திசைதேர் வெள்ளம் - 50
கோசல நாட்டரசன் பிருஹத்பலன் சொல்சூழவையிலிருந்து வெளியே வந்ததும் தயங்கி நின்றான். அவனருகே வந்த தேர்வலன் “அரசே” என்றான். அவனிடம் “செல்க!” என கைகாட்டிவிட்டு அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் வருவதற்காகக் காத்து நின்றிருந்தான். அவர்கள் ஒருவர் இருவராகும் விழிமயக்கு என அருகணைந்து தலைவணங்கியதும் “நாம் பேசவேண்டும்” என்றான். விந்தன் “தனியாகவா?” என்றான். “ஆம், இங்கே பேச இயலாத சில உள்ளன” என்றான் பிருஹத்பலன். “நம் குடிலுக்குச் செல்வோம்… கவசமணிய இன்னும் பொழுதுள்ளது” என்றான் விந்தன். விந்தன் பேசுகையில் அதே முகக்குறி அனுவிந்தனின் முகத்தில் உருவானது. அவனும் அச்சொற்களைச் சொல்லி நின்றதுபோல.
பிருஹத்பலன் “நான் அனைவரிடமும் பேசவிழைகிறேன். மாளவரும் வரட்டும்” என்றான். “கிருதவர்மர் வருகிறார்” என்றான் விந்தன். “நான் யாதவர்களைப் பற்றி பேசவில்லை” என்றான் பிருஹத்பலன். “ஆம், நாம் மட்டுமே பேசவேண்டிய சில உள்ளன” என்றான் விந்தன். அவர்கள் முற்றத்தை அடைந்தபோது உள்ளிருந்து உத்தர திரிகர்த்த நாட்டு அரசன் ஷேமங்கரனும் புளிந்த நாட்டு அரசன் சுகுமாரனும் பேசியபடி வந்தனர். பின்னால் தார்விக நாட்டரசன் சசாங்கனுடன் திரிகர்த்தத்தின் மூத்த அரசர் சத்யரதர் வந்தார். பிருஹத்பலன் விந்தனிடம் “அவர்கள் அனைவரையும் என் குடிலுக்கு வரச்சொல்லலாம்” என்றான்.
தட்சிண திரிகர்த்தத்தின் சுசர்மன் பின்னால் தனியாக வந்தான். விந்தன் அதை நோக்கியபின் திரும்பி புன்னகைத்து “தந்தையும் மைந்தரும் தனித்தனியாக வருகிறார்கள். ஓரவையில் அவர்கள் ஒற்றைச் சொல் எடுத்து நான் கண்டதில்லை” என்றான். அனுவிந்தன் “நானே சென்று சொல்கிறேன், அவர்களை ஒருங்குகூட்டவேண்டியது நம் தேவை” என்று அவர்களை நோக்கி சென்றான். அபிசார மன்னர் சுபத்ரரும் அரேவாக மன்னர் சிம்மவக்த்ரரும் சேர்ந்தே வந்தார்கள். அவர்களும் சோர்ந்திருந்தனர். எனவே சொற்களில்லாத எடைகொண்ட முகத்துடன் தளர்ந்த காலடிகளுடன் அணுகினர். அபிசாரர்களின் இளவரசர்கள் நிசந்திரன், மிருதபன், சுவிஷ்டன் ஆகியோர் களம்பட்டதை பிருஹத்பலன் நினைவுகூர்ந்தான். சுபத்ரரின் கைகள் எதையோ காற்றில் துழாவுவனபோல் அசைந்துகொண்டிருந்தன.
பிருஹத்பலன் “கலிங்கர்களின் களவீழ்ச்சிக்குப்பின் ஷத்ரியர்கள் தலைமையற்றவர்களாக ஆகிவிட்டனர். போர் இன்று நம் கையிலிருந்து முற்றாக நழுவிவிட்டது” என்றான். விந்தன் குரல் தாழ்த்தி “ஆனால் திரிகர்த்தர்களை ஷத்ரியர்கள் என எவரும் ஏற்றுக்கொள்வதில்லை” என்றான். பிருஹத்பலன் சீற்றத்துடன் “நாம் இந்த குடிமேன்மைப் பேச்சை என்று தவிர்க்கிறோமோ அன்றுதான் வாழ்வோம். இங்கே களத்தில் உயிருடனிருப்பவர்கள் சிலரே. நாம் ஒருங்கிணைந்தாகவேண்டும்” என்றான். “ஆம், ஆனால் ஷத்ரியர் என்னும் அடையாளத்துடன் ஒருங்கிணைகிறோம். அப்போது எவர் ஷத்ரியர் என்று நோக்கவேண்டியிருக்கிறதல்லவா?” என்றான் விந்தன்.
பிருஹத்பலன் பெருமூச்சுவிட்டு தலையை அசைத்து “அக்கணக்கை எடுக்கப்போனால் எஞ்சுபவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அவந்தியின் அரசர்களின் குடித்தெய்வங்கள் இன்றும் காட்டில் மலைவேடர்களுக்கும் தெய்வங்களே” என்றான். விந்தன் சீற்றத்துடன் ஏதோ சொல்ல நாவெடுக்க “இதை நாம் பேசவேண்டுமென்றால் போர் முடியட்டும். நாடு பகுக்கப்படுகையில் சொல்லாடுவோம். இப்போது இக்களத்திலிருந்து நம்மில் எவர் எவ்வண்ணம் எஞ்சி மீளப்போகிறோம் என்பதைப்பற்றி மட்டுமே பேசவிருக்கிறோம்” என்றான். விந்தன் பொருமலுடன் தன் மொழியில் ஏதோ சொல்லி தலையை திருப்பிக்கொண்டான்.
பிருஹத்பலன் “நான் என் குடிலுக்குச் செல்கிறேன். அரசர்கள் ஒவ்வொருவராக அங்கே வரட்டும்” என்றான். அவன் செல்வதற்கு திரும்ப அருகே வந்த காரூஷ நாட்டு அரசர் க்ஷேமதூர்த்தி “என்ன நிகழ்கிறது? இங்கே ஒரு ஷத்ரியர் சந்திப்பு என்று என்னிடம் அவந்தியின் இணையரசன் சொன்னான். அதற்கு ஏன் திரிகர்த்தர்களை அழைக்கவேண்டும்? அவர்களின் உடலில் இன்றும் மலையூனின் மணம் வீசுகிறது. எளிய வேடர்கள். அவர்களின் மணிமுடியிலிருக்கும் இறகு என்ன? நோக்குக, அது இறகல்ல, மலையணிலின் வால்!” என்றார். பிருஹத்பலன் சலிப்புடன் “விந்தர் விளக்குவார்” என்று சொன்னபின் தன் தேர்வலனை நோக்கி தலையசைத்தான். அவன் தேரை கொண்டுவந்து நிறுத்த அதில் ஏறி அமர்ந்துகொண்டான்.
தன் பாடிவீட்டுக்குச் சென்று முற்றத்தில் இறங்கியதும்தான் அங்கே அனைத்து அரசர்களும் வந்தால் அமர இடமில்லை என்பதை உணர்ந்தான். தேர்வலனிடம் “இங்கே அரசர்கள் அமர்வதற்கான பீடங்கள் போடமுடியுமா?” என்றான். அவன் “இருக்கைகள் போட இயலாது, அரசே. ஆனால் தேரிலேறுவதற்கான படிப்பெட்டிகள் உள்ளன. அவற்றை இருக்கைகள் என இந்த மரத்தடியில் போட முடியும்” என்றான். “சரி, அவையே போதும். ஒருநாழிகைப்பொழுதுதான்… இதோ முரசு முழங்கத் தொடங்கிவிடும்” என்றான்.
அவன் பெட்டிகளை போட்டுக்கொண்டிருக்கையிலேயே கேகய மன்னன் திருஷ்டகேதுவும் மாளவ மன்னர் இந்திரசேனரும் வந்தார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவில்லை. பிருஹத்பலன் “இங்கே நாம் ஒரு முறையான அரசவையை கூட்டப்போவதில்லை. நாம் ஒரு சில சொற்களை பேசிக்கொள்ளவேண்டியிருக்கிறது” என்றான். “நாம் முறையாகவே இரவு கூடுவோமே” என்றான் திருஷ்டகேது. “மாலையில் நம்மில் எவர் எஞ்சுவோமென தெரியாது. மேலும் மாலையில் நம் உள்ளங்கள் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன” என்றான் பிருஹத்பலன்.
“நேற்று காலையில் நான் சுதக்ஷிணரிடம் இதைப் பற்றி பேசினேன். இன்று அவர் நம்முடனில்லை.” விந்தன் “எங்கள் மைந்தர்கள் புஷ்கரனும், புஷ்பதந்தனும், புஷ்பமித்திரனும் களம்பட்டனர். இந்தப் போர் காட்டெரியைப்போல் எங்கள் குலத்தை அழிக்கிறது” என்றான். பிருஹத்பலன் “என் குடியின் மைந்தர்கள் பன்னிருவர் களம்பட்டனர். நான் பேசத்தொடங்குவது அங்கிருந்தே” என்றான்.
இந்திரசேனர் “நாம் இழப்புகளைப்பற்றி பேசவேண்டியதில்லை. நிகழவேண்டியதென்ன என்று மட்டும் பேசுவோம்” என்றார். “ஆம், அதன்பொருட்டே கூடுகிறோம்” என்றான் பிருஹத்பலன். கூர்ஜர சக்ரதனுஸும் சைப்ய நாட்டு கோவாசனரும் சாரஸ்வதரான உலூகரும் சால்வநாட்டு த்யுமந்தசேனரும் ஆஃபிரநாட்டின் உக்ரதர்சனரும் வந்தனர். அவர்களை அமரச்செய்துகொண்டிருக்கையிலேயே வங்கத்தின் சமுத்ரசேனரும் சந்திரசேனரும் வந்தனர். மாகிஷ்மதியின் நீலரின் தேரில் சௌராஷ்டிர நாட்டின் ருஷார்திகரும் வந்தார். மேழிக்கொடி பறக்கும் விதேகநாட்டு தேர் வந்து நிற்க அதிலிருந்து அரசர் நிமி இறங்கினார். சௌவீரர் சத்ருஞ்சயர் தன் மைந்தருடன் வந்தார்.
அவர்கள் அமர்வதற்கு இடம்போதாமலாக மேலும் பெட்டிகளுக்காக ஏவலர் ஓடினர். அவர்கள் அமர்ந்ததும் பிருஹத்பலன் இன்னீரும் வாய்மணமும் கொண்டுவர தன் ஏவலரை அனுப்பினான். “பகதத்தர் வரவில்லையா?” என்று நிமி கேட்டார். சமுத்ரசேனர் “அவர் ஓய்வெடுக்கிறார். நேற்றைய போரில் இரண்டு இடங்களில் கதையால் அறைபட்டிருக்கிறார்” என்றார். “இந்தப் போரில் அறைபட்டு வீழாத எவரேனும் இருக்கிறோமா என்ன?” என்றார் நீலர். “நான் என் மைந்தரை இழந்தேன்” என்றார் மாளவ மன்னர். “என் பட்டத்து இளவரசன் உலூகன் களம்பட்டான். இளையோர் எழுவர் இறந்தனர். என் மைந்தர்கள் அசீதனும் அஸ்மாதனும் அப்ரமாதனும் நேற்றும் என் கனவிலெழுந்தனர். இந்த வேள்வித்தீயில் இனி நான் என்னைத்தான் அவியாக்கவேண்டும்.”
கூர்ஜர மன்னர் சக்ரதனுஸ் “என் பட்டத்து இளவரசன் மகிபாலன் கொல்லப்பட்டான். இளைய மைந்தன் உத்ஃபுதனையும் இழந்துள்ளேன்” என்றார். “நாம் இறந்தவர்களைப்பற்றி பேசவேண்டாம்” என்றார் உக்ரதர்சனர். பிருஹத்பலன் “நான் பேசவிழைவது நம் எதிர்காலத்தைப்பற்றித்தான்” என்றான். “இந்தப் போர் எங்கே செல்கிறது? இது தொடங்கும்போது நாம் எண்ணியதல்ல இப்போது நடந்துகொண்டிருப்பது. நாம் அழிந்துகொண்டிருக்கிறோம்.” மன்னர்கள் கூட்டமாக “ஆம்” என்றனர். சமுத்ரசேனர் “நம் மைந்தர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்” என்றார். “அது பிதாமகர் பீஷ்மர் தொடங்கிவைத்தது. அவர் முதல்நாள் அவர்களின் இளவரசர்களை கொன்றார், அவர்கள் பழிநிகர் செய்கிறார்கள்” என்றார் க்ஷேமதூர்த்தி.
சுபத்ரர் “போர் எனில் அழிவு இருக்கும்” என்றார். “ஆம், ஆனால் முற்றழிவென்பது பொருளற்றது. நாம் எந்த வஞ்சத்துக்காகவும் போருக்கெழவில்லை. குலம்காக்கவோ குடிப்பெருமைக்கோ படைக்கலம் தூக்கவில்லை. நாம் வந்தது நிலத்துக்காக. நமக்குக் கிடைக்கவிருக்கும் நிலங்களுக்காக நாம் மைந்தரை இழக்கவேண்டுமா?” என்றான் பிருஹத்பலன். “போரில் பிறகென்ன நிகழுமென எண்ணுகிறீர்கள்?” என்று நிமி கேட்டார்.
“போரில் வீரர்கள் களம்படுவார்கள். அரிதாகவே அரசகுடியினர் வீழ்வார்கள். அரசகுடியினரை அரசகுடியினரே எதிர்க்கவேண்டும் என்று நெறி உள்ளது. அவ்வாறு வீழ்வது பெருமைக்குரியதும்கூட. சூதர்சொல்லில் வீழ்ந்தவர் வென்றவருக்கு நிகராகவே வாழ்வார். அவர்கள் விண்ணுலகில் தோள்தழுவிக்கொண்டு மகிழ்வார்கள். ஆனால் இங்கே அதுவா நிகழ்கிறது? என் மைந்தர்கள் லோகிதனையும் சியாமனையும் தீர்க்கபாகுவையும் கொன்றவன் கடோத்கஜன். அவ்வரக்கன் இங்குள்ள எத்தனை பேரின் மைந்தர்களை கொன்றான் என சொல்லுங்கள்…”
அவை அமைதியாக இருந்தது. “சொல்க, எத்தனை பேரை?” என்றான் பிருஹத்பலன். “சொல்லமாட்டீர்கள். இங்குள்ள அனைவர் குடியிலும் ஓர் இளவரசனையேனும் அவன் கொன்றிருக்கிறான். இந்தப் போரில் இப்படி வல்லரக்கன் கையில் உயிர்விடவா நாம் மைந்தரை ஈன்றோம்?” என்று பிருஹத்பலன் கேட்டான். அவையினர் ஆழ்ந்த அமைதியில் அசைவிழக்க நீலன் “நம் மைந்தர் இங்கே மழைக்கால நத்தைகளை தேர்கள் அரைத்தழிப்பதுபோல பீமனாலும் அவன் மைந்தர்களாலும் கொல்லப்படுகிறார்கள். என் உடன்பிறந்தார் மணிர்மன், குரோதவான், மகாக்குரோதன், சண்டன், சுருரோணிமான் ஆகியோர் மண்புகுந்த பின் வெற்றியும் தோல்வியும் எனக்கொரு பொருட்டாகத் தெரியவில்லை” என்றார்.
“நான் எண்ணிவந்தது இதை அல்ல. இப்படி ஒரு போரை எங்கள் நூல்கள் சொல்லவில்லை” என்றான் பிருஹத்பலன். “ஷத்ரியர் நிலம் நாடி போரிடுவதுண்டு. இந்தக் கீழரக்கர்களிடம் நாம் ஏன் பொருதவேண்டும்?” அவையிலிருந்த அனைவரும் சேர்ந்து குரலெழுப்பினர். “ஆம், இது போரே அல்ல. இது வெறும் கொலைவெளி” என்றான் விந்தன். “இங்கே நாம் மைந்தரை இழந்து மீண்டு சென்று அடையப்போவது என்ன?” என்றார் உலூகர். “நாம் இங்கே போரிடுவது கீழ்மக்களிடம்… அசுரர்களும் அரக்கர்களும் நம் மைந்தரை கொல்கிறார்கள்.”
“கோசலரே, நாம் என்றாயினும் இந்த அரக்கர்களையும் அசுரர்களையும் நிஷாதர்களையும் கிராதர்களையும் அழித்தேயாகவேண்டும். உண்மையில் இவர்களை எதிர்கொண்டு அழிக்க நம்மால் இயலவில்லை என்பதனால்தான் வாளாவிருந்தோம். நாம் போருக்கெழுந்ததே இவர்கள் மீதுள்ள அச்சத்தால்தான். அவர்களுக்காக நாம் ஒருங்கிணைந்தால் அதுவே அவர்களை ஒருங்கிணைய வைத்துவிடுமென அஞ்சினோம். கீழ்மக்களுக்காக ஷத்ரியர் ஒருங்கிணைந்தனர் என்னும் பேச்சு வந்துவிடலாகாது என நாணினோம். கேளிக்கையாடி சோம்பியும் குடிப்பெருமை பேசி பூசலிட்டும் பொழுது கடத்தினோம். இது ஓர் வரலாற்று வாய்ப்பு என்று கருதியே இங்கே ஒருங்கிணைந்தோம்” என்றார் சக்ரதனுஸ்.
கேகயன் “இல்லை, அதன்பொருட்டு அல்ல. நாம் கூடியது வேதம் காக்கும்பொருட்டு” என்றான். “ஆம், அவ்வாறு எங்கும் சொல்லிக்கொள்ளவேண்டியது நமக்கு இன்றியமையாதது. ஆனால் அதை நமக்குநாமே சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை. வேதங்களை ஜராசந்தர் கால்கீழிலிட்டு அரைத்தபோது நாம் என்ன செய்தோம்? அவர் அசுரவேதத்தை மகதத்தில் நிறுவியபோது அவர் நடாத்திய வேள்விகளில் ஒன்றிலேனும் நாம் பங்குகொள்ளாதொழிந்தோமா?” என்றார் சக்ரதனுஸ். அவையினர் அமைதியிழந்து உடலசைவுகொள்ள சக்ரதனுஸ் “நாம் இன்றுகூட திரிகர்த்தர்களையும் மல்லர்களையும் உடன்வைத்து அமர்ந்திருக்கிறோம். அவர்கள் உடலிலிருந்து வேடர்களின் குருதி அகன்றுள்ளது என்று எந்தத் தெய்வம் உரைத்தது?” என்றார்.
சத்யரதர் சீற்றத்துடன் எழுந்து “என் குடியை பேசியவன் வாளை எடுக்கட்டும்… இப்போதே” என்றார். “நாங்கள் வாளை எடுத்து ஆயிரமாண்டுகளாகின்றன” என்றார் சக்ரதனுஸ். இந்திரசேனர் “நாம் இங்கே பூசலிடுவதற்காகவா கூடினோம்? பூசலிடுவதென்றால் அங்கே களத்துக்கே செல்வோம்” என்றார். “மூடர்கள்” என்றபடி அவர் எழப்போக பிருஹத்பலன் “அமர்க, அமர்க… பேசுவோம்!” என்றான். அனைவரும் எழுந்து பிறரை அமரச்செய்ய அவை மெல்ல அடங்கியது. சற்றுநேரம் அமைதி நிலவியது. சக்ரதனுஸ் “நான் சொல்லவந்ததை சொல்லலாமா?” என்றார். “சொல்க!” என்றார் இந்திரசேனர்.
சக்ரதனுஸ் “நாம் எந்த மேற்பூச்சும் இன்றி பேசுவோம். நாம் இப்போருக்கு வந்தது நம் நிலங்களைச் சூழ்ந்து நெருக்கி நம்மை குறுக்கிக்கொண்டிருக்கும் அசுரர்களையும் அரக்கர்களையும் நிஷாதகிராதர்களையும் வெல்லும்பொருட்டே. அவர்கள் நேற்றுவரை காட்டில் கற்படைசூடி, ஊன்வேட்டையாடி, தோலாடை உடுத்தி, குகைகளிலும் மரங்களிலும் வாழ்ந்தனர். இன்று அவர்களுக்கு ஊர்களும் நகரங்களும் அமைகின்றன. சந்தைகள் உருவாகின்றன. வணிகப்பாதைகள் நீள்கின்றன. அவற்றினூடாகச் செல்லும் சகடங்களுக்கு இடும் தீர்வையே நம் செல்வம். அது அவர்களை சினமூட்டுகிறது. அதற்கு எதிராக அவர்கள் படை திரட்டுகிறார்கள். தங்களுக்கான தனிப் பாதைகளையும் படித்துறைகளையும் உருவாக்கிக்கொள்கிறார்கள். நாம் அவர்களை வெல்லாமல் ஓர் அடிகூட முன்னெடுக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டோம்” என்றார்.
“இந்தப் போர் வேதங்களின் பொருட்டு, குலநெறிகளின் பொருட்டு, ஷத்ரியக் குருதியின் பொருட்டு என்ற சொற்களுக்கு அடியில் நாம் கொண்டுள்ள மெய்யான நோக்கம் இதுவே. அதை இந்தக் களத்திலன்றி நம்மால் எங்கும் நிறைவேற்றிக்கொள்ள இயலாது. இங்கேயே நாம் அவர்களை அழிக்கவேண்டும். வேருடன் பிடுங்கவேண்டும்” என்றார் சக்ரதனுஸ். “ஆகவே நமக்கு வேறுவழியில்லை.” நிமி “அந்நோக்கம் நிறைவேறுகிறதா?” என்றார். “அது இத்தனை கடினம் என நாம் எண்ணியிருக்கவில்லை. மெய்தான்” என்றார் சக்ரதனுஸ். “அவர்கள் பெருந்திரளென இப்படி ஒருங்கிணைவார்கள் என நாம் கருதவில்லை. இவ்வளவு திறனுடன் போரிடுவார்கள் என நாம் எவருமே எண்ணியிருக்கமாட்டோம்” என்றார் நீலன்.
“ஏன் அவர்கள் அவ்வாறு போரிடுகிறார்கள் என்பதை நாம் அறியோமா என்ன?” என்றார் உலூகர். “நம் தரப்பிலிருக்கும் மாபெரும் பிழை அது. அதைத் தவிர அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம்.” கோவாசனர் “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். உலூகர் “அவர்களை மட்டும் நாம் எதிர்த்திருந்தால் இதற்குள் வென்று அவர்களின் நிலங்களை எரியூட்டியிருப்போம். அவர்களிடம் படைக்கலங்கள் குறைவு. படைசூழ்கைகள் அவர்களுக்கு தெரியாது. ஒரு பெரும்படையெனத் திரள அவர்களின் குலமுறைகளும் மூப்பிளமைகளும் இடம்தரா. இப்போது நாமே அவர்களுக்கு அவையனைத்தையும் அளித்துவிட்டோம். அரசர்களே, கீழ்க்குடியினருக்காகப் போரிட பாரதவர்ஷத்தின் மாபெரும் போர்வீரர்கள் இருவரை அளித்தது நாமே. படைசூழ்கை அறிந்த ஷத்ரியத் தலைவர்களையும் நாமே அளித்தோம். நாம் இங்கே திரண்டமையால்தான் அவர்களை பாண்டவர்கள் திரட்டிக்கொண்டனர். இன்று மறுபக்கமிருப்பது ஷத்ரியத்தலைமையால் நடத்தப்படும் அசுரவிசை. அதை வெல்வது எளிதல்ல” என்றார்.
“அவர்களை நடத்துவது அர்ஜுனனோ பீமனோ திருஷ்டத்யும்னனோ அல்ல, இளைய யாதவன்” என்றான் பிருஹத்பலன். “எந்நிலையிலும் அவனை நாம் எதிர்த்தேயாகவேண்டும். நாம் வெற்றுச்சொற்கள் பேசிக்கொண்டிருப்பதில் பொருளில்லை.” சுபத்ரர் “அவனைத்தான் எதிர்க்கவேண்டும் என்றால் அவன் பாண்டவர்களுடன் இணையாமல் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். யாதவர்களிடமிருந்து அவனை பிரித்தோம், அவ்விசையிலேயே அவனை அழிக்க முயன்றிருக்கவேண்டும்” என்றார். பிருஹத்பலன் “அவனை சூழ்ச்சியில் வெல்ல நம்மால் இயலாது. பாண்டவர்கள் அவனை தெரிவுசெய்யவில்லை, அவன் அவர்களை தெரிவுசெய்திருக்கிறான்” என்றான்.
“என்றேனும் இப்போர் நிகழும் என அறிந்திருந்தேன்” என்றார் கோவாசனர். “நாளெண்ணி காத்திருந்தேன். உண்மையில் நமக்கு ஒரே வழிதான் இருந்தது. துவாரகையை ஷத்ரியநாடென ஏற்று இளைய யாதவனை நம் அவைகளில் அமரச்செய்வது. அதனூடாக நாம் வெல்லமுடியாதவர்களாக ஆகியிருப்போம். அவனையும் நம்முடன் சேர்த்துக்கொண்டு இழிசினரை வென்று பாரதவர்ஷத்தை முழுதடைந்திருக்கலாம். நம் அறிவின்மையால், ஆணவத்தால் அவனை இழிசினர் பக்கம் சேர்த்தோம்.” பிருஹத்பலன் “எவர் சேர்த்தது? என்ன சொல்கிறீர்கள்?” என்றான். கோவாசனர் “ஆம், சேர்த்தவர்கள் நாமே. எங்கெல்லாம் இளைய யாதவன் பெண்கொண்டானோ அந்த ஷத்ரியர்களெல்லாம் அதை குலச்சிறுமையாக எடுத்துக்கொண்டார்கள். அவர்களை அவையிழிவு செய்து நாமும் அதை நிலைநாட்டினோம். எந்நிலையிலும் இளைய யாதவனை ஷத்ரிய அவைகளுக்குள் அமரமுடியாதவனாக ஆக்கினோம்…” என்றார்.
கேகயன் “எங்களை பழி சொல்கிறீர்களா?” என்று சீறியபடி எழுந்தான். கோவாசனர் “ஆம், உங்களைத்தான் பழிசொல்கிறேன். உங்கள் வஞ்சங்களை ஷத்ரியர்களின் பொது உணர்வாக மாற்றினீர்கள்” என்றார். கேகயன் “உங்கள் அறிவு எங்கு சென்றது?” என்றான். நீலன் “நாம் பூசலிட வேண்டியதில்லை… அதனால் இனி எந்தப் பயனும் இல்லை” என்றார். விந்தன் “அரசர்களே, நான் கேட்பது ஒன்றே. நாம் இளைய யாதவனை நம்முடன் சேர்த்துக்கொண்டு ஷத்ரிய அவையில் இடமளித்தோம் என்றால் எந்த இடத்தை அளித்திருப்போம்?” என்றான்.
அவையினர் சலசலக்க விந்தன் “நாங்கள் ஷத்ரியர்களாகி வேள்விகளை செய்யத்தொடங்கி ஐநூறாண்டுகளாகின்றன. ஆயினும் இன்றும் காசியும் கேகயமும் விதேகமும் எங்களுக்கு மேல்தான். அவர்களுக்குக் கீழே அமைந்த கலிங்கமும் வங்கமும் பிரக்ஜ்யோதிஷமும்கூட எங்களுக்கு மேலே. இந்த அடுக்கில் இறுதியில் நாம் அளிக்கும் ஓர் துணையரசனுக்குரிய பீடத்தில் வந்தமர இளைய யாதவன் விரும்புவான் என நினைக்கிறீர்களா? அந்த இருக்கையின்பொருட்டு நம்முடன் சேர்ந்துகொண்டு இழிசினரை முற்றழிக்க அவன் உடன்படுவான் என எப்படி கருதுகிறீர்கள்?” என்றார்.
“அரசன் குடிகளின் கொடி மட்டுமே” என்றார் சக்ரதனுஸ். “யாதவர் ஷத்ரிய அடையாளத்தை விழைகிறார்கள். அதன்பொருட்டு அவனையே துறக்கவும் ஒருங்கிவந்துள்ளனர். அன்றே அந்த அடையாளத்தை நாம் அவர்களுக்கு அளித்திருந்தோமென்றால் குடிகளை மீறி அவன் ஒன்றும் செய்திருக்கவியலாது.” பிருஹத்பலன் “அவனை நீங்கள் அறிந்தது அவ்வளவுதான்” என்றான். “அவனுடைய எண்ணங்கள் ஏதும் இன்று இக்களத்தில் வைத்து நாம் அறிந்துகொள்ளத் தக்கன அல்ல.”
உக்ரதர்சனர் “நாம் இதையெல்லாம் ஏன் பேசிக்கொண்டிருக்கிறோம்? இன்னும் சற்றுநேரத்தில் போர்முரசுகள் முழங்கும். நாம் இன்னும் கவசங்களையே அணியவில்லை” என்றார். “நான் சொல்லவந்ததை சொல்லிவிடுகிறேன். இப்போர் இவ்வண்ணமே தொடர்ந்தால் முற்றழிவுதான் எஞ்சும். இன்று ஷத்ரியர்களைவிட பிற அரசர்களின் ஆற்றல் மிகுந்துள்ளது. இப்போது கலிங்கம் அழிந்துவிட்டது. வலுவான ஷத்ரிய அரசுகளில் ஒருசில களத்தில் அழியுமென்றால் ஷத்ரிய ஆற்றலே பாரதவர்ஷத்திலிருந்து அகன்றுவிடும்.”
அவர்கள் அச்சொற்களால் தாக்கப்பட்டவர்கள்போல விழிகள் நிலைக்க நோக்கினர். “அறிக, நம் ஆற்றல்மிக்க பட்டத்து இளவரசர்கள் மறைந்துகொண்டிருக்கிறார்கள். மறுபக்கமிருந்து கடோத்கஜன் உள்ளிட்ட கீழோர் நம் இளவரசர்களையே இலக்காக்கி அழிப்பது தொலைநோக்கு கொண்டது. இப்போரில் நாம் வென்றாலும்கூட ஆற்றல்மிக்க அடுத்த தலைமுறை அரசர்கள் நம் நாடுகளில் உருவாக மாட்டார்கள்.” கோவாசனர் “ஆம், அதை நானும் உணர்ந்தேன்” என்றார்.
பிருஹத்பலன் “நாம் இன்று செய்வதற்கொன்றே உள்ளது. இப்போரை இன்றோடு நிறுத்துவோம். இரு தரப்பினரும் ஓர் உடம்பாடுக்கு வரட்டும்” என்றான். “அதெப்படி? போர் இன்று உச்சத்திலுள்ளது… துரியோதனர் வெறிகொண்டிருக்கிறார்” என்றார் இந்திரசேனர். “அந்த வெறியை அவர் நம் இழப்பின் வழியாக தீர்த்துக்கொள்ளலாகாது. அவரே நேருக்குநேர் பீமசேனரிடம் போரிடட்டும்… அவர்கள் தங்களுக்குள் கொள்ளும் பூசலுக்கு ஷத்ரியர் பலியாக வேண்டாம்” என்றான் பிருஹத்பலன்.
“நாம் பின்வாங்குவதா? நம்மை கோழைகள் என்பார்கள்” என்று நிமி சொன்னார். “அதற்குரிய வழியை கண்டுபிடிப்போம்…” என்றான் பிருஹத்பலன். “நான் அதற்கொரு வழியை எண்ணினேன். அதையே இங்கு முன்வைக்க எண்ணினேன். விதர்ப்பராகிய ருக்மி தூய ஷத்ரியக்குருதி கொண்டவர். அவருடைய வஞ்சம் குலமிலியான இளைய யாதவனுக்கு எதிரானது. அது ஷத்ரியர்களாகிய நாமனைவருமே கொண்டிருக்கும் வஞ்சம். அவரை துரியோதனர் இழிவுசெய்து அனுப்பியதில் நமக்கு உடம்பாடில்லை. ருக்மியை நம் படைக்குள் சேர்த்துக்கொள்ளவேண்டும். துரியோதனர் அவரை அழைத்துவந்து பொறுத்தருளும்படி கோரவேண்டும்.”
சக்ரதனுஸ் “என்ன சொல்கிறீர்கள்? எவர் பணிவது, தார்த்தராஷ்டிரரா?” என்றார். “ஆம், அவர் பணிய மாட்டார். அவர் பணியாவிட்டால் நாம் போருக்கு ஒப்பவும் மாட்டோம். ஷத்ரியர்களாகிய நாம் ஷத்ரியர்களில் ஒருவரின் தன்மதிப்பின்பொருட்டு போரிலிருந்து விலகுவதில் பிழையே இல்லை.” அவையில் அமைதி நிலவியது. நீலன் “நல்ல திட்டம்தான்” என்றார். “இது ஒரு நல்வாய்ப்பு… ஆகவேதான் இதை உடனே செய்யவேண்டுமென நான் முடிவெடுத்தேன்” என்றான் பிருஹத்பலன்.
“இப்போதேவா?” என்றார் சக்ரதனுஸ். “நமக்கு பொழுதில்லை… நம் தரப்பில் மாளவர் செல்லட்டும். துரியோதனரிடம் பேசட்டும்.” இந்திரசேனர் “நானா?” என்றார். “நீங்களே எங்களில் மூத்தவர்… தார்த்தராஷ்டிரர்களுக்கு சற்று அணுக்கமானவர்” என்றான் பிருஹத்பலன். “நான் சொல்கிறேன், ஆனால்…” என்றார் இந்திரசேனர். “நீங்கள் சொல்லுங்கள், நிகழ்வதென்ன என்று பார்ப்போம்” என்றான் பிருஹத்பலன்.
“சரி, நாம் விலகிக்கொண்டால் போர் நின்றுவிடுமா என்ன?” என்று கோவாசனர் கேட்டார். “நிற்கவே வாய்ப்பு. இங்குள்ள படைகளில் பெரும்பகுதி நாமே. இருக்கும் படைகளைக்கொண்டே பாண்டவர்களை வெல்ல இயலவில்லை. நாம் விலகிக்கொண்டால் தோல்விதான். ஐயமே தேவையில்லை. ஒருவேளை போர் தொடர்ந்து நிகழுமென்றால் அதுவும் நன்றே. நம் எதிரிகள் இருவருமே ஆற்றல் குன்றி அழிவார்கள். நாம் நம் ஆற்றலுடன் விலகிக்கொண்டோமென்றால் இருவரையுமே வெல்லலாம்” என்று பிருஹத்பலன் சொன்னான்.
“இருவரையுமா?” என்று சக்ரதனுஸ் கேட்டார். “ஆம், இழிசினர் நம் உடனடி எதிரிகள். ஆனால் பாரதவர்ஷம் மீது முற்றாகக் குடைவிரித்தாள எண்ணும் தார்த்தராஷ்டிரர்களும் நம் எதிரிகளே…” என்றான் பிருஹத்பலன். “அத்துடன் ஒன்றுண்டு, அசுரர்களையும் அரக்கர்களையும் நாம் ஏன் போர்முறைமைப்படி எதிர்க்கவேண்டும்? நஞ்சும் தீயுமிட்டு அழிப்போம். வஞ்சமும் சூதும் வளர்த்து அவர்களே போரிடச்செய்து ஒழிப்போம். அனைத்துக்கும் நூல்கள் ஒப்புதலளிக்கின்றன. அவர்களை நாம் அரசர்களென்றல்ல, விலங்குகள், பூச்சிகள் என்றே கருதவேண்டும். இங்கு நாம் செய்யும் பிழை அவர்களை போர்நெறிப்படி களம்நின்று எதிர்த்துக்கொண்டிருப்பதுதான்.”
இந்திரசேனர் “எண்ணிப்பார்க்கையில் உகந்த முடிவென்றே தோன்றுகிறது” என்றார். “அவ்வண்ணமென்றால் நாம் இங்கே ஒரு முடிவெடுக்கவேண்டும். நாம் ஒற்றைத்திரளென நின்றிருக்கவேண்டும். எடுக்கப்படும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டாகவேண்டும். நாம் போர்முனையிலிருந்து கிளம்புகிறோம் என்று சொன்னால் தார்த்தராஷ்டிரர்கள் நம்மை அச்சுறுத்தலாம், விழைவும் காட்டலாம். எதற்கும் நாம் மயங்கிவிடலாகாது” என்றான் பிருஹத்பலன்.
“ஆம், உண்மை!” என்றார் உக்ரதர்சனர். அவையிலிருந்த அரசர்கள் அனைவரும் “ஆம், அவ்வாறே” என குரலெழுப்பினர். “இன்று பீஷ்மர் மண்டலவியூகத்தை அமைத்திருக்கிறார். சிறுசிறு குழுக்களாக படைகளை அமைத்து ஒன்றென மையச்சரடொன்றால் திரட்டும் இச்சூழ்கை மிக ஆற்றல்மிக்கது என்பார்கள். ஒவ்வொரு யானைக்கும் ஏழு தேர்கள். ஒவ்வொரு தேருக்கும் ஏழு புரவிவேலவர். ஒவ்வொரு புரவிக்கும் பத்து வில்லவர். ஒவ்வொரு வில்லவருக்கும் பத்து நடைவேலவர் என அமைந்திருக்கும் இந்தச் சூழ்கையை உடைத்து உள்ளே நுழைவது மிக எளிது, மீள்வது அரிது. இது எறும்புகளால் அமைக்கப்படும் சூழ்கை என்பார்கள். இன்று பாண்டவர்கள் போர்தொடரவேண்டாம் என முடிவெடுக்கக்கூடும்” என்றார் உக்ரதர்சனர்.
“பாண்டவர்களுடன் இருப்பவர் இளைய யாதவர்” என்று மட்டும் இந்திரசேனர் சொன்னார். “இன்றைய போர் இன்னும் அரைநாழிகைக்குள் தொடங்கும். இனி நாம் ஏதும் சொல்லமுடியாது, நம் படைகளையும் விலக்கிக்கொள்ள முடியாது. இப்போர் முடியட்டும். இதில் பாண்டவர்களுக்கு இழப்பு என்றால் துரியோதனரிடம் பாண்டவர்கள் சோர்ந்திருக்கும் தருணம் இது, அவர்களை பேச்சுக்கு அழைப்போம் என்று சொல்வோம். மாறாக நமக்கே பேரிழப்பு என்றால் இனிமேலும் போரிடுவதில் பொருளில்லை, மண்டலச்சூழ்கையையே அவர்கள் வென்றார்கள் என்றால் இனி எதைக்கொண்டு நம்பிக்கையை பேணுவது என்று கேட்கலாம்” என்று பிருஹத்பலன் சொன்னான்.
“ஆம், இன்று மாலை மாளவர் பேசட்டும்” என்றார் சக்ரதனுஸ். அவையினரும் “ஆம், மாலை பேசுக!” என்றனர். உக்ரதர்சனர் எழுந்துகொண்டு “நாம் கிளம்புவோம்… முரசுகள் முழங்கத்தொடங்கிவிட்டன” என்றார். “இன்றைய போரில் நாம் இழப்புகளின்றி மீள முயல்வோம். கூடுமானவரை படைகளையே முன்னணிக்கு அனுப்புவோம். இன்று போர்க்களத்திலேயே சகுனிக்கு நாம் போருக்கு உளம்கொள்ளவில்லை என்பது தெளிவாவது நன்று” என்றான் பிருஹத்பலன். “ஆம், அதுவே வழி” என்று குரல்கள் எழுந்தன.
அவர்கள் கிளம்பும்போது உக்ரதர்சனர் “அவர்களின் படைசூழ்கை என்ன?” என்று கேட்டார். “நமது படைசூழ்கையை அவர்கள் இதற்குள் அறிந்திருப்பார்கள். தங்கள் சூழ்கையை வகுத்துக்கொண்டிருப்பார்கள்” என்றார் இந்திரசேனர். பிருஹத்பலன் “அவர்கள் வஜ்ரவியூகத்தை அமைத்துள்ளார்கள். வைரம்போல பட்டைகள் கொண்டது. ஒன்றுடன் ஒன்று பிரிக்கமுடியாதபடி இணைந்த கூறுகளாலானது. நம் படைகளுக்குள் ஊடுருவினாலும் அவர்களின் படையில் ஒவ்வொரு பகுதியும் முழுப்படையுடன் இணைந்தே இருக்கும்” என்றான்.
அவர்கள் பெருமூச்சுடனும் தளர்ந்த உடல்களுடனும் எழுந்துகொண்டனர். கிளம்பும்போது உக்ரதர்சனர் மெல்லிய கசப்புடன் புன்னகைத்து “இந்தப் போரில் நான் கற்றது ஒன்றே, எந்தச் சூழ்கைக்கும் இணையான சூழ்கை உண்டு. ஆகவே எச்சூழ்கைக்கும் எப்பொருளும் இல்லை” என்றார். பிருஹத்பலன் என்ன பேசுவதென்று தெரியாமல் ஒருகணம் தடுமாறி “நாம் வெல்வோம்… நம்மை உருவாக்கிய வேதமே அதற்கு பொறுப்பு” என்றான். ஒருகணம் நோக்கிய பின் புன்னகைத்து உக்ரதர்சனர் திரும்பி நடந்தார்.