தீயின் எடை - 54
கோட்டையின் காவல்மாடங்களில் வெறிப்புடன் செயலற்று ஆங்காங்கே அமர்ந்திருந்த பெண்டிர் நடுவே சம்வகை மட்டும் ஊக்கம் மிகுந்தவளாக அலைந்துகொண்டிருந்தாள். கைவிடுபடைகளின் மேலேறி ஆராய்ந்துகொண்டிருந்த அவளைக் கண்டு முதுமகள் ஒருத்தி வாய்மேல் கைவைத்து நகைத்து “முட்களின்மேல் பட்டாம்பூச்சிபோல தெரிகிறாய்” என்றாள். அவள் நகைத்துக்கொண்டு குதித்திறங்கி கோட்டைமேல் ஏறிச்சென்றாள். பெண்கள் அவளை வெறித்த நோக்குடன் பார்த்தனர். ஒவ்வொருவரும் சற்றுமுன்னர்தான் அழுது முடித்தவர்கள் போலிருந்தனர். எல்லா குரல்களிலும் எப்போதும் சற்று அழுகை இருந்தது. எந்தப் பேச்சும் உளமுலைந்த விம்மலில் சென்று முடிந்தது. அவள் எவரிடமும் பேச விழையவில்லை. தன் தனியுலகில் கோட்டைமேல் அலைந்துகொண்டிருந்தாள். முழுக் கோட்டையையும் சுற்றிவந்து பார்த்தாள். தன்னோரன்ன இளையோரை மட்டும் உடன் சேர்த்துக்கொண்டாள். மெல்லமெல்ல கோட்டையே அவள் ஆட்சிக்கு வந்தது. அவளுடைய ஆணைகளுக்காக அனைவரும் காத்திருந்தனர்.
அதற்கேற்ப போரின் இறுதி நாட்களில் எல்லைப்புறங்களில் கலவரங்கள் உருவாயின. தெற்கே கிராதர்கள் காடுகளிலிருந்து வந்து தாக்குவதாக செய்தி வந்தது. வடமேற்கே யவனர்களின் சிறுகுழுக்கள் கூர்ஜர சிந்து விரிநிலங்களைக் கடந்துவந்து தாக்கினர். ஆகவே சாலைகளிலிருந்து மூத்த பெண்டிரின் படைகள் ஒருங்குதிரட்டப்பட்டு அங்கே அனுப்பப்பட்டன. கோட்டைக்காவலில் இருந்தவர்கள் அந்த இடங்களுக்கு சாலைக்காவல்களுக்கு அனுப்பப்பட்டனர். எல்லைக்காவல் மாடங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு படைகள் சிறிய இறுக்கமான அலகுகளாக ஆக்கப்பட்டன. சாலைகளில் எதிர்பாராதபடி தோன்றும் காவல்படைக் குழுக்களே சாலையை பாதுகாத்தன. அவர்களின் மீதான அச்சம் நிலைநிறுத்தப்படுவதன் பொருட்டு சாலையில் வணிகரல்லாத எவர் தென்பட்டாலும் அக்கணமே கொல்லப்பட்டு சாலையோரங்களிலேயே கழுவேற்றப்பட்டார்கள். அயல்சூதரும் அலையும் துறவியரும் சாலைகளில் நடமாட தடைவிதிக்கப்பட்டது. மலைப்பொருள் விற்கும் காட்டாளர் தங்களுக்கு வகுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நின்றுகொள்ளவேண்டும் என்று வகுக்கப்பட்டது. அச்சத்தால் ஆளப்பட்ட சாலைகள் ஓசையிழந்து செத்த பாம்பென வளைந்து கிடந்தன.
ஆனால் ஒவ்வொரு நாளும் குறைந்துகொண்டிருந்த படைகளைக் கொண்டு ஒவ்வொரு நாளும் பெருகி வந்த எதிர்ப்புகளை வெற்றியுடன் எதிர்கொண்டு அஸ்தினபுரியை உறுதியுடன் பானுமதி நிலைநிறுத்தினாள். “பத்து துரியோதனர்களுக்கு நிகரானவர் அரசி” என்று முதுமக்கள் சொல்லிக்கொண்டார்கள். “ஆண்கள் கைபதறும் பொழுதுகளில் பெண்கள் பதினாறு கைகளுடன் எழுகிறார்கள்” என்றனர் சூதர். கனகர் “அரசர் துரியோதனன் ஆயிரம் கண்கள் கொண்டவர். அரசியோ இந்நிலத்தின் அனைத்து மணற்பருக்களையும் விழிகளாக ஆக்கிக்கொண்டவர்” என்றார். ஒவ்வொரு நாளும் அரசி காலையிலும் மாலையிலும் கோட்டைக்கு வந்தாள். பலமுறை அவளிடமே நேரடியாக ஆணைகளை விடுத்தாள், பின்னர் அரசாணைப்படி சம்வகை கோட்டையின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு கோலும் தலைப்பாகையும் குடிப்பெயரும் அளிக்கப்பட்டது. அவள் கோட்டையில் தன் அறையிலும் கோட்டையின்மேலிருந்த நோக்குமாடத்திலுமாக வாழத்தொடங்கினாள்.
களச் செய்திகள் வருந்தோறும் பானுமதி மாறிக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். அவள் மேலும் மேலும் அமைதிகொண்டவளாக ஆனாள். விழிகள் சோர்ந்து தடித்திருந்தாலும் குரல் தாழ்ந்து உறுதியுடன் ஒலித்தது. ஆனால் படிகளிலேறும்போது அவள் மூச்சிளைத்தாள். வெண்ணிறமான தடித்த உடலில் வியர்வை பளபளத்தது. சுருண்ட குழல்கள் சூழ்ந்த வட்ட முகம் பனித்த வெள்ளிக் கலம்போலத் தெரிந்தது. அவளுக்கு பானுமதியின் தோற்றம் மேல் எப்போதுமே ஈர்ப்பு இருந்தது. சிறிய பாதங்கள், சிறிய கைகள், மிகச் சிறிய கொழுத்துருண்ட விரல்கள். செம்மொட்டு போன்ற உதடுகள். அவள் கைகளை ஆட்டி நடந்து வருகையில் உருள்வதுபோல தோன்றினாள். மைந்தரைப் பெற்று நிறைந்த அன்னை என்றன்றி அவளைப்பற்றி எவரும் எண்ணமுடியாது. ஆனால் அவள் அந்நிலத்தையே முழுதாட்சி செய்துகொண்டிருந்தாள். மிகத் தாழ்ந்த குரலில் உதிரிச்சொற்களில் அவள் இடும் ஆணை விண்ணில் இடிமுழக்கம் எழுவதுபோல் அஸ்தினபுரியெங்கும், அதன் விரிந்த புறநிலமெங்கும் ஒலித்தது.
போர்முடிவு நாட்களில் அவள் மிகவும் வெளிறிவிட்டிருந்தாள். காலையின் ஒளி அவள்மேல் பட்டபோது அது பளிங்கென அவளுடலுக்குள் ஊடுருவுவதுபோலத் தோன்றியது. சிறிய காதுகள் சிவந்து ஒளிகொண்டிருந்தன. அவளால் நிற்க முடியவில்லை. ஓரிரு சொற்களுக்குப் பின் மெல்ல படிகளில் இறங்கிச் சென்றாள். ஒவ்வொரு படியாக இறங்கிச்செல்லும் அவளை சம்வகை நோக்கிக்கொண்டு நின்றாள். மேலும் ஒரு நாளில் போர் முடிந்துவிடும் என அவள் அறிந்திருந்தாள். அது முறைப்படி அறிவிக்கப்படவில்லை என்றாலும் நகரில் அனைவருமே அதை அறிந்திருந்தார்கள். ஒவ்வொருநாளும் நகரம் மூழ்கும் மரக்கலம் என அமிழ்ந்துகொண்டே இருப்பதைப்போலத் தோன்றியது. கோட்டைமேல் நின்று நகரை நோக்கும்போது விழிதொடும் எல்லைவரை ஓர் அசைவுகூட தென்படாதிருந்தது. எங்கோ தெரிந்த அசைவுகூட அந்த அசைவின்மையை கூட்டியே காட்டியது. கொடிகள் பொருளின்றி படபடத்துக்கொண்டிருந்தன. உதிரிப்பறவைகள் சோர்ந்து காற்றில் அலைக்கழிந்தன. அங்காடிகளும் தெருக்களும் ஓய்ந்தபோது நகரிலிருந்த பெரும்பாலான பறவைகள் அகன்றுவிட்டிருந்தன.
பல நாட்களாகவே நகர்மேல் குளிர்ந்த காற்று நிறைந்திருந்தது. வானம் எப்போதுமே இடிமுழக்கத்துடன் மங்கலடைந்து பரவியிருக்க அவ்வப்போது சிறிய மின்னல்கள் வெட்டி ஓய்ந்தன. பெருமழை ஒன்று இதோ இதோ என பொருமிக்கொண்டே இருந்தது. காற்றில் குளிரை ஊடுருவிக்கொண்டு அவ்வப்போது நீராவி வெக்கை வந்து வீசி காதுமடல்களில் ஆவியை பரப்பியது. காற்று அசைவற்றபோது ஆவியின் எடையால் மூச்சுத் திணறுவது போலிருந்தது. பதினெட்டாம் நாள் காலை களத்தில் மிகச் சிலரே எஞ்சியிருக்கிறார்கள் என்றும் அன்றைய போரில் பெரும்பாலும் எவருமே எஞ்சப்போவதில்லை என்றும் அனைவரும் அறிந்தனர். எவர் வந்து சொன்னார்கள், எவ்வண்ணம் அச்செய்தி பகிரப்பட்டது என அவள் அறிந்திருக்கவில்லை. எவரும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவள் எண்ணியதுபோல அது நகரில் கடுந்துயரை உருவாக்கவில்லை. அசைவற்ற நீரில் விழுந்த இலை என சிற்றலையை உருவாக்கி அதுவும் அமைந்தது. ஏற்கெனவே அனைவரும் ஆழ்ந்த உளச்சோர்வில் இருப்பும் இன்மையுமற்ற நிலையை அடைந்திருந்தனர். விழிகளில் நீர் வற்றி சிலைவெறிப்பு கூடியிருந்தது.
“அவர்கள் அனைவருமே முன்னரே கைம்பெண்களென ஆகிவிட்டிருக்கின்றனர்” என்று பிரபை சொன்னாள். “நோக்கு, அவர்கள் தங்கள் மைந்தர்களை எப்போதும் தழுவிக்கொண்டே இருக்கின்றனர். அவ்வப்போது சீற்றம்கொண்டு அவர்களை தள்ளியும் விடுகிறார்கள். எழுந்து சென்று அடித்து நொறுக்குகிறார்கள். அப்போது அவர்களின் விழிகளை நோக்கினால் மைந்தரை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்று தோன்றும்.” சம்வகை ஒவ்வொரு முகமாக நோக்கினாள். பெண்களின் முகங்களில் இத்தனை மங்கலமின்மை தோன்றக்கூடும் என அவள் எண்ணியிருக்கவில்லை. அவர்கள் நெற்றிப்பொட்டும் வளையல்களும் கழுத்தணிகளும் கொண்டிருந்தார்கள். ஆயினும் ஒவ்வொரு கோணத்திலும் அந்த மங்கலமின்மை தெரிந்தது. “அவர்கள் இப்போது காத்திருப்பது ஓர் உறுதிப்பாட்டுக்காக. அது வந்ததும் வெடித்துக் கதறி அழுவார்கள். சடங்குகள் இயற்றுவார்கள். நாற்பத்தொரு நாள் கைம்மைநோன்பு கொள்வார்கள். அதன்பின் மீண்டும் முளைத்தெழுவார்கள். பெண்கள் முருங்கைமரம்போல. எங்கும் எப்படியும் முளைத்தெழுவார்கள்” என்று முதிய காவல்பெண்டான சரசை சொன்னாள்.
பதினெட்டாம் நாள் மாலை போர் முடிந்த செய்தி முழவுகள் வழியாகவே அஸ்தினபுரியை வந்தடைந்தது. தலைக்குமேல் ஒரு பேய் கடந்துசெல்வதுபோல அது போய் அரண்மனையை அடைந்தது. அரண்மனை முன்னரே கற்பாறை அடுக்கென உறைவு கொண்டிருந்தது. அரண்மனையிலிருந்து எச்செய்தியும் எழவில்லை. பிரபை “அங்கிருந்து ஏதேனும் அறிவிப்பு வரும் என நான் எண்ணவில்லை” என்றாள். “அரசர் உயிருடன் இருக்கிறார். அவருடைய இறப்புச் செய்தி இன்னமும் வரவில்லை. அவர் உயிருடனிருப்பது வரை போர் முடியவில்லை என்றே பொருள்” என்றாள் பிரக்யை. “இனி எவ்வகையில் நிகழும் இப்போர்?” என்றாள் சம்வகை. “எவ்வண்ணம் வேண்டுமென்றாலும் நீளலாம். அரசர் என்ன எண்ணுகிறார் என்று தெரியவில்லை. நாம் காத்திருப்போம்” என்றாள் பிரக்யை. நகரமே மேலும் செய்திக்காகக் காத்திருந்தது. அஞ்சி பதுங்கியிருக்கும் விலங்கின் முன்கோட்டி கூர்ந்த செவிகளைப்போல கோட்டை காவல்மாடங்கள் நோற்றிருந்தன. இரவுகளும் பகல்களும் ஒற்றைக் கணத்தின் நீள்வடிவு என கடந்துசென்றன.
மறுநாள் காலை பானுமதி கோட்டைக்காவலை நோக்க வரவில்லை. அரண்மனையிலிருந்து எந்த ஆணையும் எழவில்லை. ஆனால் ஒவ்வொன்றும் ஏற்கெனவே நன்கு வகுக்கப்பட்டிருந்தமையால் சீராக நிகழ்ந்தன. சம்வகை காலையில் முழுக் கோட்டையையும் நடந்தே நோக்கினாள். காவலிருந்த மகளிருக்கான ஆணைகளை பிறப்பித்தாள். கோட்டையின் மாடங்களில் வில்லுடன் அமர்ந்திருந்தவர்களை ஊக்கமூட்டி ஓரிரு சொல் உரைத்தாள். மீண்டும் தன் சிற்றறைக்குத் திரும்பி அரண்மனையிலிருந்து ஆணை ஏதும் வந்துள்ளதா என்று நோக்கினாள். களைப்புடன் பீடத்தில் சாய்ந்து அரைத்துயிலில் ஆழ்ந்தபோது அவளுக்கு ஒரு கனவு வந்தது. புரவியில் வந்திறங்கிய வீரன் ஒருவன் அவள் அருகே வந்து “அரசர் களம்பட்டார், அச்செய்தியுடன் வந்திருக்கிறேன்” என்றான். “அரசரா? எங்கே?” என்று அவள் கேட்டாள். “தொலைகாட்டில், அவர் அஞ்சனைமைந்தர் அனுமனால் கொல்லப்பட்டார்” என்று அவன் சொன்னான். “அவர் உடல் எங்கிருக்கிறது?” என்று அவள் கேட்டாள். “அதை உடன்கொண்டு வந்துள்ளோம்” என்று அவ்வீரன் சொன்னான்.
அவன் கன்னங்கரிய வடிவம் கொண்டிருந்தான். தலையில் காகத்தின் இறகை சூடியிருந்தான். காதுகளில் எலும்பாலான தோடு. கழுத்தில் பற்களைக் கோத்துச் செய்த வெண்மணி மாலை. அவள் “நீங்கள் யார்?” என்றாள். “என்னை கலியன் என்பார்கள். இவர்கள் என் தோழர்” என்று அவன் சொன்னான். அவன் கைகளுக்குக் கீழே கரிய சிறகுகள் இருப்பதை அவள் கண்டாள். அவன் கைகாட்ட கழுதையை இழுத்துக்கொண்டு வந்தவர்களின் தோள்களிலும் கரிய சிறகுகள் இருந்தன. அவர்கள் அருகணைந்தபோது அனைவரும் வெண்பற்கள் தெரிய சிரித்துக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். நோக்க நோக்க செறியும் விந்தையான ஒரு இருள் அவர்களைச் சூழ்ந்திருந்தது. புரவியின்மேல் துரியோதனன் அமர்ந்திருந்தான். “அரசர் சாகவில்லை!” என்று அவள் சொன்னாள். “இல்லை, அவர் இறந்துவிட்டார். இது அவருடைய இன்னொரு வடிவம்” என்று கலியன் சொன்னான். துரியோதனனும் எலும்புக் குழைகளும் பல்மணி மாலையும் அணிந்திருந்தான். அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் நோக்கியிருக்க அவர்கள் நகருக்குள் நுழைந்தார்கள்.
அவள் விழித்துக்கொண்டு திகைத்து சற்றுநேரம் அமர்ந்திருந்தாள். பின்னர் களைத்த கால்களுடன் படிகளில் ஏறி மேலே சென்றாள். நகரின் சோர்வை நோக்கிக்கொண்டு நின்றாள். அது பின்மாலையா அந்தியா என்றே ஐயமாக இருந்தது. அப்போதுதான் அவள் முழவுச்செய்தியை கேட்டாள். அது துரியோதனனின் இறப்பை அறிவித்தது. அங்கிருந்த பெண்களில் அவள் மட்டுமே அச்செய்தியை பகுத்துணரும் விழிப்பு கொண்டிருந்தாள். ஒருகணம் ஏற்பட்ட பரபரப்புக்குப் பின்னர் அவள் சோர்ந்து கோட்டை விளிம்பில் அமர்ந்தாள். அரண்மனையில் உச்சிமாடத்திலிருந்து செய்தி பெறப்பட்டது என்று முரசு முழங்கி அறிவிக்க முழவுச்செய்தி ஓய்ந்தது. எங்கிருந்து வருகிறது அது? காடு உறுமி அதை சொல்கிறதா? “ஆம், நான் அவரை உண்டுவிட்டேன். என் வயிற்றில் அவர் செரித்துக்கொண்டிருக்கிறார்” என்கிறதா அது? அந்தக் கணத்தின் வெறுமை தாளாமல் அவள் வில்லை எடுத்துக்கொண்டு கோட்டைமேல் நடக்கத் தொடங்கினாள். மேற்குக் கோட்டைவாயிலில் நின்று தொலைவில் தெரிந்த ஏரி நோக்கி அம்புகளை தொடுக்கலானாள். அம்புகள் சென்று விழ விழ அவள் இயல்படைந்தபடியே வந்தாள்.
அந்தியில் தன்னந்தனியாக கோட்டைமேல் சம்வகை அமர்ந்திருந்தாள். சூழவும் காவல்மகளிர் இருந்தபோதிலும் அவர்கள் இல்லை என்றே தோன்றிக்கொண்டிருந்தது. காலையிலிருந்தே காற்று வீசிக்கொண்டிருந்தது. வானம் தொலைவில் இடிமுழங்க, தென்மேற்கு வானில் மின்னல்கள் அவ்வப்போது அதிர்ந்து அமைய, ஒளியூறியும் மங்கலாகவே இருந்தது. காற்று தென்மேற்கிலிருந்து வீசியபோது அதில் நீர்த்துளிகள் இருந்தன. வடகிழக்கிலிருந்து திரும்ப வீசியபோது வெக்கை படர்ந்திருந்தது. நகரத்தின்மேல் கண்கூசாத ஒளி விரவியிருந்தாலும் இருள் மூடியிருப்பதாகவே தோன்றியது. எங்கும் ஓசையேதும் இல்லை. அரண்மனையிலிருந்து பொழுதுமணிகள் ஒலிக்கவில்லை. நகரமெங்கும் நிறைந்திருந்த ஆலயங்கள் எதிலும் வழிபாடுகள் நிகழவில்லை. அரசரின் இறப்புச்செய்தி அஸ்தினபுரியை வந்தடைந்த அதே கணத்தில் அப்படியே உறைந்துவிட்டிருந்தது காலம்.
அரசருக்கான சடங்குகள் எதையும் அப்போது செய்யமுடியாது என சம்வகை அறிந்திருந்தாள். அவருடைய இறப்பை முறைப்படி பாண்டவர்களின் தூதர்கள் உறுதிசெய்ய வேண்டும். அல்லது அவருடைய உடல் அஸ்தினபுரிக்கு வந்துசேர வேண்டும். அல்லது கௌரவக் குலத்து மூத்தவர்கள் அவ்விறப்பை ஏற்பதாக அறிவிக்கவேண்டும். அஸ்தினபுரியின் குடியவையில் அச்செய்தி முன்வைக்கப்பட்டு குடியவையால் ஏற்கப்படவேண்டும். அதன் பின்னரே அரசரின் மறைவை முறைப்படி அறிவிக்கும் முரசுகள் முழங்கமுடியும். அரசருக்கான நீர்க்கடன்கள் தொடங்கும். அவரை விண்ணேற்றும்பொருட்டு வீடுபேறுச் சுடர்கள் ஆலயங்களில் ஏற்றப்படும். அஸ்தினபுரி முறைப்படி துயர்நோன்புகளை கடைக்கொள்ளும். பாரதவர்ஷத்தின் அனைத்து நாடுகளுக்கும் அச்செய்தி தூதர்கள் வழியாக முறைப்படி அறிவிக்கப்படும். முழவுச்செய்தி வந்துசேர்ந்த பின்னரும் ஒற்றர்கள் எவரும் வந்து அதை உறுதிசெய்யவில்லை.
அச்செய்தியை முந்தைய நாளே அஸ்தினபுரி உள்ளூர எதிர்பார்த்திருந்தமையால் எவ்வகையிலும் அது அதிர்ச்சியை உருவாக்கவில்லை. போர் மூத்துக்கொண்டே இருக்க வந்தடைந்த செய்திகளால் ஆழ்ந்த உளச்சோர்வுக்கு ஆளான நகரத்தில் கூடுதலாக எந்த சோர்வையும் அது விளைவிக்கவுமில்லை. வறண்ட விழிகளில் வெறிப்புடன் கலைந்த தலையும் வீங்கிய முகமுமாக பெண்டிர் தங்கள் பணிகளை ஆற்றினர். இல்லங்களில் பெரும்பாலானவை திறந்தே கிடந்தன. நகரில் பெரும்பாலான விளக்குநிலைகளில் சுடர் ஏற்றப்படவில்லை. உளச்சோர்வைப்போல் எளிதில் தொற்றிப் பரவும் பிறிதொன்றில்லை. மானுடரைப் போலவே நகரமும் உளச்சோர்வடைகிறது. மானுடரைப் போலவே அதுவும் தற்கொலை செய்துகொள்ளக்கூடும். இந்நகரின் மாளிகைமுகடுகள் குமிழிகள்போல உடைந்தமையக்கூடும். தூண்கள் சரிந்து கூரைகள் நிலம்படிந்து இது மணலில் நுரையென வற்றி மறையக்கூடும்.
அப்போதுதான் அவள் அந்த விந்தையான மணத்தை உணர்ந்தாள். எரிமணம். அவளுக்கு அது குருதியின் மணம் என்று தோன்றியது. பின்னர் வெயிலில் நெல்காயப்போடும் மணம் என மாறியது. வெவ்வேறு நினைவுகளாகவே அந்த மணம் தன்னை காட்டியது. சிதல்புற்றுமண்ணின் மணமா அது? இல்லை, பொங்கல் இடுவதற்காக செய்யப்பட்ட புதுக் களிமண் அடுப்பில் அனல்படும்போது எழும் மணம். வடமேற்கிலிருந்து வந்த காற்றில் அந்த மணம் இருந்தது. அவள் மடியில் வில்லுடன் அமர்ந்திருந்தாள். படுத்துத் துயின்று நெடும்பொழுது ஆகிவிட்டிருந்தமையால் அமர்ந்ததுமே அவள் துயில்வது வழக்கம். துயிலிலும் அவள் செவிகள் மேலும் கூர்கொண்டிருக்கும். சிறு ஒலியிலேயே அவள் விழித்தெழுவாள். ஒலிக்காதவற்றைக் கூட துயிலில் அவள் கனவு என உணர்வாள். காவலுக்கு அரைத்துயில்போல் உகந்தது பிறிதில்லை என அவள் எண்ணுவதுண்டு.
மெல்லிய குறட்டையொலியுடன் தலை தொய்ய அவள் துயின்றுகொண்டிருந்தபோது கோட்டைக்குள் பதினொருவர் நிரையாக நுழைவதைக் கண்டாள். “யார்?” என்றாள். அவர்கள் அவளை நோக்காமல் கடந்துசென்றனர். உடலெங்கும் சாம்பல் பூசியவர்கள். புலித்தோலாடை அணிந்து தலையில் பன்றிப்பல் பிறை சூடி முப்புரி வேலேந்தி தோளில் பரவிய சடைமுடியுடன் கடந்துசென்றனர். அவர்களைத் தொடர்ந்து கரிய நாய்கள் சிவந்த நாக்குகளை நீட்டியபடி நிழல்களெனச் சென்றன. உடுக்கின் ஓசை எங்கோ ஒலித்தது. வெந்த மண்ணின் வாடை எழுந்தது. மிக அருகில் எரியெழுந்ததுபோல் வெக்கை உடலைத் தொட்டது. அவள் விழித்தெழுந்து இருளை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தாள். உள்ளம் திடுக்கிட்டு பின் துடித்துக்கொண்டிருந்தது. காட்டுக்குள் அவள் எதையோ பார்த்தாள். எதை என உள்ளம் பரபரத்துத் துழாவிக்கொண்டிருந்தபோது அவள் மூன்று எரியம்புகள் எழுந்து ஒன்றையொன்று தொட்டு அமைவதைக் கண்டாள்.
அதன் பொருள் புரிந்ததும் அவள் எழுந்து காவல்மாடம் நோக்கி ஓடினாள். மென்புலரி எழுந்துவிட்டிருந்தது. கண்துலங்கும் ஒளியில் புது மழையின் நீர்ப்பரப்போ என முற்றம் துலங்கியது. அதில் முந்தைய நாள் இரவில் கோட்டையை மூடிய பின் வந்துசேர்ந்த வணிகர்கள் தங்கள் கூடாரங்களை கழற்றிச் சுருட்டிக்கொண்டிருந்தனர். அவள் காவல்மாடத்தின் தூணைப் பற்றியபடி மறைந்து நின்று சூழ்ந்திருந்த காட்டை நோக்கினாள். காடு அப்போதும் நிழற்குவைகளாகவே தெரிந்தது. அதற்குள் எந்த உருவையும் அவளால் விழியுருவகம் செய்துகொள்ள முடியவில்லை. ஆயினும் அவள் நோக்கிக்கொண்டே நின்றாள். மீண்டுமொரு முறை எரியம்புகள் எழுந்தமைந்தன. அவள் நீள்மூச்செறிந்தாள். அதற்குள் பிரபை எழுந்து ஓடி அவளை அணுகி “என்னடி? என்ன செய்தி அது?” என்றாள். “நம்மை தாக்கவிருக்கிறார்கள். சற்று பெரிய படை.” அவள் மூச்சிழுத்து “எவர்?” என்றாள். “அவர்கள்தான் வென்றுவிட்டார்களே? அவர்களுக்காகத்தான் கோட்டை காத்திருக்கிறது.” சம்வகை “கொள்ளைப்படை என எண்ணுகிறேன்” என்றாள். “கிராதர்களா?” என்றாள் பிரபை. சம்வகை மறுமொழி சொல்லவில்லை.
“வணிகர்களுக்காக கோட்டையை திறக்கவிருக்கிறார்கள். எச்சரிக்கை இல்லாமையால் இரவெல்லாம் திட்டிவாயில் திறந்துதான் இருந்தது…” என்று பிரபை பதற்றத்துடன் சொன்னாள். “நாம் கோட்டையை திறக்கவேண்டாமென ஆணையிடவேண்டும். அரண்மனைக்கு எச்சரிக்கை அளிக்கவேண்டும்…” சம்வகை “பொறு” என்றாள். பிரபை “நாம் இங்குள்ள நிலைமையை அறிவோம். இந்தக் காவல்பெண்டுகள் பல நாட்களாகவே பிச்சிகளைப்போல் இருக்கிறார்கள். இப்போது எங்கிருக்கிறோம் என்றே அறியாதவர் போலிருக்கிறார்கள். நகரில் இன்று வாளேந்தி எதிர்நிற்கும் ஆற்றல்கொண்டவர்கள் எவருமில்லை” என்றாள். “நீ என் ஆணையை கடைக்கொள்” என்று சம்வகை சொன்னாள். “கோட்டை திறக்கப்படட்டும்.” பிரபை சில கணங்கள் கூர்ந்து நோக்கியபின் தலையசைத்தாள். அவள் கீழே செல்ல சம்வகை காட்டை நோக்கியபடி நின்றாள். ஒளி நன்றாக விரிந்தாலும்கூட காட்டுக்குள் எவரும் இருப்பதை காணமுடியாது என்று தோன்றியது.
கோட்டைவாயிலைத் திறக்கும் யானைகள் இரண்டு தலையை ஆட்டியபடி மணியோசையுடன் வந்தன. அவை அப்பணியை புதிதாகக் கற்றுக்கொண்டவை என்பதனால் அதில் மிகுந்த ஆர்வத்துடன் அப்பொழுதை எதிர்பார்த்து அரைநாழிகைக்கு முன்னரே ஒருங்கி காத்திருந்தன. சங்கிலி அவிழ்க்கப்பட்டதும் அவை தாங்களாகவே கிளம்பி சுழலாழி நோக்கி சென்றன. அவற்றை நடத்திவந்த யானைப்பாகர் குலத்துப் பெண்ணுக்கு பன்னிரு அகவைகூட இருக்காதென்று தோன்றியது. அவள் துரட்டியையும் குத்துக்கம்பையும் வெறுமனேதான் கையில் வைத்திருந்தாள். யானைகள் ஆழிகளின் அருகே வந்து நின்றன. இரு யானைகளையும் நடத்திய பெண்கள் பிரபையின் கொடியசைவை நோக்கி விழிதூக்கி காத்திருந்தனர். பிரபை கொடியை அசைப்பதற்கு முன் மேலே நோக்கினாள். சம்வகை தலையசைக்க அவள் கொடியை அசைத்தாள். யானைகள் செவிகளை வீசியபடி துதிக்கையால் ஆழிகளின் கைப்பிடிகளைப் பிடித்துச் சுழற்ற முனகலோசையுடன் கோட்டைக் கதவுகள் திறந்தன.
பிரபை கீழிறங்கிச் சென்று காவல்முகப்பில் இருந்த பெண்டிரிடம் ஆணைகளை பிறப்பித்துவிட்டு மேலே வந்தாள். “நீ இங்கே நில்… காடுகளிலிருந்து கொள்ளையர்படைகள் திரண்டு கோட்டை நோக்கி வரத் தொடங்கும்போது கொடியசைத்துக் காட்டு. அவர்கள் பெருமுற்றத்தின் பாதியை அடையும்போது மீண்டும் கொடியை அசைத்துக்காட்டு” என்றபின் சம்வகை படிகளில் இறங்கினாள். அவளுடைய ஆணையை புரிந்துகொள்ளாமல் பிரபை திகைப்புடன் நோக்கியபின் காவல்மாடத்தில் ஏறி நின்றாள். சம்வகை யானை செலுத்திய பெண்களை அணுகி அவர்களிடம் ஆணைகளை இட்டாள். அவர்கள் கைவிடுபடைகளை அச்சத்துடன் நோக்கியபின் தலைவணங்கினர். அவள் கைவிடுபடைகளின் மேடையின்மேல் ஏறி நின்றாள். மையகோட்டைக் கதவம் திறந்ததும் வணிகர்களின் வண்டிகள் உள்ளே வரத்தொடங்கின. ஓரிரு வண்டிகளே இருந்தன. அஸ்தினபுரி சுங்கம் வாங்குவதை பானுமதியின் ஆணைப்படி நிறுத்திவிட்டிருந்தமையால் வெறுமனே நோக்கி உள்ளே அனுப்பினர். தலைச்சுமை வணிகர்கள் சிலர் உள்ளே சென்றனர். பின்னர் கோட்டைவாயில் பெரிய வெண்திரை என வானைக் காட்டி எழுந்து நின்றது. அதனூடாக வந்த காற்று குளிராக தழைமணத்துடன் வீசியது.
வெளியே மெல்லிய முழக்கம் கேட்டது. பிரபை கொடியை வீசினாள். காவல்மகளிர் அஞ்சிக் கூச்சலிட்டபடி படைக்கலங்களை நோக்கி ஓடினர். ஒருத்தி சம்வகையை நோக்கி ஓடிவந்தாள். “தாக்குதல்! படைகள் வருகின்றன! தாக்குதல்!” என்று கூவினாள். கோட்டைக்கு மேல் முரசுகள் முழங்கத் தொடங்கின. முறையான ஆணையில்லாமையால் அவை தனித்தனியாக ஒலிக்க வெற்று முழக்கமே எழுந்தது. அது அஸ்தினபுரியின் ஒழிந்த தெருக்களில் புலப்படா நதியென பெருகி ஓடியது. பெண்கள் பலர் கூச்சலிட்டனர். சிலர் கோட்டைமேலிருந்து இறங்க முயன்று நழுவி விழுந்தனர். முரசுகள் நகரின் அலறல் என ஒலித்தன. அரண்மனையிலிருந்து எரியம்பு ஒன்று மேலெழுந்து என்ன என்று உசாவியது. பிரபை இரண்டாம் கொடியை ஆட்டினாள். சம்வகை யானை நடத்துவோரை நோக்கி கையசைத்து ஆணையிட்டாள். தானே சென்று ஆழியொன்றை சுழற்றினாள். அது இறுகி இருந்தது. ஆனால் சற்றே அசைந்ததும் அவளையும் தூக்கிக்கொண்டு சுழன்றது. அதன் நெடுவில் தழைந்து செவிகளைக் கிழிப்பதுபோன்ற கூர்கொண்ட நாணோசையை எழுப்பியது. அதிலிருந்து நூறு நீளம்புகள் எழுந்து வானிலேறி அப்பால் சென்றன.
யானைகள் இழுத்த சகடங்களால் இயக்கப்பட்ட கைவிடுபொறிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சிறிய அம்புகள் பறவைக்கூட்டம்போல வானிலெழுந்தன. மின்னியபடி அப்பால் சென்று இறங்கின. யானைகளும் சம்வகையும் கைவிடுபடைகளின் அனைத்துச் சகடங்களையும் இயக்கிக்கொண்டே இருந்தனர். அவள் மூச்சுதழைய களைத்து ஆழி மேலேயே சரிந்தபோது கோட்டைக்கு அப்பால் போர்க்குரல்கள் அடங்கிவிட்டிருந்தன. வாளை உருவியபடி அவள் கோட்டைவாயிலை நோக்கிச் சென்றாள். அம்புபட்டு ஒருக்களித்து ஓடிவந்த புரவியிலிருந்து பாய்ந்து இறங்கி வாளுடன் கோட்டைக்குள் நுழைந்த தனிவீரனை எதிர்கொண்டு அவன் வெட்டை ஒழிந்து தன் வாளால் அவன் தலையை வெட்டி வீழ்த்தினாள். அவன் வெட்டுவாயிலிருந்து கொப்பளித்த குருதி அவள் முகத்திலும் நெஞ்சிலும் வெம்மையுடன் வழிய அவள்மேல் விழச் சரிந்தான். அவள் அவனை ஒழிந்து வெளியே சென்று நோக்கினாள். விரிந்த முற்றமெங்கும் பல்லாயிரம் பேர் மண்ணோடு நீளம்புகளால் அறையப்பட்டிருந்தனர். இடைவெளியே இல்லாமல் விழிதொடும் தொலைவுவரை தைத்து நின்றிருந்த அம்புகள் நாணல்வெளியென காட்சியளித்தன.