தீயின் எடை - 9

துரியோதனன் எழுந்துகொண்டு “நாம் சென்று பிதாமகரை வணங்கி களம்புக வேண்டும். அவ்வாறு வழக்கமில்லை எனினும் இன்று அவ்வாறு செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றான். கதையை எடுத்துக்கொண்டு “இவ்வாறு நெடும்பொழுது நான் பேசும் வழக்கம் இல்லை. பேசிப்பேசி இப்பொழுதை நிறைக்கிறேன். அவரிடம் சொல்வதற்கும் ஓரிரு சொற்கள் எஞ்சுகிறது போலும்” என்றான்.

கிருதவர்மன் “அவர் தன்னிலையில் இருக்கிறாரா என்று தெரியவில்லை” என்றான். “தன்னிலையில்தான் இருப்பார். அவரால் தேவையானபோது அந்த ஆழத்திலிருந்து வெளியே வர இயல்கிறது” என்றபின் துரியோதனன் நடக்க கிருதவர்மன் உடன் சென்றான். துரியோதனன் கேட்பதற்குள்ளாகவே எதிரே வந்த ஏவலன் “மத்ரநாட்டரசர் கவசங்கள் அணிந்துகொண்டிருக்கிறார். அவர் வந்து அரசருடன் இணைந்துகொள்வதாக சொல்லப்பட்டிருக்கிறது” என்றான். துரியோதனன் தலையசைத்தான்.

அவர்கள் நடந்து செல்ல அப்பால் சகுனி தன் பாடிவீடென அமைந்திருந்த கரித்தடத்தில் இருந்து கவசங்களுடன் நடந்து வந்து உடன் இணைந்துகொண்டார். துரியோதனன் தலைவணங்கியபடி சகுனியை கடந்துசெல்ல சகுனி ஏவலனிடம் “நீர் சிற்பியா?” என்றார். “அல்ல. ஆனால் அரசரின் அணுக்கஏவலனாக எனது பணிகளில் ஒன்று இந்தப் பாவைவை ஒருக்குவது. ஒவ்வொரு முறை மற்போருக்குப் பின்னும் இதன் உள்ளே சுருள்வில்கள் வலு குறைந்திருக்கும். வளைவில்கள் நிமிர்ந்திருக்கும். அனைத்தையும்ம் முடுக்கி மீண்டும் விசைகூட்டவேண்டும். அரசருக்கு எப்போதும் இது முழுத் தன்னிலையில் இருக்கவேண்டும் என்ற விழைவு உண்டு” என்றான்.

“நம்மிடம் எத்தனை தேர்கள் இருக்கின்றன?” என்று சகுனி கேட்டார். கிருதவர்மன் “தெளிவாகத் தெரியாது, இருபதுக்கும் மேல் இருக்கக்கூடும்” என்றான். “ஒரு தேரில் இச்சிலை அமர்ந்திருக்கட்டும்” என்று சகுனி சொன்னார். அவர் சொல்வதை சரிவர புரிந்துகொள்ளாமலேயே தலைவணங்கி பின்னர் அதை திரும்பிப்பார்த்துவிட்டு புரிந்துகொண்டு “அரசரின் உடைகளுடனா?” என்று ஏவலன் கேட்டான். “ஆம், அரசரின் கொடியும் இதன் மேல் பறக்கட்டும்” என்றார் சகுனி. ஏவலன் புன்னகைத்து “நன்று. அரசருக்கு இக்களத்தில் ஊழிடர் இருக்குமெனில் ஒருவேளை இப்பாவையால் அது நீங்கிப்போகவும் கூடும்” என்றான். சகுனி “பார்ப்போம்” என்றபின் தனது புரவியை நோக்கி சென்றார்.

புரவியில் ஏறி அமர்ந்து அதை செலுத்தியபோது சகுனி மிகவும் களைத்திருந்தார். அத்தருணத்தில் அவர் விழைந்தது ஒன்றே, புரவியிலிருந்து இறங்கி மென்மையான சேறு நிறைந்திருந்த தரையில் உடல் பதிய படுத்து விழி மூடுவது. பகலும் இரவுமாக பெய்து கொண்டிருந்த மென்மழை உடலை குளிர வைத்து, நடுங்க வைத்து, பின் உள்ளிருந்து அனலை வெளிக்கொணர்ந்து குளிரை அறியாமலாக்கியது. நீரில் மூழ்கியபடியேகூட துயில முடியும் என்று தோன்றியது. வலப்பக்கமிருந்து இரு வீரர்கள் முன்னால் வர புரவியில் சல்யர் கவச உடையில் அணுகி வந்தார்.

சல்யர் தணிந்த குரலில் “பீஷ்ம பிதாமகரிடம் வாழ்த்துகொள்ளச் செல்வதாக சொன்னார்கள்” என்றார். சல்யர் கொந்தளிப்பும் பதற்றமும் மறைந்து முற்றிலும் இயல்பு நிலையிலிருப்பதை சகுனி கண்டார். அவர் ஓர் ஆழ்ந்த துயிலுக்குப் பின் எழுந்ததுபோல் தோன்றினார். சகுனி நோக்குவதைக் கண்டு சல்யர் புன்னகைத்து “இன்றைய போர் விரைவிலேயே முடியும் என்று தோன்றுகிறது” என்றார். “ஏன்?” என்று சகுனி கேட்டார். “கணிப்பின்படி இப்போதே உச்சிப்பொழுது நெருங்கிவிட்டது” என்று சல்யர் சொன்னார். “வெற்றி பெறுவதற்கு நெடும்பொழுது தேவையில்லை, மத்ரரே” என்று சகுனி சொன்னார்.

உரக்க நகைத்த சல்யர் “வெற்றி!” என்றபின் திரும்பி படைகளைப் பார்த்து “இப்போது இப்படைகளில் எவருக்கேனும் அச்சொல்லின் பொருள் தெரியுமா?” என்றார். சகுனியும் உடன்நகைத்து “போர் தொடங்கும்போதேகூட எவருக்கும் தெரிந்திருக்காது” என்றார். “மெய்யாகவே நான் இதை ஆராய்ந்து பார்த்தேன், மத்ரரே. போர் தொடங்குவதற்கு முந்தைய நாள் என் அணுக்க ஏவலன் ஒருவனிடம் இக்களத்தில் நாம் அடையப்போவது என்ன என்றேன். வெற்றி என்று அவன் சொன்னான். வெற்றி என்றால் என்ன என்று கேட்டேன். அரசர் முடிசூடுவது என்றான். ஏற்கெனவே அவர் முடிசூடியிருக்கிறாரே என்று கேட்டேன். குழம்பிப்போய் யுதிஷ்டிரன் முடி இழப்பது என்றான். முன்னரே அவருக்கு மணிமுடி இல்லையே என்றேன். அவர் இனி மணிமுடியை கேட்காமல் இருக்கும்படி செய்வது என்றான். எத்தனை நாளைக்கு என்று கேட்டேன். இக்களத்தில் அவர் தோற்றுப்போனாலும்கூட மீண்டும் எங்கிருந்தோ அவருடைய கொடிவழியினர் கிளம்பி வந்து மணிமுடிக்கு உரிமை கோரலாமே என்றேன். அவனுக்கு சொல்லத்தெரியவில்லை.”

சல்யர் “எனக்கும் தெரியவில்லை” என்றார். சகுனி “ஆனால் இந்தப் போர் முதல் நாளில் முடியும் என்று உறுதிகொண்டிருந்தான். யார் சொன்னார்கள் என்றேன். அனைவரும் அவ்வாறுதான் சொல்லிக்கொள்கிறார்கள் என்றான். மிகுந்த நம்பிக்கையுடன் இன்று அந்திக்குள் போர் முடியும், நாளை புலரியில் நமது படைகள் அஸ்தினபுரிக்கு மீளும் என்றான். மிக இளைஞன். மென்மீசை கொண்டவன். போரை கதைகளாகவே அறிந்தவன். எங்கள் குடியிலிருந்து மூதாதை ஒருவர் போருக்குச் சென்று மீண்டிருக்கிறார், அதன் பின்னர் நான் வந்துள்ளேன். போரில் வெற்றியுடன் மீள்வேன் என்று நிமித்திகர் கூற்று இருக்கிறது என்றான். அவனிடமிருந்த அந்த நம்பிக்கை நிறைந்த புன்னகையை நினைவுகூர்கிறேன். முதல் நாள் முதல் நாழிகையிலேயே தலை அறுந்து களத்தில் விழுந்தான்” என்றார்.

சல்யர் மீண்டும் உரக்க நகைத்தார். சகுனி திரும்பிப்பார்த்தார். உள அழுத்தம் கொண்டவர்களின் வெற்றோசை மிக்க நகைப்புபோல அது தோன்றியது. “துயின்றீர்களா?” என்று கேட்டார். “சற்று நேரம், மிகச் சற்று நேரம்” என்று சல்யர் சொன்னார். “ஏவலர்கள் எனக்கு கவசங்கள் அணிவித்துக் கொண்டிருந்தார்கள். கால்களில் குறடுகளை அணிவித்துக்கொண்டிருந்தபோது நான் பக்கவாட்டில் விழுந்துவிட்டிருந்தேன். அவர்கள் என்னை எழுப்பவில்லை. நானே சற்று நேரம் கழித்து எழுந்து அமர்ந்தேன். ஆனால் அத்துயில் என்னுள்ளத்திலிருந்த சோர்வனைத்தையும் போக்கிவிட்டது. நெடுநேரம் துயின்று நல்லுணவு உண்டு எழுந்ததுபோல் உணர்ந்தேன். ஒவ்வொன்றும் அத்தனை சிக்கலற்றதாக அத்தனை நேரடியானதாக தெரிகிறது” என்றார்.

சகுனி “அங்கர் வந்தாரா கனவில்?” என்றார். சல்யர் “இல்லை. எனது இளமைப்பருவம் மட்டும்தான் வந்தது. சிறுபுரவிகளில் மலையேறிச்சென்று பனிவிழும் எல்லை வரை அணுகி அங்கு மலைக்குகைகளில் தங்கி குழியணில்களை வேட்டையாடி மீள்வோம். பனிமலைகளை நோக்கியபடி குகைமுகப்பில் அமர்ந்திருப்போம். விழித்தெழுந்தபின் கேட்டேன், எத்தனை பொழுது சென்றது என்று. மிகச் சிறிய நேரம். அதற்குள் ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்துவிட்டிருக்கிறேன்” என்றார்.

பீஷ்மரின் படுகளம் இரண்டு சிற்றகல்சுடர்களின் ஒளித்துளிகளால் அடையாளமிடப்பட்டு தெரிந்தது. அவர்களுக்கு முன்னரே அங்கு துரியோதனனும் அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் இறங்கி நின்றிருந்தனர். அவர்கள் அணுகுவதற்காக காத்திருந்தனர். அவர்கள் இறங்கியதும் துரியோதனன் செல்வோம் என்று கைகாட்டிவிட்டு படுகளத்தின் வளைவுக்குள் நுழைந்தான். அவனுக்காக காத்து நின்றிருந்த இளைய மருத்துவன் தலைவணங்கினான்.

அம்புப்படுக்கையின் மீது பீஷ்மர் விழிமூடிப் படுத்திருந்தார். மென்மழை அவர் மீது பெய்துகொண்டிருக்க தாடிமயிர்க் கற்றைகள் மெழுகு விழுதுபோல வழிந்து படிந்திருந்தன. சகுனி கூரையிடலாகாதா என்று கேட்கலாம் என நாவெடுத்தபின் அங்கு தோல் பொருட்கள் எதுவுமில்லை என்பதைக் கண்டு அதை ஒழிந்தார். மருத்துவ ஏவலர்கள் தலைவணங்கி நின்றனர். “பிதாமகர் எப்போது விழித்தெழுந்தார்?” என்று துரியோதனன் கேட்டான் . “சற்று முன்” என்றான் ஏவலன். “ஒரு நாழிகைக்கு முன் விழித்து அங்கரின் இறப்பை இன்னொரு முறை கேட்டு உறுதி செய்துகொண்டார்.”

துரியோதனன் பீஷ்மரின் காலடியில் சென்று நின்று “பிதாமகரே! பிதாமகரே!” என்றான். அவருடைய இமைகள் அசைவதை சகுனி பார்த்தார். துரியோதனன் “பிதாமகரே, நான் தார்த்தராஷ்டிரனாகிய துரியோதனன்” என்றான். பீஷ்மர் கண்ணைத் திறந்து ஒளிக்கு கண் கூசி மீண்டும் மூடிக்கொண்டார். மீண்டும் விழிகளை திறந்தபோது அவர் அனைத்தையும் உணர்ந்துவிட்டிருந்தார். அருகில் வா என்று கைநீட்டி துரியோதனனை அழைத்தார். துரியோதனன் அருகே சென்றான். அவர் விரல்கள் முள்ளில் சிக்கிய பட்டாம்பூச்சியின் சிறகுகள்போல் அம்புமுனைகள் மேலிருந்து நடுங்கின.

துரியோதனன் அவர் அருகே மண்டியிட்டு அமர்ந்து அவ்விரல்கள் தன் தலையில் படும்படி குனிந்தான். நடுவிரலால் அவன் தலைமுடியைத் தொட்டு மெல்ல வருடியபின் “அங்கன்!” என்றார். துரியோதனன் உடல் விம்மி தோள்கள் அழுந்துவதை சகுனி பார்த்தார். “அங்கனை எண்ணி…” என்று பீஷ்மர் முனகினார். உலோகம் உரசும் ஒலியுடன் துரியோதனன் விம்மினான். ஆனால் உடனே சீறல்போன்ற மூச்சொலியுடன் தன்னை முழுமையாக அடக்கிக்கொண்டான். விழிநீர் மட்டும் வழிந்துகொண்டிருந்தது.

பீஷ்மர் மெல்ல முனகினார். அவ்வோசை துரியோதனனின் உடலில் ஒரு நடுக்கை உருவாக்கியது. அவன் கையூன்றி எழுந்து முழந்தாளிட்டு பீஷ்மரின் முகத்தருகே தலையை கொண்டு வந்தான். தொண்டையைத் தீட்டி “இன்று களம்புகுகிறேன், பிதாமகரே” என்று சொன்னபோது அவன் குரல் தெளிந்திருந்தது. “நீடு புகழ் பெறுக!” என்று பீஷ்மர் வாழ்த்தினார். “ஆம், அது ஒன்றே இனி எதிர்நோக்கக்கூடுவது” என்று துரியோதனன் சொன்னான். பீஷ்மர் “உளம் கைவிட்டுச் செல்லாதிருக்கட்டும். எத்தருணத்திலும் எண்ணியதை எண்ணி உளம் உழலலாகாது. இழந்ததையும் நிகழ்ந்ததையும் திரும்பிப்பார்க்காமல் இருக்கும் நிமிர்வு உனக்கு அமையட்டும்” என்றார்.

மெல்லிய குரலில் பீஷ்மர் சொன்னார் “இங்கிருக்கும் ஒவ்வொன்றுக்கும் நாமறியா ஆழ்பொருள் உள்ளது. இங்கிருக்கும் எப்பொருளையும் நாம் எண்ணி அறியவும் இயலாது. எனவே நிகழ்வன அனைத்தும் இறையாணையின்படி என்று கொள்க!” துரியோதனன் “ஆம், அத்தெளிவை அங்கர் களம்பட்டபோது அறிந்தேன்” என்றான். பீஷ்மர் “நலம் சூழ்க!” என்றபின் விழிகளை மூடிக்கொண்டார். துரியோதனன் எழுந்து நின்று “தங்கள் வாழ்த்துக்களை நாடிவந்தேன், பிதாமகரே” என்றான். “வெல்க!” என்றார் பீஷ்மர்.

சல்யர் பீஷ்மரின் காலடிகளைத் தொட்டு வணங்கி தலையருகே வந்து “இன்று நான் படைத்தலைமை கொள்கிறேன், பிதாமகரே. என் மைந்தனுக்காக வஞ்சினம் உரைத்து களம்புகுகிறேன்” என்றார். பீஷ்மர் “ஆம், அதை நீ செய்தாகவேண்டும். நீ இயற்றுவதற்கு எஞ்சியிருப்பது அது ஒன்றுதான்” என்றார். “அவனுக்கு அதை மட்டுமாவது அளிக்கிறேன்” என்று சல்யர் கூறினார். பீஷ்மர் “அவன் நிறைவுறுக!” என்றார்.

அஸ்வத்தாமன் கைகளைக் கட்டியபடி தயங்கி நிற்க சகுனி சென்று பீஷ்மரின் கால்களைத் தொட்டுவணங்கி தலையருகே நின்றார். பீஷ்மர் “நல்லன நிகழ்ந்தது நம்மால் என்று தருக்கலாகாது என்று நூல்கள் சொல்கின்றன, காந்தாரனே” என்றார். “நன்றன்று நிகழினும் நம்மால் என எண்ணாது ஒழிவது மேலும் பெரிய தன்னடக்கம்” என்றார். சகுனி பெருமூச்சுடன் “ஆம்” என்றார். “அவ்வாறே ஆகுக!” என்று பீஷ்மர் வாழ்த்தினார்.

சகுனி விலக அஸ்வத்தாமன் பீஷ்மரை நோக்கி சென்றான். பின்னர் தயங்கி நின்று கிருதவர்மனிடம் அவன் செல்லும்படி கைகாட்டினான். கிருதவர்மன் பீஷ்மரின் காலடிகளை நோக்கி செல்ல பீஷ்மர் ஆழ்ந்த உறுமலோசை ஒன்றை எழுப்பினார். கிருதவர்மன் தயங்கி நின்றான். பீஷ்மர் மேலும் உறுமி “விலகு” என்றார். கிருதவர்மன் ஒருகணம் நடுங்கினாலும் பின்னர் ஏளனப் புன்னகைபுரிந்து “அவ்வாறே” என்று பின்னடைந்தான்.

வணங்கிவிட்டு வரும்படி சகுனி அஸ்வத்தாமனிடம் சொன்னார். அஸ்வத்தாமன் பீஷ்மரின் காலடிகளை சென்று வணங்கி அவர் தலையருகே வந்தான். “அறத்தோடு நின்றாய். அதன் பொருட்டு தெய்வங்கள் உன்னை வாழ்த்தும்” என்றார் பீஷ்மர். “என் உள்ளே அறம் தெய்வஉருவென நிலைகொள்கிறது. அதுவன்றி பிறிதெதையும் இக்கணம் வரை எண்ணியதுமில்லை” என்று அஸ்வத்தாமன் சொன்னான். அவன் மேலும் சொல்வதற்காக பீஷ்மர் காத்திருந்தார்.

“என் ஆலயத்தில் வீற்றிருக்கும் அக்கருவறைத்தெய்வத்தை இவ்விருளிலும் மிக அருகிலெனக் காண்கிறேன், பிதாமகரே. இதுநாள் வரை அதன் காலடிகளையே சென்னி சூடி வணங்கியிருக்கிறேன். முகம் நோக்கியதில்லை. இதுவரை அவ்விழிகள் என்னை நோக்கவில்லை என்று பொருள் கொள்கிறேன். அது என்னை அச்சுறுத்துகிறது” என்றான். பீஷ்மர் புன்னகைத்து “இப்போர்க்களத்தில் ஒவ்வொரு உள்ளமும் ஒரு போர்க்களம். அங்கு நிகழ்வதை எவராலும் வகுத்துரைக்க இயலாது” என்றார்.

“எதன் பொருட்டும் அறநோன்பை கைவிடுவதில்லை என்று எனக்குள் சொல்லிக்கொண்டிருக்கிறேன். பெருநோன்பாளராகிய தங்களின் சொல் எனக்கு துணையிருக்க வேண்டும்” என்றான் அஸ்வத்தாமன். பீஷ்மர் பெருமூச்சுவிட்டார். அஸ்வத்தாமன் “தங்கள் வாழ்த்து என்னை அறநோன்பில் நின்றிருக்கச் செய்யும், பிதாமகரே” என்றான். பீஷ்மர் மீண்டும் பெருமூச்சுவிட்டு விழிகளை மூடிக்கொண்டார். “பிதாமகரே!” என்று அஸ்வத்தாமன் அழைத்தான். பீஷ்மரின் உதடுகள் இறுகின. இமைக்குள் விழிகள் ஓடுவது மட்டும் தெரிந்தது.

அவர் முகத்தைப் பார்த்தபடி அஸ்வத்தாமன் காத்திருந்தான். அவரிடமிருந்து எந்த எதிர்வினையும் எழவில்லை. “பிதாமகரே!” என்று மீண்டும் ஒருமுறை அஸ்வத்தாமன் அழைத்தான். அவரிடமிருந்து மறுமொழி எழாதது கண்டு கூப்பிய கைகளுடன் எழுந்து மீண்டும் சென்று அவர் காலடிகளில் தொழுது சகுனியின் அருகே வந்து நின்றான். சகுனி “இனி நமக்குப் பொழுதில்லை. செல்வோம்” என்றார்.

துரியோதனன் வெளியே சற்று அப்பால் தனியாக மார்பில் கைகட்டி நின்றிருந்தான். கிருதவர்மனும் சற்று விலகி தனியாக நின்றிருந்தான். அஸ்வத்தாமனும் சகுனியும் வெளியே வந்து தங்கள் புரவிகளை நோக்கி சென்றனர். கிருதவர்மன் “பாண்டவர் அணிகள் ஒருங்கிவிட்டன. விளக்குகள் ஒழுகுவதைப் பார்த்தால் அவர்கள் கிரௌஞ்ச வியூகம் அமைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது” என்றான்.

“பறவைச்சூழ்கையா? எதன் பொருட்டு? நாம் இங்கு அமைத்திருப்பது பெருஞ்சூழ்கை. இது அலைபோல் எழுந்து சென்று அறைவது. பறவை அதற்கு முன் என்ன செய்யும்?” என்றார் சகுனி. “அலைகளில் பறவைகள் எழுந்து எழுந்து அமர்வதை பார்த்திருக்கிறீர்களல்லவா?” என்று அஸ்வத்தாமன் சொன்னான். அவன் என்ன சொல்கிறான் என்று திரும்பிப்பார்த்த பின் அவன் கண்களை கூர்ந்து நோக்கி விளையாடுகிறான் என்று புரிந்துகொண்டு “மெய்தான்” என்று சொல்லி புன்னகைத்தான் கிருதவர்மன்.

சகுனி “அத்தகைய ஒரு போரை கேள்விப்பட்டதே இல்லை” என்றார். “இங்கு நிகழும் எந்தச் சூழ்கையாவது ஏதேனும் தனிப்பயனை அளித்ததென்று சொல்லிவிடமுடியுமா?” என்றான் அஸ்வத்தாமன். “ஆகவே எல்லா சூழ்கைகளும் நன்றே.” சகுனி ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் சீரான குளம்படி தாளத்துடன் படைகள் நடுவே சென்றார்கள். படைகள் அணிவகுத்துச் சென்று தங்கள் இடங்களில் அமைந்துகொண்டிருந்தன. இருளுக்குள் அவர்களின் உருவங்கள் நிழல்தொகைகள் என ஓசையில்லாமல் அசைந்தன.

அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக அமைதிக்குள் சென்றனர். ஒவ்வொருவரையும் ஏற்று உள்வாங்கிக்கொள்ள அங்கே பேய்க்ளும் தெய்வங்களும் காத்திருந்தன. சகுனி தன் உள்ளம் ஏன் அத்தனை அமைதிகொண்டிருக்கிறது என வியந்தார். ஒருபோதும் அத்தகைய அமைதியை உணர்ந்ததில்லை. உள்ளம் இயங்கிக்கொண்டிருக்கையில் வெறுமனே அமர்ந்திருக்க இயலாதென்பதனால்தான் அவர் நாற்களமாடத் தொடங்கினார். உள்ளத்தின் கட்டற்ற கொப்பளிப்பை நாற்களம் ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவந்துவிடுவதை கண்டிருந்தார். உள்ளம் ஒரு நாற்களமாக மாறும்போதுதான் அவர் அமைதி என்பதை உணர்ந்தார்.

ஆனால் உள்ளம் ஒருபோதும் முழுமையான நாற்களமாக ஆனதில்லை. களத்திற்கு வெளியே ஒருசில காய்கள் எஞ்சியிருந்தன. அறியாத கை ஒன்று ஆட்டத்திற்குள் புகுந்தது. அந்தத் திடுக்கிடலே அவரை ஆட்டத்திற்குள் இருந்து வெளியேற விடாமல் உள்ளே வைத்திருந்தது. ஏன் ஆட்டம் உள்ளத்தில் இருந்து முற்றாக மறைந்தது? அவர் அறுபதாண்டுகாலம் ஆடியது எப்படி சற்றும் தெரியாத ஒன்றென ஆகியது? உள்ளம் இப்போது முற்றமைதி கொண்டிருக்கிறது. ஒற்றைச் சொல்லில் ஊழ்கம் அமைந்ததுபோல ஆகிவிட்டிருக்கிறது.

களமுகப்பை அடைந்தபோது சகுனி பெருமூச்சுவிட்டார். அனைவரும் அவ்வாறே உளம் தொய்வடைந்து இயல்படைவதை மூச்சொலிகளில் இருந்து உணர்ந்தார். துரியோதனனை யானை ஒன்று அடையாளம் கண்டுகொண்டு பிளிறியது. படைத்தலைவர்கள் இருவர் அவரை நோக்கி வந்தனர். அவர்கள் தாழ்ந்த குரலில் படைசூழ்கை பற்றி பேசிக்கொண்டார்கள். சகுனி எதிரே தெரிந்த இருண்ட பாண்டவப் படைவெளியை நோக்கிக்கொண்டிருந்தார். கீழ்வான் சரிவில் மிக மெல்லிய மின்னல் ஒன்று துடித்தணைந்தது. அவ்வொளியில் அவர் பாண்டவப் படையின் அமைப்பை கண்டார்.

அது உளமயக்கு என்றே தோன்றியது. அத்தனை தெளிவாக முழுப் படையையும் ஒற்றை நோக்கில் காணமுடியுமா என்ன? அவர் பெருமூச்சுடன் நோக்க கிருதவர்மன் கைவீசி ஆணைகளை பிறப்பிப்பதை கண்டார். அனல்புகுந்த பின்னர் அவனுடைய உடல் மாறிவிட்டிருந்தது. ஆகவே அசைவுகள் வேறெவரோ எனக் காட்டின. அவர் அவனை வெறித்து நோக்கிக்கொண்டு புரவியில் அமர்ந்திருந்தார். ஏவலன் வந்து அவர் தேரில் ஏறிக்கொள்ளலாம் என்று கையசைவால் தெரிவித்தான். அவர் இறங்கி தன் தேர் நோக்கி சென்றார்.

தேரில் ஏறும்பொருட்டு அதன் கைப்பிடியைப் பற்றியபடி உடலை உந்தியபோது அவர் உணர்ந்தார், பாண்டவப் படை என அவர் கண்டது ஒரு நாற்களத்தை. காய்கள் பரப்பி வைக்கப்பட்ட களம். அவர் கைகள் நடுங்க நின்றுவிட்டார். “அரசே” என்றான் ஏவலன். மீண்டும் உடலை உந்தி எழுந்து தேரிலேறிக்கொண்டபோது அவர் இருளுக்குள் விழிகளைத் துழாவி அவனை தேடினார். நிகரற்ற ஆட்டன். முன்னரும் அவனுடன் ஆடியிருக்கிறேன். அவனே வென்றான். அவன் வெல்வதே புடவியின் இயல்பான நெறி என்பதுபோல. சகுனி பெருமூச்செறிந்தார்.