தீயின் எடை - 48

ஏவல்மகள் வந்து சிற்றறையின் கதவை தட்டும்போது திரௌபதி துயின்றுகொண்டிருந்தாள். தட்டும் ஒலி கேட்டு அவள் உடல் அதிர்ந்தது. அந்த ஒலி அவளுக்குள் வேறெங்கோ ஒலித்தது. அவள் ஒரு மூடிய கதவை பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பால் நின்று பேரோசையுடன் அதன் மேல் மோதினார்கள். “யார்?” என்று அவள் கேட்டாள். கதவு அழுகையில் துடிக்கும் உதடுகள்போல் விரியத் திணறி அதிர்ந்தது. “யார்? யார் அது?” என்று அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். மறுமொழியின்றி கதவைத் தட்டும் ஓசை வலுத்துக்கொண்டிருந்தது. மறுபக்கம் என அவள் ஏவல்பெண்டின் குரலை கேட்டாள். “அரசி, செய்தி வந்துள்ளது! அரசி, செய்தி வந்துள்ளது!” என்று அவள் அழைத்தாள். “அரசி, விழித்தெழுக! இன்றைய செய்தி வந்துள்ளது.”

அவள் சித்தம் விழித்தெழுந்து ஏவல்பெண்டை உணர்ந்து மஞ்சத்திலிருந்து கையூன்றி எழுந்த பின்னர்தான் அவளுக்குள் நிகழ்ந்துகொண்டிருந்த அந்தக் காட்சி அறுபட்டது. இரு கைகளாலும் குழலை அள்ளி பின்னால் சரித்திட்டு கண்களை துடைத்தபின் அவள் சூழலை உணர்ந்தாள். அறைக்குள் இருந்த சிற்றகல் கருந்திரி எரிந்து அணைந்துவிட்டிருந்தது. சாளரத்தினூடாக குளிர்ந்த காற்று வந்து இருண்ட அறைக்குள் சுழன்று கொடியில் தொங்கவிட்டிருந்த ஆடையை நெளியச்செய்தது. கூரிருளுக்குள்ளேயே ஆடையின் இளஞ்செந்நிறம் வெளிர்தீற்றல் எனத் தெரிந்தது. அவள் கதவையே நோக்கிக்கொண்டிருந்தாள். அப்பால் யார் என்னும் வினா உள்ளிலிருந்து எழுந்தது. சற்று முன் ஆழ்கனவில் அக்கதவை தட்டியது யார்? கதவுக்கு அப்பால் என்றாலும் அவள் அந்த இருப்பை உணர்ந்துகொண்டிருந்தாள்.

அவள் “யார்?” என்றாள். “அரசி, நான் ஏவல்பெண்டு. தங்களுக்கு செய்தி வந்துள்ளது” என்றாள். “களத்திலிருந்தா?” என்று அவள் கேட்டாள். “ஆம், யுயுத்ஸு வந்துள்ளார்.” ஒருகணம் அவள் உள்ளம் பொங்கி எழுந்தது. கால்கள் ஆற்றலிழக்க கதவின் மேலேயே சாய்ந்து நெற்றியை பலகை மேல் பதித்துக்கொண்டாள். அவள் மீண்டு வர நெடுநேரமாகியது. அல்லது சில கணங்களா? “காத்திருக்கச் சொல்” என்று சொன்னபோது அவ்வொலி மூச்சாகவே வெளிவந்தது. “அரசி” என்று ஏவல்பெண்டு அழைத்தாள். “அவரை காத்திருக்கச் சொல்!” என்றபின் அவள் பின்காலெடுத்து வைத்து நகர்ந்து விழுவதுபோல் மஞ்சத்தில் அமர்ந்தாள். முழங்கால் மேல் இரு கைகளையும் மடித்து ஊன்றி கைகள் மீது முகத்தைப் பதித்து உடல் வளைத்து குனிந்து அமர்ந்திருந்தாள். காற்று அவளைச் சூழ்ந்து வீசியது. கொடியில் ஆடை பறந்தது. உடன் எவரோ இருப்பதுபோல அது ஓரவிழிக்கு மாயம் காட்டியது.

அவள் எதிர்பார்த்திருந்த செய்திதான் அது. பிறிதொன்றாக இருக்க வாய்ப்பே இல்லை. யுயுத்ஸு ஒவ்வொரு நாளும் அந்தியில் செய்தியுடன் வந்துகொண்டிருந்தான். போரை விரித்துரைத்து தலைவணங்கி மீண்டான். ஓர் ஓவியத்தை சுருளவிழ்த்துக் காட்டி மீண்டும் சுருட்டிக்கொண்டு செல்பவன்போல. முந்தைய நாள் எஞ்சிய படைகளின் காட்சியை தன் கூரிய சொற்களால் அவன் கூறியபோது அவள் கைகளை மார்பில் கட்டியபடி கண்களை விரித்து அவன் முகத்தை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். யுயுத்ஸு சொற்களில் உணர்ச்சிகள் எதையும் கலப்பதில்லை. தொன்மையான நூலில் ஒரு காட்சியை நடித்துக்காட்டுபவன்போல் பேசினான். “வானிலிருந்து இருள் பொழிந்து குருஷேத்ரக் களமென்றாகிவிட்டதுபோலத் தோன்றுகிறது, அரசி. கரிய சேற்றில் புழுக்கள்போல் படைகள் நெளிந்துகொண்டிருக்கின்றன. நாளை நிகழவிருப்பது புழுக்களின் போர்” என்றான்.

இமைக்காமல் நிலைத்த விழிகளுடன், நேர்முன் காண்பதுபோல “புழுக்கள் ஒன்றையொன்று உண்ணும். தங்களைத் தாங்களே தின்று முற்றாக அழித்துக்கொள்ளும் என்கிறார்கள்” என்று யுயுத்ஸு சொன்னபோது அவள் பெருமூச்சுவிட்டாள். குந்தி செருமினாள். யுயுத்ஸு “ஆயினும் நிகழவிருப்பது இணைப்போர். இக்கணம் வரை தட்டு இருபுறமும் நிகரென்றே தெரிகிறது. தெய்வங்கள் எடுத்த முடிவுபோலும் அது” என்றான். கைகளை சேர்த்து விரல்கோத்து இறுக்கி “நன்று!” என்றபின் திரௌபதி எழுந்து சென்றாள். குந்தி சற்று உயரம் குறைவான மஞ்சத்தில் கால்களை மடித்து ஊழ்கத்திலென கண்கள் மூடி அமர்ந்திருந்தாள். இரு கைகளையும் விரல் கோத்து மடியில் வைத்திருந்தாள். அவளுக்குள் நிகழ்வது ஊழ்கமல்ல என்பதை அவள் விரல்களிலிருந்த பதற்றம் மிகுந்த அசைவு காட்டியது. மறுமொழி ஒன்றும் சொல்லாமல் அவள் தன் அறைக்கு மீண்டாள். பின்னால் குந்தி மெல்லிய குரலில் வினாக்களைக் கேட்பது காதில் விழுந்தது.

ஏவல்பெண்டு அவள் பின்னால் வந்து “உணவை எடுத்து வரவா, அரசி?” என்றாள். “வேண்டியதில்லை” என்று சொன்னபடி அவள் சிற்றறைக்குள் நுழைந்து கதவை உள்ளிருந்து மூடிக்கொண்டாள். மிருண்மயத்திற்கு வந்த பின்னர் அவள் எப்போதும் தனிமையில்தான் இருந்தாள். குருஷேத்ரத்திலிருந்து செய்தி வரும்போது மட்டும் முகப்பறைக்குச் சென்று மஞ்சத்தில் அமர்ந்து அச்சொற்களை கேட்டாள். பெரும்பாலும் விழிகள் மட்டுமே திறந்திருக்க செவிகள் முற்றாக அணைய அங்கிலாதவள் போலிருந்தாள். அவள் எதையும் கேட்கவில்லை என்றுதான் அப்போது தோன்றியது. ஆனால் அறைக்குள் வந்து மஞ்சத்தில் படுத்து கண்களை மூடிக்கொள்ளும்போது மஞ்சம் நீராலானதுபோல் நெகிழ்ந்து அவளை உள்ளே இழுத்து அழுத்திக்கொள்ளும். பின் இருளென்றும் இன்மையென்றும் மாறி விசையுடன் அடியாழத்துக்கு அவளை வீழ்த்திக்கொண்டு செல்லும்.

எங்கோ அறியாத ஆழுலகில் அவள் ஒரு சிறு நீர்மினுப்பு என ஏதோ கூர்முனையில் துளித்திருக்கையில் அவளுக்குள் அவள் சொற்களெனக் கேட்ட போர்க்களம் மெய்நிகழ்வென விரியத்தொடங்கும். ஒவ்வொரு அம்பையும் தனித்தனியாகக் காண முடியும். ஒவ்வொரு குரலையும் அவளால் கேட்க முடியும். பல்லாயிரம் விழிகளின் பதற்றத்தை, உயிரச்சத்தை, சாவின் வெறிப்பை அவள் கண்டாள். பல்லாயிரம் வாய்களில் எழுந்த வஞ்சினத்தை, வெறிக்கூச்சலை, வலியலறலை, உறைவை, தசையென மாறி காலத்தில் நிலைத்த அறுதிச்சொல்லை கண்டாள். இரவும் பகலும் தூக்கமோ விழிப்போ அன்றி வெற்றிருப்பென்றேயான அந்நிலையில் மஞ்சத்தில் படுத்திருந்தாள். எப்போதேனும் தன் குறட்டையொலியை தானே கேட்டு விழித்துக்கொண்டாள். உடலும் சித்தமும் சலித்துச் சலித்துச் செயலற்று நின்றிருந்த முந்தைய கணத்தை நினைவு கூர்ந்தாள். அது போரின் உச்சகணம் உறைந்ததாகவே இருக்கும்.

நெடும்பொழுது துயின்றிருக்கக் கூடுமென்று தோன்றும். ஆனால் நீர்க்கடிகையை நோக்கினால் அரைநாழிகைகூட துயின்றிருக்க மாட்டாள். அதுவும் இல்லாமலாதல் அல்ல, வேறெங்கோ சென்று மீள்தல். நிகருலகு. இங்கிருப்பவற்றால் ஆனது. வேறு ஒழுங்கு கொண்டது. அங்கு சென்றதும் இது எங்கே செல்கிறது? ஏன் அறுந்து வந்து வீழ்வதுபோல் இதில் வந்தமைகிறது? விழித்ததும் சித்தம் புது விசையுடன் எழுந்துவிட்டிருக்கும். அனைத்துக் காட்சிகளும் மேலும் கூர் கொண்டிருக்கும். அங்கு அவள் வாழ்ந்ததுபோல் அக்களத்திலிருக்கும் எவரேனும் போரை அறிந்திருப்பார்களா என்று ஒருமுறை எண்ணிக்கொண்டாள். செய்தி கொண்டுவருபவர் கூறும் குறைந்த சொற்களிலிருந்து இத்தனை பெரும்போரை எப்படி உள்ளம் விரித்தெடுக்கிறது? எனில் இது முன்னரே நன்கறிந்த ஒன்று. வேறெவ்வகையிலோ என்னுள் வாழ்ந்தது. பின்னர் அவள் அறிந்தாள், அக்கனவை மிக இளம் அகவையிலேயே அவள் அடைந்துவிட்டிருந்தாள். அது எப்போதும் அவளுக்குள் நிகழ்ந்துகொண்டேதான் இருந்தது.

ஐந்து ஆண்டு முதிர்வுகூட இல்லாதபோது பாஞ்சாலத்தில் தன் அகத்தளத்தில் மஞ்சத்தில் பெரும்போரொன்றை தன்முன் எனக் கண்டு அவள் வெறிகொண்டு கூச்சலிட்டாள். உடல் வலிப்பெழுந்து துள்ளியது. மூன்று வாயில்களினூடாகவும் சேடிகள் விளக்குகளுடன் அவளை சூழ்ந்துகொண்டனர். முதுசெவிலி குளிர் நீர் அள்ளி அவள் முகத்தில் தெளித்து உலுக்கி எழுப்பினாள். “இளவரசி! இளவரசி! விழித்துக்கொள்ளுங்கள்! வெறும் கனவு! வெறும் கனவு…” என்றாள். அவள் எழுந்தமர்ந்து “போர்!” என்றாள். “எங்கு?” என்று செவிலி கேட்டாள். “போர்!” என்று மட்டுமே அவளால் சொல்ல இயன்றது. இளஞ்சேடி ஒருத்தி வாய்க்குள் புன்னகையுடன் முணுமுணுப்பாக “நன்று! இந்த அகவையிலேயே கனவில் காதலர்கள் வரத்தொடங்கிவிட்டார்களோ என்று அஞ்சினேன்!” என்றாள். இன்னொருத்தி “போரெனில் எளிதுதான். அதற்கு முடிவிலாத பொருள் மாறுபாடுகள் இல்லை” என்றாள். “வாயை மூடு!” என்று அவளை முதுசெவிலி அடக்கினாள்.

அன்று மாலை அவளிடம் துருபதர் “என்ன கனவு கண்டாய், இளவரசி? உன் அன்னை நேற்று நீ கனவு கண்டு அலறியதாக சொன்னாள்” என்றார். “நேற்றல்ல, இன்று! இன்று காலை!” என்று அவள் சொன்னாள். அவளை கைபற்றி அருகிழுத்து தன் கால்களுடன் சேர்த்து நிறுத்தி, முன் நெற்றிக் குழலை கைகளால் பற்றி செவி நோக்கி பதியச்செய்து, இரு கன்னங்களை வருடியபடி துருபதர் குனிந்து புன்னகைத்து “என்ன கனவு?” என்றார். “இளவரசர்களா? எனில் அவர்களின் பெயர்களைக் கூறுக! தேடிக் கண்டுபிடிக்கிறேன்” என்றார். அவள் “நான் ஒரு பெரும்போரைக் கண்டேன்” என்றாள். “போரா?” என்று துருபதர் கேட்டார். “பெரும்போர்! மாபெரும்போர் !” என்று அவள் இரு கைகளையும் விரித்தாள் . “பல்லாயிரம்பேர்! எங்கு நோக்கினும் பிணங்கள்! அவர்கள் அனைவரின் உதடுகளிலும் இறுதியாக சொன்ன சொல் உறைந்திருந்தது. ஆயிரக்கணக்கான சொற்கள்!” என்றாள்.

அவளுடைய கற்பனைத்திறனையும், சொல்லாற்றலையும் முன்னரே உணர்ந்திருந்தாரெனினும் துருபதர் திகைப்புடன் அவள் மேலிருந்த தன் கைகளை விலக்கினார். “குருதி செஞ்சேறாக மிதிபட்டது. சுழலும் வாள்களிலிருந்து என் மேல் குருதி தெறித்தது. குருதியாலான மழையில் நிற்பதுபோல் உணர்ந்தேன். என் தலைமேல் குருதி விழுந்து கூந்தலிலிருந்து சொட்டியது. இரு கைகளாலும் கூந்தலை நீவி உதறினேன். அண்ணாந்து வாயைத் திறந்தபோது வாயில் குருதி விழுந்தது. நாவில் இனித்த குருதியை விழுங்கியபோதுதான் விழித்துக்கொண்டேன்.” அவள் அன்னை “இவள் ஏதோ சூதனின் கதையை கேட்டிருக்கிறாள்” என்றாள். அப்பால் நின்ற செவிலி “நான்கு நாட்களுக்கு முன்னர்தான் குருஷேத்ரப் போரைப் பற்றி தெற்கிலிருந்து வந்த சூதன் பாடினான். விருத்திராசுரனை இந்திரன் தன் மின்படையால் வென்ற கதை. இளவரசி கூறும் அத்தனை சொற்களும் அந்தப் பாடலில் இருந்தவைதான்” என்றாள்.

அரசி சீற்றத்துடன் திரும்பிப்பார்த்து “குழந்தைகளுக்கு எதற்காக கொடிய போர்க்கதைகளை கூற வைக்கிறாய்? யாரந்த சூதன்?” என்றாள். துருபதர் அவளைத் தடுத்து “போர்க்கதைகளை அவள் விரும்பிக்கேட்கிறாள் என்றால் அதையே சொல்க!” என்றார். “அவள் குழந்தை” என்றாள் அரசி. “இல்லை, அவள் மும்முடி சூடி பாரதவர்ஷத்தை ஆளும் பேரரசி. குருதியில் எழும் ஒளிமிக்க குமிழியே மணிமுடி என்றொரு சொல் உண்டு. அவள் சூடப்போகும் மணிமுடி குருதிக்கடலில் எழுந்த அலையாகவே இருக்க இயலும்” என்று துருபதர் கூறினார். அரசி “இப்படி சொல்லிச்சொல்லியே மகளை வளர்க்கிறீர்கள். கொற்றவைபோல் அவள் வளர்கிறாள்… செல்லுமிடத்திற்கு பேரழிவை கொண்டுவந்துவிடுவாள்” என்றாள். துருபதர் “அந்த அச்சம்கூட அவளுக்குச் சிறப்பே” என்றபின் நகைத்தார்.

போர் எப்போதும் அவளுடன் இருந்தது. இளவயதில் அவள் ஆடிய அனைத்து ஆடல்களும் போரே. தோழிகளைத் திரட்டி படைகொண்டு சென்று தோழிகளை வென்று வெற்றிக்கூச்சலிட்டு ஆர்ப்பரித்து திரும்பி வருவதையே அவள் விளையாட்டின் உச்ச உவகையாக கொண்டாள். அன்னை அதன் பொருட்டு அவளை பல முறை எச்சரித்தாள். “போர் என்பது விளையாட்டல்ல, கிருஷ்ணை. இது வெறும் விளையாட்டாக இருக்கலாம், ஆனால் நீ உன் உள்ளத்தில் சாவை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறாய். எண்ணுந்தோறும் பெருகும், அஞ்சும்தோறும் செறிவடையும். தவிர்க்குந்தோறும் தொடரும் ஆற்றல் அது. சாவின் நிழலில்தான் இங்கு வாழ்க்கை இருக்கிறது. எனினும் சாவை மறப்பதே மனிதன் அன்றாடமாகவும் உவகையாகவும் உள்ளது. அமிர்தம் என ஆன்றோர் அதைத்தான் சொல்கிறார்கள்” என்றாள். “வாழ்வின் முடிவில் சாவில்லாமல் ஆதல் அல்ல அமுது. வாழ்வுக்குள் நாளும் சாவில்லாமல் ஆகும் நிறைவுதான்” என்றாள்.

“நீ சாவில் திளைத்துக்கொண்டிருக்கிறாய். அறியாதோர் சாவு, எதிரியின் சாவு, எனினும் அது நமது சாவேதான். சாவென்று ஒன்றே உள்ளது. எவருடையதாயினும் அது மானுடருக்குமேல் எழுந்து மானுடரை அறியாத பேருருவென நின்றிருப்பது” என்றாள் அரசி. அவள் இரு கைகளையும் இடையில் வைத்து அன்னையை நிமிர்ந்து நோக்கி “சாவில்லாத கணம் எங்குண்டு? இன்று காலை அரண்மனைப் பேணுனர் துடைப்பத்தால் எத்தனை ஆயிரம் எறும்புகளையும் ஈக்களையும் கொன்று குவித்திருப்பார்கள்?” என்றாள். “நீ சொல்வது வேறு, நான் சொல்வது வேறு. இது குலமகளின் தத்துவம். மங்கலம் ஒன்றே அவள் உள்ளத்தில் நிறைந்திருக்கவேண்டும். மங்கலத் தெய்வங்களை மட்டுமே அவள் வணங்க வேண்டும். மங்கலப் பொருட்களை அணிய வேண்டும். அவள் விழி தொடும் இடமெங்கும் மங்கலமே நிறைந்திருக்க வேண்டும். மங்கலச்சொல்லன்றி ஒன்று அவள் நாவில் எழலாகாது. எனில் அவளுள்ளும் மங்கலம் நிறைந்திருக்கும்” என்று அரசி சொன்னாள்.

அவள் குழலைத் தொட்டு வருடி மேலும் குரல் கனிந்து “சித்திரை முதல்நாள் இல்லம் நிறைக்க கட்டித்தொடங்கவிடும் மஞ்சளும் புந்நெல்லும் மாந்தளிரும்போல குலமகளும் ஒரு மங்கல வடிவே. குலமகள் சென்ற இடத்தை செழிக்க வைப்பவள். நீ ஒவ்வொரு கணமும் பெருக்கிக்கொண்டிருப்பது குருதியை” என்று அரசி கூறினாள். திரௌபதி நகைத்து “நான் எந்த இல்லத்திலும் பானை பிடிக்கச் செல்லவில்லை. கோல்கொண்டு அரியணை அமரப் போகிறேன். அரசியருக்கு குருதி ஓர் அணிகலன். பாஞ்சாலத்து அன்னையருக்கு அது எண்மங்கலங்களில் ஒன்று” என்றாள். “ஆம், நீ அரியணை அமர்வாய். நிமித்திகர் சொல் பிழையாகாது. ஆனால் எந்நிலையிலும் நீ அன்னை. அன்னையர் அனைவரும் மனையாட்டிகளே. மனையாட்டிகள் மங்கலம் சிறக்க அமைந்தாக வேண்டும். ஏனென்றால் உன் மைந்தர் வாழ வேண்டும். உன் கொடிவழிகள் பெருக வேண்டும். அவர்களின் நினைவுகளில் நீ மூதன்னையாக அமர வேண்டும். அவர்களின் இல்லங்களில் மாமங்கலையான அன்னை என உன்னை அமர்த்தி வழிபடவேண்டும்” என்றாள்.

“நான் குருதியினூடாக வெல்லப்போகிறேன், அன்னத்தினூடாக அல்ல” என்று அவள் சொன்னாள். “இந்த அகவையில் இச்சொற்களை எங்கிருந்து பெறுகிறாய்? உன் வாளில் குருதி இருக்கலாம், ஆனால் உன் கையில் ஏந்தும் அகப்பையில் அன்னம் இருக்க வேண்டாமா? நீ மைந்தரைப் பெறப்போவதில்லையா? அவர்கள் இப்புவியில் நீடுவாழ்ந்து குலம்பெருக்கி சிறக்க வேண்டாமா?” என்று அன்னை கேட்டாள். “அவர்கள் கையில் வாளை எடுத்துக் கொடுப்பவளாகவே இருப்பேன்” என்றபின் அவள் திரும்பிச் சென்றாள். அன்னை பெருமூச்சுடன் அருகிருந்த செவிலியிடம் “தனக்குரிய அனைத்துச் சொற்களையும் எங்கிருந்தோ திரட்டிக்கொள்கிறாள். சொல்லுக்குச் சொல் வைக்கும் குழந்தையைப்போல கொடிய எதிரி வேறில்லை. நம்மிடமிருந்து ஒரு துளியையும் அவள் பெற்றுக்கொள்வதில்லை. அவளிடமிருந்து நாம் பதற்றத்தையும் துயரையும் மட்டுமே பெற்றுக்கொள்கிறோம்” என்றாள்.

அஸ்தினபுரியின் மணமகளாக அவள் ஆனபோது அவளுக்குள் என்றும் நிகழ்ந்துகொண்டிருந்த போரின் புறவடிவமென்ன என்று அவளுக்குத் தெரிந்தது. ஐவரை மணந்து அவள் பிறன்மனைக்குரியவளாக ஆனபோது அவள் அன்னை அவள் தனியறைக்கு வந்து அவள் கைகளை பற்றிக்கொண்டாள். “எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, இளவரசி. பேரரசின் அரசியாக நீ செல்வாயென்று நான் எண்ணியிருந்தேன். இவ்வாறு ஒருகணமும் கருதவில்லை. இவர்களோ எளிய நாடோடிகள்போல் இருக்கிறார்கள். இவர்களுக்குரிய அரசு முற்றாக மறுக்கப்பட்டிருக்கிறது. ஷத்ரியர்களின் அவை கூடி அதைக் கோரிப் பெறும் குலப்பெருமையும் இவர்களுக்கு இல்லை. யாதவர்கள் முடிகொள்வதை இனி ஷத்ரியர்கள் ஒப்புவார்கள் என்றும் தோன்றவில்லை. நீ அரசகுடிக்கு மணமகளானாய், அரசியென்று ஆவதற்கு என்ன வழியென்று புரியவில்லை” என்றாள்.

அவள் சிரித்து “இதுவே நன்று. எங்கோ எவரோ வென்ற நிலத்திற்கு அல்ல, நான் வென்ற நிலத்திற்கு அரசியாவேன். குருதியால் அதை ஈட்டுவேன்” என்றாள். “இந்நாளிலும் குருதியென்ற சொல்லே உன் நாவில் எழுகிறது” என்று அன்னை முகம் சுளித்தாள். திரௌபதி அவள் தோளைப்பற்றி மெல்ல உலுக்கி “உங்கள் நாட்டின் மங்கலமுறைமைகளுக்கு இங்கு பொருள் இல்லை, அன்னையே. பாஞ்சாலமகளுக்கு குருதியைப்போல் மங்கலம் பிறிதில்லை. என் குழல் குருதிபூசப்பட்டு ஐம்புரியென பகுக்கப்பட்டபோது நீயே அதை கண்டிருப்பாய். எட்டு கான்மங்கலங்களில் முதன்மையானது குருதி. தெய்வங்கள் விரும்புவது. அனலே நீரென்றானது. குருதியைப்போல் அழகிய பொருள் இப்புவியில் இல்லை” என்றாள். அன்னை பெருமூச்சுவிட்டு “நலம் திகழ்க!” என்றாள்.

பாண்டவர்களுடன் நகர் புகுகையில் அவள் ஒரு படைப்புறப்பாடென்றே அதை எண்ணினாள். ஆண்டுகள் என நீளும் பெரும்போரின் தொடக்கம். அங்கிருந்து ஒவ்வொரு நாளும் போருக்கு சென்று கொண்டிருந்தாள். இந்திரப்பிரஸ்தத்தை ஈட்டி அந்நகரைக் கட்டி அதன் அரியணையில் மும்முடி சூடி அமர்ந்தபோது அது பாரதவர்ஷத்தின் மீதான ஒரு போர் அறைகூவல் என்று உள்ளத்துள் கருதினாள். மும்முடியுடன் அவள் எரிமலர் பீடத்தில் அமர்ந்திருந்தபோது சூழ நின்றிருந்த அத்தனை விழிகளிலும் தெரிந்த அடிபணிவு அவளை மதம் கொள்ளச் செய்தது. பல்லாயிரம்பேர் அன்று அவள் கால்களில் பணிந்து காணிக்கை அளித்தனர். கால் நோக்கி ஒரு நதி பெருகி வந்து அறைந்து வளைந்து மீள்வதுபோல் முடிவிலாது அது நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒருவர் போன்றே பிறர். அருமணிகள் பொருளில்லாதவையாயின. பின் அடிபணிதலும் பொருளில்லாமலாயிற்று. அதன்பின் அவள் கொண்ட தன்னுணர்வு மட்டுமே அங்கிருந்தது.

அச்சடங்கு முடிந்து அவள் எழுந்தபோது அம்மண்டபத்தின் ஆயிரம் தூண்களில் விழிகள் அவளை நோக்கிக்கொண்டிருந்தன. பரதனும், யயாதியும், தசரதனும், ராமனும். குரு, ஹஸ்தி, பிரதீபன் என்னும் அரசநிரையினர். அவ்விழிகளை நோக்கி அங்கு நின்றபோது அவளுள் பிறிதொன்று புரண்டு எழுந்தது. உடலெங்கும் உணர்ந்த திமிர்ப்புடன் தன் மஞ்சத்தறைக்கு சென்றாள். இரு சேடியர் வந்து அவள் மணிமுடியை அகற்றி பொற்தாலத்தில் எடுத்து அப்பால் வைத்தனர். ஆடை களையும் பொருட்டு அவள் ஆடி முன் அமர்ந்தாள். தன்முன் தெரிந்த அனல்மணிகள் சூடிய தேவியுருவை நோக்கியபோது அவள் தன் எண்ணமென்ன என்பதை உணர்ந்தாள். புன்னகையுடன் “உங்கள் கொடிவழியினர் அனைவரும் என்னை பணிவார்கள், மூதாதையரே. வானிலிருந்து நோக்குங்கள், உங்கள் குருதியனைத்திற்கும் மேல் எனது ஆட்சி ஓங்கி நின்றிருக்கும்” என்றாள்.

ஆனால் பின்னர் அவளில் இருந்த அந்தப் போர்விழைவு எப்படி ஒழிந்ததென்பதை அவளே உணர்ந்திருக்கவில்லை. கானுறை வாழ்விலிருந்து மீண்டபோது நகரம் முற்றிலும் பொருளற்றதாகியிருந்தது. மானுடப்பெருக்கும், இசைவழிந்த ஓசைகளும், காற்றில் இருந்த கெடுமணங்களும் அவளை ஒவ்வாமை கொள்ளச்செய்தன. அரண்மனையின் சிற்றறைகள் மூச்சுத்திணறச் செய்தன. அனைத்துச் சாளரங்களையும் திறந்து போட்டு மஞ்சத்தில் படுத்த போதும்கூட அடைபட்டிருக்கும் உணர்வையே அவள் அடைந்தாள். கனவுகளில் திறந்தவெளியில் கூந்தல் பறக்க ஆடையுலைய எங்கோ விரைந்தோடிக் கொண்டிருக்கும் கனவே எழுந்தது. போர் அணுகிக்கொண்டிருப்பதை அவளைச் சூழ இருந்த அனைவரும் உணர்ந்தனர். அனைத்துச் சொற்களிலும் அதன் கிளர்ச்சியும் அச்சமும் இருந்தது. காணும் ஒவ்வொன்றையும் அதனுடன் தொடர்புபடுத்தினர். அனைத்துப் பேச்சுகளும் போரில் சென்று முடிந்தன. அவள் மட்டும் அப்பால் பிறிதொரு உலகில் வாழ்ந்துகொண்டிருந்தாள். எக்கணமும் அங்கிருந்து கிளம்பி தன்னந்தனியே அறியா நிலம் ஒன்றுக்கு அகன்று சென்றுவிடுபவள்போல. அல்லது அந்நிலத்திலிருந்து முந்தைய நாள்தான் இந்நிலத்திற்கு வந்து சேர்ந்தவள்போல.

படையெழுந்தபோதுகூட அவள் உள்ளம் உணர்வழிந்து செயலற்றுப் போயிருந்தது. அவளுள் எழுந்த பிறிதொருத்தி அனைத்தையும் இயற்றினாள். பின்னர் கொற்றவை பூசனையின்போது அவளுள் மாயை குடியேறினாள். அவள் முற்றாக இரண்டாக பகுக்கப்பட்டாள். தன்னில் ஒரு நடுக்கென குடியேறி, கொந்தளிக்கும் எண்ணங்களாகவும் வெறிச்சொற்களாகவும் வெளிப்பட்டு விலகும் பிறிதொருத்தியை அவள் அகன்ற அக்கணம் முதல் திகைப்புடனும் அச்சத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தாள். குருக்ஷேத்ரத்தில் போர் தொடங்கிய முதல்நாள் அவள் தன் தனியறைக்குள் மஞ்சத்தில் அமர்ந்திருந்தாள். கதவை உள்ளே மூடி தாழிட்டிருந்தாள். எப்போது கதவுகளை மூடத்தொடங்கினோம் என்பதை அப்போதுதான் திகைப்புடன் எண்ணிக்கொண்டாள். அக்கதவின் மீது விழும் ஒவ்வொரு தட்டும் அழைப்போசையும் அவளை விதிர்ப்பு கொள்ளச் செய்தது.

முதல்நாள் புலரியில் விந்தையானதோர் கனவு கண்டு அவள் எழுந்துகொண்டாள். அக்கனவை ஓர் அச்சம் என்று மட்டுமே நினைவுகூர முடிந்தது. எத்தனை உந்தியும் அதனை சித்தம் கொண்டு தொட்டெடுக்க இயலவில்லை. அவள் இருட்காலையில் எழுந்து நீராடி ஆடை மாற்றிக்கொண்டாள். வெளியே இறங்கி காற்று சுழன்றடித்துக்கொண்டிருந்த தோட்டத்தில் உலவினாள். நெடுந்தொலைவில் போர்முரசு ஒலிப்பது கேட்பதுபோல் தோன்றியது. ஆனால் அங்கிருந்து ஓசை எதுவும் எழாது என்பதை அவள் அறிந்திருந்தாள். அங்கே நிற்க முடியாமல் திரும்பி வந்து தன் அறைக்குள் கதவை மூடிக்கொண்டாள். கதவருகே வந்து நின்ற ஏவல்பெண்டு “போர்முரசு ஒலிக்கத்தொடங்கிவிட்டது, அரசி. அங்கிருந்து முழவுச்செய்தித் தொடர் வந்தடைந்துள்ளது” என்றாள். அக்கணம் அவள் தான் புலரியில் கண்ட கனவை நினைவு கூர்ந்தாள்.

படபடப்புடன் எழுந்து கதவைத் திறந்து வெளிவந்து “அலையடிக்கும் நீள்செங்குழல். கன்னங்கரிய உருவம். மண்டையோட்டு முகம், அவற்றில் விழியிலாக் கண்குழிகள். ஒரு தெய்வத்தை இன்று காலை நான் கனவில் கண்டேன். அவள் வடிவு நான் இன்று வரை காணாதது” என்றாள். சேடி திகைத்து கண்கள் தெறிக்க அவளைப் பார்த்தபின், நாவால் உதடுகளை வருடி “அத்தெய்வத்தை பெரும்பாலும் இங்குள்ள அனைத்து சேடியரும் கண்டிருக்கிறார்கள், அரசி” என்றாள். “அத்தெய்வத்தின் பெயரென்ன?” என்று அவள் கேட்டாள். “அனலை நீள்குழலாகக் கொண்டவள். கன்னங்கரியவள். எட்டு கைகளில் கொலைப் படைக்கலங்களை ஏந்தியவள். அஞ்சலும் அருளலும் காட்டி கனிந்த விழிகளுடன் அமர்ந்திருக்கையில் அவளை காளராத்ரி என்கின்றனர். அவள் துர்க்கையின் இருளுரு” என்று ஏவல்பெண்டு சொன்னாள்.

“விடியாத கரிய இரவின் தேவி. அஸ்தினபுரிக்கு தென்கிழக்கில் புதர்க்காட்டுக்குள் இடையளவு உயரமான அவளுடைய சிறிய ஆலயமொன்று உள்ளது. அதற்குள் மூன்று அடி உயரமான கரிய சிலையொன்று நின்றிருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அதற்கு பலிகொடுத்து வழிபடுவார்கள். சென்ற கருநிலவு நாளில் அதற்கு குருதிபலி கொடுத்து பீடத்திலிருந்து எழுப்பியிருக்கிறார்கள்” என்றாள். திரௌபதி “அவள் எவருக்கு வெற்றி தேடித்தருபவள்?” என்றாள். “அரசி, அவள் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டவள். பீடத்திலிருந்து எழுந்தபின் மானுடரை நோக்கும் விழிகளற்றவள். அவளுக்கு உகந்தது சாவும் அழிவும் எஞ்சும் வெறுமையும் மட்டுமே. அவள் தூய இருள் திரண்டு எச்சமில்லாமல் எழுந்த தமோகுணம். அனைத்துக்கும் பிறகு அறுதியாக எஞ்சுவது இருளே என்பார்கள்.”

கதவு மீண்டும் தட்டப்பட்டு ஏவல்பெண்டு “அரசி!” என்று உரக்க அழைத்தாள். சிறு நடுக்குடன் திரௌபதி அன்றைய தன் கனவில் கதவுக்கு அப்பால் நின்று தட்டிக்கொண்டிருந்தவள் காளராத்ரிதான் என்பதை உணர்ந்தாள்.

வெண்முரசு விவாதங்கள்