திசைதேர் வெள்ளம் - 18
உணவுக்குப் பின் சகுண்டனும் உத்துங்கனும் கைகளை நக்கியபடியே எழுந்துசென்று உடல்நீட்டி சோம்பல்முறித்தபடி சுற்றுமுற்றும் நோக்கினர். “நீங்கள் ஓய்வுகொள்ளலாம். அரசரும் இளையோரும் முற்புலரியில் அவையமர்வார்கள். அப்போதுதான் நீங்கள் செல்லவேண்டும்” என்றான் அசங்கன். கடோத்கஜன் “ஆம், அவ்வாறுதான் சொல்லப்பட்டது. ஆனால் எங்கே துயில்வது?” என்றான். “இங்குதான். கூடாரங்களுக்குள் துயிலலாம். அல்லது வெளியே நிலத்தில் பாய்விரித்து…” என்றான் அசங்கன். “நாங்கள் தரையில் துயில்வதில்லை” என்றான் கடோத்கஜன்.
“இங்கே மரங்கள் இல்லையே?” என்றான் அசங்கன். “குருக்ஷேத்ரத்தில் மரங்கள் முளைப்பது அரிது… ஆகவேதான் இது தொன்மையான போர்நிலமாக உள்ளது.” கடோத்கஜன் சூழ நோக்கி “மெய்தான்… மரங்களெல்லாம் மிகச் சிறியவை” என்றான். உத்துங்கன் “நன்று, நாங்கள் அப்படியே அமர்ந்துகொள்கிறோம்” என்றான். அசங்கன் “மூத்தவரே, நான் ஒன்று செய்கிறேன்” என்று எழுந்துசென்று கூடாரத்தின் மேலிருந்த யானைத்தோல்பரப்பை அழுத்திநோக்கி “இதன்மேல் படுத்துக்கொள்ளலாம்” என்றான். உத்துங்கன் அழுத்தி நோக்கி “ஆம், தழைக்கூரை போலவே உள்ளது” என்றபின் மூங்கில் வழியாக ஏறி மேலே சென்றான். படுத்துநோக்கி “மெய்யாகவே மரங்களின்மேல் தழைப்பரப்பில் படுத்திருப்பதுபோல” என்றான்.
சகுண்டனும் மேலேறி படுத்தான். “நீங்களும் படுத்துக்கொள்ளலாம், மூத்தவரே. நான் இங்கேயே நிலத்தில் மரவுரியில் ஓய்வெடுக்கிறேன்” என்றான் அசங்கன். “நானும் தரையிலேயே அமர்ந்திருக்கிறேன். தேவையென்றால் மேலே செல்கிறேன்” என்றான் கடோத்கஜன். அசங்கன் மரவுரியை விரித்து படுத்துக்கொண்டான். “அசையாத தரையில் படுத்தால் துயில்வது கடினம்” என்றான் கடோத்கஜன். “ஆம், சில மாலுமிகளும் அவ்வாறு பழகியிருக்கிறார்கள்” என்றான் அசங்கன். “அதைவிட மண்ணில் நாகங்கள் மிகுதி. எங்கள் முதலெதிரிகள் அவையே” என்றான் கடோத்கஜன். “இங்கே நாகங்கள் இல்லை” என்று அசங்கன் சொன்னான். “அவை இல்லாத இடமே இல்லை” என்றான் கடோத்கஜன்.
அவர்கள் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தார்கள். கடோத்கஜனின் விழிகள் வானில் நிலைத்திருக்க முகம் மட்டும் அசைந்துகொண்டிருந்தது. அவ்விழிகளில் விளங்கவியலா துயர் ஒன்றை அசங்கன் கண்டான். கட்டுண்ட அனைத்து விலங்குகளிலும் அதை அவன் கண்டிருந்தான். மானுடருடன் கலந்து அரைமானுடராகவே ஆகிவிட்டிருந்தாலும்கூட புரவிகளின் விழிகளில் தனிமையும் துயரும் நிறைந்திருக்கும். யானைவிழிகளுக்குள் அத்துயர் மிகமிக ஆழத்திலென மின்னிக்கொண்டிருக்கும். அவன் அப்போது கடோத்கஜனிடமிருந்து மிக விலகிவிட்டிருந்தான். மீண்டும் அணுக விரும்பினான். எதையாவது பேசவேண்டும். அவன் ஆளும் அரசை. அவன் குடியை. ஆம், அவற்றைப்பற்றிய பேச்சே அவனை அருகே கொண்டுவருகிறது.
கடோத்கஜனுக்கு மைந்தர்கள் இல்லையா என்ற எண்ணம் அசங்கனின் உள்ளத்தில் எழுந்தது. அவனறிந்த கடோத்கஜனின் கதைகள் அனைத்துமே அவனுடைய சிற்றகவையிலேயே நின்றுவிட்டிருந்தன. காட்டுக்குள் பதினான்காண்டுகள் அலைந்தபோது நினைத்தபோதெல்லாம் தோன்றி குந்தியையும் ஐந்து தந்தையரையும் தன் தோளில் சுமந்து விழைவிடம் நோக்கி கொண்டுசென்ற பேருருவனாகிய சிறுவன். அவன் முன் அமர்ந்திருந்த கடோத்கஜன் முதிர்ந்தவனாக இருந்தான். அவ்வண்ணமென்றால் மைந்தர் இருக்கவேண்டும். அவர்கள் போருக்கு வந்திருக்கிறார்களா?
அதை நேரடியாக கேட்கலாமா என்று தயங்கி “உங்கள் குடியில் மணச்சடங்குகள் உண்டா?” என்றான். “என்ன?” என்று கடோத்கஜன் திரும்பி நோக்கினான். “இல்லை, கதைகளில் இளைய பாண்டவர் பீமசேனர் உங்கள் அன்னையை கொள்மணம் புரிந்ததாக வருகிறது. பல தொல்குடிகளில் முறையான மணச்சடங்குகள் இல்லை என்பார்கள். நான் எவரையும் இதற்குமுன் சந்தித்ததில்லை” என்றான் அசங்கன். “நான் மணம்புரிந்துகொண்டவன்” என்றான் கடோத்கஜன். “ஆனால் என் குடியில் அல்ல. என் குடியில் அரசர்கள் எல்லா குலக்குழுவிலிருந்தும் ஒரு பெண்ணை மணக்கவேண்டும். நான் அவ்வாறு மணம்புரிந்துகொள்ளவில்லை. நான் மணந்தவள் அரசமகள்.”
அசங்கன் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் கடோத்கஜன் பேச விரும்பினான். “நான் என் குடியிலேயே மணம்புரிந்துகொள்ள விரும்பினேன். ஆனால் மூதன்னை குந்திதேவி அதை விரும்பவில்லை” என்றபின் “எந்தையின் அன்னை. இளஅகவையிலேயே என் மூதன்னை என நெஞ்சிலமர்ந்தவர். இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசியாயினும் எனக்கு களித்தோழி என்றே ஆனவர்” என்றான். அசங்கன் “அவர் உங்களை தன் குடியின் முதல் மைந்தனாக ஏற்றுக்கொண்டதாக கதைகள் கேட்டிருக்கிறேன்” என்றான். கடோத்கஜன் முகம்மலர்ந்து “ஆம், என்னை அவர் பைமி என்றும் பைமசைனி என்றும்தான் அழைப்பார்கள். என் அன்னையிடம் தன் குலத்தின் முதல் மாற்றில்மகள் அவரே என்றும் மூத்தவரால் மணக்கப்பட்டிருந்தால் அஸ்தினபுரியின் பட்டத்தரசியென அவரை அமரச்செய்திருப்பேன் என்றும் சொன்னார்.”
தன் ஆடையிலிருந்து அருமணி பதித்த கணையாழி ஒன்றை காட்டினான். “இது பாண்டவ அரசகுடியினருக்குரியது. இடும்பவனத்திலிருந்து கிளம்பும்போது இதை மூதன்னை என் அன்னையிடம் அளித்தார்.” அதை திருப்பிக்காட்டி “அருமணி… மலர்மொட்டுபோலவோ குருதித்துளிபோலவோ தெரிவது. இதை என் கைகளில் அணிந்திருக்கவேண்டும் என்பார்கள். எப்போதும் இதை அணிந்திருப்பது கடினம். மரங்களினூடாக செல்லும்போது எங்கேனும் தவறி விழுந்துவிடும். ஆகவே இதை சரடில் கட்டி என் இடையில் அணிந்திருக்கிறேன். அரியணை அமரும்போது மட்டும் விரலில் அணிந்துகொள்வேன்” என்றான்.
அதை வாங்கி நோக்கிய அசங்கன் “பாண்டவ மைந்தர் அனைவரும் இத்தகைய கணையாழியை வைத்திருக்கிறார்கள். அவையனைத்தும் இதைவிட சிறியவை. இந்த அருமணிக்குள் விழிகளால் நோக்கமுடியாதபடி சிறிதாக அமுதகல முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது” என்றான். அதை அப்பாலிருந்து வந்த விளக்கொளியில் காட்டி அதன் ஊடொளியை தன் உள்ளங்கையில் ஏந்தினான். அதில் சிறிய நிழலுருவாக அமுதகலம் தெரிந்தது. கடோத்கஜன் “ஆம், அதில் கதிரொளி பட்டால் அமுதகலம் எழும்… அதை சுவரில் காட்டினால் பேருருவாகும்” என்றான். “உங்களில் பீமசேனர் என இது இந்த அருமணிக்குள் அமைந்துள்ளது, மூத்தவரே” என்றான் அசங்கன்.
“இது முதல் மைந்தனுக்குரியது” என்றான் கடோத்கஜன். “இந்த அருமணியால்தான் எனக்கு அரசமகள் மணமகளாக வந்தாள்.” அசங்கன் “அரசமகளா?” என்று கேட்டான். “ஆம். என் காடு நாடாகவேண்டும் என்றும் நான் வேள்விச்செயல் முடித்து அந்தணர் அரிமலரிட்டு வாழ்த்த முடிசூடவேண்டும் என்றும் அரசமகளை மணம்புரிந்து பட்டத்திலமர்த்தவேண்டும் என்றும் குந்திதேவி ஆணையிட்டார். ஆனால் நூல்கள் எதையும் நான் சென்று கற்கலாகாதென்றும் அனைத்து மெய்மையையும் என் காட்டுக்குள் அமர்ந்தே கற்றறியவேண்டும் என்றும் சொன்னார்.”
நான் கற்றுத்தேர்ந்தேன். படைதிரட்டினேன். நகர் சமைத்து கோட்டைகட்டி செல்வம் பெருக்கினேன். என் நகரில் குடியேற அந்தணர் ஒருங்கவில்லை. ஆகவே விந்தியனுக்கு அப்பாலிருந்து அனற்குலத்து அந்தணரை குடியமர்த்தி வேள்விகள் செய்தேன். அவர்களின் நூல்நெறிப்படி குடித்தலைமை கொண்டேன். முடிசூடி அமர எனக்கு அருகே அரசி அமையவேண்டும். அந்தணரே என் பொருட்டு அரசர்களிடம் தூது சென்றனர். ஆயினும் எனக்கு பெண் தருவதற்கு அரசர்கள் எவரும் சித்தமாகவில்லை. பலமுறை முயன்றும் பயனின்றிப் போயிற்று. அப்போது அவர் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தார். அரசகுடி மணமகள் அமையாமையால்தான் நான் இந்திரப்பிரஸ்த பெருவேள்விக்கு செல்லவில்லை. அதை அன்னைக்கு செய்தியாக அனுப்பினேன்.
அன்னை எனக்கு செய்தி அனுப்பினார். “நீ பாரதவர்ஷத்தின் பெருவீரனின் மைந்தன். உனக்கு நிகரான வீரர்கள் இந்நிலத்தில் மிகக் குறைவே. ஆயினும் உன் குருதியின் தோற்றமோ அரக்கர்களுக்குரியது. அரக்கர் குடிக்கு மகற்கொடை நிகழ்த்த அரசர் சித்தமாக மாட்டார்கள்” என்றார். “நான் விழைந்தால் என் மைந்தர் வென்று அடியறைவு செய்யவைக்கும் அரசர்களின் மகளிர் எவரையாவது உனக்கு மணமுடிக்க முடியும். ஆனால் நீ உன் தோள்வல்லமையால் வென்ற அரசமகளை மணப்பதே பெருமை. ஏனென்றால் நாளை உன் குடியினர் அதன்பொருட்டு பெருமைகொள்ளவேண்டும்” என்றார்.
என் குடியின் மூத்தவர்கள் நான் படைகொண்டு சென்று அரசமகள் எவரையேனும் கவர்ந்து வந்து மணமுடிக்கலாம் என்றார்கள். அரக்கர்குலத்துக்கு கொள்மணம் உகந்த நற்செயல்தான் என்றனர். ஆனால் அதை நான் விரும்பவில்லை. அன்னை எனக்கிட்ட ஆணை முறைப்படி ஷத்ரிய குடியொன்றிலிருந்து பெண்கொள்வதும் அவளுக்குப் பிறக்கும் மைந்தர்களுக்கு எனது நாட்டை உரிமையாக்குவதும்தான். எனக்கு பெண்கொடுக்கும் ஷத்ரியர் என்னை அரசன் என ஏற்கவேண்டும். தன் மகளை அரக்கன் கவர்ந்தான் என்று சொல்லி அவர் அந்தணரை அழைத்து கொல்வேள்வி செய்தால், அதற்கு பிற அரசரை அழைத்தால் அரசமகளை மணந்தமையின் நலம் ஏதும் எனக்கோ என் குடிக்கோ பிறக்கவிருக்கும் மைந்தருக்கோ அமையாது போகும்.
என் தந்தையர் காடேகி மறைந்தனர். அஸ்தினபுரி துரியோதனரால் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் சிந்து மலையிறங்கி நிலம்பரவும் காட்டில் இருந்த அஷ்டதச ஃபீகரர் என்னும் அரக்கர்களுக்கும் அங்கு குடியேறிய யாதவக்குடி ஒன்றுக்கும் பூசல்கள் நிகழ்வதாக அறிந்தேன். அவர்கள் முரு என்னும் தொல்மூதாதையின் வழிவந்தவர்கள் என்பதனால் மௌரியர் என அழைக்கப்பட்டார்கள். அவர்களின் அன்றைய அரசரின் பெயரும் முரு என்பதே. நாற்பத்தெட்டாவது முரு பதினெட்டு அரக்கர்குடிகள் இணைந்த படையிடம் தோற்று படைவீரர்களையும் குடிகளையும் இழந்து மேலும் மேலும் ஆற்றங்கரை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவர்களின் பசுக்கள் அரக்கர்களால் தொடர்ந்து கவரப்பட்டன. ஊர்கள் கொளுத்தப்பட்டன. மகளிரும் இளமைந்தரும் சிறைபிடிக்கப்பட்டனர்.
முரு தனித்திருந்தார். ஏன் அவர்களுக்கு பிற யாதவர்களின் உதவி கிடைக்கவில்லை என்பதை ஆராய்ந்தேன். கூர்ஜரத்துக்கு மேற்கே இருக்கும் வெண்பாலை நிலத்தில் வாழ்ந்த தொல்யாதவக்குடியிலிருந்து முன்பு விலக்கப்பட்டவர்கள் அவர்கள். ஒருமுறை பெரும்பஞ்சம் வந்து பாலை நிலத்தில் தனிமைப்பட்டபோது அவர்கள் தங்கள் மாடுகளைக் கொன்று தின்றதாகவும், இறுதியாக கன்றுதங்கிய வயிற்றுடன் சினைப்பசு ஒன்றை கொன்றதாகவும் அதனால் பிற யாதவர்களால் விலக்கப்பட்டதாகவும் கதைகள் கூறின.
அவர்களின் முது மூதாதையாகிய முரு தன் குலத்தாருடன் சிந்துவை அடைந்து ஆயிரம் தெப்பங்களில் நீர்ஒபெருக்கினூடாக வடக்கே வந்து இக்காட்டை அடைந்தார். அது அன்று புல் ஒழியா பெருவெளி. ஆகவே கன்றுகள் பெருகின. ஊர்களும் நடுநகரும் கோட்டையும் காவலும் மாளிகையுமென அவர்கள் நிலைகொண்டனர். நெடுங்காலத்துக்குப் பின் சிந்துவினூடாக அங்கு வந்த பரசுராமரை சென்றுகண்டு தலை தாள்வைத்து வணங்கி முருகுலத்து அஜன் தன்னை அளித்தார். அவருடன் வந்து நகரில் தங்கிய பரசுராமர் பன்னிரு நாட்கள் நீண்ட வேள்வியொன்றை நிகழ்த்தி அதன் இறுதியில் அவரை அனல்குலத்து ஷத்ரியராக ஆக்கி செங்கோல் சூடவும் மணிமுடியணியவும் அரியணை அமரவும் உரிமையளித்தார். வஹ்னி என்னும் பெயர்கொண்டு அவர் அரசரானார்.
ஷத்ரிய நிலையை அடைந்த பின்னர் தன் யாதவக் குடிகளுடன் எத்தொடர்பையும் வைத்துக்கொள்ள வஹ்னி எண்ணவில்லை. பிற அனற்குலத்து ஷத்ரியக் குடிகளிலிருந்தே மகற்கொடை பெற்றார். மேலும் அவர் குடி பெருகியபோது காடுகளுக்குள் ஊடுருவிப் பரந்தனர். புதிய சிற்றூர்களை அமைத்தனர். சிந்துவிலிருந்து தங்கள் நகர்வரை படகுகளில் சென்றுவரும் கால்வாய் ஒன்றை வெட்டிக்கொண்டார்கள். வணிகர் வந்து செல்வதனால் அங்காடியும் வணிகர் குடியிருப்புகளும் உருவாயின. பிற அனற்குலத்து அரசர்களுடன் தொடர்புகொண்டமையால் படைவல்லமை பெருகியது.
நாற்பத்திரண்டாம் முருவாகிய தேவபர் திரைகொள்ளும் பொருட்டு காடுகளுக்குள் படைகளை அனுப்பி அரக்கர் குடிகளை தாக்கினார். அவர்கள் மேலும் மேலும் காடுகளுக்குள் சென்று ஒளிந்துகொண்டனர். மேலும் செல்ல இடமில்லாதபோது நூறாண்டுகளுக்கு முன் சிதறி அழிந்திருந்த அரக்கர்கள் கூட்டமைப்பு ஒன்றை மலையடிவாரத்தில் தொல்குகையொன்றில் கூட்டினர். அங்கு அக்குடிகள் அனைவருக்கும் தலைவராக தொல்லரக்கர் குடியைச் சார்ந்த கீகடரை தேர்ந்தெடுத்தனர். அவர் தலைமையில் அரக்கர் குடிகள் முரு குடிகளை திருப்பி தாக்கத் தொடங்கினர்.
முதலில் அரக்கர்களின் கட்டுப்பாடற்ற படைகளை முரு குடியினர் எளிதில் வென்றனர். ஆனால் தோல்வியிலிருந்து மேலும் வெறிகொள்வதற்கு கற்றவர்கள் அரக்கர். உயிரிழந்தவர்களின் ஆத்மாக்கள் தங்கள் உடல்களில் வந்து அணைந்து ஆற்றல் அளிப்பதாக நம்புகிறவர்கள். இறந்தோரின் துளியுடலை உண்டு தானாக மாற்றிக்கொண்டு இருவராக ஆற்றல்கொண்டு எழுவார்கள். மழைக்காலம் வந்தபோது முருக்களின் ஆற்றல் குறைந்தது. மழையின் மறைவு அரக்கர்களுக்கு மிக உகந்தது. குளிரும் நீரும் அவர்களுக்கு இனிதானவையும் கூட. மழைக்காலப் போரில் மௌரியர்களின் மௌரியபுரியை தாக்கி கோட்டையை சிதறடித்து உட்புகுந்தனர். மாளிகைகளை உடைத்தெறிந்தனர். மகளிரை சிறைப்பிடித்தனர். இளையோரை கொன்று குவித்தனர். எஞ்சிய படைகளுடனும் குடிகளுடனும் அரசர் முரு ஊர்களை ஒவ்வொன்றாக கைவிட்டு சிந்துவின் கரைவரை சென்றார்.
அரக்கர்கள் மேலும் தாக்கக்கூடுமென அஞ்சி சிந்துவின் கரையிலேயே தங்கியிருந்தார். சிந்துவினூடாக கிளம்பி மீண்டும் அவர் வந்த மேற்குப் புல பாலைக்கே சென்றுவிட எண்ணினார். அதன்பொருட்டு தெப்பங்கள் கட்டப்பட்டன. உதவும்படி தொல்குடி யாதவர்களை நோக்கி தூதர்களை அனுப்பினார். ஆனால் கன்றுண்டவன் என்னும் பெரும்பழி இருந்ததனால் யாதவர்கள் அவரை ஏற்கவில்லை. கூர்ஜரரும் சைந்தவரும் சைப்யரும் காந்தாரரும் முரு தன்னை அரசர் என சொல்லிக்கொண்டதனால் சினம்கொண்டிருந்தனர்.
கூர்ஜரர் முரு தன் மணிமுடியையும் செங்கோலையும் களைந்து, அரியணை அமரும் உரிமையைத் துறந்து, யாதவ குடிக்குரிய வளைகோலையும் மரவுரியையும் அணிந்து அவருடைய நகருக்கு வந்து அனல் தொட்டு தானும் தன் கொடிவழியும் இனி ஒருபோதும் முடிகோரப் போவதில்லை என ஆணையிட்டு தன் அரசுக்குக் கீழ் ஒரு குடியென அமைய முடியுமெனில் தன் நிலத்திற்குள் புக இடமளிப்பதாகவும் அவ்வாறில்லையென்றால் ஒருவர்கூட எஞ்சாது கொன்றொழிப்பதாகவும் செய்தி அனுப்பினார்.
முரு அனலுக்கும் சிம்மத்துக்கும் நடுவே என நின்றிருந்த பொழுது அது. அதுவே உகந்ததென்று கண்டு நான் என் தூதர்களை அனுப்பினேன். அரக்கர்களை வென்று அவர் நகரத்தை நான் காப்பேன் என்றும் அதற்கு ஈடாக என்னை அரசனென ஏற்று அவர் மகளை எனக்கு மணமுடித்தளிக்க வேண்டுமென்றும் கோரினேன். என் தூதராகச் சென்றவர் முதிய அந்தணரான ஆக்னேயர். தன் அவையில் சுற்றத்துடன் அமர்ந்திருந்த முரு அச்செய்தியைக் கேட்டு உறுமியபடி கைகளை அறைந்து ஓசையிட்டுக்கொண்டு கல்லரியணையிலிருந்து எழுந்து “என்ன சொல்கிறீர்? இதென்ன சூழ்ச்சி?” என்று கூவினார். “இவர் அந்தணர் என்பதனால் பொறுத்துக்கொள்கிறேன். இவரை நாடுகடத்துக! இவருடன் வந்த அரக்கர்களை கழுவேற்றுங்கள்” என்று தன் படைநிரைகளுக்கு ஆணையிட்டார்.
ஆனால் அவருடைய அமைச்சராகிய மூர்த்தர் “பொறுங்கள், அரசே. உங்களிடம் மணம்கோரி வந்திருப்பவர் வெறும் அரக்கரல்ல” என்றார். “வெறும் அரக்கரோ ஆடையணிந்த அரக்கரோ, அரக்கர் குடியினரிடம் மணம்கொண்டோமெனில் அதன் பின் பாரதவர்ஷத்தில் நம் இடம் என்ன? என் மூதாதையர் பரசுராமரின் முன் அமர்ந்து பன்னிரு நாட்கள் பெருவேள்வி செய்து ஈட்டியது இச்செங்கோலும் மணிமுடியும். கூர்ஜரன் முன் இதை துறக்கமாட்டோம் என்று தயங்கியே இங்கு அமர்ந்துள்ளோம். துறந்துசென்று கூர்ஜரத்தில் தொல்குடியாக அமைவது இங்கு இவ்வல்லரக்கனின் மாதுலனாக அமைவதைவிட எத்தனையோ மடங்கு மதிப்புடையது” என்றார் முரு.
“நாம் இதைப்பற்றி மேலும் கூர்ந்து எண்ணுவோம், பொறுங்கள்” என்று மூர்த்தர் மீண்டும் மீண்டும் கூறினார். “என்ன சொல்கிறீர்கள்? என்னை குலமிலி என நீங்களும் எண்ணுகிறீர்களா?” என்று முரு கூச்சலிட்டார். சினத்தால் நிலையழிந்து அவையில் அலைமோதினார். ஆக்னேயர் அதை எதிர்பார்த்துச் சென்றிருந்தமையால் உளமழியவில்லை. தருணம் நோக்கியிருந்தார். முரு “சேற்றில் சிக்கிய யானைமேல் தவளைகள் ஏறி விளையாடுகின்றன. தெய்வங்களே, மூதாதையரே, என்ன பிழை செய்தேன்!” என நெஞ்சுலைந்தார். அதுவே இடம் என கண்டு ஆக்னேயர் எந்தையின் அடையாளமாக இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி அளித்த இக்கணையாழியை எடுத்துக்காட்டி “இது என் அரசரின் கணையாழி. இதை தன் வலக்கை ஆழிவிரலில் அணிந்து அரியணை அமர்பவர் அவர்” என்றார்.
மூர்த்தர் அதை வாங்கி பார்த்த பின் ஒன்றும் சொல்லாமல் அரசரிடம் அளித்தார். அதை முரு கையிலேந்தி சற்றே திருப்பியபோது எதிரே சுவரில் அமுதகலம் பேருருவாக எழுந்தது. “அஸ்தினபுரியை ஆளும் தேவனின் வடிவம்” என்று மூர்த்தர் சொன்னார். அதை திகைத்து நோக்கிய பின் “இதை எவர் அளித்தது?” என்று முரு கேட்டார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி குந்திதேவி அளித்தது இது. தங்களைப்போலவே யாதவ குடியிலிருந்து எழுந்து ஷத்ரிய அரசுகளின் தலைமைக்கு வந்தவர் அவர்” என்று ஆக்னேயர் சொன்னார். “அவர்களின் குடியின் முதல் மாற்றில்மகளாக ஏற்கப்பட்டவர் என் அரசரின் அன்னை. அரசரோ பாண்டவ மைந்தர்களில் மூத்தவர் என நிலைகொள்பவர். இந்தக் கணையாழியே சான்று.”
முரு மீண்டும் அரியணையில் அமர்ந்து அக்கணையாழியை திருப்பி நோக்கிக்கொண்டிருந்தார். மூர்த்தர் “இப்போது நமக்கு வந்துள்ள உதவி சிறிதல்ல, அரசே. வெறுமொரு அரக்கர் குடியின் உதவியல்ல இது. இந்திரப்பிரஸ்தத்தின் பாண்டவ குலத்தின் உதவி இது. நாட்டிலிருந்தாலும் காட்டிலிருந்தாலும் அர்ஜுனரின் வில்லும் பீமசேனரின் கதையுமே பாரதவர்ஷத்தை ஆள்பவை” என்றார். “நாளை இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடியே இந்நிலத்தை ஆளும். ஐயமே தேவையில்லை. இனி ஆயிரம் ஆண்டுகள் அக்கொடியே இங்கு பறக்கும். அவரது குடியின் ஒரு குருதித்தொடர்பு நமக்கு உருவாவது அனைத்து வகையிலும் நம்மை நிலைநிறுத்தும்” என்றார்.
“நமது அரசுக்கு அரக்க மகளை நாம் எடுக்கவில்லை. நமது இளவரசரின் குருதி தூயதே. அவருக்கு மகள் தேடுகையில் தூய ஷத்ரியக் குடியிலிருந்தே நாம் பெண் தேடமுடியும். மறுப்பார்களென்றால் இந்திரப்பிரஸ்தத்தின் வாளையே அவர்களிடம் காட்டி பெண் கோரமுடியும்” என மூர்த்தர் சொன்னார். “நமது குடி இங்கு வாழும். கூர்ஜரத்துக்கோ யாதவ நிலத்துக்கோ சென்றால் நாம் மேலும் மேலும் இறங்குவோம். எழுகுடி எழ வீழ்குடி வீழ வரலாறு ஒழுகுகிறது என கொள்க!” என்று மூர்த்தர் தொடர்ந்தார்.
“எண்ணுக அரசே, நிமித்திகர் கூறிய மாறாச் சொல் ஒன்று உண்டு! ஒருநாள் மௌரியப் பெருங்குலம் பாரதவர்ஷத்தை முற்றாளும். காமரூபம் முதல் காந்தாரம் வரை, காஷ்மீரம் முதல் திருவிடத்துக்கும் அப்பால் முக்கடல் முனைவரை நாவலந்தீவு முழுக்க நம் குருதிவழியில் வந்த அரசர்களின் கொடி பறக்கும். ஆற்றலும் அறமும் கொண்ட பேரரசர்களின் பெயர் இந்நிலத்தில் என்றுமிருக்கும். இன்று உருவாகியிருக்கும் இவ்வாய்ப்பு அதற்கான தொடக்கம் போலும். அருமணிகள் தெய்வத்தின் விழிகள். நம்மை நோக்கி தெய்வம் ஒன்று திரும்பியுள்ளது என்பதையே இந்த மணி காட்டுகிறது. மகற்கொடை அளிப்போம், தயங்க வேண்டாம்” என்றார் மூர்த்தர்.
முரு “ஆனால் இக்குலக் கலப்பு…” என சொல்லத் தொடங்க “குலக் கலப்பிலிருந்தே ஷத்ரியப் பெருங்குடிகள் பிறக்கின்றன. அரக்கர்குருதியோ அசுரர்குருதியோ இல்லாத தொல்குடி ஷத்ரியர் யார்? அஸ்தினபுரியின் குடியே அசுர மூதன்னை சர்மிஷ்டையிலிருந்து உருவானது என அறிக! மீனவப் பேரன்னை சத்யவதியால் குருதிகொண்டது அது. அரசே, உலோகக் கலவைகளே வலுமிக்கவை. ஷத்ரியர் என்னும் படைக்கலம் உருவாக அவையே ஏற்றவை. பொன்னுடன் இரும்பு கலந்து புதிய பெருங்குடி எழுக…” என்றார் மூர்த்தர்.
முரு பெருமூச்சுவிட்டு “என்றும் என் குடி அந்தணர் சொல்லை அடிபணிந்திருக்கும் என்று பரசுராமருக்கு எம்மூதாதை சொல்லளித்துள்ளார். தங்கள் சொல்லை தெய்வ ஆணை என்று ஏற்கிறேன், ஆசிரியரே” என்றார். ஆக்னேயர் “அந்தணர் சொல் மீறாதோன் அழிந்ததில்லை. இந்தக் கருவூலங்களில் இருந்து ஒரு செம்புநாணயத்தைக்கூட கொள்ள எண்ணாதோர் நாங்கள். தர்ப்பையே எங்கள் பொன். எங்கள் சொல்லை ஓம்புக, சிறப்புறுக!” என்றார். கைகூப்பி “அவ்வண்ணமே ஆகுக!” என்றார் முரு. அவை வாழ்த்தொலி எழுப்பியது.
மௌரிய குலத்து முருவின் முதல் மகள் அகிலாவதியை நான் மணந்தேன். வெற்றியுடன் திரும்பிவந்து முருவின் ஏற்புச் செய்தியை ஆக்னேயர் சொன்னபோது என் குலத்தாரால் அதை நம்ப இயலவில்லை. ஆனால் நான் அது நிகழுமென்றே கணித்திருந்தேன். என் குடியில் முதலில் குழப்பமும் விளக்கவியலா கலக்கமும்தான் நிலவியது. பின்னர் பதினெட்டு நாள் நீண்ட பெருங்களியாட்டு தொடங்கியது. அன்னை இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தார். நான் செய்தி அனுப்பி வாழ்த்து கோரினேன். அன்னை எட்டு சகடங்களில் பொன்னும் பட்டும் வெள்ளிக்கலங்களும் பரிசென அனுப்பினார். “நான் நகர்நீங்கா நோன்புகொண்டிருக்கிறேன். ஆகவே அங்கு வரவில்லை. நீ நுழைய இந்நகரில் உனக்கு உரிமை இல்லை. உன் மைந்தர் வழியாக என் குடி வாழ்க!” என அவருடைய சொல் வந்தது.
நான் அஸ்தினபுரிக்கு திருதராஷ்டிரருக்கும் துரியோதனருக்கும் செய்தி அனுப்பினேன். “உங்கள் குடி என நான் என்னை எண்ணுவதால் பெருந்தந்தையாகிய உங்களுக்கு இச்செய்தியை அனுப்புகிறேன். உங்கள் சொல்லன்றி ஏதும் வேண்டேன். உங்கள் காலடியில் என் தலை அமைக!” என பொறிக்கப்பட்ட என் ஓலையுடன் என் தூதராக அவையந்தணர் ஜ்வாலர் சென்றார். அச்செய்தியை கேட்டதும் திருதராஷ்டிரர் எழுந்து கைகளை விரித்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டார். “விரிகிறது என் குடி! காடுகளிலும் என் குருதி பரவுகிறது… விதுரா, என் பெயர்மைந்தனின் மணநிகழ்வுக்கு அரசமுறைப்படி அனைத்தும் செய்யப்படவேண்டும். இது என் ஆணை” என்றார்.
அச்செய்தியைக் கேட்டதும் அரசவையில் அரியணையமர்ந்திருந்த துரியோதனர் எழுந்து “என் குடியின் முதல் மைந்தன் மணம்கொள்கிறான். அனைத்து முறைமைகளும் நிகழ்க! நானே மணநிகழ்வுக்குச் செல்கிறேன்” என்றார். “அரசே, அது இன்னும் நாடென வகுக்கப்படாதது. நமக்கும் மகதத்திற்கும் பாஞ்சாலத்திற்கும் நடுவே உள்ளது. முறைமைப்படி அவ்விரு அரசர்களின் ஒப்புதலின்றி நீங்கள் அங்கே செல்வது உகந்தது அல்ல” என்றார் கனகர். “அவ்வண்ணமென்றால் என் இளையோர் செல்லட்டும். நானே செல்வதற்கு அது நிகர்” என்றார் துரியோதனர். அங்கிருந்து நாற்பத்தெட்டு வண்டிகளில் அருஞ்செல்வம் எனக்கு சீர்பரிசிலாக வந்தது. என் மணநிகழ்வுக்கு துச்சாதனரும் துச்சலரும் துர்முகரும் சுபாகுவும் சுஜாதரும் வந்திருந்தார்கள்.
முரு குலத்து அரசமகளுக்கு என் மூதன்னை அளித்த பீதர்நாட்டு பொன்னிழைப் பட்டும் அஸ்தினபுரியின் பட்டத்தரசி அளித்த அருமணி பதித்த பதினெட்டு சங்கு வளைகளும் வந்து சேர்ந்தன. அஸ்தினபுரியின் அரசிளையோர் முன்னிலையில் அந்த மணநிகழ்வு நடந்தது. அரக்க குடிக்கு அரசமகளைக் கொடுப்பதில் மௌரிய குடிகளுக்கு பெரும் தயக்கமிருந்தது. அவர்கள் பேசிய அலர் அரசரையும் சோர்வுறச் செய்தது. ஆனால் பதினெட்டு சகடங்களில் நான் அனுப்பிய சீர்நிரை மௌரிய நகரிக்கு வந்திறங்கியபோது அவர்கள் சொல்லடங்கினர். அவற்றின் பெருமதிப்பை வணிகர்கள் சொன்னபோது மறு எண்ணமில்லாதாயினர். அஸ்தினபுரியின் அரசரின் இணையான துச்சாதனரே வருகிறார் என்றபோது களிவெறி கொண்டனர்.
நான் திருமண அணிகொண்டு அந்நகருக்குள் நுழைந்தபோது மௌரியர்களின் பெருந்திரள் என்னை எதிர்கொள்ள நகர் வாயிலில் மங்கலங்களுடன் காத்து நின்றது. அன்றும் இவ்வாறே சென்றிருந்தேன். வேங்கைத் தோலணிந்து இரும்பு அணிகள் பூண்டு என்னைக் கண்டதும் அவர்கள் நகைக்கலாயினர். ஆனால் எவரோ வாழ்த்தொலி எழுப்ப சற்று நேரத்தில் அந்நகரமே வாழ்த்தொலிகளால் நிறைந்தது. அரிமலர் மழையெனப் பெய்ய அதன் நடுவே என் அன்னையரும் குலமூத்தாரும் தோழரும் உடன்வர சென்றேன். மாளிகை முகப்பில் கட்டப்பட்ட அணிப்பந்தலில் பேரரசி அளித்த அனல்மணி ஆழியை அகிலாவதியின் கையிலணிவித்து மணந்தேன்.
கைபற்றி அவளை அழைத்துவந்து குடிமக்கள் முன் நின்றபோது வாழ்த்தொலிகள் நெடுநேரம் எழுந்து ஓய மறுத்தன. உளம் பொறாது மீண்டும் எழுந்து அலையடித்தன. துச்சாதனரின் கால்களைத் தொட்டு வாழ்த்து பெற்றபோது எங்கோ அறியாக் காட்டில் அலையும் என் தந்தையை வணங்குவதாகவே உணர்ந்தேன். வஞ்சத்துக்கும் வெறுப்புக்கும் அப்பால் அவருடைய குருதி அதை மகிழ்ந்து ஏற்றிருக்கும் என எண்ணிக்கொண்டேன். மௌரியர்களின் தொல்தெய்வமாகிய அஜமுகி அன்னையின் ஆலயத்தின் முன் சென்று நின்றோம். குறும்பாட்டை பலிகொடுத்து குருதி காட்டி பூசகர் அன்னைக்கு படையலிட்டார்.
அப்போது வெறியாட்டெழுந்த பூசகன் நாவில் ஒரு சொல்லெழுந்தது. “அறிக, குடிகளே! அறிக, மானுடரே! இவ்வரசியின் வயிற்றில் மாவீரர்கள் பிறப்பர். அவர்களே முருக்களின் குடிக்கும் கொடிவழியாவர். அவர்களின் குருதிவழியில் எழுபவன் ஒருவன் பாரதவர்ஷத்தை முழுதாள்வான். சைந்தவமும் காங்கேயமும் தட்சிணமும் அவனால் ஒரு கொடிக்கீழ் ஆளப்படும். இது ஊழி வரை கணம் கணமென அணு அணுவென இவ்வுலகை வகுத்துள்ள தெய்வங்களின் ஆணை! ஆம், இதுவே ஆணை!” என்று கூவி, பலிகுருதி அள்ளி முகத்தில் அறைந்து, துள்ளிச் சுழன்றாடி, தன் வேலை தன் தொடையில் குத்தி, அக்குருதியை தானே அருந்தி விடாய் தீர்ந்து விழுந்து உறைந்தான். எழுந்து சென்ற தெய்வம் சொன்ன அச்சொற்கள் மட்டும் எஞ்சியிருந்தன.
“என் நகரியில் அகிலாவதியுடன் அரியணை அமர்ந்தேன். அந்தணர் அதர்வ வேதம் ஓதி அரிமலரிட்டு வாழ்த்தி கங்கைநீர் முழுக்காட்டி என்னை அரசனாக்கினர்” என்றான் கடோத்கஜன். “முருக்களின் முத்திரையாகிய பீடத்திலமர்ந்த சிம்மத்தை என் குடிச் சின்னமாக நான் ஏற்றுக்கொண்டேன். அவ்வடையாளம் பொறிக்கப்பட்ட பொன் நாணயத்தை என் நகரில் எங்கள் அச்சில் வார்த்து வெளியிட்டேன். ஆயிரத்தெட்டு பொன் நாணயங்களை அந்தணருக்கும் புலவருக்கும் சூதருக்கும் அளித்து என் ஆட்சியை தொடங்கி வைத்தேன்.”
அசங்கன் “தெய்வச்சொற்களில் பிழை வருவதில்லை” என்றான். கடோத்கஜன் “நான் நாகர்குலத்து அரசன் வக்ரனின் மகள் லக்ஷ்மணையையும் மணந்துகொண்டேன். அகிலாவதியில் எனக்கு இரு மைந்தர்கள் பிறந்தனர். மூத்தவனாகிய பார்பாரிகனுக்கு பதின்மூன்று அகவை ஆகிறது. இளையவன் மேகவர்ணனுக்கு பத்து. லக்ஷ்மணையில் பிறந்தவள் இடும்ப இளவரசி மேகவதி” என்றான். முகம்மலர்ந்து “என் மைந்தர் இருவரும் என்னைவிடப் பேருருவர்கள். என்னை வெல்லும் போர்த்தொழில் அறிந்தவர்கள். அவர்களின் குருதியில் வெல்ல முடியாத அரசநிரையொன்று எழுமென்பதை ஐயமின்றி உணர்கிறேன்” என்றான்.
அசங்கன் “அவர்கள் இடும்பவனத்தில் இருக்கிறார்களா?” என்றான். “இல்லை” என்றபின் சற்று தயங்கிய கடோத்கஜன் “இளையவன் மேகவர்ணன் அன்னையுடன் இருக்கிறான். மூத்தவன் பார்பாரிகன் பாதிப்பங்கு இடும்பர் படையுடன் கௌரவப் படைகளுக்கு ஆதரவாக போரிடும்பொருட்டு சென்றிருக்கிறான். நாங்கள் சேர்ந்தே கிளம்பினோம். குருக்ஷேத்ரத்தை அணுகியபோது பிரிந்தோம்” என்றான். அசங்கன் திகைப்புடன் “ஏன்?” என்றான். “அது என் மைந்தனின் முடிவு. தந்தைக்காக நான் இங்கே வந்து நின்றிருக்கவேண்டும். ஆனால் எங்கள் முடியை ஆதரித்த நாடு அஸ்தினபுரி. எனவே இடும்பர்கள் அங்கு செல்லவேண்டும் என்றான்” என்று கடோத்கஜன் சொன்னான்.
அசங்கன் சிலகணங்கள் வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தான். பின்னர் இமைகளை மூடித்திறந்து எண்ணம் மீண்டு “இதை என்னால் உளம்கொள்ள இயலவில்லை. ஆனால் நீங்கள் சொல்கையிலேயே அதில் பொருள் உள்ளது என்றும் தோன்றுகிறது” என்றான். “மறுபக்கம் இவ்விரவில் விண்மீன்களை நோக்கியபடி என் மைந்தன் என்னை எண்ணிக்கொண்டிருக்கிறான்.”