தீயின் எடை - 56

ஏவற்பெண்டு படிகளுக்கு மேலே தோன்றியதும் நகுலன் எண்ணம் கலைந்தான். அவள் ஒவ்வொரு படியாக இறங்க இறங்க அவன் எளிதாகியபடியே வந்தான். அவள் கீழிறங்கி வந்து தலைவணங்கி “அழைக்கிறார்கள்” என்றாள். அவன் மேலே செல்லத் தொடங்கியதும் அவனுடன் வந்த வீரர்கள் ஆங்காங்கே அமர்ந்தனர். அவர்கள் ஏறிவந்த புரவிகள் வெளியே விடாய்கொண்டு கனைத்தன. நகுலன் ஏவற்பெண்டிடம் “எங்கள் புரவிகளை பேணுக!” என ஆணையிட்டுவிட்டு படிகளில் ஏறி மேலே சென்றான். இடைநாழிகளிலும் செம்புழுதி பரவியிருந்தது. அவற்றை ஏவற்பெண்கள் துடைத்துக்கொண்டிருந்தனர். குருதியலைகள்மேல் அவன் காலடிகள் குருதிச்சுவடுகளாகப் பதிந்தன. ஏவற்பெண்டு வாயிலருகே நின்று உள்ளே செல்லும்படி கைகாட்ட அவன் தன் ஆடையை நீவி குழலை அள்ளி பின்னாலிட்டபின் உள்ளே சென்றான்.

உள்ளே பானுமதி பீடத்தில் அமர்ந்திருந்தாள். வெண்ணிற உடையணிந்து மங்கலங்களைத் துறந்து கைம்மைநோன்புத் தோற்றத்திலிருந்தாள். அவள் இருமடங்கு பருத்து வெளிறியிருப்பதாகத் தோன்றியது. விழிகளுக்குக் கீழே தசைவளையங்கள் வெந்ததுபோல் சிவந்திருந்தன. முகத்தசைகளே சற்று தொங்கியதுபோலத் தோன்றியது. சிறிய உதடுகள் அழுந்தியிருந்தன. நோய்கொண்டவள்போல கலங்கி நீர்மை படிந்த விழிகளால் அவனை நோக்கினாள். நகுலன் தலைவணங்கி “அஸ்தினபுரியின் அரசிக்கு பாண்டவர்களின் தலைப்பணிதல் உரித்தாகுக!” என்று முகமனுரைத்தான். “அரசியார் என்மேல் பொறைகொள்க! நான் களத்திலிருந்து வருகிறேன். உரிய ஆடையுடனும் தூய்மையுடன் தோன்றும் நிலையில் இல்லை” என்றான். அவள் “தாழ்வில்லை” என்றாள். தளர்ந்த மெல்லிய குரலில் “அமர்க! பாண்டவர்களையும் இளைய அரசரையும் அஸ்தினபுரி வணங்குகிறது” என்றாள். அவன் அமர்ந்துகொண்டான்.

எவ்வண்ணம் தொடங்குவது என அவனுக்குத் தெரியவில்லை. அவளுடைய சிறிய பாதங்களைப் பார்த்தபடி வெறுமனே அமர்ந்திருந்தான். அவளும் சொல்லின்றி அசைவெழாமல் காத்திருந்தாள். வெளியே ஏவலர்களின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. புரவிகள் கனைத்தபடியே இருந்தன. நகுலன் மெல்ல கனைத்து “நான் வந்தது ஏன் என அறிந்திருப்பீர்கள்” என்றான். “செய்திகளும் முறையாக தங்களை வந்தடைந்திருக்கும். அச்செய்திகளை உறுதிசெய்யவே வந்தேன்” என்றான். அவள் “அதுவல்ல தூதின் முறை. எவ்வண்ணம் உரைக்கப்படவேண்டுமோ அவ்வண்ணம் அச்செய்தி முன்வைக்கப்படவேண்டும். அதுவே அரசியல்” என்றாள். நகுலன் “ஆம்” என்றான். பின்னர் “அஸ்தினபுரியின் அரசிக்கு இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் செய்தி இது. குருக்ஷேத்ரப் போர் முடிந்தது. அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனையும் அவருடைய கௌரவக் குலத்தையும் ஆதரித்த அனைத்து அரசர்களும் வெல்லப்பட்டார்கள். களத்தில் அஸ்தினபுரியின் படை என ஏதும் எஞ்சியிருக்கவில்லை. அங்கே இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரனின் மின்கொடி ஏற்றப்பட்டது. வெற்றி முறைப்படி முரசறைந்து அறிவிக்கப்பட்டது” என்றான்.

அவள் ஓசையில்லாமல் கேட்டிருந்தாள். கைவிரல்கள் மட்டும் ஆடையைச் சுற்றிப் பிடித்திருந்தன. கழுத்தில் நீல நரம்பு புடைத்திருந்தது. “அஸ்தினபுரியின் அரசர் துரியோதனன் தப்பியோடினார். அவரை துரத்திப்பிடித்து போருக்கு அறைகூவினோம். இளைய பாண்டவர் பீமசேனனுக்கும் அவருக்கும் நிகழ்ந்த கதைப்போரில் துரியோதனன் கொல்லப்பட்டார். அவருடைய உடலை முறைப்படி சிதையேற்றம் செய்ய அணையிடப்பட்டுள்ளது” என்று நகுலன் தொடர்ந்தான். “ஆகவே அஸ்தினபுரியின் மணிமுடியும் செங்கோலும் கருவூலமும் நிலமும் படைகளும் முறைப்படி இனிமேல் இந்திரப்பிரஸ்தத்தை ஆளும் அரசர் யுதிஷ்டிரனுக்கே உரியவை. அவற்றை அரசமுறைப்படி ஒப்படைக்க அஸ்தினபுரியின் அரசி ஆவன செய்யவேண்டும். அரசரும் அரசியும் இளையோரும் நகர்புகும்போது வரவேற்பளிக்கவும் முடியையும் செங்கோலையும் கையளிக்கவும் வேண்டும். இச்செய்திகள் முறைப்படி அரசியாலேயே குடியவையிலும் அந்தணர் அவையிலும் அறிவிக்கப்படவேண்டும்.”

பானுமதி “ஆம், அரசமுறைப்படி இக்கோரிக்கை ஏற்கப்பட்டது” என்றாள். நகுலன் அவள் விழிகளை ஏறிட்டு நோக்கினான். அவற்றில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை. அவளுக்கு துரியோதனன் எவ்வண்ணம் கொல்லப்பட்டான் என்று தெரியுமா? அவன் அதை சொல்லவேண்டும் என எண்ணினான். அவள் சீற்றம் கொள்ளக்கூடும். அந்த அரசநிகழ்வின் ஒழுங்கு குலையக்கூடும். அவன் தன்னுள் எழுந்த அச்சொற்களை ஒழிந்தான். பின்னர் “அரசி, அரசரின் ஆணைப்படி நான் இச்செய்தியை பேரரசி காந்தாரிக்கும் முறைப்படி சொல்லியாகவேண்டும். அதற்கான உரிய ஆணையை பிறப்பிக்கவேண்டும்” என்றான். “வருக!” என பானுமதி எழுந்துகொண்டாள். “நீங்கள்…” என அவன் தயங்க “நானும் அவரை இன்று பார்க்கவில்லை. நீங்கள் செய்தி அறிவிக்கையில் நானும் உடனிருப்பது நன்று” என்றாள். “ஆம்” என்று நகுலன் சொன்னான். அவள் அறையிலிருந்து வெளியேறி இடைநாழியில் நடக்க அவனும் உடன் சென்றான். அவள் தளர்ந்த காலடிகளுடன் எடைமிக்க உடல் அசைந்தாட மெல்ல நடந்தாள்.

இடைநாழியை ஏவற்பெண்டுகள் துடைத்துக்கொண்டிருந்தனர். செந்நிறம் படிந்த பலகைப்பரப்பில் விழுந்த அவளுடைய சிவந்த பாதத்தடங்களை நோக்கியபடி அவன் சென்றான். எண்ணியிராதபடி ஒரு விம்மல் அவனுள் எழுந்தது. என்ன என எண்ணுவதற்குள்ளாகவே அவன் நின்று நெஞ்சில் கைவைத்து “அரசியார் எங்கள்மேல் பொறுத்தருள வேண்டியதில்லை. எத்தகைய தீச்சொல்லையும் அளிக்கலாம். ஏற்க நாங்கள் ஒருக்கமே” என்று இடறிய குரலில் சொன்னான். “நாங்கள் அஸ்தினபுரியின் அரசரை போர்முறை மீறித்தான் வென்றோம். அவரைத் தொடையறைந்து கொன்றோம்.” பானுமதி “ஆம், அறிவேன்” என்றாள். “அதை எவ்வகையிலும் தாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை” என்றான் நகுலன். “நான் இப்போருக்குள் இல்லை” என்று பானுமதி சொன்னாள். “போர் தொடங்குவதற்குள்ளாகவே நான் அதிலிருந்து வெளியேறிவிட்டேன். நிகழப்போவதென்ன என்றும் நன்கறிந்திருந்தேன்.” அவள் நடந்தபோது நகுலன் அவளுடன் காலடிகள் ஒலிக்க நடந்தபடி அவள் சொன்னதன் பொருள் என்ன என்று எண்ணிக்கொண்டான். அவளுக்கு துயரில்லை என்கிறாளா? கொழுநனின் சாவு அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல என்றா? மைந்தரின் சாவுகூடவா?

இடைநாழியின் மறுபக்கத்தில் அசலை தோன்றினாள். அவளும் கைம்பெண்ணாகவே தோற்றமளித்தாள். அவள் முகமும் பானுமதியின் முகம்போலவே தோன்றியது. பானுமதியை நோக்கி ஓடிவந்து “அரசி…” என்றபின் நகுலனை பார்த்து தயங்கினாள். பின்னர் மீண்டும் தத்தளித்து “அனைவருக்குமே…” என்றாள். “சொல்” என்றாள் பானுமதி. “எஞ்சியவர்கள் கிராதர்நாட்டு இளவரசியர்… அவர்களுக்கும் சற்றுமுன்…” அவள் மூச்சிரைத்தாள். நகுலன் அவள் கைகள் குருதியில் நனைந்திருப்பதைக் கண்டான். வெண்ணிற ஆடையிலும் திட்டுதிட்டாகக் குருதி படிந்திருந்தது. “இனி எவருமில்லை… ஒன்றுகூட எஞ்சவில்லை” என்றாள். பானுமதி பெருமூச்செறிந்தாள். “பேரரசி காலையிலேயே தன் சேடியை அனுப்பி செய்தியை உசாவியிருந்தார்கள். நான் இன்னமும் மறுமொழி என எதுவும் சொல்லவில்லை.” பானுமதி “நான் சொல்லிக்கொள்கிறேன்” என்றாள். அசலை பின்னால் சென்று நின்றாள்.

அவர்கள் மேலே நடந்தபோது “நகரில் ஒரு கருகூட எஞ்ச வாய்ப்பில்லை” என்று பானுமதி சொன்னாள். “ஏதோ கொடுந்தெய்வங்கள் நகருக்குள் நுழைந்து கருவுயிர்களை உண்டு களிக்கின்றன என்கிறார்கள்.” அவன் அச்சொற்களால் நெஞ்சு நடுங்கினான். “நான் இந்தச் செம்மணல்முகிலையே ஐயுறுகிறேன். இதில் விண்ணின் நஞ்சு ஏதோ உள்ளது” என்று அவள் சொன்னாள். “நாமறியாத நுண்ணுலகிலும் ஒரு போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் பிறக்காதவர்கள் மடிந்துகொண்டிருக்கிறார்கள்.” அத்தகைய எண்ணங்கள் எழவேண்டுமென்றால் அவளுடைய உள்ளம் கலங்கியிருக்கவேண்டும் என அவன் எண்ணினான். ஆனால் அவள் சீராகவே சொல்லெடுத்தாள். “அங்கே விண்சென்றவர்களின் உலகிலும் போர்நிகழ்கிறதா, அங்கும் குருதிபெருகுகிறதா, எவர் சொல்லமுடியும்?” அவள் திரும்பி அவனை நோக்கி “இங்கே ஏகாக்ஷர் என்னும் முனிவர் களநிகழ்வுகளை சொன்னார். அவருடைய சொற்களினூடாக நாங்கள் அறிந்த போரே வேறு… அதுவே எங்களுக்குள் நீடிக்கிறது” என்றாள்.

காந்தாரியின் மாளிகை முகப்பில் ஏவற்பெண்டு அவர்களைக் கண்டு வணங்கினாள். “பேரரசி என்ன செய்கிறார்?” என்றாள் பானுமதி. “அவர் நேற்று இரவெல்லாம் துயிலவில்லை. செய்திக்குப் பின் உணவும் அருந்தவில்லை. இன்று காலையில்தான் நீராட்டுக்குச் சென்றார். இளைய அரசியர் உடனிருக்கிறார்கள்” என்றாள் ஏவற்பெண்டு. “பேரரசி அவையமர்ந்ததும் எனக்கு சொல்க!” என்றபின் பானுமதி சாளரத்தருகே சென்று நின்றாள். சாளரக்கட்டையில் கையை வைத்து உடனே எடுத்துக்கொண்டாள். கையில் குருதிபோல செந்நிறத்தடம் படிந்திருந்தது. நகுலன் இன்னொரு சாளரத்தின் அருகே சென்று நின்றான். பானுமதி வெளியே நோக்கிக்கொண்டு நின்றாள். வெளியே காற்றின் ஓசையைச் சூடிய மரங்களின் இலைத்தழைப்புக்கள் நிறைந்திருந்தன. அவள் வெறித்து நோக்கிக்கொண்டு நின்றாள்.

நகுலன் வெளியே நோக்கியபோது மரங்களின் இலைகளெல்லாம் புழுதி படிந்திருப்பதை கண்டான். இலைகளின் நடுவே ஒரு பறவை அசைவில்லாது அமர்ந்திருந்தது. ஒரு கணம் கழித்தே அது காகம் என அவன் உணர்ந்தான். அது புழுதியால் வண்ணம் மாறியிருந்தது. விழி அதைக் கண்டதும் அவன் மரங்கள் முழுக்க காகங்களை கண்டான். “அவை சென்ற சில நாட்களாகவே நகரை நிறைத்துள்ளன” என்று பானுமதி சொன்னாள். “நகரெங்கும் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. ஆனால் ஒரு சிறகடிப்பைக்கூட பார்க்கமுடியவில்லை. அவ்வப்போது செத்து உதிர்கின்றன. மரங்களிலும் மாளிகைவிளிம்புகளிலும் அசைவிலாது அமர்ந்திருக்கின்றன. நேற்றுவரை நிழலுருக்களாகத் தெரிந்தன. இன்று மண்பாவைகளாக மாறிவிட்டிருக்கின்றன. அவை பறவைகளே அல்ல என்று சேடியர் சொல்கிறார்கள்.”

நகுலன் அக்காகங்களை நோக்கிக்கொண்டிருந்தான். அவை துயிலில் ஆழ்ந்தவை போலிருந்தன. “இரவெல்லாம் நரிகளின் ஊளை ஒலிக்கிறது. காலையில் நகரில் எந்தக் காலடித்தடங்களும் இல்லை. நரிகளைப்போல புரவிகள்தான் ஊளையிடுகின்றன என்றும் சொல்கிறார்கள். அவ்வொலிகள் விந்தையான கனவுகளை எழுப்புகின்றன. காகச்சிறகு சூடிய கரிய கலிதெய்வங்கள் கூட்டம்கூட்டமாக நகர்நுழைந்துவிட்டதாக நான் கனவு கண்டேன். அதே கனவை இந்த அரண்மனையில் அனைவருமே கண்டார்கள். இந்தக் காகங்கள் அவ்வாறு கனவில் வந்தன என எண்ணுகிறேன்.” அவன் காகங்களை அப்பாலும் அப்பாலும் என நோக்கிக்கொண்டிருந்தான். விழிகளை விலக்கி அறைக்குள் நோக்கினான். “இவையனைத்துமே கனவில் வந்தவைதான். திரௌபதி அவைச்சிறுமை செய்யப்பட்ட நாளிலேயே கனவுகள் தொடங்கிவிட்டன” என்று பானுமதி சொன்னாள். நகுலன் “எங்களுக்கும் கொடுங்கனவுகள் வந்துகொண்டிருந்தன” என்றான். “இக்காலகட்டத்தில் பாரதவர்ஷம் முழுக்கவே கொடுங்கனவுகள் நிறைந்திருக்கக்கூடும்” என்றாள் பானுமதி.

சேடி வந்து தலைவணங்கினாள். பானுமதி உள்ளே செல்ல நகுலனும் தொடர்ந்தான். உள்ளே காந்தாரி மேடை போன்ற பெரிய பீடத்தில் பருத்த வெண்ணிற உடலை அமைத்து படுத்ததுபோல் அமர்ந்திருந்தாள். அவளுடைய சிறிய வெண்ணிறக் கால்கள் தெரிந்தன. மண்படாத விரல்கள் மொட்டுகள் போலிருந்தன. அவளைச் சூழ்ந்து அவளுடைய தங்கையர் நின்றிருந்தனர். ஒவ்வொருவரும் தனித்தனியான முகமும் தோற்றங்களும் கொண்டிருந்தாலும் அனைவர் முகங்களும் ஒன்றுபோலவே தோன்றின. நெடுநாள் துயிலிழந்த கண்கள். உளப்பிறழ்வு கொண்டவர்கள்போல் கணம்தோறும் மாறிக்கொண்டே இருக்கும் முகத்தசைகள். பற்கள் நெரிபட்டன. உதடுகள் அழுந்தின. சிலகணங்களில் நகைப்புபோல வாய்கள் விரிந்து அமைந்தன. கைகளை விரல்சுருட்டி இறுக்கியும் தளர்த்தியும் கால்களால் நிலத்தை அழுத்தியும் வருடியும் அவர்கள் நின்றனர்.

நகுலன் காந்தாரியின் அருகே சென்று தலைவணங்கி “அன்னையே, நான் உங்கள் மைந்தன் நகுலன்” என்றான். காந்தாரி கைகளை நீட்ட அவன் ஒருகணம் தயங்கியபின் அருகே சென்று அவள் கால்களை தொட்டான். காந்தாரி அவன் தலைமேல் கையை வைத்தாள். மெல்லிய கை பசுவின் நாக்கு என அவன் உடலை வருடியது. “மெலிந்து களைத்திருக்கிறாய்” என்றாள். “ஆம் அன்னையே, களத்திலிருந்து வருகிறேன்” என்று நகுலன் சொன்னான். “என் மூத்தோன் தன்பொருட்டு தங்களிடம் அறிவிக்கச் சொன்ன செய்தியுடன் வந்துள்ளேன்.” காந்தாரி சொல்க என கைகாட்டினாள். நகுலன் நெஞ்சுகுவித்து சொல்லெடுத்தான். “குருக்ஷேத்ரப் போர் முடிந்தது. அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனையும் அவருடைய கௌரவக் குலத்தையும் ஆதரித்த அனைத்து அரசர்களும் வெல்லப்பட்டார்கள். களத்தில் அஸ்தினபுரியின் படை என ஏதும் எஞ்சியிருக்கவில்லை. அங்கே இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரனின் மின்கொடி ஏற்றப்பட்டது. வெற்றி முறைப்படி முரசறைந்து அறிவிக்கப்பட்டது.” பானுமதியிடம் சொன்ன அதே சொற்களை அவன் சொல்ல காந்தாரி அசைவில்லாமல் அதை கேட்டுக்கொண்டிருந்தாள்.

“அஸ்தினபுரியின் அரசர் துரியோதனன் தப்பியோடினார். அவரை துரத்திப்பிடித்து போருக்கு அறைகூவினோம். இளைய பாண்டவர் பீமசேனனுக்கும் அவருக்கும் நிகழ்ந்த கதைப்போரில் துரியோதனன் கொல்லப்பட்டார். அவருடைய உடலை முறைப்படி சிதையேற்றம் செய்ய அணையிடப்பட்டுள்ளது” என்று நகுலன் தொடர்ந்தான். “ஆகவே அஸ்தினபுரியின் மணிமுடியும் செங்கோலும் கருவூலமும் நிலமும் படைகளும் முறைப்படி இனிமேல் இந்திரப்பிரஸ்தத்தை ஆளும் அரசர் யுதிஷ்டிரனுக்கே உரியவை. அவற்றை அரசமுறைப்படி ஒப்படைக்க அஸ்தினபுரியின் அரசி ஆவன செய்யவேண்டும். இந்திரப்பிரஸ்தத்தின் அரசரும் அரசியும் இளையோரும் நகர்புகும்போது வரவேற்பளிக்கவும் முடியையும் செங்கோலையும் கையளிக்கவும் வேண்டும். இச்செய்திகள் முறைப்படி அரசியாலேயே குடியவையிலும் அந்தணர் அவையிலும் அறிவிக்கப்படவேண்டும்.” சொல்லிமுடித்து அவன் தலைவணங்கினான். அச்சொற்கள் அவ்வாறே நினைவில் நீடிப்பதை அவன் அகம் வியந்துகொண்டது.

காந்தாரி மெல்லிய குரலில் “நலம் சூழ்க!” என்றாள். அவள் ஏற்கெனவே எல்லாச் செய்திகளையும் அறிந்திருக்கிறாள் என்பதை அவளுடைய பாவனைகள் காட்டின. நகுலன் மேலும் சொல்லலாமா என்று எண்ணினான். துரியோதனன் கொல்லப்பட்ட முறையை சொல்லியே ஆகவேண்டும் என்று அவன் உள்ளம் எழுந்தது. ஆயினும் தயக்கம் எஞ்சியது. காந்தாரி பானுமதியிடம் “இளவரசியர் எவ்வண்ணம் உள்ளனர்?” என்றாள். “எதுவுமே எஞ்சவில்லை, பேரரசி. சற்றுமுன்னர்தான் இறுதிக்கருவும் அகன்றது” என்றாள். காந்தாரி துயரக் குரலில் “தெய்வங்களே!” என்றாள். அவள் விழிகளைக் கட்டியிருந்த நீலப்பட்டு நனைந்து வண்ணம் மாறியது. “நகரில் அனைத்துக் கருக்களுமே அகன்றுவிட்டன. செய்திகள் வந்துகொண்டே உள்ளன. மாலையில்தான் தெரியும், ஏதாவது எஞ்சியுள்ளதா என்று” என்றாள் பானுமதி. காந்தாரி விம்மியபடி உதடுகளை அழுத்திக்கொண்டாள். அவள் உடலில் தசைகள் அசைந்தன. சத்யசேனை குனிந்து அவள் தோளை தொட சத்யவிரதை பட்டுத்துணியால் அவள் முகத்தை துடைத்தாள். காந்தாரி சத்யசேனையின் கைகளை உதறினாள்.

நகுலன் சற்றே குனிந்து தளர்ந்த குரலில் “எல்லாப் பிழைகளும் பாண்டவர்களுக்கே உரியவை, பேரரசி. பிதாமகரையும் ஆசிரியரையும் அங்கரையும் கொன்றது போலவே நெறிமீறியே அஸ்தினபுரியின் அரசரையும் நாங்கள் கொன்றோம். போர்முறையை மீறி அவர் தொடையில் அறைந்தார் என் மூத்தவர்” என்றான். “என் மூத்தவர் பொருட்டும் என் குலத்தின் பொருட்டும் நான் தங்களை அடிவணங்குகிறேன்… தங்கள் சொல் எதுவோ அது எங்கள் குலத்தில் திகழட்டும். உங்கள் துயரின்பொருட்டு நாங்களும் எங்கள் கொடிவழியினரும் முற்றழிவதாக இருப்பினும், கெடுநரகு சூழினும் அது முற்றிலும் முறையே” என்றான். முன்னகர்ந்து கால்களை மடித்து அமர்ந்து காந்தாரியின் காலடியில் தன் தலையை வைத்தான்.

காந்தாரி அவன் தலைமேல் கைவைத்து மெல்லிய குரலில் “நலமே நிறைக! குடி பொலிக! அனைத்து மங்கலங்களும் அனைத்து வெற்றிகளும் அறுதி நிறைவும் கூடுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றாள். அவன் நடுங்கியபடி அவள் காலடிகளில் தலைவைத்து அப்படியே அமர்ந்திருந்தான். அவன் உடல் குளிர்கொண்டு பலமுறை விதிர்த்தது. பின்னர் எழுந்து சத்யசேனையின் காலடிகளை வணங்கி “அன்னையே” என்றான். அவளும் “நலம் சூழ்க! மங்கலம் பொலிக!” என்று அவனை வாழ்த்தினாள்.

ஒன்பது அன்னையரையும் வணங்கி அவன் எழுந்தபோது உள்ளம் மேலும் எடைகொண்டுவிட்டிருந்தது. அவர்களிடமிருந்து எதை எதிர்பார்த்தேன்? ஒரு தீச்சொல்லையா? வசைகளையா? எனில் என் உள்ளம் ஆறியிருக்குமா? எங்கள் பிழைகளுக்கான தண்டனையை பெற்றுக்கொண்டோம் என்று கருதியிருப்பேனா? அன்றி அவர்களும் எங்களைப் போலவே இழிவுகொண்டவர்கள் என்று எண்ணியிருப்பேனா? ஆனால் என் ஆழம் அறிந்திருக்கிறது, வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒரு சொல்லேனும் மங்கலமில்லாதவற்றை உரைக்காத பேரரசியின் நாவில் பிறிதொன்று எழாதென்று. மாமங்கலை, பேரன்னை, மானுடர் அனைவருக்குமே முலைசுரந்து அமர்ந்திருப்பவள். அவன் விழிகள் நிறைந்து கன்னத்தில் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. கைகளை நெஞ்சோடு சேர்த்து கூப்பியபடி நின்றான். சத்யசேனை அவன் செல்லலாம் என கைகாட்டினாள். அவன் மீண்டும் வணங்கி பின்னடி எடுத்து வைத்தான்.

பானுமதி “நான் இரு நாட்களுக்குள் காசிக்கே கிளம்பவிருக்கிறேன், பேரரசி” என்றாள். “அரசர் மறைந்ததுமே என் கடமையும் உரிமையும் அகன்றுவிட்டிருக்கிறது. இயல்பாகவே மணிமுடி இன்று பேரரசர் திருதராஷ்டிரருக்கு உரியது. அவர் அதை இந்திரப்பிரஸ்தத்தின் அரசருக்கு முறைப்படி அளிக்கவேண்டும். எனக்கு இங்கே இனி பணி என ஏதுமில்லை.” காந்தாரி “என் மைந்தனுக்கான நீர்க்கடன்கள் நிகழ்ந்து முடிவதுவரை நீயும் அசலையும் இங்கே இருந்தாகவேண்டும்” என்றாள். அவள் குரல் சற்றே இடறியது. “அவன் அதை விரும்புவான்” என்றாள். பானுமதி உதடுகளை இறுக்கிக்கொண்டு தலைகுனிந்தாள். அவள் உடல் விம்முவதுபோல அசைந்தது. ஆடைமுனையை பற்றிச் சுருட்டிக்கொண்டு “ஒரு துளிக் குருதிகூட இங்கு எஞ்சாமல் கிளம்புகிறேன், பேரரசி” என்றாள். விம்மியபடி மேலாடையால் தன் முகத்தை மறைத்தாள். கால்தளர்ந்து காந்தாரியின் அருகே தரையில் அமர்ந்து அவள் கால்களில் தன் தலையை வைத்துக்கொண்டு குனிந்து விசும்பி அழுதாள்.

காந்தாரி பானுமதியின் தலையை வருடினாள். “இல்லை, தெய்வங்கள் நம்மை அவ்வண்ணம் கைவிடப்போவதில்லை. நம் குடி வாழும்… நான் தெய்வங்களிடம் கோருகிறேன். மூதன்னையரை அழைத்து ஆணையிடுகிறேன்” என்றாள். சத்யசேனையிடம் “நிமித்திகரை அழைத்துவருக… பூசகர்களும் வரவேண்டும். நம் குடியில் ஒரு கருவாவது எஞ்சவேண்டும்… எஞ்சியாகவேண்டும். அதற்கு என்ன செய்வதென்று நோக்குக! அதன்பொருட்டு எதை இழந்தாலும் நன்று. எந்நோன்பாயினும் நன்று… எஞ்சியுள்ளோர் அனைவரும் அழிவதென்றாலும் நன்றே” என்றாள். விழிநீர் கண்களைக் கட்டிய துணியை மீறி கன்னங்களில் வழிய “தெய்வங்களே! மூதன்னையரே!” என்று நெஞ்சில் கைவைத்து விம்மினாள். நகுலன் அங்கே நிற்கமுடியாமல் பதைப்படைந்தான். அவர்கள் கதறி அழவில்லை. ஆனால் அவர்களின் துயர் ஒற்றை அழுகையாக இணைந்துவிட்டிருந்தது.

அசலை கூடத்தின் மறு வாயிலில் தோன்றினாள். சத்யசேனை அவளை நோக்க பானுமதி கலைந்து அவளை நோக்கியபின் எழுந்து மேலாடையால் முகத்தை அழுந்தத் துடைத்தபடி அவளை நோக்கி சென்றாள். அசலை பானுமதியிடம் ஏதோ சொல்ல அவள் திடுக்கிட்டு பின்னடைந்து பின் நெஞ்சில் கைவைத்து “தெய்வங்களே!” என்று விம்மினாள். “என்ன?” என்றாள் காந்தாரி. “இல்லை… பேரரசி, இது வேறு செய்தி… போர்ச்செய்தி” என்றாள் பானுமதி. உரத்த குரலில் “சொல், நானறியாத ஏதும் இங்கே நிகழாது. இது ஆணை” என்றாள் காந்தாரி. பானுமதி மெல்ல முன்னால் வந்து “ஒற்றர்செய்தி வந்துள்ளது, பேரரசி. நேற்று பின்னிரவில் பாஞ்சாலராகிய அஸ்வத்தாமனும் யாதவர் கிருதவர்மனும் ஆசிரியர் கிருபரும் இணைந்து சௌப்திகக் காட்டில் பாண்டவ மைந்தர்கள் தங்கியிருந்த மனோசிலை என்னும் ஊருக்குள் புகுந்திருக்கிறார்கள்” என்றாள்.

நகுலன் என்ன நிகழ்ந்தது என்று அதற்குள் புரிந்துகொண்டான். விழுந்துவிடுவோம் என உணர்ந்து பின்னடைந்து தூணை நோக்கி சென்றான். பானுமதி அவனை பிடிக்கும்பொருட்டு கைநீட்ட சத்யசேனை வந்து அவனை பிடித்தாள். அவளுடைய வலிமையான ஒற்றைக்கையில் அவன் கால்தளர்ந்து உடல்துவண்டு அமைந்தான். பானுமதி “அங்கே பாண்டவ மைந்தர்கள் நோயுற்று படுத்திருந்தனர். அவர்கள் எண்மரையும் கொன்று அனலூட்டிவிட்டார் அஸ்வத்தாமன். பாஞ்சாலர்களாகிய சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் கொல்லப்பட்டார்கள்” என்றாள். காந்தாரி “தெய்வங்களே, என் குடியின் மைந்தரை முற்றழித்துவிட்டீர்களே! தெய்வங்களே” என்று கூவி அழுதாள். இரு கைகளையும் விரித்து “என் மைந்தர்களே! என் மைந்தர்களே!” என வீறிட்டாள்.

வெண்முரசு விவாதங்கள்