திசைதேர் வெள்ளம் - 40

bowசாத்யகி தன் எதிரே தெரிந்த கௌரவர்களின் நிரையை நோக்கி அம்புகளை செலுத்தியபடியே சென்றான். அவனுக்கு எதிராக கௌரவர்கள் அனைவரும் இணைந்து செலுத்திய அம்புகள் வந்து அறைந்து உதிர்ந்தன. “நாம் அம்புவளையத்திற்குள் செல்கிறோம், யாதவரே!” என்று பாகன் சொன்னான். “செல்க! செல்க!” என்றான் சாத்யகி. “அவர்களின் அம்புகள் விசைகொண்டபடியே வருகின்றன!” என்று பாகன் சொல்ல “செல்க… செல்க, அறிவிலி!” என சாத்யகி கூவினான். “யாதவரே, அவர்களின் அம்புகளைவிட தங்கள் அம்புகளின் தொடுதொலைவு மிகுதி… தாங்கள் முன்னகரவேண்டிய தேவையில்லை” என்று பாகன் சொன்னான். சாத்யகி அவன் விலாவை மிதித்து “செல்க! செல்க!” என்று கூவினான்.

பாகன் “தாங்கள் மீள முடியாது, யாதவரே!” என்றான். “மீள வேண்டியதில்லை… மீள விழையவில்லை” என்று சாத்யகி கூச்சலிட்டான். “அச்சமிருந்தால் இறங்கிவிடு… இது சாவின் பாதை. விரும்பாவிடில் அகன்று போ!” என்றான். பாகன் “நான் தங்களுடன் ரிஷபவனத்திலிருந்து வந்தவன்” என்றபின் புரவிகளை சவுக்கால் அறைந்தான். அவை கவசங்கள் உரசி ஒலியெழுப்ப குளம்புகள் விரைவுத்தாளமிட முன்னால் சென்றன. அவன் வருவதை துச்சாதனன் பார்த்தான். கைநீட்டி அவனை சுட்டிக்காட்டியபடி தன் தம்பியருடன் வந்து சூழ்ந்துகொண்டான். அவர்கள் ஏவிய அம்புகளை ஒழிந்து அம்புகளால் அவர்களை அறைந்து சாத்யகி அவர்கள் உருவாக்கிய அரைவட்டத்தின் நடுவே நின்று சுழன்றான்.

ஒருகணத்தில் தன்னை அவன் உணர்ந்தபோது அனைத்திலிருந்தும் விடுபட்டிருப்பதை அறிந்தான். துயரில்லை. இருத்தலின் சுமை இல்லை. அம்பும் எதிரம்பும் மட்டுமே. சாவு அண்மையிலிருக்கையில் உள்ளம் ஏன் உவகை கொள்கிறது? அக்கணம் இளமை உடலில் திரண்ட பின்னால் எப்போதும் சாவைச் சென்று தொட்டு மீள்வதையே விளையாட்டென்றும் களியாட்டென்றும் அவன் கொண்டிருந்ததை உணர்ந்தான். புரவியிலேறி மலைச்சரிவில் பாய்ந்திறங்கியிருக்கிறான். பாறைவிரிசல்களில் விரல்கோத்து செங்குத்தாகத் தொற்றி ஏறியிருக்கிறான். கொடிவள்ளிகளை பற்றிக்கொண்டு ஆழ்பள்ளங்களில் இறங்கியிருக்கிறான். வெறிகொண்டெழுந்த ஏறுகளை வெறும் கைகளுடன் எதிர்கொண்டிருக்கிறான். உடலில் ஆற்றல் கொண்டிருக்கும் எவரும் எவ்வகையிலேனும் சாவை சீண்டிக்கொண்டேதான் இருப்பார்கள். சாவின் முனையில் இருக்கும் நஞ்சு அமுதுக்கு நிகரானது. சாவு சூழ்ந்திருந்தது பலநூறு அம்புமுனைகளாக. சாவு சீற்றம்கொண்ட நாகங்களாக சூழப்பறந்தது. தீத்தழல்களாக மின்னிச் சென்றது.

அவன் நூறு ஆயிரம் பல்லாயிரம் எனப் பிரிந்து ஒவ்வொரு அம்பையும் எதிர்கொண்டு சென்றான். அது அவனை கடந்து செல்வதற்குள் அதை நெஞ்சில் வாங்கிக்கொண்டான். கணந்தோறும் செத்து உதிர்ந்துகொண்டிருந்தான். “யாதவரே, வேண்டாம். இது தற்கொலை” என்று அவனருகே வந்துகொண்டிருந்த பாஞ்சாலத்தின் வில்லவன் கூவினான். அவன் மேலும் அருகே வந்து “யாதவரே!” என்று கூவுவதற்குள் அவன் நெஞ்சில் அம்பு பாய்ந்து பின்னால் தூக்கி வீசப்பட்டான். பாகன் திரும்பிப்பார்க்காமல் பெருகிவரும் அருவியை எதிர்கொள்பவனைப்போல தலையை தாழ்த்தி உடலை முன்வளைத்து தேரை செலுத்தினான். அம்புகள் தேர்த்தூணில், கவசங்களில் உரசி பொறிபறக்க கடந்துசென்றன. அவன் நெஞ்சிலும் தோளிலும் வந்தறைந்தன.

சாத்யகி வெறிகொண்டு நகைத்துக்கொண்டிருந்தான். “வருக! வருக!” எதிர்வரும் வீரர்களை அழைத்தான். ஒவ்வொரு அம்பு சென்று படுகையிலும் ஆர்ப்பரித்து எழுந்து குதித்தான். கொலைவெறியும் போர்விசையும் மறைந்து அவன் சிரித்தாடிக்கொண்டிருந்தான். அவன் அம்புகள் எவையும் குறிதவறவில்லை. கவசங்களின் மெல்லிய இடுக்குகளை அவனால் அருகிலென காணமுடிந்தது. அவ்வீரர்கள் கையசைக்கும், தலைதிருப்பும், கால்நீட்டும் அசைவில் மீன்வாய்கள் என அந்தக் கவச இடைவெளிகள் விரிந்து மீள்வதை கணத்தில் ஆயிரத்திலொரு அணுக்காலத்தில் நின்று அவன் விழிகள் கண்டன. அவன் அம்புகள் முன்னரே அறிந்த கூட்டுக்குள் சென்றமையும் பறவைகள்போல அந்த இடைவெளிகளில் புகுந்து தைத்து நின்றன. அவன் நோக்கிய இடத்திலெல்லாம் கௌரவப் படையின் வில்லவர்கள் வீழ்ந்தனர்.

விசையுடன் திரும்பியபோது அவன் தன்னைச் சூழ்ந்திருந்த போர்வெளியை மிக மெல்ல நீர்ப்பாவை என அசைவதாகக் கண்டான். எழுந்து அமையும் பெருஞ்சிறைப் பறவைகள்போல அம்புகள் வில்லில் இருந்து விடுபட்டு காற்றிலெழுந்து வளைந்து அமைந்தன. தேர்கள் காற்றில் மரக்கிளைகள்போல் நலுங்கின. நெளியும் திரையின் ஓவியங்கள்போல வீரர்கள் ஒவ்வொரு முகச்சுளிப்பும் தெளிந்து தெரிய, ஒவ்வொரு அசைவும் விரைவழிய நடனமிட்டனர். அவனைச் சூழ்ந்திருந்த வில்லவர்கள் பெரும்பாலானவர்கள் வீழ்ந்தனர். பாகன்களும் கொல்லப்பட புரவிகள் நிலையழிந்து கனைத்தபடி சுற்றிவர தேர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு நின்றன.

நின்றுவிட்ட தேர்களாலான அரண் ஒன்று உருவாக அதற்குள் சாத்யகி அகப்பட்டான். அவனை எதிர்த்துக்கொண்டிருந்த வில்லவர்கள் அனைவரும் அப்பால் விலகிச்சென்றுவிட அத்தேர்களே அவர்களுக்கு மறைவென்றாயின. தேர்களினூடாக அவர்கள் அவனை நோக்கி அம்புகளை பெய்தனர். ஆனால் அவன் கவசங்களை உடைக்கவோ உடலில் தைக்கவோ அந்த அம்புகளால் இயலவில்லை. தேவர்களால் பாதுகாக்கப்பட்டவனாக அவன் தோன்றினான். அவர்கள் தங்கள் தெரியாக் கைகளால் அம்புகளைப் பிடித்து அப்பாலிட்டனர். அவனைச் சூழ்ந்திருந்த காற்றை அலையடிக்கச் செய்தனர். அவன் விண்ணிலிருந்து இறங்கிய இசையால் ஆட்டுவிக்கப்பட்டதாகத் தோன்றியது. அவன் நடனம் கட்டற்ற வெறியும் பிழையற்ற அசைவுகளும் ஒருங்கே கொண்டதாக, ஆகவே தெய்வங்களுக்குரியதாக தோன்றியது.

தொலைவிலிருந்து நோக்கியவர்கள் அவன் முகத்திலிருந்த பெருங்களிப்பைக் கண்டு திகைத்தனர். தெய்வமெழும் பூசகர்களின் முகங்களில், சிலைகொண்ட தெய்வத்திருவுருக்களில் மட்டுமே விரியும் சிரிப்பு அது. அது அவர்களை அஞ்சவைத்தது. அவன் அம்புகள் வந்து தைக்குந்தோறும் அவர்கள் அஞ்சி அலறி ஒருவரை ஒருவர் எச்சரித்தபடி விலகிச்சென்றனர். அவன் அவர்களை துரத்திக்கொண்டு சென்றான். “நில்லுங்கள்! நில்லுங்கள், பேடிகளே!” என்று கூச்சலிட்டான். அவர்கள் மேலும் மேலும் பின்னடைய அங்கே கௌரவப் படை ஆழ்ந்த பள்ளமென குழிந்துசென்றது. “தடைசெய்க! யாதவர் யுயுதானரை தடை செய்க! ஜயத்ரதர் எழுக!” என சகுனியின் ஆணை ஒலித்தது.

சகுனியின் ஆணையை பாண்டவப் படைக்குள் ஒருவன் பிரித்தறிந்தான். “ஜயத்ரதர்! யாதவரை ஜயத்ரதர் சூழ்ந்துகொள்ளப்போகிறார்!” என அவன் கூவினான். “பின்துணை செல்க! யுயுதானருக்கு பின்துணை செல்க!” என்று பாண்டவர்களின் முரசுகள் முழங்கின. பல பகுதிகளாக பின்னடைவுகொண்டிருந்த பாஞ்சாலப் படையினர் ஒருங்கு திரண்டு அம்புகளை ஏவியபடி முன்னால் வந்தனர். ஆனால் கௌரவர்களின் கேடயத்தேர்கள் ஒன்றுடன் ஒன்று கோத்துக்கொண்டு நீண்டு வந்து இரும்புச்சுவரென்றாகி முழுமையாகவே அவர்களை தடுத்தன. அதற்கு அப்பால் சாத்யகி முற்றிலும் தனியனாக சிக்கிக்கொண்டான். “துணையெழுக! யாதவருக்கு துணையெழுக!” என்று முரசுகள் முழங்கின.

பாண்டவப் படையிலிருந்து தனித்து பிரிந்து முற்றாகச் சூழப்பட்டிருப்பதை சாத்யகி உணரவில்லை. களிவெறிகொண்டு சிரித்துக்கொண்டிருந்த அவனுடைய வில்லில் இருந்து எழுந்த அம்புகளால் அவனைச் சூழ்ந்து ஒரு வேலி உருவானது. அதைவிட அவனைக் கண்டு கௌரவர்கள் கொண்ட அச்சம் கண்காணா பெருவேலியென்றாகியது. அவர்கள் மேலும் பின்னடைய அவன் நின்றிருந்த வட்டம் வெறுமைகொண்டு அகன்றது. அவன் “எங்கே? கௌரவர்கள் எங்கே? எங்கே ஷத்ரியப் பெரும்படை?” என்று வெறிக்கூச்சலிட்டபடி அதன் வடக்குமூலை நோக்கி செல்ல அங்கே முரசுகள் முழங்கின. கௌரவர்களின் பெரும்படை சாத்யகியை நோக்கி வருவதை அவை அறிவித்தன.

ஆனால் அந்த ஓசையையும் சாத்யகி பிரித்தறியவில்லை. அவன் அங்கு நிகழ்ந்த போருக்கு மிக அப்பால் இருந்தான். அவனை தங்கள் கைகளில் ஏந்தியிருந்த தெய்வங்கள் அவர்களின் அமுதை அவன் உடலிலும் உள்ளத்திலும் நிரப்பியிருந்தன. அவன் கைகளும் கண்களும் செவிகளும் பெருகிக்கொண்டே இருந்தன. அவன் பாகனும் ஆவக்காவலனும் அந்தப் பெருங்களியாட்டத்தால் ஆட்கொள்ளப்பட்டனர். அவர்களும் வெறிகொண்டு நகைத்துக்கொண்டிருந்தார்கள். ஆவக்காவலன் கழையூன்றி பாய்ந்து அருகே வந்துகொண்டிருந்த வில்லவன் இறந்துவிழுந்தமையால் ஒழிந்து நின்றிருந்த தேர்களுக்குச் சென்று அங்கிருந்து ஆவநாழிகளை எடுத்துவந்தான். “அவர்கள் மாற்றுருக்கொண்டு வந்த கந்தர்வர்கள். ஒழியா ஆவநாழி தேவர்களுக்கு மட்டுமே உரியது!” என்று கௌரவர்களின் வில்லவன் ஒருவன் கூவினான். அச்சொல் அவன் உதடசைவுகளிலிருந்தே எழுந்து பரவியது.

கொம்போசை ஜயத்ரதன் வருவதை அறிவித்தது. சாத்யகி திரும்பி நோக்கியபோது தலைக்குமேல் எழுந்த நெடுவில்லும் நீளம்புகள் எழுந்து பறந்த தேருமாக ஜயத்ரதன் அவனை நோக்கி வந்தான். அவன் கவசம் மங்கும் ஒளியில் செம்மைகொண்டு மின்னியது. அவன் எய்த முதல் அம்பால் சாத்யகியின் கொடிமரம் முறிந்தது. அவன் நெஞ்சக்கவசம் உடைந்தது. ஜயத்ரதன் ஆணவத்துடன் நகைத்தபடி “ஓடு… ஓடு, கீழ்மகனே! ஷத்ரியர்களுக்கு எதிர்நிற்காதே!” என்றான். ஜயத்ரதனை சாத்யகி அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவன் அம்புகள் ஜயத்ரதனின் தோள்கவசம் விலகிய இடைவெளிகளில் தைத்தன. பிறிதொரு அம்பு ஜயத்ரதனின் கழுத்தை நோக்கி வர அவன் சுழன்று அதை ஒழிந்தான்.

ஜயத்ரதன் அஞ்சிவிட்டான் என பேய்கொண்டதுபோல் துள்ளிக்கொண்டிருந்த அவன் வில் நிலைத்ததிலிருந்து தெரிந்தது. சாத்யகி தயங்காமல் அம்புகளை ஏவியபடி மேலும் மேலுமென முன்னால் சென்றான். அந்த விசை ஜயத்ரதனை மேலும் அஞ்சவைத்தது. அவ்வச்சம் அவன் வில்லை தயங்கவைக்க சாத்யகியின் அம்புகள் அவன் கவசங்களின் இடைவெளிகளில் தைத்தன. தொடையில் அம்புபட்டு அவன் தேர்த்தட்டில் விழுந்தான். மேலுமொரு அம்பிலிருந்து தப்ப புரண்டு தேரிலிருந்து பின்னால் குதித்தான். அவன் தேரோட்டி தலையறுந்து விழுந்தான். ஜயத்ரதன் பின்னால் வந்த தேரில் கையூன்றி பாய்ந்தேறிக்கொள்ள அந்தத் தேர்வீரன் பின்னால் பாய்ந்து விலகினான். மேலும் அம்புகள் வந்து ஜயத்ரதனை அறைந்தன. அவன் ஒழிந்தாலும் அம்புகள் வஞ்சம் கொண்டு தேடிவந்தன. அவன் தன்னை காத்துகொள்ளவே திணறினான்.

தலைக்கவசம் உடைந்து விழ ஓர் அம்பு ஜயத்ரதன் காதை அறுத்துச்சென்றது. கழுத்தை சீவ வந்த அம்பை தலைதிருப்பி ஒழிந்த ஜயத்ரதன் பாய்ந்து நிலத்தில் இறங்கி பின்னால் நின்ற தேர்களுக்கு நடுவே ஓடி மறைந்தான். ஜயத்ரதனின் தோல்வி கௌரவப் படைகளில் வியப்பு முழக்கமாக வெளிப்பட்டது. அவனைக் காத்து முன்னால் வந்த தேர்வீரர்கள் அம்பால் அறைபட்டு வீழ்ந்தனர். ஒருவனின் தலை தெறித்து மிக அப்பால் சென்று விழ கௌரவ வீரர்கள் சேர்ந்து அலறினர். “ஜயத்ரதரை துணைசெய்க! சைந்தவரைச் சூழ்ந்து காத்துக்கொள்க!” என முழவுகள் ஓசையிடலாயின.சாத்யகி ஊளையிட்டு ஏளன ஒலி எழுப்பியபடி ஜயத்ரதனை தேடித் தேடி அம்புகளை தொடுத்தான்

படையை திரையென கிழித்துக்கொண்டு எழுபவன்போல அப்பால் ஒரு தேரில் ஜயத்ரதன் தோன்றினான். சாத்யகியை நோக்கி உரக்க கூச்சலிட்டு அழைத்து தன் கையிலிருந்த கவசம் ஒன்றை தூக்கிக் காட்டினான். “யாதவக் கீழ்மகனே, இதோ இது உன் சிறுமைந்தனின் நெஞ்சக்கவசம்… அவன் நெஞ்சை கிழித்ததுபோல் உன் நெஞ்சையும் கிழிப்போம்.” சாத்யகியின் கையிலிருந்து வில் நழுவியது. அவனுள் எழுந்த முதல் எண்ணம் தன் பின்னால் சினி காப்புடன் இருக்கிறானா என்பது. மறுஎண்ணம் அலையென வந்து அறைந்தது. அவன் உடலின் அனைத்துத் தசைகளும் விசையிழக்க வலிப்புகொண்டு தேர்த்தட்டில் விழுந்தான். ஜயத்ரதன் தன் வில்லை எடுத்து அம்பு தொடுத்து அவன் மேல் எய்தபோது பாகன் தேரை எதிரிலிருந்த கவிழ்ந்த தேர்மேல் ஓட்டித் திருப்பி அதை கவிழச்செய்தான். கவிழ்ந்த தேருக்குப் பின்னால் சாத்யகி உடல் தளர்ந்து கிடக்க அம்புகள் வந்து தேர்த்தட்டில் அறைந்தன. பாகன் கழுத்தறுபட்டு மறுபக்கம் விழுந்தான். புரவிகள் அம்புபட்டு அலறியபடி சாத்யகியின் மேலேயே விழுந்தன.

பாண்டவப் படை தன் முன்னாலிருந்த கேடயத் தேர்நிரையை உடைத்துத் திறந்து முன்னால் வந்தது. அவர்கள் சேர்ந்து எய்த அம்புகளின் பெருக்கால் ஜயத்ரதனும் கௌரவப் படையினரும் பின்னடைந்தனர். சாத்யகியை அவனுக்குப் பின்னால் வந்த தேரிலிருந்த காப்புப்படை வீரர்கள் கொக்கிக்கயிற்றை வீசி அவன் கவசத்தில் தொடுத்து இழுத்து பின்னெடுத்தனர். அவன் தேர்களில் உடல் முட்டிச் சுழன்று நினைவுமீண்டான். நீர்ப்பெருக்கு ஒன்றில் அடித்துச் செல்லப்பட்டுக்கொண்டிருப்பதாக உணர்ந்தான். தேரிலேறிக்கொண்டபோது அவன் பற்கள் ஒன்றுடன் ஒன்று உரசி கூசின. ஒரு விழி கலங்கி துடித்துக்கொண்டிருக்க கண்ணீர் வழிந்தது. காது அடைத்து போர்க்களம் முழுக்க விந்தையானதோர் மூடுபனி பரவியதுபோல் தோன்றியது. அனைத்து ஓசைகளும் கார்வை கொண்டன. உலோகக் கிழிபடல்போல் ஒரு மூளலோசை எழுந்து அனைத்து ஒலிகளையும் தன்னுள் தொடுத்துக்கொண்டு உடல் கூச தசைகள் சொடுக்கி அதிர அங்கு சூழ்ந்திருந்தது.

“கொண்டு செல்க! யாதவரை பின் கொண்டு செல்க!” என்று படைத்தலைவன் ஒருவன் சொன்னான். ஆணைகள் முழவொலியாக எழுந்தன. சாத்யகி தேர்த்தட்டில் கையூன்றி எழுந்தமர்ந்தான். தன் தோளில் இருந்து கவசத்தை விலக்கி ஆழ்ந்த புண்ணை தொட்டுப் பார்த்தான். ஒரு விரல் உள்ளே நுழையும்படி இருந்த துளையில் குருதி குமிழிகளாக எழுந்தது. ஆனால் அழுத்தி நோக்கியபோது வலிக்கவில்லை. ஏதோ ஒன்று அவனுள் குடியேறி எழுந்ததுபோல அவன் “போர்முனைக்கு! மீண்டும் போர்முனைக்கு!” என்றபடி எழுந்தான். நீர் நிறைந்த கலமென அவன் உடல் ததும்பியது. அத்தேரின் பாகன் “போதும் யாதவரே, மேலும் களம் செல்வது நன்றல்ல” என்றான். “நான் களத்திலிருந்து மீள விரும்பவில்லை. செல்க! களம்முன் செல்க!” என்று அவன் கூவினான்.

பாகன் “தங்களை மீளக் கொண்டுசெல்லும்படி ஆணை” என்றான். “என் கடன் போரை நிகழ்த்துவதே” என்றான் சாத்யகி. “என் ஆணையை தலைக்கொள்வதே உன் கடமை” என்று சொல்லி வில்லை எடுத்தான். “யாதவரே!” என பாகன் அழைக்க “உன் ஆளுகைக்குள் நான் இல்லை. முன்செல்க!” என்று சாத்யகி ஆணையிட்டான். தேர்ப்பாகன் சில கணங்களுக்குப் பின் சவுக்கால் புரவிகளைச் சுண்டி தேரை முன்னால் செலுத்தினான். பாண்டவப் படையின் முகப்பில் கேடயநிரைக்கு அப்பாலிருந்து அம்புகள் வந்து முட்டி வீழ்ந்துகொண்டிருந்தன. அவனுக்கு அருகே நின்ற இரு வீரர்கள் அம்புபட்டு அலறி விழுந்தனர்.

அவன் கேடயப்படையை அணுகி “படைவாயில் திறக்கட்டும்!” என ஆணையிட்டான். அவ்விரிசலினூடாக அவனுடைய தேர் முன்னால் சென்றது. அம்பெடுத்து இழுத்து தொடுத்தபோது கைகள் நடுங்கின. முதல் வீரனை குறிவைத்து எய்த அம்பு அப்பால் எங்கோ சென்றது. ஓங்கி தேர்த்தட்டை மிதித்து வெறிக்கூச்சலிட்டபடி அடுத்த அம்பை எடுத்து அதே விசையில் எய்து அவனை வீழ்த்தினான். “என் விசை குறையவில்லை! என் உள்ளிருந்து எஞ்சிய உயிரனைத்தையும் விசையாக்குவேன். இன்று எரிந்தமைக என் உடல்! எரிந்தமைக என் உளம்! செல்க! செல்க!”

அம்பை இழுத்துச் செலுத்தும்போது ஒவ்வொரு முறையும் முழுதுடலும் தன் கைகளினூடாக நாணில் எழுந்தமைந்து விடுபட அவனில் ஒரு பகுதியென எழுந்து சீற்றத்துடன் உறுமலோசை எழுப்பி சென்று தைத்து நின்றது. ஆனால் அவை பெரும்பாலும் குறிதவறின. அவற்றில் வெறும் விசை மட்டுமே இருந்தது. அவன் கற்றவை, பயின்றவை அனைத்தும் முற்றாகவே கைகளிலிருந்தும் கண்களிலிருந்தும் அகன்றுவிட்டிருந்தன. “உங்களால் நிற்க இயலவில்லை, யாதவரே” என்றான் பாகன். “செல்க, மூடா! செல்க!” என்று சாத்யகி கூவி மீண்டும் அம்புகளை எடுத்து தொடுத்தான். தேர் எதிலோ ஏறியிறங்க அவன் தேர்த்தட்டில் விசையுடன் முட்டிக்கொண்டான்.

பிறிதொரு முறை தேர் திரும்பியபோது சங்குகளும் முழவுகளும் ஒலிக்க அவன் தன் எதிரே பீஷ்மரை கண்டான். வில் செயலிழக்க மெய்மறந்தவன்போல அவரை பார்த்துக்கொண்டிருந்தான். சாயும் வெயிலொளியில் கவசங்கள் ஒளிர, அம்புகள் பொறிகளெனக் கிளம்ப, விசையுடன் சுழலும் தேர்ச்சகடங்களால் அவர் சாணைதீட்டப்படும் வாளெனத் தோன்றினார். அப்போர்க்களத்திற்கு மிக அப்பால் எங்கோ இருப்பவர்போல நீரில் பாசிச்சரடுகள் என அலைகொள்ளும் நீண்ட கைகளுடன் உலைந்தாடிக்கொண்டிருந்தார். மறுகணம் சாத்யகி “பிதாமகரை நோக்கி செல்க! பிதாமகரை நோக்கி செல்க!” என்று கூவினான். அவன் தேர் திரும்பி அணைந்தபோது அவன் நிழல் நீண்டு பீஷ்மர்மேல் விழுந்தது. அக்கணம் பிதாமகர் அவனை பார்த்தார். சாத்யகி அவரை நோக்கி அம்புகளை எய்தபடி முன்னால் சென்றான்.

பாகன் “பிதாமகரின் அம்புவளையத்திற்குள் நுழையவிருக்கிறோம், யாதவரே” என்றான். வானில் மெல்லிய மின்னல் ஒன்று துடித்தணைந்தது. இடியோசை எழுந்து உருண்டு உருண்டு அகன்றது. அதில் பீஷ்மரின் உருவம் நடுங்கியமைவதை அவன் கண்டான். “செல்க!” என்று சாத்யகி கனவிலென ஆணையிட்டான். அவன் தொடுத்த அம்புகள் பீஷ்மரின் உடல் அருகே சென்று இறங்கின. அவர் கவசங்களில் உரசி அப்பால் சென்றன. பீஷ்மர் அவனை பார்த்தபோது அவர் முகம் எதிர்வெயிலில் தாடியின் மயிர்க்கற்றைகள் தழல்களெனத் தெரிய கனன்றுகொண்டிருந்தது.

அவருடைய முதல் அம்பு அவன் கவசத்தில் பாய்ந்தது. இரண்டாவது அம்பு அதை உடைத்தது. அவன் கால் வளைத்து தேர்த்தட்டில் அமர அவன் தலைக்கவசத்தை உடைத்து தெறிக்க வைத்தது அடுத்த அம்பு. “பின்னடைவோம், யாதவரே! தன்னந்தனியாக பிதாமகர் முன் நிலைகொள்வது எளிதல்ல” என்று பாகன் கூவினான். “செல்க! செல்க!” என்று கூவியபடி அவனை உதைத்தான் சாத்யகி. மீண்டும் இரு அம்புகள் வந்து அவன் உடலை அறைந்தன. அவன் உடல் வெந்து காந்தத்தொடங்கியது. பிதாமகர் தழல்விட்டு எரிந்தாடுவதை அவன் கண்டான். அவருடைய தேரும் புரவிகளும் தழல்விட்டெரிந்தன. அவரைச் சூழ்ந்திருந்த வெளியில் தீ பரவியது. அத்தனை தேர்களும் எரிந்தெழுந்தன. அவன் திகைப்புடன் சூழ நோக்கியபோது மாபெரும் காட்டெரி என அங்கே மொத்தப் படையும் பற்றி எரிந்து புகையும் செந்தழலுமாக கொந்தளித்துக்கொண்டிருக்கக் கண்டான்.

பிதாமகர் உதடுகளை இறுக்கி விழிகூர்ந்து அம்பறாத்தூணியிலிருந்து பிறை அம்பை எடுப்பதை அவன் கண்டான். தன் வில்லைத் தாழ்த்தி நிமிர்ந்து வெறுமனே நோக்கியபடி நின்றான். அக்கணம் தேர்ப்பாகன் அமரநுகத்தில் எழுந்து இரு கைகளையும் விரித்து “பிதாமகரே, அவர் மைந்தரை இழந்து நிலைகுலைந்திருக்கிறார்!” என்று கூவினான். பீஷ்மர் “அவ்வண்ணமெனில் போர்முனைக்கு அவர் வந்திருக்கலாகாது, அறிவிலி” என்றபடி பிறையம்பை இழுத்து அவன் மேல் செலுத்தினார். பாகன் அதை தான் வாங்கிக்கொண்டு தலை அறுபட்டு கீழே விழுந்தான். அவன் தலை நுகத்திலிருந்து மண்ணில் உதிர உடல் சாத்யகியின் காலடியில் கிடந்து துடித்தது. மின் துடித்தணைய முகில்கள் உறுமின.

முற்றிலும் செயலிழந்து அவன் பீஷ்மரை நோக்கிக்கொண்டிருந்தான். பீஷ்மர் பிறிதொரு பிறையம்பை எடுத்து நாணில் பொருத்தி முழுவிசையுடன் இழுத்தார். அவர் உடலில் மெல்லிய விதிர்ப்பொன்று எழ பக்கவாட்டில் அவர் உடல் சற்றே சாய்ந்தது. தேர்ச்சகடம் கல்லிலோ பிற உடல்களிலோ ஏறி அதிர்வு அடைந்ததுபோலத் தோன்றியது. பிறையம்பு அவனை உறுமியபடி கடந்துசெல்ல வானிலிருந்து மழை பெரிய கூழாங்கற்கள்போல நிலத்தை அறையத் தொடங்கியது. வலுவான சாய்கோடுகளாக மழைத்துளிகள் செல்வதை அவன் நோக்கிக்கொண்டு நின்றான். அனல் முற்றணைய உடலில் நீர்த்துளிகள் அறைந்து சிதறி வழிந்தன.

பீஷ்மர் தன் வில்லைத் தாழ்த்தி அவனை கூர்ந்து நோக்கியபடி நின்றார். அவர் உடலின் குருதிப்படிவுகளை கரைத்தபடி மழைநீர் வழிந்தது. போரின் விசையை மழை நிறுத்தியது. ஆங்காங்கே வீரர்கள் படைக்கலம் தாழ்த்தினர். படைக்கலம் உயிரிழந்தபோது முன்னால் நின்ற எதிரியை அப்போதுதான் அறிபவர்கள்போல உணர்ந்து திகைத்தனர். என்ன செய்துகொண்டிருக்கிறோம் என குழம்பியவர்கள்போல ஒருவரை ஒருவர் நோக்கி உடல் தத்தளித்தனர். பீஷ்மர் தன் தேரை திருப்ப ஆணையிட்டார். அவர் திரும்பியதும் அவரைச் சூழ்ந்திருந்தவர்களும் திரும்பினர். அவ்வசைவு அத்தனை பேருக்கும் தெரிய அனைவரும் போர்முகப்பிலிருந்து பிரிந்து விலகத் தொடங்கினர். துணி கிழிபடுவதுபோல பிசிறுகளுடன் இரு படைகளும் ஒன்றை ஒன்று அகன்றன. அவ்விரிசல் விரிந்தகன்றபடியே சென்றது.

மழை நின்றுவிட்டிருந்தது. புதுக் குருதி என மழைகரைத்த செந்நீர் வழிய கைவிரல்களை உதறிக்கொண்டும் தலைமயிரை கோதிக்கொண்டும் வீரர்கள் பின்னடைந்தனர். என்ன நிகழ்கிறது என்று உணர்ந்தும் எதுவும் செய்யாமல் படைத்தலைவர்கள் செயலற்று நின்றனர். ஒவ்வொருவரும் வேறெங்கிருந்தோ ஓர் ஆணை வரவேண்டுமென எதிர்பார்த்தனர். ஆனால் அனைத்து முரசுகளும் முழவுகளும் கொம்புகளும் ஓய்ந்திருந்தன. சாத்யகி அசையாமல் தேரில் நின்றிருக்க அவனுக்குப் பின்னால் வந்த இரு வீரர்கள் அவன் கைகளைப்பற்றி பின்னால் அழைத்துச்சென்றனர். துயிலில் நடப்பவன்போல அவன் அவர்களுடன் சென்றான்.

மழையில் நனைந்த முரசு ஒன்று அந்தியெழுவதை அறிவித்து முழங்கியது. தொடர்ந்து முரசுகளும் கொம்புகளும் போர்முடிவை அறிவித்து ஓசையிடலாயின.