சொற்களும் ஒன்றுடனொன்று அறுதியாக இணைந்துகொண்ட பின்.

திருதராஷ்டிரர் கைகளை பீடத்தின் இருக்கைமேல் அறைந்து “சொல்!” என்றார். சஞ்சயன் தன் உள்ளத்தின் சொற்களை கோத்துக்கொண்டான். முதல்நாள் களத்தை சொல்லத் தொடங்கும்போது இருந்த அதே பதற்றமும் நிலைகொள்ளாமையும் ஒவ்வொருநாளும் அவனிடம் கூடின. கண்முன் விரிந்துகிடந்த களம் அத்தனை சொற்களுக்கும் அப்பாற்பட்டதெனத் தோன்றியது. அவன் எடுத்த எந்தச் சொல்லும் அக்காட்சியுடன் பொருந்தவில்லை. ஒவ்வொருமுறை சொல்கையிலும் இதுவல்ல என அகம் பதறியது. அந்தக் குறையை நிறைக்கவே அடுத்த சொற்றொடரை எடுத்தான். அதை நிறைக்க இன்னொன்றை.

பின்னர் ஒருகணத்தில் அவன் சொல்லிக்கொண்டிருப்பதை முற்றாகவே மறந்தான். சொல் அவனிடமிருந்து தடையிலாது வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. சொற்கள் முடிந்து அவன் வானிலிருந்து விழுவதுபோல் வந்து தன்னுணர்வை அடைந்தபோது அக்களத்தைவிடப் பெரியதொரு வெளியில் தான் இருப்பதை உணர்ந்தான். மண்ணிலுள்ள அனைத்தையும் தழுவியும் மேலும் பற்பல மடங்கென பெருகிக்கொண்டே இருக்கும் ஒன்று அந்த வானம் என அப்போது உணர்ந்தான். அது மிக அப்பால், எவ்வகையிலும் அடைவதற்கரியதாக, எங்கோ இருந்தது. அவன் தான் சொன்ன அச்சொற்களை தானே கேட்க விழைந்தான். எவ்வண்ணமேனும் எங்கேனும் அவை பதிவாகியிருக்கக்கூடுமென்றால் எத்தனை நன்று என எண்ணினான். ஆனால் அவை வீணாவதில்லை, அவை எழுந்தன என்பதனாலேயே எங்கோ இருக்கும்.

முதல்நாள் மாலையில் விந்தையானதோர் நுண்ணுணர்வை அவன் அடைந்தான். அவனுடைய சொற்களை எங்கோ எவரோ அறிந்துகொண்டிருப்பதாக. ஒவ்வொரு மாத்திரையையும், ஒவ்வொரு உணர்வுத்துளியையும். அவருடைய நினைவிலிருந்து அவை பதிவாகும். அவை அள்ள அள்ளக் குறையாத பெருங்காவியமாகும். இம்மானுடர் முற்றழிவார்கள். இந்த நதிகள் திசைமாறி பெயர் திரிந்து பிறிதாகும். இந்த மலைகள்கூட சற்றே கரைந்தழியக்கூடும். ஆனால் அச்சொற்கள் இருக்கும். அவற்றை தலைமுறைகள் பயில்வார்கள். ஒவ்வொரு சொல்லும் முளைத்துப்பெருகும். இச்சொற்களிலிருந்து இவையனைத்தும் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து விரிந்து அலையடிக்கும்.

சொல்வதற்கு முன் அவன் திரும்பி அந்த நோக்கிலா விழிகளை ஒருமுறை நோக்கினான். எப்போதும் எழும் திகைப்பையே அவ்விழியிலாமை உருவாக்கியது. ஆனால் எழுகாலம் விழியற்றதோ என்னும் எண்ணம் எழுந்தது. சொல்லில் இருந்து மட்டுமே இவையனைத்தையும் அறியவேண்டியதென்பதனாலேயே விழியின்மை கொண்டது. காட்சிகளை சொல்கையில் எழும் சிறு குறிப்புகள் அவருக்கு எவ்வளவு தேவையானவை என்று அவன் அறிந்திருந்தான். எவர் எவரை தாக்குகிறார்கள் என்பதல்ல, எவ்வண்ணம் தாக்குகிறார்கள், எப்படி எதிர்வினையாற்றினார்கள், என்னென்ன மெய்ப்பாடுகள் வெளிப்பட்டன என்பதெல்லாம்கூட அவருக்கு தேவையானவையாக இருந்தன.

“அதோ இளைய பாண்டவராகிய பீமசேனர் தன் தேரில் நிலைவில்லை ஏந்தி நின்றிருக்கிறார். அவருக்குப் பின்னால் இருபக்கமும் ஆவக்காவலர்கள் மாறி மாறி அம்புகளை எடுத்தளிக்கிறார்கள். கௌரவர்களின் அம்புகள் எழுந்து வந்து அவர்களை அறைகின்றன. அவர்களை எதிர்கொண்டு நின்றிருப்பவர்கள் காந்தாரராகிய சுபலரும் அவருடைய மைந்தர்களும். துணைநின்று பொருதுகின்றனர் கௌரவப் படைத்தலைவர்கள். பீமசேனர் அவர்களை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்பது முகத்திலிருக்கும் இளிவரலிலிருந்து தெரிகிறது. கௌரவப் படைத்தலைவர் சுவிரதர் தன் நீண்ட வில்லின் அம்புகளால் பீமசேனரை அறைய சுபலரை நோக்கி அம்பெடுத்து அரைக்கணத்தில் அதை அவரை நோக்கி திருப்பி அவர் கழுத்தை அறுத்து தேர்த்தட்டில் தள்ளுகிறார் பீமசேனர்.”

“சுபலரை அது திகைக்க செய்கிறது. அருகே கழுத்தறுபட்டு குருதியுமிழும் உடலை ஓரவிழியால் நோக்காமல் அவரால் பீமசேனரை எதிர்க்க இயலவில்லை. ஏனெனில் முந்தைய கணம் வரை அவர் தொடர்ந்து சொல்லாடிக்கொண்டிருந்தது அவரிடம்தான். ஓரவிழி நேர்விழியைவிட கூரானது. களத்தில் ஓரவிழியை ஆள்பவனே வெல்பவன். அம்புகளால் அறையுண்டு சுபலர் தேர்த்தட்டில் விழுந்தார். அவருடைய வலக்கால் துடிக்கிறது. அவருடைய வில் நழுவி அப்பால் விழ கொக்கிச்சரடுகளால் அவரை இழுத்து அப்பாலெடுத்து உயிர்காத்தனர். ஆனால் கௌரவ வில்லவர் எழுவர் களத்தில் விழுந்தனர். அவர்களின் தேர்கள் முட்டித்தடுமாறுகின்றன. ஒருவன் கீழே விழுந்து தேர்தட்டை பிடித்துக்கொண்டு எழ முயல அது பிறையம்பு தலையை கொய்துசெல்லக் காட்டியது என அமைந்தது.”

அவன் கதையென, காட்சியென விரித்துரைத்துச் செல்கையில் அவர் அச்சொற்களால் காற்று அலைக்கழிக்கும் சுனை என உடல் கொந்தளிக்க அமர்ந்திருப்பார். பெயர்மைந்தரின் இறப்புகள் அவர்மேல் அம்புகளாக சென்று தைத்தன. மைந்தர்களின் இறப்பின்போது உடல் நடுங்க கால்கள் வலிப்புபோல் இழுத்துக்கொள்ள முகம் கோணலாகி வாயோரம் எச்சில் நுரைததும்ப அதிர்ந்துகொண்டிருந்தார். “அரசே!” என்று அவன் அழைத்தபோது “ம்!” என்றார். “அரசே!” என்று அவன் மீண்டும் அழைக்க “சொல்க, அறிவிலி! என்ன என்று சொல்!” என்று அவனை ஓங்கி அறைந்தார்.

உடலொழிந்து அவ்வறையை தவிர்த்து மீண்டும் சொல்லத்தொடங்கினான். “உங்கள் மைந்தர் பீமசேனரை எதிர்கொள்கிறார்கள், அரசே. திருதஹஸ்தரும் கண்டியும் பாசியும் அவர் முன் நின்றிருக்கிறார்கள்!” அவர் “ஆ! அறிவிலிகள்! எப்போதும் அவன் முன் தனித்தே சென்று நிற்கிறார்கள்” என்றார். “இறப்பு எளிய உயிர்களை கவர்கிறது. ஏனென்றால் அவர்களறிந்த பெருநிகழ்வு அது ஒன்றே என்கிறார் பராசரர்.” முனகியபடி நிலையழிந்து தலையை உருட்டியபடி “இவர்கள் ஓருடலென்றானவர்கள். ஒற்றைப்பேரிருப்பென நின்று பொருதும் ஆற்றல் கொண்டவர்கள். ஆனால் சாவு வந்து முன்னிற்கையில் சிதறிவிடுகிறார்கள்! ஏன்? சாவுக்குமுன் குருதிக்கோ குலத்துக்கோ பொருளில்லையா என்ன? அதை தனித்தனியாகவே எதிர்கொள்ளவேண்டுமா என்ன? ஆ! என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன் இங்கே?” என்றார்.

ஒவ்வொரு கௌரவனின் சாவும் அவருக்கு நிகர்சாவாக இருந்தது. முதல் கௌரவனின் சாவை அவன் சொன்னபோது அவர் ஒருகணம் இறந்து முற்றிலும் இன்மையை அடைந்து மீள்வதை அவன் கண்டான். அன்றைய போரை அவன் சொல்லிக்கொண்டே சென்றான். “துரியோதனரிடமிருந்து முதல்முறையாக ஓர் உறுமல் எழுந்தது. மறுமொழி என பீமன் பிளிறலோசை எழுப்பினார். அவ்வொலி சூழ்ந்திருந்தோரை திகைக்க வைத்தது. அவர்கள் விழித்தெழுந்தவர்கள்போல் கூச்சலிட்டபடி தாக்கத் தொடங்கினர். சர்வதரை மகாபாகுவும் சித்ராங்கரும் சித்ரகுண்டலரும் பீமவேகரும் பீமபலரும் சூழ்ந்துகொண்டார்கள். தனுர்த்தரரும் அலோலுபரும் அபயரும் திருதகர்மரும் அப்ரமாதியும் தீர்க்கரோமரும் சுவீரியவானும் சுதசோமரை சூழ்ந்தனர். கதையால் அவர்களை அறைந்து பின்னடையச் செய்து பீமசேனரின் பின்பக்கத்தை காத்தார் சுதசோமர். மேலும் மேலும் கௌரவர்கள் வந்துகொண்டிருந்தனர். பெருகிச்சுழன்று நதிச்சுழல் என்றாயினர். நடுவே பீமசேனர் சுழிவிசையில் என சுழன்றபடி கதையால் அவர்களைத் தாக்கி தடுத்தார்.”

கைகளால் பெரிய கதையொன்றை சுழற்றுபவர்போல திருதராஷ்டிரர் தசையிளகினார். “எதிர்பாராக் கணமொன்றில் பீமசேனர் எழுந்து பாய்ந்து சேனானியின் தலையை அறைந்து உடைத்தார்” என்று அவன் சொன்னதும் நுண்ணுணர்வால் அருகே இன்மையை உணர்ந்து திரும்பி நோக்கினான். அங்கே இருந்த திருதராஷ்டிரர் மெய்யாகவே பாறையைப்போல வெற்றிருப்பாகத் தோன்றினார். அவன் “கௌரவர்கள் நடுவே அதிர்ச்சிக் கூச்சல்கள் எழுந்தன. துரியோதனர் என்ன நிகழ்ந்தது என உணராதவர்போல திகைத்து நின்றார்” என்று மெல்லிய குரலில் சொன்னான். அவர் ஓர் உலுக்கலுடன் மீண்டும் தன் உடலில் எழுந்தார். “யார்? யார்?” என்றார். “சேனானி” என்று அவன் சொன்னான். அக்கணம் அவரிடமிருந்து எழுந்த அலறலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுடைய கை அதிர்ந்து தெறிக்க விரல்பட்டு ஆடிகள் விழப்போயின. பீதன் பாய்ந்துவந்து பற்றிக்கொண்டான்.

அவர் அலறிக்கொண்டே இருந்தார். “அப்போது உருவான கணத்தேக்கத்தில் புகுந்து ஜலகந்தரை நெஞ்சிலறைந்து வீழ்த்தினார் பீமசேனர்” என்றான். “யார்? அறிவிலி, யார்?” என்றார் திருதராஷ்டிரர். “ஜலகந்தர்” என்றான் சஞ்சயன். மீண்டும் அதே நெஞ்சுகிழிபடும் அலறல். மார்பில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு சொல்லில்லாது வீறிட்டார் திருதராஷ்டிரர். “பீமசேனர் படைவீரன் ஒருவனின் இடையில் மிதித்து மேலேறி எழுந்து சுழற்றி அறைந்த கதையால் சுஷேணரை தலைசிதற குப்புறச் சரித்தார். கௌரவர்களின் சுழிவளையம் விரிந்து அகல அவரைச் சூழ்ந்து உருவான வெற்றிடத்தில் கௌரவர் மூவரும் வாயிலும் மூக்கிலும் குருதிக்குமிழிகள் கொப்பளிக்க கிடந்துநெளிந்தனர்“ என்று அவன் சொன்னதும் அவர் தலையை அசைத்துக்கொண்டு அலறியபடியே இருந்தார்.

“பீமசேனர் பீமபலரை அறைந்து வீழ்த்தினார். அருகே நின்றிருந்த பீமவேகரின் முகத்தில் குருதியும் வெண்தலைச்சேறும் தெறிக்க அவர் உள்ளமும் உடலும் செயலிழந்து அசைவற்று நின்றார். அவர் தலையை வாளால் வெட்டி நிலத்திலிட்டார் பீமசேனர். துரியோதனர் தீ பட்ட யானை என வீறிட்டபடி கதை சுழற்றி பாய்ந்தெழுந்தபோது கீழிருந்த பீமவேகரின் தலையை எடுத்து இடக்கையில் தூக்கிப் பிடித்தார்” என சஞ்சயன் சொன்னபோது திருதராஷ்டிரர் மயக்கமடைந்து இருக்கையில் சரிந்தார். சொற்களை நிறுத்திவிட்டு அவன் அவரை பார்த்தான். அவர் நெஞ்சு ஏறி இறங்கியது. கைவிரல்கள் அசைந்துகொண்டிருந்தன. கால் கட்டைவிரல் மட்டும் தூண்டில் விழுங்கிய மீன்போல் துடித்தது.

அவன் மெல்ல “அரசே!” என்றான். அவருடைய மூச்சு திணறுவது போலிருந்தது. அவன் எழுவதற்குள் அவர் விழித்துக்கொண்டு “சொல்!” என்று உறுமினார். அவன் மீண்டும் ஆடியில் நோக்கினான். சற்றுமுன் அவன் சொல்லி நிறுத்திய சொற்றொடரை நினைவுகூர்ந்தான். “கௌரவர்கள் அணிசிதைந்து ஒருவரோடொருவர் முட்டியபடி தத்தளித்து உடல்ததும்பினர். பீமசேனர் உறுமலோசையுடன் அவர்களை நோக்கி பாய “மூத்தவரே” என்று அலறியபடி அவர்கள் சிதறியோடினர். கால்தவறி கீழே விழுந்த சுவர்மர் “மூத்தவரே! மூத்தவரே!” என்று கூவினார். பீமசேனர் அவர் நெஞ்சை உதைத்து மண்ணில் வீழ்த்தி தன் வாளால் அவர் தலையை வெட்டி குடுமியைப்பற்றித் தூக்கி காட்டியபடி வெறிநகையாடினார். கௌரவர்கள் முட்டி மோதி அகன்றுவிட அவரைச் சுற்றி எவருமிருக்கவில்லை. உடைந்த குடமென கொழுங்குருதி வழிந்த தலையைத் தூக்கி தன் முகத்தின்மேல் அதை ஊற்றினார். காலால் தரையை ஓங்கி அறைந்து “குலமகள் பழிசூடிய வீணர்கள்! இனி தொண்ணூற்றி இருவர்! எஞ்சியோர் வருக! வருக, கீழ்மக்களே! வருக, இழிசினரே! எவருள்ளனர் இங்கே? இக்களத்தில் ஒவ்வொருவரையும் நெஞ்சுபிளந்து குருதியுண்பேன்! அறிக தெய்வங்கள்! அறிக மூதாதையர்!” என்று கூச்சலிட்டார்.”

அவர் “உம்” என்றார். “பீமசேனரின் அறைபட்ட பீமபலரின் உடல் தேரின் அச்சுக் கூரில் தைத்தது. அந்தத் தேர் பின்னிருந்து வந்த தேர்களால் முட்டப்பட்டு மெல்ல நகர நடப்பவர்போல் தோன்றினார். அவ்வுடல் கோக்கப்பட்ட தேர் சற்றே கவிழ இரு கைகளும் விரிய அண்ணாந்து வானை பார்ப்பவர்போல் தெரிந்தார்.” அதை சொன்னதும் மீண்டும் திரும்பி அவன் திருதராஷ்டிரரை பார்த்தான். அவர் அச்சொற்களை வேறெங்கிருந்தோ கேட்டுக்கொண்டிருந்தார். அவனுக்கு விந்தையானதோர் உணர்வு ஏற்பட்டது. மைந்தர் களம்படும் காட்சியானாலும் அக்காட்சி கூர்மையுடன், விரிவுடன் தெரியவேண்டும் என்று விரும்புகிறதா அவ்வுடலில் அடைபட்டு இருளில் தவிக்கும் அது?

அதன்பின் அவன் அனைத்துக் காட்சிகளையும் மேலும் நுண்ணிய செய்திகளுடன் சொன்னான். களம்பட்ட கௌரவர்களின் இறுதித்துடிப்பை, எஞ்சும் மூச்சைவிட்டு அவர்கள் மண்ணில் அமைவதை, சூழ்ந்திருப்பவர்களின் உணர்ச்சிகளை, கொக்கிக் கயிற்றை வீசி கௌரவர்களை கோத்து இழுத்து எடுக்கும் காட்சியை. தூண்டிலில் சிக்கிய பெருமீன்களென உடல்கள் இழுபட்டு பிற உடல்களிலும் சரிந்த தேர்களிலும் முட்டி மோதி விலகிச் சென்றன. “அவற்றுக்கு மீண்டும் உயிர் வந்ததுபோல. பிறிதொரு உயிர். ஆமைகளின் உயிர், மீன்களின் உயிர், அல்லது நாகங்களின் உயிர்” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரரை அவன் ஓரவிழி ஒருகணம் நோக்கி மீண்டது. ஓர் அக அதிர்வென அவர் அதில் மகிழ்கிறாரா என்ற எண்ணம் ஏற்பட்டது. அதெப்படி என்று மறுகணமே திடுக்கிட்டான். பின்னர் சொல்கூட்டுகையில் எல்லாம் அவ்வெண்ணம் உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. தார்த்தராஷ்டிரர் விழும் காட்சிகளில் அவரது முகத்தை நோக்காமல் அவனால் இருக்க இயலவில்லை.

பின்னர் அவன் அதை புரிந்துகொண்டான். ஒரே தருணத்தில் இரண்டாக பிரிந்திருந்தார் அவர். முதற்கணம் களக்காட்சி ஒன்றை காணும் இளஞ்சிறுவன் ஒருவனின் மெய்ப்பு. அதன்மேல் விழுந்து மூடி எழும் தந்தையின் துயரம். இது என் உளமயக்கா? ஆனால் உள மயக்குகள் வெறுமனே பாழிலிருந்து எழுவதில்லை. போர் முடிந்து அந்திமுரசுகள் ஒலிக்கையில் திருதராஷ்டிரர் பீடத்தில் தளர்ந்து விழுந்து உயிரிழந்தவைபோல் இரு கைகளும் நிலம்தொட தொங்க மார்பில் சரிந்து முகவாய் படிய முனகிக்கொண்டிருந்தார். ஆடிகளைக் கழற்றி பேழைக்குள் வைக்கும் பீதனைப் பார்த்தபடி அவன் அசையாமல் நின்றான். அவர் விழித்தெழுவதற்கென நெடுநேரம் காத்த பின் “அரசே!” என்றான். “ஆம்! கிளம்பலாம். கிளம்பவேண்டியதுதான். நீராட வேண்டும். இக்குருதி அனைத்தையும் உடலிலிருந்து கழுவிய பின்னரே சற்றேனும் துயில முடியும்” என்று அவர் சொன்னார்.

கைகளை நீட்டியபடி “என்னை பிடித்துக்கொள். என் உடல் நிலையழிந்திருக்கிறது. நான் விழுந்துவிடுவேன்” என்றார். அவரை கைபற்றி மேடையிலிருந்து இறக்குகையில் அவர் தன் திசையுணர்வையும் கால்களில் இருக்கும் இடவுணர்வையும் முற்றாக இழந்துவிட்டிருப்பதை அவன் பார்த்தான். படிகளிலும் கைப்பிடிகளிலும் தூண்களிலும் அவர் முட்டிக்கொண்டார். அவர் உடலில் இருக்கும் தன்னுணர்வை அவன் எப்போதும் வியப்புடனே பார்த்துவந்தான். ஒருமுறை சென்று வந்த இடத்திற்கு நன்கறிந்தவர்போல் மீண்டும் அவரால் செல்ல இயலும். எத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த இடத்தை மிகச் சரியாக திசை நுட்பங்களுடன், பொருள் குறிப்புகளுடன் சொல்ல முடியும். அவர் தன் உடல்திகழ்ந்த விழிகளை இழந்துவிட்டிருந்தார்.

தேரில் ஏறி அமர்ந்ததும் அவர் “நாம் எங்கு செல்கிறோம்?” என்று கேட்டார். “ஓய்வெடுப்பதற்கு” என்று அவன் சொன்னான். “அஸ்தினபுரிக்கா?” என்று அவர் கேட்டார். “இல்லை, நம் குடிலுக்கு” என்று அவன் சொன்னான். “ஆம் ஆம், அங்கிருந்துதானே வந்தோம்” என்றார். தேரில் பீடத்தில் தளர்ந்து அமர்ந்து கைகளை மார்பில் கட்டிக்கொண்டார். பின்னர் தலையை அசைத்து “மீண்டெழுகிறது” என்றார். “அரசே” என்றான். “நீ சொல்கையில் எழுவதல்ல, சொல்லி நிறுத்திய பின் பேருருக்கொண்டெழுகிறது போர். நீ சொல்லிக்கேட்கையில் என்னுள் எழும் களம் பிறிது. சற்றே உளம் மயங்குகையில் என் கனவில் எழுவது மேலும் பெரிது. இப்பொழுது விசைமீளும் ஊசல் என மறுதிசை கொண்டெழுவது அதைவிடவும் பெரிது” என்றார். “தெய்வங்களே! எத்தனை களங்களில் நிற்பேன்! எத்தனைமுறைதான் இறப்பேன்!” என உடைந்த குரலில் அழுதார்.

தலையை இரு கைகளால் தட்டியபடி “கொலைகள்! அருங்கொலைகள்!” என்றார். “நிறுத்து! புரவியை நிறுத்து!” என்றபடி எழுந்தார். அவர் உடல் வியர்வை கொண்டிருந்தது. தசைகள் அதிர்ந்துகொண்டிருப்பதை அவன் பார்த்தான். மீண்டும் அமர்ந்து “செல்க!” என்றார். “அவர்கள் அத்தனை எளிதாக இறக்கமாட்டார்கள்” என்றார். “சஞ்சயா, பறவைத்தூது சென்றுவிட்டதா? அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று உறுதி செய்தாயா?” என்றார். சஞ்சயன் “அவர்கள் விண்புகுந்துவிட்டதை முரசுகள் அறிவித்தன” என்றான். “முரசுகளா? சில தருணங்களில் எதிரிகளை குழப்பும் பொருட்டு பொய்யாகவேனும் முரசறிவிப்பை செய்வதுண்டு. அவர்களில் சிலர் உயிர் எஞ்சியிருக்ககூடும்” என்றார் திருதராஷ்டிரர்.

“ஆம்” என்று அவன் சொன்னான். “ஓரிருவராவது எஞ்சியிருக்கக்கூடும். அறிவிலி! சொல்க, அவர்கள் அனைவருமே இறந்துவிட்டார்கள் என்றா முரசு அறையப்பட்டது?” என்றார். அவன் “ஆம், அரசே. அவர்கள் அனைவருமே மறைந்துவிட்டதாகத்தான் முரசு அறையப்பட்டது” என்றான். “இல்லை, அவ்வாறு இருக்க வழியில்லை. பொய் அது” என அவர் சொன்னார். உரக்க நகைத்து “அது சகுனியின் சூழ்ச்சி. கௌரவர்கள் இறந்துவிட்டார்கள் என்று பாண்டவர்களை நம்பச்செய்வது அது. நாளை பார்! இறந்துவிட்டவர்கள் இரும்புக்கவசங்கள் ஒளிவிட பெரிய புன்னகையுடன் தேர்த்தட்டில் நிற்பதை அவர்கள் பார்ப்பார்கள். அப்போது எழும் திகைப்பு இருக்கிறதே!” என்று உரக்க நகைத்து தொடைகளை தட்டிக்கொண்டு “அப்போது அறிவார்கள். கௌரவர்கள் யார் என்று. அத்தனை எளிதாக என் மைந்தர் இறக்கப்போவதில்லை. போர் என்றால் என்னவென்று அவர்களுக்கு தெரியும்” என்றார்.

மேலும் மேலும் அவர் முகம் உவகைகொண்டபடியே வந்தது. “அவர்கள் பிறக்கும்போதே நான் அறிவேன், அவர்கள் ஒவ்வொருவரும் பத்து மானுடருக்கு நிகர் என்று. என் கைகளில் அக்குழவிகளை கொண்டுவந்து தருகையில் மூன்று அல்லது நான்கு சேடியர் ஒரு தாலத்தில் வைத்து சேர்த்து தூக்கிக்கொண்டு வருவார்கள். நான் மட்டுமே அவர்களை கைகளால் தூக்க இயலும். உனக்கு தெரியாது, ஒருமுறை துர்மதன் முதல் நிலை மாடத்திலிருந்து கூடத்திற்குள் விழுந்துவிட்டான். ஆறு ஆள் உயரம். அப்போது அவனுக்கு ஆறு மாதம்கூட ஆகவில்லை. என்ன ஆயிற்று? கீழே விழுந்தவன் கூடத்தின் தரையிலிருந்த மரப்பலகை நிரப்பை உடைத்துவிட்டான். ஆம், பலகையில் விரிசல் விழுந்துவிட்டது! மெய்யாகவே!” என்றபடி தொடையில் ஓங்கி அறைந்து “அவர்களை எமனும் அஞ்சுவான்! இறப்பு அவர்களை அணுகாது! ஐயமே இல்லை!” என்றபின் உரக்க நகைத்தார்.

“ஏன் இந்தத் தேர் இத்தனை மெதுவாக செல்கிறது? இதை விரைந்து செல்லும்படி ஆணையிடு. நீயே பார், அங்கே நம் குடிலில் பறவை வந்து அமர்ந்திருக்கும். கௌரவர்கள் இறக்கவில்லை என்ற செய்தியுடன் அது வந்திருக்கும். அதை பார்க்கையில் தெரியும் நான் ஏன் சொன்னேன் என்று. என் மைந்தர்களை மட்டுமல்ல, சகுனியையும் எனக்கு தெரியும். அவன் பாண்டவர்கள் எண்ணி சென்றடைய முடியாத சூழ்ச்சி கொண்டவன். அதை அவர்கள் இந்தப் போரில் காண்பார்கள்” என்றார் திருதராஷ்டிரர். தேர் சென்றுகொண்டே இருக்க “ஏன் இன்னும் நாம் சென்று சேரவில்லை? என்றார். “சென்றுகொண்டே இருக்கிறோம்” என்றான் சஞ்சயன். “விரைந்து செல்லச் சொல். இன்னும் என்ன செய்துகொண்டிருக்கிறான்?” என்றார்.

“யார்?” என்றான் சஞ்சயன் குழப்பத்துடன். “படைக்கலங்கள் செய்பவன்” என்றார். “எங்கு?” என்று சஞ்சயன் கேட்டான். “இதோ, நீ பார்க்கிறாய் அல்லவா? அவர்கள் ஏழு பேர்! படைக்கலங்களை உருக்கி கூடத்தில் அறைந்துகொண்டிருக்கிறார்கள்.” சஞ்சயன் “எங்கு?” என்றான். “மூடா, இதோ நம் அருகில். பார்க்கவில்லையா?” சஞ்சயன் “ஆம்” என்றான். திருதராஷ்டிரர் எண்ணியிராக் கணத்தில் உடைந்து “என் மைந்தர்களே! என் மைந்தர்களே!” என்று நெஞ்சில் ஓங்கி அறைந்து கதறி அழத்தொடங்கினார். புண்பட்ட விலங்கின் ஓலம்போல சொல்லில்லாது எழுந்தது அவர் அழுகை. நெஞ்சிலும் தலையிலும் ஓங்கி அறைந்தார். தேர்த்தூணில் தலையை முட்டினார். எழுந்து தேரிலிருந்து பாய்ந்துவிடப்போகிறவர்போல அலைவுகொண்டு மீண்டும் அமர்ந்தார்.

இரு கைகளையும் விரித்து “தெய்வங்களே! மூதாதையரே! என் மைந்தர்! என் மைந்தர்!” என்றார். “விதுரா! விதுரா! எங்கிருக்கிறாய்? விதுரன் எங்கே? விதுரன் எங்கே?” என்றார். “அரசே, விதுரர் இங்கில்லை” என்றான் சஞ்சயன். “அவன் இங்கிருக்க வேண்டும். அவன் வேண்டும் என்னருகில். இத்துயரில் அவனன்றி வேறெவரும் என்னுடன் இருக்க இயலாது. விதுரனை அழைத்து வா!” என்றார். “ஆம்! ஆணை!” என்றான் சஞ்சயன். “இப்போதே அழைத்து வா. உடனே அழைத்து வா!” சஞ்சயன் “இதோ அழைத்து வருகிறேன்” என்றான். “விதுரன் சொன்னான். இவையனைத்தையும் விதுரன் சொன்னான். விதுரா! மூடா! விதுரா! எப்படி என்னை நீ தடுக்காமலிருந்தாய்? விதுரன் எங்கே? இங்கிருந்தானே! சற்று முன் இங்கிருந்தானே?” என்றார்.

சஞ்சயன் ஒன்றும் சொல்லவில்லை. “அவன் அறிவான்! அவர்கள் பிறந்தபோதே அவன் சொன்னான்! அவன் அறிவான்! அவன் அறிந்துதான் என்னைவிட்டு சென்றான்! எங்கிருந்தாலும் அந்த இழிமகன் என் முன் வரவேண்டும். அவன் தலையை என் கைகளால் அறைந்து உடைப்பேன். அதன் பிறகு நானும் உயிர்மாய்த்துக்கொள்வேன். விதுரன் எங்கே? விதுரன் உடனே இங்கு வேண்டும்” என்று திருதராஷ்டிரர் கூவினார். சஞ்சயன் அக்கொந்தளிப்பை பார்த்தபடி ஓய்ந்த உடலுடன் அமர்ந்திருந்தான். மேலும் மேலுமென வெறிகொண்டு கூச்சலிட்டு அலறி அழுது மெல்ல அவர் ஓய்ந்தார். பெருந்துயர் என்பது சொல்லில்லாமல் எழுகையிலேயே முழுமை கொள்கிறது என்று அவனுக்கு தோன்றியது. சொல் எழுகையில் அத்துயர் மானுடனுக்குரியதாகிவிடுகிறது. சொல்லில்லாத் துயரங்கள் தெய்வங்களுக்குரியவை. மானுடரால் விளக்க முடியாதவை. எந்த மானுடராலும் ஆறுதல் உரைத்து ஆற்றிவிட முடியாதவை.

தேர் குடில் பகுதியை அடைந்தபோது திருதராஷ்டிரர் அரைத்துயிலில் இருந்தார். விசும்பல்கள் ஓய்ந்து துயிலுக்கான குறட்டை ஒலிகள் கேட்கத் தொடங்குவதை முன்னரே அவன் உணர்ந்திருந்தான். அவரை எழுப்ப வேண்டாமென்று அவன் எண்ணினான். தேர் நின்ற உலுக்கலில் அவர் விழித்துக்கொண்டு “எங்கிருக்கிறோம்?” என்றார். “குடில்கள் வந்துவிட்டன, அரசே” என்றான் சஞ்சயன். “வந்துவிட்டனவா? பறவைத்தூது இருக்கிறதா பார்! பறவைத்தூது வந்திருக்கும்! அவர்கள் இறக்கவில்லை என்ற செய்தி இருக்கும், பார்” என்றார். “ஆம், இருக்கும். பார்ப்போம், வருக!” என்று அவன் அவர் கைகளை பற்றினான்.

அவர் இறங்கி நடந்தபோது உடல் ததும்பிக்கொண்டிருந்தது. எப்போதும் பேரெடைகொண்ட இரும்புப் பதுமை ஒன்று தன்னருகே நடந்துவருவது போன்ற உணர்வை அவன் அடைவதுண்டு. அன்று காற்றில் பறக்கத் துடிக்கும் பட்டம் போலிருந்தது அவர் உடல். “பறவை வந்திருக்கிறதா பார்… சென்று பார்” என்றார். அவன் ஒன்றும் சொல்லவில்லை. குடிலை அடைந்து குறுபீடத்தில் மெல்ல அமர்ந்தபின் அவர் நீள்மூச்செறிந்தார். இரு கைகளால் தலையைப் பற்றியபடி குனிந்து மீண்டும் மீண்டும் மூச்செறிந்தார். பின்னர் “விதுரனுக்கு ஓலை அனுப்பினாயா?” என்றார். “இல்லை, அரசே” என்று அவன் சொன்னான். “வேண்டாம்” என்றார் திருதராஷ்டிரர்.