தீயின் எடை - 45
“நெடும்பொழுது…” என்னும் சொல்லுடன் சதானீகன் தன்னுணர்வு கொண்டபோது அவன் எங்கிருக்கிறான் என்பதை உணரவில்லை. நெடுநேரம் அவன் போரிலேயே இருந்தான். குருதிமணம், அசைவுகளின் கொந்தளிப்பு, சாவில் வெறித்த முகங்கள். பின்னர் ஒரு கணத்தில் அவன் உணர்ந்தான், அந்தப் போரில் ஓசையே இல்லை. அமைதியான நிழற்கொப்பளிப்புபோல் அது நிகழ்ந்துகொண்டிருந்தது. அவன் உடல் வியர்வையில் குளிர்ந்து நடுங்க, கடும் விடாயில் நா வறண்டு தவிக்க, விழித்துக்கொண்டான். எழுந்து அமர்ந்து சூழ நோக்கியபோதும் எங்கிருக்கிறான் என்னும் உணர்வு எழவில்லை. மஞ்சத்திலிருந்து கால்களை நிலத்தில் வைத்து நின்றபோது பக்கவாட்டில் தள்ளி வீழ்த்தப்பட்டவனாக நிலத்தில் உடல் அறைந்து விழுந்தான். முகம் மண்ணில் அறைபட்டது.
சற்றுநேரம் அவன் அங்கேயே மூச்சில்லாதவன்போல் கிடந்தான். மண்ணுடன் பதிந்து கிடப்பது அவனை ஆறுதல்படுத்தியது. மண் அவனைச் சூழ்ந்து புதைத்துக்கொண்டு, மென்மையாக உள்ளிழுத்துக்கொண்டு, மேலும் மேலும் அழுத்தி சிதைத்தது. அவன் உடல் பக்கவாட்டில் திறந்துகொண்டு பரவியது. உருவழிந்து நீரென்றாகி உப்பென்றாகி இன்மையென்றாகியது. மீண்டும் நினைவுகொண்டபோது அவன் மண்ணிலிருந்து சிறிய முளைபோல பிளந்தெழுந்தான். அப்போது அவனிடம் இன்னொரு சொல் இருந்தது. முந்தைய சொல்லே அச்சொல்லாக உருமாறியிருந்தது. “இதுவல்ல.” ஏன் அச்சொல்? “இதுவல்ல.” எனில் நிகழ்ந்த அனைத்தையும் தவிர்க்கிறேனா? வேறொன்றை எண்ணுகிறேனா? வேறொன்று. இந்தப் பேரழிவுக்கும் மேல் எழுந்து நின்றிருக்கும் பிறிது.
எழுந்து அமர்ந்தபோது அறை முழுக்க கந்தகத்தின் கெடுமணம் நிறைந்திருப்பதை உணர்ந்தான். கைகளை ஊன்றியபடியே உடலைத் தூக்கி சூழவும் பார்த்தான். மூங்கில் கீற்றில் முடைந்த மஞ்சங்களில் பாண்டவ மைந்தர் நால்வர் படுத்திருந்தார்கள். அறைக்குள் இரு கலங்களிலிருந்து மெல்லிய புகை எழுந்தது. அவன் எழுந்து நின்று அவர்களை நோக்கினான். சுருதகீர்த்தியின் கைகளையும் கால்களையும் மூங்கில்பட்டைகளை வைத்து இணைத்துக்கட்டி அதன்மேல் மயில்துத்தம் வெந்த பச்சிலைகளுடன் கலந்து உருகும் நாற்றம் எழும் எண்ணை ஒன்றை பூசியிருந்தனர். அவன் நெஞ்சும் வயிறும் தேன்மெழுகு பூசப்பட்ட துணியால் இறுகச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தன. தலையிலும் இளங்கமுகுப்பாளை சுற்றப்பட்டிருந்தது. அதன் விளிம்பினூடாக பச்சிலை விழுது வழிந்திருந்தது. அவன் முகம் அதைத்து, விழிகளும் உதடுகளும் வீங்கிப் புடைத்து பிறிதொருவன் எனத் தோன்றினான். வாய் திறந்து பற்களின் அடிப்பக்கம் தெரிய உள்நா அதிர மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான்.
அருகே சுருதசேனனும் உடலெங்கும் கட்டுகளுடன் படுத்திருந்தான். அவன் உடலே சிதைந்திருந்தது. முற்றிலும் தன்னினைவின்றி இருந்தான்.சர்வதனுக்கும் சுதசோமனுக்கும் கட்டுக்கள் இருக்கவில்லை. ஆனால் அவர்களின் உடல் முழுக்க எண்ணை பூசப்பட்டிருந்தது. சர்வதனின் இடக்கால் வீங்கி உருண்டு நீர்க்காய்களுக்குரிய பளபளப்புடன் மஞ்சத்தின்மேல் வைக்கப்பட்டிருந்தது. அவர்களின் உடல்கள் பலமடங்காக பெருத்துவிட்டவைபோல் தோன்றின. மூச்சொலிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சீறின. சர்வதனின் தலையின் ஒரு பகுதி வீங்கி உள்ளிருந்து இன்னொரு தலை புடைத்து எழவிருப்பதுபோலத் தோன்றியது. இடக்கண் பிதுங்கி துறித்திருக்க மூடிய இமைகளின் விரிசல் வழியாக விழி தெரிந்தது. அந்த அறைக்குள் கிடக்கும் அந்நால்வரையும் அதற்குமுன் அறிந்திருக்கவில்லை என்று தோன்றியது.
அவன் காலை தூக்கி வைத்தபோதுதான் தன் கால்களும் வீங்கிப்பெருத்திருப்பதை உணர்ந்தான். உடலை அசைத்தபோது ஒவ்வொரு தசைப்பொருத்திலும் கடும் உளைச்சல் எழுந்தது. நெஞ்சின் துடிப்பு காதில் கேட்டது. மூச்சுத்திணறலுடன் நடந்து வெளியே சென்றான். தள்ளாடி சுவரைப் பற்றிக்கொண்டு நின்று மீண்டும் தன்னை உந்திக்கொண்டான். அதன் பின்னரே தன் நெஞ்சிலும் தொடையிலும் பெரிய கட்டுகளை பார்த்தான். அவை எண்ணையில் ஊறி உடலென்றே ஆகிவிட்டிருந்தன. பின்னர் உணர்ந்தான், தொடுவுணர்வை உடல் இழந்துவிட்டிருந்தமையால்தான் அவற்றை உணரமுடியவில்லை என்று. கதவு மூங்கில்படலால் ஆனது. அதற்கு வெளியே குளிர்காற்று வந்து அழுந்த உள்வளைந்து இடைவெளிகளினூடாக கூரிய ஊசிகள் என உள்ளே பீறிட்டுக்கொண்டிருந்தது. அவன் அதை தள்ளி இடைவெளியை உருவாக்கி கைவிட்டு அதன் கொக்கியை விடுவித்து திறந்து வெளியே சென்றான்.
வெளியே குளிர்காற்று நிறைந்திருந்தது. நள்ளிரவு கடந்துவிட்டது என்பதை அவன் உணர்ந்தான். இது எந்த இடம் என தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அதன் பின்னரே அந்தச் சிற்றூரின் பெயர் நினைவிலெழுந்தது. மனோசிலை. அந்தப் பெயரின் விந்தையைப் பற்றி அங்கே வரும்போது எண்ணிக்கொண்டிருந்தான். உள்ளமெனும் கல். உள்ளத்திலுள்ள கல். கல்லெனும் உள்ளம். அப்போது பொருளில்லாமல் அச்சொற்கள் அவனுள் ஓடிக்கொண்டிருந்தன. தேரில் அவன் அரைநினைவில் படுத்திருந்தான். அவன் தேரை யௌதேயன் ஓட்டினான். தேருக்குள் சுருதகீர்த்தியும் சுருதசேனனும் படுத்திருந்தனர். தேரை ஒட்டியபடி வந்த புரவியில் இருந்த திருஷ்டத்யும்னன் அவ்வப்போது கைகளை வீசி பின்னால் வந்த தேரை அழைத்து வழிகாட்டினான். தேருக்குமுன் புரவியில் சிகண்டி சென்றார். பின்னால் வந்த தேரை நிர்மித்திரன் ஓட்ட அவன் அருகே பிரதிவிந்தியன் அமர்ந்திருந்தான். அத்தேரில் சுதசோமனும் சர்வதனும் படுத்திருந்தார்கள். தேர்களுக்குப் பின்னால் வில்லேந்தியவனாக சாத்யகி வந்தான்.
மண்சாலையின் ஒவ்வொரு குழியிலும் தேர்ச்சகடங்கள் விழுந்து எழுந்து அதிர்ந்தன. ஒவ்வொரு அசைவுக்கும் உடல்மேல் வலிச்சொடுக்கை உணர்ந்து சுருதகீர்த்தியும் சுருதசேனனும் முனகினார்கள். அந்த முனகலோசை தன் ஓசைபோலவே ஒலிப்பதை சதானீகன் உணர்ந்தான். குருதியின் வெவ்வேறு மணங்கள். புதுக்குருதி, அழுகிச் சீழென்று ஆகிவிட்ட குருதி, நொதித்து கள்மணம் பெற்றுவிட்ட குருதி. அவன் குமட்டி உடல் உலுக்கிக்கொண்டான். அந்த விசையில் மயங்கி மீண்டும் எழுந்தபோது மழை கொட்டிக்கொண்டிருந்தது. தேர்களின் இருபுறமும் திரைகள் இழுத்துவிடப்பட்டிருந்தன. அவை உப்பி அதிர்ந்து நீர்த்துளிகளை தெறிக்கச் செய்தன. ஒரு காற்றில் தேர்த்திரை மேலே தூக்க மழை ஓங்கி அறைந்து முழுமையாகவே நனைத்தது. மீண்டும் படிந்து துடிக்கத் தொடங்கியது. மின்னலில் ஈரமான திரை வண்ணம் மாறி ஒளிகொண்டு அதிர்ந்து அணைய இடியோசை எங்கோ காட்டுக்குள் பெரும்பாறைகள் உருண்டு விழுவதுபோல ஒலித்தது. மீண்டும் ஒரு காற்றில் திரை எழுந்து சிறகென படபடக்க மின்னலில் ஒளிர்ந்த காட்டின் ஒருகணம் தெரிந்தது. இடியோசை நீருக்குள் எழுவதுபோல் கேட்டது.
திருஷ்டத்யும்னன் அருகே வந்து யௌதேயனிடம் “இங்கே நம் ஒற்றர்கள் இருக்கக்கூடும். கொடியசைவை எவரேனும் பார்த்தால் நன்று” என்றான். யௌதேயன் மழைத்தாரைக்குள் கூர்ந்து நோக்கியபடி ஒற்றைப்புரவி மட்டும் இழுத்த தேரை ஓட்டினான். “இங்கே ஒரு சிற்றூர் இருக்கக்கூடும். பாதை ஒன்று பிரிகிறது” என்று அவன் சொன்னான். திருஷ்டத்யும்னன் “பல பாதைகள் இப்போரின் பொருட்டு உருவானவை. அவை அனைத்துமே காட்டுக்குள் சென்று சுற்றி மீண்டும் குருக்ஷேத்ரத்தை சென்றடைபவை. அவற்றில் பலவற்றில் மரங்கள் விழுந்து வழி அறுபட்டுள்ளது” என்றான். “இங்குள்ள ஊர்களில் எவை எஞ்சுகின்றன என்றே நாம் அறியோம். நாம் செல்லும்போதிருந்த நிலம் அல்ல இது.” காட்டின் விளிம்பில் இருந்து ஒருவன் கைவீசுவதைக் கண்டு பேச்சை நிறுத்திவிட்டு திருஷ்டத்யும்னன் அவனை நோக்கி புரவியில் சென்றான். கையில் அம்பும் வில்லுமாக சிகண்டி இருபுறமும் கூர்ந்து நோக்கிக்கொண்டு நிற்க தேர்கள் விசையழிந்தன. புரவி தும்மியபடி காலைத் தூக்கி முன்னால் வைத்து உடலை உதறி நீர்த்துளிகளை தெறித்தது.
திருஷ்டத்யும்னன் சேறு தெறிக்க அருகே வந்து புரவியைச் சுழற்றி நிறுத்தி “இங்கு இரு சிற்றூர்கள் உள்ளன. ஆனால் இங்குள்ள எல்லா இல்லங்களிலும் கூரைகள் தீப்பற்றி அழிந்துவிட்டன. குருக்ஷேத்ரத்திலிருந்து அனல்பொறிகள் காற்றிலெழுந்து இத்தனை தொலைவுக்கு வந்திருக்கின்றன… இந்த மழையில் இங்கே எங்கும் தங்க இயலாது… அப்பால் மூன்றாவது கிளைச்சாலையில் ஒரு சிற்றூர் உள்ளது. அதன் பெயர் மனோசிலை. சாலை கிளைவிரியும் முனையில் ஒரு பெரிய ஒற்றைப்பாறை நின்றிருக்கும். அதன்மேல் ஊரின் அடையாளமான எருதுச்சின்னம் செதுக்கப்பட்டிருக்கும். ஊரில் எவருமில்லை. அங்கே கல்லால் ஓடிட்ட இரண்டு பெரிய கட்டடங்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன. அவை தங்க உகந்தவை” என்றான். புரவி உறுமி பிடரி சிலிர்த்துக்கொண்டு கிளம்பியது. கடையாணி வாளைத் தீட்டுவதுபோல ஓசையிட்டது. அடிபட்ட நாயின் முனகலோசையாக மாறியது.
மனோசிலையை வந்தடைவதுவரை அச்சொல்லாக அவன் அகம் ஒலித்துக்கொண்டிருந்தது. மனோசிலை. மனோசிலை. அவ்வோசையாக சகடம் அதிர்ந்தது. குளம்புகள் அழுந்தி விழுந்து எழுந்தன. மனோசிலை எனப்பட்டது அந்தக் கரிய பாறை எனத் தெரிந்தது. அது இருளுக்குள் ஈரத்தின் மினுப்புடன் நின்றிருந்தது. கைவிடப்பட்ட ஒரு மாபெரும் படைக்கலம்போல. அவர்கள் திரும்பி அவ்வூர் நோக்கி செல்ல சூழ்ந்திருந்த காட்டில் குளம்போசையும் சகடஒலியும் எதிரொலித்தன. ஊர் முற்றிலும் எரிந்து அணைந்திருந்தது. இலைகருகி நின்ற மரங்களிலிருந்து நீர்த்துளிகள் சொட்டிக்கொண்டிருக்க கரியும் சேறும் பரவிய ஊர்முற்றத்தின் வலப்பக்கம் இரு கட்டடங்கள் மட்டும் எஞ்சியிருந்தன. கரிய கல்லால் ஆன ஓடு வேயப்பட்ட அந்தக் கட்டடங்களின் மீது நீர் வழியும் ஒளி தெரிந்தது. அவை இரு பாறைகள்போல முதலில் தோன்றின. “இதுதான்!” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். சிகண்டி முன்னால் சென்று சூழ நோக்கியபின் கைகாட்டிவிட்டு அந்தக் கட்டடங்களை அணுகி உள்ளே நோக்கினார். உள்ளே எவருமில்லை எனக் கண்டபின் வெளிவந்து கைகாட்டினார். தேர்கள் ஊர்முற்றத்தின் சகதியில் அரைவட்டமடித்து நின்றன. காற்று கடந்துசெல்ல நீர்த்துளிகள் மண்ணில் கொத்தாக உதிர்ந்தன.
சதானீகன் தேர்த்தட்டில் வெறுமனே நோக்கிக்கொண்டு கிடந்தான். சுருதகீர்த்தி முனகி “யார்?” என்றான். சதானீகன் திரும்பி நோக்கியபின் அந்தக் கூரையை நோக்கினான். மழை வழியும் கரிய கல்கூரை அவனுக்குள் வெறுமை நிறைந்த நினைவுகளை இழுத்துவந்தது. இந்திரப்பிரஸ்தத்திலும், பின்னர் அஸ்தினபுரியில் துரோணரின் கல்விநிலையிலும் அவன் வாழ்ந்த இளமைக்காலம் முழுக்க எதற்காகவோ பொறுமையிழந்து காத்திருப்பதுபோலத்தான் நினைவிலெழுந்தது. மழைப்பொழுதுகளில் அந்தச் சலிப்பும் பொறுமையிழப்பும் பெருகிப்பெருகி வந்து ஒரு கட்டத்தில் விழிநீர் உதிரத்தொடங்குமோ என்று தோன்றிவிடும். அவனை எவரும் நோக்குவதில்லை என்று அவன் எண்ணியிருந்தான். ஆனால் அவர்கள் அனைவர் மேலும் பெரிய தந்தை துரியோதனனின் பார்வை எப்போதுமிருந்தது.
ஒருமுறை அவனை அருகே அழைத்து தன் பெரிய கைகளை அவன் தோளில் வைத்து குனிந்து விழிகளை நோக்கியபடி பெரிய தந்தை துரியோதனன் கேட்டதுண்டு “ஏன் துயருற்றிருக்கிறாய்? தந்தையை எண்ணுகிறாயா?” அவன் தலைகுனிந்து நின்றிருக்க “ஆம், இவை துயரளிக்கும் நினைவுகள்தான். ஆனால் அரசியலில் இவை வெறும் ஆடல் என்றே எண்ணப்படவேண்டும். அந்த ஆடலில் விழிநீருக்கும் குருதிக்கும் இடமில்லை. ஷத்ரியர்கள் வாள்கொண்டு களம்நிற்க வேண்டியவர்கள். அதற்குரிய உளநிலைகளை அவர்கள் ஈட்டியே ஆகவேண்டும். என்றேனும் நீயும் அரசியல் களத்தில் ஆடும் பொழுது வரும்போது அதற்குரிய உணர்ச்சிகளை அடையலாம். விழைவு சூடலாம். வஞ்சம் கொள்ளலாம். வில்லெடுத்து எனக்கும் என் மைந்தருக்கும் எதிராக நீ வரலாம். அவ்வண்ணம் வந்தாய் என்றால் அதை என் பெருமை என்றே கொள்வேன். உன்னை வீரன் என வளர்த்தேன் என்று அதற்குப் பொருள்” என்றார்.
அவன் விழிதூக்கி “இல்லை, தந்தையே” என்றான். “நீயும் நானும் அறிந்த ஒன்றுண்டு. ஒருநாள் அவர்கள் திரும்பி வருவார்கள். போர் மூளக்கூடும். நீயும் உன் உடன்பிறந்தாரும் அவர்களுடன் சேர்ந்து எனக்கும் என் மைந்தருக்கும் எதிராக வில்லெடுப்பீர்கள். எனினும் நான் உங்களுக்கு தேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு மொழி பயிற்றுவித்தேன். இப்போது பாரதவர்ஷத்தின் தலைசிறந்த வில்லாசிரியரைக் கொண்டு படைபயிற்றுகிறேன். ஏன் என எண்ணிப்பார்” என்று பெரிய தந்தை சொன்னார். “ஏனென்றால் இது வேறு களம். இங்கே நாம் செய்யவேண்டியதை முழுமையாகச் செய்யவேண்டும். நீ உன் தந்தை கான்வாழ்க்கையில் விலங்குகளால் கொல்லப்படுவார் என்றோ காட்டாளர்களாலோ கானுறைத்தெய்வங்களாலோ அழிக்கப்படுவார் என்றோ ஐயம்கொள்கிறாயா? அதன்பொருட்டு துயருறுகிறாயா?”
சதானீகன் “இல்லை தந்தையே, அவர்கள் மாவீரர்கள் என்று நான் அறிவேன்” என்று சொன்னான். “அவர்கள் எத்தனையோ போர்களுக்கு சென்றிருக்கிறார்கள். போர்க்களம் என்பது ஊழின் களம். எந்தப் பெருவீரனையும் எங்கிருந்து வருகிறது எவருடையது என்று தெரிந்துகொள்ளமுடியாத அம்பு ஒன்று வீழ்த்திவிடமுடியும். அவர்களின் இல்லத்துப் பெண்டிர்கூட அவர்கள் நலமாக மீளவேண்டும் என்று நம்பவோ தெய்வங்களிடம் வேண்டிக்கொள்ளவோ கூடாது என்பதே ஷத்ரிய நெறி” என்று துரியோதனன் சொன்னார். “அவர்களுக்காக நான் அஞ்சவோ வருந்தவோ இல்லை” என்று சதானீகன் சிறு சீற்றத்துடன் சொன்னான். “எனில் அவர்களை மறந்து இங்கே உனக்கென அமைக்கப்பட்டுள்ள களத்தில் ஆடி வெல்வதே உன் கடன். வில் பயில்க! தேர்ந்து தந்தைக்கு நிகராக, அன்றி ஒரு படி மேலாக எழுக! அதுவே நீ எனக்கும் செய்யவேண்டிய கடன்” என்றார் துரியோதனன்.
சில கணங்களுக்குப் பின் சதானீகன் “தந்தையே, நான் எண்ணுவது வேறு” என்றான். “சொல்” என்று துரியோதனன் சொன்னார். அவர் விழிகளை நோக்கியபின் “நான் உங்களிடம் அதை சொல்லமுடியாது” என்றான் சதானீகன். “எனில் உன் மூத்தவன் லக்ஷ்மணனிடம் சொல். அவன் உனக்கு அணுக்கமானவன் அல்லவா?” என்று சொல்லி நகைத்த துரியோதனன் “நன்று, அவனிடமே கேட்கச் சொல்கிறேன்” என்றார். இரு நாட்களுக்குப்பின் லக்ஷ்மணன் அவனிடம் இயல்பாக அதை கேட்டான். “தந்தை நீ துயருற்றிருக்கிறாய் என எண்ணுகிறார். அவர் மேல் நீ வஞ்சம் கொள்வாய் என்றால் அது இயல்பானது என்றும் அதை அவரே ஏற்பதாகவும் சொல்கிறார். அவ்வஞ்சத்தால் நீ அவருடைய நிலத்தில் இருப்பதையோ அவர் அளிக்கும் கொடையால் பயில்வதையோ விழையவில்லை என்றால் உன்னை இங்கிருந்து நீ விழைந்த இடத்திற்கு அனுப்பவும் அவர் சித்தமாக இருக்கிறார்.”
அவனால் சொற்களை கோக்க முடியவில்லை. ஆனால் உள்ளத்துள் இல்லை இல்லை என மறுத்துக்கொண்டே இருந்தான். லக்ஷ்மணன் “நீ அவர்மேல் வஞ்சம் கொண்டு அவரை வெறுக்கிறாய் எனில் அவர் அதை வரவேற்கவும் மகிழவுமே செய்வார். ஏனென்றால் அவை ஷத்ரியர்களின் இயல்புகள். ஆனால் தனிமைகொள்கிறாய், துயருறுகிறாய் என்றால் அது அவரையும் துயருறச் செய்யும்” என்று சொன்னான். அவன் குரல் பெற்று “இல்லை மூத்தவரே, அவ்வாறல்ல” என்றான். “பிறகு ஏன் அதை அவரிடம் சொல்ல மறுக்கிறாய்?” என்றான் லக்ஷ்மணன். “அதை மூத்தவர் எவரும் புரிந்துகொள்ள முடியாது… நம்மைப்போன்ற இளையோரின் இடர் அது” என்றான் சதானீகன். “சொல்” என்றபோது லக்ஷ்மணனின் குரல் மாறியிருந்தது. அவன் தத்தளித்து சொற்களைச் சேர்த்து “மூத்தவரே, என் வாழ்க்கையே ஒரு நீண்ட காத்திருப்பு என உணர்கிறேன்” என்றான்.
அவன் சொன்னதுமே அதை லக்ஷ்மணன் புரிந்துகொண்டான் என விழிகள் காட்டின. ஆகவே அவன் மேலும் ஊக்கம் கொண்டான். “வெறும் காத்திருப்புதான்… இளமையில் வாழ்க்கை என்பது நிகழவிருப்பனவற்றைக் குறித்த கனவு. அவற்றை மீள மீள எண்ணி எண்ணி விரித்தெடுப்பதன் இனிமையாலானது. அறியமுடியாத சிலவற்றை நோக்கி செல்வதே இளமையின் முதன்மை இன்பம். அறிந்த ஒன்றை நோக்கி மெல்லமெல்ல செல்லும்போது…” என்றபின் “நன்றாகத் தெரிந்த ஒன்றுக்காக காத்திருக்கும்போது…” என்று மீண்டும் சொல்லிவிட்டு “என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் நான் ஒருவகையான வெறுமையை சற்றே மேலுளம் ஓயும்போதெல்லாம் உணர்கிறேன். என்னால் அதை தவிர்க்க முடியவில்லை. அதை அவரிடம் சொல்லமுடியாது” என்றான்.
“ஆம்” என்று லக்ஷ்மணன் சொன்னான். “நம்மில் பலருக்கும் இந்த உணர்வேதுமில்லை. அபிமன்யுவும் சுருதகீர்த்தியும் அம்புகளை அன்றி எதையும் அறியவில்லை. சுதசோமனும் சர்வதனும் துருமசேனனும் கதையில் ஆழ்ந்திருக்கிறார்கள். தங்கள் தந்தையரை தங்கள் உடலில் நிகழ்த்துவதை மட்டுமே இலக்கெனக் கொண்டிருக்கிறார்கள். மூத்தவர் பிரதிவிந்தியனும் இளையவர் யௌதேயனும் நூல்களில் ஆழ்ந்திருக்கிறார்கள்… நானும் நிர்மித்ரனும் மட்டுமே இவ்வுணர்வில் அலைகிறோம். அவனை புரவிகள் ஆற்றுகின்றன. எனக்கு எப்போதோ புரவிகளிடமிருந்தும் விலக்கம் உருவாகிவிட்டது” என்று அவன் சொன்னான். லக்ஷ்மணன் “நீ சொல்லவருவதை புரிந்துகொள்கிறேன்” என்றான். “நானும் உணர்வதுதான் அது… இங்குள்ள அரசமைந்தரில் துளியேனும் அதை உணராதவராக எவரும் இருப்பார்கள் என நான் சொல்லமாட்டேன்.”
சதானீகன் “ஆம், அவர்களும் உணரக்கூடும். அந்த வெறியே அதிலிருந்து தப்பும்பொருட்டாக இருக்கலாம்” என்றான். “இந்நகரமே காத்திருக்கிறது, இளையோனே. இந்நகரின் முகப்பில் கைவிடுபடைகள் இறுகி முனைகூர்ந்து மூன்று தலைமுறைக்காலம் ஆகிவிட்டது” என்றபின் அவன் தோளைத் தட்டி “நன்று, கன்னியர் உள்ளத்தில் தனிமை உடலில் இளமுலைகள் என முளைக்கின்றது என்று ஒரு கவிக்கூற்று உண்டு. அதை அவர்கள் தவிர்க்கமுடியாது. ஆடுவதும் பாடுவதும் அதை சுமந்தபடியே. அது அவர்களுக்கு சுமையும் அணியும். நமக்கும் இத்தனிமை அவ்வாறே ஆகட்டும்” என்றபின் சிரித்தான். சதானீகனும் அச்சிரிப்பில் சேர்ந்துகொண்டான். லக்ஷ்மணன் “ஆனால் நீ துருமனைப் பற்றி கூறியது பிழை. அவன் தன் தந்தையிடமிருந்து விலக விழைபவன்” என்றபின் மீண்டும் அவன் தோளில் தட்டிவிட்டு நடந்தகன்றான்.
அது ஒருகணம் முன் நிகழ்ந்ததைப்போல் உணர்ந்தபடிதான் அவன் அந்த அறைக்குள் விழித்துக்கொண்டான். நெடும்பொழுது என்னும் சொல் அப்போது கையிலிருந்தது. ஆனால் அதை எண்ணத்தொடங்கியது தேரிலிருக்கையில். தேரிலிருந்து அவனை இறக்கி கொண்டுவந்து கட்டுபோட்டு மருந்து பூசி படுக்கச் செய்திருக்கிறார்கள். நெடும்பொழுது என்று அவன் எப்போது சொல்லிக்கொண்டான். விழிப்பதற்கு முன்னரா? அவன் மழைச்சாரல் பிசிறுகளாக இருளுக்குள் இறங்கிய முற்றத்தில் கால்வைத்தபோது இடிந்த திண்ணையில் படுத்திருந்த மருத்துவன் எழுந்து “இளவரசே, நீங்கள் அசையவே கூடாது. ஆழ்ந்து புண்பட்டிருக்கிறீர்கள்” என்றான். “மூத்தவர் எங்கே?” என்று சதானீகன் கேட்டான். “அவர்கள் அந்த அறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் மருந்து அளிக்கப்பட்டிருக்கிறது.” சதானீகன் திரும்பியபோது மருத்துவன் “இதுவல்ல” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்றான். “நான் ஏதும் சொல்லவில்லையே?” என்று அவன் திகைத்தான். இதுவல்ல என்று எவரோ சொன்னார்கள். மிக அருகே. மிக அழுத்தமாக.
அவன் அந்தக் கட்டடத்தை நோக்கி செல்ல மருத்துவன் எழுந்து பின்னால் வந்தபடி “பாஞ்சாலர்களும் யாதவரும் அங்கே அச்சிறுகுடிலுக்குள் இருக்கிறார்கள்” என்றான். அவன் தயங்கி இருபுறத்தில் எங்கே செல்வது என்று முடிவெடுக்க முடியாமல் திணறினான். அப்போதுதான் முழவோசையை கேட்டான். அது கூறுவதென்ன என்று அவனுக்கு புரியவில்லை. அதன் ஓசையை சொற்களாக ஆக்க முடியவில்லை. குடில் காட்டிலிருந்து இலைகளையும் புற்கற்றைகளையும் வெட்டிக் கொண்டுவந்து கட்டப்பட்டிருந்தது. அதன் விளிம்புகளிலிருந்து நீர் சொட்டியது. அதன் முன் ஒரு புரவி நின்றிருந்தது. சுமையிழுக்கும் மட்டப்புரவி அது. இரு தேர்களும் முற்றத்தில் நின்றிருந்தன. அவற்றின் புரவிகளும் கட்டடங்களை ஒட்டி தாழ்வாக இறக்கப்பட்ட இலைக்கூரைக்கு அடியில் நின்றிருந்தன. இதுவல்ல என்ற சொல்லை சென்று உளம் முட்டியதுமே அவன் அச்சொல் வேறெங்கிருந்தோ வருவது என உணர்ந்தான்.
மழையில் நின்ற புரவி செருக்கடித்தது. “யார் வந்தது?” என்று அவன் மருத்துவனிடம் கேட்டான். “அறியேன், சற்றுமுன்னர்தான் வந்தார்” என்ற மருத்துவன் “அரசர் மறைந்த செய்தி கேட்டு ஆணைகொள்ள வந்திருக்கலாம்” என்றான். “யார்?” என்று சதானீகன் உரக்கக் கேட்டான். “அஸ்தினபுரியின் அரசர் மறைந்த செய்தியைத்தான் முழவுகள் அறிவிக்கின்றன” என்றான். சதானீகன் சித்தமில்லாமல் நின்று நடுக்கத்துடன் மீண்டு “யார்?” என்றான். மருத்துவன் வெறுமனே நோக்கினான். சதானீகன் குடிலை நோக்கி செல்ல அவன் உடல் நிலையழிந்தது. “இளவரசே” என மருத்துவன் ஓடிவந்து அவனை பிடித்தான். “என்னை அங்கே கொண்டுசெல்” என சதானீகன் ஆணையிட்டான். மருத்துவன் நடக்க அவன் தோளைப் பிடித்தபடி சென்றான். “இதுவல்ல, இதுவல்ல, இதுவல்ல” என உள்ளம் உடன்வந்தது.
குடிலுக்குள் பேச்சுக்குரல் கேட்டது. சிகண்டி கனைப்பொலி எழுப்பி ஏதோ சொல்ல சாத்யகி உரத்த குரலில் “அவ்வண்ணம்தான் முடியும் அது… அது நன்று” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆனால்…” என்று சொல்ல சாத்யகி “ஆனால்கள் நூறு உள்ளன, பாஞ்சாலரே. இது வெற்றி, அதை மட்டும் எண்ணுக!” என்றான். சதானீகன் சுவரைப் பற்றிக்கொண்டு நிற்க சிகண்டி அவனை பார்த்துவிட்டார். ஆனால் அவனைப் பார்க்காத திருஷ்டத்யும்னன் சீற்றத்துடன் “பிற பிழைகள் களத்தில் நிகழ்ந்தவை… களம் தெய்வங்களால் ஆளப்படுகிறது” என்றான். “ஆனால் இது வேறு. தனித்திருந்தவரை ஐவரும் சூழ்ந்துகொள்ளுதலும் நெறிபிறழ்ந்து தொடையில் அறைந்து கொல்வதும் எளிதில் அழியும் கறைகள் அல்ல” என்றான். அதன் பின்னரே அவன் சதானீகனை பார்த்தான். “மைந்தா, இங்கே என்ன செய்கிறாய்? என்ன இது, மருத்துவரே?” என்றபடி எழுந்தான்.
“என்ன நிகழ்ந்தது? சொல்க!” என்று சதானீகன் ஒற்றனிடம் கேட்டான். அவன் மழையில் குடிசைக்கு வெளியே நின்றிருந்தான். அவன் திருஷ்டத்யும்னனை நோக்க “இது அரசாணை” என்றான் சதானீகன். “அஸ்தினபுரியின் அரசர் பீமசேனனால் கதைப்போரில் கொல்லப்பட்டார்” என்று ஒற்றன் சொன்னான். “இங்கிருந்து ஒருநாள் தொலைவிலிருக்கும் காலகம் என்னும் காட்டில் அவர் ஒளிந்திருந்தார். அவரைச் சூழ்ந்துகொண்டு போருக்கு அறைகூவினர் நம் அரசர்கள். அவர் எழுந்து வந்து போரிட்டார். போரில் பீமசேனனால் வெல்லப்பட்டார்.” திருஷ்டத்யும்னன் “மைந்தா, இத்தனைபேர் வீழ்ந்த களத்திலிருந்து ஓடிப்போகும் ஓர் அரசன்…” என்று தொடங்க “ஒளிந்துகொள்ள காலகம் வரை செல்லவேண்டியதில்லை” என்றான் சதானீகன். ஒற்றனிடம் “சொல்க, அறைகூவியவர் எவர்?” என்றான்.
“மூத்த அரசர் யுதிஷ்டிரன்” என்று ஒற்றன் சொன்னான். “எதிர்கொண்டவர் பீமசேனன் என்றால் அத்தேர்வை கௌரவ அரசர்தான் நிகழ்த்தினாரா?” என்றான் சதானீகன். “ஆம் இளவரசே, அறைகூவலை ஏற்று ஐவரில் பீமசேனனை போருக்கென தெரிவுசெய்தவர் அவர்தான்.” சிகண்டி “அவனால் வேறொன்று எண்ண இயலாது” என்றார். “எனில் அப்போரின் நெறிகளில் உரோஹாதம் தடைசெய்யப்பட்டது அல்லவா?” என்றான். ஒற்றன் “ஆம்” என்றான். “அங்கே நடுவமைந்தது யார்? யார் நெறிநோக்கி அமர்ந்தது?” என்று கூவினான். “இளைய அரசர் சகதேவன்” என்று ஒற்றன் சொன்னான். சதானீகன் குடிலின் தூணைப் பற்றியிருந்த கை நடுங்க கண்நோக்கு மங்கலடைய காதிலொரு மூளல் ஒலிக்க நின்றான். விழப்போன அவனை மருத்துவன் பற்றிக்கொண்டான். அவனை உதறிவிட்டு சதானீகன் உடன்பிறந்தார் துயின்றுகொண்டிருந்த கட்டடம் நோக்கி மூச்சுவாங்க ஓடினான்.