திசைதேர் வெள்ளம் - 19
முற்புலரியில் கடோத்கஜன் அணிந்தொருங்கி கிளம்பியபோது ஒரே தருணத்தில் வியப்பும் ஏமாற்றமும் அசங்கனுக்கு ஏற்பட்டது. இடையில் அனல்நிறப் புலித்தோல் அணிந்து, தோளில் குறுக்காக இருள்வண்ணக் கரடித்தோல் மேலாடையை சுற்றி, கைகளிலும் கழுத்திலும் நீர்வண்ண இரும்பு வளையங்கள் பூட்டி, தலையில் செங்கருமையில் வெண்பட்டைகள் கொண்ட பெருவேழாம்பல் சிறகுகள் சூடி அவன் சித்தமாகி வந்தான். வானம் பின்னணியில் விண்மீன்களுடன் விரிந்திருக்க மயிரிலாத அவனுடைய பெரிய தலை முகில்கணங்களுக்குள் இருந்தென குனிந்து அவனை பார்த்தது. அசங்கன் உடல்மெய்ப்பு கொண்டான். சற்றுநேரம் அவனுக்கு குரலெழவில்லை.
கடோத்கஜன் “நான் நீண்டபொழுது எடுத்துக்கொள்ளவில்லை அல்லவா?” என்றான். “இல்லை, மூத்தவரே” என மூச்சிரைத்து பின் மீண்டு “இங்கு குடித்தலைவர்கள் இந்த ஆடையை அணிந்தே வருகிறார்கள்” என்றான் அசங்கன். “நீங்கள் அவர்களை அரசர்களென ஒப்பாவிட்டாலும் தங்கள் குடிக்கு அவர்கள் அரசர்களே” என்ற கடோத்கஜன் அவன் தோளில் எடைமிக்க கைவைத்து “செல்வோம்” என்றான். வெறும் தொடுகையிலேயே எப்படி பேராற்றலை உணரமுடிகிறது என அசங்கன் வியந்தான். யானையின் துதிக்கை மிக மெல்ல தோளில் படிகையில் அவ்வாறு பேராற்றலை அவன் உணர்ந்ததுண்டு என எண்ணிக்கொண்டான்.
யுதிஷ்டிரரின் அவைமாளிகைக்குச் செல்லும் பாதையின் முகப்பிலேயே பிரதிவிந்தியன் தன் உடன்பிறந்தாருடன் அவர்களுக்காக காத்து நின்றிருந்தான். அசங்கன் “உங்கள் உடன்பிறந்தார், மூத்தவரே” என்றான். கடோத்கஜன் “தெரிகிறது, முதலில் நிற்பவன் பிரதிவிந்தியன், அவனுக்குப் பின்னால் நிற்பவன் யௌதேயன். இருவரும் மூத்த தந்தையைப் போலவே இருக்கிறார்கள். அவர் எங்கள் காட்டுக்கு வந்திருந்தபோது இதே போன்ற முகத்துடன் இருந்தார்” என்றான். “அவனுக்குப் பின்னால் நிற்பவர்கள் நகுலரின் மைந்தர்கள் சதானீகனும் நிர்மித்ரனும். அவர்கள் இளைய தந்தை சகதேவரின் வார்ப்புத் தோற்றம் கொண்டுள்ளனர்.”
கடோத்கஜனின் உடலே மகிழ்ச்சியிலாடி நகைப்பதுபோல அசங்கனுக்கு தோன்றியது. “நானே சொல்கிறேன். அதோ பின்னால் நிற்பவன் சுருதகீர்த்தி, இன்னொருவன் சுருதசேனன்” என்றான். விலகி பின்னால் நின்றிருந்தவர்களை நோக்கி “அப்பெருந்தோளர்களை சொல்லவே வேண்டாம். அவர்களில் முன்னால் நிற்பவன் சுதசோமன், பின்னால் நிற்பவன் சர்வதன்” என்றான். “அடுமனை வாழ்க்கை தெரிகிறது உடலில்” என்று சொல்லி தலையை அசைத்து சிரித்தான்.
கடோத்கஜனுடன் உத்துங்கனும் உடன்வந்தான். தொலைவிலேயே அவர்களை பார்த்த பிரதிவிந்தியன் கைகளைக் கூப்பியபடி இருபுறமும் சதானீகனும் சுருதகீர்த்தியும் நிர்மித்ரனும் சுருதசேனனும் வணங்கியபடி உடன்வர அருகணைந்தான். “நீங்கள் முறைமைச்சொல் உரைக்கவேண்டும், மூத்தவரே. அவர்கள் உங்களை வணங்கினால் புகழும் செல்வமும் நல்வாழ்வும் அமைக என வாழ்த்தவேண்டும்” என்றான் அசங்கன். “இன்னொருமுறை சொல்” என்றான் கடோத்கஜன். “புகழும் செல்வமும் நல்வாழ்வும் அமைக என்று…” என்றான் அசங்கன்.
பிரதிவிந்தியன் அரசமுறைப்படி சீரான நடையுடன் வர கடோத்கஜன் சிறிய வளைந்த கால்களில் தாவித்தாவி சென்றான். இரு கைகளையும் விரித்து உரக்க நகைத்தபடி பிரதிவிந்தியனை அணுகினான். பிரதிவிந்தியனை தூக்கி தலைக்கு மேல் வீசப்போகிறான் என்று எண்ணியதுமே திகைப்பெழ அசங்கன் நின்றுவிட்டான். பிரதிவிந்தியன் குனிந்து கடோத்கஜனை கால்களைத் தொட்டு வணங்கி “வணங்குகிறேன், மூத்தவரே. தங்கள் காலடிகளை வணங்கும் பேறு வாய்த்தது” என்றான்.
கடோத்கஜன் அவன் இரு தோள்களையும் பற்றி மேலே தூக்கி தன் நெஞ்சோடணைத்துக் கொண்டான். பிரதிவிந்தியனின் கால்கள் காற்றில் தவித்தன. கடோத்கஜன் அவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டு நிலத்தில் நிறுத்திவிட்டு பிற உடன்பிறந்தாரை நோக்கி கைவிரித்தான். அவர்கள் குனிந்து வணங்கி முறைச்சொல் உரைப்பதற்குள்ளாகவே ஒவ்வொருவராக பாய்ந்து பற்றி இழுத்து உடலுடன் சேர்த்துக்கொண்டு முத்தமிட்டான். அவன் விட்டதுமே உத்துங்கனும் பிரதிவிந்தியனையும் இளையவர்களையும் அள்ளி அணைத்து முத்தமிட்டான். பிரதிவிந்தியன் திகைத்தாலும் உடனே புரிந்துகொண்டு நகைத்தான்.
கடோத்கஜன் நிர்மித்ரனை அவன் எதிர்பாராத கணம் தூக்கி மேலே வீசிப்பிடித்து சுழற்றினான். சதானீகனை உத்துங்கன் தூக்கி வீசிப் பிடித்தான். அவர்கள் கூவி கைவிரித்து நகைத்தனர். அனைத்து முறைமைகளும் அகல அவர்களனைவருமே கடோத்கஜனின் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்க விழைந்தார்கள். அவர்களை அவன் வீசிப்பிடித்தான். குடுமியைப்பற்றிச் சுழற்றினான். தூக்கி உத்துங்கனை நோக்கி எறிய அவன் பற்றிக்கொண்டு திரும்ப வீசினான். மூச்சிரைக்க சிரிப்பு முகத்தில் அசையாச் சுடர் என நின்றிருக்க அவர்கள் ஓய்ந்தனர்.
நிர்மித்ரன் “தாங்கள் மூதன்னை குந்திதேவியை இப்படி தூக்கி வீசி விளையாடுவீர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றான். “ஆம், அது நெடுங்காலம் முன்பு… அன்று நான் இளமையாக இருந்தேன். என் தலையில்கூட புன்மயிர் இருந்தது” என்று அவன் சொன்னான். “அன்றே தாங்கள் பேருருவர் என்றார்கள்” என்றான் சதானீகன். “அரக்கர்கள் அனைவருமே பேருருவர்கள். உங்கள் தோழர்களும் தங்களைப்போல இருக்கிறார்கள்” என்றான் சுருதசேனன். “ஆம், இன்று படைகளில் எங்களைத்தான் அனைவரும் பார்த்தார்கள்” என்றான் கடோத்கஜன். “போர்க்களத்தில் கௌரவர்கள் உங்களை பார்க்கப்போகிறார்கள்” என்றான் சுருதசேனன். கடோத்கஜன் “ஆம்! ஆம்! பார்ப்பார்கள்… முழு உருவை பார்ப்பார்கள்” என்று கூவி தன் தோள்களில் அறைந்துகொண்டு நகைத்தான்.
சதானீகன் “இப்போது தாங்கள் வந்திருப்பது ஏக்கத்தையே அளிக்கிறது, மூத்தவரே. முன்னரே இந்திரப்பிரஸ்தத்திற்கு தாங்கள் வந்திருந்தால் மகிழ்ந்து கொண்டாட எத்தனையோ தருணங்களிருந்தன” என்றான். “போரும் மகிழ்ந்து கொண்டாடுவதற்கு உரியதுதானே?” என்று சொன்ன கடோத்கஜன் “நாம் போரை கொண்டாடுவோம்! போரிலாடுவோம்!” என்றான். சுருதகீர்த்தி “ஆம், போரை கொண்டாடுவோம்!” என்றான். “நம் இளையோர் அனைவரும் இங்குள்ளனரா?” என்றான் கடோத்கஜன். “இல்லை, அபிமன்யூவை நாங்கள் பார்ப்பதே இல்லை. அவன் தனக்கான தனி வழிகள் கொண்டவன்” என்றான் பிரதிவிந்தியன்.
கடோத்கஜன் திரும்பி அப்பால் நின்றிருந்த சுதசோமனையும் சர்வதனையும் பார்த்து “எந்தையின் மைந்தர்… என்ன ஆயிற்று அவர்களுக்கு?” என்றபின் குரல் தாழ்த்தி “முறைமையா?” என்றான். பிரதிவிந்தியன் “அவர்கள் தாங்கள் பெருந்தோளர்கள் என்னும் எண்ணம் கொண்டிருந்தார்கள். தங்களை பார்த்ததுமே உளம் சுருங்கிவிட்டனர்” என்றான். கடோத்கஜன் புரியாமல் “ஏன்?” என்றான். “தங்கள் தோள்களை பார்த்தால் தேவர்களே பொறாமை கொள்வார்கள், மூத்தவரே” என்றான் சதானீகன். கடோத்கஜன் நகைத்தபடி அவர்கள் அருகே செல்ல நாணத்தால் முகம் சிவந்த சர்வதன் “அவ்வாறல்ல, மூத்தவரே. ஆனால்…” என்றான். சுதசோமன் “எனக்கு எவரிடமும் பொறாமை இல்லை” என்றான்.
கடோத்கஜன் அவன் தோளை வெடிப்போசை எழ ஓங்கி அறைய சர்வதன் இரண்டடி பின்னால் நகர்ந்தான். மற்போருக்கு நிற்பதைப்போல் சற்றே குனிந்து இரு கைகளையும் விரித்து நின்றான் கடோத்கஜன். சர்வதன் பாய்ந்து கடோத்கஜனை மார்பில் தலையால் அறைய கடோத்கஜன் பின்னால் சரிந்தான். அதே விசையில் சர்வதன் கடோத்கஜனின் கால்களை தன் கால்களால் அறைந்தான். கடோத்கஜன் பின்னகர்ந்து நிலை தடுமாறி தரையில் பேரோசையுடன் வீழ்ந்தான். மறுகணமே கையூன்றி தாவி எழுந்து நின்றான். சிரித்தபடி “தரையில் நான் ஆற்றல் குறைந்தவன், இளையோனே. உங்களுடன் எதிர்நிற்க என்னால் இயலாது” என்றான்.
“ஆம், தங்கள் கால்கள் ஆற்றலற்றவை. தரையில் அழுந்த ஊன்றுவதுமில்லை” என்றான் சர்வதன். சுதசோமன் அப்போதுதான் அதை நோக்கியவன்போல முன்னால் வந்தான். “ஆம். விந்தையானவை” என்றான். “மூத்தவரே, தங்கள் கால்கள் குரங்குகளின் கால்கள் போலுள்ளன” என்று நிர்மித்ரன் சொன்னான். “குரங்குகளைப்போல மரங்களைப் பற்றும் கால்கள்!” என்றான் சதானீகன். குனிந்து நோக்கிய நிர்மித்ரன் “இன்று போர்க்களத்தில் எவ்வாறு செல்வீர்கள்?” என்றான். “நாங்கள் பறக்கும் அரக்கர்கள். தேர்களுக்கு மேல், யானைகளுக்கும் புரவிகளுக்கும் மேல்” என்றான் கடோத்கஜன். பின்னர் சுதசோமனை நோக்கி “உன் தோள்வல்லமையை பார்ப்போம்” என்றான். அவன் “ஆம்” என்றான்.
கடோத்கஜன் இரு கைகளையும் விரித்து வரும்படி அழைத்தான். சுதசோமன் மற்போர் முறையில் நிலைமண்டிலமாக நின்று இரு கைகளையும் விரித்து கூர்ந்துநோக்கியபடி மெல்ல அணுகினான். ஒருகணத்தில் அறைவோசையுடன் இருவரும் பாய்ந்து உடல்முட்டிக்கொண்டனர். ஒருவர் ஒருவரை கவ்வியபடி பெருந்தோள்கள் பின்னி முறுகி தசையதிர விசைநிகர் கொண்டு சுற்றிவந்தனர். இரு உடல்களும் ஒன்றையொன்று உந்தி தசைகள் இழுபட்டு தெறிக்க மெல்ல சுழன்றன. ஓசையில்லாமல் வெறும் விழிகளாலேயே உள்ளம் உடைந்து தெறிக்குமளவுக்கு பெருவிசையை உணரமுடிவது அசங்கனை வியப்பிலாழ்த்தியது.
தசைகள் உரசிக்கொள்ளும் முறுகலோசை எழுந்தது. ஒருகணத்தில் தன் காலால் கடோத்கஜன் காலை தடுக்கி அவனை பின்னால் தள்ளி விழவைத்தான் சுதசோமன். அவன் மல்லாந்து விழ அவன் மேல் தான் விழுந்து அவனுடைய இரு கால்களையும் தன் கால்களால் பின்னிக்கொண்டு தோளை நிலத்துடன் அழுத்திக்கொண்டான். கடோத்கஜன் நகைக்க சுதசோமன் எழுந்து நின்று கைநீட்டி அவனை தூக்கினான். சர்வதன் பாய்ந்து கடோத்கஜனை தழுவிக்கொள்ள அவர்கள் மூவரும் உடல் தழுவி மாறி மாறி தோள்களில் தட்டிக்கொண்டு நகைத்தனர். பிரதிவிந்தியன் “இப்போது இருவரும் நிறைவுற்றிருப்பார்கள். இனி இப்புவியில் அவர்களை வெல்ல எந்தையும் பால்ஹிகரும் மட்டும் உள்ளனர்” என்றான். கடோத்கஜன் “ஆம், பெருந்திறலோர் இவர்” என்றான்.
சர்வதன் “நான் அகன்று நின்று நோக்குகையில் தெரிகிறது மூத்தவரே, நீங்கள் எங்களை வெல்லவிடுகிறீர்கள்” என்றான். “ஏன் சொல்கிறாய்?” என்று கடோத்கஜன் கேட்டான். “உங்கள் பெருங்கைகளுக்கு எங்கள் உடல்கள் ஒரு பொருட்டே அல்ல. உங்களுடன் போரிட வேண்டுமென்றால் ஒன்றே வழி. உங்கள் கைகளுக்கு சிக்கக் கூடாது. நீங்கள் அறைவதை ஒழிந்துகொண்டே இருக்கவேண்டும்” என்றான். கடோத்கஜன் அவன் தோளை அறைந்து நகைத்தான். சுதசோமன் “ஆம், நானும் இப்போது அதை உணர்கிறேன். முழு வல்லமையையும் கைகளுக்கு அளிக்காமல் ஒழிந்தீர்கள்” என்றான். “நாம் பிறிதொருமுறை மெய்யாக போரிடுவோம்” என்றான் கடோத்கஜன்.
“மூத்தவரே, நீங்கள் தந்தை பீமசேனரை வெல்லக்கூடுமா?” என்றான் சர்வதன். “அவரை எவரும் வெல்லமுடியாது…” என்றான் கடோத்கஜன். “அவரை வெல்லற்கரியவராக ஆக்குவதே என் கடமை.” “அவரை இன்னும் முதுதந்தை பால்ஹிகர் களத்தில் சந்திக்கவில்லை. அவர்களின் போரை அனைவரும் எண்ணி நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் சர்வதன். “நீங்கள் இன்று களத்தில் பால்ஹிகரை எதிர்கொள்க, மூத்தவரே!” என்றான் சுதசோமன். “நாங்களும் வருகிறோம். மூவரும் சேர்ந்து அவரை சூழ்ந்து கொள்வோம்” என்றான். “ஆம், அவரை களத்தில் எதிர்ப்போம்” என்றான் கடோத்கஜன்.
“நேற்றும் இன்றும் களத்தில் அவராடிய கொலையாடல் எண்ண எண்ண மெய்ப்புகொள்ளச் செய்வது. அசைக்க முடியத பெரும் கதாயுதம் ஒன்றை சங்கிலியால் கட்டித் தூக்கி யானை மேல் அமர்ந்திருக்கிறார். ஒரே அறையில் தேர்களை சிம்புகளாக தெறிக்கவிடுகிறது அது. யானைகள் எலும்புடைந்து விழுந்து குருதி பெருகுகிறது. புரவிகள் சிறு பேன்களைப்போல் நொறுங்கித் தெறிக்கின்றன. அவர் இருக்கும் இடத்தை எவரும் அணுக இயலவில்லை. எடைமிக்க கவசங்கள் அணிந்திருப்பதால் அம்புகள் எவையும் அவரை வீழ்த்துவதுமில்லை. ஒரு நிறைவுறா மூதாதை விண்ணிறங்கி பலிகொள்ள வந்ததுதான் அவர் என்று வீரர்கள் சொல்கிறார்கள்” என்றான் சுருதகீர்த்தி.
“மூதாதையை களத்தில் எதிர்கொள்வது என்பது ஒரு பேறு” என்றான் கடோத்கஜன். பிரதிவிந்தியன் “அவை கூடியிருக்கிறது. வருக!” என்றான். அவர்கள் யுதிஷ்டிரரின் அவைமாளிகை நோக்கி செல்கையில் பிரதிவிந்தியன் “தங்கள் வேங்கைத்தோலாடை பேரழகு கொண்டிருக்கிறது. மூத்தவரே, தொலைவிலிருந்து பார்க்கையில் சிறிய தந்தைக்கு பாசுபதம் அளித்த வெள்ளிமலை கிராதனே எழுந்து வருவதுபோல் தோன்றியது” என்றான். சதானீகன் “கிராதனுக்கு சடைத்தொகை உண்டு அல்லவா?” என்றான். கடோத்கஜன் அவன் தோளை மெல்ல அறைந்து உரக்க நகைத்தான்.
யுதிஷ்டிரரின் அவைக்குள் கடோத்கஜன் உத்துங்கன் தொடர நுழைந்தபோது அங்கிருந்தவர்கள் சேர்ந்தெழுப்பிய வியப்பொலி வாழ்த்துபோல் ஒலித்தது. கடோத்கஜன் அவையை நோக்கி வணங்கி “என் பெயர் கடோத்கஜன். நான் என் தந்தைக்கு உதவும்பொருட்டு போரிட வந்தேன்” என்றான். யுதிஷ்டிரர் சிரித்து “எங்கே முறைமைச்சொல் எதையாவது உனக்கு பயிற்றுவிப்பதில் சாத்யகியின் மைந்தன் வெற்றிபெற்றிருப்பானோ என அஞ்சினேன்… நன்று. அமர்க!” என்றார். கடோத்கஜன் அமர்ந்து கால்களைத் தூக்கி இருக்கைமேல் மடித்து வைத்துக்கொண்டான். இரு கைகளும் இருபக்கமும் தொங்கின. அவனருகே தரையில் உத்துங்கன் அமர்ந்தான்.
“இருக்கை உள்ளது” என ஏவலன் மெல்ல சொல்ல உத்துங்கன் “இல்லை, எனக்கு தரையிலமர்வதே உகந்தது” என்றான். யுதிஷ்டிரர் “மைந்தா, இன்று நிகழவேண்டிய போரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நேற்றைய போரில் நாம் வென்றுள்ளோம். அவர்களுக்கு பேரிழப்பு. அவர்களின் சூழ்கையை இளையோன் உடைத்துவிட்டான் என்பதே அவர்களுக்கான செய்திதான். இன்றும் நாம் வென்றாகவேண்டும்… அதன்பொருட்டே நாம் படைசூழ்கை அமைத்துள்ளோம்” என்றார்.
“படைசூழ்கை என்றால் என்ன?” என்றான் கடோத்கஜன். அவை நகைக்க பீமன் “உனக்கு கல்வி கற்பிக்கும் இடமல்ல இது. அமைதியாக இருந்து பேசுவதை செவிகொள்க!” என்றான். கடோத்கஜன் தலைவணங்கினான். யுதிஷ்டிரர் “சொல்லும் திருஷ்டத்யும்னரே, இன்றைய சூழ்கை என்ன?” என்றார். “இன்றும் அவர்கள் பருந்துச்சூழ்கை அமைக்கவே வாய்ப்பு” என்றான் திருஷ்டத்யும்னன். “ஏனென்றால் பீஷ்மரை மையமாகக் கொண்ட சூழ்கையையே அவர்கள் அமைக்கவியலும்… ஆனால் நாரைச்சூழ்கை அமைத்து பீஷ்மரை நம் படைகளுக்குள் ஊடுருவ விடமாட்டார்கள்… பீமசேனர் நேற்று பருந்தின் கழுத்தையே உடைத்துவிட்டபின் நீள்கழுத்துள்ள சூழ்கையை அமைப்பது அறிவின்மை.”
“அவர்கள் இம்முறை பருந்தின் கழுத்தை மும்மடங்கு வலுவாக அமைப்பார்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். “சென்றமுறை ஆற்றல்குறைவான கலிங்கர்களை அங்கே நிறுத்தியதுபோன்ற பிழையை செய்யமாட்டார்கள்.” அவன் தன் கையிலிருந்த தோல்சுருளை நீட்ட அதை ஏவலன் வாங்கி யுதிஷ்டிரருக்கு அளித்தான். “நாம் கழுகை பிடிக்கும் வலுவான வலை ஒன்றை அமைப்போம். நம் படைக்கு அரைநிலவுச் சூழ்கையை அமைத்திருக்கிறேன். அணைக்க விரிந்த மல்லனின் கைகளைபோல அது விரிந்திருக்கும். நம் வீரர்கள் அனைவருமே முன்னணியில் இருப்பார்கள். நாம் இலக்காக்குவது ஒன்றே, முடிந்தவரை அனைவரும் சேர்ந்து தாக்கி பீஷ்ம பிதாமகரை இன்றே வெல்வது…”
“ஆம், அவரை வெல்லாமல் இனி நாம் படைநடத்தவே இயலாது. நம் படைகள் பாதிப்பங்கு அவரால் கொல்லப்பட்டுவிட்டன” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “இனி எவரும் தனித்தனியாக பிதாமகரை எதிர்கொள்ள வேண்டியதில்லை. அது இயலாதென்பது உறுதியாயிற்று. நம் படையின் அனைத்து வில்லவரும் இணைநிரையாக நிற்கட்டும். வலை விரிந்து விரிந்து அவரை உள்ளே இழுத்துக்கொண்டு சுருங்கிச் சூழ்ந்து அழிக்கட்டும்” என்றான். குந்திபோஜர் “ஒரே ஒருவரை முன்வைத்த போர்” என முனகினார். திருஷ்டத்யும்னன் அவரை நோக்கி திரும்பி “ஆம், மெய். ஆனால் அவர்கள் எடுப்பதும் ஒற்றை ஒருவரை மையமாக்கிய சூழ்கையே” என்றான்.
யுதிஷ்டிரர் சுருளைச் சுருட்டி பீமனிடம் அளித்துவிட்டு “நன்றாகவே உள்ளது. இது வெல்லவேண்டும்” என்றார். பீமன் நோக்கிவிட்டு “ஆம், இதைவிடச் சிறந்த சூழ்கை இயல்வதல்ல” என்றான். சாத்யகி “படைமுகப்பில் நிற்பவர்களில் வில்லவர் அல்லாதோர் எவர்?” என்றான். “நான் நிற்கிறேன்” என்றான் பீமன். பின்னர் “என் மைந்தனும் முன்னிரையில் நிற்கட்டும்…” என்றான். திருஷ்டத்யும்னன் “அவர்களை பார்த்தேன்… அவர்களிடம் படைக்கருவிகள் இல்லை. விற்களை கேட்டும் அறியாதோர் போலிருக்கிறார்கள். தேரிலோ புரவியிலோ ஊர்வதற்கும் பயிற்சியில்லை. அவர்களை எப்படி முன்னணியில் நிறுத்துவது?” என்றான்.
“அவர்களைப்பற்றி நான் நன்கறிவேன்” என்றான் பீமன். “இப்போரில் அவர்களே முதன்மை வீரர்கள் நம் தரப்பில். அவர்களின் விசையை நாம் தேரிலேறியும் அடையமுடியாது.” திருஷ்டத்யும்னன் “எங்ஙனம்? அதை சொல்லுங்கள்” என்றான். “அவர்கள் காற்றின் மைந்தர்… காற்றே அவர்களின் ஊர்தி” என்றான் பீமன். திருஷ்டத்யும்னன் “நீங்கள் சொன்னால் மறுசொல்லில்லை. ஆனால்…” என்றான். “களத்தில் காண்போம்” என்றான் பீமன். அசங்கன் திரும்பி கடோத்கஜனை நோக்கினான். அந்தப் பேச்சே தன்னைப்பற்றியதல்ல என்பதுபோல் அவன் அமர்ந்திருந்தான். மெய்யாகவே அங்கு பேசப்படுவன அவனுக்கு புரியவில்லை என்று தெரிந்தது.
“சூழ்கைக்கான ஆணைகள் எழுதப்பட்டுள்ளன எனில் அவற்றுக்கு அமைச்சர்களே அரசச்சாத்து அளிக்கட்டும்… அவை கலையலாம்” என்றபடி யுதிஷ்டிரர் எழுந்தார். அவையினரும் எழுந்தார்கள். நிமித்திகன் எழுந்து சங்கொலி எழுப்பி யுதிஷ்டிரரின் புகழ்கூறி அவை கலைவதை அறிவித்தான். யுதிஷ்டிரர் கைகூப்பியபடி நகுலனும் சகதேவனும் தொடர நடந்து வெளியே சென்றார். பீமன் அவைமேடையில் இருந்து கீழிறங்கி வந்து கடோத்கஜனை அணுகி அவனை நோக்காமல் கடுமையான குரலில் “சென்று இளைய யாதவரை வணங்கி வாழ்த்து கொள்க!” என்றான்.
கடோத்கஜன் இளைய யாதவரை சில கணங்கள் நோக்கிவிட்டு “தாங்கள் சொன்னால் நான் வாழ்த்து கொள்கிறேன், தந்தையே. ஆனால் நான் இவரிடம் வாழ்த்து கொள்ள விரும்பவில்லை” என்றான். பீமன் சினத்துடன் கையை ஓங்கியபடி திரும்பி “என்ன சொல்கிறாய், அறிவிலி?” என்று கூவினான். இளைய யாதவர் புன்னகையுடன் நோக்க பீமன் தன்னை அடக்கி “நீ சொல்வதென்ன என்று அறிவாயா?” என்றான். கடோத்கஜன் “நான் இங்கு வந்த பின்னர்தான் அறிந்துகொண்டேன். இந்தப் போரே இவருக்காகத்தான். இவர் சொல்லும் எதையோ இங்கே நிலைநாட்டத்தான்” என்றான். பீமன் உரக்க “ஆம், அவருடைய சொல் நிலைகொள்ளும்பொருட்டே இப்போர்” என்றான்.
“தந்தையே, எவருடைய சொல்லும் மானுடரின் அழிவுக்கு நிகரானதல்ல. சொல்லுக்காக மானுடர் சாவதைப்போல் வீண்செயல் வேறில்லை” என்றான் கடோத்கஜன். “அவ்வாறென்றால் நீ ஏன் இங்கே வந்தாய்?” என்று பீமன் கூவியபடி மீண்டும் கடோத்கஜனை அறைய கையோங்கினான். அவனை அஞ்சாமல் நோக்கி கடோத்கஜன் “தங்களுக்காக” என்றான். “நான் என் மூதன்னைக்கு அளித்த சொல்லுக்காக. அதன்பொருட்டு கொல்கிறேன். ஆனால் ஒரு மானுடன் இன்னொருவனை கொல்லவேண்டுமென்றால் அது தனிப் பகைக்காகவும் தனிப் போரிலும் மட்டுமே நிகழவேண்டும். பிற இறப்புகள் அனைத்தும் வீண்கொலையே.”
“நீ எனக்காக வரவேண்டியதில்லை… கிளம்பு… என் ஆணை, கிளம்பு!” என்று பீமன் கூவினான். கடோத்கஜனின் தோளைப்பற்றி தள்ளி “செல்… இப்போதே செல்!” என்றான். “அதை சொல்லவேண்டியவர் உங்கள் மூத்தவர், பாண்டவரே” என்றார் இளைய யாதவர். “அல்லது நான்.” பீமன் தளர்ந்து “இவன், இந்த அறிவிலி…” என்று கைசுட்டி நடுங்கினான். அவன் முகம் சிவந்து மூச்சிரைத்தது. சுடரொளியில் முகம் வியர்வையால் மின்னியது. “அவர் தன் தொல்மரபிலிருந்து பெற்ற மெய்மையை சொல்கிறார்” என்றார் இளைய யாதவர். “ஆனால் இப்போரில் ஒவ்வொரு படைக்கலமும் நமக்கு தேவை.”
பீமன் இருவரையும் மாறிமாறி நோக்கியபின் திரும்பி நடந்து வெளியே சென்றான். இளைய யாதவர் “நீங்கள் உங்கள் தந்தையின்பொருட்டு களம்நிற்க வேண்டும், அரக்கரே. உங்கள் தந்தை இப்போரில் வென்றாக வேண்டும்” என்றார். “அவர் இக்களத்தில் வெல்வார்” என்றான் கடோத்கஜன். “ஆனால் முழுமையாகவே தோற்பார்.” இளைய யாதவர் அதே புன்னகையுடன் நோக்கிநிற்க “பெரியவர்கள் தோற்றாக வேண்டும். மிகப் பெரியவர்கள் முற்றாக தோற்கவேண்டும். அதுவே இவ்வுலகின் நெறி” என்றான் கடோத்கஜன். இளைய யாதவர் “ஆம், மெய்” என்று அவன் தோளில் தட்டியபின் வெளியே நடந்தார். கடோத்கஜன் திரும்பி அசங்கனை நோக்கி பெரிய பற்கள் தெரிய புன்னகைத்தான்.