திசைதேர் வெள்ளம் - 27

பகுதி நான்கு : களியாட்டன்

bowமருத்துவநிலை நாளுக்குநாள் விரிந்து குறுங்காட்டுக்குள் புகுந்து பரவியிருந்தது. கைக்கு சிக்கிய அனைத்துப் பலகைகளாலும் ஏழடுக்காக படுக்கைகளை அமைத்திருந்தனர். உடைந்த தேர்தட்டுகளும் மூங்கில் துண்டுகளும் காட்டிலிருந்து வெட்டி கொண்டுவரப்பட்ட மரத்துண்டுகளும் சேர்த்து கட்டி அவை உருவாக்கப்பட்டன. ஆயினும் மருத்துவநிலையின் மையத்திலிருந்து மருத்துவர் நெடுந்தூரம் சென்று நோக்கவேண்டிய அளவிற்கு அது விரிந்தபோது தலைமை மருத்துவராகிய சுதேஷ்ணர் அதை மூன்று பகுதிகளாக பிரித்தார். மூன்றுக்கும் வெவ்வேறு மருந்துக்கருவூலத்தையும் மருத்துவர் நிரைகளையும் ஏவலர்த் தொகுதிகளையும் காவலர் அணியையும் உருவாக்கினார். அவர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளும் பொருட்டு ஊடே செய்திகளுடன் விரையும் ஒரு தூதர் குழுவும் உருவாக்கப்பட்டது.

அந்தியில் புண்பட்டோர் தாழ்வான தளம் கொண்ட வண்டிகளில் வந்து இறங்குவதை நோக்கிக்கொண்டு நின்றபோது அவர் கசப்பு நிறைந்த சிரிப்புடன் அருகே நின்றிருந்த துணைமருத்துவர் சாக்ஷரிடம் “நமக்கு உதவியாக இயங்குபவர்கள் இருவர். இக்களத்தில் போருக்குரிய தெய்வங்களான ருத்ரர்கள், மருத்துவநிலையில் இறப்பின் தெய்வமான யமன். இல்லையேல் இந்த மருத்துவநிலை ஒரு நகரளவுக்கு விரிந்திருக்கும்” என்றார். சாக்ஷர் “மெய்தான், ஆசிரியரே. நேற்று காவல்மாடத்தில் ஏறி நின்று போர்க்களத்தை பார்த்தேன். சிறிய அம்புபட்டு விழுபவர்களைக்கூட தேர்ச்சகடங்களும் புரவிக்குளம்புகளும் படைவீரர்களின் குறடணிந்த கால்களும்தான் மிதித்துக் கொல்கின்றன. இங்கு இறந்தவர்களில் பெரும்பாலானோர் தன் படையால் மிதித்துக் கொல்லப்பட்டவர்கள்” என்றார்.

“குருதிகள் கலந்துவிடுகின்றன. நம் கைக்கு புண்பட்டோர் வரும்போது உடலிலிருந்து குருதியும் மூச்சும் பெருமளவுக்கு ஒழுகிச்சென்றுவிட்டிருக்கின்றன. வாழவேண்டுமென்ற விழைவையும் அவர்கள் இழந்துவிட்டிருக்கிறார்கள். இங்கு வந்தவர்களில் மிகச் சிலரே உயிருடன் எஞ்சுகிறார்கள். இங்கு நாம் செய்வது அவர்கள் மருத்துவம் பெறாமல் இறந்தார்கள் என்று மூச்சுலகில் நின்று எண்ணலாகாதே என்று கருதி அளிக்கும் ஒரு நுண்ணிய நடிப்பை மட்டுமே” என்றார் சுதேஷ்ணர். சாக்ஷர் தலையசைத்து “போரின் இறுதி நாழிகையில் புண்பட்டு விழுந்து வழியும் குருதியுடன் இங்கு வருபவர்கள் மட்டுமே பிழைத்துக்கொள்கிறார்கள். எஞ்சியவர்கள் நாம் மருந்து அளிக்காவிடிலும் புண் ஆறி உயிர் மீளும் நிலையிலிருப்பவர்கள்” என்றார்.

“நல்ல நடிப்புக்கு பழகிவிட்டிருக்கிறோம்” என்றார் சுதேஷ்ணர். “நடிப்பில்லை, புண்பட்டு கதறுபவர்களைக் கண்டதும் நம் மருத்துவர்களின் கைகள் பதறுகின்றன. உள்ளம் கனிகிறது. ஒருவேளை அவர்கள் விழைவதே இத்தகைய எளிய அன்பை மட்டும்தானோ என்னவோ?” என்றார் சாக்ஷர். “மருத்துவம் இத்தனை பொருளிழந்த செய்கையாக மாறி நிற்பதை நான் கண்டதே இல்லை. இங்கிருந்து திரும்பி மீண்டும் நகருக்குச் சென்றால் நோயுற்று வரும் மக்களை நம்பிக்கையுடன் உடல் தொட்டு மீட்க என்னால் இயலுமா என்று ஐயுறுகிறேன்” என்றபின் சுதேஷ்ணர் திரும்பி நடந்தார். சாக்ஷர் ஒன்றும் சொல்லாமல் உடன் நடந்தார்.

மருத்துவநிலைகளில் இளம் மருத்துவர்கள் வெறிகொண்டவர்கள்போல அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். ஏவலர்களில் இரண்டாயிரம் பேரை தெரிவுசெய்து அவர்களுக்கு புண்களை கட்டுவதற்கும் மருந்துகளை அளிப்பதற்குமான பயிற்சியை முந்தையநாள் பகல் முழுக்க அவர்கள் அளித்திருந்தார்கள். அவர்கள் எப்போது துயில வேண்டுமென்று தெளிவான ஆணை இருந்தபோதிலும்கூட பகலில் அவர்கள் துயில்கொள்ளும் பொழுதில் படைமுகப்பில் எழுந்த பேரோசை ஆழ்துயில் கொள்ள அவர்களை இயலாதவர்களாக்கியது. துயிலின்மையால் விழி சிவந்து வாய் வறண்டு சித்தம் மயங்க அவர்கள் பித்துகொண்டவர்கள் போலிருந்தனர்.

அவர்களின் கண்களை நோக்கியபடி சென்ற சுதேஷ்ணர் திரும்பி புன்னகைத்து “மருத்துவர்களுக்குரிய தேவர்களில் அஸ்வினி தேவர்களைவிட சோமனே முதலாட்சி புரிகிறான்” என்றார். “சோமன் இன்றி போர் இல்லை” என்றார் சாக்ஷர். “இங்கு குடிக்கப்பட்ட மதுவும் உண்ணப்பட்ட அகிபீனாவும் அஸ்தினபுரியில் சென்ற நூறாண்டுகளில் உண்ணப்பட்டவற்றைவிட மிகுதி.” சுதேஷ்ணர் “சோமன் வாழ்க… அவன் களிவெறியின் தெய்வம். அழிக்கையில், கால்கீழிலிட்டு மிதிக்கையில் எழும் களிவெறிக்கு நிகர் வேறேது?” என்றார்.

சித்தம் அழிந்தமையால் காலமின்மையில் இருந்தனர் மருத்துவஏவலர். அவர்களுக்கு சொல்லப்பட்டதை மட்டும் செய்தனர். பூத வேள்விகளில் முதல் சில நாட்களுக்குப் பின் அவிபெய்வோர் வேத முழக்கத்தாலும் எரியிலெழும் புகையாலும் தங்களுக்குள் உருவான தாளத்தாலும் சித்தம் அழிந்து பிறிதொரு விழிகளுடன், வெறிகொண்ட கைகளுடன், தானாகவே முழங்கும் நாவுகளுடன் தெய்வமெழுந்தவர்கள்போல ஆடிக்கொண்டிருப்பதை அவர் பார்த்திருக்கிறார். அருவியைச் சூழ்ந்து நிற்கும் மரக்கிளைகள் என எரிகுளத்திலெழும் அனலோனை சூழ்ந்துகொண்டிருப்பவர்கள் அசைவு கொண்டிருப்பதாக தோன்றும்.

அப்போதுதான் புண்பட்டவர்கள் வண்டிகளில் வந்து முடிந்திருந்தனர். அந்தப் பொழுது ஒவ்வொருவரும் கைகளால் நிலத்தை அறைந்தும் தலையை முடிந்த அளவுக்கு தூக்கியும் “இங்கே! இங்கே பாருங்கள்! நான் இறந்துகொண்டிருக்கிறேன்! உத்தமரே, என்னை காப்பாற்றுங்கள்… உத்தமரே, ஏழு மைந்தரின் தந்தை… என்னை சாகவிடாதீர்கள்… என் குருதி ஒழுகிக்கொண்டிருக்கிறது!” என்று கூவினார்கள். “தெய்வங்களே! மூதாதையரே!” என்று அரற்றி அழுதனர். உதடுகள் கிழிந்தவர்கள், பற்களை இழந்தவர்கள், கழுத்தில் துளைவிழுந்து மூச்சு சிதைந்தவர்கள் வெற்றோசைகளை எழுப்பினர். ஓசைகள் உடலுக்குள்ளேயே சிக்கிக்கொண்டவர்கள் நெளிந்தனர்.

மெய்யாகவே இறக்கத் தொடங்கியிருப்பவர்களின் கண்களில் உலக நோக்கு மறைந்து பொருளின்மையெனத் தோன்றும் வெறிப்பு எழுந்துவிட்டிருந்தது. அவர்கள் தங்கள் அருகே மிருத்யூதேவியை பார்த்துவிட்டிருக்கிறார்கள் என்று மருத்துவர் சொல்வதுண்டு. அவர்களின் சித்தம் அவளை நோக்கி ஒழுகத் தொடங்கிவிட்டிருக்கும். மிக அருகில் சிம்மம் வந்துவிட்டதென்றால் செயலிழந்து தன்னை ஒப்படைக்கும் எளிய வேட்டை விலங்கென பணிவார்கள். கொழுந்தாடும் பெருந்தழலை நோக்கி இழுபட்டுச் செல்லும் எளிய சருகுகள் என அவளை நோக்கி செல்வார்கள்.

புண்பட்டு வந்தவர்களை படுக்கவைக்கும் பொருட்டு இடம் தேடி அலைந்த மருத்துவ ஏவலர் அடுக்குப் பலகைகளில் கிடந்திருந்த முந்தைய நாள் புண்பட்ட நோயாளிகளின் கால்களைப் பற்றி மெல்ல உலுக்கினர். அதன் பொருளென்னவென்று அறிந்திருந்த அவ்வீரர்களில் தன்னிலை கொண்டிருந்தவர்கள் “நான் இறக்கவில்லை! உத்தமரே, நான் இன்னும் இறக்கவில்லை!” என்று கூவினர். காய்ச்சலின் தடித்த போர்வைக்குள் இளவெம்மையில் உடல் சுருண்டு துயில்கொண்டிருந்தவர்கள் அவ்வாழத்திலிருந்து குரலெழுப்பினர். அது நெடுந்தொலைவு கடந்து வந்து மெல்லிய முனகலாக ஒலித்தது.

ஓசையற்றவர்களை இழுத்து கீழே போட்டு அவர்கள் நெஞ்சிலும் மூக்கிலும் கைவைத்து பார்த்தனர். உயிர் பிரிந்திருப்பதை உறுதி செய்தபின் மரவுரி விரிப்பில் புரட்டிப் போட்டு தூக்கிச்சென்று அப்பால் காத்திருந்த வண்டிகளில் ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கினர். மெல்லிய மணியோசையுடன், மீன்நெய் விளக்கின் ஒளியில் குருதியில் முட்டையிடும் பூச்சிகள் ஒளித்துகள்களாகச் சுழன்று பறக்க அவ்வண்டிகள் மருத்துவநிலையிலிருந்து கிளம்பிச்சென்றன. மருத்துவநிலைக்குள் வரும் வண்டிகளின் அளவுக்கே செல்பவையும் இருந்தன. வருபவை நின்றுவிட்ட பின்னரும் செல்பவை புலரி வரை தொடர்ந்தன.

சுதேஷ்ணர் அரசகுடியினருக்கென அமைக்கப்பட்டிருந்த பகுதியை நோக்கி சென்றார். மேலே விண்ணில் துயில் விழித்த சிம்மத்தின் வயிற்றுக்குள் ஒலிக்கும் உறுமல் என இடியோசை எழுந்தது. அவர் அண்ணாந்து நோக்கியபோது மிக அப்பால் முகில்களுக்குள் மின்னலொன்று அதிர்ந்து சென்றது. முகில்குவைகள் உருத்தெளிந்து மறைந்தன. தொடர்ந்து வந்துகொண்டிருந்த சாக்ஷரிடம் “மழை பெய்யுமென்றால் அதைவிட தீங்கு பிறிதில்லை. இங்கிருப்பவர்கள் மிகச் சிலர் தவிர பிறர் புண் பழுத்து உயிர்துறப்பார்கள்” என்றார்.

சாக்ஷர் மறுமொழி சொல்லவில்லை. “யானைத்தோல் கூடாரங்கள் அமைக்கலாம். மெழுகுத்தட்டிகளும் ஓரளவு உள்ளன” என்றார் சுதேஷ்ணர். “ஆனால் இங்கிருப்பவர்கள் ஆயிரத்தில் ஒருவருக்குக்கூட அவை போதுமானவை அல்ல. பெரும்பாலும் அரசகுடியினருக்கு மட்டுமே அவற்றை அளிக்க முடியும்” என்ற சுதேஷ்ணர் மீண்டும் புன்னகைத்து “எளிய வீரர்கள் இறப்பார்கள். அவர்கள் இருந்தாலென்ன இறந்தாலென்ன? வெட்டிச் சரிக்கப்படும் வாழைகள். புதிய கன்றுகள் சில ஆண்டுகளிலேயே தலையெடுக்கும்” என்றார்.

அவர் தனக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கிவிட்டிருப்பதை சாக்ஷர் உணர்ந்திருந்தார். “ஒரு தலைமுறைக்குள் இப்போர் வெறும் வீரச்செயல்களின் கதைகளாக மாறும். புகழ்கொண்டு விண்புகுந்தவர்களின் வரலாறுகள் பெருகும். அவற்றைக் கேட்டு மீண்டும் ஒரு பெரும்போரை கனவு காணத்தொடங்குவார்கள். மானுடர் உள்ள அளவும் போரும் இங்கிருக்கும்” என்றார் சுதேஷ்ணர். “இன்றுவரை பேசப்பட்ட எந்தப் போரிலாவது மானுடத்துயரின் கதை உள்ளதா? எவரேனும் மருத்துவநிலைகளைப்பற்றி, சுடுகாடுகளையும் இடுகாடுகளையும் பற்றி ஒரு வரியேனும் பாடியிருக்கிறார்களா?”

அவர்கள் மெழுகுத் தட்டிகளாலும் மூங்கில்களாலும் கட்டப்பட்ட உயரமற்ற விரிந்த கொட்டகைக்குள் நுழைந்தனர். அங்கே தரையில் வைக்கப்பட்டிருந்த பலகைகளில் அரசகுடியின் வீரர்கள் படுத்தும் அமர்ந்தும் பேசிக்கொண்டிருந்தனர். பலர் அகிபீனா மயக்கில் துயின்றனர். ஏழு திரியிட்ட நெய்விளக்கு அசைவிலாச் சுடர் சூடி நின்றது. சுதேஷ்ணரை பார்த்ததும் மருத்துவ உதவியாளர் நால்வர் அருகே வந்து வணங்கினார்கள். “எப்படி இருக்கிறார்கள்?” என்று அவர் கேட்டார். “கிராத குடியின் பன்னிரு இளவரசர்கள் சற்று முன் உயிர் துறந்தார்கள். பதினெண்மர் காய்ச்சல் கொண்டு பழுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓரிரு நாழிகை கடந்த பின்னர்தான் உறுதி சொல்ல இயலும்” என்றார் இளைய மருத்துவரான கண்டகர்.

“பாண்டவ இளையோர்?” என்று சுதேஷ்ணர் கேட்டார். “அவர்களில் எவருக்கும் உயிர்ப்புண் இல்லை” என்றார் கண்டகர். “அபிமன்யூ?” என்றார் சுதேஷ்ணர். “ஆழமான புண்தான். ஆயினும் அது உயிர் குடிக்க வல்லதல்ல” என்றார் இன்னொரு மருத்துவரான சுமுகர். சுதேஷ்ணர் “இறுதிக்கணத்தில் பிதாமகரின் கையைப்பற்றி தடுக்கிறார்கள் மண் மறைந்த மூதாதையர்கள்” என்றபின் கசப்புச் சிரிப்புடன் “அவர் தன் மூதாதையரின் கைகளையும் தட்டி விலக்கும் தருணமொன்று வரும்” என்றார்.

“நேற்று அவர் முதல்முறையாக போர்நெறியை மீறிவிட்டார் என்றனர்” என்றான் மருத்துவ உதவியாளனாகிய சபரன். “ஆம், தெரியும்படியான மீறல். அவருக்கும் பிறருக்கும். ஆனால் படைக்கலம் எடுத்து களம்நின்ற அனைவரும் முதற்கணம் முதல் ஒவ்வொரு அம்புக்கும் அணுஅணுவென நெறிகளை மீறிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள்” என்றார் சுதேஷ்ணர். “நேற்று மறைந்திருந்து அம்பு தொடுத்து அபிமன்யூவை வீழ்த்தியிருக்கிறார். அந்நெறி மீறலால் மேலும் சீற்றம் கொண்டு நெறிகளனைத்தையும் மீறி களத்தில் சுழன்று பல்லாயிரவரை கொன்றிருக்கிறார். நேற்று மட்டும் நாற்பத்தெட்டு இளவரசர்கள் அவரால் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்றார் கண்டகர்.

“ஆசிரியரே, பிதாமகர் இவ்வண்ணமே போரிடுவாரெனில் இன்னும் ஓரிரு நாட்களில் நமது படைகள் முற்றாகவே அழியும்” என்றான் சபரன். சுதேஷ்ணர் “அதைப்பற்றி கவலை கொள்ளவேண்டியவர்கள் அரசர்கள். மருத்துவநிலையில் போர்வெற்றிகளோ தோல்விகளோ நமக்கு பொருட்டல்ல. நமது எதிரி அவள் மட்டுமே. அனல்வண்ணக் கூந்தலும் செங்குருதி இதழ்களும் சுடர்விழிகளும் கொண்டு களத்தில் எழுபவள். யாதனையையும் வியாதியையும் தன் இருபக்கமும் நிறுத்தி பேருருக்கொண்டு பரவும் மிருத்யூதேவி. நம் கணக்குகள் அவளுடன் மட்டுமே” என்றார்.

மீண்டும் மீண்டும் சொல்லப்படும் வரியாயினும்கூட சபரனின் விழிகள் மாறின. “ஆம்” என்று அவன் தலையை அசைத்தான். “வருக!” என்று சுதேஷ்ணர் முன்னால் சென்றார். அபிமன்யூ தனது மஞ்சத்தில் மலரமர்வில் கண்மூடி அமர்ந்திருந்தான். அவன் விரல்நுனிகளில் இருந்த அசைவின்மை அகம் அமைந்திருப்பதை காட்டியது. அருகில் சென்று “வணங்குகிறேன், இளவரசே” என்றார் சுதேஷ்ணர். “தங்கள் உடற்புண்கள் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் என்று எண்ணுகின்றேன்.”

அபிமன்யூ விழிதிறந்து “அனைத்து திறப்புகளையும் சேர்த்துக் கட்டினர். ஒன்பது இயற்கை வாயில்களை மட்டும் விட்டுவிடுங்கள், இன்னும் ஒருமுறை எண்ணி சரி பாருங்கள் என்றேன்” என்று சொல்லி நகைத்தான். சுதேஷ்ணர் அவனருகே அமர்ந்து அவன் இடக்கையைப் பற்றி நாடி பார்த்தார். இளம் புரவிக்கன்றின் குளம்புகள்போல பிங்கலை கட்டின்றி துடித்தது. விரைவுக்காலத்தில் எழும் இசையில் அதிரும் யாழ் நரம்புகள்போல இடை இழுபட்டிருந்தது. ஆனால் ஒத்திசைவு இருந்தது. “தாழ்வில்லை. நீங்கள் இன்றிரவு இங்கு துயின்று காலையில் திரும்பிச் செல்லலாம்” என்றார்.

“நீங்கள் சொல்லவில்லையென்றாலும் காலை எழுந்து களம்செல்லத்தான் போகிறேன். நாளை பீஷ்மரைக் கொன்று மீள்வேன்” என்றான் அபிமன்யூ. உள்ளெழுந்த எரிச்சலால் விழிகள் சுருங்க “மேலும் ஒருநாள் நீங்கள் ஓய்வெடுத்தல் நன்று. இணைத்துக் கட்டப்பட்ட தசைகள் ஒன்றையொன்று புரிந்துகொள்ள நாம் பொழுதளிக்கவேண்டும்” என்றார் சுதேஷ்ணர். “படுத்துக்கிடப்பதா? முகப்பில் போர் நிகழ்கையில் இங்கே தன்னுணர்வுடன் இப்படுக்கையில் கிடப்பேன் என்று எண்ணுகிறீர்களா?” என்றான் அபிமன்யூ.

“இளவரசே, உங்கள் போர்வெறிகளையோ இலக்குகளையோ அறியவேண்டிய தேவை எனக்கில்லை. என் முன் இருப்பது வெறும் உடல். அதை அணிகளும் அடையாளங்களும் சூட்டி அரசென்றும் படைகளென்றும் ஆக்குவது உங்கள் நெறி. எனக்கும் எனையாளும் தெய்வங்களுக்கும் இது உயிர் தேங்கியிருக்கும் ஊன்கலம் மட்டுமே. நான் சொல்வது அதற்குரிய நெறிகளைத்தான்” என்றார் சுதேஷ்ணர். “நீங்கள் தேர் சீரமைக்கும் தச்சன். நான் அதிலேறி களம்புகும் வீரனைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன், அகல்க!” என்று அவன் கைவீசி காட்டினான்.

சுதேஷ்ணர் “நன்று” என்று தலைவணங்கி எழுந்தார். அப்பால் துயிலில் படுத்திருந்த சுருதகீர்த்தியின் அருகே சென்று அவன் விழிக்காமல் இடக்கையைப்பற்றி நாடி பார்த்தார். சீரான பெருநடையில் சென்று கொண்டிருந்தது இடை. சுஷும்னையில் விசை இருந்தது. “சிறிய புண்கள்தான்” என்று அவருடன் வந்த கண்டகர் சொன்னார். “பன்னிரு இடங்களில் அம்புகள் தைத்திருந்தன. பெரும்பாலும் அம்பு முழுவிசை குறைந்து மண்வளையும் தொலைவிலேயே இருந்து போரிட்டிருக்கிறார். ஆகவே முதல் தசையரணைக் கடந்து எந்த அம்பும் நுழையவில்லை. உள்ளுறுப்புகள் பாதுகாப்பாகவே இருக்கின்றன.”

“அது உயிரின் எச்சரிக்கை. உடலை அது ஆள்கிறது. இயல்பாக அவ்வெல்லையை எவ்வுயிரும் மீறுவதில்லை. வெறியூட்டி கனவுபெருக்கி சாவை விழைந்து அவ்வெல்லையை கடக்கிறார்கள். அவ்வெல்லையை கடப்பதொன்றிலேயே குறியாக இருக்கிறார் அவர்” என்று விழிகளால் அபிமன்யூவைக் காட்டி சாக்ஷர் சொன்னார். “ஆம், அவர் களம்படுவார். அதன் பொருட்டே இங்கு வந்துள்ளார்” என்றபடி சுதேஷ்ணர் எழுந்தார். சுதசோமனின் அருகே சென்றார். அவன் உடலில் தசைகள் சதைந்து நீலம்பாரித்தும் செந்நிறமாகக் கன்றியும் வீங்கி நரம்புகள் புடைத்தும் தெரிந்தன. சீரான மூச்சு எழுந்துகொண்டிருந்தது.

“களம்படுவதற்கு என்றே போருக்கெழுபவர்கள் உண்டோ?” என்றார் சாக்ஷர். “சிலர் உண்டு. களத்திற்கு வெளியே உள்ள வாழ்க்கை அவருக்கு பொருளற்றதாகத் தோன்றுகிறது. அங்கே அவர்கள் ஒருகணமும் நிறைவையோ மகிழ்வையோ உணர்வதில்லை” என்றபடி சுதேஷ்ணர் நாடியை பார்த்தார். இடையும் பிங்கலையும் முற்றிலும் இணையாக இருந்தன. “ஆனால் அவர் எப்போதும் நகையாட்டிலும் பெண்களியாட்டிலும் திளைப்பவரல்லவா?” என்றார் சாக்ஷர். “நகையாட்டிலும் களியாட்டிலும் தங்களை ஆழ்த்திக்கொள்பவர்கள் வாழ்க்கையை அதனூடாக புறக்கணிக்கிறார்கள். மதுவுண்டு மயங்கி காலத்தை கடப்பவர்களைப்போல” என்றபின் எழுந்த சுதேஷ்ணர் “அதற்கும் அப்பால் பிறிதொரு ஆழமான புண் அவருக்குள் உள்ளது” என்றார்.

“எப்படி அறிந்தீர்கள், ஆசிரியரே?” என்றார் சாக்ஷர். “அவருடைய விரல்களால். எட்டு விரல்களும் ஊழ்கத்திலென ஓய்ந்திருக்க கட்டைவிரல் நாணேற்றிய வில் என நின்றது. உள்ளே இழுபட்டு நின்றிருக்கிறது நாடி ஒன்று” என்றார் சுதேஷ்ணர். “ஆழ்ந்து புண்பட்ட உடல் தன்னை முடிச்சவிழ்த்துக்கொண்டு சிதறியழிய விரும்புகிறது. உள்ளமும் அவ்வாறே.” சாக்ஷர் திரும்பி நோக்கிவிட்டு “உள்ளப்புண் என்றால்?” என்று கேட்டு சுதேஷ்ணரை நோக்கி ஒருகணத்திற்குப் பின் விழிவிலக்கிக்கொண்டார்.

சுதேஷ்ணர் சுருதசேனனை நோக்கி சென்றார். அவனும் துயின்றுகொண்டிருந்தான். “இடை சற்று ஊடியுள்ளது. பிங்கலை ஆற்றல்கொண்டிருப்பதனால் தன் துணைவியை ஆற்றும். பழுதில்லை” என்றார். திரும்பி கண்டகரிடம் “மருந்துகளால் ஆவதொன்றுமில்லை. ஆனாலும் நோக்கிக்கொள்க! இவர்கள் நல்லுறக்கம் கொள்வார்களென்றாலே நலம்பெறுவர்” என்றார். கண்டகர் “அவரை துயிலவைக்க இயலவில்லை, ஆசிரியரே” என அபிமன்யூவை விழிகாட்டினார். “அவர் தந்தையும் துயில்வதில்லை” என்றார் சுதேஷ்ணர்.

ஒவ்வொரு பாண்டவர்களையாக நோக்கிக்கொண்டு சொல்லின்றி சுதேஷ்ணர் நடந்தார். அவருடன் நடந்தபடி சாக்ஷர் “மீள மீள அனைத்து அம்புகளும் இவர்களையே குறிநோக்குகின்றன. ஒவ்வொருநாளும் அந்திமுரசு ஒலித்ததும் படையினர் அனைவரும் இவர்களில் எவர் எஞ்சியிருக்கிறார் என்றே பார்க்கிறார்கள். மறுபக்கம் கௌரவ அரசமைந்தர் நாளுமென உயிர் துறக்கிறார்கள்” என்றார்.

“இன்னும் ஒரு கண்காணா எல்லையை இருதரப்பும் நடுவே வைத்து விளையாடிக்கொண்டிருக்கின்றன. அது கடக்கையில் எத்தனை மைந்தர் எஞ்சுவார்கள் என்பது தெய்வங்களுக்கே சொல்லற்குரியது” என்றார் சுதேஷ்ணர். அவர் கைகழுவ தாலத்தில் படிகாரமிட்ட நீரை நீட்டினர். அவர் கழுவி மரவுரியில் துடைத்த பின் “பிற இளவரசர்கள் எப்படி உள்ளனர் என்பதை நோக்கி என்னிடம் சொல்லுங்கள், சாக்ஷரே” என்றார்.

வெளியே பிரதிவிந்தியன் நின்றிருந்தான். யௌதேயன் சற்று அப்பால் நின்றான். யௌதேயனுடன் நின்ற சதானீகன் அருகே வந்து வணங்கி “மூத்தவர் தங்களிடம் பேச விழைகிறார், மருத்துவரே” என்றான். சுதேஷ்ணர் அருகே சென்று தலைவணங்கி நின்றார். “இளையோருக்கு உயிர்ப்புண் ஏதேனும் உண்டா?” என்றான் பிரதிவிந்தியன். “இல்லை. அவர்களில் கூடுதலாக புண்பட்டவர் அபிமன்யூதான். அவர் உயிர்விசையின் உச்சத்திலிருக்கிறார்” என்றார் சுதேஷ்ணர்.

“அவர்களில் எவரும் நாளை போருக்கெழ இயலாதல்லவா?” என்று சதானீகன் கேட்டான். “அவர்கள் போருக்கெழமாட்டார்கள் என்று என்னால் சொல்ல இயலவில்லை” என்றார் சுதேஷ்ணர். பிரதிவிந்தியன் “நாளைய போர் கடுமையானதாக இருக்குமென்று தோன்றுகிறது, மருத்துவரே. இன்று பிதாமகர் பீஷ்மர் பிறிதொருவராக ஆனார். தொலைவிலிருந்து நான் அதை பார்த்தேன். வெறிகொண்டு கைகள் பெருகி கொலைத்தெய்வம் என்றாகி நம் படைகளை சூறையாடினார்” என்றான். சுதேஷ்ணர் தலையசைத்தார்.

பிரதிவிந்தியன் “இன்று அமைத்த படைசூழ்கையே எங்களால் இயல்வதில் உச்சம். அனைத்துப் படைவீரர்களையும் தோளுக்குத் தோள் இணைநிறுத்தி சூழ்கை அமைத்தோம். இருந்தும் அவர்களின் முகப்பை எங்களால் வளைத்துக்கொள்ள இயலவில்லை. பிதாமகர் பீஷ்மர் கூர்வாளால் என எங்களை இரண்டாக உடைத்து சிதைத்தார். ஒவ்வொரு நாளும் அவர் எங்களுக்கு அளிக்கும் அழிவு பெருகிவருகிறது. இன்று சென்ற வெறியுடன் நாளை வருவார் எனில் என் இளையோர் எவரும் களத்திலிருந்து மீள இயலாது” என்றான்.

சுதேஷ்ணர் வெறும் விழிகளுடன் நின்றார். கண்டகர் “நாளை அவர் அவ்விசையுடன் வர வாய்ப்பில்லை. இன்றைய மீறலால் அவர் உளம் நைந்திருப்பார். களைத்தவராகவே களம்புகுவார்” என்றார். பிரதிவிந்தியன் “அதை எவ்வாறு சொல்லமுடியும்?” என்றபின் “சொல்க மருத்துவரே, அது அவ்வாறுதானா?” என்றான். “இல்லை” என்றார் சுதேஷ்ணர். “களியாட்டுக்குரிய தேவன் சோமன். நஞ்சுக்கும் அவனே தெய்வம். நஞ்சைப்போல் உடலை மதர்ப்பு கொள்ளச்செய்வது பிறிதேதும் இல்லை. நஞ்சூறி இறப்பவர்களின் இறுதிக் கணங்களில் நாடியை பார்த்திருக்கிறேன். சிவசக்தி நடனம் போலிருக்கும்” என்றார்.

அவர் சொல்வது புரியாமல் வெறுமனே நோக்கினான் பிரதிவிந்தியன். “அவருடைய ஆழம் மகிழ்வுகொண்டிருக்கும். துயில்நீப்பால் களைத்திருப்பார். களத்தில் வந்தால் களியாட்டின் தேவன் அவரை எடுத்துக்கொள்வான்” என்று சுதேஷ்ணர் சொன்னார். “தம்பியர் நாளை எழாமலிருக்க ஏதேனும் செய்ய இயலுமா? உங்களிடம் அதற்கான மருந்துகள் இருக்கும். அகிபீனா சற்று மிகுதியாக அளித்துவிடுங்கள். காலையில் அவர்கள் தன்னிலை மறந்து துயிலட்டும்” என்றான் பிரதிவிந்தியன்.

“ஓரிரு நாட்களில் எப்படியும் அவர்கள் களம் புகுந்துதான் ஆகவேண்டும்” என்று சுதேஷ்ணர் சொன்னார். “ஓரிரு நாட்களில் எப்படியும் பிதாமகர் பீஷ்மரை என் சிறிய தந்தை வீழ்த்திவிடுவார்” என்றான் பிரதிவிந்தியன். சுதேஷ்ணர் “இன்று களத்திலிருந்து அவர் உயிர் தப்பி ஓடினார், சினந்து யாதவர் தன் படையாழியை எடுத்து பின் ஒழிந்தார் என்று அறிந்தேன்” என்றார். சினத்துடன் யௌதேயன் “களத்தில் பின்வாங்குவது தப்பி ஓடுவதல்ல. அதுவும் போரின் ஒரு பகுதியே” என்றான்.

“நான் போரைப்பற்றி நுண்ணிதின் அறிந்தவனல்ல” என்றார் சுதேஷ்ணர். “இங்கு ஏவலர் சொல்வதை சொன்னேன்.” பிரதிவிந்தியன் “எங்கள் போரை நிகழ்த்துவது தந்தையர் அல்ல, இளைய யாதவர். ஒருபோதும் ஒரு நிலையிலும் இப்போரில் நாங்கள் தோற்கப்போவதில்லை. எங்கள் எல்லை என்ன, நாங்கள் அளிக்கும் உச்சக்கொடை என்ன என்று அவர் நோக்கிக்கொண்டிருக்கிறார். ஐயமே வேண்டியதில்லை, பீஷ்மரை களத்தில் இன்று அவர் வீழ்த்துவார்” என்றான். சுதேஷ்ணர் “நன்று, பிணங்கள் குறையும்” என்றார்.

“இன்று தன் படையாழியுடன் அவர் எழுந்தாரென்றால் அதுவும் ஒரு நாடகம்தான். எங்களுக்கோ வேறு எவருக்கோ எதையோ அவர் அறிவுறுத்துகிறார். இன்றிருக்கும் நிலையில் நாங்கள் அவரை புரிந்துகொள்ளவில்லை. ஒருவேளை அதை இளைய தந்தை புரிந்துகொண்டிருக்கக்கூடும்” என்று பிரதிவிந்தியன் சொன்னான். “ஆனால் இனிமேலும் பிதாமகர் முன் என் இளையோரை கொண்டு நிறுத்துவது என்னால் இயலாது. எண்ணிநோக்கவே அச்சமூட்டுகிறது.”

“நான் ஒன்றும் செய்வதற்கில்லை, இளவரசே” என்றார் சுதேஷ்ணர். “அகிபீனாவை அளிப்பது மிக இடர்மிக்கது. அது சித்தத்தை அமிழ்த்தி வைக்கிறது, அழிப்பதில்லை. காலையிலெழும் போரின் பேரோசை அவர்களுக்குள் சென்றபடிதான் இருக்கும். அதை உள்ளுறையும் போராளி நன்கறிவான். மிதமிஞ்சிய அகிபீனாவுடன் அவர்கள் போருக்கெழுந்து களம்புகுவார்கள் என்றால் திறனழிந்து அம்புகளுக்குமுன் நின்றிருக்க வாய்ப்பாகும்.”

கெஞ்சும் குரலில் “நான் சொல்வதை சற்று புரிந்துகொள்ளுங்கள், மருத்துவரே” என்றான் பிரதிவிந்தியன். “மருத்துவத்தை மட்டுமே நான் செய்ய இயலும். போர்சூழ்கைகளில் எனக்கு பங்கில்லை” என்றபின் சுதேஷ்ணர் தலைவணங்கினார். சற்றுநேரம் நோக்கியபின் பிரதிவிந்தியன் திரும்பிச்சென்றான். அவன் தம்பியர் உடன்சென்றனர்.

வெண்முரசின் கட்டமைப்பு