திசைதேர் வெள்ளம் - 38
அசங்கன் போர்முகப்பை அதற்கு முன்னால் பார்த்திருக்கவில்லை. அதைப் பற்றிய அத்தனை சொற்றொடர்களும் ஒப்புமைகளாகவே இருந்தன. எவரும் அதற்கு நிகரென ஒன்றை முன்பு அறிந்திருக்கவில்லை. ஆகவே அறிந்தவற்றைக்கொண்டு அதை சொன்னார்கள். அலையோடு அலை எனும் சொல்லாட்சி மீள மீள எழுந்தது. உடல்பின்னிக்கொள்ளும் பெருநாகங்கள். மழையை அறையும் காற்று. அவனுக்கு கைத்தறியில் சட்டம் ஓடுகையில் ஊடும்பாவும் மாறிமாறி கலந்து பின்னுவதைப்போல தோன்றியது. இரு படைகளின் ஆடைவண்ணங்களும் கலந்துகுழம்ப விசையில் தலைதிருப்பியபோது புதிய வண்ணம் ஒன்று விழிக்கு தென்பட்டது.
போர்முனையில் அத்தனைபேரும் பித்துகொண்டிருந்தனர். பித்தில்லாமல் அங்கே நின்றிருக்கவே இயலாது என்று தோன்றியது. இளையோர் அஞ்சியிருப்பார்கள் என நினைத்து திரும்பி நோக்கினான். சினி குனிந்து தன் கவசத்தின் கீழ்நுனியை கட்டியிருந்த தோல்நாடாவை இழுத்து இழுத்துவிட்டபடியே வருவதைக் கண்டதும் எரிச்சல் எழுந்தது. கையை எடு அறிவிலி என உள்ளத்துள் சொன்னதுமே அது களம் என நினைவெழுந்தது. அவன் நெஞ்சு மீண்டும் படபடக்கத் தொடங்கியது.
அரசரின் இளையவர் சத்யஜித்தின் தலைமையில் பாஞ்சாலப் படை முன்னெழுந்துகொண்டிருந்தது. தன் தேர் ஏறியிறங்கும் ஒவ்வொரு முழையும் வீழ்ந்த வீரனின் உடல் என்ற எண்ணம் அவன் உடலை கூசச் செய்தது. வில்வளைத்து அம்புகளை தொடுத்தபடி செல்கையில் அவன் அகம் அங்கிருந்து விலகிச்சென்றுவிட ஏங்கியது. முழவுகள் ஆணையிட்டுக்கொண்டே இருந்தன. மிகத் தொலைவில் கொம்போசை எழுந்தது. அருகே சென்ற தேரிலிருந்த பாஞ்சால வீரன் “பாஞ்சால இளவரசர் விண்புகுக! வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவியபடி செல்ல அவன் திரும்பி தன் தேர்வலனிடம் “வீழ்ந்தது யார்?” என்றான்.
“இளவரசர் சித்ரகேது” என்றான் தேர்வலன். மீண்டுமொரு கொம்பொலி எழ “யார்? அது யார்?” என்றான் அசங்கன். “இளவரசர் விரிகர்” என்று அவன் சொன்னான். அடுத்த கொம்பொலியை கேட்டதும் அவனே “இளவரசர் யுதாமன்யு” என்றான். அசங்கன் தன் நெஞ்சின் அழுத்தத்தை உணர்ந்தான். மிகத் தொலைவில் சத்யஜித்தின் ஆணை எழுந்தது. தன் பெயர் அதில் சொல்லப்பட்டதை உணர்ந்து அசங்கன் “என்ன? என்ன ஆணை அது?” என்றான். தேர்வலன் “ஆணையை புரிந்துகொள்ள என்னால் இயலாது, இளவரசே” என்றான். மீண்டும் மீண்டும் முழவொலி எழுந்தது.
பாஞ்சால இளவரசன் பிரியதர்சன் தேரில் அசங்கனை நோக்கி வந்தான். இளவெயிலில் அவனுடைய தேரைச் சூழ்ந்து மேயும் பசுவின்மேல் பூச்சிகள்போல அம்புகள் பறந்தன. “யாதவமைந்தரே, தங்கள் தந்தை வெறிகொண்டு தாக்கி முன்சென்றுகொண்டிருக்கிறார். அவரைச் சூழ்ந்து பின்னரண் அமைத்து சென்றுகொண்டிருக்கிறது நமது படைப்பிரிவு…” என்றான். “தந்தையை துணைகொள்ளும்படி தங்களுக்கு ஆணை. பாஞ்சாலப் படையை மூன்று திசையிலும் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். நானும் துவஜசேனனும் மறு எல்லையை காக்கிறோம்” என்றபடி அப்பால் சென்றான்.
“தந்தையை துணை கொள்க! தந்தையை துணை கொள்க!” என்று அசங்கன் கையசைத்து தன் தம்பியருக்கு ஆணையிட்டான். அவனுடைய படை சிறிய அலைபோல் களத்தில் நகர்ந்து சென்றது. செல்லும் வழியில் வீழ்ந்த தேர்களையும் யானைகளையும் முட்டி பிரிந்து இணைந்து ஒழுகியது. நெடுந்தொலைவில் வேல் வடிவில் குவிந்து கௌரவப் படைகளுக்குள் நுழைந்திருந்த சாத்யகியின் அணுக்கப் படையுடன் அது இணைந்தது. சாத்யகி எதையுமே நோக்காதவனாக சென்றுகொண்டிருக்க அவனுடைய அணுக்கப்படை தேர்கள் உடைந்தும், புரவிகள் வீழ்ந்தும் சிதறிப்பரந்திருந்தது. அசங்கனின் படை வந்து இணைந்ததும் அது மீண்டும் உருத்திரட்டிக்கொண்டது.
எதிரில் வந்துகொண்டிருந்த அம்புகளின் தாக்குதலால் சாத்யகியை தொடர்ந்து சென்ற வில்லவர் அணி தளர்ந்து பின்நின்றுவிட அவன் மட்டும் மேலும் முன்னகர்ந்துவிட்டிருந்தான். அவனுடைய அணுக்கப்படைகளுக்கும் பாண்டவர்களின் மையப்படைகளுக்கும் நடுவே இடைவெளி விழுந்துவிட்டிருப்பதை கண்ட அசங்கன் “தந்தைக்கு பின்வெளியை நிரப்புக! இடைவெளி அமையலாகாது! தந்தைக்கு பின்வெளியை முற்றிலும் நிரப்புக!” என்று ஆணையிட்டபடி தேர்களை நீள்ஒழுக்கென மாற்றி பிற வில்லவர்களின் நடுவினூடாகச் சென்று சாத்யகியின் பின்நிரையை தானே அமைத்தான். தன்னைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த இளையோரிடம் “நமது பணி தந்தையை அவர்கள் சூழ்ந்துகொள்ளாமல் தடுப்பது மட்டுமே. இருபுறமும் வருபவர்களை அம்புகளால் தடுத்து நிறுத்துங்கள்” என்றான்.
இளையோர் போர்முகப்பு அளித்த திகைப்பிலிருந்து அப்போதுதான் வெளிவந்தனர். விசைதிரட்டி அம்புகளை ஏவியபடி தேரில் முன்சென்றனர். ஆனால் அலையடித்தும் முட்டித்தள்ளாடியும் ஓடிய தேரிலிருந்து அவர்கள் எய்த அம்புகள் எவையும் இலக்கடையவில்லை. “இலக்கு நோக்கவேண்டாம். அம்புகள் திரையென எழுந்து நிற்கட்டும்” என்று அசங்கன் ஆணையிட்டான். தொடர்ந்தெழுந்த அவர்களின் அம்புகளால் சாத்யகியை வளைத்துக்கொள்ள முற்பட்ட கௌரவர்களின் படைகள் தயங்கின. அவர்களில் சிலருடைய புரவிகள் அம்புபட்டு கனைத்தபடி பின்னடைந்தன.
பால்ஹிக அரசுகளின் படைகளை சலன் தலைமைதாங்கி நடத்தினான். பூரிசிரவஸின் மைந்தர்கள் யூபகேதனனும் யூபகேதுவும் பிரதீபனும் பிரஜன்யனும் தங்கள் இளையோர் சூழ பாஞ்சாலத்து அணுக்கப்படையினரை எதிர்த்து அம்புகளை பெய்துகொண்டிருந்தனர். அருகே சலனின் மைந்தர்களான சுசரிதனும் சுதேவனும் வில்லேந்தி நின்று போரிட்டுக்கொண்டிருந்தனர். சாத்யகியை துச்சலனும் துர்முகனும் நேர்நின்று எதிர்க்க இருபுறமும் துச்சகனும் சமனும் சகனும் விந்தனும் அனுவிந்தனும் சுபாகுவும் முன்னிற்க கௌரவர் முழுமையாகச் சூழ்ந்து தாக்கினர். அவர்கள் அனைவரையும் அம்புகளால் தடுத்தபடி சாத்யகி படைமுகப்பில் வீசப்படும் பந்தத்தின் சுடர் என பறந்து நின்றிருந்தான்.
பூரிசிரவஸ் பின்னடைந்ததனால் உருவான விரிசலினூடாக கௌரவப் படைக்குள் சாத்யகி தன்னை புகுத்திக்கொண்டு மேலும் மேலுமென முன்சென்றான். அவர்கள் அவனை சூழ்ந்துகொள்ள முயல அசங்கனும் இளையோரும் அவர்களை அம்புகளால் தடுத்தனர். சலன் தன் மைந்தர்களை நோக்கி “இந்த யாதவ இளையோர் ஆற்றலற்றவர்கள். அஞ்சவேண்டியதில்லை, அம்பெல்லைக்குள் புகுந்து யாதவரை சூழ்ந்துகொள்க!” என்றான். அவர்கள் கூச்சலிட்டபடி அம்புகளை ஏவிக்கொண்டு சவுக்கு நெளிவதுபோல படைவிளிம்பு அசைய முன்னால் வந்தனர். அசங்கன் திரும்பி பாஞ்சாலப் படைகளை நோக்கி “தொடர்க! எங்களை தொடர்க!” என்று கூவியபடி அவர்களை தடுத்தான்.
தன்னைச் சூழ்ந்து பறக்கும் அம்புகளின் ஓசை அசங்கனை திகைக்கச் செய்தது. செவியருகே விம்மிய அம்பு ஒன்று அவனை அதிர்ந்து நிற்கவைக்க அடுத்த கணம் அவன் உடலை ஒரு பேரம்பு அறைந்து கவசத்தை தெறிக்க வைத்தது. பிறிதொரு அம்பு அவன் தலைக்கவசத்தை உடைத்தது. தரையில் அமர்ந்து காவலனிடம் கவசத்தை வாங்கி அணிந்துகொண்டிருக்கையிலேயே இன்னொரு அம்பு வந்து அவன் விலாவில் கவசத்தின் இடைவெளியில் தைத்து நின்றது. உடலில் அனல்பட்டதுபோல் எரிச்சலை அவன் உணர்ந்தான். “தேர்த்தட்டில் படுத்துக்கொள்ளுங்கள், இளவரசே” என்று தேர்வலன் கூவினான். அவன் ஒருக்களித்துப் படுக்க தேர்வலன் கவசத்தை அளித்தான். உடைந்த கவசத்தின் குமிழிக்குழிகளில் தன் குருதி நிறைந்து வழிவதை அசங்கன் பார்த்தான். அவன் தேர்த்தட்டில் மேலும் அம்புகள் வந்து குத்தி நின்றன.
சாத்யகி திரும்பி அசங்கனை நோக்கி அம்புதொடுத்து முன்னேறிய சலனைக் கண்டு சீற்றத்துடன் வசைகூவியபடி அம்புகளை தொடுத்துக்கொண்டு தேரில் அணுகி வந்தான். சாத்யகியைச் சூழ்ந்திருந்த கௌரவர்கள் துரத்துபவர்கள்போல அவனுக்குப் பின்னால் வந்தனர். சாத்யகியின் விரைவுகண்டு சலன் அஞ்சி பின்னடைய “பால்ஹிகரே, இதுவே உமது விண்தருணம்!” என்று கூவியபடி சாத்யகி அம்புகளை தொடுத்துக்கொண்டே முன்னால் சென்றான். பால்ஹிகர்கள் மேலும் மேலும் வளைந்து பின்னடைந்தனர். அவ்விசையில் சாத்யகி மீண்டும் தன் பின்னணி காவல்படையிலிருந்து அகன்றான். அவனை மீண்டும் கௌரவர் சூழ்ந்துகொண்டனர்.
தேரில் எழுந்து வில்லை கையில் எடுத்துக்கொண்டு “தந்தையின் பின்நிலை ஒழிந்துள்ளது! முன்செல்க! முன்செல்க!” என்று ஆணையிட்டபடி அசங்கன் சாத்யகியின் பின்வெளியை நிரப்பும் பொருட்டு அம்புகளை எய்தபடி முன்னால் சென்றான். எதிர்பாராத கணம் சாத்யகி தன் தேரிலிருந்து பாய்ந்து புரவிமேல் தாவி, முன்னால் நின்ற பிறிதொரு தேரிலேறி, அம்பின் தொடுவட்டத்தைக் கடந்து கௌரவர்களை அணுகி அதே விசையில் கையிலிருந்த நீண்ட வேலால் ஓங்கி எறிந்து சலனின் மைந்தன் சுசரிதனை தேர்த்தட்டில் வீழ்த்தினான். சலன் திகைத்து நிற்க தன் தோளிலிருந்து எடுத்த குறுவேலால் அவனை அறைந்தான்.
சலனின் மார்புக்கவசம் உடைந்து தெறிக்க, பயின்ற உடல் வாழையிலையென பக்கவாட்டில் சரிந்து நெஞ்சுபிளக்க வந்த அடுத்த வேலின் விசையை ஒழிந்தது. பின்னால் நின்ற காவலர்கள் சலனை நோக்கி கொக்கியை வீசி அவனை கவ்வி எடுத்து சுண்டி பின்னிழுத்து படைகளுக்குள் கொண்டுசென்றனர். தேர்த்தட்டிலிருந்து உருண்டு கீழே விழுந்த சுசரிதன் துடித்துக்கொண்டிருக்க அவன் மேல் உருண்டு சென்றது ஒரு தேர். பால்ஹிகப் படையினர் அக்காட்சியால் திகைத்து பின்னகர வெறியுடன் கைவேலைத் தூக்கி போர்க்கூச்சல் எழுப்பியபடி சாத்யகி பாய்ந்து மீண்டும் தன் தேரில் ஏறிக்கொண்டான். தன் மைந்தரை நோக்கி திரும்பி “தொடர்ந்து வருக! பின்தொடர்க!” என்று ஆணையிட்டபடி பால்ஹிக படைகளுக்குள் தன் தேரை நுழைத்தான்.
சாத்யகியின் அம்புகள் சென்று தாக்க பால்ஹிக படைத்தலைவன் கீர்த்திமான் விழுந்தான். பால்ஹிக குடித்தலைவர்கள் எழுவர் களம்பட்டனர். பால்ஹிகப் படை நைந்து அணி உடைந்து பின்னகரத் தொடங்கியது. பின்னிருந்து “பால்ஹிகர்களை துணைசெய்க! பால்ஹிகர் பின்னடைகிறார்கள்!” என்று முரசுகள் முழங்கத் தொடங்கின. அம்முரசொலியின் பொருள் புரியாவிடினும் பின்னணிப் படைகளுக்கான ஆணை என்பதை அசங்கன் உணர்ந்துகொண்டான். சாத்யகியை சூழ்ந்துகொண்ட கௌரவர்கள் வெறிக்கூச்சலிட்டபடி, சினத்தால் தேர்த்தட்டை அறைந்தபடி போரிட்டனர். தந்தையுடன் துணை நிற்க சிகண்டியோ வேறெவரோ வரக்கூடும் என்று அவன் எதிர்பார்த்தான். மிக அப்பால் சிகண்டி கௌரவர்களால் முற்றாக சூழப்பட்டிருந்தார். பிற எவரும் கண்களுக்கு படவில்லை.
இன்று தந்தையின் களவீழ்ச்சி நிகழுமோ என்று ஒருகணம் எண்ணம் ஓடியது அவனுள். இப்போது அவர் கொள்ளும் இந்தப் போர்வெறியும், சொல்லில் பெருகும் தகைகொண்ட பெருஞ்செயல்களும், களம்படுவதற்கு முந்தைய எருமைமறம்தானா? காவியங்கள் போரை எழுதுகின்றனவா, போர் காவியங்களை மீண்டும் நடிக்கிறதா? தந்தையின் பின்வெளியை மட்டும் முழுதாக காத்து நின்றிருக்கவேண்டும். இன்று நான் செய்யக்கூடுவது அது மட்டுமே. கைகளால் ஆணைகளை இட்டபடி அவன் சாத்யகியை தொடர்ந்து சென்றான். பெருமழைக் கதிர்கள் என அவன்மேல் அம்புகள் பொழிந்துகொண்டே இருக்க உடலைக்குனித்து தலைதாழ்த்தி எதையும் நோக்காமல் சென்றுகொண்டிருந்தான்.
அவர்களைத் தொடர்ந்து வந்த பாஞ்சால வில்லவர்களை அம்புகள் தடுத்தமையால் அவர்களால் விரைவுகொள்ள இயலவில்லை. தானும் உடன்பிறந்தாரும் தனித்து படைகளுக்குள் மிக ஊடுருவிவிட்டோமா என்ற ஐயத்தை அவன் அடைந்தான். நின்று உடன்பிறந்தார் அனைவரையும் பின்னிழுத்துக்கொள்ளச் செய்து முதன்மைப் படைகளுக்குள் முற்றிணைந்துகொள்வதே பாதுகாப்பானது. போர்பயிலாத இளையோரை இளவரசனை இழந்து வெறிகொண்டிருக்கும் பால்ஹிகப் படைகளுக்குள் கொண்டுசெல்வதென்பது அழிவுக்கு வழிவகுப்பது. ஆனால் அத்தருணத்தில் தந்தையை தனியாகவிட்டு பின்னகர்வதைக் குறித்து அவனால் எண்ண இயலவில்லை. அவன் உளத்தயக்கம் எதையும் அறிந்திராததுபோல் அவன் கை “முன்னகர்க! மேலும் முன்னகர்க!” என்று தம்பியருக்கு ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தது.
கௌரவப் படைகளுக்குள் சங்கொலிகள் எழ அச்சத்தாலா வியப்பாலா என்றறியாமல் மெய்ப்பு கொண்டு உச்சமடைந்த உடலுடன் அசங்கன் கூர்ந்து நோக்கினான். இருபுறமும் படைகளைப் பிளந்தபடி அஸ்வத்தாமனும் ஜயத்ரதனும் களத்தில் தோன்றினர். அவர்களின் அணுக்க வீரர்கள் வெறிக்குரல் எழுப்பியபடி அம்புகள் எய்து சாத்யகியை இருபுறமும் நெருங்கி வந்தனர். சாத்யகியால் பின்னுக்குத் தள்ளப்பட்ட கௌரவர்கள் புதுவிசை கொண்டு அம்புகளைத் தொடுத்தபடி மீண்டும் அணியொருங்கு கொண்டனர்.
தந்தை பின்னகரமுடியாதபடி சிக்கிக் கொண்டார் என்பதை அசங்கன் அறிந்தான். அவர்களிருவரையும் சேர்த்து எதிர்கொள்ளும் ஆற்றல் தந்தைக்கில்லை. அஸ்வத்தாமனை தனிப்போரில் சந்திப்பது அர்ஜுனனால் மட்டுமே இயல்வது. தந்தை எக்கணத்திலும் தன் தேரை பின்னிழுத்து மையப்படைக்குள் அமிழ்ந்துவிடுவார். அவருக்குப் பின்னால் அதற்கு வழியிருக்கவேண்டும். “பின்னகர்க! தந்தைக்கு பின்னால் வெளி விடுக!” என்று அவன் ஆணையிட்டான். ஆனால் இளையோர் மேலும் விசைகொண்டு முன்னகர்ந்து கொண்டிருந்தனர். ஆணையில் வந்த மாறுதலை அவர்கள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.
மூன்று முறை ஆணை எழுந்தும்கூட இளையவர்கள் சாத்யகியின் பின்வெளியை நிரப்பி நின்றிருப்பதை உணர்ந்த பின்னர்தான் அவர்களால் ஆணைகளை புரிந்துகொள்ள இயலவில்லை என்று அவனுக்கு தெரிந்தது. முன்னரே ஓர் ஆணை அவர்களுக்குள் சென்று பதிந்திருந்ததனால் முழவோசை மாற்றொன்றை உரைத்தபோதும் அவர்கள் அறிந்ததையே உளம் பற்றிக்கொண்டது. ரிஷபவனத்தின் மூன்றிலைக்கொடி பறந்த தேர்கள் அவனைச் சூழ்ந்து ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு ஆணிகள் உரச சுற்றிவந்தன. “விலகுக! விலகி பின்னடைக!” என்று அசங்கன் அவர்களுக்கு ஆணையிட்டான். சினி கவசத்தின் கீழிருந்த தோல்நாடாவை இழுத்துக்கொண்டிருப்பதை அவன் கண்டான். எரிச்சலுடன் கூச்சலிடுவதற்குள் அவன் காதுக்குள் உறுமியபடி அம்பு ஒன்று வந்து தேர்த்தூணில் தைத்தது.
சாத்யகி தன் அம்புகளால் அஸ்வத்தாமனையும் ஜயத்ரதனையும் எதிர்கொண்டு தடுத்தபடி கைகளை தூக்கினான். அவன் கவசங்கள் உடைத்து தெறித்தன. விலாவிலும் தொடையிலும் அம்பு தைத்தது. அவன் தேர்முகடும் கொடித்தூணும் உடைந்தன. கைகளை அசைத்து “பின்னகர்க! பின்னகர்க!” என்று அவன் ஆணையிட்டான். அசங்கன் ஜயத்ரதனின் பாகனை மட்டுமே இலக்காக்கி அம்புகளை செலுத்தியபடி “பின்னகர்க! பின்னகர்க!” என்று தன் கைவீசி ஆணையிட்டான். இரு முழவுகளும் மாறி மாறி ஆணையிட அவற்றை அறியாதவர்கள்போல் இளையோர் களத்தில் நின்று முட்டித் ததும்பினர். சினி முதலில் பின்னகர்வதற்கான ஆணையை உணர்ந்தான். அது அவனை குழப்ப தன் தேர்ப்பாகனிடம் வலப்பக்கமாக திரும்பும்படி காலால் தொட்டு ஆணையிட்டான். பாகன் புரவியை வலப்பக்கமாக திருப்ப முன்னால் விசையுடன் சென்று கொண்டிருந்த சாந்தனின் தேர் சென்று அத்தேரில் முட்டியது. இரு தேர்களும் ஒன்றையொன்று செறுத்து அசைவிழந்தன. அதில் பிற தேர்கள் சென்று முட்டின.
அசங்கன் தலையில் கைவைத்து ஓசையின்றி அலறினான். மேலும் மேலுமென இளையோர்களின் தேர்கள் ஒன்றையொன்று முட்டி குழம்பின. சாத்யகி தன் தேரிலிருந்து நீண்ட மூங்கில் கழியை எடுத்து ஊன்றி காற்றில் பறந்து நின்றிருந்த புரவியொன்றின் மேல் பாய்ந்து ஏறி அதை திருப்பி பாண்டவப் படை நோக்கி விரைந்தபடி “தேர்களை கைவிட்டு திரும்புக! தேர்களிலிருந்து புரவியின் மேலேறி பின்னடைக!” என்று ஆணையிட்டுக்கொண்டே சென்றான். அசங்கன் தன் தேரிலிருந்து பாய்ந்திறங்கி அங்கே நின்றிருந்த ஊர்வன் இல்லாத புரவியொன்றை அணுகி அதன் கடிவாளத்தைப்பற்றி பாய்ந்து ஏறிக்கொண்டான்.
அக்கணம் கௌரவப் படைகளுக்குள் இருந்து பிளந்து பீறிட்டெழுந்த பூரிசிரவஸ் விசைமிகுந்த தேரில் நின்றபடி வில்லிழுத்து அம்புகளால் இளையோரை அறைந்தான். என்ன நிகழவிருக்கிறது என்று அசங்கன் உணர்ந்து நெஞ்சுறைந்த கணம் சினியின் தலை வெட்டுண்டு தேர்த்தட்டில் விழுந்து தரையில் உதிர்ந்தது. அனைத்து எண்ணங்களும் அணைய அவன் வெற்றுவிழிகளுடன் நின்றான். சினியின் உடல் தேரில் கைவிரித்து தொங்கிக்கிடக்க சகடம் மீது குருதி வழிந்து தேர்த்தடத்தில் விழுந்தது. மேலும் விசையுடன் விம்மியபடி வந்த பூரிசிரவஸின் அம்புகள் பட்டு இளையோரின் தேர்கள் உடைந்து தெறித்தன. பாகன்கள் தலையறுபட்டு நுகத்தில் விழுந்தனர்.
பால்ஹிகப் படையிலிருந்து வெற்றிக்கூச்சல் எழுந்தது. அவர்கள் பூரிசிரவஸை சூழ்ந்துகொண்டு பாஞ்சாலர்கள் மேல் அம்புகளை ஏவினர். தேர்த்தட்டில் வில்லுடன் நின்ற சாந்தன் தன் நெஞ்சில் பட்ட அம்புடன் தேர்த்தட்டில் அமர அவன் கழுத்தில் நீளம்பு ஒன்று தைத்தது. உத்ஃபுதன் “பின்னடைக! அம்புவட்டத்தை விட்டு நீங்குக!” என்று கைவீசி தொண்டை புடைக்க கூவினான். அவன் கை பிறையம்பு ஒன்றால் சீவி எறியப்பட அவன் தேர்த்தூணில் சரிந்து முட்டிக்கொண்டான். அவன் தலையை இன்னொரு பிறையம்பு வெட்டி மண்ணில் உதிரச்செய்தது.
“தேரிலிருந்து பாய்ந்துவிடுக! பின்னடைக! தேரிலிருந்து இறங்குக! பரிதேர்க” என்று கூவியபடி அசங்கன் பூரிசிரவஸை நோக்கி பாய்ந்து சென்றான். பூரிசிரவஸ் பற்களைக் கடித்தபடி விழிகள் சுருங்கி கூர்கொண்டிருக்க கையில் வில்லும் அம்புமின்றி திகைத்து அசைவிழந்து நின்ற யாதவமைந்தர்களை நோக்கி அம்புகளை தொடுத்தான். சந்திரபானு நெஞ்சில் பாய்ந்த நீளம்பு மறுநுனி முதுகில் எழ மல்லாந்து தேர்த்தட்டில் விழுந்து கால்களை அறைந்துகொண்டு துடித்தான். அவன் கைவிரல்கள் விடுபட்டு அதிர வில் நழுவி கீழே விழுந்தது. அஞ்சி எழுந்த அவன் பாகனின் தலையை பால்ஹிகர்களின் அம்பு கொய்தது.
சபரனும் முக்தனும் தேரிலிருந்து பாய்ந்து இறங்கிவிட்டனர். சபரன் புரவியொன்றின் மேல் ஏறமுயன்றபோது அது அஞ்சியபடி சுழன்றது. அவன் பூரிசிரவஸின் அம்புபட்டு மல்லாந்து தரையில் விழ அடுத்த அம்பால் கழுத்தறுபட்ட புரவி அவன் மேல் விழுந்தது. முக்தன் திகைத்து வெறுங்கைகளை விரித்தபடி அசைவிலாது நின்றான். அரைக்கணம் அவனை நோக்கிய பூரிசிரவஸின் விழி மறுபக்கம் திரும்பியது. அதற்குள் அவன் கையிலிருந்து வந்த அம்பால் முக்தனின் தலை அறுபட்டு மார்பின் மேல் கவிழ்ந்து தொங்க உடல் நின்று ஆடி மறுபக்கம் சரிந்து விழுந்தது.
சித்ரன் பித்தன்போல் அசைவிலாது களத்தில் நின்றான். அசங்கன் “பின்னடைக! மூடா, பின்னடைக!” என்று கூவினான். ஆனால் படைகளுக்குரிய கையசைவையும் குழூக்குறிகளையும் மறந்து யாதவமொழியில் கூச்சலிட்டுக்கொண்டிருந்தான். அவ்வோசை சூழ்ந்திருந்த பெருமுழக்கத்தில் மறைந்தது. “பின்னடைக! பின்னடைக!” என்று அவன் நெஞ்சு உடையும்படி அலறினான். “அப்படியே மண்ணில் படுத்துக்கொள். உடைந்த தேருக்குப் பின் மறைந்துகொள்! அறிவிலி!” ஆனால் சித்ரன் நாகநோக்கால் ஈர்க்கப்படும் எலி என பூரிசிரவஸை நோக்கி மெல்லிய அடியெடுத்து வைத்து சென்றான். பூரிசிரவஸ் அம்பை இழுத்து அவன் நெஞ்சில் பாய்ச்ச ஓசையோ துடிப்போ இல்லாமல் நிலத்தில் சாய்ந்தான்.
அவனருகே நின்ற சாலன் என்ன நிகழ்கிறதென்றே புரியாதவனாக மண்டியிட்டு சித்ரனின் உடலை அள்ளினான். அவன் தலையைப் பற்றி தூக்கியபின் அவன் கையைப் பிடித்து எழுப்ப முயன்றான். பூரிசிரவஸ் பிறையம்பால் அவன் தலையை வெட்டினான். மிக அருகிலிருந்து வந்த அம்பின் விசையால் தலை துண்டாகி அப்பால் விழ அம்பு மேலும் கடந்து வந்து நிலத்தில் தைத்தது. சாலன் சித்ரனின் மேல் குப்புற விழுந்து உடலதிர்ந்தான். உயிரின் விசையால் அவன் இளையோனை இறுகக் கட்டிக்கொண்டான். அவனுடைய நீட்டிய வலக்கால் இழுபட்டு அதிர்ந்தது.
அசங்கன் சித்ராங்கதனை தேடினான். தனக்குப் பின்னால் தந்தையின் ஓலத்தை கேட்டான். “மைந்தா!” என அலறியபடி சாத்யகி புரவியொன்றில் பாய்ந்தேறி போர்முகப்பு நோக்கி வந்தான். ஆனால் பின்னடைந்துகொண்டிருந்த படைகளை காக்கும்பொருட்டு கவசப்படை ஊடேபுகுந்து அவனை போர்முகப்பிலிருந்து அகற்றியது. அசங்கன் சித்ராங்கதன் ஒரு தேர்த்தட்டின் பின்னால் நின்றிருப்பதை கண்டான். அங்கிருந்து அவன் அலறி அழுதபடி சித்ரனின் உடல் நோக்கி செல்ல அவன் தலையை வெட்டி சரித்திட்டது பூரிசிரவஸின் வாளி. அவன் உடல் விசைஅழியாது மேலும் ஓடி குப்புற மண்ணில் விழுந்து அணைத்துக்கொள்வதுபோல் கைவிரித்துக் கிடந்து அதிர்ந்தது.
அசங்கன் ஒற்றை விழியோட்டலில் களத்தில் குருதி சிதறி நெளிந்துகொண்டிருந்த தன் இளையோரை பார்த்தான். எதிரில் விசைகொண்டு வந்த தேரில் வெறிமிக்க முகத்துடன் வில்லேந்தி நின்ற பூரிசிரவஸை கண்டான். அவன் உள்ளத்தில் அனைத்து எண்ணங்களும் வடிய உடல் துயிலிலென ஓய்வு கொண்டது. விரைவிலாது தன் புரவி மேல் கையூன்றி நிலத்தில் இறங்கி இரு கைகளையும் விரித்தபடி அவன் பூரிசிரவஸின் அம்புகளை நோக்கி சென்றான். அவன் நெஞ்சிலொரு நீளம்பு பாய்ந்தது. மூச்சு அதிர அவன் வாய் திறந்தபோது இன்னொரு பேரம்பு அவன் நெஞ்சைத் துளைத்து மறுபக்கம் நுனி நீட்ட அவன் கால் தளர்ந்து நிலத்தில் விழுந்தான். மிக அருகே இளையோன் ஒருவனின் கால்களிருப்பதை உணர்ந்து கைநீட்டி அதை பற்றிக்கொண்டான். அக்கால்கள் இறுதி உயிர்நீக்கத்தின் அதிர்விலிருந்தன. அவன் கைகளும் சேர்ந்து அதிர்ந்தன.