திசைதேர் வெள்ளம் - 33

bowஅரசுசூழ் மாளிகையிலிருந்து புரவிகளை நோக்கி செல்கையில் அஸ்வத்தாமன் “என் பாடிவீட்டுக்கு வருகிறீர்களா, யாதவரே?” என்றான். “ஆம், வருகிறேன்” என்ற பின்னரே கிருதவர்மன் யாதவ குலத்தலைவர்கள் அப்பால் தனக்காக காத்து நிற்பதை கண்டான். “பொறுத்தருள்க பாஞ்சாலரே, என் குலத்தலைவர்கள். நான் அவர்களிடம் பேச வேண்டியிருக்கிறது. நான் சற்று பிந்தி அங்கு வருகிறேன்” என்றான். “பிந்துவதற்கு பொழுதில்லை. இன்னும் சற்று நேரத்தில் புலர்ந்துவிடும். நேராக களத்திற்கு வருக!” என்றபடி அஸ்வத்தாமன் தன் புரவி நோக்கி சென்றான்.

யாதவர்களை அணுகிய கிருதவர்மன் அவர்களின் தலைவணக்கங்களை ஏற்று “இன்று முதலைச்சூழ்கை. முதலையின் உடலென நாம் அமைக்கப்பட்டுள்ளோம்” என்றான். அவர்களிடம் ஒளியணைவதுபோல் ஓர் முகமாறுதல் ஏற்பட்டது. போஜர் குலத்தலைவர் பிரபாகரர் “நாங்கள் உங்களை நேரில் கண்டு பேசிப்போகவேண்டும் என்று வந்தோம், கிருதவர்மரே” என்றார். “பாடிவீட்டுக்கே வந்திருக்கலாமே?” என்று கிருதவர்மன் சொன்னான். “ஆம், அங்கு சென்றபோது நீங்கள் இங்கிருக்கிறீர்கள் என்றார்கள்” என்று ஹேகய குலத்தலைவர் மூஷிகர் சொல்ல குங்குர குலத்தலைவர் சுதமர் ஊடே புகுந்து “உண்மையில் அரசரிடம் பேசத்தான் வந்தோம். தயங்கி நின்றுவிட்டோம். அதை உங்களிடம் சொல்லலாம் என நினைத்தோம்” என்றார்.

அந்த வாயுதிர்தல் அனைவரையும் நிலையழியச் செய்ய ஒருவரை ஒருவர் நோக்கினர். பிரபாகரர் “ஒன்று கேட்டேன். நேற்று போரில் இளைய யாதவர் தேர்திருப்பி தப்பி ஓடினார் என்று சொல்கிறார்கள். மெய்யா?” என்றார். எரிச்சலுடன் “இளைய யாதவர் இப்போரில் இல்லை” என்றான் கிருதவர்மன். சுதமர் “யார் சொன்னது? இப்போரை நடத்துவது அவர்தான். இளைய பாண்டவனின் வில்திறனை நம்பி இதை முன்னெடுத்தார். இதோ களத்தில் அவன் கோழை என தெரிந்துவிட்டது. நேற்றிரவு துயின்றிருக்கமாட்டார்” என்றார்.

மூஷிகர் “பீஷ்மரின் முன் அவன் வில் தாழ்த்தி ஓடியதும் அவனை விட மாவீரன் என்று சொல்லப்பட்ட அவன் மைந்தன் அபிமன்யூ பீஷ்மரின் அம்பால் தேர்த்தட்டில் விழுந்து புண்பட்டு மருத்துவநிலையில் கிடப்பதும் அவருக்கு உணர்த்த வேண்டியதை உணர்த்தியிருக்கும்” என்றார். பிரபாகரர் “அவருக்கு ஓர் எண்ணமிருந்தது, பெருவீரர்கள் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு நின்றிருக்கிறார்கள் என்று. அவ்வெண்ணத்தால் எங்களை அவர் பொருட்படுத்தவில்லை” என்றார்.

கிருதவர்மன் அவர்களிடம் பேசிப் பயனில்லை என அமைதிகாத்தான். பிரபாகரர் “கிருதவர்மரே, எங்கள்பொருட்டு தாங்கள் நேரடியாக சென்று இளைய யாதவரிடம் பேசக்கூடுமா?” என்றார். “ஏன் பேசவேண்டும்?” என்றான் கிருதவர்மன். “இப்போரில் நமது குடிகள் இறந்துகொண்டிருக்கின்றனர். எளிய கன்றோட்டும் மானுடர். இத்தனை அழிவை நாம் எதிர்பார்க்கவில்லை. நம்மவருக்கு இத்தகைய பெரும்போர்கள் பழக்கமில்லை. உண்மையை சொன்னால் கால்தடுக்கி விழுந்தே யாதவர்கள் பலர் உயிர்துறக்கிறார்கள்” அந்தகக் குடித்தலைவர் சாரசர் சொன்னார்.

“நாம் வெல்வோம்” என்றான் கிருதவர்மன். “ஆம், நாம் வெல்வோம். ஆனால் எஞ்சுபவர் எவர் என்ற எண்ணம் எழுந்துள்ளது” என்றார் சாரசர். “ஆகவே இளைய யாதவரை மீண்டும் அரசனாக ஏற்க எண்ணுகிறீர்களா?” என்றான் கிருதவர்மன் சீற்றத்துடன். “அரசனாக அல்ல. இனி அரசனாக அவரை ஏற்க எங்களால் இயலாது. இனி யாதவக்குடியின் அரசர்கள் குடித்தலைமைக்கு முற்றாகவே கட்டுப்பட்டவர்கள். ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொருவர் அரசனாக அமையட்டும். அவர்களை குடித்தலைமையின் கூட்டுமுடிவுகள் ஆளட்டும். அவ்வாறுதான் இன்றுவரை நம் குடி பெருகிப்பரவியிருக்கிறது” என்றார் ஹேகய குலத்தலைவர் மூஷிகர்.

“இனி நமக்கு பேரரசர்கள் வேண்டாம். நம்மை மிதித்து நம் மீது ஏறும் பேரரசர்கள் நம்மை பலிகொண்டு மகிழ்கிறார்கள். நம் குருதியுண்ணும் பலித்தெய்வங்களை இனி நாம் உருவாக்கவேண்டாம்” என்றார் சுதமர். “கார்த்தவீரியர்களை இனி நம் குடி காணவேண்டியதில்லை!” என்றார் போஜர் குலத்தலைவர் சுஃப்ரர். “அவர் நம் அரசர்களில் ஒருவராக அமையட்டும். அல்லது அவர் மைந்தர்களுக்கு துவாரகையை அளித்து காடேகட்டும்” என்றார் அந்தக குடித்தலைவரின் இளையவரான சுதீரர். அவர்கள் உள்ளம் ஏகும் திசையெதுவென்று கிருதவர்மனால் ஊகித்துணர முடியவில்லை. அவன் கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்க மூஷிகர் “அவர் தன் ஆணவமழித்து தோற்றேன் என்று ஒரு சொல் சொன்னால் போதும். அவரை ஏற்க நாங்கள் சித்தமே. முற்றழிவு எங்களுக்கு உகந்ததல்ல” என்றார்.

“யார் முன் அவர் தலை தாழ்த்த வேண்டும்?” என்று கிருதவர்மன் கேட்டான். அவர்களின் விழிகள் மாறுவதை கண்டான். சாரசர் “பசுவைவிட மந்தை பெரிது என்று சொல்லிக்கேட்டு வளர்ந்தவன் நான். நமது குலத்தில் தன்னை தருக்கி தலைதூக்கியவர் கார்த்தவீரியர். அவரை தன் முற்காட்டு எனக்கொண்டு எழுந்தவர் இளைய யாதவர். கார்த்தவீரியர் வேருடன் பிடுங்கி அகற்றப்பட்டார். அவருடைய ஆயிரம் கைகளும் பெருமரம் வெட்டிக்குவிக்கப்பட்டதுபோல் மாகிஷ்மதியின் வாயிலில் கிடந்ததென்கின்றன கதைகள். அந்நிலை இவருக்கும் வரக்கூடாது” என்றார்.

கிருதவர்மன் “அவர் அந்தணராகிய பரசுராமரால் கொல்லப்பட்டார். அவரை ஆதரித்து நின்றது நம் குலம்” என்றான். “அவர் அழிந்தது நம் குலத்தாலும்தான். அவருடைய ஆணவத்தால் குலம் அவரிடமிருந்து உளம்விலகிவிட்டிருந்தது. அவர்கள் களத்தில் அவருக்கு முற்றாதரவு அளிக்கவில்லை” என்றார் மூஷிகர். கிருதவர்மன் ஏளனப் புன்னகையுடன் “ஆக அப்போதும் குலத்தால் கைவிடப்பட்டுதான் அவர் அழிந்தார். இப்போதும் அதுவே நிகழ்கிறது” என்றான். “கைவிடப்பட்டு என்று ஏன் சொல்கிறீர்கள்? நாங்கள் எவருக்கும் வஞ்சமிழைக்கவில்லை. குலப்பெருமையன்றி பிறிதெதையும் நாங்கள் பெரிதென்று எண்ணவில்லை” என்றார் சுதமர்.

“மெய்யாகவா? உங்களில் எவராயினும் தெய்வங்கள்மேல் சொல்லூன்றி இங்கே சொல்ல முடியுமா, நீங்கள் குலத்திற்கு முழுத் தலைமை ஏற்கும் நாளொன்றை உள்ளாழத்தில் ஒருமுறையேனும் கனவு காணவில்லை என்று?” என்று கிருதவர்மன் கேட்டான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி தத்தளிக்க சாரசர் “இது வீண்சொல்” என்றார். “களத்தில் அவருடைய தோல்வியை எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது. நீங்கள் ஈட்ட விரும்புவது பிறிதொன்றும் அல்ல, ஆணவமீட்சி மட்டுமே. அவரது அவையில் சென்றமர்ந்து பல்லாண்டுகாலம் வாழ்த்தொலி எழுப்பினீர்கள். அந்த ஒவ்வொரு வாழ்த்தொலிக்கும் உங்களுள் அமைந்த ஏதோ ஒன்று சீற்றம் கொண்டது. அவ்வெளிய வஞ்சத்தை சுமந்து இங்கு படை நடத்த வந்திருக்கிறீர்கள். இங்கு அதற்கு எப்பொருளும் இல்லை. இங்கு எந்த வஞ்சத்திற்கும் பொருளில்லை. இங்கு எதற்குமே பொருளில்லை என்று இப்போது உணர்ந்திருப்பீர்கள்” என்றான் கிருதவர்மன்.

அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்க கிருதவர்மன் கசப்பு நிறைந்த பெருஞ்சிரிப்புடன் “ஆனால் போருக்கெழுவது எளிது, மீள்வது கடினம்” என்றான். “இது இளைய யாதவர் பேசுவதுபோல் ஒலிக்கிறது” என்றார் சாரசர். “நீங்கள் இளைய யாதவராக ஆக முயல்கிறீர்கள் என்றால் நாங்கள் சொல்வதொன்றே, இன்னொரு இளைய யாதவர் எங்களுக்கு தேவையில்லை.” கிருதவர்மன் “ஆம், ஒவ்வொருவரும் இளைய யாதவராகவே எண்ணிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒளிவென்ன மறைவென்ன?” என்றான். சாரசர் சீற்றத்துடன் “நீங்கள் எங்களை களியாடுகிறீர்கள்” என்றார். “இல்லை, நான் சொல்வது இயல்பாகவே அவ்வாறு ஆகிறது” என்றான் கிருதவர்மன்.

“கிருதவர்மரே, நீங்கள் எங்கள் தலைவர் அல்ல, எங்களில் ஒருவர் மட்டுமே. வெற்றிக்குப் பின் நீங்கள் உங்களை இளைய யாதவரென்று எண்ணிக்கொள்வீர்கள் என்றால் அன்று உங்களுக்கெதிராகவும் நாங்கள் எழுவோம்” என்றார் மூஷிகர். “அதை நான் நன்கறிவேன். நான் இளைய யாதவர் அல்ல. அவருக்கு எதிராக எழுந்த சிறுமை எனக்கெதிராகவும் எழுமென்று அறியாதவனும் அல்ல. ஆனால் ஒன்றுணர்க, இப்போருக்குப் பின் நான் யாதவர்களுக்கு அரசனாக ஆனேன் என்றால் குலத்தலைமையென்று கோல்கொண்டு ஒருவரும் என் முன் வந்து அமர ஒப்பமாட்டேன்! என்னை மீறி சொல்லெடுக்கத் துணிவீர்கள் என்றால் உங்களையும் உங்கள் மைந்தர்களையும் தலைவெட்டி கோட்டை முகப்பில் வைத்த பின்னரே அரியணையில் அமர்வேன்” என்றான்.

அவர்கள் ஒவ்வொருவரும் முகம் வெளிறி திகைத்து ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். கிருதவர்மன் புன்னகைத்து “சிறுமைகளை ஏற்றுக்கொள்வது பெருந்தன்மை. சிறுமைகளை பொறுத்தருள்வது மடமை. இப்பாரதவர்ஷத்தில் பேரரசுகளை உருவாக்கிய அனைவருமே தங்கள் குலத்தை முற்றடிமையாக கால்கீழ் வைத்திருந்தவர்கள். தேரிழுக்கும் புரவிகளுக்கு தங்களுக்கென்று எண்ணமும் இலக்கும் இருக்கலாகாது. அவை சவுக்கால் மட்டுமே செலுத்தப்படவேண்டும், கடிவாளத்தால் ஆணையிடப்படவேண்டும்” என்றான். அவர்கள் ஒவ்வொருவரையாக நோக்கியபின் “நன்று, என் சொற்களை உரைத்துவிட்டேன். முன்னரே சொல்லப்படவில்லை என்னும் குறை இனி வேண்டாம்” என்று திரும்பி நடந்தான்.

ஓர் யாதவ இளைஞன் உரக்க “நில்லுங்கள், கிருதவர்மரே!” என்றான். கிருதவர்மன் நிற்க “நான் விருஷ்ணி குலத்தலைவர் சசிதரரின் மைந்தன். என் பெயர் சேகிதானன்” என்றபடி அவன் அருகே வந்தான். “விருஷ்ணிகுலம் என்றும் பாண்டவர்களுக்கு கடமைப்பட்டது. ஏனென்றால் எங்கள் குலமகள் அங்கே அஸ்தினபுரியின் அரசியானாள். அவள் வயிற்றில் பிறந்தவர்கள் அரசமைந்தர் ஐவரும். எங்கள் குடிசெழிக்க வந்த இளைய யாதவரின் அணுக்கனாக என்றும் என்னை உணர்ந்தவன் நான். மயன் அமைத்த இந்திரப்பிரஸ்த மாளிகையில் பாண்டவர்கள் அணிக்கோலத்துடன் நுழைந்தபோது அவர்களுக்குப் பின்னால் வாளேந்தி சென்றவர்களில் நானும் ஒருவன். ராஜசூயப் பெருநிகழ்வில் அரசரைச் சென்று பணிந்து எங்கள் குலத்து வில்லை காலடியில் வைத்து முழுதளிப்பை அறிவித்தவன்.”

உளவிசையால் அவன் மூச்சிரைத்தான். “இன்று இதோ பாண்டவர்களுக்கு எதிர்நிரையில் நின்றிருக்கிறேன் எனில் அது என் குலமூத்தாரின் ஆணை என்பதனால் மட்டுமே. மூத்தோர் சொல் பசுத்திரளை ஒருங்கிணைக்கும் கழுத்துமணியோசைக்கு நிகர் என்று கேட்டு வளர்ந்தேன். இன்றும் நாவெடுக்காமல் இருந்தால் பின்னர் என்னை நானே பழிப்பேன் என்பதனால் இதை சொல்கிறேன். யாதவகுலத்தை நீங்கள் உங்கள் ஏவல்படை என எண்ணினீர்கள் என்றால் அது நடைபெறப்போவதில்லை. இதுகாறும் யாதவர்கள் குலத்திரள் என்றுதான் திகழ்ந்துள்ளனர். ஒவ்வொரு குடியும் தனித்தனியான அரசும் கொடியும் முத்திரைகளும் கொண்டு பிறரை சாராமல் தங்கள் நிலத்தில் தாங்களே என்று வாழ்கிறார்கள்.”

“நாங்கள் மலைகளைப்போல ஓங்கி உயர முடியவில்லை. நெருப்பென பிறவற்றை அழித்து நிலைகொள்ளவும் இயலவில்லை. ஆனால் நீரெனப் பரவி செல்லுமிடமெல்லாம் செழிக்க வாழ்கிறோம். குலங்களென விரிந்து குடிகளென பிரிந்து வாழ்ந்தால் நாங்கள் பேரரசென்று ஆகாவிட்டாலும் என்றுமழியாது இங்கிருப்போம். துவாரகைகளை உருவாக்கி நிலைநிறுத்தும் ஆற்றல் எழாது போகலாம். கன்றுபெருகி வாழ்வதற்கு அதுவே சிறந்த வாழ்க்கைமுறை” என்றான் சேகிதானன்.

“ஆகவேதான் என் குடி இளைய யாதவரை கைவிட்டபோது அதிலும் ஒரு நெறி உள்ளது என எண்ணினேன். எந்நிலையிலும் குலங்களும் குடிகளும் தங்கள் தனிப்போக்கை கைவிடாதிருப்பதில் தெய்வஆணை ஒன்று வாழ்கிறதென்று கருதினேன். ஒவ்வொரு உயிருக்கும் வாழவும் பெருகவும் தனக்குரிய வழிகள் உள்ளன. காலங்களாக ஆற்றித்தேர்ந்த வழிகள் அவை” சேகிதானன் சொன்னான். “பசுவை ஏரில் கட்டியது போன்றது யாதவரைக்கொண்டு படைசமைத்து பேரரசு அமைக்க இளைய யாதவர் முயன்றது என தெளிந்தேன். ஆகவே இவர்களின் அச்சமும், தயக்கமும், சிறுமையும், பூசலும் எனக்கு இயல்பானவையாகவே பட்டன.”

“அவை என்னிடமில்லை. ஆனால் என் தந்தையர் உடலே நான். ஆகவே இவர்களுடன் நின்று இவர்களுடன் மடிவதே என் கடன் என்று கொண்டேன். என் உள்ளத்தில் வாழும் தெய்வம் என்னை அறியும். எங்கு நின்று மடிந்தாலும் என்னை அது ஏற்கும் என்று சொல்லிக்கொண்டேன்.” நீண்ட சொல்லாடலால் உணர்வுகள் சிதறிப்பரவ அவன் தன்னை மீட்டு யாதவ குடித்தலைவர்களை நோக்கி “நன்று, இந்தப் போரில் இளைய யாதவரை கைவிட்டு நாம் இவரை ஏற்றது இதன்பொருட்டுதானா என முடிவெடுக்கவேண்டிய பொழுது இது” என்றான்.

“என்ன முடிவெடுக்கப் போகிறீர்கள்?” என்று கிருதவர்மன் இகழ்ச்சிச்சிரிப்புடன் கேட்டான். “படைதுறந்து மறுபக்கம் சென்று சேரப்போகிறீர்களா? அதற்கு கௌரவர்கள் ஒப்பமாட்டார்கள். படைதுறப்போரை சிறைப்பிடித்து கொல்ல கௌரவருக்கு உரிமை உண்டு.” அவன் சிரிப்பு மேலெழுந்தது. “சரி, வேண்டுமென்றால் நான் ஓர் உறுதியை அளிக்கிறேன். நீங்கள் கௌரவர்களை உதறி பாண்டவர்களிடம் சென்று சேர்வதாக இருந்தால் துரியோதனர் அதற்கு ஒப்புதல் அளிக்க நான் ஆணைபெற்றுத்தருகிறேன். செல்க!” அவர்களை மாறிமாறி நோக்கி “என்ன முடிவு கொள்ளப்போகிறீர்கள்?” என்றான்.

சேகிதானன் யாதவ குடித்தலைவர்களிடம் “இனி என்ன எண்ணவேண்டியிருக்கிறது? இங்கே வீண்போர் செய்து மடிவதைவிட நம் குடித்தலைவர் பொருட்டு போரிடுவோம். இவர்கள் நம்மை சிறைபிடிப்பார்களென்றாலும் நம் முடிவென்ன என்று அறிவித்துவிட்டுச் செல்லவே எழுவோம். இப்போது நாம் செய்யவேண்டியது அதுவே” என்றான். கிருதவர்மன் “நீங்கள் சென்றால் அவர் உங்களை ஏற்கவேண்டுமென்பதில்லை. அஸ்தினபுரியிலிருந்து கால்பொடி தட்டி கிளம்பிய கணமே மீளவியலாதபடி ஒவ்வொன்றும் முற்றமைந்துவிட்டன” என்றான்.

உளஎழுச்சியுடன் முன்னால் வந்து விழிகள் மின்ன “அவர் கனிவார். நாம் அவருடைய குடிகள். தந்தை மைந்தரை கைவிடமாட்டார். நம்மை அவர் ஏற்பாரா ஒறுப்பாரா என எண்ணுவதும் பிழை. நாம் செய்வதில் உகந்தது சென்று அடிபணிவதே” என்றான் சேகிதானன். கிருதவர்மன் இளமையின் விசையை அவனிடம் கண்டு அகம்வியந்தான். முகத்தில் ஏளனப் புன்னகை நிலைக்க “எனில் செல்க… நானோ கௌரவர்களோ ஒரு தடையும் சொல்லப்போவதில்லை” என்றான். “ஆம், கிளம்புகிறோம். இப்போதே கிளம்புகிறோம். தாதையரே, மூத்தவர்களே, இங்கிருந்தே கிளம்புவோம்” என்று சேகிதானன் கூவினான்.

போஜர் குலத்தலைவர் சுஃப்ரர் “ஆனால் நமது வஞ்சினங்கள் அவ்வண்ணமே இன்றும் நீடிக்கின்றன” என்றார். குங்குரர்களின் தலைவர் சுதமர் “எங்கள் குடிமூத்தார் வாகுகர் கழுவிலேற்றப்பட்டபோது நாங்கள் எடுத்த சூளுரை ஒன்றுண்டு… அது தெய்வங்களையும் மூதாதையரையும் முன்நிறுத்தி கொண்ட நோன்பு” என்றார். போஜர் குலத்தலைவர் பிரபாகரர் “எங்கள் தாதை சீர்ஷரையும் கழுவிலேற்றினார் அவர். அந்தக் கழுவை நாங்கள் கொண்டுசென்று எங்கள் கன்றுமேயும் காட்டில் நிறுத்தி தெய்வமென பலியிட்டு வணங்குகிறோம்” என்றார்.

குரல்கள் ஆங்காங்கே எழுந்தன. “வாகுகரின் குருதி உலராமல் நின்றுள்ளது. சரபரும் கூர்மரும் இன்னமும் விண்ணேகவில்லை” என்றார் ஒருவர். கிருதவர்மன் நகைத்து “சரபரும் கூர்மருமா? நன்று, எதிரிக்கு தன் படையை ஒற்றுக்கொடுத்தவர்கள்… அவர் அவர்களை மட்டுமே கழுவேற்றினார். நூல்நெறிகளின்படி அக்குடியின் அத்தனைபேரையும் அழித்து, எழுகுருத்தும் விதையும்கூட எஞ்சாமல் ஆக்கிவிட்டிருக்கவேண்டும். நூல்நெறி கற்ற இளைய யாதவர் அரசருக்கு ஒவ்வாத இரக்கத்தையும் சற்றே கொண்டுவிட்டார். ஆகவேதான் இக்குரல்கள் எழுகின்றன” என்றான்.

“எங்கள் குருதியை விழைகிறாயா நீ? இழிமகனே!” என்று முதியவரான விருஷ்ணிகுலத்து சதகர்ணர் கூவினார். கிருதவர்மன் அவர் விழிகளை நோக்கி “ஆம், உங்கள் குருதியை எதிர்பார்க்கிறேன். நீங்கள் முற்றழியவேண்டுமென்பதே ஊழ். இல்லையென்றால் உங்கள் குலத்தில் முலைப்பால் உலரா வாயுடன் குழவியர் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள். கைகொண்டு மெய் பொத்தி உங்கள் வளைகளுக்குள் ஒண்டியிருக்கும் கீழ்மை உங்களில் கூடியிருக்காது” என்றான்.

“கொல்லுங்கள் அவனை… நம்மை அழிக்க நினைக்கும் கீழ்க்குடியின நரி… கொல்க!” என்றார் குங்குரரான குவலயர். கிருதவர்மன் “கொல்லுங்கள் பார்ப்போம்… உங்களுக்கு உறுதிசொல்கிறேன். என் வாளை உருவமாட்டேன். துணிவிருப்போர் கொல்லுங்கள்” என்றான். விருஷ்ணிகுலத்தவராகிய சூரியர் “அஸ்தினபுரியின் படைத்தலைவர்களில் ஒருவர் நீர். உம்மை கொன்றால் எங்களை முற்றாக கொன்றழிப்பார் துரியோதனர்” என்றார். கிருதவர்மன் ஏளனம் நிறைந்த முகத்துடன் வெறுமனே நோக்கி நின்றான்.

“இனியும் என்ன தயக்கம்? நாம் இப்போதே கிளம்புவோம்” என்றான் சேகிதானன். பிரபாகரர் “இவருக்காக நாங்கள் இங்கே படைக்கு வரவில்லை. நமது சொல் கௌரவப் பேரரசருடன்தான். அதை போருக்குப் பின் பேசுவோம்” என்றார். சேகிதானன் “என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நாம் அரசுசூழ்தலைப் பேச இங்கு நிற்கவில்லை. அதற்கு நமக்கு இனி வாய்ப்பே இல்லை. நாம் இப்போதே கிளம்புவோம். நாம் செய்யவேண்டியது அதுமட்டுமே” என்றான். போஜர் குலத்தலைவர் சுஃப்ரர் “நாம் குடித்தலைவர்கள். எந்நிலையிலும் நம் கோல் தாழவேண்டியதில்லை” என்றார்.

சேகிதானன் எரிச்சலுடன் “இனியும் இந்தத் தன்முனைப்பு எதற்கு? நாம் எவரென்று இன்று நன்கறிந்துவிட்டோம். இதுவே இறுதித் தருணம்… இதை தவறவிட்டால் நம் குடிவழியினர் பழிக்கும் பேரழிவை ஈட்டிக்கொள்வோம்” என்றான். ஹேகய குலத்தலைவர் மூஷிகர் “நாம் அவருக்கு ஒரு தூது அனுப்பலாம்” என்றார். “நமது எண்ணங்களை அவரிடம் சொல்வோம். நாம் சொல்வனவற்றை அவர் ஏற்றுக்கொண்டு சொல்லளித்தால் அவரை ஏற்றுக்கொள்வோம்.” சேகிதானன் சலிப்புடன் பற்களைக் கடித்து தலையை அசைத்தான். “அவர் செய்த பிழைகளை உணர்ந்துகொண்டார் என ஒரு சொல் நம் அவையில் உரைத்தாரென்றால் தடையில்லை” என்றார் பிரபாகரர்.

கிருதவர்மன் சேகிதானனிடம் திரும்பி “அறிக, இவர்கள் தங்கள் வெற்றாணவத்தால் போருக்கெழுந்தவர்கள்! ஆணவம் விழிமறைக்க இவர்களால் இளைய யாதவரை நோக்க இயலவில்லை” என்றான். அவன் முகத்தில் புன்னகை மறைந்தது. “ஆனால் துயிலிலும் விழிப்பிலும் அவரையே எண்ணிக்கொண்டிருந்தவன் நான். பகைமையும் ஒரு தவமே. வெறுப்பினூடாக என்னை முழுதளித்தேன். அறிந்தறிந்து அவரென்றே நானும் ஆனேன். என் உடலை அப்பாலிருந்து காண்பவர்கள் அவரோ என ஐயுறுவதுண்டு. என் குரலும் சொல்லும் அவர்போலவே என பலர் சொன்னதுண்டு. ஒருவரை முழுதறிய அவரே என்றாவதே ஒரே வழி” என்றான்.

சேகிதானன் திகைப்புடன் நோக்கினான். “இந்த வீணர் உடனிருந்து வணங்கியும் அறியாதவர்கள். நான் அகன்றிருந்து அணுகியவன். இந்தப் போர் எங்கு எவ்வண்ணம் முடியுமென்று இன்று நான் நன்கறிவேன். ஆயினும் இதை நான் இயற்றியாகவேண்டும். என் நண்பன் சததன்வாவுக்கு நான் அளித்த சொல் அது. என் சொல்லை நான் மீறக்கூடாது.” சேகிதானனின் தோளில் கைவைத்து கிருதவர்மன் புன்னகைத்தான். “செல்க, இளைஞரே! உமது உள்ளம் ஆணையிடுவதை செய்க! இந்தக் களத்தில் ஒவ்வொருவரும் அவர்கள் அகம் நாடுவதை தயங்காது செய்யவேண்டும். அவர்கள் எவரோ அவராக நின்றிருக்கவேண்டும். ஏனென்றால் நாளை என்ற ஒன்று இங்கே இல்லை. செல்க!”

சேகிதானன் “நான்…” என்றான். கிருதவர்மன் அவன் தோளை அழுத்தி “எவராயினும் தன் குடியை, குலத்தை, உறவை, கற்றவற்றை கடந்துதான் எய்தவேண்டியதை சென்றடைய இயலும். உமது உளம் எனக்கு தெரிகிறது” என்றான். சேகிதானன் “ஆம்” என்றான். பெருமூச்சுடன் “இதுவே தருணம் என என் அகத்தே உணர்கிறேன்” என்றான். பிரபாகரர் “என்ன செய்யப்போகிறாய்? தனியாகக் கிளம்பி மறுபக்கம் செல்லப்போகிறாயா?” என்றார்.

“ஆம், எண்ணி எண்ணி இத்தனைநாள் என்னுள் எரிந்துகொண்டிருந்தேன். இனியில்லை. நான் செல்லத்தான் போகிறேன்” என்றான். “நீ குலமிலியாவாய்… எங்கள் அனைவரின் பழிச்சொல்லும் பெறுவாய்” என்றார் பிரபாகரர். “நான் இதுவரை கொண்டிருந்த அனைத்தையும் இங்கே துறக்கிறேன். என் பெயரையும் நான் அவர்மேல் கொண்டிருக்கும் பணிவையும் மட்டுமே சுமந்து அங்கே செல்கிறேன்” என்றான் சேகிதானன்.

யாதவர்கள் குழம்பிக்கலந்த முகங்களுடன் நிற்க சேகிதானன் தன் உடைவாளையும் குலமுத்திரை பொறித்த தாமிரவளையத்தையும் கீழே வைத்துவிட்டு அவர்களை வணங்கி கிளம்பினான். கிருதவர்மன் தன் கணையாழியை உருவி அவனிடம் அளித்து “இக்கணையாழி உடனிருக்கட்டும், உம்மை எவரும் தடுக்கமாட்டார்கள். எவரேனும் தடுத்தால் அரசாணை என்று சொல்க!” என்றான். சேகிதானன் அதை வாங்கிக்கொண்டான். “அங்கு சென்ற பின் இக்கணையாழியை அவரிடம் அளியும்” என்றபோது கிருதவர்மன் நோக்கு திருப்பியிருந்தான். “நான் என்ன சொல்லவேண்டும்?” என்றான் சேகிதானன். “ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. நான் சொல்லி அவர் அறிய ஒன்றுமில்லை” என்றான் கிருதவர்மன்.

சேகிதானன் யாதவர்தலைவர்களை திரும்பிப்பார்க்காமல் நடந்தான். அவனை நோக்கியபடி கிருதவர்மன் சென்றான். சேகிதானன் செல்வதை நோக்கி நின்றபின் புரவியிலேறிக்கொண்டான். தளர்நடையில் புரவி செல்ல தலை நிமிர்ந்து தொலைவில் நிலைத்த விழிகளுடன் அமர்ந்திருந்தான். அஸ்வத்தாமனின் குடில்முற்றத்தை அடைந்தபோதுதான் அங்கே செல்லும் விழைவை புரவிக்கு உடலே உணர்த்தியிருப்பதை உணர்ந்தான். அஸ்வத்தாமன் கவசங்கள் அணிந்துகொண்டிருந்தான். கிருதவர்மன் இறங்கி அவன் அருகே சென்று அமர்ந்தான்.

“யாதவரின் கவசங்களை இங்கே கொண்டுவரச் சொல்க!” என்றான் அஸ்வத்தாமன். ஆணையை முழவு ஒலியாக்கி காற்றில் செலுத்தியது. அஸ்வத்தாமன் அவன் ஏதேனும் சொல்வான் என எதிர்பார்த்தபின் “யாதவர்கள் அஞ்சியிருக்கிறார்களா?” என்றான். “ஆம், அவர்களுக்கு பெரும்போர் இத்தகையது என்று தெரியாது” என்றான் கிருதவர்மன். “இங்குள எவருக்குமே தெரிந்திருக்கவில்லை… இத்தகைய பெரும்போர் பாரதவர்ஷத்தில் முன்பு நிகழ்ந்ததுமில்லை” என்றான் அஸ்வத்தாமன். கிருதவர்மன் “அவர்கள் போரொழிய விழைகிறார்கள். அதன்பொருட்டு இளைய யாதவரிடம் பேச எண்ணுகிறார்கள்” என்றான்.

அஸ்வத்தாமன் புன்னகை செய்தான். “ஆனால் தங்கள் ஆணவத்தை கைவிடவும் அவர்களால் இயலவில்லை” என்றான் கிருதவர்மன். “எத்தனை எளிய மாந்தர் என்று என் உள்ளம் எண்ணி எண்ணி வியக்கிறது.” அஸ்வத்தாமன் “களிறுகளை எடைமிக்க சங்கிலிகளால் கட்டிப்பழக்கிய பின்னர் வெறுமனே சங்கிலி ஓசையை மட்டுமே காட்டிவிட்டு சென்றுவிடுவதுண்டு. அவை கட்டப்பட்டுவிட்டன என எண்ணி கந்தின் அருகிலேயே நின்றிருக்கும்” என்றான். அவன் சொல்வதென்ன என்று கிருதவர்மன் உள்ளம் கொள்ளவில்லை. “ஆனால் அஞ்சியோ சினம்கொண்டோ வலியாலோ அலறியபடி விலகிற்று என்றால் களிறு அங்கே கட்டு இல்லை என்று கண்டுகொள்ளும். மானுடர் அப்போதும் கற்றுக்கொள்வதில்லை” என்று அஸ்வத்தாமன் மீண்டும் சொன்னான்.

கிருதவர்மன் மீண்டும் “எளிய மானுடர்…” என்றான். “மிக மிக எளியவர்கள். இத்தனை எளிய உயிர்களை ஏன் படைத்தன தெய்வங்கள்? ஏன் இரக்கமில்லாது இவற்றுடன் ஆடுகின்றன?” அஸ்வத்தாமன் நகைத்து “அதற்கு மாற்றாக எளிய மானுடர் தங்கள் ஆணவத்தையும் சிறுமையையும் கொண்டு தெய்வங்களை பழிதீர்க்கிறார்கள்” என்றான். கிருதவர்மன் அவன் சொன்ன அனைத்தையும் ஒரே கணத்தில் புரிந்துகொண்டு நிமிர்ந்து நோக்கினான்.

கவசங்களுடன் எழுந்துகொண்ட அஸ்வத்தாமன் கைகளை நீட்டி மடித்து அவற்றை சீரமைத்தான். அக்கவசங்களுக்குள் தன் உடலை நன்கு அமைத்துக்கொள்பவனைப்போல. தொலைவில் புரவியில் தன் கவசங்கள் வருவதை கிருதவர்மன் கண்டான். தன்னைப்போன்ற பிறிதொருவனை துண்டுகளாக கொண்டுவருவதுபோல் தோன்ற அவன் புன்னகை செய்தான்.