தீயின் எடை - 33

காலகம் எப்போதுமே இளமழையில் நனைந்துகொண்டிருக்கும் என்று அஸ்வத்தாமன் அறிந்திருந்தான். இலைகள் சொட்டி இலைகள் அசைந்துகொண்டிருந்தன. அங்கே செறிந்திருந்த காட்டுமரங்களெல்லாம் பசுந்தழை செறிந்து காலடியில் இருளை தேக்கி வைத்திருந்தன. இருளுக்குள் நீர் சொட்டும் ஒலியில் அக்காடு ஊழ்கநுண்சொல்லை உரைத்தபடி விழிமூடி அமர்ந்திருப்பதுபோலத் தோன்றியது. மூன்று பக்கமும் கரிய பாறைகள் சூழ்ந்த அந்த அடர்வனப் பசுமைக்குள் ஊறிச்சேர்ந்த நீர் மண்ணில் ஊறி தெளிந்த சிற்றோடைகளாக மாறி சரிந்து இறங்கிச் சென்றுகொண்டிருந்தது. நீரோடைகளின் ஓசை காற்று வீசும்போது இடம் மாறி கேட்டது.

கிளை விரிந்த மரம்போல கிடந்த சதவாஹியினூடாக அவர்கள் கொடி பற்றி அடிமரம் தொற்றி ஏறுபவர்கள்போல மேலே சென்றனர். அவ்வப்போது தோன்றிய கிளையோடைகள் வழியாகத் திரும்பி செம்படலமாக பாசி படிந்த வழுக்கும் பாறைகளில் கால்வைத்து ஏறிக்கொண்டிருந்தனர். சற்று கால் வழுக்கினாலும் நுரைத்துக்கொட்டும் சிற்றருவிகளின் பாறைகளில் விழ நேருமென்பதை உடலுக்குள் ஓர் உணர்வு உறுத்துச் சொன்னபடியே இருந்தது. மழைக்காடு பிறிதொருவகையான ஏரி என அஸ்வத்தாமன் எண்ணிக்கொண்டான். அதன் இலைகளில், தண்டுகளில், அடிமரங்களில், வேர்ப்பற்றில் எங்கும் நீர் ததும்பியிருக்கிறது. அது கருமுகில்போன்றது.

சதவாஹியின் மறுமுனையில் அமைந்த சிறிய நீள்வட்டச் சுனையை அவர்கள் கண்டனர். அஸ்வத்தாமன் “அதுதான்” என்றான். அதை பிறரும் உணர்ந்திருந்தனர். பிறிதொன்று இருக்க இயலாது என்பதுபோல தோன்றியது அச்சுனை. அவர்கள் அருகணையும்தோறும் அது எத்தனை பெரிதென உணர்ந்தனர். கரிய அரக்குக்குவை என செங்குத்தாக எழுந்து நின்றிருந்த மலைப்பாறையின் வாய் எனத் திறந்த குகையிடுக்குக்குள் இருந்து ஊறி வந்து பலநூறு வெண்கம்பிகள் என விழுந்து தேங்கிய சிறுசுனையின் மறுகரையில் மெழுக்குப்பாசி படிந்த பாறையின்மேல் ஸ்தூனகர்ணனின் சிறுசிலை இருந்தது. ஒரு பகுதி தாமரை ஏந்திய பெண்ணாகவும் மறுபகுதி சூலமேந்திய ஆணாகவும் இருந்த சிலை மழையீரத்தில் களி படிந்திருந்தது. நீர்ப்பரப்பு வானொளியுடன் அலைகொண்டது.

அதை அணுகி நின்ற அஸ்வத்தாமன் இடையில் கைவைத்து சூழ நோக்கினான். “அரசர் இங்கிருக்கிறாரா?” என்றான் கிருதவர்மன். அஸ்வத்தாமன் ஒன்றும் சொல்லவில்லை. கிருபர் “இங்கே மானுடர் எவரும் வருவதுபோலத் தோன்றவில்லை” என்றார். “இங்கே வேடரும் மேய்ப்பரும் மூலிகைதேடும் மருத்துவரும்கூட வருவதில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாற்பத்தொருநாள் நோன்பிருந்த சூதர்கள் பந்தங்களுடனும் குடைகளுடனும் அக்காட்டுக்குள் புகுந்து ஸ்தூனகர்ணனின் சிற்றாலயத்தை அடைந்து பூசை செய்வார்கள். செவ்வரளி மலர்களை சூட்டி, வறுத்த தானியப்பொடியில் மனிதக்குருதி சொட்டி உருட்டி ஆறு திசைக்கும் வீசி கந்தர்வனுக்குப் படையலிட்டு வணங்கி மீள்வார்கள்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அஜபால மலைப்பழங்குடிகள் கருநிலவுநாள் தோறும் இங்கு வந்துகொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் இக்காட்டிலிருந்து அகன்று நெடுநாட்களாகின்றது.”

“அரசர் இங்கிருக்கிறாரா என்ன?” என்று கிருதவர்மன் கேட்டான். அஸ்வத்தாமன் “இங்குதான் இருக்கவேண்டும்” என்றான். கிருதவர்மன் “இக்காட்டுக்குள் சென்றிருந்தால் அவரை கண்டடையவே முடியாது. அத்தனை இலைச்செறிவு கொண்டிருக்கிறது” என்றான். “அவர் இங்குதான் இருக்கிறார்” என்ற அஸ்வத்தாமன் குகையை சுட்டிக்காட்டினான். குகைக்குள் செல்லவேண்டுமென்றால் நீரில் இறங்கியாகவேண்டும் என்று கண்ட கிருதவர்மன் தயங்கினான். அஸ்வத்தாமன் நீரை நோக்கிக் குனிந்து தன் பாவையை நோக்கினான். “என்ன தெரிகிறது?” என்று கிருபர் கேட்டார். மெய்யான ஆர்வத்தை மெல்லிய இளிவரலால் மூடியிருந்தார். அதே போன்று பொய்யான இளிவரலுடன் “என் தந்தையின் முகம்” என்றான் அஸ்வத்தாமன். “விளையாட இது பொழுதில்லை… நாம் அந்த குகைக்குள் செல்லவிருக்கிறோமா?” என்று கேட்டான் கிருதவர்மன். “ஆம், அங்கே அவர் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னரே காட்டுக்குள் தேடவேண்டும்” என்றான் அஸ்வத்தாமன்.

“பாஞ்சாலரே, இந்தச் சுனையைப் பற்றி நாம் அறியோம்… இதைப்போன்ற சுனைகள் மலைப்பகுதிகளில் பல உள்ளன. இவை பெரும்பாலும் மாபெரும் பிலங்களின் வாய் என அமைபவை. ஆகவே அடியிலா ஆழம் கொண்டவை. பிலங்களிலிருந்து எழும் தீய காற்றுகள் நிறைந்தவை உண்டு. அவற்றில் இறங்கியதுமே நாம் மூச்சை இழந்து மூழ்கத் தொடங்குவோம். சில சுனைகளில் வேறெங்குமில்லாத பாம்புகளும் நச்சுமீன்களும் உண்டு… இத்தகைய விந்தையான குகைகளில் வீழ்ந்து மறைந்தவர்கள் பலர். பெரும்பாலும் அவர்களின் உடல்களும் மீள்வதில்லை. அறிந்திருப்பீர்கள், அஸ்தினபுரியின் அரசரும் விசித்திரவீரியனின் மூத்தவருமான சித்ராங்கதர் நகருக்கருகே இருக்கும் சுனை ஒன்றில் மறைந்தார்.”

அஸ்வத்தாமன் “ஆம்” என்று கூறியபின் குனிந்து நீரை அள்ளி அருந்தினான். “எடைமிக்க நீர்… உலோகத்தை நாவால் தொடுவதுபோல் உள்ளது” என்றான். “எனில் இது பெரும்பிலம் ஒன்றின் வாயிலேதான். ஐயம் தேவையில்லை. இவ்வண்ணம் ஒரு சுனை அச்சமூட்டும் கதைகளாலும் கந்தர்வர், யக்ஷர் போன்ற தேவர்களாலும் பிறரிடமிருந்து தடுக்கப்பட்டிருக்கும் என்றால் அது நச்சுத்துளையேதான்…” என்று கிருதவர்மன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அஸ்வத்தாமன் நீரில் பாய்ந்து அலையெழ மறுகரை நோக்கி சென்றான். “பாஞ்சாலரே” என்ற கிருதவர்மன் தானும் நீரில் பாய்ந்தான். கிருபரும் அவனைத் தொடர்ந்து நீரில் பாய்ந்தார். நீர் படிகத்தகடு துண்டுகளாக உடையும் ஒளியுடன் கரைமுட்டித் ததும்பியது. நீர் எடைமிகுந்திருந்தமையால் அவர்கள் மூழ்காமல் ஏந்திக்கொண்டு செல்லப்பட்டனர்.

மறுகரையில் ஏறி நின்ற அஸ்வத்தாமன் நீரை உமிழ்ந்து மூச்சிரைத்தான். “அசையாத நீர்…” என்றபடி கிருதவர்மன் மேலேறினான். கிருபர் அருகே வந்து நின்றார். “இக்குகைக்குள் அரசர் இருந்தால் எப்படி உயிர்வாழ முடியும்?” என்று கிருதவர்மன் கேட்டான். கிருபர் திரும்பி அவனிடம் விழிகளால் பேசாதே என்று ஆணையிட்டார். அவர்கள் நீர் சொட்டிக்கொண்டிருந்த இருண்ட குகைக்குள் வழுக்கும் பாறையில் கால் வைத்து சென்றனர். மேலிருந்து பாறை உருகி வந்து உறைந்து பன்றியின் முலைகள்போல கூம்புகளாகத் தொங்கியது. விழுதுகளாக இறங்கி மண்ணில் ஊன்றியிருந்தது. மண்ணில் குவைக்கூம்புகள் எழுந்து நின்றிருந்தன. நீர் சொட்டும் ஒலி உள்ளே இருளுக்குள் முழக்கமிட்டுக்கொண்டிருந்தது.

அஸ்வத்தாமன் குகைச்சுவர்களில் பதிக்கப்பட்டவைபோல் ஒட்டியிருந்த எலும்புக்கூடுகளை பார்த்தான். அவை விழியிலா வெறிப்புடன் பல்துறித்து அமைந்திருந்தன. குகைச்சுவரில் சுண்ணத்தால் வரையப்பட்ட ஓவியங்கள்போல. சுவர்ப்பள்ளங்களில் அந்த உடல்களைப் பதித்து மண்ணிட்டு பொருத்தியிருந்தனர். அவை மட்கி, மண் பாறையென்றாகி சுண்ணநீர் வழிந்து பளிங்கென்றாக்கி சுவரில் படியச்செய்திருந்தது. எலும்புக்குழிகள் எனத் தெரிந்த விழிகளில்கூட நோக்கு இருந்தது. அன்னையரும் தந்தையரும் அவர்களை கூர்ந்து நோக்கிக்கொண்டு காலவெளிக்கு அப்பால் அமர்ந்திருந்தனர். குகைக்குள் இருந்த குளிர் ஒரு சிறு காற்றில் நீராவி வெம்மையாக ஆகியது. சுண்ணத்தின் மணம். அமிலம்போல் பிறிதொரு மணம். மிக அப்பால் ஆழத்தில் ஒரு அருவி பொழியும் ஓசை. அதற்கும் அப்பாலென காற்று ஓடும் ஒலி.

வாயிலில் இருந்து உள்ளே செல்லுந்தோறும் ஒளி பின்னடைந்து குகையின் கருமை விழிகளை நிறைத்தது. இருளை அறிந்தபின் விழிகள் வேறுவகையில் காட்சிகளை பெற்றுக்கொள்ளத் தொடங்கின. குகைச்சுவர்களில் வெட்டி உருவாக்கிய பள்ளக்கோடுகளால் ஆன ஓவியங்கள் இருந்ததை அஸ்வத்தாமன் கண்டான். இயல்பான பாறைவெடிப்புகள், நீர்வழிந்த தடங்கள்போலத் தோன்றியவை நோக்க நோக்க விழிக்கு தெளிந்து வந்தன. அவற்றிலிருந்து வடிவங்கள் எழுந்தன. குளம்புக்கால்களை வீசிப் பாய்ந்துசெல்லும் புரவிகள், கழுத்துத் தசைகள் மடிந்து தொங்க வால் சுழல மேய்ந்துகொண்டிருக்கும் திமில் எழுந்த காளைகள், படுத்து அசைபோடும் பசுக்கள், துள்ளி நின்ற கன்றுகள், கிளைக்கொம்பு கொண்ட மான்கள், கைகளை விரித்த கரடிகள், கிளைகளில் பதுங்கியமர்ந்த புலிகள், ஒன்றுடன் ஒன்று உடல்தொடுத்துக்கொண்ட யானைக்கூட்டங்கள், அமர்ந்தும் நின்றும் கையறைந்து உறுமியும் சிம்மங்கள்.

உடல்வடிவங்கள் ஒன்றுடன் ஒன்று முயங்கி உரு மயங்கின. அதற்கு முன் எங்குமே கண்டிராத விந்தையான அடையாள வடிவங்கள். இரட்டைத்தலை கொண்ட பருந்துகள், சிறகுவிரித்து அலகுதிறந்த பறவைகள், சுருள்சுருளென தன்னுள் சுழித்த நாகங்கள், உடல் பின்னிக்கொண்ட அரவுச்சிடுக்குகள், வாய்திறந்து முதலையெனக் காட்டி அரவின் உடல்கொண்ட உயிர்கள், சிம்மத்தலை அரவுகள், இரண்டுதலை ஓநாய்கள், முன்னும்பின்னும் சென்று உடல்நிகர் செய்த மீன்கள், துள்ளும் மீன்கள், வெவ்வேறு வகைகளில் கழுத்துகள் பின்னிக்கொண்ட அன்னங்கள், நாகங்களை கவ்விப்போரிடும் பருந்துகள், பாசிமணிகள் என சரம் அமைத்த பொன்வண்டுகள், விளையாடும் சிற்றெலிகள், வால் தடித்த கீரிகள். ஆனால் அங்கே குரங்குகளை காண முடியவில்லை.

“எவர் வரைந்தவை இவை?” என கிருதவர்மன் முனகிக்கொண்டான். “கிருதயுகத்திற்கு முன்பு இங்கே மானுடர் வாழவில்லை. அன்று வாழ்ந்தவர்களே பின்னர் வான்புகுந்து தேவர்கள் ஆனார்கள். விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கிவந்து நுண்ணுருவில் நம்முடன் விளையாடுகிறார்கள்” என்று கிருபர் சொன்னார். ஐந்து தலை நாகத்தால் குடைபிடிக்கப்பட்ட ஊழ்கதேவனை அஸ்வத்தாமன் கண்டான். ஏழு தலை, பன்னிரு தலை நாகங்களால் அணைக்கப்பட்ட தேவர்கள். மேலும் மேலும் மானுடர்போன்ற தேவருடல்கள் உருவம் கொண்டு வந்தன. இருபுறமும் இரு எருதுகள் வணங்கிநிற்க ஊழ்கத்திலமர்ந்திருக்கும் இறைவனின் தோற்றத்தை அஸ்வத்தாமன் அதற்கு முன் பார்த்திருக்கவில்லை. இரு புலிகளை இரு கைகளால் எதிர்கொள்ளும் தேவன். இரு பறவைகளை அணைத்து நிற்பவர். பீலி என விரிந்த தலையணியுடன் முப்புரிவேல் ஏந்தி நின்றிருந்தவர். ஏழு சிறிய தலைகளால் ஆன தலையணியை அணிந்த தெய்வம். சிம்மத்தலை கொண்ட தேவர்கள், ஓநாய்த்தலை கொண்டவர்கள், கழுகுத்தலை கொண்டவர்கள். இரட்டைச் சிம்மத் தலைகளும் இரட்டைக் கழுகுத் தலைகளும் இரட்டை ஓநாய்த் தலைகளும் கொண்டவர்கள். எட்டு கைகளிலும் படைக்கலம் ஏந்தியவர்கள்.

வலம்புரியும் இடம்புரியுமான சுருள்வடிவங்களை நோக்கியபடி கிருபர் நின்றா.ர் “இவற்றை எங்கோ பார்த்திருக்கிறேன்” என்று தனக்குள் என சொல்லிக்கொண்டார். அதை கேட்டு திரும்பி நோக்கிய அஸ்வத்தாமனின் விழிகள் கனவு படிந்திருந்தன. கிருதவர்மன் “இவற்றை மலைக்குடியினரின் மாயச்சடங்குகளில் கண்டிருக்கிறேன். இந்த கணிவடிவங்களை அவர்கள் களமென எழுதுகிறார்கள்” என்றான். முக்கோணங்கள், அறுகோணங்கள், எண்கோணங்கள், பன்னிரு பதினாறு கோணங்கள். அவை ஒன்றையொன்று வெட்டி மேலும் மேலும் வடிவங்களை உருவாக்கின. அனைத்துக்கும் மேல் முழு வட்டம் நின்றிருந்தது. மீன்வடிவங்கள் அவற்றின் இரு பக்கங்களில் நிரைவகுத்தன. வயிறுபெருத்து அமர்ந்திருந்த அன்னையின் ஓவியத்தின் அருகே கிருபர் நின்றார். அவள் உடலில் இருந்து சிறுமகவு வெளியே வந்துகொண்டிருந்தது. அருகே ஒரு பசு கன்று ஈன்றுகொண்டிருந்தது.

கிருதவர்மன் மூச்சொலியாக “அரசர்!” என்றான் “யார்?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். “அரசர், அதோ” என்று கிருதவர்மன் சுட்டிக்காட்டினான். அத்திசையில் நெடுநேரம் நோக்கிய பின்னரே அஸ்வத்தாமன் துரியோதனனை அடையாளம் கண்டான். ஒரு சிறு பொந்துக்குள் உடலைப்பொருத்தி அவன் அமர்ந்திருந்தான். அவன் ஓர் ஓவியமாக மாறிவிட்டது போலிருந்தது. நோக்கி நோக்கி ஓவியப்பரப்பிலிருந்து அவனை மீட்டெடுக்க வேண்டியிருந்தது. கிருபர் அவர்களின் சொற்களை கேட்கவில்லை. நிரையாக அமைந்திருந்த ஏழன்னையரின் வடிவங்களை நோக்கியபடி அவர் சென்றார். யானைத்தலை கொண்ட பூதங்களால் அவர்கள் காக்கப்பட்டிருந்தனர். ஏழு முதியவர்களின் நிரை அவர்களின் காலடியில் அமைந்திருந்தது. கிருதவர்மன் “ஆசிரியரே, அரசர் இதோ” என்றான். கிருபர் திரும்பி நோக்கிவிட்டு மேலும் ஓவியங்களை நோக்கியபடி சென்றார்.

அஸ்வத்தாமன் அந்த உளநிலையை வியப்புடன் எண்ணிக்கொண்டான். அவர்கள் தேடிவந்த துரியோதனன் அவர்களிடம் எந்த வியப்பையும் உவகையையும் உருவாக்கவில்லை. அவர்கள் வாழ்ந்த உலகமே பொருளிழந்து பின்னகர்ந்துவிட்டிருந்தது. துரியோதனன் எளிய மானுடனாக, வெறுமொரு உடல்வடிவாகத் தோன்றினான். கிருதவர்மன் “அரசே!” “அரசே!” என்று கூவியபடி முன்னால் ஓடினான். இரு பாறைகள் மேல் தாவி ஏறி “அரசே” என்றான். அருகணைந்து துரியோதனனின் உடலைத் தொட்டு “அரசே! அரசே!” என்று உலுக்கினான். துரியோதனன் கண்விழித்து அவனை பொருள் தெளியா நோக்குடன் சற்றுநேரம் நோக்கியபின் முகம் உயிர்கொள்ள “யாதவரே” என்றான். “நாங்கள் உங்களைத் தேடி வந்தோம். நானும் பாஞ்சாலரும் ஆசிரியரும்… நாங்கள் களம்படவில்லை. எஞ்சியிருக்கிறோம்” என்றான் கிருதவர்மன். துரியோதனன் “ஆம், எனக்கு அவ்வாறு ஒரு உளத்தோன்றுதல் இருந்தது” என்றான் துரியோதனன்.

அஸ்வத்தாமன் அருகணைந்து “நீங்கள் இங்கே இருப்பீர்கள் என எண்ணினேன்… எவ்வாறு அவ்வாறு தோன்றியது என்று என்னால் கணக்கிட முடியவில்லை” என்றான். துரியோதனன் அவர்களை நோக்கி அகத்தே வந்துகொண்டே இருந்தான். குருக்ஷேத்ரப் போரையும் உற்றாரையும் அவன் எண்ணி எண்ணி எடுப்பதுபோல் தோன்றியது. “அங்கு எவர் எஞ்சியிருக்கிறார்கள்?” என்றான். “அங்கே நம் தரப்பில் எஞ்சியவர் எவருமில்லை. ஒழிந்த களத்தில் பிதாமகர் பீஷ்மர் மட்டும் படுத்திருக்கிறார். பாண்டவர்கள் தரப்பில் ஐவரும் மைந்தரும் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் சிகண்டியும் மட்டுமே மிஞ்சியிருக்கிறார்கள்” என்று கிருதவர்மன் சொன்னான். துரியோதனன் “ஆம், அவ்வாறே நானும் மதிப்பிட்டிருந்தேன்” என்றான். “நீங்கள் களம்பட்டீர்கள் என அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் கிருதவர்மன்.

“இல்லை, அவன் அறிவான்” என்று துரியோதனன் சொன்னான். “நான் அவனை களத்தில் சந்தித்தேன். அவனை கொன்றாகவேண்டும் என்றே போரிட்டேன். உயிரின் விசையாலும் அதையும் விஞ்சும் வஞ்சத்தின் விசையாலும் அவன் எனக்கு நிகராகவும் அவ்வப்போது என்னைக் கடந்து எழுந்தும் போரிட்டான். என் தாக்குதலில் இருந்து தப்ப அவன் கள எல்லையைக் கடந்து காட்டுக்குள் புகுந்தான். அவன் குரங்கின் முலையுண்டவன், காட்டுமரக் கிளைகளின்மேல் தாவும் கலை அறிந்தவன். அது தெரிந்திருந்தும் அவனை கொன்றேயாகவேண்டும் என்பதனால் நான் அவனை துரத்திச் சென்றேன். என்னால் அவன் ஏறிய மரங்கள்மேல் ஏற இயலவில்லை. ஆகவே அந்த மரங்களை என் கதையால் அறைந்து உடைத்தேன். கதையை வீசி எறிந்து அவனை நிலத்தில் வீழ்த்தி தாக்கினேன். வென்றிருப்பேன், ஆனால் அவன் கதை உடைந்து தெறித்தது. படைக்கலமில்லாமல் அவன் என் முன் கிடந்தான். என்னால் அவனை கொல்ல இயலவில்லை.”

துரியோதனன் பெருமூச்சுவிட்டான். “எப்போதும் தெய்வங்கள் அவனுடன் நிலைகொள்கின்றன. ஆசிரியரே, அவன் வெறுங்கைகளுடன் என்முன் மல்லாந்து கிடந்தான்…” என்றான். கிருதவர்மன் சீற்றத்துடன் “அவனை நீங்கள் கொன்றிருக்கவேண்டும்… அவன் தலையை உடைத்திருக்கவேண்டும். இந்தப் போரே பிறிதொரு திசைக்கு சென்றிருக்கும்” என்று கூவினான். “அதைச் செய்ய என்னால் இயலாது” என்றான் துரியோதனன். “அரசே, அவன் நம் இளைய அரசர்கள் அனைவரையும் கொன்றவன். நம் அரசமைந்தரை கொன்று குவித்தவன். நம் பிதாமகரின் தலையறைந்து உடைத்தவன்” என்று கிருதவர்மன் கூவினான். “ஆம், ஆனால் அவன் அரசன் அல்ல, நான் எந்நிலையிலும் அரசனே” என்றான் துரியோதனன். “அரசன் என மறுபக்கம் எனக்கு இணையானவன் யுதிஷ்டிரன் மட்டுமே. அவன் அதை செய்திருப்பானா என்று மட்டுமே நான் எண்ணுவேன்.” கிருதவர்மன் தளர்ந்தான். தலையை அசைத்தபடி “ஊழ்” என்றான்.

கிருபர் “அரசர் அவ்வாறு செய்ய இயலாது” என்றார். “யாதவரே, அவன் குரங்கின் பால் அருந்தியவன், நான் அருந்தியது காந்தாரியின் முலைப்பாலை” என்றான் துரியோதனன். கிருபர் “எவரும் உச்சநிலைகளில் எண்ணி முடிவெடுப்பதில்லை, கிருதவர்மரே. அவரவர் அடிப்படை இயல்பு தன்னிகழ்வாக வெளிப்படுகிறது. அதுவே அவர்களின் மெய்மை…” என்றார். துரியோதனன் “நானே அத்தருணத்தைப் பற்றி எண்ணிக்கொண்டதுண்டு. நான் அரசன் என சூது இயற்றக்கூடும். ஏனென்றால் அரசர்கள் அவைகூடி அமர்பவர்கள். நான் மல்லன், மல்லர்கள் உடல் என நிற்பவர்கள். விலங்கு என தன்னெறி மாறாதவர்கள். என் ஆசிரியரிடமிருந்து நான் கற்றது அதையே. தூய விலங்கு என்று ஆதல். விலங்கென்று ஆன மல்லனை மற்போரிலும் கதைப்போரிலும் எவரும் வெல்ல முடியாது. அவனும் விலங்கே. ஆனால் வஞ்சம் அவனை மானுடனாக்கியது. ஆகவே அவன் வீழ்ந்தான்” என்றான்.

அஸ்வத்தாமன் “என்ன நிகழ்ந்தது?” என்றான். “நான் அவனிடம் எழுக மந்தா, சென்று உன் உடைந்த கதைத்தண்டையாவது எடுத்துக்கொள் என்று சொன்னேன். அவன் திகைத்தவன்போல கிடந்தான். எழு, மல்லன் என உயிர்கொடு. சென்று அந்த உடைந்த கதைத்தண்டை எடு என்று நான் ஆணையிட்டேன். அன்றி அந்தப் பாறையையாவது கையில் எடு என்று கூவினேன். அவனுடைய உள்ளம் உறைந்துவிட்டது என்று தோன்றியது. அத்தருணத்தில்தான் மாதுலர் வீழ்ந்தார் என்ற செய்தி காற்றில் ஒலித்தது. என் கதை தளர்ந்தது. கதையை வீசிவிட்டு காட்டுக்குள் திரும்பி நடந்தேன். அவனை திரும்பி நோக்கவில்லை. எதையும் எண்ணவில்லை. காட்டினூடாக ஊடுருவி வந்துகொண்டே இருந்தேன். எங்கே செல்கிறேன் என்றுகூட அப்போது நான் உளம்கொள்ளவில்லை. இங்குதான் வருகிறேன் என்பதையே சாயாகிருகத்தை அணுகியபோதுதான் உணர்ந்தேன்.”

“இங்கு நீங்கள்…” என்று கிருதவர்மன் தயங்கி “நீங்கள் இங்கிருப்பதை அவர்கள் உணரமுடியாது” என்றான். “அவன் உணர்வான், யாதவனுக்கு தெரியாத உள்ளத்து ஆழங்கள் இல்லை” என்றான் அஸ்வத்தாமன். “நான் இங்கு வந்தபோது எதை விழைந்தேன் என்று உணர்ந்திருக்கவில்லை. இக்குகைக்குள் அமர்ந்து என்னை தீட்டிக்கொண்டேன். இன்று என் விழைவு கூர்கொண்டிருக்கிறது” என்று துரியோதனன் சொன்னான். “இங்கு வந்து இச்சுனையில் என்னை நோக்கினேன். என் முகம் என எழுவது எது என்று உள்ளம் கொந்தளித்தது. என் முகம் எனத் தெரிந்தது சோர்ந்து குழம்பிப்போன ஒன்று. நான் களம் வந்தபின் ஒருமுறைகூட முகத்தை ஆடியில் பார்த்ததில்லை. நீரிலும் என் முகத்தை நோக்கலாகாது என்று உறுதிகொண்டிருந்தேன். ஆனால் என் முகம் அவ்வண்ணமே இருக்கும் என நன்கு அறிந்திருந்தேன். அந்த முகத்தை நோக்கியபடி சோர்ந்து இங்கே அமர்ந்தேன். நான் எண்ணி வந்த குளம்தானா இது என்றே ஐயமெழுந்தது. அந்த கந்தர்வனின் சிலை மட்டும் இல்லை என்றால் இது அவ்விடம் அல்ல என்றே உறுதிகொண்டிருப்பேன்.”

“ஆம், இது சூதர்களால் சொல்லிச் சொல்லி உருமாற்றப்பட்ட இடம்” என்று கிருதவர்மன் சொன்னான். “இல்லை, இங்கே நான் அடைந்தது கனவோ மயக்கோ அல்ல. நான் மீள விழைகிறேன்” என்றான் துரியோதனன். “எங்கே?” என்றான் கிருதவர்மன். “அரசே, நீங்கள் ஆற்றவேண்டிய பணி இங்கு எஞ்சியிருக்கிறது. ஒருவேளை இனி வென்று நிலம்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் வஞ்சம் அவ்வாறு விட்டுவிட வேண்டியது அல்ல. வஞ்சமும் காமமும் உள்ளிருந்து வெளிப்பட்டு ஒழிந்தாகவேண்டும். இல்லையேல் அவை ஏழுபிறப்பிலும் தொடரும்.” கைகளை ஊன்றி துரியோதனன் அருகே ஏறிச்சென்று “எழுக அரசே, இங்கே இவ்வண்ணம் அமர்ந்திருப்பது அச்சம் என்றும் உயிர்விழைவு என்றும் மட்டுமே சொல்லப்படும். வென்றவர் தோற்றவரை இழிவுசெய்து கதைகள் புனைவது என்றுமிருப்பது. வஞ்சம் கொள்ள நீங்கள் எழுந்தால் அதை வீரம் என புகழ்வர். அதில் வீழ்ந்தாலும் வீரமே” என்று பற்கள் நெரிபடும் ஓசையில் சொன்னான்.

“நான் எழுவேன்… எழும்பொருட்டே வந்தேன். எவ்வண்ணம் என்பதை நான் இன்னமும் முடிவு செய்யவில்லை. மற்றொரு வடிவில் எழவேண்டும். மேலும் ஆற்றல்கொண்டவனாக, வெல்லற்கரியவனாக. அதன்பொருட்டே இங்கே தவமியற்றுகிறேன்” என்று துரியோதனன் சொன்னான். “நாங்கள் என்ன செய்யவேண்டும்? ஆணையிடுங்கள், அரசே” என்றார் கிருபர். “நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் வழிகளை உங்கள் அறம் முடிவுசெய்யட்டும்” என்று துரியோதனன் சொன்னான். உரத்த குரலில் “இல்லை, நாங்கள் உங்கள் குடிகள். உங்களுடன் நின்று பொருதவும் மடியவும் கடன்பட்டவர்கள்” என்றார் கிருபர். “நான் எவ்வண்ணம் இனி எழுவேன் என அறியேன். எழுந்தபின் உங்களை தேடிவருவேன்… நாம் வெல்வோம்” என்று துரியோதனன் சொன்னான். “இன்று என் கந்தர்வன் எழுந்தாகவேண்டும். அவனை எழுப்புவதன்றி இப்போது எனக்கு வேறு இலக்கு இல்லை. செல்க! என்னை என் தவத்திற்கு விட்டுவிடுங்கள்.”

கிருபர் மேலும் சொல்ல நாவெடுப்பதற்குள் அஸ்வத்தாமன் கைநீட்டி அவரை அடக்கி “நாங்கள் செல்கிறோம். ஆனால் எங்கள் உள்ளம் உடனிருக்கும், அரசே” என்றான். “நாங்கள் சரத்வானின் குருநிலைக்கே செல்கிறோம். அங்கே எங்கள் இருவருக்கும் உரிமை உள்ளது. நீங்கள் எழுவதற்காக காத்திருக்கிறோம்” என்றான். துரியோதனன் “செல்க, இந்த நீரிலிருந்து நான் என் மாற்றுருவை திரட்டிக்கொள்ளவேண்டும். என் கந்தர்வனின் ஆணை எழவேண்டும்” என்றான். அஸ்வத்தாமன் தலைவணங்கி புறம்காட்டாமல் மீண்டான். கிருபரும் தலைவணங்கி வந்தார். கிருதவர்மன் துரியோதனனை நோக்கிக்கொண்டு நின்றான். “வருக!” என்றார் கிருபர். அவன் அசையவில்லை. “வருக, யாதவரே!” என்றார். அவன் பெருமூச்சுடன் திரும்பி அவர்களுடன் வந்தான்.

குகையை விட்டு வெளியே வந்தபோது அவர்கள் ஒரு கனவிலிருந்து மீண்டதுபோல் விழிகொண்டனர். கிருதவர்மன் “நாம் அவரை பார்த்தோமா? கனவுக்குள் சென்று அங்கே அவரை கண்டோமா?” என்றான். அஸ்வத்தாமன் ஒன்றும் சொல்லவில்லை. கிருபர் திரும்பி ஸ்தூனகர்ணனின் உருவை நோக்கிக்கொண்டிருந்தார். ஒரு பகுதி தாமரை ஏந்திய பெண்ணாகவும் மறுபகுதி சூலமேந்திய ஆணாகவும் இருந்த சிலையின்மேல் ஒரு தவளை அமர்ந்திருந்தது. “வீண் உளமயக்கு… இந்தக் குளம் மீதான அச்சமே அக்கதைகளை ஆக்கியிருக்கிறது…” என்றான் கிருதவர்மன். அஸ்வத்தாமன் அந்தக் குளத்தின் நீரை சுட்டிக்காட்டினான். இயல்பாக அதை நோக்கிய கிருதவர்மன் “விந்தையான மீன்கள்” என்றான்.

இல்லையென்றே தெரிந்த இறகுகளுடன் நீண்ட மீசைகளுடன் எட்டு பொய்விழிகளுடன் நீந்திய குறுவாள் போன்ற மீன்களின் நடுவே ஸ்தூனகர்ணனின் சிலையின் பாவை தெரிந்தது. அவன் சொல்லமைந்து நோக்கினான். ஸ்தூனகர்ணனின் படிமம் ஆரம் படிந்த முலைக்கச்சையும் மேகலை மூடிய அந்தரீயமும் குழைகளும் புரிவளைகளும் அணிந்த பெண்ணாகத் தெரிந்தது. “பெண்ணுரு” என்று அவன் சொன்னான். கிருபர் மூச்சொலியுடன் “நான் பார்ப்பது கழலும் ஆரமும் தோள்வளைகளும் மணிமுடியும் அணிந்த ஆணுருவை” என்றார். அஸ்வத்தாமன் “அவன் காத்திருக்கிறான்” என்றான். பின்னர் செல்வோம் என கிருபரின் தோளைத் தொட்டுவிட்டு நடந்தான். சுனையை திரும்பித்திரும்பி நோக்கியபடி இருவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.