திசைதேர் வெள்ளம் - 29

bowசுதசோமன் தன் புரவியில் அமர்ந்து ஆணைகள் இடுவதற்குள்ளாகவே புரவி கிளம்பிச்சென்றது. அவன் எண்ணத்தை உடலசைவிலிருந்தே அது உணர்ந்தது. சீர்நடையில் பாதையின் பலகை வழியாக சென்றான். குளிரலைகள் பரவியிருந்த முற்காலையில் பாண்டவப் படை போருக்கு ஒருங்கிக்கொண்டிருந்தது. மேலே விடிவெள்ளி விழுந்துவிடும் என நின்றிருந்தது. விளக்குகளின் நிழல்கள் ஆடின. வீரர்கள் கவசங்கள் அணிந்துகொண்டும், படைக்கலங்களை தேர்ந்துகொண்டும், உணவருந்திக்கொண்டும் இருந்தனர். போர் என்னும் கிளர்ச்சி அமைந்து அது நாள்கடன் என ஆகிவிட்டதுபோல மிக மெல்லவே ஒவ்வொன்றும் நிகழ்ந்துகொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது.

‘தோற்றுக்கொண்டிருக்கும் படை!’ என்ற எண்ணம் வந்ததுமே அதை அகற்றும் பொருட்டு அவன் தன்னை கலைத்துக்கொள்ள முயன்றான். ஆனால் அவ்வெண்ணத்திலிருந்து அவன் உள்ளம் விலகவே இல்லை. படைகளின் நடுவே புரவிக்குளம்புகள் ஒலிக்க சென்றுகொண்டிருந்தான். இருபுறமும் காவலர் தலைவணங்கினர். கடோத்கஜனின் பாடிவீட்டருகே சென்றபோது அங்கு காவல் நின்ற இடும்பனாகிய லம்போதரன் தலைவணங்கினான். “அரசர் இருக்கிறாரா? பார்க்க வந்துளேன்” என்றான். “அவர் பலிச்சடங்கு செய்துகொண்டிருக்கிறார்” என்றான் லம்போதரன். “இங்கில்லையா? காட்டிலா?” என்றான். “இங்குதான், அதோ” என்று அவன் சொன்னான்.

புரவியிலிருந்து இறங்கி கடிவாளத்தை ஒப்படைத்துவிட்டு சுதசோமன் முன்னால் சென்றான். தொலைவிலேயே கடோத்கஜன் முழந்தாளிட்டு அமர்ந்து தரையில் மண் ஒதுக்கி உருவாக்கிய வட்டத்தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறு கற்களுக்கு முன் இலை விரித்து, அதில் அன்னமும் மலரும் படைத்து, நீர் தெளித்து பூசை செய்துகொண்டிருப்பதை பார்த்தான். அருகே ஓர் இடும்பன் சிறு முழவை விரல்களால் மீட்டி கருங்குரங்கு முழங்குவதுபோல் ஓசையெழுப்பிக்கொண்டிருந்தான். மேலும் இருவர் கைகட்டி நின்றிருந்தார்கள். மூன்று கற்கள் முகப்பில் மலர்சூடி இருந்தன. நூற்றுக்கணக்கான் சிறு கூழாங்கற்கள் அவற்றுக்குப் பின்னால் அடுக்கப்பட்டிருந்தன. வாழையிலையில் அன்னம் வெண்மையின் வெறுமையுடன் கிடந்தது.

ஏழு முறை நீர் தெளித்து பன்னிரு முறை மலர் அளித்துவிட்டு கைகூப்பி நெற்றி நிலந்தொட வணங்கி கடோத்கஜன் எழுந்தான். கனவிலிருந்து விழித்ததுபோல் அவனை பார்த்து “வருக, இளையோனே” என்றான். “இது என்ன சடங்கு?” என்று சுதசோமன் கேட்டான். “இது முதற்கல் நாட்டுதல். பின்னர் எங்கள் மலையில் நிலைக்கற்களாக இவை ஆகும்” என்றான். மீண்டும் அந்தக் களத்தை பார்த்த பின் “அக்கூழாங்கற்கள்?” என்றான் சுதசோமன். “நேற்று போரில் கொல்லப்பட்டவர்களில் இடும்பர்களும் அரக்கர்களும்” என்றான் கடோத்கஜன். முன்னாலிருந்த மூன்று பெரிய கற்களை சுட்டிக்காட்டி “இவை சகுண்டனும் உத்துங்கனும் அலம்புஷனும்” என்றான்.

சுதசோமன் “மூத்தவரே, அலம்புஷன் தங்களால் கொல்லப்பட்டவன்” என்றான். “அதனாலென்ன? நாங்கள் அரக்கர்கள். நானளிக்கும் அன்னத்தை அவன் மறுக்கப்போவதில்லை. இங்கு இவ்வண்ணம் இருக்கலாம். பிறிது வடிவில் நாங்கள் வாழும் மண்ணுக்கடியில் நாங்கள் ஒன்றென்றிருப்போம். இறப்புக்குப் பின் நாங்கள் வேர்களின் உலகில் வாழ்வோம். தழுவிக்கொள்ளும் கலையறிந்தவை வேர்கள்” என்றான் கடோத்கஜன். சுதசோமன் அவன் அச்சடங்கை ஏழுமுறை கைகளை நொடித்துச் செய்து முடிக்கும்வரை காத்து நின்றான்.

கடோத்கஜன் “இன்று யானைச்சூழ்கை என அறிந்தேன்” என்றான். “ஆம், நீங்கள் யானையின் துதிக்கை” என்றான் சுதசோமன். திரும்பி அந்தச் சிறுகற்களை சிலகணங்கள் நோக்கிவிட்டு ஏளனச் சிரிப்புடன் “இக்களத்தில் மாண்டவர்கள் அனைவருக்கும் நாளை கல்நாட்டுவதைப்பற்றி எண்ணினேன்” என்றான். “மலைக்குடியினருக்கு மட்டும் கல்நாட்டினால் போதும். ஏனென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள், உங்கள் படைவீரர் ஒவ்வொருவரும் பிறிதொருவரை போன்றவர்கள். படைப்பயிற்சி என நீங்கள் எண்ணுவது அவ்வாறு அவர்களை ஆக்குவதைத்தான்” என்றான். “நானும் அதையே எண்ணினேன், மூத்தவரே. கங்கைமணற்பரப்பை ஒட்டுமொத்தமாக இன்றுவரை வாழ்ந்து களம்பட்ட அனைவருக்கும் உரியதாக உருவகித்து ஒரு கை நீரள்ளிவிட்டால் கடன் முடியும்” என்றான் சுதசோமன்.

கடோத்கஜன் அமர்ந்துகொள்ள இரு இடும்பர் கவசங்களை அணிவித்தனர். சுதசோமன் “சகுண்டன்…” என சொல்லத் தொடங்க “அவர்கள் மண்ணுக்குள் சென்றுவிட்டனர். இனி சொல்லில் அவர்களுக்கு இடமில்லை. கனவில்மட்டுமே அவர்கள் தோன்றவேண்டும்” என்றான் கடோத்கஜன். “அவர்களை நீங்கள் நினைவுறவே போவதில்லையா?” என்றான் சுதசோமன். “இல்லை, பேச்சில் அவர்கள் எழலாகாது. கதையென நிலைகொள்ளுதலும் பிறழ்வு. நாம் இங்கே பேசுந்தோறும் அவர்களை இங்கே இழுக்கிறோம். நாம் மறந்தாலொழிய அவர்கள் இங்கிருந்து முற்றாகச் செல்வதில்லை.”

“விந்தைதான்” என்றான் சுதசோமன். “நாங்கள் சொல்லிச் சொல்லி நிலைநிறுத்துகிறோம்.” கடோத்கஜன் “அதுவும் நன்றே, அவர்களை கனவிலிருந்து துரத்துவதற்கான வழி அது” என்றான். “நீங்கள் பலிகொடுப்பதுண்டு அல்லவா?” என்றான் சுதசோமன். “ஆம், ஆண்டுக்கொருமுறை. நினைவுநாட்களில் அல்ல. அனைவருக்கும் ஒரேநாளில், ஒரே பலியாக. ஆடிமாதம் கருநிலவுநாளில்” என்றான் கடோத்கஜன். சுதசோமன் சில கணங்களுக்குப் பின் “இரண்டும் வெவ்வேறு என எண்ணினேன். அவ்வாறல்ல, இரண்டுமே நிகர்தான், மூத்தவரே” என்றான். “எவ்வாறு?” என்றபடி கடோத்கஜன் எழுந்தான். “அறுதியாக இரண்டுமே பொருளற்றவை” என்றான் சுதசோமன்.

கடோத்கஜன் பேருருளையை சங்கிலி பற்றி எடுத்தான். அதை கையில் சுழற்றிச்சுருட்டி அதன் தண்டில் பிடித்து தூக்கி தலைக்குமேல் சுழற்றினான். “தந்தை இன்று வஞ்சினம் உரைத்துள்ளார் என்று அறிந்தேன்” என்றான் சுதசோமன். கடோத்கஜன் கொக்கிச்சரடை சுழற்றிக்கொண்டிருந்தமையால் நோக்கவில்லை. “இன்று கௌரவ உடன்பிறந்தாரில் எண்மரைக் கொன்று மீள்வேன் என்று” என்று அவன் சொன்னான். “அதிலென்ன?” என்றான் கடோத்கஜன். “நீங்கள் வஞ்சினம் உரைக்கவில்லையா? உங்கள் அணுக்கர்களை கொன்றவர்களை…” என்றான் சுதசோமன். “எனக்கு வஞ்சம் இல்லை” என்றான் கடோத்கஜன். “நான் கொல்லலாம் என்றால் அவர்கள் என்னை கொல்வதும் அறமே.”

சுதசோமன் “ஆனால் உங்கள் குருதியினர்…” என்று தொடங்க “குருதியினர் போரிடலாகாது. போரிடலாமென்றால் கொல்லலாம்” என்ற கடோத்கஜன் “இதை உளநாடகங்களாக, உணர்ச்சிப்பெருக்குகளாக ஆக்கிக்கொண்டாலொழிய உங்களால் போரிட இயலாது. நான் அவ்வாறல்ல, போரின்பொருட்டே போரிடுபவன்” என்றபின் பெரிய பற்கள் தெரிய புன்னகைத்து “செல்க… களத்தில் காண்போம்!” என்றான். “நான் உங்களிடம் பிறிதொன்றைச் சொல்ல வந்தேன்” என்றான் சுதசோமன். “ஆனால் உங்கள் உணர்ச்சியின்மை அதை சொல்லவேண்டாமென என்னை தடுக்கிறது.” கடோத்கஜன் “சொல்லாது சென்றால் எஞ்சாது எனில் சொல்லவேண்டியதில்லை” என்றான்.

அந்தக் கூற்றிலிருந்த கூர்மையை வியந்தபடி “ஆம், சொல்லாமல் சென்றால் அது பெருகும், மூத்தவரே” என்றான் சுதசோமன். பெருமூச்சுடன் அணுகிவந்து “நான் தங்களிடம் கோர வந்தது இதுவே. இந்தப் போரில் என் உடன்பிறந்தார் களம்படக்கூடும்” என்றான். “ஆம்” என்றான் கடோத்கஜன். “மூத்தவர்கள் பிரதிவிந்தியனும் யௌதேயனும் போர்வல்லவர்கள் அல்ல. களத்தில் அவர்கள் திகைத்து நின்றிருப்பதைக் காண நெஞ்சு பதைக்கிறது. சுருதசேனனும் சதானீகனும்கூட போர்தேராதவர்களாகவே தெரிகிறார்கள் இக்களத்தில். நானும் சர்வதனும் சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் மட்டுமே போர்க்கலை தேர்ந்தவர்கள். நாங்கள் போரிடுவதும் இறப்பதும் இயல்பு. அவர்கள் இறந்தால் அது வெறும் கொலை…”

“ஆம், அவ்வண்ணம் பலர் இங்குள்ளனர். தோள்வளராச் சிறுவர்கள்கூட இங்கே பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். நான் இதை கோருவது பெரும்பிழை. அரசமைந்தன் என நின்று இப்படி எண்ணுவதே அறமீறல். ஆயினும் உடன்பிறந்தான் என இதையே என் உள்ளம் சொல்லிக்கொண்டிருக்கிறது. மூத்தவரே, அவர்கள் காக்கப்படவேண்டும்” என்று சுதசோமன் தொடர்ந்தான். “அளிகூர்க! தாங்கள் அவர்களைக் காத்துநிற்கவேண்டும்…” கடோத்கஜன் பேச நாவெடுப்பதற்குள் சுதசோமன் சொன்னான் “நான் இதை எந்தையர் எவரிடமும் சொல்ல இயலாது. முதல் நாள் முதல் இளவரசன் களம்பட்டதுமே எங்களுக்கு எந்தத் தனிக்காவலும் கூடாதென்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டனர்.”

“நான் இங்கே எந்தைக்கு துணைபுரியவே வந்தேன்” என்றான் கடோத்கஜன். “எவருக்கும் பொறுப்பேற்றுக்கொள்ள என்னால் இயலாது.” சுதசோமன் தளர்ந்து “ஆம், நீங்கள் இவ்வாறுதான் சொல்வீர்கள் என எண்ணினேன்” என்றான். “வருகிறேன், மூத்தவரே” என நடக்க உடன்வந்த கடோத்கஜன் தணிந்த குரலில் “நான் இருக்கும்வரை…” என்றான். சுதசோமன் நின்றான். கடோத்கஜன் அவனை பார்க்காமல் மறுதிசை நோக்கி திரும்பியிருந்தான். “தாங்கள் இருக்கும் வரை எவரும் அவர்களை அணுகமுடியாது… அதுபோதும்” என்றபின் சுதசோமன் சென்று தன் புரவிமேல் ஏறிக்கொண்டான்.

bowகாவல்மாடத்தின் மேலிருந்து பாண்டவப் படை திரண்டுகொண்டிருப்பதை சுதசோமன் வெற்றுவிழிகளுடன் நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். ஒவ்வொருவரும் தங்களுக்கான இடத்தை நோக்கி செல்ல மிக விரைவாக படை நிரையமைந்தது. மணல்துகள்களும் கற்களும் தாமாகவே எழுந்து இணைந்து கோட்டையென்றாவதுபோல. பின்னர் ஒவ்வொரு கணமும் உடைந்து சிதறிப்பரந்து மீண்டும் மணல்வெளியாக ஆகிவிடத் துடிப்பதுபோல ததும்பிக்கொண்டே இருந்தது. படை எனத் திரளாவிட்டால் இத்தனை பெரிய நிகழ்வை இம்மானுடர் எதிர்கொள்ள முடியுமா? படையில் ஒரு துளிமட்டுமே என உணராவிட்டால் இயல்பாக இதில் அமைய முடியுமா?

அவன் ஒவ்வொரு முகங்களையாக பார்க்க விழைந்தான். உறுதியும் களைப்பும் இணையாகக் கலந்திருந்த முகங்கள். ஒவ்வொருவரும் இரவில் நன்கு துயிலப் பழகிவிட்டிருந்தனர். ஆயினும் கனவுகள் அவர்களை அலைக்கழித்தன. அவர்களுக்கு மேல் இரவில் இறந்தவர்களின் போர் ஓயாது நிகழ்ந்துகொண்டிருந்தது. முன்னிரவிலேயே படுத்து காலையில் எழுந்தாலும்கூட அவர்கள் துயிலிழந்தவர்கள்போல் இமை தடித்து, முகம் வீங்கி, வாய் உலர்ந்து, சொல்லிழந்திருந்தனர். அங்கிருந்து நோக்கியபோது ஒட்டுமொத்தமாகவே படை அனைத்து ஊக்கத்தையும் இழந்து வெளிறிய உடலென உயிரின்மை தெரிய நின்றிருப்பதை காணமுடிந்தது. இறந்தவர்கள் உயிருள்ளவர்களை வதைக்கிறார்கள். இரவில் கனவென வந்து குருதி உறிஞ்சுகிறார்கள்.

சுதசோமன் பெருமூச்சுவிட்டான். அங்கே படைக்கெழுந்து வந்தபோதிருந்த உணர்வுகளை மிகமிக அகலே, கனவென நினைவுகூர இயன்றது. எதன்பொருட்டு பிறந்தோமோ, எதற்காக நாள்நாளென கணம் கணமென காத்திருந்தோமோ அதற்காக எழுந்துள்ளோம் என்ற உணர்வு. வெற்றி அல்லது வீரன் எனும் புகழ். கற்பனையில் மாவீரர்களான மூதாதையர் வந்துகொண்டிருந்தனர். பாரதவர்ஷத்தின் அவைகளில், இல்லத் திண்ணைகளில், கல்விநிலைகளில் அகல்விளக்கில் நெய்ச்சுடர் எரிய அவன் கதையை சூதர்கள் பாடுவதை அவன் கண்டான். அவன் பெயரெழுந்த காவியத்தின் வரிகளை விழிகூர்ந்தால் படித்துவிடமுடியுமெனத் தோன்றியது.

குருக்ஷேத்ரம் முதன்முதலாக கண்முன் விரிந்தபோது மெய்ப்பு கொண்டு சிலிர்த்து புரவிமேல் அமர்ந்துவிட்டான். பின்னர் உடலை உணர்ந்தபோது காமத்தின் தசையிறுக்கத்தை அறிந்து சூழ நோக்கினான். அத்தனை படைவீரர்களும் சொல்லிழந்து நின்றிருந்தனர். எங்கோ ஓசை ஒன்று எழுந்தது. மழை பெருகிவருவதுபோல் அனைவரையும் சூழ்ந்து மூடியது. “குருநிலம் சிவக்கட்டும்! குருதி அவியாகட்டும்! தேவர்கள் மகிழ்க! மூதாதையர் உவகை கொள்க! வெற்றிதேவியே, அணுகுக! இனியவளே, தூயவளே, சாவுதேவியே அணுகுக! வெற்றிவேல்! வீரவேல்!” அவனும் உடல் திறந்தெழும் பேரொலியுடன் கைகளைத் தூக்கி எக்களித்தான்.

வெற்றியும் சாவும் இணைச்சரடுகளென முயங்கியே எப்போதும் சொல்லப்பட்டுள்ளன. சாவு சாவு என்று சொல்லிச்சொல்லி சாவின் பொருளை மழுங்க வைத்திருக்கின்றனர். வெற்றி, தோல்வி, போர், களம் என அத்தனை சொற்களும் பொருள் மழுங்கிய பின்னரே படைக்கு எழமுடிகிறது. “வேல்களும் அம்புகளும் கூர்கொள்கின்றன, சொற்கள் மழுங்குகின்றன, போர் அணுகும்போது” என்றான் சுருதகீர்த்தி. எப்போதுமே கூரிய சொற்கள் கொண்டவன். “சென்றுபழகி மென்மையாகின்றன பாதைகள். சாவும் அவ்வாறே ஆகியிருக்கக்கூடும்.”

ஆனால் முதல்நாள் போருக்குப் பின் பாடிவீட்டுக்கு மீள்கையில் அவன் உள்ளம் ஏமாற்றம் கொண்டிருந்தது. இதுவா போர்? இவ்வண்ணமா அது நிகழும்? அனைத்தும் இத்தனை எளிதானதா? மீளமீள சொல் ஓடிக்கொண்டிருந்தது. அந்தியில் உடலை மென்மரவுரியால் ஏவலன் துடைத்துக்கொண்டிருக்கையில் அருகே அமர்ந்திருந்த சுருதகீர்த்தியிடம் “நாம் கற்றவற்றுக்கெல்லாம் போரில் எப்பொருளும் இல்லை போலும்!” என்றான். “போரில் கற்றுக்கொள்வனவற்றுக்கு மட்டுமே இங்கே பொருள்” என்றான் சுருதகீர்த்தி. “கற்றுக்கொள்வதற்கு முதலில் தேவை சாகாமலிருப்பது.”

சுதசோமன் “நான் இவ்வாறு எண்ணவில்லை” என்றான். “வேறு எவ்வாறு எண்ணினீர்கள்?” என்று சுருதகீர்த்தி கேட்டான். “இது வெறும் கொலை… அருங்கொலை” என்றான் சுதசோமன். சுருதகீர்த்தி வெடித்துச் சிரித்தான். “என்ன சிரிப்பு?” என்றான் சுதசோமன் எரிச்சலுடன். அவன் மறுமொழி சொல்லவில்லை.

சுதசோமனை வலப்பக்கம் இருந்து குறுமுழவு அழைத்து ஆணையிட்டது. தனக்கான ஆணை என்பதை களம்பழகிய செவி அக்கணமே உணர்ந்துகொண்டது. “சுதசோமன் எழுக! முகக்களிற்றை சென்று காண்க!” முழவோசையையும் கொம்போசையையும் அது எவருடைய தனிக்குரலும் அல்ல என்பதனால் அது படையென எழுந்த பேருருவின் ஆணை என்று கொள்வதே அவன் வழக்கம். களிறொன்று பேசத் தொடங்கியதுபோல அது ஒலித்தது. ஆனால் புரவியில் ஏறும்போது மீண்டும் அது ஒலிக்கக் கேட்டபோது தந்தையின் முகம் நினைவிலெழ அகம் சிலிர்த்துக்கொண்டான்.

புரவியில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வாணை மீண்டும் எழுந்தது. அப்போது அது பீமனின் குரலாகவே இருந்தது. புரவி நாற்கால்தாளம் துள்ளி தொடர்ந்தொலிக்க பலகைச்சரடுமேல் விரைகையில் தன் உள்ளம் ஆவலும் உவகையும் கொண்டு துடிப்பதை அவன் உணர்ந்தான். பீமன் அரிதாகவே அவனுடன் பேசுவது வழக்கம். மகவுடன் பேசும் அன்னை யானையின் உள்ளிருந்து உள்ளேயே ஒலித்தோயும் மெல்லிய உறுமல்போல அது ஒலிக்கும். அவன் தன்னிடம் அவர் பேசிய ஒவ்வொரு சொற்களையும் உள்ளே மிக ஆழத்தில் அவன் வைத்திருந்த சிறு பொற்செப்பு ஒன்றில் இட்டு வைத்திருந்தான். அருமணிகள்போல. நீர்தொட்டால் முளைத்தெழும் மலர் விதைகள்போல.

நினைவறிந்த நாள் முதல் கிடைத்த தந்தையின் அனைத்து தொடுகைகளும் அவன் உடலில் நினைவென வாழ்ந்தன. எப்போதுமே விடைபெறுவதற்கு சற்று முன்பு இயல்பாக வேறெதன் பொருட்டோ என தந்தை அவனை தொட்டார். எதையாவது சுட்டிக்காட்ட விரும்புபவர்போல, எதையேனும் நினைவுறுத்துபவர்போல, வேறெவரிடமோ பேசிக்கொண்டிருக்கையில் அறியாது கைவந்து படிந்ததுபோல. வேழத்துதிக்கையின் எடையுள்ள அப்பெருங்கை தன்மீது படிகையில் அதன் எடையும் அழுத்தமுமேகூட அத்தனை மென்மையையும் எப்படி உணர்த்துகிறது என்பது என்றும் அவன் எண்ணி வியப்பது.

படைமுகப்பில் இறங்கி அங்கு முழுக் கவசங்களணிந்து பிறிதொருவரிடம் பேசிக்கொண்டிருந்த பீமனை அணுகினான். மிகத் தொலைவிலேயே அது தந்தை என்று தெரிந்தது. அவர் உடலில் ஒரு துளிகூட வெளியே தெரியவில்லை. பேருருவத்தால் என்றால் அவர் அளவுக்கே உருவம் கொண்ட பலர் அரக்கர் குடியிலிருந்து போருக்கெழுந்திருக்கிறார்கள். களிற்றுச்சூழ்கையில் முகப்பில் மத்தகம் எனவும் துதிக்கை எனவும் அமைக்கப்பட்டிருந்த வீரர்கள் அனைவருமே பேருருவர்கள். அவரது அசைவே அவரென காட்டியது. முகம்போல, குரல்போல, அவற்றினும் நுண்ணிதாக மானுடரை அடையாளப்படுத்துவது அசைவு. முகத்திலும் குரலிலும் எழுவதைவிட உள்ளமெழுவது அசைவில்தான். உள்ளமென தன்னை நிறுத்தியிருப்பதன் கண்சூழ் தோற்றம்.

சுதசோமன் தலைவணங்கியபோது தலைக்கவசத்துடன் திரும்பிப் பார்த்த பீமன் கைதூக்கி “நீ மத்தகத்தின் செவியென அமைக!” என்றான். “ஆணை” என்றான் சுதசோமன். “இப்போரில் நாம் உடைத்து உட்புகவிருக்கிறோம். செல்லும் தொலைவு முதன்மையானதல்ல. செல்லும் இடமெங்கும் முற்றழிவு நிகழவேண்டும். இப்போர் முடிகையில் அவர்கள் தங்கள் இழப்புகளை எண்ணி ஏங்கவேண்டும். புரிகிறதென்று எண்ணுகின்றேன்” என்றான் பீமன். “அவ்வாறே” என்று சுதசோமன் தலைவணங்கினான். “உன் இளையோன் மறுபுறச் செவியென நிலைகொள்கிறான். துதிக்கை என அவன்” என்று பீமன் சொன்னான்.

சுதசோமன் உள்ளம் பொறாமையால் பொங்கி பின் மெல்ல அமைந்தது. பெயர் சுட்ட நாணுமளவுக்கு தந்தையின் உள்ளத்தில் ஆழ்ந்த அன்பை விளைவித்திருக்கிறாரா கடோத்கஜன்? அவர் அரக்கர்குலத்தவர் என்பதனால் நாணுகிறார் என்று எண்ணவியலாது. அவ்வாறு நாணுபவர் அல்ல தந்தை. ஒருமுறைகூட கடோத்கஜனை நேர் நின்று அவர் நோக்கியதில்லை. அவரைக் குறித்து ஒரு சொல்லும் உரைத்ததில்லை. தன் அன்பின் எடை தாளாதவர்போல் அப்பேரன்பின் உலகப்பொருளை, அல்லது பொருளின்மையை எண்ணி நாணுபவர்போல அத்தனை பின்னகர்ந்து தனக்குள் அமர்ந்துகொள்கிறார்.

சுதசோமன் மீண்டும் அவரது ஆணைக்காக காத்துநின்றான். பீமன் “செல்க!” என்று கையசைத்து திரும்பி அருகே நின்ற பேருருவ அரக்கர் குலத்தோனிடம் “கவசங்களணிந்த யானைகள் ஆயிரம் முகப்பில் நின்றாகவேண்டும். நெடுந்தூண்கள் ஏந்திய ஐநூறு யானைகள் இருநிரையென நிற்கட்டும். அவை இக்களிற்றின் தந்தங்கள்” என்றான். அரக்கன் சுதசோமனை திரும்பிப்பார்த்துவிட்டு தலையசைத்தான். படைசூழ்கை முற்றிலும் வகுக்கப்பட்டுவிட்டபின் எழும் அந்த ஆணை பொருளற்றது என்று சுதசோமன் புரிந்துகொண்டான். அவனை தவிர்க்கும்பொருட்டு பேசப்படுவது. தான் அவனிடம் படைசூழ்கை அன்றி எதையும் பேச விழையவில்லை என தந்தை காட்டுகிறார்.

மீண்டும் தலைவணங்கி அவன் திரும்பி நடந்தபோது அவ்வழைப்பும் ஆணையும் எதற்காக என்று எண்ணிக்கொண்டான். இறுதியாக தன்னை பார்க்க விழைகிறாரா என்று எண்ணியபோது அவன் உதடுகளில் புன்னகை விரிந்தது. சர்வதனையும் அவ்வாறு அழைத்து ஒரு சொல் பேசியிருக்கக்கூடும். அவர் தன்னை தொடவில்லை என்பதை அவன் அதன்பின்னர் எண்ணிக்கொண்டான். தொடவில்லை என்றால் தொடுவதைப்பற்றியே அவர் எண்ணியிருக்கக்கூடும். அவ்வாறு மிகையாக எண்ணியமையாலேயே அதை இயற்றமுடியாமலாகும் அச்செயல் மேலும் மேலும் உணர்வுகள் செறிந்து எடை மிகுந்து உள்ளத்தால் அசைக்கவொண்ணாததாக மாறும். சுதசோமன் தன் படைப்பிரிவுக்கு திரும்பி வரும் வரை புன்னகைத்துக்கொண்டே இருந்தான்.

சுதசோமன் படைமுகப்பில் வந்து நின்று அருகே நின்ற ஏவலனிடம் “அனைத்தும் ஒருங்கிவிட்டனவா?” என்றான். மதங்க குலத்தை சேர்ந்த கூர்மிகன் எனும் பேருருவ கதைவீரன் அவன். “ஆம் இளவரசே, நமது களிறுகள் பொறுமையிழக்கத் தொடங்கிவிட்டன” என்று அவன் சொன்னான். புன்னகையுடன் கிழக்கை சுட்டிக்காட்டினான் சுதசோமன். பொறுமையிழப்பின் ஓசைகள் படைகளிலிருந்து வந்தன. யானைச்சங்கிலிகளின் குலுக்கம். புரவிகளின் செருக்கடிப்பு. வாழக்கிடைக்கும் இறுதிக்கணமாக இருக்கக்கூடும் இது. இதில் ஏன் திளைக்காமலிருக்கிறார்கள்? ஏனென்றால் உள்ளம் ஏற்கெனவே போரிலிறங்கிவிட்டது. உடல் தங்கி நின்றிருக்கிறது. உள்ளம் உடலை இழுக்கிறது.

முதல்முறையாக சுதசோமன் தன் உடலெங்கும் ஒரு பதற்றத்தை உணர்ந்தான். அது அவன் ஈடுபடும் நான்காம்நாள் போர். இம்மூன்று நாட்களிலும் ஒவ்வொரு கணமுமென அவன் களம்நின்று கதையும் வில்லும் ஏந்தி போராடி இருக்கிறான். மும்முறை லட்சுமணனிடமும், நான்கு முறை துருமசேனனிடமும், கௌரவ மைந்தர்கள் நூற்றுக்கு மேற்பட்டோரிடமும் நிகர்சமர் புரிந்திருந்தான். கௌதம குலத்து சுஷ்மிதன், ஊஷ்மளன், மதங்கசேனன் ஆகியோரையும், மாளவத்து இளவரசர்கள் அசீதன், அஸ்மாதன், அப்ரமாதன் ஆகியோரையும் தலை சிதற அடித்து கொன்றான். அவந்தியின் புஷ்கரனையும், புஷ்பதந்தனையும், புஷ்பமித்திரனையும் கொன்றான். ஆனால் ஒரு படைசூழ்கையில் முகப்பில் அவன் நிற்க நேர்ந்தது அதுவே முதல் முறை.

அவன் தந்தை தன் தோளில் தொட்ட இடத்தின்மேல் கைவைத்தான். அதன் பின்னரே அவர் தன்னை தொடவில்லை என நினைவுகூர்ந்தான். முதல்கணத் திகைப்புக்குப்பின் அவனுக்கு புன்னகையே மீண்டும் எழுந்தது. அவர் தொட எண்ணிய இடமா அது? உள்ளத்தால் விழிகளால் நூறுமுறை தொட்டிருப்பாரா? போர்முரசு எழுவதை அவன் அக்கணம் உயிர்பிரியும் கணத்தின் துடிப்புபோல் உணர்ந்தான். களம்புகுந்து கதைசுழற்றி வென்று செல்லவேண்டும். “சுதசோமன்! சுதசோமன்!” என எழும் குரல்கள் மெல்ல ஓய்ந்து “இளைய பைமி! இளைய பைமி!” என ஒலிக்கவேண்டும். மீண்டும் மீண்டும் மெய்ப்புகொண்டபடி விழிநீர் நிறைந்த கண்களுடன் அவன் காத்து நின்றிருந்தான்.

வெண்முரசின் கட்டமைப்பு