திசைதேர் வெள்ளம் - 5
பீமனுக்குப் பின்னால் சாத்யகி நடந்து வந்தான். காலடியோசை கேட்டு நின்ற பீமனை அணுகிய சாத்யகி “மூத்தவரே, நாம் உளம்சோரும் அளவுக்கு நிலைமை இன்னும் நம்மை மீறிவிடவில்லை. உண்மை, பீஷ்ம பிதாமகர் பேராற்றலுடன் நின்றிருக்கிறார். துரோணரும் சல்யரும் நிகராற்றலுடன் களம் நின்றிருக்கிறார்கள். ஆயினும் நமக்கு நம்பிக்கையூட்டும் ஒன்றுண்டு, நம் இளையோரின் ஆற்றல் நாம் எண்ணியதைவிட பல மடங்கு. ஒருநாள் போரை வைத்து நோக்கினால் நம் வீரர்களில் முதல்வன் அபிமன்யூவே என்கின்றனர் படைவீரர்கள். மறுதரப்பில் துரியோதனரின் மைந்தர் லக்ஷ்மணர் மட்டுமே சற்றேனும் ஆற்றல்கொண்டவராக தெரிகிறார்” என்றான்.
பீமன் “போருக்கு முன்பு கணிப்பதெல்லாம் போரில் பிழையாகும் என்பார்கள். பார்ப்போம்” என்றபின் “என்னுடன் இரும் யாதவரே, இப்போரில் நாம் முன்சென்றாகவேண்டும். இன்று வென்று திரும்புவதில் உள்ளது நம் இறுதி வெற்றி” என்றான். “இன்று பிதாமகரை எதிர்கொள்கிறீர்களா?” என்றான் சாத்யகி. “ஆம், அவரை. அவரைச் சூழ்ந்துள்ள அனைவரையும். இன்று எந்த எல்லைக்கும் செல்பவன் நான் என்று அவர்களுக்கு காட்டுவேன்” என்றான் பீமன். சாத்யகி புன்னகைத்து “ஆம், இன்று நம்மை முழுதும் வெளிக்காட்டுவோம்” என்றான்.
அவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டு படைகளினூடாக சென்றனர். சாத்யகி “நேற்று ஒரு கொடுங்கனவு” என்றான். “தலையறுந்த உடல் ஒன்று இடக்கையில் தன் தலையையும் வலக்கையில் வாளையும் ஏந்தியபடி குருதியால் நனைந்திருந்த புரவிமேல் ஏறி நம் படைகள் நடுவே அலறியபடி ஓடியது. அதனுடன் பேய்த்தோற்றம் கொண்ட பாதாளதெய்வங்கள் வெறிகொண்டு தொடர்ந்தன. கௌரவர்களின் படையிலுள்ள யாதவர்கள் அனைவரும் பித்தெழுந்த விழிகளுடன் படைக்கலங்களைத் தூக்கியபடி போர்க்கூச்சலிட்டுக்கொண்டு வந்து நம்மை தாக்கினார்கள். குருதித்திவலை பேரருவிச் சிதறலெனத் தெறிக்கும் பெரும்போர்…”
பீமன் அது யார் என்று கேட்கவில்லை. சாத்யகி “சததன்வா… அவன் இங்கிருந்து செல்லவில்லை. அணையா வஞ்சம் கொண்டிருக்கிறான்” என்றான். பீமன் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. “கொல்லப்பட்டவர்கள் எப்படி இங்ஙனம் பேருருக் கொள்கிறார்கள் என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை” என்றான் சாத்யகி. “அவர்களின் அனைத்துப் பிழைகளும் சிறுமைகளும் மறக்கப்படுகின்றன. அவர்களின் வஞ்சம் மட்டும் கணந்தோறும் வளர்கிறது. விண்ணளவு பெரியதாகும் ஒவ்வொன்றையும் மானுடர் தெய்வங்களென தொழத் தொடங்கிவிடுகிறார்கள். பாண்டவரே, யாதவக் குடிகளை மறுநிலை நோக்கி கொண்டுசென்றவை பெருவிழைவும் குலப்பெருமையும் அச்சமும் மட்டுமல்ல, அவர்களின் நெஞ்சின் ஆழத்திற்குள் எங்கோ எப்போதுமே சததன்வா இருந்தான்” என்றான்.
பீமன் “அவர்கள் அவனை மறக்கமுடியாது” என்றான். “அவன் கொல்லப்பட்டபோது துவாரகை எப்படி மகிழ்ந்துகொண்டாடியது என நினைவுறுகிறேன். கிருதவர்மன் சிறைபிடிக்கப்பட்டு நகருக்குள் கொண்டுவரப்பட்டபோது யாதவர் அவனைச் சூழ்ந்து காறியுமிழ்ந்தனர். அவர்களறியாத நச்சுவிதைகள் அவர்களின் நெஞ்சுக்குள் விழுந்து கரந்துவிட்டிருந்தன. இளையவர் மீது விலக்கமும் அச்சமும் அதன் விளைவான காழ்ப்பும் எழுந்ததுமே அவை முளைத்துவிட்டன” என்றான் சாத்யகி. “கிருதவர்மன் இன்னும் இருக்கிறான். ஒவ்வொருநாளும் தன் தோழனை எண்ணிக்கொண்டுமிருக்கிறான்” என்றான் பீமன்.
“ஆம், பாண்டவரே” என்ற சாத்யகி சற்று தயங்கி “கனவில் எதுவும் எப்படியும் வரும். ஆனால்…” என்றபின் “நேற்று என் கனவில் அறுந்த தலையை ஏந்தி சததன்வா தலைமைகொண்டு போருக்கெழுந்தபோது வெறிக்கூச்சலிட்டபடி உடன் பெருகிவந்த யாதவர் படை கிருதவர்மர் வாழ்க என்றுதான் கூவியது…” என்றான். பீமன் திரும்பி நோக்கினான். “அந்தத் தலைமட்டும்தான் சததன்வாவுடையது…” என்றான் சாத்யகி. பீமன் கண்களில் மகிழ்ச்சியில்லாமல் உரக்க நகைத்து “கனவுகளை ஆராயப்புகுந்தால் அவை நம் படைகளைவிட நூறுமடங்காகும். நேற்று நம் படைவீரர்கள் இரவெல்லாம் கனவுகண்டிருக்கிறார்கள்” என்றான்.
படைகளின் முகப்பினூடாக அவர்கள் பெருநடையில் சென்றார்கள். சாத்யகி “நான் கடக்கவேண்டிய எல்லையை இன்று வகுத்துக்கொண்டேன்” என்றான். பீமன் திரும்பி நோக்காமலேயே தலையை அசைத்தான். “நேற்று என் எதிரில் யாதவர்கள் வராமல் பார்த்துக்கொண்டேன். என் கைகளால் என் குலத்தவரை கொல்லவியலுமா என்று அஞ்சினேன். இன்று கொல்வேன். பாண்டவரே, இன்று யாதவக்குருதியிலாடியே மீள்வேன்” என்றான். “ஒவ்வொருவரும் தங்கள் எல்லைகளை தலையால் அறைந்துடைத்துக் கடந்தாகவேண்டிய நாள் இது. அதையே இளைய யாதவர் இன்று அவையில் சொன்னார்.”
பீமன் புரவியை நிறுத்தி தன் படைகள் அணிவகுத்து நின்றிருப்பதை கண்டான். பெரும்பாலானவர்கள் துயில்நீப்பின் நிழல் படிந்த கண்களுடன் சுருங்கிய வாயுடன் காய்ச்சல்கண்டவர்கள் போலிருந்தனர். சிலர் கைகளும் உதடுகளும் நடுங்குவதாகவே தோன்றியது. முரசுகளும் கொம்புகளும் முழங்க கொடிகள் சுழன்று சுழன்றசைய படை தன் பிரிவுகளை முள்ளம்பன்றி முட்களை அமைப்பதுபோல விரித்து சீராக அடுக்கியது. அதன் வெவ்வேறு பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்து ஒன்றாக இணைந்துகொண்டிருந்தன. தோல்சுருளில் பார்த்த வரைபடத்தை நினைவுகூர்ந்து படைகள் நாரைச்சூழ்கை அமைப்பதை பீமன் உணர்ந்தான்.
சாத்யகி தன் படைகளின் முகப்பை நோக்கி செல்ல பீமன் மேலும் முன்னகர்ந்து தன் படைகளை அணுகினான். அவனைக் கண்டதும் வாழ்த்தொலிகள் எழுந்தன. ஆனால் அவை தளர்ந்த வில்லின் நாணொலிபோல் பதிந்து ஒலித்தன. பீமன் தன் தேரை அணுகி புரவியிலிருந்து இறங்கி நின்றான். வீரர்கள் அவன் கவசங்களை பொருத்தத் தொடங்கினர். அவன் விழிசுருக்கி ஒளிபரவத் தொடங்கிய வானத்தைப் பார்த்தபடி நின்றிருந்தான். படைசூழ்கை முடிவடைந்ததை அறிவிக்கும் கொம்போசை எழுந்ததும் அவன் அருகே நின்றிருந்த முரசு மாடத்தை அணுகி ஏணியென அமைக்கப்பட்டிருந்த கணுமூங்கிலில் தொற்றி மேலேறினான். மறுபக்கம் முரசறைவோர் இருவர் அவனுக்காக கீழிறங்கினர். அவன் எடை தாளாது மேடை முனகியது.
பெருமுரசும் சிறுமுரசும் சிவக்கும் வானொளியில் செந்நிறத் தோற்பரப்புகள் மின்ன அமைந்திருந்தன. கொம்புகளுடன் ஒரு காவலன் மட்டும் அங்கிருந்தான். வண்ணக் கொடிகள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. பீமன் நின்றபடி புருவம்மேல் கைவைத்து பாண்டவப் படையை பார்த்தான். நாரை கழுத்தை கட்டுவிரியன்போல மும்முறை வளைத்து உள்ளிழுத்து, சிறகுகளை உடலுடன் ஒட்டிக்கொண்டு ஒடுங்கி நீண்டிருந்தது. சிறகுகளின் இறகுகளாக அமைந்த விரைவுத்தேர்களின் கொடிகள் காற்றில்லாமையால் துவண்டு கிடந்தன. அலகுமுனையில் இளைய யாதவர் தேரைத் தொட்டு வணங்கியபின் அமரத்தில் ஏறி அமர்ந்து சவுக்கை கையிலெடுத்தார். புரவிகளின் புட்டங்களை இடக்கையால் மெல்லத் தொட்டு அவற்றுடன் உரையாடினார். கவசங்கள் மின்ன அர்ஜுனன் நிலம்தொட்டு வணங்கி தேரிலேறிக்கொண்டான். அவனுடைய ஆவக்காவலர் பின்னால் ஏறி அம்பறாத்தூணிகளை எடுத்து தேரில் அடுக்கினர்.
அர்ஜுனனைச் சூழ்ந்து அவனுடைய தனிப்படை வில்லவர் நூற்றெண்மர் இரட்டைப்புரவி இழுத்த எடையற்ற தேர்களில் ஏறி பீடத்தில் வில்லேந்தி நின்றனர். அவர்களின் ஆவக்காவலர் பின்பக்கம் அம்புத்தூளிகளுடன் ஏற பாகன்கள் முன்னால் ஏறி அமரத்தில் அமர்ந்தனர். விசைவில்லவர் ஆயிரத்தெண்மர் புரவிகளில் ஏறிக்கொண்டு வலக்கையில் வில்லை வாங்கி தொடையுடன் ஒட்டி நீட்டுவாக்கில் வைத்தனர். அவர்களின் புரவிகளின் வலப்பக்கம் அம்புத்தூளிகளை ஏவலர் கட்டினர். அவர்கள் கவசங்களை சீரமைத்து கையுறைகளை அணிந்துகொண்டனர். தலைக்கவசங்கள் வெட்டுண்ட தலைகள்போல தோல்நாடாவில் கட்டப்பட்டு புறங்கழுத்தில் தொங்கின.
பீமனின் படையிலிருந்த நூற்றெட்டு தேர்வீரர்களும் ஆயிரத்தெட்டு புரவியினரும் முன்னரே ஒருங்கிவிட்டிருந்தனர். அர்ஜுனனும் பீமனும் தங்கள் படைகளை தாங்களே தெரிவுசெய்திருந்தனர். அவர்களின் இயல்பு படைகளிலும் தெரிந்தது. அர்ஜுனனின் படைவீரர்கள் தங்கள் திறன்மேல் நம்பிக்கைகொண்டவர்களாகவும் அதனால் எதையும் பெரிதாக பொருட்படுத்தாதவர்களுமாக இருந்தனர். அங்கிருந்து நோக்கியபோதே அவர்களின் படைகளில் உருவாகி மறைந்துகொண்டிருந்த சிறிய கலைவு தெரிந்தது. பீமனின் படைகள் முன்னரே முழுமையாக சித்தமாகி பொறுமையிலாது தங்கள் உடல்களுக்குள் ததும்பிக்கொண்டிருந்தன. சிலர் தரையை கால்களால் மெல்ல உதைத்தனர். சிலர் கைகளின் தோலுறைகளை உரசிக்கொண்டனர்.
அவனுக்குப் பின்னால் சாத்யகியின் படைகளும் அதற்கப்பால் திருஷ்டத்யும்னனின் படைகளும் நாரையின் கழுத்தென்று அமைந்திருந்தன. நாரையின் வலச்சிறகின் முனையில் அபிமன்யூவும் இடச்சிறகின் முனையில் சுருதகீர்த்தியும் இருந்தனர். அபிமன்யூவின் அருகே துருபதரும் சுருதகீர்த்தியின் அருகே விராடரும் தேர்கொண்டிருந்தனர். நாரையின் நெஞ்சில் யுதிஷ்டிரரின் கொடியும் அருகே இருபுறமும் நகுலனின் கொடியும் சகதேவனின் கொடியும் தெரிந்தன. படை முழுமையாக ஒருங்கிவிட்டிருந்தது. ஆனால் வெறும் விழிகளாலேயே நோக்கத்தக்க சோர்வு அதில் இருந்தது.
எதிரே விழியெல்லை வரை கௌரவர்களின் படை நிரந்து படர்ந்திருந்தது. அவர்களின் முகப்பெல்லையை கடல்விளிம்பென காணமுடிந்தது. அப்பாலிருக்கும் படை ஓசையென்றே அறியவந்தது. ஆயினும் அவர்கள் கொண்டிருக்கும் உளஊக்கமும் பெருமிதமும் எவ்வண்ணமோ அனைவருக்கும் தெரிந்தது. அவர்கள் பருந்துச்சூழ்கை அமைத்திருந்தார்கள். பருந்தின் கூரலகு என பீஷ்மரின் படை நின்றது. அவருடைய மாணவர்கள் மட்டுமே அடங்கிய தேர்வில்லவர் சூழ்ந்திருக்க அவர் தேர்த்தட்டில் வில்லை மதலையென மடியில் போட்டு கைகளை மார்பில் கட்டி ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். வலப்பக்கமிருந்து வீசிய மென்காற்றில் தாடி பறந்தது. பரிவில்லவர் ஆயிரத்தெண்மர் அவருக்கு இருபுறமும் அவருடைய கைகள் விரிந்ததென நிரைகொண்டிருந்தனர்.
பருந்தின் வலப்பக்கச் சிறகின் எல்லையில் துரோணர். அருகே கிருபர். இறகுத்தொகையாக கௌரவர்களின் அணி. இடப்பக்கச் சிறகின் எல்லையில் அஸ்வத்தாமன். அருகே இறகுகளாக சல்யரும் கிருதவர்மனும் லட்சுமணனும் அவன் இளையோரும். பருந்தின் கூருகிர்கால்களாக ஜயத்ரதனும் பூரிசிரவஸும். பருந்தின் நெஞ்சில் சகுனியும் துரியோதனனும் அருகருகே நின்றிருப்பது கொடிகளினூடாக தெரிந்தது. பருந்து சிறகுகளை நன்கு விரித்து கழுத்தைத் தாழ்த்தி கூரலகு நீட்டி மறுகணம் காற்றிலெழுந்து பாயும் கணத்தில் நிலைகொண்டிருந்தது.
பருந்தின் கழுத்து நீளமற்றிருந்தாலும் அதில் வலுவான மூன்று அரசர்களின் படைகள் இருப்பதை பீமன் கண்டான். சூரியக்கொடி பறக்கும் தேர்களின் நிரை கலிங்கப் படைகள் என்று தெரிந்தது. உசிநாரத்தின் அஸ்வக் கொடியையும் துஷாரத்தின் நாகக் கொடியையும் அடையாளம் கண்டான். புருவம் சுருக்கி அவன் படையின் அப்பகுதியை மட்டும் பார்த்துக்கொண்டு நின்றான். பின்னர் கணுமூங்கில் வழியாக இறங்கி கீழே வந்தான். அவனை அணுகிய அணுக்கப்படைவீரன் சிம்ஹபாகு “தாங்கள் பருந்தின் கழுத்தை நோக்குவதை கண்டேன், அரசே” என்றான். “ஆம், பீஷ்மரை மையப்படையுடன் பிணைப்பது அது” என்றான் பீமன்.
சிம்ஹபாகு “ஆனால் அது நீளமற்றது. மைய உடலின் பகுதியேதான். மையப்பெரும்படைக்குள் எத்தருணத்திலும் தங்களை உள்ளிழுத்துக்கொள்ள அவர்களால் இயலும். அவர்களை தொடர்ந்து சென்றோமென்றால் மையப்படையால் சூழப்படுவோம்” என்றான். பீமன் தலையசைத்தான். தேரின் அருகே சென்று அதன் சகடக்காப்பின்மேல் கையூன்றி மேலே மெல்ல நுடங்கிய மின்கதிர்கொடியை நோக்கியபடி நின்றான். சிம்ஹபாகு “அங்கே என்ன நிகழ்ந்தது என்ன புரியவில்லை” என்றான் பீமன் “கலிங்கம் மூன்றுநாடுகளாகி பல ஆண்டுகளாகின்றது. ஸ்ருதாயுஷ் ஆட்சிசெய்யும் மையக்கலிங்கம் பெரியநாடு. அவருடைய முதல்மைந்தர் ருதாயு சூரியதேவர் என்னும் பெயர் சூடி தென்கலிங்கத்தை ஆள்கிறார். அவருடைய இளையோன் கேதுமானும் தனிப்படையும் கொடியுமாக உடன்வந்துள்ளான். இளையவராகிய சித்ராங்கதர் ராஜபுரத்திலமைந்து வடகலிங்கத்தை ஆள்கிறார். ஒரே குருதி. ஒன்றென இணைவதே நன்று என அவர்களுக்குப் புலப்படுவதற்கு இத்தகைய பெருங்களம் உகந்த சூழல்தான்”.சிம்ஹபாகு ”ஆம்”என்றான்.
பீமன் முகவாயை தடவியபடி எண்ணத்திலாழ்ந்து நின்றிருக்க “மல்ல நாட்டு ஆகுகர், உசிநார மன்னர் சிபி, துஷார நாட்டு அரசர் வீரசேனர் ஆகியோர் கலிங்கத்துடன் இணைந்துள்ளனர்” என்றான் சிம்ஹபாகு. “பருந்தின் கழுத்தை நாம் வெட்டியாகவேண்டும்” என்றான் பீமன். சிம்ஹபாகு “ஆணை” என்றான். “எந்த விசை கலிங்கர்களை பிரித்ததோ அது துளியளவிலேனும் அங்கே இருக்கும். பாறைக்குள் நீரோட்டம்போல என்பார்கள். அந்த விரிசலை நாம் கண்டடைந்தால் போதும். அவர்களை உடைப்போம்.”. சிம்ஹபாகு “ஆனால் அவர்கள் தந்தையும் மைந்தரும் பெயர்மைந்தரும்” என்றான். பீமன் “ஆகவேதான் இத்தனை மோதல்கள்” என்றபடி தன் கையுறைகளை இழுத்து அணிந்துகொண்டு “இப்போரில் பீஷ்மர் கொல்லப்படவேண்டும். அல்லது புண்பட்டு தேர்த்தட்டில் விழுந்து கொண்டுசெல்லப்படவேண்டும். அவர் வெல்லப்படக்கூடியவரே என்பதை நம் படைகளுக்கு நாம் காட்டவேண்டும்” என்றான்.
சிம்ஹபாகுவின் முகத்தில் எவ்வுணர்ச்சியும் வெளிப்படவில்லை. “இன்று நம் இலக்கு வேறேதுமல்ல. பீஷ்மரை அவர் அமைந்துள்ள பீடத்திலிருந்து பெயர்த்து அர்ஜுனன் முன் நிறுத்துவோம். இரு இளமைந்தரும் வந்து சூழ்ந்துகொள்ளட்டும். நம் வில்லவர் அனைவரும் இணைந்தாலும் சரி, இன்று அவர் களத்தில் விழுந்தாகவேண்டும்.” சிம்ஹபாகு “ஆம்” என்றான். பீமன் தேரில் ஏறி பீடத்தில் நின்று தன் வில்லை எடுத்து நாணேற்றினான். படைகளெங்கும் ஒரு மெல்லிய விதிர்ப்பு பரவுவதை உணர்ந்த மறுகணமே புலரியை அறிவிக்கும் கொம்போசை எழுந்தது. முரசுகள் உடன் எழுந்தன. திரை ஒன்று நாற்புறமும் இழுத்துக் கட்டப்படுவதுபோல படை இறுக்கம் கொள்வதை பீமன் கண்டான்.
புலரி அறிவிப்பு ஓய்ந்ததும் கௌரவர் படைகளின் முகப்பிலிருந்து போர்முரசு ஒலிக்கத் தொடங்கியது. கொம்போசைகளுக்கு நிகராக போர்க்கூச்சல்கள் எழுந்தன. அங்கிருந்து நோக்கியபோதே வாள்களும் வேல்களும் காற்றிலெழுந்து அலையடிப்பதன் ஒளியை காணமுடிந்தது. பாண்டவர் தரப்பின் போர்முரசு சற்று பிந்தியே ஒலித்தது. அதன் தோற்பரப்பு சற்று நனைந்திருப்பதுபோல அதன் நடை சோர்ந்திருந்தது. கொம்புகள் ஊதியடங்கியதும் மேலும் சிலகணங்கள் இடைவெளிவிட்டுதான் போர்க்கூச்சலெழுந்தது. அர்ஜுனனின் தேர் உச்சவிசையுடன் எழுந்து முன்செல்ல அவனைச் சூழ்ந்து அணுக்கவில்லவர் சென்றனர். இரு படைகளும் இரண்டு பெருமழைப் பொழிவுகள் என சென்று முட்டிக்கொண்டன.
பீமன் தேர்முன் நின்றபடி “செல்க! செல்க!” என்று பாகனை ஊக்கினான். அவன் தேர் கவணிலிருந்து எழுந்த கல் என விரைய சற்று பிந்தியே அணுக்கவில்லவர் வந்தார்கள். நாரையின் கழுத்து மூன்று வளைவுகளாக மாறி மும்முனைகொண்டு கௌரவப் படையை எதிர்கொண்டது. பீமன் தன்முன் வந்த தேரிலிருந்த துஷாரநாட்டு இளவரசன் சுகேசனை முதல் அம்பிலேயே தலைகொய்து வீழ்த்தினான். அவன் தலை தேர்த்தட்டிலிருந்து உருள பாகன் கடிவாளத்தை இழுத்து தேரை திருப்பினான். உடன்பிறந்தான் வீழக்கண்டு கூச்சலிட்டபடி அவனை நோக்கி வந்த துஷாரநாட்டு இளவரசன் காமிகனை மறு அம்பால் வீழ்த்தினான். அவர்களின் உடல்கள் மேல் அவன் தேர் ஏறிச் சென்றது. துஷாரர்களின் படைத்தலைவன் கீர்த்திமானும் அவனுடைய அணுக்கவீரர் பன்னிருவரும் வீழ்ந்தனர்.
பீமன் தன் அணுக்கரை திரும்பிநோக்கி “நாம் போருக்கு எழவில்லை. கொல்லவே வந்திருக்கிறோம். வெறுமனே கொல்ல. கொலைக்கூத்தாட! கொல்லுங்கள்! எவரும் விலக்கல்ல. எதுவும் தடையல்ல… கொல்க! கொல்க!” என்று ஆணையிட்டான். “பாகன், அணுக்கன், ஏவலன் எவராயினும் நம் அம்புபட்டு எவரும் எஞ்சலாகாது. கொல்லுங்கள். கொன்று குவியுங்கள்!” என்று கூவினான். அவன் படைவீரர்கள் அவனுக்கு இருபுறத்துமிருந்த வெளியை பறக்கும் அம்புகளால் நிறைத்தனர். சிட்டுகளின் சிறகோசை என காற்று விம்மியது.
துஷாரநாட்டு அரசர் வீரசேனர் தன் மைந்தர்கள் வீழ்ந்ததை அறிந்ததும் தன் சங்கை எடுத்து ஊதினார். அவ்வொலி கேட்டு துஷாரப் படைகள் இழுபடும் வலையென அவரை நோக்கி குவிந்து அணுகின. அவர் வெறிகொண்டவர்போல காலால் தேர்த்தட்டை உதைத்தபடி சங்கை ஊதிக்கொண்டே இருந்தார். வலிமிக்க அலறல்போல, துயர்பீறிடும் தேம்பல்போல அவ்வோசை களத்தில் எழுந்தது. அதைக் கேட்டு மல்ல நாட்டு ஆகுகரும் உசிநார மன்னர் சிபியும் தங்கள் சங்குகளை முழக்கினர். அவர்களின் படைகளும் சூழ்ந்துகொள்ள மூன்று முனைகளாக கௌரவப்படை எழுந்து பீமனை நோக்கி வந்தது.
அப்பாலிருந்து அதை நோக்கிய திருஷ்டத்யும்னனின் செய்தி வந்தது. “பாண்டவரே, பின்னகர்க! அவர்கள் மையப்பெரும்படையால் தொடரப்படுகிறார்கள். சகுனியும் சுபலரும் பால்ஹிகர் சலனும் கௌரவர் பதினெண்மரும் அவர்களுக்குப் பின்னால் வருகிறார்கள். உங்களை சூழ்ந்துகொள்வார்கள்… அணிவிலகுக!” அந்த முரசொலிக் குரலை கேட்டு அவன் படை சற்றே தயங்க பீமன் “முன்னேறுக… முன்னேறுக!” என்று பாகனை நோக்கி கூவினான். அவன் அம்புகளால் துஷாரப் படைவீரர்கள் அலறியபடி விழ நிலையழிந்த புரவிகளால் தேர்கள் கவிழ அம்புபட்டு விழுந்த புரவிகள் எழுந்தும் விழுந்தும் கால்கள் துடிக்க அவற்றின் மேலேறி விழுவதுபோல் மறுபுறம் சென்று அவன் துஷாரர்களையும் மல்லர்களையும் உசிநாரர்களையும் எதிர்கொண்டான்.
“ஊன்மலையே, தந்தையறியா கீழ்மகனே, என் மைந்தனைக் கொன்ற உன் குருதியை அள்ளிச்சுவைக்காமல் செல்லப்போவதில்லை” என்று துஷாரரான வீரசேனர் கூவினார். “கொல்லுங்கள் அவனை. சூழ்க… ஒருகணமும் ஒழியாமல் அவன்மேல் அம்புகள் பொழிக!” என்று கண்ணீருடன் வீறிட்டார். பீமன் கையை உதறி குருதித் திவலைகளை தெறிக்கச் செய்தபடி உரக்க நகைத்து “கீழ்மகனே, நீ அரசனல்ல வேடன். உன்னை அரசனுக்குரிய முறையில் கொல்லப்போவதில்லை. உன் தலையை என் காலால் உதைத்து வீசுவேன்” என்று கூவியபடி அம்புகளை ஏவினான். வீரசேனரின் தேர்த்தூணிலும் குவைமுகட்டிலும் அம்புகள் பெய்து மூடின.
மிக அண்மையிலென வீரசேனரின் கண்களை நோக்கி “அறிவிலி, நீ ஷத்ரியனாக நடிக்கும் இழிகுலத்தான். பழித்துத் துரத்தப்பட்ட அனுவின் குருதி நீ. உன் குடியே பாரதவர்ஷத்தால் இழிவுசெய்யப்பட்டது… ஆண்மையிருந்தால் வில்தாழ்த்தாது போரிடு” என்றான் பீமன். செவிமறைக்கும் பேரோசை நடுவே உதடசைவால் ஒலித்த மொழி பெருமுரசுகளைவிட முழக்கம் கொண்டிருந்தது. “இன்று நீ களத்தில் மடிவாய். உன் தலையை மூக்கைச் சீவி என் தேர்மேல் வைப்பேன்… இன்று என் தேரின் கண்ணேற்றுக் கலமுகம் நீ” என்றான் பீமன்.
அச்சொற்கள் ஒவ்வொன்றாலும் இரும்புக் கதாயுதத்தால் அறைவாங்கியவர்போல துஷார வீரசேனர் அதிர்ந்தார். அவர் துணைக்கு வந்த மல்ல ஆகுகரும் உசிநார சிபியும் இருபக்கமும் சூழ்ந்தனர். “சூழ்ந்துகொள்க… அவன் தனியன். சூழ்ந்துகொள்க!” என்று சிபி கூவினார். “செல்க! செல்க! அவனை கால்நாழிகைப்பொழுது நிறுத்துக… நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம்!” என்று பின்னாலிருந்து சலன் செய்தியனுப்பினான். “கலிங்கம் நிலைபெயர வேண்டியதில்லை. பீஷ்மரை பின்காத்து நிலைகொள்க! இப்போரை நாங்கள் முடிக்கிறோம்” என்று சகுனியின் ஆணை வந்தது.
தன் உள்ளம் அஞ்சி தளர்ந்துவிட்டதை வீரசேனர் உணர்ந்தார். உடல்களும் படைக்கலங்களும் கொப்பளித்துக் கொண்டிருந்த அந்தப் பெருக்கில் முற்றிலும் தனியராக உணர்ந்தார். கொண்ட அனைத்தும் முற்றிலும் பொருளிழந்தன. உடல் தன் செயற்பழக்கத்தால் மட்டும் அம்புகளை எய்துகொண்டு களம் நின்றது. மல்ல ஆகுகர் தன் இளமைந்தரிடம் “கைநிலைக்காது எய்து நிறையுங்கள். கணமொழியாது அம்பு பெருக்குங்கள்… இது வெற்றியின் தருணம்…” என்று கூவியபடி பீமனை நெருங்கினார். அவர் மைந்தன் பலதேவனின் உடல் தேரிலிருந்து யானையால் தூக்கி வீசப்பட்டதுபோல் களத்தில் விழுந்தது. இன்னொரு மைந்தன் சுகிர்தனின் தலை அதன்மேல் தெறித்தது. அவர் அலறி திரும்புவதற்குள் அவருடைய கவசம் உடைந்தது. மறுகணமே அடுத்த நீளம்பு நெஞ்சில் புதைந்து மறுபக்கம் சென்று தேர்த்தூணுடன் அவரை அறைந்து நிறுத்தியது. கைகால்கள் துடிக்க வில்நழுவ அவர் வாயிலும் மூக்கிலுமிருந்து கொழுங்குருதி பெருக்கி நின்றார்.
உசிநார சிபி “செல்க! செல்க!” என்று வீறிட்டபடி அவருக்கும் பீமனுக்கும் நடுவே புகுந்தார். மறுகணம் கதையுடன் தேர்ப்புரவிகள் மேல் தாவி உடைந்துசரிந்த தேர்முகடொன்றில் கால்வைத்து காற்றிலெனப் பறந்து அவர் தேரிலேயே ஏறிய பீமன் அவரை கால்தூக்கி நெஞ்சில் மிதித்துத் தள்ளி கதையைச் சுழற்றி தலையை அறைந்து உடைத்தான். “தந்தையே!” என்று கூவியபடி புரவி திருப்பி அருகணைந்த உசிநார நாட்டு இளவரசன் நிகும்பனை ஒரே அடியில் தேர்த்தட்டில் குருதிக்குமிழியாக உடைந்து தெறிக்கச் செய்தான். அவன் உடலெங்கும் குருதி வழிந்தது. தலையை உதறியபோது தலைக்கவச முனைகளிலிருந்து கூழாங்கற்களென நிணமும் உறைசோரியும் தெறித்தன. பெருங்கதையை சுழற்றித் தூக்கி மதயானைபோல் பிளிறலோசை எழுப்பினான். அவன் படைவீரர்கள் “வெற்றிவேல்! வீரவேல்!” என்று போர்க்குரலெழுப்பி பறவைக்கூட்டமென வீழ்ந்தவர்கள்மேல் பாய்ந்து மேலெழுந்து வந்தனர்.
துஷார வீரசேனர் தன் கையிலிருந்து வில்நழுவுவதை உணர்ந்தார். தேர்த்தட்டில் விழப்போகிறவரைப்போல் அசைந்தாடினார். அரைக்கணத்தில் இரு மைந்தரையும் அருகிலெனக் கண்டார். இளையவர்களாக அவருடன் நதியில் நீராடினார்கள். பற்களும் விழிகளும் ஒளிர நகைத்தபடி புரவிகளில் பாய்ந்தேறி மலைச்சரிவுகளில் கூழாங்கற்கள் தெறிக்க உருளைக்கற்கள் உடன் உருள விரைந்தனர். பாணனின் பாடலைக் கேட்டு பந்த ஒளி விழிகளில் மின்ன கனவு காய்ச்சலெனப் படிந்த முகங்களுடன் அமர்ந்திருந்தனர். “மைந்தா!” என்று கூவியவாறு அவர் அம்புகளைத் தொடுத்தபடி முன்னால் பாய்ந்தார். “மைந்தர்களே, உங்கள் பொருட்டு அவன் உடலில் ஒரு புண்… இப்பழிமகனின் ஒருதுளிக் குருதி… தெய்வங்களே, என் மைந்தர்களுக்காக அக்கொடையை எனக்களியுங்கள்… மூதாதையரே, இத்தருணத்தில் என்னுடனிருங்கள்.”
ஆனால் அவருடைய அம்புகளை பீமன் எளிதில் கைவில்லாலேயே அறைந்து தெறிக்கச் செய்தான். அவன் வில் நெளிந்து முறுகுவதை, பிறவிபிறவியென அவரைத் தொடர்ந்து வரும் அந்த அம்பு ஒளித்துளியை கூரில் சூடியபடி அதிலமர்ந்து இறுகுவதை, எழுந்து பின்சிறகுகள் காற்றில் நீர்ப்பாசி இலைகள் என ஒதுங்க மிதந்து வருவதை அவர் கண்டார். அவர் நெஞ்சில் ஓர் உதையென அது பதிந்தது. மூச்சு இறுக ஓசையின்றி தேரில் மல்லாந்து விழுந்தார்.
“பின்னடைக! பாண்டவரே, பின்னடைக! பெரும்படை சூழ்ந்துகொள்கிறது… பின்னடைக!” என்று திருஷ்டத்யும்னனின் ஆணை எழுந்தது. “பின்னடைக! பிற படைகளுடன் ஒருங்கிணைக! எதிரி சூழ்ந்துகொள்ள விடாதீர்கள்!” பீமன் இடைவாளால் துஷார வீரசேனரின் தலையை வெட்டி எடுத்தான். தலைக்கவசத்தை உடைத்து அவர் மூக்கை அரிந்து வீசிவிட்டு புரவிகள்மீதும் தேர்க்குடங்கள் மீதும் குரங்குபோலத் தாவி தன் தேரை அடைந்தான். அவருடைய கொண்டையினூடாக அம்பொன்றை செலுத்தி தன் தேர்முகப்பில் குத்தி நிறுத்தி அதை ஆடவிட்டான். “செல்க! முன்செல்க!” என்றான். “அரசே!” என்றான் பாகன். “முன்னால் செல்க… முன்னால் செல்க!” என்று பீமன் காலால் தேர்த்தட்டை ஓங்கி மிதித்தபடி கூவினான். “குருதியாடி மகிழ்க என் தேவர்கள்! மூச்சுலகில் துள்ளிக்களிக்கட்டும் என் மூதாதையர்… செல்க!”
தேர் அதிர்ந்தபடி முன்னால் சென்றது. அவன் வீரர்களில் வீழ்ந்தவர்களின் புரவிகளும் தேர்களும் பின்னடைய பிறர் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டு அவனைத் தொடர்ந்து போர்க்கூச்சலுடன் சென்றனர். “சாத்யகியை என்னை தொடரச் சொல்க… என் பின் சாத்யகி இருக்கவேண்டும்!” என்று பீமன் கூவினான். “எவர் வரினும் கொன்றே மீள்வேன்… மையப்பெரும்படையே ஆயினும் எதிர்கொள்வேன்… விரைக! விரைக! விரைக!”