தீயின் எடை - 51
திரௌபதி துயிலில் மயங்கிவிட்டிருந்தாள். மெல்லிய காலடிகளுடன் குந்தி உள்ளே வந்து நின்றபோது சேடி முடிநீவுவதை நிறுத்திவிட்டாள். அதை உணர்ந்து அவள் விழிப்புகொண்டு குந்தியை நோக்கியபின் வணங்கியபடி எழுந்தாள். “அமர்க!” என்று அவள் கைகாட்டிவிட்டு அப்பால் சிற்றிருக்கையில் அமர்ந்தாள். “மந்தன் நிகழ்ந்த அனைத்தையும் சொன்னான். நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் அஸ்தினபுரியின் அரசனை தொடையிலறைந்து கொன்றிருக்கிறான்” என்றாள். பெருமூச்சுடன் “அச்செய்தியை எவ்வண்ணமும் ஒளிக்க இயலாது. அந்த உடலை அங்கேயே போட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் ஒற்றர்கள் இதற்குள் அதை கண்டடைந்திருப்பார்கள். இந்நேரம் அது அங்கே இருக்குமா என்பதே ஐயம்தான்” என்றாள்.
திரௌபதி அச்செய்தியை எவ்வண்ணமோ எதிர்பார்த்திருந்தாள் என உணர்ந்தாள். அவளுள் எழுந்த சொற்களையே குந்தியும் சொன்னாள். “வேறு வழியே இல்லை. துரியோதனனையும் ஒரு மீறலினூடாகவே கொல்ல இயலும். அவனும் பீஷ்மரையும் துரோணரையும் போன்றவனே. மானுட எல்லைக்கு அப்பால் செல்வது அவர்களின் ஆற்றல். வாழ்க்கையை தவமென்றாக்கி அவர்கள் அதை அடைகிறார்கள். துரியோதனன் மண்விழைவை தவமெனக் கொண்டவன்.” திரௌபதி ஏதேனும் சொல்வாள் என அவள் எதிர்பார்த்தாள். பின்னர் தொடர்ந்தாள். “உண்மையில் இதில் ஓர் ஒருமை உள்ளது. இவ்வாறுதான் இது நிகழமுடியும். ஆகவே செய்தி கேட்டபோது எனக்கு எந்த ஒவ்வாமையும் எழவில்லை. ஆனால் கவலை அடைந்தேன். ஏனென்றால் வீழ்ந்தவர்கள் மேல் மக்கள் பரிவுகொள்கிறார்கள். அப்பரிவால் அவர்களை தேவர்நிலைக்கு உயர்த்துகிறார்கள். மெல்லமெல்ல அவர்கள் செய்த அனைத்துப் பிழைகளையும் மறந்துவிடுவார்கள். அவர்கள் வஞ்சத்தால் வீழ்த்தப்பட்ட நல்லவர்கள் என்று வடித்துக்கொள்வார்கள். அதற்கேற்ப இவ்வாறு நிகழ்ந்தும்விட்டது. அவனை அவர்கள் கார்த்தவீரியனாகவும் ராவணப்பிரபுவாகவும் சமைத்துக்கொள்வார்கள்.”
அவள் திரௌபதியின் கூந்தலை நோக்கி “இது என்ன?” என்றாள். குனிந்து கூர்ந்து நோக்கியபடி எழுந்து தொட்டுப்பார்த்து “குருதிபடிந்த துணி…” என்றபின் “அவன் கொண்டுவந்தானா?” என்றாள். “ஆம்” என்று திரௌபதி சொன்னாள். சிலகணங்களுக்குப் பின் குந்தி “அதுவும் நன்றே. நீ அவர்களின் குருதிதொட்டு குழல்முடிந்தாய் என்னும் செய்தி அவன் தொடையறையப்பட்டு செத்தான் என்பதற்கு நிகரானது. இதுவும் ஒரு தொல்கதைபோல் கூர்மைகொண்டிருக்கிறது. சூதர்களை பாடி விரித்தெடுக்கவைக்கும் தன்மைகொண்டது. இது பரவும் என்றால் இதிலிருந்து சென்று அவைச்சிறுமையை மிகைநாடகமாக கற்பனை செய்துகொள்வார்கள். கதை பெருகும்தோறும் பெண்கள் துரியோதனனை வெறுப்பார்கள். நாம் அரசை அமைத்தபின் இதையே பாடலாகவும் ஆடலாகவும் நாடெங்கும் நிலைநிறுத்துவோம். பாரதவர்ஷமெங்கும் கொண்டுசெல்வோம். பெண்களால் வெறுக்கப்படுபவர்கள் நன்முகம் கொண்டு நினைவில் நின்றிருக்க இயலாது. அவர்களே குழந்தைகளுக்கு கதைசொல்கிறாகள்.”
திரௌபதி சலிப்புடன் “இது எங்கள் குடிவழக்கம்… எங்கள் அன்னையர் கேட்க என் குடியின் பெண் இட்ட சொல் என்பதனால்…” என்றாள். “ஆம், மாயை! அவள் எரிபுகுந்தாள் அல்லவா?” என்று பரபரப்புடன் குந்தி கேட்டாள். “அவள் பதினான்காண்டுகள் குருதிநோன்பிருந்தாள். குருதிஊறி சடையான கூந்தலும் நோன்பில் நலிந்த பேயுடலும் கொண்டிருந்தாள். அவள் தெய்வமாவதற்கு இவையே போதும். அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் அவளுக்கு ஆலயங்கள் அமைக்கவேண்டும். அவளுடைய பதிட்டைகள் அனைத்து ஊர்களிலும் அமையவேண்டும். அவள் எரிபுகுந்த நாளில் கொடையளித்து அவளுடைய வாழ்க்கையைப் பாட சூதர்களை அமர்த்தவேண்டும். அவள் தெய்வமானால் துரியோதனனை செறுத்துவிடுவாள்.” பற்கள் தெரிய புன்னகைத்து “தெய்வங்களை தெய்வங்களால்தான் தடுக்கமுடியும்” என்றாள் குந்தி.
திரௌபதி ஆடியில் அவளை பார்த்துக்கொண்டிருந்தாள். குந்தி தனக்குத்தானே ஏதோ சொல்லிக்கொண்டாள். சுட்டுவிரலால் காற்றில் கணக்கு என ஏதோ எழுதினாள். பின்னர் கைகளைக் கோத்தபடி சாய்ந்துகொண்டு “என்னை அலட்டுவது பிறிதொன்று. அந்த மூவர், அவர்கள் எங்கே சென்றார்கள்? அவர்களைக் கண்டடைந்து வென்றுவிட்டார்கள் என்ற செய்தி வருமென்றால் அனைத்தும் முடிந்துவிட்டன என்று கொள்வேன். எஞ்சும் பகை வீச்சு மிக்கது. அது உடனிருந்தே கொல்லும் நஞ்சுபோல வளர்வது” என்றாள். “வென்றவர்கள் மேல் பிறருடைய உளநிலை குழப்பமானது. அந்த வெற்றியில் பங்குகொள்ள முந்துவார்கள். கூடவே அவ்வெற்றியை உள்ளூர அஞ்சவும் வெறுக்கவும் செய்வார்கள். ஆகவே வெற்றிக்குப் பின் எஞ்சும் எதிரிகளுக்கு நம்மிடமிருந்தே ஆதரவு உருவாகும். மிக விரைவில் அவர்கள் வளர்ந்து பேருருக்கொண்டு முன்னால் வந்து நின்றிருப்பார்கள்.”
“அவர்கள் என்ன செய்ய முடியும்?” என்று திரௌபதி கேட்டாள். “ஏற்கெனவே களத்தில் முற்றிலும் தோற்றுத்தானே அகன்றிருக்கிறார்கள்?” குந்தி “அப்படி தோன்றும். ஆனால் இத்தனை பெரிய போருக்குப் பின் அத்தரப்பில் எஞ்சியிருப்போர் அடையும் குற்றவுணர்வைப் பற்றி எண்ணிப்பார். அவர்கள் தாங்கள் இறந்தவர்களால் சூழப்பட்டிருப்பதாக எண்ணுவார்கள். பிறக்கவிருப்போரின் நோக்கு தங்கள்மேல் பதிந்திருப்பதாக கருதிக்கொள்வார்கள். அவர்களால் இயல்பாக ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவே இயலாது. அவர்களின் மேல் அழுத்தும் சுமை அவர்களை வளைந்து சிதையச் செய்யும். எவ்வுருக் கொள்வார்கள் என அவர்களாலேயே சொல்லிவிட முடியாது” என்றாள். “புழக்கநிலையில் உள்ள பொருட்கள் பழகிய வடிவங்களுக்குள் கட்டுண்டு அமைந்தவை. அவை பழக்கப்படுத்தப்பட்ட யானைகள்போல. நாம் அறிந்தவை, அறிதற்குட்பட்டவை. புழக்கநிலைக்கு அப்பால் செல்கையில் அவை வடிவை மீறுகின்றன. வடிவு அழிகையிலும் புழக்கமில்லாதாகின்றன. அவை கட்டற்றவை, அறிதற்கு அப்பாற்பட்டவை. ஆகவே கொடியவை.”
குந்தியை திரௌபதி கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் அவ்வெற்றியினூடாக நெடுந்தொலைவு சென்றுவிட்டாள், அஸ்தினபுரியின் பேரரசி என்றாகிவிட்டாள் என அவளுடைய சொல்லும் முகமும் காட்டின. நான் இன்னமும் அவ்வெற்றியை உள்ளத்தால் சென்றடையவில்லை. நெடுந்தொலைவிலேயே பதற்றத்துடன் நின்றுகொண்டிருக்கிறேன். “மானுடரும் அவ்வண்ணமே. அன்றாடத்தில், அதற்குரிய வடிவில் இருப்பவர்கள் அச்சூழலால், அத்தோற்றத்தால் கட்டுண்டவர்கள். அவர்களின் ஆற்றல் பத்து திசையிலும் அழுத்தப்பட்டுள்ளது. சிதைந்த மானுடர் கொடிய தெய்வங்களைப்போல முழு ஆற்றலும் வெளிப்படும் விடுதலையை அடைந்தவர்கள். எல்லை மீறிய மானுடரே தீத்தெய்வங்களின் படைக்கலங்கள்.” அவள் பெருமூச்சுவிட்டு “அஸ்வத்தாமன் பெருவஞ்சம் கொண்டவன். முன்னரே மைந்தர் அவனை கனவில் கண்டிருக்கிறார்கள்” என்றாள்.
வாயிலில் சேடி வந்து நின்றாள். “சொல்க!” என்று குந்தி சொன்னாள். “பேரரசி, தூதன் வந்திருக்கிறான். அவனை சௌப்திகக் காட்டிலிருந்து பாஞ்சால அரசர் அனுப்பியிருக்கிறார். அரசியர் முதலில் அங்கே சென்று மைந்தரைப் பார்த்துவிட்டு அதன்பின் அஸ்தினபுரிக்குச் செல்லவேண்டும் என்று ஆணை” என்றாள். ஓலையை நீட்டி “இதில் பாஞ்சாலத்து இளவரசரின் சொற்கள் உள்ளன” என்றாள். திரௌபதி “மைந்தர் நோயுற்றிருக்கிறார்கள். அங்கே பணியாட்களும் இல்லை. நாம் சென்று அங்கே செய்வதற்கென்ன உள்ளது?” என்றாள். அதற்குள் குந்தி பரபரப்புடன் எழுந்துகொண்டு “நாம் உடனடியாக கிளம்புவோம். மைந்தருடன் நாம் இருந்தாகவேண்டும்” என்றாள். “உடனேயா?” என்றாள் திரௌபதி. “இக்கணமே கிளம்புவோம். முடிந்த விரைவில் மைந்தரை சென்றடைவோம்… நம்முடன் வர படைகள் உள்ளனவா?” என்றாள். “பேரரசி, எழுபது புரவிக்காவலர்கள் கொண்ட சிறுபடை உள்ளது. இரண்டு மூடுதேர்கள், ஒன்பது சேடியர்” என்றாள் சேடி. “அனைவரும் இப்போதே கிளம்பியாகவேண்டும் என்று சொல். செய்தி வந்தால் பெற்றுக்கொள்ள மட்டும் இங்கே மூன்று சேடியர் தங்கட்டும்…” என்றபின் குந்தி எழுந்து விசைகொண்ட சிறுகாலடிகளுடன் உள்ளே சென்றாள்.
திரௌபதி எழுந்து நின்று ஆடியில் தன்னை நோக்கிக்கொண்டாள். ஆடியில் மாயை தெரியவில்லை. மெலிந்து கண்கள் குழிந்து கன்ன எலும்புகள் புடைத்து கழுத்து நீண்ட நடுஅகவை அன்னை ஒருத்தியே தெரிந்தாள். அவள் கண்கள் பதைப்பு கொண்டிருந்தன. பதைப்பு தெரியாத விழிகள் கொண்ட அன்னையர் உண்டா? மேலும் முதிர்கையில் அவர்கள் தங்கள் மைந்தருக்கு மட்டுமன்றி அனைவருக்கும் அன்னையராகிறார்கள். அப்போதுதான் அவர்களின் விழிகள் கனிந்து குளிர்கின்றன. முகம் தெய்வத்தோற்றம் கொள்கின்றது. அனைத்துக்கும் மேல் நிகரெனப் பொழியும் மழை என்றாகின்றது அவர்களின் பற்று. இப்போது என் கண்கள் கனியாத காய்கள். துவர்ப்பும் புளிப்பும் கசப்பும் கொண்டவை. அவள் புன்னகைத்தபோது விழிகளில் துயர் தெரிந்தது. ஏன் நான் துயர்கொண்டிருக்கவேண்டும்? நான் வென்றிருக்கிறேன். இதோ பேரரசி குந்தி வெற்றியில் திளைக்கிறார். வாழ்வையே வென்றெடுத்தவராக எண்ணிக்கொள்கிறார். அரியணையில் அமரவிருப்பவள் நான்!
ஆனால் இதுவரை நான் வஞ்சத்தால் என் ஆற்றலை திரட்டிக்கொண்டிருந்தேன். அதை இழந்துவிட்டேன். நிறைவேறிய வஞ்சம் அதை படைக்கலமென்றும் ஊர்தியென்றும் மணிமுடியென்றும் கொண்டிருந்தவர்களை கைவிட்டுவிடுகிறது. என் குழலில் குருதி படிந்த துணி கட்டப்பட்டிருக்கிறது என்று திரௌபதி சொல்லிக்கொண்டாள். அஸ்தினபுரியின் அரசனின் குருதி. அவையமர்ந்து என்னை சிறுமைசெய்து நகைத்தவன். நான் நான் எனத் தருக்கியவன். வெல்லற்கரியவர்களால் சூழப்பட்டவன். பாரதவர்ஷத்தின் பல்லாயிரம் கைகளால் ஏந்தி எழுப்பப்பட்ட படைக்கலம். அவனை வென்றிருக்கிறேன். அவன் குருதியிலாடியிருக்கிறேன். ஆனால் அச்சொற்களெல்லாம் நைந்து உயிரற்றுக் கிடந்தன. அவள் அகம் எழவில்லை. சற்று முன் அடைந்த அந்த உளஎழுச்சி எதனால் என்று அவள் வியந்துகொண்டாள். அவ்வண்ணம் ஒன்று தன்னுள் இருந்ததையே அது எழுந்தபோதுதான் அறிந்திருந்தாள்.
“நீராடி கிளம்புகிறீர்களா, அரசி?” என்று சேடி கேட்டாள். “இல்லை, நீண்ட பயணம். பொழுதில்லை…” என்று திரௌபதி சொன்னாள். “என் பொருட்கள் எல்லாம் தேருக்குச் செல்லட்டும்.” வெளியே காவலர்கள் கொம்பூதுவது கேட்டது. அவள் சீரான அடிகளுடன் தன் அறைக்கு சென்றாள். அந்தச் சிற்றறைக்குள் நின்றபோது அங்கே இருபது நாட்கள் பெரும்பாலான பொழுதுகளை கழித்திருக்கிறோம் என்பது திகைப்பூட்டியது. நத்தை தன் ஓட்டுக்குள் சுருண்டுகொண்டதுபோல. வெளியே சேடிகளின் பரபரப்பான ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. அவள் ஆடைமாற்றவேண்டுமா என்று எண்ணினாள். பின்னர் தன் தலையை தொட்டுப்பார்த்தாள். ஐம்புரிக்குழல் எடைகொண்ட ஓர் அயல் பொருள் என அவள் தலையிலிருந்து தொங்கியது. முழங்கால்வரை நீளும் புரிகள். தலையிலிருந்து எழுந்து நிலம்தொட விழையும் கால்கள். அவற்றை அள்ளி முடிந்தாலொழிய தன்னால் இயல்பாக புழங்க முடியாது. ஆனால் அவ்வண்ணமே அது நீடிக்கட்டும் என்று தோன்றியது.
தேர்கள் கிளம்பியதும் திரௌபதி பீடத்தில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள். அருகே சேடி அமர்ந்தாள். இன்னொரு தேரில் குந்தி தன் சேடியருடன் அமர்ந்திருந்தாள். தன் உள்ளம் ஓய்ந்து கிடப்பதை உணர்ந்தாள். மிருண்மயத்தின் மாளிகையிலிருந்து புறப்பட்டதுமே அனைத்தும் முடிந்துவிட்டது என்னும் உணர்வு ஏற்பட்டது. அங்கிருந்து தேர் விலகுந்தோறும் அவ்வுணர்வு வலுப்பெற்றது. ஏன் இத்தனை விலக்கம்? இவ்விலக்கத்தை காட்டிலேயே அடைந்துவிட்டேன். காட்டுக்குச் சென்றபின் ஊருக்குத் திரும்ப இயலாது. காடு பல்லாயிரம் முனிவர்களின் தவச்சோலை. அவர்களின் ஊழ்கநுண்சொற்கள் நிறைந்த காற்று கொண்டது. இருமருங்கும் ஓடிய இருண்ட காட்டை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். பந்தங்களின் வெளிச்சம் மரங்களை வருடியபடி ஒழுகிச்செல்ல அவ்வப்போது விழிகள் மின்னும் மான்களோ கீரிகளோ தென்பட்டு இருளில் மூழ்கின. சகட ஒலி காட்டின் இருளுக்குள் எதிரொலித்து வேறெங்கிருந்தோ மீண்டு வந்துகொண்டிருந்தது.
மழை நின்றுவிட்டிருந்தாலும் எதிர்க்காற்றில் ஈரத்துளிகள் இருந்தன. அவள் உடல் மெய்ப்புகொண்டபடியே இருந்தது. புரவிகள் நாகத்தைக் கண்டால் மெய்ப்புகொள்ளும். நல்ல புரவிகள் நாகத்தை உள்ளுணர்வால் அறிந்தே மெய்ப்படைந்து நின்றுவிடும். தசைகள் விதிர்க்க மூச்சு சீறும். நோயுறுவதற்கு முன்னரே உடல்சிலிர்ப்பவையும் உண்டு. என் உள்ளத்தில் சொற்களில்லை. ஆனால் இது அமைதியுமில்லை. சொல்லின்மை அமைதியல்ல, வெறுமை. சொல்நிறைந்து பிறிதொரு சொல்லுக்கும் இடமில்லாமலிருப்பதே அமைதி. இப்போது நான் தவித்துக்கொண்டிருக்கிறேன். இந்நிலையை உடைத்து வெளியேறவேண்டும் என. நீர்க்குமிழிக்குள் சிக்கிக்கொண்ட எறும்புபோல. மெல்லிய ஒளியாலான படலம் என்னைச் சூழ்ந்துள்ளது. ஆனால் உந்தும்தோறும் விசைகொண்டு என்னைக் கவ்வும் சுவராகிறது.
அவள் கைகளை கட்டிக்கொண்டு சாய்ந்து கண்களை மூடினாள். உள்ளத்தில் சொற்களில்லாமல் இருப்பது எத்தனை இனியது. சொற்களில்லாமை வெறுமையாக இருந்தாலும் அதில் அலைக்கழிவில்லை. அதை உடைத்து வெளியேற முயன்று அலைக்கழியாமல் இருந்தால் உளச்சோர்வைப்போல் இனியது வேறில்லை. நாகத்தின் கண்கள் என மயக்கி அமையச்செய்யும் ஆற்றல் அதற்கு உண்டு. நஞ்சு தீண்டியவர் அடையும் இனிய மூழ்கும் உணர்வு அது. அவள் கண்கள் மயங்கின. நினைவுகள் மழுங்க துயிலில் ஆழ்ந்தாள். சகடங்களின் ஆட்டத்தால் அவள் உடல் அதிர்ந்து அதிர்ந்து இருபக்கமும் முட்டிக்கொண்டிருந்தது. அவள் காலடியிலும் பின்பக்கத்திலும் அமர்ந்திருந்த சேடிகள் இருளை நோக்கிக்கொண்டிருந்தார்கள். பறவைகள் கலைந்து சிறகடித்தன. வௌவால் போன்ற ஒன்று விசையுடன் தேருக்குக் குறுக்காகச் சென்றது. புரவி ஒன்று செருக்கடித்தது. அவள் அந்த ஓசையை கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். ஆனால் ஆழ்ந்த துயிலிலும் அமிழ்ந்திருந்தாள். அவளிடமிருந்து சீரான மூச்சு எழுந்துகொண்டிருந்தது.
அவள் விழித்துக்கொண்டு “எங்கிருக்கிறோம்?” என்றாள். “சௌப்திகம் தேவதாருக் காடு என்கிறார்கள். நாம் இன்னும் அதை அணுகவில்லை, அரசி” என்றாள் சேடி. அவள் இறுதியாக தன்னுள் அபிமன்யுவின் முகம் எழுந்ததை நினைவுகூர்ந்தாள். அபிமன்யு அவளுடன் அந்தத் தேரில் அமர்ந்திருந்தான். சிறுவனாக இருந்தான். துடிப்புடன் “அவர்கள் அங்கிருக்கிறார்கள் அல்லவா? நான் அவர்களுடன் விளையாடலாமா?” என்றான். “சென்றுகொண்டிருக்கிறோமே? அதற்குள் என்ன திடுக்கம்?” என்று கேட்டாள். “நான் அம்புகளை எடுத்துக்கொண்டேன். ஆனால் ஆழிப்படையை அங்கேயே விட்டுவிட்டேன்” என்றான் அபிமன்யு. “ஆழி அங்கேயே இருக்கும், தேரில் அமர்ந்துகொள். பாதை தூக்கிச் சுழற்றுகிறது” என்று திரௌபதி சொன்னாள். “அவர்கள் அங்கே தூங்கிக்கொண்டிருக்கிறார்களா?” என்றான் அபிமன்யு. திரௌபதி “உனக்காகக் காத்திருக்கிறார்கள்” என்றாள். அபிமன்யு “இந்தத் தேர் மெல்ல செல்கிறது…” என்றான். “நான் விண்ணிலிருந்து இந்திரனின் தேரை கொண்டுவருவேன். அந்தப் புரவிகளால் கொக்குகளைப்போல் பறக்கமுடியும்!”
அவள் சற்றே குனிந்து காட்டை நோக்கிக்கொண்டு வந்தாள். இரண்டு கீரிகள் ஒன்றையொன்று துரத்தியபடி சாலையைக் கடந்தன. அவற்றின் உடல்கள் பந்த ஒளியில் செந்நிறமாகச் சுடர்ந்து அணைந்தன. நீரோடை ஒன்று கடந்துசென்றது. அதன் உருளைக்கற்களில் தேர் ஏறிக்கடந்தபோது அவள் தலை தேரின் பக்கச்சுவரை முட்டியது. பக்கவாட்டிலிருந்து குந்தியின் தேர் அருகே வந்தது. குந்தி அதிலிருந்து தலைநீட்டி “அங்கே சௌப்திகக் காட்டில் ஏதோ நிகழ்கிறது. பறவைகள் அங்கே கலைந்துவிட்டிருக்கின்றன” என்றாள். “என்ன?” என்றாள் திரௌபதி. “அங்கே போர் நிகழ்கிறது… அல்லது காட்டெரி” என்று குந்தி சொன்னாள். “இந்த மழையில் காட்டெரி இயல்பாக எழ வாய்ப்பே இல்லை.” திரௌபதி வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தாள். “நான் அஞ்சிக்கொண்டிருந்த ஒன்று… அவர்களுக்கு எளிய இலக்கு நம் மைந்தர்கள்… அங்கே நம்மவர் எவர் இருக்கிறார்கள்?”
ஒருகணத்தில் உள்ளம் பற்றிக்கொண்டு முழங்கத் தொடங்க திரௌபதி முழுவுணர்வுகொண்டாள். அங்கே நிகழ்வதென்ன என்று தெளிவாகத் தெரிந்தது. “விரைக! விரைக!” என்று அவள் பாகனை நோக்கி கூச்சலிட்டாள். “விரைக… நம் படையினர் முதலில் செல்க… செல்கையிலேயே முழவுகளையும் கொம்புகளையும் ஒலியுங்கள். இக்காட்டில் நம் ஒற்றர்களோ எஞ்சிய படைவீரர்களோ இருந்தால் உடன் வந்து சேர்ந்துகொள்ளவேண்டும். பெரிய படை ஒன்று உடன் வருகிறது என்று தோன்றவேண்டும்.” படைவீரர்கள் போரொலி எழுப்பியபடி முன்னால் சென்றனர். “விரைக! விரைக!” என்று அவள் கூவிக்கொண்டே இருந்தாள். “அரசி, இப்பாதை சேறு மண்டியது. பெரிய கூழாங்கற்களால் ஆனது. மழையில் ஊடே ஓடைகள் அரித்துக் கடந்துள்ளன” என்று பாகன் சொன்னான். “அறிவிலி… செல்க, விரைந்து செல்க!” என்று அவள் வெறியுடன் கையை வீசிக் கூச்சலிட்டாள். குந்தி தேர்த்தட்டில் எழுந்து நின்றிருந்தாள்.
பின்னர் அவள் நெருப்பை உணர்ந்தாள். முதலில் காற்றில் ஒரு புகைமணமாக. பின்னர் காட்டின் மரச்செறிவுக்குள் மிக அப்பால் ஒரு அந்திநீர்நிலை இருப்பதுபோல செந்நிற அலைவாக அது தெரிந்தது. பின்னர் நீள்நிழல்களாக பெருகிக்கொண்டே இருந்தது. அவள் அனைத்தையும் உணர்ந்துவிட்டாள். கைகள் தளர்ந்து இருபக்கமும் விழ விழிகளிலிருந்து நீர் பெருகி வழிந்துகொண்டிருக்க நெருப்பை நோக்கிக்கொண்டிருந்தாள். தேர்கள் அணுகிச் செல்லச்செல்ல அந்நெருப்பு விரிந்தது. தேவதாருக்கள் பேயுருக்களாக எழுந்து சூழ்ந்தன. மனோசிலையைக் கடந்ததும் முன்னால் சென்ற படைவீரகள் போர்க்கூச்சலிட்டபடி அம்புகளை ஏவினர். அங்கிருந்து வந்த அம்புகளுக்கு அலறி வீழ்ந்தனர். அவர்களின் ஒலியே அவர்களை தெளிவான இலக்குகளாக்கியது. அவர்கள் விழுந்து விழுந்து பின்னால் மறைய அவர்கள் ஊர்ந்த புரவிகள் மேலும் ஓடி விசையழிந்து தயங்கி பாதையின் ஓரத்திற்குச் சென்றன. குந்தி “வீணர்களே, வீணர்களே” என்று கூவிக்கொண்டிருந்தாள்.
அவள் அனலின் பகைப்புலத்தில் எழுந்து தெரிந்த நிழலுருவாக அஸ்வத்தாமனை கண்டாள். அந்நிழலுருவுக்குள் செங்கனலால் ஆனதுபோல் அவன் சிற்றுரு தெரிந்தது. நெற்றியில் அந்த அருமணி எரிந்துகொண்டிருந்தது. அதிலிருந்த அனலே அங்கே அனைத்தையும் பொசுக்கிக்கொண்டிருக்கிறது என்று தோன்றியது. அஸ்வத்தாமனின் அம்புகள் இருளுக்குள் விம்மலோசையுடன் வந்து அறைந்தன. அவளுடைய புரவியின் விலாவில் அம்பு தைக்க அது அலறியபடி தலைசிலுப்பி முன்னால் பாய்ந்தது. அப்பால் கிருபரின் உருவம் அசைந்தது. உள்ளத்திலெழுந்த விசையால் அவள் எழுந்து நின்றுவிட்டாள். பாண்டவ மைந்தர் கிருபரிடம்தான் மாணவர்களாக பயின்றனர். வெண்பட்டும் பொன்னும் நிறைகுடமும் மலரும் சுடரும் என ஐம்மங்கலத் தாலத்தை அவருக்கு நீட்டி அடிபணிந்து வணங்கி முதல் படைக்கலத்தை தொட்டு எடுத்தனர். அவர் செவியில் ஓதிய சொல்லையே படைபயில்வதற்கான முதல் மெய்யறிவாகக் கொண்டனர்.
கிருபரின் நடையை அவள் திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தாள். நீள்காலெடுத்துவைத்து இரைகொண்டுசெல்லும் வேங்கை என அவர் நடந்தார். குறுங்காட்டுக்குள் அமைந்த தன் கல்விநிலையில் மட்டும்தான் அவர் செயலூக்கமும் எழும்குரலும் கொண்டிருப்பார். அஸ்தினபுரியின் நகரப்பகுதிக்குள் நுழையும்போதே அவருடைய உடலும் அசைவுகளும் மாறிவிட்டிருக்கும். தோள்கள் தொய்ந்து விழிகள் தழைந்து குரல் உள்ளொடுங்கி பிறிதொருவராக மாறிவிட்டிருப்பார். படைக்கலம் எடுப்பவர்களுக்குரிய எந்த இயல்பும் அவரிடம் வெளிவராது. முதல்முறை அவரை அவள் அவையில் நோக்கியபோது அமைச்சர்களில் ஒருவர் என்றே எண்ணினாள். அவர் படிகளில் ஏறியபோது அசைந்த திரை வந்து அவர் உடலைத் தொடுவதற்கு முன்னர் இயல்பாக அவர் அதை ஒழிந்ததைக் கண்டபோதுதாம் மெய்கண்ணாக்கிய வீரர் என அவரை அடையாளம் கண்டாள். இந்த நடை அவருக்குள் இருந்திருக்கிறது. இந்த வேட்கையை அவர் உள்ளே கொண்டிருந்திருக்கிறார்.
அந்நிலையிலும் தன் எண்ணங்கள் தனியாக ஓடிக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். அவள் உடலில் பதற்றம் முற்றாக மறைந்திருந்தது. கைகள் தளர்ந்து மடியில் அமைந்திருந்தன. விழிகள் கொழுந்தாடிக்கொண்டிருந்த இரு இல்லங்களையும் வெறித்தன. மாளிகை நோக்கிய வழி முழுக்க கொல்லப்பட்ட வீரர்கள் சிதறிக்கிடந்தனர். இல்லங்களுக்கு முன்னாலிருந்த குடில் எரிந்து அணைந்து புகைவிட்டுக்கொண்டிருந்தது. தேர்கள் சென்று நின்றதும் ஓடிவந்த வீரன் ஒருவன் “இல்லங்கள் இரண்டும் முற்றிலும் பற்றி எரிகின்றன, அரசி… நோயுற்ற இளவரசர்கள் உள்ளேதான் இருந்தனர்” என்றான். அவள் ஒன்றும் சொல்லாமலிருக்க ஏவற்பெண்டு உரத்த குரலில் “சுற்றியிருக்கும் காடுகளில் சென்று தேடுங்கள். இளவரசர்கள் ஒருவேளை காட்டுக்குள் தப்பிச் சென்றிருக்கலாம். எங்கேனும் ஒளிந்திருக்கலாம்” என்றாள். “ஆணை” என தலைவணங்கிய வீரன் எஞ்சியிருந்த சில வீரர்களிடம் ஆணையிட்டபடி விலகிச் சென்றான்.
அவள் தேரிலேயே அமர்ந்திருந்தாள். எந்தத் தொடர்பும் இல்லாமல் பாஞ்சாலத்தின் கருவூலத்தருகே உள்ள சுரங்கவழி ஒன்றை நினைத்துக்கொண்டிருந்தாள். அதற்குள் தவழ்ந்தே செல்லமுடியும். அரண்மனையைக் கட்டிய மூதாதையர் அமைத்தது அது. பாஞ்சாலத்து அரண்மனை பாரதவர்ஷத்தின் மிகத் தொன்மையான கட்டடங்களில் ஒன்று. அதன்மேல் மேலும் மேலும் கட்டிக்கொண்டே இருந்தனர். சிற்பிகள் மாறினர். அந்தச் சுரங்கவழி கண்டடையப்பட்டபோது அது எங்கே செல்கிறது என எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. பலமுறை உள்ளே வீரர்களை அனுப்பி நோக்கினர். சென்றவர்கள் மீளவில்லை. மீண்டவர்கள் அது சென்றுகொண்டே இருக்கின்றது என்றனர். அச்சம் அதை தெய்வம் இருக்கும் இடமாக ஆக்கியது. குகேஸ்வரி அன்னையை அங்கே பதிட்டை செய்தனர். ஆண்டுக்கொருமுறை குருதிகொடுத்து அவளை வழிபட்டனர்.
அவள் அதற்குள் நுழைந்து இருள் நிறைந்த அப்பாதையை நோக்கியபடி கனவுகளில் ஆழ்வதுண்டு. எங்கு சென்றுசேரும் அப்பாதை? கங்கைக்கு என ஒரு கருத்து உண்டு. முன்பிருந்த பிறிதொரு அரண்மனைக்கு என்றும் அது மண்ணில் மூழ்கிப்போய்விட்டது என்றும் சேடி ஒருத்தி சொன்னாள். அவள் “அந்த மாளிகைகளில் நிலவறைகளோ சுரங்கவழிகளோ உண்டா?” என்றாள். தேர்ப்பாகன் “இல்லை, அரசி. அது மண்ணின்மேல் மரம்நட்டு கற்பலகைக் கூரையிட்ட இல்லம். இச்சிற்றூரின் குடிமுதல்வனால் கட்டப்பட்டது. அரசமாளிகை அல்ல” என்றான். “இது ஒற்றை அறை மட்டுமே கொண்ட சிற்றில்தான்” என்றாள் ஏவற்பெண்டு. அவள் எழுந்தாடிக்கொண்டிருந்த தழலை அண்ணாந்து நோக்கிக்கொண்டிருந்தாள். பற்களை இறுகக் கடித்திருப்பதை நெடுநேரம் கழித்தே உணர்ந்தாள்.
“முற்றத்தில் பாஞ்சாலர் இருவரும் இறந்து கிடக்கிறார்கள், அரசி. கிருபரும் கிருதவர்மனும் அஸ்வத்தாமனுடன் வந்திருக்கிறார்கள். அவர்கள் விலகி காட்டுக்குள் சென்றுவிட்டனர், அரசி… அங்கே நம் மைந்தர்கள் முற்றாக எரிந்தழிந்திருக்கவேண்டும். ஒருவர் எஞ்சினாலும் அவர்கள் இவ்வண்ணம் சென்றிருக்கமாட்டார்கள்.” திரௌபதி தேரிலிருந்து இறங்கினாள். கால்கள் மண்ணில் பட்டதும் உடலெங்கும் ஒரு கூச்சம் எழுந்தது. கொழுந்துகள் வெடித்துக்கொண்டிருந்த இல்லங்களை நோக்கிக்கொண்டிருந்தாள். “வில்லாற்றலும் கதைத்திறனும் கொண்ட மைந்தர் நால்வரும் நோயுற்று அசையமுடியாமலிருந்தனர், அரசி” என்று வீரன் அழுகைக்குரலில் சொன்னான். “எடைமிக்க தேவதாருச் சட்டங்கள்… அவை எரியென்றே மாறிவிடக்கூடியவை.” வீரர்கள் முற்றத்தில் நின்றும், எரியின் வெம்மையால் அணுகமுடியாமல் சுற்றிச்சுற்றி வந்தும் கைவீசி அலறிக்கொண்டிருந்தனர்.
குந்தி தேரிலேயே அமர்ந்திருந்தாள். திரௌபதி திரும்பி குந்தியை நோக்கிவிட்டு ஏவற்பெண்டிடம் “பேரரசியை இங்கிருந்து கொண்டுசெல்க!” என்றாள். இவ்வண்ணம் நிகழுமென்று எண்ணியிருந்தேனா? வெவ்வேறு கனவுகளில் மைந்தர் இதை கண்டிருக்கிறார்கள். நிமித்திகர் குறிப்புணர்த்தியிருந்தார்கள். ஆழம் அதை அறிந்தபின் புதைத்துவிட்டிருந்ததா? இது அளிக்கும் தாளமுடியாத உளஎடைக்கு அடியில் ஒரு வடிவம் முழுமைகொண்ட நிறைவையும் அடைந்துகொண்டிருக்கிறேனா? ஏவற்பெண்டு “அரசி! அரசி!” என்று கூவினாள். திரௌபதி வெறித்த கண்களுடன் திரும்பி நோக்கினாள். குந்தியை ஏவற்பெண்டு தொட்டதுமே அவள் பக்கவாட்டில் சாய்ந்து தேர்ப்பீடத்தில் விழுந்துவிட்டிருந்தாள். அவள் கைகள் வலிப்பு கொண்டவைபோல் இழுத்துக்கொள்ள, கால்கள் கோணலாக நீண்டு விரைத்திருக்க, முகம் உருவழிந்து பிறிதொன்றாக மாறிவிட்டிருந்தது.
ஏவலன் “மெல்ல, வலுவாக பற்றவேண்டாம்… தசைகள் உடையக்கூடும்” என்றபடி ஓடி தேரிலேறினான். குந்தியை இரு கைகளாலும் அள்ளி படுக்கவைத்தான். “அகிபீனா இருந்தால் நன்று… ஆனால் இங்கே ஏதுமில்லை. மிக மெல்ல தேரை அடுத்த சிற்றூருக்கு கொண்டுசெல்லுங்கள்” என்று ஆணையிட்டான். ஏவற்பெண்டு திரௌபதியை ஒருமுறை நோக்கிவிட்டு தேரிலேறிக்கொண்டாள். இன்னொரு ஏவற்பெண்டு வந்து “அரசி, இங்கே செய்வதற்கொன்றுமில்லை” என்றாள். “இல்லை, இது எரிந்தணைவதுவரை இங்குதான் இருக்கவேண்டும் நான்” என்றாள் திரௌபதி. “அரசி!” என்றாள் ஏவற்பெண்டு. “செல்க!” என அவள் கைகாட்டினாள். ஏவலன் “மூதரசியை தொடவேண்டாம்… அவர்களே விழித்துக்கொள்வதே உகந்தது. நாம் அவருடைய உடலை சிதைத்துவிடக்கூடும்” என்றான். ஏவற்பெண்டு மெல்லிய குரலில் அவனிடம் “அது பக்கவாதத் தாக்குதல்தான். பலமுறை கண்டிருக்கிறேன். முதுமையில் அது நிகழந்தால் உடல் மீளவே வாய்ப்பில்லை” என்றாள். தேர் ஓசையுடன் கிளம்பிச் சென்றது. திரௌபதி எரி அணைந்துகொண்டிருந்த இல்லங்களை நோக்கியபடி நின்றிருந்தாள்.